சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-25
🌸
ஸ்ரீராமகிருஷ்ணரை
மையமாகவைத்து
-
இந்த பணிகள் அனைத்தும் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருப்பெயரில்,
அவரை மையமாக வைத்து நடைபெற வேண்டும்.
மைசூரிலும் மற்ற இடங்களிலும் பணம் திரட்டி சென்னையில்
ஒரு கோயில் கட்ட முயற்சி செய். அங்கு ஓர் நூல்
நிலையம் இருக்க வேண்டும். அலுவலகத்திற்காகவும், துறவிகளான பிரச்சாரகர்களுக்காகவும்,
எதிர்பாராமல் வருகின்ற வைராகிகளுக்காகவும்
சில அறைகள் இருக்க வேண்டும்.
மிக எளிய வழி இது தான். குடிசையொன்றை அமர்த்த வேண்டும்.
அதை ஸ்ரீகுருமகராஜின் கோயிலாக்க வேண்டும்.
ஏழைகள் அங்குவரட்டும். காலையிலும் மாலையிலும்
அங்கு கதாகாலட்சேபம் நடைபெறவேண்டும். நீ கற்பிக்க விரும்புகின்ற அனைத்தையும்
அவர்களுக்கு இதன் மூலம் கற்பித்து விடலாம். அவர்களே கோயிலைப் பராமரிக்கத் தொடங்குவார்கள்.
அந்தக் குடிசைக்கோயிலே சில ஆண்டுகளில் பெரிய
இயக்கமாக வளர்ந்து விடவும் கூடும். நிவாரணப்பணிக்குச் செல்பவர்கள் முதலில் ஒவ்வொரு
மாவட்டத்திலும் மையமான ஓர் இடத்தை த்தேர்ந்தெடுத்து இத்தகைய குடிசைக்கோயில் ஒன்றை ஆரம்பிக்கட்டும்.
அங்கிருந்து தான் நம் முடைய சிறு பணிகள் யாவும் தொடங்கிச் செல்ல வேண்டும்.
இந்தக்கோயிலில் வழிபடு தெய்வமாக ஸ்ரீராமகிருஷ்ணர்
இருக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார் அவர்.
இந்தியாவும் சனாதன தர்மமும் நெடுங்காலமாகத் துயரப்பட்டு
வந்துள்ளன. ஆனால் கடவுள் கருணைக்கடல். மீண்டும்
ஒரு முறை அவர் தம் குழந்தைகளைக் கைதூக்கி விட வந்துள்ளார். வீழ்ச்சியுற்றுக் கிடக்கின்ற இந்தியா எழுந்து நிற்பதற்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு
தரப்பட்டுள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகளில் அமர்வதன் மூலமே இந்தியா முன்னேற முடியும்.
அவரது வாழ்க்கையையும் உபதேசங்களையும் எங்கும் பரப்ப வேண்டும், இந்து சமுதாயத்தின் ஒவ்வொரு
மயிர்க்காலினூடேயும் அவற்றை ஊடுருவச்செய்ய வேண்டும்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் பெருவாழ்வு அசாதாரணமான தொரு கலங்கரை
விளக்கம். அதன் ஒளியில் இந்து மதத்தின் முழுப் பரிமாணத்தையும் உண்மையாக அறிந்துணர முடியும்.
சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள ஞானத்திற்கெல்லாம் ஒரு திரண்ட வடிவமாக அவர் விளங்கினார்.
ரிஷிகளும் அவதார புருஷர்களும் எதைப்போதிப்பதற்கு உண்மையாகவே விரும்பினார்களோ, அதை அவர்
தமது வாழ்க்கையில் காட்டினார். புத்தகங்கள் கொள்கைகள் மட்டுமே அவரோ அவற்றை அனுபூதியில்
அறிந்தவராகத் திகழ்ந்தார்.ஐம்பத்தொரு ஆண்டுகளில் அந்த அவதார புருஷர் ஐயாயிர வருடத்தின் தேசிய ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து
முடித்தார். அதன் பயனாக எதிர்காலத் தலைமுறையினருக்குத் தம்மை ஓர் உதாரண புருஷராக உயர்த்திக்கொண்டார்.
இங்கு நாம் ஒன்றைத்தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே இந்து மதத்தில் வழிபடப்பட்டு வருகின்ற தெய்வங்களின் எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டுவதற்காக சுவாமிஜி ஸ்ரீராமகிருஷ்ணரை
நம் முன்னால் வைக்கவில்லை. மாறாக ஓர் உதாரண
புருஷராக அவர் ஸ்ரீராமகிருஷ்ணரை அடையாளம்
காட்டுகிறார். ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற தனிநபர் அல்ல, ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற தத்துவமே இங்கு குறிப்பிடப்படுகிறது.ஸ்ரீராமகிருஷ்ணர்
வாழ்ந்த வாழ்க்கை, போதித்த லட்சியங்கள், ஆகியவை நமது வாழ்க்கையாக, லட்சியங்களாக ஆக
வேண்டும். அதுவே உண்மையான ஸ்ரீராமகிருஷ்ண வழிபாடு.
அவரது பெயர் பரவுகின்ற அளவுக்கு நல்லது.ஆனால் ஒரு
விஷயம். மகாபுருர்கள் விசேஷ போதனை செய்வதற்காக உலகிற்கு வருகின்றனர். பெரும்புகழுக்காக
அல்ல. ஆனால் சீடர்கள் அவர்களின் உபதேசத்தைத் தூக்கி எறிந்து விட்டு, அவரது பெயரை வைத்து
அடித்துக் கொள்கிறார்கள். இது தான் உலகத்தின் வரலாறாக உள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணரின் பெயரை
மக்கள் ஏற்கிறார்களா, இல்லையா? என்பது பற்றி
நான் கவலைப்படவில்லை. ஆனால் அவரது உபதேசங்களும் வாழ்வும் உலகமெங்கும் பரவுவதற்காக என் உயிரையும் விடுவதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று எழுதுகிறார் சுவாமிஜி.
மேலை நாட்டில்
சுவாமிஜியின் அனுபவங்கள் வளர வளர அவர் இந்தியாவிற்கான தமது பணித்திட்டத்திலும் சில மாற்றங்களைச் செய்ய
விரும்பினார்.
பாமர மக்களுக்காக
நான் வைத்திருந்த கல்வித் திட்டத்தைத் தற்சமயத்திற்கு விட்டு விட்டேன். அது படிப்படியாக
உருவாகும். இப்போது நான் வேண்டுவது, ஆர்வத் தீ கொழுந்து விட்டு எரிகின்ற பிரச்சாரகர்
கூட்டம் ஒன்றையே, சென்னையில் நாம் கல்லூரி ஒன்று நடத்த வேண்டும். அதில் மத ஒப்புமை,
சம்ஸ்கிருதம், வேதாந்தத்தின் பல்வேறு நெறிகள், சில ஐரோப்பிய மொழிகள் இவற்றைக் கற்பிக்க வேண்டும். ஓர் அச்சகம்
வேண்டும். ஆங்கிலத்திலும் , மாநில மொழிகளிலும் பத்திரிகைகள் வெளியிடப்பட வேண்டும்.
இது தான் தருணம், இதைவிட்டால் எப்போதும் காலம் கைகூடாது.
பல்வேறு கோணங்களில் விஷயங்களை ஆராய்ந்த பிறகு இப்போது என் மனம் கீழ்வரும் திட்டத்தில்
முனைந்து நிற்கிறது.முதலில் சென்னையில் மத சம்பந்தமான கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். பிறகு அதன் எல்லையைப்
படிப்படியாக வளர்க்க வேண்டும். அங்கே இளைஞர்களுக்கு, வேதங்கள், அதன் பல்வேறு விளக்கவுரைகள், தத்துவங்கள் இவற்றுடன்
உலகின் பிற மதங்களைப் பற்றிய கல்வியும் அளிக்க வேண்டும். அந்தக் கல்லூரியின் ஓர் அங்கமாக
ஆங்கிலத்திலும் வட்டார மொழியிலும் ஒரு பத்திரிகையும் ஆரம்பிக்கப் பட வேண்டும்.
பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்பதில் சுவாமிஜி
தீவிரமாக இருந்தார்.
எப்படியாவது பத்திரிகை வெளியிட வேண்டும் என்று எனக்குத்தோன்றுகிறது.
நீ வெளியிடம் பத்திரிகை ஏனோ, தானோ என்றில்லாமல் உறுதியாக, உயர்தரம் உடையதாக இருக்கவேண்டும்.
நான் உனக்குப் பணம் அனுப்புவேன்.........வேலையை ஆரம்பி. இங்கே நான் சில சந்தாதாரர்களைச்
சேர்த்து த் தருவேன். நானும் அதில் கட்டுரைகள் எழுதுகிறேன். அவ்வப்போது அமெரிக்க எழுத்தாளர்கள்
சிலரை வைத்து எழுதச்செய்தும் அனுப்புவேன். நீயும் அங்கே சிறந்த உறுதியான எழுத்தாளர்
கூட்டமொன்றை ச்சேர்த்துக்கொள்.
பிரம்ம வாதின்
-
சுவாமிஜியின்
கடிதங்கள் இந்தியாவில் முக்கியமாக சென்னைக்கும்
கல்கத்தாவிற்கும் எழுதப்பட்டன. சென்னையில் அளசிங்கர் முதலானோர் சுவாமிஜியின் ஆணைப்படி உடனடியாக ”ராமகிருஷ்ண சங்கம்” ஒன்றை அமைத்து செய்ல்படத் தொடங்கினர். சுவாமிஜி விரும்பிதற்கு
ஏற்ப மற்றொரு பணியும் உடனடியாக தொடங்கப் பட்டது. அது ”பிரம்மவாதின்” என்ற ஆங்கிலப் பத்திரிகை. இதற்கான நோக்கத்தைப் பின்வருமாறு
எழுதினார் அளசிங்கர்.
சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டுதலில் ”பிரம்ம வாதின்” என்ற பத்திரிகை ஆரம்பிப்பதாக முடிவு செய்யப் பட்டுள்ளது.
இந்து தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட வேதாந்த
ஞானத்தை விளக்குதல், மனித குலத்தின் சமுதாய மற்றும் நல்லொழுக்க முன்னேற்றத்திற்காகப்
பாடு படுதல்- இவை இந்தப் பத்திரிகையின் நோக்கமாகும்......
1895 செப்டம்பர் 15-ஆம் நாள் பிரம்மவாதின் என்ற ஆங்கிலப்
பத்திரிகையின் முதல் இதழ் அச்சானது. அளசிங்கர் அதன் ஆசிரியர் ஆனார். சேவையே உருவானவராக
பணிவின் வடிவமாக இருந்த அளசிங்கரின் பெயர் பத்திரிகையில் எங்குமே அச்சிடப் படவில்லை.
இந்தப் பத்திரிகைக்கான ஆசியுரையில் சுவாமிஜி கீழ்வருமாறு எழுதினார்.
முக்திக்கு வழியே இது தான் என்பது போல் இந்த பிரம்மவாதினின்
வெற்றிக்காக வேலை செய். முழுநம்பிக்கை வேண்டும். இந்தப் பத்திரிகை உனது இஷ்ட தெய்வம்
போல் ஆகட்டும். உனது லட்சியத்தை எப்படி அடைவது என்பது அப்போது தான் உனக்குப் புரியும்.
சுவாமிஜியின் ஆசிகளை நெஞ்சில் பதித்து பணி புரிந்தார்
அளசிங்கர். குறைந்த வருமானம் உடையவராக இருந்தும் தமது வீட்டுப் பிரச்சனைகள், மற்ற வேலைகள்
அனைத்தையும் மீறி வேலை செய்தார் அவர். சுவாமிஜி நியூயார்க், லண்டன், போன்ற இடங்களிலிருந்தும்
சந்தாதாரர்களைச்சேர்த்தார். அளசிங்கரின் மைத்துனரான பேராசிரியர் ரங்காச்சாரியர் மற்றும்
சென்னையிலுள்ள முக்கியமான பலர் பத்திரிகையில் எழுதினர். ஆரம்பத்தில் சி.ஜி. நரசிம்மாச்சார்,
ஆர். ஏ. கிருஷ்ணாமாச்சார்,ஜி.வெங்கடரங்க ராவ் ஆகியோர் பத்திரிகை வெளிவர உதவி செய்தனர்.
பல இளைஞர்களும் அளசிங்கருடன் இணைந்து பணியாற்றினர். ஒரு பக்கம் சங்கரர், ராமானுஜர்,
சதாசிவ பிரம்மேந்திரர், பதஞ்சலி ஆகியோரின் நூல்களின் மொழிபெயர்ப்பு, கான்ட் மதலான மேலைத் தத்துவ அறிஞர்களின்
படைப்புகள், முக்கியமான மதங்களைப் பற்றிய கட்டுரைகள், ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவிச் சீடர்கள்,
தர்ம பாலர் , மாக்ஸ் முல்லர் என்று பலரது கட்டுரைகள் ஆகியவற்றுடன் வெற்றிகரமாக பிரம்ம வாதின் பத்திரிகை நடைபெற்றது.
சுவாமிஜி ஆயிரம் தீவில் இருந்தபோது தாம் எழுதிய கவிதையான
”சன்னியாசி கீதத்தைத்” தமது முதல் படைப்பாக பிரம்ம வாதினுக்கு
அனுப்பினார். அவரது வழி காட்டுதலிலும், அளசிங்கரின் அயராத உழைப்பிலும், பிரம்மவாதின்
தொடர்ந்து வெற்றிகரமாக வெளிவந்தது. சுவாமிஜி இந்தப் பத்திரிகையின் மீது மிகுந்த நம்பிக்கை
வைத்திருந்தார். நிதி நிலைமை காரணமாக பத்திரிகையை நடத்திச்செல்வதற்குச் சிரமம் ஏற்பட்ட
போது சுவாமிஜி, பிரம்ம வாதினின்” மோசமான பொருளாதார நிலையை உனது
கடிதத்திலிருந்து தெரிந்து கொண்டேன். நான்
லண்டனுக்குத் திரும்பிச்சென்றதும் உதவ முயல்கிறேன். பத்திரிகையின் தரத்தைத்
தாழ்த்தி விடாதே. தொடர்ந்து அதை நடத்தி வா........... அன்புக் குழந்தாய். மிகப்பெரிய சாதனைகள் நிறைவேற உள்ளன. தைரியம் கொள், பிரம்ம வாதின் ஒரு பொக்கிஷம், அது அழியக்
கூடாது. அத்தகைய பத்திரிகையை எப்போதும் தனியார் உதவியால் தான் நிலை நிறுத்த வேண்டியுள்ளது
என்பது என்னவோ உண்மை தான். நாமும் அவ்வாறே செய்வோம். சில மாதங்களுக்குச் சமாளித்துக்
கொள். என்று எழுதினார். பல கடிதங்களில் அவர்
இந்தப் பத்திரிகைபற்றி குறிப்பிடுவதையும்,
தவறுகளைச் சுட்டிக் காட்டுவதையும் காண முடியும்.
பிரபுத்த பாரதம்
பிரம்ம வாதினின் தரம் மிகவும் உயர்ந்ததாக இருந்தது.
மதத்தைப் பற்றியும் தத்துவங்களைப் பற்றியும்
போதிய அறிவு உடையவர்களே அதனைப் படித்து புரிந்து கொள்ள இயலும். ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர்,
சுவாமிஜி, மற்ற தத்துவ அறிஞர்கள் போன்றோரின்
கருத்துக்கள் சாதாரண மக்களையும் சென்று அடைய வேண்டும் என்று விரும்பினார் அளசிங்கர்.
ஏனெனில் சாதாரண மக்களை அணுகுவது சுவாமிஜியின் ஒரு முக்கியமான நோக்கமாக இருந்தது. டாக்டர்
நஞ்சுண்ட ராவிடம் கலந்தாலோசித்து, இன்னொரு பத்திரிகை ஆரம்பிக்கலாம், என்று சுவாமிஜியிடம்
அனுமதிகோரினார் அளசிங்கர். சுவாமிஜிக்குப் புதிய பத்திரிகை ஆரம்பிப்பதில் அவ்வளவாக
விருப்பம் இல்லை. எனினும் இளைஞர்களின் உற்சாகத்திற்கு அணைபோட வேண்டாம் என்பதற்காக இசைவு
தந்தார். இந்தப் பத்திரிகைக்கு ”பிரபுத்த பாரதம்” என்று பெயர் வைக்கப்பட்டது. இதுவும்
ஆங்கில மாத இதழ். இளைஞரும் பேரறிஞருமான பி.ஆர். ராஜம் ஐயர் அதன் ஆசிரியர் ஆனார். பிரம்ம
வாதின் அச்சிடப் பட்ட அதே அச்சகத்தில் பிரபுத்த பாரதமும் அச்சிடப் பட்டது. 1896 ஜுலையில்
அதன் முதல் இதழ் வெளிவந்தது. அந்த நாட்களிலேயே இதற்கு 3, 000 சந்தாதாரர்கள் இருந்தார்கள்.
-
குழந்தைகள்
பத்திரிகை
டாக்டர் நஞ்சுண்ட ராவ் குழந்தைகளுக்காக ஒரு பத்திரிகை ஆரம்பிக்க விரும்பினார்.
அவரது பணியை உற்சாகப்படுத்தி சுவாமிஜி எழுதினார்.
சிறுவர் களுக்கான உங்கள் பத்திரிகைத் திட்டத்தை
நான் பூரணமாக ஆமோதிக்கிறேன். அதற்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.......... அது
வேறு எதையும் சாராததாச் செய்ய வேண்டும்...... சம்ஸ்கிருத இலக்கியம் முழுவதிலும் சிதறிக் கிடக்கின்ற அற்புதக் கதைகளை
மீண்டும் எழுதி மக்கள் ரசிக்குமாறு செய்வதற்குப்பெரிய வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பு
உங்கள் கற்பனைகளையெல்லாம் விட பிரமாதமானது.
உங்கள் பத்திரிகையின் ஒரு சிறப்பம்சம் அது.
நேரம் கிடைக்கும் போது நானும் எத்தனை முடியுமோ அத்தனை கவிதைகள் எழுதி அனுப்புகிறேன்.
விந்தை உலகின் ஆலிஸ்” போன்றஒரு சிறுவர் நூலைத் தாமே
எழுதவும் விரும்பியிருந்தார் சுவாமிஜி.
சுவாமிஜியின்
கருத்துக்கள் இவ்வாறு இந்தியாவில் முதன் முதலாகத் தமிழ் நாட்டில் செயல்வடிவம் பெறத் தொடங்கின. லோகோபகாரி” போன்ற பல தமிழ்ப் பத்திரிகைகளில் சுவாமிஜியின் சொற்பொழிவுகள்
தமிழில் வெளியிடப் பட்டன. மேலும், கிராமப் பகுதிகளிலும் அவரது கருத்துக்களைப் பரப்புவதற்கான
முயற்சி அவரது காலத்திலேயே தமிழ் நாட்டில்
நடைபெற்றது. நாட்டறம் பள்ளிக்கு அருகிலுள்ள வாணியம்பாடியைச் சேர்நதவர் திரு. வெங்கட சாமி நாயுடு. அவர் ஒரு சீர்திருத்த
வாதி. அவருக்கு ஆங்கிலம் தெரியாது. சுவாமிஜி அமெரிக்காவில் செய்த சொற்பொழிவுகளின் தமிழாக்கம்
பத்திரிகைகளில் வெளி வந்ததை அவர் காண நேர்ந்தது.
அவற்றாலும், அதில் பிரசுரிக்கப் பட்டிருந்த
சுவாமிஜியின் படத்தாலும் கவரப்பட்ட அவர், சுவாமிஜியின் கருத்துக்ளைப் பரப்புவதை
நோக்கமாகக் கொண்டார். அவருக்கு அபாரமான நினைவாற்றல் இருந்தது. சுவாமிஜியின் வீர முழக்கங்களை
எல்லாம் மனப்பாடம் செய்து கொள்வார், பிறகு அவரைப்போலவே உடையணிந்து மேடை மீது ஏறி நின்று
அவற்றை அப்படியே ஒப்பிப்பார். கடைசியில்” விவேகானந்தர் அமெரிக்காவில் இவ்விதம் பேசினார்” என்று முடிப்பார். இது மக்களைப் பெருமளவில் கவர்ந்தது.
சுவாமிஜியின் சேவை-தர்மக் கருத்தையும் செயல்படுத்தினார் வெங்கட சாமி. ஏழைகளுக்காக மிகவும் துயருற்ற அவர் அவர்களுக்காக பல பணிகள் செய்தார்.
அந்த நோக்கத்துடன் ”விவேகானந்த வேதாந்த சங்கம்” என்ற ஒன்றை ஆரம்பித்தார். அது
பற்றி பின்னாளில் சுவாமிஜிக்கு எழுதித் தெரிவிக்கவும் செய்தார். அதற்கு வாழ்த்துக்
கூறி சுவாமிஜி பின்வருமாறு எழுதினார்.
பெறுநர்,
கே. வெய்கட சாமி நாயுடு
அன்புடையீர்.
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. வேத மதத்தைப்
பரப்புவதற்காக நீங்கள் வெற்றிகரமாக ஒரு சங்கத்தை ஆரம்பித்திருப்பதற்கு எனது நல்வாழ்த்துக்களை
ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றிவாகை சூடட்டும்.
எல்லா அங்கத்தினருக்கும் எனது நன்றி. நல் வாழ்த்துக்கள்.
.இறைவனில் என்றும் உங்கள்
விவேகானந்த
சுவாமிஜியின் பாலத்திலேயே அவரது பெயரால் அவரது ஆசிகளுடன்
நிறுவப்பட்ட சங்கம் தமிழ்நாட்டைச்சேர்ந்த இது ஒன்றாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
தமது பெயரில் சங்கம் ஏற்பட்டுள்ளதை ஒரு கூச்சமாகக் கருதியதாலோ என்னவோ, சுவாமிஜி பெறுநர் பகுதியில் தமது
பெயரை முழுமையாக எழுதாமல் விவே. சங்கம் என்று எழுதியுள்ளார்.
இவ்வாறு பல்வேறு வழிகளில் சுவாமிஜியின் கருத்துக்கள்
இந்தியாவில் செயல்முறை வடிவம் பெறத் தொடங்கின.
ராமகிருஷ்ண
மடம்
-
இந்தப் பணிகள்
அனைத்திற்கும் மையமாகத்திகழ வேண்டுபவை
ராமகிருஷ்ண மடங்கள், ஆரம்பத்தில் வராகநகரிலும் பின்னர் ஆலம்பஜாரிலும் இயங்கி வந்த மடத்தில் வாழ்ந்த சகோதரத் துறவிகளுக்கு சுவாமிஜி பல கடிதங்கள்
எழுதினார். அவற்றில் அவர்களுடைய வாழ்க்கையை இறை வாழ்க்கையாக முற்றிலும் நிலைபெறச் செய்வதைவற்புறுத்தினார். ஸ்ரீராமகிருஷ்ணரின்
பெயரால் அமையவுள்ள இந்த மடம் மூன்று துறைகளில் கவனம்செலுத்த வேண்டுமென்று சுவாமிஜி
விரும்பினார். அவை- படிப்பு, பிரச்சாரம், , 2- சேவை
1- ஆன்மீக சாதனைகள்
இவற்றில்
சேவை என்பதை மிகவும் வற்புறுத்தினார் சுவாமிஜி. ஸ்ரீராமகிருஷ்ணரை மையமாக வைத்து பணிகள் யாவும் நடைபெற வேண்டும். வீடு வீடாகச்சென்று சேவைகளில்
ஈடுபட வேண்டும் என்றகருத்துக்களை அவர் மீண்டும் மீண்டும் கூறினார்.
இந்தச் சில விஷயங்களை நினைவில் வையுங்கள்.
1- நாம் துறவிகள்- பக்தி,போகம், முக்தி அனைத்தையும்
துறந்தவர்கள்.
2- 2- மிகத் தாழ்ந்தவர்கள்உட்பட உலகினர் அனைவருக்கும்
நன்மை செய்வதே நமது விரதம்- அதனால் முக்தியோ
நரகமோ எது வேண்டுமானாலும் வரட்டும்.
3-- ஸ்ரீராமகிருஷ்ண
பரமஹம்சர் உலகின் நன்மைக்காக வந்தார். அவரை மனிதன் என்றோ, கடவுள் என்றோ அவதார புருஷர் என்றோ சொல்லட்டும். அவரவர்
அறிவிற்கு எட்டுவது போல் அவரை ஏற்றுக் கொள்ளலாம்.
4- அவரை வணங்குபவர்கள் அதே கணம் தங்கமாக மாறி விடுவார்கள். இந்தச் செய்தியுடன்
வீடு வீடாகச் சொல்லுங்கள் பார்க்கலாம். அமைதியின்மை எல்லாம் போய்விடும். பயத்தை விட்டு
விடுங்கள், பயத்திற்கு இடமெங்கே? இது வரை அவரது திருநாமத்தைப் பரவச் செய்துள்ளீர்கள்,
உங்கள் மகிமை பல இடங்களிலும் பரவியுள்ளது. மிகவும் நல்லது. இப்போது அவற்றை ஓர் அமைப்பின்
மூலம் செய்யுங்கள். இறைவன் உங்களுடன் இருக்கிறார். தைரியமாக இருங்கள்.
5- இதற்குள் ராமகிருஷ்ண-விவேகானந்த லட்சியங்களால் கவரப்பட்டு இளைஞர்கள் பலர் தங்கள் வாழ்க்கையை இறைவனுக்காகவும்,
தாய்த் திரு நாட்டிற்காகவும் அர்ப்பணிக்க முன்வந்து மடத்தில் சேர்ந்திருந்தனர்.
6- நிர்வாகிகளைப் பொறுத்தவரை ஒரு சுழற்சி முறை நியமனத்தை
அவர் விரும்பினார். முதலில் பிரம்மானந்தர்
தலைவர், நிர்மலானந்தர் செயலர் மற்றும் பொருளாளர், சதானந்தர் நூலகர், என்று ஆரம்பிக்கலாம்.
ராமகிருஷ்ணானந்தர், அபேதானந்தர், துரியானந்தர், திரிகுணாதீதானந்தர், இவர்கள் வகுப்புகளையும்
பிரச்சாரப் பணிகளையும் பார்த்துக் கொள்ளலாம். புத்தர் தமது மடத்தை நிர்வகித்தது போல் நிர்வாகப்பொறுப்புகள் இருக்க வேண்டும் என்றெல்லாம்
பல அறிவுரைகளை வழங்கினார் சுவாமிஜி.ஆலம்பஜார் மடத்தில் இருப்பவர்களும் பணியில் ஆர்வத்துடன்
ஈடுபடுவதை அறிந்து மிகவும் மகிழ்ந்தார் அவர்.
7- இத்தகைய மடங்கள் நாடெங்கிலும் உருவாக வேண்டும் என்று
விரும்பினார் சுவாமிஜி. நமது கல்கத்தா மடம் அமைந்துள்ள முறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மடம் அமையும்போது தான் எனது ஆசை நிறைவு
பெறும்.
8- பெண்களுக்கான பணி பற்றியும் சுவாமிஜி ஆலோசித்து வந்தார். அன்னை ஸ்ரீசாரதா
தேவியை மையமாக வைத்து உடனடியாகச்செயல்பட வேண்டும் என்பது அவரது திட்டமாக இருந்தது.
அவர் எழுதுகிறார், அன்னை சாரதா தேவிக்கு ஓரிடம் நிறுவ முடியுமானால் என் கவலை பேரளவிற்குக்
குறைந்து விடும், புரிகிறதா? இரண்டு, மூன்று ஆயிரம் ரூபாய்க்கு ஏதாவது இடம் பாருங்கள்,
இடம் பெரியதாக இருக்கட்டும். உறுதியான ஒரு கட்டிடம் வேண்டும்,நமது விஷயம் பற்றிக் கவலையில்லை,
எல்லாம் மெல்ல மெல்ல வரும். ஓர் இடம் அமைந்துவிட்டால் அன்னையை மையமாகக்கொண்டு கௌரிமா,
கோலாப்மா எல்லோரும் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தட்டும்.
9- இவ்வாறு மடங்கள் , சேவை, பத்திரிகை என்று சுவாமிஜியின்
திட்டங்கள் வளரத்தொடங்கின. நாடு அதன் நீண்ட
தூக்கத்திலிருந்து கண் விழிக்கத்தொடங்கியது. இப்படி தயாரான நிலத்தில் தமது செய்தி என்ற
விதையைத் தூவவே சுவாமிஜி தாயகம் நோக்கி வந்தார்.
இந்தியாவை நோக்கி புறப்படுகிறார்-
மூன்றரை
வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து புறப்பட்டவர் சுவாமிஜி.தேவியின் அருள், குருவின்
ஆணை, அன்னையின் ஆசிகள், இவற்றைத் துணையாகக்கொண்டு, தன்னந்தனியாக ஒரு தொலைதூர தேசத்தில்
சென்று, ஒரு மாபெரும் பணியை ஆற்றிவிட்டு இன்று திரும்புகிறார் அவர். அன்று அந்தப் பணி ஒரு வேளை சுவாமிஜியின் வெற்றி என்ற அளவிற்கே கருதப்பட்டிருக்கலாம். ஆனால்
அந்த வெற்றி இந்திய ஆன்மீகத்தின் வெற்றி, உலகின் போக்கிலேயே ஒரு புதிய திருப்பத்தைக்கொண்டு
வந்த மாபெரும் பணி என்பதை இன்றைய வரலாறு நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
நாளை இன்னும் சிறப்பாக அறியப்படும் என்பதிலும் ஐயமில்லை. சுவாமிஜிக்கும் இது தெரிந்தே
இருந்தது. தமக்கு குருதேவரால் அளிக்கப் பட்ட
பணியை இயன்றஅளவு செம்மையாக நிறைவேற்றிய திருப்தியுடன் அவர் புறப்பட்டார்.
லண்டனிலிருந்து ரயில் மூலம் 1896 டிசம்பர் 16-இல்
புறப்பட்டார் சுவாமிஜி. ஆங்கிலேய நண்பர்கள் பலர் ரயில் நிலையத்திற்கு வந்து அவரை வழியனுப்பினர்.
சுவாமிஜியுடன் சேவியர் தம்பதிகள் இந்தியாவிற்குப் புறப்பட்டனர். இந்தியாவிற்கு வருவதாக
இருந்த குட்வின் வழியில் சேர்ந்து கொள்வதாக க் கூறினார்.சுவாமிஜி மற்றும் சேவியர் தம்பதிகளின்
இந்தியப் பயணம் தொடங்கியது.
ஆல்ப்ஸ்
மலையைக் கடந்து பிரான்ஸ் வழியாக ரயில் இத்தாலியை
அடைந்தது. நீண்ட பாரம்பரியம் உடைய இத்தாலியின்
கட்டிடக்கலையும் மற்ற அழகுகளும் சுவாமிஜியின்
கருத்தைக் கவர்ந்தன. மிலானில் உள்ள சர்ச், பிசா நகரின் சாய்ந்த கோபுரம், லியனார்டோ
டா வின்சியின் பிரபல ஓவியமான ”கடைசி விருந்து” பிளாரன்சிலுள்ள சரித்திரப் பிரசித்தி
வாய்ந்த இடங்கள், கலைக் கூடங்கள், ஆகியவை சுவாமிஜியைப் பரவசப்படுத்தின.
ரோமில் ஒரு
வாரம் கழித்தார் சுவாமிஜி. அங்கே அவர் ஹேல் தம்பதிக்ளைச் சந்தித்தார். அவர்கள் அங்கு
சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தனர். ரோமின் வரலாற்றுப்புகழ் வாய்ந்த இடங்களை அனைவருமாகக்
கண்டு களித்தனர். சுவாமிஜியின் வரலாற்று அறிவு அனைவரையும் பிரமிக்கச்செய்தது. ஒவ்வோர்
இடங்களைப் பற்றியும் அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் பற்றியும் ரோம நாகரீகத்தைப்
பற்றியும் சுவாமிஜி பேசியதைக்கேட்ட குழுவில்
ஒருவர், சுவாமிஜி, உங்களுக்கு ரோமின் ஒவ்வொரு கல்லையும் ஏற்கனவே தெரியும் போல் இருக்கிறதே” என்று வியப்புடன் கூறினார்.
அது கிறிஸ்மஸ் வேளை. நாடு முழுவதும் விழாக்கோலம்
பூண்டிருந்தது. குழந்தை ஏசுவை மடியில் ஏந்திய மேரியின் சிறிய திருவுருவங்கள் எங்கும் விற்பனைக்காக வைக்கப்
பட்டிருந்தன. பல்வேறு கடைகளும் வியாபாரமுமாக அது இந்திய விழாக்கோலத்தை சுவாமிஜிக்கு
நினைவூட்டியது.
வாடிகனிலுள்ள செயின்ட் பீட்டர் சர்ச் சுவாமிஜியை
மிகவும் கவர்ந்தது. செயின்ட் பால், செயின்ட் பீட்டர், போன்ற புனிதர்கள் போதித்த அந்த
இடத்தில் சுவாமிஜி அமைதியாக தியானத்தில் ஆழ்ந்தார். அந்த சர்ச்சின் கட்டிக்கலை நுணுக்கங்களை ஆராய்ந்தபோது ஒருவர், சுவாமிஜி, ஒரு
சர்ச்சில் இவ்வளவு ஆடம்பரமும் டாம்பீகமும் தேவையா? லட்சக்கணக்கான ஏழைகள் பசியில் வாடும் போது இங்கே பணம் இப்படி செலவழிக்கப்
படுகிறதே! என்று ஆதங்கத்துடன் கூறினார். அதற்கு சுவாமிஜி பதிலளித்தார்.
ஏன், கடவுளுக்கு
எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இந்த ஆடம்பரங்களின் மூலம் ஏசுநாதரது வாழ்க்கையின்
ஆற்றலை மக்கள் புரிந்து கொள்வார்கள்.தமக்கென எதுவுமற்ற ஏழையாக இருந்தாலும், தமது ஆளுமையின் ஆற்றலால் அவர்
மனித குலத்திற்கு இவ்வளவு கலைவளத்தை நல்கியுள்ளார்.ஆனால் ஒன்று, அகத்தூய்மை இருந்தால்
மட்டுமே புறப் பயிற்சிகள் பலனுள்ளவையாகும். நீங்கள் செய்கின்ற எதுவும் உங்கள் அகவாழ்க்கையின்
வெளிப்பாடாக இல்லாவிட்டால் அதனை உடனே சற்றும் கருணை காட்டாமல் நசுக்கி எறியுங்கள்.
ஆனால் சுவாமிஜியின் இந்த மனநிலை மறுநாள் நீடிக்கவில்லை. சர்ச்சின் ஆடம்பரம் அவரைச் சற்று
வேதனை கொள்ளவே செய்தது. அன்று கிறிஸ்மஸ் நாள். அவர் பீட்டர்ஸ் சர்ச்சின் முக்கியப்
பிரார்த்தனையில் சேவியர் தம்பதிகளுடன் கலந்து கொண்டார். சர்ச்சின் ஆடம்பரத்தையும் டாம்பீகத்தையும்
கண்டபோது, இது ஏசுவின் வழியா? தலைசாய்க்க இடம் இல்லாமல் வாழ்ந்த அந்த எளிய மனிதரைப் பின்பற்றுபவர்களா இவர்கள்? என்று
சேவியர் தம்பதிகளிடம் முணுமுணுத்தார் அவர்.
1896 டிசம்பர்
30- இல் நேப்பிள்ஸிலிருந்து கப்பலில் புறப்
பட்டார்கள். கப்பல் போர்ட் துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளை. சுவாமிஜிக்கு
வினோதமான கனவு ஒன்று வந்தது. தாடி வைத்திருந்த ஒரு முதியவர் அவரது கனவில் தோன்றினார்.
அந்தக் கனவைப் பற்றி சுவாமிஜி அடிக்கடி கூறியதுண்டு, இங்கிலாந்திலிருந்து திரும்பி
வரும்போது வினோதமான கனவு ஒன்று கண்டேன். மத்தியதரைக் கடல் வழியாக எங்கள் கப்பல் வந்தது. நான் தூங்கிக்கொண்டிருந்தேன்.
அப்போது வயதான ரிஷி போன்ற ஒருவர் என் கனவில் தோன்றினார். அவர் என்னிடம், எங்கள் பழைய நிலையை
நீ எங்களுக்கு மீட்டுத் தர வேண்டும். நாங்கள் இந்தியாவின் புராதன ரிஷிகளாகிய தேரா புத்தர்களின்
வழி வந்தவர்கள். நாங்கள்போதித்த உண்மைகளையும் கருத்துக்களையும் கிறிஸ்தவர்கள், ஏசு
என்பவர் போதித்ததாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் ஏசு என்று ஒருவர் பிறக்கவேயில்லை.
இந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தால் அதற்கான ஆதார உண்மைகள் கிடைக்கும்” என்றார். உடனே நான், எந்த இடத்தைத்தோண்ட
வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அவர் தருக்கியைச்சார்ந்த
ஒரு பகுதியைக் காட்டி, இதோ இங்கே தான்” என்றார். என் கனவு கலைந்தது.உடனே கப்பலின் மேல்தளத்திற்குச்
சென்று கப்பல் கேப்டனிடம், இப்போது நேரம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர் நள்ளிரவு” என்றார். பிறகு, நாம் இப்போது எந்த இடத்தில்
இருக்கிறோம்? என்று கேட்டேன். அதற்கு அவர், ”கிரீட் தீவிற்கு அருகில். அதோ பாருங்கள்,
அங்கே தான் துருக்கியும் கிரீட்தீவும் உள்ளன” என்றார். இது வெறும் கனவு தானா! அல்லது இதில் ஏதாவது உண்மை
இருக்கிறதா? யாருக்குத் தெரியும்.
ஏசு கிறிஸ்துவின் வரலாற்று ஆதாரத்தை சுவாமிஜி இது
வரை சந்தேகித்ததில்லை. ஆனால் இந்தக் கனவு அவரது
மனத்தில் கிறிஸ்தவ மதத்தைப் பற்றிய பல்வேறு கேள்விகளை எழுப்பியது. கிறிஸ்தவ மதத்தின்
ஆரம்பம் என்று பைபிள் கூறுவதைத் தவிர வேறு பல விஷயங்கள் உள்ளன என்று அவர் நம்பினார். புத்தர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்ற பகுதியான அலெக்சாண்ட்ரியாவில் இந்திய, கிரேக்க , எகிப்தியக் கருத்துக்களின் சங்கமம்
நிலவியது சுவாமிஜிக்குத் தெரிந்தே இருந்தது. சுவாமிஜி விஷயத்தை அத்துடன் விட்டுவிட
வில்லை. தொல்பொருள் ஆராய்ச்சியளரான தமது ஆங்கிலேய நண்பர் ஒருவருக்கு இதன் உண்மையை ஆராயுமாறு
எழுதவும் செய்தார்.
ஆனால் வரலாற்று
உண்மைகள் சுவாமிஜியின் பக்தியுணர்வை ஒருபோதும் பாதிக்கவில்லை. அவர் ஏசுநாதரிடம் வைத்திருந்த
பக்தியும் நம்பிக்கையும் என்றும் குன்றாமல்
இருந்தது. நான் மட்டும் பாலஸ்தீனத்தில் ஏசுநாதருடன் வாழ்ந்திருந்தால் அவரது பாதங்களைக் கண்ணீர் கொண்டா
கழுவியிருப்பேன்? இதயத்தின் ரத்தம் கொண்டல்லவா தோய்த்திருப்பேன்! என்று அவர் ஒரு முறை
நெகிழ்ந்து கூறிய அந்த உணர்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை
இந்திய உணர்வு
கப்பல்,
சூயஸ் கால்வாய் வழியாகப் பயணத்தைத்தொடர்ந்தது,
உடலளவில் மட்டுமல்ல, மனத்தளவிலும் ஐரோப்பாவை
விட்டு அகன்று கொண்டிருந்தார் சுவாமிஜி. இந்திய
உணர்வு அவரை ஆட்கொள்ளத் தொடங்கின. சூயசிலிருந்து ஆசியா தொடங்குகிறது. மீண்டும்
ஆசியாவிற்கு வந்து விட்டேன். நான் யார்? ஆசிய நாட்டினனா? ஐரோப்பியனா? அமெரிக்கனா? பல
ஆளுமைகளின் விசித்திரமான கலவையை என்னிடம் உணர்கிறேன்
என்று எழுதினார் அவர்.
ஆனால் அவரில் இந்திய உணர்வுகள் தலை தூக்கத் தொடங்கியிருந்தன
என்பது தான் உண்மை. கப்பல் ஏடனை நெருங்கியது. கப்பலிலிருந்து இறங்கி பல இடங்களையும்
சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தார்
இந்து மதத்தை அவமதித்தால்
சுவாமிஜிவந்த
கப்பலில் இரண்டு பாதிரிகள் பயணம் செய்தனர். சுவாமிஜியுடன் வாதம் செய்து, கிறிஸ்தவ மதத்தின்
மேன்மையை நிலைநாட்ட அவர்கள் விரும்பினார். ஆனால் சுவாமிஜியுடன் பேசிய போது நிலைமை விபரீதமாகியது, அவர்கள் தோற்கத்தொடங்கினர். அவருடன் பேசி வெற்றி காண முடியாது என்பதை அறிந்து கொண்ட அவர்கள் இந்து மதத்தைத் தாக்கிப்பேச ஆரம்பித்தனர். இழிவாகப்பேசினர்.
சுவாமிஜி பொறுமையாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார். அவர்களின் ஏச்சும் ஏளனமும் எல்லை மீறிய போது மெதுவாக எழுந்தார். நேராக ஒரு பாதிரியின் முன்னால்
சென்றார். திடீரென்று அவரது சட்டையைப் பற்றிப் பிடித்து, வேடிக்கையாக ஆனால் அழுத்தமாக,
இன்னும் ஏதாவது சொன்னால் அப்படியே தூக்கிக் கடலில் போட்டு விடுவேன்” என்றார். பாதிரிகள்
நடுங்கிப்போய் விட்டனர். சுவாமிஜியின் பிடியில் சிக்கியவர் பயந்து போய், விட்டு
விடுங்கள், இனி எதுவும் சொல்ல மாட்டேன் என்று கூறினார். அந்தப் பாதிரி அதன்பிறகு சுவாமிஜியிடம்
மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியைப் பின்னாளில் பிரிய நாத் சிங்கரிடம்
கூறிவிட்டு அவரிடம், மகனே, யாராவது உன் தாயைப் பழித்தால் நீ என்ன செய்வாய்? என்று கேட்டார். அதற்குப் பிரியநாத், அவனைவிட மாட்டேன், அவனுக்கு ஒரு பாடம் புகட்டுவேன்” என்றார். சரியாகச்சொன்னாய். அதே உணர்வு நமது இந்தியத் திருநாட்டின்
உண்மைத் தாயான உன் சொந்த மதத்திடமும் உனக்கு
இருந்திருக்குமானால் ஓர் இந்து சகோதரன் கிறிஸ்தவனாக
மத மாற்றம் செய்யப் படுவதை நீ ஒரு போதும் சகித்துக் கொண்டிருக்க மாட்டாய். ஆனால் உன் கண்முன்னே
மத மாற்றம் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. நீ அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறாய்.
எங்கே உன் நம்பிக்கை? எங்கே உன் தேச பக்தி? உன் கண் முன்னாலேயே கிறிஸ்தவப் பாதிரிகள்
இந்து மதத்தை இகழ்ந்து பேசுகின்றனர். மத மாற்றம்
செய்கின்றனர். இதைத் தடுக்க உங்களில் எத்தனை பேர் முயற்சி செய்கின்றனர்? இந்தத் தவறை
எண்ணி எத்தனை பேரின் ரத்தம் கொதிக்கிறது? என்று கேட்டார் சுவாமிஜி.
ஜனவரி
15 காலை. அன்றைய உதயம் சுவாமிஜிக்கு இந்திய மண்ணைக் காட்டியது- தொலைதூரத்தில் இலங்கைத்
தீவு தெரிந்தது. உதயகால சூரியன் இளஞ்சிவப்பு
வண்ணப் பின்னணியில் இந்திய மண்ணின் காட்சி சுவாமிஜியைக் கிளரச்செய்தது. மெல்ல
மெல்ல நீண்ட நெடிய பனைமரங்களும் மஞ்சள் வண்ண மணல் நிறைந்த கடற்கரையும் தெரியலாயிற்று.
இறங்குவதற்குத் தயாரானார் சுவாமிஜி.
இலங்கையில்
இந்தியா வரவேற்கும்
மேலை நாட்டுப் பணியைத் தாம் வெற்றிகரமாக நிறைவேற்றியது
இந்தியர்களுக்குப் பெருமிதத்தை அளித்திருப்பது சுவாமிஜிக்குத் தெரியும். தம்மை இந்தியா சிறப்பாக வரவேற்கும் என்பதையும் அவர் அறிந்தே
இருந்தார். ஆனால் அதற்கான ஏற்பாடுகள் பற்றியோ, இலங்கை முதல் தமிழகம் முழுவதும் முனைந்து
வரவேற்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டிரப்பதையோ அவர் அறிய வில்லை. உடல் ரீதியாக மிகவும் தளர்ந்திருந்த
அவர், இப்போது ஓய்விற்காக ஏற்குகிறேன், ஏதோ சிறிது ஓய்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இந்தியர்கள் என்னை விட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன். சில ஆண்டுகள் ஊமையாக இருந்து
விட மாட்டேனா என்று எவ்வளவு ஏங்குகிறேன் தெரியுமா? என்று சற்று ஓய்விற்காகத் துடித்தார்.
அதே வேளையில் தாம் ஓய்வெடுப்பதற்காக இந்தியாவிற்குச்செல்லவில்லை.
அங்கும் கடுமையாக உழைத்தேயாக வேண்டும். அங்கே தாம் அளிப்பதற்கான செய்தி ஒன்று உள்ளது
என்பதையும் அவர் அறிந்தேயிருந்தார். இந்தியா உலகிற்கு அளித்த அறிவுச்செல்வம் மற்றும்
ஆன்மீகச்செல்வம் பற்றி டெட்ராய்ட்டில் ஒரு
முறை சுவாமிஜி பேசிக் கொண்டிருந்தார். திடீரென உணர்ச்சி வசப் பட்டார் அவர். அவரது உடல்
லேசாக நடுங்கியது.
இந்தியா எனது வார்த்தைகளுக்குச் செவி சாய்த்தேயாக
வேண்டும்! நான் இந்தியாவை அதன் ஆணிவேர்வரை
அசைப்பேன்! அதன் தேசிய நாளங்கள் வழியாக ஒரு மின் அதிர்வைப் பாய்ச்சுவேன்! பொறுத்திருங்கள்!
இந்தியா என்னை எப்படி ஏற்றுக் கொள்கிறது என்பதைக் காண்பீர்கள். இங்கே அனைவருக்கும்
எளிதாகக் கிடைக்கும் படி என் இதய ரத்தத்தைச் சிந்தி அளித்தேனே! வேதாந்தம், அதனை உண்மையாக ஏற்றுக் கொள்ள இந்தியாவிற்கு எனது
சொந்த இந்தியாவிற்கு, மட்டுமே தெரியும். அந்த இந்தியா என்னை வெற்றிகரமாக வரவேற்கும்!
என்று ஆவேசமாகக் கூறினார் அவர்.
இலங்கையில் வரவேற்பு
1897 ஜனவரி
15-ஆம் நாள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை அடைந்தது. சுவாமிஜியை வரவேற்க அவரது சகோதரத்
துறவியான நிரஞ்ஜனானந்தர் வந்திருந்தார். இலங்கை வரவேற்புக் குழுவின் பிரதிநிதியான ஹாரிசன் கப்பலில் சென்று சுவாமிஜியை வரவேற்றார்.
சுவாமிஜியைக் கரைக்கு அழைத்துச்செல்வதற்காக நீராவிப்
படகு ஒன்று தயாராக நின்றது. அது மாலை வேளை. சுவாமிஜியின் படகு மெல்ல மெல்லக் கரையை
நெருங்கியது. கரையில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.
கரவொலிகளும் ஜெய கோஷங்களும் கடல் அலைகள் எழுப்பிய
ஒலியுடன் போட்டியிட்டுக்கொண்டு வானைப் பிளந்தன. சுவாமிஜியை ஒரு முறை காண்பதற்காக நெருக்கியடித்த
கூட்டம் கட்டுக் கடங்காததாக இருந்தது. வரவேற்புக் குழுவின் தலைவரான பி. குமார சுவாமி சுவாமிஜிக்கு மலர் மாலை
அணிவித்தார். மல்லிகைச்செண்டு அளித்தார். பின்னர் சுவாமிஜி, வரவேற்புக்காக அடைக்கப்
பட்ட முதல் பந்தலுக்குக் குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டார். அங்கே
இறங்கிய சவாமிஜி வரவேற்பை ஏற்றுக் கொள்வதற்காக உள்ளே சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் தங்குமிடத்தில் அமைக்கப் பட்ட
பந்தலுக்கு ஊர்வலமாக வந்தார். ஊர்வலத்தில் கொடிகள், அலங்காரக் குடைகள், நாதஸ்வரம்,
என்று தமிழ் பண்பாட்டு மரபுச் சின்னங்கள் அனைத்தும் காணப்பட்டன. வழியெங்கும் ஓலைத்தோரணங்கள்
கட்டப்பட்டிருந்தன.
