சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-31
🌸
காளியின்
குழந்தையாக
அமர்நாத் யாத்திரையைத் தொடர்ந்து சுவாமிஜியின் மனம்
காளியின் திருப்பாதங்களை நாடத் தொடங்கியது. குருதேவரின் அரவணைப்பில், தாயின் மடியில்
குழந்தையைப்போல் அவளது திருப்பாதங்களைத் தஞ்சமடைந்த தட்சிணேசுவர நாட்கள் அவர் மனத்தில் ஒரு வேளை நிழலாடியிருக்கலாம்.
அவரது வாய் எப்போதும் அவளது திருநாமத்தை உச்சரித்தது. ராமபிரசாதர் குழைந்து உருகி காளியின்
மீது பாடிய பாடல்களை அவர் தொடர்ந்து பாடி வந்தார். படகோட்டியின் நான்கு வயது பெண் குழந்தையை
ஒரு நாள் சாட்சாத் உமாதேவியாக வழிபடவும் செய்தார். நான் எங்கெங்கு திரும்புகிறேனோ அந்தத் திசைகளில் எல்லாம்
அவளே நிற்கிறாள். இந்த அறையில் அவளும் ஒரு
நபராக உலவுவது போல் உள்ளது” என்று கூறினார் அவர்.
காளி வழிபாடு எனது விசேஷ பைத்தியம்” என்பார் சுவாமிஜி. ராமபிரசாதரும், கமலாகாந்தரும், ஸ்ரீராம
கிருஷ்ணரும், உலவிய வங்க பூமியில் பிறந்த சுவாமிஜிக்குக் காளி வழிபாடு என்பது இயல்பாகவே
கைகூடிய ஒன்றாக இருந்ததில் வியப்பில்லை. தமது படகிலேயே மிகவும் தனிமையான இடத்திற்குச்
சென்று வாழத் தொடங்கினார். யாரையும் சந்திக்க மறுத்துவிட்டார். அவரிடம் மிகவும் பக்தியுடன் அணுகிய டாக்டர் ஒருவரை மட்டுமே அவர் தம்மிடம் அனுமதித்தார்.
அந்த டாக்டர் அவரது தேவைகளையும் கவனித்துக்கொண்டார். பல நாட்கள் எந்தப்பேச்சும் இருக்காது. டாக்டர் செல்லும்போதெல்லாம் சுவாமிஜி
ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருப்பார். டாக்டரும் எதுவும் சொல்லாமல்
மௌனமாகத் திரும்பி விடுவார்.
ஒரு நாள் மாலை, உண்மையில் இந்த உலகம் என்ன என்பது
பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் சுவாமிஜியின் மனம் ஆழ்ந்தது. இன்பம், உற்சாகம், ஒளி இவையெல்லாம்
என்ன? இவையெல்லாம் வேறு யாருடையதாகவாவது இருக்க முடியாது. ஏனெனில் அவளைத் தவிர வேறு
எதுவும் கிடையாது” என்றல்லவா வேதங்கள் கூறுகின்றன!
எனவே இவையும் அந்தத்தேவியின் பண்புகளாக , அவளது ஒரு பக்கமாகத் தானே இருக்க வேண்டும்!
சுவாமிஜியின் சிந்தனை சுழன்றது.
ஒருநாள் இருள் கவியலாயிற்று. எங்கும் இயல்பாகவே அமைதி
சூழும் வேளை அது. இமயத்தின் அந்தத் தனிமைக் சூழலில் பேரமைதி நிலவியது. சுவாமிஜியின்
மனம் மட்டும் எரிமலையாய்க் கனன்று கொண்டிருந்தது.
அப்போது- அவரது சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவித்தபடி,
வாழ்க்கையின் மறு பக்கத்தை உணர்த்தியபடி காளி தேவி அவர் முன் தோன்றினாள். தம் முன்
திடீரென்று தோன்றிய கால பயங்கரியான அவளது தரிசனம்
அவருள் உறைந்தது. அந்த அனுபூதியின் வேகத்திலேயே சென்று தமது காட்சியை ஒரு கவிதையாக
வடித்தார் அவர். எழுதி முடித்தவர். உணர்ச்சிப்பெருக்கின் வேகத்தில் நிலை குலைந்தார். அவரது கைகளிலிருந்து பேனா நழுவித்
தரையில் விழுந்தது. அவரும் மயங்கித் தரையில் விழுந்தார்.
தொடர்ந்த நாட்களில் சுவாமிஜி காளி மயமாகவே வாழ்ந்தார். அவளைப் பற்றியே
பேசினார்.அவளது தத்துவத்தை விளக்கினார். இன்ப நாட்டமே அனைவரின் நோக்கம் என்று நினைப்பது
தவறு. இன்பத்தை நாடுகின்ற அதே அளவில் துன்பத்தை
நாடுபவர்களும் பிறக்கவே செய்கிறார்கள். சோகத்திலும் சுகம் இருக்க முடியும். பயங்கரத்தைப்
பயங்கரத்திற்காகவே வழி படுவோம்.
இன்பத்திலும் இனிமையிலும் மகிழ்ச்சியிலும் தேவி யைக்
காண்கிறோம். அது போலவே தீமையிலும் பயங்கரத்திலும்
வேதனையிலும் மரணத்திலும் அவளைக் காண்பதற்குக் கற்றுப் கொள்வோம்.
அம்மா! என்ன விந்தை! உனக்குத்தலை மாலையை அணிவிக்கிறார்கள். ஆனால் பயத்தில் நடுங்குகிறார்கள்.
அதே வேளையில் உன்னை, ”கருணையின் வடிவே” என்று அழைக்கவும் செய்கிறார்கள்.
பயங்கரத்தை வழிபடுவதால் மட்டுமே பயத்தை வெல்ல முடியும்.
மரணமிலாப் பெருநிலையை அடைய இயலும். மரணத்தைப் பற்றி சிந்தனை செய்யுங்கள். மரணத்தைத்
தியானம் செய்யுங்கள்! பயங்கரத்தை, பயங்கரத்தை,
பயங்கரத்தை வழிபடுங்கள்! அவளே எல்லாம். அவளது
சாபமும் ஆசியே, உங்கள் இதயம் சுடுகாடா கட்டும், ஆணவம், சுயநலம், ஆசைகள் அனைத்தும் எரிந்து
சாம்பலாகட்டும்! அப்போது , அப்போது
மட்டுமே அங்கே காளி வருவாள். அவளே காலம்.
அவளே மாற்றம். அவளே எல்லையற்ற ஆற்றல்!
எப்போதும் சுவாமிஜியின் திருவாயிலிருந்து காளியின்
நாமமே எழுந்தது. அவளே உடம்பு, அவளே நோய், வேதனையைத் தருபவளும் அவளே. காளி, காளி, காளி!
என்று கூறியபடி இருந்தார் அவர். இந்த நாட்களில் அவரது அறிவுரைகளும் காளியைப் பற்றியே இருந்தன. பயம் கூடாது.
பிச்சை கேட்கக் கூடாது. உரிமையுடன் கேளுங்கள்- உரிமையுடன் மிக உயர்ந்ததைக்கேளுங்கள்!
காளியின் உண்மையான பக்தர்கள் கரும்பாறை போல் உறுதியாகவும் சிங்கம்போல் பயமற்றும் இருக்க வேண்டும். பிரபஞ்சமே திடீரென்று
நொறுங்கிப் பொடி ப் பொடியாகி, தூசியாகச் காலடியில்
வீழ்ந்தாலும் அவர்கள் கலங்க மாட்டார்கள். நீங்கள் சொல்வதை அவள் கேட்குமாறு செய்யுங்கள்.
அவள் முன்னால் கூனிக்குறுகி நிற்காதீர்கள். அவள் எல்லா ஆற்றலும் வாய்ந்தவள். கல்லிலிருந்து கூட வீரர்களை
உருவாக்க அவளால் இயலும்.
காளியின் எண்ணங்கள் மனத்தில் உறைய உறைய மேலும் தனிமையில்
ஆழ்ந்து செல்ல வேண்டும் என்று விரும்பினார் சுவாமிஜி. எனவே திடீரென்று ஒருநாள் ஷீர்பவானி
கோயிலுக்குச்சென்றுவிட்டார். யாரும் தம்மைத் தொடரக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறியும்
விட்டார்.
சுமார் ஒருவாரகாலம் அங்கே இருந்தார் சுவாமிஜி. தினமும்
அவளை வழிபட்டார். ஹோமங்கள் செய்தார். அந்தப் பவானி தேவிக்கு உகந்ததான ஷீரம்(பால் பாயாசம்)
நைவேத்தியம் செய்தார். ஒரு சாதாரண யாத்திரிகரைப்போல் ஜபமாலை கொண்டு ஜபங்கள் செய்தார். அங்கே உள்ள பண்டிதர் ஒருவரின் மகளான சிறுமியைத்தேவியாகத் தினமும் வழி பட்டார்.
தேவி பேசினாள்
-
ஷீர் பவானி
கோயில் முகலாயர்களின் படை யெடுப்பால் மிகவும்
சிதிலமடைந்திருந்தது. கோயிலின் நிலைமை சுவாமிஜியை உறுத்திக் கொண்டே இருந்தது. இப்படியெல்லாம்
ஒரு கோயிலைச் சூறையாட எப்படித்தான் அனுமதித்தார்களோ? நான் மட்டும் இருந்திருந்தால்
இப்படி ஒருகாரியம் நடக்க விட்டிருக்க மாட்டேன். தேவியைக் காக்க என் உயிரையே கொடுத்திருப்பேன்” என்றெல்லாம் எண்ணங்கள் அவரது சிந்தனையில் எழுந்தன. அப்போது,
மகனே! என்றொரு குரல் எழுந்தது. ஆம், தேவி பேசினாள். மகனே, என் கோயில்களில் சாத்திகர்
நுழைந்தால் என்ன? எனது விக்கிரகங்களை உடைத்தால் தான் என்ன? அதனால் உனக்கு என்ன வந்தது?
நீ என்னைக் காக்கிறாயா? அல்லது நான் உன்னைக் காக்கிறேனா? என்று கேட்டாள் அவள். சுவாமிஜிக்குச்
சுரீர் என்றது. உண்மைதானே! திகைத்துப்போனார் அவர்! அம்மா! என்று குழைந்தது அவரது உள்ளம்.
நான் தசறு செய்துவிட்டேன்! ஒரு குழந்தையாக உன் திருவடிகளில் இருப்பதற்கு அருள் புரிவாய்!
என்று அரற்றினார்.!
தேவியின் திருவுளத்தை அறிந்த பிறகும் சுவாமிஜியின்
மனம் ஏனோ அமைதி கொள்ளவில்லை. ஒருநாள் அந்தக்கோயிலின் சன்னதியில் மௌனமாக அமர்ந்திருந்தபோது
மீண்டும் அவரது மனத்தில், இந்தக்கோயில் இப்படிச் சிதிலமாகிக் கிடைக்கிறதே! என்னால்
இங்கே புதிய கோயில் கட்ட முடியுமானால்..... என்றெல்லாம் சிந்தனைகள் எழுந்தன. அப்போதும்
தேவி பேசினாள், மகனே! கோயில்களையும் மடங்களையும் உருவாக்க என்னால்
இயலாதா? இதே இடத்தில் ஏழுமாடி பொற்கோயிலை ஒரு கணத்தில் என்னால் எழுப்ப இயலும்-
தேவியின் குரல் சுவாமிஜிக்குத் தெளிவாகக்கேட்டதுஇ
அவளது கனிந்த குரலைக்கேட்ட பிறகு திட்டங்கள் தீட்டுவதையே விட்டு விட்டேன். எல்லாம்
அவள் திருவுளம்போல் நடக்கட்டும். என்று பின்னாளில் கூறினார் அவர்.
அவள் மயமாக
ஒரு வாரத்திற்குப் பிறகு ஷீர்பவானியிலிருந்து ஸ்ரீநகருக்குத்
திரும்பினார் சுவாமிஜி.நேராக நிவேதிதையும் மற்றவர்களும் இருந்த படகு வீட்டிற்குச்சென்றார்.
கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தபடியே,
தேவிக்குச் சமர்பித்த சில சாமந்திப் பூக்களைப் பிரசாதமாக அவர்களுக்குக்கொடுத்தார்.
தேவிக்கு அணிவித்த மாலையை ஒருவரிடம் கொடுத்தார். பிறகு அமர்ந்து, இனி ஹரி ஓம்” கிடையாது. இனி எல்லாம் ”தேவி” தான்! எனது தேச பக்தி
எல்லாம் விலகியது. இனி எல்லாம் ”அம்மா” அம்மா தான்” என்றார்.
ஷீர்பவானி
நாட்களைப் பற்றி நிவேதிதை எழுதுகிறார். சுவாமிஜியின் நிலையைப் பற்றி என்னால் உங்களுக்கு
எழுத இயலாது. ஏனெனில் அது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு குழந்தைபோல் அவர், அம்மா,
அம்மா என்று கூறுகிறார்.ஆனால் அவரது குரல் தெய்வத்தின் குரலாக ஒலிக்கிறது. அவரது ஆன்மாவோ
பரமாத்மாவாகிய இறைவனுடையதாகவே தெரிகிறது.... கடவுளைக் கண்ட ஒருவராகவே அவர் இருக்கிறார்.
அவரது கண்கள் இன்னும் அந்தக் காட்சியைக் கண்ட படியே உள்ளன.
சீடர்களுடனும் நண்பர்களுடனும் சுவாமிஜி இருந்தாலும்
அவரைப் பற்றி அவர்கள் அறிந்தது மிகமிகச் சிறிதளவே. ஆழ்ந்த அமைதி கலந்த அவரது கம்பீரம்
சில நேரங்களில் யாரையும் அவரிடம் அணுக அனுமதிக்காது. சிலநேரங்களில் அவர் உலகையே மறந்தபடி
நதிக்கரையில் உலவுவார். தம்மைச் சுற்றி ஓர் உலகம் உள்ளது என்பதையே அவர் உணராதது போல்
இருக்கும். மனமும் வாக்கும் எட்டாத ஏதோ உலகங்களில்
அவர் சஞ்சரிக்கிறார். உடம்பு மட்டுமே இங்கு உலவுகிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.ஒரு நாள் அவர் காளியைப் பற்றி தாம் எழுதிய பாடலில் சில வரிகளைப் பாடியபடியே திடீரென்று
அவர்கள் முன்னால் வந்து, அத்தனையும்
உண்மையாக நடந்தது. இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் என் கண்
முன்னால் நடந்தவை. ஆம் , நான் மரணத்தின் பேருருவைத் தழுவினேன்” என்றார்.
காஷ்மீரும் ஷீர்பவானிக்கோயிலும் சுவாமிஜியின் வாழ்க்கையில்
இவ்வாறு அவரது தெய்வீக வெளிப்பாட்டிற்குச் சான்றாக நிற்கின்றன. காஷ்மீரிலும அமர்நாத்திலும்
ஷீர்பவானியிலும் அவர் என்னென்ன அனுபவங்களை பெற்றார். அவரது சிந்தனைகள் எத்தகைய புதுப்
பொலிவைப் பெற்றன, அவர் கண்ட காட்சிகள் எத்தனை என்பதெல்லாம் அவர் மட்டுமே அறிந்தவை.
அவர் வெளியில் கூறியவை மிகச் சொற்பமே என்பது மட்டும்உறுதி. இவற்றையும் பின்னால் சீடர்களுக்குச் சொல்லிவிட்டு
அவர் இதற்கு மேல் என்னால் சொல்ல இயலாது, சொல்வதும் சரியல்ல”என்று கூறினார் . ஆனால் இன்னும் ஓரிரு முக்கியமான
காட்சிகளைத் தமது சகோதரத்துறவிகளிடம் தெரிவித்திருந்தார். அவை புறவுலகிற்குக் கிடைக்கவில்லை.
பக்கீரின் சாபம்-
நன்மையும் தீமையும் கலந்தது உலகம் என்பது எல்லா பரிமாணங்களிலும்
உண்மை. இத்தனை ஆன்மீக அனுபூதிகளுக்கிடையில் சுவாமிஜி ஒரு சாபத்தையும் ஏற்க நேர்ந்தது.
முஸ்லிம் பக்கீர் ஒருவரின் சீடன் சுவாமிஜியிடம் அவ்வப்போது வந்து சென்றான். அவரிடம்
மிகவும் கவரப் பட்டான். ஒருநாள் அவனுக்குக் காய்ச்சலும் தலைவலியும் வந்து மிகவும் துன்பப்
பட்டான். சுவாமிஜி அவனைச்சென்றுபார்த்து, அவனது
தலையைக் கைகளால் வருடினார். அவனது நோய் அவனைவிட்டு அகன்றது. இந்த நிகழ்ச்சிகளுக்குப்
பிறகு அவன் சுவாமிஜியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டான். அவரிடம் தொடர்ந்து வரத்
தொடங்கினான். இதனைக்கேள்விப்பட்ட பக்கீர் சுவாமிஜியிடம் கடும் கோபம் கொண்டார். எங்கே
சீடனை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் சுவாமிஜியைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக ஏதேதோ
கதை கட்டி அவனிடம் கூறிப் பார்த்தார். ஆனால்
அது அவனிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சுவாமிஜியைவிடத் தமக்கு அதிக ஆற்றல்
உண்டு என்பதை நிரூபிப்பதற்காக, என் ஆற்றலால்
உன் சுவாமிஜியை என்ன செய்கிறேன்” பார். காஷ்மீரை விட்டு வெளியேறுவதற்கு
முன்னால் அவர் வாந்தியாலும் தலை சுற்றலாலும் சிரமப்படப்போகிறார்” என்றார்.
அப்படியே நடந்தது. வாந்தியாலும் தலைசுற்றலாலும் சுவாமிஜி
மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். அவருக்குக் கோபம் கோபமாக வந்தது- பக்கீர் மீது அல்ல,
குருதேவர் மீது! குருதேவர் இருந்து என்னபயன்? எனது அனுபூதிகளும், எல்லா ஆற்றலும் வாய்ந்த ஆன்மா நம்முள்
இருக்கிறது” என்ற எனது வேதாந்த
போதனையும் என்ன சாதித்தன? அவையெல்லாம் கேவலம் ஒரு மந்திரவாதியின் செப்பிடுவித்தை சாபத்திலிருந்து
என்னைக் காக்க வில்லையே! என்று ஆதங்கப் பட்டார் அவர்.
உன் குடுமி அவர் கையில்!
1898 அக்டோபர் 18-ஆம் நாள் கல்கத்தா திரும்பினார்
சுவாமிஜி. அவரது ஆதங்கம் கல்கத்தா வந்த பிறகும் தணிய வில்லை. ஒரு நாள் அன்னை ஸ்ரீசாரதா
தேவியைத் தரிசிக்கச்சென்றார். அன்னையைக் கண்டதும் அவர் பக்கீரின் சாபத்தைப் பற்றி கூறி,
புகார் கூறும் தொனியில், அம்மா” உங்கள் குருதேவரின் ஆற்றல் பிரமாதம்
தான்! உங்கள் குருதேவரால் என்னைக் காப்பாற்ற முடியவில்லை” என்றார். அதற்கு அன்னை, மகனே, அந்தச் சாது பெற்றுள்ள சித்திகளின்
விளைவு அது. அவற்றின் ஆற்றலை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். குருதேவர் அவற்றை நம்பினார்.
அவர் எதையும் அழிக்கவரவில்லை. எல்லா நெறிகளையும் அவர் ஏற்றுக்கொண்டார்” என்றார். சுவாமிஜியும் விடாமல் இனி தாம் குருதேவரை ஏற்றுக்
கொள்ளப்போவதில்லை” என்றார். அதற்கு அன்னை சற்று
கேலியாக, என் மகனே” அது உன்னால் முடியக் கூடிய காரியமா?
உன் குடுமி அவர் கையில் அல்லவா உள்ளது” என்றார்.
உடல் நலம்
பாதிப்பு
சுவாமிஜி மடத்திற்குத் திரும்பி வந்தது துறவிகளுக்கும் பிரம்மசாரிகளுக்கும் பேரானந்தத்தை அளித்தது. ஆனால்
அவரது உடல்நிலை அவர்களுக்குக் கவலையை அளித்தது. பார்ப்பதற்கு ஒரு நோயாளியைப்போல் தோற்றமளித்தார்
அவர். டாக்டர் ஆர். எல். தத்தா மற்றும் பிரபல மருத்துவர்கள் சுவாமிஜிக்குச் சிகிச்சை
அளித்தனர். சர்க்கரை வியாதியும், தூக்கமின்மையும் அப்போது அவரைப் பாதித்திருந்தன. அதனுடன்
அமர்நாத் யாத்திரை காரணமாக உடல் தளர்ந்து இதயமும் பலவீனமாகியிருந்தது. இதய நோய் அவரது
பரம்பரை நோய். சுவாமிஜி லண்டனில் இருந்தபோது தீவிர நெஞ்சுவலி யால் ஒரு முறை ஏற்கனவே
தாக்கப் பட்டிருந்தார். அது பற்றி ஏற்கனவே கண்டோம். உடலில் நீர்க்கட்டும் இருந்தது.
தூக்கமின்மையால் சுவாமிஜி எந்த அளவிற்குச்சிரமப்பட்டிருப்பார்
என்பதைக் கீழ்வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம். அந்த வருடம் ஜனவரியில் அவர் பலராம்
போஸின் வீட்டில் தங்கியிருந்தார். 22-ஆம் தேதி முழு சூரியகிரகணம். ஒரு குழந்தைபோல்
சுவாமிஜி கூறினார், கிரகண வேளையில் ஒருவன்
எதைப் பிரார்த்திக்கிறானோ அது அவனுக்கு நூறு மடங்காகக் கிடைக்கும் என்பது இந்துக்களின்
நம்பிக்கை. நான் தூங்கப்போகிறேன். அப்படியாவது எதிர்காலத்தில் நூறு மடங்கு தூக்கம்
கிடைக்குமா என்று பார்க்கிறேன். ஆனால் அவரால் 15 நிமிடம் மட்டுமே தூங்க முடிந்தது.
விழித்ததும் அவர் கூறினார், ஆழ்ந்த தூக்கம் என்பதை தேவி இந்த உடம்பிற்கு விதிக்கவில்லை.
அந்தநாட்களைப் பற்றி சுவாமிஜியின் சீடரான கேதார்
பாபா கூறினார். சிறிதும் தூக்கம் வராமல் அவதிப்பட்ட அந்த நாட்களில் ஒரு முறை சுவாமிஜி
என்னிடம், ”அப்பா ஏதாவது செய்து சற்று எனக்குத் தூக்கம் வர உதவுவாயா? நீ என்ன கேட்டாலும்
நான் தருகிறேன்” என்று கூறினார். அவருக்குத் தூக்கத்தைத் தருவதற்கான சக்தி
என்னிடம் எங்கே? உடம்பினால் அவர் பட்ட அவதிகள்
கொஞ்சமல்ல. ”ஞானம் ஏற்பட்ட பிறகு ஒரு முறை கூட நான் நான்கு மணிநேரத்திற்கு அதிகமாகத்
தூங்கியதில்லை” என்று என்னிடம் சுவாமிஜி கூறினார்.
