சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-29
🌸
இந்துக்களின்
சிராத்தச் சடங்கைப் பற்றிய விவாதம் எழுந்தது.
ஆரிய சமாஜத்தினர்
இந்தச் சடங்கை ஏற்றுக் கொள்வதில்லை. இந்துக்களுக்கு இது மிக முக்கியமான சடங்கு. எனவே
இந்தச் சடங்கின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, ஆரிய சமாஜத்தினரை அடக்க வேண்டும்
என்று இந்துக்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் சுவாமிஜி இது போன்ற பிரச்சனைகளைப் புதிதாக
உருவாக்க விரும்ப வில்லை. இருப்பினும் பொதுச்சொற்பொழிவில்
சிராத்த சடங்கைப் பற்றி எடுத்துக் கூறினார். அதன் தேவையை மிகவும் அற்புதமாக எடுத்துக் கூறி விளக்கினார். அன்றைய சொற்பொழிவில்
ஆரிய சமாஜத்தினர் பலர் கலந்து கொண்டிருந்தனர். அவர்களால் சுவாமிஜியின் கருத்துக்களை
ஏற்றுக்கொள்ள இயலவில்லை. எனவே அவருடன் விவாதம் நடத்தத் தயாராயினர். அதையும் சுவாமிஜி
ஏற்றுக் கொண்டார். அவர்களுக்கு அந்தச் சடங்கின் வரலாற்றை எடுத்துக்கூறி அதன் உண்மையை
விளக்கினார்.
தற்காலிகமாகவேனும் இரு தரப்பினரிடையே ஒரு நல்லுறவை
சுவாமிஜி ஏற்படுத்தவே செய்தார். ஏனெனில் தொடர்ந்த அவரது சொற்பொழிவுகளில் இது தரப்பினரும்
ஏராளமாகக் கலந்து கொண்டனர்.
சுவாமிஜியை லாகூரில் சந்தித்த இளைஞர்களில் ஒருவர்
தான் நாம் மேலே கண்ட தீர்த்த ராம் கோசுவாமி. லாகூர் கல்லூரி ஒன்றில் கணிதப்பேராசிரியராக
இருந்தார் அவர். தொடர்ந்து சுவாமிஜியின் சொற்பொழிவுகளைக்கேட்டு வந்த அவர் ஒருநாள் தமது
வீட்டிற்கு குட்வின் உட்பட சுவாமிஜியையும் அவரது குழுவினரையும் அழைத்து விருந்தளித்தார்.
அன்று உணவிற்குப் பிறகு சுவாமிஜி, எங்கே ராமனோ அங்கே காமன் இல்லை”, எங்கே காமனோ அங்கே ராமன் இல்லை.” என்று தொடங்குகின்ற இந்திப்
பாடலைப் பாடினார். அவரது கணீரென்ற இனிய குரல் அங்கிருந்த அனைவரின் இதயத்தையும் வருடி,
அந்தப் பாடலின் பொருளை உள்ளத்தில் நிறைத்தது” என்று எழுதுகிறார் தீர்த்தராம்.
சுவாமிஜி எங்கு சென்றாலும் புதிதாக எதையாவது கற்றுக்
கொள்வதற்காகக் கிடைக்கின்ற வாய்ப்பை நழுவ விடுவதே இல்லை. தீர்த்த ராம் தமது நூல் நிலையத்தை
சுவாமிஜிக்குக் காட்டினார். சுவாமிஜியை மிகவும் கவர்ந்த ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவர் வால்ட்விட்மேன். அவரது
”புல் தளிர்கள்” என்ற நூல் இருந்ததைக் கண்டபோது அதனை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.
அத்தகையவர் எனது குருநாதர்
ஒரு நாள் தீர்த்த ராமும் நண்பர்களும் சுவாமிஜியுடன்
நடக்கச்சென்றனர். வழியில் அவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து பேசியபடியே சென்றனர். தீர்த்த
ராமின் குழுவினர் அவரிடம், ”மகான் என்பவர் யார்? என்று கேட்டனர். தீர்த்தராம் கூறினார்,
ஒரு மகான் தம்மைத் தனிநபராகக் காண்பதில்லை. தாமே அனைவரிலும் இருப்பதை அவர் உணர்கிறார்.
ஒரு பகுதியிலுள்ள காற்று சூடாகும் போது அது லேசாகி மேலே செல்கிறது. அந்த இடத்தில் ஏற்படும்
வெற்றிடத்தை நிரப்புவதற்காக அருகிலுள்ள இடங்களிலிருந்து காற்று அங்கே பாய்கிறது. இவ்வாறு
அங்கே ஓர் இயக்கம், ஓர் அசைவு உருவாகிறது. அது போலவே ஒரு மகான் தமது வாழ்க்கை மூலமாக
நாட்டில் ஓர் உயர்த் துடிப்பை ஏற்படுத்துகிறார், இதைக்கூறிக் கொண்டிருந்த போது சுவாமிஜியின்
குழு அவர்களைக் கடந்து சென்றது. சுவாமிஜி சற்று
நின்று இந்தப் பகுதியை உன்னிப்பாகக்கேட்டார். தீர்த்த ராம் கூறி முடித்ததும் சுவாமிஜி
கம்பீரமான, அழுத்தமான குரலில், அத்தகையவராக இருந்தார் எனது குரு நாதராகிய பரமஹம்ஸ ராமகிருஷ்ணதேவர்” என்றார்.
சுவாமிஜி லாகூரிலிருந்து புறப்படும்போது தீர்த்த
ராம் ஒரு தங்கக் கைக் கடிகாரத்தை சுவாமிஜிக்குப்
பரிசாக வழங்கினார். அதனை ஏற்றுக் கொண்ட சுவாமிஜி தீர்த்தராமைப் பார்த்து மென்மையாகச்
சிரித்தார். பிறகு அதனைத் தீர்த்த ராமின் சட்டைப்பையில் வைத்து, நல்லது” நண்பனே! இந்தக் கடிகாரத்தை நான் இங்கே, இந்தப் பையிலேயே அணிந்து
கொள்கிறேன்”என்றார்.அன்று நடந்து கொண்டிருந்த போது, ஒரு மகான்
அனைவரிலும் தாமே இருப்பதைக் காண்கிறார்” என்று தாம் கூறியதை இப்போது சுவாமிஜி
நிரூபிப்பது ஒருவேளை தீர்த்த ராமின் மனத்தில் நிழலாடியிருக்கலாம்! இந்தத் தீர்த்தராம்
தான் பின்னாளில் உலகைத் துறந்து சுவாமி ராம் தீர்த்தர் என்ற பெயரில் உலகப் புகழ் பெற்றார்.
என்னை மதிக்க வேண்டுமா?
-
ஒரு நாள் சுவாமிஜி ஒரு குறிப்பிட்ட நபரை மிகவும்
புகழ்ந்தார். அதைக்கேட்ட ஒருவர், ஆனால் சுவாமிஜி, அவர் உங்களை மதிப்பதில்லையே! என்றார்.
ஏன், ஒருவர் நல்லவராக இருக்க வேண்டுமென்றால் என்னைப் புகழ்ந்து தான் ஆக வேண்டுமா? என்று மறுகணமே பதிலளித்தார் சுவாமிஜி. கேட்டவர்
வாயடைத்துப்போனார்.
லாகூர் நாட்களின் பரபரப்பு சுவாமிஜியின் உடல் நிலையைப்
பாதித்தது. ஆஸ்த்மா, சர்க்கரை வியாதி போன்றவற்றுடன் இப்போது சிறு நீரகக்கோளாறும் சேர்ந்து காண்டது. தமது ஆயுள் குறைவானது என்பது
சுவாமிஜிக்கு நன்றாகவே தெரியும். அதனை அவ்வப்போது
அவர் குறிப்பிடவும் செய்துள்ளார். தற்போதைய நோய்கள், அவரைச் சிந்தனைக்கு உள்ளாக்கியது.
தட்சிணேசுவரக்கோயிலில் அவரை உள்ளேவிட மறுத்து விட்டனர். இந்த நிலையில் குருதேவரின்
ஜெயந்தி விழாவை எங்கே கொண்டாடுவது என்ற சிந்தனை ஒரு பக்கம். அவர்வெளி நாடுகளிலிருந்து ஏராளமாகப் பணம் கொண்டு வந்திருப்பதாகக் கருதிய இந்தியர்கள், அவரது பணிகளுக்கு
நன்கொடையளிக்கத் தயங்கினர். இதுவும் அவரைக்
கவலையில் ஆழ்த்தியது. தாம் இந்த உலகிலிருந்து விடைபெறுமுன்னர் குருதேவருக்கென்று நிலையான
இடம் ஒன்றை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் அவரது மனத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
இத்தகைய பல காரணங்களால் அவர் தமது யாத்திரைகளைத் தொடராமல் திரும்பத் தீர்மானித்தார்.
எனவே ஏற்கனவே திட்டமிட்டிருந்த பல பயணங்களைக் கைவிட்டு, லாகூரிலிருந்து டேராடூன் சென்றார் சுவாமிஜி . அங்கே
சொற்பொழிவுகளைத் தவிர்த்தார். அதே வேளையில் தம்முடன் இருந்த நண்பர்களுக்கும் சீடர்களுக்கும்
ஸ்ரீராமானுஜரின் பிரம்ம சூத்திர விளக்கவுரை மற்றும் சாங்கியத் தத்துவம் பற்றி வகுப்புகள்
நடத்தினார். இங்கு மட்டுமல்ல, யாத்திரை நிறைவுறும் வரை இந்த வகுப்புகள் தொடர்ந்தன.
இந்தப் பயணங்களில் அவருடன் சென்ற அச்சுதானந்தரிடம் சாங்கிய வகுப்புகள் நடத்துமாறு கேட்டுக்கொண்டார்
சுவாமிஜி. அச்சுதானந்தர் வகுப்புகள் நடத்தும்போது சுவாமிஜி அருகிலேயே அமர்ந்திருப்பார்.
அச்சுதானந்தர் திணறும்போது தாமே விளக்குவார். சுவாமிஜி ஒரு சிறந்த பண்டிதர். சாஸ்திரங்கள்
பலவற்றையும் அவர் மனப்பாடம் செய்து வைத்திருந்தார். பிரம்ம சூத்திரங்களுக்கு ஸ்ரீசங்கரரின்
விளக்கவுரை, ஸ்ரீராமானுஜரின் விளக்கவுரை ஆகியவற்றை அவர் கற்றிருந்தார். ஸ்ரீவல்லபரின்
அனு பாஷ்யத்தைக் கற்கப் போவதாகக் கூறினார். சாங்கியம் மற்றும் யோகத்தில் அவருக்கு நல்ல
பிடிப் பிருந்தது. கீதையைப் பொறுத்தவரை அவரே ஒரு விளக்க வுரை ஆசிரியர் தான்” என்று எழுதுகிறார் தீர்த்த ராம்.
விக்டோரியா மகாராணியின் 75-ஆம் ஆண்டு நிறைவு விழாவில்
லண்டனில் கலந்து கொண்டு நாடு திரும்பியிருந்தார் கேத்ரி மன்னர். அவரைக் காண்பதற்கு
ஆவல் கொண்டார் சுவாமிஜி. எனவே டேராடூனிலிருந்து அவரும் குழுவினரும் நவம்பர் 26-ஆம்
நாள் புறப் பட்டனர். வழியில் டில்லியில் நட கிருஷ்ணன் என்பவரின் வீட்டில் முதலில் தங்கினர்.
இந்த நடகிருஷ்ணன் சுவாமிஜியின் பரிவிராஜக வாழ்க்கையில்
ஹத்ராஸ் ரயில் நிலையத்தில் ஏற்கனவே சுவாமிஜிக்கு அறிமுகம் ஆனவர். சுவாமிஜியின் முதல்
சீடரான சரத் சந்திர குப்தருடன் இவர் அறிமுகமானார்.
நட கிருஷ்ணன்
ஒரு நாள் சுவாமிஜியிடம், சுவாமிஜி நான் தொடர்ந்து சாதனைகள் செய்து வருகிறேன். கடந்த
ஆறுமாதங்களாகப் பல்வேறு கிரியைகளும் காயத்ரி ஜபமும் சந்தியா வந்தனமும் செய்து வருகிறேன்.
ஆனால் இதுவரை எந்த ஒளியும் எனக்குக் கிடைக்கவில்லை என்றார். அதற்கு சுவாமிஜி, உனக்குப்
புரியாத மொழியில் மந்திரங்களைச்சொல்வதை விட உனக்குப் புரிகின்ற உனது தாய் மொழியில்
கடவுளைக் கூப்பிடு. அவர் பதிலளிப்பார்” என்றார். அவருக்கு காயத்ரி மந்திரத்தின் பொருளையும் விளக்கினார்.
ஆல்வாரில்
ஆல்வாரில் பலரும் சுவாமிஜியைத் தமது வீட்டிற்கு அழைத்தார்கள்.
விருந்து கொடுக்க விழைந்தார்கள். ஆனால் சுவாமிஜி தாமே செல்வதாக, சென்று அவர் செய்த
தடித்த சப்பாத்தியைச் சாப்பிட விரும்புவதாக ஒருவருக்குச் செய்தி அனுப்பினார். அவர்
ஒரு குடிசையில் வாழ்ந்த ஏழை மூதாட்டி. பல வருடங்களுக்கு முன்பு பசியால் தளர்ந்தபோது
, தன்னால் இயன்ற சப்பாத்தியை அளித்து புண்ணியம் தேடிக் கொண்டவர் அந்த மூதாட்டி. சுவாமிஜியின்
செய்தியைக்கேள்விப் பட்டபோது அந்த மூதாட்டியால் அதனை நம்பவே இயலவில்லை.சுவாமிஜியின்
குழுவினரும் சென்றபோதோ அவரது பரிவினால் உள்ளம் நெகிழ்ந்தார். குழையும் குரலில், வா!
மகனே! எவ்வளவோ செய்ய வேண்டும் என்று ஆர்வம் இருக்கிறது. ஆனால் நான் ஓர் ஏழை. விருந்து
வைக்க எங்கு போவேன்? என்று கூறியபடியேதாம்
செய்த அந்த எளிய சப்பாத்தியை சுவாமிஜிக்கும் குழுவினருக்கும் அளித்தார். அந்த
எளிய உணவை மிகவும் ருசித்துச் சாப்பிட்டார் சுவாமிஜி. தம்முடன் வந்தவர்களிடம், பாருங்கள்,
எத்தனை பக்தி! என்ன தாயுள்ளம். தம் கையால் இந்த மூதாட்டி செய்து நமக்குத் தந்துள்ள
இந்தச் சப்பாத்தி சாத்விகமானது! என்றார். பின்னர் அந்த வுிட்டில் இருந்தவரிடம், மூதாட்டிக்குத்
தெரியாமல், சிறிது பணமும் கொடுத்து விட்டுத் திரும்பினார் சுவாமிஜி.
ஆல்வாரில் ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு, ஜெய்பூர் சென்ற
சுவாமிஜி அங்கே கேத்ரி மன்னரின் மாளிகை ஒன்றில் தங்க வைக்கப் பட்டார். அங்குள்ள இடங்கள்
ஒவ்வொன்றும் சுவாமிஜிக்குப் பழைய நாட்களை நினைவூட்டின. பரிவிராஜகராக வந்திருந்த போது இதே மாளிகையில் சமையற்காரன் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு,
நான்கு சப்பாத்திகளை வேண்டா வெறுப்பாக அவருக்கு த் தந்திருந்தான். இன்று , மன்னரின்
கட்டிலில் படுக்கிறேன்” எனக்குச்சேவகம் செய்ய கை கூப்பிய படி ஏவலர்கள் காத்து நிற்கின்றனர். என்ன வேறுபாடு! உண்மை தான்-
மனிதனின் அந்தஸ்தையே மக்கள் வழிபடுகிறார்கள், அவனது உடம்பையோ ஆன்மாவையோ அல்ல- என்றார்
சுவாமிஜி.
ஜெய்பூரிலிருந்து
சுமார் 90- மைல் பாலைவனத்தில் பயணம் செய்து கேத்ரியை அடைய வேண்டும். சிலர் குதிரையிலும்
சிலர் ஒட்டகத்திலும்சிலர் பல்லக்கிலும் பயணம் செய்தனர். மனிதனோ மரம் செடிகொடிகளோ எதுவும்
தென்படாத, கண்ணுக் கெட்டிய தூரம் வரை மணல் வெளி மட்டுமே தென் படுகின்ற பயணம்
அது. சுவாமிஜி உடன் சென்றதால் வழி நெடுக்க கதைகளும் சம்பவங்களும்ப கூறி அனைவரையும்
மகிழச்செய்தார். வழியில் இருந்தசத்திரங்களில் சுவாமிஜியும் குழுவினரும் தங்கி இளைப்பாற
ஏற்பாடு செய்திருந்தார் மன்னர். அங்கே சுவாமிஜி வேதாந்த வகுப்புகள் நடத்தினார். இந்தப் பயணத்தின்போது
வழியில் ஓரிடத்தில் ஓர் ஆவியைக் கண்டதாகவும் சுவாமிஜி பின்னர் தெரிவித்தார்.
கேத்ரியிலிருந்து 12 மைல் முன்பாகவே மன்னரும் முன்ஷி
ஜக்மோகன் லாலும் வந்து சுவாமிஜியை வரவேற்று
அழைத்துச் சென்றனர். சம்பிரதாய வரவேற்புகள் அளிக்கப் பட்டன. மலை உச்சியின் மீது அமைந்திருந்த
அழகிய மாளிகை ஒன்றில் தங்க வைக்கப் பட்டார் சுவாமிஜி. கேத்ரியிலும் ஓரிரு சொற்பொழிவுகள்
ஆற்றினார் சுவாமிஜி. பாலைவனப் பயணம் சுவாமிஜியின் உடல் நிலையைப் பாதித்தது. ஜலதோஷம்
மற்றும் ஜுரத்தால் அவதிப்பட்டார் அவர்.
கேத்ரியில்
சில நாட்கள் மன்னருடன் கழித்துவிட்டு 1898
ஜனவரி இறுதியில் சுவாமிஜி கல்கத்தாவை அடைந்தார். அவரது இந்தியப் பயணங்களும் எழுச்சியூட்டும்
சொற்பொழிவுகளும் நிறைவுக்கு வந்தன.
நீலாம்பர்
மடத்தில்
மேலை நாடுகளிலிருந்து
1897- பிப்ரவரியில் கல்கத்தா விற்கு வந்த பிறகு மீண்டும் மேலை நாடுகளுக்கு 1899 ஜுன்
20 ஆம் நாள் புறப்படும் வரை சுமார் இரண்டு வருடங்கள் கல்கத்தாவில் இருந்தார் சுவாமிஜி.
இதில் இரண்டு யாத்திரைகள் மேற்கொண்டார். அல்மோரா
முதலான இடங்களுக்கு முதல் யாத்திரையை முடித்துவிட்டு 1898 ஜனவரி இறுதியில் கல்கத்தா
திரும்பினார். மே11 வரை கல்கத்தாவில் இருந்தார். இந்த நாட்கள் பொதுவாக அவர் மடத்திலேயே
கழித்தார். குறிப்பாக அடுத்த தலைமுறை துறவியரை உருவாக்குவதில் அவர் மீகந்த கவனம் செலுத்தினார்.
அவர்களுடன் நீண்ட நேரம் செலவிட்டார். கீதை,
உபநிஷதங்கள், வரலாறு, விஞ்ஞானம் போன்ற வகுப்புகளை நடத்தினார். கேள்வி- பதில் நிகழ்ச்சிகளில்
அவர்களை ஊக்கு வித்தார். சொற்பொழிவுகள் ஆற்றச் செய்தார்.
சுவாமிஜியின் பெயர் இதற்குள் நாடு முழுவதும் பரவி
விட்டதால் அவரைக் காண பலர் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களைச் சந்தித்தார். நிரந்தரமான
மடம் ஒன்றை உருவாக்குவதிலும் அவர் கவனம் வைக்க வேண்டியிருந்தது. அதற்குமேல், ராமகிருஷ்ண
மிஷனின் வாராந்தரக் கூட்டங்களில் கலந்து கொண்டார். படித்தார். கடிதங்கள் எழுதினார்.
நீண்ட நேரம் தியானம் செய்தார். ஸ்ரீராமகிருஷ்ண
பக்தர்களின் வீட்டிற்குச்சென்று அவர்களது நலனைக் கருத்தில் கொண்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவர் நவகோபால் கோஷ்.
ராமகிருஷ்ணபூரில் வாழ்ந்த அவரும் அவரது மனைவியான நிஸ்தாரிணியும் குருதேவரிடம் மிகுந்த
பக்தி கொண்டவர். இருவரும் தங்கள் வீட்டில் குருதேவரை நிறுவி வழிபட வேண்டும் என்று மிகுந்த
விருப்பம் கொண்டிருந்தனர். சுவாமிஜியே வந்தால் குருதேவர் அங்கு எழுந்தருள்வது உறுதி
என்பதை உணர்ந்திருந்த அவர்கள் சுவாமிஜியிடம்
தங்கள் ஆவலைத் தெரிவித்தனர். சுவாமிஜியும் மனமார அதற்கு ஒப்புதல் அளித்தார்.
1898 பிப்ரவரி 6-ஆம் நாள். அன்று காலையில் மடத்திலிருந்து
மற்ற துறவியருடன் மூன்று படகுகளில் ராமகிருஷ்ணபூருக்குச் சென்றார் சுவாமிஜி. காவியுடையும்
தலைப்பாகையும் அணிந்திருந்தார் சுவாமிஜி. காலில் செருப்புகள் இல்லை. கழுத்தில் கோல்
வாத்தியத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு பஜனை பாடியபடி அனைவரும் சென்றனர். ஏழை பிராமணியின்
மடியில் தவழும் இறைவனே நீ யாரோ,? உலகையே ஒளியில் ஆழ்த்தும், உத்தமனே நீ யாரோ? என்ற
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய பிரபலமான பாடலைப் பாடியபடி அவர்கள் சென்ற காட்சியை மக்கள்
வழியெங்கும் மக்கள் கூட்டமாக நின்று கண்டனர்.
உலக புகழ் பெற்ற சுவாமி விவேகானந்தர் இவர் தானா! என்று அவர்கள் முகத்தில் ஆச்சரியம்
தென்பட்டது.
அனைவரும் நவகோபால் கோஷின் வீட்டை அடைந்தனர். பூஜையறை
அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. தரை சலவைக் கல்லால் அமைந்திருந்தது. அதில் சற்று
உயர்ந்த பீடம் ஒன்றில், பீங்கானில் பதிவு செய்யப்பட்ட
ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் வைக்கப் பட்டிருந்தது.
அறையின் தோற்றமும் சுவாமிஜியின் சான்னித்தியமும்
அங்கே ஓர் அற்புதமான ஆன்மீகச் சூழலை உருவாக்கின. சுவாமிஜி அங்கே சென்றபோது நிஸ்தாரிணி
வந்து சுவாமிஜியை வணங்கி, ஏதோ எங்களால் இயன்றதைச் செய்திருக்கிறோம். குருதேவரை நீங்கள்
தான் இங்கே எழுந்தருளச்செய்யவேண்டும்” என்று பணிவுடன் கூறினார். அதற்கு
சுவாமிஜி, அம்மா, உங்கள் குருதேவரும் சரி, அவரது பதினான்கு தலைமுறையினரும் சரி, இத்தகைய
சலவைக் கல் வீட்டில் வாழ்ந்ததில்லை. சாதாரணக் குடிசையில் மிக எளியவராகவே அவர் வாழ்ந்தார்.
உங்களைப்போன்ற தூய உள்ளங்களிள் சேவையை ஏற்றுக்கொண்டு, இங்கே வாழா விட்டால் எங்கே சென்று
வாழப்போகிறார்? என்றார்.
பின்னர் திருநீறு அணிந்து பூஜாரியின் இருக்ககையில்
அமர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணரை அங்கே எழுந்தருளப் பிரார்த்தித்தார். அவரது சீடரான பரகாஷானந்தர்
உரிய மந்திரங்களை ஓதி பூஜை செய்தார். இன்று ஸ்ரீராமகிருஷ்ணரின் வழிபாட்டுப் பாடலாக
எல்லா இடங்களிலும் ஓதப் படுகின்ற பாடல் அன்று சுவாமிஜியின் தியானத்திலிருந்து அவரது
திருவாய் மூலமாக வெளிவந்தது.
யுக தர்மத்தை
நிலைநாட்டியவரே, எல்லா தர்மங்களின் வடிவினரே, அவதாரங்களில் தலைசிறந்தவரே, ஸ்ரீராமகிருஷ்ண
தேவரே உம்மை வணங்குகிறேன்.
சுவாமிஜி மடத்து அங்கத்தினர்களுக்கு அளித்த பயிற்சியில்
ஒன்று சொற்பொழிவு. ஒவ்வொருவரும் மடத்து அங்கத் தினர்களுக்கு முன்னால் சொற்பொழிவு நிகழ்த்த
வேண்டும். குருதேவரின் சீடர்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. அப்படி ஒரு முறை சுபோதானந்தர்
பேசும் நாள் வந்தது. அவர் இதற்கு ஒத்துக்கொள்ளவே
இல்லை. எவ்வளவோ சாக்குப்போக்குகள் சொல்லிப்
பார்த்தார். ஆனால் எதுவும் சுவாமிஜியிடம் எடுபடவில்லை. சொற்பொழிவாற்றியே தீர வேண்டுமென்று
சுவாமிஜி கண்டிப்பாக கூறிவிட்டார்.
கோக்கா மகாராஜின்
பேச்சைக்கேட்க அனைவரும் கூடினர். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சொற்பொழிவு
நேரம் நெருங்கியது.சுபோதானந்தர் ஒரு வழியாக
எழுந்தார். பேச ஆரம்பிக்கவில்லை. அதற்குள் மடமே அதிர்ந்து நடுங்கத் தொடங்கியது. வெளியில் மரங்களெல்லாம் வேருடன் முறிந்து சரியும் சத்தம்
காதைப் பிளந்தது. அது-1898 ஜுன் 12-ஆம் நாள் வங்காளத்தில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கம்.
எல்லோரும் வெளியில் ஓடி கூட்டமாக தெருவில் நின்றனர்.
நிர்மலானந்தர் மட்டும், தினசரி வழிபாடு செய்யப் பட்ட குருதேவரின் படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு,
அவரது புனிதச் சாம்பல் இருந்த பெட்டியையும் அணைத்துக்கொண்டு, ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா,
என்று கூறியபடி அங்கேயே நின்றார். கோக்கா பூமியே நடுநடுங்குமாறு அல்லவா பேசினார்” என்று சொல்லிச் சிரித்தார் சுவாமிஜி. அனைவரும் அவரது கேலியில்
கலந்து கொண்டனர்.
ஆலம்பஜார் மடம் ஏற்கனவே சேதமடைந்து, எல்லா விதங்களிலும்
”பேய்வீடு” என்று அழைப்பதற்குத் தகுதி வாய்ந்ததாக இருந்தது. இந்த நிலநடுக்கம்
நிலைமையை இன்னும் மோசமாக்கியது. அதற்கு மேலும் அந்த இடத்தில் தங்குவது ஆபத்து என்பது உறுதியாயிற்று. அது மட்டுமின்றி நிரந்தரமான
மடத்திற்காக ஏற்கனவே பேலூரில் நிலம் வாங்கப் பட்டிருந்தது. அந்த இடத்திற்கு அருகில்
தங்குவது, மடத்துப் பணிகளுக்குச் சாதகமாக இருக்கும் என்பதாலும் அங்கே மடத்தை மாற்றுவது
என்று முடிவு செய்தனர். வாங்கப் பட்டிருந்த நிலத்திற்குஅருகில் நீலாம்பர் முகர்ஜியின்
வீட்டில் மடம் 1898 பிப்ரவரி 13-ஆம் நாள் தங்காலிகமாக இடமாற்றம் செய்யப் பட்டது. அன்னை
இந்த வீட்டில் பல காலம் வாழ்ந்துள்ளார். பஞ்ச தவம் என்ற கடினமான தவத்தையும் மேற்கொண்டார்.
இவ்வாறு புனிதம் பெற்றது இந்த வீடு.
பிப்ரவரி
19-ஆம் நாள் சிவராத்திரி. சுவாமிஜிக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சி தந்த நாளாக இருந்தது.
ஏனெனில் பல பகுதிகளிலிருந்தும் பணிகளின் முன்னேற்றம் பற்றி அவருக்குச் செய்திகள் கிடைத்தன.
சிவானந்தர் இலங்கை யிலிருந்து திரும்பியிருந்தார். திரிகுணா தீதானந்தர் தினாஜ் பூரில்
நிவாரணப் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றி வந்திருந்தார். பிரம்மானந்தரின் தலைமைப்பொறுப்பில்
மடத்து நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் திருப்திகரமாக நடைபெற்று வந்தன. இளம் துறவியரையும்
பிரம்மசாரிகளையும் துரியானந்தர் பயிற்றுவித்த விதமும் சுவாமிஜிக்கு நிறைவாக இருந்தது.
எனவே சிவராத்திரி பிற்பகலில் ஒரு சிறு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில் சுவாமிஜி அனைவரையும் பாராட்டினார்.
ஆனால் அந்த
சிவராத்திரி புனித நாளில் ஒருவர் கூட உண்ணாநோன்பு மேற்கொள்ளாதது சுவாமிஜிக்கு மிகுந்த
மன வருத்தத்தைத் தந்தது. இரவு உணவு வேளையில் சாப்பிட வந்த சுத்தானந்தரிடம், உன்னால்
விரதம் இருக்க முடியுமா? என்று கேட்டார். முடியும் என்றதும் அவரிடம் விரதம் இருக்குமாறு
கூறினார். இருப்பினும் அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பழங்கள் மட்டும் சாப்பிட
அனுமதித்தார்.
தீண்டாமையை
ஒழிப்பதற்கான முதல் முயற்சி
பிப்ரவரி
22-ஆம் நாள் ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி, அதனைச் சற்று வித்தியாசமாகக் கொண்டாட நினைத்தார்
சுவாமிஜி. அது, தீண்டாமையை ஒழிப்பதற்கான ஒரு முயற்சி! மன இயல்பிலிருந்து பிறந்த குணங்களுக்குஏற்பவே
பிராமண ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களின் வேலைகள் பிரிக்கப் பட்டிருக்கின்றன. சிந்திக்க
வல்லவன் பிராமணன். செயலாற்ற வல்லவன் ஷத்திரியன். பணம் சம்பாதிப்பவன் வைசியன். ஏவல்
வேலைகள் செய்பவன் சூத்திரன். ஒரு சமுதாயம் சிறப்பாக அமைய இந்த நான்கு பிரிவினரின் பங்களிப்பும்
தேவை. இந்த அமைப்பில் தனிமனிதனின் இயல்பே கணக்கில் கொள்ளப் படுகிறது. சூத்திரனுக்குப்
பிறந்தவன் சூத்திரன் என்பது கிடையாது. பிராமணனுக்குப் பிறந்தவன் தனது தகுதியின்மையால்
சூத்திரனாக இருக்கலாம். அது போலவே, சூத்திரனுக்குப் பிறந்தவன் தனது தகுதியால் பிராமணனாக
வும் இருக்கலாம்.
இந்தப் பாகுபாடு, ஒரு சமுதாயம் சிறப்பாக வாழ்வதற்கு
நமது முன்னோர்களும் சாஸ்திரங்களும் காட்டிய வழியாகும். ஆனால் காலத்தின் கைகளில் சில
கருத்துக்கள் மெருகேறுகின்றன. சில கருத்துக்கள்
பொலிவிழக்கின்றன. சமுதாயப் பிரிவுகள் பற்றிய தமது முன்னோர்களின் கருத்து இரண்டாம் வகையில்
சேர்ந்து கொண்டது. மன இயல்புக்கு ஏற்ப மனிதர்களைப் பாகு படுத்துவது போய் பிறப்பை வைத்து
அவர்களின் தகுதிகள் கணக்கில் கொள்ளப் பட்டன.
சுவாமிஜியின்
காலத்தில் இந்தப் பிரிவுணர்ச்சி இழிநிலையின் உச்சத்தை அடைந்திருந்தது. அதனால் தான்
”நமது மதம் சமையலறையில் இருக்கிறது. பானைதான் நமது கடவுள். என்னைத் தொடாதே, நான் புனிதமானவன்” என்பதே நமது மதம். இது இன்னும் ஒரு நூற்றாண்டுகாலம் இப்படியே
சென்றால் நம்மில் பெரும்பாலோர் பைத்தியக் கார விடுதியில் தான் இருப்போம். என்று கொதித்
தெழுந்தார் அவர். வெறும் பேச்சுடன் நின்று விடுவதல்ல அவரது போக்கு. அதனை சீர்படுத்தத்
துணிந்தார் அவர்.
அதற்காக ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்த நாளைத் தேர்ந்தெடுத்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லற ச் சீடர்கள் பரிடமும் தமது நோக்கத்தைக் கூறினார். பிராமணர்
அல்லாதவர்களுக்கு அந்த நாளில் பூணூல் அணிவித்து, காயத்ரி மந்திர உபதேசம் அளித்து,பிராமணர்கள் ஆக்கப் படுவார்கள்
என்பதைத் தெரிவித்தார். அதற்காக சுமார் 50பேர் ஜெயந்தி நாளன்று வந்தார்கள். அவர்கள்
கங்கையில் குளித்து , ஸ்ரீராமகிருஷ்ணரை வணங்கி பூணூல் பெற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு
காயத்ரி மந்திரம் உபதேசிக்கப் பட்டது. தினமும் 100 முறையாவது அந்த மந்திரத்தை ஜபிக்க
வேண்டும் என்று சுவாமிஜி கூறினார்.
அங்கும் வினோதம் ஒன்று நிகழ்ந்தது. வந்தவர்களுக்கு
சரத் சந்திரர் காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார். சுவாமிஜி ஒரு சிவப்புப் போர்வையைப்போர்த்தபடி
அருகில் நின்றவாறு புகைக் குழாயில் புகை பிடித்துக் கொண்டிருந்தார். அன்று உபதேசம்
பெற்றவர்களில் ஒருவரான ஹரி சரண் மல்லிக் எழுதுகிறார்.
அவர் பார்வைக்கு புகைபிடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது கண்களைப் பார்த்த போது
அவர் அகவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது
புரிந்தது. ஆன்மாவில் நிலைபெற்று அந்த ஆனந்தத்தில் திளைப்பவராக இருந்தார் அவர்.
எந்த வார்த்தையும் பேசாமல் எங்களுக்குள் ஆற்றலைப்
பாய்ச்சிக் கொண்டிருந்தார் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.
சடங்கு நிறைவுற்றது. அங்கே உபநிஷதங்கள், ஸ்ரீபாஷ்யம்
போன்ற சாஸ்திரங்கள் ஒரு துணியில் சுற்றி வைக்கப் பட்டிருந்தன. சுவாமிஜி அதைனை எடுத்து
அவர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தொட்டார்.
பிறகு, இன்றெிலிருந்து உங்களுக்கு வேதங்களைப் படிப்பதற்கான அதிகாரத்தைத் தருகிறேன்”
என்றார். சுவாமிஜியே ஒவ்வொருவருக்கும் பூணூல் அணிவித்தார்.
அன்றைய ஜாதிக் கட்டுப்பாட்டு அமைப்பில் இந்த நிகழ்ச்சி
ஒரு துணிச்சரான படி என்பதில் சந்தேகமில்லை. தாம் சொல்வதைச் செய்து காட்ட முடியும் என்பதை
சுவாமிஜி நிரூபித்த ஒரு நிகழ்ச்சி இது. ஆனால் இது ஒரு முன்மாதிரியாகக் கொள்ளப் படவோ,
பின்னால் தொடரப்படவோ இல்லை.
உபநயனம் நிறைவுற்ற பிறகு மடத்திலுள்ள துறவியர் சுவாமிஜியைச்
சிவபெருமானாக அலங்கரித்தனர்.ஜடை முடியும் ருத்திராட்ச
மாலைகள் அணிவித்தனர். இடது கையில் திரிசூலத்தை வைத்தனர். இவ்வாறு அன்று சுவாமிஜி வாழும்
சிவனாகத்தோன்றினார். சுவாமிஜியில் ”சிவ அம்சம்” இருப்பது பற்றி ஸ்ரீராமகிருஷ்ணரே
குறிப்பிட்டுள்ளார். நீ சிவன், நான் சக்தி” என்று அவர் பலமுறை சுவாமிஜியிடம்
கூறியதுண்டு. சுவாமிஜியும் சிறுவயதிலிருந்தே சிவ பெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்ததை
ஏற்கனவே நாம் கண்டோம். சுவாமிஜி சிவபெருமானாக பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அவரது
கண்கள் பாதி மூடியிருந்தன. கையில் தம்புராவை வைத்து மீட்டியபடி ஸ்ரீராமரைப் பற்றிய
பாடல் ஒன்றைப் பாடினார் அவர். அதன்பிறகு ஓர் அரை மணிநேரம் அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது.பிறகு சாரதானந்தர் சுவாமிஜி எழுதிய
படைப்பு” பாடலைப் பாடினார். அந்தப் பாடலுக்கு சுவாமிஜி பக்வாஜ்” இசைத்தார்.
பாடல்கள் நிறைவுற்ற பிறகு சுவாமிஜி தமது அலங்காரத்தைக்
கலைத்து, அருகிலிருந்த கிரீஷுக்கு அணிவித்தார். கிரீஷ் பைரவ அம்சம் உடையவர் என்று குருதேவர்
கூறுவதுண்டு. எனவே நமக்கும் அவருக்கும் வேறுபாடில்லை என்று கூறிவிட்டு, குருதேவரைப்
பற்றி ஏதாவது கூறுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார் சுவாமிஜி. பக்தியால் உள்ளம் நெகிழ்ந்தார்
கிரீஷ் கருணை வடிவான நம் பிரபுவைப் பற்றி என்ன சொல்வேன்! என்னைப்போன்ற தகுதியற்ற ஒருவன்,
இன்று புனிதர்களாகிய உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கிறேன் என்றால் அது அவரது எல்லையற்ற
அருளைத் தவிர வேறென்ன! என்றார் அவர்.
அன்று நாகமகாசயர் வந்திருந்ததும் சுவாமிஜியின் மகிழ்ச்சியைப்
பன் மடங்காக்கியது. மூர்ஷிதாபாத்தில் அனாதை இல்லம் நடத்தி வந்த அகண்டானந்தரும் வந்திருந்தார்.
அன்றைய விழா சிறப்பாக நடைபெற்றது. சுவாமிஜி ஸ்ரீராமகிருஷ்ணரைப்
பற்றி புதிதாக எழுதிய ”கண்டன பவபந்தன” என்ற பாடலை் மாலை ஆரதி வேளையில்
பாடப்பட்டது. சுவாமிஜி பாடுவது பற்றி சிவானந்தர் எழுதுகிறார். இந்த ஆரதிப் பாடலை சுவாமி
விவேகானந்தர் எழுதியதுடன், ராகத்தையும் அவரே இணைத்தார். மாலை ஆரதி வேளையில் மிருதங்கத்தை வாசித்தவாறே, அவர் இந்தப் பாடலை பக்தர்களுடன்
சேர்ந்து , தம்மை மறந்து பாடுவார்.ஓ! என்னவோர் அற்புததான காட்சி அது! உள்ளத்தைக் கொள்ளை
கொள்கின்ற அவரது குரலும் பாடலின் நயமும் சேர்ந்து அங்குப் புதிய தொரு தெய்வீக உலகையே
படைத்துவிடும்!
ஸ்ரீராமகிருஷ்ண
ஜெயந்தி விழா
பிப்ரவரி 27 ஞாயிறன்று ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி பொது
விழா வந்தது. தட்சிணேசுவரத்தில் தமக்கு அனுமதிமறுக்கப்
பட்டதால் மடத்திற்கென பேலூரில் வாங்கிய நிலத்திலேயே விழாவைக் கொண்டாட எண்ணினார் சுவாமிஜி.ஆனால்
பல காரணங்களால் அப்போது நிலத்தைக் கையகப்படுத்த இயலவில்லை. எனவே அதற்கு அருகிலுள்ள
மற்றொரு நிலத்தில் விழா கொண்டாடப்பட்டது. சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்த மிஸ்
முல்லர், மிசஸ் சாரா, மிஸ் மெக்லவுட் , மிஸ் நோபிள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டது
சிறப்பம்சமாக இருந்தது.
இந்த மேலை நாட்டுப்பெண்களில் மிஸ் நோபிளின் வரவு
முக்கியத்துவம் வாய்ந்தது. சுவாமிஜியின் கருத்துக்களை ஏற்று, இந்தியப் பெண்களின் பணிக்காக இந்தியாவிற்கு வந்தார் அவர். அவர் தமது
விருப்பத்தை வெளியிட்டபோது சுவாமிஜி, இந்தியாவிற்கான பணியில் எதிர்காலத்தில் உனக்கு
மகத்தான பங்கு ஒன்று உள்ளது என்பதில் நான் மிகவும் உறுதியாக உள்ளேன். இந்தியர்களிடையே,
குறிப்பாகப் பெண்களிடையே, வேலை செய்வதற்கு இப்போது வேண்டியது ஓர் ஆணல்ல, பெண்- பெண்
சிங்கம்! இந்தியா சிறந்த பெண்களை உருவாக்க முடியாததாக இருக்கிறது. அவர்களை மற்ற நாடுகளிலிருந்து
கடனாகத் தான் பெற்றாக வேண்டும். உனது கல்வி, ஈடுபாடு, தூய்மை, ஆழமான அன்பு, உறுதி அனைத்தையும்
விட உன் உடலில் ஓடும் வீர ரத்தம் இவையெல்லாம் அந்தப் பெண் நீயே என்பதைக் கூறுகின்றன” என்று எழுதினார் சுவாமிஜி. அதே வேளையில் சமுதாயச் சூழ்நிலை,
காலநிலை போன்றவற்றை எடுத்துக் கூறி, அவரை எச்சரிக்கவும் செய்தார். எந்தச் சிரமங்கள்
வந்தாலும் ஏற்றுக் கொள்வதாகக் கூறியபோது அவரை இரு கரம் நீட்டி வரவேற்றார் சுவாமிஜி.
இந்தியாவிற்கு வந்தார் நோபிள். அவர் கல்கத்தாவை அடைந்தபோது அவரை வரவேற்க கப்பல் தளத்திற்கு
சுவாமிஜியே சென்றார். ஏற்கனவே வந்திருந்த பெண்களுடன்
நோபிளும் கலந்து கொண்டார். அவர்கள் பேலூரில் புதிதாக வாங்கப் பட்ட நிலத்திற்கு அருகிலுள்ள
ஒரு பழைய கட்டிடத்தைச் செப்பனிட்டு அங்கே வாழ்ந்தனர்.
மார்ச் 11 –ஆம் நாள் ஸ்டார் தியேட்டரில் ராமகிருஷ்ண மடத்தினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டம்
ஒன்றிற்குத் தலைமை தாங்கினார் சுவாமிஜி. அன்று இங்கிலாந்தில் இந்திய ஆன்மீகக் கருத்துக்களின்
தாக்கம், என்ற தலைப்பில் நோபிள் பேசுவதாக இருந்தார். சுவாமிஜி அவரை, இந்தியாவிற்கு இங்கிலாந்தின் மற்றொரு கொடை இவள், என்று அறிமுகப்
படுத்தினார். ஏற்கனவே இங்கிலாந்தைச்சேர்ந்த அன்னிபெசன்ட் அம்மையாரும் மிஸ் முல்லரும்
இந்தியாவுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தனர். பின்னர் மிஸ் நோபிள் பேசினார்.
அவரைத் தொடர்ந்து சுவாமிஜியின் மற்ற மேலை ச் சீடர்களும் பேசினர்.
அன்னையின் ஆசிகளுக்காக
நோபிள் தமது பணிகளை ஆரம்பிக்கும் முன்னர் அவர் அன்னை
சாரதா தேவியின் ஆசிகளைப்பெற வேண்டும் என்று விரும்பினார் சுவாமிஜி. எனவே மார்ச்
17-ஆம் நாள் மேலை நாட்டுப் பெண்களை அன்னையிடம் அழைத்துச் சென்றார். அன்னை அவர்களை அன்புடன்
வரவேற்று, அவர்களை அருகில் அமரச் செய்து, அவர்களுடன் உணவும் உட்கொண்டார். வைதீகப் பிராமண
குடும்பத்தில் பிறந்தவராகிய அன்னை ”மிலேச்சர்” என்று கருதப் பட்ட மேலைநாட்டுப்
பெண்களை ஏற்றுக் கொண்டதை, தமது பணியின் ஆரம்ப வெற்றியாகக் கருதினார் அவர். அன்னை இங்கே
உள்ளார். ஒரு நாள் ஐரோப்பிய, அமெரிக்கப்பெண்கள் அன்னையைத் தரிசிக்கச்சென்றனர். என்ன
நடந்ததென்று நினைக்கிறாய்? அங்கே அவர்களுடன் அன்னை சாப்பிட்டார்! இது பெரிய விஷயம்
அல்லவா! என்று ராமகிருஷ்ணானந்தருக்கு எழுதினார் சுவாமிஜி.
