சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-3
🌸
இயற்கையுடன்
இயைந்து
🌸
இயற்கையுணர்வு
அனுபவமும் நரேந்திரனுக்கு இளமையில் வாய்த்திருந்தது.சிறு வயதிலிருந்தே இயற்கையின் ஆராதகனாகத்
திகழ்ந்தான் அவன்.ஆறுகளும் மலைகளும் நதிகளும் குன்றுகளும் பறவைகளும் மிருகங்களும் அவன்
மனத்தில் என்றுமே நீங்காமல் இடம் பெற்றவை. இயற்கையுடன் இயைந்து வாழ்வதை அவன் பெரிதும்
விரும்பினான். நாமாக முயற்சி செய்து இயற்கையை ரசிப்பது ஒன்று. ஆனால் சிலவேளைகளில் இயல்பாகவே
இயற்கை நமக்கு அளிக்கும் பரிசு போல் தானாகக் கிடைக்கின்ற ஓர்அனுபவம் ஒன்று உண்டு. அதுவே இயற்கையுணர்வு அனுபவம்.இயற்கையின்
அழகைக்கண்டு வியந்து நிற்கின்ற நிகழ்ச்சி அல்ல, இயற்கையின் உணர்வில் ஒன்றி அந்த உணர்வில்
திளைக்கின்ற ஓர் அக உணர்வு நிலை அது.
🌸
திடீரென்று
வருகின்ற விழிப்புணர்வு அனுபவம் அது. ஓர் ஆழ்ந்த அமைதி, அனைத்தின் அடிப்படையும் ஒன்றாக ஒரே உணர்வுமயமாகத்தோன்றுகின்ற ஓர் அனுபவம்,
அதில் பிரபஞ்ச வாழ்க்கையின் புதிய திடீரென நம்முன் அவிழ்க்கப்படுகிறது. சலனங்கள் எதுவும்
இல்லாத, ஆழ்ந்த அமைதியின் அனுபவம் அது, அங்கே கடந்த காலமும் நிகழ்காலமும் கழன்றுவிடுகின்றன.
உணர்வு, நிகழ்காலத்தின் அந்தக் கணத்தில் நிலைபெற்று நிற்கிறது. இலைகளின் சலசலப்பு,
பறவைகளின் கீதம், தொலைதூரத்தில் அழுகின்ற குழந்தையின் குரல், வலை பின்னும் சிலந்தி,
சாரை சாரையாய் விரையும் எறும்புகள், அனைத்தும்
இந்தப் பிரபஞ்ச நாடகத்தின் ஓர் அங்கமாய்த் திகழ்வதை நாம் தனித்து நின்று ஒரு
பார்வையாளனாகக் காண்கின்ற அற்புத அனுபவம் இது, இந்த அனுபவம் பத்த, பதினைந்து நிமிடங்கள்
நீடிக்கலாம்.
🌸
கவிஞர்கள்,
தத்துவவாதிகள்., ஆன்மீக மேதைகள். பலர் இளம் வயதில் இத்தகைய அனுபவம் பெற்றுள்ளதைக் காண்கிறோம்.சொல்லப்போனால்
இத்தகைய அனுபவம் பெற்ற சிலரே படைப்பாற்றலுடன் செயல்படுகின்றனர்.
அவர்கள் எந்தத் துறையைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்தத்துறையில் அவர்களால் புதுமை
படைக்க முடிகிறது.வேர்ட்ஸ் வொர்த், ஷெல்லி, ரவீந்திரநாத் தாகூர்,ஜெஃப்ரீஸ்,வில்லியம்
பிளேக் போன்ற சிலர் இந்த இயற்கையுணர்வு அனுபவம் பெற்றவர்களே.வேர்ட்ஸ் வொர்த் தமது அனுபவத்தைப்
பின்வருமாறு கூறுகிறார்.
புல்வெளி
கிடந்தது, காடுகள் நின்றன,
நீரோடை பாய்ந்தது
பூமியின்
சாதாரணக்காட்சிகள் ஒவ்வொன்றும்
துல்லியமாய்த்
தெரிந்தன.
அனைத்தும்
எனக்கு ஏதோஅற்புத தேவ ஒளியின்
ஆடை புனைந்து
நின்றதாய்த்தோன்றிற்று.
கனவில் புதுமையை
மகிமையால் நிறைத்தது
அந்த அற்புதக்காட்சி!
இத்தகையோர்
அனுபவம் புத்தருக்கு வாய்த்ததாக அவரது வரலாறு கூறுகிறது.
🌸
அவர் அரசைத்துறந்து
காட்டிற்குச்சென்றபோது காட்டில் தாம் சந்தித்த
ஆச்சாரியரிடம் அவர் கேட்ட முதல் கேள்வி, ஐயா, சிறுவனாக இருக்கும்போது ஒரு மரத்தடியில்
நான் அனுபவித்த அந்த ஆனந்த அமைதி அனுபவத்தை மீண்டும் நான் பெறுவதற்பு உதவ முடியுமா?
என்பதாகும்.
🌸
இத்தகையோர்
அற்புத அனுபவம் நரேந்திரனுக்கும் ஏற்பட்டது. அது 1877. அப்போது நரேந்திரன் தற்போதைய
எட்டாம் வகுப்பிற்குச் சமமான அன்றைய மூன்றாம்
நிலையில் படித்துக்கொண்டிருந்தான். அப்போது அவனது தந்தை வேலை நிமித்தமாக மத்தியப்
பிரதேசத்திலுள்ள ராய் பூரில் சில காலம் தங்கவேண்டியதாயிற்று.தமது
குடும்பத்தையும் அங்கே அழைத்துக்கொள்ள நினைத்தார் அவர். அவர் முதலில் சென்றுவிட்டதால்
குடும்பத்தை நரேந்திரன் அழைத்துச்சென்றான்.
🌸
அந்த நாளில் நாக்பூருக்கு அப்பால் ரயில் கிடையாது.
எனவே அலகாபாத், ஜபல்பூர் வழியாகக் கட்டை வண்டிகளில் பதினைந்து நாட்களுக்கு மேல் பயணம்
செய்ய வேண்டும். வழி நெடுக எத்தனையோ வன வனாந்தரங்கள், ஜன சஞ்சாரமற்ற பாதைகள்! ஆங்காங்கே
கிராமங்கள், வயல்கள், நீர் நிலைகள், மாறிமாறி வரும் இயற்கைக்காட்சிகளையும், மக்களையும்
ரசித்துக்கொண்டே மாட்டு வண்டியில் சென்றான் நரேந்திரன்.
அன்று என்னவோ
வானமே கழுவி விடப்பட்டது.போல் பிரகாசித்துக்கொண்டிருந்தது. காற்றிலும் ஓர் அதிசயமான
தெளிவு இருந்தது.காற்றில் அசைந்து மெல்லொலி எழுப்பிய மரங்களின் இலைகளிலும் கொத்துக்கொத்தாகப்
பூத்திருந்த மலர்களிலும் என்றுமில்லாத ஒரு தூய்மையும் பசுமை ஒளியும் ததும்பின. அங்கே
கூவித்திரிந்த பறவையினங்கள் எழுப்பிய கீதத்தின் எதிரொலி அலைகள் நரேந்திரனின் உள்ளத்தில்
நிறைந்தன.
🌸
இத்தனை அழகுகளுக்கும்
எல்லைகட்டிவரையறை செய்தன. சாலையின் இரு புறத்தையும் நெருக்கி நின்ற விந்திய மலையின்
ஓங்கிய தொடர்கள்.புள்ளினங்கள் நூறுநூறு சப்த ஜாலங்கள், அவற்றின் இறகுகளில் நூறுநூறு
வண்ண ஜாலங்கள். மரங்களிலும் கொடிகளிலும் பூத்துக்குலுங்கிய புஷ்பங்களில் நூறுநூறு நிற
பேதங்கள். அவற்றைச்சுற்றி ஜிவ்வென்று ரீங்காரமிடும்தேனீக்களின் இசையில் நூறுநூறு ஸ்வர
பேதங்கள். பரம ரசிகனான நரேந்திரனும் ஒரு தேனீயாகி அந்த இயற்கை எழிலில் ஊறும் தேனைப்பருகி
கொண்டிருந்தான்.
