Sunday, 14 June 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-65

வகுப்பு-65  நாள்-25-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஒரு செயல் நடைபெற வேண்டுமானால் ஐந்து காரணங்கள் அதற்கு பின்னால் இருக்கின்றன.

-

1.உடல் இருந்தால்தான் செயல்கள் நடைபெற முடியும்.அது ஒரு கருவி

2.உடல் மட்டும்போதாது. உடலை இயக்கும்படி கட்டளையிடும் ஒருவர் வேண்டும்.நமது ஆணைப்படிதான் இந்த உடல் இயங்குகிறது. நாம் தான் உடலுக்கு கர்த்தா.

3.வெறும் உடலும்,கர்த்தாவும் போதாது.  இந்திரியங்கள்(பார்த்தல்,கேட்டல் போன்ற ஞானேந்திரியங்கள் ஐந்து) வேண்டும்.

4.வெறும் ஞானேந்திரியங்கள் போதாது. கை,கால்,வாய் போன்ற ஐந்து கர்மேந்திரியங்கள் வேண்டும்.

5.அத்துடன்  தெய்வங்களும் செயல்களுக்கு காரணமாகின்றன

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

18.13 மஹாபாஹோ, கர்மம் இது என்று கூறுகின்ற சாங்கியத் தத்துவத்தில்

எல்லா கர்மங்களினுடைய நிறைவு சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஐந்து காரணங்களை என்னிடமிருந்து அறிந்துகொள்

-

18.14 (ஆத்மாவின்) இருப்பிடமாகிய உடல், கர்த்தா, பலவிதமான இந்திரியங்கள்,

பலவிதமான செயல்கள்,ஐந்தாவதாக தெய்வமும் காரணங்களாகின்றன

-

18.15 மனிதன் உடலால்,வாக்கால்,மனத்தால் நியாயமான

அல்லது விபரீதமான எக்கர்மத்தை தொடங்கினாலும்,

இந்த ஐந்தும் அதற்கு காரணங்கள் ஆகும்

-

ஏற்கனவே வாழ்ந்து முடித்த பலர் தெய்வங்களாக சூட்சும உடலில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

சிலரை குலதெய்வம் எப்போதும் வழிநடத்திக்கொண்டிருக்கும்.

சிலருக்கு இஷ்ட தெய்வம் துணையாக வந்துகொண்டிருக்கும்.

சிலருக்கு காவல் தெய்வம் இருக்கும்.

ஒவ்வொரு இடத்தையும் அந்தந்த இடத்திற்குரிய காவல் தெய்வங்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும்.

நமது விருப்பப்படி நாம் செயல்பட முடியாது.

சில இடங்களில் தீய ஆவிகள் செயல்புரிந்துகொண்டிருக்கும்.

எனவே நாம் எவ்வளவுதான் நமது விருப்பபடி செயல்புரிந்தாலும்,நம்மையும் மீறி நமக்கு மேலே இருக்கும் தெய்வங்கள்,அதை கட்டுப்படுத்துகின்றன.

 

சிலர்  வெளியூருக்கு செல்லலாம் என புறப்படுவார்கள்.ஏதோ காரணங்களால் அது தடைபட்டுவிடும்.

அவர் பயணிப்பதாக இருந்த பஸ் விபத்தில் சிக்கி பலர் இறந்திருப்பார்கள்.

தெய்வம்தான் தன்னை போகாமல் தடுத்தது என்று அவர் கூறுவார்.

அவரது குலதெய்வம் அல்லது அவர் வணங்கும் இஷ்ட தெய்வம் அல்லது வேறு சக்திகள் அவரை தடுத்திருக்கலாம்.

எனவே நமது செயல்களுக்கு பின்னால் வேறு சக்திகளும் இருக்கின்றன.

சிலரது உடலை அவர்களது இஷ்டதெய்வம் அதன் கருவியாக பயன்படுத்தி பல வேலைகளை செய்வதுண்டு.

-

18.16 அது அப்படியிருக்க. யார் இனி முழுமுதற்பொருளாகிய ஆத்மாவை, கர்த்தாவாக காண்கிறானோ,

புத்தி தெளிவில்லாத அவன் உண்மையை பார்ப்பதில்லை

-

ஆத்மாவும் , கர்த்தாவும்

-

ஆத்மா என்பது சாட்சி போன்றது.செயல்புரியாதது.மாயைக்கு அப்பாற்பட்டது.

நான் செய்கிறேன் என்ற அகங்கரம்,இவைகள் என்னுடையது என்ற மமகாரம் போன்ற மாயையுடன் கூடியது கர்த்தா.

ஞானம் ஏற்படும்வரை அகங்காரமும்,மமகாரமும் இருக்கும். அதுவரை நான் கர்த்தா என்ற உணர்வும் இருக்கும்..

 

ஞானம் ஏற்பட்டபிறகு செயல்களுக்கு காரணம் நான் அல்ல.

நான் ஆன்மா.நான் செயல்புரிவதில்லை.

மேலே கூறப்பட்டுள்ள ஐந்தும்தான் செயல்களுக்கு காரணம் என்னும் ஞானம் ஏற்படுகிறது.


No comments:

Post a Comment