Sunday, 14 June 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-66

வகுப்பு-66  நாள்-27-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

நான்கு ஜாதிகள் பற்றி ஸ்ரீகிருஷ்ணரின் கருத்து

-

ப்ராஹ்மணக்ஷத்ரியவிஷாம் ஷூத்ராணாம் ச பரம்தப।

கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணை:॥ 18.41 ॥

 

18.41 எதிரிகளை எரிப்பவனே, பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களுடைய கர்மங்கள் ஸ்வபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டிருக்கிறது

-

முற்பிறவியின் குணங்களோடு. ஒரு மனிதன் பிறக்கிறான்.

சிலர் பிறக்கும்போதே உயர்ந்த குணத்துடன் பிறக்கிறார்கள். சிலர் பிறக்கும்போது மிருக குணத்துடன் பிறக்கிறார்கள்.

பிறக்கும்போது தாழ்ந்த குணத்துடன் பிறந்திருந்தாலும்,வளர வளர குணத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

எனவே ஒருவனது ஸ்வபாவம் என்பது பிறப்பிலிருந்து இறப்புவரை ஒரே போன்று இருப்பதில்லை.தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

இந்த ஸ்பவாத்திலிருந்து பிறக்கும் குணத்தை அடிப்படையாக வைத்து ஜாதிகள் நிர்ணயிக்கப்படுகிறது.

-

பிராம்மண ஜாதி என்பது எவ்வாறு தோன்றியது?

-

முற்காலத்தில்,மக்கள் மாடுகளை மேய்க்கும் தொழிலை செய்துவந்தார்கள்.

அவர்களில் சிலர் அறிவாற்றல் மிக்கவர்களாகவும்,ஆளுமைமிக்கவர்களாகவும் இருந்தார்கள்.

மக்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். மக்களிடம் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்துவைப்பது தலைவரின் முக்கிய வேலையாக இருந்தது.

பல்வேறு குழுக்களில் இவ்வாறு பல தலைவர்கள் இருந்தார்கள்.

ஒவ்வொரு குழுவும் ஒரு கோத்திரம்.(கோ-பசு). குழுவின் தலைவர் கோத்திரதாரி.

 

இவர்களில் சிலர் ஆழ்ந்த சிந்தனை சக்தி உடையவர்களாகவும்,தனக்குள்ளே சென்று ஆழ்ந்து தியானிப்பதில் வல்லவர்களாகவும் விளங்கினார்கள்.அவர்களது மனதில் பிரபஞ்ச ரகசியம் வெளிப்பட்டது.

கடவுளை தனக்குள்ளே அறிந்துகொண்டார்கள்.அவர் கூறும் வார்த்தைகள் வேதம் என்று அழைக்கப்பட்டது

அவ்வாறு உயர்ந்த நிலையை அடைந்த மனிதனை ரிஷி,பிராம்மணன் என்று அழைத்தார்கள்.

-

அந்த ரிஷி மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் நீதிபதி பணியைவிட உயர்ந்ததான இறைவனைப்பற்றி போதிக்கும் குரு நிலையை அடைந்தார்.

-

இப்போது மூன்று நிலைகள் உருவாகிவிட்டன. 1. மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் தலைமை பண்புள்ள சிலர். 2. அதைவிடவும் உயர்ந்ததான கடவுளைப்பற்றி போதிக்கும் குருநிலையை அடைந்துள்ள சிலர்.3. மாடுமேய்க்கும் சாதாரண மக்கள்

-

தலைமைப் பண்புள்ளவர் சத்திரியர் என்றும் குருநிலையை வகிப்பவர் பிராம்மணர் என்றும் அழைக்கப்பட்டார் மற்றவர்கள் குடி மக்கள் .

இவ்வாறு ஆதி காலத்தில் பல கோத்திரங்கள் இருந்தன. ஒவ்வொரு கோத்திரத்திரமும் ஒரு ரிஷியை தலைவராக ஏற்றுக்கொண்டது.