🌸
ஆகா! அத்தனை
அழகுகளுக்கும் சிகரம் வைத்தது போல் அதோ அந்த
மலைச்சிகரங்களிடையே அதென்ன அற்புத க் காட்சி! ஒரே சிகரம் பிளந்து இரு சிகரங்களாக நிற்பது
போன்ற அந்த இடைவெளியில் எத்தனை பெரிய தேன்கூடு! ஆமாம், எத்தனை பெரியது! அவ்வளவு உயரத்தில்
இவ்வளவு பெரிய தேன் தேக்கத்தை எழுப்ப எத்தனைக்காலம் பிடித்திருக்கும்! இவ்வளவு பெரிய
கூட்டைக்கட்ட எத்தனை ஆயிரம், பதினாயிரம் தேனீக்கள் உழைத்திருக்கும்! இசைச்சுவையும்
இன்சுவையுமே வாழ்க்கையான அந்த உயிரினங்கள் அவ்வளவும் இசைந்து எழுப்பிய அற்புதம் அல்லவா,
அந்த மலைச்சிகரத்தில் தொங்கும் பிரம்மாண்டமான தேன்கூடு!
🌸
மேலே விரிந்து
பரந்த நீல ஆகாயம்! அவற்றை முட்டுவனபோல் நின்றன.அந்த நீலத்திலிருந்து பிரிக்க முடியாத
நீலமயமான மலைமுகடுகள்! மலை முகட்டில் சின்னஞ்சிறிய ஜீவராசிகளின் மகோன்னதமான ஒத்துழைப்பு
நிறுவிய தனிப்பெரும் அழகான இந்தத்தேன்கூடு! இந்த விரிந்து பரந்த ஆகாயம் எங்கிருந்து
வந்தது? அதன் அழகு எங்கிருந்து வந்தது? இந்த உன்னதமான மலைத்தொடர்கள் எங்கிருந்து வந்தன?
அவற்றின் அழகு எங்கிருந்து வந்தது? லட்சோப வட்சமான அந்தச் சின்னஞ் சிறு தேனீக்கள் எங்கிருந்து வந்தன?
🌸
எங்கிருந்து, எங்கேயிருந்து?
நரேந்திரனின்
சிந்தனை சுழன்றது.
எங்கிருந்து
இந்த அழகுமயமான பெருமைகள் உதித்தனவோ அங்கேயே
ஆழ்ந்து அமிழ்ந்து விட்டான் நரேந்திரன்.
மலரின் மென்மையும்
மணமும் இனிமையும், மரங்களின் பசுமையும், கொடிகளின் நளினமும், வண்டினங்களின் அன்பான
உழைப்பும், பறவைகளின் தேன் ஒலியும், மலைகளின் மௌனமும், வானத்தின் கம்பீரமும் எந்த ஒரு
மகாமதியின் கற்பனையில் உதித்தனவோ அந்த மகாமதியிலேயே மூழ்கிவிட்டான் நரேந்திரன்.
புறவுணர்வை
இழந்தான்!
🌸
புறவுணர்வை
இழந்த அந்த நிலையில் நரேந்திரன் எவ்வளவு நேரம் கட்டைவண்டியில் கிடந்தான் என்று சொல்ல
முடியாது. ஆனால் வாசனைக்குளிர் நீரில் நீராடி விட்டுத்திரும்பும் போது உடலில் புதுப்பொலிவு
காண்பதுபோல, அழகுப்புனலில் குளித்து உள்ளத்தில் புதுப்பொலிவுடன் நரேந்திரன் கண்விழித்தபோது
கட்டைவண்டி ஆடிஅசைந்து பல மைல்கள் கடந்து விட்டிருந்தது.
ராய்ப்பூரில்
🌸
அந்த நாட்களில்
ராய்ப்பூரில் பள்ளியோ கல்லூரியோ கிடையாது. நரேந்திரன் வீட்டிலேயே இருக்கநேர்ந்தது.இந்த நாட்களில் தந்தையுடன்
நெருங்கிப்பழகினான் அவன். தந்தையும் சிந்தனையைத் தூண்டும் பல விஷயங்களை அவனுக்கு விளக்குவார்.
அவனுடன் வாதிடுவார். அவனது ஆழ்ந்த அறிவும் வாதிடும் திறனும் வளர்ந்தது.
விசுவநாதரைச்
சந்திப்பதற்கு அறிஞர்கள் பலர் அவரது வீட்டிற்கு வருவார்கள். அவர்களுக்கிடையில் நடக்கம்
உரையாடல்களில் நரேந்திரன் கலந்து கொண்டு தன் கருத்தையும் கூறுவான். அவனது ஆழ்ந்த அறிவைக்கண்டு
அனைவரும் தங்களுக்குச் சமமான ஒருவனாக அவனைக்கருதினர். இது விசுவநாதருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக்
கொடுத்தது. ஒருமுறை விசுவநாதரின் நண்பரான வங்க மொழிப் பண்டிதர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார்.
🌸
நரேந்திரன்
அவருடன் உரையாடியபோது வங்காள இலக்கியங்களிலிருந்து பல பகுதிகளைக் கூறினான். அதைக்கேட்டு
வியந்த அந்தப்பண்டிதர், குழந்தாய், நீ ஒரு பெரிய பண்டிதனாவாய்” என்று ஆசீர்வதித்தார்.
தன்மான உணர்ச்சி
மிக்கவன் நரேந்திரன், சிறுவனாக இருந்தாலும் தனது மதிநுட்பத்தை மற்றவர்கள் அங்கீகரிக்க
வேண்டும் என்று அவன் விரும்பினான். எப்போதாவது
அந்த அங்கீகாரம் கிடைக்காவிடில் ஆத்திரம் கொள்வான். தன்னை எதிர்த்தவர்கள் தன்னிடம் வருத்தம் தெரிவிக்காத வரை அமைதி அடைய மாட்டான்.
தந்தையின் நண்பர்கள்கூட இதற்கு விதி விலக்கல்ல. விசுவநாதரால் அவனது இந்த நடத்தையைப்
பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் அவனிடம் அந்தப்போக்கு தவறு என்பதை
எடுத்துக்கூறுவார்.ஆனாலும் அவனது துடிப்பையும் தன்மானத்தையும் கண்டு அவர் மனத்திற்குள்
பூரிக்காமலும் இல்லை.
🌸
ராய்ப்பூரில்
நரேந்திரன் இந்தியாவின் பழம்பெரும் விளையாட்டான
சதுரங்கத்தைக் கற்றுக்கொண்டான். சதுரங்கப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும்
பெற்றான். ராய்ப்பூரில் தனது தந்தையிடமிருந்து சமையல் கலையையும் பாரம்பரிய சங்கீதத்தையும்
கற்றுக்கொண்டான்.
🌸
மீண்டும்
பள்ளியில்
🌸
இரண்டு வருடங்களுக்குப்பிறகு
1879-இல் விசுவநாதர் கல்கத்தா திரும்பினார். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நரேந்திரனை
மீண்டும் பள்ளியில் சேர்ப்பது பிரச்சனை ஆயிற்று. ஆனால் நரேந்திரனைப் பற்றி அவனது ஆசிரியர்களுக்குத்
தெரியும். ஆகவே அவனைப்பள்ளியில் சேரவும், அதே ஆண்டில் நுழைவுத்தேர்வு எழுதவும் அனுமதித்தனர்.
மூன்று வருடப் பாடங்களையும் ஒரே வருடத்தில் படித்து நரேந்திரன் நுழைவுத்தேர்வில் முதல்
வகுப்பில் வெற்றி பெற்றான். அவனைத் தவிர அந்தப் பள்ளியில் யாரும் முதல் வகுப்பில் வெற்றி
பெறவில்லை. அதற்காக விசுவநாதர் அவனுக்குக் கைக் கடிகாரம் ஒன்றைப் பரிசாக அளித்தார்.
