Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-37

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-37

🌸

.......

தியான அனுபவம்

................

 சுவாமிஜியின் சொற்பொழிவுகளைப்பொது இடங்களில் கேட்ட பலரும் அவரிடம் தனியாகக் கற்றுக் கொள்ளவும் அறிவுரை பெறவும் விரும்பினர். அதற்காக வகுப்புச் சொற்பொழிவுகளையும் ஆரம்பித்தார் சுவாமிஜி. இவை பொதுவாக காலையில் 10 அல்லது 10-30 மணி அளவில் நடைபெற்றன.1.00 முதல் 2.30 மணி நேரம் இவை நடைபெற்றன. 30 அல்லது 40 பேர் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டார்கள். பொதுவாக இந்த வகுப்புகள் சுவாமிஜி தங்கிய வீட்டிலேயே நடைபெற்றன. எல்லோருக்கும் போதுமான நாற்காலிகளோ மற்றவசதிகளோ இருப்பதில்லை  இருந்தாலும் மூன்றாம் மாடியில் இருந்த அந்த வீ்ட்டிற்கு  அத்தனை படிகளையும் ஏறி, சிலவேளைகளில் மாடிப்படிகளில் கூட  அமர்ந்து அவரது சொற்பொழிவுகளை மக்கள் கேட்பதுண்டு.

 

 பொதுவாக சுவாமிஜி கட்டிலிலோ சோபாவிலோ பத்மாசனத்தில் அமர்ந்த படி பேசுவார். அவரைப் பார்த்து பலரும் அது போல் அமர முயற்சி செய்வார்கள். அவர்களின்  முயற்சிகளையும் தோல்விகளையும் கண்டு சிரித்தபடியே சுவாமிஜி, உங்கள் கால்கள் அதற்கான  பயிற்சி பெற வில்லை. இந்தியாவில் குழந்தைப் பருவத்திலிருந்தே எங்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப் படுகிறது என்பார். பிறகு,  தரையில் அமர முடியாத சிலரை அழைத்துத் தம் அருகிலேயே அமர்த்திக்கொள்ளவும் செய்வார். எப்படி அமர்ந்துள்ளோம்   என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். வசதியாக  அமர வேண்டும், உடம்பு நேராக இருக்க வேண்டும்- அவ்வளவு தான், அதே வேளையில் உடம்பு ஒளிர்வதாக, முற்றிலும் ஒளிமிக்கதாகத்  திகழ்வதாக நினைத்துக் கொள்ளுங்கள், என்று கூறிவிட்டு சொற்பொழிவை ஆரம்பிப்பார். 15 முதல் 20 நிமிடம் ஆரம்பத்திலோ கடைசியிலோ அனைவரையும் தியானம் செய்யுமாறு கூறிவிட்டு தாமும் தியானமும் அமர்வார்.

 

 தியானத்தில் ஆரம்பத்தில் மிகவும் கம்பீரமாக ஆழ்ந்த குரலில் சில சம்ஸ்கிருத மந்திரங்களை ஒதுவார். அமர்ந்திருப்பவர் மனத்தின் ஏதோ நாளங்களை எல்லாம் அந்தக் குரல் சுண்டிவிடும். ஏனெனில் முறையான ஏற்ற இறக்கங்களுடன் ஓதப் படுகின்ற சம்ஸ்கிருத மந்திரங்கள் இதய நாளங்களைச் சுண்டி விடுகின்ற ஆற்றல் பெற்றவை, என்பார் சுவாமிஜி. அதன் பிறகு நிகழ்வதோ  சுவாமிஜியின்  சன்னிதியின் ஓர் அற்புத அனுபவம்.

 இந்த அனுபவம் ஒரு வேளை ஓரிருவரைத் தவிர, அனைவருக்கும் வாய்த்தது. அவரது சன்னதியில் அமர்பவர்கள் அந்தத் தியான அனுபவத்தைப்பெறாமல் இருக்க முடியுமா? அந்த வேளையில் நான் என் மனத்தை ஓர் ஆனந்த நிலைக்கு உயர்த்துகிறேன். அதன் பிறகு அதே நிலையை உங்கள் மனத்திலும் உருவாக்க முயற்சி செய்கிறேன் என்று அந்த தியான வகுப்புகளைப் பற்றி சுவாமிஜி கூறுவார்.

 சுவாமிஜி இந்த நாட்களில்ராஜயோகம் பற்றியே அதிகம் வகுப்புச்சொற்பொழிவுகளில் பேசினார். அதன் செயல்முறை ப் பகுதி அவ்வளவு எளிதல்ல என்பது மாணவர்களுக்கும் புரிந்தேயிருந்தது. ஆனால் ”தியான சித்தராகிய சுவாமிஜியின் அருகில் அமர்வதும் அந்த தியான அனுபவத்தைப்பெறுவதும் ஒரு மாபெரும் பேறு அல்லவா!

.....

 தியானம் பற்றிய உண்மை

...............

 ஆனாலும் தியானம்  ஒரு வழி மட்டுமே என்பதை சுவாமிஜி மாணவர்களிடம் மிகவும் வலியுறுத்திக் கூறுவார். தியான அனுபவத்தைப்பெறுவது லட்சியம் அல்ல, அதன் மூலம் இறைவனைநாடுவதே லட்சியம் என்பதைத் தெளிவுபடுத்துவார். அவர் கூறுவார், நாம் எதற்காகத் தியானம் செய்வதற்குக் கற்றுக் கொள்கிறோம்? இறைவனை நினைப்பதற்காக, இறைவன் என்ற லட்சியத்திற்கு நம்மை அழைத்துச்செல்வதற்கான ஒரு வழி மட்டுமே ராஜயோகம். ராஜயோகத்தின் ரிஷியான பதஞ்சலி மாமுனிவர் இந்தக் கருத்தை எடுத்துக் கூறுவதற்கான வாய்ப்பு ஒன்றைக் கூட நழுவவிடவில்லை. நீங்கள் இப்போது இளம் வயதினர். இது தான் தருணம். வயதான பிறகு கடவுளை நினைக்கலாம் என்று கருதாதீர்கள். வயதாகும் போது அவரை நினைக்க முடியாது. இறைவனை நினைப்பதற்கான ஆற்றல் இளம் வயதில் தான் ஏற்படுகிறது.

 யாராவது இந்தக் கருத்துக்களைப் புரிந்து கொள்வதிலோ பயிற்சிகளிலோ சிரமப்பட்டால் சுவாமிஜி கருணையோடு அவர்களை வழி நடத்துவார். கொஞ்சம் பொறுமையாக இருங்கள், இந்தப் பாதையில் வெற்றி பெற வேண்டுமானால் மிகுந்த பொறுமை அவசியம். இன்னும் அவர்களிடம்  சந்தேகம் எழுமானால், நான் உங்களுடன் இருக்கிறேன். என்னிடம் சிறிது நம்பிக்கை வையுங்கள் என்று அபயம் அளிப்பார். அவர்களுக்கும் தியான அனுபவத்தை வழங்குவார்.

.....

 உனக்காகத் தியானிக்கிறேன்.

..................

 சுவாமிஜியின் அருகில் அமர்ந்தவர்கள் மட்டும் தான் அந்த  அனுபவத்தைப்பெற்றார்களா என்றால் இல்லை.  அவர் இளமையிலேயே தியான சித்தர். தமது சங்கல்பம் ஒன்றினாலேயே தியான அனுபவத்தைவழங்க  வல்லவர். அது பற்றி ஹேன்ஸ்ப்ரோவின் வாழ்க்கை நிகழ்ச்சி  ஒன்றைப் பார்ப்போம்.

சுவாமிஜிக்காக சூப் ஒன்றைத் தயாரித்து வைத்துவிட்டு 10.30 வகுப்பில் கலந்து கொள்வார் ஹேன்ஸ்ப்ரோ. இந்த சூப்தயாரிக்க  மூன்று நான்கு மணிநேரம் ஆகும். ஒரு நாள் அவரால் குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிக்க இயலவில்லை. அப்போது வகுப்பிற்குக் கிளம்பிய சுவாமிஜி ஹேன்ஸ்ப் ரோவிடம், என்ன, நீ தியான வகுப்பிற்கு வரவில்லையா? என்று கேட்டார். தாம் வகுப்பிற்குச்செல்ல முடியாததன் காரணத்தைச்சொன்னார் ஹேன்ஸ்ப்ரோ. உடனே சுவாமிஜி, பரவாயில்லை, உனக்காக நான் தியானம் செய்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.ஆச்சரியம்! சுவாமிஜியின் வகுப்பு முடியும்வரை ஹேன்ஸ்ப்ரோ தியான அனுபவத்திலேயே இருந்தார் . சுவாமிஜி தனக்காகத் தியானம் செய்கிறார் என்பதை அவர் புரிந்து கொண்டார். இதை நீண்ட  காலத்திற்குப் பிறகு நினைவு கூர்ந்த ஹேன்ஸ்ப்ரோ, இன்னொரு விஷயம் தெரியுமா? அன்று மட்டுமல்ல, இன்றும் அவர் எனக்காகத் தியானம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை நான் எப்போதும் உணர்கிறேன் என்று அமைதியாகக் கூறினார்.

 

 மற்றொரு நாள் ஏதோ காரணத்திற்காக ஹேன்ஸ்ப்ரோ உற்சாகம் இழந்து சோர்ந்து போய் காணப் பட்டார். அதைக் கண்ட சுவாமிஜி, வா, உட்கார், நாம் தியானிப்போம், என்றார். ஓ! சுவாமிஜி, நான் தியானமே செய்ததில்லை என்றார் ஹேன்ஸ்ப்ரோ, அதனால் என்ன!வந்து என் பக்கத்தில் உட்கார். நான் தியானிக்கிறேன் என்றார் சுவாமிஜி. ஹேன்ஸ்ப்ரோ சென்று சுவாமிஜியின் அருகில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டார். ஒரு கணம் தான், நான்  எங்கேயோ மிதக்கப்போவது போன்ற ஓர் உணர்ச்சி எழுந்தது. விரைந்து கண்களைத் திறந்து சுவாமிஜி யைப் பார்த்தேன். ஒரு சிலைபோல் அவர்  அமர்ந்திருந்தார்.  20 இல் பாதி 15 நிமிடங்களுக்கு அவர் தியானித்து விட்டு எழுந்தார்.

 

 சுவாமிஜி தியானத்தில் அமர்ந்திருப்பதைப் பார்ப்பதே ஓர்  அற்புத அனுபவம் அல்லவா! தாம் கண்ட சித்திரத்தை ரொடீமல் என்பவர் எழுதுகிறார். காவியுடை தரித்து, பத்மாசனத்தில் அமர்ந்து, ஒன்றன் மீது ஒன்றாக வைத்த கை மலர்களைச்சேர்த்து மடி மீது வைத்து. விழிகளைப் பாதி மூடி தியானத்தில் அமர்ந்திருப்பது. செப்பு ச்சிலை ஒன்று இருப்பது போல் தோன்றும்.ஆ! அவர் ஒரு யோகி என்பதில் ஐயமில்லை. புற உலகின் சிந்தனைகள் எதுவும்  தொடாத, உன்னத உலகின் சிந்தனைகளை மட்டுமே உடைய ஒரு மாபெரும் லட்சிய புருஷர், அவரைக் கண்டவர் யாரும், அவருக்கு மரியாதை செய்யாமல், அவரை நேசிக்காமல், அவரிடம் பக்தி கொள்ளாமல் இருக்க இயலாது.

......

 அவர் கடவுளே!

................

 மீட் சகோதரிகளில் ஒருவரான மிசஸ்கேரி வைக்காஃப், அவர் கடவுளே தான் என்றார். அவருக்கு அத்தகைய உணர்வை ஏற்படுத்திய சம்பவத்தைப் பற்றி அவரே கூறுகிறார். ஒருநாள் மாடியிலிருந்து படிக்கட்டு வழியாக நான் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் சுவாமிஜி இறங்கிக் கொண்டிருந்தார். திடீரென்று என் கால் இடறிவிட்டது விழப்போன நான் அப்படியே சுவாமிஜியின் தோளைப் பிடித்துக்கொண்டு சமாளித்துக் கொண்டேன். ஆனால் சுவாமிஜியைத் தொட்டதுமே என்னுள், நீ கடவுளைத் தொட்டுள்ளாய், என்ற ஓர் உணர்வு எழுந்தது. என் மனம் மிகவும் உயர்ந்த ஆன்மீக நிலைக்கு உயர்த்தப் பட்டது. அந்த உயர்ந்த ஆன்மீகப் பேரானந்த நிலையில் பல நாட்கள் மூழ்கியிருந்தேன். அவர் கடவுளே தான்.

தம் சகோதரியின் இந்த அனுபவத்தைப்பற்றி மிஸ்ஹெலன் பிற்காலத்தில் குறிப்பிடும்போது, அவளது குரலில் தொனித்த மரியாதையும், வெளிப்பட்ட பக்தியுணர்வும், அன்பும் அதைக்கேட்டவர்களும் கூட ”சுவாமிஜி கடவுள் தான் என்ற அதே உணர்வைக் கொடுத்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

......

 சில இனிய சம்பவங்கள்

......................

 இந்த வகுப்புச் சொற்பொழிவுகளுக்கான சுவாமிஜியின்  நோக்கம், மாணவர்களின்  மனத்தை ஒளியின்  பாதையில் திருப்பவது, வசதியான ஒரு பாதையை இனிய மொழியில் கூறி அவர்களை இருளின் பாதையில் ஆழ்த்துவது அல்ல, எனவே  அவர் தேவையான இடங்களில் மாணவர்களைக் கடிந்து கொள்ள வும், மனத்தில் உறைப்பது போல் சுரீரென்று பேசவும் செய்தார்.

 ஒரு முறை ஒரு பெண், சுவாமிஜி, எல்லோரும் துறவிகளாகி விட்டால் உலகம் என்ன ஆவது? என்று வழக்கமான கேள்வியைக்கேட்டார்.சட்டென்று வந்தது சுவாமிஜியின் பதில், மேடம் பொய்யை உதடுகளில் வைத்துக்கொண்டு, ஏன் என்னிடம் வர வேண்டும்? உங்கள் சொந்த சுக போகங்களைத் தவிர இந்த உலகில் வேறு  எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட்டதே இல்லையே!

 ஒரு நாள் சுவாமிஜியின் வகுப்பு அவரது அறிவுக் கூர்மையை, நுண்ணறிவைக் காட்டுவதாக அமைந்திருந்தது. பேசிக்கொண்டே இருந்த அவர் திடீரென்று நிறுத்திவிட்டு,தம் பெயரையே எழுதத் தெரியாத ஒருவரின் சீடன் நான். ஆனால் அவரது செருப்பைக் கழற்றக் கூட எனக்குத் தகுதி கிடையாது. எனது இந்த அறிவை மொத்தமாக எடுத்து கங்கையில் எறிந்து விட முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்று கூறினார்.அப்போது ஒரு பெண் எழுந்தது. ஆனால் சுவாமிஜி, உங்கள் அந்த அறிவை அல்லவா நான்மிகவும் நேசிக்கிறேன்! என்றார். அது ஏன் தெரியுமா? மேடம்? நீங்கள் ஒரு முட்டாள்- என்னைப்போல் என்று சட்டென்று கூறினார் சுவாமிஜி.

 சுவாமிஜி, நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா? என்று ரொடீமல் ஒரு முறை சுவாமிஜியிடம்  கேட்டார். சுவாமிஜி சிரித்தபடியே, என்னைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது,? என்னைப்போல் குண்டான ஒருவன் கடவுளைக் கண்டிருப்பான் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டார்.

 

 ஒரு நாள் ஒருவர் சுவாமிஜியிடம், சுவாமிஜி, ஏசுநாதர் ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்று கூறுவது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, இப்படி இங்கு மட்டுமல்ல, காலங்காலமாக எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறார்கள். இந்தியாவில் இப்படி பலருடைய வரலாற்றில் கூறுகிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், என்னுடையபிறப்பு சாதாரணமாக நடந்தது, எனக்கு முறையான ஒரு தாயும் தந்தையும் இருந்தார்கள் என்றார்.

 ஆனால் கன்னி கருத்தரிப்பது என்பது இயற்கை நியதிக்கே எதிரானது அல்லவா? என்று தொடர்ந்தார் கேள்வி கேட்டவர்.

 சுவாமிஜி அப்போது புகைக் குழாயில் புகை பிடித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.குழாய் வாயில் தேங்கிய சாம்பலைக் கொட்டுவதற்காக  குழாயைத் தமது செருப்பில் தட்டினார். அந்தச் சாம்பல் தரை விரிப்பில் வீழ்ந்து அந்த இடத்தை அசுத்தம் செய்வதைப்பற்றி அவர்  கவலைப்பட்டதாகத்தெரியவில்லை. பிறகு நிதானமாக புகையை ஒரு முறை இழுத்துக்கொண்டார். பிறகு பேசினார்.

 நாம் அனைவருமே இயற்கையின் அடிமைகள். இயற்கையின் தலைவர் இறைவன் மட்டுமே. தாம் விரும்புவது போல்  செய்வார் அவர். இந்தக் கணத்தில் அவர் ஓர் உடம்பைக்கொள்ளலாம் அல்லது ஒரு டஜன் உருவங்களை  எடுக்கலாம். வேண்டிய உருவத்தில் வரலாம். நம்மால் எப்படி அவரை எல்லைப்படுத்த இயலும்?

......

 மௌன குரு

.............

 கேள்விகள் கேட்டு, பதில் பெற்று சந்தேகங்களை நிவர்த்தி செய்த நிகழ்ச்சிகள் பல என்றால் பதில் கூறாமலே சந்தேகங்களைத் தீர்த்த நிகழ்ச்சிகளும் சுவாமிஜியின் வாழ்க்கையில் நடைபெற்றன. சுவாமிஜியின் இந்தக் கால சொற்பொழிவுகளுக்குப் பொறுப்பாளராக இருந்த ஆலனின் மனைவி எடித் ஆலன்.ஆவிகளை அழைத்துப் பேசுகின்ற ஒரு கூட்டத்தில் சேர்ந்து, அவர்களின் அறிவுரைப்படி சில பயிற்சிகளைச் செய்ததில் எடித்தின் உடல் நலம் கெட்டு, மனநிலையும்  சீர்குலைகின்ற அளவிற்கு ஆகிவிட்டது. சுமார் இரண்டு வருடங்கள் எந்த நம்பிக்கையும் இன்றி அவதியுற்ற எடித்திடம் சுவாமிஜியைக் காணுமாறு வற்புறுத்தினார் ஆலன்.

 எடித் ஒருநாள் மாலையில் சுவாமிஜியிடம் சென்றபோது மறுநாள் காலையில்  வருமாறு தெரிவித்தார் சுவாமிஜி. மறுநாளைப் பற்றி  நினைத்து இரவின் பெரும்பொழுதைத் தூக்கமின்றியே கழித்தார் எடித். சுவாமிஜி யிடம் கேட்பதற்கென்று பல கேள்விகளை நினைத்து வைத்துக்கொண்டார். மறுநாள் காலையில் சென்றபோது, சுவாமிஜி வெளியில் செல்வதாகவும் தற்போது யாரையும் பார்க்க மாட்டார் என்றும் தெரிவித்தார் ஹேன்ஸ்ப்ரோ. ஆனால் வாழ்க்கைப் பிரச்சனைகளில் சிக்குண்டு, வேறுயாரும் காப்பாற்ற இயலாத நிர்கதியான நிலையில் சுவாமிஜியே தஞ்சமென்று வந்தஎடித் அவ்வளவு எளிதாகத் திரும்ப விரும்பவில்லை. இப்போது என்னைச் சந்திப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே அவர் என்னைச் சந்திப்பார் என்று உறுதியாகத் தெரிவித்தார் எடித். கடைசியில் அவரை மாடியறையில் அமரச் செய்தார் ஹேன்ஸ்ப்ரோ.

 

 சிறிது நேரத்தில் சுவாமிஜி உள்ளே வந்தார்.ஜன்னல் அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அவருக்கே உரிய கம்பீரத்துடன் சம்ஸ்கிருதசுலோகங்களை ஓத ஆரம்பித்தார். பிறகு அமைதியாக எடித்தை நோக்கித் திரும்பி, என்னம்மா? என்று கேட்டார். அவ்வளவு தான், எடித்தால் எதுவும் பேச இயலவில்லை. அவரது மனத்தின் ஆழங்களில் எங்கேயோ ஒரு கதவு படாரென்று அடித்துத் திறந்து கொண்டது போல் இருந்தது.  எங்கிருந்தோ அழுகை வந்தது. கண்ணீர் வடித்தபடி ஏங்கி அழ ஆரம்பித்தார் அவர். சுவாமிஜி மௌனமாக அமர்ந்திருந்தார். அரை மணி நேரம் அழுது தீர்த்தார் எடித். சுவாமிஜி ஒரு வார்த்தையும் பேசவில்லை. இறுதியில், நாளை இதே நேரம் வா என்றார். எடித் சென்றார். அவரது சன்னதியிலிருந்து  புறப்பட்ட போது எனது கேள்விகள் அத்தனைக்கும்  விடை என்னுள்ளேயே  கிடைத்திருந்தது. எனது பிரச்சனைகள் முற்றிலுமாக விலகி யிருந்தன. நான் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. அவரும் என்னிடம் எதுவும் கூறவில்லை. அன்று வெளியில் வந்து வீட்டை நோக்கிச்செல்லும்போது சாலையில் கிடந்த கூழாங்கற்கள் எல்லாம் பல வண்ணம் காட்டும் ரத்தினக் கற்களாக ஜொலித்தன. எப்படியோ ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன். அந்தநாள் வாழ்வின் ஒரு  பொன்னாளாக இருந்தது என்று பின்னாளில் தெரிவித்தார் எடித். அதன் பிறகும் ஓரிரு நாட்கள் எடித் சுவாமிஜியைத் தனிமையில் சந்தித்தார். அப்போது சுவாமிஜி அவருக்குத் தியானம் மற்றும் பிராணாயாமப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்தார்.

 

 பொதுவாகக் காலை வகுப்புகள் முடிந்தபிறகு சுவாமிஜி சமையலில் ஈடுபடுவார். பெரும்பாலும் புலவு தயாரிப்பார். மிகச் சிலரை மட்டுமே சமையலறையில் அனுமதிப்பார். அவர்கள் அவருக்கு உதவி செய்வது என்பது அரிதாகவே இருக்கும். ஆனால் அவரது அருகில் இருப்பதே ஒரு பெரிய அனுபவம். தமது அருகில் இருப்பதன் மூலம் அவர்களுக்கு இன்னும் சில விஷயங்களைச்சொல்ல வேண்டும் என்று தாம் எண்ணுபவர்களை மட்டுமே அவர் சமையலறையில் உதவி செய்ய அனுமதிப்பார். அப்படி பேறு பெற்ற சிலருள் எடித்தும் ஒருவர். அந்த நேரங்களில் சுவாமிஜி பேசியவற்றைப் பற்றி சில குறிப்புகளையும்  அவர் விட்டுச்சென்றுள்ளார்.

.........

  உலகம் தாய விளையாட்டு

...............

 ஒரு நாள் சுவாமிஜி கீதை 18.61-ஆம் சுலோகத்தை இனிமையாக ஓதி அதன் பொருளை விளக்கினார். கடவுள் எல்லா உயிரினங்களின் இதயத்திலும் உறைகிறார். ஒரு குயவனின் சக்கரத்தில் வைத்துச் சுழற்றுவது போல், தமது மாயா சக்தியால் உயிரினங்களை அவர் சுழலச்செய்கிறார் என்பது அந்தச் சுலோகம். இதனை விளக்கும்போது சுவாமிஜி கூறினார்.

 இப்போது நாம் காண்கின்ற இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏற்கனவே நடைபெற்றவைதான். விளையாடுபவன் தாயக் கட்டையைக் குலுக்கி இடுகிறான். எண்கள் வருகின்றன. ஒரே விதமான சேர்க்கை பல நேரங்களில் வரலாம். வாழ்க்கையும் அப்படித்தான். சக்கரம் சுழல்கிறது- ஒருமுறை நிகழ்ந்ததே மீண்டும் நிகழ்கிறது. அதோ அந்தப் பானை, அந்த டம்ளர், இந்த வெங்காயம், இந்தஉருளைக்கிழங்கு எல்லாம் ஏற்கனவே ஒரு முறை இதே இடத்தில் இப்படியே இருந்தன. இப்போது அதே சேர்க்கையில் மீண்டும் இங்கே இருக்கின்றன. நாம் என்ன செய்யலாம் அம்மா! வாழ்க்கையின் சக்கரத்தில் நம்மை வைத்துச் சுழற்றுவது அவர் அல்லவா!

 எடித் கூறினார். சுவாமிஜி, இந்த நாட்களில் உடம்பிலிருந்து விடுதலை பெற மிகவும் ஏங்கினார்.ஆனால் நான் மீண்டும் ஒரு முறை வரவேண்டியுள்ளது என்று அவர் ஒரு முறை கூறினார். இதனை விளக்கும்போது, தாம் வரும்போது மீண்டும் நானும் வர வேண்டும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு முறை என்னிடம் கூறினார் என்று தெரிவித்தார். உடனே நான், அவர் சொன்னார் என்பதற்காகவா நீங்கள் வர வேண்டும்? என்று நான் கேட்டேன். அதற்கு சுவாமிஜி அவர்களைப்போன்றவர்களின் ஆற்றல் அளவிட இயலாதது என்றார்.

 

 இத்தகைய கருத்தை சுவாமிஜி பாசடேனாவில் இருந்த போதும் ஒரு முறை வெளியிட்டார். 200 வருடங்களுக்குப் பிறகு தாம் ஒரு முறை மீண்டும் வருவதாக ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார். நான் அவருடன் வருவேன். எஜமானன் வரும் போது அவன் தன் ஆட்களையே கூட்டி வருகிறான், அல்லவா, அது போல்!

 எடித்தின் நினைவுக் குறிப்பு தொடர்கிறது. சுவாமிஜி பல பரிமாணங்கள் உடையவர். அதனை விவரிப்பது அவ்வளவு எளிதல்ல. சில சமயங்களில் வேதாந்தச்  சிங்கமாக இருக்கின்ற அவரே சில நேரங்களில் குழந்தை போல் இருப்பார். ஆனால் எனக்கு அவர் எப்போதும் ஒரு பொறுமையான, அன்பான தந்தையாக இருந்தார். நான் சொல்பவற்றைப்பொறுமையுடன் கேட்டார். தம்மை  ”சுவாமிஜி என்று அழைக்க வேண்டாம் என்றும், பாபாஜி! என்று அழைக்குமாறும் அவர் கூறினார். பாபாஜி என்பது இந்தியாவில் துறவியை மட்டுமல்ல, தந்தையை அழைப்பதற்கும் உரியசொல்லாகும். சில வேளைகளில் அவர் அன்பான  தாயாகவும் எனக்குத் தோன்றியதுண்டு.

 அவர் கலிபோர்னியாவை விட்டுக் கிளம்புமுன் என் னிடம், மீண்டும் உனக்கு மனப் பிரச்சனைகேளோ வேறு எந்தப் பிரச்சனைகளோஎழுமானால் என்னை அழை, எங்கிருந்தாலும் நான் உனது குரலைக்கேட்பேன் என்று வாக்குறுதி தந்தார். அதனை வாழ்க்கையில் பல முறை அனுபவித்துள்ளேன் என்று பின்னாளில் நினைவு கூர்ந்தார் எடித்.


No comments:

Post a Comment