Monday, 19 December 2016

பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி-பாகம்-2

சுவாமி விவேகானந்தர் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி-பாகம்-2
-
நிரூபர்..சுவாமி விவேகானந்தர் என்ற உங்கள் பெயருக்கு ஏதாவது பொருள் உள்ளதா?
-
சுவாமிஜி...நான் இப்போது அழைக்கப்படும் பெயரான சுவாமி விவேகானந்தர் என்பதில் முதல் சொல் துறவி என்பதைக்குறிக்கும். உலகைத்துறந்தவன் துறவி.மற்றொரு சொல், எனது பட்டப்பெயரை குறிக்கும். ”பகுத்தறிவால் பிறக்கின்ற ஆனந்தம்”என்பது எனது பட்டப்பெயரின் பொருளாகும்.
-
நிரூபர்...பொதுவாக எல்லோரும் ஏற்றுக்கொள்கின்ற வாழ்வைத் துறக்க எது தூண்டியது?
-
சுவாமிஜி...சிறுவயதிலிருந்தே மதத்திலும் தத்துவத்திலும் எனக்கு ஆழ்ந்த பற்று உண்டு. மனிதர்கள் நாடவேண்டிய உயர்ந்த லட்சியம் துறவுதான் என்று எங்கள் சாஸ்திரங்கள் முழங்குகின்றன. நான் இறுதியாக முடிவு செய்வதற்கு ஒரு குருவை சந்திப்பது மட்டுமே வேண்டியிருந்தது.அத்தகையவரான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரை நான் சந்தித்தேன்.அவர் நடந்த பாதையில் நானும் செல்ல முயன்றேன்.அவரிடம் எனது உயர்ந்த லட்சியத்தின் நிறைவை கண்டேன்.
-
நிரூபர்..அவர் ஏதாவது மதப்பிரிவை உருவாக்கினாரா? நீங்கள் அதன் பிரதிநிதியா?
-
சுவாமிஜி...இல்லை. பிரிவினைவாதம், மூடநம்பிக்கைகள் போன்ற தடைகளை இடித்து தள்ளவே தமது வாழ்நாள் முழுவதையும் அவர் செலவிட்டார். அவர் எந்த பிரிவையும் உருவாக்கவில்லை,பிரிவினைவாதிகளுக்கு அவர் எதிராக இருந்தார். சிந்தனையில் முழுச் சுதந்திரத்தை போதிக்கவும் நிலைநாட்டவுமே அவர் முயன்றார்.அவர் ஒரு மகாயோகி.
-
நிரூபர்...அப்படியானால்,நீங்கள் இந்த நாட்டின் ஏதாவது பிரிவு,தியோசபிக்கல்,அல்லது கிறிஸ்தவ விஞ்ஞானம் போன்ற எதையாவது பின்பற்றுகிறீர்களா?
-
சுவாமிஜி...நான் எதையும் சாராதவன்(அழுத்தமான குரலில் சுவாமிஜி பதிலளித்தார்)எங்கள் முன்னோர்களின் நூல்களுக்கு எனது குருநாதர் காட்டிய வழியில் நான் கண்ட விளக்கத்தையே போதிக்கிறேன்.
பக்தி,ஞான,யோக நெறிகளையே எல்லா மதங்களும் போதிக்கின்றன. வேதாந்த தத்துவம் இந்த எல்லா முறைகளையும் தழுவி நிற்பதாக உள்ளது. இதைத்தான் நான் போதிக்கிறேன்.நேரடி அனுபவத்தை ஆதாரமாக கொள்ளும்படியே நான் எல்லோரிடமும் சொல்கிறேன்.
-
நிரூபர்..மேலை நாட்டு மதங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
-
சுவாமிஜி...இந்த உலகில் மதங்கள் என்று கொள்ளத்தக்க எல்லா மதங்களுக்கும் ஆதாரமாக இருக்கக்கூடிய ஒரு தத்துவத்தையே நான் போதிக்கிறேன்.எல்லாவற்றையும் அன்போடு ஆதரிப்பது தான் என் நோக்கம். என் உபதேசம் எதற்கும் பகை அல்ல. நான் என் கவனத்தை செலுத்துவது தனிமனிதனிடம். அவனை வலிமையுடையவனாக்கி அவனது தெய்வீகத்தன்மையை அவனுக்கு உணர்த்துகிறேன்.தங்களுக்குள் ஒளிரும் தெய்வீகத்தை உணரும்படி ஒவ்வொருவரையும் கூவி அழைக்கிறேன்.
-
நிரூபர்..இந்த நாட்டில் உங்கள் செயல்கள் என்ன விளைவை ஏற்படுத்தும்?
-
சுவாமிஜி....மனிதனின் தெய்வீகத்தன்மையை அவனது உள்ளங்களில் ஊன்றச்செய்வதே என் நோக்கம். வெறும் மூடநம்பிக்கையை நான் அவர்களுக்கு கற்பிக்வில்லை. இறுதியில் உண்மை வெற்றிபெற்றே தீரும்.
பணம் பணம் என்று பேயாய் அலையும் இந்தக்காலத்தில் பணத்திற்காக நான் எதுவும் செய்வதில்லை என்பதை உங்களிடம் துணிந்து சொல்வேன்.
--
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் வெஸ்ட் மினிஸ்டர் கெஜட் என்ற பத்திரிக்கைக்கு 23.10.1895 அன்று அளித்த பேட்டி
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்6.பக்கம்351

No comments:

Post a Comment