Sunday, 14 June 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-55

வகுப்பு-55  நாள்-12-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

15.7 என்றென்னும் எனது(பரமாத்மா) அம்சமே ஜீவனாகத்தோன்றி,

ஜீவலோகத்தில் பிரகிருதியிலேயே நிற்கின்ற மனதையும், இந்திரியங்களையும் (போகத்தை நோக்கி) கவர்கிறது

-

பிரம்மம்-பிரகிருதி இணைந்து ஜீவனாகத்தோன்றுகிறது

ஐந்து இந்திரியங்கள் மற்றும் ஆறாவதாக மனம் இவைகளை ஜீவன் போகத்தை நோக்கி செலுத்துகிறது.

 

ஜீவாத்மா-பரமாத்மா என்று இரண்டு தத்துவங்கள் இருக்கின்றன.

பிரகிருதிக்கு மாயை என்று பெயர்.

அது நிரந்தரமாக இருப்பதில்லை.

இன்று இருப்பது நாளை இருக்காது.தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

இந்த உலகத்தில் உள்ள எல்லாமே தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

மனிதனுடைய குணங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

உடல்கள் அனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

இயற்கை முழுவதும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால் இதற்கு மாயை என்று பெயர்

 

எப்போதுமே மாறாத ஒன்று பிரம்மம்.

அதற்கு இன்னொரு பெயர் ஆத்மா அல்லது மேலானஆத்மா(பரமாத்மா)

பரமாத்மா பிரகிருதியுடன் இணைந்து ஜீவாத்மாவாகிறது.

ஜீவாத்மா உலக இன்பங்களை அனுபவிக்கும்படி புலன்களைத் தூண்டுகிறது.

-

15.8 மலர்களிலிருந்து மணங்களை காற்று எடுத்துக்கொண்டு செல்வதுபோன்று,

ஈஸ்வரன்(உடலை ஆள்பவன் அதாவது ஜீவாத்மா) உடல் எடுக்கும்போதும்,விடும்போதும்.இந்திரியங்களை பற்றிக்கொண்டு போகிறான்.

 

ஈஸ்வரன் என்றால் ஆள்பவன் என்று அர்த்தம். பிரபஞ்சத்தை ஆள்பவனுக்கும், உடலை ஆள்பவனுக்கும் ஈஸ்வரன் என்றுதான் பெயர்.

மலர்களில் உள்ள மணங்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு செல்வது எது? காற்று.

அதேபோல மனிதன் இறந்த பிறகு சூட்சும வடிவில் இருக்கும் ஐந்து இந்திரியங்களையும்,மனத்தையும் ஜீவன் எடுத்துக்கொண்டு செல்கிறது.

இறந்த பிறகு மனிதனின் தூல உடல் அழிந்தாலும் இன்னொரு உடல் அழிவதில்லை.அதற்கு சூட்சும உடல் என்று பெயர்.

அந்த உடலில் கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் போன்ற இந்திரியங்கள் கண்ணுக்குத்தெரியாத சூட்சும வடிவில் இருக்கிறது.அத்துடன் மனமும் இயங்கிக்கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு நகல் உடல் போன்றது.இதனுடன் ஜீவாத்மாவும் இருக்கிறது.

1.சூட்சும உடல் 2. மனம் 3. ஜீவாத்மா இந்த மூன்றும் உடலைவிட்டு வெளியேறுகிறது

-

மனிதன் வாழும்போது செய்துள்ள பாவ,புண்ணியத்திற்கு ஏற்ப சூட்சும உடலின் தன்மை மாறுபடுகிறது.

புண்ணியம் செய்திருப்பவனுடைய உடல் ஒளியைப்பெறுகிறது. பாவம் செய்திருப்பவனுடைய உடல் இருளைப்பெறுகிறது.

புண்ணியம் செய்திருப்பவன் எங்கும் ஒளி நிறைந்துள்ள உலகை காண்கிறான்.

பாவம் செய்திருப்பவன் எப்போதும் இருள் சூழ்ந்துள்ள  உலகை காண்கிறான்.