பந்தலில் நுழைந்ததும் அங்கே அலங்காரமாக வைக்கப் பட்டிருந்த
அழகிய செயற்கைத் தாமரை ஒன்று மலர்ந்தது. அதிலிருந்து பறவை ஒன்று பறந்து வெளியேறியது.
சுவாமிஜியின் மீதும் உடன் வந்தவர்கள் மீதும்
மலர் மழை பொழிந்தது. சுவாமிஜியும் மற்றவர்களும் மேடையில் அமர்ந்ததும் தெய்வத் தமிழ்
தேவாரப்பாடல்கள் பாடப்பட்டன. சுவாமிஜியைப் பாராட்டி எழுதிய சம்ஸ்கிருதக் கவிதை படிக்கப்
பட்டது. வரவேற்புரை வாசிக்கப் பட்டது. பின்னர் சுவாமிஜி எழுந்து வரவேற்பை ஏற்றுக்கொண்டு
சிறிய உரை ஒன்று நிகழ்த்தினார்.
கொழும்பில் சுவாமிஜி நான்கு நாட்கள் தங்கினார். அவர்
தங்கியிருந்த மாளிகை ஒரு தீர்த்தத் தலமாக ஆகியது. ஆண்களும் பெண்களும் கையில் காணிக்கைப்
பொருட்களுடன் வந்து அவரை வழிபட்ட வண்ணம் இருந்தனர்.
இதற்குள், அவர் திருஞான சம்பந்தரின் அவதாரம்
என்ற வதந்தி எங்கும் பரவத் தொடங்கியது. சைவம் தழைக்கும் பூமியான இலங்கையில் இந்தச்செய்தி
விரைந்து பரவியது. இதன் விளைவாக, சுவாமிஜி தங்குகின்ற இடம் ஆயினும் சரி, வெளியில் செல்லும்போது சரி, அவரைத் தரிசிக்க கூட்டம் அலைமோதியது.
ஜனவரி
17-ஆம் நாள்மாலையில் சுவாமிஜி அருகிலிருந்த
சிவன் கோயிலுக்குச்சென்றார். வழியெங்கும்
வீடுகளின் முன்பு கோலங்கள் இட்டு, அழகு செய்து, நிறைகுடங்கள், வைத்து திருவிளக்குகள்
ஏற்றி அவரை வரவேற்றனர். அவர் கோயிலுக்குள் சென்ற போது ”ஜெய ஜெய மகாதேவா” என்ற கோஷம் எழுந்தது.
மறுநாள்
செல்லையா என்ற அன்பரின் வீட்டிற்கு சுவாமிஜி அழைத்துச்செல்லப்பட்
டார். வழியெங்கும்
மீண்டும் அதே காட்சிகள். ஆயிரக்கணக்கானோர்
நின்றுஅவர் மீது மலர்களை வாரி இறைத்தனர். சுவாமிஜி அனைவருக்கும் திருநீற்றுப்
பிரசாதம் வழங்கினார். அந்த வீட்டினுள் சென்றபோது அங்கே குருதேவரின் படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது.
சுவாமிஜி குருதேவரைப் பணிந்து வணங்கினார்.
இலங்கையைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம்
சுவாமிஜிக்கு இருந்தது. முதலில் கண்டி வரை ரயிலில் சென்று அங்கிருந்து குதிரை வண்டியில்
அனுராதபுரம் செல்வதென்று முடிவாயிற்று. கண்டியில் புத்தரின் பல் பாதுகாக்கப்பட்ட கோயிலுக்குச்சென்று
வழிபட்டார் சுவாமிஜி. அங்கிருந்து அனுராதபுரம் செல்லும் வழியில் விபத்து ஒன்று ஏற்பட்டது.
வண்டி ஒரு மலைப்பாதை வழியாகச்சென்று கொண்டிருந்தபோது முன்பக்கச் சக்கரம் ஒன்று நசுங்கிவிட்டது. நல்லவேளையாக அது கழன்று போகவில்லை. எனினும் சுவாமிஜியும் மற்றவர்களும்
தப்பிப் பிழைத்ததே கடவுள் செயல். அந்த இடத்தில் வேறு குதிரை வண்டிகள் கிடைக்க வாய்ப்பில்லை.
ஒரேயொரு மாட்டு வண்டி மட்டுமே கிடைத்தது. அதில் சேவியர் தம்பதிகளையும் சமான்களையும்
ஏற்றினர். சுவாமிஜியும் மற்றவர்களும் பல மெல்கள் நடக்க வேண்டியதாயிற்று. அதன் பிறகு
சில மாட்டு வண்டிகள் கிடைத்தன. அன்றிரவை மாட்டு வண்டிகளில் தான் கழித்தனர். சுமார்
25 மைல்களுக்கும் அதிகமாக நடந்து, எட்டு மணிநேரம்
தாமதமாக அனைவரும் அனுராதபுரத்தை அடைந்தனர்.
சில பௌத்தர்களின்
எதிர்ப்பு-
அனுராதபுரத்தில் புராதன கோயில்களையும் புத்த ஸ்தூபிகளையும் சென்று கண்டார் சுவாமிஜி. போதி மரத்தடியில் வழிபட்டார்.
புத்த கயையிலுள்ள போதி மரத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட கிளைச்செடி அது. அங்கே
நீண்ட நேரம் தியானம் செய்தார். புத்தரின் மகிமையிலும்
கருணையிலும் ஆழ்ந்த சுவாமிஜி பௌத்தர்களிடமிருந்து ஓர் எதிர்ப்பை எதிர்பார்த்திருக்க
மாட்டார். ஆனால் அந்த எதிர்ப்பு வந்தது.
அன்று சுவாமிஜி போதி மரத்தடியில் தமது சொற்பொழிவை ஆரம்பித்தார். சுமார் 3,000 மக்கள் அவரது
சொற்பொழிவைக்கேட்பதற்காகத் திரண்டிருந்தனர். ஓரிரு வார்த்தைகளே சுவாமிஜி பேசியிருப்பார்.
அதற்குள் பிட்சுக்கள், இல்லறத்தார், ஆண், பெண், குழந்தை என்று பௌத்த மதத்தினர் ஒரு
பெரிய கும்பலாக வந்து, அந்த இடத்தை ஆக்கிரமித்தனர். சொற்பொழிவுகளை கேட்க வந்திருந்த
மக்களை விரட்டும் நோக்கத்துடன் பெரிய முரசுகளையும் அது போன்ற வாத்தியங்களையும் தட்டி
பேரோசை எழுப்பினர். அங்கே இந்துக்களுக்கும்
பௌத்தர்களுக்கும் இடையில்ஒரு பெரிய கலவரமே மூண்டிருக்கும். ஆனால் சுவாமிஜி இந்துக்களிடம் நிதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். கலவரம்
தவிர்க்கப் பட்டது. ஆனால் சொற்பொழிவு நடைபெறாமல்
கூட்டம் கலைந்தது.
அனுராதபுரத்திலிருந்து யாழ்பாணம் 125 மைல். ரயில் வசதி கிடையாது. வண்டிகளில்
ஒரு நாள் சுமார் 30 மைல் பயணம் செய்து ஜனவரி 24-அம் நாள் யாழ்பாணத்தை அடைந்தனர்.
இந்தப் பயணம் எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதைச்
சொல்ல வேண்டியதில்லை. தமது உடல் நிலையையோ சிரமங்களையோ சுவாமிஜி யாரிடமும் சொல்வதில்லை.
அவர் எப்போதும் போல் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும்
இருந்தார். யாழ்பாணத்தில் சென்ற இடமெல்லாம் இதற்கு முன் கண்டிராத வகையில் அவர் வரவேற்கப்பட்டார்.
மத போதகர்கள் இன்றி, இந்துக்கள், பௌத்தர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், என்று எல்லா
மதத்தினரும் அவரை வரவேற்றனர். எல்லா வீடுகளின்
முன்னாலும் அழகிய கோலங்கள் இடப்பட்டு, நிறைகுடம் வைக்கப் பட்டிருந்தது.ஊர்வலத்தில்
சுமார்15, 000 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் யாரும் செருப்பு அணியவில்லை. எல்லோர்
கைகளிலும் தீபங்கள் இருந்தன. சுமார் 15, 000பேர் தீபங்கள் ஏந்தி சுவாமிஜியை அழைத்துச்
சென்றது கண்கொள்ளாதக் காட்சியாக இருந்தது. யாழ்பாணப் பயணத்துடன் சுவாமிஜியின் இலங்கை
விஜயம் நிறைவுக்கு வந்தது. யாழ்பாணத்திலும் ஒரு சொற்பொழிவு செய்தார் அவர்.
தமிழ் நாட்டிலிருந்து அழைப்பு-
சுவாமிஜி
இலங்கை வந்து சேர்ந்தபோதே தமிழ்நாட்டில் பல இடங்களிலிருந்து சுவாமிஜிக்கு அழைப்பு வந்தது.
கல்கத்தா செல்லும் வழியில் தமது நாட்டிற்கு
வந்து செல்லுமாறு ராமநாதபுர மன்னரும் சுவாமிஜிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்புகளை ஏற்று ஜனவரி
26-ஆம் நாள் அங்கே வருவதாக அவருக்குப் பதில் அனுப்பினார் சுவாமிஜி.
சுவாமிஜி தமிழ்நாட்டிற்கு வந்ததும், அங்கே சில நாட்கள்
தங்கிவிட்டு கல்கத்தாவிற்குச்சென்றதும் தமிழ் நாட்டின் ஆன்மீக வரலாற்றின் அழிக்க முடியாத அங்கம் ஆயிற்று.
தமிழ் நாட்டில்...
மீண்டும்
தமிழ் மண்ணில்-
சுவாமிஜி முதன் முறையாகத் தமிழகத்திற்கு
1893 ஆரம்பத்தில் வந்திருந்தார். அன்று அவர் யாரும் அறியாத ஒரு சாதாரண துறவி. தமிழகம் அவரைக் கண்டது.
அவரது திறமைகளையும் தகுதிகளையும் ஆற்றலையும் அறிந்தது. அவரை மேலை நாடுகளுக்கு அனுப்புவதில்
முன் நின்றது. இன்று அவரை வரவேற்பதிலும் அளவிலா மகிழ்ச்சி கொண்டது.
ஜனவரி
26 செவ்வாய் தமது மேலைநாட்டு சீடர்களுடன் யாழ்ப்பாணத்திலிருந்து நீராவிப் படகில் புறப்பட்டார் சுவாமிஜி. பாக் ஜலசந்தி,
மன்னார் வளைகுடா வழியாக சுமார் 50 மைல் பயணம் செய்து மாலை 3 மணியளவில் பாம்பனை அடைந்தார்.
ராமநாத புர மன்னர் மற்றொரு படகில் வந்து சுவாமிஜியை அழைத்துச்செல்வதாக ஏற்பாடு.ஆனால்
மன்னர் வந்து சேராத காரணத்தால் சுவாமிஜி காத்திருக்க நேர்ந்தது. குமார் 5 மணிக்கு அழகாக அலங்கரிக்கப்பட்ட
படகு ஒன்றில் மன்னர் வந்தார். சுவாமிஜி அந்தப் படகிற்குச் சென்றார்.
ராமநாத புரம்
பாஸ்கர சேதுபதி
மன்னரும் சுவாமிஜியும் சந்தித்த காட்சி உணர்ச்சிமயமானதாக இருந்தது. மன்னரும் அவருடன் வந்தவர்களும்
நெடுஞ்சாண் கிடையாக சுவாமிஜியின் முன் வீழ்ந்து பணிந்தனர். பின்னர் மன்னர் சுவாமிஜியை சிம்மாசனம் ஒன்றில் அமர வைத்து, சுவாமிஜியின் செருப்புகளை அவரதுபாதங்களில்
அணிவித்தபடியே, விலைமதிக்க முடியாத வைரம் ஒன்றைத் தலையில் சூடுவதைவிட இதனைப்பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்” என்று கூறினார்.
படகு பாம்பனை அடைந்தது. மக்கள் கூட்டத்தின் வாழ்த்தொலிகளுக்கும்
வரவேற்பு வைபவங்களுக்கும் இடையே, அலங்கரிக்கப்பட்ட பந்தல் ஒன்றிற்கு அழைத்துச்செல்லப்பட்டார் சுவாமிஜி. அங்கே அவருக்கு
வரவேற்பு அளிக்கப் பட்டது. வரவேற்புரை படிக்கப் பட்டது. சுவாமிஜி அதனை ஏற்றுக்கொண்டு
சொற்பொழிவாற்றினார். பின்னர் அவர் அருகிலிருந்த மாளிகை ஒன்றில் தங்க வைக்கப் பட்டார். அந்த மாளிகைக்கு
சுவாமிஜியை அழைத்துச் செல்லும் வழியில் மன்னர்
சுவாமிஜியை அரச வாகனத்தில் அமரச் செய்து, தாம் பரிவாரங்களுடனும் பக்தர்களுடனும் அருகில் நடந்து சென்றார். சிறிது தூரம் சென்றதும் வண்டியிலுள்ள குதிரைகளை அவிழ்த்து விட்டு விட்டு, மற்றவர்களுடன் வண்டியைத்தாமே
இழுத்துச்சென்றார்.
அடுத்த நாள் சுவாமிஜியும் மன்னரும் மற்றவர்களும்
ராமேஸ்வரம் கோயிலுக்குச்சென்றனர். அங்கே சுவாமிஜிக்கு அரச மரியாதை அளிக்கப் பட்டது.யானை,
ஒட்டகம், கோயில் சின்னங்கள், குதிரை அடங்கிய
ஊர் வலம் அவரை வரவேற்றது. கோயில் ஓதுவார்கள் அவரை எதிர் கொண்டு அழைத்தனர். பின்னர் சுவாமிஜி
ராமேஸ்வர சிவபெருமானைப் பணிந்தார். கோயில் ஆபரணங்கள் அவருக்குக் காட்டப்பட்டன. அதன் பிறகு அவர் கோயிலைச்
சுற்றிப் பார்த்தார். கோயிலின் பிரபலமான ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிஜி வந்து கொண்டிருந்த போது, அங்கே
திரண்டிருந்த பக்தர்களுக்கு அருளுரை வழங்குமாறு மன்னர் கேட்டுக்கொண்டார்.
உண்மை வழிபாடு
-
மக்களில்
மகேசுவரனைக் கண்டு, அவர்களுக்குத்தொண்டு செய்வதே உண்மை வழிபாடு என்ற தத்துவத்தை மிக
எளிமையாக அங்கு எடுத்துரைத்தார் சுவாமிஜி. ஒரு வகையினர் சோம்பேறிகள், ஏமாற்றுக்காரர்கள் அவர்கள் எதுவும் செய்வதில்லை. சிவபெருமானின் அழகான கண்களையும் மூக்கையும்
மற்ற குணநலன்களையும் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். ஏழைகளான, பலவீனர்களான எல்லா மனிதர்கள்,
விலங்குகள் மற்றும் அவருடைய படைப்பு அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள்
மற்றொரு வகையினர். இவர்களில் யார் சிவ பெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? நிச்சயமாக
அவரது பிள்ளைகளுக்குச்சேவை செய்பவர்களே. தந்தைக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள். முதலில்
பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும்.......... சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும்
வழிபட்டிருந்தாலும், புண்ணியத்தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்தாலும், சிறுத்தையைப்போல்
தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிவ பெருமானிடமிருந்து
விலகியே இருக்கிறான்.
சவாமிஜியின் செய்தியை உடனடியாக ஏற்றுச் செய்ல்படுத்தினார்
மன்னர். மறுநாளே ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்தார் அவர். சுவாமிஜி தமது
திருப்பாதங்களைத் தன் நாட்டில் பதித்ததன் நினைவாக நாற்பது அடி உயரத்தில் நினைவுத்தூண்
ஒன்றையும் எழுப்பினார்.
அங்கிருந்து ராமநாத புரத்திற்கு மாட்டு வண்டியில்
பயணம் தொடங்கியது. அதிகாலையில் புறப்பட்ட அவர்கள்
வழியில் ஒரு சத்திரத்தில் காலை உணவை முடித்துக் கொண்டனர். ராமநாத புரத்தை நெருங்கும்போது
ஏரி ஒன்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அதனை அவர்கள் அரசுப்படகில் கடந்தனர். ஏரியைக்
கடந்து நிலப் பகுதியைத் தொட்டதும் சுவாமிஜியை வரவேற்க பீரங்கிகள் முழங்கின. வாணங்கள் வானில் பறந்தன. ஏரியின் கரையும் மாலைநேரமும் ஆகாயத்தில்
அழகிய காட்சிகளுமாக அந்த இடம் அற்புதக்கோலத்தைத்தோற்றுவித்தது. ஆயிரக்கணக்கான மக்கள்
அங்கே கூடியிருந்தனர். பின்னர் ஊர்வலம் வரவேற்பு எல்லாம் விமரிசையாக நடைபெற்றன.
சிறிது தூரம்
சுவாமிஜி அரசு வண்டியில் சென்றார். அருகில் மன்னர் நடந்து சென்றார். பின்னர் மன்னரின்
வேண்டுகோளுக்கு இணங்க பல்லக்கில் சென்றார். சுவாமிஜி தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்
பட்டிருந்த ”சங்கரவில்லா” என்ற மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு சுவாமிஜி அரச சபைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.
ஆயிரக்கணக்கானோர் அங்கே கூடியிருந்தனர். மன்னரின்
சகோதரரான ராஜா தினகர சேதுபதி வரவேற்புரை ஒன்றை வாசித்து அதனை ஒரு தங்கப்பேழையில் வைத்து
சுவாமிஜிக்கு அளித்தார். அங்கே சுவாமிஜி உரை ஒன்றை நிகழ்த்தினார்.
சுவாமிஜியின் ராமநாத புர விஜயத்தை நினைவு கூரும்
வகையில் சென்னை பஞ்ச நிவாரணப் பணிக்காக பொதுமக்கள்
நன்கொடை அளிப்பதற்கான திட்டம் ஒன்றையும் தொடங்கினார் மன்னர்.
மறுநாள் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் ஒரு சொற்பொழிவு
நிகழ்த்தினார் சுவாமிஜி. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் அரச சபையைக் கூட்டினார்
மன்னர்.
அதில் மன்னருக்கு ”ராஜ ரிஷி” என்ற பட்டத்தை வழங்கினார் சுவாமிஜி. மன்னராக இருக்கின்ற அதே
வேளையில் முனிவராகவும் திகழ்கிறார் என்பது
இந்தப் பட்டத்தின் பொருள் ஆகும். அன்று மன்னர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்தியாவில்
சக்தி வழிபாடு” என்ற தலைப்பில் ஃபோனோகிராஃபில்
சொற்பொழிவு ஒன்றைப்பதிவு செய்தார் சுவாமிஜி.
சென்னைக்குச் செல்லும் வழியில் சுவாமிஜிக்குப் பல்வேறு
இடங்களிலிருந்து அழைப்புகள் வந்தன. அவருக்கும் உடம்பு என்ற ஒன்று இருந்தது. ஓய்வும் உறக்கமும் அதற்கும்
தேவை என்பதை பக்தர்கள் மறந்து விட்டது போல்
தோன்றியது. இந்தப் பயணத்தின்போது ஒரு கணம் கூட தூங்காமல் அவர் யாத்திரை செய்த நாட்கள்
பல உண்டு.தமது உடம்பின் சிரமங்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் இயன்ற அளவு அழைப்புகளை
ஏற்றுக்கொண்டார் சுவாமிஜி.
ஜனவரி 31 நள்ளிரவில் ராமநாதபுரத்திலிருந்து புறப்பட்டு
பிப்ரவரி1 அதிகாலையில் பரம க்குடியை அடைந்தார். குதிரை வண்டியில் 23 மைல்கள் சென்ற
சுவாமிஜி தூங்கியிருக்க முடியாது என்பதைச்சொல்ல வேண்டியதில்லை அல்லவா? பரமக்குடியில்
அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்டு பதிலுரை அளித்தார்.
பரம குடியில்
சில மணிநேரங்களைச் செலவிட்ட பிறகு அங்கிருந்து 15 மைல் தொலைவிலுள்ள மானா மதுரையை அடைந்தார்.
அங்கே மானா மதுரை மக்களுடன் சிவகங்கை மக்களும்
கலந்து கொண்டு சுவாமிஜிக்கு வரவேற்பு அளித்தனர். அந்த ஊர்களின் ஜமீன்தார்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சொற்பொழிவு ஆற்றிவிட்டு
அன்றிரவு அங்கேயே கழித்தார் சுவாமிஜி.
காலையில் ரயிலில் புறப்பட்ட சுவாமிஜியும் குழுவினரும்
10.30 மணியளவில் மதுரையை அடைந்தனர். அங்கே அவரது சகோதரத்துறவியான சிவானந்தர் அவருடன் சேர்ந்து கொண்டார். அங்கேயும்
சிறப்பான வரவேற்பிற்குப் பிறகு ராமநாத புர மன்னருக்குச் சொந்தமான ”ராமநாத கோடி” என்ற மாளிகையில் சுவாமிஜி தங்கினார். வழக்கம்போல் பக்தர்
கூட்டம் இங்கேயும் அலை மோதியது. சில பண்டிதர்கள் வந்து சுவாமிஜியுடன் நீண்ட நேரம் பேசினார்.
முக்தி, மாயை, பௌத்தர்களின் கருத்து போன்றவை விவாதிக்கப் பட்டன. அதன் பிறகு மீனாட்சி
கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார் சுவாமிஜி. கோயில் சின்னங்களுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது. கோயில் ஆபரணங்கள் காட்டப்பட்டன.
அவற்றுள் ”யானை முத்து” (கஜ மோத்தி) குறிப்பிடத் தக்கதாகும்.
அங்கிருந்து நேட்டிவ் கல்லூரிக்குச் சென்றார். மாலை
5 மணியளவில் அங்கே வரவேற்பு அளிக்கப் பட்டது. அங்கு சுவாமிஜி சிறிய சொற்பொழிவு ஆற்றினார்.
துறவியருக்கும் உடம்பு என்ற ஒன்று இருக்கிறது” என்பதைக் குறிப்பிட்டு,
தமது உடற்களைப்பைச் சுட்டிக்காட்டிய சுவாமிஜி, தொடர்ந்து மூன்று வாரங்கள் பயணம்செய்து வருவதால் தம்மால் நீண்ட சொற்பொழிவு
செய்ய இயலாது என்பதைத் தெரிவித்தார்.
கும்பகோணம்.
இரவு 10. 30 மணியளவில் ரயிலில் கும்பகோணத்திற்குப்
புறப்பட்டார் சுவாமிஜி. அந்த 150 மைல் பயணத்தில் வழியில் அமைந்துள்ள ஏறத்தாழ எல்லா ரயில் நிலையங்களிலுமே
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
திருச்சியில் வண்டி 25 நிமிடங்கள் நின்றது. அங்கே சுவாமிஜிக்கு வரவேற்புரை ஒன்றும்
வாசித்து அளிக்கப் பட்டது. தஞ்சாவூரிலும் அது போலவே நிகழ்ந்தது.
சிகாகோவில்
சுவாமிஜி பெற்ற பெருவெற்றியின்போது கும்பகோணத்திலும் சுவாமிஜியைப் பாராட்டி பொதுக்கூட்டங்கள் நிகழ்த்தியிருந்தனர். இப்போது சுவாமிஜி நேராக வந்த
விழாவை மிகச் சிறப்பாக ஊர் மக்கள் கொண்டாடினர். ஊர் மக்களின் சார்பாகவும் மாணவர் சமுதாயத்தின்
சார்பாகவும் போர்ட்டர் பவுன் ஹாலில் இரண்டு
வரவேற்புரைகள் அளிக்கப் பட்டன. அங்கே, வேதாந்த பணி” என்ற நீண்ட உரை ஒன்று நிகழ்த்தினார் சுவாமிஜி.
சென்னையில் அவர் தொடர்ந்து சொற்பொழிவாற்ற வேண்டியிருக்கும். ஓய்வு அரிதாகிவிடும் என்பதை உணர்ந்திருந்த
அன்பர்கள், அவர் கும்பகோணத்தில் மூன்று நாட்கள் தங்கி ஓய்வெடுப்பதற்கான ஏற்பாடு செய்தனர்.
அப்போது திருச்சியைச்சேர்ந்த அன்பர்கள் சிலர் சுவாமிஜியைச் சந்தித்து, கும்பகோணத்தில்
ஒரு நாள் தங்குவதை ரத்து செய்துவிட்டு, திருச்சிக்கு வர வேண்டும் என்று மீண்டும் அழைப்பு
விடுத்தனர். 750 மாணவர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை ஒன்றையும் அவர்கள் சுவாமிஜியின்
முன் வைத்தனர். சுவாமிஜி அதனைப் பணிவுடன் மறுத்துவிட்டார்.
அற்புதங்கள் வேண்டாம்
சுவாமிஜி
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்திருந்தபோது
ஒரு நாள் தமது தாயார் இறந்துவிட்டதாகக் கனவு கண்டார். அதன் உண்மையைத் தெரிந்து கொள்வதற்காக
வலங்கை மானிலுள்ள கோவிந்த செட்டி என்ற குறிசொல்பவரிடம் அழைத்துச் சென்றனர். கனவு உண்மையல்ல
என்பதை எடுத்துக்கூறி, சுவாமிஜியின் மனச்சுமையைக் குறைத்தார் கோவிந்த செட்டி. அவர்
கும்பகோண வரவேற்பின்போது கூட்டத்தில் நிற்பதைக்
கண்ட சுவாமிஜி அவரை அழைத்து, பிறகு தனியாக
வந்துசந்திக்குமாறு கூறினார். கோவிந்தர் சென்றபோது
சுவாமிஜி அவரிடம், உங்களிடம் அற்புத சக்திகள் இருப்பது எனக்குத் தெரியும்” அது உங்களுக்குப் பணத்தையும் புகழையும் அள்ளித் தந்திருப்பதும் உண்மை. ஆனால் ஆன்மீகம் என்று எடுத்துக் கொண்டால். நீங்கள் ஓர்
அடி கூட முன்னேறவில்லை. எங்கே ஆரம்பித்தீர்களோ, அங்கேயே நிற்கிறீர்கள். அது தானே உண்மை?
கடவுளை நோக்கி உங்கள் மனம் சிறிதாவது சென்றுள்ளதா? என்று கேட்டார். கோவிந்த செட்டி
சுவாமிஜி கூறியதன் உண்மையை ஏற்றுக்கொண்டார். உடனே சுவாமிஜி ”உங்கள் மனம் கடவுளை நாடாவிட்டால்
இந்தச் சக்திகளால் என்ன பயன்? இறையானந்தத்தை ஒரு முறை நீங்கள் சுவைத்து விட்டால் அதன்
பிறகு இவையெல்லாம் பயன் அற்றவையாகி விடும்” என்று கூறி, கோவிந்த செட்டியைக் கட்டியணைத்தார். ஆச்சரியம்
என்னவென்றால், அன்றிலிருந்து கோவிந்தரின் அற்புத ஆற்றல்கள் அவரைவிட்டு விலகி விட்டன.
அவர் இறைவனுக்கான மன ஏக்கத்துடன் உலகைத் துறந்தவராக வாழ்ந்தார்.
தண்டவாளத்தில் தலை வைப்போம்.
கும்பகோணத்திலிருந்து
சென்னைக்கான 194 மைல் பயணம் தொடங்கியது. பிப்ரவரி 5 இரவு 10.45-க்கு ரயில் புறப்பட்டது.
நிரஞ்ஜனானந்தர், சிவானந்தர், குட்வின். திருவனந்தபுரத்தில் சுவாமிஜியைச் சந்தித்திருந்த பேராசிரியர் ரங்காச்சார்யா
ஆகியோர் சுவாமிஜியுடன் சென்றனர். சேவியர் தம்பதிகள் ஒரு நாள் முன்னதாகவே புறப் பட்டு
விட்டனர். இந்தப் பயணத்தின் போதும் வழியெங்கிலும்
வரவேற்புகளும் விழாக்களும் அவருக்காகக் காத்திருந்தன. ” ஜெய சுவாமி விவேகானந்த மஹராஜ் ஜி கீ ஜெய்” என்ற கோஷம் எங்கும்
ஒலித்தது. மாயவரத்தில் ரயில் சென்றபோது இரவு 11.30 மணி. அங்கே 10 நிமிடங்கள் ரயில்
நின்றது. அங்கும் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். வரவேற்புரை வாசித்து அளித்தனர்.
மறுநாள் காலை 6 மணியளவில் ரயில் செங்கல்பட்டை அடைந்தது. The madras mail மற்றும்
the hindu பத்திரிகை நிரூபர்கள் அங்கே ஏறிக் கொண்டனர். அவர்கள் சென்னை வரை சுவாமிஜியைப்பேட்டி
கண்து, அதனைத் தங்கள் பத்திரிகையில் வெளியிட்டனர்.
சென்னைக்கு முன்பாக உள்ள ஒரு சிறிய ஸ்டேஷன், அங்கே
ரயில் நிற்காது. ஆனால் சுவாமிஜியைக் காண்பதற்காகத் திரண்டிருந்த மக்கள் ரயிலைச் சற்று நேரமாவது நிறுத்துமாறு ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்டனர். அவர்
அதற்கு உடன்படவில்லை. சுவாமிஜியை ஒரு முறையாவது
தரிசிப்பதற்காக க் கூடியிருந்த அந்த மக்கள் ஒவ்வொருவராகத் தண்ட வாளத்தில் படுத்து விட்டனர்.
வேறு வழியின்றி ரயிலை நிறுத்த வேண்டியதாயிற்று. சுவாமிஜி உணர்ச்சியால் நெகிழ்ந்தார். வெளியே வந்து கனிவுடன் மக்கள் வெள்ளத்தைப்
பார்த்தார். தமது இரு கரங்களையும் உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். ரயில் நகர்ந்தது.
No comments:
Post a Comment