Monday 28 May 2018

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்றால் என்ன?


கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்றால் என்ன?
-
கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பது கீதையின் பிரபலமான உபதேசம்.இதை படித்துவிட்டு சிலர் என்னிடம் கேட்டது இதுதான்.வேலை செய்துவிட்டு சம்பளம் வாங்காமல் இருகக் வேண்டுமா?சும்மா வேலை செய்ய வேண்டுமா? 
-
கடமை என்பது என்ன? நீங்கள் யாரிடமிருந்தாவது எதையாவது பெற்றால் அதற்கு பிரதியாக திரும்பச்செய்வது கடமை.அதை சுயநலத்தோடு செய்தால் பந்தம்.சுயநலம் இல்லாமல் செய்தால் பற்றின்மை.முக்திக்கு வழி.ஒரு தந்தை மகன் உறவை வைத்து இதை விளக்குகிறேன்
-
நீங்கள் தந்தை என்ற நிலையை அடைய காரணமாக இருந்தது குழந்தைதான்.குழந்தைகள் இல்லாத வீட்டில் மகிழ்ச்சி இருப்பதில்லை.சமுதாயம் அவர்களை முழுமனிதர்களாக ஏற்றுக்கொள்வதில்லை.இந்த உலகத்தில் உள்ள இன்பங்களை இழந்துவிட்டதுபோல நிலை ஏற்படுகிறது.எதற்காக கஷ்ப்பட்டு சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை ஏற்படுகிறது.வாழ்க்கையே பெரும் சுமையாக தோன்றுகிறது ஒருவிதத்தில் உங்களை மகிழ்சியுடனும்,திருப்தியுடனும் வாழவைப்பதற்கு,குழந்தைகள் தேவை.
-
தனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய மகனை தந்தை வளர்க்கிறார்.பதிலுக்கு மகன் தந்தையை காப்பாற்ற வேண்டும்.அது கடமை.அப்படியானால் பலனை எதிர்பார்க்காதே என்றால் என்ன? தந்தை மகனை காப்பாற்ற வேண்டியது அவரது கடமை.மகன் தந்தையை காக்க வேண்டியது கடமை ஆனால் நமக்கு வயதாகும்போது மகன் தன்னை காப்பாற்றுவான் என்று நினைத்தால் அது பலனை எதிர்பார்ப்பது.அது தவறு. ஒருவேளை மகன் எதிர்பாராதவிதத்தில் இறந்துபோகலாம் அல்லது கெட்டவனாக மாறி கடமையை செய்ய தவறலாம்.இப்படியெல்லாம் மகன் தவறும்போது.தந்தை வருந்துகிறார்.நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இவனை வளர்த்தேன்,எனக்கு வயதானபோது என்னை கவனிக்காமல் விட்டுவிட்டானே என்று வேதனைப்படுகிறார்.
-
மகனுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்துவிட்டு திருப்தியடைந்துவிட வேண்டும். பலனை ஒருபோதும் எதிர்பார்க்ககூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சுயநலம்.பதிலுக்கு எனக்கு கிடைக்கும் என்ற நோக்கத்திற்காக செயல்படுவது சுயநலம்.மகன் நிறைய சம்பாதித்து தன்னை வசதியாக வாழவைப்பான் என நினைத்து படிக்க வைக்கிறார்கள்.கிட்டத்தட்ட மகனை பணம் சம்பாதிக்கும் இயந்திரம்போல பார்க்கிறார்கள்.இது சுயநலம்.எங்கெல்லாம் பலனை எதிர்பார்க்கும் தன்மை காணப்படுகிறதோ அதுவெல்லாம் சுயநலம்.அதன் விளைவு துன்பம்.
-
குழந்தைகள் பிறப்பதே தந்தைக்கும்.தாய்க்கும் மகிழ்ச்சியை கொடுப்பதற்காக,அவர்கள் வாழ்க்கையை பூரணமாக்குவதற்காக,அவர்கள் சந்தோசமாக உழைப்பதற்கு. ஒரு தூண்டுசக்தியாக இருப்பதற்காக.அப்படிப்பட்டவர்கள் உயர்ந்து நல்ல நிலையை அடையும்வரை உங்கள் கடமையை செய்ய வேண்டும்.ஆனால் பதிலுக்கு பலனை எதிர்பார்க்க்கூடாது
-
கடமையைப்பற்றி இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது.சிறு அணுமுதல் அண்டம்வரை அனைத்திலும் இந்த கடமை பிணைக்கப்பட்டுள்ளது.முற்றும் துறந்த துறவிக்குகூட கடமை உள்ளது அதுபற்றி பின்பு விளக்குகிறேன்
-
சுவாமி வித்யானந்தர்(28-5-2018)

No comments:

Post a Comment