பேய்,பிசாசுகளை வழிபடுபவர்கள் இருள் நேரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.

தெய்வங்களை வழிபடுபவர்கள் பகல் நேரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்

-

15.9 ஜீவாத்மா செவி.கண்,தோல்,நாக்கு.மூக்கு,மனம் ஆகியவைகளை தனதாக்கிக்கொண்டு

இந்திரிய போகங்களை(பார்த்தல்,கேட்டல்,நுகர்தல்,தொடுதல்,சுவைத்தல்) அனுபவிக்கிறான்

-

ஜீவாத்மாவிற்கு உண்மையில் உருவம் இல்லை.அது பரமாத்மாவின் அம்சம்.ஆனால் செவி.கண்,தோல்,நாக்கு.மூக்கு,மனம் இவைகளை தன்னுடையது என்று கருதி.அவைகள் மூலம் இன்பங்களை அனுபவிக்கிறது.

உலகத்திலுள்ள இன்பங்களை எல்லாம் அனுபவிப்பது ஜீவாத்மா.

கண் மூலமாக அது இனிய காட்சிகளை காண்கிறது.

செவி மூலமாக இனிய குரல்களைக்கேட்கிறது.

நாக்கு மூலமாக அறுசுவை உணவை  ருசிக்கிறது.

மூக்கு மூலமாக நறுமணங்களை நுகர்கிறது

தோல் மூலமான இன்னொருவரைத் தொட்டு இன்பத்தை அனுபவிக்கிறது

மனத்தின் மூலமாக பல்வேறு கற்பனைகளில் மிதக்கிறது

உடலில் ஜீவாத்மா இல்லாவிட்டால் இவைகள் எதுவும் வேலைசெய்யாது.

-

15.10 ஓர் உடலில் இருந்து இன்னோர் உடலுக்கு செல்லும்போதும், ஓர் உடலில் இருக்கும்போதும், குணத்தோடு கூடியிருக்கும் ஜீவாத்மாவை, மூடர்கள் காண்பதில்லை. ஞானக்கண்களை உடையவர்கள் பார்க்கிறார்கள்

-

ஜீவாத்மா ஒரு உடலில் இருந்து எப்படி வெளியேறுகிறது? யாராலும் பார்க்க முடியாது.

இன்னொரு உடலுக்குள் எப்படி செல்கிறது? அதையும் பார்க்க முடியாது.

ஆனால் சூட்சுமஉடலோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்களால் காண முடியும்.

-

ஜீவாத்மா ஓர் உடலில் இருந்து இன்னோர் உடலுக்குள் செல்கிறது என்பது அனுபவப்பூர்வமான உண்மை.

உதாரணமாக...

சிலருக்கு பேய் பிடித்திருக்கும்.பேய் பிடித்தபிறகு அவர்களது செயல்பாடு,மனநிலை எல்லாமே முற்றிலும் மாறிவிடும். சிலர் வேறு மொழியில் பேசுவார்கள். சிலர் அமானுஷ்ய விசயங்களைப்பற்றி பேசுவார்கள்.

சூட்சும உடலில் சுற்றிக்கொண்டிருந்த ஆவி, இன்னொரு மனிதனுடைய உடலுக்குள் நுளைந்தவுடன், ஆவியின் குணங்கள் இந்த மனிதனிடம் வெளிப்படுகின்றன.

ஒருவேளை அந்த ஆவியை இந்த மனிதனுடைய உடலில் இருந்து விரட்டாமல் அப்படியே விட்டுவிட்டால்,

இந்தமனித ஜீவாத்மாவுடன் ஆவியின் ஜீவாத்மா ஒன்று கலந்து ஒன்றாகிவிடும்.

இப்போது ஒரு ஜீவாத்மா, ஒரு உடல் ஆனால் இரண்டு மனம்.

சில நேரங்களில் பழைய மனிதனாக நடந்துகொள்வான். சில நேரங்களில் வேறுமனிதன்போல நடந்துகொள்வான்.

-

இறந்த பிறகு ஜீவாத்மா உடலைவிட்டு வெளியேறுகிறது. மகான்களால் அதைக் காண முடியும்.

