சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-27
🌸
ஆலம்பஜார்
மடம்
-
சுவாமிஜி
இந்தியாவை விட்டுப் புறப்படும்போது வராக நகரில் இயங்கி வந்த ராமகிருஷ்ண மடம் தற்போது ஆலம்பஜாரில் செயல்பட்டது. வராக நகரத்தில்
வாழ்ந்த இளம் துறவியரின் வாழ்க்கையால் கவரப்பட்டு பல இளைஞர்கள் அங்கே சேர்ந்தனர். ஆரம்பத்தில்
11-ஆக இருந்த துறவியரின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது . வராகநகர் மடத்தில் அத்தகைபேர் தங்குவதற்கான இடவசதி இல்லாமல் போனதால் 1892 பிப்ரவரியில்
அவர்கள் ஆலம்பஜார் என்ற இடத்தில் மடத்தை மாற்றினர்.
ஆலம்பஜர்
மடமும் எந்த விதத்திலும் வராக நகர் மடத்திற்கு சளைத்ததாக இருக்கவில்லை. தட்சிணேசுவரத்திலிருந்து
சுமார் அரை மைல் தூரத்தில் அமைந்திருந்த இதுவும் ”பேய் வீடு” என்று பெயர் பெற்றது தான். இந்தக் கட்டிடத்தில் பேய்கள் வாழ்வது பற்றி கதைகள்
பல உலவின. எனினும் இந்த த்துறவியரால் கொடுக்க
முடிந்த வாடகைக்கு, பெரிய கட்டிடமாக இதுவே கிடைத்தது. எனவே பேய்கள் வாழ்ந்தாலும், ஒரு
பக்கம் தாங்களும் வாழ்ந்து கொள்ளலாம் என்ற முடிவுடன் அந்த இளம் துறவியர் மடத்தை இங்கே
மாற்றினர்.
1892 பிப்ரவரி முதல் 1898 பிப்ரவரி வரை மடம் ஆலம்
பஜாரில் இயங்கியது. இந்த 6 வருடங்களில் மடம் தனது பரிணாமத்தில் ஒரு முக்கிய அடி எடுத்து
வைத்தது. எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த ”நரேன்” சுவாமி விவேகானந்தராக அமெரிக்காவில் ஓர் எழுச்சியை உண்டாக்கிக்
கொண்டிருப்பது இந்த நாட்களில் சகோதரச் சீடர்களுக்குத்
தெரிய வந்தது. ”சிகாகோவில்” பெரிய அலைகளை எழுப்பினார் விவேகானந்தர்” என்றெல்லாம் செய்தித்தாள்
களில் வந்த செய்திகளை ஆர்வத்துடன் படித்து
மனம் மகிழ்ந்தனர் அந்தத் துறவியர். குருதேவரின் மறைவுக்குப் பிறகு சுமார் ஆறு வருடங்களாக
தவம், தீர்த்த யாத்திரை, ஆன்மீக சாதனைகள், படிப்பு என்று வாழ்ந்த அவர்களின் வாழ்க்கை
இப்போது மெல்ல மெல்ல சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்கலாயிற்று.
இந்த நேரத்தில் தான் சுவாமிஜி 1894 மார்ச் 19-இல்
சகோதரத் துறவியருக்கு எழுதிய முதல் கடிதம்
ஏப்ரலில் அவர்களுக்குக் கிடைத்தது. தொடர்ந்து பல கடிதங்கள் வந்தன. இந்தக் கடிதங்களில் ஒரு புதிய நரேனை அவர்கள்
கண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் கூறிய- சேவை- தர்மம் போன்ற சில கருத்துக்கள் அவர்களுக்குப் புதிதாக இருந்தது. சுவாமிஜியின் இந்த
அணுகு முறையைச்சகோதரத் துறவிகளில் சிலர் அப்படியே ஏற்றுக் கொண்டனர். சிலர் எதிர்த்தனர்.
சிலர் அவர் குருதேவரின் பாதையிலிருந்து விலகிச் செல்வதாகக் கருதினர்.
சுவாமிஜியின் கடிதங்களிலும் சொற்பொழிவுகளிலும் 3
முக்கிய மாற்றங்களை அவர்கள் கண்டனர்.
1- சுவாமிஜி மேலை நாடுகளில் பொதுவாக அத்வைத வேதாந்தத்தைப்போதித்தார்.
அத்வைதம் சாதாரண மக்களுக்கு உரியது அல்ல. சிறப்பான தகுதிகள் பெற்ற மிகச் சிலருக்கே உரியது
என்பது ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்து . எனவே இதில் சுவாமிஜி குருதேவரிலிருந்து விலகுகிறாரோ!
என்று சகோதரத் துறவிகளுக்குச் சந்தேகம் உண்டாயிற்று.
2- 2- கடிதங்களில்குருதேவரைப் பற்றியும் அன்னையைப் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதுகின்ற சுவாமிஜி சொற்பொழிவுகளில் அவர்களைப்
பற்றி கூறவில்லை.
3- பாரம்பரியத் துறவு நெறியின் லட்சியத்திலிருந்து
விலகி, சேவை- தர்மத்தில் அதாவது மனித குல சேவையில்துறவிகள் ஈடுபட வேண்டும். என்ற கருத்துக்கள்
அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தின.
இந்தச்சந்தேகங்களுடன்
அவர்கள் குருதேவரின் இல்லற பக்தரான கிரீஷ்
சந்திரகோஷை அணுகினர். அவர் இது பற்றி சுவாமிஜிக்கு எழுதினார். சுவாமிஜி இதற்கு எழுதிய
பதில் கடிதம் அவர்களின் சந்தேகங்களை ஓரளவு விலக்கியது.
ஆனாலும் சகோதரத் துறவிகள் இந்தப் புதிய லட்சியங்களை
ஏற்றுக் கொள்ள ச் செய்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. சிலநேரங்களில் அவர்களில் சிலருக்கும் சுவாமிஜிக்கும் வாக்குவாதங்களே நிகழ்ந்ததுண்டு.
இந்த நாட்களில் ஒரு முறை சுவாமிஜி தேவேந்திர நாத் தாகூரைச் சென்று கண்டார். அவரது இளமைக்
கால வழிகாட்டிகளில் ஒருவராக அவர் திகழ்ந்ததை
ஏற்கனவே கண்டோம். அதன் பிறகு அவரிடமிருந்து பிரிய நாத் சாஸ்திரி என்பவர் மடத்திற்கு
வந்து சுவாமிஜியுடன் பல கருத்துக்களைப் பற்றி விவாதித்தார். கடைசியில் அவர் சுவாமிஜியிடம்,
உங்கள் எல்லாக் கருத்துக்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நீங்கள் கூறுகின்ற அவதாரக் கருத்துக்களை மட்டும் தான் எங்களால் ஏற்றுக்
கொள்ள இயலாது” என்று கூறினார். அதற்கு சுவாமிஜி, ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர்
அவதாரம் என்று நான் போதிக்கவில்லையே! என்றார்.
சுவாமிஜியின் இந்தக் கூறிறு சகோதரத்துறவிகளிடையே
விவாதங்களை எழுப்பியது. சுவாமிஜி கூறிய போதே அங்கிருந்த யோகானந்தர் கண்கள் சிவக்க,
கோபத்துடன் அருகில் இருந்தவரிடம், என்ன , நரேன் என்ன சொல்கிறான்! என்று கூறினார். பிரியநாத்
விடைபெற்றதும் அவர் சுவாமிஜியிடம் வந்து அவர் கூறியதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன்,
அவரது அருளால் தான் நீ இவ்வளவு பெருமை பெற்றாய்,
என்றார். சுவாமிஜிக்கு இவையெல்லாமே ஒரு வேடிக்கையாகத்தான்
தோன்றின. அவர் ஸ்ரீராமகிருஷ்ணரை அறிந்ததை விட
வேறு யார் அறிந்தார்! அதனால் அல்லவா அவர் ஸ்ரீராமகிருஷ்ணரை, அவதாரங்களில் தலைசிறந்தவர்” என்று எழுதினார். அதனைப் புரிந்து கொள்ளாமல் எதிர்க்கின்ற யோகானந்தரிடம் அவருக்கு வேடிக்கை செய்யத்தான் தோன்றியது. எனவே சிரித்தபடியே அவரிடம், அவர் காரணமாக எனக்குப்
பெருமையா? என்னால் தான் அவருக்குப் பெருமை. நான் இல்லாவிட்டால் அவரை யார் உலகறியச்
செய்திருப்பார்? என்றார். இது யோகானந்தரின்
ஆத்திரத்தை மூட்டியது. அவர் கோபத்துடன், ஸ்ரீராமகிருஷ்ணர் இல்லாமல் நீ கிடையாது,
அவர் இல்லாமல் மிஞ்சி மிஞ்சிப் போனால் நீ பானர்ஜியைப்போல் ஒரு பெரிய வக்கீலாக இருந்திருப்பாய்.
அவ்வளவு தான் என்றார். இவ்வாறு விவாதங்கள் தொடர்ந்தன.
ஸ்ரீராமகிருஷ்ணரைப்
பற்றி சுவாமிஜி ஒரு முறை தமது சகோதரத் துறவிகளிடம் , நீங்கள் அறிந்ததை விட அவர் எவ்வளவோ ஆழமானவர், என்றார். சுவாமிஜியும்
அப்படியே. மற்றவர்கள் அறிந்ததை விட அவர் ஆழமானவர். இந்த இரண்டு ஆழங்களையும் உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ள இயலாததால் தான் விவாதங்களும் பிரச்சனைகளும் எழுந்தன.ஆனால் சுவாமிஜி பெரிய அளவில்
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பிரச்சாரம் செய்திருந்தால்,ஸ்ரீராமகிருஷ்ண
மதம் ” என்ற ஒன்று தோன்றியிருக்கும் என்பது உறுதி, அத்தகைய ஒரு நிலையை சுவாமிஜியும்
விரும்பவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரும் ஆமோதிக்கவில்லை. அதன் காரணமாகத்தான் சுவாமிஜி இத்தகைய ஒரு நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டார்.ஆனால்
அன்று அவரது சகோதரத் துறவிகளில் சிலரால் அதனை
ஏற்றுக் கொள்ள இயலவில்லை. காலப்போக்கில் படிப்படியாக அவர்கள் சுவாமிஜியின் கருத்துக்களை
ஏற்றுக் கொள்ளவே செய்தார்கள்.
சுவாமிஜி-
உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன?
பிரச்சாரகர்-
நாங்கள் கசாப்புக் கடைக்காரனிடமிருந்து கோமாதாவைக் காக்கிறோம். பல இடங்களில் பசுக் காப்பகங்கள் அமைக்கப்
பட்டுள்ளன. அங்கே, நோயுற்ற வயதான பசுக்களையும் ,
கசாப்புக் கடைக்காரர்களிடமிருந்து மீட்டு வந்த பசுக்களையும் தீனி முதலியவை கொடுத்துக்
காக்கிறோம்.
சுவாமிஜி- உண்மையில் இது நல்ல காரியம் தான். செலவிற்கு
உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது?
பிரச்சாரகர்-
உங்களைப்போன்ற பெரியவர்கள் கருணையுடன் தரும் நன்கொடைகளால் தான் இந்தக் காரியங்கள் நடக்கின்றன.
சுவாமிஜி-
இது வரையில் எவ்வளவு பணம் செலவழித்திருக்கிறீர்கள்?
பிரச்சாரகர்- மார்வாரிகள் இதற்கு மிக அதிகமாக உதவினார்கள். இந்த நல்ல காரியத்திற்கு
அவர்கள் ஒரு பெரிய தொகையைத் தந்திருக்கிறார்கள்.
சுவாமிஜி-
மத்திய இந்தியாவில் இப்போது பயங்கரமான பஞ்சம் மக்களை வாட்டுகிறது. அந்தப் பஞ்சத்தில்
ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் செத்துப்போனதாக
அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது! உங்கள் சங்கம் இந்தப் பஞ்சத்தில் மக்களைக்
காப்பாற்ற ஏதாவது செய்திருக்கிறதா?
பிரச்சாரகர்-
இது போன்ற பஞ்சங்களிலும் துன்பங்களிலும் நாங்கள்
உதவுவதில்லை. இந்தச் சங்கம் கோமாதாவைக் காப்பதற்கு மட்டும் தான் அமைக்கப் பட்டுள்ளது.
சுவாமிஜி- பஞ்சத்தில் உங்கள் சகோதர சகோதரிகளாகிய
ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் சாவின் கொடிய
பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள். வசதி இருந்தும் அவர்களுக்கு உணவு கொடுத்துக்
காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமை என்று நீங்கள் நினைக்கவில்லையா?
பிரச்சாரகர்- அதை நாங்கள் செய்ய வேண்டியதில்லை. இந்தப்
பஞ்சம் அவர்களுடைய கர்மத்தின் விளைவாக, பாவங்களின்
விளைவாக வந்திருக்கிறது. கர்மம் எப்படியோ அப்படியே
தான் பலனும்.
இதைக்கேட்டதும் தான் தாமதம்! சுவாமிஜியின் கண்கள்
கோபத்தால் நெருப்புத் துண்டங்கள்போல் ஜொலித்தன. அவரது முகம் உணர்ச்சியால் சிவந்தது.
உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அவர் சொன்னார், மனிதர்கள், சொந்தச் சகோதரர்கள் பசியாலும்
பட்டினியாலும் செத்துக்கொண்டிருப்பதைக்கண்டு , அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி
சோறு கூட தராமல், அவர்களிடம் சிறிதும் இரக்கம் கொள்ளாமல், விலங்குகளையும் பறவைகளையும்
காப்பாற்றுவதற்காக உணவை வாரி வாரித் தரும் சங்கங்களிடம் எனக்குச் சிறிது கூட அனுதாபம்
கிடையாது. அத்தகைய சங்கங்களின் மூலம் சமுதாயத்திற்கு
ஏதாவது நல்லது நடக்கும் என்று நான் நம்பவில்லை. மனிதன் பட்டினியால் சாவதற்கு அவனது கர்மம் காரணம் என்று கா்ம நியதிக்கு
நீங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால்,
இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ
போராடுவதோ பயனற்ற வேலை. பசுக்களைக் காப்பாற்றும் உங்கள் வேலை யும் அப்படிப்பட்டது தான்.
அந்தக்கொள்கையின் படி பார்த்தால் கோமாதாவும் அதன் கர்மத்தால் தான் கசாப்புக் கடைக் காரரிடம் மாட்டிக்கொண்டு சாகிறது.
நாம் அதைக் காப்பாற்ற வேண்டிய அவசியமே இல்லை.
இதைக்கேட்ட பிரச்சாரகர் வெட்கித் தடுமாறினார். பிறகு
சமாளித்துக்கொண்டு, நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் பசு நமது தாய் என்று சாஸ்திரங்கள்
கூறுகின்றனவே! என்றார்.
சுவாமிஜி லேசாகச் சிரித்த படி, ஆமாம், பசு நம் தாய்
தான். எனக்குப் புரிகிறது. வேறு யார் தான்
நம்மைப்போன்ற இவ்வளவு புத்திசாலிகளான
பிள்ளைகளைப்பெற முடியும்? என்றார்.
சுவாமிஜியின் கிண்டலை அவர் புரிந்து கொள்ளவில்லை.
தங்கள் சங்கத்திற்கு ஏதேனும் பணம் கொடுக்கும்
படி அவர் மீண்டும் சுவாமிஜியிடம வேண்டினார்.
சுவாமிஜி- நான் ஒரு துறவி, பக்கிரி. உங்களுக்கு உதவுகின்ற அளவுக்கு எனக்குப் பணம் எங்கிருந்து
கிடைக்கும்? அப்படி எங்கிருந்தாவது கிடைத்தாலும் அதை முதலில் நான் மனிதர்களின் சேவைக்காகத்
தான் பயன்படுத்துவேன். முதலில் மனிதன் தான் காப்பாற்றப்பட வேண்டும். அவனுக்கு உணவும்
கல்வியும் ஆன்மீக ஞானமும் கொடுக்கப் பட வேண்டும். இவையெல்லாம் செய்த பிறகு ஏதாவது பணம்
எஞ்சினால் உங்கள் சங்கத்திற்குக் கொடுக்கலாம்.
இதைக்கேட்டதும் பிரச்சாரகர் சுவாமிஜியை வணங்கி விட்டு
எழுந்து வெளியே சென்றார். சுவாமிஜி அங்கே இருந்தவர்களைப் பார்த்துப்பேசத்தொடங்கினார்.
என்ன பேச்சு! கேவலம்! மனிதர்கள் கர்ம பலனால்
சாகிறார்கள். அவர்களுக்கு இரக்கம் காட்டுவதில் என்ன பலன்?என்று அவன் கேட்கிறான். இந்த
நாடு அடியோடு நாசமாகி விட்டது என்பதற்கு இதுவே
சாட்சி. உங்கள் இந்து மதத்தில் கர்ம நியதிக் கொள்கை எவ்வளவு கேவலமாகப் பயன்படுத்தப்
படுகிறது. பார்த்தீர்களா? மற்ற மனிதர்களுக்காகச் சிறிதும் இரக்கம் காட்டாத இவர்களை
மனிதர் என்று நினைக்கலாமா? இவ்வாறு பேசும்போது
சுவாமிஜியின் திருமேனி வேதனையாலும்
துயரத்தாலும் நடுங்கியது போல் தோன்றியது.
அத்வைதத்தைப் பற்றியே சுவாமிஜி அதிகம் பேசுவதால்
அவர் பக்திக்கு எதிரானவர், வைணவத்திற்கு எதிரானவர்
என்றெல்லாம் சிலர் நினைத்தனர். சிலரோ அவர் ஞானத்தை ப் பற்றியே பேசுகிறார். பக்தியை
அதற்குக் கீழானதாகக் கருதுகிறார் என்று நினைத்தனர். அம்ருத பஜார் பத்ரிகா” என்ற பத்திரிகையில் (பிப்ரவரி 8- 1897) அதன் ஆசிரியரான சிசிர்குமார் கோஷ் எழுதினார். தியாசபிகல் சொசைட்டியைச்சேர்ந்த
அன்னி பெசன்ட் அம்மையாரின் பணிகளை சுவாமி விவேகானந்தர் கண்டு கொள்ளாதது வருத்தத்தையே
தருகிறது. அம்மையார் கீதையின் மதத்தைப்போதிக்கிறார். அவரது பணியும் விவேகானந்தரின் பணியும் ஒரே விதமானவை தாம். உண்மையைச்
சொல்வதானால் அம்மையாரின் பணி விவேகானந்தரின் பணியைவிட ஒரு படி மேலானது. ஏனெனில் அவர்
மக்களுக்கெல்லாம் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி போதிக்கிறார். விவேகானந்தரோ ஸ்ரீகிருஷ்ணரைப்போதிப்பதற்கான
வழியை இது வரை காணவில்லை.
தம் முன் நேரடியாகப் பிரச்சனைகளை எழுப்பும் வரை பொதுவாக
சுவாமிஜி இத்தகைய விமர்சனங்களைப்பொருட்படுத்துவதில்லை. ஒரு நாள் அவரது முன்னிலையிலேயே
இந்தக் கருத்து எழுந்தது. அன்று வந்திருந்த வைணவ சாது ஒருவர் இது பற்றி கூறினார். அதனைக்கேட்டு
விட்டு சுவாமிஜி, பாபாஜி, அமெரி்காவிலேயே நான் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி பல சொற்பொழிவுகள் செய்துள்ளேன். எனது சொற்பொழிவின் தாக்கத்தால் ஓர் இளம் பெண் அனைத்தையும் துறந்து ஓர் ஏகாந்தத் தீவில் ஸ்ரீகிருஷ்ண
தியானத்தில் தனது வாழ்நாளைச்செலவிட்டாள் என்றார்.
உண்மையில் சுவாமிஜி வைணவத்திற்கோ, பக்திக்கோ ஏன்,
எந்த மதக் கருத்துக்களுக்கோ எதிரானவர் அல்ல, சமய சமரசத்தைப்போதிக்க வந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் மறு பக்கமாக் கருதப் படுபவர்
அவர். சென்னையில் அவர் பேசிய இந்திய ரிஷிகள்” மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் , ”கீதை
போன்ற சொற்பொழிவுகளைக்கேட்டிருந்தால் சவாமிஜி
ஸ்ரீகிருஷ்ணரிடம் எத்தகை பக்தி கொண்டிருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஸ்ரீகிருஷ்ண
பக்தி என்ற பெயரில் ஆன்மீக சாதனைகள் செய்யத்தொடங்கி,
கிருஷ்ணரிடம காதல் கொள்கிறோம்” பிரேமை கொள்கிறோம் என்றுதகுதியில்லாதவர்களும்
அத்தகைய பிரேமை சாதனைகளில் ஈடு பட்டதில் எல்லாம் இழிநிலையை அடையத் தொடங்கியது. அதையே
சுவாமிஜி கண்டித்தார். இது பற்றி ஓர் உரையாடல் பகுதியை இங்கு காண்போம்.
கேள்வி-
பிரேமை சாதனையை ஏன் சாதாரண மக்கள் பின்பற்ற முடியாது?
சவாமிஜி-
அப்படி ஒன்றைப் பின்பற்றியதால் நாடு என்ன நிலைமைக்கு இழிந்திருக்கிறது என்பதைப் பார்.
அந்தப்பிரேமைக் கருத்தைப் பரப்பியதால் நாடே பெண்கள்” நாடாகி விட்டது. ஒரிசா முழுவதும்
கோழைகளின் பூமியாகி விட்டது. வங்காளமோ கடந்த நானூறு வருடங்களாக இந்த ராதா பிரேமை என்பதன்
பின்னால் ஓடி ஆண்மை என்பதை ஏறக்குறையே இழந்து
விட்டது. அழுவாற்கும் புரள்வதற்கும்
நமது மக்களை விட்டால் வேறு ஆளே இல்லை. இலக்கியங்களைப் பாருங்கள். சென்ற நானூறு
ஆண்டுகளாக வங்கக் கவிஞர்கள் அழுவதையும் ஓலமிடுவதையும் தான் ஒரே கருத்தாகக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையான வீரச் சுவை பொங்கும் ஒரு பாடலைக்கூட வங்க இலக்கியம் தரவில்லை.
கேள்வி- அப்படியானால் அந்த உயர்ந்த பிரேமையை யார்
தான் அடைய முடியும்?
சுவாமிஜி- காமம் இருந்தால் பிரேமை இல்லை. எள்ளளவு
இருந்தால் கூட பிரேமைக்கு அங்கு இடம் இல்லை. கொழுந்து விட்டெரியும் துறவும் மகா வீரமும்
பொருந்தியவர்களைத் தவிர வேறு யாரும் அந்தப்பிரேமை
நெறிக்கு உரியவர்கள் அல்ல. அந்த லட்சியத்தைச் சாதாரண மக்கள் கடைப்பிடிக்கப்போனால் அது
அவர்கள் மனத்தில் காமத்தை எழுப்பி விடும். அவர்கள் இறைவனிடம் கொள்ளும் பிரேமை, மனைவியிடம்
காட்டும் அன்பையே நினைவுபடுத்தும், இதனால் என்ன நடக்கும் என்பதைச்சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கேள்வி-
அப்படியானால் இறைவனைக் கணவனாக அல்லது காதலனாகவும்
தன்னைக் காதலியாகவும் எண்ணும் மதுர பாவனை நெறியைக்
கடைபிடித்து இல்லறத்தார்கள் இறைவனை அடைய முடியாதா?
சுவாமிஜி- ஏதோ ஓரிருவரால் முடியலாம். சாதாரண இல்லறத்தார்களுக்கு
அது முடியாது என்பதில் சந்தேகமில்லை. ஆனால்இந்தப் பாதையில் ஏன் அதிகக் கவனம் செலுத்த
வேண்டும்? இறைவனை வழிபட மதுர பாவனையைத் தவிர வேறு வழியே இல்லையா? மற்ற நான்கு பாவனைகள் உள்ளனவே! அவற்றைப்
பின்பற்றி சாதனைகள் செய்யலாமே! அதனால் இதயம் தூய்மை பெறும். அதன் பிறகு என்ன நடக்க
வேண்டுமோ அது தானாக நடக்கும். காமம் இருக்கும்வரை பிரேமை தோன்றாது என்பதை மனத்தில் பதித்துக்கொள். காமத்தை
விடுவதற்கு ஏன் முதலில் முயலக் கூடாது? அது எப்படி முடியும்? நான் இல்லறத்தான் ஆயிற்றே“ என்று நீ கேட்கலாம். இது அர்த்தமற்ற பேச்சு. இல்லறத்தான்
என்பதற்காகக் காமத்தில் அழுந்திக் கிடக்க வேண்டுமா? பெண்ணிடம் காமத் தொடர்பு தான் வைத்துக்கொள்ள
வேண்டுமா என்ன? இனி, ஏன் மதுர பாவனையில் இந்த ஈடுபாடு? ஆணாகப் பிறந்த ஒருவன் தன்னைப்பெண்ணாக
ஏன் தான் எண்ணிக்கொள்ள முயல வேண்டும்?
கேள்வி- உண்மை தான், பஜனையும் சங்கீர்த்தனமும் நல்லது. சாஸ்திரங்களும் அதைப் பற்றி கூறுகின்றன. சைதன் யரும் மக்களுக்கு
அதையே போதித்தார். கோல் வாத்தியத்தை வாசிக்கும்போது இதயம் மகிழ்ச்சியால் விம்ம நடனமாடும் எண்ணம் தானாகவே
பிறக்கிறது.
சுவாமிஜி-
சரி தான், ஆனால் சங்கீர்த்தனம் என்றால் நடனம்
மட்டும் தான் என்று எண்ணி விடாதே! இறைவனின்
பெருமைகளைப் பாடுவதே அது. வைணவர்களின் நடனம் நம்மை ஒருவிதமாகக் கிளர்ந்தெழச் செய்கிறது
என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதில்
பேரபாயமும் உள்ளது. அதிலிருந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். உள்ளக் கிளர்ச்சிக்குப்
பிறகு வரும் மனச்சோர்வே அந்த அபாயம். கண்களிலிருந்து நீர் சொரிய, கள் குடித்தது போல் தலை சுழல. மன உணர்ச்சிகள்
எவ்வளவு உச்ச நிலைக்கு எழுப்பப் படுகின்றனவோ,
சங்கீர்த்தனம் முடிந்ததும் அவை அவ்வளவு தாழ்ந்த
நிலைக்கும் இறங்கி விடுகின்றன. அலை உயர எழுகின்ற வேத்துடன் கீழேயும் விழுகின்றது. விவேகத்தின்
துணை இல்லாவிட்டால் இல்லா விட்டால் காமம் முதலிய
கீழான குணங்களுக்கு அடிமைப்பட நேரும். இதனால் சர்வநாசம் நிச்சயம். அமெரிக்காவிலும்
இதைப் பார்த்திருக்கிறேன். பலர் சர்ச்சுக்குச்சென்று
பக்தியுடன் பிரார்த்தனை செய்வார்கள். உணர்ச்சிப்பெருக்குடன் பாடுவார்கள். சொற்பொழிவைக்கேட்கும்போது கண்ணீர் வடிப்பார்கள். ஆனால் திரும்பும்போதே விலை மகளிர் வீட்டிற்குச் செல்வார்கள்.
கேள்வி- அப்படியானால் சைதன்யரின் எந்தக் கருத்துக்கள்
வழி தவறாமல் எங்களைப் காப்பவை, எங்களுக்குப் பொருத்தமானவை என்பதைக்கூற வேண்டும்.
சுவாமிஜி- ஞானமிச்ர பக்தி, அதாவது ஞானம் கலந்த பக்தியை
இறைவனிடம் கொள்ளுங்கள். பக்தியுடன் எப்போதும்
விவேகத்தை இணைத்துக் கொள்ளுங்கள். மேலும், அவரது பரந்த இதயம், உயிர்கள் அனைத்திடமும் கருணை, இறைவனிடம் கொண்ட ஈர்ப்பு, தியாகம்
–இவற்றை உங்கள் வாழ்வின் லட்சியமாக்கிக்கொள்ளுங்கள்.
ஒருநாள்
சுவாமிஜியைக் காண குஜராத்திப் பண்டிதர்கள் சிலர் வந்தனர். அவர்கள் சுவாமிஜியிடம் வாதிட
விரும்பினர். சுவாமிஜி ஏற்றுக்கொண்டு வாதத்தில் கலந்து கொண்டார். விவாதம் சம்ஸ்கிருத
மொழியில் நடைபெற்றது. பல கருத்துக்களைப் பற்றி
விவாதம் நிகழ்ந்தாலும், பூர்வ மீமாம்சையா (கர்ம காண்டம்), உத்திர மீமாம்சையா, (ஞான
காண்டம்) என்பது தான் முக்கியக் கருத்தாக இருந்தது. சுவாமிஜி ஞானப் பகுதியையும் பண்டிதர்கள்
கர்மப் பகுதியையும் ஆதரித்துப்பேசினார். சுவாமிஜி
மிகச் சரளமாக சம்ஸ்கிருதத்தில் பேசினார்.ஆனால் ஓரிடத்தில் ஓர் இலக்கணப் பிழை நேர்ந்து
விட்டது. அதைக்கேட்டதும் பண்டிதர்கள் சிரித்து விட்டனர். விவாதம் தொடர்ந்தது. மேலை
நாடுகளில் இது போல் எத்தனையோ விவாதங்களை எதிர்கொண்ட
சுவாமிஜிக்கு இது ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை. கடைசியில் பண்டிதர்கள். சுவாமிஜியின்
கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. பண்டிதர்கள் சென்ற பிறகு சுவாமிஜி அங்கிருந்தவர்களிடம்,
மேலை நாடுகளில் ஒருவர் பேசுகின்ற கருத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இலக்கணப்பிழை நேர்ந்ததென்றாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்- சிரிக்காமலாவது
இருப்பார்கள்! என்றார்.
ஆச்சரியம் என்னவென்றால், விவாதம் ஆரம்பித்த திலிருந்து ராமகிருஷ்ணானந்தர்
பக்கத்து அறையில் அமர்ந்து சுவாமிஜியின் வெற்றிக்காகப் பிராத்தனை செய்தார். தியான நிலையில்
அமர்ந்து, கையில் ஜபமாலையுடன் அவர் தொடர்ந்து பிரார்த்தனை செய்தாராம்.
மார்ச் 7 ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்த நாள். வழக்கம்
போல் தட்சிணேசுவரக்காளி கோயிலில் விமரிசையாக அது கொண்டாடப் பட்டது. சுவாமிஜி அதில்
கலந்து கொள்வதாக இருந்தார். அங்கே பெரிய கூட்டம் கூடியது. காலை 9 மணியளவில் அவர் அங்கே
வந்தார். காவியுடை, காவித் தலைப்பாகை அணிந்திருந்தார். காலில் செருப்பு இல்லை. அவர்
சென்ற இடங்களில் எல்லாம் கூட்டம் அவரைத் தொடர்ந்தது. அவரது பாதங்களில் பணிய முண்டியடித்தது. சுவாமிஜி காளி கோயிலில் வழிபட்டார்.
ராதா காந்தர் கோயிலில் வணங்கினார். பின்னர் அதே அறைக்கு , எந்த அறையில் குருதேவரின்
திருமுன்னர் அவர் ஒரு சிறுவனாய் உட்கார்ந்திருந்தாரோ அதே அறைக்குச் சென்றார்.
பிறகு ஐரோப்பியச் சீடர்களுடன் பஞ்சவடிக்குச் சென்றார்.
எங்கும், ஜெய் ராமகிருஷ்ணா!, ஜெய் விவேகானந்தா! என்ற முழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது.
பல்வேறு குழுக்கள் அங்கங்கே பஜனை நிகழ்த்திய வண்ணம் இருந்தன. பஞ்சவடியில் ஸ்ரீராமகிருஷ்ணரின்
இல்லற பக்தர்களான கிரீஷ் முதலியோர் இருந்தனர்.
அங்கே சுவாமிஜி ஒரு சொற்பொழிவு செய்ய வேண்டும் என்று அனைவரும் விரும்பினர். சுவாமிஜியும்
முயன்றார். ஆனால் சென்னை வரவேற்பில் நிகழ்ந்தது
போலவே இங்கும் நிகழ்ந்தது. அவர் எவ்வளவோ உரத்த குரலில் பேசியும், சுமார் 60, 000 பேர்
கூடியிருந்த அந்தக் கூட்டத்தின் இரைச்சல் காரணமாக, அவரது குரல் கேட்கவில்லை. கடைசியில்
சுவாமிஜி முயற்சியைக்கைவிட்டார். அன்று குட்வினையும் சொற்பொழிவாற்றுமாறு தூண்டினார்
சுவாமிஜி. இரைச்சல் காரணமாக அதுவும் எடுபடவில்லை.
பெண்கல்வி
-
பெண்களுக்கு க் கல்வி தேவை என்று இந்தியாவில் எழுந்த
முதல் குரல்களில் ஒன்று சுவாமிஜியுடையது. ஒரு நாள் அவர் தமது சீடரான சரத் சந்திரரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூறினார். உங்கள்
நாட்டில் பெண்களுக்குக் கலவி தர யாரும் எந்த
முயற்சியும் செய்யவில்லை. ஆண்களாகிய நீங்கள் கல்வி பெறுகிறீர்கள், மனிதர்கள் ஆகிறீர்கள்.
ஆனால் உங்கள் துன்ப துயரங்களில் பங்கு கொள்கின்ற, உயிரைத் தந்து உங்களுக்குத் சேவை செய்கின்ற பெண்களுக்குக் கல்வி
தர நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
சீடர்- ஏன், இப்போது பெண்களுக்காக எத்தனையோ பள்ளிகளும் கல்லூரிகளும்
தோன்றியிருக்கின்றனவே! எவ்வளவோ பெண்கள் எம்.ஏ., பி.ஏ, பட்டங்களும் பெற்றிருக்கிறார்களே!
சுவாமிஜி-
இந்த எம். ஏ. எல்லாம் மேலைநாட்டுப் படிப்புகள். எத்தனை பள்ளிகள் உங்களுடைய தர்ம சாஸ்திரங்களின் வழியில், தேசிய நீரோட்டத்தின் வழியில் உள்ளன? பரிதாபம், அத்தகைய தேசியக் கல்வி ஆண்களுக்கே பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. பெண்களைப் பற்றிச்
சொல்ல என்ன இருக்கிறது?
ஆனால் இத்தகைய கல்வி அளிப்பதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப் படுகிறது.
அதுவும் கல்கத்தாவிலேயே என்று கேள்விப்பட்ட போது சுவாமிஜி மிகவும் மகிழ்ந்தார்.
தபஸ்வினி மாதாஜி, என்ற சன்னியாசி ஒருவர், மகாகாளி பாடசாலை” என்ற பெயரில் அதனை நடத்தி வந்தார். சுவாமிஜி சரத் சந்திரருடன் அந்தப் பள்ளிக்குச்சென்றார். சுவாமிஜி
சென்றதும் மூன்று நான்கு பேர் சுவாமிஜியை வரவேற்று, மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே தபஸ்வினி மாதாஜி நின்றிருந்தார். சுவாமிஜியைக் கண்டதும் வரவேற்று ஓர் அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கே
கூடியிருந்த பெண்கள் எல்லோரும் எழுந்து நின்று அவரை வணங்கி வரவேற்றார்கள். மாதாஜி கூறியதும்
எல்லோரும் சிவபெருமானைப்பற்றிய சம்ஸ்கிருத
சுலோகம் ஒன்றை இசையுடன் பாடினர். அதன் பின் தங்களுக்குக் கற்பிக்கப் பட்டிருக்கும்
வழிபாட்டு முறைகளைச்செய்து காட்டினர். இவற்றை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் பார்த்த பிறகு சுவாமிஜி மற்ற வகுப்புகளைப் பார்க்கச்சென்றார்.
அதன் பிறகு மாதாஜி ஒரு குறிப்பிட்ட பெண்ணிடம்
காளிதாசரின் ரகுவம்சம் என்னும் சம்ஸ்கிருத காவியத்தில் உள்ள மூன்றாம் அத்தியாயத்தின் முதல் செய்யுளைக் குறிப்பிட்டு, அதை விளக்கும் படி கூறினார்.
அந்த விளக்கத்தைக்கேட்ட சுவாமிஜி, தபஸ்வினி
மாதாஜி பெண்களிடையே கல்வியைப் பரப்ப எடுத்துக்கொள்ளும் விடா முயற்சிகளுக்கும் நல்ல முறைகளுக்கும் மிகுந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார். அப்போது மாதாஜி மிகுந்த பணிவுடன்,
நான் என் மாணவிகளுக்குச்சேவை செய்யும் போது
அவர்களைச் சாட்சாத் தேவியாக எண்ணியே செய்கிறேன். புகழோ வேறெதையுமோ விரும்பி
நான் இந்தப் பள்ளியை ஆரம்பிக்கவில்லை. என்றார்.
அங்கிருந்து மிக்க மகிழ்ச்சியுடன் மடத்திற்குத் திரும்பினார் சுவாமிஜி.
ஆயிரம் பிறவிகள்
எடுப்பேன்.
மாக்ஸ் முல்லர் வெளியிட்டிருந்த ரிக்வேதம் முதல்
பகுதி வெளியாகியிருந்தது. அதை ஒரு பணக்காரரின்
வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். அதை சரத் சந்திரரிடம் படிக்குமாறு கூறி சுவாமிஜி
கேட்டுக்கொண்டிருந்தார். அங்கே கிரீஷீம் இருந்தார். சுவாமிஜி திடீரென்று அவரிடம், நல்லது ஜி.சி. நீங்கள் இதையெல்லாம் படிப்பதற்கு முயற்சித்தது
கிடையாது. கிருஷ்ணா, கோவிந்தா, என்றே உங்கள் நாட்களைக்கழித்து விட்டீர்கள்” என்றார். சிறந்த பக்தரான கிரீஷ் அதற்கு, வேதங்களைப் படிப்பதற்கான
நேரமோ அறிவோ எனக்குக் கிடையாது.ஸ்ரீராமகிருஷ்ணர் உன்னைப் படிக்க வைத்தார். ஏனெனில்
நீ உலகிற்குப் போதிக்க வேண்டியிருந்தது. என்னைப் பொறுத்தவரை, வேதங்களுக்கு எட்ட நின்று ஒரு நமஸ்காரம், அவ்வளவு தான், நான்
அவரது அருளை நாடுகிறேன். அவரது அருளாலேயே இந்தச் சம்சார சாகரத்தைக் கடப்பேன் என்றார்.
பிறகு ”வேதவடிவினரான ஸ்ரீராமகிருஷ்ணருக்கு சமஸ்காரம்” என்று கூறியபடியே அந்த ரிக்வேத நூலை ப் பலமுறை வணங்கினார்.
சுவாமிஜி அமைதியாக உட்கார்ந்திருந்தார். திடீரென்று
கிரீஷ் சுவாமிஜியை அழைத்து, நரேன், உன்னிடம்
ஒன்று கேட்கிறேன். நீ வேத வேதங்களை வேண்டிய
அளவு படித்திருக்கிறாய். துன்பப்படுபவர்களின் அழுகுரலுக்கும், பசியால் வாடுபவர்களின் வேதனைக் குரலுக்கும், ஒழுக்கக்கேடு
போன்ற பாவங்களுக்கும் ஏதாவது பரிகாரம் அந்த வேதங்களில் கூறப் பட்டிருக்கிறதா? நேற்று வரை ஐம்பது பேருக்கு உணவளித்தவள் இன்று தனக்கும்
தன் குழந்தைகளுக்கும் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் திண்டாடுகிறாள்! அதோ அந்த
வீட்டுப்பெண்ணைச் சில முரடர்கள் கெடுத்துக்கொன்றே
விட்டார்கள். இந்த வீட்டிலுள்ள விதவை கருவுற்றாள். உலகின் பழிச்சொல்லுக்குப் பயந்து
தற்கொலை செய்து கொண்டாள்....
. நரேன்,
உன்னை நான் கேட்கிறேன். இந்தத் தீமைகளுக்கு உன் வேதங்கள் ஏதாவது பதில் சொல்கின்றனவா?
என்று உணர்ச்சிவசப் பட்டு கேட்டார்.
கிரீஷ் பேசப்பேச சுவாமிஜி உணர்ச்சியில் ஆழ்ந்தார்.
அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தாம் அழுவதை யாரும் கண்டு விடக் கூடாது, என்பதற்காக
எழுந்து அறைக்குள் சென்று விட்டார் சுவாமிஜி.
உடனே கிரீஷ் சரத் சந்திரரை அழைத்து, பார்த்தாயா சரத்? என்ன இதயம்! அன்பினால் எப்படி
இளகி விட்டது பார்!வேதங்கள் கற்ற பண்டிதர் என்பதற்காக நான் உன் சுவாமிஜியை மதிக்கவில்லை. அடுத்தவர் துயரம் கண்டு
துடித்தவராக தன் அறைக்கு அழுது கொண்டே ஓடினாரே, அந்த மாபெரும் இதயத்திற்காகத் தான்
அவரை மதிக்கிறேன்” என்றார்.
சரத்தும் கிரீஷும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபோது
சுவாமிஜி மீண்டும் வந்தார். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சதானந்தர் உள்ளே
வந்தார். உடனே சுவாமிஜி அவரிடம், கிரீஷ் கூறியவற்றை எல்லாம் சொல்லி, மகனே, சதானந்தா, நம் நாட்டிற்கு உன்னால் ஏதாவது செய்ய முடியுமா?
என்று தழுதழுத்த குரலில் கேட்டார். கணநேரம் கூட தாமதிக்காமல், அடிமை காத்திருக்கிறேன்
ஆணையிடுங்கள், என்றார் சதானந்தர். உடனடியாக
ஒரு நிவாரண மையத்தை ஆரம்பிக்குமாறு அவரிடம் கூறினார் சுவாமிஜி.
பிறகு கிரீஷைப் பார்த்து, கிரீஷ் பாபு, ஒரு விஷயம்
உங்களுக்குத் தெரியுமா? உலகின் துயரங்களைத் துடைப்பதற்காக, ஒரே ஒருவரின் சிறிய துன்பத்தையாவது தீர்ப்பதற்காக நான் ஆயிரம் பிறவிகள் எடுக்க வேண்டுமானாலும்
அதற்குத் தயாராக இருக்கிறேன்” என்றார்.
இளைஞன் ஒருவன் ஒரு நாள் சுவாமிஜியிடம், வந்து தியானம்
பற்றிய தமது சந்தேகத்தைக்கேட்டான். நான் நீண்ட
நேரம் பூஜை செய்கிறேன். ஜபம் செய்கிறேன். குரு ஒருவரின் அறிவுரைப்படி தியான வேளையில் மனத்தை வெறுமையாக்க முயல்கிறேன். ஆனால் இத்தனை செய்தும்
மனம் அமைதியுறவில்லை, கட்டுப்பட வில்லை, இருந்தாலும் அறையின் கதவுகளையெல்லாம் அடைத்துக்கொண்டு தியானத்திற்காக அமர்கிறேன். கண்களை மூடி நீண்ட நேரம் தியானம் செய்கிறேன்.
மனத்தில் என்னவோ அமைதியில்லை. சுவாமிஜி நீங்கள்
எனக்கு வழிகாட்டு வீர்களா?
சுவாமிஜி கருணைக் குரலில் கூறினார். என் மகனே, என்
வார்த்தைகளுக்கு நீ செவி சாய்ப்பதானால், முதலில் உன் அறையில் கதவைத் திற. வெளியில் வா, உன் பார்வையைச் சுற்றிலும் சுழலவிடு. உன் வீட்டைச் சுற்றி நூற்றுக் கணக்கான ஏழைகளும்
ஆதரவற்றவர்களும் வாடுகிறார்கள். உன்னால் இயன்ற அளவு அவர்களுக்குச்சேவை செய். ஒருவன்
நோயுற்றுக் கிடக்கிறான். அவனைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லை. அவனுக்குச் சிகிச்சை
அளிக்க ஏற்பாடு செய். அவனுக்குப் பணிவிடை செய். பசியில் வாடுகிறான். அவனுக்கு உணவு
கொடு, அறியாமையில் உழல்கிறான், அவனுக்கு அறிவு
கொடு, உன்னைப்போல் நன்றாகப் படிக்கவை. என் மகனே, உனக்கு என் அறிவுரை இது தான்- உனக்கு மன அமைதி வேண்டுமானால்
இயன்ற அளவு மற்றவர்களுக்குச்சேவை செய்.
ஆனால் சுவாமிஜி,
சேவை என்றால் அதில் கஷ்டங்கள் தவிர்க்க முடியாது. தூக்கம் கெடும், உரிய நேரத்திற்குச்
சாப்பிட முடியாது. எதையும் ஒழுங்காகக் கடைப்பிடிக்க முடியாது. இதன் காரணமாக நானே நோயுற
அல்லவா நேரும்! என்றான் அந்த இளைஞன்.
அந்த இளைஞனின் மனநிலை சுவாமிஜிக்கு நன்றாகப் புரிந்தது.
இதன் பிறகும் அவனுடன் பேச்சைத்தொடர அவர் விரும்பவில்லை.
எனவே , இளைஞனே, உன் வார்த்தைகளிலிருந்து எனக்கு
மட்டுமல்ல, இங்கிருக்கின்ற அனைவருக்கும் ,
ஒன்று புரிகிறது- உன்னைப்போன்றவர்கள் சொந்த
சுகத்தை நாடுபவர்கள், அதிலேயே கண்ணும் கருத்துமாக
இருப்பவர்கள், தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து, பிறருக்குச்சேவை செய்ய உங்களால் முடியாது, என்று நறுக்கென்று கூறி, விஷயத்தை அத்துடன் முடித்து
விட்டார்.
ஒரு முறை பிராணாயாமம் பற்றிகேட்க வேண்டும் என்று
சிலர் சுவாமிஜியிடம் வந்திருந்தனர். சுவாமிஜி மற்றவர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலைக்
கூறிவிட்டு, பிராணாயாமம் பற்றி கேட்டுமுன்னர் தாமாகவே அது பற்றி பேசத் தொடங்கினார்.
அப்போது பிற்பகல் மூன்று மணி. தொடர்ந்து இரவு ஏழு மணிவரை பேசினார். கேட்டவர்கள் பிரமித்து
நின்றனர். தாங்கள் கேட்காமலேயே அவரால் எப்படி தங்கள் சந்தேகங்களை அறிந்து பதிலளிக்க
முடிந்தது என்று சீடர் ஒருவர் கேட்ட போது, இத்தகைய நிகழ்ச்சிகள் பல முறை மேலை நாடுகளில்
நடந்துள்ளன. மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன்
என்னிடம் அது பற்றி கேட்டுள்ளனர்” என்றார் சுவாமிஜி. அன்று சுவாமிஜி
பேசியதிலிருந்து, அவர் தமது ராஜயோகம்” என்ற நூலில் தந்துள்ளது அவர் அறிந்ததில் ஓர் அம்சம் மட்டுமே என்பதை அனைவரும்
புரிந்து கொண்டனர். அது மட்டுமல்ல, அவரது அறிவு நூலறிவு அல்ல, அனுபவ அறிவு என்பது அனைவருக்கும் புலப் பட்டது.
”நரேன் பிறவியிலேயே தியான சித்தன்” என்று அல்லவா குருதேவர் கூறியிருந்தார்.
பிறர் எண்ணத்தை அறிந்து கொள்வது, முற்பிறவி, சித்திகள்
பற்றி பேச்சு தொடர்ந்தது. கூட்டத்தில் ஒருவர், சுவாமிஜியிடம், உங்கள் முற்பிறவிகள்
பற்றி உங்களுக்குத்தெரியுமா? என்று கேட்டார். ஆம், தெரியும்” என்றார் சுவாமிஜி. அங்கு ஓர் ஆழ்ந்த மௌனம் நிலவியது. அவைபற்றி சொல்லுங்களேன்” என்று கேட்டதற்குஅவர், என் முற்பிறவிகளை என்னால் அறிய முடியும்,
அறியவும் செய்கிறேன். ஆனால் அவைப் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை” என்று கூறி விட்டார்.
ஆவியிடமும் பரிவு
-
சென்னையில் சுவாமிஜி தங்கியிருந்த போது, சில ஆவிகள் அவரிடம்
வந்து தங்களுக்கு நற்கதி அளிக்குமாறு கேட்டுக்கொண்டது பற்றி ஏற்கனவே கண்டோம். கோபால் லாலின்தோட்ட வீட்டில் தங்கியிருந்தபோதும் அத்தகைய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது அவர்
சுவாமி பிரேமானந்தருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
திடீரென்று பிரேமானந்தரிடம், பாபுராம், நீ இப்போது எதையாவது கண்டாயா? என்று கேட்டார். இல்லை” என்று பிரேமானந்தர் கூறியதும், நான் ஓர் ஆவியைக்கண்டேன், அதன் கழுத்து அறுபட்டிருந்தது.
கொஞ்சம் பார்வையுடன், தனக்குக் கதி அருளுமாறு அது என்னிடம் கேட்டது” என்றார் சுவாமிஜி. கூறி விட்டு, கைகளைத் தூக்கி அந்த ஆவிக்காகப்
பிரார்த்தனை செய்து அதனை ஆசீர்வதித்தார். விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. அங்கே பல வருடங்களுக்கு முன்பு பிராமணன் ஒருவன் வாழ்ந்து
வந்தான். அவன் பணம் கடனாகக் கொடுத்து கொள்ளை வட்டி வாங்கினான். இந்த வட்டி காரணமாகத்
துன்பத்திற்கு உள்ளான ஒருவன் அந்தப் பிராமணனின் கழுத்தை வெட்டிக்கொன்றுவிட்டான். அலைந்து
திரிந்த அவனது ஆவியையே சுவாமிஜி கண்டார்.
அமெரிக்கா
மற்றும் சென்னையைப்போல் கல்கத்தாவிலும்
சுவாமிஜியின் ஓய்வில்லாத வாழ்க்கை தொடர்ந்தது.
சென்னைக்கு ஒருவரை அனுப்புவதாகத் தாம் சென்னை அன்பர்களுக்கு
வாக்குக் கொடுத்திருந்தது சுவாமிஜியின் மனத்தில் எழுந்து கொண்டே இருந்தது. அமெரிக்காவில்
அவர் இருக்கும் போதும் தமது பணிகளைத்தொடர ஒருவர் வேண்டும் என்று தோன்றியபோது அவரது நினைவில் எழுந்த முதல் நபர் ராமகிருஷ்ணானந்தர். உடல் நிலை காரணமாக அவரால்
அப்போது போக முடியவில்லை. இன்றும் சுவாமிஜியின் நினைவில் எழுந்த நபர் ராமகிருஷ்ணானந்தரே.
ராமகிருஷ்ணானந்தர்
அப்பழுக்கில்லாத புனிதராக, துறவுச் சிம்மமாகத்
திகழ்பவர். அதனுடன் சிறந்த சிந்தனையாளராகவும் இருந்தார். சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும்
தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் அவர் எங்கும் வெளியில் செல்வதில்லை. அவரது வாழ்க்கை
மடத்தில் குருதேவரின் பூஜையோடுபின்னிப் பிணைந்ததாக
இருந்தது. அதிலிருந்து அவர் தம்மைப் பிரித்துப் பார்த்ததில்லை. அவர் சென்னைக்குச்செல்ல
சம்மதிப்பாரா? ஆனால் அவர் தம் மீது வைத்துள்ள அன்பு எள்ளவும் குறைந்ததில்ல என்பது சுவாமிஜிக்குத்தெரியும்.
சுவாமிஜியை குருவாகவே ராமகிருஷ்ணானந்தர் கண்டார்.
அதுவும் சுவாமிஜிக்குத் தெரியும்.
எனவே ஒருநாள் சுவாமிஜி ராமகிருஷ்ணானந்தரை அருகில்
அழைத்து, சசி, நீ என்னை மிகவும் நேசிக்கிறாய், அப்படித்தானே? என்று கேட்டார். ஆம்,
என்று அவர் பதில் அளித்ததும் சுவாமிஜி, அப்படியானால் ஒன்று செய், நேராக சித்பூர்
சந்திப்பிற்குப்போ. அங்குள்ள பௌஜ்தாரி பால கானா கடைக்குப்போய் எனக்காக நல்ல
ரொட்டி வாங்கிவா, என்றார். அது ஒரு முஸ்லிம் கடை. வைதீக இந்துக்கள், அந்தக் கடைக்குப்போவதோ,
போவதை எண்ணிப் பார்ப்பதோ கூட அந்தக் காலத்தில் நடைபெறாத ஒன்று. அதிலும் ராமகிருஷ்ணானந்தர்
பிறப்பால் பிராமணர். ஆனால் அவர் ஒரு கணம் கூடத்
தயங்கவில்லை.ஐந்தாறு மைல்களை நடந்தே கடந்து, அந்தக் கடையிலிருந்து ரொட்டி வாங்கிவந்து
சுவாமிஜிக்குக்கொடுத்தார். இன்றையசமுதாயச் சூழ்நிலையில் இது ஒரு பெரிய விஷயமாக நமக்குத்தோன்றாது. ஆனால் ஜாதியும் மதமும் சமுதாயத்தை
ஆட்டிப்படைத்த அந்த நாட்களில் இது ஒரு சாதாரண
விஷயம் அல்ல. சுவாமிஜியிடம் ராமகிருஷ்ணானந்தர்
கொண்டிருந்த மட்டற்ற அன்பு காரணமாகவே அவர்
இதனைச்செய்தார்.
ரொட்டியைக்கையில் வைத்துக்கொண்டு சுவாமிஜி ராமகிருஷ்ணானந்தரிடம்,
சகோதரா, நீ எனக்காக இன்னொன்றும் செய்ய வேண்டும்.
நீ சென்னைக்குப்போக வேண்டும்” என்றார். மீண்டும் அதே நிலை!
ஒரு வார்த்தை கூட மறுப்பு சொல்லாமல் சென்னைக்குச்செல்ல சம்மதித்தார் ராமகிருஷ்ணானந்தர்.
இவ்வாறு தென்னகத்திற்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் தூதராக 1897 மார்ச் இறுதியில் வந்தார் ராமகிருஷ்ணானந்தர்.
அவருடன் சதானந்தரும் வந்தார். ராமகிருஷ்ண இயக்கப் பணிகள் தென்னகத்தில் பரவலாயிற்று.
டார்ஜிலிங்கில்
-
கல்கத்தாவில் தொடர்ந்து பல சொற்பொழிவுகள் ஆற்றவேண்டும்
என்று வேண்டு கோள்கள் வந்த வண்ணம் இருந்தாலும், சுவாமிஜிக்கு ஓய்வு கட்டாயத்தேவை என்பதால்
அவரை உடனடியாக டார்ஜிலிங்கிற்கு அனுப்புவதென்று ஏற்பாடாயிற்று. மார்ச் 8-ஆம் தேதி சுவாமிஜி
டார்ஜிலிங் சென்றார். சேவியர் தம்பதியர்கள்
ஏற்கனவே சென்று அங்கே தங்கியிருந்தனர். சுவாமிஜியுடன்
பிரம்மானந்தர், திரிகுணாதீதானந்தர் , துரியானந்தர், ஞானானந்தர் , கிரீஷ், குட்வின், டாக்டர் டர்ன்புல்,
அளசிங்க பெருமாள், நரசிம்மாச்சாரியார், கிடி
ஆகியோர் உடன் சென்றனர். சுவாமிஜியை மிகவும் மதித்துப்போற்றிய பர்த்வான் மன்னர் தமது
அரண்மனையின் ஒரு பகுதியை சுவாமிஜி தங்குவதற்காக
அளித்தார். அங்கே எம். என். பானர்ஜி தம்பதிகளின் விருந்தினராகத் தங்கினார் சுவாமிஜி.
சுவாமிஜிக்கு ஆஸ்த்மா, நீர்க்கட்டு ஆகியவற்றுடன்
சர்க்கரை வியாதியும் இருப்பதாக இந்த நாட்களில்
கண்டு பிடிக்கப் பட்டது. இதனால் டார்ஜிலிங்கில் உணவுக் கட்டுப்பாடு மிகவும்
கடைப்பிடிக்கப் பட்டது. சப்பாத்தி, சாதம், உருளைக் கிழங்கு அனைத்தும் தவிர்க்கப்பட்டன. காப்பியில் கூட சர்க்கரை நிறுத்தப் பட்டது. இறைச்சி உணவு, தண்ணீர்
குடிக்காதிருத்தல், உடலுக்கும் மூளைக்கும் பரிபூரண ஓய்வு- இவை கட்டாயம் தேவை என்று
டாக்டர்கள் கருதினர். சுவாமிஜி அனைத்தையும்
ஏற்றுக் கொண்டார். தினமும் நடப்பது, இயற்கை அழகை ரசிப்பது, பேச்சுக்கள், ஓய்வு என்று சுவாமிஜியின் நாட்கள்
கழிந்தன. எனது முடிநரையாகிக்கொண்டு வருகிறது.
என் முகம் முழுவதும் சுருக்கம் விழத் தொடங்கிவிட்டது.என் தசை கரைந்து எனக்கு இருபது
ஆண்டுகளை அதிகமாகக் காட்டுகிறது. நான் நீண்ட தாடி வளர்க்கப்போகிறேன். இப்போது அது நரைத்து
வருகிறது. நீண்ட தாடி கௌரவத்திற்குரிய ஒருதோற்றத்தை அளிக்கிறது. என்று எழுதுகிறார்
சுவாமிஜி.
ஓய்வு என்றாலும் சுவாமிஜி பலருக்குக் கடிதங்கள் எழுதினார்.
ராமகிருஷ்ண இயக்கத்திற்க ஒரு சரியான வடிவம் கொடுப்பது பற்றியும் தீவிரமாக ஆலோசித்தார். பிரம்மானந்தருடன்
பேசி ஓர் ஆரம்பத் திட்டத்தையும் வகுத்தார்.
ஒரு நாள் சுவாமிஜி காலையில் தேனீர் அருந்திவிட்டு
நடக்கச் சென்றார். இரண்டு இளைஞர்கள் அவருடன்
சென்றனர். அவர்கள் சற்றுபின்னால் நடந்து கொண்டிருந்தனர்.
இயற்கை விரித்த அழகுக் காட்சிகளைக் கண்டு ரசித்த படி சுவாமிஜி அந்த மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று. ஆ! தாங்க முடியவில்லை.
மிகவும் வலிக்கிறதே! என்று கத்தினார். இளைஞர்கள் இருவரும் ஓடிச்சென்று, என்ன நடந்தது சுவாமிஜி? எங்கு வலிக்கிறது? என்று கேட்டனர். அதோ, அங்கே வேலை செய்து கொண்டிருக்கும்
அந்தப் பெண் பாறையில் மோதி கீழே விழுந்து விட்டாள்.
அவளுக்கு இடுப்பில் பலத்த அடி, என்று சுவாமிஜி அவளது வலியைத்தாமே உணர்ந்தவராக இடுப்பைப்
பிடித்தபடி கூறினார் சுவாமிஜி.
இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களுக்குப்
புரியவும் நியாயமில்லை. மகான்களின் செயல்பாடுகள் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ளத்
தக்கவை அல்ல. தன்னை உணர்ந்த, தன்னை எல்லா உயிர்களிலும்,
நிறைந்த உணர்வுப் பொருளாக அனுபூதியில் உணர்ந்த மகான் சுவாமிஜி. சில நேரங்களில் அவரது எழுச்சி மிக்க சொற்பொழிவுகளும் செயல்பாடுகளும்
அரைகுறையாகப் புரிந்து கொள்ளப் படும் போது அவரை
ஒரு வெறும் தேச பக்தராக, சீர்திருத்த வாதியாகக் காட்டிவிடுவதுண்டு.ஆனால் அவை
ஒரு பக்க உண்மை மட்டுமே, அவர் ஒரு தேச பக்தராக, சீர்திருத்த வாதியாக, இன்னும் எத்தனை
எத்தனையோ பரிமாணங்கள் உடையவராக இருந்தார் என்பது உண்மை. ஆனால் இவை அனைத்தையும் கோர்த்து
நின்றது அவர் ஓர் இறையுணர்வாளர் என்பதே.
எங்கும் தானாக இருப்பதை உணர்கின்ற நிலையில் முற்றிலுமாகக்
கரையும்போது சிலவேளைகளில் இத்தகைய அனுபவங்கள்
ஏற்படுவதுண்டு. உலக உயிர்களின் இன்ப துன்பங்களை
அவர்கள் அப்போது உணர நேர்கிறது. இரண்டு படகோட்டிகள் அடித்துக்கொண்டபோது, அந்த அடிகள்
தம்மீது விழுந்தது போல் அலறித் துடித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்- அவரது முதுகு கூட சிவந்து
விட்டது. சீடர் ஒரு வர் காலால் பூனையைத் தள்ளியபோது, மகனே, பூனையை அடிக்காதே! ஏனெனில்
அந்தப் பூனையிலும் நான் தான் இருக்கிறேன்” என்றார் அன்னை ஸ்ரீசாரதா தேவி இப்படி சுவாமிஜியும் உணர்ந்த நிகழ்ச்சி இது. இங்கே அவர் அந்த ஏழைப்பெண்ணின் வலியைத்
தம் வலியாக உணர்ந்தார்.
சுவாமிஜி தங்கியிருந்த வீட்டில் மோதிலால் முகர்ஜி
என்பவர் தங்கியிருந்தார். இவர் சிலவேளைகளில் ஒரு
விதமான எழுச்சி நிலைக்கு உள்ளாவார். அப்போது தரையில் உருள்வதும் புரள்வதும் கத்துவதும் கை கால்களை அடித்துக் கொள்வதுமாக அமர்க்களம் செய்வார்.
இதனை அவர் ஆன்மீகப் பரவச நிலை என்று கூறிக்கொள்வார்.இப்படி அடிப்பதும் புரள்வதும் பரவச
நிலை அல்ல என்பது ஒரு பக்கம் இருக்க, உண்மையான பரவச நிலையையே ஒரு கட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்று கருதுபவர் சுவாமிஜி.
மோதிலாலிடம் அவர் பலமுறை இதனைத் தவிர்க்குமாறு கூறினார். அது அவரால் இயலவில்லை. எனவே
ஒரு நாள் அவரது நெஞ்சில் தொட்டார் சுவாமிஜி. அன்றிலிருந்து மோதிலாலின் எழுச்சிகள் அடங்கிவிட்டன.
அவர் ஆன்மீகப் பாதையில் அடி எடுத்து வைத்தார். 1899- இல் சன்னியாசம் பெற்று சுவாமி
சச்சிதானந்தர் ஆனார்.
ஒரு வாரத்திற்கும் சற்று அதிகமாக சுவாமிஜி, டார்ஜிலிங்கில்
தங்கினார். அதற்குள் கேத்ரி மன்னர் தம்மைக் காண்பதற்காகக் கல்கத்தாவிற்கு வந்த செய்தி
கேட்டு அவர் கல்கத்தா திரும்ப வேண்டியதாயிற்று. அவரது உடல் நிலை டார்ஜிலிங்கில் சற்று
தேறியது உண்மை. ஆனால் திடீரென்று கல்கத்தா
வர நேர்ந்ததால் அவரது ஓய்வு தடைபட்டது. சுவாமிஜியின்
ரயில் சியால்தா ஸ்டேஷனில் வந்தபோது மன்னர் தாமே ரயிலில் ஏறி சுவாமிஜியை மலரிட்டு வழிபட்டார்.
அது 1897 மார்ச் 21-ஆக இருக்கலாம். அன்று மாலையில் சுவாமிஜியும் மன்னரும் மற்றும்பலரும் தட்சிணேசுவரக் காளி கோயிலில் சென்று
வழிபட்டனர். ஸ்ரீராமகிருஷ்ணர் சம்பந்தமான இடங்களை எல்லாம் மன்னருக்குச் சுற்றிக் காட்டினார் சுவாமிஜி.
முதலில் காளிகோயிலையம், ராதா காந்தர் கோயிலையும்
வழிபட்டு விட்டு அனைவரும் ஸ்ரீராமகிருஷ்ணரின்
அறைக்குச் சென்றனர். அறை பூக்களால் நேர்த்தியாக
அலங்கரிக்கப் பட்டிருந்தது. குருதேவரின் கட்டிலில் மலர்கள் குவிக்கப் பட்டிருந்தன.
குருதேவரின் அண்ணன் மகனாகிய ராம்லாலும் வந்திருந்தார்.
அறைக்குள் சென்ற சுவாமிஜி இந்தப் பக்கத்திலிருந்து
அந்தப் பக்கம், அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் என்று ஓடி ஓடி அங்கங்கே விழுந்து
வணங்கினார். புரண்டார், அதைக் கண்ட மன்னரும் மற்றவர்களும் விழுந்து வணங்கினர். பிறகு
சுவாமிஜி கைக்கூப்பியவராக குருதேவரின் படத்தைக் கண்ணிமைக்காமல் நீண்ட நேரம் பார்த்துக்
கொண்டிருந்தார். அதன் பின்னர் அனைவருமாக பஞ்சவடிக்குச்சென்றனர்.
பஞ்சவடியில்
சுவாமிஜி பரவசநிலையில் ஆழ்ந்தார். ஒரு முறை பஞ்சவடியை வலம் வந்து, அங்கே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். பிறகு ஒரு சிறுவனைப்போல்
பஞ்சவடியிலுள்ள ஆலமரத்தில் ஏறி ஒரு கிளையில் ஆடத்தொடங்கினார்.கேத்ரி மன்னரை அழைத்து,
குருதேவர் இருந்த நாட்களில் நாங்கள் இப்படித்தான்
இந்த மரத்தில் ஏறி விளையாடுவோம். களி்த்து மகிழ்வோம். இன்று அந்த நினைவு மீண்டும்
எழுந்து விட்டது. பாருங்கள், கங்கைக் கரையில் இந்த இடம் எவ்வளவு ரம்மியமாக உள்ளது! எவ்வளவு அழகிய சுற்றுப்
புறம்! என்றார். அதன் பிறகு அனைவரும் அங்கே அமர்ந்து தியானம் செய்தனர். அரைமணி நேரத்திற்கு சுவாமிஜி எழுந்தார். பின்னர் குருதேவரின் அறைக்கு வடக்கு வராந்தாவில் சென்று நின்றார்.
அதன் பிறகு ராம்லால் முதலானோர் மன்னரை உரிய மரியாதை
அளித்து வரவேற்றனர். மன்னர் தலை வணங்கி ஏற்றுக்கொண்டார். அப்போது தட்சிணேசுவரக்கோயில்
உரிமையாளராகிய திரைலோக்ய விஸ்வாஸின் மகனான இளைஞன் ஒருவன் வந்து சுவாமிஜியின் பாதங்களில் பணிந்தான். சுவாமிஜி, அவனிடம்
என்னப்பா, உன் தந்தை எங்கே? என்று கேட்டார். அதற்கு அவன், அலுவலகத்தில் உள்ளார் என்றான்.
உடனே சுவாமிஜி, அவர் ஏன் வரவில்லை? என்று கேட்டார். இளைஞன் பதில் எதுவும் கூறவில்லை.
பிறகு அனைவரும் ஆலம்பஜார் மடத்திற்குத் திரும்பினர்.
ஆலம்பஜார்
மடத்தில்
மடத்தில்
மாலை ஆரதி நடைபெற்றது. பிரேமானந்தர் ஆரதி செய்தார். துறவிகளும் பிரம்மசாரிகளும் இனிமையான
குரலில் துதிகளைப் பாடினர். இடையிடையே சுவாமிஜி, ஜெய் குரு, ஜெய குரு, என்று கம்பீரமான தொனியில் கூறியது அனைவர் உள்ளங்களிலும்
ஆன்மீகப் பேரலைகளை எழுப்பியது.ஆரதி நிறைவுற்றதும் சுவாமிஜி, மன்னர் மற்றும் அனைவரும் குருதேவரை வீழ்ந்து வணங்கினர். பிறகு அனைவருமாக
வெளியிலுள்ள பெரிய அறைக்கு வந்தனர். சுவாமிஜி ம-விடம் , மன்னருடன் மேலை நாடுகளுக்குச்
செல்ல விரும்பினேன். கடல் பயணம் எனது உடல்நிலையை மேம்படுத்தும். ஆனால் பெரிய டாக்டர்கள்
யாரும் எனது பயணத்தை ஆமோதிக்கவில்லை. பதிலாக அல்மோரா விற்குச் செல்லுமாறு கூறுகிறார்கள்” என்றார். அப்போது கேத்ரி மன்னர், ”கடல் பயணம்” சுவாமிஜியின் உடல் நிலைக்கு நல்லது செய்யும் என்றுதான்நான்
நினைக்கிறேன்” ஆனால் டாக்மர்கள் ஏன் இப்படிக்
கூறுகிறார்கள் என்பது தான் தெரியவில்லை. நாளை வெள்ளைக்கார டாக்டர் வருகிறார். அவர்
கூறுவது போல்” செய்யலாம்.” என்றார்.
அதன் பிறகு பஜனை நடைபெற்றது. சுவாமிஜி ஓரிரு பாடல்கள்
பாடினார். பிறகு மன்னருடன் அவரது இருப்பிடத்திற்குச்சென்றார்.
தட்சிணேசுவரத்திற்குச்
செல்லதடை
-
சுவாமி விவேகானந்தர்
கோயிலுக்குச்சென்ற அன்று மதுர் நாத்தின் மகனும், கோயிலைக் கட்டிய ராணி ராச மணியின்
பேரனும்,கோயிலின் தர்ம கர்த்தாவுமான திரைலோக்ய பாபு கோயிலில் தான் இருந்தார். ஏற்கனவே
தகவல் தெரிந்தும் அவர் சுவாமிஜியையும் மன்னரையும் வரவேற்க வரவில்லை. இது பத்திரிகைகளில்
எழுதப் பட்டது. அதற்குத் திரைலோக்யர் ஏதோ மறுப்புக் கூற, பதிலும் மறுப்புமாகத் தொடர்ந்து
பத்திரிகைகளில் வெளி வந்து கொண்டிருந்தன. சுவாமிஜியையும்
அவரது பணிகளையும் எப்போதுமே தாக்கிக் கொண்டிருக்கின்ற கிறிஸ்தவ மிஷனரிகளும் பிரதாப்
சந்திர மஜும் தாரும் இந்தச் சொற்போர்களை மறைமுகமாகத் தூண்டினர். சுவாமிஜி ஓர் இந்துவல்ல.
துறவியல்ல, பிராமணர் அல்ல, அவர் சூத்திரரிலும் கடையப்பட்டவர். அவருக்குத் துறவியாகும்
உரிமை கிடையாது. அவர் இந்து மதத்தைப்போதிக்கவில்லை. அவர் இந்து மதத்தில் பிரதிநிதி
அல்ல என்றெல்லாம் பரப்ப ஆரம்பித்தனர். சுவாமிஜி இதற்கெல்லாம் எந்த மறுப்பும் சொல்லவில்லை. கடைசியாக திரைலோக்யர்
எழுதியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் எழுதினார்,
சுவாமி விவேகானந்தரும் அவருடன் வந்தவர்களும் கோயிலிலிருந்து
துரத்தியடிக்கப் பட்டனர். ஆனால் போலா நாத்( கோயில் பொருளாளர்) கூறுவது போல் நேரடியாக
அவர்களைத் துரத்த வில்லை. அவர்களை வரவேற்க நானும்
செல்லவில்லை, யாரையும் அனுப்பவுமில்லை. அவ்வளவு தான். மேலை நாடுகளுக்குச் சென்றும்,
தன்னை ஓர் இந்து என்று சொல்லிக்கொள்கின்ற ஒருவரை
வேறு எதுவும் செய்ய முடியாவிட்டாலும் பார்க்காமலாவது இருக்கலாமே என்று நினைத்தேன்.
சுவாமியும் மற்றவர்களும் கோயிலிலிருந்து புறப்படும்போது, அவர்கள் என்னைச் சந்திக்க
முடியாது என்பதையும் போலாநாத் அவர்களுக்குத் தெரிவித்தார். கோயில் விக்கிரகத்திற்குப்
பரிகார அபிஷேகம் செய்ய வேண்டும் என்று நீங்கள் கூறியது உண்மைதான்.
அது மட்டுமல்ல, இனி சுவாமிஜி தட்சிணேசுவரக் கோயிலுக்குள்
செல்லக்கூடாது என்றும் ஆணையிட்டார் திரைலோக்கியர். இது சுவாமிஜியைச் சற்று கவலையுறச்செய்தது.
அவரது வாழ்வுடன் பின்னிப் பிணைந்த இடம் தட்சிணேசுவரம். அங்கே போகக்கூடாது என்றால்............
சுவாமிஜியின் சிந்தனைகள் சுழன்றன. ஆனாலும் அவர் ஒரு துறவி, அதற்கும் மேல் ஒரு பூரண
ஞானி. எனவே வருவது வரட்டும் என்று அனைத்தையும் குருதேவரிடம் ஒப்படைத்துவிட்டார்.
ஆனால் தமக்கு
இடப்பட்டுள்ளதடை உத்தரவின் காரணமாக குருதேவரின் பிறந்த நாள் விழா கொண்டாடுவது தடைபடுமோ
என்று அஞ்சினார் சுவாமிஜி. ஏனெனில் இது வரை ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி தட்சிணேசுவரத்தில்
தான் நடத்தப் பட்டு வந்தது. சற்றே நொந்த மனத்துடன், இந்தவருடம் ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி
விழா கொண்டாட இயலாது. நான்மேலை நாடுகளுக்குச்சென்று வந்ததால் ராசமணியின் தோட்ட உரிமையாளர்கள்
என்னை உள்ளே விட மாட்டார்கள்” என்று எழுதினார் சுவாமிஜி.
-
தீமையிலும் நன்மை
-
நன்மை கலவாத தீமையில்லை. தீமை கலவாத நன்மையும் இல்லை.
இது உலகின் இயல்பு. அதனால் தான் மகான்கள் தீமையும் வேண்டாம். நன்மையும் வேண்டாம் என்று
இரண்டையும் கடந்து செல்ல முயற்சி செய்கின்றனர். ஆனால் உலகில் சில பணிகள் நடைபெற வேண்டுமானால்
இரண்டையும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டியுள்ளது. இறைவனைச் சார்ந்து பணிகளைச்செய்து கொண்டே
போகும் போது வருகின்ற தடைகளும் நன்மையிலேயே நிறைவுறுகின்றன. பிராமணருக்கெல்லாம் பிராமணரும்,
ஆச்சாரியர்களுக்கெல்லாம் ஆச்சாரியரும், குருவுக்கெல்லாம் குருவும், இறைவனே அவதரித்து
வந்த மகாபுருஷரும் ஆகிய ஸ்ரீராமகிருஷ்ணரே எந்த நரேந்திரரை மதித்துப்போற்றினாரோ, ஒவ்வொரு
பிராமணனும் அதிகாலையில் போற்றும் ஏழு ரிஷிகளில் ஒருவரின் அவதாரம் என்று யாரைப் புகழ்ந்தாரோ
அந்த சுவாமிஜியைக் கோயிலுக்குள் வரக் கூடாதென்று தடை செய்த ஒருவரைப் பற்றி என்ன சொல்ல
முடியும்?
ஆனால் இதன் வாயிலாக மாபெரும் பணி ஒன்று துரிதப் படுத்தப்பட்டது.
கல்கத்தாவில் மடம் ஏற்பட்டு விடுமானால் என் கவலை தீர்ந்து விடும். இது நடந்து விட்டால்,
வாழ்நாள் முழுவதும் எதற்காகக் கஷ்டநஷ்டங்களை
அனுபவித்தேனோ அந்தப் பணி என் உடல் மறைந்த பிறகும் தொடர்ந்து நடைபெறும் என்பது உறுதியாகிவிடும்
என்று எழுதினார் சுவாமிஜி. ஒரு நிரந்தர மடத்திற்கான பணியை உடனடியாகத் துரிதப்படுத்தினார்
சுவாமிஜி. நமது நிலத்தில் விழாவை நடத்த வேண்டும். எது வந்தாலும் சரி, உனது முதல் வேலையும்
முக்கிய வேலையும் இதுவேஎன்பதை மனத்தில் வைத்துக்கொள். என்று பிரம்மானந்தருக்கு எழுதினார்
அவர்.
சுவாமிஜியின்
இந்தியச்சொற்பொழிவுகள் என்றல்ல, அனைத்துச் சொற்பொழிவுகளிலும், ஏன் அவரது வாழ்க்கை முழுவதுமே
படர்ந்து நிற்கின்ற ஒரு கருத்து ”மனிதன்” மதம் என்றஒன்று இருந்தால் அது
மனிதனுக்கு உதவ வேண்டும். ஆன்மீகம்
என்ற ஒன்று இருந்தால் அது மனிதனுக்கு உதவ வேண்டும். விஞ்ஞானம் என்ற ஒன்று இருந்தால்
அது மனிதனுக்கு உதவ வேண்டும். அரசியல் என்ற ஒன்று இருந்தால் அது மனிதனுக்கு உதவ வேண்டும். மனிதனை, அவன் இருக்கின்ற
இடத்திலிருந்து முன்னேற உதவாத எதையும் அவர்
ஏற்றுக் கொண்டதில்லை. எனவே ”சேவை” என்பதைத் தாரக மந்திரமாக வைத்தார்
அவர்.
ஆனால் சேவை- தர்மம் என்ற கருத்தைப் பலரால் ஏற்றுக்
கொள்ள முடியவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரை மேலோட்டமாகப் படிப்பவர்களும் அவர் இத்தகைய கருத்தைப்போதிக்க
வில்லை என்று தான் வாதிட முற்படுவார்கள். ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்கள் பலரால் கூட சேவைக்
கருத்தை முதலில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இது பற்றி ஏற்கனவே கண்டோம்.
இப்படித்தான் ஒரு நாள் ம- சுவாமிஜியிடம், சேவை தான
தர்மம் செய்தல், உலகிற்கு நன்மை செய்தல் என்றெல்லாம் நீ பேசுகிறாய். இந்த உலகமே மாயை
என்னும் போது இவையும் அந்த மாயையின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை தானே! வேதாந்தமோ, மாயையின்
தளைகளை வெட்டி எறிந்து முக்தி பெற வேண்டும் என்பதை அல்லவா மனித வாழ்க்கையின் நோக்கமாக
வைத்துள்ளது. நீ போதிக்கின்ற சேவையும் அது போன்ற மற்றவையும் மனிதனை மேலும் மேலும் இந்த
மாய உலகில் அல்லவா கட்டிப்போடும்? என்று கேட்டார். கணம் கூட தாமதிக்காமல் சுவாமிஜியின்
பதில் வெளி வந்தது. நீங்கள் கூறுகின்ற முக்திக் கருத்து மட்டும் மாயைக்கு வெளியிலா
உள்ளது? மனத்தில் எழும் எண்ணமோ கருத்தோ எதுவானாலும் அது மாயை வசப்பட்டது தானே? ஆன்மா
ஒரு போதும் கட்டிற்குள் இல்லை. அது எப்போதும் சுதந்திரமானது என்றல்லவா வேதாந்தம் போதிக்கிறது!
இதில் யாருக்குத் தளைகள் , யார் அதை வெட்டுவது, யாருக்கு முக்தி? ம- மௌனமானார்.
சேவை லட்சியத்திற்காக ஓர் இயக்கம்
--
பல நாடுகளுக்கு நான் பயணம் செய்ததில், இயக்க ரீதியாகச்
செயல்படாமல் மேன்மையான , நிரந்தரமான எந்தப் பணியையும் செய்ய முடியாது என்ற முடிவிற்கு
வந்துள்ளேன்.- இந்தக் கருத்து தான் சுவாமிஜி ராமகிருஷ்ண மிஷனை ஆரம்பிப்பதற்கு அடிப்படையாக
இருந்தது. மனிதகுலச்சேவையில் துறவிகளுடன் இல்லறத்தாரையும் இதில் இணைந்து செயல்பட வைப்பது
சுவாமிஜியின் நோக்கமாக இருந்தது. ஆனால் துறவிகள் இயக்கரீதியாகச்செயல்படுவதைப் பாரம்பரியத்துறவு
நெறி ஏற்றுக் கொள்வதில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளால் அத்தகைய ஒரு முயற்சியைச் செய்தார்
சுவாமிஜி. அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்புகளும் ஏளனங்களும் விமர்சனங்களும் எழுந்தாலும்,
அவற்றை மீறி அவர் வெற்றி பெற்றார். இப்போது அந்தச்சேவை- தர்மத்தில் இல்லறத்தாரை இணைக்க
விரும்பினார். ஸ்ரீராமகிருஷ்ணர் இது பற்றி வெளிப்படையாக எந்தக் கருத்தையும் கூறியதில்லை. எனவே தான் அவரது துறவிச் சீடர்கள்
பலர் இதனை எதிர்க்க நேர்ந்தது. இதனை உணர்ந்திருந்த சுவாமிஜி அன்னையின் ஆசிகளைப் பெற
விரும்பினார். அத்துடன், அன்னை தமது கருத்தை
வெளியிட்டால் அது மிகவும் உதவியாக இருக்கும் என்று கருதினார்.
அன்னையின் ஆசிகள்
--
எனவே டார்ஜிலிங்கிலிருந்து திரும்பி வந்த சில நாட்களிலேயே
அன்னையைக் காணச் சென்றார். அன்னை அப்போது கல்கத்தாவில் தங்கியிருந்தார். சுவாமிஜி தனியாகவே
அவரைக் காணச்சென்றார். அன்னையின் வீட்டில் தங்கியிருந்த யோகா னந்தரிடம் அவர், டாக்டர்கள்
என்னை வெளிநாட்டிற்குச் செல்ல விடவில்லை. அல்மோராவிற்குச் செல்லுமாறு கூறுகிறார்கள்.
போகுமுன் அன்னையைத் தரிசித்துப்போகலாம் என்று வந்தேன்” என்று கூறினார்.
அன்னையின் அறையில் சென்றதும் முதலில் சுவாமிஜி சாஷ்டாங்கமாக
வீழ்ந்து அன்னையைப் பணிந்தார். ஆனால் அன்னையின்
திருப்பாதங்களைத் தொடவில்லை. அங்கே நின்ற ஓரிருவரிடமும் அவரது பாதங்களைத் தொட வேண்டாம் என்று தடுத்து விட்டு
சுவாமிஜி சொன்னார். யாராவது தமது பாதங்களைத் தொட்டு விட்டால் அன்னை தம் எல்லையற்ற கருணையால்
அவர்களின் பாவங்களை ஏற்றுக் கொண்டு தாம் அதற்காகத் துன்புறுவார். வார்த்தைகளும் வேண்டாம்.
உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள், உங்கள் பிரார்த்தனைகளை மௌனமாக அவரிடம் சமர்ப்பியுங்கள்,
அவரது ஆசிகளை நாடுங்கள். அது போதும். ஏனெனில் உங்கள் உள்ளத்தின் ஆழங்களைஅவர் அறிவார்.
தம் மகனான அவரைச் சந்திக்கும்போது கூட நாணத் திரையிலிருந்து
அன்னை வெளி வரவில்லை. உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு நின்றிருந்தார். அவரிடம் நேராகப்பேசாமல் கோலாப்மா மூலமே பேசினார். அதாவது அன்னை மெல்லிய
குரலில் சொல்வார். அதை உரத்த குரலில் கோலாப்மா சுவாமிஜியிடம் தெரிவிப்பார்.
அன்னை கோலாப்மாவிடம் பேசலானார்-
அன்னை- டார்ஜிலிங்கில் உன் உடல்நிலை எவ்வாறு இருந்தது?
ஏதாவது முன்னேற்றம் இருந்ததா?
சுவாமிஜி- ஆம், அம்மா
அன்னை- குருதேவர் எப்போதும் உன்னுடன் இருக்கிறார்.
உலக நன்மைக்காக நீ இன்னும் பல காரியங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
சுவாமிஜி- குருதேவரின் கைகளில் நான் வெறும் ஒரு கருவியாக
இருப்பதைக் காண்கிறேன். மேலை நாடுகளில் பல மகோன்னதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் குருதேவரின் உபதேசங்களை ஏற்றுக்கொண்டு எனது பணியில்
உதவினர். இதையெல்லாம் பார்க்கும்போது என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. உங்கள் ஆசிகளுடனேயே நான் அமெரிக்கா
சென்றேன். நிகழாதவற்றையும் நிகழ்த்திக் காட்ட வல்லது உங்கள் அருள் என்பதையே எனது வெற்றி, எனக்குக் கிடைத்த மரியாதை எல்லாம் உணர்த்தின.
குருதேவர் அம்மா” என்று யாரை அழைத்தாரோ அந்தத்
தெய்வீக சக்தியே நான் அமெரிக்காவில் தனிமையில் துவண்ட போது என்னை வழி நடத்தியது.
அன்னை- அந்தத் தெய்வீக சக்தியும் குருதேவரும் வேறல்ல.
உன் மூலம் குருதேவரே இந்தப் பணிகளை எல்லாம் செய்கிறார். நீ அவரது தனி அன்பிற்குரிய
சீடனும் மகனும் அல்லவா! அவர் தாம் உன்னை எவ்வளவு நேசித்தார்! நீ உலகிற்கு உபதேசிப்பாய்
என்பதைக் கூட அவர் ஏற்கனவே கூறியிருந்தாரே!
சுவாமிஜி-
குருதேவரின் செய்தியைப் பரப்புவதே என் பணி. அதற்காக
நிலையான இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க எண்ணுகிறேன்.
ஆனால் நான் நினைக்கின்ற வேகத்தில் அது நடைபெறாதபோது மனம் கலங்குகிறது.
சுவாமிஜி இதைக் கூறி முடித்ததும் அன்னை நேரடியாகவே
அவரடம் சொன்னார், கலங்காதே, நீ செய்பவையும்
செய்யப்போகின்றவையும் என்றென்றும் நிலைத்து நிற்கும். இதைச் செய்வதற்காகவே நீ
பிறந்துள்ளாய். தெய்வீக ஞானத்தை வழங்குகின்ற குருவாக உன்னை ஆயிரக்கணக்கானோர் போற்றுவர்.
உனது ஆவலை விரைவிலேயே குரு தேவர் நிறைவேற்றி வைப்பார். இது உறுதி. நீ செய்ய விரும்புகின்ற
பணி மிக விரைவாக நடைபெறப்போவதை நீ காண்பாய்.
பிறகு சுவாமிஜிக்கு அன்னை பிரசாதம் அளித்தார். ஜெய்
மா, ஜெய் மா ( அன்னையே போற்றி) என்று கூறியபடி மீண்டும் அன்னையை விழுந்து வணங்கினார்
சுவாமிஜி.
No comments:
Post a Comment