🌸
நரேந்திரன்
மெட்ரோபாலிடன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது
மாணவர்களுக்குப் பரிசு வழங்குவதற்காகவும் ஓய்வு பெறும் ஆசிரியர் ஒருவரைக் கௌரவிப்பதற்காகவும்
ஒரு விழா நடந்தது. தேசியத் தலைவராக சுரேந்திரநாத் பானர்ஜி அந்த விழாவிற்குத் தலைமை
தாங்கினார். அவர் மிகச்சிறந்த பேச்சாளர். அவருக்கு முன்னால் பேசுவதற்கு மற்ற மாணவர்கள்
தயங்கினர். எனவே நரேந்திரனைப்பேசுமாறு கேட்டுக்கொண்டனர். அவனும் சம்மதித்தான். ஓய்வு பெறும் ஆசிரியரைப் பாராட்டியும்,
அவர் ஓய்வு பெறுவதால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தைத் தெரிவித்தும் சுமார் அரைமணிநேரம் அருமையாகப்பேசினான். சுரேந்திரநாத்
பானர்ஜி அவனை மிகவும் பாராட்டினார்.
🌸
இந்த நாட்களில்
நரேந்திரன் ஆங்கிலத்திலும் வங்காள மொழியிலும் சிறந்த இலக்கியங்களைக் கற்றான். உயர்
கணிதம், சம்ஸ்கிருதம், நமது நாட்டின் வரலாறு ஆகியவற்றையும் ஆழ்ந்து படித்தான். தேர்விற்குச்
சில நாட்கள் முன்புதான் பள்ளிப் பாடங்களைப் படித்தான். நுழைவுத்தேர்விற்கு இரண்டு மூன்று
நாட்களுக்கு முன்னால் தான் ஜியோமிதியைப் படிக்கவே ஆரம்பித்தான். இரவு பகலாக அமர்ந்து
நான்கு நூல்களைக் கற்றுத்தேர்ந்தும் விட்டான்.
🌸
கல்லூரி
🌸
1880 ஜனவரியில்
தமது பதினேழாம் வயதில் நரேந்திரர் பிரசிடென்சி கல்லூரியில் முதற்கலை பிரிவில் சேர்ந்தார்.
வாலிபம் அவரிடம் துளிர் விடத் தொடங்கியிருந்தது. அழகிய முகம், பரந்த விழிகள், கட்டான
உடம்பு என்று யாரையும் ஒரு கணம் நின்றுபார்க்க ச்செய்யும் வாலிபராகத் திகழ்ந்தார் அவர்.
ஆசிரியர்கள் பெரும் பாலானோரும் ஐரோப்பியர்கள். எனவே மாணவர்கள் ஐரோப்பிய உடையிலோ, சப்கான்
அணிந்தோ தான் செல்லவேண்டும். நரேந்திரர் சப்கான் அணிவதையே விரும்பினார்.
🌸
சுவிட்சர்லாந்து
கைக்கடிகாரம் ஒன்றையும் அணிந்திருந்தார்.
முதலாம் வருடம் தொடர்ந்து கல்லூரி சென்றார் நரேந்திரர்.
ஆனால் இரண்டாம் வருடம் மலேரியா கண்டதால் பல நாட்கள் வீட்டில் ஓய்வும் சிகிச்சையும்
பெற வேண்டியதாயிற்று. குறித்த நாட்களைவிட அதிகமாக விடுப்பு எடுத்ததால் அந்தஆண்டு அவர்
அங்கே தேர்வு எழுத முடியாமல் போயிற்று. ஆனால் ஸ்காட்டிஷ் ஜெனரல் மிஷனரி போர்ட் கல்லூரி
அவரை ஏற்றுக்கொண்டு தேர்வு எழுத அனுமதித்தது.
தீவிரப்படிப்பு, தியானம். போன்றவற்றின் காரணமாக அவரது
உடல்நலம் சீர்குலைந்தது.எனவே எஃப்.ஏ தேர்வுக்குச் சில மாதங்கள் முன்பு கயை சென்று,
அங்கே ஓய்வெடுத்தார். உடல்நிலை தேறியபின் திரும்பிவந்து பரிட்சை எழுதினார். 1881-இல்
எஃப் .ஏ.தேர்வில் இரண்டாம் வகுப்பில் தேறினார். அதே கல்லூரியில் 1884-ஈல் பி.ஏ தேறினார்.
🌸
ஆங்கிலம்,
வரலாறு, கணக்கு, நியாயம், மன இயல், தத்துவம் போன்றவை அவரது பாடங்களாக இருந்தன. நியாயத்திலும்,
தத்துவத்திலும், உயர் கணிதத்திலும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். இலக்கியத்திலும்
அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஆங்கிலத்தில் நல்லதேர்ச்சி பெறுவதற்காக அவர் தீவிர
முயற்சிகள் எடுத்துக்கொண்டார். குறிப்பாக ஆங்கிலத்திில் பேசுவதற்கும் வாதங்கள் செய்வதற்கும்
நல்ல பயிற்சி மேற்கொண்டார். ஆங்கிலச்சொற்பொழிவில் அவர் கல்லூரி மாணவர்களிடையே தலைவராக
விளங்கினார்.
🌸
பி.ஏ மூன்றாம்
ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது, அதே கல்லூரியில் சட்டத்துறையிலும் நரேந்திரரைச்சேர்த்தார்
விசுவநாதர். கூடவே நிமாய்சரண்போஸ் என்ற பிரபல வழக்கறிஞரிடம் உதவியாளராகவும் ஆக்கினார்.
எதிர்காலத்தில் தம்மைப்பொல் சிறந்த வழக்கறிஞராக நரேந்திரன் வரவேண்டும் என்பது அவரது
ஆவலாக இருந்தது. தந்தையுடன் உயர்நீதி மன்றத்திற்குச் சென்றுவர ஆரம்பித்தார் நரேந்திரர்.அவரை
மேற்படிப்பிற்காக இங்கிலாந்திற்கு அனுப்பவும் நினைத்தார் விசுவநாதர்.
🌸
இந்த நாட்களில்
நரேந்திரரின் திருமணப்பேச்சுகள் தொடங்கின. சிலர் அதிகமாக வரதட்சிணை தர முன் வந்தனர்.
சிலர், நரேந்திரரின் மேற்படிப்பிற்கு இங்கிலாந்திற்குத்தேவையான
பொருட்செலவை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினர். ஆனால் எதற்கும் கட்டுப்பட விரும்பாத நரேந்திரர்
திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை.
அறிவுத்தாகம்
🌸
நரேந்திரரின்
படிப்பு பற்றி அறிந்து கொண்டால் அவரது அறிவுத்தாகத்தின் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.
அவர் எஃப் .ஏ படிக்கும்போது, பி.ஏக்கான பாடங்களைப் படித்து முடித்திருந்தார். பி.ஏ
படிக்கும் போது அதற்கும் மேலான நூல்களைப் படித்து முடித்தார். உதாரணமாக எஃப் ஏ. படிக்கும்
போது elphinstone எழுதிய hi;story of india. Marashman எழுதிய
History of Bengal போன்ற நூல்கள், நியாயத்தில் JEVONS எழுதிய Elementary lessons on Logic போன்ற உயர்நிலை
நூல்கள்,Whately மற்றும் Mill எழுதிய நூல்கள்
போன்றவற்றைப் படித்தார். இவை எல்லாம் பி.ஏக்கு உரியதும் அதைவிட உயர்நிலைப் பாடங்களும்
ஆகும்.பி.ஏ படிக்கும் போது Green எழுதிய
History of England,Allison Philips எழுதிய
history of Europe, Gibbon எழுதிய Decline and Fall of the Roman Empire போன்ற நூல்களைப்
படித்து முடித்தார். இதில் கடைசி நூல் நான்கு பகுதிகளை உடையது. இந்த நான்கு பகுதிகளையும்
மூன்றே நாளில் படித்து முடித்தார் அவர்.
🌸
பின்னாளில்
கூட இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஒரு வரிகூட மாறாமல் அவரால் ஒப்பிக்க முடிந்திருந்தது.
என்று அவரது சகோதரரான மகேந்திர நாத் கூறியுள்ளார். இந்த நூல் அவருக்குப் பிடித்த நூல்களுள் ஒன்றாக இருந்தது.
இவை தவிர
பிரெஞ்சுப் புரட்சி பற்றியும் விரிவாகப் படித்தார். வாழ்நாள் முழுவதும் அவரைக் கவர்ந்த தலைவராகத் திகழ்ந்தார் நெப்போலியன்.அவரது
தளபதியான நேயும் நரேந்திரரை மிகவும் கவர்ந்திருந்தார். நே எப்படி நெப்போலியனின் கட்டளைகளுக்கு
எதிர்ச்சொல் கூறாமல் பணிந்தாரோ அத்தகைய பணிவு, உயர்ந்த லட்சியங்களுக்காகப் பாடுபடுபவர்களுக்குத்தேவை
என்று பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கூறுவதுண்டு.
🌸
தத்துவ நூல்கள்
🌸
நரேந்திரர்
தமது கல்லூரி நாட்களில் மேலை த் தத்துவங்களையும், ஆழ்ந்து கற்றார். டெகார்டே, ஹ்யூம்,கான்ட்,
ஃபிஷ்டே. ஸ்பினோஸா,ஹகல், ஷோபனேர், காம்டே, டார்வின், ஹெர்பர்ட் ஸ்பென்சர் ஆகியோரின்
நூல்களைப் படித்தார். ஆனால் இந்த நூல்களை அவர் நேரடியாகக் கற்றிருக்க வாய்ப்பில்லை
என்று அவரது வாழ்க்கை வலாற்று ஆசிரியர்களுள் ஒருவரான ரோமா ரோலா கருதுகிறார். ஆயினும்
அவர்களின் கருத்துக்களை நரேந்திரர் தெளிவாகப்புரிந்து கொண்டிருந்தார் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
🌸
மேலைத் தத்துவ அறிஞர்களில் ஹெர்பட் ஸ்பென்சரின் கருத்துக்கள்
நரேந்திரருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஸ்பென்சரின் ஓர் ஆராதகராகவே நரேந்திரர் விளங்கினார்.
என்றால் அது மிகையாகாது. அவரது கருத்துக்களால் கவரப்பட்ட நரெந்திரர் அவரது கல்வி என்ற
நூலை மொழிபெயர்க்க விரும்பினார். அதற்காக அனுமதி கோரி ஸ்பென்சருக்குக் கடிதம் எழுதினார்.
அதற்கு மனப்பூர்வமாக அனுமதி அளித்த ஸ்பென்சர் இளம் வயதில் நரேந்திரர் கொண்டிருந்த தத்துவச்
சிந்தனைகளை மிகவும் பாராட்டினார். நரேந்திரர் ஸ்பென்சரின் நூலைச் சற்று சுருக்கி மொழிபெயர்த்தார்.
அது ”சிஷா” என்ற பெயரில் வங்க மொழியில் வெளிவந்தது. பின்னாளில் உபநிஷதங்கள் மற்றும்
வேதாந்தத்திலுள்ள கடினமான கருத்துக்களை விளக்கும்போது ஸ்பென்சரின் தர்க்க முறையை அவர்
பெரிதும் பயன்படுத்தியுள்ளதைக் காண முடியும்.
🌸
இவர்களைத்
தவிர ஹேமில்டன், மில், லாக்கே, ப்ளேட்டோ ஆகியோரின் தத்துவங்களையும் விரும்பி ப் படித்தார்.
ஹேமில்டன் தமது தத்துவ நூலின் இறுதியில் ”மனித அறிவு இறைவனுடைய இருப்பைப் பற்றிச்சுற்றிக்
காட்ட மட்டுமே வல்லது, அதன் வேலை அத்துடன்முடிந்து விடுகிறது. இறைவனின் இயல்பை விளக்கிக்
காட்டும் ஆற்றல்அதற்கு இல்லை. ஆகையால் இங்கு தத்துவங்கள் முற்றுப்பெறுகின்றன. எங்கு
தத்துவங்கள் முற்றுப் பெறுகின்றனவோ அங்கு ஆன்மீகம் தொடங்குகிறது. என்று கூறுகிறார்.ஹேமில்டனின்
கடைசி வரிகள் நரேந்திரருக்கு மிகவும் பிடித்தவை.பேச்சில் இடையே அவர் இதனை மேற்கோள்
காட்டுவதுண்டு. தியானத்தில் ஆழ்ந்து ஈடுபட்ட போதிலும் அவர் படிப்பை விடவில்லை. படிப்பு,
தியானம், இசை ஆகியவற்றில் அதிக நேரத்தைச்செலவிட்டார்.
🌸
இலக்கியம்
🌸
இலக்கியத்திலும்
தீவிரமான ஆர்வம் காட்டினார். நரேந்திரர்.சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலுள்ள
காவியங்களைப் படித்தார். வங்கமொழியிலள்ள ராமாயணமும் மகாபாரதமும் அவருக்கு அத்துப்படியாக
இருந்தன. பல நேரங்களில் பண்டிதர்கள் திணறும்போது நரேந்திரர் அவர்களுக்கு அடியெடுத்துக்கொடுத்துள்ளார்.
🌸
ஆங்கிலத்தில்
ஷேக்ஸ்பியர் , மில்டன், பைரன், வேர்ட்ஸ்வொர்த். ஆகியோரை அவர் விரும்பிப்படித்தார்.
ஷேக்ஸ்பியரின் Romeo and juliet,Midsummer Night Dream போன்ற நாடகங்களிலிருந்து அவர்
பின்னாளில் சொற்பொழிவுகளில் பல மேற்கோள்களைக் காட்டியுள்ளார்.மில்டனின் paradise
lost அவரை மிகவும் கவர்ந்த ஒரு காவியம். ஒரே
ஒரு பாவம் தான் உண்டு. அதுவே பலவீனம். நான் சிறுவனாயிருந்த போது மில்டன் எழுதிய ”இழந்த
சொர்க்கம்” என்ற கவிதையைப் படித்தேன். அதில் எனக்கு மதிப்பு ஏற்பட்ட
ஒரே நல்லவன் சாத்தானே. பலவீனமின்றி எல்லாவற்றையும் எதிர்கொண்டு சாவதற்கும் ஆயத்தமாக இருப்பவன் மட்டுமே மகான். என்று பின்னாளில்
அவர் தமது கீதைச் சொற்பொழிவில் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.
🌸
நரேந்திரரின்
நாட்களில் வங்கமொழி இலக்கியங்கள் அவ்வளவு அதிகமாக இல்லை. இருந்த அனைத்தையும் அவர் படித்தார்.
பரத் சந்திரர் எழுதிய ” அன்னதா மங்கல்“ வித்யா சுந்தர்” போன்ற நூல்களிலிருந்து அவர் மேற்கோள் காட்டியுள்ளார். பங்கிம்
சந்திரர் மற்றும் தீனபந்து மித்ரரின் அனைத்து
நூல்களையும் ஈசுவர சந்திர குப்தரின் கவிதைகளையும் கற்றிருந்தார். மைக்கேல் மதுசூதனரின்
”மேகநாத வதம்” அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் ”ராவணன் ” பாத்திரம்
படைக்கப்பட்டிருந்த விதத்தைப் பின்னாளில் அவர் பாராட்டிக்குறிப்பிட்டதுண்டு.
இத்தனை நூல்களை
ஒருவர் கற்றிருக்க முடியுமா என்று ஒரு வேளை சந்தேகம் எழலாம். ஆனால் நரேந்திரர் படிக்கும்
விதமே அலாதியானது. என்பதை நாம் மறக்கக்கூடாது.
🌸
தாம் படிக்கும் விதத்தை அவரே இப்படிக்கூறுவார்.ஒவ்வொரு
வரியையும் படிக்காமல் பத்தியின் முதல் மற்றும் கடைசி வரிகளைப் படிப்பதன் மூலமே மொத்தக்கருத்தையும்
என்னால் அறிந்துக்கொள்ள முடிந்தது. இந்தத் திறமை வளர்ந்த உடன் பத்திகளைப் படிப்பதும்
தேவையற்றதாகிவிட்டது. பக்கத்தின் முதல் மற்றும் கடைசி வரியைப் படிப்பதன் மூலமே என்னால் மொத்தக்கருத்தையும் புரிந்து
கொள்ள முடிந்தது. ஆசிரியர் ஏதாவது புதிய கருத்தினை அறிமுகம் செய்யும் போது அதை நாலைந்து
பக்கங்களில் விவரிப்பார். அதிலும் முதல் சில வரிகளைப் படித்த உடனேயே என்னால் அனைத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது.
இப்படிப் படித்தால் தான் அவரால் அத்தனை நூல்களைப் படிக்க முடிந்தது.
🌸
இசை
🌸
இசையில்
நரேந்திரர் ஆழ்ந்து மூழ்கினார். ஆழ்ந்த உணர்வு, இனிய குரல், அதற்கு மெருகேற்றும் சங்கீத
ஞானம் எல்லாம் இயல்பாகவே அவரிடம் இருந்தன. அதனுடன் தந்தை தந்த ஊக்கமும் சேர்ந்து அவரை
ஓர் இசைக்கலைஞராக ஆக்கியிருந்தார். வேணி மாதவ் அதிகாரி, உஸ்தாத் அஹமத் கான், அவரது சீடர்கள் ஆகியோரிடமிருந்து அவர் சங்கீதம்
கற்றார். பிரபல துருபத் பாடகரான ஜ்வாலா பிரசாதிடமிருந்து துருபத் சங்கீதம் பயின்றார்.
காசி நாத், கோஷாலிடமிருந்து பாயா, தபேலா, பக்வாஜ் ஆகிய இசைக் கருவிகளை வாசிக்கக்கற்றார்.
துருபத் சங்கீதத்தில் அவர் பெரிய மேதையாகவே
இருந்தார். இவை தவிர கீர்த்தனை, பஜனை, சியாமா சங்கீதம், ராம பிரசாதரின் பாடல்கள்,
ஆகமணி பாடல்கள், போன்ற வங்க மொழி இசைப்பிரிவுகளிலும் விற்பன்னராக விளங்கினார். இசை
மிக உயர்ந்த கலை. அதைப் புரிந்து கொண்டவர்களுக்கு அது மிக உயர்ந்த வழிபாடு என்று பின்னாளில்
எழுதினார் அவர்.
🌸
ஒரு முறை
நரேந்திரரின் நண்பன் ஒருவன் தேர்ச்சி பெற்ற பாடகனைப்போல் பாடினான். அதற்கு நரேந்திரர்.
ராகமும், தாளமும், மட்டுமே இசையாகிவிடாது. ஒரு கருத்தை அது வெளிப்படுத்த வேண்டும்.
வெறுமனே இழுத்தும் நீட்டியும் பாடப்படும் பாட்டை யாராலும் ரசிக்க முடியாது. பாட்டின்
அடிப்படைக்கருத்து பாடுபவனின் உணர்ச்சிகளைத்தூண்ட வேண்டும். சொற்கள் நன்றாக உச்சரிக்கப்பட
வேண்டும். ராகமும் தாளமும் பொருந்தவேண்டும். பாடுபவனின் உணர்வுகளைத்தூண்டாத இசை இசையே
அல்ல” என்று கூறினார்.
🌸
இசை என்பது
அவரது இயல்பிலேயே, இதயத்திலேயே ரத்த நாளங்களிலேயே கலந்து விட்ட ஒன்றாக இருந்தது. நல்ல
குரல் வளமும் இசை ஞானமும் நிறைந்த அவர் பாடும் போது கேட்போர் மெய்மறந்து போவார்கள்.
இசையில்
மட்டுமல்ல, இசையியலிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார் நரேந்திரர்.1887-ஆம் ஆண்டு
ஸ்ரீசண்டி சரண் பஸக் என்பவர், ”சங்கீத கல்பதரு“ என்ற நூலை வெளியிட்டார். இந்த
நூலின் பல பகுதிகளைத்தொகுத்தவர் நரேந்திரரே. அந்த நூலின் அறிமுக உரையில் சங்கீதத்தின்
பல அம்சங்களையும் இசைக்கருவியின் தத்துவங்களையும் விரிவாகவும் ஆழமாகவும் நரேந்திரர்
விவரித்திருந்தார். அந்த நூலின் ஒரு பகுதியான’ஸ்ங்கீத ஸங்க்ரஹம்” என்னும்
அத்தியாயம். இந்தியாவின் பல மொழிகளிலிருந்து தொகுக்கப்பட்ட பக்தி பாடல்களைக்கொண்டிருந்தது.
பிற்சேர்க்கையில் அந்தப் பாடல்களை எழுதியவர்களின் வாழ்க்கைச் சரிதம் கொடுக்கப் பட்டிருந்தது.
இந்தப் பகுதியையும் நரேந்திரரே எழுதினார்.
🌸
பொருள் பொதிந்த
பாடல்களைச் சந்த நயத்துடன் இயற்றுவதிலும் நரேந்திரர் தேர்ச்சி பெற்றிருந்தார். நாட்டியத்திலும்
சிறந்தவராக இருந்தார். அழகிய உறுதியான உடலும், அகன்று விரிந்த கண்களும், அதற்கு ஏற்ற
மனமும், எல்லாவற்றையும் மிஞ்சுகின்ற கற்பனை வளமும் அவரது நாட்டியத்திற்கு மெருகூட்டின.
பாடல்களைப் பாடிக்கொண்டே ஆடுவார். அது காண்பவர்களுக்க அரிய விருந்தாக இருக்கும்.
மேதை
🌸
புற அலங்காரங்கள்
எதையும் அவர் விரும்பவில்லை. முடியை அலங்காரமாக வாரிக்கொள்வது, பலரைக் கவரும் வண்ணம்
உடையணிவது போன்றவற்றை அவர் வெறுத்தார்.
தத்துவம்,
இலக்கியம், இசை ஆகியவை நரேந்திரர் சாதனை படைத்த சில துறைகள் மட்டுமே. இவற்றை நாம் விரிவாகக்கண்டது
அவரது மேதை-பரிமாணத்தை ஓரளவிற்கேனும் புரிந்து கொள்வதற்காகவே, ஓர் இளைஞனால் இவை எல்லாம்
சாத்தியமா என்றால் சாத்தியம் என்பது தான் நரேந்திரரின் வாழ்க்கை நமக்கு அளிக்கும் விடை,
இவற்றை அவர் சாதித்தார்.
🌸
கல்லூரிப்
பாடங்கள் என்ற எல்லையைக் கடந்து இத்தனை துறைகளில் தமது திறமையை வெளிக்காட்டியதாலோ என்னவோ
கல்லூரிப் பாடங்களில்அவரது மதிப்பெண்கள் அவ்வளவு அதிகமாக இல்லை. அவர் பெற்ற மதிப்பெண்களைச்சற்று
பார்ப்போம்.
🌸
நுழைவு வகுப்பு
(Entrance-1879), ஆங்கிலம்-47, வங்காளம்-76, வரலாறு-45, கணிதம்-38, மொத்தம் 206( முதல்
நிலை)
முதல் கலை(F.A.1881)
ஆங்கிலம் 46, வங்காளம் 36, வரலாறு 56, கணிதம் 40, நியாயம் ஐம்பதிற்கு பதினேழு, மன இயல்
ஐம்பதிற்கு முப்பத்திநான்கு, மொத்தம் 229(இரண்டாம் நிலை)
இளகலை(B.A
1884) –ஆங்கிலம் 56, கணிதம் 61, வங்காளம் 43, வரலாறு 56, மொத்தம் 261( இரண்டாம் நிலை)
🌸
நரேந்திரரைப்போன்ற
கூரிய அறிவு படைத்த ஒருவர், இப்படி இரண்டாம் நிலை மதிப்பெண்கள் எடுப்பார் என்பது ஆச்சரியமாக
உள்ளது. அவர் தமது கல்லூரிப்பாடங்களுக்கு மிகக்குறைந்தநேரமே ஒதுக்கினார். அவை அவரது
அறிவு தாகத்திற்குப் போதுமானவையாக இல்லை. எனவே
அவற்றைப் பயில்வதை அவர் ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. தேர்வுக்கு ஓரிரு மாதங்கள்
முன்புவரை அவர் பாடங்கள் எதையும் படிப்பதில்லை. அதன் பிறகு இரவுபகலாகப் பாடங்களைில்
மூழ்கியிருப்பார். தேர்வு எழுதுவார்.தேறிவிடுவார்.
🌸
பி.ஏ. பரிட்சைக்கு
ஒரு மாதம் முன்புவரை தமது பாடங்களில் ஒன்றான, க்ரீன் எழுதிய ஆங்கிலேயர்களின் வரலாறு
என்ற நூலை அவர் படிக்கவே இல்லை என்பது மட்டுமல்ல, நூலை வாங்கக்கூட இல்லை. அதன் பிறகு
வாங்கினார். இதைப் படித்து முடிக்காமல் அறையை விட்டு வெளியே வருவதில்லை. என்று ஒரு
சங்கல்பம் செய்து கொண்டார். மூன்று நாட்களில் படித்து முடித்தார். இப்படித் தீவிரமாகப்
படிக்கும்போது இரவில் காப்பி, டீ போன்றவற்றை அருகில் வைத்துக்கொள்வார். ஒரு வேளை தூங்க
நேர்ந்தால், காலை அசைக்கும் போது எழுந்து கொள்வதற்காகக் காலில் கயிறு ஒன்றையும் கட்டிக்கொள்வார்.
🌸
தேர்வில்
தேறுவதற்கு எவ்வளவு படிக்கவேண்டுமோ. அவ்வளவு தான் படிப்பார். அதன் பிறகு நேரம் இருந்தாலும்
பாடங்களைப் படிக்க மாட்டார். பி.ஏ. தேர்வு
நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள் அதிகாலையில் எழுந்து தமது நண்பர்களின் வீட்டிற்குச்சென்றார்.
அவர்கள் இன்னும் படுக்கையில் இருந்தனர். எனவே வெளியில் நின்று ரவீந்திரநாத் தாகூரின்
பாடல் ஒன்றை உரக்கப் பாடினார்.
மலைகளே , முகில்களே, மலயமாருதங்களே!
மூலப்பொருள்
மகிமை பாடி மகிழுங்கள்!
சூரியர்களே,
சந்திரர்களே, சுடர்வீசும் தாரகைகளே!
சத்தியப்
பொருள் பெருமை பாடி மகிழுங்கள்!
பாடி மகிழுங்கள்,
மகிழ்ந்துணர்ந்து பாடுங்கள்!
அப்படி அவர்களை
எழுப்பி, அவர்கள் மறுத்தும் கேட்காமல் ஒன்பது மணிவரை பாடியும் பேசியும் காலம் போக்கினார்.
இப்படி தேர்வை ஒரு பொருட்டாக எண்ணாத நரேந்திரர் பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பது
ஆச்சரியத்திற்குரியது அல்ல!
🌸
வாலிபர்
🌸
நரேந்திரர்
படிப்பிலும், இசையிலும், தத்துவத்திலும் பெரிய
மேதையாகத் திகழ்ந்தார் என்பதற்காக அவர் எப்போதும்
ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார் என்பது பொருள் அல்ல. அவர் இருக்கம் இடத்தில் வேடிக்கையும்
வினோதமும் களிப்பும் கும்மாளமும் குடிகொண்டிருக்கும். இதற்காகவே அவரது நண்பர்கள் அவரை
நேசித்தனர். கல்கத்தா அன்றைய இந்தியாவின் தலைநகரம். ஒரு பெரிய நகரத்தில் வாழ்கின்ற
ஒரு பணக்கார வாலிபனின் வாழ்க்கை பொதுவாக எப்படி இருக்குமோ அப்படியே நரேந்திரரின் வாழ்க்கையும்
இருந்தது. அவரது ஆர்வமும் துடிப்பும் அவருக்குப்பல நண்பர்களைச் சம்பாதித்துத் தந்தன.
அவர்கள் இவருடன் இருப்பதை மிகவும் விரும்பினர்.
🌸
ஞாயிறோ விடுமுறை
நாட்களோ வந்தால் எல்லோரும் கங்கையில் தான் .குளிப்பதும், கும்மாளமுமாக மணிக்கணக்காக
நேரம் கழியும், சிலவேளைகளில் வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, அத்தனை பேரும் தங்களை
அதில் திணித்துக்கொண்டு உரத்த குரலில் பாடி ஆடி கும்மாளமிட்டபடி கல்கத்தா தெருக்களை
வலம் வருவார்கள்.நரேந்திரரின் நண்பர்களில் சிலரது ஒழுக்கம் பற்றி அவ்வளவு நல்ல அபிப்பிராயம்
கிடையாது. அத்தகைய நண்பர்களுடன் பழகுவது வீட்டிலும் வெளியிலும் பலருக்குப் பிடிக்கவில்லை.ஆனால்
நரேந்திரர் அது பற்றி கவலைப்படவில்லை. அவர் பிறரது வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தும்
நிலையில் இருந்தாரே தவிர, பிறரது வாழ்க்கை தம்மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அவர்
இல்லை.
🌸
நண்பனுக்கு
உதவி
🌸
ஜெனரல் மிஷனரி கல்லூரி ஏழை மாணவர்களுக்குத்தேர்வு
க் கட்டணத்தையும், கல்விக் கட்டணத்தையும் தள்ளுபடி செய்வது வழக்கம். அதற்கு, மாணவனின்
ஏழ்மை நிலை நிரூபிக்கப் பட வேண்டும். நரேந்திரரின் நண்பன் ஹரிதாஸ் சட்டோ பாத்தியாயர்
ஏழை, அவனால் தேர்வுக் கட்டணத்தையும் கல்விக்கட்டணத்தையும் செலுத்த இயலவில்லை. கல்லூரி
தலைமை எழுத்தரிடம் பேசி ஹரிதாசின் கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய ஏற்பாடு செய்வதாகக்கூறினார்
நரேந்திரர்.
🌸
அப்போது
ராஜ்குமார் என்பவர் தலைமை எழுத்தராகப் பணியாற்றினார். ஒரு நாள் அவரது அலுவலகத்திற்கு
நரேந்திரர் சென்று ஹரிதாசிற்காகப் பரிந்து பேசினார். ஹரிதாசினால் கல்லூரி கட்டணத்தைச்செலுத்த
இயலாது. நீங்கள் அவனைத்தேர்வு எழுத அனுமதித்தால் அவன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவான். இல்லாவிட்டால் அவன் வாழ்வே பாழாகிவிடும்.
தயவு செய்து அவனைத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், என்றெல்லாம் கேட்டுக்கொண்டார்.
ஆனால் ராஜ்குமார் அதனை ஏற்றுக்கொள்ளாமல், உன்னுடைய சிபாரிசு தேவையற்றது, நீ உன் வேலையை
மட்டும் பார். கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் அவன் தேர்வு எழுத முடியாது, என்று கூறிவிட்டார்.
ஹரிதாஸ் மிகவும் வருத்தமடைந்தார். நரேந்திரர் அவரைத் தேற்றி மனச்சோர்வுக்கு இடம் அளிக்காதே,
எப்படியாவது நான் இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கிறேன், தைரியமாக இரு, என்று கூறினார்.
🌸
அன்று கல்லூரி
முடிந்ததும் நரேந்திரர் வீட்டிற்குச் செல்லாமல் ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஓர் இடத்திற்குச்சென்றார்.
அபின் முதலிய போதைப்பொருட்கள் புழங்கும் இடம் அது. வழக்கமாக ராஜ்குமார் அந்த இடத்திற்குச்
செல்வார். அன்று நன்றாக இருட்டிய பிறகு யாரும் அறியாமல் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்
ராஜ்குமார். திடீரென்று ராஜ்குமாரின் முன்னால் நரேந்திரர் சென்று நின்றார். அந்த நேரத்தில்
அந்த இடத்தில் அவரைப்பார்த்த ராஜ்குமாருக்குத் திகைப்பு ,நரேந்திரா என்ன விஷயம்? என்று
கேட்டார்.
நரேந்திரர்
ஹரிதாசின் விஷயத்தைக்கூறினார். கட்டணத்தைத் தள்ளுபடி செய்யாவிட்டால் அபின் பழக்கத்தை எல்லோருக்கும் தெரியப் படுத்தி விடுவதாகப் பயமுறுத்தினார்.
பயந்து போன ராஜ்குமார் ஹரிதாசின் கல்விக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதாகவும், தேர்வு
க் கட்டணத்தை மட்டும் ஹரிதாஸ் செலுத்த வேண்டும் என்ற அளவில் ஒப்புக்கொண்டார்.
ஒரு முறை
நண்பர் ஒருவர் நரேந்திரரைப்பற்றி பின்வருமாறு குறிப்பிட்டார்.
🌸
நரேந்திரன்
பேசுவதைக்கேட்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். அதற்காகவே நாங்கள் ஏதாவது
ஒரு கருத்தைப்ற்றி பேச்சைத் துவங்குவோம். நரேந்திரன் தனக்கே உரிய பாணியில் அதனை விளக்குவான். யாராவது
அவனது கருத்தை மறுத்துப்பேசினால் அவர்களைத்தனதுவாதத் திறமையால் திக்கு முக்காடச்செய்வான். எல்லாவிதமான பலவீனங்களையும்
அவன் அறவே வெறுத்தான். துணிவையும், திறமையையும் வலிமையையும் மிகவும் வரவேற்றான்...
ஒரு முறை நான் அவனது வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது அவனுக்கு உடல் நிலை சரியில்லை.
படுத்தப்படுக்கையாக இருந்தான். ஆனாலும் என்னைக் கண்டவுடன் என்னை வரவேற்கவும் உபசரிக்கவும்
முற்பட்டான். நான் எவ்வளவோ தடுத்தும் அவன் கேட்கவில்லை. நான் புகைப்பதற்கு ஹீக்காவும்
தயார் செய்யத் தொடங்கினான். அவனது அன்பு கரைகாணாததாக இருந்தது.-
அன்றைய சமுதாயம்
🌸
இது வரை
நாம் கண்டது நரேந்திரர் சந்தித்த வாழ்க்கையின் ஒரு பக்கம்.-அற்புதமான கொள்கைகள் கோட்பாடுகள்,
உன்னதமான லட்சியங்கள், கவிதை நயம் சொட்டும் இலக்கியங்கள், இறைவனின் வடிவமாகக் கருதப்படும்
இசை உலகம். இவை விரித்த சித்திரம் மகோன்னதமானது.ஆனால் நிஜ வாழ்க்கையில் நரேந்திரர்
கண்ட சித்திரம் என்ன?
அது முற்றிலும்
மாறானது. இந்தக் கொள்கைகளுடனோ கவிதை நயங்களுடனோ சிறிதும் தொடர்பில்லாதது. நாங்கள் பிறந்த
கால சமுதாயம் இழிவானதாக, வெறுப்பூட்டுவதாக, அஞ்சத் தக்கதாக இருந்தது. என்று கூறி அந்தச்
சித்திரத்தை விவரிக்கிறார்.
🌸
நரேந்திரரின் சகோதரரான மகேந்திரர், குறிப்பாக நரேந்திரர் வசித்த
சிமூலியா பகுதி குடிகாரர்களின் ராஜ்யமாக இருந்தது. மாலை வேளையானால் குடித்துவிட்டுச்
சேற்றில் புரள்வார்கள். சிலர். அவர்களைக்கைது செய்ய வரும் போலீசாருக்கும் அவர்களுக்கும்
தினசரி சண்டையும் வழக்கும் நடைபெறும். விசேஷ பூஜை நாட்கள் வந்துவிட்டால் ஆடுகளையும்
எருமைகளையும் பலியிட்டு அங்கங்கே ரத்தக்களரிகள் காட்சியளிக்கும்.கேட்கச் சகிக்காத கெட்ட
வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடுகின்ற பஞ்சாலி, தர்ஜா போன்ற சங்கீதங்கள் விசேஷ நாட்களில்
தெருவெங்கும் கேட்கும். இனி தந்திர சாதனை என்ற பெயரில் வெறுக்கத்தக்க, இழிந்த செயல்களைச்செய்து
திரிந்த கூட்டம் மற்றொருபக்கம்.
🌸
பெண்ணிற்கு
எட்டு வயது ஆகியிருந்தால் அவளுக்குத் திருமணம் முடிந்திருக்கவேண்டும். பதினாறு வயதிற்குமெல்
ஒருவன் திருமணம் ஆகாமல் இருந்தால் அவன் ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப் படுவான். தங்கள்
வீட்டில் ஒரு விசேஷம் அல்லது விழா நடைபெறப்போகிறது என்று பிறரை அழைக்க வருபவனுக்குத்தனது
குடும்பத்தின் ஏழு தலைமுறையினரின் பெயர் தெரிந்திருக்க
வேண்டும். குலம், கோத்திரம் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும்.அப்போது மட்டுமே அந்த
அழைப்பு ஏற்றுக்கொள்ளப்படும். இது விஷயமாகக் குடும்பங்களுக்கு இடையே எழுகின்ற சண்டைகள்
பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
🌸
பட்டாச்சாரியா
பிராமணன் இருக்கும் வரிசையில் கோஸ்வாமி பிராமணன் இரக்க மாட்டான். பிராமணர் களுக்கு
இடையிலேயே இப்படி ஜாதிப்பிரிவினைகள் என்றால் அவர்களுக்கும் மற்ற ஜாதியினருக்கும் இடையிலுள்ள
குழப்பங்களைப்பற்றி என்ன சொல்வது.!
🌸
மதம் என்ற
பகுதிக்கு வந்தால், அப்படி ஒன்று எங்குமே இல்லை எனலாம். இந்து மதத்திற்கென்று போதிய
நூல்கள் இல்லை. ராமாயண, மகாபாரதங்கள் இருக்கவே செய்தன. ஆனால் வேதவேதாந்தங்கள் போன்ற உயரிய கருத்துக்களைக்கூறுகின்ற நூல்கள் கிடையாது.
கீதை, உபநிஷதங்கள் போன்ற வார்த்தைகளைப் பலர் கேட்டதுடன் சரி, அந்த நூல்களைக் கண்டது
கூட கிடையாது. ஏதோ ஒரு சில பட்டாச்சாரிய பிராமணர்கள் சண்டி ஓதுவார்கள். சைதன்யரின்
நூல்களும் அவ்வளவு பிரபலமாகவில்லை.-சண்டி-(தேவீ மாஹாத்மியம்)
🌸
கிறிஸ்தவ
மிஷனரிகள்
🌸
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கிறிஸ்தவ மிஷனரிகள்
ஏராளம் கிறிஸ்தவ நூல்களை அச்சிட்டு வினியோகித்தனர்.சாலை சந்திப்புகளிலும் , சந்தைகளிலும்,
பொது இடங்களிலும் கூட்டம் போட்டு இந்து தெய்வங்களைப்பழிப்பதை ஒரு கடமையாகவே செய்து
வந்தனர். ஒரு நாள் நரேந்திரர் சென்று கொண்டிருந்த சாலையில் இத்தகைய கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஒரு மிஷனரி, கங்கையில் குளித்தால்
பாவம் போய்விடும் என்று சொல்வது தான் பாவம். இத்தகைய மூடநம்பிக்கைகள் நிறைந்தது தான் இந்து மதம்” என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருந்தார்.
நரேந்திரரால் பொறுக்க இயலவில்லை. அவர் அதனை எதிர்த்தார். கூட்டத்தில் சிலர் மிஷனரியை
ஆதரிக்க, சிலர் நரேந்திரரை ஆதரிக்க பெரும் பிரச்சனையாகிவிட்டது. எங்கே அது ஒரு மதக்
கலவரமாக மாறிவிடுமோ என்று பயந்த நேரத்தில் எப்படியோ இரண்டு கூட்டத்தினரும் தணிந்து அத்தகையதொரு சூழ்நிலையைத் தவிர்த்தனர்
🌸
இந்து மதத்தின்
உயர்ந்த கருத்துக்களை அறிந்து கொள்வதற்குப்போதிய நூல்கள் இல்லை. அதனால் மிஷனரிகளின்
குற்றச்சாட்டுகளை மறுக்க இந்துக்களால் இயலவில்லை. அவர்களால் சொந்த மதத்தை விடவும் முடியவில்லை.
கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை.
🌸
இந்து மதத்தில்
பழமை வாதமும் மூடநம்பிக்கைகளும் மலிந்து கிடப்பது உண்மைதான் என்பதை இந்துக்கள் சிலராவது
உணரத் தொடங்கியிருந்தனர். ஆனால் அதன் காரணம் என்ன எங்கே தவறு என்பதை அவர்களால் புரிந்து
கொள்ள இயலவில்லை. எனவே மதத்தின் மீதே பழியைப்போட்டு பலர் இந்து மதத்திலிருந்தே விலக
முற்பட்டனர். சிலர் இந்து மதத்தின் சில நம்பிக்கைகளை
விட்டு, அதே வேளையில் கிறிஸ்தவ மதத்தின் சில கருத்துக்களைப் புகுத்தி ஒரு விதமான ஒரு
புதிய நெறியை அளிக்கத் தொடங்கினர். இத்தகைய இயக்கங்களில் முக்கியமான ஒன்று பிரம்ம சமாஜம்.
🌸
அன்றைய கல்கத்தாவில்
பிரம்ம சமாஜம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பல கடவுள் கொள்கை உருவ வழிபாடு,
அவதாரக்கொள்கை குருவின் தேவை முதலிய கொள்கைகளை இந்த சமாஜம் எதிர்த்தது, உருவமற்ற. ஆனால்
குணங்களுடன் கூடிய ஒரே கடவுள் கொள்கையை அது ஆதரித்தது. சமுதாயத்திலும் கூட பல சீர்திருத்தங்களைக்கொண்டு
வர முற்பட்டது. ஜாதிக் கட்டுப்பாடுகளை நீக்குதல், அனைவருக்கும் சம உரிமையளித்தல், பெண்கள்
கல்வி, பெண்களின் திருமண வயது வரம்பை உயர்த்துதல் முதலியவற்றை அது கொள்கைகளாகக்கொண்டிருந்தது.
🌸
1828-இல்
ராஜாராம் மோகன்ராயால் தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கம் மகரிஷி தேவேந்திரநாத் தாகூரால்
வளர்க்கப்பட்டது. இவர் தமத கருத்துக்களுக்கு அடிப்படையாக உபநிஷதங்களை ஏற்றுக்கொண்டார்.
அதே நேரத்தில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவக் கருத்துக்கள் சமாஜத்தில் ஊடுருவாமலும் பார்த்துக்கொண்டார்.
அடுத்த தலைவராக வந்தவர் கேசவ சந்திர சேன். இவர் சம்ஸ்கிருதம் பயிலவில்லை. ஆங்கிலக்கல்வி பெற்றவர். கிறிஸ்தவ மதத்தில் ஈடுபாடு
காட்டினார். எனவே ஏசுவை பிரம்ம சமாஜத்தில் புகுத்த முயன்றார். அதன் காரணமாக ஏற்பட்ட
கருத்து வேறுபாட்டில் இவர் தமது ஆதரவாளர்களுடன்
இந்திய பிரம்ம சமாஜம் என்ற ஒன்றைத்தோற்றுவித்தார். பிரம்ம சமாஜம், ஆதி பிரம்ம
சமாஜம் என்ற பெயரில் அழைக்கப்படலாயிற்று.
🌸
பின்னாளில்
ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களின் தாக்கத்தால் கேசவரின் கருத்துக்கள் வெகுவாகமாறின.
இந்தப்புதிய கருத்துக்களுடன் இந்திய பிரம்ம
சமாஜம், நவ விதானம் என்ற பெயரில் அறியப் பட்டது. தமது பெண்ணின் திருமண விஷயத்தில் கேசவர்
சமாஜ விதிகளை மீறியதால் விஜய கிருஷ்ண கோஸ்வாமி., சிவநாத் சாஸ்திரி போன்ற தலைவர்கள்
பிரிந்து சென்று சாதாரண பிரம்ம சமாஜம் என்ற ஒன்றை உருவாக்கினர். நரேந்திரர் இந்தச்
சாதாரண பிரம்ம சமாஜ உறுப்பினராக இருந்தார்.
🌸
பிரம்ம சமாஜம்
சமுதாயத்தில் குறிப்பாக இளைஞர்களின் மனத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
எப்போதும் புதிய கருத்துக்களை வரவேற்கும் நரேந்திரரும் சமாஜத்தின் கருத்துக்களால் கரவப்பட்டார்.rமாஜத்தின்
பிராத்தனைக்கூட்டங்களுக்குத் தவறாமல் செல்லத்தொடங்கினார்.சமாஜத்தின் கொள்ளையைத் தாமும்
ஏற்றுக்கொண்டார்.அதில் நடைபெற்ற ”நவவிதான்” என்ற நாடகத்தில் ஒரு துறவியாக
நடிக்கவும் செய்தார்.
🌸
சைவ உணவு
🌸
கேசவசந்திர
சேன் மிகச்சிறந்த பேச்சாளர்.தமது வாதத் திறமையினாலும்
கூரிய அறிவினாலும் ஆழ்ந்த சிந்தனையாலும் எளிமையினாலும் கம்பீரத்தோற்றத்தினாலும் பலரைக் கவர்ந்திருந்தார். தாமும் ஒருநாள் அவரைப்போல்
ஆக வேண்டும் என்று கூட நரேந்திரர் எண்ணியதுண்டு.
பிரம்ம சமாஜத்தின்
அறிவுபூர்வமான அணுகுமுறை ஆரம்ப காலத்தில் நரேந்திரருக்குப் பிடித்திருந்தது. பிரார்த்தனைகளாலும்
பக்திப் பாடல்களாலும் தாம் உயர்வுற்றதுபோல்
உணர்ந்தார். உடனே சமாஜத்தின் கொள்கைகளை மிகவும் தீவிரமாகப் பின்பற்றினார். அவற்றில்
ஒன்று சைவ உணவு. வங்காளத்தில் பொதுவான உணவான மீனைக்கூட அவர் மறுத்துவிட்டார்.சைவ உணவுகளையே
சாப்பிட்டு, நரேந்திரரும் தனது தாத்தாவைப்போல் இந்த உலகத்தைத் துறந்து விடுவானோ என்று
பெற்றோர் கவலையில் ஆழ்ந்தார்.
🌸
ஒரு நாள்
நரேந்திரரின் அக்கா சுவர்ணமயி நரேந்திரருக்கு
உணவு பிரிமாறிக்கொண்டிருந்தாள்.நரேந்திரர் முன்னால்மீன் பொரியலை ஒரு தட்டில் வைத்தாள்.ஆனால்
நரேந்திரர் அதை மறுத்து. காய்கறிப்பொரியலைப் பரிமாறுக்கேட்டுக்கொண்டார். உடனே அவள்
அந்தத் தட்டை எடுத்துச்சென்று, அதில் இருந்த மீன்களை எடுத்துவிட்டு மீண்டும் நரேந்திரரிடம்
வைத்தாள். நரேந்திரருக்கு ஆத்திரம் வந்தது.நரேந்திரருக்கும் சுவர்ணமயிக்கும் வாய்ச்சண்டைவலுத்தது.அப்போது
விசுவநாதர் முற்றத்தில் குளித்துக்கொண்டிருந்தார். இவர்களது சண்டையைக் கவனித்த அவர்,
பதினான்கு தலைமுறைகளாக இவனது முன்னோர்கள் நண்டும் நத்தையும் சாப்பிட்டு வாழ்ந்தனர்” இவன் என்னவோ இப்போது பிரம்ம தைத்யன் ஆகிவிட்டானாம்.(பிரம்ம
தைத்யன்-பிரம்மதைத்யன் என்றால் இறந்து போன அந்தணரின் ஆவி, இங்கே பிரம்ம சமாஜத்தினதைக்குறிக்கிறது)
மீன் சாப்பிட
மாட்டானாம்” என்று கோபமாகக்கூறினார். இருந்தாலும் அவர் நரேந்திரின் விஷயத்தில்
குறுக்கிடவில்லை.
No comments:
Post a Comment