Sunday, 4 December 2016

அந்தக் கதையில் வரும் திருடன் நான் தான்

ரிஷிகேசத்தில் மகானான ஒரு துறவியைச் சந்தித்தார் விவேகானந்தர். அவர் ஆன்மிகத்தில் உயர்நிலைகளை அடைந்தவராகத் தோன்றவே விவேகானந்தர் அவரிடம் சென்று பேசத் தொடங்கினார். பேச்சின் இடையே தமது பயணங்களைப் பற்றி கூறினார்; தாம் சந்தித்த மகான்களைப் பற்றி கூறினார். அவர்களில் ஒருவர் பவஹரி பாபா.
அவரது பெயரைக் கூறியதும் அந்தத் துறவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. தழுதழுத்த குரலில் அவர், ‘சுவாமிஜி, உங்களுக்கு பாபாவைத் தெரியுமா?’ என்று கேட்டார். ‘தெரியும்’ என்றார் விவேகானந்தர். ‘அவரது ஆசிரமத்தில் நடந்த திருட்டைப் பற்றி தெரியுமா?’ என்று கேட்டார் அந்தத் துறவி. ‘தெரியுமே’ என்றார் விவேகானந்தர்.
‘ஒரு நாள் அவரது ஆசிரமத்தில் திருடன் ஒருவன் நுழைந்து விட்டான். அவரைக் கண்டதும் பயந்து போய், தான் திருடிய பொருட்களின் மூட்டையை அப்படியே போட்டுவிட்டு ஓட்டமெடுத்தான். அவரோ அந்த மூட்டையை எடுத்துக் கொண்டு, திருடனைத் தொடர்ந்து பல மைல் தூரம் ஓடி அவனைப் பிடித்தார்.
பிறகு அவனது காலடியில் அந்த மூட்டையை வைத்து, குவித்த கைகளோடும் கண்களில் கண்ணீரோடும் ‘அப்பா, இது உனது சொத்து. உனது சொத்தை நீ எடுத்த போது தலையிட்டதற்கு என்னை மன்னித்து விடு. இவற்றைப் பெற்றுக் கொள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்’ – என்று விவேகானந்தர் அந்தக் கதையைக் கூறி விட்டு, ‘உண்மையிலேயே பாபா ஓர் அற்புத மனிதர்’ என்றார்.
கதையை மவுனமாகக் கேட்டுக் கொண்டிருந்த துறவி கதை நிறைவுற்றதும், விவேகானந்தரை அமைதியாகப் பார்த்து ‘சுவாமிஜி, அந்தக் கதையில் வரும் திருடன் நான் தான்’ என்றார். விவேகானந்தர் திகைத்துப் போனார். துறவி தொடர்ந்தார்…
‘அன்று பாபாவைச் சந்தித்தது என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஆயிற்று. எனது வழிகள் தவறு என்பதை நான் புரிந்து கொண்டேன். செல்வங்களில் எல்லாம் பெரிய செல்வமாகிய இறைவனையே பெறுவதற்காக இந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன்.’
அதன் பிறகு அவர் விவேகானந்தரிடம் தாம் துறவியாக அடைந்த அனுபவங்களைக் கூறினார். இரவு நீண்ட நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அவரைச் சந்தித்தது விவேகானந்தருக்கும் ஓர் இனிய அனுபவம் ஆயிற்று.
---

No comments:

Post a Comment