இத்தனை நோய்களும் போதாதென்று ஆஸ்த்மா வேறு அவருக்கு
மிகுந்த தொந்தரவு கொடுத்து வந்தது. சிலவேளைகளில் அவர் மூச்சுத் திணறலால் அதிலிருந்து
விடுபடும் போது உடல்நிலை மிக மிக மோசமானதாக ஆகியிருக்கும். மூச்சுத் திணறல் பிரச்சனை
இப்போது அவரை அடிக்கடி வாட்டத் தொடங்கியது.
மருத்துவர்களின் பரிசோதனை முடிவுகள் ஓர் எச்சரிக்கை
மணியாக ஒலித்தன. இதயம் சிகிச்சையைக் கடந்த நிலையில்பழுது பட்டிருப்பதாகவும், மிகவும்
கவனமாக இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று அவர்கள் கூறினர். கட்டாயமாக
பொதுச்சொற்பொழிவுகள் கூடாது, காலையிலும் மாலையிலும் கங்கையில் படகுப் பயணம் மேற்கொள்ள
வேண்டும் என்று பல நிபந்தனைகளை அவர்கள் கூறினர்.
நாராயிலைச்சேர்ந்த ஜமீன்தார்கள் தங்கள் படகுகளை சுவாமிஜியின் பயணத்திற்காக அளிக்கவும்
செய்தனர். சுவாமிஜியும் தம்மால் இயன்ற அளவு இந்த நிபந்தனைகளைப் பின்பற்றினர். மருந்துகளை உரிய வேளையில் சாப்பிட்டார்.
சொற்பொழிவுகளைத் தவிர்த்தார்.
உடல் நிலை இவ்வாறு இருக்க, மனநிலையோ அவர் எப்போதும் இறையுணர்வின் ஆழங்களில் அமிழ்ந்து கொண்டிருப்பதைக்
காட்டுவதாக இருந்தது. யாரும் அருகில் இல்லையென்றால் சிறிது நேரத்தில் அவர் தியானத்தில் ஆழ்ந்து விடுவார். அவருக்கும் இறையுணர்வின் அறுதி
நிலைக்கும் இடையே ஒரு மெல்லிய திரை மட்டுமே ஊசலாடிக் கொண்டிருப்பது போலவும், எந்த நேரத்தில்
வேண்டுமானாலும் அது கிழிந்து அவரது உணர்வு
முற்றிலுமாக இறையுணர்வில் ஆழ்ந்து விடும் என்றும்
மற்றவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. தான் யாரென்று நரேன் எப்போது அறிந்து கொள்கிறானோ
அப்போது அவன் தன் உடம்பை விட்டு விடுவான்” என்று குருதேவர் கூறியிருந்தது
அனைவரின் நினைவிலும் உறுத்திக் கொண்டிருந்தது.
அப்படி ஏதும் நிகழ்ந்து விடாதிருக்க அவர்கள் மிகுந்த முயற்சி செய்தனர். அவரிடம் ஆன்மீகம்
பற்றிய விஷயங்களைப்பேசுவதை த் தவிர்த்து, எப்போதும் சாதாரணமான விஷயங்களைப் பேசவும்
அவர் வேடிக்கை வினோதங்களில் ஈடுபடுமாறு பார்த்துக் கொள்ளவும் செய்தனர்.
ஒருநாள் சுவாமிஜி தமது சீடரான சுத்தானந்தருடன் பேசிக்
கொண்டிருந்தார். அப்போது ஏதோ கேள்வி கேட்டார், சுத்தானந்தர் பதிலளித்தார். சுவாமிஜி
மீண்டும் அதே கேள்வியைக்கேட்டார். சுத்தானந்தர் அதே பதிலைச்சொன்னார். இவ்வாறு பத்துப்
பன்னிரண்டு முறை அதே கேள்வியும் அதே பதிலும் தொடர்ந்தது. சுவாமிஜியின் மனம் சிறிதும்
இங்கே இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு அவரை உலக உணர்வு நிலைகளுக்குக்கொண்டு வருவதற்கான
முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இந்த நாட்களிலும் இளம் துறவிகளுக்கும் பிரம்மச் சாரிகளுக்கும் பயிற்சிகள் அளிப்பதை சுவாமிஜி
மிக முக்கியமானதாகக் கருதினார். வராக நகர நாட்களிலிருந்தே மடத்தில் பல இளைஞர்கள் சேர்ந்தது
பற்றி கண்டோம். அவர்களில் சிலர், வராக நகர மடத்தில் முதன் முதலாகச் சேர்ந்தவர் காளி
கிருஷ்ணர் (சுவாமி விரஜானந்தர்) அவரைத் சென்றனர்.
சுவாமிஜி, பிரம்மானந்தர் , சாரதானந்தர்,ம- சுரேந்திரநாத் தத்தர், ஹர மோகன் போன்ற பலரும்
அங்கே சென்றனர். பெண்கள் கல்விக்காக ஒரு பள்ளி திறப்பது பற்றி கலந்து பேசுவதற்காக அன்று
கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
நிவேதிதை அந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி
ஒரு சிறிய உரை நிகழ்த்தினார். அந்தப் பணிக்கு
ஆதரவு தருமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டத்தில் ஆதரவு
இல்லை.
அப்போது ஒரு வேடிக்கை நிகழ்ந்தது. நிவேதிதை பேசிக்கொண்டிருந்தபோது
சுவாமிஜி உள்ளே வந்தார். யாருடைய கவனத்தையும் கவராமல் அமைதியாகச் சென்று பின்வரிசையில் அமர்ந்து கொண்டார். நிவேதிதை ஆதரவு கேட்டும் யாரும் அதற்கு ஒத்துழைக்க முன்வராத போது சுவாமிஜி
பின்னாலிருந்து பக்தர்களை தமது கையால் உந்தி
அவர்களை எழுந்து ஏதாவது சொல்லுமாறு கூறினர். அப்போதும் யாரும் உடன் படவில்லை. எனவே
தாமே எழுந்து ஹர மோகனைச் சுட்டிக்காட்டி, மிஸ் நோபிள், இதோ இவர் தமது மகளை உன் பள்ளிக்கு
அனுப்பத் தயாராக உள்ளார்” என்று கூறிவிட்டார். சுவாமிஜியைக்
கண்ட நிவேதிதை மிகுந்த மகிழ்ச்சியுடன் கைதட்டி ஒரு சிறுமியைப்போல் ஆடிக் களித்தார்.
பெண்கள் பள்ளியின் ஆரம்பம்
நவம்பர் 13-ஆம் நாள் பெண்கள் பள்ளி, முறையாகத் தொடங்கப்
பட்டது. அன்று காளி பூஜை நாள். பள்ளியைத் திறந்து வைக்க அன்னை ஸ்ரீசாரதாதேவியே நேரில்
வந்திருந்தார். நிவேதிதை தங்கியிருந்த வீட்டிலேயே பள்ளி தொடங்கப் பட்டது. சுவாமிஜி,
பிரம்மானந்தர், சாரதானந்தர், யோகின்மா, கோலாப்மா என்று பலரும் வந்திருந்தனர். அன்னை
வழக்கம்போல் மிக மெல்லிய குரலில் இந்தப் பணிக்கான தமது ஆசிகளைத் அதரிவித்தார். அதனை
கோலாப்மா உரத்த குரலில் எல்லோருக்கும் தெரிவித்தார். தேவியின் ஆசிகள் எப்போதும் இந்த ப் பள்ளியில் நிலவ வேண்டும் என்றும்,
அந்தப்பள்ளியில் பயிற்சி பெறுகின்ற பெண்கள் லட்சியப்பெண்களாகத் திகழவேண்டும் என்று
தாம் பிரார்த்தனை செய்வதாக அன்னை கூறினார். எதிர்காலத்தில் பெண்கள் கல்வி பெற்றவர்களாகத் திகழப்போகிறார்கள் என்பதற்கு அன்னையின் ஆசிகளைவிட மேலான ஒரு நல்ல சகுனத்தை
என்னால் கற்பனை கூட செய்ய இயலாது” என்று எழுதினார் நிவேதிதை. சுவாமிஜியிடமும், அவரது பணியிலும்
உயர்ந்த மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்த இல்லற பக்தர்களின் வீடுகளிலிருந்து சிறுமிகள் அந்தப் பள்ளிக்கு அனுப்பப் பட்டனர். சிறுமிகளை
அழைத்துவர ஒரு பணிப்பெண் அமர்த்தப் பட்டாள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணி ஒன்று
அன்று சுவாமிஜியால் இவ்வாறு தொடங்கப் பட்டது. தொடர்ந்து சுவாமிஜி நிவேதிதைக்கு ஆலோசனைகள்
வழங்கியும், தமது சகோதரத் துறவிகளை அவருக்கு வழிகாட்டுவதில் ஈடுபடுத்தியும் பெண்கள் கல்விப் பணி வளர வகை செய்தார்.
இந்த நாட்களில்
சுவாமிஜியிடமிருந்து பொங்கிய அன்புப் பேரூற்று தங்கு தடையின்றி எல்லோர் மீதும் பாய்ந்தது.ஆண்,
பெண், பணக்காரன்-ஏழை, இளைஞர்- முதியவர், உயர்ந்தவன்-
தாழ்ந்தவர், நல்லவர்- கெட்டவர், என்ற எந்தப்
பாகுபாட்டையும் அவர் பொருட்படுத்தவில்லை. வந்தவர்க்கெல்லாம் மந்திர தீட்சை அளித்தார் அவர். தீயவர்கள், வழி தவறியவர்கள்
என்று யாரையும் அவர் விலக்கவில்லை. அவரது இந்தக் கருணைப் பெருக்கு சிலவேளைகளில் தவறாகப்
புரிந்து கொள்ளப்பட்டது. ஒரு வேளை சுவாமிஜிக்கு மனிதர்களைத் தரம் பிரித்து அறியத்தெரியவில்லையோ என்று கூட சிலர் சந்தேகப் பட்டதுண்டு. இவ்வாறு பலர்
பேசியதைக்கேட்ட சுவாமிஜியின் சீடர் ஒருவர் சுவாமிஜியிடமே நேரடியாக இதனைக்கேட்டார்.
அன்பு கனிந்த குரலில் பதிலளித்தார் சுவாமிஜி.
மகனே! எனக்கா மனிதர்களைப் பற்றித் தெரியாது என்கிறாய்!
ஒரு மனிதனை நான் பார்க்கும்போது, அவனது முற்பிறவியைக்கூட
நான் அறிந்து கொள்கிறேன். நான் அறிவது அவனுக்கேத் தெரியாது. அவனது ஆழ்மகத்தில் என்ன
நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரிய
வருகிறது அவையெல்லாம் தெரிந்தும் நான் என் அத்தகையோருக்கு மந்திர தீட்சை வழங்குகிறேன்?
பாவம், மன அமைதிக்காக அவர்கள் எல்லாக் கதவுகளையும் தட்டினார்கள்.ஆனால் எல்லா இடங்களிலும்
அவர்கள் மறுக்கப் பட்டார்கள். கடைசியாக என்னிடம் வந்துள்ளார்கள். நானும் மறுத்தால்
அவர்கள் எங்கு செல்வார்கள்? அதனால் நான் அவர்களை ஏற்றுக்கொள்கிறேன். ஓ! எவ்வளவு துன்பப்
படுகிறார்கள்! இந்த உலகமே துன்பம் நிறைந்தது. மகனே!
