Sunday, 4 December 2016

என் வீர இளைஞர்களுக்கு

இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை . வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக உன்னை உருவாக்கிக் கொள். முதலில் உலக மக்களின் துன்பங்களைக் குறித்து நீ வருந்து..... வெறுப்பு உணர்ச்சியாலோ, பொறாமையாலோ, உன்னுடைய மனம் அலைக்கழிக்கப்படாமல் இருக்கிறதா என்று உன்னையே நீ கேட்டுக்கொள். உலகின் மீது வெறுப்புணர்ச்சி, கோபம் ஆகியவை அடுக்கடுக்காகச் சுமத்தப்பட்டு வருகின்றன. அது காரணமாக நல்ல காரியங்கள் தொடர்ந்து பலகாலமாக நிறைவேற்றப்படாமற் போயிருக்கின்றன. மாறாகத் தீமையே விளைவிக்கப்பட்டிருக்கிறது. நீ தூய்மை உள்ளவனாக இருந்தால் வலிமை உள்ளவனாக இருந்தால் நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய்.
--
பணம் படைத்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இருக்கிறார்களே, அவர்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டாம். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைவிட, செத்துப்போனவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். பணிவும் தாழ்மையும் கொண்டு, அதே சமயத்தில் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய உங்களிடம்தான் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
--
கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள் திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால் ஆகப்போவதும் ஒன்றுமில்லை. துன்பத்தால் வாடுகிறவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். பிறகு உதவிக்காகக் கடவுளை நோக்குங்கள். உங்களுக்குத் தேவைப்படும் உதவி நிச்சயமாக வந்தே தீரும்.
எனது வீரக் குழந்தைகளே, நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்துநின்று வேலை செய்யுங்கள்.
--
மிருகபலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக அமைதி அன்பு ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும் ..... புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்து விட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள் இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போலத் தெளிவாக நான் பார்க்கிறேன் அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்.
---
----சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment