Monday 19 December 2016

வேதாந்த விளக்கம்-சுவாமி விவேகானந்தர்-பகுதி-21

வேதாந்த விளக்கம்-சுவாமி விவேகானந்தர்-பகுதி-21
-
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் மாயினம் ச மஹேச்வரம்....(சுவேதாஸ்வதர உபநிடதம்.4.10)
-
இயற்கையே மாயை என்பதையும், அதை ஆள்பவன் பரம்பொருளே என்பதையும் அறிந்துகொள்”
-
உலகம் மாயை என்று இந்துக்கள் சொல்லும் போது இந்த உலகம் ஒரு பொய்த் தோற்றம் என்று அவர்கள் குறிப்பிடுவதாகவே மற்றவர்கள் நினைக்கிறார்கள். பவுத்தர்கள் கொண்ட பொருளே இந்தக் கருத்திற்கு ஓரளவு அடிப்படையாகும். ஏனென்றால் பவுத்தத் தத்துவ ஞானிகளும் ஒரு பிரிவினர் புறவுலகம் என்பதே இல்லை என்று நம்புபவர்களாக இருந்தார்கள்.
வேதாந்தத்தில் மாயை என்ற என்பது லட்சிய வாதமோ. பிரத்தியட்ச வாதமோ அல்ல அது ஒரு கொள்கையும் அல்ல. அது நிஜங்களின் ஒரு தெளிவான சித்திரம்; நம்மையும் நம்மைச் சுற்றி நாம் காண்பவற்றையும் பற்றிய ஒரு சித்திரமே அது.
-
நாம் செய்ய வேண்டியது என்ன?
-
உண்ணவும் உடுக்கவும் போதிய வசதி படைத்தவன் இன்பநோக்கு உள்ளவனாக இருக்கிறான். துன்பத்தைப் பற்றிய பேச்சு அவனை நடுங்கச் செய்கிறது. அத்தகைய பேச்சைக் கேட்கவே அவன் விரும்புவதில்லை. உலகத்தின் துன்பங்களையும் கஷ்டங்களையும் அவனிடம் பேசவே கூடாது. எல்லாம் இன்பமே என்றுதான் அவனிடம் சொல்ல வேண்டும். நான் பத்திரமாகவே இருக்கிறேன். என்னைப் பாருங்கள்! எனக்கு அழகான வீடுவாசல் இருக்கிறது. குளிரையும் பசியையும் எண்ணி நான் பயப்படுவதில்லை. இந்த மாதிரியான பயங்கரச் செய்திகளை என்னிடம் கொண்டு வராதீர்கள் என்கிறான் அவன்.
-
ஆனால் மறுபக்கமோ குளிராலும் பசியாலும் எத்தனையோ பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் போய் உலகம் இன்பமானது என்று சொன்னால், அவர்கள் அந்தப் பேச்சிற்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள். தாங்கள் துன்பத்தில் உழன்றுகொண்டிருக்கும்போது, மற்றவர்கள் இன்பமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எப்படி விரும்ப முடியும்? இவ்வாறு இன்பநோக்கிற்கும் துன்பநோக்கிற்கும் இடையே நாம் ஊசலாடிக் கொண்டிருக்கிறோம்.
-
பிறகு மரணம் என்னும் மகத்தான உண்மை இருக்கிறது. உலகமே மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாமே அழிந்துகொண்டிருக்கின்றன. நமது முன்னேற்றங்கள், நமது கர்வங்கள், நமது சீர்திருத்தங்கள், நமது ஆடம்பரங்கள், நமது செல்வங்கள், நமது அறிவு எல்லாவற்றிற்கும் ஒரே முடிவுதான். அது மரணம். அது ஒன்றுதான் சர்வ நிச்சயமானது. நகரங்கள் தோன்றி மறைகின்றன. பேரரசுகள் எழுகின்றன, வீழ்கின்றன, கிரகங்கள் உடைந்து தூள்தூளாகி, மற்றக் கிரகங்களின் ஈர்ப்புச் சக்தியால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுகின்றன. இவ்வாறு அனாதி காலம் முதல் நடந்துகொண்டே இருக்கிறது. மரணமே எல்லாவற்றிற்கும் முடிவு. வாழ்க்கையின், அழகின், செல்வத்தின், அதிகார பலத்தின், ஏன், நற்பண்பின் முடிவுகூடமரணம் தான். மகான்கள் இறப்பார்கள், பாவிகளும் இறப்பார்கள்; அரசர்கள் இறப்பார்கள், ஆண்டிகளும் இறப்பார்கள். எல்லோருமே மரணத்தை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்க்கையில் வைத்திருக்கும் உடும்புப்பிடியை மட்டும் விடுவதே இல்லை. காரணம் தெரியாமலேயே வாழ்க்கையை நாம் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பிடியை நாம் விட முடிவதில்லை, இதுதான் மாயை.
-
தாய் குழந்தையைப் போற்றி வளர்க்கின்றாள். உயிரையே அந்தக் குழந்தையின்மீது வைத்திருக்கிறாள். குழந்தை வளர்கிறான், பெரியவனாகிறான்; சந்தர்ப்ப வசத்தால் தீயவனாக கொடியவனாக மாறுகிறான். தாயையே தினமும் அடித்து உதைக்கிறான். ஆனாலும் அவள் தன் மகன்மீது வைத்துள்ள பாசத்தை விடுவதில்லை.அவளது அறிவு விழித்துக் கொள்ளும்போது, அன்பு என்ற போர்வையால் அதை மறைத்துவிடுகிறாள். அது அன்பு அல்ல. அது அவளது நாடிநரம்புகளைப் பற்றிக் கொண்டுள்ள ஏதோ ஒன்று. உதறித் தள்ள முடியாத உணர்ச்சி அது என்பதை அவள் நினைத்துப் பார்ப்பதில்லை. எவ்வளவுதான் முயன்றாலும் அந்தப் பந்தத்திலிருந்து அவளால் விடுபட முடிவதில்லை. இதுதான் மாயை.
-
பகலும் இரவும் நமது இந்தப் பூமியின்மீது மரணம் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. அதேவேளையில் நாமோ நிரந்தரமாக வாழப் போகிறோம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம். . இதுதான் மாயை.
--
--
விவேகானந்தர் விஜயம்---சுவாமி வித்யானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3.பக்கம்229

No comments:

Post a Comment