பல பணிகளைத் துவக்கியாயிற்று. அளிக்க வேண்டிய செய்தியை
அளித்தாயிற்று. ஸ்ரீகுருதேவர் ஆரம்பித்த துறவியர் பரம்பரைக்கு ஒரு வடிவம் கொடுத்தாயிற்று.
இனி? குருதேவர் மறைந்த பிறகு அந்த நாட்களிலேயே
பிரமததாஸ் மித்ரருக்கு எழுதினாரே- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அஸ்தியைப் பிரதிஷ்டை செய்வதற்கு
கங்கைக்கரையில் ஓர் இடம் கிடைக்கவில்லையே என்று எண்ணியெண்ணி என் இதயம் உடைந்து போகிறது.
அந்தப் பணிக்குக் காலம் கைகூடி வருவதைக் கண்டார் சுவாமிஜி. தமது வாழ்க்கையில் ஒருமுக்கியமான
அந்தப் பணியைச் செய்வதற்குத் தயாரானார்.
புதியதொரு
துறவியர் பரம்பரை
வங்க மண்ணாகிய
கோமுகியிலிருந்து ஒரு கருணை கங்கைப் பொங்கிப் பாய்கிறது. மனிதர்களே! நீங்கள் யார் யார்
இருக்கிறீர்களோ, அனைவரும் விரைந்தோடி வாருங்கள்! வந்து, அந்தப் புனித நீரைப் பருகி, தாகத்தால் வறண்ட
உங்கள் தொண்டைக்கு தாக சாந்தி அளியுங்கள்!
என்று ஸ்ரீராமகிருஷ்ணரைக் கங்கையாக வர்ணிக்கிறது
வங்க மொழிப் பாடல் ஒன்று. வற்றாத ஜீவ நதியான
கங்கை புறப்படும் இடம் கோமுகி. அவள் உலகினரின் பாவங்களைப் போக்குவதற்காகக் கோயில் கொண்டு எழுந்தருளி அருள் புரியும் இடம் கங்கோத்ரி.
அது போல் ஸ்ரீராமகிருஷ்ண கங்கைக்கு கோமுகியாக
அமைந்தது தட்சிணேசுவரம் என்றால் கங்கோத்ரியாக அமைமகிறது பேலூர் மடம். கங்கைக்குக் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது
தட்சிணேசுவரம், மேற்குக் கரையில் அமைந்துள்ளது பேலூர் மடம். தட்சிணேசுவரத்திலிருந்து ஸ்ரீராமகிருஷ்ண கங்கை புறப்பட்டு, பேலூர் மடத்தை
அடைந்து அருள் பரப்பத் தொடங்குவதற்கு, சுமார் 15 வருடங்கள் ஆயின. ஸ்ரீராமகிருஷ்ணரின்
அருளும் அன்னையின் ஆசிகளும், சுவாமிஜியின் விடா முயற்சியும் பேலூர் மடத்தின் அடித்தளமாக
அமைந்தன என்றால் ஸ்ரீராமகிருஷ்ணரின் மற்ற சீடர்களுடைய
ஒத்துழைப்பும், சுவாமிஜியின் மேலைநாட்டுச் சீடர்களுடைய பங்களிப்பும், அந்த அஸ்திவாரத்தின்
மீது எழுப்பப்பட்ட கட்டிடங்களாக அமைந்தன.
புனித பூமி
-
பேலூர் மடத்திற்கான நிலமே ஒரு புனித பூமி. கங்கையின்
மேற்குக் கரை காசிக்குச் சமம்” என்ற வழக்கின்படி கங்கையின் மேற்குக்
கரையில் அமைந்துள்ளதான பேலூர் மடம் காசிக்குச் சமமாகிறது. அந்த இடம் வாழைத்தோட்டமாக
இருந்த போதே அங்கு ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்வதாக அன்னை தமது தெய்வீகக் காட்சி ஒன்றில்
கண்டிருந்தார். பின்னாளில் அவர் அதனைக் குறிப்பிட்டு, அங்கே குருதேவர் வாழ்வதை நான்
கண்டேன். கங்கையின் மறுகரையிலுள்ள அந்த இடம் முன்பு வாழைத்தோட்டமாக இருந்தது. பேலூர்
மடத்தில் அவர் வாழ்கிறார்” என்று கூறினார்.
இந்த இடம் சுவாமிஜியின் தீர்க்கதரிசனமாகவும் அமைந்தது.
அப்போது மடம் வராக நகரில் கங்கையின் கிழக்குக் கரையில் இயங்கிக் கொண்டிருந்தது. மேலை
நாடுகளுக்குச் செல்வதற்கு முன்பு ஒரு நாள் சுவாமிஜி மற்றத் துறவியருடன் கங்கைப் படித்துறையில்
நின்று, பேலூரைச் சுட்டிக் காட்டி, நமது நிரந்தரமான
மடம் கங்கையின் மறுகரையில் அதோ அந்த இடத்தில் அமையும் என்று எனக்குத்தோன்றுகிறது” என்றார். அந்த இடம் பேலூர்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் அஸ்தியை வைத்துப் பூஜிப்பதற்காகவும், ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு ஒரு நிலையான இடம் வேண்டும்
என்பதற்காகவும் சுவாமிஜியின் மனம் கொண்ட தவிப்பு வார்த்தைகளால் விளக்க இயலாதது.
உணர்ச்சிகளைக் கொட்டி அவர் தமது கடிதங்களில் இதனைக் குறிப்பிடுவதைக்
காண முடியும். 1897- மார்ச் அல்லது ஏப்ரலில்
அவர் டார்ஜிலிங்கிலிருந்து கேத்ரி மன்னரைக் காண்பதற்காக கல்கத்தாவிற்கு வந்தார். அப்போது அன்னை கல்கத்தாவில் இருந்தார்.
சுவாமிஜி அவரிடம் சென்று, அம்மா, மடத்திற்கு
ஒரு நல்ல இடம் அமைய வேண்டும் என்று இப்போது
தான் நான் குருதேவருக்கு நூற்றெட்டு வில்வ இலைகளைச் சமர்ப்பித்தேன், என்றார். அதற்கு
அன்னை, அது பலனளிக்காமல் போகாது , நீ விரும்பியது
நடைபெற்றே தீரும்” என்று ஆசீர்வதித்தார்.
காசிப் பூர், பானி ஹாட்டி, கொன்னகர், தட்சிணேசுவரம்
என்று பல இடங்களில் நிலங்கள் விலை பேசப் பட்டன. ஆனால் ஏதோ காரணங்களால் அந்த முயற்சிகள்
பலனளிக்க வில்லை. கடைசியில் பேலூரில் சுமார்
10 ஏக்கர் நிலம் வாங்கப் பட்டது. இதற்காக சுவாமிஜியின் மேலை நாட்டு சிஷ்யையான
மிஸ் முல்லர் ஏற்கனவே ரூ. 40,000 நன்கொடை அளித்திருந்தார். 1898 பிப்ரவரி 25-ஆம் நாள்
நிலம் கையகப் படுத்தப் பட்டது.
சீரமைப்புப் பணிகள்.
-
பேலூர்ப் பகுதி படகுகளைக் கங்கைக் கரையில் நிறுத்துவதற்கான
இடமாகப் பயன் பட்டு வந்தது. நிலத்தின் வடகிழக்கு மூலையில் இரண்டு சிறிய கட்டிடங்கள்
இருந்தன. அவற்றுள் ஒன்று மாடிக் கட்டிடம். அவை செப்பனிட்டுச் சீரமைத்தால் மட்டுமே பயன்படுத்தத்
தக்க நிலையில் இருந்தன. அவற்றின் அருகே பல மரங்கள் நின்றன. அவற்றுள் ஒன்று மாமரம்.
தெற்கு மூலையில் மூன்று அசோக மரங்கள் இருந்தன. இவை தவிர அந்த நிலத்தில் குளங்கள், தென்னை,
பனை, பேரீச்சை, ஜாம் ரூல், பலா, மா, வாழை போன்ற
மரங்கள் இருந்தன. நிலம் குண்டும் குழியும்மேடும் பள்ளமுமாக பயன்படுத்த முடியாத நிலையில்
இருந்தது. இந்தச் சீரமைப்புப் பணிகளுக்காகவும் மிஸ் முல்லர் ரூ.4, 000 அளித்திருந்தார்.
சீரமைப்புப் பணிகளின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் விஞ்ஞானானந்தர். அவருக்கு அத்வைதானந்தர்
உதவி செய்தார்.
-
அன்னையின் ஆசிகள்-
.........
அன்னை ஸ்ரீசாரதாதேவியை சங்க ஜனனி”( ராமகிருஷ்ண இயக்கத்தைத் தோற்றுவித்தவள்) என்று சுவாமிஜி அழைத்தது
பற்றி ஏற்கனவே கண்டோம். ராமகிருஷ்ண சங்கத்தின் தோற்றம் முதல் அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும்
அன்னையின் அருள் துணையுடனேயே நடைபெற்றது. சுவாமிஜி
உட்பட துறவியர் அதன் செய்ல்படு தலைவர்களாக
இருந்த போதிலும் அன்னையே அதன் உண்மைத் தலைவியாகத் திகழ்ந்தார். முக்கியமான முடிவுகள்
அனைத்தையும் அவர்கள் அன்னையின் அனுமதியுடனேயே எடுத்தனர். உங்கள் பெயரில் உலகைத் துறந்த
என் பிள்ளைகள் தலை சாய்க்க ஓர் இடம் வேண்டும்” என்று ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கண்ணிருடன் பிரார்ததனை செய்தவர்
அன்னை. இப்போது அவர்களுக்கென்று நிலையான இடம் அமையும்போது அவரை விட மகிழ்பவர் வேறு
யார் இருக்க முடியும்?
புனிதப்பேரருளின் வடிவான அன்னையின் திருப் பாதங்கள்
பேலூர் மடத்தில் பதிய வேண்டும் என்று சுவாமிஜியும் மற்ற துறவியரும் விரும்பினார்கள்.
1898 ஏப்ரல் மாத வாக்கில் அன்னை அந்த இடத்திற்கு முதன் முதைலாக அழைத்துச்செல்லப் பட்டார்.
அவருடன் நிவேதிதை, சாராபுல், மெக்லவுட் ஆகியோரும் வந்தனர். மடத்துத் துறவியரும் பிரம்மசாரிகளும்
அன்னையைப் பணிந்து வரவேற்றனர். அன்னையின் மகிழ்ச்சி கரை கடந்ததாக இருந்தது. இப்போது
என் பிள்ளைகள் தலை சாய்க்க ஓர் இடம் கிடைத்தது. இறுதியில் குருதேவர் அவர்களுக்கு அருள்
புரிந்து விட்டார்” என்று குதூகலத்துடன் கூறினார்.
சுவாமிஜி அன்னையுடன் சென்று மடத்தைச்சுற்றிக்காண்பித்து,
அம்மா, இது உங்கள் இடம். எல்லா இடத்தையும் பாருங்கள்” என்று கூறினார். அதன் பிறகு சீரமைப்புப் பணிகளும் புதிய கட்டிடப்
பணிகளும் தொடங்கின. பூஜையறை, தியான அறை போன்றவை புதிதாகக் கட்டப்பட்டன. இதற்காக மிசஸ்
சாரா நிதியுதவி அளித்தார்.
