Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-17

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-17

🌸

கிறிஸ்தவ மதத்தின் அன்றைய நிலைமை

-

 கிறிஸ்தவ மதம் இவ்வாறு பல பிரிவுகளாகச் செயல்பட்டாலும், மொத்தத்தில் சற்று துவண்ட நிலையில் இருந்தது. குறிப்பாக டார்வினின் பரிணாமக்கொள்கை பைபிளின் படைப்புக்கொள்கையை முறியடித்தபோது கிறிஸ்தவ மதம் சற்று ஆட்டம் காணவே செய்தது. அதனுடன் ” உயர்தர விமர்சனம் என்ற பெயரில் ஜெர்மானியஅறிஞர்கள் பைபிளின் வரலாற்று உண்மைகளைப்பற்றி சந்தேகங்கள் எழுப்பினர். இந்த அமைப்பும் தீவிரமாக வளர்ந்தது. வர்த்தகத் துறையின்  வளர்ச்சி பணக்காரனை மேலும் பணக்காரனாக்கவும் , ஏழையை மேலும் ஏழையாக்கவும் தலைப்பட்ட போது சர்ச்சுகளின் சமுதாய நீதி பற்றி கேள்விகள் எழத்தொடங்கின. பிரஸ்பிட்டீரியன்கள் சர்ச்சுகளைத் தீவிரமாக  எதிர்த்தனர். அவர்களுக்குப் பொது மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்தது.

அமெரிக்க பாதிரிகளால் இந்தப் புதிய அலைகளை எதிர்த்து பெரிதாக எதுவும் செய்ய இயலவில்லை. அதனால் சர்ச்சுகளிடம் நம்பிக்கை இழந்த பல பிரிவுகள் தோன்றின. சுவாமிஜி அமெரிக்காவில் காலடி வைத்தபோது, கிறிஸ்தவ மதம் இவ்வாறு சற்று தளர்வுற்ற நிலையில் இருந்தது.

 

உள் நாட்டுப் பிரச்சனைகள்

 

 அது மட்டுமின்றி, 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அமெரிக்காவில் பதற்றமும் வன்முறையும் ஓங்கிய காலமாக இருந்தது. முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் பிரச்சனைகளும் வளர்ந்தன. 1892- இல் முதன் முறையாக இது ஒரு போராட்டமாக, வேலை நிறுத்தமாக வெடித்தது. ஊர்வலம், குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு, கைது போன்ற நிகழ்ச்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழத்தொடங்கின.

 

1893- இல் நாடு முழுவதும் பொருளாதாரப் பிரச்சனையில் தத்தளித்தது. வெள்ளிப் பிரச்சனை காரணமாகப் பல மில்களும் வங்கிகளும் மூடப்பட்டன. அமெரிக்காவிலிருந்து சுவாமிஜி எழுதிய முதல் கடிதத்திலேயே, ”கட்டாயச்சட்டம் வாயிலாக ஒவ்வொன்றின் விலையையும்  மிக அதிகமாக உயர்த்தி வைத்துள்ளார்கள். உலகின்  வேறெந்த நாடும் அதனை நெருங்க முடியாது என்று இதனைக் குறிப்பிடுகிறார். அதே வேளையில், விவசாயத்தொழிலும் நலிவுற்றது. வேறு தொழில்கள் துவங்கி,  தொழிற்சாலைகள் அதிகரித்தன.

இத்துடன் கறுப்பின மக்கள் பிரச்சனை தலை தூக்கியது. 1892-இல் ஏற்றப்பட்ட சட்டத்தின் மூலம் கறுப்பின மக்களின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டது. எல்லா வழிகளிலும் அவர் களை ஒடுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ‘ இன்றைக்கோ அவர்கள் யாருடைய சொத்தும் இல்லை, அவர்களுடைய உயிருக்கு மதிப்பே இல்லை. ஏதேதோ சாக்குப் போக்குகளைக் காரணம் காட்டி அவர்கள் உயிருடன் எரிக்கப் படுகிறார்கள். அவர்களைச்சுட்டுக் கொல்கின்ற கொலைகாரர்களைத் தண்டிக்க எந்தச் சட்டமும் இல்லை. ஏனென்றால் அவர்கள் நீக்ரோக்கள், அவர்கள் மனிதர்கள் அல்ல, ஏன், அவர்கள் மிருகங்கள் கூட அல்ல, என்றல்லவா வெள்ளையர்கள்  கருதுகிறார்கள் என்று எழுதுகிறார் சுவாமிஜி.

 

உள்நாட்டுப் பிரச்சனைகள் இவ்வாறு தலைதூக்கி நிற்க, ஜெர்மனி ஒரு வல்லரசாக உருவாகி அமெரிக்காவின் பாதுகாப்பிற்குச் சவாலாக எழுந்தது. இதனால் அமெரிக்கா தனது அயல்நாட்டுக் கொள்கைகளைச் சீரமைக்க செய்யப்பட்ட கண்காட்சியை 60 லட்சத்திற்கும் மேலான மக்கள் கண்டு களித்தனர். அது போலவே 1889-இல் பாரிஸில் ஒரு கண்காட்சி நடைபெற்றது. அதில் சுமார் மூன்றரை கோடி மக்கள் கலந்து கொண்டனர். உலக அதிசயங்களில் ஒன்றான ஈபில் கோபுரம்  அந்த வேளையில் தான் திறந்து வைக்கப்பட்டது. பாரிஸ் கண்காட்சி லண்டன் கண்காட்சியைவிடச் சிறப்பு மிக்கதாக இருந்தது. இந்த இரண்டையும் மிஞ்சும் வண்ணம் கண்காட்சி ஒன்றை அமைக்க விரும்பியது அமெரிக்கா. அதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டது. பௌதீக உலகில் மனிதன் அடைந்த முன்னேற்றங்களையும், அத்துடன் சிந்தனை உலகில் அவனது வளர்ச்சியையும் அந்தக் கண்காட்சியில் பலர் அறியச்  செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டது. பெண்கள் முன்னேற்றம், பத்திரிக்கை, மருத்துவம், மதுவிலக்கு, பொருளாதாரம், இசை, அரசியல், சட்டம் போன்ற இருபது துறைகளுடன் மதத்திற்கும் ஓர் இடம் அளிக்கப் பட்டது. சார்லஸ் கரோல் போனி என்ற வழக்கறிஞர் சர்வமத மகாசபை என்ற ஒன்றைக் கூட்டலாம் என்று கருத்து தெரிவித்தார். அவரது கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிகாகோ பிரஸ்பிட்டீரியன் சர்ச்சின் மதபோதகரான ஜான் ஹென்றி பரோஸ் சர்வமத மகாசபை அமைப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சி, மதத்தின் மீது அவநம்பிக்கை போன்ற பல காரணங்களால் ஆட்டம் கண்டிருந்த கிறிஸ்தவ மதத்தை நிலைநிறுத்துவது கிறிஸ்தவர்களின்  இன்றியமையாத தேவை ஆயிற்று. சர்வ மத மகாசபையைக் கூட்டுவதற்கு இது ஒரு முக்கியக்காரணம் ஆகும். சர்வமத மகாசபை கிறிஸ்தவ மதத்தை உலகின் தலைசிறந்த மதமாக மேன்மைப்படுத்தும் என்று போனி கருத்தும் தெரிவித்தார். பல நாடுகளிலிருந்தும் , பல மதப் பிரிவினரையும் அழைத்து, அவர்களைத் தங்கள் மதத்தின் கருத்துக்களை எடுத்துக் கூறுமாறு செய்து, கிறிஸ்தவத்தின் பெருமைகளை நிலை நாட்ட வேண்டும். என்பது அவர்களது கனவாக இருந்தது. ரோமன் கத்தோலிக்கர்களின் கார்டினலான கிப்பன்ஸ் இதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆனால் இறைவனின் திட்டத்தை யார் அறிய முடியும்?

 

இதற்கான வேலைகள் 1890 அக்டோபரில் தொடங்கின. போனியைத் தலைவராகக் கொண்ட குழு அக்டோபர் 30-ஆம் நாள் கூடியது. 10,000 கடிதங்கள், 40,000 அறிக்கைகள் போன்றவை உலக நாடுகள் அளைத்திற்கும்  அனுப்பப்பட்டன. உலக நாடுகள் அனைத்திலிருந்தும் 3,000 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதில் இந்தியாவிலிருந்து கீழ்க்கண்டோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

 

ஜி. எஸ். ஐயர்(சென்னை ”ஹந்து பத்திரிக்கை ஆசிரியர்)

-பி.பி .நகர்கர் (பம்பாய்)

 பிரதாப் சந்திர மஜும்தார்( கல்கத்தா)

கல்கத்தா மகா போதி சொசைட்டியின் பொதுச் செயலாளரான தர்ம பாலர் மற்றும் பம்பாய் சமண மதத் துறவியான முனி ஆத்மா ராம்ஜியுடனும் அந்தக் குழுவினர் சர்வமத மகாசபை விஷயமாகத்தொடர்பு கொண்டனர்.  ஹிந்து பத்திரிக்கையில் ஜி.எஸ்.ஐயர் எழுதியதிலிருந்து தான்  இந்தியாவில் சர்வமத மகாசபை பற்றி பலரும் அறிந்து கொண்டனர்.

 கிறிஸ்தவ மதத்தின் மேன்மையை உலகறியச் செய்வதற்காக சர்வமத மகாசபை கூட்டப்பட்டாலும் பேப்டிஸ்ட்,  ஆங்க்லிகன் சர்ச் போன்ற சில கிறிஸ்தவ அமைப்புகள் அந்த முயற்சியைத் தவறு என்று கண்டித்ததுடன், அதில் பங்கெடுக்க மாட்டோம் என்றும்  கூறின. ஆங்க்லிகன் சர்ச்சின் ஆர்ச் பிஷப், பரோஸுக்கு எழுதிய கடிதத்தில் ”சம அந்தஸ்து உடைய மதங்கள் மட்டுமே இத்தகைய ஒரு மகாசபையில் கலந்து கொள்ள  முடியும். அப்படி இல்லாமல் எல்லா மதங்களையும் நீங்கள் இதில் கலந்து கொள்ள அழைத்திருப்பதால் என்னால் இதில் பங்கெடுக்க இயலாது, என்று எழுதினார். பரோஸின்  இந்த முயற்சியை ”ஏசுவிற்கு எதிரான வஞ்சகத்திட்டம் என்று ஹாங்காங்  பாதிரிகள் கண்டித்தனர்.

 இவ்வாறு வரவேற்பும் எதிர்ப்பும் கலந்த ஒரு சூழலில் சர்வமத மகாசபை கூடியது.

-

ஆரம்ப நாட்களில்

-

 வசந்த காலத்தென்றல்.

 இரண்டு மாதங்கள் !சுமார் 13, 00 கி.மீ.தூரம் ! அறிமுகம் இல்லாத இடத்திற்கு ஓர் இளம் துறவியின் தனிமைப்பயணம்! எத்தனையோ இடைஞ்சல்களின் நடுவில் ஒரு தனிமைப்பயணம்! இன்று நினைத்தால் கூட மனம் சற்று துணுக்குறவே செய்கிறது. தன்னலம் துளியும் இல்லாத இத்தகைய சான்றோரைப்பற்றி தான் ஸ்ரீசங்கரர், அமைதியும் மகிமையும் அடைந்து விட்ட மகான்கள் இருக்கிறார்கள். தவழ்ந்து வரும் வசந்த  காலத்தென்றல் போல் அவர்கள் மனித குலத்திற்கு  நன்மை செய்கிறார்கள். இந்த சம்சாரப்பெருங்கடலை அவர்கள் கடந்து விட்டார்கள். பிறரும் அவ்வாறே கடக்க வேண்டுமென்று துளி கூடத் தன்னலமின்றி பாடுபடுகிறார்கள். சூரியனின் சுடுகதிர்களால்  பொசுக்கப் பட்ட பூமியை நிரவின் கிரணங்கள் இயல்பாகக்குளிர்விப்பது போல், பிறரது துயரைக்களைவதற்காகப் பாடுபடுவது  அவர்களின் இயல்பாகி விடுகிறது என்று எழுதினார்.

 

பிறரது துயரைக் களைவதற்காகப் பாடுபடுவது என்பது  சாதாரணமான ஒரு மகானின் வாழ்க்கையில் ஆன்மீகம் சம்பந்தமானதாக இருக்கும். தம்மை நாடி வருபவர்களுக்கோ, சில நேரங்களில் தாமே நாடிச்சென்றோ அவர்கள்   சிலரது வாழ்க்கையில் ஞான தீபத்தை ஏற்றி வைக்கிறார்கள். மிகப்பெரிய உதவியாகிய ஆன்மீக உதவியைச்செய்கிறார்கள். சீடர்களின் பாவங்களை ஏற்று குரு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புற நேர்வதும் உண்டு. ஆனாலும் அந்தத் துன்பங்களைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீடர்களை முன்னேற்றப்பாதையில்  செலுத்துகிறார்கள் அந்தக்கருணை குருமார்கள்.

 

சுவாமிஜியின் விஷயத்திலோ, அவர் இதைவிடப் பல படிகள் கீழிருந்து பாடுபட வேண்டியிருந்தது. இந்திய மக்களை ஆன்மீக வாழ்க்கைக்கு முன்பாகச் சாதாரண வாழ்க்கைக்கு அவர் தயார்படுத்த வேண்டியிருந்தது. தெய்வங்கள் ஆகுங்கள், பிறரையும் தெய்வங்கள் ஆக்குங்கள், என்பது அவரது தாரக மந்திரமாக இருந்தாலும், இதனை ஏற்றுக்கொண்டு செயல்படத்தக்க நிலையில் இந்தியர்கள் இல்லாததை அவர் கண்டார். வெள்ளையனின் காலில் மிதியுண்டு, தன் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மறந்து, வெறும் அடிமையாக வாழ்கின்ற அவன் எங்கே தெய்வம் ஆவது? எனவே, தான், மனிதர்களை உருவாக்குங்கள், அதற்கான கல்வியை எங்கும் பரப்புங்கள், என்று கூறினார் அவர். மிருக நிலையில் வாழ்பவர்களை மனித நிலைக்கு உயர்த்துவது தான் சுவாமிஜியின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அன்றைய இந்தியனுக்குத்தேவையாக இருந்தது ஆன்மீக உணவு அல்ல, அரை வயிற்று உணவே  என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார். எனவே அவனுக்கு முதலில் வயிறார உணவு அவசியம். அதற்குப்பணம் அவசியம். எனவே பணம்தேட வேண்டும் என்ற முடிவில் இருந்தார் அவர்.

சாதாரண மகான்கள், பணத்தையும் ஆசைகளையும் துறந்து கடவுளைத்தேடுங்கள் என்று சொல்ல வேண்டிய நிலையில் இருந்தனர். சுவாமிஜியோ, பணத்தைத்தேடுங்கள், நல்ல வாழ்க்கை வாழுங்கள். அதன்பிறகே, அதன் விளைவாகவே ஆன்மீக வாழ்க்கை மலரமுடியும் என்று சொல்லவேண்டிய நிலையில் இருந்தார். பணத்தைத் துறந்த அந்தத்துறவி வேந்தர் இந்திய மக்களுக்காகப் பணத்தை த்தேடினார். கண்காணாத இந்த நாட்டிற்கும் அதற்காகத்தான் அவர் வந்திருந்தார். சிரமங்கள், இடையூறுகள், துன்பங்கள், துரோகங்கள், எதிர்ப்புகள், விமர்சனங்கள், அனைத்தையும் தாங்கினார். எத்தனை பெரிய தியாகம் இது! எத்தனை மகா கருணை இது!

-

 சிகாகோ

 

 அந்த மாபெரும் கருணை வள்ளலான சுவாமிஜியையும் மற்ற சுமார் 500 பேரையும் தாங்கி வந்த ”இந்திய ராணி  ஜுலை 25-ஆம் நாள் வான்கூவரை அடைந்தது. வான்கூவரிலிருந்து சிகாகோ 2, 000 மைல் தூரம், ரயிலில் ஐந்து நாள் பயணம். இரண்டு  பக்கங்களிலும் அழகிய இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே ”சுவாமிஜி பயணம் செய்தார். சலிப்பூட்டும் கப்பல் பயணத்திற்குப் பிறகு இது அவருக்குப் புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருந்தது. ஜுலை 30-ஆம் நாள் அவர் சிகாகோவை அடைந்திருக்கக்கூடும்.

கொடுக்கல் –வாங்கல் , பேரம் பேசுதல் போன்ற உலகின் வழிகள் எதுவும் சுவாமிஜிக்குத் தெரியாது.எனவே அவர் சென்ற இடத்தில் எல்லாம் ஏமாற்றப்பட்டார். ரயிலிலிருந்து சாமான்களை இறக்குவதற்கும் அபரிமிதமான கூலி கொடுத்து எப்படியோ வெளியே வந்தார் அவர். எங்கும் மக்கள் வெள்ளமாக இருந்தது.-எல்லாம் உலகக் கண்காட்சியைக் காண வந்த கூட்டம்.

 

 சிகாகோ அனுபவம் அவருக்கு முற்றிலும் புதியது. ரயில் நிலையத்தில் இறங்கிய அவர் ஒருகணம் திகைக்கத்தான் செய்தார். எங்கே போவதென்று தெரியவில்லை. வேட்டியும் தலைப்பாகையுமாக அவருடைய உடை வேறு அந்த அன்னிய நாட்டில் வேடிக்கையாகத்தோன்றியது.

சிறுவர்கள் ஏதோ வினோத மனிதனைப் பார்ப்பது போல் அவரது பின்னால் சென்றனர். கூக்குரல் எழுப்பினர்.

மற்றவர்களும் அவரை ஏ தோ  வேடிக்கை பார்ப்பவர்கள் போல் பார்த்தார்களே தவிர யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. நட்போ அன்போ  காட்டி, நேசக்கரம் நீட்டி அவரை ஏற்றுக் கொள்வதற்கு அந்த அன்னிய நாட்டில் யாரும் இருப்பதாகத்தெரியவில்லை.

சுவாமிஜிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசியில் ஓர் ஓட்டலில் தங்குவதென்று முடிவு செய்தார் . அதற்காக  ஓர் ஓட்டல் ஏஜென்டை அணுகினார். தனது ஓட்டலே மிகச்சிறந்தது என்று சுவாமிஜியிடம் கூறினார் அந்த ஏஜென்ட். எல்லாம் புதிராகத்தோன்றுகின்ற அந்தப் புதிய உலகில் நல்ல ஓட்டலிலேயே தங்கிவிடலாம் என்று அவனுடன் சென்றார் சுவாமிஜி. தமது பெட்டிகளையும் மூட்டை முடிச்சையும் அறையில் வைத்துவிட்டு அப்பாடா என்று அமர்ந்தார். எல்லா  பிரச்சனைகளையும் கவலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு மனத்தை அமைதியாக்க முயன்றார்.

 மறுநாள் கண்காட்சியைப் பார்க்கச்சென்றார். அங்கே அவர் கண்ட அனைத்தும் புதியவையாகவும் புதுமையுடனும் இருந்தன. தொடர்ந்து பன்னிரு நாட்கள் சென்று எந்திரங்கள், கலைப்பொருட்கள், விஞ்ஞான அதிசயங்கள் போன்ற பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டார். நீராவி மற்றும் மின்சாரம் போன்றவற்றின் துணையுடன் இயக்கப் படுகின்ற எந்திரங்களை சுவாமிஜி அங்கே தான் முதன்மதலாகக் கண்டார். மனித மனம் நிகழ்த்தியுள்ள அதிசயங்களையெல்லாம் கண்டு பிரமித்தார்.

 

என்ன கண்டும், என்ன கேட்டும் சுவாமிஜியின் மனம் ஏனோ தத்தளித்துக்கொண்டே இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் இடையே சுவாமிஜி தன்னந்தனியாக இருந்தார். நண்பர்  என்றோ தெரிந்தவர் என்றோ சொல்லிக்கொள்ள ஒருவர் கூட அங்கே இல்லை, நண்பராக வந்து உதவாவிட்டாலும் பரவாயில்லை, அவரைச் சிறுமைப் படுத்தவாவது செய்யாமல் இருக்கலாமே! ஆனால் அதுதான் நடந்தது.

  ஒருநாள் சுவாமிஜி கண்காட்சியைப் பார்த்தபடியே சென்று கொண்டிருந்தார். திடீரென்று ஒருவன் பின்னாலிருந்து அவரது தலைப்பாகையைப் பிடித்து இழுத்தான். சுவாமிஜி திரும்பிப்பார்த்தார். அந்த மனிதன் நல்ல உடையணிந்து மிடுக்காகத்தோன்றினான். ஏன் என் தலைப்பாகையை இழுத்தீர்கள்? என்று  அப்பழுக்கற்ற ஆங்கிலத்தில் சுவாமிஜி அவனிடம் கேட்ட போது அவன் பிரமித்துப்போனான்.  வெட்கப்பட்டு விலகினான்.

 மற்றொரு முறை ஒருவன் சுவாமிஜியின் பின்னால் வந்து அவரைப்பிடித்துத் தள்ளினான். சற்றே கோபத்துடன் சுவாமிஜி அவனது செயலுக்கான காரணம் கேட்டபோது, அவன் மன்னிப்பு கேட்கும் பாவனையில், ”நீங்கள்  ஏன் இப்படி வினோதமாக உடை உடுத்தியிருக்கிறீர்கள்! அதனால் தான் என்றான். இது போன்ற சம்பவங்கள் பல நடைபெற்றன. மிகவும் நாகரீகமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் உங்கள் நாட்டிலேயே ஒரு முறை, ”நான் ஓர் இந்து என்பதற்காக எனக்கு உட்கார நாற்காலி கொடுக்க மறுத்தார்கள் என்று சுவாமிஜி எழுதும் அளவிற்கு அவர் பட்ட அவமானங்கள் தொடர்ந்தன.

 பின்னாளில் போஸ்டனில் ஒருமுறை அவர் உயிர்பிழைப்பதற்காக ஓட வேண்டியிருந்தது. அவர் ஒரு நாள் ஒரு தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென்று அவரது தோளை ஏதோ ஒன்று தாக்கியது. திரும்பிப் பார்த்தால் ஒரு கூட்டம் ஆண்களும் சிறுவர்களும் அவரைத் தாக்குவதற்காக வந்து கொண்டிருந்தனர். எப்படியோ தெரு முனையில் ஓர் இருண்ட பகுதிக்கு ஓடி, அவர்களின் வெறித்தாக்குதலிலிருந்து தப்பித்தார் சுவாமிஜி.

 

பத்திரிகைப்புரளிகள்

-

மெல்ல மெல்ல சுவாமிஜி பத்திரிகைகளின் பார்வையில் பட்டார்.அவரைக் கண்காட்சியில் அணுகியும், ஓட்டலில் கண்டும் பத்திரிகைகள் எழுதத்தொடங்கின. சிலர் அவர் தங்கியிருந்த ஓட்டல் மேனேஜரைக் கண்டு , அவர் கொடுத்த ஏதேதோ தகவல்களை எல்லாம் வெளியிட்டன. சுவாமிஜியின் பெயரை சுவாமி விவேகா னோந்தா, விவேகனொன்டா, சுவானி விவேக்யொந்தா, ராஜா சுவானி விவேக்யொந்தா என்றெல்லாம் எழுதி ஒரு சஹஸ்ர நாமத்தை உருவாக்கின! அனைத்திற்கும் மேலாக அவரைத் தர்ம சங்கடமான நிலைமையில் மாட்டி விடவும் செய்தன,  எழுதுகிறார் சுவாமிஜி.

 

 கபூர்த்தலா மன்னர் இங்கு வந்திருந்தார். சிகாகோ மக்களில் சிலர் அவரைப் பிரமாதமாகத் தூக்கி வைத்துப்போற்றினர். நான் ஒரு முறை அவரைச் சந்தித்தேன். ஆனால் அவர் பெரிய மனிதர். என்னைப்போன்ற ஓர் ஏழைப்பக்கிரியு்ன் பேசுவாரா என்ன! வேட்டி கட்டிய பைத்தியக்கார மராட்டிய பிராமணன் ஒருவன் அங்கே நகத்தால் வரைந்த படங்களை விற்றுவந்தான். இந்த ஆசாமி அந்த மன்னரைப்பற்றி, ” இந்த மன்னர் தாழ்ந்த ஜாதியைச்சேர்ந்தவர். இந்த மன்னர்களெல்லாம் வெறும் அடிமைகள், இவர்கள் பொதுவாக ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் என்றெல்லாம் இல்லாததும் பொல்லாததுமான பலவற்றைப் பத்திரிகை நிரூபர்களிடம் சொல்லி வைத்தான். அமெரிக்காவில் ஏராளமாக உள்ள, ”சத்தியசீலர்களான பத்திரிகையாளர்களும் அவன் கூறிய கதைச்சரக்கிற்குச்சிறிது கௌரவம் கொடுக்க விரும்பினார்கள். எனவே அவன் கூறிய அனைத்தையும் தங்கள் பத்திரிகையில் இந்திய மேதை கூறியதாக மறுநாள் எழுதித் தள்ளிவிட்டார்கள். ”மேதை என்று அவர்கள் குறிப்பிட்டது என்னைத்தான்! என்னை வானளாவப்புகழ்ந்து, நான் கனவில் கூட எண்ணாதவற்றையெல்லாம் நான் கூறியதாகச்சொல்லி, அந்த மராட்டிய பிராமணன் கபூர்த்தலா மன்னரைப்பற்றி கூறிய அனைத்தையும் எழுதிவிட்டார்கள். பத்திரிகைகள் போட்ட போடில் சிகாகோ மக்கள் அந்த மன்னரை உதறிவிட்டார்கள். ... என் நாட்டினரான ஒருவரை உதைத்துத் தள்ள இந்தப் பத்திரிகைக்காரர்கள் என்னையே கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த நாட்டில் செல்வம், பட்டம் ஆகியவை சம்பந்தமான பகட்டை யெல்லாம் விட அறிவுக்கே அதிக  கௌரவம் உள்ளது என்பதையும் இது காட்டுகிறது.

 

பணத்தட்டுப்பாடு

 

இவையெல்லாம் ஒரு பக்கம். ஆனால் சுவாமிஜி முக்கியமாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது பணப் பிரச்சனை. யாத்திரைச்செலவு இருந்தால் போதும், அமெரிக்காவிற்குப்போய் விடலாம், அங்கே போன பிறகு ”எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம் என்று தான் அவரும் அவரது ” சென்னைச் சீடர்களும் எண்ணியிருந்தார்கள். இந்த ” எப்படியாவது என்றால்- இந்தியாவைப்போல் தட்சணை, நன்கொடை, இவை எதுவும் இல்லாவிட்டால் பிச்சை போன்றவற்றால் காலம் தள்ளலாம் என்று பொருள்! ஆனால் அமெரிக்காவில்  இவை எதுவும் செல்லுபடியாகாது என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. பிச்சை எடுப்பது அமெரிக்காவில் சட்டப்படி குற்றம். துறவியாக அலைந்து திரியும் வாழ்க்கையோ நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று!

 

 சென்னை அன்பர்களுள் ஒருவரான வரத ராவ் என்பவர் சிகாகோவில் உள்ள தமது அமெரிக்க நண்பர் ஒருவருக்கு சுவாமிஜியைப் பற்றி எழுதியிருந்தார். அவரும் அவரது மனைவியும் குடும்பத்தினரும் சுவாமிஜியிடம் மிகவும் அன்பாகவே இருந்தனர். பாலைவனத்தில் ஒரு பசுஞ்சோலையாக அமைந்தது அவர்களின் தொடர்பு. கடைசிவரை சுவாமிஜி அவர்களை மறக்கவே இல்லை. எனினும் பணம் இல்லாமல் அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடர்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. பொருட்களின் விலையோ அபரிமிதமாக இருந்தது. எதைத்தொட்டாலும் ஏகப்பட்ட விலை சொன்னார்கள். அதனுடன் சுவாமிஜி அமெரிக்க  டாலரின் மதிப்ப பற்றியெல்லாம் சரியாக அறிந்திராததால், சென்ற இடத்தில் எல்லாம் கணிசமாக ஏமாற்றப்பட்டார். பணம் வேகமாகக் கரைந்தது.

பணப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த சுவாமிஜிக்குப் பேரிடியாக வந்தது மற்றொரு செய்தி. சர்வ மத மகாசபை செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளிப்போடப் பட்டிருந்தது. இன்னும் ஒரு மாதம் அவர் சிகாகோவில் தாக்குப் பிடித்தாக வேண்டும் என்பது அதன் பொருள். அதற்குரிய பணம் அவரிடம் இல்லை என்பது ஒரு புறம் இருக்க, அப்படியே செப்டம்பர் மாதம் வரை சமாளித்தாலும் சர்வமத மகாசபையில் ஒரு பிரதிநிதியாக அவர் கலந்து கொள்ள முடியுமா என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்தது. சரியான அறிமுகக் கடிதம் இல்லாமல் யாரையும் அனுமதிக்க முடியாது என்று அமைப்பாளர்கள் கையை விரித்துவிட்டனர்.

 

 இவை அனைத்தும் நிகழ்வது, கண்காணாத, யாரும் அறிமுகம் இல்லாத, பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவிலுள்ள ஒரு நாட்டில் தன்னந்தனியாக, கையில் பணம் இல்லாத ஒரு முப்பது வயது  இளைஞருக்கு! ஆனால்  அந்த இளைஞருக்கு இறைவனிடம் அபார நம்பிக்கை இருந்தது. தன்னிடம் நம்பிக்கை  இருந்தது. தான் ஒரு மாபெரும் காரியத்தைச் சாதிக்க பிறந்தவன், என்ற நம்பிக்கை இருந்தது, அதற்காகத் தமக்கு இறைவன் அருளாணை தந்துள்ளார் என்ற நம்பிக்கை இருந்தது! அவர் தளரவில்லை.

 

ஆனாலும் இந்த அளவிற்கு முன்யோசனை இல்லாமல் வந்துவிட்டோமே என்று சுவாமிஜிக்கு தம்மிடமும், தம்மை அனுப்பியவர்களிடமும் ஆதங்கம் வரத்தான்  செய்தது. இவ்வளவிற்கும் அவரை அனுப்பியவர்களில் முன்ஷி ஜக்மோன்லால் , கேத்ரி மன்னர் போன்ற உலக அனுபவம் மிக்க பலரும் இருக்கத்தான் செய்தார்கள்.  ஓர் அறிமுகக் கடிதம் தேவை என்பதைப்பற்றி யாருமே சிந்திக்க வில்லை என்பது விந்தை தான். இதைப்பற்றி பின்வருமாறு கூறி வியந்து நிற்கிறார் சகோதரி நிவேதிதை, அமெரிக்காவின் சம்பிரதாயங்களையோ, சட்ட திட்டங்களையோ அந்தச் சென்னைச் சீடர்கள் அறிந்திருக்கவில்லை. சுவாமிஜியிடம் அவர்கள் கொண்ட அபார நம்பிக்கை அது பற்றி யெல்லாம் அவர்களை எண்ண விடவும் இல்லை. சுவாமிஜி சென்று நின்றால்போதும், எல்லா கதவுகளும் அவருக்காகத்திறக்கும், எல்லா  வாய்ப்புக்களும் அவரைத்தேடி வரும் என்றே அவர்கள் நம்பினார்கள். சீடர்களை விட ஆயிரம் மடங்கு வெள்ளை உள்ளம் படைத்தவராக இருந்தார் சுவாமிஜி.  தமக்கென்று இறைவனின் அருளாணை உள்ளது, எனவே எந்தத் தடைகளும் வழியில் வர முடியாது என்றே அவரும் நம்பினார். அமைப்பு ரீதியாகச் செயல்படுவது என்பது இந்து மதத்தில் துளியும் கிடையாது என்பதற்கு இந்த ஒரு சான்று போதாதா? இல்லாவிட்டால் , உலகனைத்தின் பணமும் பலமும் குவிந்து அபரிமிதமான ஆற்றலுடன் திகழ்கின்ற ஒரு நாட்டிற்கு அறிமுகக் கடிதமோ வேறெந்த ஆதாரமோ இன்றி ஒருவரை அனுப்பத் துணிவார்களா?

 

போஸ்டனில்

-

 சர்வமத மகாசபையில் ஒரு பிரதிநிதியாகக் கலந்து கொள்வது ஒரு கேள்விக்குறியாக இருக்க, ஒரு பார்வையாளராக அதில் பங்கெடுக்க வேண்டுமானால் கூட சுவாமிஜி இன்னும் ஒரு மாதம் சிகாகோவில் தங்கியாக வேண்டும். ஆனால் கையிலிருந்த பணம் கரைகின்ற  வேகத்தைப்பார்த்தால் அது சாத்தியம் அல்ல என்றே தோன்றியது. வேறு என்ன வழி என்று யோசித்த சுவாமிஜிக்கு ஆறுதலாக வந்தது போஸ்டன் பற்றிய செய்தி. போஸ்டன் சிகாகோவிலிருந்து 985 மைல் தொலைவில்  இருந்தது. சிகாகோவை விட அங்கு வாழ்க்கைச்செலவு குறைவு, எனவே அங்கு சென்று வாழத் தீர்மானித்தார் அவர். பன்னிரு நாட்கள் சிகாகோவில் தங்கிய பிறகு ரயிலில் போஸ்டனுக்குப் புறப்பட்டார்.

 

நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு, இறைவன் என்னும் மாபெரும் ஆற்றலை நம்பி,  அவரது அருளைச் சார்ந்து வாழ்கின்ற யாரும் எந்தச் சூழ்நிலையிலும் கைவிடப்பட்டதில்லை. ஆனால் அந்த அருள் எப்படிச்செயல்படும், எந்த வழியில் நம்மைக்காக்கும் என்பது இறைவன் ஒருவருக்கே தெரியும். அற்புதமானவை அவரது வழிகள்! சாதாரணமான மனிதனின் வாழ்க்கையில்  இது உண்மை என்றால், இறைவனின் அருளாணையுடன்  செயல்படுகின்ற சுவாமிஜி போன்ற அருளாளர்களின் வாழ்க்கையில் அது இன்னும்  எவ்வளவு உண்மையாக இருக்கும்! அப்படித்தான் நடக்கவும் செய்தது. எங்கும் இருள் மண்டிக் கிடக்கின்ற அறையில் தவிப்பவனுக்கு  எங்கிருந்தோ வருகின்ற சன்னமான ஒளிக்கீற்று அளிக்கின்ற நம்பிக்கையும் ஆறுதலையும் போல் சுவாமிஜிக்கும் ரயில் பயணத்தின்போது நம்பிக்கைக்கிரணம் ஒன்று பளிச்சிட்டது.

 

 அந்த ரயிலில் சுவாமிஜியுடன் பயணம் செய்தார் மிஸ் கேதரின் ஆபட் சேன்பான். சுருக்கமாக  கேதே சேன்பான் என்று அழைக்கப்பட்ட அந்த 54 வயதுப் பெண்மணி சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்டார். எனவே அவரை அணுகி அவரிடம் பேச்சுக்கொடுத்தார். இந்து மதத்தின் பிரதிநிதியாக சர்வமத மகாசபையில் கலந்து கொள்வதற்காக வந்த  இந்துத் துறவி அவர் என்பதையும் அவரது தற்போதைய நிலைமையையும் அறிந்து கொண்ட கேதரின் தமது வீட்டில் விருந்தினராகத் தங்குமாறு சுவாமிஜியை அழைத்தார். அம்பாளின் அழைப்பாகவே அதனை ஏற்றுக்கொண்டார் சுவாமிஜி.

 

போஸ்டனுக்கு அருகில் அமைந்த ஒரு சிறு கிராமம் மெட்காஃப். அங்கே கேதரினுக்கு ஒரு தோட்ட வீடும் நிலமும் இருந்தன. தமது வீட்டிற்கு அவர் ப்ரீஸி மெடோஸ்( தென்றல் உலவும் புல்வெளி) என்று பெயரிட்டிருந்தார். வீட்டின் மீது திராட்சைக்கொடிகள் படர்ந்திருந்தன. அருகில் ஆம்பல் மலர்கள் பூத்துக்கிடந்த சிறிய குளம் ஒன்று இருந்தது. அதைச்சுற்றிலும் பைன் மரங்களும் தேவதாரு மரங்களும் அடர்ந்து வளர்ந்திருந்தன. இவை அனைத்திற்கும் அழகு சேர்த்தது போல் இரண்டு தெள்ளிய நீரோடைகள் சலசலத்தபடி பாய்ந்து கொண்டிருந்தன. நிழல் மண்டிய அவற்றின் இரு கரைகளிலும்மஞ்சள் புள்ளி கொண்ட நுில மலர்கள் பூத்துக் குலுங்கின. இயற்கையை ஆராதிப்பவராகிய,, இயற்கையின் இணையற்ற அழகில் இறைவனின் எல்லையற்ற மகிமையைக் காண்பவராகிய சுவாமிஜிக்கு இந்த இடம் பிடித்துப்போனதில் வியப்பொன்றும் இல்லை. மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் அங்கே தங்கினார்.

 தேவியின் அருள் சுவாமிஜியை வழி நடத்துவதற்கு ஒரு பாலமாக அமைந்த கேதரின் ஒரு பிரபலமான பெண்மணி. அவர் ஒரு விரிவுரையாளர். அவரது நெருங்கிய உறவினரான ஃப்ராங்க்ளின் பெஞ்சமின் சேன்பான் ஒரு  சிந்தனையாளர், பல நூல்களை எழுதியவர், சமூக சேவகர், தத்துவ நாட்டம் உடையவர்.

 

சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தில் இருந்த கேதரினைச் சந்தித்து இக்கட்டான அந்த வேளையில் சுவாமிஜிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. கேதரினின் மூலம் அவர் பல பிரபல மனிதர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அப்படி அவர் சந்தித்தவர்களில் ஒருவர்தான் ஜான் ஹென்றி ரைட். சர்வ மத மகா சபையில் சுவாமிஜி கலந்து கொள்வதற்கு இவர் மிக முக்கியக் கருவியாக அமைந்தார். எனவே சர்வமத மகாசபை கூடுகின்ற இடமான சிகாகோவிலிருந்து விலகிச்சென்றது போல் தோன்றினாலும் உண்மையில் அதில் கலந்து கொள்வதற்கு அனுகூலமான ஒரு சூழ்நிலைக்கு அருகில் தான் தேவி அவரைக்கூட்டிச் சென்றிருந்தாள்.

சுவாமிஜி மெட்காஃபில் தங்கியிருந்த நாட்கள் அமெரிக்காவில் கோடைக்காலம் ஆகும். இந்த நாட்களில் மக்கள்பொதுவாகப் பட்டணங்களிலிருந்து கடற்புறங்களுக்கும் குளிர்ப் பிரதேசங்களுக்கும்  சென்றுவிடுவார்கள். கோடை முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்கும்போது தான்  திரும்புவார்கள். இந்த நாட்களில் யாரையும் சந்திப்பதும், வகுப்புகளோ  சொற்பொழிவுகளோ நடத்துவதும் இயலாத  காரியம். சுவாமிஜியைப் பொறுத்தவரை இந்த நாட்களும் மிகவும் பயனுடையதாகவே திகழ்ந்தன. சர்வமத மகாசபையில்  கலந்து கொள்வதற்கான ஆயத்த நாட்களாக இவற்றைக் கருதினார் அவர்.

 

ஒரு நாள் அருகிலுள்ள பெண்கள்  சிறை ஒன்றின் காப்பாளரான மிசஸ் ஜான்சன் சுவாமிஜியைக் காண வந்தார். அந்தச் சிறையைக் காண வருமாறு அவரை் சுவாமிஜியை அழைத்தார். அதனைச்சென்று கண்டு வந்தார் சுவாமிஜி. இங்கு அவர்கள் அதைச் சிறை என்று கூறுவதில்லை. சீர்திருத்த நிலையம் என்கிறார்கள். நான் அமெரிக்காவில் கண்டவற்றுள்  பிரமாதமான விஷயம் அது. அவர்கள் சிறை வாசிகளை எவ்வளவு அன்புடன் நடத்துகிறார்கள். எவ்வாறு அவர்களைச் சீர்திருத்தி

 பயனுள்ள சமுதாய அங்கத்தினர்களாகத்திருப்பியனுப்புகிறார்கள்? இவையெல்லாம் எத்தனை அழகாக  எவ்வளவு சிறப்பாக நடைபெறுகின்றன. நேரில் பார்க்காமல் நம்பவே முடியாது. ஓ, இந்தியாவில் ஏழைகளையும் தாழ்ந்தவர்களையும் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதை  எண்ணியபோது என் இதயம் எவ்வளவு வேதனைப்பட்டது தெரியுமா? அவர்களுக்கு வாய்ப்பில்லை, தப்பிக்க வகையில்லை, முன்னேற வழியில்லை என்று அங்கும் இந்தியர்களை எண்ணியே வாடினார் சுவாமிஜி.

 

 பணம் வேகமாக க் கரைந்தது. சுவாமிஜியின் கையில் 130 டாலர்களே எஞ்சின. பணப் பிரச்சினை ஒரு பக்கம்,  சர்வ மத மகாசபையில் கலந்து கொள்ள முடியுமா என்ற தயக்கம் ஒரு பக்கம், முன்பின் தெரியாத உலகம் ஒரு பக்கம்- சுவாமிஜியின் நிலைமையை நாம் சற்று ஊகிக்க முடிகிறது. புறப்படுமுன் நான் கொண்டிருந்த அந்த இன்பக் கற்பனைகள் எல்லாம் கரைந்து விட்டன. இப்போது நான் இயலாத காரியங்களுடன் போராட வேண்டியவனாக உள்ளேன். திரும்பி இந்தியாவிற்குப்போய்விடலாம் என்று கூட நூறுதடவை எண்ணியதுண்டு. ஆனாலும் நான் உறுதி மிக்கவன். மேலும், இறைவனிடமிருந்து ஆணை பெற்றவன். எனக்கு வழி எங்கும்  தோன்றவில்லை தான், ஆனால் அவரது கண்களுக்கு எல்லாம் தெரியும் அல்லவா? என்று கலக்கத்துடன் எழுதுகிறார் சுவாமிஜி.

 

 எழுதியது மட்டுமல்ல, பட்டினியில் கிடக்கிறேன். எல்லாப் பணமும் கரைந்து விட்டது. நாடு திரும்புவதற்காவது  பணம் அனுப்பு என்று அளசிங்கருக்குத் தந்தியும் கொடுத்தார். இந்தியா போய் சேருவதற்குக்கூட கையில் பணம் இல்லாமல் போய்விடுமோ என்று கலங்கினார் அவர். கவலை, குழப்பம் என்று களைப்புடன் ”பாதி செத்தவர் போல் தரையில் படுத்திருந்தார். அவர் எழுதியது போல் அப்போது இறைவனின் கண்கள் அவரைப்பார்த்தன, அவரது அபயக்கரங்கள் அவரை நோக்கி உயர்ந்தன. திடீரென்று ஸ்ரீராமகிருஷ்ணர் அங்கே தோன்றினார்! சுவாமிஜியின் அருகில் சென்று அவரைத்தொட்டு, என்ன இது! எழுந்திரு மகனே! உலகின் போக்கை நினைத்து இவ்வளவு சஞ்சலப்படாதே என்று கூறி மறைந்தார்.

 

ஸ்ரீராமகிருஷ்ணரின் அபயம் சுவாமிஜிக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது. சர்வமத மகாசபையில் சுவாமிஜி கலந்து கொள்வதற்கான கதவுகளைத் திறந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். அதற்கான வழி பேராசிரியர் ஜான் ஹென்றி ரைட்டின் மூலமாக வந்தது.

போஸ்டனில் தான் சுவாமிஜி முதன்முதலாக ரமாபாய் வட்டங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அங்குள்ள பெண்கள் கிளப் ஒன்றில் ஆகஸ்ட் இறுதியில் பேசுவதற்கு சுவாமிஜி அழைக்கப்பட்டார். இந்தக் கிளப் ரமாபாய்க்கு உதவி வந்தது. ரமாபாய்  ஒரு மகாராஷ்டிர பால்ய விதவை. தமது 22- ஆம் வயதில் ஒரு வங்காளியைத் திருமணம் செய்து  இரண்டு வருடத்தில் மீண்டும் விதவையானார். பின்னர் இங்கிலாந்து  சென்று கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார். அதன்பிறகு  அமெரிக்கா சென்று ஏராளம் குழுக்களை (ரமாபாய் வட்டங்கள்) ஆரம்பித்தார். அமெரிக்காவில் பணம் திரட்டி இந்தியாவில் பால்யவிதவைகளுக்குப் பள்ளி தொடங்குவது அவரது நோக்கமாக இருந்தது. நோக்கம் உயர்வானதாக இருந்தாலும் அவரது வழிமுறை ஏற்கத்தக்க தாக இல்லை. இந்தியாவில் பெண்களும், விதவைகளும் நடத்தப்படுகின்ற விதத்தை அவர் மிகவும் மோசமாகச் சித்தரித்துப் பணம் திரட்டினார். பெண்கள் தங்களைத் தேர்ச்சக்கரத்தில் இட்டு உயிரை மாய்த்துக் கொள்வது, பெண் குழந்தைகளைக் கங்கையில் முதலைக்குப் பலியாக்குவது போன்ற ஏராளம் கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டார். அவருக்குப் பணம் கிடைத்தது என்பது ஒரு புறமிருக்க கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு இந்தக் கதைகள் பெரும் தீனி ஆயிற்று.

சுவாமிஜி தமது சொற்பொழிவில் ரமாபாயின் கதைகளைத் தகர்த்தார். இவை அனைத்தும் கட்டுக்கதைகள் என்று கூறி உண்மை நிலைமையை எடுத்துக்கூறினார். இப்போது தொடங்கிய இந்தப் பிரச்சனை நீண்டகாலம் சுவாமிஜியின் பணிகளுக்கு ஓர் இடையூறாகவே இருந்தது.

 

கேதரின் சுவாமிஜியிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தாலும் சுவாமிஜியின் நடை உடை மற்றும் வினோத பழக்க வழக்கங்களைச்சற்று கேலிக் கண்ணுடன் தான் பார்த்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையும் நண்பர்களையும் தெரிந்தவர்களையும் அழைத்து ” இந்தியாவிலிருந்து வந்திருக்கும் வினோதம் என்று சுவாமிஜியை அவர்களுக்கு அறிமுகம் செய்தார். மௌனமாக அனைத்தையும் தாங்கிக்கொண்டார் சுவாமிஜி.

 

சூரியன் பிரகாசிக்கச் சான்றிதழா?

-

ஒரு நாள் கேதரினின் உறவினரான பெஞ்சமின் சுவாமிஜியுடன் பேசிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில்  அவருக்கு சுவாமிஜியைப் பற்றி அவ்வளவு உயர்ந்த அபிப்பிராயம் இருக்கவில்லை.ஆனால் பேசபேச அவரது கருத்து மாறியது. கடைசியில் அவர் சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்டார். போஸ்ட்னிலுள்ள தமது வீட்டிற்கு வருமாறு அழைக்கவும் செய்தார். அவர் அப்போது போஸ்டனிலிருந்து சுமார் 30-மைல் தொலைவிலுள்ள அன்னிஸ்க்வாம் என்ற இடத்தில் ஓர் அமைதியான கிராமத்தில் விடுமுறை நாட்களைச் செலவிடுவதற்காகச் சென்று கொண்டிருந்தார். ஆகஸ்ட் 26, 27 தேதிகளை அவருடன் கழித்தார் சுவாமிஜி. பேராசிரியரும் மெத்தப் படித்தவர். இருவரும் பல்வேறு விஷயங்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினார்.

 

 

இந்தியாவில் பல இடங்களில் நிகழ்ந்தது போலவே இங்கும் நிகழ்ந்தது. சிறிது நேர உரையாடலிலேயே சுவாமிஜி யின் ஆழத்தைப்புரிந்து கொண்டார் ரைட். சர்வமத மகாசபையில் கலந்து கொள்வதற்கு முடியாமல் போய்விடுமோ என்று கலங்கியிருந்த சுவாமிஜியிடம், ரைட், இந்து மதத்தின் பிரதிநிதியாக நீங்கள் கலந்து கொண்டேயாகவேண்டும். அமெரிக்க உங்களை அறிய வேண்டுமானால் அது ஒன்றைத்தவிர வேறு வழியில்லை என்று கூறி அவரை ஊக்குவித்தார். ”ஆனால் என்னிடம் அதற்கான அறிமுகக் கடிதமோ சான்றிதழ்களோ  எதுவும் இல்லை என்று தயங்கினார் சுவாமிஜி. சுவாமிஜி, உங்களுக்கு ஒரு சான்றிதழா? சூரியன் பிரகாசிப்பதற்குச் சான்றிதழ் கேட்பது போல் அல்லவா இருக்கும் அது! என்றார் பேராசிரியர்.

 

உவமை காட்டி உவகை கூட்டியதுடன் நிற்கவில்லை பேராசிரியர். சுவாமிஜியை எப்படியாவது சர்வமத மகா சபையில் ஒரு பிரதிநிதியாக க் கலந்து கொள்ளச் செய்தே தீர்வது என்று தீர்மானித்தார் அவர், சுவாமிஜி,  நீங்கள் கலந்து கொள்வதற்காக நான் என்னால் இயன்றதைச்செய்வேன், என்று சுவாமிஜியிடம் வாக்குறுதியும் அளித்தார். சுவாமிஜியின் கண்களில் நம்பிக்கைக் கிரணம் பளிச்சிட்டது.

மகாசபையில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளைத்தேர்ந்தெடுக்கின்ற குழுவின் தலைவராகிய டாக்டர் பரோசுக்கு ஒரு கடிதம் எழுதினார். ”சர்வமத மகாசபையில் கலந்து கொள்வதற்காக ஒருவரை அனுப்புகிறேன். மெத்தப் படித்த பேராசிரியர்கள்  அனைவரையும் சேர்த்தாலும் இவரது அறிவுக்கு ஈடாகாது” என்று அதில் குறிப்பிட்டார் பேராசிரியர். அது மட்டுமல்ல, சுவாமிஜியின் பணத்தட்டுப்பாட்டை அறிந்து, சிகாகோ வரை செல்வதற்கான பணமும் கொடுத்து, அங்கே மற்ற பிரதிநிதிகளுடன் தங்குவதற்கு அறிமுகக் கடிதங்களையும் கொடுத்தார். மறைந்தும் மறையாமல் காத்து நின்ற குருதேவரை எண்ணி நெகிழ்ந்தார் சுவாமிஜி.

 

பின்னால் சேலத்திற்குச் சென்றபிறகு அங்கிருந்து சுவாமிஜி பேராசிரியருக்குத் தமது நன்றியைத்தெரிவித்து, செப்டம்பர் 4-ஆம் நாள் ஒரு கடிதம் எழுதினார். நீங்களும் சிறந்தவரான உங்கள் மனைவியும், இனிய குழந்தைகளும் என் உள்ளத்தில் அழியாமல் பதிந்திருக்கிறீர்கள். உங்களுடன் வசித்தபோது நான் சொர்க்க பூமிக்கு வெகு அருகில் இருப்பதாகவே உணர்ந்தேன். வரங்கள் அனைத்தையும் தரும் இறைவன் தமது ஆசிகளை உங்கள்மீது பொழிவாராக.

 

அந்தக் கடிதத்தில் தமது உள்ளத்து உணர்ச்சிகளையெல்லாம் கொட்டி, கடவுளைத்தேடி என்ற கவிதையையும் எழுதி அனுப்பினார். தமது துன்பங்களிலும் துயரங்களிலும் இறைவன்  எப்படி தோன்றாத்துணையாக நின்று வழிகாட்டுகிறார் என்பதை இந்தக் கவிதையில் அற்புதமாக எழுதுகிறார் சுவாமிஜி.

 

 பணியின் ஆரம்பம்

-

 சிகாகோவிற்குப் புறப்படுவதற்கு முன்பு ஒரு வாரம் சுவாமிஜி துரித கதியில் இயங்க வேண்டியிருந்தது. ஆகஸ்ட் 27 ஞாயிறன்று  அவர் அன்னிஸ்க்வாமிலுள்ள ஒரு சர்ச்சில் சொற்பொழிவு ஆற்றினார். இந்தியர்களின் உடனடித்தேவை தொழிற்கல்வியே தவிர மதம் அல்ல என்பதை அதில் வற்புறுத்தினார். வேகமும் செயல் துடிப்பும் நிறைந்ததாக இருந்தது அந்தச்சொற்பொழிவு. அதைக்கேட்டவர்களும் அந்த வேகத்தில் கட்டுண்டு, அத்தகைய கல்வியை உடனடியாக அமல்படுத்துவதற்கான கல்லூரியை இந்தியாவில் உருவாக்க பணம் திரட்டத் தொடங்கி விட்டார்களாம்! சுவாமிஜியைப் பற்றியும் அன்னிஸ்க்வாமில் அவரது நாட்களைப் பற்றியும் மிசஸ்ரைட் ஒரு நீண்ட விளக்கத்தைத் தந்துள்ளார்.

 அவர் பொதுவாக நீண்ட காவி அங்கி அணிந்திருந்தார். முழங்காலுக்குக் கீழே அது நீண்டிருந்தது. பாதிரிகள் அணிவது போன்றதாக இருந்தது. நீண்ட , தடித்த காவித் துணி ஒன்றினால் அங்கியை இடுப்பில் இறுக்கிக் கட்டியிருந்தார். கால்களைச் சற்று இழுத்து நடப்பது போல் இருந்தாலும் அவரது நடையில் ஒரு தனி கம்பீரம் இருந்தது. நிமிர்ந்த தலையும் நேரான கழுத்தும் நெடிய பார்வையும் அவருக்கு ஓர் அதிகாரத்தோரணையைக் கொத்ததுடன், கடந்து செல்கின்ற யாரையும் ஒரு கணம் நின்று அவரைப் பார்க்கச் செய்தன. அவர் மெதுவாகவே நடந்தார். அவரிடம்  விரைவோ அவசரமோ காணப்படவில்லை. அகன்று நீண்ட அவரது பெரிய கரு விழிகள் சிலவேளைகளில் கனல் கக்குவதும் உண்டு.

 

அமைதியாக அமர்ந்திருக்கின்ற அவர் சில வேளைகளில் தலையை உயர்த்தி, பார்வையைக்கூரைப் பக்கமாகத் திருப்பி, மென்மையாக ”சிவ, சிவ என்று கூறுகிறார். அவரது உணர்ச்சி எரிமலைக் குழம்பு போல் பரந்து அங்கிருக்கின்ற அனைவரையும் பற்றிக் கொள்வது போல் உள்ளது.

ஒரு முறை அவரிடம் ஒருவர், ”கிறிஸ்தவ மதம் தான் எல்லோரையும் ரட்சிக்கும் என்று கூறியபோது சுவாமிஜி தமது பெரிய விழிகளைச்சுழற்றி அவரை நோக்கி, அப்படியானால் அது ஏன் எத்தியோப்பியர்களையும் அபிசீனியர்களையும் ரட்சிக்கவில்லை? ” என்று கேட்டார். அது மட்டுமல்ல, அதே வேகத்துடன் , அப்படி ரட்சிப்பதாகக் கூறுகின்ற மேலை நாடுகளின் போக்கை வன்மையாகக் கண்டித்தார். அந்த நாடுகளில் நடைபெறும் குற்றங்கள், பெண்களின்  நிலைமை, சமுதாயத்தில் நிலவும் ஒழுக்கக் கேடுகள், மதுவின் ஆதிக்கம், திருட்டுக்கொடுமைகள், அரசியல் கயமை, கொலைகள் என்று பட்டியல் இட்டார். அவரது பேச்சில் அனைவரும் மயங்கினர். பெண்களின் கண்கள் மின்னின. கன்னங்கள் உணர்ச்சி வேகத்தில் சிவந்தன. குழந்தைகள் கூட அவர் தங்களிடம் கூறியதை நினைவில் வைத்து அதையே பேசினர். ஓவியர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தனர், அவரது ஓவியத்தை வரைய முற்பட்டனர்.

 

 இந்த உலகில் உண்மை என்ற ஏதாவது உண்டானால் அது ஆன்மீக வாழ்க்கை மட்டுமே என்று வாழ்வதற்கு அவர் பயிற்சி பெற்றது போல் தோன்றியது. கடவுளிடம் அன்பு, மனிதனிடம் அன்பு- இவையே உண்மை என்று அவர் நம்பினார்.

இவ்வாறு நீள்கிறது மிசஸ் ரைட்டின் நினைவுக்குறிப்பு. பணத்தில் சுவாமிஜி சிறிதும் பற்றற்றிருந்ததை அவர் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். யாராவது சுவாமிஜிக்குப் பணம் அளிக்க முற்பட்டபோது, தமக்கு அவர்கள் ஏதோ தீங்கு செய்வது போல் விலகினார் அவர். ” ஓ! வேண்டுமட்டும் நான் துயரங்களை அனுபவித்துவிட்டேன். அவற்றில் மிகவும் என்னைச் சோதித்தது எது தெரியுமா? பணத்தைப் பாதுகாப்பது தான் என்று குழந்தைபோல் கூறினார் அவர். பணம் என்ற ஒன்று இல்லாமல் எதுவுமே  செய்ய இயலாது என்று இருந்த அந்த நிலையில் கூட அவர் பணத்தை ஒதுக்கியதை எங்களால் நம்பவே இயலவில்லை.  பணத்தின் மீது ஒருவர் இவ்வளவு நாட்டமில்லாமல் இருக்க முடியுமா என்ற எண்ணம் அவர் சென்ற பிறகும் நீண்ட நாள் எங்களைச் சிந்தனையில் ஆழ்த்தியிருந்தது.

 பல இடங்களிலிருந்தும் சுவாமிஜிக்கு அழைப்புகள் வந்தன. சுவாமிஜியும் சேலம், மாசசூசெட்ஸ் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று சொற்பொழிவுகள் செய்தார். மாசசூசெட்ஸில் அவர் மிசஸ் உட்ஸ் என்பவரின் வீட்டில் ஒரு வாரம் தங்கினார். இந்த நாட்களில் இரண்டு சர்ச்சுகளில் அவர் இரண்டு சொற்பொழிவுகள் ஆற்றினார். மிசஸ் உட்ஸின் தோட்டத்தில் குழந்தைகளுக்காகவும் இளைஞர்களுக்காகவும்  ஒரு நாள் பேசினார். அங்கிருந்து புறப்படும்போது தமது கைத்தடி, போர்வை, பெட்டி ஆகியவற்றை தமது நினைவாக அங்கே விட்டுச்சென்றார் அவர்.

சேலத்தில் அவர் பேசிய முதல் சொற்பொழிவு, அங்கே இருந்தவர்களுக்கு இந்தியாவைப்பற்றிய ஒரு புதிய பார்வையைக் கொடுத்தது. இந்தியாவின் உடனடித்தேவை மதம் அல்ல, தொழிற்கல்வியே என்பதை அவர் எடுத்துக் கூறிய போது இரண்டு கிறிஸ்தவ மிஷனரிகள் அதனை ஆவேசமாக எதிர்த்தனர்.பல கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டனர். சுவாமிஜி சற்றும் நிலைகுலையாமல்  நிதானமாகப் பதில் கூறினார். இந்த நிகழ்ச்சி சிறியதாக இருந்தாலும் வரப்போகின்ற நாட்களின் தன்மையை சுவாமிஜிக்கு ஒரு முன்னறிவிப்பு செய்தது என்பது நிச்சயம்.

 

 செப்டம்பர் 4-ஆம் நாள் சாரட்டோகா ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் இரண்டு நாட்கள் பேசினார் சுவாமிஜி. தலைப்பு ” இந்தியாவில் முகமதியர் ஆட்சி இந்தியாவில் வெள்ளியின் புழக்கம் என்பவையாக இருந்தன.

இப்படி சிகாகோவிற்குப் போவதற்கு முன்னால் மூன்று வாரங்களில் சுவாமிஜி 11 சொற்பொழிவுகளும் உரையாடல்களும் நிகழ்த்தினார். இதற்குள் அமெரிக்காவின் பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்தார். ரமாபாய் வட்டத்தில் பேசினார். நட்புடன் பழகிய பாதிரிகள், வெறுப்புடன் பழகிய பாதிரிகள், என்று இரண்டு பிரிவினரையும் சந்தித்தார். சிறைக்கைதிகளிடம் பேசினார்...... பெண்கள் கிளப்பில் பேசினார். குழந்தைகளிடம் பேசினார். நாட்டின் அறிவு ஜீவிகள் சிலரைக் கவர்ந்தார். இவை அனைத்தும் அவரது சிகாகோ விஜயத்திற்கு ஒரு முன்னுரையாக அமைந்தன.

புகழ், எதிர்ப்பு என்று மாறிமாறி வந்த சூழ்நிலையில் சுமார் மூன்று வாரங்களைச் செலவிட்ட பிறகு சுவாமிஜி சிகாகோவிற்குத் திரும்பினார். ஏற்கனவே அவரைச் சர்வமத மகாசபையில் ஒரு பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டது பற்றிய அதிகாரபூர்வமான கடிதம் செப்டம்பர் 2-ஆம் தேதி அவருக்குக் கிடைத்திருந்தது. சர்வமத மகாசபையில் கலந்து கொள்வதற்கான அறிமுகக் கடிதங்களும் சான்றிதழ்களும் இப்போது அவரிடம் இருந்தன. புத்துணர்ச்சியுடனும் புது நம்பிக்கைகளுடனும் சர்வமத மகாசபை நாட்களை எதிர்நோக்கி சிகாகோவை நோக்கிப் பயணித்தார் அவர்.

 ரயிலில் சென்று கொண்டிருந்தபோது சுவாமிஜி ஒரு வணிகரைச் சந்தித்தார். அவர் சுவாமிஜி போக வேண்டிய இடத்திற்கு வழிகாட்டி உதவுவதாகவும் வாக்களித்திருந்தார். ஆனால் சிகாகோ ரயில் நிலையத்தில் இறங்கியபோது அவர் எல்லாவற்றையும் மறந்து அசவர அசவரமாகப் போய்விட்டார். போகட்டும் என்று டாக்டர் பரோசின் முகவரியைத்தேடினார். ஆனால் சோதனை! அதைக் காணவில்லை!

ரயில் நிலையம் நகரில் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. அங்கே ஜெர்மானியர்களே அதிகம் வசித்தனர். மொழிப் பிரச்சனை காரணமாக சுவாமிஜி யாரிடமிருந்தும் உதவி பெற முடியவில்லை. அதற்கும் மேலாக, அவர் ஒரு கறுப்பர்  என்று கருதிய அந்தப் பகுதி மக்கள் அவரை வெறுத்து ஒதுக்கினர். ஏதாவது  ஹோட்டலில் சென்று தங்கலாம்  என்று எண்ணினால், அதற்கான வழியைக்கூட யாரும் காட்ட முன்வரவில்லை. எந்த உதவியும் கிடைக்காத நிலையில் சேர்ந்தார் சுவாமிஜி.

 இரவு கவியலாயிற்று.

இந்தியாவைப்போலவே அமெரிக்காவிலும் ரயில் நிலையத்தில் கிடக்கின்ற சரக்கு ரயில் பெட்டிகள் ஏழைகளுக்கும் கதியற்றவர்களுக்கும்  புகலிடமாக இருந்தது. சுவாமிஜியும் அவ்வாறு ஒரு ரயில் பெட்டியைத்தேர்ந்தெடுத்து இரவை அதில் கழித்தார். இன்னும் ஒரே நாளில் அமெரிக்காவையே அசைக்க இருந்த அவர் அன்று கவனிப்பார் அற்றவராக ஒரு ரயில் பெட்டியில் கிடக்க வேண்டியதாயிற்று!

கதவு திறந்தது.

 காலை வந்தது, கதிரவன் உதித்தான். சுவாமிஜியின் மனத்திலும் நம்பிக்கை துளிர்விட்டது. ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கால்போன போக்கில் நடந்த சுவாமிஜி தாம் ஒரு விசாலமான தெரு வழியாகச்சென்று கொண்டிருப்பதைக் கண்டார். இந்தியாவாக எண்ணிக்கொண்டு வீடுகளில் சென்று உதவிக்காக  கதவைத் தட்டினார். ஆனால் அமெரிக்காவில் அவர் இருப்பது அவருக்கு உணர்த்தப்பட்டது. உதவிகள் மறுக்கப்பட்டது மட்டுமல்ல. வீட்டின் கதவுகளும் அவரது முகத்திற்கு எதிரில் சாத்தப்பட்டன. சுவாமிஜி தளர்ந்து விட்டார். இறைவன் விட்ட வழியே ஆகட்டும் என்று சாலையோரமாக அமர்ந்து விட்டார்.

 

உலகின் கைகள் மறுக்கின்ற இடத்தில் இறைவனின் கைகள் விரைகின்றன. உலகின் கதவுகள் மூடுகின்ற இடத்தில் கடவுளின்  கதவுகள் திறக்கின்றன. உண்மையில் அப்படியே நடந்தது, சுவாமிஜி அமர்ந்திருந்த  இடத்திற்கு எதிரில் இருந்த வீட்டின் கதவுகள் திறந்தன. கம்பீரமான தோற்றம் கொண்ட பெண்மணி ஒருவர் அங்கிருந்த சுவாமிஜியை நோக்கி வந்தார். அவரை நெருங்கி, மிக மென்மையான குரலில், நீங்கள் சர்வமத மகாசபையில் கலந்து கொள்ள வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார். அங்கிருந்து ஆரம்பமாயிற்று ஒரு தெய்வீக உறவு, சுவாமிஜி யின் வாழ்க்கையில் நீங்காத இடம் பெற்றார் அந்தப் பெண்மணி. அவர் மிசஸ் ஹேல். அவரது குடும்பம் சுவாமிஜியின் வரலாற்றில் ஓர் அங்கம் ஆகியது.

சுவாமிஜியின் நிலைமையை அறிந்து கொண்ட மிசஸ் ஹேல் அவரை வீட்டிற்கு அழைத்துச்சென்றார். அவரது துணையுடன் சுவாமிஜி சர்வமத மகாசபை பொறுப்பாளர் களுடன் தொடர்பு கொண்டார். ஒரு பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப் பட்டார்.

நாட்கள் நகர்ந்தன. தியானத்திலும் பிரார்த்தனையிலும் நாட்களைச் செலவிட்டார் சுவாமிஜி.

-

 அமெரிக்க சகோதரிகளே!

சகோதரர்களே!

-

சர்வமத மகாசபை சிகாகோ கலைக்கழகத்தில் 1893- செப்டம்பர் 11 திங்கள் முதல் 27 வரைகூடியது. மிக்சிகன் அவென்யுவில் அந்தக் கட்டிடம் அமைந்திருந்தது. உலகக் கண்காட்சியின்  ஓர் அங்கமான அது, ஓவியங்கள், சிற்பங்கள், செப்புச் சிலைகள் என்று கலையின் பல்வேறு அம்சங்களைக்கொண்டதாக இருந்தது. அந்தக்  கட்டிடம் அப்போது தான் தயாராகி வந்தது. அதன் பல கூடங்களில் கண்காட்சிக் குரிய பொருட்கள் வைக்கப்படவில்லை. காலியாக இருந்தன. அந்தக் கூடங்கள் சர்வமத மகாசபைக்குப் பயன்படுத்தப் பட்டன. அவற்றில் ஒன்று கொலம்பஸ் ஹால்.

சர்வமத மகாசபை கொலம்பஸ்  ஹாலில் ஆரம்பித்தது. அதில் கீழ்த்தளத்திலும் மேல் தளத்திலுமாக சுமார் 4000 பேர் அமர முடியும். நிகழ்ச்சிகளின்போது பலருக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே 4-ஆம் நாளிலிருந்து நிகழ்ச்சிகள் வாஷிங்டன் ஹாலில் நடைபெற்றன. இன்னும்  சில ஆயிரம்பேர் அமரத்தக்கதாக இருந்தது இது. முதல் 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 4-ஆம் நாள் இங்கே  அனைவருக்குமாக மீண்டும் ஒரு முறை நடைபெற்றன.

 

 ஒவ்வொரு நாளும் மூன்று பகுதிகளாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பகுதியும் 2முதல் 3 மணி நேரம்  நடைபெற்றது. எல்லா பகுதிகளுக்கும் மக்கள் பெருவாரியாகக்கூடினர். பெண்கள் அதிகமாக இருந்தனர்.

மேடை சுமார் 50 அடி நீளமும் 15 அடி அகலமும் உடையதாக இருந்தது. ஸிஸரோ, டெமஸ்தனிஸ் ஆகிய  இருவரின் பளிங்குச் சிலைகள் அந்த மேடை மீது இருந்தன. இந்தச் சிலைகளுக்கு நடுவில் சிம்மாசனம் போன்ற ஓர் உயர்ந்த இரும்பு நாற்காலி இருந்தது. முதல் நாள் அது, அமெரிக்கக் கத்தோலிக்க சபையில் மிக உயர்ந்த பதவி வகிப்பவரான கார்டினல் கிப்பன்ஸுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. இந்த நாற்காலியின் இரண்டு பக்கங்களிலும்  வரிசைக்கு முப்பது வீதம் மூன்று  வரிசைகளில் மர நாற்காலிகள் இடப்பட்டிருந்தன. பேசுவதற்கான அமைப்பும் மேடை மீது இருந்தது. மேடையின் பின்புறச் சுவரை அழகிய ஜப்பானிய மற்றும் ஹீப்ரு ஓவியங்கள் அலங்கரித்தன. டெமஸ்தனிஸ் சிலைக்கு இடது பக்கம் வலது கையை உயர்த்தி, பறவை ஒன்றைப் பறக்கவிடுவது போல் நிற்கின்ற கல்வி தேவதையின் செப்புச் சிலை ஒன்றும் இருந்தது.

 

 செப்டம்பர் 11. காலையில் சுவாமிஜி உட்பட சர்வமத மகாசபைப் பிரதிநிதிகள்  அனைவரும் கொலம்பஸ் ஹாலின் ஒரு பகுதியில் கூடினர். கொலம்பஸ்  ஹாலில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தனர். நூற்றுக்கணக்கானோர் இடம் கிடைக்காமல் கதவுகளுக்கு அருகிலும் வெளியிலும் கூடியிருந்தனர். இவ்வளவு பேர் இருந்தும் அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது. அந்த வழியாக ஒரு பறவை பறந்து சென்றால் அதன் இறக்கைகளின்  அசைவொலி கூட கேட்கும் அளவிற்கு அங்கே நிசப்தம் நிலவியதாக அன்று அங்கே அமர்ந்திருந்த ஒருவர் எழுதுகிறார்.

 காலை 10 மணி ஆகியது. சர்வமத மகாசபையில் இடம் பெற்ற முக்கியமான 10 மதங்களாகிய பிரம்ம சமாஜம். யூத, இஸ்லாம், இந்து, பௌத்த, தாவோ, கன்ஃபூசிய, ஷின்டோ, ஜொராஷ்டிரிய, கத்தோலிக்க, கிரேக்க சர்ச் மற்றும் புரோட்டஸ்டன்ட் மதங்களைக்குறிப்பிடும்  வகையில் அங்கிருந்த  நியூ லிபர்ட்டி மணி 10 முறை அடித்தது. ஹாலுக்கு அருகிலிருந்து பிரதிநிதிகள் ஊர்வலம் புறப்பட்டது.. நீண்ட அந்த ஊர்வலத்தை கார்டினல் கிப்பன்ஸும் போனியும் கைகோர்த்த படி வழிநடத்திச்சென்றனர். அடுத்து கண்காட்சியில் பெண்கள் பகுதியின் தலைவி மிசஸ் பாட்டர் பாமரும், உபதலைவி மிசஸ் சார்லஸ் எச். ஹென்ரடினும் சென்றனர். அதைத் தொடர்ந்து  பிரதிநிதிகள் சென்றனர். அது மிகவும் அற்புதமானக் காட்சியாக இருந்தது. வித்தியாசமான, வினோதமான உடைகள், விதவிதமான தொப்பிகள்,  பல்வேறு வண்ண அங்கிகள், அவர்கள் தாங்கியிருந்த விதவிதமான சிலுவை, பிறை போன்ற சின்னங்கள், மழித்த தலைகள்,  பல்வேறு விதமான அலங்காரங்களுடன் கூடிய தலைகள் என்று பிரமிப்பை ஏற்படுத்தியபடி சென்றது அந்த ஊர்வலம் என்று எழுதுகிறார் பார்வையாளர் ஒருவர். அனைவரும் மெதுவாக, கம்பீரமாக நடந்து ஹாலுக்குள் வந்து மேடை மீது ஏறினர். பார்வையாளர் கூட்டம் தொடர்ந்து கரவொலி எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்தியது.

கார்டினல் கி்பன்ஸ் மேடையின் நடுவில் தலைமை ஆசனத்தில் அமர்ந்தார். அவரது வலது பக்கம் சீனாவின் ஐந்து புத்த  பிட்சுக்களும், இடது பக்கம் கிரேக்க சர்ச்சின் தலைமை பிஷப்களும் அமர்ந்தனர். மற்றவர்கள் பிற ஆசனங்களில் அமர்ந்தனர். அனைவரும் தங்கள் நாட்டிற்கும் மதத்திற்கும் உரிய ஆடைகளை அணிந்திருந்தனர். கிப்பன்ஸ் செந்நிற அங்கி அணிந்திருந்தார். பௌத்தர்கள் வெண்ணிற உடையில் இருந்தனர். கிரேக்கர்கள் கறுப்பு அங்கி அணிந்து, தந்த நிற கைத்தடிகளுடன் வந்திருந்தனர். கன்ஃபூசியர் சீன அரச பாரம்பரிய உடை அணிந்திருந்தார். ஆப்பிரிக்க இளவரசர் நல்ல எம்ப்ராய்டரி  வேலைப்பாடுகளுடன் கூடிய உடையில் இருந்தார். பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவரான பிரதாப் சந்திர மஜும் தார் கறுப்பு ஐரோப்பிய உடையில் இருந்தார்.

 சுவாமிஜி சிவப்பு வண்ண உடையும் மஞ்சள் வண்ணத் தலைப்பாகையும் அணிந்து காட்சியளித்தார். அவர் 31-ஆம் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் பம்பாயின்  நகர்கர், அடுத்து இலங்கையின் தர்ம பாலர், அடுத்து மஜும்தார் அமர்ந்திருந்தார். சமண மதத்தின் பிரதிநிதியாக வீர்சந்த் காந்தியும்,தியாபிகல் சொசைட்டியின் பிரதிநிதிகளாக ஞான் சந்திர சக்கரவர்த்தி மற்றும் மிசஸ் அன்னி பெசன்ட் ஆகியோரும் வந்திருந்தனர்


No comments:

Post a Comment