சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-2
🌸
அன்னையும்
பிதாவும் முன்னறி தெய்வம்
🌸
ஏட்டுக்கல்வி
எத்தனை பெற்றிருந்தாலும் பெற்றோரிடமிருந்து, பெற்றோரின் வாழ்க்கையிலிருந்து பெறுகின்ற
கல்வியே ஒருவனது வாழ்க்கையை வளப்படுத்துகிறது.நரேனும் தன் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொண்டவை ஏராளம். நல்லொழுக்கம் என்றால் என்ன. அதன்
அளவு கோல் எது, வாழ்க்கையின் துன்பங்களால் அலைக்கழிக்கப் படும்போது விடாமுயற்சியுடன்
நல்வழியில் வாழ்வது, வாழ்க்கைக்கான மிகச்சிறந்த ஆதாரம் இறைவனே என்று அவரைச்சரணடைந்து
வாழ்வது போன்றவற்றையெல்லாம் நரேன் தன் தாயிடமிருந்து கற்றுக்கொண்டான்.
🌸
ஒருநாள்
புவனேசுவரி நரேனிம், அப்பா என்றும் தூயவனாக இரு. சுய மரியாதையுடன் இரு, அதே வேளையில்
பிறரது சுய மரியாதைக்கு மதிப்புக்கொடுத்து வாழவும் கற்றுக்கொள். மென்மையானவனாக, சமநிலை
குலையாதவனாக இரு, ஆனால் தேவையேற்படும்போது உன் இதயத்தை இரும்பாக்கிக்கொள்ளவும்தயங்காதே,
என்று கூறினார். இவை புவனேசுவரியின் அனுபவ
வார்த்தைகள் அவை, நரேனின் வாழ்க்கையில் பல
நேரங்களில் அவனை வழிநடத்தின. அதனால் தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர், தாயை வழிபடாத
ஒருவன்மேன்மை பெற முடியாது. எனது அறிவாற்றல் அனைத்திற்கும் என் தாயே காரணம் என்று கூறினார்.
🌸
சில நிகழ்ச்சிகளைக்
காண்போம்.
நரேனின்
பள்ளியிலுள்ள ஆசிரியர் ஒருவர் எதற்கெடுத்தாலும் மாணவர்களை அடிப்பார். ஒரு நாள் அவர்
ஒரு மாணவனை கண்மண் தெரியாமல் அடிக்கத்தொடங்கினார்.
நரேனால் பொறுக்க முடியவில்லை. ஆனால் சிறுவனாகிய அவன் ஆசிரியரை என்ன செய்யமுடியும்?
இயலாமையின் காரணமாக அவனது கோபம் சிரிப்பாக வெளிப்பட்டது. உரத்த குரலில் சிரிக்கத் தொடங்கினான் அவன். அவனது சிரிப்பைக்கண்ட
ஆசிரியரின் கோபம் அவன் பக்கம் திரும்பியது.
எனவே அவனை அடிக்கத்தொடங்கினார். இனிமேல் சிரிக்க மாட்டேன்“ என்று மன்னிப்பு கேட்குமாறு வற்புறுத்தியபடியே அடித்தார்.
🌸
மன்னிப்பு
கேட்க நரேன் மறுத்துவிட்டான். கோபம் கண்களை மறைக்க அந்த ஆசிரியர் அவனது காதைத் திருகினார்.
காதிலிருந்து ரத்தம் வழியத்தொடங்கியது. அப்போதும் மன்னிப்புக்கேட்கவில்லை நரென். பொறுக்க
முடியாத கட்டம் வந்தபோது உரத்த குரலில் நிறுத்துங்கள், என்னை அடிக்க நீங்கள் யார்?
இனி என்னைத் தொட்டால் அப்போது தெரியும் சேதி, என்று வெடித்தான். இந்த வேளையில் பள்ளி
நிர்வாகியான வித்யாசாகர் அங்கே வர நேர்ந்தது. நரேன் அழுதபடியே நடந்தவை அனைத்தையும்
அவரிடம் கூறினான். பிறகு புத்தகங்களை எடுத்துக்கொண்டு இனி இந்தப் பள்ளிக்கே வரமாட்டேன்,
என்று கூறிவிட்டு வெளியேறத்தொடங்கினான். வித்யாசாகர்
அவனை தமது அறைக்குச் சென்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். அதே வேளையில் அந்த ஆசிரியரிடம்
நீங்கள் மனிதன் என்று நினைத்தேன்,, ஆனால் மிருகத்தைப்போல் நடந்து கொள்கிறீர்களே! என்று கடிந்துகொண்டார். பள்ளியில்
அதன் பிறகு இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுத்தார்.
🌸
வீடு சென்ற
நரேன் வழக்கம்போல் தன் தாயிடம் நடந்த வற்றைக்கூறி முறையிட்டான். அவனைப்பல்வேறு வழிகளில்
சமாதானப்படுத்திய புவனேசுவரி அவனிடம், இனி
பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று கூறினார். ஆனாலும் நரேன் தனக்கு நடந்ததைப் பெரிதாக
எடுத்துக்கொள்ளாமல் மறுநாளிலிருந்து வழக்கம்போல் பள்ளிக்குச்சென்றான்.
மற்றொருமுறை
வகுப்பில் புவியியல் பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் வரைபடம் ஒன்றைத் தொங்கவிட்டு
ஒரு குறிப்பிட்ட நகரத்தைக் காட்டுமாறு நரேனிடம் கூறினார். நரேன் காட்டினான். ஆசிரியர்
அதைத்தவறு என்றார், அதனை மறுத்து, சரி” என்றான் நரேன். தான் சொல்வதை மறுக்கிறான் என்பதற்காக அவனது
கைகளை நீட்டச்சொல்லி பிரம்பால் அடித்தார் ஆசிரியர். அடிகள் அனைத்தையும் வாங்கிக்கொண்டானே
தவிர, தனது பதில் தவறு என்பதை அவன் ஒத்துக்கொள்ளவில்லை.
🌸
சிறிது நேரத்திற்குப்
பிறகு புத்தகத்தைப் பார்த்தபோது தனது பதில் தான் தவறு என்பதைக் கண்டார் ஆசிரியர், உடனே
நரேனிடம் மன்னிப்புக் கேட்டதுடன், அதன் பிறகு அவனிடம் மிகுந்த மரியாதையுடனும் பழகினார். இதையும் அப்படியே வந்து
தாயிடம் சொன்னான் நரேன். புவனேசுவரி அவனை அணைத்துக்கொண்டு, என் கண்ணே! உன் பக்கம் நியாயம் இருக்குமானால் நீ எதற்கும் கவலைப்படவேண்டாம். நியாயத்தின்
வழிகள் சிலவேளைகளில் சிரமமானதாக , துன்பம் தருவதாக இருக்கலாம்.ஆனால் நியாயம் என்று
நீ கருதுவதைச்செய்வதற்கு ஒரு போதும் தயங்காதே” என்று கூறினார். இந்த அறிவுரை நரேனின் வாழ்நாள் முழுவதும்
ஒரு பாடமாக அமைந்தது. எந்தச் சூழ்நிலையிலும் அவன் இந்தப் பாடத்தை மறக்கவில்லை.
