Friday, 12 January 2018

தேவர்-அடியாள் அல்லது தேவ-தாசி முறையின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி




தேவர்-அடியாள் அல்லது தேவ-தாசி முறையின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி
-
இறைவனை மட்டுமே நேசித்து வாழவேண்டும்,இந்த உலகத்தை நேசிக்ககூடாது என்ற எண்ணம் சிறுவயதிலேயே சிலருக்கு வந்துவிடும். ஆண்கள் மட்டுமல்ல பெண்களிடமும் இந்த சிந்தனை இருக்கும். ஆண்களை பொறுத்தவரை அவர்கள் சிறுவயதிலேயே உலகைத்துறந்து துறவிகளாகி மடங்களிலோ காடுகளிலோ பிச்சையேற்றோ வாழ்ந்து வருவார்கள்.ஆனால் பெண்களின் நிலை? ஆணுக்கு நிகராக பெண்களும் அதேபோல் வாழ முடிவதில்லை. ஆகவே அவர்கள் வெறுப்பான மனநிலையுடன் திருமணம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.பெண்களுக்கான மடங்கள் இருந்தாலும் அவைகள் இன்னமும் பொதுமக்களிடையே வரவேற்பை பெறவில்லையோ என்று தோன்றுகிறது.ஆகவே பெண்கள் பொதுவாக மடங்களில் சென்று தங்குவதைவிட திருமணம் செய்துகொள்வதே மேல் என நினைக்கிறார்கள்.
-
பழைய காலத்தில் அதாவது புத்தமதம் வளர்ச்சியுற்ற காலத்தில் ஆண்களுக்கான மடங்களும், பெண்களுக்கான மடங்களும் இருந்தன.பெண்களின் மடத்தை நிர்வகிக்கும் பொறுப்பு ஆண்களிடம்தான் இருந்தது.இது ஏன் என்று தெரியவில்லை.அந்த காலத்தில் பெண்கள் பலவீனர்கள் என்று நினைத்திருக்கலாம்.இவ்வாறு ஆண்களும் பெண்களும் சேர்ந்து மடங்களில் வாழ்ந்த காலத்தில் படிப்படியாக வீழ்ச்சி ஏற்பட்டு,புத்தமதம் சீரழிவை சந்தித்தது தனி வரலாறு.
-
புத்தமதம் வீழ்ச்சியுற்ற பிறகு,புத்தமதத்தினர் சைவர்களாகவும்,வைணவர்களாகவும்,சாக்தர்களாகவும் மதம் மாறினார். அங்கிருந்த புத்த கோவில்கள் சிவன் கோவிலகளாகவும்,விஷ்ணுகோவில்களாகவும் மாற்றப்பட்டன. பெரும்பாலான புத்தகோவில்களை முகமதியர்கள் இடித்துவிட்டார்கள்.அது தனி வரலாறு. இவ்வாறு கோவில்கள் வடஇந்தியாவிலிருந்து ஆரம்பித்து படிப்படியாக தென்னிந்தியாவில் அதிக அளவில் புதிய கோவில்கள் கட்டப்பட்டன.தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டவை .
-
கோவில்களை சுற்றி மடங்கள் கட்டப்பட்டன இங்கு துறவிகள் தங்கி,ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபட்டுவருவார்கள். கோவிலுக்கு பணிவிடை செய்வதில் அவர்களின் பெரும்பங்கு நேரத்தை செலவிட்டார்கள்.இவர்கள் தேவர்-அடியார் என்று அழைக்கப்பட்டனர். ஆண்களை போலவே இளம் வயதில் துறவை விரும்பிய பெண் துறவிகளும் கோவில் திருப்பணிகளில் ஈடுபட விரும்பியதால் அவர்களுக்கென்று தனியாக மடங்கள் ஏற்படுத்தப்பட்டன.இவர்கள் தேவர்-அடியாள் என்று அழைக்கப்பட்டனர்.பெண்கள் இயல்,இசை,நாடகம் போன்றவற்றை கற்றுக்கொண்டனர். இறைவனை குறித்து பாடுவது, இறைவன் திருமுன்னர் நடனமாடுவது,இறைவனது திருவிளையாடல்களை நாடகமாக நடித்துக்காட்டுவது போன்ற கலை சார்ந்த பணிகளில் பணிகளில் நேரத்தை செலவிட்டார்கள்.இவைகள் அனைத்தும் பெண்களுக்கான ஆன்மீக பயிற்சிகள்.
-
ஆரம்ப காலத்தில் இவைகள் மிகவும் சிறப்பாக செயல்முறைப்படுத்தப்பட்டன. அரசர்கள் கோவில்களை சிறப்பான முறையில் நிர்வகித்துவந்தார்கள்.கோவில்கள் ஆன்மீகத்தின் உறைவிடமாக இருந்தது.ஆலயத்தை பார்ப்பதே முக்தி தரும் என்ற உயர்ந்த மனப்போக்கு மக்களிடம் காணப்பட்டது. அரசன் முக்கியமாக முடிவுகளை எடுக்க வேண்டுமென்றால் கோவிலுக்கு வந்து தியானத்தில் ஈடுபட்டிருப்பான் அப்போது அவனுக்கு இறைவனது காட்சியோ அல்லது.வேறு ஏதாவது செய்தியோ கிடைக்கும்.அதன்படி அவனது முக்கிய முடிவுகள் இருந்தது.கோவிலை சுற்றி வணிகம்,கலை,இலக்கியம்,விவசாயம் மற்ற அனைத்தும் சிறப்பாக வளர்ச்சியடைந்தன. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி இதனால் உருவாகியது.
-