ஒவ்வொரு கோத்திரமும் தங்களுக்னென்று தனியாக வேதத்தை வைத்திருந்தது.

பிற்காலத்தில் இந்த வேதங்கள் அனைத்தும் ஒன்றாக கோர்க்கப்பட்டு  இருக்வேதம்(ரிக்) என்று அழைக்கப்பட்டது.

இருக் என்றால் இருக்கிறது,நிலையாக இருக்கிறது என்று பொருள்.

வேதம் ஒன்றாக இணைந்ததுபோல பல கோத்திரங்களை உடைய சமூகம் ஆரியர் என்ற பெயரில் ஒன்றாக இணைந்தது.

ஆரியர் என்றால் பண்பட்டவன் என்று அர்த்தம்.

-

இடம் பெயர்தல்

-

பூமியின் நிலப்பரப்புகள் எப்போதும் ஒரேபோல இருப்பதில்லை.பருவநிலை மாற்றத்தால் பசுமையாக இருக்கும் இடங்கள் பாலைவனமாக மாறுகின்றன. பாலைவனங்கள் பசுமையாகின்றன.

மனிதர்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.

ஆரியர்கள் பல்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தார்கள்.

அவ்வாறு அவர்கள் செல்லும்போது வேதத்தையும் தங்களுடன் எடுத்துச் சென்றார்கள்.

வேதத்தை கற்ற இனம் புதிய இடங்களுக்கு பயணித்தது.

 

புதிய இடங்களில் ஏற்கனவே அங்கே வாழும் பூர்வீக குடிமக்கள் இருப்பார்கள்.அவர்களிடம் வேதம் இல்லை.

ஆனால் நிலம் அவர்களுடையது. ஆட்சி அவர்களுடையது.

அவர்களை அனுசரித்து சென்றால்தான் அங்கே வாழமுடியும்.

அவர்களது வழிபாடுகள் வேறுவிதமாக இருக்கும்.

பூர்வ குடிமக்கள் வேதம் அறிந்தவர்களைப்போல உலகஞானம்,இறைஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

எனவே அவர்களது வழிபாடுகளை,பழக்க வழக்கங்களை மாற்றிவிடக்கூடாது.அதே நேரத்தில்  வேதத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் கூடாது.அவர்களை தங்களுக்கு இணையாக கருதவும் கூடாது என்ற எண்ணம் ஆரியர்களிடம்  இயல்பாகவே இருந்திருக்கும்.

-

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தார்கள்,ஆனால் சில ஆயிரம் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அவர்களிடமிருந்து பிடுங்கி தங்கள் வசம் வைத்து நாட்டை ஆண்டார்கள். இது எப்படி சாத்தியமானது?

அறிவுள்ள இனமே நாட்டை ஆளும்.

-

புதிய இடங்களுக்கு பயணித்த மக்கள் விரைவிலேயே நாட்டை தங்கள் கட்டுப்பட்டிற்குள் கொண்டுவந்துவிட்டார்கள்.

பூர்வீக குடிமக்கள் அடிமைகளாக கருதப்பட்டார்கள்

-

இப்போது இரண்டு பெரும் இனங்கள் ஒன்றாக கலந்தன.

ஆரியர்கள் தங்களுக்குள்ள அதிகாரத்தையும்,அறிவையும் மற்ற இனத்தினருடன் பகிர்ந்துகொள்ள தயாராக இல்லை.

ஆட்சி,அதிகாரம்,வேதம்,கல்வி,வியாபாரம் அனைத்தையும் தங்கள் வசம் வைத்துக்கொண்டது.

இன்னொரு இனத்தினருக்கு அடிமைவேலை கொடுக்கப்பட்டது.

-

இப்போது நான்கு ஜாதிகள் உருவானது

 

1. பிராமணன் 2. சத்திரியன் 3.வைசியன் 4. சூத்திரன்

-

முதல் மூன்று ஜாதியினர் ஆரியர்.அவர்கள் வேதம் கற்க அனுமதிக்கப்பட்டார்கள்.

சூத்திரனுக்கு வேதம் கற்க அனுமதி இல்லை.

-

மக்கள் தொகை வளர்ச்சியடைந்தது. பல்வேறு வேலைகள் பெருகியது.ஜாதி அமைப்புகளை இன்னும் பலமாக கட்டமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பிராமண ஜாதிக்கு ஆறு தொழில்கள்

சத்திரியருக்கு சில தொழில்கள்

வைசியர்களுக்கு சில தொழில்கள்

அடிமை வேலைகள் அனைத்தும் சூத்திரர்களுக்குரிய தொழில்கள்

-

ஒவ்வொரு தொழில் செய்பவர்களும் ஒவ்வொரு ஜாதியாக பிரிக்கப்பட்டார்கள்

-

ஒவ்வொரு ஜாதியில் பிறப்பவரும் அந்த ஜாதிக்கென்று உள்ள நடைமுறையை பின்பற்றியே வளரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது

பிராமணருக்கு பிறக்கும் குழந்தைகள் பிராமணனாகவே கருதப்பட்டார்கள்.

சத்திரியனின் குழந்தைகள் சத்திரியனாக கருதப்பட்டார்கள்

வைசியனின் குழந்தை வைசியனாகவும்,

சூத்திரனின் குழந்தைகள் சூத்திரனாகவும் கருதப்பட்டார்கள்.

-

ஒரு ஜாதியைச் சேர்ந்தவர் இன்னொரு ஜாதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

-

இவைகள் எல்லாம் ராமாயண காலத்திற்கு முற்பட்ட பழக்கங்கள்.

-

எந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர் ஞானம் பெற்றால்கூட அவர் பிராமணராகவே கருதப்பட்டார். பிராமண சமுதாயம் அவரை தங்களுடன் இணைத்துக்கொள்ளும். அவரது உபதேங்களை தங்கள் வேதத்துடன் இணைத்துக்கொள்வார்கள். அவரது குழந்தைகள் பிராமணராகவே கருதப்பட்டார்கள்.

உதாரணமாக வால்மீகியை கூறலாம்.

சூத்திர ஜாதியை சேர்ந்த ஒருவர் பிராமண சமுதாயத்துடன் இணைவதால் பிராமணர்கள் இன்னும் நன்மை அடைவார்கள்.

ஆனால் சூத்திர ஜாதியினருக்கு அதனால் ஒரு நன்மையும் இல்லை.

-

ஸ்ரீகிருஷ்ணருடைய கருத்து என்ன என்பதைப் பார்ப்போம்.

-

பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களுடைய கர்மங்கள் ஸ்வபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டிருக்கிறது.

-

பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படவில்லை.

அதாவது பிராமண குலத்தில் பிறப்பவன் பிராமணன் என்று பிரிக்கப்படவில்லை.

ஒருவன் வளரும்போது அவனிடம் எந்த  குணம் வெளிப்படுகிறதோ அதன் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது.

பிராமண குலத்தில் பிறக்கும் ஒருவன் பிராமணன் அல்ல.

சத்திரிய குலத்தில் பிறக்கும் ஒருவன் சத்திரியன் அல்ல

சூத்திர குலத்தில் பிறக்கும் ஒருவன் சூத்திரன் அல்ல.

-

இதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

சிலர் பகவத்கீதையினால்தான் ஜாதி வளர்ந்தது என்று கூறுகிறார்கள்.

ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் அவ்வாறு கூறவில்லை. பிறப்பின் அடிப்படையில் ஜாதிகள் பிரிக்கப்பட்டதாக கூறவில்லை. ஸ்வபாவத்தில் பிறந்த குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுவதாக கூறுகிறார்.

