இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-37
(சுவாமி விவேகானந்தர்)
-
ஒவ்வோர் ஆன்மாவும் முக்தியடைந்தே தீரும் என்பது துவைதிகளின் மற்றொரு வினோதமான கோட்பாடு. யாரும் இதற்கு விலக்கல்ல.
-
சாதகமற்ற சூழ்நிலைகள் வழியாக, பல்வேறு இன்பதுன்பங்கள் வழியாகச் சென்று, கடைசியில் ஒவ்வொருவரும் வெளிவரத்தான் வேண்டும். எதிலிருந்து வெளிவர வேண்டும்? பிரபஞ்சத்தை விட்டு எல்லா ஆன்மாக்களும் வெளியேற வேண்டும் என்பது இந்து மதத்திலுள்ள எல்லா பிரிவுகளுக்கும் பொதுவான ஒரு கருத்து.
-
நாம் பார்க்கின்ற உணர்கின்ற இந்தப் பிரபஞ்சமோ, அல்லது கற்பனை செய்துகொள்ளும் ஒரு பிரபஞ்சமோ, உண்மையான சரியான பிரபஞ்சமாக இருக்க முடியாது. ஏனென்றால் இரண்டிலுமே நன்மையும் தீமையும் கலந்துதான் இருக்கின்றன.
-
துவைதிகளின் கருத்துப்படி, இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பால், நன்மையும் இன்பமும் மட்டுமே நிறைந்த ஓர் உலகம் இருக்கிறது. அந்த உலகை அடைந்துவிட்டால் பிறவி, மறுபிறவி, வாழ்வு, சாவு எதற்குமே அவசியமில்லை. இந்தக் கருத்து அவர்கள் மிகவும் விரும்புகின்ற ஒன்றாகும். அங்கே வியாதிகளோ மரணமோ இல்லை. அங்கே நிரந்தரமான இன்பம் இருக்கும். அந்த உலகை அடைபவர்கள் எப்போதும் கடவுளின் திருமுன்னர் இருந்துகொண்டு, அவரைக் கண்ணும் மனமும் குளிர தரித்துக் கொண்டிருப்பார்கள்.
-
சாதாரணமான புழுவிலிருந்து உயர்ந்த நிலையிலிருக்கும் தேவர்கள்வரை எல்லோருமே ஒருநாள் துன்ப மற்ற அந்த உலகை அடைந்தே தீர வேண்டும்.
-
ஆனால் தற்போதுள்ள இந்த உலகம் முடிந்து விடாது! எல்லையற்ற காலம்வரை இருந்துகொண்டேதான் இருக்கும். அதன் இயக்கம் அலை போன்றதாக, எழுவதும் வீழ்வதுமாக இருக்கும்.
-
அத்தகைய சுழற்சியான இயக்கமாக இருந்தாலும் அது முடிவதில்லை. காக்கப்பட வேண்டிய, முக்தி பெற வேண்டிய ஆன்மாக்களின் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை.
-
சிலஆன்மாக்கள் செடிகொடிகளிலும், சில, தாழ்ந்த மிருகங்களிலும், சில, மனிதர்களிலும், சில, தேவர்களிலும் இருக்கின்றன. ஆனால் உயர்ந்த தேவர்கள் உட்பட அனைவருமே நிறை நிலையை அடையாதவர்கள், பந்தத்தில் கட்டுண்டவர்கள்.
-
அந்தப் பந்தம் எது? பிறப்பதும், இறந்தேயாக வேண்டும் என்ற அவசியமும்தான். அது.
-
மிக உயர்ந்த தேவர்களுக்குக் கூட மரணம் உண்டு.
-
இந்தத் தேவர்கள் என்பது என்ன?
-
தொடரும்...