🌸
நரேனின்
கல்வியில் அவனது தந்தையின் பங்கும் சிறப்பாக இருந்தது. எத்தனையோ பாதகமான சூழ்நிலைகளுக்கு
இடையில் தாமும் வளர்ந்து, தம்மைச்சுற்றியுள்ள பலரையும் வாழவைத்துக்கொண்டிருந்தவர் அவர்.
தமது குழந்தைகளிடமும் அவர் மாறாததொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். சுய மரியாதை
வேண்டும், அதே வேளையில் பணிவும் இணைந்து திகழவேண்டும் என்று அவர் விரும்பினார். பிள்ளைகள்
தவறுகள் செய்யும்போது, பொதுவாகத் தந்தையர் செய்வது போல் அவர் ஆத்திரப்படுவதோ அடிப்பதோ
கிடையாது.
கண்டபடி
ஏசுவதும் அடிப்பதும் குழந்தைகளைத் திருத்தாது என்று உறுதியாக நம்பினார் அவர். ஒருநிகழ்ச்சியைக்
காண்போம்.
🌸
சாதாரண விஷயங்களுக்கும்
நரேன் தாயிடம் சண்டையிடுவான். சாப்பிடும் போது பொதுவாக வங்காளத்தில் தண்ணீர் டம்ளரையும்
வலது கையாலேயே எடுத்து குடிப்பார்கள். ஆனால் வலது கை எச்சிலாக இருப்பதால் இடது கையால்
அருந்துவதே சரி என்று வாதிட்டான் நரேன். அவன் ஒன்றைச்சொல்ல புவனேசுவரி ஒன்றைச்சொல்ல
வாதம் வலுத்தது. கடைசியில் கோபத்தில் தன் தாயைக்கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டான்
நரேன்.அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்
விசுவநாதர். ஆனால் அவர் நரேனிடம் கோபதாபங்களைக்
காட்டவில்லை., திட்டவில்லை. அவனது தவறைச்சுட்டிக் காட்டுவதற்கு அறிவுபூர்வமான வழி ஒன்றைக்
கையாண்டார். நரேன் தன் நண்பர்களைச் சந்திக்கின்ற அறையின் வாசலில் , நரேன் இன்று இன்ன
வார்த்தைகளால் தன் தாயைத் திட்டினான் என்று எழுதி வைத்துவிட்டார். நரேனுக்கு அது போதுமானதாக
இருந்தது. ஒவ்வொரு முறை நண்பர்கள் அந்த அறைக்கு
வரும்போதும் கூனிக் குறுகினான்அவன். அதன் பிறகு தவறியும் அந்த வார்த்தைகளை அவன் பயன்படுத்தவில்லை.
🌸
மற்றொரு
நாள் விசுவநாதர் நரேந்திரரிடம், மகனே, எதைக்கண்டும் ஆச்சரியப்படாதே” என்றார். வாழ்க்கையில் என்னென்னவோ நடக்கலாம், எத்தனையோ மாற்றங்களைச்
சந்திக்கலாம். ஆனால் எதிலும் ஆச்சரியப்பட்டு
நின்றுவிடக்கூடாது. இறைவனின் அரசில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உணர்வுடன் முன்னேறிப்போக
வேண்டும். இதுவும் வாழ்நாள் முழுவதும் நரேனுக்கு
வழிகாட்டியாக இருந்தது.
நரேன் தந்தையிடமிருந்து
பலவிதமான சமையலையும் கற்றுக்கொண்டான். பல உணவு வகைகளைச்சுவையுடன் சமைப்பான். அவனது
சமையலில் காரம் அதிகமாக இருக்கும், ஆனால் மிகவும்
சுவையாக இருக்கும்.
வீரமும்
விவேகமும்
🌸
நரேன் துணிச்சல்
மிக்கவன், வீரம் நிறைந்தவன். ஆனால் அந்த வீரம் விவேகத்துடன் கூடியதாக, சமயோசிதபுத்தி
நிறைந்ததாக இருந்தது. நண்பன் ஒருவனது வீட்டில் செண்பக மரம் ஒன்று இருந்தது. அதில் நண்பர்களுடன்
ஏறி, மரத்தின் கிளைகளில் தலைகீழாகத் தொங்கியபடி
ஆடுவது நரேனுக்குப் பிடித்த விளையாட்டுகளுள் ஒன்று. செண்பக மலர் சிவபெருமானுக்கு உகந்ததாகக்
கூறப்படுகிறது.நரேனுக்கும் அந்த மலர்மிகவும் பிடித்திருந்தது.
🌸
அடிக்கடி
அந்த மரத்தில் ஏறுவதும் விளையாடுவதுமாக இருந்தான் அவன். இவர்கள் எங்கே விழுந்துவிடுவார்களோ
என்று பயந்தார் அந்த வீட்டில் உள்ள தாத்தா ஒருவர். நரேன் ஏறாமல் இருந்தால் மற்றவர்களும்
ஏற மாட்டார்கள்.என்று அவருக்குத் தெரியும். அவனை வழிக்குக் கொண்டு வருவது எப்படி? அவனை
இதமாக அருகில் அழைத்து, அப்பா அந்த மரத்தில் ஏறாதே, என்றார். ஏன்? என்று கேட்டான் நரேன்.
அவனுக்கு என்ன காரணம் சொல்வது! பயமுறுத்தி வைப்போம் என்று எண்ணி ய தாத்தா, அப்பா, அந்த
மரத்தில் பூதம் ஒன்று இருக்கிறது. இரவில் வெள்ளையாடை உடுத்திக்கொண்டு அது போகும் போது
பார்க்க எவ்வளவு பயமாக இருக்கும் தெரியுமா? மரத்தில் ஏறுபவர்களை அது கழுத்தை நெரித்துக்கொன்றுவிடும்.
என்றார்.
🌸
தாத்தா கூறியவை
அனைத்தையும் பணிவாக கேட்டுக்கொண்டான் நரேன். அவனை ஏமாற்றி விட்டோம் என்று மனத்திற்குள்
சிரித்தவாறே சென்றார் தாத்தா. அவரது தலை மறைந்தது தான் தாமதம்! தடதடவென்று மரத்தில்
ஏறி பழையபடியே தொங்கினான் நரேன். தாத்தாவின் கதையில் பயந்து நின்ற நண்பன் ஒருவன் நரேனிடம்,
நரேன் , தாத்தா இப்போது தானே சொன்னார்! கீழே வந்துவிடு. இல்லாவிட்டால் பூதம் உன்னைக்கொன்றுவிடும்.
என்று கூறினான். வாய்விட்டுச் சிரித்தான் நரேன். பிறகு கண்களைச் சிமிட்டிக்கொண்டு,
முட்டாளே! யாரோ கதை கட்டி விட்டால் உடனே நம்புவதா! தாத்தா சொன்னது உண்மையானால் என்றோ
என் கழுத்து நெரிபட்டிருக்கவேண்டுமே! என்று
நண்பனிடம் சொன்னான்.
🌸
இந்த நண்பனின்
தந்தை நரேனை மிகவும் நேசித்தார். நரேன் பின்னாளில் பெரிய காரியங்களைச்சாதிப்பான் என்று
நம்பினார். ஒரு நாள் அவன் வழக்கம்போல் அந்த மரத்தில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும்போது
அவனை அழைத்து வந்து, நீ என்ன, நாள் முழுவதும் இப்படி வீடு வீடாகச்சென்று விளையாடிக்கொண்டு
திரிவது மட்டும் தானா? இல்லை படிப்பு ஏதாவது உண்டா? என்று கேட்டார். அதற்கு நரேன்,
நான் படிக்கிறேன், விளையாடுகிறேன், இரண்டையும்
செய்கிறேன்” என்றான்.
🌸
அவனைச்சோதிப்பதற்காக
புவியல், கணிதம் என்று பல பாடங்களில் அவர் கேள்விகள் கேட்டார். கவிதைகளை ஒப்பிக்கச்சொன்னார்.
தனது உடனடி பதில்களால் அவரைப் பிரமிக்கச்செய்தான் நரேன். அவனை இதயபூர்வமாக ஆசீர்வதித்த
அந்தப்பெரியவர் ஆமாம், உன் தந்தை லாகூரில் அல்லவா இருக்கிறார்! இங்கே உனக்கு யார் பாடம் சொல்லித்தருகிறார்கள்,? என்று கேட்டார்.
என் அம்மா” என்றான் நரேன். மகனே, நீ மாமனிதனாகத் திகழ்வாய். என் ஆசிகள்
உனக்கு எப்போதும் உண்டு, என்று ஆசீர்வதித்தார் அவர்.
🌸
ஜாதி அது
என்ன?
🌸
நரேனின்
தந்தை வழக்கறிஞர் ஆதலால் வழக்கு விஷயமாக அவரது வீட்டிற்றுப் பலர் வந்து செல்வார்கள்.
அவர்களில் பல்வேறு ஜாதியைச்சேர்ந்தவர்களும் இருந்தார்கள். அந்தக் கால கட்டுப்பாடுகளுக்கு
ஏற்ப வெவ்வேறு ஜாதியினருக்கு வெவ்வேறு புகைக்குழாய்களை வைத்திருந்தார் விசுவநாதர்.
இந்த ஜாதி விஷயம் நரேனுக்குப் புரியாத புதிராக இருந்தது. ஒரு ஜாதியினரின் ஹீக்காவில்
மற்ற ஜாதியினர் புகைபிடித்தால் என்ன நடக்கும்? கூரை இடிந்து விழுமா, உயிர் போய்விடுமா?
என்ன நடக்கும்? விடை காணத்துடித்தான் அவன். ஒரு நாள் தானே சோதித்துப்பார்க்கத் துணிந்தான்.
🌸
யாரும் இல்லாத வேளையில் நேராக அந்த அறைக்குச் சென்றான்.
ஒவ்வொரு குழாயிலும் ஒரு இழுப்பு இழுத்தான். ஒன்றும் நடக்கவில்லை! அவன் சாகவில்லை! பின்
ஏன் இப்படியொரு பாகுபாடு என்று எண்ணியது அவனது மனம். அந்த நேரத்தில் விசுவநாதர் அங்கே
வந்து விட்டார். நரேன் இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்டார். ஒன்றுமில்லை அப்பா” ஜாதிப்பிரிவினைகளை உடைத்தால் என்ன நடக்கும் என்று பார்த்தேன்.
ஒன்றும் நடக்கவில்லை. என்றான் நரேன். வாய்விட்டு
சிரித்தார் விசுவநாதர். அழுத்தமாக ஒரு பார்வையை மகன் மீது மகன் மீது பதித்துவிட்டு
அந்த இடத்தை விட்டு அகன்றார். ஜாதிப்பாகுபாடுகளின் பெயரில் மூடநம்பிக்கைகளை அவன் மதிக்கவில்லை.
விசுவநாதரின்
கட்சிக்காரரான இஸ்லாமியர் ஒருவரை நரேன் ”மாமா” என்று அழைத்து அவருடன் நெருங்கிப்பழகுவான்.
அவர் கொடுக்கும் இனிப்புகளையும் சாப்பிடுவான். மற்றவர்கள் இதைக்கண்டு திகைத்து நிற்பார்கள்.
ஆனால் அவனது தந்தை மட்டும் மகனது செயலைக்கண்டு சிரித்துவிட்டுச் சென்றுவிடுவார்.
🌸
தன் உயிரையும்
மதியாமல்
🌸
பிறர் துன்பத்தில்
உதவுவது சிறுவயதிலேயே நரேனின் இயல்பாக இருந்தது. தேவை ஏற்பட்டால் தன் உயிரையும் மதியாமல்
அவன் பிறர் நலம் நாடினான்.நரேனுக்கு ஆறு வயது இருக்கும். ஒரு முறை அவன் தன் உறவுச்
சிறுவன் ஒருவனுடன் ஒரு திருவிழாவிற்குச் சென்றிருந்தான். அங்கிருந்து சிவபெருமான் பொம்மைகளை
வாங்கிக்கொண்டு இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
🌸
கூட்டத்தில்
நண்பன் பிரிந்தது போல் தோன்றவே நரேன் திரும்பிப் பார்த்தான்.திரும்பிய நரேனின் கண்களில் பட்டது. திடீரென்று பாய்ந்து வந்த குதிரை வண்டி
ஒன்று. குதிரையின் கால்களில் சிக்க இருந்தான் நண்பன். நரேன் ஒரு கணமும் தாமதிக்கவில்லை.
பொம்மைகளை அப்படியே இடது அக்குளில் திணித்துக்கொண்டு பாய்ந்தோடி, வலது கையால் அவனை
இழுத்தபடி புரண்டு விழுந்தான். கூட்டத்தில் இருந்தவர்கள் திகைப்புடன் நரேனின் செயலைப்பார்த்தனர்.
🌸
சிலர் அவனை
வாழ்த்தினர்., சிலர் அவனையும் தூக்கி நிறுத்தி முதுகில் தட்டிக்கொடுத்து ஆசீர்வதித்தனர்..
இதனைக்கேள்விப்பட்ட போது புவனேசுவரி மகனின் வீரத்தை மெச்சி ஆனந்தக்கண்ணீர் வடித்தபடியே,
ஆம், நரேன் எப்போதும் ஓர் ஆண்மகனாக இரு” என்று கூறினாள்.
🌸
மற்றொரு
முறை அவன் தெரு வழியாகச்சென்று கொண்டிருந்தான். அந்தத்தெருவில் குதிரை வண்டி ஒன்றில் ஒரு பெண் பயணம் செய்து கொண்டிருந்தான். திடீரென்று
குதிரை கட்டுப்பாடற்று ஓடத்தொடங்கியது. அந்தப் பெண் பயத்தில் அலறினாள்.யாரும் அவளது
உதவிக்குச்செல்லவில்லை. நரேன் பாய்ந்து சென்று அந்தக் குதிரையைத்துணிச்சலுடன் பற்றியிழுத்து
நிறுத்தி அந்தப்பெண்ணை க் காப்பாற்றினான்
தலைவன்
🌸
நண்பர்கள்
குழுவில் நரேன் எப்போதும் தலைவனாகவே இருந்தான். விளையாட்டுகளில் அவன் தான் அரசனாகவும் நீதிபதியாகவும் இருப்பான். நண்பர்களும் அவனை அப்படித்தான் காண விரும்பினர். சச்சரவுகள் எழும்போது
தீர்வு காண அவர்கள் அவனையே நாடினர். அவனும் இருவர் கருத்துக்களையும் கேட்டு, ஆராய்ந்து
, இருவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்ப்புக்கூறுவதில்
வல்லவனாக இருந்தான்.
🌸
நரேனின்
அரச சபையே பார்ப்பதற்குக் கண்கொள்ளாதக் காட்சியாக இருக்கும். கீழ்த்தளத்திலிருந்து
மாடியில் பூஜையறைக்குச் செல்கின்ற படிக்கட்டுதான்
அரசசபை. முதல் படியில் மன்னனாக அவன் அமர்ந்து கொள்வான். ஓரிரு படிகள் கீழே மந்திரியும் சேனாபதியும்
நின்று கொண்டிருப்பார்கள். இன்னும் கீழ் ப் படிகளில் கப்பம் கட்டும் சிற்றரசர்கள் நிற்பார்கள்.
🌸
அரச சபையின் மற்ற அங்கத்தினர்கள் இன்னும் ஓரிரு படிகள்
கீழே அமர்வார்கள். அரச சபை தொடங்கும், ஒருவர்பின் ஒருவராக சிற்றரசர்களும் மற்ற அதிகாரிகளும்
வந்து, ரகுகுலதிலக திரிபுவன சக்கரவர்த்தி, தர்மத்தின் காவலன் சக்கரவர்த்தி வாழ்க, வாழ்க!
என்று கூறியபடி நரேன்- சக்கரவர்த்தியின் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குவார்கள்.
மன்னர் நாட்டு நலன், மக்களின் குறை போன்றவற்றைக்கேட்பார். பிறகு குற்றவாளி கொண்டு வரப்படுவான்.
குற்றப்பத்திரிகை வாசிக்கப்படும். எல்லாம் கவனமாகக்கேட்ட பிறகு மன்னர், காவலர்களே,
இவனது தலையைச் சீவிவிடுங்கள், என்று தண்டனையை அறிவிப்பார். காவலர்கள் வந்து குற்றவாளிகளை
இழுத்துச்செல்வார்கள். இந்த மன்னர்” விளையாட்டு நரேனுக்குமிகவும்
பிடித்தது.
🌸
ஏதாவது ஒன்றை
சாதிப்பதற்கும் நண்பர்கள் நரேனையே நாடினர். அவனுக்குப் பதினொரு வயது இருக்கும்போது இங்கிலாந்தின் போர்க்கப்பல் ஒன்று கல்கத்தா துறைமுகத்திற்குவந்தது. நண்பர்களுக்கு
அதனைக்காண ஆவல். ஆர்வத்துடன் சென்றபோது, சிறுவர்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு அனுமதி
மறுத்துவிடடனர். உள்ளே போக வேண்டும் என்றால் ஆங்கிலேய அதிகாரி ஒருவரிடம் அனுமதி பெறவேண்டும்.
என்ன செய்வது! நேரடியாக எல்லோரும் அந்த அதிகாரியை
நாடினர்.
🌸
அங்கும்
பிரச்சனை,! சிறுவர்கள் என்பதால். அதிகாரியைக் காண காவலன் அவர்களை அனுமதிக்கவில்லை.
அதிகாரியின் அறை மாடியில் இருந்தது. பார்த்தான் நரேன், பிறர் கவனத்தை அவ்வளவாகக் கவராமல்
மாடிக்குச் செல்வதற்கான படிக்கட்டு ஒன்று பின்புறம் இருந்தது. மெள்ள நழுவி அதன் வழியாக
மேலே சென்று அதிகாரியிடம் அனுமதி பெற்றுவிட்டான்.பிறகு எல்லோரும் வரும் வழியாகக்கீழே
இறங்கி வந்தான். வாசல் காவலனுக்குக் குழப்பமாகி விட்டது. நீ எப்படி உள்ளே போனாய்? என்று கேட்டான். நான் மந்திரவாதி
அல்லவா, அதனால் தான் ” என்று கண்ணைச் சிமிட்டினான் நரேன்.
🌸
கங்கா தேவியிடம்
பக்தி
🌸
கங்காதேவிக்கு
விமரிசையாக நடைபெறுகின்ற விசேஷ பூஜைகளில் ஒன்று மகர சங்கராந்தி, அங்கு கங்கைக்கு விசேஷ
பூஜைகள் செய்து, வழிபட்டு, அதில் புனித நீராடி
மகிழ்வார்கள். நரேன் தன் நண்பர்களைத் திரட்டி அந்த விழாவைக்கொண்டாட ஏற்பாடு செய்தான்.
அங்கும் தலைவனாகவே இருந்தான். தந்தையிடம் அனுமதியும் செலவிற்கான பணமும் பெற்றுக்கொண்டான்.
தந்தை நியமித்த ஆசிரியரிடமிருந்து கங்கா தேவிமீது பக்திப் பாடல்களைக்கற்றுக்கொண்டான்.
பூஜை நாளன்று சிறுவர்கள் அனைவரும் வீட்டிலிருந்து ஊர்வலமாகப்புறப்பட்டனர். கைகளில்
கொடிகளும் மலர்மாலைகளும் ஏந்தி, கங்கா தேவியின் மகிமைகளைப் பாடியவாறு தெருக்கள் வழியாகச்சென்றனர்.
அது ஓர் அற்புத காட்சியாகத்தான் இருந்திருக்கும்.! நேராகக் கங்கையை அடைந்தனர். பின்னர்
”கங்கையை வழிபடுவோம்” என்ற பாடலைப்பாடி, கொண்டு வந்து
மலர்மாலைகளை, தவழ்ந்து செல்லும் கங்கையில் சமர்ப்பித்தனர். காலை வழிபாடு முடிந்தது..
🌸
பின்னர்
மாலையில் அனைவருமாகச்சென்று வாழைத் தடைகளில் சிறு மிதவைகளைச்செய்து, அதில் தீபங்களை
ஏற்றி, கங்கையில் மிதக்கவிட்டு கங்கா தேவியை வணங்கினர். நரேனின் குழுவைப்போல இன்னும்
பல்வேறு சிறுவர் குழுக்கள் விட்ட அந்தத் தீபங்களின் வரிசை கங்கை முழுவதும் மிதந்து,
அசைந்து அசைந்து தவழ்ந்து சென்ற காட்சி எத்தனை ரம்மியமாக இருந்திருக்கும்!
🌸
உடற்பயிற்சிக்குழு
🌸
நரேன் தன்
நண்பர்களுடன் நாடகக்குழு ஒன்றை அமைத்து பல நாடகங்களில் நடித்தான். ஆனால் சில நாடகங்களுக்குப்
பிறகு அவனது தாத்தா கோபத்துடன் இனி வீட்டில் அது கூடாது என்று தடுத்துவிட்டார். நாடகக்குழு
கலைந்தது! உடனே வீட்டு முற்றத்தில் உடற்பயிற்சிக்குழு ஒன்றை ஆரம்பித்தான். அது உற்சாகமாக
நடைபெற்றது. உறவுச் சிறுவன் ஒருவன் கையை உடைத்துக்கொண்டதுடன் அது முடிவுக்கு வந்தது.
நரேன் விடவில்லை.
நவகோபால் மித்ரர் என்பவர் நடத்திய உடற்பயிற்சிக் கூடத்திற்குச்சென்று உடற்பயிற்சிகளில்
ஈடுபட்டான். நரேன் மற்றும் அவனது நண்பர்களின் ஆர்வத்தைக் கண்ட நவகோபால் , கூடத்தின்
பொறுப்பையே அவர்களிடம் ஒப்படைத்தார்.
🌸
ஒரு முறை
உடற்பயிற்சிக்காக பெரிய மரக்கட்டை ஒன்றை உயரத்தில் பொருத்த வேண்டிருந்தது. பெரிய மரக்கட்டையைச்
சிறுவர்கள் பொருத்துவதைக்காண கூட்டம் கூடியது. தங்களால் இயலாத போது அங்கு நின்ற ஆங்கிலேயே
மாலுமி ஒருவனை உதவிக்கு அழைத்தான் நரேன். மாலுமி அந்தக் கட்டையைத் தூக்குவதற்கு உதவிக்கொண்டிருந்த
போது திடீரென்று கட்டை நழுவி அவனது தலையில் வீழ்ந்தது.
🌸
தலையிலிருந்து
ரத்தம் கொப்பளிக்க அவன் கீழே சாய்ந்தான். அவன் இறந்துவிட்டான் என்று கருதிய கூட்டம் காணாமல் போயிற்று! நரேனும் ஓரிரு நண்பர்களும் மட்டுமே
எஞ்சினர். நரேன் சற்றும் தாமதிக்காமல் தனது வேட்டியின் மூலையைக் கிழித்து அவனுடைய தலையில்
கட்டுப்போட்டான். அனைவருமாக அவனை அருகில் உள்ள பள்ளி ஒன்றிற்குத் தூக்கிச் சென்றனர்.
டாக்டர் ஒருவரை வரவழைத்து அவனுக்கு வேண்டிய சிகிச்சை அளித்தனர். அவன் தேறிய பிறகு,
நரேனும் நண்பர்களுமாகப் பணம் சேர்த்து அவனுக்குக்கொடுத்து அனுப்பினர்.
🌸
சிலம்ப வீரன்
🌸
சிலம்பத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தான் நரேன். முகமதிய
நிபுணர்கள் பலரிடமிருந்து அவன் பயிற்சி பெற்றான். அவனுக்குப் பத்துவயது. மெட்ரோ பாலிடன்
பள்ளியில் நடைபெற்ற சிலம்பப்போட்டி ஒன்றைப்பார்த்துக்கொண்டிருந்தான். அது அவ்வளவு விறுவிறுப்பாக
இல்லை. பார்வையாளர்கள் சலிப்படையத் தொடங்கினர்.
திடீரென்று நரேன் எழுந்தான். கையில் கம்பை எடுத்துச்சுழற்றியபடி, யார் வேண்டுமானாலும் தன்னுடன் மோதலாம்.என்று சவால் விட்டான். நரேனின்
சவாலை ஏற்றுக்கொண்டு வந்தவன் பெரியவன். பலசாலி, நல்ல பயிற்சி பெற்றவன். இருவர் கம்புகளும்
மோதின. அனைவரும் பிரமிக்குமாறு கம்பைச்சுழற்றினான் நரேன். வந்தவர்களால் நரேனை எதிர்த்து நிற்க இயலவில்லை. ஒரு கட்டத்தில் நரேனின் ஒரே அடியில்எதிராளியின் கம்பு இரண்டு துண்டாக ஒடிந்து வீழ்ந்தது. கூட்டத்தினரின்
மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பரிசையும், வென்றான் நரேன். நீச்சல் , மல்யுத்தம், தற்காப்புக்கலை,
படகோட்டுதல் போன்றவையும் அவனுக்குக்கைவந்த கலையாக இருந்தன.
🌸
பரிவு
🌸
வேடிக்கையும்
வினோதமுமாக இருந்தாலும் கருணையும் பரிவும் அவனது செயல்பாடுகள் அனைத்திலும் மிளிர்ந்தன.
உடன் இருப்பவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அதை விலக்குவதில் அவன் முன்நின்றான்.
ஒரு நாள் நரேனும் நண்பர்களுமாகக் கல்கத்தா கோட்டையைக்காணச்சென்றிருந்தனர். அவர்களில்
ஒருவன் உடல் வலியால் அவதியுற்றான். மற்றவர்கள் அவனை வேடிக்கை செய்து களித்தனர். அவனை
விட்டுவிட்டு முன்னே சென்றுவிட்டனர். நரேனும் அவர்களுடன் சென்றான். ஆனால் சிறிது நேரத்தில் அவர்களிடம். அவன் உண்மையிலேயே வலியினால் துன்பப்படுகிறான்
என்று தோன்றுகிறது. நீங்கள் முன்னால் செல்லுங்கள் , நான் போய் அவனைக் கவனிக்கிறேன்
என்று கூறி திரும்பி வந்தான். அந்தச் சிறுவன் ஜீரத்தினால் தவித்துக்கொண்டிருந்தான்.
நரேன் அவனுக்கு உதவி செய்து, வண்டி யில் அமர்த்தி வீட்டில் கொண்டு போய்ச்சேர்த்தான்.
துணிச்சல்
🌸
ஒரு நாள்
நரேனும் நண்பர்களும் நவாபின் உயிரியல் பூங்காவிற்கு கங்கை வழியாகப் படகில் சென்றனர்.
திரும்பி வரும்போது நண்பர்களில் ஒருவன் வாந்தியெடுத்துவிட்டான். படகோட்டிகள் அவர் களிடம்
படகைச் சுத்தம் செய்யுமாறு கூறினர். சிறுவர்கள் அதனை மறுத்து, பதிலாக இருமடங்கு கட்டணம்
தந்துவிடுவதாகக் கூறினர். ஆனால் படகோட்டிகள் ஒத்துக்கொள்ளவில்லை. சுத்தம் செய்யாமல்
இறங்கக்கூடாது என்று பயமுறுத்தினர்.
🌸
நரேன் எல்லாவற்றையும்
கவனித்துக்கொண்டிருந்தான். வாக்குவாதமும் தர்க்கமும் நடந்து கொண்டிருந்த போது, மெள்ள
நழுவி யாரும் காணாதபடி கீழே இறங்கினான். சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த ஆங்கிலசிப்பாய்களைக்கண்டு
அவர்களிடம் தங்கள் பிரச்சனையை, தனக்குத் தெரிந்த
அரைகுறை ஆங்கிலத்தில் தெரிவித்தான். மெள்ள தன் கைகளால் அவர்கள் கைகளைப்பற்றி அவர்களைப்
படகிற்கே அழைத்துவந்தான். சிப்பாய்களைக் கண்ட படகோட்டிகள் சிறுவர்களை விட்டுவிட்டனர்.
🌸
நரேனின்
துணிச்சலும் திறமையும் அந்தச் சிப்பாய்களை மிகவும் கவர்ந்தது. அவனுக்கு ஏதாவது செய்ய
வேண்டும் என்பதற்காகத் தங்களுடன் தியேட்டருக்கு வருமாறு அழைத்தனர். நரேன் நாசுக்காக
அதனை மறுத்து., அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு நண்பர்களுடன் கிளம்பினான். நரேனுக்கு
ப் பதினான்கு வயது இருக்கும். ஒருநாள் நாடகம் பார்க்கச்சென்றிருந்தான். நாடகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது நடிகர்களில் ஒருவரைக்கைது செய்வதற்காக ஆங்கிலேயே அதிகாரி ஒருவர் வந்தார்.
🌸
அவர் நேராக
மேடையில் அந்த நடிகரிடம் சென்று, உன்னைக்கைது
செய்கிறேன்” என்று கூறி அவனை நெருங்கினார்.
திடீரென்று பார்வையாளர்கள் வரிசையிலிருந்து உரத்த குரல் ஒன்று எழுந்தது. மேடையிலிருந்து
இறங்குங்கள், நாடகம் முடிந்த பிறகு நீங்கள் வேண்டியதைச்செய்யலாம். பார்வையாளர்களை இப்படி
ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? என்று முழங்கியது அந்தக்குரல். அது நரேன்! ஒருவர் துணிச்சலாகக்
கூறியதும் மற்றவர்களும் குரலெழுப்பினர். பெருத்த எதிர்ப்பு எழுவதைக்கேட்டு அந்த அதிகாரி
பின் வாங்குவதைத்தவிர வேறு வழியில்லாமல் போயிற்று. நாடகம் தொடர்ந்தது. பிறகு அனைவரும்
நரேனிடம் வந்து., நன்றாகச்செய்தாய் கொடுத்த பணம் வீணாகாமல் காத்தாய், என்று புகழ்ந்தனர்.
🌸
விபத்து
🌸
நரேனின்
துறுதுறுப்பையும் பரபரப்பையும் காணும் போது அவனுள் ஏதோ ஆற்றல் பொங்குவது போல் இருக்கும்
என்று ஏற்கனவே கூறினோம். அது உண்மை.அவனுள் இனம்தெரியாத ஆற்றல் ஒன்று வளர்ந்துவந்தது.அது
பற்றி பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கூறினார், என் குழந்தைப் பருவத்திலிருந்தே என்னுள்
ஏதோ ஆற்றல் ஒன்று வளர்ந்து வருவது போல் நான்
உணர்வதுண்டு. அது என்னுள் பரந்து என்னை யும் கடந்து வியாபிக்கத் தொடங்கியது.
🌸
அந்த ஆற்றல்தான்
என் பரபரப்பிற்குக் காரணம். ஒரு கணமும் என்னைச்சும்மா இருக்கவிடாமல் இயக்கியது அந்த
ஆற்றலே. நான் எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்.வேலை ஒன்றும் இல்லாவிட்டால்
ஏதாவது குளறுபடியோ குறும்போ செய்வேன். இரண்டு மூன்று நாட்கள் நான் எதுவும் செய்யாமல் தொடர்ந்து சும்மா இருந்தால்
எனக்கு ஏதாவது நோய் வரும் அல்லது நான் கட்டுங்கடங்காமல் போய்விடுவேன். பூகம்பம் ஒன்று என்னுள் குமுறி வெடிக்கக்காத்துக்
கொண்டிருப்பது போல், அந்த ஆற்றல் என்னுள் இருந்து கொண்டு ”இதைச்செய், அதைச்செய் ” என்று
என்னை ஏதாவது செய்யத்தூண்டிக்கொண்டே இருந்தது.
🌸
இவ்வளவு
ஆற்றலைத்தாங்க உலகம் தயாராக இல்லை. எனவே ஒரு விபத்தின் மூலம் அதுகட்டுப்படுத்தப்பட்டது.
ஒரு நாள் நண்பர்களுடன் மாடியில் வந்து கொண்டிருந்தபோது கீழே விழுந்தான் நரேன். கல்
ஒன்றில் நெற்றி அடிபட்டு ரத்தம் குபுகுபுவென்று பாய்ந்தது. ஏராளம் ரத்தம் சேதமாயிற்று.
புண் ஆறுவதற்கு சில காலம் பிடித்தது. தழும்போ நெற்றியில் வலது கண்ணுக்கு மேல் நிரந்தரமாக
இருந்தது. இந்த விபத்து பற்றி பின்னாளில் கேள்விப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ணர், இந்த விபத்தின்
மூலம் நரேனின் ஆற்றல்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இல்லாவிட்டால் அவன் உலகையே உலுக்கியிருப்பான்” என்று கூறினார்.
🌸
அகநாட்டம்
🌸
அந்தஆற்றல்
அவனைப்புறத்தில் பரபரப்பாக வும் படபடப்பாகவும் இயக்கியதுடன் மட்டும் நின்றுவிடவில்லை.
அவனை அகத்திலும் ஆழ்ந்து நாடச் செய்தது. அவன் குழந்தையாக இருக்கும் போதே புவனேசுவரி,
நான் பிள்ளைவரம் கேட்டேன்” சிவபெருமானோ தமது பூதங்களில் ஒன்றை அனுப்பிவிட்டார், இப்படி குறும்பு செய்தால்
சிவபெருமான் உன்னை மீண்டும் கயிலாயத்தில் அனுமதிக்கமாட்டார்” என்றெல்லாம் கூறுவது அவனது மனத்தில் ஆழப்பதிந்திருந்தது.
உண்மையிலேயே தான் கயிலாயத்தில் சிவபெருமானைச்சேர்ந்தவன், ஏதோ தவறு செய்ததற்காக அவர்
தன்னைப்பூமியில் அனுப்பிவிட்டார் என்று நம்பினான் அவன். எனவே எப்படியாவது மீண்டும் சிவபெருமானின் உலகை அடையவேண்டும் என்று
தவித்தான். அதற்கு என்ன செய்வது! சிவபெருமானை மீண்டும் அடைய வேண்டும் என்ற எண்ணத்தால்
சிலவேளைகளில் காலை சூரிய உதயத்திற்கு முன்பிருந்தே சுலோகங்களைச்சொல்ல ஆரம்பிப்பான்,
பகல் முழுவதும் சொல்லிக்கொண்டே இருப்பான். இவ்வாறு ஏழு வயதிலிருந்தே நடைபெற்றது.
🌸
வேடிக்கை
வினோதம், பரபரப்பு, உற்சாகம் என்று எவ்வளவு தான் புற நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தாலும்
அவ்வப்போது கூட்டத்தைவிட்டு ஒதுங்கித் தனிமையை நாடுவான் நரேன். அவன் தன் உடம்பைவிட்டு
ஏதோ தூரதூரப் பிரதேசங்களில் சஞ்சரிப்பவன் போல் அமர்ந்திருப்பான். விளையாட்டும் கும்மாளமுமாக
இருந்த நண்பர்கள் அந்த நேரத்தில் அமைதியாகி
விடுவார்கள். அவனது அருகில் செல்லவும் பயப்படுவார்கள். அகமுகமாக அமர்ந்திருக்கின்ற
அவன் திடீரென்று பேசத்தொடங்குவான். நான் ஓர் அரசனாவேன். நான் இதைச்சாதிப்பேன், அதைச்
சாதிப்பேன். இதை இப்படிச்செய்ய வேண்டும், அதை அப்படிச்செய்ய வேண்டும், என்றெல்லாம்
தொடர்பற்ற ஏதேதோ வார்த்தைகள் அவனது வாயிலிருந்து வெளிப்படும்.
🌸
சற்று முன்பு
அவன் செய்து கொண்டிருந்தவற்றிற்கும், அவன் இருக்கின்ற சூழ்நிலைக்கும் அந்த வார்த்தைகளுக்கும்
எந்தப்பொருத்தமும் இருக்காது. சிறிது நேரத்தில் சுய நிலைக்கு வருவான். அப்போது அவனுக்கு
அவ்வளவ நேரம் நடந்த எதுவும் நினைவிருக்காது. எல்லோரும் தன்னை வெறித்துப்பார்த்துக் கொண்டிருப்பதைக்காணும் போது,
அவன் வெட்கத்தால் தலைகுனிவான். பிலே நல்லவன் தான், நன்றாக ச் சிரிப்பான். களிப்பான்,
வேடிக்கை வினோதங்கள் செய்வான், ஆனால் ஒரு மரை மட்டும் சிறிது கழன்றுள்ளது. சில நேரங்களில்
அவன் புலம்புவது என்னவென்றே யாருக்கும் புரியாது” என்பார்கள் நண்பர்கள்.
🌸
நரேன் பிறவியிலேயே
தியான சித்தன்” என்று பின்னாளில் கூறுவார் ஸ்ரீராமகிருஷ்ணர். அதாவது முந்தைய
பிறவிகளில் தீவிர தியானம் செய்து நிறைநிலையைக்கண்ட ஒருவர் என்பது இதன் பொருள். ஏழு வயதிலேயே தன்னை மறந்து,
அருகில் பாம்பு படமெடுத்து ஆடுவதையும் வீட்டினர் குரல் எழுப்புவதையும் அறியாமல் தியானத்தில் ஆழ்ந்திருக்க வேண்டுமானால்
அது சாமான்யமான விஷயம் அல்ல என்பது தெளிவு. நாளாக நாளாக அவனது தியானம் தீவிரமாகத் தொடங்கியது. நரேனின் தியானம் ஒரு பயிற்சியாக
இருக்கவில்லை. நீண்ட காலப் பயிற்சிகளின் மூலம்
அடையத்தக்கதான தியான நிலையை அவன் ஏற்கனவே எட்டியிருந்தான். எட்டு வயதிலேயே அவரால்
சமாதி நிலையில் ஆழ்ந்திருக்க முடிந்தது” என்று எழுதுகிறார் சகோதரி நிவேதிதை.
ஒளியில்
துயிலும் உன்னத பாலன்
🌸
நாள்தோறும்
அவன் கண்ட காட்சிகள் ஏராளம்,என், அவன் ஒவ்வொரு நாளும் இரவில் துயிலும் விதமே அலாதியானது. அவன் படுத்து
கண்களை மூடியதும். அவனது புருவ மத்தியில் ஓர் ஒளி தோன்றும். பல வண்ணங்களை அள்ளி இறைத்தபடி
அந்த ஒளி படிப்படியாகப்பெரிதாகும்.கடைசியில்
அந்த ஒளித்திரள் வெடித்துச்சிதறி அவனது உடம்பு முழுவதையும் வெண்ணிறத் தண்ணொளியில் முழுக்காட்டும். அந்த ஒளியில் துயில் கொள்வான்.
அந்த உன்னத பாலன்! சில வேளைகளில் ஒரு பையன் அவன் முன்தோன்றி ஓர் ஒளிப் பந்தைக் காலால்
அடிப்பான். அது உருண்டு அவனை நோக்கிவரும். அருகில் நெருங்கியதும் நரேன் அப்படியே அதில்
ஒன்றிவிடுவான். எல்லாம் மறந்துபோகும். சிலவேளைகளிலோ அந்த ஒளி விவரிக்க முடியாத பேரொளியாக
இருக்கும். அவன் அதில் நுழைந்து அப்படியே கரைந்து விடுவான்.
🌸
தூக்கம்
என்றால் எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்றே எண்ணியிருந்தான் நரேன். ஒரு நாள்
நண்பன் ஒருவனிடம் அவனுக்கு இத்தகைய அனுபவம் வருவதுண்டா என்று கேட்டான். அதற்கு அவன், இல்லை
என்றான். உடனே நரேன் அவனிடம், படுத்ததும் தூங்கி விடாதே. சிறிதுநேரம் கவனமாக இரு. நீயும்
ஒளியைக்காணமுடியும். என்று அறிவுரையும் கூறினான். ஆனாலும் நண்பன் அத்தகைய அனுபவம் எதையும் பெறவில்லை. என்று கண்டபோது இது தனது தனி அனுபவம்
என்பதைப்புரிந்து கொண்டான். அதன் பிறகு அவன் யாரிடமும் இதைப்பற்றி கூறவில்லை.
🌸
விளையும்
பயிர் முளையிலே!
🌸
ஒருவனிடம்
எத்தனையோ பண்புகள் இருக்கலாம். எத்தனையோ ஆற்றல்கள் வெளிப்படலாம். எத்தனையோ திறமைகள் திகழலாம். அவை
அனைத்திலும் பின்னிக்கொண்டு, அனைத்தின் ஊடேயும் குறிப்பிட்ட ஒரு பண்பு, ஒரு தனித்தன்மை
இழையோடும். அந்தத் தனிப்பண்பே அவன் யார், அவனது வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை
நிர்ணயிக்கும். நரேனின் வாழ்க்கையிலும் அந்தச் சிறுவயதிலேயே எத்தனையோ பண்புகள் பொலிவதைக்
காண்கிறோம். ஆனால் அவை அனைத்தினுள்ளும் இழைந்து நின்றது ஓர் அக நாட்டம். ஓர் அகத்தேடல்.
அவனது வயதுடைய மற்ற சிறுவர்கள் வாழ்க்கையைப்புறத்தில் கண்டு மனத்தைப்புற வழிகளில் செலுத்தியபோது
நரேன் மட்டும் வாழ்க்கையை அகத்தில் கண்டான். மனத்தை அகத்தில் திருப்பி தியானத்தில்
ஈடுபட்டான். புலன்களும். மனமும் புறத்தே போகின்ற இயல்பு பெற்றிருக்க , அபூர்வமாக யாரோ
ஒரு விவேகி மரணமிலா பெருவாழ்வை நாடி, மனத்தைப் புறத்திலிருந்து அகத்தில் செலுத்தி ஆன்மாவை
அறிகிறான் என்று பேசுகிறது உபநிஷதம். இளமையிலேயே
அத்தகைய விவேகியாகத் திகழ்ந்தான் அவன
🌸
வாலிபமும்
ஆன்மத்தேடலும்
🌸
மனித வாழ்க்கையில்
வாலிபம் ஒரு முக்கியப்படி. இந்தப் பருவத்தில் தான் மனிதனிடம் தன்னுணர்வு மலர ஆரம்பிக்கிறது.
படைப்பாற்றல், சுய மதிப்பு. இயல்புணர்ச்சிகள் ஆகிய மூன்றும் இந்தப் பருவத்தில் வளர்ச்சியின்
உச்சத்தை எட்டுகின்றன. இந்த மூன்றையும் சரியாக வளர்த்து கையாளத் தெரிந்தவன் வாழ்க்கையில்
வெற்றி பெறுகிறான். இந்த மூன்றிற்கும் அடிப்படையாகஅமைவது தேடல். மனிதன் தேடவேண்டும்,
எதையாவது சாதிக்க வேண்டும் என்று உறுதிகொள்ளவேண்டும். குறிக்கோளை நிர்ணயித்துக்கொள்ள
வேண்டும். அந்தக் குறிக்கோளை நோக்கி இந்த மூன்றையும் செலுத்தவேண்டும்.
🌸
ஆறு வயதிலிருந்தே
நரேந்திரனின் தேடல் அகம் சம்பந்தமாக இருந்ததைக்கண்டோம். சக வயதினர் புறத்தை நாடியபோது
நரேந்திரன் அகத்தில் தேடினான். தியானத்தில் ஈடுபட்டான். தெரியாத இடத்திந்நுச் செல்லும்போது
கைகாட்டிப்பலகைகள் நமக்கு வழிகாட்டுகின்றன. நாம் அந்த ஊரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.
சரியான வழியில் செல்கிறோம் என்பதை தெரிவிக்கின்றன.
அது போல் அக அனுபவங்கள் ஒருவனின் அகத்தேடலுக்குக் கை காட்டிப் பலகைகளாகச்செயல்படுகின்றன.
நரேந்திரனின் தினசரி தூக்கமே அத்தகையதோர் அனுபவமாகத்தான்
இருந்தது என்பதைக்கண்டோம். பேரொளித்திரளில்
தூங்கினான் அவன். அது தவிர அவன் பல தெய்வீகக் காட்சிகளும் பெற்றான். அவற்றில்
ஒன்று புத்தரின் காட்சி. அதனை சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளிலேயே கேட்போம்.
🌸
புத்தரின்
காட்சி
🌸
பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் அறையைத்
தாளிட்டுக்கொண்டு நான் தியானம் செய்தேன். மனம் மிக ஆழ்ந்து ஒருமுகப்பட்டது. எவ்வளவு
நேரம் அந்த நிலையில் இருந்தேன் என்பது தெரியவில்லை. தியானம் கலைந்த பிறகு ஆசனத்தில்
உட்கார்ந்திருந்தேன். அப்போத அந்த அறையின் தெற்குச் சுவரிலிருந்து ஒளிமயமான ஒருவர்
தோன்றி என் முன் வந்து நின்றார். அமைதிப்பேருருவான ஒரு துறவி அவர். அவரது முகத்திலிருந்து
ஓர் அற்புதப் பேரொளி பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது.
அவரது திருமுகம் சலனங்கள் எதுவுமின்றி சாந்தப்
பெருங்கடலாய்த் திகழ்ந்தது. தலை மழிக்கப் பட்டிருந்தது. கையில் கமண்டலமும் தடியும்
ஏந்தியிருந்தார். என்னிடம் ஏதோ சொல்ல விரும்புபவர் போல் என்னைப் பார்த்தபடியே சிறிது நேரம் நின்றிருந்தார்.
🌸
நான் பேச்சற்று
உறைந்துப்போய் அமர்ந்திருந்தேன். திடீரென்று ஒரு விதமான பயம் என்னைப் பிடித்துக்கொண்டது.
உடனே வேகமாக எழுந்து, அறையின் கதவைத்திறந்து வெளியே ஓடிவிட்டேன். ஆனால் பிறகு, இப்படி
ஓடி வந்தது முட்டாள்தனம். இல்லாவிட்டால் அவர் என்னிடம் ஏதோ சொல்லியிருப்பார் என்று
நினைத்துக்கொண்டேன்.அதன் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை. மறுபடியும் அவரைப்பார்த்தால்
பயப்படக்கூடாது. அவருடன் பேச வேண்டும் என்றெல்லாம் பலமுறை நினைத்துக்கொண்டேன்.ஆனால்
மீண்டும் அவர் என்னிடம் வரவே இல்லை. ஒரு வேளை அவர் புத்தராக இருக்கலாம் என்று இப்போது
நினைக்கிறேன்.
No comments:
Post a Comment