Sunday, 14 June 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-63

வகுப்பு-63  நாள்-22-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

 

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

ந ஹி தேஹப்ருதா ஷக்யம் த்யக்தும் கர்மாண்யஷேஷத:।

யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே॥ 18.11 ॥

 

18.11 உடலெடுத்துள்ள ஜீவனால் எல்லா கரமங்களையும் முற்றிலும் விடுவது சாத்தியமில்லை.

ஆனால் யார் வினைப்பயனை துறந்தவனோ அவன் தியாகி என்று சொல்லப்படுகிறான்

-

கர்மம்(செயல்) என்றால் என்ன?

 

நாம் மூன்றுவிதமான கர்மங்களை தினமும் செய்கிறோம்

-

1.நம்மை அறியாமல் செய்யும் கர்மங்கள்

உணவை உள்ளே அனுப்புவது மட்டுமே நமக்கு தெரியும். உணவை ஜீரணிப்பது,ரத்தத்தை உருவாக்குவது.உடல் முழுவதும் ரத்தத்தை அனுப்புவது.உடலின் கழிவுகளை வெளியேற்றுவது போன்ற ஆயிரக்கணக்கான செயல்கள் உடலுக்குள் நடந்துகொண்டிருக்கிறன.இவைகள் நம்மை அறியாமல் செய்யும் செயல்கள்.

உடலுக்குள் ஜீவன் இருக்கும்வரை மட்டுமே இந்த செயல்கள் நடைபெறும், உடலைவிட்டு வெளியே சென்றுவிட்டால்.இவைகள் அனைத்தும் நின்றுவிடும்.

இந்த செயல்களை செய்யும்படி கட்டளையிடுவது யார்?

உடலில் ஒரு நோய் ஏற்பட்டால்,அதை உடனே சரிசெய்யும்படி கட்டளையிடுவது யார்?

நோய் தாக்கியுள்ள இடத்திற்கு வெள்ளை அணுக்களை அதிகம் அனுப்பி,வைரஸ் கிருமிகளை கொல்லும்படி கட்டளையிட்டது யார்?

 

இவைகள் எல்லாம் தானாக நடைபெறுகின்றன என்பது நமது வாதமானால், ஜீவன் உடலைவிட்டு போன பிறகும் நடக்க வேண்டுமே! ஏன் நடக்கவில்லை?

 

நாட்டில் பிரதமர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் தலைவர். அவருக்கு கீழ் பணிபுரிய கோடிக்கணக்கான அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் தினமும் பிரதமர் கட்டளையிடுவதில்லை.இவர்கள் செய்யும் செயலை கவனித்துக்கொண்டிருப்பதும் இல்லை.ஆனாலும் அன்றாட செயல்கள் ஒழுங்காக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.இது எப்படி?

ஒவ்வொருவருக்கும் மேல் ஒரு அதிகாரி இருக்கிறார்.

தனக்கு கீழ் உள்ளவர்கள் தினசரி செய்ய வேண்டிய பணிகளை ஒழுங்காக செய்வதை அவர்கள் கவனித்துக்கொண்டே இருப்பார்கள்.ஏதாவது குழப்பம் நேர்ந்தால்.புதியவர்களை அனுப்பி  அந்த வேலையை செய்து முடிப்பார்கள்.

ஒருவேளை புதியவர்களாலும்  அதை செய்ய முடியாவிட்டால்,அதற்கு மேல் உள்ள அதிகாரிக்கு தகவல் செல்லும். அவர் தேவையான ஆட்களை அனுப்பி அந்த வேலையை முடிப்பார்.

இப்படியே பல மேல் அடுக்குகள் இருக்கின்றன.

இவைகள் அனைத்தும் பிரதமருக்கு கட்டுப்பட்டவைதான்.அவரது ஆணையின் கீழ் இயங்குவதுதான்.

-

ஒரு நாட்டில் எப்படி ஆட்சி நடைபெறுகிறதோ.அதேபோலவே நமது உடலுக்குள்ளும் செயல்கள் நடைபெறுகின்றன.

உடலின் ஒவ்வொரு செயலையும் கவனிக்கவும்.அதை முறைப்படுத்தவும்,கட்டுப்படுத்தவும்.அதைவிட உயர்ந்த உறுப்புகள் உள்ளன.

இவைகள் அனைத்தும் மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது.

மூளையை கட்டுப்படுத்துவது புத்தி

புத்தியை கட்டுப்படுத்துவது ஜீவன்.

-

நமது உடலில் அறியாமல் நடக்கும் செயல்களுக்கு பின்னால்கூட நமது அதிகாரம் இருக்கிறது.

சில நாட்கள் நாம் உணவு உட்கொள்ள மறுத்துவிட்டால்.அனைத்தும் படிப்படியாக நின்றுபோகும்.

-

2.நாம் அறிந்து செய்யும் செயல்கள்

-

கை,கால்,வாய் மூலமாக நமக்கு நாமே செய்து கொள்ளும் செயல்கள்,பிறருக்கு செய்யும் செயல்கள் போன்றவை நாம் அறிந்து செய்யும் செயல்கள்

 

3.மனத்தின் மூலம் செய்யும் செயல்கள்

 

மனத்தில் எத்தனையோ எண்ணங்கள் வருகின்றன.

பலரது நினைவுகள் மனதில் எழுகின்றன.

சிலரை நினைக்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. சிலரை நினைக்கும்போது கோபம் வருகிறது.

மனத்திலேயே சிலருடன் உரையாடிக்கொண்டிருப்போம்.

நாளை இந்த வேலையை செய்ய வேண்டும்,எதிர்காலத்தில் இப்படிப்பட்ட வேலைகளை செய்ய வேண்டும் என்ற சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்.

இவ்வாறு மனத்தில் எழும் பல சிந்தனைகளால் நமது ஆற்றல் பெருமளவு வீணாகிப்போகிறது.

சிலர் சிந்திப்பதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளைப்பற்றிய ஞானத்தை பெறுவார்கள்.

சிலர் மனத்தில் சிலரை பழிவாங்குவதற்கான திட்டத்தை தீட்டுவார்கள்.

சிலர் நன்மை செய்வது எப்படி என்று சிந்திப்பார்கள்.

மகான்கள் பெரும்பாலும் மனத்தின் மூலம் செயல்படுகிறார்கள்.

-

இந்த மூன்றுவிதமான செயல்களையும் விட்டுவிட முடியுமா?

முடியாது.

எந்த வேலையும் செய்யமல் சும்மா இருந்தால்கூட,மனம் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கும்.

எதையும் சிந்திக்காமல் தூங்கிக்கொண்டிருந்தால்கூட உடலுக்குள்ளே வேலை நடந்துகொண்டுதான் இருக்கும்.

 

எனவே செயல்களை முற்றிலுமாக நிறுத்துவது யாராலும் முடியாது.

சமாதி நிலையை அடைந்த மகான்கள்,அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு செயலைக்கடந்து செல்கிறார்கள்.

அப்போது அவர்களது உடல்கூட இயங்காமல் நின்றுவிடுவது.

-

அவர்களைத்தவிர வேறு யாராலும் செயல்களை விட முடியாது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செயல் நடந்துகொண்டேதான் இருக்கும்.

 

செயல் நடந்தால் நடந்துகொண்டிருக்கட்டும் அதனால் என்ன நஷ்டம்?

ஒவ்வொரு செயலும் இன்னொரு செயலை தூண்டிவிடுகிறது.

ஒரு குளத்தில் கல் எறிந்தால் பிரதியாக சிறு அலையை எழுப்பிவிடுகிறது.அந்த சிறு அலைகள்  குளம் முழுவதும் பரந்து பயணிக்கிறது.

அதுபோல உடலுக்குள் நடக்கும் செயல்களாக இருந்தாலும்,உடலுக்கு வெளியே நடக்கும் செயல்களாக இருந்தாலும்.மனத்தின் மூலம் நடக்கும் செயல்களாக இருந்தாலும். ஒவ்வொரு செயலும் புதிதாக இன்னொரு செயலை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அது இன்னொன்றை உருவாக்குகிறது.இப்படி செயலுக்கு முடிவே இல்லை.

-

தனியாக இருப்பது வேதனையானது என்று துணையைத்தேடிக்கொள்கிறார்கள்.

துணை கிடைத்தபிறகு குழந்தைக்கான தேவை ஏற்படுகிறது.

அந்த குழந்தை வளர்ந்த பிறகு இன்னொரு துணையை தேடுகிறது.

இவ்வாறு மனித சமூகம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு உயிரும் இருப்படியேதான் வளர்கிறது.

மனித உடலுக்குள்கூட அணுக்கள் பல்கி பெருகிக்கொண்டே இருக்கின்றன.

-

ஒவ்வொரு செயலும் ஒரு பலனைக்கொண்டுவருகிறது.

பிறருக்கு நன்மை செய்யும்போது புண்ணியம் கிடைக்கிறது.

பாவம் செய்யும்போது பாவம் வருகிறது.

 

தன்னை மட்டும் கவனித்துவிட்டு குடும்பத்தில் உள்ளவர்களை கவனிக்காமல் விட்டால் பாவம் வருகிறது

தன்னையும் கவனித்து.குடும்பத்தையும் கவனித்தால் புண்ணியம் கிடைக்கிறது.

தன் குடும்பத்தை மட்டும் கவனித்து உறவினர்களை கவனிக்காமல் விட்டால் பாவம் வருகிறது.

உறவினர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துவிட்டு சமுதாயத்தில் உள்ள பிறருக்கு உதவாமல் இருந்தால் பாவம் வருகிறது.

சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் நன்மை செய்தால் புண்ணியம் கிடைக்கிறது

சமுதாயத்தில் உள்ள பிறருக்கு உதவிவிட்டு, நாட்டில் உள்ள பிறமக்களுக்கு உதவாமல் இருந்தால் அதனாலும் பாவம் வருகிறது.

நாட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு பிற நாட்டிலுள்ளவர்களை கவனிக்காமல்,அவர்களுக்கு உதவாமல் இருந்தால் அதனாலும் பாவம் வருகிறது.

 

நம்மால் எப்படி இன்னொரு நாட்டில் உள்ளவர்களுக்கு உதவ முடியும்?

ஒரு நாட்டின் பிரதமரால் பிற நாட்டு மக்களுக்கு முடியும்.

உலகிலுள்ள எல்லா மக்களையும் நேசித்து,அவர்கள் நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்று முயற்சித்த பிறகு. ஆடு,மாடு,சிங்கம் போன்ற பிற அறிவு ஜீவிகளை கவனிக்காமல் விட்டால் அதனாலும் பாவம் வருகிறது.

ரிஷியால் மட்டுமே இது முடியும்.

-

இந்த கர்ம சங்கிலிக்கு சம்சாரம் என்று பெயர்.

இந்த கர்மத்தில் ஒருவன் மாட்டியிருக்கும்வரை மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டே இருக்க வேண்டும்.

உலகத்தை துறந்து காடுகளில் சென்று தவம் செய்பவர்கள்கூட கர்மசங்கிலியில் மாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

காட்டில் தவம் செய்யும் ரிஷி தனக்கு தெரிந்ததை தனது சீடனுக்கு போதிக்க வேண்டும்.

சீடனை முக்திக்கு தயார்படுத்திய பிறகே அவர் முக்தி அடைய முடியும்.

-

இதிலிருந்து விடுபட ஒரே வழிதான் இருக்கிறது

-

ஒவ்வொரு செயலும் பாவம்,புண்ணியம் என்ற பலனை கொண்டுவருகிறது.

இதனால் மறுபடி பிறவி ஏற்படுகிறது.

இந்த புண்ணிய மற்றும் பாவ பலன்களை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால் இதிலிருந்து தப்பிவிடலாம்.

இந்த பலன்களை துறப்பவனுக்கு தியாகி என்று பெயர்.

-

இதை எப்படி செய்வது?

 

நாம் ஒரு சமுதாயத்தில் உள்ள ஆயிரம்பேருக்கு உதவுகிறோம் என்று வைத்துக்கொள்வோம்,உதவி பெற்ற மக்கள் நம்மை பாராட்டி ஒரு விழா நடத்துவார்கள்.

அந்த விழாவில் கலந்துகொண்டு.அவர்களின் புகழ்மொழிகளை ஏற்று பூரிப்படைந்தால்,அதன் பலனை ஏற்றுக்கொண்டவர் ஆவோம்.

 

இந்த செயல் என்னால் நடக்கவில்லை. நான் ஒரு கருவி மட்டுமே. இந்த உடல் மூலம் இறைவனே இப்படிப்பட்ட செயலை செய்திருக்கிறார். எனவே நீங்கள் பாராட்ட வேண்டுமானால் இறைவனைப்பாராட்டுங்கள், இறைவனை புகழுங்கள் என்னை பாராட்டாதீர்கள் என்றுகூறி அதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

 

ஒருவேளை நாம் ஆயிரம்பேருக்கு உதவி செய்தது,இன்னொரு சமுதாயத்தை சேர்ந்த தூறுபேருக்கு எரிச்சலை கொடுத்திருக்கும். அவர்கள் திரண்டுவந்து கடுமையான வார்த்தைகளால் திட்டி, நம்மை அவமானப்படுத்திவிட்டு செல்வதாக வைத்துக்கொள்வோம்.

 

நான் நன்மைதானே செய்தேன் பிறகு ஏன் இந்த அவமானம்? என்று நினைத்தால் கர்மத்தின் பலனை ஏற்றுக்கொண்டவர்கள் ஆகிவிடுவோம்

 

மக்களுக்கு நன்மை செய்தது நான் அல்ல. நான் வெறும் கருவி மட்டுமே, இந்த ஏச்சும்.அவமானங்களும் எனக்குரியதல்ல.இந்த உடல் மூலம் யார் இவைகளை செய்தார்களோ அவர்களுக்குரியது என்று நினைத்து  அமைதியாக இருந்துவிட வேண்டும்.

 

இப்படி புகழ் வரும்போது.அதை ஏற்றுக்கொள்ளாமலும்.இகழ் வரும்போது அதில் அமைதியிழக்காமலும் யார் இருக்கிறார்களோ அவர்களை கர்மத்தின் பலனால் கட்டுப்படுத்த முடியாது.

அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.


No comments:

Post a Comment