அதே ஆண்டு காளி பூஜை நாளில் (நவம்பர் 12) அன்னை அந்த
இடத்தில் குருதேவரைப் பூஜித்து அங்கே அவரது
பேரருளை நிறைத்தார். தாம் பூஜித்துவந்த
குருதேவரின் படத்தைக்கொண்டு வந்து, தம் கையாலேயே நிலத்தின் ஒரு பகுதியைச் சுத்தம் செய்து, அங்கே அந்தப் படத்தை
வைத்து குருதேவரைப் பூஜித்தார். ஒரு மாதத்தில்
சீரமைப்புப் பணி ஒருவாறு நிறைவுற்றது.மேலும் தாமதிக்காமல் ஸ்ரீகுரு தேவரை ப் புதிய
மடத்தில் எழுந்தருள ச்செய்ய எண்ணினார் சுவாமிஜி
மடத்தை நிறுவுகிறார்-
.........
1898 டிசம்பர் 9, வெள்ளி, அன்று சுவாமிஜியின் வாழ்விலும்
ராமகிருஷ்ண மடத்தின் வரலாற்றிலும் ஒரு பொன்னாள்!
அன்றுதான் சுவாமிஜி பேலூர் மடத்தில் குருதேவரை எழுந்தருளச் செய்தார். சகோதரத் துறவிகள்
மற்றும் சீடர்களின் உதவியுடன் எல்லா கிரியைகளையும் அவரே செய்தார். காலையில் கங்கையில்
குளித்து, புதிய காவியுடை உடுத்தி, பூஜையறைக்குச் சென்று பூஜாரியின் இருக்கையில் தியானத்தில்
அமர்ந்தார். பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணரின் புனிதச் சாம்பல் இருந்த கலசத்தை மிகுந்த பக்தியுடன் பூக்களால் வழிபட்டார். அதன் பிறகு கங்கைக்கரை வழியாக
ஊர்வலம் புறப்பட்டது. ஒரு செப்புப்பெட்டியில் வைக்கப் பட்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின்
புனித அஸ்தியை சுவாமிஜி தாமே தமது வலது தோளில் தாங்கியபடி முன்னால் சென்றார். மணிகள்
மற்றும் சங்கின் நாதம் எங்கும் நிறைந்தது..
போகும் வழியில்
சுவாமிஜி சரத் சந்திரரிடம், ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு முறை என்னிடம், நீ என்னை உன் தோளில்
தூக்கிக்கொண்டு போய் எங்கு வைத்தாலும், அது
மரத்தடியாக இருந்தாலும் சரி, குடிசையாக இருந்தாலும் சரி, அங்கே நான் தங்கியிருப்பேன்” என்று கூறினார். அதனால் தான் புதிய மடத்திற்கு நானே அவரது அஸ்தியைச் சுமந்து செல்கிறேன். பலரது நன்மைக்காக அவர் அந்த இடத்தில்
நெடுங்காலம் வாழப்போகிறார். இது நிச்சயம்” உண்டு உணர்ச்சி பொங்கக் கூறினார்.
சரத்துடன் பலவிஷயங்கள்பேசிக்கொண்டே சென்று சுவாமிஜி
இறுதியாக, நமது மடம் மதப் பிரிவுகள் அனைத்தையும், கொள்கைகள் அனைத்தையும் சமரசப்படுத்தி
நிற்கும்.ஸ்ரீராமகிருஷ்ணர் பரந்த கொள்கைகளைக்கொண்டிருந்தது போலவே இந்த மடமும் அத்தகைய பரந்த கொள்கையின் மையமாக விளங்கும். இங்கிருந்து
எழுந்து பரவும் சமரசப்பேரொளி வெள்ளம் உலகனைத்தையும் நிறைக்கும்” என்றார்.
எல்லோரும் மடத்தை அடைந்தார்கள். சுவாமிஜி தமது தோளில்
இருந்து அஸ்திப் பெட்டியை இறக்கி தரை மீது விரிக்கப் பட்டிருந்த விரிப்பில் வைத்து
, அதன் முன் நெற்றி தரையில் படும்படி விழுந்து வணங்கினார். மற்றவர்களும் அது போலவே
வணங்கினார்கள். பிறகு சுவாமிஜி அமர்ந்து ஸ்ரீராமகிருஷ்ண பூஜை செய்தார். பூஜையை முடித்துவிட்டு ஹோமம் செய்தார். சகோதரச்
சீடர்களின் துணையோடு தாமே பாயாசம் செய்து ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ப் படைத்தார்.
இந்தச் சடங்குகள் முடிந்த பிறகு சுவாமிஜி அங்குக்
கூடியிருந்தவர்களைப் பார்த்து, இந்த யுகத்தின்
மகத்தான அவதார புருஷரான ஸ்ரீராமகிருஷ்ணர் பலரது நன்மைக்காகவும் பலரது மகிழ்ச்சிக்காகவும் இன்றிலிருந்து இந்தப்
புனிதமான தீர்த்தத்தலத்தில் பல காலம் வாழ்ந்து, இந்த இடத்தை இணையற்றதொரு சர்வசமய சமரச
மையமாக ஆக்கும் படி இதய பூர்வமாக ப் பிரார்த்தனை செய்யுங்கள். என்றார். எல்லோரும் அவர்
கூறியபடியே கைகளைக் குவித்துப் பிரார்த்தனை
செய்தனர். அத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பின்னர் அனைவரும் நீலாம்பர் மடத்தை அடைந்தனர். நிகழ்ச்சி
தடையின்றி சிறப்பாக நிறைவுற்றதால் எல்லோரும்
மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். பன்னிரண்டு வருடங்களாகச் சுமந்த பாரம் சுவாமிஜியின்
மனத்திலிருந்து இறங்கியது. ஆழ்ந்ததோர் அமைதிப் பேருணர்வுடன் அவர் கூறினார், ஸ்ரீராமகிருஷ்ணரின்
திருவுளத்தால் அவரது தர்ம ஷேத்திரம் நிறுவப்பட்டு விட்டது. பன்னிரண்டு ஆண்டுகளாக இருந்த
என் கவலை தீர்ந்தது.
இவ்வாறு ஒரு புதிய தீர்த்தத் தலம் உருவாயிற்று. அது
பற்றி பின்னாளில் சிவானந்தர் கூறினார், இந்த இடம்
உண்மையிலேயே வைகுண்டம் தான்.ஸ்ரீகுருதேவர் இங்கே நம்முடன் இருக்கிறார், குருதேவரின்
சீடர்கள் இங்கே நுண்ணுடம்பில் வாழ்கிறார்கள். சிலவேளைகளில் அவர் களைக் காணவும் முடிகிறது.
இது ஒரு தீர்த்தத் தலம். இதன் மண் துகள் ஒவ்வொன்றும் புனிதமானது.
காசிக்குச் செல்வது பற்றி ஒரு முறை பேச்சு வந்தபோது
பக்தைகளிடம் அன்னை கூறினார், தட்சிணேசுவரத்திற்கோ பேலூர் மடத்திற்கோ போவதால் காசிக்குச்செல்கின்ற அதே புண்ணியம் கிடைக்கும்.
ஆனால் அத்தகைய நம்பிக்கை வேண்டும். காசியில் இருப்பவர் தான் தட்சிணேசுவரத்திலும் பேலூர் மடத்திலும் இருக்கிறார்.
பேலூர் மடம்
இப்படித் தீர்த்தத் தலமாக அமைந்ததுடன் மட்டும் நின்றுவிடவில்லை. புதியதொரு துறவியர்
பரம்பரைக்கு அது ஒரு மையமாகத் திகழ்கிறது. துறவு லட்சியம் வேதகாலத்திலிருந்தே வருகிறது.
ஆனால் காலங்களுக்கு ஏற்ப அதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.யுக ஆச்சாரியர்கள் அந்த மாற்றங்களைச்செய்கிறார்கள். அடிப்படை நிபந்தனைகளிலிருந்து
சமுதாயத்தின் அன்றைய சூழ்நிலை மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவர்கள் இந்த மாற்றங்களைச்
செய்கிறார்கள். வேத காலம், உபநிஷத காலம், புராண காலம், பின்னாளில் புத்தர், சங்கரர்,
ராமானந்தர், மதுசூதன சரஸ்வதி போன்ற ஆச்சாரியர்களின் காலம் இவற்றிலெல்லாம் துறவு நெறியில்
இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை வரலாறு காட்டுகிறது.
வேத கால
துறவு வாழ்க்கையில் கடின தவங்கள், உடம்பை வருத்துகின்ற பயிற்சிகள், போன்றவை முக்கிய
இடம் பெற்றன. உபநிஷத காலத்தில், கடின தவங்கள் மட்டும் ஒருவனுக்கு முக்தியைத் தர முடியுமா
என்ற கேள்வி எழுப்பப் பட்டது. முக்திக்கு ஆன்மீக ஞானமும் அவசியம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
இதிகாச, புராண காலங்களில், துறவியர் சேர்ந்து வாழ
தலைப்படுவதைக் காண்கிறோம். மகாவீரர் முதன் முதலில் துறவு நெறியை இயக்கரீதியாகக்கொண்டு வந்தார். பிறகு
புத்தர் தோன்றி துறவு நெறியில் பல முக்கிய அம்சங்களைச் சேர்த்தார். குறிப்பாக 5 கருத்துக்களைக்
கூறலாம்.
1- துறவு என்றால்
வெறும் கடின தவங்களும் பயற்சிகளும் மட்டும்
அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்ற கருத்தைக் கொண்டு வந்தது.
2- துறவியரை இயக்கரீதியாகச் செயல்பட வைத்தது.
3- துறவியர் இயக்கத்தை மதத்தின் மையமாக்கியது.
4- துறவியர் இயக்கத்தைக் கல்வி மையமாகக்கியது.
5- உலக மக்களின் துயர் துடைக்கும் பணியில் துறவியரை
ஈடுபடச்செய்தது.
புத்தரின் கருத்துக்கள் இந்த மதத்தில் ஊடுருவிசிறிது
காலம் பிடித்தது. அதனை கி.பி 8-ஆம் நூற்றாண்டில் செய்தவர் ஸ்ரீசங்கரர். இந்து மதத்தில்
முதன்முறையாக ஒரு துறவியர் இயக்கத்தை ஆரம்பித்தார் அவர். துறவியரைப் பத்து பிரிவினராகப்
பிரித்து ” தச நாமி சம்பிரதாயம்” என்ற மரபை உருவாக்கினார்.
ஆதி சங்கரரின்
பாதையில் ஞானத்திற்கு மட்டுமே இடம் இருந்தது. துறவுப்பாதையில் பக்திக்கும் இடத்தை அளித்தார்ராமானந்தர்.
12-ஆம் நூற்றாண்டில் அவர் வைராகிகள் என்ற வைணவத்
துறவிகளை உருவாக்கினார். ஜாதி பேதமின்றி துறவு நெறியை மகாவீரரும் புத்தரும்
முதலில் கொண்டு வந்தாலும், இந்து மதத்தில் அதனை அனைவருக்கும் திறந்த பெருமை
ராமானந்தரையே சாரும்.
துறவிகள்
நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தைக்கொண்டு
வந்தவர் 16- ஆம்நூற்றாண்டில் வாழ்ந்த மது சூதன சரஸ்வதி. இவ்வாறு உருவானவர்களே நாகா
துறவியர். இவர்கள் பிராமண மற்றும் ஷத்திரிய ஆற்றல்களின் சங்கமமாகத் திகழ்ந்தனர். இவர்கள்
3 பிரிவினராகப் பிரிக்கப் பட்டனர். ஒவ்வொரு பிரிவும் ”அக்காடா” என்று வழங்கப் பட்டது.
