Friday, 2 December 2016

பொன்மொழிகள் .பகுதி-27

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-27
----
🌿 ஒவ்வொரு சின்னஞ்சிறு கிராம தேவதைகளையும், மூடநம்பிக்கையில் தோய்ந்த சாதாரணமான பழக்க வழக்கங்களையும்தான் நாம் மதம் என்று அழைத்து பழக்கப்பட்டிருக்கிறோம் . உங்கள் பழக்கம் சிறந்தது என்று நீங்கள் சொன்னால், தங்கள் பழக்கங்களே சிறந்தவை என்று காட்ட பலர் தயாராக உள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள பழக்க வழக்கங்கள் பல்வேறானவை. ஆனால் அவை வட்டார வழக்கங்களே. இந்த வட்டார வழக்கங்கள்தாம் நமது மதத்தின் சாரம் என்றே பாமர மக்கள் எண்ணிவருகிறார்கள். இது பெருந்தவறாகும்.
---
இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் சிறப்புடன் இந்தியா உருவாகிக் கொண்டிருக்கறது என்பதில் சந்தேகமில்லை. பழங்கால ரிஷிகள்அனைவரைவிடவும் மகத்தான ரிஷிகள் தோன்றப் போகின்றனர்.
மற்ற உலகங்களில் வாழ்கின்ற உங்கள் முன்னோர்கள் தங்கள் வழித்தோன்றல்களாகிய உங்களின் புகழையும் கீர்த்தியையும் கண்டு திருப்தி மட்டும் அடையவில்லை, பெருமையும் அடைவார்கள் என்பதை நான் காண்கிறேன்.
----
என்சகேதரர்களே, நாம் எல்லோரும் கடுமையாக உழைப்போம். தூங்குவதற்கு இது நேரமில்லை எதிர்கால இந்தியா நம்முடைய உழைப்பைப் பொறுத்தே அமையப் போகிறது.
----
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் நோக்கம் ஒன்று இருக்கிறது. இந்த நோக்கம், கணக்கில்லாத அவனது கடந்தகால கர்மங்களின் விளைவாகும். அது போல் உங்கள் பெருமைக்குரிய நாட்டின் முடிவில்லாத கடந்தகால வாழ்க்கையின் முழுமையான விளைவான மிகச் சிறந்த பாரம்பரியத்துடன் நீங்கள் ஒவ்வொருவரும் பிறந்திருக்கிறீர்கள். லட்சக்கணக்கான உங்கள் முன்னோர் உங்கள் ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்களள் என்று தோன்றுகிறது. எனவே விழிப்போடு இருங்கள்.
----
ஒவ்வோர் இந்துக் குழந்தையும் எந்த நோக்கத்துடன் பிறக்கிறது? தர்மமாகிய புதையலைக் காப்பதற்கே.. இது பிராமணனின் லட்சியம் மட்டுல்ல , இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பூமியில் பிறக்கின்ற ஆண் பெண் பேதமின்றி ஒவ்வொரு குழந்தையின் லட்சியமும் தர்மமாகிய புதையலைக் காப்பதே என்று நான் கூறுவேன். வாழ்க்கையின் மற்ற பிரச்சனைகள் எல்லாம் அந்த நோக்கத்திற்கு அடுத்த படியிலேயே வைக்கப்பட வேண்டும் .
---
சகோதரா, நீ அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கில்லை நீ அழுவ தேன் சகோதரா? துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா நீ ஏன் அழ வேண்டும் மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு.
---
மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே . நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.
----
இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்.
---
.ஒரு சமயம் நான் காசியில் இருந்த போது ஒரு பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தேன். அந்தப் பாதையின் ஒரு புறம் நீர் நிறைந்த ஒரு பெரிய குளமும், மறு புறம் உயர்ந்த சுவரும் எழுப்பப்பட்டிருந்தன. அந்த இடத்தில் பல குரங்குகள் இருந்தன.
காசியைச் சேர்ந்த குரங்குகள் மிகவும் பொல்லாதவை. சில சமயங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடியவை. அவை தங்கள் பாதையில் என்னைச் செல்ல விடக்கூடாது என்று நினைத்தன போலும்! எனவே நான் செல்லச் செல்ல அவை கிறீச்சிட்டுப் பெரும் சப்தமிட்ட படி என் கால்களைப் பற்றின. அவை நெருங்க நெருங்க நான் ஓட ஆரம்பித்தேன். ஆனால் நான் ஓட ஓட அவையும் பின் தொடர்ந்து ஓடிவந்து என்னைக் கடித்தன. அந்தக் குரங்குகளிடமிருந்து தப்பவே வழியில்லை என்று எனக்குப்பட்டது. ஆனால் அப்போது முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை வழியில் சந்தித்தேன். அவர் என்னைநோக்கி , குரங்குகளை எதிர்த்து நில் என்று கூறினார். நான் திரும்பிக் குரங்குகளை எதிர்த்து நின்றேன். அவை பின்வாங்கி முடிவில் ஓடியேமறைந்தன. இதுவே வாழ்க்கை முழுவதற்கும் படிப்பினையாகும். பயங்கரத்தை எதிர்த்து நில் அஞ்சாமல் அதை எதிர்த்து நில்.
----

No comments:

Post a Comment