மார்ச் 25-ஆம் நாள் சுவாமிஜி மிஸ் நோபிளுக்கு பிரம்மச்சரிய
தீட்சை அளித்தார். அவரைப் பூஜையறைக்கு அழைத்துச் சென்றார். தீட்சைக்கான சடங்குகள் செய்யப்
பட்டன. அவருக்குச் சகோதரி நிவேதிதை” என்ற பெயர் அளித்தார். பிறகு
அவரது கைகளில் மலர்களை எடுத்து அங்கிருந்த புத்தர் சிலைக்குச் சமர்ப்பிக்கும் படி கூறினார்.
இவ்வாறு அந்தச் சடங்கு நிறைவுற்றது. மிஸ் மார்கரட் நோபிள்,சகோதரி நிவேதிதை” (சமர்பிக்கப் பட்டவள்) ஆனார்.
ஆனால் ஒரு சன்னியாசினியாக ஆக வேண்டும் என்ற ஆவல்
நிவேதிதைக்கு இருந்தது. 1899 மார்ச்சில் அவருக்கு நைஷ்டிக பிரம்மச் சாரிணி” தீட்சை அளித்தார் சுவாமிஜி. ஆனாலும் சன்னியாச தீட்சை அளிக்கவில்லை.
ஏப்ரல் மாதம் சுவாமிஜி நோயுற்று படுக்கையில் இருந்தபோது நிவேதிதை அவரை அணுகி, சுவாமிஜி
, சன்னியாச தீட்சை பெற இன்னும் எனக்கு என்ன
தகுதி வேண்டும்? என்று கேட்டார். நீ இருக்கின்ற நிலையிலேயே இருந்தால் போதும்” என்று கூறிவிட்டார் சுவாமிஜி. நிவேதிதை கடைசிவரை நைஷ்டிக
பிரம்மச் சாரிணியாகவே வாழ்ந்தார். பின்னாளில்
அமெரிக்காவில் ரிஜ்லிமேனரில் தங்கியிருந்தபோது சுவாமிஜி நிவேதிதைக்கும் சாராவிற்கும்
காவியுடை அளித்தார். அதனைநிவேதிதை தியானத்திற்காக அமர்கின்ற வேளைகளில் பயன்படுத்திக்கொண்டார்.
பொதுவாக அவர் ஒருவித மஞ்சள் நிற ஆடையை அணிந்து
வந்தார்.
பெண்களுக்கான
மடம்
-
ஆண்களுக்கு
ஒரு மடம் ஆரம்பிக்க விழைந்தது போலவே பெண்களுக்கும் அதே ரீதியில் இயங்குகின்ற ஒரு மடம்
வேண்டும் என்பது ஆரம்பத்திலேயே சுவாமிஜியின் ஆவலாக இருந்தது. ஆண்களின் மடம் எப்படி
நடைபெற வேண்டும் என்பதையெல்லாம் விவரித்து, லண்டனிலிருந்து பிரம்மானந்தருக்குஒரு கடிதம்
எழுதினார் சுவாமிஜி, அதில் ”கௌரிமா”, யோகின்மா முதலியோரிடம் இந்தக் கடிதத்தைக் காட்டி,
அவர்கள் மூலம் பெண்களுக்கு இது போன்ற ஒரு மடத்தை
ஏற்படுத்துங்கள். கௌரிமாவை ஓர் ஆண்டு அதன் தலைவியாக ஆக்குங்கள். பின்னர் அதையொட்டி
மற்ற ஏற்பாடுகள் நடைபெற வேண்டும். ஆனால் உங்களுள்
யாரும் அங்கே போகக் கூடாது. அவர்கள் தங்கள் காரியங்கள் அனைத்தையும் தாங்களே செய்து கொள்வார்கள். என்று தமது விருப்பத்தைக்
குறிப்பிடுகிறார். ஆண்களுக்கான மடம் தொடங்குவதற்கு
முன்பே பெண்கள் மடம் தான் வர வேண்டும் என்றும் ஆரம்பத்தில் சுவாமிஜி நினைத்ததுண்டு. முதலில் அன்னைக்காக( அன்னை சாரதா தேவி) மடம் கட்டியாக வேண்டும். முதலில் அன்னையும் அன்னையின் மகள்களுமே,பிறகு தான் தந்தையும்
தந்தையின் பிள்ளைகளும் புரிகிறதா? என்று எழுதினார் அவர்.
ஆனால் சுவாமிஜியின்
இந்த முயற்சி அப்போது நடைபெறவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும்
அன்னையின் நெருங்கிய சேவகர்களில் ஒருவரும், ஸ்ரீராமகிருஷ்ணரால் ஈசுவரக்கோடி என்று குறிப்பிடப் பட்டவருமான யோகானந்தரின் கருத்து ஒரு
முக்கிய காரணமாக அமைந்தது. சுவாமிஜியின் திட்டங்களையும் ஆர்வத் தையும் கேட்ட பிறகு
யோகானந்தர் அவரிடம் கூறினார், சமுதாயத்திற்கு எது நன்மை தரும் என்று நீ கருதுகிறாயோ
அதைத் தயக்கமின்றி செய். ஆனால் சகோதரா, தயவு செய்து அன்னையை இப்போது பொது வாழ்வில்
இழுக்காதே. பொதுமக்கள் அதிகமாக வரத் தொடங்கினால் தமது உடம்பு அதிக நாள் நிலைக்காது
என்று குருதேவர் கூறுவது உனக்கு நினைவிருக்கலாம். அன்னையின் விஷயத்திலும் அது அப்படியே
பொருந்தும். யோகானந்தர் முடித்ததும் சுவாமிஜி புன்னகையுடன், குருதேவரின் வார்த்தைகளை எடுத்துக் கூறி, உரிய நேரத்தில்
விஷயத்தைத் தெளிவுபடுத்தி, ஒரு மந்திரியாகச் செயல்பட்டுள்ளாய், நான் அன்னையைத் தொந்தரவு
செய்யவில்லை. தமது திருவுளம் போல், தாம் விரும்புகின்ற
வழியில் அவர் தமது பணியைச் செய்யட்டும். அவருக்கு ஆணையிட நாம் யார்? அவரது ஆசிகளால்
அல்லவா நாம் பணிகள் செய்கிறோம்! அன்னையின் ஆசிகளுடைய ஆற்றலை நான் அறிவேன். அது அற்புதங்களை விளைக்க வல்லது” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, பெண்களுக்கான மடம் என்ற
கருத்தை சுவாமிஜி அன்னையின் திருவுளத்திற்கே விட்டு விட்டார்.
மார்ச் 29-ஆம் நாள் இரண்டு இளைஞர்களுக்கு சன்னியாச
தீட்சை அளித்தார் சுவாமிஜி. அவர்கள் சுரேந்திரநாத் போஸ் (சுரேஸ்வரானந்தர்), அஜய் ஹரி
பானர்ஜி, (ஸ்வரூபானந்தர்). சுவாமிஜியின் உடல் நிலை மிகவும் சீர் குலைந்தது கண்டு அவரை
டார்ஜிலிங் சென்று ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவருக்கு அதில் அதிக விருப்பம்
இல்லாவிட்டாலும், மடத்தினரின் விருப்பத்திற்கு இணங்க மார்ச் 30-ஆம் நாள் டார்ஜிலிங்
சென்றார் அவர். அங்கே ஒரு மாதம் ஓய்வெடுத்ததில் அவரது உடல் நிலை நல்ல முன்னேற்றம் கண்டது.
ஆனால், சுவாமிஜி
உற்சாகமாகத் தான் இருந்தார். திடீரென்று ஒருநாள் காலையில் அவர் மிகவும் மௌனமாக, கம்பீரமாக
ஆகிவிட்டார். அன்று முழுவதும் அவர் எதுவும் சாப்பிடவில்லை. யாருடனும் பேசவுமில்லை.
மாக்டர் அழைக்கப் பட்டார். ஆனால் அவராலும் சுவாமிஜியின் நோய் என்ன என்பதைக் கண்டு பிடிக்க
இயலவில்லை. தலையை ஒரு தலையணையில் சாய்த்தபடி நாள் முழுவதும் அப்படியே அமர்ந்திருந்தார்
அவர். கடைசியில் அமைதியாகக் கூறினார். நாம் அவர்களுக்குச் சேவை செய்தாக வேண்டும். அனைத்தையும் விற்க நேர்ந்தாலும்
பரவாயில்லை. அலைந்து திரிந்தபடி மரத்தடியில் தங்க வேண்டிய துறவிகள் தானே நாம்! அவர்களின்
சேவைக்காக அனைத்தையும் விற்று விட்டு மரத்தடியிலேயே தங்குவோம். அப்போது தான் சுவாமிஜியின்
மௌனத்திற்குக் காரணம் புரிந்தது- கல்கத்தாவில் பிளேக் நோய் பரவத் தொடங்கியிருந்தது,
பலர் அதற்குப் பலியாகி விட்டிருந்தார்கள்” என்று எழுதுகிறார் சுவாமிஜியுடன்
டார்ஜிலிங் சென்றிருந்த அகண்டானந்தர். அதற்கு மேல் சுவாமிஜியால் டார்ஜிலிங்கில் தங்க
இயலவில்லை. அது தான் சுவாமிஜி!