தொடர்ந்த 19- ஆம் நூற்றாண்டு வரை துறவு நெறியில்
பெரிய மாற்றங்கள் எதவும் இல்லை, மாறாக துறவு நெறிக்குப்பெரிய சவால்கள் தான் 19- ஆம்
நூற்றாண்டில் எழுந்தன. விஞ்ஞானம், மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் ஆதிக்கம் போன்ற பல
காரணங்களால் துறவு நெறி இழிவாகப் பார்க்கப்
பட்டது. துறவி சமுதாயத்தின் ஒட்டுண்ணியாகப் பார்க்கப் பட்டான்.அந்த நேரத்தில் தான்
சுவாமி விவேகானந்தர் பாரதத் திருநாட்டின் துறவு வானில் ஒரு விடி வெள்ளியாகத்தோன்றினார்.
சமுதாயக் கடமைகளை வலியுறுத்தி இந்திய வரலாற்றில் எழுந்த முதல் துறவியர் இயக்கம் தோன்றியது.
ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறப்பு எல்லா நிலைகளிலும் ஒரு
புதிய யுகத்தின் ஆரம்பமாக அமைந்தது. லட்சியங்கள், வாழ்க்கைமுறை, சூழ்நிலை, மனித உறவுகள்,
என்று அனைத்திலும் இந்தக் காலம் இதற்கு முந்தைய காலங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக
உள்ளது.பண்டைய செயல்முறைகள் இந்தக் காலத்திற்கு ஏற்றதாக அமைய முடியாது. எனவே இல்லற நெறிக்கும்,
துறவு நெறிக்கும் அவர் புதிய பரிமாணங்கள் வகுத்துத் தந்தார். அவற்றை அடிப்படையாகக்
கொண்டு சுவாமிஜி புதியதொரு துறவியர் பரம்பரையைஉருவாக்கினார். 1897- மார்ச்சில் டார்ஜிலிங்கில் இருந்த போது சுவாமிஜி ஒரு முறை சுவாமி துரியானந்தரிடம், துறவுப் பாதையில் நான் ஒரு புரட்சியைக் கொண்டு வருவேன்” என்றார். அந்தப் புரட்சியைப் பற்றி சுருக்கமாகச் சொல்வதானால் துறவு நெறி சமுதாயத்துடன் இணைக்கப்
பட்டது. துறவியர் சமுதாயத்துடன் இணைக்கப் பட்டனர்.
ராமகிருஷ்ண
துறவியர்
ஸ்ரீராமகிருஷ்ணர்
தோதாபுரி என்ற துறவியிடமிருந்து சன்னியாசம் பெற்றவர். புரி என்பது ஆதிசங்கரர் தோற்றுவித்த பத்துப் பிரிவினருள் ஒரு பிரிவினரின் பட்ப்பெயர்
ஆகும். மேலும் வராக நகர் மடத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் இளம் பக்தர்கள் துறவு நெறியைத்தழுவியபோது,
அபேதானந்தர் இமயமலை மடங்களிலிருந்து கொண்டு வந்த பரம்பரை சன்னியாச மந்திரங்களை ஓதியே
துறவிகள் ஆயினர். எனவே மரபுப்படி, ராமகிருஷ்ண
மடத்துத் துறவியர் புரி பரம்பரையைச்சேர்ந்தவர்கள்.ஆனால் வாழ்க்கை முறையாலும் செயல்பாடுகளாலும்
ராமகிருஷ்ண துறவு நெறியை ஒரு தனித்துவத்துடன் அமைத்தார் விவேகானந்தர்.
துறவு நெறியின் அடிப்படையாக மூன்று முக்கிய அம்சங்கள்
உள்ளன. அவை யஜனம்,(வேள்வி), விரஜா (புனிதம்), ப்ரவ்ரஜனம்(பற்றின்மை)
1- யஜனம்-
பண்டைய ரிஷிகள் வேள்விகளின் மூலம் பிரபஞ்சத்துடன்
தொடர்பு கொண்டனர். இயற்க சக்திகள் ஒவ்வொன்றும்
ஒரு தேவதையாக உருவகிக்கப் பட்டது.வேள்விகளில் நெய் முதலான பதார்த்தங்களைச் சமர்ப்பிப்பதன்
மூலம் அவர்களுக்கு நைவேத்தியம் அளிப்பதாகவும், அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் நமக்கு மழை
முதலியவற்றைத் தருவதாகவும் கருதப் பட்டது. இயற்கையும் மனிதனும் இயைபுடன் வாழவேண்டும் என்பது இதன் அடிப்படைக்
கருத்தாக இருந்தது.
ஆனால் காலப்போக்கில்
மனிதனால் இத்தகைய வேள்விகளைச்செய்ய இயலவில்லை. காலத்தின்தேவைகளுக்கு ஏற்ப புதிய கருத்துக்களும்
தோன்றின. நெய் முதலிய பொருட்களை வேள்விகளில் சொரிவதற்குப் பதிலாக வாழ்க்கையையே ஒரு
வேள்வியாக வாழ வேண்டும். என்ற கருத்து உருவாயிற்று. இதனை பகவத் கீதை சிறப்பாக ஆராய்கிறது.
அவ்வாறு, ஒரு துறவி தனது வாழ்க்கையையே ஒரு வேள்வியாக,
ஒரு வழிபாடாகக் கருத வேண்டும் என்றார் சுவாமிஜி. எப்படி? சேவை- தர்மத்தின் மூலம். மனித
குலத்திற்குச்சேவை செய்வதே ஒரு சலுகை தான். ஏனெனில் அது இறைவழிபாடு. நம் கண்முன் காணும்
எல்லா மனிதர்களிலும் கடவுள் இருக்கிறார். வாழும் கடவுளுக்குத் தொண்டு செய்யுங்கள்!
குருடன், நொண்டி, ஏழை, பலவீனன், முரடன் என்று இவர்கள் மூலமாகவெல்லாம் கடவுள் உங்களிடம் வருகிறார். அவரை வழிபட என்னவொரு மகோன்னதமான வாய்ப்பு! ராமகிருஷ்ண மிஷனின் சேவைப்
பணிகள் அனைத்தும் இந்த அடிப்படையிலேயே இயங்குகின்றன. சேவையால் பிறர் நன்மை பெறுகிறார்கள்.
அதனை ஒரு வழிபாடாகச் செய்வதால், சேவை செய்பவரும் நன்மை பெறுகிறார். ராமகிருஷ்ண துறவி,
இவ்வாறு தன் வாழ்க்கையிலேயே ஒரு சேவையாக, ஒரு வழிபாடாக அதை்துக் கொள்ளுமாறு எதிர்பார்க்கப்
படுகிறார். வேதக் கருத்தாகிய ”யஜனம்” என்பதை இவ்வாறு காலத்திற்கு ஏற்ற
மாற்றங்களுடன் துறவியின் வாழ்க்கையுடன் இணைத்தார் சுவாமிஜி.
2- விரஜா-
முற்றிலும் புனிதமான வாழ்க்கை ஒரு துறவியின் அடுத்த
முக்கிய அடிப்படைப் பண்பாகும். இதனைக் குறிப்பதற்கு விரஜா என்ற ஹோமம் வளர்க்கப் பட்டது.
அதன் முன்னிலையில் சில உறுதிமொழிகளை ஏற்று ஒருவன் துறவியாகிறான். சுவாமிஜி இந்தக் கருத்தை
அப்படியே, ஏற்றுக்கொண்டார். இந்தப் புனிதமான வாழ்க்கை வாழ்வதற்கான நிபந்தனைகளாக நமது
சாஸ்திரங்கள் ஒரு துறவி செய்ய வேண்டியவை, செய்யக்
கூடாதவை என்பதற்கு உணவு, உடை, பழக்க வழக்கம்
என்று ஒவ்வொன்றிலும், ஒரு நீண்ட பட்டியலைத் தருகின்றன.ஆனால் சிலவேளைகளில் இதைச்செய்ய
வேண்டும். அதைச்செய்யக் கூடாது” என்றெல்லாம் கவனம் வைப்பதில் செய்வதும்
செய்யாததுமே நோக்கங்கள் ஆகிவிடுகின்றன. உண்மையான நோக்கம் மனத்திலேயே இல்லாமல்
போய் விடுகிறது.ஸ்ரீராமகிருஷ்ணர் இந்தப் பட்டியலைச்சுருக்கி, புனித வாழ்க்கையின் அடிப்படையை
ஒரு சூத்திரம் போல் தந்துள்ளார். அதுவே காமினீ- காஞ்சன தியாகம். அதாவது காமத்தையும்,
பணத்தாசையையும் துறப்பது. இந்த இரண்டு அடிப்படை ஆசைகளிலிருந்தே மற்ற அனைத்து ஆசைகளும் பிரச்சனைகளும் உருவாகின்றன.
இவை இரண்டையும் துறப்பது எல்லா ஆசைகளையும் வேருடன் களைவதற்கு ஒப்பாகிறது. எனவே காமினீ-
காஞ்சன தியாகம்” என்பது ராமகிருஷ்ண துறவியின்
முக்கிய விரதம் ஆகிறது.
3- ப்ரவ்ரஜனம்-
ஒரு துறவி எதிலும் பற்றில்லாதவனாக இருக்கவேண்டும்.
ஓரிடத்தில் தங்கியிருந்தால் அந்த இடத்துடனும்
பொருட்களுடனும் பற்று ஏற்பட்டு விடும் என்பதற்காக
எந்த இடத்திலும் மூன்று நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது என்பது துறவு நியதி.ஆனால்
துறவியோ, இல்லறத்தானோ- மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் தான் பிறந்த நமுதாயத்திற்கென்று
ஆற்ற வேண்டிய கடமை ஒன்று உண்டு. உணவு, உடை,
அறிவு என்ற தனது வாழ்க்கைக்குத்தேவையான அனைத்தையும் மனிதன் சமுதாயத்திலிருந்து பெறுகிறான்.
அதனை அவன் திருப்பிக் கொடுத்தாக வேண்டும்.
அப்படி திருப்பிக்கொடுக்காமல் வாழ்வதால் தான் மனிதன் பந்தங்களுக்கும் பற்றுகளுக்கும்
உள்ளாகிறான் என்றும் அப்படி வாழ்பவனைத் ” திருடன்” என்றும் கீதை கூறுகிறது. அலைந்து
திரிகின்ற துறவியின் வாழ்க்கை மூலம் சமுதாயத்திற்கும் நன்மை கிடைத்தது. அவனது தூய வாழ்க்கையும்
உபதேசங்களும் மக்களை நல்வழிப்படுத்தின. இந்த முறையில் அவன் தான் சமுதாயத்திலிருந்து
பெற்றதைத் திருப்பிக்கொடுத்தான்.
சுவாமிஜி காலத்திற்கு ஏற்ப இதனை மாற்றி அமைத்தார்.
அலைந்து திரிவதை விட்டு, ஓரிடத்திலேயே தங்கி சுயநலமற்ற பணிகளில் ஈடுபடுவது சொந்த ஆன்மீக
முன்னேற்றத்திற்கும், அது போலவே பிறரது நன்மைக்கும் காரணமாக அமையும். இதற்காக சுவாமிஜி
காட்டிய பாதையே கர்மயோகம். இது சுவாமி விவேகானந்தரின் மாபெரும் கொடைகளுள் ஒன்று ஆகும்.
இந்த கர்மயோகத்தின் மூலம் பல புதிய அம்சங்கள் ஆன்மீக
வாழ்வில் சேர்க்கப் பட்டன. இவை துறவிக்கும் அதுபோலவே இல்லறத்தானுக்கும் மாபெரும் வரப்பிரசாதமாக
அமைந்தவை.
1- கர்ம யோகத்தின் வேலை-
அது எந்த வேலையாயினும்- ஒரு வழிபாடாகச்செய்யப் படுகிறது.
இதன் மூலம் வேலை ஒரு வழிபாட்டு நிலைக்கு உயர்த்தப் பட்டது. எனவே நாம் எந்த வேலையைச்செய்தாலும்
அதனை ஒரு வழிபாடாக, இறைவனுக்குச் சமர்ப்பணமாகச்செய்தால் அதன் மூலமே இறைவனை அடையலாம்.
2- சுவாமிஜி இந்தப் புதிய பாதையைத் தரும்வரை வேலை செய்வது
என்பதைத் துறவியர் இழிவான கண்யோட்டத்தில் பார்த்தனர்.
ஆனால் உண்மையாகவே உயர் நிலையை அடையாதவர்களும் வேலை செய்வதற்கெல்லாம் அப்பாற் பட்டவர்களாகத்
தங்களைக் கருதியது, அவர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்தது. அவர்கள்
ஆன்மீக முன்னேற்றத்தை இழந்தனர். சமுதாயம் அவர்கள்
மீது நம்பிக்கை இழந்தது. சுவாமிஜி தந்த புதிய பாதை துறவியர் சுய மரியாதையுடன் சமுதாயத்தில்
வாழ வகை செய்தது. ஒவ்வொருவரும் உழைத்து உண்பதற்கு வகை செய்தது.
3- சமுதாயத்திற்காக உழைப்பதால் துறவி நமுதாயத்துடன் ஒரு நல்ல உறவை அமைத்துக்கொள்ள
இந்த கர்மயோகம் உதவி செய்தது.
4- இவை மட்டுமின்றி, ஜாதி, மதம், இனம், மொழி , நாடு
என்ற எந்தப் பாகுபாடும் இனறி அனைவரையும் சமநோக்குடன் ஏற்றுக் கொள்ளுதல் இந்தப் புதிய
துறவுப் பாதையில் ஒரு முக்கிய அம்சம் ஆயிற்று.
5- இவ்வாறு பரம்பரை துறவு நெறிக்கு, காலத்தின் தேவைக்கு
ஏற்ப ஒரு புதிய வடிவம் கொடுத்தார் சுவாமிஜி, என்கிறார் துரியானந்தர். இப்படியொரு துறவியர்
பரம்பரையின் மையமாகத் திகழ்ந்தது பேலூர் மடம்.
6- பேலூர் மடத்தின் எதிர்காலம் பற்றி, சுவாமிஜி அதனை
நிறுவிய நாளில் என்ன நினைத்தாரோ அதனைத் தமது சீடரிடம் சொன்னார். இப்போது என் மனத்தில்
தோன்றும் காட்சி என்ன தெரியுமா? இந்த மடம்
கல்விக்கும் ஆன்மீகத்திற்கும் ஒரு மையமாக அமையும். அறவழி நிற்கின்ற இல்லறத்தார்கள்
இதைச் சுற்றி வீடுகளைக்கட்டி க் கொண்டு வாழ்வார்கள். நடுவே துறவிகள் வாழ்வார்கள். மடத்திற்குத்தெற்குப்
பகுதியில் ஆங்கிலேய மற்றும் அமெரிக்கச் சீடர்கள் வாழ்வதற்கான வீடுகள் கட்டப்படும்.
இந்தத் திட்டம் எப்படி இருக்கிறது?
அற்புதமான
”கற்பனை” என்றார் சீடர். உடனே சுவாமிஜி, கற்பனையா? நம்பிக்கையற்றவனே!
காலப்போக்கில் இவைஎல்லாம் நடக்கும். நான் அதற்கான அடிக்கல்லை மட்டுமே அமைக்கிறேன்.
இதன்பிறகுஎன்னென்ன நடக்கப்போகிறது தெரியுமா! நான் சிலவற்றைச் செய்வேன். ஆனால் உங்கள்
உள்ளத்தில் பல கருத்துக்களை விதைத்துச்செல்வேன் நீங்கள் அவற்றை எதிர்காலத்தில் செயல்படுத்த
வேண்டும்” என்று கூறினார்.
ஸ்ரீராமகிருஷ்ணரை
ஒரு நிரந்தர இடத்தில் நிறுவிய சுவாமிஜி தமது வாழ்க்கைப் பணிகளுள் ஒன்று நிறைவுற்ற மகிழ்ச்சியில்
ஆழ்ந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரை மையமாகக்கொண்ட இந்த மடம் காலப்போக்கில் எப்படி செயல்படப்போகிறது,
என்னென்ன அரும் காரியங்களைச் சாதிக்கப்போகிறது” என்பதையெல்லாம் அவர் உணர்ந்தே
இருந்தார். அதனை அவ்வப்போது தெரிவிக்கவும் செய்தார். ஆனால் யுகத்தின் ஆச்சாரியராக,
யுக நாயகராக , உலக குருவாகத்தோன்றியவர் சுவாமிஜி. தாம் கூறியவை அப்படியே நடைபெற வேண்டும்
என்ற எண்ணம் ஒரு போதும் அவருக்கு இருக்கவில்லை. காலப்போக்கில் சமுதாயத்தில் எழுகின்ற
மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப செயல் முறையில் தமக்குப் பின்னால் வருபவர்களை்
தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பையும் அவர் அளித்தார்.
பேலூர் மடம்
நிறுவப்பட்டு, ஸ்ரீராமகிருஷ்ணர் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு விட்டாலும் 1899 ஜனவரி வரை மடம் பழைய இடத்தில்,
அதாவது நீலாம்பார் முகர்ஜியின் தோட்ட வீட்டிலும்
தொடர்ந்து இயங்கியது.பேலூர் மடம் நிறுவப்பட்ட
நாளிலிருந்தே சில துறவிகள் புதிய மடத்தில் வாழத் தொடங்கினார்கள். படிப்படியாக எல்லாம்
புதிய மடத்தில் இயங்கத் தொடங்கின.
நீயே சரணம் ஸ்ரீராமகிருஷ்ணா!
-
உண்மையிலேயே அரும்பெரும் காரியங்களைச் சாதித் தபலரின்
வாழ்க்கையில் அவர்கள் தங்கள் இறுதிக் கட்டத்தில் ஓர் உண்மையை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். தாங்கள்
எதையும் சாதிக்க வில்லை என்ற உண்மைதான் அது. உண்மையில் எல்லாம் நிகழ்ந்தன. தாங்கள்
ஒரு கருவியாக மட்டுமே இருந்தோம் என்பது அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. தங்கள் மூலம் அதனைச்
சாதித்த இறைவனின் பெருமையை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இறைவா, நீயே சரணம்” என்று அவரைச் சரணடைகிறார்கள். இத்தகையதொரு நிலைமை சுவாமிஜியின்
இந்த நாட்களில் காண்கிறோம். அவர் இந்த நாட்களில்
எழுதிய இரண்டு பாடல்களிலிருந்து இதனை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இரண்டும் ஸ்ரீராமகிருஷ்ணரைப்
பற்றி அவர் எழுதியவை.
முதற்பாடல் ” ஆசண்டால” என்று தொடங்குவது ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கைத் தத்துவத்தை
இதில் அப்படியே பிழிந்து தந்துள்ளார் சுவாமிஜி.
அவரது பெருமைகளைக் கூறி, அத்தகைய குருவைச் சரணடைகிறேன்” என்று அந்தப் பாடல்களை முடிவடைகின்றன.
இரண்டாவது பாடல் ”ஓம் ஹ்ரீம் ரிதம்” என்று தொடங்கும் பாடல். இந்தப் பாடலுக்கு ஒரு பெருமை உண்டு.
இந்தப் பாடல், ஒரு பிரார்த்தனையாக, தோத்திரமாக மட்டுமின்றி ஒரு மந்திரமாகவும் செயல்படுகிறது.
ஏனெனில் இந்தப் பாடலில் ஸ்ரீராமகிருஷ்ண மந்திரத்தை அடக்கியுள்ளார் சுவாமிஜி. ஒவ்வொரு
வரிகளுடைய முதல் எழுத்தையும் சேர்த்துப் படித்தால் ”ஓம் நமோ பகவதே ராமக்ருஷ்ணாய“ என்று வரும் எனவே
இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் மந்திர ஜபத்தின் பலனும் கிடைக்கிறது.
இந்த பாடலை எழுதி முடித்த பிறகு ஒரு நாள் சுவாமிஜி
சம்ஸ்கிருத வல்லுனரும் தமது சீடருமான சரத் சந்திரரிடம் பேசிக்கொண்டிருந்தார். அது பற்றி
சரத் எழுதுகிறார். இன்று கலைமகள் சுவாமிஜியின் நாவில் நடம்புரிவது போல் தோன்றியது. சீடரிடம் என்னிடம்
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிக இனிமையான சம்ஸ்கிருதத்தில் பேசினார். பிறகு சுவாமிஜி
அவரிடம் அந்தப் பாடலைக்கொடுத்து, இதோ பார், எனது சிந்தனை, கருத்தில் மூழ்கியிருந்ததால்
இலக்கணப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். இவற்றைக்கொஞ்சம் திருத்து” என்றார். அதற்கு சீடர், அப்படியே பிழைகள் இருந்தாலும் அவை பிழைகள் அல்ல, அது ஆர்ஷ் ப்ரயோகம்,
அறிஞர்களுக்கு மொழியில் தரப் படும் அனுமதி என்றார்.உடனே சுவாமிஜி, நீ அப்படி ச் சொல்லலாம்,
மற்றவர்களும் இதை ஒப்புக் கொள்ள வேண்டுமென்று என்ன கட்டாயம் இருக்கிறது? என்று கூறினார்.
ஆனாலும் ஏனோ சுவாமிஜியின் எழுத்தைத் திருத்த சரத் சந்திரர் முன்வரவில்லை.
இந்தப் பாடல் நான்கு பத்திகள் கொண்டது. ஒவ்வொரு பத்தியிலும்
கடைசி வரியை, ஆகையால் , எளியவரின் புகலான ஸ்ரீராமகிருஷ்ணா நீயே எனது சரணம்” என்று அமைத்துள்ளார் சுவாமிஜி.
ஸ்ரீராமகிருஷ்ணர் கோயில்
..............................
பேலூர் மடத்தில்
அமைய வேண்டிய ஸ்ரீராமகிருஷ்ணர் கோயில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மனத்தில்
கண்டார் சுவாமிஜி. அந்தக்கோயிலுக்கான திட்டத்தையும் வகுத்தார். அது விஷயமாக அண்டானந்தரிடமும் விஞ்ஞானானந்தரிடமும் பேசினார்.
சுவாமிஜி. வடமேற்கு இந்தியாவில் சுற்றுப்பயணம்
செய்தபோது விஞ்ஞானந்தரை( ஹரி பிரசன்னர்)
உடன் அழைத்துச்சென்றதை நாம் ஏற்கனவே கண்டோம். அங்குள்ள பல கோயில்களை ஹரி பிரசன்னருக்குக்
காட்டி, பல்வேறு கட்டிடக் கலைகளின் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளச்செய்தார். தாம்
இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் சென்றபோது கண்ட கோயில்கள் மசூதிகள், அரண்மனைகள் , கண்காட்சி
சாலைகள், கலைக் கூடங்கள், என்று அனைத்தின் சிறப்பு அம்சங்களையும் கிரகித்திருந்தார்.