-

18.42 அந்தக்கரணங்களை அடக்குதல், புறக்கரணங்களை அடக்குதல்,தவம்,தூய்மை,பொறுமை,நேர்மை,சாஸ்திரஞானம்,விக்ஞானம்,கடவுள் நம்பிக்கை இவையாவும் பிராமணனுக்கு ஸ்வபாவத்தில் உண்டான கர்மங்களாகும்

-

பிறக்கும்போதே ஒருவன் மேலே கூறப்பட்டுள்ள குணங்களுடனா பிறக்கிறான்? பிறக்கும்போதே சாஸ்திர ஞானத்துடனா பிறக்கிறான்? பிறக்கும்போதே ஐம்புலன்களையுடம் அடக்கியவனாகவா பிறக்கிறான்?

ஏதோ ஒருசிலர் அப்படி பிறக்கிறார்கள்.

மற்றவர்கள் அனைவரும் கடுமையான தவத்திற்கு பிறகே பிராமணநிலையை அடைகிறார்கள்.

எனவே ஸ்ரீகிருஷ்ணர் பிறப்பின் அடிப்படையில் ஜாதி வருவதில்லை என்பதை தெளிவாக கூறுகிறார்.

-

வேதங்களின் பார்வையில் யார் பிராமணன்?

-

சாமவேதம்-  வஜ்ரஸுசிகோபநிடதம்

-

1.ஓம். வஜ்ரஸுசீ என்ற உபநிடதத்தை கூறுகிறேன்.அது அஞ்ஞானத்தைப் பிளக்கும் சாஸ்திரம். ஞானமில்லாதவர்களுக்கு தூஷணமாகவும் ஞானக்கண் படைத்தவர்களுக்கு பூஷணமாகவும் விளங்குவது அது

-

2. பிராமணர் சத்திரியர்  வைசியர் சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் அவற்றுர் பிராமணர் முக்கியமானவர் என்று வேதத்தின் கருத்தையொட்டி ஸ்மிருதிகளும் கூறும்.அதைப்பற்றி ஆராயவேண்டும்.

பிராமணன் என்றால் யார்? ஜீவனா,தேகமா,ஜாதியா,ஞானமா,கர்மமா,தர்மமா?

-

3.முதலில் ஜீவன் பிராமணன் என்றால் அது வருவதும் போவதுமாக பல பிறவிகள் பிறக்கிறது.பல தேகங்களில் ஜீவன் ஒரே வடிவாயிருப்பதாலும்,ஒருவனேயாயிருப்பதாலும்,கர்ம வசத்தால் பல உடல்கள் ஏற்படுவதாலும்,எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரேமாதிரி இருப்பதாலும் ஜீவனை பிராமணன் என்று கூற இயலாது.(ஜீவன் பல பிறவிகளில் பல உடல்களில் பிறக்கிறது.சில பிறவிகளில் மிருக உடல்கள்கூட கிடைக்கலாம். ஆகவே ஜீவன்.பிராமணன் அல்ல)

-

4. ஆனால் தேகம் பிராம்மணன் என்று நினைத்தால் அதுவும் பொருந்தாது. உயர்ஜாதிமுதல் தாழ்ந்தசாதிவரை உள்ள அனைவருக்கும் உடல் ஒரே வடிவாக பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டிருக்னகிறது. பிறப்பு.இறப்பு.முதுமை போன்றவை ஒரேபோலவே இருப்பதாலும், ஒவ்வொரு ஜாதியினரின் உடலும் தனித்தனி வண்ணமாக இல்லாமல் ஒரே போல் இருப்பதாலும். உடலை அடிப்படையாக கொண்டு ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது

-

5.ஆனால் பிறப்பால் வந்த  ஜாதியால் ஒருவன் பிராமணனா என்றால்,அதுவும் இல்லை. பிற  ஜாதிகளிலும்,அனேக ஜாதிகளிலும் பல ரிஷிகள் தோன்றியிருக்கிறார்கள்.வால்மீகி, வியாசர், வசிஷ்டர் உட்பட பலர் கீழ்ஜாதியில் பிறந்திருக்கிறார்கள்.ஆகையால் பிறப்பின் அடிப்படையில் வரும் ஜாதியால் ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது

-

6.அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் பொருந்தாது. சத்திரியர் முதலான பிற ஜாதியிலும் மிக்கஅறிவு பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள்.ஆகையால் அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்க முடியாது

-

7. செய்யும் தொழிலை(கர்மத்தை) வைத்து ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் இல்லை. எல்லா உயிர்களுக்கும் பிராரப்தம் ஸஞ்சிதம் ஆகாமி என்ற மூன்று கர்மங்களும் பொதுவாக இருக்கிறது. முன்ஜன்மத்தால் தூண்டப்பட்ட மக்கள் பலர் கிரியைகளை செய்கிறார்கள்.ஆகையால் கர்மத்தால் பிராமணன் இல்லை

-

8.தர்மம் செய்பவர்கள் பிராமணன் என்று கூறலாமா என்றால் அதுவும் இல்லை. சத்திரியர் உட்பட பிறரும் தர்மம் செய்கிறார்கள்.

-

9.அப்படியானால் யார்தான் பிராம்மணன்?

இரண்டற்ற சச்சிதானந்த ஸ்வரூபனாகவும் ஜாதி,குணம்,கிரியை அற்றதும்,பிறப்பு,இறப்பு முதலிய ஆறு நிலைகள் அற்றதும் சத்தியம்,ஞானம்,ஆனந்தம் என்ற ஸ்வரூபமுடையதும்,தோசங்கள் அற்றதும் , தான் நிர்விகல்பமாயும் எல்லா கற்பனைகளுக்கும் ஆதாரமாயும்,எல்லா உயிர்களுக்கு உள்ளே நின்று இயங்குவதாயும்,ஆகாயத்தைபோல் உள்ளும் வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல்  ஆனந்த வடிவாயும் மனதிற்கெட்டாததாயும்,அனுபவத்தில் மட்டும் அறியக்கூடியதாயும்,அபரோக்ஷமாய் பிரகாசிப்பதாயும் உள்ள ஆத்ம வடிவினனாயும்,விரும்பு வெறுப்பு முதலிய தோசங்கள் அற்றவனாயும். சமம்,தமம் முதலியவைகளுடன் கூடி மாச்சர்யம்,ஆசை,மோகம் முதலியவை நீங்கியவனாயும் அகங்காரம் முதலியவற்றால் தொடப்படாதவனாகவும் முக்தலக்ஷணம் வாய்ந்தவன் எவனோ அவனே பிராம்மணன் என்பது வேதம்,ஸ்மிருதி,புராணம்,இதிகாசம் முதலியவற்றின் முடிவான கருத்து. இதற்கு புறம்பாக பிராமணத் தன்மை இல்லவே இல்லை. இரண்டற்ற ஸச்சிதானந்தமானதுமான பிரம்மமாக ஆத்மாவை உணவவேண்டும்.

-

இங்ஙனம் சாமவேதத்தில் இடம்பெற்றுள்ள  - வஜ்ரஸுசிகா உபநிடதம் கூறுகிறது.

-

சாரம்சம்

-

1.ஒரே ஜீவன்தான் பல பிறவிகளில் பிறந்தாலும் ஜீவன் பிராம்மணன் அல்ல.

2.எல்லோரது உடலும் ஒரேபோல் இருப்பதால் உடல் பிராம்மணன் அல்ல.

3.எல்லா ஜாதியிலும் ரிஷிகள் பிறப்பதால்.பிறப்பால் ஒருவன் பிராம்மணன் அல்ல.

4.எல்லா ஜாதியிலும் அறிவாளிகள் இருப்பதால் அறிவை வைத்து ஒருவனை பிராம்மணன் என்று கூறமுடியாது.

5. செய்யும் தொழிவை வைத்து பிராமணன் என்று கூறமுடியாது. ஏனென்றால் அந்த தொழிலை எல்லோராலும் செய்ய முடியும்.

6.தான தர்மங்கள் எல்லோரும் செய்கிறார்கள்.அதனால் அதைவைத்தும் கூறமுடியாது

7. பிரம்மத்தை உணர்ந்து,உடல் இருந்தாலும் உடலற்ற நிலையில் ஜீவன்முக்தனாக வாழ்பவன்தான் பிராமணன்.

-

மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

ஷௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்।

தாநமீஷ்வரபாவஷ்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்॥ 18.43 ॥

 

18.43 சூரத்தன்மை, துணிவு, உறுதி, சாதுர்யம், போரில் புறங்காட்டமை,தானம், ஈஸ்வரத்தன்மை இவைகள் சத்திரியங்களுக்கு ஸ்வபாவத்தில் உண்டான கர்மங்களாகும்

-

க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஷ்யகர்ம ஸ்வபாவஜம்।

பரிசர்யாத்மகம் கர்ம ஷூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்॥ 18.44 ॥

 

18.44 உழவும், கால்நடை காத்தலும், வணிகமும் இயல்பாயுண்டாகிய வைசிய கர்மங்கள்.

முதலாளி சொல்லும் பணியை செய்வது சூத்திரனுக்கு இயல்பாய் உண்டான கர்மம்

-

விவசாயம் என்பது வைசியருக்குரிய தொழில். கால்நடைகள் வளர்ப்பதும் வைசியருக்குரிய தொழில்.

அரச சபைகளில் சாமரம் வீசுவது, அரண்மனையில் உள்ள துப்புரவு பணிகள் செய்வது,அரசர் இடும் கட்டளைகளை மக்களிடம் பறை மூலம் தெரிவிக்கும் பணிகள் போன்றவை சூத்திரர்களின் முக்கிய பணியாக இருந்தது.

அத்துடன் வசதியானவர்களின் கீழ் சூத்திரர்கள் வேலை செய்தார்கள்.

 

யார் முதலாளி? வசதி இருப்பவன் முதலாளி.

தனக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு தங்குவதற்கு இடமும், உணவும்,உடையும் கொடுத்து காப்பவன் முதலாளி.

முதலாளிக்கு கீழ் வேலை செய்வதுதான் சூத்திரர்களின் கர்மம் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறாரே தவிர, கண்டவனின் கீழ் எல்லாம் வேலை செய்யும்படி கூறவில்லை.

ஆனால் காலம் மாறமாற சூத்திரர்கள் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்பட்டார்கள் என்பதை வரலாற்றிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

-

ஆதிகாலத்தில் ஜாதி என்பது குணத்தை அடிப்படையாக கொண்டதாவே கருதப்பட்டது.

பிரம்மஞானம் பெற்றவர் குரு.அவர் பிராமணனாக கருதப்பட்டார்

பிரம்மஞானம் பெறுவதற்கு முன்பு அவர் எந்த ஜாதியில் பிறந்தவராகவும்  இருக்கலாம்.

ஒருவர் எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும், பிரம்மஞானம் பெற்றுவிட்டால் அவர் பிராம்மணன்.

அவருக்கு பிறக்கும் குழந்தைகள் பிராமணனாகவே கருதப்பட்டார்கள்.

-

ஒருவன் பிறக்கும் போது ஒரு குறிப்பிட்ட ஜாதியின் கீழ்தான் பிறந்து அவர்களின் கட்டுப்பாட்டுடன் தான் வளர்கிறான்.ஆனால் வளர்ந்த பிறகு அவனிடம் உயர்ஜாதிக்கான திறமைகள் இருந்தால்,அதை நிரூபிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவன் மேல் ஜாதியாக கருதப்படுவான்.

 

உதாரணமாக சூத்திர ஜாதியில் பிறந்த ஒருவனிடம் போர்புரியும் திறமைகள்  இருந்தால், சத்திரியனாக மாறி, ஒரு நாட்டையே ஆட்சி செய்ய முடியும்.பழைய காலத்தில் பலர் அவ்வாறு நாட்டை ஆண்டிருக்கிறார்கள்.அதேபோல் சூத்திரன் சுயமாக தொழில்புரிந்து வைசியனாகவும் மாற முடியும். அதேபோல் உயர் ஜாதியில் உள்ள ஒருவன் தாழ்ந்த ஜாதிக்கும் செல்ல வாய்ப்புள்ளது.

ஒரு சத்திரியன் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்யாவிட்டால், மக்கள் கலகத்தில் ஈடுபட்டு அவனை சிறைபிடித்து, வேலைக்காரன் (சூத்திர)நிலைக்கு இறக்கிவிடுவார்கள்.

ஒரு பிராமணன் தன் கடமையை சரியாக செய்யாவிட்டால், பிராமண ஜாதியிலிருந்து விலகி வைத்துவிடுவார்கள்,

-

இதை கீழ்கண்ட உதாரணங்கள் மூலம் பார்ப்போம். துரோணாச்சாரியர் பிறவியில் பிராமணர்,ஆனால் பழிவாங்கும் எண்ணம் கொண்டதால்,அவர் சத்திரியராக மாறவேண்டியிருந்தது.

விதுரர் பிறவியில் சூத்திரர், ஆனால் சத்திரியனுக்குரிய வீரம் இருந்ததால் சத்திரியனாகவும், பிறகு அதை துறந்து பிராமணலட்சியத்தை ஏற்றுக்கொண்டு பிராமணனாகவும் உயர்ந்தார்.

கர்ணன் வளர்ப்பில் சூத்திரராக இருந்த போதும்,அவரது வீரம் காரணமாக சத்திரியராக மாறினார்.இவ்வாறு மகாபாரதத்தில் பல உதாரணங்களை காணலாம்.

-

அப்படியானால் இந்த ஜாதிமுறைகள் எப்படி சீர்கெட்டன?

-

ஒரு ஜாதியில் பிறக்கும் ஒருவன் ,அந்த ஜாதிக்குரிய பண்புகள் இல்லாதவனாக இருந்தால், எந்த ஜாதிக்குரிய பண்புகள் அவனிடம் இருக்கின்றனவோ, அந்த ஜாதியில் சேர்த்துவிடும் பழக்கம் பின்பற்றப்படவில்லை. உதாரணமாக பிராமண ஜாதியில் பிறக்கும் ஒருவன், பிறந்த உடனேயே பிராமணனுக்குரிய பண்புகளை பெற்றுவிடுவதில்லை. பல ஆண்டுகள் கடின தவம் புரிந்த பிறகு தான் இறைவனை மட்டுமே சார்ந்து வாழும் பண்புகளை பெற்று பிராமணனாக மாறுகிறான். ஆனால் வளர்ந்த பிறகும் இந்த பண்புகளை பெறாமல் ஒருவன் தன்னை பிராமணன் என்று கூறிக்கொண்டு, அரசர்கள் தரும் சலுகைகளை பெற்றுக்கொண்டு வாழ்ந்ததும், அவனை அந்த பிராமண சமுதாயம் ஆதரித்ததும் முதல் தவறு.

 

தங்களை பிராமணர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், அதற்கான தகுதிகள் இருப்பதை முதலில் நிரூபித்துக்காட்ட வேண்டும். இல்லாவிட்டால் தங்களுக்கு என்ன திறமை இருக்கிறதோ அந்த ஜாதியின் சேர்ந்துகொள்ள வேண்டும். .

-

அறிவு எதுவரை சுயநலம் அற்றதாக இருக்குமோ அது வரை நமக்கும் பிறருக்கும் நல்லது. எப்போது அறிவு தன்நலத்தில் கவனம் செலுத்துமோ, அப்போது அனைத்தும் கெட்டுவிடும். சத்திரியர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பில் இருந்த பிராமணர்கள் தங்கள் சுயநலத்தை நாடியது தான் இந்த ஜாதிமுறைகள் கெட்டுப்போனதற்கான முதல் காரணம்.

 

முற்காலத்தில் ஒரு ஜாதியை சேர்ந்தவர்கள் இன்னொரு ஜாதிக்கு எளிதாக செல்ல முடிந்தது என்பதை பார்த்தோம். சிலரின் சுயநலத்தால் இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டு, ஜாதிகள் கடக்கமுடியாத சுவர்களாக மாற்றப்பட்டன. ஒவ்வொரு ஜாதிக்கும் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அவைகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கபட்டார்கள்.

இது சில ஜாதியினர் முன்னேறுவதற்கும்,சலுகைகளை பெறுவதற்கும் வசதியாக இருந்தது. சில ஜாதியிர் தொடர்நது பின்னோக்கி சென்று, கடைசியில் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்படார்கள்.

சூத்திரர்கள் தினமும் மாடுகளைவிட அதிகமாக வேலை வாங்கப்பட்டார்கள். அவர்களின் சுதந்திரம் பறிக்கபட்டது.

 

முற்காலத்தில் மகாபாரதத்தில் கர்ணன் ஒரு சூத்திரனாக இருந்தபோதும் அரசர்கள் கூடிய சபையில் பேச அனுமதிக்கபட்டன். அந்த காலத்தில் இருந்த நிலையை பிற்காலத்துடன் ஒப்பிட்டு பாருங்கள். சூத்திரர்கள் சில ஜாதியினர் வாழும் தெருவில் கூட நடந்துசெல்ல அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு அந்த காலத்தில் நிலவிய அற்புதமான ஜாதி என்ற அமைப்பு பிற்காலத்தில் தீமைநிறைந்ததாக மாறிவிட்டது.

-

இப்படிப்பட்ட ஜாதி அமைப்புகள் எல்லா நாடுகளிலும் இருந்துள்ளது. பெயர்கள் வேண்டுமானால் மாறுபட்டிருக்கலாம்.

ஐரோப்பியர்கள் அமெரிக்காவிற்குள் குடியேறினார்கள். அங்குள்ள செவ்விந்தியர்களை கொன்று குவித்தார்கள்.மீதியிருந்தவர்களை அடிமைகளாக்கினார்கள். ஆப்பிரிக்காவிலிருந்து நீக்ரோக்களை கொண்டுவந்து அடிமைவேலை செய்ய வைத்தார்கள். அடிமைகள் வேலைசெய்ய திறனற்றுபோகும்போது ஈவிரக்கமின்றி கொலைசெய்தார்கள்.

-

அரேபியர்கள் முஸ்லீம் அல்லாதவர்களை அடிமைகளாக பிடித்துக்கொண்டு சென்றார்கள். சந்தைகளில் விற்றார்கள். அரேபியர்களின் வீடுகளில் அடிமைகளை வைத்துக்கொண்டார்கள்.

-

பிராமண,சத்திரிய,வைசிய,சூத்திர ஜாதியை சட்டங்கள் மூலம் இந்தியாவிலிருந்து நீக்கிவிட்டாலும்,

வேறு பெயர்களில் வேறு இடங்களில் அவைகள் எப்போதும் வேலைசெய்துகொண்டே இருக்கும்.

அன்றைய பிராமணன் இன்றைய பலதுறை விஞ்ஞானியாக பரிணமித்துள்ளான்

அன்றைய சத்திரியன் இன்றைய அதிபர்,பிரதமர்,முதல்வர்

அன்றைய வைசியன் இன்றைய தொழிலதிபர்

அன்றைய சூத்திரன் இன்றைய தொழிலாளி

-

அறிவானவன்(விஞ்ஞானி) அறிவின் மூலம் பிறரையும், அதிகாரம் மிக்கவன்(அதிபர்,பிரதமர்) அதிகாரத்தின் மூலம் பிறரையும், பணக்காரன்(தொழில் அதிபர்) பணத்தின் மூலம் பிறரையும் அடக்கியாள நினைக்கும் குணம் இந்த உலகத்தைவிட்டு என்றாவது மறையுமா?

அப்படி மறையும்வரை குணத்தின் அடிப்படையில் இருக்கும் ஜாதிகள் இருந்துகொண்டே இருக்கும்.

-

சுவாமி வித்யானந்தர்-குருஜி (27-3-2020)


No comments:

Post a Comment