சுவாமிஜியை
மற்ற மகான்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவற்றுள் முக்கியமான ஒன்று அவரது மாபெரும்
கருணை, சக மனிதர்களுக்காக இவ்வளவு உருகிய ஒரு வரைக் காண்பது அபூர்வம். ஏழை எளியவர்களுக்கும்
பாமரர்களுக்கும், துன்பத்தில் துடிப்பவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று துடித்தது
அவரது உள்ளம். அவர்களை எண்ணி அழுதார் அவர். இந்த நாட்கள் அதனை நிதர்சனமாகக் காட்டின.
சுவாமிஜி ஏழைகளுக்காகவும் துன்பப் படுபவர்களுக்காகவும்
துடித்தார் என்றால் அது ஏதோ கருணை காரணமாக அல்ல. சுவாமிஜியின் நிலை அதை விட உயர்ந்தது.
அவரது நிலை ”விச்வாத்ம போதம்” என்று விளக்குவார் அகண்டானந்தர்.
அதாவது அனைத்து உயிர்களையும் தாமாக உணர்கின்ற நிலை அது. எனவே யார் துயருற்றாலும் அது
அவரை வாட்டியது. அந்தத் துன்பங்களை அவர் தமதாக உணர்ந்தார். இதற்கு உதாரணமாக பேலூர்
மடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று பற்றி விஞ்ஞானானந்தர் கூறுகிறார்.
எரிமலை விபத்து
-
பேலூர் மடத்தில் ஒரு நாள் . இரவு இரண்டு மணி இருக்கும். திடீரென்று சுவாமிஜியின்
தூக்கம் கலைந்தது. எழுந்து வராந்தாவில் நடக்கத் தொடங்கினார். அப்போது நான் சென்று,
என்ன சுவாமிஜி, தூக்கம் வரவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்! இதோ பாரப்பா! நன்றாகத்
தூங்கிக்கொண்டு தான் இருந்தேன். திடீரென்று யாரோ என்னைப் பிடித்துத் தள்ளுவது போல்
இருந்தது. என் தூக்கம் கலைந்தது. எங்கோ ஏதோ விபத்து நடந்திருக்கிறது. அதனால் பலர் துன்பத்திற்கு
உள்ளாகியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்றார். எங்கோ ஏதோவிபத்து நடந்ததாம்,
இவரது தூக்கம் கலைந்ததாம்! இது நடக்கக் கூடியதா என்ன! என்று எனக்குத்தோன்றியது. எனக்குள்ளேயே
சிரித்துக் கொண்டேன். ஆனால் ஆச்சரியம்! மறுநாள் காலையில் செய்தித் தாளைப் பிரித்தால்
திடுக்கிடும் செய்தி வெளி வந்திருந்தது.
சுவாமிஜிக்குத் தூக்கம் கலைந்த அதே இரண்டு மணி அளவில்
ஃபிஜிக்கு அருகிலுள்ள ஒரு தீவில் எரிமலை வெடித்ததில்
பலர் மரணமடைந்தனர். பலர் வீடிழந்தனர், பெருத்த
சேதம் உண்டாயிற்று. செய்தியைப் படித்த நான் திகைத்துப்போனேன். நில நடுக்கத்தை அறிவதற்கான
கருவியைவிட சுவாமிஜியின் நரம்பு மண்டலம் துல்லியமாக இருந்தது! மனிதன் எந்த நாட்டில்
துயருற்றாலும் அது அவரது நாடி நரம்புகளைத் தகித்தது.
பிளேக் நிவாரணப் பணி
மே 3-ஆம் நாள்
கல்கத்தாவை அடைந்தார் சுவாமிஜி. கல்கத்தா மரண பயத்தில் உறைந்திருந்தது. மக்கள்
கூட்டம் கூட்டமாக நகரை விட்டு வெளியேறத் தொடங்கியிருந்தனர். கல்கத்தாவிற்கு வந்த அன்றே நோய், அதைத் தடுப்பது எப்படி இத்தகைய
நேரங்களில் இறைவனின் திருநாமத்தை ஓதுவது எப்படி பயன் தருகிறதுஎன்பது பற்றியெல்லாம்
ஓர் அறிக்கை எழுதி, அதனை வங்கமொழியிலும் இந்தியிலும்
துண்டு ப் பிரசுரங்களாக மக்களிடையே வினியோகிக்க ஏற்பாடு செய்தார் சுவாமிஜி. பிளேக்
நோய் அறிக்கை என்பதை விட இதனை சுவாமிஜியின் இதயத்தின் அறிக்கை என்பது மிகவும் பொருந்தும்.
கல்கத்தா சகோதரர்களே!
1- நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நாங்களும் மகிழ்ச்சியாக
இருக்கிறோம், நீங்கள் துன்பப் பட்டால் நாங்களும் துன்புறுகிறோம். நெருக்கடியான இந்தக்
காலக் கட்டத்தில் நாங்கள் உங்களுக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறோம். இந்த தொற்றுநோயின்
பயத்திலிருந்து நீங்கள் விடுபடவும், உங்களை நோயிலிருந்து காக்கவும் நாங்கள் ஒரு சுலபமான
வழிபற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
2- இந்தக் கொடிய நோயைக் கண்டு பயந்து உயர்ந்தவர், தாழ்ந்தவர்,
பணக்காரன், ஏழை என்று எல்லோரும் நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இந்த நோய்
நம்மிடையே உண்மையிலேயே வருமானால் உங்களுக்குச்சேவை செய்வதிலும், சிகிச்சை செய்வதிலும்
நாங்கள் அழிய நேர்ந்தால் கூட அதை ஒரு பெரும்பேறாக க் கருதுகிறோம்.
ஏனெனில்
நீங்கள் எல்லோரும் கடவுளின் வடிவங்கள், அகங்காரம், மூட நம்பிக்கை, அறியாமை இவற்றின்
காரணமாக உங்களை வேறு விதமாக நினைப்பவன் கடவுளுக்கே துரோகம் செய்கிறான். அதன் மூலம்
பெரும் பாவத்திற்குஉள்ளாகிறான். இதில் துளி கூடச் சந்தேகம் இல்லை.
3- காரணமற்ற பயத்தினால் கலவரப்பட வேண்டாம் என்று உங்களிடம்
பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். கடவுளை நம்பியிருங்கள். பிரச்சனையைச் சமாளிக்க சிறந்த
வழியைக் கண்டு பிடிக்க அமைதியாக முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால், அவ்வாறு செய்பவர்களுடன்
ஒத்துழையுங்கள்.
4- பயம் எதற்கு? இந்த நோயின் காரணமாக மக்களின் மனத்தில்
எழுந்துள்ள பயத்திற்கு எந்த உண்மையான அடிப்படையும் இல்லை. பொதுவாக பிளேக் எவ்வளவு பயங்கரமாக
இருக்குமோ, அவ்வளவு தீவிரமாக அது கல்கத்தாவில் பரவவில்லை. இறைவனின் திருவுளமே அதற்குக்
காரணம். அரசாங்கமும் நமக்கு மிகவும் உதவியாக உள்ளது. எனவே பயம் எதற்கு?
5- வாருங்கள், கடவுளின் எல்லையற்ற கருணையில் நம்பிக்கை
வைத்து, இந்தப் பொய்யான பயத்தை விட்டொழிப்போம். கச்சையைவிரித்துக்கொண்டு செயல்களத்தில்
குதிப்போம். தூய்மையான, சுத்தமான வாழ்க்கை வாழ்வோம். அவரது அருளால் இந்தத் தொற்று நோயும்
அதைப் பற்றிய பயமும் மறைந்து விடும்.
6- 1- வீடு, சுற்றுப் புறங்கள், அறைகள், துணி, படுக்கை,
சாக்கடை எல்லாவற்றையும் தூய்மையாக வையுங்கள்.
6-2) அழுகிய,
நாட்பட்ட உணவை உட்கொள்ளாதீர்கள், புதிய, சத்து மிக்க உணவை உண்ணுங்கள். பலவீனமான உடம்பையே
நோய் எளிதில் தாக்கும்.
6-3) மனத்தை
எப்போதும் உற்சாகமாக வையுங்கள். என்றாவது ஒரு நாள் எல்லோரும் இறந்தேயாக வேண்டும். மனத்தில்
எழுகின்ற பயத்தின் காரணமாக கோழைகள் இந்த மரண
பயத்தை மீண்டும் மீண்டும் அனுபவித்துத் துன்புறுகின்றனர்.
6-4) நேர்வழியில்
பணம் சம்பாதிக்காதவன், மற்றும் பிறருக்குத் துன்பம் செய்பவனை ஒரு போதும் பயம் விட்டு
விலகாது. எனவே மரணத்தின் மாபெரும் பயத்தை நாம் எதிர் கொண்டிருக்கின்ற இந்த வேளையில்
இத்தகைய நடத்தையிலிருந்து விடுபடுவோம்.
6-5) இந்த
வேளையில் , நீங்கள் இல்லறத்தார்களாக இருந்தாலும் கோபம் மற்றும் காமத்திலிருந்து விடுபட்டிருங்கள்.
6-6) வதந்திகளைப்
பொருட்படுத்தாதீர்கள்.
6-7) ஆங்கில
அரசாங்கம் யாரையும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடாது, யார் சம்மதிக்கிறார்களோ அவர்களுக்கே
ஊசி போடப்படும்.
6-8) எங்கள்
மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு மிகுந்த கவனத்துடன் சிகிச்சையளிக்க எல்லா முயற்சிகளும்
எடுத்துக் கொள்ளப் படும். வருவோரின் மதம், ஜாதி, பெண்களின் பர்தா முறை எல்லாவற்றையும்
கருத்தில் கொண்டே சிகிச்சையளிக்கப் படும். பணக்காரர்கள் ஓடட்டும், நாங்கள் ஏழைகள்.
எனவே ஏழைகளின் மனவேதனை எங்களுக்குத் தெரியும். உதவியற்றவர்களின் ஒரே துணை ஆதிபராசக்தி
தேவியே, பயம்வேண்டாம். பயம்வேண்டாம்.” என்று அவள் நடக்கு அபயம் அளிக்கிறாள்.
7) சகோதரா,
உனக்கு உதவ யாரும் இல்லையென்றால் பேலூர் மடத்தில் வாழ்கின்ற பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின்
சேவகர்களுக்கு உடனடியாக த் தகவல் அனுப்பவும், நாங்கள் செய்ய முடிந்த உதவியை உடனே செய்வோம்.
தேவியின் அருளால் பண உதவியும் சாத்தியமே.
குறிப்பு- தொற்றுநோய் பயத்தைப்போக்குவதற்கு ஒவ்வோர் இடத்திலும் தினசரி மாலையில் நாம சங்கீர்த்தனம்
செய்யுங்கள்.
நிவாரணப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியபேச்சு
எழுந்தது. அப்போது சகோதரத் துறவி ஒருவர், சுவாமிஜி, இதற்கெல்லாம் பணத்திற்கு எங்கேபோவது? என்று கேட்டார். கணம் கூடத் தாமதமின்றி வாங்கியுள்ள நிலத்தை விற்போம். நாம் துறவிகள். பிச்சை
உணவை ஏற்று மரத்தடியில் தூங்குவதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். அப்படித்தானே
நாம் வாழ்ந்திருக்கிறோம். நம் கண் முன்னால் பரிதவிக்கின்ற ஆயிரக்கணக்கான மக்களில் துயர்
துடைப்பதற்காக இந்த மடத்தையும் மற்ற உடமைகளையும் விற்பதுஒரு பெரிய விஷயமா என்ன?
தெய்வாதீனமாக, அத்தகைய ஒரு நடவடிக்கை தேவையில்லாமல்
போயிற்று. வேண்டிய நன்கொடைகள் வரத் தொடங்கின. சகோதரி நிவேதிதை, சதானந்தர், மற்ற துறவிகள்,
பக்தர்கள், என்று பலரும் இந்த நிவாரணப் பணியில் முனைந்து ஈடுபட்டனர். இந்தப் பணி ராமகிருஷ்ணத்
துறவியரையும், ராமகிருஷ்ண மிஷனையும் மக்கள் மனத்தில் மேலும் ஒரு படி ஏற்றி வைத்தது.
இவர்கள் போதிப்பது மட்டுமல்ல. மக்கள் துயரிலும் பங்கு கொள்கிறார்கள், துயர் துடைப்பதற்கான
பணிகளில் ஈடுபடுகிறார்கள்” என்பதை மக்கள் புரிந்து கொள்ளத்
தொடங்கினர்.
நிவாரணப் பணிகளும் தொண்டுகளும் செய்யும்போது அன்பும்
பரிவும் தான் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதை இங்கே சுவாமிஜியின் அறிக்கையிலிருந்தும்
செயல்பாட்டிலிருந்தும் புரிந்து கொள்கிறோம். அது போலவே இத்தகைய பணிகளுக்குப் பெயர்
புகழ் நாட்டமும் கூடாது என்பதை சுவாமிஜிவலியுறுத்துவார். அத்தகைய நிகழ்ச்சி ஒன்றைக்
காண்போம். சேவை- தர்மக் கருத்தை ஏற்று முதலில் செயல்படுத்தியவர்களுள் ஒருவர் அகண்டானந்தர்
. இவர் சார்காச்சியில் இரண்டு ஆதரவற்ற குழந்தைகளுடன் ராமகிருஷ்ண சேவை மையம் ஒன்றை ஆரம்பித்தார்.
பஞ்சத்தால் பெற்றோர், உற்றார்,என்று அனைவரையும் இழந்த குழந்தைகள் அவர்கள். இந்தப் பஞ்ச
நிவாரணத்திற்காக அகண்டானந்தர் அங்கே வேலை செய்தார்.
அவரது அயராத உழைப்பிற்குப் பல்வேறு திசைகளிலிருந்தும் உதவிகள் வந்தன. அரசாங்கம் உதவியது.
சென்னை பக்தர்களிடமிருந்து பணம் வசூலித்து ராமகிருஷ்ணானந்தர் அனுப்பினார். மகாபோதி
சொசைட்டி பௌத்த நாடுகளில் நன்கொடை வசூலித்து கணிசமான தொகையை வழங்கியது. பிறகு நிவாரணப்
பணி பற்றி அவர்கள் எழுதிய அறிக்கையில் முழுப் பணியையும் மகாபோதி சொசைட்டியே செய்வது போல் எழுதியிருந்தார்கள்.
இது அகண்டானந்தரையும் மற்றவர்களையும் வருத்தத்திற்கு
உள்ளாக்கியது. இது பற்றி சுவாமிஜிக்கும் எழுதினார்கள். அதற்கு சுவாமிஜி எழுதிய பதில்
நிவாரணப் பணிகளுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்குவதாகும்.
பெருமை யாருக்கு என்பதை மேலிட மக்களாகிய நீங்கள்
சச்சரவிட்டுக் கொண்டிருக்க, ஏழை மக்கள் பசியால் மடிவதா? பெயர் பெருமையெல்லாம் மகாபோதி
சங்கம் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளட்டும். ஏழைகளுக்கு உதவி நடைபெறட்டும். பணி நன்றாக
நடைபெறுகிறது என்பது சிறந்த செய்தி. இன்னமும்
அதிக ஆற்றலுடன் வேலை செய்யுங்கள்.
சிகாகோ சர்வமத
மகாசபையில் கலந்து கொண்டவரான தர்ம பாலர் மே-8ஆம் நாள் மடத்திற்கு வந்தார். சுவாமிஜியை
மிகவும் நேசித்தார் அவர். அவர் வந்த அன்று பெரும் மழையாக இருந்தது. சுவாமிஜியைக் கண்டு
பேசிய பிறகு தர்மபாலர் மிசஸ் சாராவைக் காண விரும்பினார் . சுவாமிஜி அவரை அழைத்துச்
சென்றார். மழை காரணமாக வழியெங்கும் சேறும் சகதியுமாக இருந்தது. மிகுந்த சரமத்துடன்
இருவரும் சென்றனர். ஒரு முறை தர்மபாலரின் கால்கள் சேற்றில் புதைந்து விட்டன. சுவாமிஜி
அவரது இடுப்பைப் பிடித்துத் தூக்கிவிட்டார். சாரா இருந்த வீட்டை அடைந்ததும் தர்ம பாலர்
தமது கால்களைக் கழுவ முற்பட்டார். சுவாமிஜி அவரது கையிலிருந்து தண்ணீர்க் குவளையைப்
பிடுங்கி, நீங்கள் என் விருந்தினர். நான் தான் அதைச்செய்ய வேண்டும்” என்று கூறி தாமே அவரது கால்களைக் கழுவத் தயாரானார். தர்மபாலரும்
சரி, அவரது மேலை நாட்டு சிஷ்யைகளும் சரி, அதற்குச் சிறிதும் சம்மதிக்கவில்லை அவரிடமிருந்து
குவளையைப் பறித்துக் கொண்டனர். சுவாமிஜி இப்படி ஒன்றை நினைக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? உங்கள் சிஷ்யைகள் பார்க்க நீங்கள் இப்படி
நடந்து கொண்டது சரியல்ல” என்றார் தர்மபாலர். சுவாமிஜியின்
பணிவும் பண்பும் அனைவரையும் கவர்ந்தன.
விடைபெறும் முன்பு தர்மபாலர் சுவாமிஜியிடம், சுவாமிஜி,
நான் பாலி மொழி வகுப்பு ஆரம்பிக்க இருக்கிறேன், நீங்கள் உதவுவீர்களா? என்று கேட்டார். நிச்சயமாக- நானே உங்கள் முதல் மாணவனாக
ஆவதன் மூலம் என்றார் சுவாமிஜி.
No comments:
Post a Comment