Friday, 25 July 2025

தூக்கமும் மரணமும்

 

தூக்கமும் மரணமும்

..

இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலேயே உயிர்போய்விடும். அதன் பிறகு எதுவும் நமக்குத் தெரியாது.நம்மையும் நமக்குத்தெரியாது,வெளி உலகமும் தெரியாது,எதுவுமே தெரியாது.அப்படியே தூக்கத்திலேயே மாண்டுவிடுவோம் என்று வைத்துக்கொள்வோம்.

இன்று இரவு யாராவது தூங்க செல்வார்களா?

நாளை நாம் கண்விழிக்கப்போகிறோம் என்ற எண்ணம் இருப்பதால்தான் இன்று தூங்கச் செல்கிறோம். நாளை கண்விழிக்க மாட்டோம் என்று தெரிந்தால்,யாரும் தூங்க செல்ல மாட்டார்கள்.

தூக்கம் என்பது, அதுவும் தொடர்ந்த தூக்கம் என்பது நல்லதுதானே அப்படி இருக்கும்போது நாம் ஏன் தொடர்ந்த நிலையான தூக்கத்தை விரும்புவதில்லை?

ஏனென்றால் அதுதான் உயிரின் இயல்பு. நிலையான தூக்கம் என்பது மரணம்.

அந்த மரணத்தை எந்த உயிரும் விரும்புவதில்லை.

..

தூக்கத்திலேயே உயிர்போய்விட வேண்டும் என்று சில நேரங்களில் மனிதர்கள்

கூறுவார்கள்.ஆனால் உள் மனதில் அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற எண்ணமும் இருக்கும்.

எவ்வளவுதான் துன்பங்கள் வந்தாலும் அதை தாங்கிக்கொண்டு வாழவேண்டும் என்றுதான் ஒவ்வொரு உயிரும் ஆசைப்படுகிறது.

ஒரு சாதாரண எறும்பை நசுக்கினால்கூட அது எப்படியாவது மீண்டும் வாழவேண்டும் என்றே துடிக்கிறது.

இதுதான் உயிரின் இயல்பு.

உயிரின் இயல்பை மாற்ற முடியாது.

..

சிலர் இந்த உலக வாழ்க்கை முடிந்த பிறகு அப்படியே தூங்கிவிடுவோம். அது ஆனந்தமானது. நல்லது. என்று நினைக்கிறார்கள். ஆனால் சிறிது நேரம் பொறுமையாக யோசித்து பார்த்தால், நாம் இல்லாத வாழ்வை நாம் விரும்ப மாட்டோம் என்பது புரியும்.

மீண்டுவராத தூக்கத்தில் ”நான்-உணர்வு இல்லை. இந்த ”நான்-உணர்வுஇல்லாத எதையும் நாம் விரும்பமாட்டோம்.

சமாதி நிலையில் ”நான் இருக்கிறேன் என்ற உணர்வு இருக்கும். ஆனால் தூக்கத்தில் அது இருக்காது.

தற்காலிக தூக்கத்தை மனிதர்கள் விரும்புவார்கள். நிரந்த தூக்கத்தை விரும்புவதில்லை.

..

இந்த நிரந்த தூக்கத்தை ”சூன்யம் என்று சொல்லாம். சமாதி நிலையில் ஏற்படுவது பூர்ணம் அல்லது முழுமை.

..

சிலர் பெரும் பாவத்தை செய்கிறார்கள். அந்த பாவத்தை பிறருக்கு அனுப்ப முடியுமா?

அனுப்ப முடியும். புண்ணியத்தை பிறருக்கு அனுப்ப முடியும்போது பாவத்தை ஏன் அனுப்ப முடியாது?

பெரும் பாவம் செய்தவர்களின் பாவத்தை அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனுபவிப்பார்கள். பாவிகளிடமிருந்து வாங்கி உண்டவர்கள் அந்த பாவத்தை அனுபவிப்பார்கள்.

தீயவர்களின் எச்சில் பட்ட உணவை உண்ணக்கூடாது. தீயவர்களிடமிருந்து எதையும் வாங்கி உண்ணக்கூடாது. தீயவர்களிடம் பழகக்கூடாது. இதனால் தீயவர்களின் பாவம் நமக்கு வருகிறது.

..

சிலர் மறுபிறப்பை நம்புவதில்லை. இந்த ஒரு பிறவி மட்டும்தான் உண்டு. எனவே இந்த ஒரு வாழ்க்கையில் பிறரை ஏமாற்றியாவது கொள்ளையடித்து,அனைத்து இன்பங்களையும் அனுபவித்துவிட்டு நிரந்த தூக்கத்திற்கு சென்றுவிட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அவர்கள் இந்த நிரந்தர தூக்கம்பற்றிய கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இறந்த பிறகு உங்களுக்கு என்னவாகும் என்று கேட்டால், நிரந்த தூக்கத்திற்கு சென்றுவிடுவோம் என்கிறார்கள்.

..

