சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-40
🌸
அற்புதமான
அமைதி நிலை!
..........................
இங்கிருந்து தான் சுவாமிஜி அந்த அற்புதமான, படிக்கின்ற யாரையும் சிறிது நேரமாவது
அவரது உணர்வுகளில்திளைக்கச்செய்கின்ற கடிதத்தை மெக்லவுடிற்கு எழுதினார்.இதோ சில பகுதிகள். வேலை செய்வது எப்போதுமே
கஷ்டமானது தான். ஜோ, எனது வேலைகள் என்றென்றைக்குமாக நின்று போகட்டும் என்றும், என்
முழு ஜீவனும் தேவியிடம் லயித்திருக்கட்டும் என்றும் பிரார்த்தனை செய், தேவியின் வேலைகள்,
தேவியே அறிவாள்.
நான் நலமாக இருக்கிறேன். மனத்தளவில் மிகவும் நலமாக
இருக்கிறேன். உடலின் ஓய்வைவிட மனத்தின் ஓய்வை அதிகமாகவே உணர்கிறேன். போர்கள் நடந்தன.
சில தோல்வி அடைந்தன. சில வெற்றி பெற்றன. நான்
என் பொருட்களை மூட்டைக் கட்டிக்கொண்டு. மாபெரும் விடு விப்பவனுக்காகக் காத்திருக்கிறேன்.
”சிவபெருமானே , ஓ சிவபெருமானே, என் படகை மறுகரைக்குக் கூட்டிச்செல்.
கடைசியாகப் பார்க்கும்போது ஜோ, நான் வெறும் சிறுவன்,
தட்சிணேசுவர ஆலமரத்தின் அடியில் ஸ்ரீராமகிருஷ்ணரின்
அற்புத மொழிகளை ஆச்சரியமான பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அந்தச் சிறுவனே! அதுவே
எனது உண்மை இயல்பு. வேலைகளும், திட்டங்களும், நன்மை செய்வதும் இவைபோன்ற எல்லாம் என்மீது
ஏற்றப் பட்டவை. இப்போது மீண்டும் அவரது குரல் எனக்குக்கேட்கிறது. என் ஜீவனைப் பரவசப்படுத்துகின்ற
பழைய அதே குரல்! பந்தங்கள் அறுகின்றன. அன்பு
சாகிறது. வேலைகள் சுவையற்றதாகின்றன. வாழ்விலிருந்தமாய வசீகரம் போய்விட்டது. குருதேவரின்
குரல் அழைப்பது மட்டுமே உள்ளது- நான் வருகிறேன். அப்பா, நான் வருகிறேன்! செத்தவர்கள்
செத்தவர்களைப்புதைத்துக்கொள்ளட்டும். நீ என்னைப் பின் தொடர்ந்து வா- நான் வருகிறேன்-
என் அன்பான ஐயா, நான் வருகிறேன்.
ஆம், நான்
வருகிறேன். நிர்வாணம் என் முன்னால் உள்ளது- அதே எல்லையிலா அமைதிக் கடல், ஒரு சிற்றலையும் இல்லாமல், மூச்சுக் காற்றுகூட இல்லாமல்
உள்ளது. அவ்வப்போது அதை நான் உணர்கிறேன். நான் பிறந்ததற்காக மகிழ்கிறேன். இவ்வளவு கஷ்டப்
பட்டதற்காக மகிழ்கிறேன். பெரிய தவறுகளைச் செய்ததற்காக மகிழ்கிறேன். அமைதியில் புகுவதற்காக
மகிழ்கிறேன். யாரையும் நான் பந்தப்பட்டவராக விட்டுப்போகவில்லை. பந்தம் எதையும் நான்
ஏற்றுச்செல்லவும் இல்லை. இந்த உடல் வீழ்ந்து என்னை விடுவிக்குமோ அல்லது இந்த உடலிலேயே நான் முக்தியினுள் பிரவேசிப்பேனோ, எப்படியானாலும்
சரி, பழையவன் போய்விட்டான், என்றென்றைக்குமாகப் போய்விட்டான். ஒருபோதும் வராதவாறு போய்
விட்டான். வழிகாட்டி, குரு, தலைவன், ஆசாரியன் காலமாகிவிட்டான், சிறுவன், மாணவன், ஏவலன்,
எஞ்சியுள்ளான்.
நோக்கம்
எதுவுமின்றி நான் மிதந்து சென்ற நேரங்களே என் வாழ்க்கையின் மிக இனிமையான காலங்கள்.
மீண்டும் நான் மிதந்து கொண்டிருக்கிறேன். மேலே ஒளி வீசுகின்ற வெப்பக் கதிரவன், சுற்றிலும்
கூட்டம் கூட்டமாகப் பயிர் பச்சைகள். இந்த வெப்பத்தில் எல்லாம் அசைவற்றிருக்கின்றன.
அமைதியில் திளைத்திருக்கின்றன. நான் மந்த கதியில் மிதந்து கொண்டிருக்கிறேன். நதியின்
கதகதப்பான மார்பின் மீது மிதந்து கொண்டிருக்கிறேன். என் கைகளாலோ கால்களாலோ நீரைத் துழாவ நான் துணியவில்லை. அந்த அற்புதமான அமைதி நிலையை,
அது ஒரு மாயத்தோற்றம் என்று நம்மை நிச்சயமாக
உணர வைக்கின்ற அந்த அமைதி நிலையைக் கெடுத்து விடுவேனே என்ற அச்சம் தான் அதற்கு காரணம்.
என் பணிக்குப் பின்னால் ஆசை இருந்தது. என் அன்பிற்குப்
பின்னால் ஆளுமை இருந்தது. என் தூய்மைக்குப் பின்னால் பயம் இருந்தது.நான் வழி காட்டியதன்
பின்னால் அதிகார வேட்கை இருந்தது. இப்போது அவை மறைகின்றன. நான் மிதந்து கொண்டிருக்கிறேன்.
நான் வருகிறேன். அம்மா, நான் வருகிறேன். உன் கதகதப்பான மார்பில், நீ என்னை எங்கு எடுத்துச்சென்றாலும்,
அங்கு மிதந்த வண்ணம் ஒலியிலா அந்த அற்புதப்
பிரதேசத்தில், ஒரு சாட்சியாக, ஒரு போதும் நடிகனாக அல்லாமல், நான் வருகிறேன்.
ஓ, எல்லாம் அமைதியில் ஆழ்ந்துள்ளது. என் எண்ணங்கள் இதயத்தின் ஆழங்களில் எங்கோ தொலை தூரத்திலிருந்து வருவனபோலுள்ளன, ஏதோ மெல்லிய, தூரத்த முணு முணுப்புகள்
போல் ஒலிக்கின்றன. அனைத்திலும் அமைதி தவழ்கிறது. இனிமையான, மிக இனிமையான அமைதி அது-
உறக்கத்தில் ஆழ்வதற்குச் சற்று முன்னதாக ஒரு சில கணங்கள் உணர்கிறோமே அப்படிப்பட்ட அமைதி.
அங்கே எல்லாம் நிழல்கள் போல் காணப்படுகின்றன. உணரப் படுகின்றன. அங்கே அச்சமில்லை. அன்பு
இல்லை, உணர்ச்சியின் எழுச்சி இல்லை. சிலைகளும்
சித்திரங்களும் சூழ இருக்கும்போது, அந்த த் தனிமையில் ஒருவன் உணர்கின்ற அந்த அமைதி
அது. நான் வருகிறேன். பிரபோ நான் வருகிறேன்!
உலகம் உள்ளது, அது அழகாகவும் இல்லை, அழகற்றும் இல்லை.
உணர்ச்சிகள் எதையும் எழுப்பாத அதிர்வுகளாக உள்ளது. ஓ, ஜோ, அதன் இன்பத்தை என்னென்பேன்!
எல்லாம் நல்லவை, எல்லாம் அழகானவை,ஏனெனில் என்னைப் பொறுத்தவரை பொருட்கள் தங்கள் சார்புப்
பரிமாணங்களை இழந்து வருகின்றன. அதில் முதன்
முதலாக என் உடம்பின் பரிமாணமே விலகத் தொடங்கிவிட்டது. ஓம் தத் ஸத்!
.....
இதயத்தை எதிர்த்து இழுக்க
.........................
அலமேடாவிலிருந்து சிகாகோ செல்வது சுவாமிஜியின் திட்டமாக
இருந்தது. இருப்பினும் அஸ்பினால் தம்பதிகளின் அழைப்பை ஏற்று அருகிலுள்ளகேம்ப் இர்விங்
என்ற இடத்திற்குச் செல்ல எண்ணினார் அவர். ஹேன்ஸ்ப்ரோ, வழியில் சாஸலித்தோ என்ற இடம் வரை சென்று, அங்கே
சுவாமிஜியை வழியனுப்பிவிட்டு, லாஸ் ஏஞ்ஜல்ஸ் சென்று மகளைக் காண விரும்பினார். ஆனால்
அவர் தம்முடன் வர வேண்டும் என்று சுவாமிஜி விரும்பியதால் அவரும் உடன் சென்றார்.அலமேடாவிலிருந்து
முதலில் ஒரு ரயிலில் சென்று, பிறகு படகில் சான் பிரான்சிஸ்கோ ஏரியைக் கடந்து, மீண்டும் படகில் சாஸலித்தோ வரை சென்று அங்கிருந்து மீண்டும் ரயிலில் கேம்பை அடைய வேண்டும்.
ஹேன்ஸ்ப்ரோ
மற்றும் ஓரிருவருடன் உண்மை இல்லறத்திலிருந்து
கிளம்பினார் சுவாமிஜி. கால தாமதம் காரணமாக முதல் ரயிலை தவற விட்டனர். சற்று
தூரம் சென்றால் மற்றொரு ரயில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டதும் அனைவருமாக அங்கே சென்றனர்.
அவர்கள் செல்லும் போது அந்த ரயில் புறப்படத் தொடங்கியிருந்தது. சற்று நிறுத்துமாறு
நடத்துனரை நோக்கிக் கத்தினார் ஹேன்ஸ்ப்ரோ, நீங்கள் ஓடி வந்தால் ரயிலைப் பிடித்துவிடலாம்.
என்று திரும்பிக் கத்தினார் நடத்துனர். அவர்களுக்கும் ரயிலுக்கும் சில அடி தூமே இருந்தது. ஓடினால் பிடித்து
விடலாம், ஹேன்ஸ்ப்ரோ சுவாமிஜியைப் பார்த்தார். நடந்து கொண்டிருந்த சுவாமிஜி அசையாமல் நின்று கொண்டு, நான் ஓட மாட்டேன்” என்று கூறிவிட்டார். அடுத்தரயில் மாலையில் தான். எனவே அனைவரும்
உண்மை இல்லத்திற்குத் திரும்பினர்.
தாம் கேம்ப் இர்விங்கிற்குச் செல்ல விரும்பாததுபற்றி
சுவாமிஜியிடம் விவாதித்தது தான் தாமதத்திற்கான காரணம் என்பது ஹேன்ஸ்ப்ரோவிற்குத் தெரியும்.
அதே வேளையில் சுவாமிஜி ஓடியிருந்தால் ரயிலைப் பிடித்திருக்கலாம் என்பதும் உண்மை. இரண்டையும்
தொட விரும்பாத ஹேன்ஸ்ப்ரோ, நாம் சென்ற காரின் எஞ்ஜின்சரியில்லை. தாமதமானதால் தான் ரயிலைத்
தவறவிட நேர்ந்தது” என்றார். உடனே சுவாமிஜி ஹேன்ஸ்ப்ரோவை
நோக்கித் திரும்பி, இது அது எதுவும் காரணமல்ல, உன் இதயம் லாஸ் ஏஞ்ஜல்ஸில் இருந்ததால்
தான் நாம் போக முடியவில்லை. இதயத்தை எதிர்த்து இழுக்க இந்த உலகில் எந்த இஞ்ஜினும் இல்லை. ஒரு வேலை செய்யும்போது அதில் முழு இதயத்தையும்
ஈடுபடுத்தி வேலை செய். உன்னை எதுவும் தடுக்க முடியாது” என்றார். என் வாழ்நாளில் மறக்க முடியாத உபதேசம் அது. இன்றும்
அது என் மனத்தில் பசுமையாக உள்ளது” என்று பின்னாளில் கூறினார் ஹேன்ஸ்ப்ரோ.
இந்தக் குழப்பம் முடிவதற்குள் ஹேன்ஸ்ப்ரோவின் பெட்டி
தவறியிருப்பது தெரிய வந்தது. ஏற்கனவே சென்ற
ஆஸ்பினால் தம்பதிகள் அதைக் கொண்டு சென்று விட்டிருந்தனர்.
ரயிலைத்தவறவிட்ட அந்த இடைவெளியில்ஹேன்ஸ்ப்ரோவின் மனத்தில், இதுவும் நல்லது தான். நான் இனி லாஸ் எஞ்ஜல்ஸிற்குப் போகலாம்”என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் இப்போது பெட்டி ஏற்கனவேகேம்ப் இர்விங்கை
அடைந்துவிட்டது தெரிந்த போது சுவாமிஜி, ஆச்சரியம்! நீயோ கேம்பிற்குப் போகாமல் இருக்க உன்னால் இயன்ற அளவு முயற்சி செய்கிறாள். ஆனால் தேவியோ
உன்னை அங்கே இழுக்கிறாள்” என்றார். எப்படியோ, உண்மை இல்லத்திற்குத்திரும்பிய
அவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகே கேம்பிற்குச் சென்றனர்.
இரண்டு பெரிய தொலை நோக்கிகளையும் அவர்கள் கொண்டு சென்றனர். ரூர்பாக் அவற்றைச் சுமந்து
சென்றார். அதற்கு அவர் மிகவும் சிரமப்படுவதைக் கண்ட சுவாமிஜி ” வெறும் உருளைக் கிழங்கும்
கீரையும் சாப்பிட்டால் இப்படித்தான் திணற வேண்டியிருக்கும்” என்றார்.
சாஸலித்தோவிலிருந்து அழகிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த
பகுதி வழியாக ரயில் சென்றது. காட்சிகளை ரசிப்பதற்காகவே ஜன்னல் ஓரமான இருக்கையைத்தேர்ந்தெடுத்தார் சுவாமிஜி.
ஓய்வாக உட்கார்ந்தபடி, நான் நானாக இருப்பதை உணர ஆரம்பிக்கிறேன்” என்றார்.
கேம்ப் இர்விங்
ஓர் அழகிய இடம். குற்றுச்செடிகள். புதர் மண்டிய பகுதிகள், அழகியநீரோடைகள் என்று அந்தப்
பகுதி வன வாழ்க்கையை நினைவூட்டியது.அங்கே அவர்கள் கூடாரங்களில் தங்கினார். முதல் நாள்
இரவே அங்கு ஒரு மரத்தடியில் சுவாமிஜி தீ வளர்த்தார். எல்லோரும் அதைச் சுற்றி அமர்ந்தனர்.
மிக அமைதியான இரவு அது. சுவாமிஜி பாடினார். சுகரையும் வியாசரையும் பற்றிய கதைகள் சொன்னார்.
பிறகு, ஆழ்ந்த ஓர் அமைதி நிலையிலிருந்து பேசினார்.
இந்தியக் காடுகளில் வாழ்கின்ற யோகிகளாக உங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் பட்டணங்களையும் மற்ற அனைத்தையும் மறந்து விடுங்கள். கடவுளை மட்டுமே நினையுங்கள்.
அவரை மட்டுமே காணுங்கள். இதோ பாய்கிறதே நீரோடை. இது தான் கங்கை. இதோ வளர்கின்ற தீ,
இதுதான் புனித அக்கினி.
அதன் பிறகு எப்படி ஜபம் செய்வது, எப்படி தியானம்
செய்வது என்பதைக் கற்பித்தார் சுவாமிஜி. பிறகு மெல்லிய குரலில், ஹர, ஹர, வ்யோம், வ்யோம்,
ஹர, ஹர வ்யோம், வ்யோம் என்று ஓதினார். அந்த
நாதம் எங்கள் மனங்களையெல்லாம் விழித்தெழச் செய்தது. எங்கள் நினைவிலிருந்து உலகம் மறைந்தது. ஆன்மாவோ, இது வரை அறிந்திராத வெளிகளில் சிறகடித்துப் பறந்தது” என்று எழுதுகிறார் அங்கே சுவாமிஜியுடன் இருந்த ஒருவர்.
அதன் பிறகு அனைவரையும் தியானம் செய்யும் படி கூறிய
சுவாமிஜி, நீங்கள் விரும்புகின்ற எதைவேண்டுமானாலும் தியானிக்கலாம். நான் ஒரு சிங்கத்தின்
இதயத்தைத் தியானிக்கப்போகிறேன். அது சக்தியைத் தரும்” என்றார்.
சிலவேளைகளில் ” உறுதி” பயமின்மை” போன்ற கருத்துக்களை கூறி, அவற்றைத்
தியானம் செய்யுமாறு கூறுவார்.
அது ஒரு
மறக்க முடியாத இரவு. காட்டில் நிலவிய ஆழ்ந்த அமைதி. கொழுந்து விட்டெரியும் அக்கினியின் அழகு. அனைத்தையும் விட அந்தச் சூழ்நிலைக்கே உயிருணர்வு ஊட்டியபடி கம்பீரமாக
அமர்ந்திருந்த சுவாமிஜி! அவரது பொலிவே விளக்க இயலாததாக இருந்தது” என்று எழுதுகிறார் மற்றொருவர்.
......
துப்பாக்கியால் சுடுதல்
...............................................
ஒரு நாள் சுவாமிஜி வெளியில் நடக்கச் சென்றிருந்தார்.
அழகிய நீரோடையின் கரை வழியாகச் சென்று கொண்டிருந்தார். வழியில் பாலம் ஒன்று குறுக்கிட்டது.
அங்கே சில இளைஞர்கள் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பழகிக் கொண்டிருந்தனர்.
நீரோடையில் மிதக்க விடப்பட்ட முட்டை ஓடுகள் அவர்களது குறியாக இருந்தன. அவற்றை ஒரு நூலில்
கோர்த்து கல் ஒள்றில் கட்டி வைத்திருந்தனர். நீரின் விரைவிற்கு ஏற்ப மேலும் கீழுமாக
அசைந்த முட்டை ஓடுகளைச் சுடவேண்டும். அதுவே நோக்கம். ஆனால் யாரும் அதில் வெற்றி பெறவில்லை.
சுவாமிஜி சிறிது நேரம் அவர்களது முயற்சியைப் பார்த்தார், அவர்களது தோல்வியைக் கண்டு
சிரித்தார். இதைக் கண்ட அந்த இளைஞர்களில் ஒருவன் அவரை அணுகி, நீங்கள் நினைப்பது போல் இது அவ்வளவு சாமானிய காரியம் அல்ல. முயன்று பாருங்கள்.
உங்களுக்கே புரியும் ” என்றான். சவாமிஜி துப்பாக்கியைக்கையில் எடுத்தார். வரிசையாக
சுமார் ஒரு டஜன் ஒடுகளைச் சுட்டுத் தள்ளினார். இளைஞர்களால் வியப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள
இயலவில்லை. நீங்கள் துப்பாக்கிசுடுவதில் நல்ல பயிற்சி உள்ளவராக இருக்க வேண்டும் சரிதானே!
என்று கேட்டார்கள் அந்த இளைஞர்கள்! அதற்கு சுவாமிஜி மௌனமாகப் புன்முறுவல் செய்தபடி,
நண்பர்களே, என் வாழ்நாளில் இன்றுதான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன்! என்றார்.
அந்த இளைஞர்களால் நம்பவே முடியவில்லை. சுவாமிஜி விளக்கினார், எல்லாம் மன ஒருமைப் பாட்டில்
தான் இருக்கிறது. மன ஒருமைப்பாட்டுடன் செய்கின்ற எதுவும் வெற்றியைத் தருகிறது.
.....
கேம்ப் இர்விங்-
வாழ்க்கை முறை
...................
கேம்ப் இர்விங் வாழ்க்கை ஏறக்குறைய கேம்ப் பெர்சி, ஆயிரம் தீவுப் பூங்கா போன்ற இடங்களின் வாழ்க்கைமுறையைப்
போன்றதாகவே இருந்தது. சூரிய உதயமாகின்ற ஐந்து மணிக்கு சுவாமிஜி எழுந்து விடுவார். மெல்லிய
குரலில், ஏகம் ஸ்த் விப்ரா பஹுதா வதந்தி”. போன்ற மந்திரங்களை ஒதுவார். கூடாரத்தின் அருகில்
நிற்பவர்களுக்கு அந்த வேத நாதம் இனிமையாகக்கேட்கும். அருகில் ஓடிய நீரோடையில் மற்றவர்கள்
குளிப்பார்கள். குளிர் அதிகம் என்பதற்காக சுவாமிஜி அதில் குளிப்பதில்லை. காலை எட்டு
மணியளவில் காலை உணவை முடிப்பார். பத்து மணிக்கு கூட்டு தியானம் நடைபெறும். திறந்த வெளியிலும்
மரத்தடியிலும் அவர்கள் தியானம் செய்வார்கள்.
சிலவேளைகளில் சுவாமிஜி சமைப்பார். மசாலாவை அவரே அரைப்பார்.
அவர் அரைப்பது மிகவும் மென்மையாக இருக்கும். சமையலில் வழக்கம்போலவே காரம் தூக்கலாக
இருக்கும். அந்தக்காரமே மற்றவர்களுக்குச் சாப்பிட சிரமமாக இருக்கும். சுவாமிஜியோ பக்கத்தில்
தனியாகக்கொஞ்சம் மிளகுகளை வைத்துக் கொள்வார். ஒரு மிளகைக் கையில் எடுத்து,கையில் சுழற்றி
மேலே எறிந்து, ஓர் உல்லாச இளைஞனைப்போல் வாயால் கௌவிச் சாப்பிடுவார். ஒருநாள் ஆன்சலிடம்
மிளகு ஒன்றைக்கொடுத்து , இதைச் சாப்பிடு, இது உனக்கு நல்லது செய்யும்” என்றார். சுவாமிஜி தருவதானால்விஷத்தைச் சாப்பிடவும் நாங்கள்
தயாராகவும் இருந்தோம். எனவே அவர் தந்ததை அப்படியே சாப்பிட்டேன். அவ்வளவு தான் காரத்தைத்
தாங்காமல் நான் பட்ட அவஸ்தையைப் பார்த்து உரக்கச் சிரித்தார் அவர். அது மட்டுமல்ல,
பிறகும் என்னைக் காணும்போதெல்லாம் என்ன, இன்னும்
அடுப்பு எரிகிறதா? என்று கேட்டுச் சிரிப்பார்.
ஒரு நாள் ஆன்சல், மிஸ் பெல்லிற்காகக் கற்கண்டு பானகம்
தயாரித்துக்கொண்டிருந்தார். கற்கண்டுத் துண்டுகளை உருகவைத்து அதனை நன்றாகக் கிளறி விட்டுக்
கொண்டிருந்தார் ஆன்சல். சுவாமிஜி அருகில் நின்று கவனித்தபடியே, நன்றாகக்கொதிக்கவிடு.
சர்க்கரையைக் கொதிக்க வைக்கின்ற அளவிற்கு வெண்ணிறமாகும். அந்த அளவிற்கு அதன் அழுக்குவிலகும்” என்றார்.
சுவாமிஜி கடுகு சேர்த்து ஒரு பானகம் தயாரிப்பார்.
மாலை வேளைகளில் சப்பாத்தி செய்வார். இதற்காக நீரோடையின் கரையிலேயே அவர் ஒரு நிலக்கரி
அடுப்பை உருவாக்குவார். அந்தத் தண்ணீரிலேயே மாவைப்பிசைந்து, தட்டி, அடுப்பில் சுட்டுக்கொடுப்பார்.
தண்ணீர் வேண்டியிருந்தால் ஒரு கரண்டியில் நேராகவே நீரோடையிலிருந்து எடுத்துக்கொள்வார்.
சுவாமிஜி நிலக்கரி அடுப்பைத்தயார் செய்வதிலும் ஒரு
நேர்த்தி இருந்தது. ஒரு நாள் ரூர்பாக் அடுப்பைத் தயார் செய்தார். நிறைய கரி வைத்ததில்
அது மிகவும் பெரியதாகி விட்டது. சுவாமிஜி வந்து பார்த்துவிட்டு, அடேயப்பா! இது சப்பாத்திக்காகச்செய்யப்பட்ட
அடுப்புபோல் தோன்றவில்லை. இதில் இருக்கிற விறகையும் கரியையும் வைத்து ஒரு சிதையையே
தயாரித்து விடலாம்” என்றுகூறி அதனைக் கலைத்து விட்டு
, தாமே சிறியதாக ஒன்றைத் தயார் செய்தார்.
பொதுவாக பெண்களே சமையல் செய்தனர். சில வேளைகளில்
சுவாமிஜி அவர்களின் சமையலைக் கற்றுக்கொள்வார்” அவர் எங்களைப் பொறுத்த வரையில் எங்களுக்கு ஒரு குழந்தையாகவே இருந்தார்.
அவருக்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருந்தோம்.
அவரது ஆரோக்கியத்தை நாங்கள் அனைவருமே கவனித்துக் கொண்டோம்” என்கிறார் மிசஸ் ரூர்பாக்.
ஒரு முறை சுவாமிஜிக்கு உடல் நிலை சரியில்லை. சுவாமிஜி
ஒரு குழந்தைபோல். ”நான் ஓர் ஈயை விழுங்கி யிருப்பேன் என்று தோன்றுகிறது. அதனால் தான்
உடல் நிலை சரியில்லை” என்றார். அனைவரும் வயிறு வலிக்கச்
சிரித்தனர்.
மாலை வேளைகளில் பலரும் நடக்கச்செல்வதுண்டு.பொதுவாக
சுவாமிஜி அமைதியாக கூடாரத்திலேயே இருப்பார். மிசஸ் ரூர்பாக் எழுதுகிறார், நாங்கள் செல்லும்
வழியில் விறகு வெட்டிகள் பலர் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அவ்வளவு நல்லவர்கள்
அல்ல. அந்த வழியாக நான் நடந்து செல்வேன். கடைக்குச்செல்லும் வழியிலோ பாம்புகள் ஏராளம்.ஆனால் எதுவும் எனக்கு
பயத்தைத் தந்ததில்லை. தெய்வ மனிதர் ஒருவரின் சன்னதியில் நான் இருக்கிறேன் என்ற எண்ணம்
எப்போதும் என்னுள் இருந்தது. அது எனக்கு ஆற்றலைத் தந்தது.
.....
சுவாமிஜி பயந்தார்!
.......................................
இந்தக் கூடாரங்களில் என்ன நடைபெறுகிறது. இங்கு யார் தங்குகிறார்கள் என்றெல்லாம்
அந்த இடத்திற்கு அருகில் உள்ளவர்களுக்கு ஆர்வம்
எழுவது இயல்பு தான். சில வேளைகளில் அவர்களில்
சிலர் எள்ளே வந்து எட்டிப் பார்ப்பதுண்டு.
ஒருநாள் ஒரு பெண் இப்படித்தான் உள்ளே வந்தார். சுவாமிஜி அவனை ஒரு பார்வை பார்த்தார்.அவளில்
என்ன கண்டாரோ! ஒரு பேயைப் பார்த்து நடுங்குவது போல் அதிர்ச்சியுடன் கூடாரத்திற்குள்
சென்று அமர்ந்துவிட்டார். ஒரு நாள் தியானத்திற்காக தரத்தடிகளை நோக்கி அனைவரும் சென்று கொண்டிருந்தனர்.
வழியில் சீப்பு ஒன்று கிடந்தது. சுவாமிஜி அதைக் கையில் எடுத்து, இது உங்களில் யாருடையதாவதா?
என்று கேட்டார். அவர்கள், இல்லை, என்றதும் ஏதோ தீயைத் தொட்டவர்போல் அதனைத் தூக்கி எறிந்து
விட்டார்.
ஒரு நாள் தியானத்திற்குப் பிறகு மிஸ் பெல் சுவாமிஜியிடம்
கூறினார்.
பெல்- சுவாமிஜி, இந்த உலகம் ஒரு பழைய பள்ளி என்று
எனக்குத்தோன்றுகிறது. இங்கு நாம் அனைவரும் பாடங்கள் படிக்க வந்திருக்கிறோம்.
சுவாமிஜி-
அப்படி யார் சொன்னது? எனக்கு அப்படித்தோன்றவில்லை.
என்னைப் பொறுத்தவரை இந்த உலகம் ஒரு சர்க்கஸ் கூடாரம். நாம் அனைவரும் கோமாளிகள், கூத்தாடுகிறோம்.
விழுகிறோம்.
பெல்-
ஏன் விழுகிறோம்?
சுவாமிஜி-
ஏனெனில் விழுவதை நாம் விரும்புகிறோம். விழுவதில்
களைப்பு ஏற்படும் போது விடைபெறுகிறோம்.
சுவாமிஜியின் சான் பிரான்சிஸ்கோ சொற்பொழிவுகளில்
இத்தகைய ஒரு மன நிலையைக் காண முடியும். இந்த பிரபஞ்சமே ஒரு மாபெரும் விளையாட்டு” விளையாட்டு.
எல்லாம் வல்ல இறைவன் விளையாடுகிறார். எல்லாம் விளையாட்டே.
நீங்கள் விளையாடுகிறீர்கள். உலகங்களுடன் விளையாடுகிறீர்கள்................ எல்லாம்
வேடிக்கை. வேறு எந்த நோக்கமும் இல்லை. தூக்கில் தொங்குவதற்காக நிற்பவன் நானே. எல்லா
தீயவர்களும் நானே. நரகங்களில் வாட்டப்படுவனும் நானே. அதுவும் ஒரு விளையாட்டுத்தான்.
என்றெல்லாம் அவர் லட்சியம்” என்ற தமது சொற்பொழிவில் அவர்
கூறுகிறார்.
No comments:
Post a Comment