குடும்பத்தில் பிறக்கும் முதல் ஆண்குழந்தைகளையோ அல்லது பெண் குழந்தையையோ கோவிலுக்கு தானமாக கொடுக்கும் பழக்கம் உருவாகியது. இவர்கள் கோவிலிலேயே வளர்ந்து வந்தார்கள்.துறவியரை போலவே இவர்களின் மனமும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆரம்ப காலத்தில் துறவுக்கான மனப்பக்குவம் பெற்றவர்கள் மட்டுமே கோவில் திருப்பணிகளை செய்துவந்தார்கள் இதனால் இறைவனின் அருள் அங்கு எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. பிற்காலத்தில் துறவுக்கான மனநிலை இல்லாதவர்களும் அங்கே தங்கி கோவில்திருப்பணிகளை செய்ய ஆரம்பித்தனர். அது மட்டுமல்ல இறைவனை சார்ந்து வாழவேண்டும் என்ற நிலைமாறி, பூஜாரிகளையும்,அரசர்களையும் சார்ந்து வாழும் மனநிலையை வளர்த்துக்கொண்டார்கள்.இதுதான் முதல் வீழ்ச்சி. நாம் இறைவனை மட்டும் சார்ந்து வாழும்போது பல இன்னல்களை சந்திக்க நேரிடும்,சில வேளைகளில் மடங்களை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலைகூட ஏற்படலாம். இறைவன் தேவை என்றால் மற்ற எதுவும் தேவையில்லை என்ற மனநிலையை பெற வேண்டியது அவசியம்.மடங்களில் வசிப்பவர்கள் ,அங்கு கிடைக்கும் சுகபோகங்களில் முழ்கி, இறைவனை விட்டுவிட்டு சுகபோகங்களை தரும் அரசர்களிடம் தங்சமடைந்துவிடுகிறார்கள்.
-
அரசர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களின் மனம் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆகவே வேலியே பயிரை மேய்ந்தது என்று சொல்வார்களே அதேபோல் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவரச்ரகளே அங்குள்ள தேவர் அடியாள்களை தன் தேவைக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.இதேபோல் பூஜாரிகளும் வைப்பாட்டிகாக வைத்துக்கொண்டார்கள்.அதன் பிறகு அந்த கோவில்களில் இறைவன் எப்படி இருப்பான்? இறைவன் இல்லாத கோவில் வெறும்கோவில். அங்கு எத்தனைபேர் வந்தாலும்,வழிபாடு நடத்தினாலும் அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. பாவிகள் இருக்கும் இடத்தில் இறைவன் ஒருபோதும் இருப்பதில்லை
-
இவ்வாறு படிப்படியாக தேவர்-அடியாள்களின் சமூகம் மிகவும் கெட்ட பெயரை சம்பாதித்தது மட்டுல்லாமல்,நிலக்கிழார்கள் ,பூஜாரிகள் போன்றவர்களிடம் ஏற்பட்ட தவறான உறவுகளில் காரணமாக அவர்களுக்கு குழந்தைகள் உருவாகி,பின்பு அவர்களும் அதே போர் தேவர்-அடியாளாக வாழவேண்டி நிலை ஏற்பட்டது. சமுதாயம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. படிப்படியாக இவர்களை கோவில் கைவிட்டுவிட்டது. சமூகம் கைவிட்டுவிட்டது. அரசர்கள் கைவிட்டுவிட்டார்கள். ஒவ்வோரு கோவிலை சுற்றியும் இவர்கள் வாழும் மிகப்பெரிய சமூகம் உருவானது. அந்த பகுதிகளுக்குள் மற்றவர்கள் செல்ல தயங்கினார்கள். தங்கள் உணவுக்காக உடலைவிற்று பிழைப்பு நடத்தக்கூடிய மிககேவலமாக நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டார்கள். 
-
ஆரம்ப காலத்தில் மிக உயர்வாக கருதப்பட்ட தேவர்-அடியாள் முறை பிற்காலத்தில் அந்த பெயரை சொன்னாலே மக்கள் சீ சீ என்று சொல்லும்படியான வீழ்ச்சியை சந்தித்துவிட்டது.
-
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இருக்கிறது. தற்கால மடங்கள் இந்துமடங்களாக இருந்தாலும்,கிறிஸ்தவ மடங்களாக இருந்தாலும், இதிலிருந்து பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவ மடங்களில் வாழும் கன்னியர்கள்,தற்போது பல பாதிரியார்களின் வைப்பாட்டிகளாக இருப்பதாக பல கிறிஸ்தவர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள்..இவைகள் அந்த அமைப்பு வீழ்ச்சியடைந்துகொண்டிருப்பதையே காட்டுகிறது
-
கட்டுரை.சுவாமி வித்யானந்தர்..நாள்(10-1-2018)
-
வாட்ஸ் அப் குழு-9789 374 109

No comments:

Post a Comment