ஒரு அரசியல்வாதி, கடவுளையும் நம்பவில்லை,கர்மாவையும் நம்பவில்லை,நல்வினைகளையும் நம்பவில்லை.அவன் நம்புவது எப்படியாவது இந்த உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவித்துவிட வேண்டும்.அதற்காக எப்படிப்பட்ட குறுக்கு வழியையும் பின்பற்றலாம்,யாரையும் ஏமாற்றலாம்.இறந்த பிறகு மறுபடி பிறப்பும் கிடையாது.எதுவும் கிடையாது. கடவுளும் கிடையாது. நிரந்த தூக்கத்திற்கு அல்லது சூன்யத்திற்கு சென்றுவிடுவோம் .இப்படிப்பட்ட ஒரு சிந்தனையோடு வாழ்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் இறந்த பிறகு என்னவாகும்?

அவன் நினைத்ததுபோல நடக்குமா? அவன் மறுபடி பிறப்பானா?அல்லது சூன்யமாகிவிடுவானா? நிரந்த தூக்கத்திற்கு செல்வாயா?

..

முதலில் இப்படிப்பட்டவர்களின் வாழ்வை ஆராய வேண்டும்.

பிறருக்கு துன்பத்தை ஏற்படுத்தாமல்,பிறரின் இறப்புக்கு தான் காரணம் ஆகாமல்,பிற குடும்பத்தை வறுமையில் தள்ளாமல் இப்படிப்பட்டவர்களால் வாழ முடியமா? முடியாது.

குறுக்கு வழியில் செல்பவன் பலரை துன்பத்திற்கு உள்ளாக்கிவிட்டே முன்னேறுகிறான்.

 

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் செயல் உண்டு. அந்த எதிர் செயலை நிறுத்தினால் மட்டும்தான் தூக்கம் வரும்.

யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத நல்லமனிதனுக்கு தூக்கம் வரும். யாருக்கும் எந்த கெடுதலும் செய்ய முடியாத அளவுக்கு உள்ள முட்டாளுக்கும் தூக்கம் வரும். பிறருக்கு தீமை செய்து வாழும் மனிதனுக்கு எப்படி தூக்கம் வரும்.

வாழும் நாட்களிலேயே அவர்களுக்கு தூக்கம் வரவில்லை.தூக்கமாத்திரைகளையும்,மதுவையும் குடித்து சிறிது நேரம் தூக்கலாம். அதன் பிறகு மீண்டும் அதே மனத்துடன் போராட வேண்டியிருக்கிதே. அவர்கள் இறந்த பிறகு எப்படி நிரந்த தூக்கம் வரும்.

..

ஒவ்வொரு நிமிடமும் நாம் யார் யாருக்கு தீமை செய்தோம், யார் யாரை கொலை செய்தோம்,யார் யாரை கொலை செய்ய ஆள் அனுப்பினோம் போன்ற எண்ணங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இந்த எண்ணங்கள் இருக்கும்வரை நிரந்ததூக்கம்வராது.

எனவே அவர்கள் நினைப்பது போல நித்திய தூக்கம் அவர்களுக்கு வராது.

இறந்த பிறகு அவர்களது சூட்சும உடல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். அது ஏற்கனவே செய்த பாவங்களுக்காக வருந்திக் கொண்டிருக்கும்.

.

அப்படிப்பட்டவர்கள் சொர்க்கத்தை நம்பாமல் இருக்கலாம் நரகத்தை நம்பாமல் இருக்கலாம். ஆனால் இறந்த பிறகு அவர்களது ஆவி சாந்தி அடையாமல் சுற்றிக்கொண்டேதான் இருக்கும்.

அது பல்வேறு தீய கனவுகளை கண்டுகொண்டே இருக்கும். அந்த ஆவியை சாந்தப்படுத்த மனிதர்கள் இருக்க மாட்டார்கள். சொந்தங்கள் அந்த ஆவிக்கு உணவு அளிக்க மாட்டார்கள். அவர்கள் சேர்த்து வைத்த சொத்து.பணம் அனைத்தையும் அபகரித்து சென்றுவிடுவார்கள்.

இவைகள் அனைத்தையும் அந்த ஆவி பார்த்துக்கொண்டே இருக்கும். பிறரை ஏமாற்றி சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் செல்கிறதே என்று வேதனையில் அழுதுகொண்டெ இருக்கும்.

இவைகள் எல்லாம்தான் நரக வேதனை.

இதுதான் நரகம்.

எங்கோ தூரத்தில் உள்ள ஒரு நரக லோகத்திற்கு சென்று எண்ணை சட்டியில் வறுபட்டால்தான் நரகம் என்று அர்த்தம் அல்ல. தீயவர்களின் மனம் அவர்களுக்கு கொடுக்கும் வேதனைகூட நரகவேதனைதான்.

..

எனவே தீயவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று நினைக்காதீர்கள். அவர்களது கர்மமே அவர்களை தண்டிக்கும். அவர்களது மனமே அவர்களை தண்டிக்கும். வாழும்போது தண்டிக்க தவறினால் இறந்த பிறகு தண்டிக்கும்.

..

சுவாமி வித்யானந்தர் 25-7-2025

No comments:

Post a Comment

தூக்கமும் மரணமும்

  தூக்கமும் மரணமும் .. இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலே...