இந்துமதம்-வகுப்பு-21
நாள்-12-6-2020
..
சம்ஸ்காரம்-பதினாறு சடங்குகள்
..
சம்ஸ்காரம் என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. அவற்றில், “நினைவுச் சுவடு”, “சுத்திகரிப்பு”, “ஏதோ ஒரு நன்மை செய்வது” என பல பொருள்கள் உள்ளன
..
முற்பிறவியில் சேர்த்துவைக்கப்பட்டடுள்ள நினைவுகளுக்கு சம்ஸ்காரம் என்று பெயர் உண்டு
..
வாழ்வியலில் சம்ஸ்காரம் என்பதற்கான அர்த்தம் இவ்வாறாக உள்ளது. அதாவது ஒரு மனிதன் ஒரு பருவத்திலிருந்து இன்னொரு பருவத்திற்கு செல்லும்போது செய்யப்படும் சடங்குகள்,சம்பிரதாயங்கள் அல்லது நடைமுறைகள்
..
சம்ஸ்காரத்தின் நோக்கம் பழைய வாசனைகளை,நினைவுகளை சுத்தம் செய்து தூய்மைப்படுத்துவது
உடல், உள்ளம், புத்தி முதலானவற்றை சுத்திகரித்து புனிதமாக்கும் நோக்கம் கொண்ட பழக்க வழக்கங்களே சம்ஸ்காரங்கள்.
.
ஒரு மனிதனை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு அழைத்து செல்ல செய்யப்படும்
புனிதச் சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்களின் தொடரே சம்ஸ்காரங்கள். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்துக்கும் உரிய குறிப்பிட்ட ஒரு சம்ஸ்காரம் அல்லது ஒருசில சம்ஸ்காரங்கள் உண்டு.
..
சாதி, சமய நம்பிக்கை, சமூக நிலை எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு இந்துவும் ஒருசில சம்ஸ்காரங்களைத் தன் வாழ்நாளில் செய்தாக வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.
..
பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு இடத்திற்கு இடம் இவைகளில் சிறிது மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் உண்மையில், தாமறியமாலே நம்மில் ஏராளமானவர்கள் இந்த சம்ஸ்காரங்களை இப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
..
சம்ஸ்காரங்களின் நோக்கம்
..
வெளியிலிருந்து பார்க்கும்போது, சமூக-சமயச் சடங்குகள் போல் தெரிந்தாலும், சம்ஸ்காரங்கள் அடிப்படையில் ஆன்மிக சாதனையின் நடைமுறைத் தொகுப்பாக இருக்கிறது. ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு வழிகாட்டுவதாகவும் இருக்கின்றன.மனிதனை முக்தியை நோக்கி அழைத்து செல்வதே இந்த சம்ஸ்காரங்களின் நோக்கம்.
..
சமஸ்காரங்க்ளின் நடைமுறைப் பயன்பாடு என்ன என்று பார்த்தால், ஒரு மனிதனின் வளர்ச்சிப் பாதையில் மிகப் பெரிய தாக்கத்தையும் பாதிப்பையும் இவை ஏற்படுத்துகின்றன. தனி மனித அளவில் ஆன்மீக நெறிப்படுத்துதலை அளித்து, ஒரு சமூகத்தின் முதிர்ச்சியடைந்த கலாச்சாரத்தின் உறுப்பினன் ஆகும் தகுதியை அவனுக்குக் கொடுக்கிறது.
..
கருவுற்ற நாள் முதல் துவங்கும் இந்த சம்ஸ்காரங்கள் ஒரு மனிதனின் உடலிலும் உள்ளத்திலும் தொடர்ந்து தேவைக்குத் தகுந்த நற்பண்புகளைத் தோற்றுவித்து, வாழ்நாள் முழுமையும் தொடர்ந்து அவனது ஆளுமை வளர்ச்சியடையத் துணை செய்கின்றன.
..
நவீன உலகில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் தீவிர மதநம்பிக்கை மற்றும் மூட நம்பிக்கைகளின் தொகுப்பு என்று இழிவு செய்யப்பட்டாலும் அவற்றுக்கு ஆழமான, மிக உயர்ந்த அர்த்தம் உள்ளது. அது, வெளிப்பார்வைக்கு எளிதில் புலப்படாது.
..
கடந்த சில நூற்றாண்டுகளில் தோன்றியவற்றைத் தவிர பிற அனைத்து இந்து சமயச் சடங்குகளுக்கும் சமூக, பண்பாட்டு, ஆன்மீக, மறைஞான முக்கியத்துவம் உள்ளது- மனிதனின் மன வளர்ச்சியின் தேவைகளையும் இவை பெரும்பாலான சமயம் நிறைவு செய்கின்றன.
..
எந்த ஒரு கடவுளையோ அல்லது குறிப்பிட்ட சில கடவுளரையோ திருப்தி செய்வதற்காக சம்ஸ்காரங்கள் செய்யப்படுவதில்லை. இன்னும் மேலான ஒரு வாழ்வை நோக்கிச் செல்லும் தகுதி பெரும் வகையில் மனிதனின் உடலையும் உள்ளத்தையும் சுத்திகரித்து புனிதப்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படும் சடங்குகள் இவை.
..
உடலின் இயக்கத்தைக் கொண்டு உடலிலும் உள்ளத்திலும் தாக்கம் ஏற்படுத்தி, மனிதனுள் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி, சமூகத்தில் அவனுக்குரிய இடத்தை அவன் வெற்றிகரமாக அடையச் செய்து, அவனுக்குச் சாத்தியப்படும் ஆன்மீக வளர்ச்சியையும் சம்ஸ்காரங்கள் அளிக்கின்றன.
..
இந்தியாவெங்கும் உள்ள பிராந்திய மொழி நூல்கள் ஏராளமானவற்றில் சம்ஸ்காரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன, வெவ்வேறு வடிவங்களில் அவை கடைபிடிக்கப்படுகின்றன.
...
சடங்குகளும் சமயச் சம்பிர்தாயங்களுமாக தொகுத்துப் பார்த்தால் சம்ஸ்காரங்கள் தொன்மையானவை.
உலகின் மிகப் புராதான சடங்குகளாகக்கூட இவை இருக்கலாம்.
ஏனெனில், காலத்தில் மிக முற்பட்ட ரிக் வேத சம்ஹிதையில் இவை பேசப்படுகின்றன.
..
காலம் செல்ல செல்ல இவை மிகப் பெரும் மாற்றங்களை எதிர்கொண்டிருக்கின்றன, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களைக் காட்டிலும் இன்று இன்னும் பல சமூகக் குழுவினருக்கு உரியதாய் வளர்ந்தும் உள்ளது. ரிக்வேதத்திலேயே இவை ஓரளவு விரிவாக விளக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது, இந்த நூல்கள் எழுதப்படுவதற்கும் முன்னதாகவே இவை நடைமுறையில் இருந்தன என்று தெரிகிறது.
..
அனைத்து பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் போலவே சம்ஸ்காரங்கள் எழுத்தில் விதிக்கப்பட்ட சட்டதிட்டங்களின் அதிகாரத்தைக் காட்டிலும் முன்னோர்களின் வழிவந்த, பழக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவில்தான் கடைபிடிக்கப்படுகின்றன.
..
வேதங்களுக்குப் பின்னர் எழுதப்பட்ட நூல்களில், கிருஹ்ய சூத்திரங்களும் புராணங்களும் சம்ஸ்காரங்கள் குறித்து நேரடியாகவும் விரிவாகவும் பேசுகின்றன. இல்லறத்துடன் தொடர்புடைய சடங்குகளைப் பேசுவதால், சம்ஸ்காரங்கள் குறித்த முதன்மை நூலாக கிருஹ்ய சூத்திரங்களே கருதப்படுகின்றன.
..
ஒவ்வொரு இடத்திலும் தேவைக்கு ஏற்ப இந்த சடங்குகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். இந்த சடங்குளின் பெயர்கள் மாறியிருக்கலாம் .
..
சம்ஸ்காரங்களின் எண்ணிக்கை காலத்திற்கு காலம்,இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.மிகப்பழைய காலத்தில் நாற்பத்தாறு சம்ஸ்காரங்கள் பின்பற்றப்பட்டிருக்கின்றன.சில இடங்களில் பத்து சம்ஸ்காரங்கள் பின்பற்றப்படுகின்றன.சில இடங்களில் ஐந்து சம்ஸ்காரங்கள் நடைமுறையில் உள்ளன.
..
பதினாறு சம்ஸ்காரங்கள் அல்லது சோடஷ சம்ஸ்காரங்கள்
..
1.கர்ப்பதானம்– கருவுறுதலுக்கு சமய அங்கீகாரம் அளிக்கும் சடங்கு இது.
சாந்தி முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.நல்ல நேரம் பார்த்து உரிய மந்திரங்கள் சொல்லி கணவனும் மனைவியும் சேரும் நிகழ்வு இது. மனம் அலைபாயாமல்,தீய எண்ணங்கள் இல்லாமல் ஒருமித்த மனத்துடன்,இறைவனை வழிபட்டு,காம இன்பத்தை கருதாமல் நல்ல குழந்தையை பெற்றடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சேரும் சடங்கு கர்ப்பதானம்.
காமசுகத்திற்காக கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நல்லவனாக இருக்கமாட்டான்.அப்படி காமத்தின் மூலம் பிறக்கும் குழந்தை ஆரியன் அல்ல. கடவுளின் அருளால் பிறக்கும் குழந்தையே ஆரியன்.
நல்ல குழந்தையை பெறுவதற்காக பெற்றோர்கள் பல நாட்கள் விரதம் இருக்கிறார்கள்.அதன்பிறகு ஒரு நல்ல நாளில் இருவரும் ஒன்றுகூடுகிறார்கள்.அதன்விளைவாக தெய்வமே தாயின் வயிற்றில் குழந்தையாக வந்து தங்குகிறது.
..
2.பும்சவனம் – கருவில் உள்ள குழந்தையை இவ்வுலகில் பிணைத்து, அதற்கு ஊட்டம் அளிக்கும் நோக்கத்தில், கர்ப்பம் தரித்த மூன்றாம் மாதத்தில் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தச் சடங்கில் கருத்தரித்த அன்னை, வேத மந்திரங்களைக் கேட்டபடியே ஒரு மணி பார்லியையும், இரு மணி கருப்பு எள்ளையும் சிறிது தயிரையும் உட்கொள்கிறாள். அரச மர வேரைக் குழைத்தும் அதிலிருந்து எடுக்கப்பட்ட சிறிது பாலையும் வலது நாசிக்குள் பூசுவதும் உண்டு.கருவுற்ற நாளிலிருந்து குழந்தை பிற்கும்வரை தாய் தொடர்ந்து பல விரதங்களை கடைபிடிக்க வேண்டும்.தீய சிந்தனைகள் மனதில் எழக்கூடாது. எப்போதும் நல்லதையே கேட்கவேண்டும்.நல்லதையே பார்க்கவேண்டும்.நல்லதையே நினைக்கவேண்டும்.ஆரோக்கியமான உணவுகளையே உண்ணவேண்டும்.
..
3.சீமந்தம்– கர்ப்ப காலத்தின் முக முக்கிய கட்டத்தில் தாயையும் கருவையும் பாதுகாக்கச் செய்யப்படும் சடங்கு இது. வழக்கமாக, கர்ப்ப காலத்தின் நான்காம் மாதத்தில் வளர்பிறை நாட்களில், குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் சந்திரன் பிரவேசிக்கும்போது இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது. ஓம் என்ற பிரணவ மந்திரம், அல்லது பூஹ், புவஹ், ஸ்வஹ் என்ற வியாகரங்கள் ஒலிக்க, ஒன்றாய்க் கட்டப்பட்ட மூன்று தர்ப்பை புற்களைக் கொண்டு அன்னையின் உச்சியில் வகிடெடுத்தல் இந்தச் சடங்கு.
..
4.ஜாடகர்மம்– குழந்தை பிறந்தபின் ஒன்றை நாட்களுக்குள் நிகழ்த்தப்படும் சடங்கு இது. பூஹ், புவஹ், ஸ்வஹ் என்ற வியாகரங்கள் பிறந்த குழந்தையின் நாவில், சிறிது பொன், நெய், மற்றும் தேன் கலந்த கலவையைத் தந்தை தடவுவது உண்டு.
..
5.நாமகரணம்– இது குழந்தைக்கு பெயர் சூட்டும் சடங்கு. பஞ்சாங்கத்தின் துணையோடு குழந்தைக்குப் பொருத்தமான பெயர் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதன்பின், அந்தப் பெயரை, தாயின் வலது செவியில், தந்தை மும்முறை கூறுகிறார். தாய், குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டு, அந்தப் பெயரை மும்முறை கூறுகிறார். குழந்தை பிறந்த நாள், அல்லது அது பிறந்த பத்தாம் அல்லது பன்னிரண்டாம் நாள் இந்தச் சடங்கு நடைபெறுவது வழக்கம்.
..
6.நிஷ்க்ரமணம்– குழந்தை முதல் முறை வீட்டைவிட்டு வெளியே எடுத்துச் செல்லப்படும்போது செய்யப்படும் சடங்கு. இதை நான்காம் மாதம் செய்வது வழக்கம்.
பிறந்த குழந்தையை கண்டவர்கள் கையில் எடுத்து கொஞ்சுவது தவறு.இப்படி செய்வதால் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.தீயவர்களின் தீயநினைவுகள் குழந்தையின் ஆழ்மனதில் பாதிப்பை உண்டாக்குகிறது.
எனவே குழந்தையை தீயவர்களிடமிருந்து பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு.
..
7.அன்னப்பிரசனம்– குழந்தைக்கு ஆறு மாதம் ஆனபின் செய்யப்படும் சடங்கு இது. சமைக்கப்பட்ட உணவு, முதல் முறையாகக் குழந்தைக்கு ஊட்டப்படுகிறது. வேக வாய்த்த அரிசியை நெய்யிலும் தேனிலும் பிசைந்து தந்தை குழந்தைக்கு ஊட்டுக்கிறார், அதன்பின் தாயும் அதை உட்கொள்வார். தற்காலத்தில், குழந்தை ஒரு கோவிலுக்கோ திருத்தலத்துக்கோ அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள அர்ச்சகர்களின் முன்னிலையில் இந்தச் சடங்கு நிறைவேற்றப்படுகிறது.
..
8.சூடாகரணம்– குழந்தையின் தலைமுடியை முதல்முறையாக மழிக்கும் சடங்கு இது. இதை, சௌலம் அல்லது முண்டனம் என்றும் சொல்வதுண்டு. குழந்தைக்கு ஒன்று, அல்லது மூன்று அல்லது ஐந்து வயது ஆனபின் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. புனர்வசு நட்சத்திரத்தில் இந்தச் சடங்கு நடைபெறுவது வழக்கம். அதைவிட முக்கியமாக, இந்தச் சடங்கு நவமி, அல்லது அமாவாசையை அடுத்த ஒன்பதாம் நாளில் நடைபெறுகிறது.
..
9.கர்ணவேதனம்– காது குத்தும் சடங்கு. ஆண் குழந்தைகளின் வலது காதிலும், பெண் குழந்தைகளுக்கு இடது காதிலும் முதலில் துளை இடப்படுகிறது. தந்தை தன் மடிவில் குழந்தையை வைத்துக் கொண்டு காது குத்துவது வழக்கம். ஆனால், தற்போது, ஆசாரி ஒருவரைக் கொண்டு இது செய்யப்படுகிறது.
..
10.வித்யாரம்பம்– குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயதானதும், அதன் கல்வியைத் துவக்கும் சடங்கு இது. குழந்தைக்கு அகரமுதலியின் முதல் சில எழுத்துக்கள் கற்றுத் தரப்படுகின்றன. உலோகத்தாலான ஒரு பாத்திரத்தில் அரிசி குவிக்கப்பட்டு, அதில் இந்த எழுத்துக்களையும் சில மந்திரங்களையும் உரக்கச் சொல்லிக்கொண்டே, குழந்தை எழுதுகிறது.
..
11.உபநயனம்– யக்ஞோபவீதம் என்று அழைக்கப்படும் பூணூல் அணிவிக்கப்படும் சடங்கு இது. ஐந்து வயது அடைவதற்குமுன் ஆண் குழந்தைக்கு உபநயனம் செய்யப்படுகிறது. முடியிடப்பட்ட முப்புரி நூலொன்று இடம் வலமாக தோளில் அணிவிக்கப்படுகிறது. பிரம்மோபதேசம் என்று சொல்லப்படும் காயத்ரி மந்திரோபதேசமும் அளிக்கப்படுகிறது. உபநயனம் என்ற சொல்லின் பொருள்- உப என்பதன் பொருள் அருகில், நயனம்- கொணர்தல், என்ற பொருள் உள்ளவை. எனவே உபநயனம் என்றால் குழந்தையை குரு அல்லது ஆசிரியரிடம் அழைத்துச் சென்று முறையான கல்வி புகட்டுதல் என்று பொருள்படும்.
பிரம்மோபதேசம் முடிந்தபின் உபநயனம் அளிக்கப்படுகிறது. இது அவனுக்கு இன்னொரு கண் கொடுத்து, புதிய பிறவி அளிப்பதாக நம்பப்படுகிறது.இது இரண்டாவது பிறவி.இருபிறப்பாளன்
..
12.ப்ரைஸார்த்தம்– வேதக்கல்வியின் துவக்கம்.இந்த சடங்கு குருகுலத்தில் நடைபெறுகிறது. இந்தச் சடங்குக்குப்பின் குழந்தைக்கு வேதங்களும் உபநிடதங்களும் கற்பிக்கப்படுகின்றன. குருகுலவாசமும் இனி துவங்குகிறது.
..
13.ருதுசுத்தி– பெண்ணின் முதல் மாதவிடாயின்போது நடத்தப்படும் சடங்கு. இது தொடர்பாக எண்ணற்ற சடங்குகளும் பழக்க வழக்கங்களும் உண்டு.இந்த காலத்திற்கு பிறகு உரிய பாதுகாப்பின்றி பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
..
14.சமாவர்த்தனம்– பிரம்மச்சரிய ஆசிரமம் என்று சொல்லப்படும் மாணவ பருவம் நிறைவடைவதைக் குறிக்கும் சடங்கு இது.பிரிவு உபச்சாரவிழா.இந்த விழாவில் பெற்றோர்கள் கலந்துகொண்டு குருவுக்கு பரிசுகளைக் வழங்குவார்கள்.
..
15.விவாகம்– திருமணச் சடங்கு. ஆணும் பெண்ணும் மனதளவிலும் உடலளவிலும் கூடுவதற்கு சமய அந்தஸ்து கொடுக்கும் புனிதச் சடங்கு இது. வாழ்வில் வளர்ச்சி காண இது ஒரு தளம் அமைத்துக் கொடுக்கிறது.
திருமணம், புலன் இன்பங்களைத் துய்ப்பதற்கு மட்டமான ஏற்பாடு அல்ல. காம விழைவுக்கு நிறைவு காணும்போதே, இல்லற வாழ்வின் பொறுப்புகளையும் கடமைகளையும் சமபங்கு பகிர்ந்து கொள்ளவும் அறிவுருத்தப்படுகிறது.
..
16.அந்த்யேஷ்டி– நீத்தார்களுக்காகச் செய்யப்படும் சடங்கு. மரணத்தின்போது செய்யப்படும் சடங்குகள் மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் பிற முன்னோர்களுக்கும் அளிக்கப்பட வேண்டிய ஸ்ராத்த்ங்கள் என்னென்ன என்று வெவ்வேறு சாஸ்திரங்களில் இந்த சம்ஸ்காரம் குறித்து விளக்கமாக விவரிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment