சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-9
🌸
சக்தியை
அளிக்கிறார்
இந்த நிகழ்ச்சிநடந்து
நாலைந்து நாட்கள் கழிந்தன. ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரைத் தம் அருகே அழைத்தார்.
அப்போது அறையில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.
நரேந்திரரைத் தம் எதிரே உட்காரச்சொல்லி அவரை உற்றுப் பார்த்தபடியே ஆழ்ந்த சமாதியில்
மூழ்கினார் ஸ்ரீராமகிருஷ்ணர். சிறிது நேரத்திற்குள் நரேந்திரர் தம் உடம்பில் மின்சாரம் போன்று ஒரு சக்தி பாய்ந்து செல்வதை உணர்ந்தார்.
சிறிது சிறிதாக அவரும் உலக நினைவை இழந்தார். தாம் எவ்வளவு நேரம் இப்படி சமாதியில் மூழ்கியிருந்தோம்
என்பது அவருக்குத் தெரியவில்லை. உணர்வு திரும்பிக் கண்களைத் திறந்து பார்த்தபோது ஸ்ரீராமகிருஷ்ணர்
கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். நரேந்திரர் காரணம் கேட்டபோது., என்னிடமிருந்த எல்லாவற்றையும் இன்று உனக்குக் கொடுத்துவிட்டு நான் பக்கிரியாகிவிட்டேன்.
இந்த ஆற்றல்களின் மூலம் நீ உலகிற்கு மிகுந்த நன்மைகளைச்செய்வாய். அதன் பிறகு, நீ எங்கிருந்து
வந்தாயோ அந்த இடத்திற்குத் திரும்புவாய், என்று
கூறினார். இவ்வாறு தமது சக்தியை நரேந்திரருக்கு அளித்தார்.
இரண்டு நாட்கள்
கழிந்தன. தம்மை அவதாரம் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லிக்கொள்வதை ச் சோதனை செய்து பார்க்க
வேண்டும் என்னும் எண்ணம் நரேந்திரருக்குத்தோன்றியது. அன்று மிகக் கடுமையான வலியால்
ஸ்ரீராமகிருஷ்ணர் துடித்துக்கொண்டிருந்தார். உடம்பின் நோயால் இப்படித் துடிக்கும் இந்த
நிலையிலும் அவர் தம்மை அவதார புருஷர் என்று கூறுவாரானால் , அவர் உண்மையில் அவதார புருஷர்
என்பதை நம்புவேன், என்று நினைத்தார். நினைக்கத்தான் செய்தார், அடுத்த விநாடியே தம்
ஆற்றல் முழுவதையும் திரட்டி எழுந்து உட்கார்ந்து மிகத்தெளிவான குரலில் , நரேன் முன்பு
யார் ராமராகவும், கிருஷ்ணராகவும் வந்தாரோ, அவரே இப்போது ராமகிருஷ்ணராக இந்த உடம்பில்
இருக்கிறார், ஆனால் உன் வேதாந்த கருத்தின் படி அல்ல, என்றார். எவ்வளவோ தெய்வீகக் காட்சிகளையும்
ஆற்றல்களையும் அவரிடம் கண்டபிறகும் இன்னும் தனது சந்தேகம் நீங்காததற்காக நரேந்திரர் வெட்கமும் அவமானமும் அடைந்தார்.
பொறுப்பை
ஒப்படைக்கிறார்.
ஒரு நாள்
ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு நாள் நரேந்திரரைத் தவிர மற்ற தமது இளம் சீடர்களை அழைத்தார். அவரால்
பேச இயலவில்லை. இருப்பினும் மிக மெல்லிய குரலில் கூறினார். இதோ பாருங்கள் உங்களை நரேனின் பொறுப்பில் விட்டுச்செல்கிறேன். அவன் கூறுவதன்படி
செய்யுங்கள். அவனது ஆரோக்கியத்தையும் மற்ற
நலன்களையும் கவனித்துக்கொள்ளுங்கள். பிறகு நரேந்திரரை அழைத்து, இதோ பாரப்பா, நரேன்!
இந்த என் பிள்ளைகளை எல்லாம் உன் பொறுப்பில் விட்டுச்செல்கிறேன். அனைவரிலும் புத்திசாலியும்
திறமைசாலியும் நீ. அனைவரையும் அன்புடன் வழி
நடத்து. எனக்காகப் பணி செய், என்றார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்
மறைகிறார்!
ஆகஸ்ட் பதினைந்தாம்
நாள். எந்த நாள் வரக்கூடாதென்று பக்தர்கள் கவலைக்கொண்டிருந்தார்களோ, பக்தர்களை ஆற்றொணா
துயரில் ஆழ்த்திய அந்த நாள் வந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை.ஸ்ரீராமகிருஷ்ணரின் நோய்
இது வரை இல்லாத அளவு மிகவும் பயங்கரமாக இருந்தது. அவரது நாடி ஒழுங்கற்று துடித்தது.
அதுல் என்ற பக்தர் அவரது நாடியைப் பார்த்து, அவரது உடல்நிலை மோசமாகிவிட்டதை அறிந்தார்.
சுற்றியிருந்தவர்களிடம் அவர் இனி பிழைப்பது அரிது என்று கூறினார்.
சூரியன்
மறைவதற்குச் சிறிது நேரம் இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரால் சீராக மூச்சுவிட முடியவில்லை.மூச்சு
இழுக்க ஆரம்பித்தது. பக்தர்கள் தேம்பித்தேம்பி அழத் தொடங்கினர்.தங்கள் வாழ்வில் இதுவரை
எந்த ஒளி, இன்பத்தை நிறைத்து வந்ததோ அது அணைந்து விடப் போகிறது என்பதை உணர்ந்த எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.சிறிது நேரத்திற்குப்
பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் தமக்குப் பசிப்பதாகக் கூறினார். நீராகாரம் கொடுக்கப் பட்டது. அவரால் விழுங்க முடியவில்லை.
மிகவும் சிரமப்பட்டு சிறிது குடித்தார். வாயைக் கழுவி மெல்ல அவரைப் படுக்க வைத்தனர்.
இரண்டு கால்களையும் நீட்டித் தலையணையின் மீது வைத்தனர். இரண்டு பேர் விசிறினர். படுத்துக்கொண்டிருந்தவர்
சிறிது நேரத்திற்குப் பின் திடீரென்று சமாதியில்
மூழ்கினார். உடம்பு அசைவற்று சிலைபோல் ஆகியது. மூச்சு நின்றது.
இத்தனை நாட்களாக
இரவும் பகலும் உடனிருந்து சேரவ செய்து வந்த சசிக்கு இந்தச் சமாதிநிலை வழக்கமாக அவருக்கு
ஏற்படுகின்ற சமாதி போல் தோன்றவில்லை. ஏதோ பெரிய மாறுதல் இருப்பதாகத் தோன்றவே அழ ஆரம்பித்தார்.
நரேந்திரர் எல்லோரிடமும் , ஹரி ஓம் தத்ஸத்” என்று ஓதுமாறு கூறினார். நீண்ட
நேரம் அதனை அனைவரும் ஓதினர்.
நள்ளிரவுக்குப்
பிறகு ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ப் புறவுணர்வு திரும்பியது. பசிப்பதாகக் கூறினார். மற்றவர்
களின் உதவியோடு எழுந்து உட்கார்ந்தார். எல்லோரும் ஆச்சரியப்படும்படி ஒரு கோப்பை கஞ்சி
முழுவதையும் எளிதாகக் குடித்து முடித்தார்.
அவர் இவ்வளவு ஆகாரம் சாப்பிட்டு எத்தனையோ நாட்களாகி விட்டிருந்தன. சாப்பிட்டு முடிந்ததும்
உடம்பு தெம்பாக இருப்பதாகச் சொன்னார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்
தூங்குவது நல்லது என்று நரேந்திரர் கூறினார். வலியின் காரணமாக அருகில் இருப்பவரும்
கேட்க முடியாதபடி மிக மெதுவாகப்பேசுகின்ற ஸ்ரீராமகிருஷ்ணர் திடீரென்று உரத்த குரலில்,
அம்மா, காளி! என்று மூன்றுமுறை அழைத்தார். பிறகு மெல்ல படுத்துக்கொண்டார். நரேந்திரர்
கீழே சென்றார்.
இரவு ஒரு
மணி இரண்டு நிமிடம், கட்டிலில் படுத்திருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் உடம்பில் திடீரென்று
பரவச உணர்ச்சி பாய்ந்தது. மயிர்கள் சிலிர்த்து நின்றன. பார்வை மூக்கு நுனியில் நிலைக்குத்தி நின்றது, உதடுகளில்
புன்னகை அரும்பியது. அவர் சமாதியில் மூழ்கினார். அது இத்தனை காலமாக அவர் அனுபவித்த
சாதாரண சமாதி நிலை அல்ல. மகா சமாதி, அன்னை காளியின் மடியில் அவளது அருமைச்செல்வன் என்றென்றைக்குமாகத் துயில் கொண்ட ஆழ்ந்த சமாதி!
இந்தச் சமாதிக்குப் பிறகு அவரது உயிர் உடலுக்குள் திரும்பவே இல்லை, அது 1886, ஆகஸ்ட்
16.
நான் இறக்கவில்லை
அன்னை ஸ்ரீசாரதாதேவி
அப்போது அருகில் இல்லை. விவரம் தெரிந்ததும்
விரைந்து படுக்கையருகில் வந்து, அம்மா காளீ” நீ எங்கே போய் விட்டாய் என் தாயே! என்று கதறினார். அனைவரின் இதயமும் கலங்கியது.
குருதேவரின் புனிதவுடல் காசிப்பூர் மயானத்தில் எரியூட்டப்பட்டது. அஸ்தி ஒரு செம்புப்
பாத்திரத்தில் சேகரிக்கப் பட்டு குருதேவர் படுத்திருந்த படுக்கையின் மீது வைக்கப் பட்டது.
முப்பத்து
மூன்றே வயது நிரம்பியிருந்த அன்னை அன்று மாலையில்
விதவைக்கோலம் பூணலானார். ஆனால் அவரது கணவர்
இறந்து விட்டாரா? மரணமே இல்லாதவராயிற்றே அவர்! அன்னை தம் தங்க வளையல்களைக் கழற்ற
முற்பட்டபோது அவர் முன் தோன்றினார் ஸ்ரீராமகிருஷ்ணர். நான் இறந்து போனேன் என்றா நீ
உன் சுமங்கலிக்கொலத்தைக் களைகிறாய்? நான் இறக்கவில்லை.இதோ இங்கேயே இருக்கிறேன், என்று
கூறி அன்னையின் முயற்சியைத் தடுத்தார். தொடர்ந்த நாட்களில் மேலும் இருமுறை தம் வளையல்களைக்
கழற்ற முற்பட்டார் அன்னை. அப்போதும் குருதேவர் முன்பு போலவே தோன்றி தடுத்தார். அதன்
பின் வளையல்களுடனும் மெல்லிய கரையிட்ட சேலையுடனும்
நித்திய சுமங்கலியாகவே வாழ்ந்தார் அவர்.
காசிப்பூர்
மயானத்திலிருந்து ஸ்ரீராமகிருஷ்ணரின் அஸ்தியைச்சேகரித்து ஒரு கலசத்தில் அதனை சுமந்தபடி
காசிப்பூர் தோட்ட வீட்டை அடைந்தார்கள் பக்தர்கள். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தேவ் கீ ஜெய்” என்ற கோஷத்துடன்
அதனை ஸ்ரீராமகிருஷ்ணர் படுத்திருந்த கட்டிலில் வைத்தபோது ஸ்ரீராமகிருஷ்ணரின் சான்னித்யத்தை
உணர்ந்தாலும், அவர்களின் மனத்தை ஒரு வெறுமை ஆட்கொண்டது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில்
எந்த ஓர் அழிவற்ற அன்பினால் பிணைக்கப்பட்டிருந்தார்களோ அதே ஆழ்ந்த அன்பு இப்போதும்
அவர்களைப் பிணைத்து நின்றது. ஒரே லட்சியத்துடன் வாழ்ந்த அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலும்
தேறுதலும் கூறிக் கொண்டு ஆழ்ந்த நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கினார்.
வராக நகர்
மடம்
ஸ்ரீராமகிருஷ்ணர்
மறையவில்லை. தங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் நரேந்திரர் முதலான இளைஞர்களிடம்
திடமாக இருந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் அன்னை ஸ்ரீசாரதாதேவி பல காட்சிகளைக்
கண்டிருந்தார். நரேந்திரருக்கும் அத்தகைய காட்சி ஒன்று கிடைத்தது. ஸ்ரீராமகிருஷ்ணர்
மறைந்து ஒரு வாரம் ஆகியிருக்கும். ஒரு நாள் இரவு எட்டு மணி . அவரும் ஹரீஷ் என்பவரும்
பேசியவாறே தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தனர்.
அப்போது
ஒளியுருவம் ஒன்று துணியால் போர்த்தியபடி தம்மை
நோக்கிச்சுமார் பத்தடி தூரத்தில் வருவதை நரேந்திரர் கண்டார். அந்த உருவம் குருதேவரைப்போல்
இருந்தது. ஒரு வேளை அது தன் மனமயக்கமாக இருக்கலாம். என்று எண்ணி அவர் பேசாமல் இருந்தார்.அப்போது
ஹரீஷ் நரேந்திரரைத் தொட்டு அவரது காதில் மெல்லிய குரலில், அதோ, அங்கே ஒளியுருவாக வருவது
யார்? என்று கேட்டார்.
ஹரீஷீம்
அந்த ஒளியுருவைக் கண்டிருக்கிறார். எனவே தான் கண்டது மனமயக்கம் அல்ல என்று தெளிந்த
நரேந்திரர் உரத்த குரலில், யாரது? என்று கேட்டார். அவரது குரலைக்கேட்டு வீட்டினுள்
இருந்த அனைவரும் ஓடி வந்தனர். அதற்குள் அவர்கள் கண்ணெதிரே இருந்த மல்லிகைப் புதர் ஒன்றில்
அந்த உருவம் மறைந்துவிட்டது. விளக்குகள் கொண்டு வந்து தேடினர். அங்கே யாரும் இல்லை.
அது ஸ்ரீராமகிருஷ்ணர் தான் என்று அனைவரும் நம்பினர்.
ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்கிறார், அவர் தங்களுடன் இருக்கிறார்
என்ற நம்பிக்கை காரணமாக அவர்கள் தினமும் அஸ்திக் கலசத்தின்முன் அமர்ந்து தியானம், பிரார்த்தனை போன்றவற்றில் ஈடுபட்டனர்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் பெரு வாழ்வைப்பற்றி பேசினர். இல்லற பக்தர்களும் அவ்வப்போது வந்து
அவர்களுடன் கலந்து கொண்டனர்.
அஸ்தி விஷயத்தில் கருத்து வேற்றுமை
1886 ஆகஸ்ட்
31-ஆம் தேதியுடன் காசிப்பூர் வீட்டின் வாடகை க் காலம் நிறைவுற்றது. வீட்டைக்காலி செய்ய
வேண்டியிருந்தது. அந்த இளைஞர்கள் எங்கே போவார்கள்?அவர்களில்
பலர் அந்த வீட்டிலேயே தங்கி, ஸ்ரீராமகிருஷ்ணரின்
அஸ்தியைப் பூஜித்தபடி தவ வாழ்க்கையில் ஈடுபட விரும்பினர். ஆனால் வாடகை யார்
கொடுப்பது?
பலராம் போஸ்,சுரேந்திர மித்ரர், கிரீஷ் கோஷ்,ம-முதலானோர்
இனம் சீடர்கள் தங்குவதற்கான ஒரு மடம் அமைக்கலாம் என்ற கருத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.ஆனால்
ராம்சந்திரர் மற்றும் ஓரிருவர் அதனை மறுத்து அந்த இளைஞர்களிடம் , இப்படி நீங்கள் வீடு
வாசலை விட்டு துறவிகளாக வேண்டும் என்று குருதேவர் சொல்லவில்லை. நீங்கள் உங்கள் வீடுகளுக்குத்
திரும்புங்கள். குருதேவர் கூறியது போல் குடும்பத்தில் ஓர் ஆன்மீக வாழ்க்கையை அமைத்துக்
கொள்ளுங்கள். அஸ்தியைப் பூஜிப்பது பற்றியும் உங்களுக்கு க் கவலை வேண்டாம். ஏனெனில்
காங்குர்காச்சியில் எனக்குச் சொந்தமான தோட்டம்
ஒன்று உள்ளது. அங்கே அதனை நிறுவி தினசரி வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்துள்ளேன்.
அது பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றார்.
இளைஞர்கள்
யாருக்கும் ராம்சந்திரரின் ஆலோசனையில் சம்மதம் இல்லை. கங்கைக் கரையில் ஓரிடத்தில் அஸ்தியை
நிறுவி தினசரி வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக
இருந்தது. இத்தகைய ஒரு கருத்தை ஸ்ரீராமகிருஷ்ணரும் முன்பு வெளியிட்டிருந்தார். ஆனால்
தற்போது அதற்கு வழியில்லாதது போல் தோன்றிற்று. உடனடியாக ஓர் இடத்தை ஏற்பாடு செய்ய இயலாது.
பின்னாளில் தைச்செய்யலாம், எனவே அஸ்தி தங்களிடமே இருக்கவேண்டும் என்று இளைஞர்கள் கருதினார்கள்.இந்தக்
கருத்து வேற்றுமை வளர்ந்து ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது, இதையெல்லாம் கேள்விப்பட்ட
அன்னை ஸ்ரீசாரதாதேவி, ஈடிணையற்ற மகாபுருஷரை இழந்து நிற்கிறோம், இவர்கள் என்னடாவென்றால்
அவருடைய அஸ்திக்காக அடித்துக் கொள்கிறார்கள்” என்று வேதனையுடன் கூறினார்.
கடைசியில்
நரேந்திரர் தலையிட்டு அந்த இளைஞர்களிடம், சகோதரர்களே! நாம் இப்படிச் சண்டையிடுவது சரியல்ல.
பரமஹம்சரின் சீடர்கள் அஸ்திக்காக அடித்துக் கொண்டார்கள் என்று மற்றவர்கள் சொல்வதற்கு
இடம் கொடுக்கவேண்டாம். அது மட்டுமல்ல, நாம் எங்கே தங்கப்போகிறோம் என்பதே இன்னும் முடிவாகவில்லை,
இதில் அஸ்தியை எப்படிப் பாதுகாப்பது? ராம்பாபு தமது தோட்ட வீட்டில் அஸ்தியை நிறுவி
அதனை ஸ்ரீராமகிருஷ்ணரின் பெயரில் தானே அமைக்கப்போகிறார்! தாமும் அங்கே போகலாம். அவரை
வழிபடலாம், குருதேவர் காட்டிய லட்சியத்தின்படி
வாழ்ந்து காட்டினால் அது இந்த அஸ்தியைப்
பூஜிப்பதைவிட பெரிய விஷயம் என்றார். நரேந்திரர் கூறியதன் பிறகு அனைவரும் அதனை ஏற்றுக்
கொண்டனர். ஆகஸ்ட் 23 கிருஷ்ண ஜெயந்தியன்று அஸ்தியை நிறுவுவது என்று முடிவாயிற்று.
இந்த ஏற்பாட்டிற்கு
ஒத்துக் கொண்டாலும் ஏனோ இளைஞர்களின் மனத்தில் ஒரு நெருடல் இருக்கவே செய்தது. கடைசியில்
நரேந்திரருடன் பேசி இளைஞர்கள் அனைவருமாக முடிவெடுத்து, ஆகஸ்ட் 22-ஆம் நாள் அஸ்தியின்
பெரும் பகுதியைப் பிறர் அறியாமல் மற்றொரு கலசத்தில் மாற்றி தங்களுக்காக வைத்துக் கொண்டனர்.
கிருஷ்ண
ஜெயந்தியன்று காலையில் சசி அஸ்திக் கலசத்தைத் தலையில் சுமந்து வர அனைவரும் காங்குர்காச்சி சென்று அங்கே முறைப்படி அஸ்தியை நிறுவி பூஜைகள்
செய்தனர். ஆனால் இளைஞர்கள் அஸ்தியைப் பிரித்துவிட்டது விரைவில் அனைவருக்கும் தெரியவந்தது.அப்போது
இல்லற பக்தர்கள் , குருதேவரின் திருவுளம் அதுவானால்
அப்படியே நடக்கட்டும், என்று கூறி மௌனமானார்கள்.
காசிப்பூருக்கு
விடை
ஆகஸ்ட் இறுதிக்குள்
காசிப்பூர் வீட்டைக்காலி செய்தாகவேண்டும். அன்னை ஸ்ரீசாரதாதேவி எங்கே போவார்கள்? வீட்டைக்காலி
செய்யாமல் இருக்குமாறு மீண்டும் ஒரு முறை பக்தர்களிடம் இளைஞர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
நாங்கள் பிச்சை எடுத்து வந்தாவது அன்னைக்கு உணவளித்து க் காப்போம்” என்று கூறிப் பார்த்தார்கள். ஆனால் இல்லற பக்தர்கள் வீட்டைக்காலி
செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்கள். ஆகஸ்ட் 21-ஆம் நாள் பலராம் போஸ்
அன்னையைத் தம் வீட்டிற்கு அழைத்துச்சென்று தங்கச் செய்தார். இளைஞர்கள் தங்களுக்காக
வைத்த அஸ்திக் கலசத்தை அன்னை தம்முடன் எடுத்துச் சென்று பலராம் வீட்டில் தினமும் பூஜை
செய்யத்தொடங்கினார் அன்னை. ஸ்ரீராமகிருஷ்ணர் உபயோகித்த பொருட்களையும் தம்முடன் கொண்டு
சென்றார். ஆகஸ்ட் 30-ஆம் நாள் காளி, யோகின், லாட்டு என்று இளம் பக்தர்களுடனும் பக்தைகளுடனும்
பிருந்தாவனம் முதலான இடங்களுக்குத் தீர்த்த யாத்திரை புறப்பட்டார் அன்னை.
இளைஞர்கள்?
அவர்கள் எங்கே போவார்கள்? அன்னையுடன் ஓரிருவர் சென்றனர்.
ஓரிருவர் வீட்டிற்குத் திரும்பி தங்கள் படிப்பைத் தொடர்ந்தனர். நரேந்திரர் அவ்வப்போது
வீட்டிற்குச்சென்று வந்தார். மூத்தகோபால் , நிரஞ்சன் என்று சிலர் வீடோ வீடு இல்லையோ,
மடமோ மடம் இல்லையோ, துறவு வாழ்க்கையைத்தொடர்வத என்று முடிவு செய்தார்கள். பாம்பு தனக்கென்று
வளை அமைத்துக்கொள்வதில்லை. மற்ற ஜந்துக்களின் வளைகளில் தங்குகிறது. துறவியும் அப்படியே.
அவன் சத்திரம் சாவடியில் தன் வாழ்க்கையைக் கழிக்க வேண்டும், அப்படியே நாம் வாழலாம்,
என்றார் நிரஞ்சன். நில்லாமல் ஓடும் தண்ணீர் போல் துறவி ஓரிடத்தில் தங்காமல் பயணம் செய்யவேண்டும்
என்று மற்றொருவர் கூறினார். எப்படியும் துறவு வாழ்க்கையைத்தொடர்வது என்று அவர்கள் முடிவு
செய்தார்கள். ஆனால் எங்கே தங்குவது.?
சுரேந்திரரின்
மாபெரும் பங்களிப்பு
ஸ்ரீராமகிருஷ்ணர்
வழிகாட்டுவார் என்று அந்த இளைஞர்கள் நம்பினார்கள். ஒரு புதிய செய்தியுடன் வந்து, அதனை
உலகெங்கும் பரப்புவதற்காக இளைஞர்களையும் பயிற்றுவித்த
அவர் அருள் புரியாமல் இருப்பாரா? அருள்புரியவே செய்தார். அவரது அருட்கரம் அந்த இளைஞர்களின்
துணைக்கு வந்தது!
ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறசீடர்களில் முக்கியமான ஒருவர்
சுரேந்திரநாத் மித்ரர். நரேந்திரர் இவரது வீட்டில் தான் முதன்முறையாக ஸ்ரீராமகிருஷ்ணரைச்சந்தித்தார்.
அவர் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த பிறகு வழக்கம் போல் படுத்திருந்தார்.
திடீரென்று ”சுரேன்” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது.
பார்த்தால் ஸ்ரீராமகிருஷ்ணர்- உயிருணர்வுடன்
நின்றிருந்தார் அவர். அமைதியாக சுரேந்திரரைப் பார்த்துவிட்டு, என் பிள்ளைகள்
இங்குமங்குமாக அலைகிறார்கள்? நீ அவர்களுக்காக எதுவும் செய்ய மாட்டாயா? என்று கேட்டு
மறைந்தார். சுரேந்திரர் உடனே எழுந்து நரேந்திரரின் வீட்டிற்கு ஓடினார். அவரிடம், தம்பி,
நாம் உடனே ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்துவோம். அங்கே குருதேவருக்குக்கோயில் அமைப்போம்.
வழிபடுவோம்.நாங்கள் குடும்ப வாழ்க்கையில் மனைவிமக்களென்று அழுந்திக் கிடந்தால் எங்கள் நிலைமை என்ன ஆவது? ஆகவே அமைதி தேடி நாங்கள்
அங்கே அடிக்கடி வருவோம். காசிப்பூர்த்தோட்ட வீட்டில் குருதேவர் தங்கியிருந்த காலத்தில்
ஒரு குறிப்பிட்ட தொகையை நான் அளித்து வந்தேன் அந்த தொகையை உங்களுக்கு இப்போது சந்தோஷமாகக் கொடுக்கிறேன். அது உங்கள் செலவிற்குப்பயன்படட்டும்
என்றார். நெகிழ்ந்தார் நரேந்திரர்!
உடனடியாக
வீடு தேடும் படலம் தொடங்கியது. வராக நகரில் 10 ரூபாய் வாடகையில் ஒரு பாழடைந்த வீடு
அமர்த்தப்பட்டது.இதுவே பின்னாளில் துறவியரின் இருப்பிடமாக, துறவியர் மடமாக மாறியது.
இப்படி உலகின் சமய வரலாற்றில் புதிய யுகத்தின் ஆரம்பத்திற்கு அடிக்கல் அமைத்துக் கொடுத்தார்
சுரேந்திரர்.வரலாற்றின் அழியா இடம் பெற்றார். சுரேந்திரரைப் பற்றி உணர்ச்சிப் பெருக்குடன்
கீழ்வருமாறு எழுதுகிறார் ம-
சுரேந்திரரே!
நீர் கொடுத்துவைத்தவர். முதன் முதலாக இந்த மடம் உம்மால் நிறுவப்பட்டது. இதை நிறுவுவதற்கு
உமது விருப்பமே காரணமாயிருந்தது. உம்மைக் கருவியாகக் கொண்டு குருதேவரின் மூலமந்திரமான
காமினீ- காஞ்சனத்துறவுக்கான சின்னம் அமைக்கப் பட்டது.தூய மனம் படைத்த நரேந்திரர் முதலிய
இளந்துறவியரின் மூலம் அழிவற்ற இந்து மதத்தை மக்களின் முன் நிலை நாட்டினார் குருதேவர்.
சகோதரரே! உமக்கு யார் நன்றிக்கடன் செலுத்த முடியும்! அந்த இளந்துறவியர் தாயில்லாக்
குழந்தைகள் போல் , நீங்கள் எப்போது வருவீர்கள்?
என்று உம்மை எதிர்பார்த்து நின்றனர். இன்று
வீட்டு வாடகை கொடுத்ததால் பணமெல்லாம் தீர்ந்துவிட்டது. உண்ண உணவில்லை நீங்கள்
வந்தால் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்வீர்கள். நீங்கள் எப்போது வருவீர்கள்? என்று எதிர்
பார்த்திருந்தனர். உமது அன்பையும் எதையும் எதிர்பாராத சேவையையும் நினைத்தால் யாருடைய
கண்களில் தான் நீர் வழியாது.
வரலாற்றுப்
புகழ் மிக்க ராமகிருஷ்ண மடம் இவ்வாறு செப்டம்பர் , அக்டோபர் 1886-இல் ஆரம்பிக்கப் பட்டது.
முதலில், ஒருசில மாதங்களுக்குச் சுரேந்திரர்
மாதந்தோறும் 30 ரூபாய் வழங்கி வந்தார். பின்னர் மடத்தில் படிப்படியாக அதிகம்பேர்
தங்கத் தொடங்கியதால் அதை 60 ரூபாயாக அதிகரித்தார். பிறகு 100 ரூபாயாக உயர்த்தினார்.
ஒரு மாதத்திற்கு வீட்டு வாடகை ரூ.11, சமையற்காரருக்குச் சம்பளம் ரூ.6, எஞ்சிய தொகை
உணவிற்காகச் செலவழிக்கப் பட்டது. இளையகோபாலிடம் மடத்தில் தங்குமாறும் அவரது குடும்பச்செலவைத்
தாம் ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார் சுரேந்திரர். இளைய கோபாலும் ஏற்றுக்கொண்டார்.
இளையகோபாலின்
மூலம் மடத்து நிலைமையைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப உதவி செய்தார் அவர். பலராமும் இளைஞர்களுக்கு
உதவி செய்தார். சுரேந்திரர்(1890மே25) பலராம் போஸ்(1890 ஏப்ரல் 13) ஆகிய இருவரின் மரணத்திற்குப் பிறகு கிரீஷ் மடத்தின் செலவுகளை ஏற்றுக்கொண்டார்.
வராக நகரைச்சேர்ந்த
யோகேந்திர நாத் சட்டர்ஜி என்பவரும் எப்போதாவது மடத்தில் உணவுப்பற்றாக்குறை இருப்பதாகக்கேள்விப்பட்டால்
உடனடியாக முன்வந்து உதவிசெய்தார். இவ்வாறு ஆரம்ப நாட்களில் இளைஞர்களுக்கு உதவியதன்
மூலம் இவர்கள் ராமகிருஷ்ண இயக்க வரலாற்றில் அழியாப்புகழ் பெற்றார்கள்.
இளைஞர்களில்
சிலர் குருதேவரின் மறைவிற்குப் பிறகு வீட்டில் படிப்பைத் தொடர்ந்தனர். ஆனால் நரேந்திரர்
அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. வராக நகர் மடம் தொடங்கு முன்பே நேரம் கிடைக்கும்
போதெல்லாம் சென்று அவர்களைச் சந்தித்து துறவு வாழ்க்கையைப் பற்றி பேசுவார்.இந்தப் படிப்பெல்லாம்
எதற்கு?
இறையனுபூதி
பெறாவிட்டால் வாழ்க்கையே வீண்.தேர்வை விட்டுத் தள்ளுங்கள், பட்டங்களை உதறுங்கள். கடவுளை
அறிவோம். அனுபூதி பெறுவோம். மற்ற எந்த அறிவினாலும்
ஒரு பயனும் இல்லை. எல்லாம் அறியாமை, எல்லாம் முட்டாள் தனம். நமது குருதேவர் மட்டுமே
உண்மை” என் றெல்லாம் அவர்களிடம் பேசி அவர்களின் மனம் துறவுப் பாதையிலிருந்து விலகாமல் பார்த்துக்கொண்டார்.
இரவு பகலின்றி எப்போது நேரம் கிடைத்தாலும் அவர்களின் வீட்டிற்குச்சென்றார்.
நரேந்திரர்
போவதை மற்ற இளைஞர்கள் சிலரது வீட்டினர் விரும்பவில்லை.
அவரால் தங்கள் பிள்ளைகளும் படிப்பைக் கைவிடுவதாக அவர்கள் நினைத்தனர். எனவே நரேந்திரர்
சென்றால்அவரை வரவேற்பதோ உபசரிப்பதோ கிடையாது. சிலநேரங்களில் அவர் செல்லும்போது கதவைக்கூட
சாத்தினர்.... துயரம் என்னவென்றால் , சில இளைஞர்களே நரேந்திரர் போவதை விரும்பாமல் இருந்தனர்.
அவர் வருவதால் தங்கள் படிப்பு கெடுவதாக நினைத்து, நரேந்திரர் சென்றாலே ஏதாவது அறைக்குள்
நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டனர்.
நரேந்திரர்
விட மாட்டார். அவர்கள் எரிச்சலடைந்தோ பயந்தோ
திறக்கும் வரை கதவைத் தட்டிக்கொண்டிருப்பார். பின்னர் அவர் களுடன் அங்கே அமர்ந்தோ அல்லது
தெருவில் நடந்த படியோ பேசுவார். குருதேவரின் மகிமைகளை எடுத்துக் கூறுவார். துறவு வாழ்வின்
பெருமைகளைப் பற்றிபேசுவார். எதிர்ப்பு, ஏச்சு, அவமதிப்பு, எதையும் அவர் பொருட்படுத்த
வில்லை. ஏனெனில் குருதேவர் அளித்த பணி ஒன்றே அவரது நெஞ்சில் நிறைந்திருந்தது. வறுமை,
நீதி மன்றம், வழக்கு என்று வீட்டுப் பிரச்சனைகள் சுமையாக அழுத்திக்கொண்டிருந்த நேரத்தில்,
இப்படி பலரது ஏச்சையும் அவமதிப்பையும் ஏற்றுக்கொண்டு, அனைவரையும் ஒருங்கிணைத்தார் அவர்
என்பதைக்கருத்தில் கொள்ள வேண்டும்.
கடைசியில்
நரேந்திரரின் அன்பிற்கும் விடாமுயற்சிக்கும்
அனைவரும் கட்டுப்பட வேண்டியதாயிற்று. 1886 டிசம்பரில் ஏறக்குறைய அனைவரையும்
மடத்தில் சேர்த்து விட்டார் நரேந்திரர். இதன் பிறகு தான் உண்மையில் மடத்து வாழ்க்கை
ஆரம்பித்தது. தாங்கள் மறுத்தும் பெற்றோர் மறுத்தும்,
எதிர்ப்புகளையும் அவமதிப்புகளையும் பொருட்படுத்தாமல்
தங்களை இந்த வாழ்க்கைக்குக் கொண்டு வந்த நரேந்திரர் மீது மற்ற இளைஞர்களின் நெஞ்சம்
நன்றியால் நிறைந்தது. அவரை அனைவரும் மனப்பூர்வமாக தங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும்
ஏற்றுக் கொண்டனர். பலர் அவரைக் குருவாகவே மதித்தனர்.
வராக நகர்
மடம் தோற்றம்
சுரேந்திரர்,
மாதம்தோறும் அளித்தது 30 ரூபாய். சுமார் 15 பேருக்கு ஒரு மாதச் செவிற்கான பணம் அது.
உணவு, உடை , இதர செலவுகள் இவற்றுடன் வாடகையும் இதிலிருந்தே கொடுக்க வேண்டும். அதிக
அளவாக 10 ரூபாய்க்கு மேல் வாடகை கொடுக்க இயலாது. அந்தக் பணத்திற்குள் ஒரு வீடு தேடியாக
வேண்டும். தேடினார்கள். மனிதர்கள் தங்குகின்ற நிலையிலுள்ள எந்த வீடும் அந்த வாடகைக்குக்
கிடைக்க வில்லை. கிடைத்தது ஒரு பாழடைந்த வீடு. பேய்கள் நடமாட்டம் இருப்பதாக ஒரு வதந்தி
உலவியதால் அந்த வீட்டில் யாரும் தங்கவில்லை. பரவாயில்லை, நாங்களே, ஒரு விதத்தில் பேய்கள்
தான். எங்களை எந்தப்பேயும் எதுவும் செய்ய இயலாது” என்று அந்த வீட்டைத் தஞ்சமடைந்தனர்
இளம் துறவியர். அது ஒரு மாடி வீடு. முற்றிலுமாகச் சிதிலமடைந்து ஆங்காங்கே இடிந்து வீழ்ந்து
பார்ப்பதற்கே ஒரு பயங்கரத்தோற்றத்தை அளித்துக்கொண்டிருந்தது. கீழ்தளம் யாரும் தங்க
இயலாத அளவிற்கு இடிந்து, செடிகொடிகள் முளைத்து
பொந்தும் புதருமாகக் கிடந்தது. அதில் பாம்புகளும் நரிகளும் இன்னும் பல்வேறு உயிரினங்களும்
வசித்து வந்தன. நீண்ட நாட்களாகத் தங்கி இருக்கின்ற அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்
என்று இந்தப் புதுயுகத் துறவியர் மாடிப் பகுதியை
மட்டும் பயன்படுத்தினர்.
கட்டிடத்தின்
பின்புறத்திலோ தோட்டம் என்ற பெயரில் புதர்கள் மண்டிக் கிடந்தன. பின்னால் ஒரு சிறிய
குளம் இருந்தது. அதிலுள்ள தண்ணீர் பாசிபிடித்து, கொசுக்களின் உற்பத்தித் தலமாக ஆகிவிட்டிருந்தது.
மாடியில்
சிறிதும் பெரிதுமாகப் பல அறைகள் இருந்தன. அவற்றில் ஜன்னல், கதவு, என்ற பெயரில் வெறும்
சட்டங்கள் எஞ்சியிருந்தன. உத்திரங்கள் பல இடங்களில் பழுதடைந்து, அவற்றிற்குப் பதிலாக
மூங்கில்கள் வைக்கப் பட்டிருந்தன.
தென்கோடியிலிருந்த
ஓர் அறையைத் தனிமையில் தியானம் செய்வதற்கும், படிப்பதற்கும் ஒதுக்கினர். காளி இந்த
அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டு நீண்ட நேரம் இருப்பது வழக்கம். எனவே இந்த அறையை
” காளி தபஸ்வியின் அறை” என்று அழைத்தார். இதற்கு வடக்கு
அறை பூஜையறை, அதையடுத்து நிவேதனம் தயாரிக்கும் அறை. இந்த அறையில் அமர்ந்து கொண்டும்
ஆரதி தரிசனம் செய்யலாம்.
பக்தர்கள்
பெரும்பாலும் இங்கிருந்தே குருதேவரை வணங்கினர். நிவேதனம் தயாரிக்கும் அறைக்கு வடக்கில்
தானவர் அறை. இது விசாலமான கூடம். மடத்து சகோதரர்கள் இங்குதான் ஒன்று கூடுவர். பக்தர்களும்
விருந்தினர்களும் வந்தால் அவர்களை வரவேற்பதும்
இங்குதான். இந்த அறைக்குத் தள்ளி வடக்கிலுள்ள இன்னொரு சிறிய அறையில் பக்தர்கள்
சாப்பிடுவார்கள். வரவேற்பறைக்கு க் கிழக்கே ஒரு வராந்தா இருந்தது. திருவிழா நாட்களில்
பக்தர்கள் இங்குதான் சாப்பிடுவார்கள். வராந்தாவிற்கு வடக்கே சமையலறை இருந்தது. நரேந்திரரும்
மற்ற சகோதரர்களும் சிலசமயம் மாலைவேளைகளில்
மொட்டை மாடிக்குச் செல்வார்கள். அங்கே அமர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள், சங்கரர்,
ராமானுஜர், ஏசுநாதர், நம் நாட்டு மேலைநாட்டு தத்துவங்கள், வேதம், புராணம், தந்திரம்,
போன்றவைப்பற்றி பேசி மகிழ்வார்கள்.
மடத்து வாழ்க்கை
முதன் முறையாக
மடத்தில் வந்து நிரந்தரமாகத் தங்கியவர் மூத்தகோபால், சரத் சில நாட்கள் தங்கினார். சசி,
பாபுராம், நிரஞ்சன், காளி ஆகியோர் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வந்து போய்க் கொண்டிருந்தனர்.
பிருந்தாவனத்திலிருந்து
திரும்பி வந்துதாரக் நிரந்தரமாக மடத்தில் தங்கலானார்.1887 ஜீனிலிருந்து நரேந்திரர்
மடத்தில் நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினார்.அந்த நாட்களில் அவர்கள் தங்கள் சொந்த வீட்டில்
வசிக்கவில்லை. குடும்பத் தகராறு காரணமாக, அவரது தந்தை இருந்த நாட்களிலேயே வாடகை வீடு
ஒன்றில் வசித்து வந்தனர். நரேந்திரர் மடத்தில் தங்கிய பிறகு புவனேசுவரி தேவி தமது தாயாரின்
வீட்டில் வாழத் தொடங்கினார். நரேந்திரரின்
தம்பியான மகேந்திரர் அவ்வப்போது மடத்திற்கு வந்தார். சில வேளைகளில் ஓரிரு நாட்கள்
தங்க வும் செய்தார்.
இல்லற பக்தர்கள்
அடிக்கடி மடத்திற்கு வந்து அவர்களைக் கண்டு பேசி மகிழ்ந்தனர். அவர்களுடன் தியானம் செய்வதும்
சாஸ்திரங்களைப் படிப்பதுமாக பல மணி நேரங்கள், சிலவேளைகளில் பல நாட்கள் என்று காலம்
கழித்தனர். அவர்களில் ஒருவரான ம-வராக நகர் மடத்துத் தவ வாழ்க்கையைப் பற்றி இவ்வாறு
எழுதுகிறார்.
வராகநகர்
மடத்தில் இந்த இளந்துறவிகள் வாழ்ந்த தீவிர
ஆன்மீக வாழ்க்கையை என்னென்பது! புற உலகிலிருந்து மறைந்து விட்ட குருதேவரைத் தங்கள்
அகத்தில் எழுந்தருளச்செய்ய வேண்டும் என்ற வேகத்துடன் அவர்கள் இருந்தனர். இடையிடையே
அவர்கள் பெற்ற தெய்வீகக் காட்சிகள், எத்தகைய வறுமையையும் வேதனையையும் புறக்கணிப்பையும் இகழ்ச்சிகளையும் பொருட்படுத்தாமல்
மேன்மேலும் முயலும் அளவிற்கு அவர்களைப் பித்தர்களாக்கின. புறவுலக உணர்வு அற்றவர்களாக
, பக்திப் பாடல்களைப் பாடுவதிலும் ஆடுவதிலும் சுவை கண்டவர்களாக அல்லும் பகலும் பிரார்த்தனைகளிலும் தியானத்திலும் சாஸ்திரங்களைப்
படிப்பதிலும் ஆர்வம் கொண்டவர்களாக அவர்கள் விளங்கினர். அவர்களது வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் இறைவனைக் காண்பது என்பதாக இருந்தது. வேத புராண,
தந்திர நூல்களில் கூறப்பட்ட துறவு வாழ்க்கைக்கான நியதிகளை முழுமனத்தோடு அவர்கள் பின்பற்றத்
தொடங்கினர். பகற் பொழுதில் மடத்திலும் மரத்தடியிலும் , நடுநிசியில் அருகிலிருந்த மயானத்திலும் கங்கைக் கரையிலும் ஆன்மீக சாதனைகளைப் பழகினர். தவம்
செய்தனர். குருதேவர் தேர்வு செய்து காட்டிய ஒப்பற்ற தவ முயற்சிகளைப் பற்றிய நினைவு
அவர்களுடைய தவக்கனலைக் கொழுந்து விட்டெரியச்செய்தது. தொடர்ந்து தியானம் செய்வதற்காக
பட்டினி கிடந்து சாவதற்கும் அந்த இளைஞர்கள் தயாராக இருந்தனர்.
அந்த நாட்களைப்
பற்றி பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கூறினார்.
குருதேவர்
இவ்வுலக வாழ்வை நீத்த பிறகு வராக நகர் மடத்தில் நாங்கள் தீவிரமான சாதனைகள் செய்தோம்.
காலை மூன்று மணிக்கு எழுவோம். குளித்துவிட்டு அல்லது முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு
பூஜையறையில் ஜப தியானத்தில் மூழ்குவோம். அந்த நாட்களில் எவ்வளவு வைராக்கியத்துடன் இருந்தோம்.
உலகம் இருந்ததா இல்லையா என்ற நினைப்பே எங்களிடம் இருக்கவில்லை. சசி இரவும் பகலும் ஸ்ரீராமகிருஷ்ணரின்
பூஜையிலும் சேவையிலும் ஈடுபட்டிருந்தான். இல்லத் தலைவியைப்போல் செயல்பட்டான் அவன்..
ஸ்ரீராமகிருஷ்ணரின்
பூஜைக்கான பொருட்களையும் எங்களுக்கு வேண்டிய உணவையும் பிச்சை எடுத்தாவது தேடி வைப்பான்.
ஜபம், தியானம் என்னும் சாதனை வெள்ளத்தில் நாங்கள் அடித்துச்செல்லப்பட்டோம். காலை முதல்
மாலை ஐந்து மணி வரை ஜபமும் தியானமும் நடந்த நாட்கள் கூட உண்டு. ஆகா அவை எத்தனை அற்புதமான
நாட்கள்! அன்றைய எங்கள் தீவிர தவம், பேய்களையே நடுங்கச்செய்திருக்கும். மனிதர்களைப்
பற்றி என்ன சொல்ல இருக்கிறது.
நரேந்திரரைப்பொறுத்தவரை
அவர் இருபத்து நான்கு மணி நேரமும் வேலை செய்தார் என்று தான் சொல்லவேண்டும்.ஒரு வெறித்தனமாக
அவர் செயல்பட்டது போலவே தோன்றிற்று. அதிகாலையில் எழுந்துவிடுவார். பின்னர் , எழுந்திருங்கள்,
எழுந்திருங்கள் தெய்வீக அழுதத்தைப் பருகுபவர்களே எழுந்திருங்கள்! என்று அனைவரையும்
எழுப்புவார். பிறகு அனைவருமாகச் சென்று தியானத்தில் அமர்வார்கள். பஜனை, கலந்துரையாடல்
என்று மதியம் வரை ஈடுபட்டிருப்பார்கள். சசி அதற்குள் சமையல், பூஜை முதலானவற்றை முடித்துவிட்டு
அவர்களைச்சாப்பிட அழைப்பார். அதன்பிறகும் பேச்சும் பஜனையும் தொடரும்.பிறகு மாலை ஆரதி,
சிலவேளைகளில் காலையில் தொடங்கும் பஜனை, உணவு ஓய்வு எதுவுமின்றி இரவு வரை நடந்த நாட்களும்
உண்டு. சிலநேரங்களில் மாடியில் அமர்ந்து அனைவருமாக இரவு நெடுநேரம் வரை ராமநாம ஜபம்
செய்வார்கள்.
நரேந்திரரின்
தியான வாழ்வும் மிகத்தீவிரமாக இருந்தது. இரவு 9மணிக்கு தியானத்தில் அமர்வார். காலை
5 மணிவரை அப்படியே தியானத்தில் மூழ்கியிருப்பார்.
பிறகு எழுந்து
குளிக்கச்செல்வார்.
ஒரு கம்பளம்
போர்த்தியது போல் கொசுக்கூட்டம் அவர் உடம்பின்மீது அமர்ந்திருக்கும். அந்த உணர்வே அவருக்கு
இருக்காது. சிவபெருமான் தியானத்தில் மூழ்கியிருப்பது போல் இருப்பார் அவர்.
புலன்களும்
மனமும் அவருக்கு முழுமையாகக் கட்டுப்பட்டிருந்தது. முற்றிலுமாக சமத்துவ நிலையில் இருந்தார்.
அவர். இது சத்வ குணத்தின் அடையாளம். இது கேள்வி ஞானம் அல்ல. நான் அவரது அருகில் இருந்து
பார்த்தது என்று பின்னாளில் ஹரி(துரியானந்தர்) கூறினார்.
வறுமை
சமுதாயத்தின்
எதிர்ப்பு அல்லது புறக்கணிப்பு , வீட்டினரின் வற்புறுத்தல் என்று அந்த இளம் துறவியரின்
புறவாழ்க்கை அமைந்தது. அக வாழ்க்கையோ ஜபம், தியானம், சாஸ்திரப்படிப்பு என்று தீவிரமான
இறைநெறியில் சென்றது. வறுமை அவர்களின் நிரந்தர நண்பனாக இருந்தது. சுரேந்திரர் அதிகபட்சமாக
மாதந்தோறும் ரூ.100 கொடுத்தார். பலராம்-ம- மற்றும் சிலர் அவ்வப்போது உதவி செய்தனர்.
ஆனால் சுமார் 15 பேருக்கு உணவு , உடை, வாடகை அனைத்திற்கும் இந்தப் பணம் போதுமானதாக
இல்லை. அது பற்றி சுவாமி விவேகானந்தர் கூறினார்.
பணம் இல்லாததால்
மடத்தையே மூடிவிடலாம் என்று கூட நான் நினைத்தது உண்டு.ஆனால் சசியை அதை ஏற்றுக்கொள்ளுமாறு
செய்ய முடியவில்லை. அவனே இந்த மடத்திற்கு நடுநாயகமானவன்.
மடத்தில் ஒன்றுமே இல்லாத நாட்கள் கூட இருந்தன. பிச்சையெடுத்துச் சிறிது அரிசி கிடைத்தால்
உப்பு இருக்காது. பல நாட்கள் உப்பிட்ட சோறு தான் எங்கள் உணவு. ஆனால் சாப்பாட்டைப்பற்றி
நாங்கள் யாரும் கவலைப் படவில்லை. வேகவைத்த கீரையும் உப்பிட்டசோறுமே ஒரு மாதத்திற்கு
உணவாக இருந்ததும் உண்டு. சசி உணவைத் தயார் செய்து வைத்துக்கொண்டு எங்களுக்காகக் காத்திருந்து
, இறுதியில் தியானித்து க் கொண்டிருக்கும் எங்களை இழுத்துச்சென்று உணவு ஊட்டுவான்.
அவனது ஒருமைப்பட்ட ஈடுபாடுதான் எவ்வளவு அற்புதமானது.
கருணை இதயம்
உடை விஷயமும் அப்படியே. அனைவருக்கும் சொந்தமாக இருந்தது
ஒரு வேட்டி, ஒரு துண்டு. வெளியில் செல்பவர்கள் அதனை அணிந்துகொள்வார்கள். மற்றபடி ஆளுக்கொரு
கௌபீனம், ஒரு துண்டு மட்டுமே அவர்களது உடை.
வீட்டுப்
பிரச்சனைகள் ஒரு பக்கம், மடத்தின் வறுமை நிலைமை ஒரு பக்கம் என்று இருந்தாலும் நரேந்திரரின்
கருணை இதயம் எப்போதும் பிறருக்காகத் துடித்துக்கொண்டே இருந்தது. ஒரு நாள் அவர் பலராம்
போஸின் வீட்டில் அமர்ந்திருந்தார். தவறான வாழ்க்கை வாழ்கிறார் என்று பலரும் ஒதுக்கி
வைத்திருந்த நண்பர் ஒருவர் அங்கே நரேந்திரரைக்காண வந்தார்.
வங்க வாசி
பத்திரிகைக்கும், தாரகேசுவரர் சிவன் கோயில் நிர்வாகிக்கும் இடையில் உயர்நீதி மன்றத்தில்
நடைபெற்று வந்த வழக்கு பற்றி பேச்சு வந்தது. அது பற்றிய செய்திகள் அன்றைய செய்தித்தாள்களில்
வெளி வந்த வண்ணம் இருந்தன. அந்த வழக்கின் போக்கையும் வாதங்களையும் அறிந்திருந்த நரேந்திரர்
அவைப்பற்றி கேலியாகக்கூறிவிட்டு, நான் அந்தக்கோயில் நிர்வாகியின் வக்கீலாக இருந்தால்
இப்படித்தான் வாதிடுவேன்” என்று பல்வேறு வாதங்களை எடுத்துரைத்தார்.
மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளான நண்பர் ஒன்று விடாமல் அத்தனை வாதங்களையும் குறித்து
வைத்துக்கொண்டார்.
பிறகு நேராக
க்கோயில் நிர்வாகியிடம் சென்று அந்த வாதங்களைக்கூறி , சன்மானமாக ரூ.250 பெற்றுக்கொள்ளவும்
செய்தார். மறுநாள் அவர் இதை நரேந்திரரிடம் தெரிவித்தபோது நரேந்திரர் சிரித்தார். இது
பற்றி கேள்விப்பட்ட சரத் ஆத்திரத்திற்கு உள்ளானார். அதற்கு நரேந்திரர் போகட்டும்! அவன்
வறுமையில் வாடுகிறான். என்னால் அவனுக்கு வேறு எந்த உதவியும் செய்ய இயலாது, இப்படியாவது
அவனுக்கு ஒரு வேளை உணவிற்கு வகை செய்ய முடிந்ததே என்று எனக்குத் திருப்தியாக இருக்கிறது
என்றார். அத்தகைய உருகும் இதயம் நரேந்திரருடையது.
படிப்பு
ஆன்மீக வாழ்க்கையில்
படிப்பிற்கு முக்கிய இடம் உண்டு. தொடர்ந்து இறைநினைவுகளில் மனத்தை வைக்க முடியாத போது,
மனம் கீழ்நிலைகளுக்குச்செல்லாமல் பாதுகாக்கப் படிப்பு உதவுகிறது. உண்மையான அறிவு தாகம்
உடையவர்கள் மனம் கீழ் நோக்கிப்போவதிலிருந்து
தப்பித்துக்கொள்கிறார்கள். எனவேபடிப்பையும் ஒரு தவமாக க் கண்டனர் நமது முன்னோர்.
கற்றலும் கற்பித்தலுமே முக்கியம். அதுவே தவம், அதுவே தவம் என்று கூறுகிறார் நாக மௌத்கல்யர் என்ற உபநிஷத முனிவர்.
புதிய சமுதாயத்தைப்படைக்க
வந்தவர்களான இந்தப் புதிய துறவியர் இதில் ஒரு புதுமையைப் புகுத்தினார்கள் பொதுவாக வேதங்கள்,
உபநிஷதங்கள், கீதை போன்ற சமய இலக்கியங்கள் மட்டுமே துறவியரின் படிப்பில் இடம் பெற்றிருக்கும்.
ஆனால் வராக நகர மடத்துத் துறவியர் மற்ற நூல்களையும்
படித்தார்கள். சமுதாயக் கடமைகளை வலியுறுத்தி இந்திய வரலாற்றில் எழுந்த முதல் துறவியர்
சங்கம், என்று ராமகிருஷ்ண துறவியர் சங்கத்தைப்பற்றி எழுதினார் நிவேதிதை. சமுதாயத்திலிருந்து
விலகாமல், அதனுடனேயே தங்களைப் பிணைத்துக்கொண்டு வாழ வேண்டும் என்பதால் அவர்கள் சமுதாய
சம்பந்தமான மற்ற நூல்களையும் படித்தனர்.
மார்க் ட்வெயினின்
நூல்களையும் The Innocents A t Home,The Innocents Abroad போன்ற நூல்களையும் விரும்பிப்
படித்தார் சசி. சிலவேளைகளில் அவர் தமக்கு மிகவும் பிடித்த கணித பாடப் புத்தகத்தை வைத்து
கொண்டு அல்ஜீப்ரா கணிதங்களையும் போடுவதுண்டு. அறிவின் களஞ்சியமாகத் திகழ்ந்த நரேந்திரர்
அந்த இளம் துறவியருக்குத் தத்துவம், மதம்,
வரலாறு, சமூகஇயல், இலக்கியம், கலை, விஞ்ஞானம் என்று பல வகுப்புகள் நடத்தினார். பொதுவாக
அவர் சொற்பொழிவு பாணியிலேயே வகுப்புகளை நடத்தினார். அதாவது அங்குமிங்கும் நடந்தபடியே
பேசுவார். சிலவேளைகளில் தோட்டத்தில் வில்வ மரத்தடியில் வகுப்புகள் நடைபெறும். இந்தியத்
தத்துவம், மேலைத் தத்துவம், புத்தமதம் என்று பல்வேறு தத்துவச் சிந்தனைகள் அலசப்பட்டன.
சரத்திற்கு
அவர் சங்கீதம் கற்றுத் தந்தார். காளிக்கு பக்வாஜ்
வாசிக்கக் கற்றுத்தந்தார். அவ்வப்போது எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வார்கள். சிலவேளைகளில்
பலராம் போஸ், கிரீஷ், ராம்சந்திரர் போன்றோரின் வீட்டிற்குச்சென்றும் பஜனைகள் செய்வதுண்டு.
வேடிக்கை
வினோதம்
இவ்வளவு
தீவிரமான வாழ்க்கைக்கு இடையிலும் அந்த இளைஞர்கள் தங்கள் வேடிக்கை வினோதங்களை விடவில்லை.
ஒரு நாள் நரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சமாதிநிலையை
நடித்துக் காட்டினார். ஒரு ரசகுல்லாவை வாயில் வைத்துக்கொண்டு அசையாமல் நின்றார். கண்கள்
இமைக்கவில்லை. ஒரு பக்தர்” அவர் விழுந்து விடாமல் தாங்கிப்
பிடித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு நரேந்திரர் ரசகுல்லாவை வாயில் வைத்தபடியே கண்
திறந்து ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது போல், நான் நன்றாக இருக்கிறேன்” என்றார். எல்லோரும் உரக்கச் சிரித்தனர்.
மற்றொரு
நாள் ஒரு சகோதரர் படுத்துக்கொண்டு, இறைவனைக் காணாத பிரிவுத்துன்பம் தாங்க மாட்டாதவர்
போல், ஐயோ, ஒரு கத்தியைத் தாருங்கள். இனி வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை. இனிமேலும்
இதைப்பொறுக்க முடியாது” என்றார். உடனே நரேந்திரர் கம்பீரமாக , இதோ பக்கத்திலேயே இருக்கிறது
சக்தி! எடுத்து குத்திக்கொள் என்றார். எல்லோரும் சிரித்தனர்.
உயரத் தளங்களில்
மடத்தின்
நிர்வாகம், வீட்டின் பிரச்சனைகள் எதுவும் நரேந்திரரின் ஆன்மீக உயர்நிலைகளைக் குலைக்கவில்லை.
அவரது மனம் எப்போதும் உயரத் தளங்களிலேயே சஞ்சரித்தது. ஒரு நாள் மாலை 4 மணி இருக்கலாம்.
அன்று நரேந்திரரைக் காண்பதற்காக அவரது சகோதரரான மகேந்திரர் மடத்திற்கு வந்திருந்தார்.
படிகளில் ஏறி மாடி வராந்தாவில் சென்றால் அங்கே நரேந்திரர் நடந்து கொண்டிருந்தார். நடந்து
கொண்டிருந்தாரா அல்லது யாராவது அவரை நடக்க வைத்துக்கொண்டிருந்தார்களா என்பது புரியவில்லை.
அத்தகைய ஒரு நிலையில் அவர் இருந்தார். நிலைத்த கண்கள், மேல்நோக்கியபார்வை , உடலுணர்வே
இல்லாதது போன்ற தோற்றம், புனிதப் பேரொளி யில்
பொலிந்த முகம், கலைக்க முடியாததொரு பேரமைதி அந்த இடம் முழுவதும் நிலவியது.
மகேந்திரர்
பலமுறை நரேந்திரரை அழைத்தார். பதில் இல்லை. அவர் நடந்து தம் பக்கத்தில வந்தபோது உரத்த
குரலில் அழைத்துப் பார்த்தார்்். நரேந்திரரிடமிருந்து எந்த மறுமொழியும் இல்லை. மகேந்திரருக்குப் பயமாகி விட்டது.
திரும்பி சிறிது தூரம் சென்றால் அங்கே ராக்கால், சரத் என்று பலரும் கைகளைப் பிசைந்த வண்ணம் நின்று கொண்டிருந்தனர்.
மதியம் ஒன்றரையிலிருந்தே இப்படித்தான் இருக்கிறான். இப்படி அவனை நாங்கள் கண்டதே இல்லை. சில நாட்கள் ஜபதியானத்தில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார்.
சவிகல்ப சமாதி, நிர்விகல்ப சமாதி என்றெல்லாம் பல ஆழ்ந்த விஷயங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தான்.
அவற்றையெல்லாம்
சிந்தித்ததில் அவனது மனம் உயரத் தளங்களில் திளைக்கிறது. நீ ஏதாவது முயற்சி செய்து அவனது
மனத்தை ச் சாதாரண நிலைக்குக்கொண்டுவர முடியுமா பார், இப்படி உயர்ந்த நிலைகளில் மனம்
செல்லுமானால் அவனது உடம்பு நிலைக்காது என்று
குருதேவர் கூறுவார். நாங்கள் மிகவும் கலங்கிப்போயுள்ளோம் என்று அவர்கள் மகேந்திரரிடம்
கூறினர்.
நேரம் இருட்டத்தொடங்கியது.
மகேந்திரர் நரேந்திரரின் அருகில் சென்று உரத்த குரலில் அவரது பெயரைக் கூப்பிட ஆரம்பித்தார்.
எந்தப் பயனும் இல்லை. கால்கள் நடந்து கொண்டே இருந்தன. முகம், கண்கள், எல்லாம் எங்கேயோ
பார்த்தபடி இருந்தன. அவர் சாதாரண நிலையை அடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
மகேந்திரரும்
விடாமல் குரலை உயர்த்தியதுடன் ஏசவும் ஆரம்பித்தார். ஏழெட்டு நிமிடங்கள் கழிந்தன. அதன்பிறகு நரேந்திரர் படிப்படியாகச் சாதாரண நிலைக்குவர
ஆரம்பித்தார். எல்லையற்றுப் பரந்த ஒளிமயமான உலகைப் பார்த்திருந்த அவரது கண்கள் இருளும்
ஒளியும் மாறிமாறி வருகின்ற இந்த உலகைப் பார்ப்பது போல் பார்த்தன. புதிய உலகைப் பார்ப்பது
போல் அவரது கண்கள் எதிலும் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் சுழன்றன. இறுதியாக தெளிவற்ற
குரலில், என்ன இது, என்ன இது, என்று வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வெளிவந்தன. நீண்ட
நேரத்திற்குப் பிறகு அவர் புற உலக நினைவை முழுமையாகப்பெற்றார்.
வளர்ந்தது
செந்தீ ஆன்ட்பூர்
ஆன்மீக சாதனைகள்,
அனுபவங்கள், படிப்பு, வேடிக்கை வினோதங்கள் என்று சென்று கொண்டிருந்த இளைஞர்களின் வாழ்வில்
ஒரு முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர்களில் ஒருவரான பாபுராமின் தாயார் மாதங்கினிதேவி
ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யை ஆவார். அவர் அவரது சீடர்களிடம் மிகுந்த அன்பும் பாசமும்
கொண்டிருந்தார். டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் அவர்களைத்தம் வீட்டிற்கு அழைத்தார் அவர்.
அவரது வீடு கல்கத்தாவிலிருந்து சுமார் 24 மைல் தொலைவிலுள்ள ஆன்ட்பூர் என்ற கிராமத்தில்
இருந்தது. அவரது அழைப்பை ஏற்று நரேந்திரர், பாபுராம், சரத், சசி, தாரக், காளி, நிரஞ்சன்,
கங்காதர் , சாரதா ஆகியோர் சென்றனர். அங்கே அவர்களின் சாதனை வாழ்க்கை தொடர்ந்தது. சில
நாட்களில் ராக்காலும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.
ஒரு நாள்
இரவு, துனி அக்கினி வளர்த்து அனைவரும் அதைச்சுற்றி அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டனர். தீயின் செந்நாக்குகள்
ஓங்கி வளர்ந்தன. அவர்களின் மனத்தில் துறவுத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. ஏதோ ஓர்
ஆவேசத்திற்கு ஆட்பட்டவர்போல் நரேந்திரர் துறவின் பெருமையைப்பற்றி பேசினார். ஏசு நாதரைப்பற்றி
பேசினார். அவரது சீடர்கள் எப்படி அவரது செய்திகளை உலகெங்கிலும் பரப்பினார்களோ அது போல்
தங்கள் வாழ்க்கையையும் அர்பணித்துக் கொள்ள வேண்டும் என்று உணர்ச்சி பூர்வமாக எடுத்துரைத்தார்.
ஓர் அசாதாரணமான அமைதி அவர்களை ஆட்கொண்டது. அனைவரும் நீண்ட நேரம் தியானம் செய்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர் அவர்களின் உள்ளங்களில் ஏற்றி வைத்த துறவு தீபம் அன்று சுடர்விட்டு
எரிய ஆரம்பித்தது. பிறகு தான் அன்று கிறிஸ்மசுக்கு முந்திய நாள்(டிசம்பர் 24-1886)
என்பது அவர்களின் நினைவிற்கு வந்தது. குருதேவர் எங்களைத்துறவிகள் ஆக்கியிருந்தார்.
ஆனால் ஓர் ஒருங்கிணைந்த அமைப்பாகவேலை செய்து
முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஆன்ட்பூரில் தான் வலுப்பட்டது. என்று பின்னாளில் தாரக்(சிவானந்தர்)
கூறினார். ஒரு வாரம் ஆன்ட்பூரில் தங்கிவிட்டு அனைவரும் கல்கத்தாவிற்குத் திரும்பினர்.
விரஜா ஹோமம்
மனத்தளவில்
துறவிகளாகவே இருந்தார்கள். அந்த இளைஞர்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் அவர்களில் சிலருக்குக்
காவியுடை அளிக்கவும் செய்திருந்தார். இருப்பினும் புறத்தளவிலும் முழுத் துறவிகளாக ஆகவேண்டும்
என்று விரும்பினார் நரேந்திரர். விரஜா ஹோமம் என்ற சடங்கைச்செய்து , அந்த அக்கினியின்
முன்பு சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ளும்போதே
ஒருவன் முழுத்துறவியாக ஆகிறான். எனவே விரஜா ஹோமம் செய்ய வேண்டும் என்று விரும்பினார்
நரேந்திரர். அதற்கான மந்திரங்கள் தமக்குத் தெரியும் என்று காளி கூறியபோது நரேந்திரர்
மிகவும் மகிழ்ந்தார்.
1887 ஜனவரி
3-ஆம் வாரத்தில் ஒருநாள் குறிக்கப் பட்டது. அன்று காலையில் அனைவரும் கங்கையில் குளித்து
பூஜையறைக்குச்சென்றனர். வழக்கம்போல் சசி ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பூஜை செய்தார். அனைவரும்
ஸ்ரீராகிருஷ்ணரை வழிபட்டனர். பின்னர் விரஜா ஹோமம் தொடங்கியது. காளி, மந்திரங்களை வாசித்தார்.
முதலில் நரேந்திரர், பிறகு ராக்கால். பாபுராம், நிரஞ்சன், சரத், சசி, சாரதா என்று மற்றவர்களும்
கடைசியில் காளியும் ஆஹீதி அளித்தனர். இவ்வாறு ஸ்ரீராமகிருஷ்ணரின் இளம் சீடர்கள் நரேந்திரரின் தலைமையில் துறவிகள் ஆயினர். நரேந்திரர்
அவர்களுக்கு துறவுப்பெயர்களைச் சூட்டினார்.ராமகிருஷ்ணானந்தர் என்ற பெயரைத் தாம் ஏற்றுக்கொள்ள
விரும்பினார் நரேந்திரர். ஆனால் சசியின் பக்தி காரணமாக அவருக்கு அநதப்பெயரை அளித்தார்.
தாம் விவிதிஷானந்தர் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.
இளம் சீடர்களின்
துறவுப்பெயர்கள் பின்வருமாறு-
நரேந்திரர்-சுவாமி
விவிதிஷானந்தர்.
ராக்கால்-சுவாமி
பிரம்மானந்தர்
பாபுராம்-சுவாமி
பிரேமானந்தர்.
நிரஞ்சன்-சுவாமி
நிரஞ்ஜானந்தர்
யோகின்-
சுவாமி யோகானந்தர்
சசி- சுவாமி
ராமகிருஷ்ணானந்தர்
சரத்- சுவாமி
சாரதானந்தர்
காளி- சுவாமி
அபேதானந்தர்
தாரக்- சுவாமிசிவானந்தர்
ஹரி- சுவாமி
துரியானந்தர்
கங்காதரர்-
சுவாமி அகண்டானந்தர்
ஹரி பிரசன்னர்-
சுவாமி விஞ்ஞானானந்தர்
சாரதா பிரசன்னர்-
சுவாமி திரிகுணாதீதானந்தர்
சுபோத்-
சுவாமி சுபோதானந்தர்
லாட்டு-
சுவாமி அத்புதானந்தர்
மூத்தகோபால்-
சுவாமி அத்வைதானந்தர்.(
(இவர்கள்
அனைவரும் ஒரே நாளில் துறவறம் ஏற்றுக்கொள்ளவில்லை.
பின்னாளில்
இந்தியா முழுவதும் சுற்றியபோது, சகோதரத்துறவிகள் தம்மைத் தொடரக்கூடாது என்பதற்காக சுவாமி
விவேகானந்தர் தமது பெயரை இரண்டு முறை மாற்றினார்.
1891 பிப்ரவரி முதல் 1892 அக்டோபர், விவேகானந்தர். 1892 அக்டோபர் முதல் 1893 மே சச்சிதானந்தர்,
1893 மே மாதம் மேலை நாடுகளுக்குக் கிளம்பியதிலிருந்து
நிரந்தரமாக விவேகானந்தர் என்ற பெயரை வைத்துக்கொண்டார்.)
நரேந்திரர்
விவிதிஷானந்தர் என்ற பெயரை ஏற்றுக்கொண்டாலும் அதனை அப்போது அவர் பயன்படுத்தவில்லை.
நீதி மன்றத்தில் வீடு சம்பந்தமான வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிலையில்
பெயர் மாற்றமோ, துறவு நெறியை ஏற்றுக்கொள்வதோ வழக்கில் தமக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்
என்று அவர் கருதினால், அவர் சுவாமிஜி, என்றே இன்று அறியப் படுகிறார். இனி நாமும் அப்படியே
அழைப்போம்.
சமுதாயத்தின்
பார்வை
ஸ்ரீராமகிருஷ்ணர்
நிறுவ வந்த ஒரு புதிய யுகத்தின் விடியலை நோக்கி இந்த இளம் துறவிகள் நடைபோட்டுக் கொண்டிருக்க
சமுதாயம் அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயங்கியது.
நரேந்திரருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது.
என்ன பேசுகிறான், என்ன நினைக்கிறான் , என்ன செய்கிறான். என்பது எதுவும் புரியவில்லை.
சங்கரரைப் படிக்கிறார்களாம், உபநிஷதமும் பஞ்சதசியும் மனப்பாடம் செய்கிறார்களாம், தலையும்
புரியவில்லை. வாலும் புரியவில்லை” என்றே பலரும் கூறினர். அந்த இ.ளைஞர்களை
அறியாதவர்கள் மட்டும் அல்ல. அறிந்தவர்களும்
உடன் பழகியவர்களும் கூட அவ்வாறே எண்ணினர். எனவே அவர்களுக்கு உதவி செய்வது, அவர்களை
ஏற்றுக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிற்று.
அவர்கள்
அவ்வாறு நடந்து கொண்டதில் வியப்பு எதுவும் இல்லை. அன்றைய வங்காளத்தில் துறவிகளோ மடங்களோ
அரிதாகவே காணப்பட்டன.வட இந்தியாவிலிருந்து வருகின்ற துறவிகளே ஓரிருவர் காணப்பட்டனர்.
அவர்கள் கோவணம் உடுத்தி, சடை முடி தரித்து, குளிப்பது போன்ற புறத்தூய்மைகளில் அவ்வளவு
கவனம் செலுத்தாமல் வாழ்பவர்கள், பொதுவாக அவர்களுக்கென்று நிலையான இடம் கிடையாது. பிச்சையேற்று உண்டு, ஏதாவது
மரத்தடியில் காலம் கடத்தினர். அவர்களுக்குச் சிறிது உணவளிப்பதை மக்கள் ஒரு பெரிய விஷயமாக
நினைக்கவில்லை என்றாலும் அவர்களிடம் பொதுவாக யாரும் பெரிய மரியாதை காட்டவில்லை.
மற்றொரு
பிரிவு துறவிகள் வங்காளத்தில் காணப்பட்டனர். அவர்கள், ”வைராகி” என்று அழைக்கப்பட்ட வைணவத்துறவிகள் . இவர்கள் ஏக்தாரா என்ற ஒற்றை நரம்பு வாத்தியத்தை மீட்டி,
ராதா-கிருஷ்ண பிரேமையைப் பற்றிய வங்க மொழிப்பாடல்களைப் பாடியபடி பிச்சைக்குச்செல்வார்கள். இவர்களின் பாடலுக்காக மக்கள் இவர்களைப்பொதுவாக ஆதரித்தாலும்
பெரிய ஆன்மீக வாதிகளாகக் கருதவில்லை.
ராமகிருஷ்ண
துறவிகள் இந்த இரண்டு பிரிவிலும் சேராதவர்களாக இருந்தார்கள். அவர்கள் நன்றாகப் படித்தவர்கள்,
நவீனக் கல்வி பெற்றவர்கள். சேர்ந்து ஒரே இடத்தில் தங்கினார்கள். அவர்களில் பெரும்பாலானோர்
வசதியான குடும்பங்களில் பிறந்தவர்கள். ஆனால் வீட்டை விட்டு விட்டு, பேய் வீடு என்று
கருதப் பட்ட ஒரு பாழடைந்த வீட்டில் வாழ்க்கை நடத்தினார்கள். இரவுகளில் தூங்காமல் ஆன்மீக
சாதனைகளில் ஈடுபட்டார்கள். தூய உடை உடுத்தினார்கள். இவையெல்லாம் அன்றைய சமுதாயத்தில்
வினோதமாகப் பட்டன. அவர்களின் லட்சியத்தையோ
ஆர்வத்தையோ சமுதாயம் புரிந்து கொண்டதாகத் தெரிய வில்லை.
ஒரு சந்தேகக் கண்ணுடனேயே அவர்களை அன்றைய வங்காள சமுதாயம் பார்த்தது.
இளகிய இதயம்
படைத்த தாய்மார்கள் அந்த இளைஞர்களைப் பரிவுடன் பார்த்தனர். ஐயோ! இந்த இளம் வயதில் இப்படி
ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்டார்களே! என்று மனம் நொந்து. அவர்களிடம் வீடுகளுக்குத்
திரும்புமாறு அறிவுரை கூறினார். சிறுவர்களோ , அவர்கள் தெருவில் செல்லும்போது, பரம ஹம்சம்
போகிறது” என்று கத்திக்கொண்டு வாத்துக்கள் போல் குரல் எழுப்பியபடி
அவர் களின் பின்னால் ஓடினர்.(ஹம்சம்-சம்ஸ்கிருதத்தில் ஹம்சம் என்பது அன்னப் பறவையைக்
குறிக்கும். பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலைத் தனியாகப் பிரித்து அருந்துவதற்கான
ஆற்றல் பெற்றது அன்னம் என்று கூறப்படுகிறது.
அது போல் உலகிலிருந்து கடவுளைப் பிரித்து அவரில் மனத்தைச்செலுத்த வல்லவர்கள் என்ற பொருளில்
துறவிகள் பரமஹம்சர்கள் என்று அழைக்கப் படுகின்றனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர் அவ்வாறே அறியப்பட்டார்.
ஆனால் ஹம்சம்
என்றால் வங்க மொழியில் வாத்து என்று பொருள் . பரமஹம்சம் என்றால் பெரிய வாத்து” என்று பொருள்படும்.)
இளைஞர்கள்
வசதி படைத்தவர்கள், நன்றாகப் படித்தவர்கள், ஆங்கிலம் அறிந்தவர்கள்,-இவர்கள் ஒன்று சேர்ந்து
ஒரு பாழடைந்த பேய்வீட்டில்” என்ன செய்கிறார்கள் என்று அறிவதற்கு
வராக நகர மடத்தின் அருகில் வாழ்ந்தவர்கள் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். சிலருக்கு அவர்களின்
வாழ்க்கையைப் பற்றிய சந்தேகமும் இல்லாமல் இல்லை. சிலவேளைகளில் இரவு முழுவதும் நாம சங்கீர்த்தனம்,
ஆடல், பாடல் என்று அவர்கள் எழுப்புகின்ற சத்தம் இரவின் அமைதியைக் குலைத்து அக்கம் பக்கத்தில்
உள்ளோரின் தூக்கத்தையும் கெடுத்துவிடும். இவர்களை என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் திகைத்தனர். ஒரு
நாள் இரவில் மடத்திலிருந்து ஒரு பெண்ணின் பாட்டு
கேட்டது. இனிமையான குரலில் ஒரு பெண் பாடுவதைக்கேட்டதும் அருகிலுள்ளோர் தங்கள் சந்தேகம்
சரியானதே என்று முடிவு செய்தனர். அவர்களைக்கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்பதற்காக
சிலர் ஓசையின்றி மடத்திற்குள் சென்றனர். அடிமேல் அடி எடுத்து வைத்து பாடல் வந்த அறையை
நோக்கிச்சென்றனர். இப்போது பிடித்துவிடலாம் என்று உள்ளே சென்றால் அங்கே பாடிக்கொண்டிருந்தவர்்்்
ஓர் ஆண்-சரத். அவருக்குப் பெண் குரல்! வந்தவர்களின் முகத்தில் ஈயாடவில்லை! ஏதோ சாக்குப்போக்கு
சொல்லி விட்டு நழுவினார்! இவ்வாறு எதிர்ப்பு, சந்தேகம், சிலவேளைகளில் ஆமோதிப்பு என்று
சமுதாயம் அந்த இளம் துறவியரை ப்பார்த்தது. அதே வேளையில் கிறிஸ்தவ மிஷனரிகளும் ஒர முயற்சியில்
ஈடுபட்டனர். இளைஞர்கள், ஓர் உயர்ந்த நோக்கத்துடன் இல்லறவாழ்க்கையைத்துறந்தவர்கள்- இத்தகையோர்
தங்கள் பக்கத்தில் இரந்தால் நன்றாக இருக்கும் என்று அவர்களின் மனம் கற்பனை செய்தது.
எனவே ஒரு நாள் வராக நகர மடத்திற்கு வந்து ஏசுவின் புகழையும் கிறிஸ்தவ மதத்தின் பெருமைகளையும்
அவர்களிடம் எடுத்துக் கூறினர்.
ஸ்ரீராமகிருஷ்ணரின்
சீடர்களில் பலரும் பைபிளையும் முக்கியமான கிறிஸ்தவ நூல்களையும் ஆழ்ந்து கற்றவர்கள்.
வந்தவர்கள் கூறிய அனைத்தையும் அவர்கள் பொறுமையாகக்கேட்டனர். கடைசியில் சுவாமிஜி அவர்களே
வியக்கும் வண்ணம் கிறிஸ்தவ மதக்கோட்பாடுகளை விளக்கினார். எந்த விதத்திலும் அவை வேதாந்தக்
கோட்பாடுகளை விட உயர்ந்தவை அல்ல என்பதை நிரூபித்தார். இவர்களிம் தங்கள் முயற்சிகள்
செல்லுபடியாகாது என்பதைப் புரிந்து கொண்ட அந்த மிஷனரிகள் வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர்.
வேண்டிய பணம் தருவதாகக்கூறி கிறிஸ்தவ மதத்திற்கு வந்து விடுமாறு அவர்களுடைய வழக்கமான
பாணியில் முயற்சி செய்தனர். அதிலும் இந்த இளம் துறவிகள் மயங்காத போது பெண்களைக்கூட தருவதாகக் கூறி ஆசை காட்டுகின்ற
இழிந்த நிலைக்கும் சென்றனர். ஆனால் காமமும் பணத்தாசையும் மனிதனின் பரம விரோதிகள்” என்று போதித்த குருதேவரின் சீடர்களை இந்தக் கவர்ச்சிகள் அசைக்க
இயலுமா? தங்கள் அனைத்து முயற்சிகளிலும் தோற்ற மிஷனரிகள் பின் வாங்கினர்.
பலராம் போஸின்
வீட்டிலிருந்து ஸ்ரீராமகிருஷ்ணரின் அஸ்திக் கலசத்தைக்கொண்டு வந்து , அதனை ஒரு தனியறையில்
வைத்து அந்த அறையிலேயே தியானம் முதலான ஆன்மீக சாதனைகளைத் துறவியர் செய்து வந்தனர்.
ராமகிருஷ்ண
பூஜை
ராமகிருஷ்ணானந்தர் மடத்தில் நிரந்தரமாகத்
தங்கத்தொடங்கிய பிறகு அந்த அறையை ஒழுங்குபடுத்தினார். நடுவில் குருதேவரின் படம்
ஒன்றை வைத்து தினசரி பூஜையை ஆரம்பித்தார். சுவாமிஜி, பல துறவிச் சீடர்கள், சுரேந்திரர்
என்று பலரும் இதனை விரும்பவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் தம்மை வழிபடுமாறு யாரிடமும் கூறியதில்லை
என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர். அதிலும் விரஜா ஹோமம், செய்து துறவிகள் ஆகிய
பிறகு பூஜை முதலான சடங்கு களுக்கு இடமில்லை என்பது அவர்களது வாதமாக இருந்தது.
ஒரு நாள்
சுவாமிஜி பூஜையறையில் நின்று கொண்டே அதனை எதிர்த்து காரசாரமாக விவாதித்தார். ராமகிருஷ்ணானந்தரும்
உரிய பதிலைக்கூறினார். சிறிது நேரத்தில் வாதம், மிகவும் சூடாகியது. ஒரு கட்டத்தில்
ராமகிருஷ்ணானந்தர் சுவாமிஜியின் முடியைப் பிடித்து இழுத்து பூஜையறைக்கு வெளியே தள்ளினார்.
எல்லாம் சிறிது நேரம் தான். பின்னர் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து அவரிடம் மன்னிப்பும்
கேட்டார். சுவாமிஜி மன்னித்தது மட்டுமல்ல, அவரது குரு பக்தியை வெகுவாகப்புகழவும் செய்தார்.
இது விஷயமாகப் பலநேரங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும் ராமகிருஷ்ண பூஜை தொடர்ந்தது.
ராமகிருஷ்ணானந்தர் செய்த பூஜையைக் கண்டவர்கள் அனைவரும் அங்கே குருதேவரின்
சான்னித்தியத்தை உணர்ந்தனர். உயிருடன் இருப்பவருக்கு எப்படி உபசாரங்கள் செய்யப் படுமோ அப்படியே அவரை வழிபட்டார் ராமகிருஷ்ணானந்தர். அவருக்கு
உணவு நிவேதிக்கப் பட்டது. புகையிலை போன்று அவர் பயன்படுத்தும் மற்ற பொருட்கள் சமர்ப்பிக்கப்
பட்டன. ஆரதி செய்யப் பட்டது. ஆரதி வேளையில், ஜெய் குருதேவா” என்று அனைவரும் சேர்ந்து
ஓதினர். சிலவேளைகளில் குரு கீதை சுலோகங்களைக்கூறினர். தீபாராதனை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அனைவரும் ஜெய் சிவ ஓங்காரா” என்ற பாடலைப்பாடினர்.
நாட்கள்
செல்லச்செல்ல பூஜை முறையை மேலும் ஒழுங்குபடுத்தினார்
ராமகிருஷ்ணானந்தர். சம்ஸ்கிருதத்தில் வல்லுனராக இருந்த அவர் உரிய மந்திரங்களைச்சேர்த்து
ராமகிருஷ்ண பூஜை முறையை உருவாக்கினார்.
தினசரி பூஜையைத்
தவிர சிவராத்திரி, காளி பூஜை போன்ற விசேஷ நாட்களையும்
கிறிஸ்மஸையும் அவர்கள் கொண்டாடினர்.
சுவாமிஜி
வழி நடத்துகிறார்.
விரைந்து செல்லும் வாழ்க்கையின் ஊடே அந்த இளம் துறவியர்
அனைவரும் இறையனுபூதி என்ற ஒன்றையே நோக்கமாகக்கொண்டு தீவிரமான தவ வாழ்க்கை வாழ்ந்தனர்.
வாழ்கிறோமா, வாழ வில்லையா என்ற உணர்வு கூட இன்றி அவர்கள் மணிக்கணக்காக தியானம் செய்தார்கள்.
துனி அக்கினி வளர்த்து அதன் அருகில் அமர்ந்து சாதனைகள் செய்தார்கள். ஆனால் படிப்பு
ஆகட்டும், சாதனைகள் ஆகட்டும், எதுவும் எல்லை மீறாமல் பார்த்துக்கொண்டார் சுவாமிஜி.
சிலவேளைகளில் அவர்கள் கடின தவத்திற்காக முயலும் போது. அவர்களை தடுத்து, என்ன எல்லோரும் ராமகிருஷ்ண பரமஹம்சர்கள்ஆகிவிடலாம் என்று
நினைக்கிறீர்களா? அது ஒருபோதும் முடியாது. ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு முறை மட்டுமே பிறக்கிறார்.
என்பார்.
சிலவேளைகளில்,
சகோதரர்களே குருதேவர் கூறும் எறும்பும் சர்க்கரை மலையும் உவமையை மறந்துவிட்டீர்களா?
உங்களுக்கு ஒரு சர்க்கரைத் துகள் போதும், நீங்களோ சர்க்கரை மலையையே தூக்கி ச் சென்றுவிடலாம்
என்று நினைக்கிறீர்கள். அத்தகைய முயற்சிகளை விடுங்கள்” என்று அவர் களை அன்புடன் வழிநடத்துவார். யாராவது அவரது பேச்சை
மீறி தீவிர சாதனைகளில் ஈடுபட்டால் உங்களை ஸ்ரீராமகிருஷ்ணர் என் பொறுப்பில் விட்டுச்சென்றிருக்கிறார்
என்பதை மறந்து விடாதீர்கள்? என்று அவர்களைப் பரிவுடன் தமது வழிக்குக் கொண்டு வருவார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதால் மட்டுமல்ல, சுவாமிஜியின் ஆளுமையும் அவர்களை மிகவும் ஆட்கொண்டது.
அவரது முகம், அவரது பேச்சு, அவரது கண்கள், அவர்களுக்கிடையே அவர் செயல்பட்ட விதம், அவர்களை உற்சாகப்படுத்திய விதம்
ஏன், சிலவேளைகளில் அவர்களைக் கடிந்து கொண்ட விதம் என்று அனைத்துமே அவரை அந்த இளம் துறவியர்களின்
தன்னிகரற்ற தலைவராகக் காட்டியது.
ஆனால் சுவாமிஜி
அவர்களை எப்படி வழிநடத்தினாலும், ஏன் கடிந்து கொண்டாலும் அதன் பின்னணியாகத் திகழ்ந்தது
அவரது தன்னலமற்ற அன்பு ஒன்றே. இதனை அனைவரும் புரிந்து கொண்டிருந்தனர். ஒரு முறை திடீரென்று
திரிகுணாதீதானந்தர் யாரிடமும் சொல்லாமல் மடத்தை
விட்டுப்போய் விட்டார். அவரது பிரச்சனை கொஞ்சம் வித்தியாசமானது. நரேன் அடிக்கடி வீட்டிற்குப்
போய்வருகிறான், குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறான். எங்கே எனக்கு அது போல் வீட்டிற்குப்போகும் ஆசை வந்து விடுமோ
என்று பயப்படுகிறேன், என்று கூறிவிட்டு அவர் சென்றிருந்தார். நரேந்திரர் எங்கே இருந்தாலும்
அது அவரது மனத்தைப் பாதிக்காது. ஆனால் தம்மால் அத்தகைய ஒரு பற்றற்ற நிலைமை சாத்தியமல்ல
என்பதை நினைத்து அவர் வருந்தினார். இவ்வாறு மடத்தை விட்டுச்சென்ற அவரால் பத்து மைல்களுக்கு
மேல் போக இயலவில்லை. எனவே சில நாட்களுள் மடத்திற்குத்
திரும்பி வந்தார். அப்போது பிரம்மானந்தர் அவரிடம், ஏன் இப்படிச்செய்தாய்? நீ எங்கே போவாய்? எங்கு போனாலும் நரேனிடம் உள்ளது போல்
ஓர் அன்பை நீ எங்காவது காண இயலுமா?என்று கேட்டார். இவ்வாறு தமது பிரச்சனைகள் , குடும்பப்
பிரச்சனைகள் அனைத்தையும் மீறிஅனைவரையும் அன்பினால் ஆண்டார் சுவாமிஜி.
குருதேவர் ஒரு நாள் பரவச நிலையில் உயிர்களுக்கு உதவ
இயலாது, தொண்டுதான் செய்ய இயலும், என்று கூறியதை சுவாமிஜி ஒரு புதிய கண்ணோட்டத்தில்
புரிந்து கொண்டது பற்றி ஏற்கனவே கூறினார். உயிர்களை இறைவனாகக் கண்டு அவர்களுக்குச்சேவை
செய்வது முக்திக்கு வழி என்று சுவாமிஜி கூறியதை அவரது சகோதரத் துறவிகள் பலராலும் ஏற்றுக்கொள்ள
இயலவில்லை. இது விஷயமாக அவ்வப்போது வாதங்களும் நடைபெறுவதுண்டு. சுவாமிஜி அன்பினாலும்
அரவணைப்பினாலும் மெல்ல மெல்ல அவர்களிடம் அந்தக் கருத்தைப் புகுத்தினார். ஸ்ரீராமகிருஷ்ணரின்
செய்தி என்ன, அதன் புதுமை என்ன, அதனை எந்த வழியில் மக்களிடம் கொண்டு செல்வது என்பது
பற்றியெல்லாம் அவர் அவர்களிடம் கூறி படிப்படியாக அவர் களை அந்த வழிக்குக்கொண்டுவர முயற்சி செய்தார்.
இவற்றுடன்
சுவாமிஜிக்கு இருந்த மற்றொரு முக்கியமான வேலை மற்றத்துறவியரின் பெற்றோரைச் சமாளிப்பது,
இந்த ”சீர்கேடுகள்” அனைத்திற்கும் நரேந்திரனே காரணம்.
அவன் தான் எங்கள் பிள்ளைகளையும் கெடுக்கிறான்.
அவன் இல்லாமல் இருந்தால் அவர்கள் தங்கள் படிப்பைத்
தொடர்ந்திருப்பார்கள். என்று பல பெற்றோரும் சுவாமிஜியைக் குற்றம் சாட்டினர்.
அவர்கள்
வரும்போதெல்லாம் அவர்களின் ஏச்சைப்பொறுத்துக்கொண்டு அவர்களிடம் பொறுமையாகப்பேசி அவர்களை
உபசரித்து வழியனுப்புவார் சுவாமிஜி.
பிரம்மச்சரியம்,
எளிமை, ஆன்மீக சாதனைகள் என்ற மூன்றும் துறவிற்கு அடிப்படையாகக் கூறப்படுகின்றன. பிரம்மச்சரியம்
என்பது காமத்திற்குக் கட்டுப்படாத வாழ்க்கை. எளிமை என்றால் தேவைக்கு அதிகமாக மிகக்குறைவாக
தேவைப்படுமோ அந்த மிகக்குறைந்த அளவை மட்டுமே ஒரு துறவி பயன்படுத்த வேண்டும் அடுத்து
வருபவை ஆன்மீக சாதனைகள், தவம், படிப்பு போன்றவை.
வராக நகர்
மடத்துத் துறவியரிடம் இந்த அடிப்படைப் பண்புகள் எல்லாம் இயல்பாகவே அமைந்திருந்தன. இறைவனே
மனிதனாக அவதரித்த குருதேவரின் தொடர்பு அவர்களுக்கு இளம் வயதிலேயே ஏற்பட்டது. அவரது
அருளால் இறையனுபூதி என்ற ஒன்றையே வாழ்க்கையின் லட்சியமாகக்கொண்டு அவர்கள் தவத்தில்
ஈடுபட்டனர். தவத்திற்குப் பல்வேறு வழிகளும்
முறைகளும் கூறப்படுகின்றன. அவற்றில்
ஒன்று ப்ரவ்ரஜனம், அதாவது ஓரிடத்தில் தங்காமல் சஞ்சரித்தல்.
தேங்கும்
நீரும் தங்கும் துறவியும் இழிநிலையை அடைய நேரும், என்பார்கள். நீர் என்றால் அது ஓடிக்கொண்டே
இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அதில் அழுக்கு சேர்ந்து குடிக்க உதவாததாகி விடும். துறவி
ஓரிடத்தில் தொடர்ந்து தங்கினால் அந்த இடத்துடன்,
அந்த நபர்களுடன் அவனுக்குப் பற்று ஏற்பட்டு இறைநெறியில் தடைக்கல்லாகி விடும். எனவே
அவன் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
துறவின்
மற்ற நியதிகள் வாழ்க்கையில் சிறப்பாக அமைந்துவிட்ட வராக நகர் மடத்துத்துறவிகள் தீர்த்த
யாத்திரை செல்ல நினைத்தனர். இமயமலை, புரி, காசி, என்று பலரும் பல்வேறு இடங்களுக்குப்போக
முடிவு செய்தனர். 188-லிருந்தே பலரும் போகவும் தொடங்கிவிட்டனர். சுமார் ஒன்றரை வருட
காலம் வராக நகர மடத்தை ஒரு தவபூமியாக்கிய பிறகு துறவு வாழ்வின் அடுத்த பரிமாணம் ஆரம்பித்தது.
சுவாமிஜி ஆரம்பத்தில் இப்படி பயணம் சென்றவர்களைக் கண்டித்தாலும் அவரது மனத்திலும் அந்த
ஆர்வம் துளிர் விட ஆரம்பித்தது. அவரும் தமக்கென்று சில திட்டங்களை வகுத்துக்கொண்டார்.
இந்தியப்
பயணம்
புறப்படுகிறார்.
பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரிடமிருந்தும் பிரிந்து தனியாக வாழவேண்டும். எந்த இடத்திலும்
நிலையாக த் தங்காமல் சஞ்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும். கைத்தடி, கமண்டலம் இரண்டை
மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்மா ஒன்றையே துணையாகக்கொள்ள வேண்டும். ஒரு துறவி
இப்படி வாழவே விரும்புவான். சுவாமிஜியின் எண்ணமும் அதுவாக இருந்தது. அத்தகைய ஒரு வாழ்க்கைக்காக
ஏங்கினார் அவர். ஆனால் அவர் தனியாகச் செல்வதற்குச் சகோதரச் சீடர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.
அது மட்டுமல்ல, புறப்பட எண்ணும் போதெல்லாம் ஏதேதோ தடைகள் தோன்றின. ஒரு முறை புறப்பட
எண்ணியபோது கடுமையான காய்ச்சல் வந்தது. ஜன்னி கண்டு நாடித்துடிப்பு, மிகவும் குறையத்தொடங்கியது.
அவர் இறந்துவிடப்போகிறார் என்று பயந்து பிரேமானந்தர் ஓவென்று அழ ஆரம்பித்தார். பேச
இயலாத நிலையிலும், அழாதே பாபுராம்! நான் செய்யவேண்டிய பணி ஏராளம் உள்ளது. அதன் பரிமாணத்தை
இப்போது தான் நான் உணர ஆரம்பித்திருக்கிறேன்.அந்தப் பணி முடியும் வரை நான் சாக மாட்டேன்.
என்றார். மருந்துகளாலும் சகோதரத் துறவியரின் அன்பான சேவைகளாலும் அவரது உடல்நிலை படிப்படியாகச்
சீரடைந்தது. அதன் பிறக சகோதரச் சீடர்களிடம் பலவாறாகப்பேசி அவர்களின் சம்மதத்தையும் பெற்று பயணத்திற்குத் தயாரானார்.
காசி
1888 நடுப்பகுதி
வரை சுவாமிஜி அருகிலுள்ள ஆன்ட்பூர் போன்ற இடங்களுக்கு ஓரிருமுறை சென்றுவந்தார். நீண்ட தூரம் எங்கும் போகவில்லை.1887
கோடைக்காலத்தில் அவருக்குச் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. அப்போது சகோதரத்துறவிகளின்
வேண்டுகோளுக்கிணங்க வைத்திய நாதம் போன்ற இடங்களில் சில காலம் தங்கினார். நீண்ட பயணமாக
அவர் சென்ற முதல் இடம் வாரணாசி என்று அழைக்கப்படுகின்ற காசிப்பெரும் பதி. வருணை, அரிசி
என்ற இரு நதிகளுக்கு இடையே அமைந்துள்ள புண்ணியத் தலம் இது. உலகின் தலைவன் என்று பொருள்
படுகின்ற விசுவநாதர் என்ற பெயரில் சிவபெருமான் இங்கே எழுந்தருள்கிறார். உலகைக்காக்கும்
உமையன்னை அன்னபூரணி என்ற பெயரில் எழுந்தருளி உலகிற்கெல்லாம் உணவூட்டிக்காத்து வருகிறாள்.
மஹா ஸ்மசானம் அதாவது பெரும் சுடுகாடுஎன்று
இந்த இடம் அழைக்கப்படுகிறது. இங்கே இறப்பவர் களுக்கு எல்லாம் உயர்கதி கிடைப்பதாக சாஸ்திரங்கள்
கூறுகின்றன. இங்கே தங்கி தவத்திலும் ஆன்ம சாதனைகளிலும் ஈடுபடுவது மிகுந்த பலனைத் தரும். என்பது நம்பிக்கை.
சுவாமிஜியும் தமது பரிவிராஜக வாழ்க்கையை, அதாவது பயண வாழ்க்கையை இங்கிருந்து ஆரம்பித்தார்.
பிரேமானந்தர்,
ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச்சீடரான பக்கீர் பாபு ஆகியோருடன் காசிக்குச்சென்றார் சுவாமிஜி.
அங்கே சுமார் ஒரு வார காலம் தங்கியிருந்தார்.
புனித கங்கை, புத்தரும் சங்கரரும் போதித்த இடங்கள், எண்ணற்ற கோயில்கள் , இறைவன் புகழ்
பாடுவதும் ஜபதவங்களில் ஈடுபடுவதுமாக இருக்கின்ற
துறவியர் கூட்டம் எல்லாம் சுவாமிஜியைப் பரவசத்தில் ஆழ்த்தின.
எதிர்த்து
நில்!
காசியின்
அழகிய கோயில்களுள் ஒன்று துர்க்கா கோயில். ஒரு நாள் அங்கே சென்று தேவியைத் தரிசித்து
விட்டு. ஓர் ஒற்றையடிப் பாதை வழியாகத் திரும்பி
வந்து கொண்டிருந்தார் சுவாமிஜி. ஒரு பக்கம் பெரிய குளம். மறுபக்கம் உயர்ந்த மதிற்சுவர். அந்தப் பாதை வழியாக அவர் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று ஒரு குரங்குக்கூட்டம்
அவரை எதிர்த்தது. சுவாமிஜியின் வேகம் தடைபட்டது. அவர் முன்னேறத்தயங்கினார். அவர் பின்வாங்குவதைக்
கண்டதும் குரங்குகள் அவரை நோக்கி முன்னேறின. சுவாமிஜி திரும்பி ஓடத் தொடங்கினார். குரங்குகள்
விடாமல் துரத்தின. அவரது வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவையும் விரைந்து முன்னேறி அவர்
மீது விழுந்து கடிக்கத்தொடங்கின. இனி சமாளிக்க முடியாது என்று தளரும்
நிலைக்கு வந்து விட்டார். அப்போது வயதான துறவி ஒருவரின் குரல் கேட்டது. நில்,
எதிர்த்து நில், மிருகங்களை எதிர்கொள். இந்த வார்த்தைகளைக்கேட்டதும் சுவாமிஜியிடம்
ஒரு புத்துணர்ச்சி பரவியது. ஓடிக் கொண்டிருந்தவர் நின்றார். உறுதியாக நின்று குரங்குகளை
வெறித்துப்பார்த்தார். அவ்வளவு தான் , அவை பின்வாங்கத் தொடங்கின. சுவாமிஜி முன்னேறத்தொடங்கியதும்
அவை திரும்பி ஓடலாயின.
இந்த நிகழ்ச்சி
சுவாமிஜியின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. இயற்கை வேகங்களையும் , பிரச்சனைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றிற்கு ஒரு போதும்
பணிந்து விடக்கூடாது என்பதை சுவாமிஜி இந்த நிகழ்ச்சியிலிருந்து கற்றுக்கொண்டார். அவரது
பல சொற்பொழிவுகளில் இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் கற்றுக்கொண்ட படிப்பினையின் தாக்கம்
இருப்பதைக் காணலாம்.காசியில் வாழ்ந்த நாட்களில் பல துறவியரையும் அறிஞர்களையும் சுவாமிஜி
சந்தித்தார். அவர்களுள் முக்கியமானவர்கள் இருவர்.
ஒருவர் திரைலங்க சுவாமிகள் மற்றொருவர் பாஸ்கரானந்தர்.
பெரிய மகானாக
மதிக்கப்பட்டவர் திரைலங்க சுவாமிகள்.ஸ்ரீராமகிருஷ்ணர் 1868 ஜனவரியில் காசிக்குச்சென்றிருந்தபோது
அவரைக் கண்டு, இவரிடம் உண்மையான பரமஹம்சருக்குரிய அறிகுறிகள் அனைத்தும் காணப்படுகின்றன
என்று கூறியதுண்டு. மணி கர்ணிகை கட்டத்தில் வாழ்ந்த இவரை சுவாமிஜி சந்தித்தார். திரைலங்க
சுவாமிகள் எதுவும்பேசுவதில்லை, மௌனமாக இருக்கிறார். அதற்காக அவர் உபதேசம் எதுவும் செய்யவில்லை
என்றாகாது. அவரது மௌனமே ஓர் உபதேசம் தான்! என்று பின்னாளில் அவரைப் பற்றி கூறினார்
சுவாமிஜி.
No comments:
Post a Comment