சில காலத்திற்கு பிறகு இன்னொரு உடலுக்குள் செல்ல விரும்புகிறது.பெரும்பாலும் தங்கள் குடும்பத்தில் மீண்டும் பிறக்க விரும்புகிறது.

பெண் கர்ப்பம் தரித்தபிறகு வளைகாப்பு நடக்கும் தருணங்களில் அல்லது அதற்கு முன்பு, கருவில் வளர்ந்துகொண்டிருக்கும் குழந்தையில் உடலுடன் இந்த சூட்சும உடல் ஒன்று கலக்கிறது.

 

சூட்சும உடலில் வசிப்பவன் செய்திருக்கும் புண்ணியத்தைவைத்து. குழந்தையின் உடலில் இணையும் காலத்தை கணிக்கலாம்.

புண்ணியம் அதிகம் செய்தவர்கள் குழந்தை உருவான சில வாரங்களிலும், பாவம் செய்தவர்கள் பல மாதங்களுக்கு பிறகும் குழந்தையின் உடலில் இணைகிறார்கள்.ஒரு குழந்தையின் உடலில் பல ஜீவாத்மா இணையவும் வாய்ப்பு உள்ளது.

 

ஒருவேளை குழந்தையின் உடலில் வேறு ஜீவாத்மாக்கள் யாரும் இணையாவிட்டால் என்னவாகும்?

அப்படி நடக்கவும் வாய்ப்புள்ளது. தாய் தந்தையரின் குணத்திற்கு ஏற்ப,

 குழந்தை பிறக்கலாம்.

உணவிலிருந்து உயிர் உருவாகிறது. அந்த தாய் தந்தையர் எப்படிப்பட்ட உணவுகளை உட்கொள்கிறார்களோ அதற்கு ஏற்ப,அதன் குணத்துடன் குழந்தை பிறக்கிறது. உதாரணமாக எப்போதும் மாமிச உணவுகளை உட்கொண்டு வாழ்ந்துவந்தால், அந்த விலங்கின் குணத்துடன் குழந்தை பிறக்கிறது.

-

மனிதன் முக்தி அடைவதற்கு பல பிறவிகள் தேவைப்படுகிறது.நமது மதத்தில் அதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் மீண்டும் மீண்டும் பிறந்து உலக இன்பங்களை அனுபவித்து, உலகத்தின் நிலையாமையை உணர்ந்து ஞானம் பெறுவதற்கு நமது மதத்தில் வழி இருக்கிறது.

 

இதனால் என்னவாகிறது?

மனிதன் பலமுறை பிறந்து பிறந்து இறப்பதால் சமுதாயத்தில் தெய்வீக தன்மையுள்ள மகான்கள் பலர் உருவாக வாய்ப்பு ஏற்படுகிறது.சிலர் பிறந்தவுடனேயே மகான்களாக இருக்கிறார்கள்.அதற்கு காரணம் அவர்கள் ஏற்கனவே பலமுறை பிறந்து நன்கு பக்குவப்பட்டுவிட்டார்கள்

 

15.11 யோகியாவதற்கு முயல்பவர்கள், அதை(ஈஸ்வரனை) தங்களுக்குள் வீற்றிருப்பவனாய் பார்க்கின்றனர். முயற்சியுடையவர்களாக இருந்தாலும் பக்குவப்படாதவர்கள், அறிவற்றவர்கள் அதை பார்ப்பதில்லை.

-

யோகியாக முயல்பவன் அந்த ஜீவாத்மாவை தனக்குள்ளேயே காணவேண்டும்.

இந்திரிய சுகங்களை அனுபவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.அப்போது ஜீவாத்மா மாயையிலிருந்து விடுபடுகிறது.

ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் ஒரு அம்சம் என்பது அப்போது புரியும்.

ஜீவாத்மா மாயையிலிருந்து விடுபட்டவுடன் பரமாத்மாவுடன் ஒன்றுகலந்துவிடுகிறது.

இவ்வாறு பிறப்பு.இறப்பிலிருந்து விடுதலை(முக்தி) கிடைக்கிறது.


No comments:

Post a Comment