ஒரு நாள் விஞ்ஞானானந்தரை அழைத்து ஸ்ரீராமகிருஷ்ணர்
கோயில் பற்றிய தமது எண்ணங்களைத் தெரிவித்தார். அந்தக்கோயில் எங்கே அமைய வேண்டும் என்பது
பற்றி கூறினார். பிறகு விஞ்ஞானானந்தரிடம் தமது
கருத்துக்களுக்கு ஏற்ப, கோயிலுக்கான வரைபடம் ஒன்றை வரையுமாறு கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர்
எல்லா மதங்களுக்கும், எண்ணற்ற கருத்துக்களுக்கும் இருப்பிடமாக திகழ்ந்தார். அவருக்கு
அமைய இருக்கின்ற கோயிலும் எல்லா கட்டிடக் கலை அழகுகளின் சங்கமமாகத் திகழ வேண்டும்.
கிரேக்க, ரோமானிய, இந்து, இஸ்லாமியக் கலைகளின் அழகெல்லாம் அதில் மிளிர வேண்டும்“ என்று தெரிவித்தார்.
விஞ்ஞானானந்தர் அதற்கேற்ப வரைபடம் தயார் செய்தார்.
சுவாமிஜியின் ஆலோசனைகளுக்கேற்ப இரண்டு மூன்று
முறை படம் திருத்தி வரையப் பட்டது. அதன்பிறகு படத்தை ஏற்றுக் கொண்டார் சுவாமிஜி. ஆனால்
விஞ்ஞானானந்தரிடம் , ஸ்ரீராமகிருஷ்ணரின் கோயில் உருவாகும் போது, அதைக் காண நான் இந்த
உடம்பில் இருக்கமாட்டேன். ஆனாலும் மேலே இருந்து அதனைக் காண்பேன்” என்றார்.
சுவாமிஜி ஆமோதித்த வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு
தற்போதுள்ள கோயில் எழுப்பப் பட்டுள்ளது. ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயில் பற்றி
சுவாமிஜி மேலும் பல கருத்துக்களை வைத்திருந்தார். அவற்றையும் இங்கு காண்பது பொருத்தமாக
இருக்கும்.
இந்தக்கோயிலில் மேலை மற்றும் கீழை நாடுகளில் உள்ள
சிறந்த கலை அம்சங்கள் அனைத்தையும் அமைக்க விரும்புகிறேன்.
உலகம் முழுவதிலும் நான் பார்த்துச்சேகரித்த கட்டிடக் கலை விவரங்கள் அனைத்தையும் இந்தக்கோயிலின் அமைப்பில் உட்படுத்த முயல்வேன். பல தூண்களுடன் கூடிய
ஒரு விசாலமான பிரார்த்தனை மண்டபம் இருக்கும். அதன் சுவர்களில் நூற்றுக் கணக்கான மலர்ந்த
தாமரைகள் செதுக்கப் படும். ஆயிரம் பேர் உட்கார்ந்து தியானம் செய்யும் அளவு மண்டபம் பெரியதாக இருக்கும்.
தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்குக் கோயிலும் பிரார்த்தனை
மண்டபமும் இணைந்து, ஓம், என்ற வடிவில் தெரியும்
படிக் கட்டப் படும். கோயிலுக்குள் அன்னத்தின் மீது அமர்ந்தது போல் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுருவம் இருக்கும். கதவின் இரண்டு பக்கங்களிலும் சிங்கமும் ஆடும் ஒன்றின்
உடம்பை ஒன்று அன்போடு நசுக்கிக் கொண்டு இருப்பது
போன்ற சித்திரங்கள் காணப்படும். பேராற்றலும்
மென்மையும் அன்பினால் இணைந்திருப்பதைக் குறிப்பதே அதன் நோக்கம்.
இத்தகைய கருத்துக்கள் எல்லாம் என் மனத்தில்
இருக்கின்றன. நான் உயிரோடு இருந்தால் நானே இதை அமைப்பேன். இல்லையென்றால் எதிர்காலச்
சந்ததிகள் முயன்றால் சிறிது சிறிதாக இதை அமைக்கலாம்.
சுவாமிஜியைப் பொறுத்தவரை அவரது பணிகள் நிறைவுற்றது
போல் தோன்றியது. ராமகிருஷ்ணமடம், ராம கிருஷ்ண
மிஷன், ஆகிய இரட்டை இயக்கங்கள் சிறப்பாகச்
செயல்படுவது கண்டு திருப்தி கொண்டார் சுவாமிஜி. அவற்றிற்கான சட்ட திட்டங்கள் சிலவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று, அவருக்குத்தோன்றியது.
பல கடிதங்களில் இது பற்றி குறிப்பிடவும் செய்திருந்தார். 1896 ஏப்ரல் 27-ஆம் நாள் சகோதரத்துறவிகளுக்கு
எழுதிய கடிதத்தில்விரிவாக சுவாமிஜி சில சட்ட திட்டங்களை எழுதி அனுப்பியிருந்தார். இதில்
மடத்து நிர்வாகம், நிர்வாகக் குழு, மடத்தில்
இருக்க வேண்டிய துறைகள், துறவியரின் வாழ்க்கை
முறை போன்றவற்றை எழுதியுள்ளார.
மேலை நாடுகளிலிருந்து
திரும்பி வந்த பிறகு சுவாமிஜியின் சீடர்களில் ஒருவரான நித்யானந்தர் கேட்டுக் கொண்டதற்கு
இணங்க சட்ட திட்டங்களை முறைபடுத்தி ஒரு வடிவம் கொடுத்தார். அப்போது மடம் ஆலம்பஜார் மடத்தில் இயங்கி வந்தது. ஒரு நாள் எல்லாத் துறவியரையும்
ஓரிடத்தில் கூடச்செய்தார். தாம் சொல்வதை ஒருவர் எழுதுமாறு கூறினார். சுத்தானந்தர் அந்தப்
பணியை செய்தார்”
கூட்டத்தின் முடிவில் சுவாமிஜி கூறினார்,
எல்லா சட்ட திட்டங்களையும் கடந்து செல்வது தான் நமது
நோக்கம், ஏனெனில் நாம் துறவிகள், சுதந்திரமானவர்கள். ஆனால் தீயவற்றைக் களைவதற்கு சில
நல்ல சட்ட திட்டங்கள் வேண்டியிருக்கின்றன. நல்லவை மூலம் தீயவற்றைக் களைந்து விட்டு
பிறகு இரண்டையும் விட்டு விடலாம். சட்ட திட்டங்களின்
பலன் இது தான். நாம் நல்லவர்களாக இல்லாமல்
வெறும் சட்டதிட்டங்களால் பயனில்லை. சட்ட திட்டங்கள் இருந்தாலே அவற்றை உடைத்து வெளியேற
வேண்டும் என்ற உந்துதலும் இருக்கும். துறவிகள் ஒரு போதும் தவறான அடி எடுத்து வைக்கக் கூடாது. சொந்த முக்தியும் பிறரது நன்மையும்
தான் நமது லட்சியம். புதிதாக மடத்தில் சேர்பவர்கள் இந்த லட்சியத்தைப் புரிந்து கொள்ள
வேண்டும். அதற்காகத்தான் இந்தச் சட்டதிட்டங்கள்.
பிறகு சுத்தானந்தரிடம், இதோ பார், இவற்றைக் கவனமாக எழுதி பிரதிகளை எடு, கூடாது, போன்ற
எதிர்மறை வாக்கியங்கள் எதுவும் வராமல் எல்லாமே உடன் பாட்டு வாக்கியங்களாக இருக்குமாறு
பார்த்துக்கொள் என்றார்.
இந்தச் சட்ட திட்டங்கள் பொதுவாக ”பேலூர் மடத்து சட்ட
திட்டங்கள்” என்று அறியப்படுகின்றன.ராமகிருஷ்ண மடங்கள் பெயரளவிற்கு மடமாகவும்
கோயிலாகவும் செயல்படாமல், சமுதாயத்திற்கு நன்மை பயக்கின்ற ஓர் இயக்கமாகத் திகழவேண்டும், அரசியலுடன்
எந்தத் தொடர்பும் கூடாது போன்ற கருத்துக்களை அதில் வற்புறுத்திள்ளார்.
இந்தச் சட்ட திட்டங்களைத் தவிர நீலாம்பர் மடத்திலும்
சுவாமிஜி சில பொது நியதிகளை உருவாக்கினார். அவற்றை சுவாமிஜி சொல்லச்சொல்ல சிவானந்தர்
எழுதிக்கொண்டார்.
இந்த நியதிகளைப் பின்னாளில் ஒரு முறை மடத்தில் பிரம்மானந்தரின்
அறையில் சுத்தானந்தர் படித்தார். பல துறவியர்
அங்கே இருந்தனர். படித்து முடித்ததும் பிரம்மானந்தர் கூறினார், சுவாமிஜி, இந்தச் சட்ட
திட்டங்களைச் சாதாரண நிலையிலிருந்து கூறவில்லை. அவர் தமது மனத்தை மேலான உணர்வுநிலைக்கு
உயர்த்தி அந்த நிலையிலிருந்தே கூறினார். சிவானந்தர் எழுதிக்கொண்டார் மனித குலத்தின்
நன்மைக்காக ஸ்ரீராமகிருஷ்ணரின் லட்சியங்களைப் பரப்புவதற்கு உதவுவதற்காகவே சுவாமிஜி இந்த நியதிகளை வகுத்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகப்
பாரம் பரியத்தையைப்பெறவும், அவருக்குச்சேவை செய்யவும், ஆண்- பெண், பணக்காரன்- ஏழை,
உயர்ந்தவன்- தாழ்ந்தவன். என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் உரிமை உண்டு, ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களைப்
பின்பற்றி அவருக்குச்சேவை செய்பவர்கள் பேறு
பெற்றவர்கள். சுவாமிஜி வகுத்த நியதிகளைச்சந்தேகம் சிறிதும் இல்லாமல் முழு நம்பிக்கையுடன்
ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்றுங்கள். அதன் பிறகு அவற்றை
எல்லாத் திசைகளிலும் பரப்புங்கள். அப்போது கலியுகத்தின் தீமைகள் விலகி சத்திய யகம்
மலர்வதைக் காண்பீர்கள்.
தேவைக்கு ஏற்ப சட்டங்களையும் நியதிகளையும் எதிர்
காலத்தில் சேர்த்துக் கொள்ளலாம். என்று சுவாமிஜி கூறியிருந்த போதிலும் அத்தகைய முயற்சிகள்
எதுவும் செய்யப் படவில்லை. உயர் உணர்வுத் தளங்களிலிருந்து சுவாமிஜி கூறியவை, அவற்றைப்
பின்பற்றினாலே போதும் என்ற முடிவே இதற்குக் காரணமாக இருந்தது. ஒரு முறை தீரானந்தர்
பிரம்மானந்தரிடம் ”மகராஜ்” இளம் துறவிகளுக்கு உதவுவதற்காக நீங்கள் இன்னும் சில நியதிகளைச்சேர்த்தால்
நன்றாக இருக்கும்” என்று கேட்டுக்கொண்டார். அதற்கு,
பிரம்மானந்தர், நமக்கு என்ன தேவையோ அதை ஏற்கனவே சுவாமிஜி தந்துவிட்டார். புதிதாக நாம்
எந்த நியதிகளையும் சட்ட திட்டங்களையும் சேர்க்க
வேண்டியதில்லை. நாம் சேர்க்க வேண்டியது அன்பு. அன்பைச்சேருங்கள். பக்தியைச்சேருங்கள்,
மற்றவர்களை நேசிப்பதன் மூலம், அவர்களும் லட்சியத்தை
அடைவதற்கு உதவி செய்யுங்கள்” என்றார்.
இவ்வாறு நிரந்தரமான சட்ட திட்டங்களையும் அளித்து பேலூர் மடத்தை நிறுவியதுடன்
சுவாமிஜி தமது வாழ்க்கைப்பணிகளில் மிக முக்கியமான ஒன்றை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment