சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-36
🌸
.......
வட கலிபோர்னியாவில்
...................
லாஸ் ஏஞ்ஜல்ஸிலிருந்து 1900 பிபரவரி 22-ஆம் நாள் வட கலிபோர்னியாவிலுள்ள
சான்பிரான்சிஸ்கோவை அடைந்தார் சுவாமிஜி. ஹேன்ஸ்ப்ரோ ஒரு வாரத்திற்கு முன்பே அங்கு சென்று
சுவாமிஜியின் சொற்பொழிவிற்கான ஏற்பாடுகளைச்செய்ய
வேண்டும் என்று முடிவாகியது. ஆனால் இந்தப் பணிக்குத் தாம் போதுமா என்று ஹேன்ஸ்ப்ரோ
தயங்கினார். அவரது சகோதரிகளும் சந்தேகித்தனர். சுவாமிஜிக்கு அதில் தயக்கம் இல்லை.
ஒரு நாள் திடீரென்று சுவாமிஜி ஹேன்ஸ்ப்ரோவிடம், நீ
எப்போது சான்பிரான்சிஸ் கோவிற்குப்போகிறாய்? என்று கேட்டார். நீங்கள் விரும்பினால்
இப்போதே போகிறேன்” என்றார் ஹேன்ஸ்ப்ரோ. அதற்கு சுவாமிஜி
மென்மையாகச் சிரித்துவிட்டு, ஒரு வேலையைச்செய்ய வேண்டும் என்று நீ நினைத்தால்
அதிலிருந்து உன்னை எதுவும் விலக்கக் கூடாது. மற்றவர்களிடம் கேட்க வேண்டாம். உன் உள்ளத்தையே
கலந்தாலோசனை செய். உள்ளம் சொல்வதன் படிச் செயல்படு” என்றார். அதன் பிறகு ஹேன்ஸ்ப்ரோ தயங்காமல் உடனடியாகக் கிளம்பினார்.
இதற்குள் வட கலிபோர்னியாவிலுள்ள ஓக்லாந்தில் நடைபெற
உள்ள சமய மாநாட்டில் பேசுமாறு சுவாமிஜிக்கு அழைப்பு விடுத்திருந்தார் மில்ஸ் என்ற பாதிரி.
ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை என்று நினைத்தார். ஆனால் சுவாமிஜி, அந்த ஏற்பாடுகள் நடக்கட்டும்” நீ சென்று உன் திட்டப்படியே ஏற்பாடுகளைச் செய். அவர்கள் அழைத்திருந்தாலமு்
நாம் நம் காலில் நிற்பது நல்லது. அவர்களின் அழைப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். நான்
அங்கே எனது முதல் சொற்பொழிவைச் சுதந்திரமாக செய்யவிரும்புகிறேன். ஓர் அமெரிக்கப்பெண்ணை
நம்ப நான் தயாராக உள்ளேன். ஆனால் அமெரிக்க
ஆணைச் சிலவேளைகளில் நம்பலாம். ஆனால் அமெரிக்கப் பாதிரியை ஒரு போதும் நம்புவதற்கில்லை” என்று கூறினார். இவ்வாறு சுவாமிஜியின் வடகலிபோர்னியா பணிகள்
ஆரம்பமாயின.
முதல் சொற்பொழிவைத் தனியாக அளித்தார் சுவாமிஜி. பின்னர்
ஏற்கனவே அழைக்கப் பட்டிருந்த சமய மாநாட்டில் கலந்து கொண்டார்.சுவாமிஜியை அழைத்தவரான
மில்ஸ்கிகாகோ சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியவர். அதன் பிறகு அவரது
மன நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. முன்பு கிறிஸ்தவ மதவெறியராக இருந்த அவர், பின்னர்
பரந்த மனம் படைத்தவர் ஆனார். பல நாடுகளில் புனித நூல்களைப் படித்த பிறகு, பைபிள் ஒன்றுதான்
கடவுளின் வார்த்தை என்று கருதுவதை நான் விட்டு விட்டேன். வாழ்க்கையின் முழுவளர்ச்சிக்கு
பைபிள் ஒரு தடையாக உள்ளது..... இந்த மனிதர்(சுவாமிஜி) எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டார்” என்றுகூறும் அளவிற்கு அவரது மனத்தில்
மாற்றங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து அவர் கிறிஸ்தவ மத போதகராகவே இருந்தார். அவர்போதகராக
இருக்கின்ற யூனிட்டேரியன் சர்ச்சில் நடைபெற இந்த மாநாட்டில் சுவாமிஜி வேதாந்தம் பற்றி
பேசினார். அந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிஸ்சாராஃபாக்ஸ் எழுதுகிறார்.
காவியுடுத்தி, தலைப்பாகை அணிந்த அந்த அற்புத மனிதர்
மெதுவாக, அடிமேல் அடி எடுத்து வைத்ததுபோல் நடந்து மேடையை நோக்கிச்சென்றார். எதற்கும்
அஞ்சாதவராக,எதையும் பொருட்படுத்தாதவராக அவர்
காணப்பட்டார். பேரலை ஒன்று தவழ்ந்து செல்வதைப்போல்ஆற்றலுடன் நடந்து சென்றார்
அவர். அவரது முதுகு ஒரு கம்பிபோல் நேராக இருந்தது. அவர் மேடையில் சென்று நின்று நீண்ட
நேரம் பார்வையாளர்களைப் பார்த்தார். பிறகு பேசத்தொடங்கினார்............... அதன் பிறகு
கேள்வி- பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நேரான கேள்விக்கு நேரான பதில், கேலியான கேள்விகளுக்கு
கேலியான பதில் என்று கணம் கூடத் தாமதமின்றி அவரிடமிருந்து பதில்கள் வந்தன.
.....
முதலைக்கு எறிதல்- நகைச்சுவை
................................
சுவாமி, உங்கள் நாட்டில் பச்சிளம் குழந்தைகளை முதலைகளிடம்
எறிவார்களாம், உண்மையா? என்று ஒரு பெண் பழைய அதே கேள்வியைக்கேட்டாள். சுவாமிஜியும்
சட்டென்று, மேடம் உங்கள் நன்றிகூறல் நிகழ்ச்சிகளில்
பச்சிளங்குழந்தைகளைப் பரிமாறுவார்களாமே, உண்மையா? என்று பதில் கேள்வி கேட்டார். இந்தக்கேள்வி
சுவாமிஜியிடம் பல முறை கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பதில்களைக் கூறினார்.
அவை ஒவ்வொன்றும் வேடிக்கையானவை. சிரித்து மகிழத்தக்கவை,
அவற்றில் சில வற்றைக் காண்போம்.
உண்மைதான் மேடம், நான் மட்டும் எப்படியோ தப்பி வந்து
விட்டேன்.-லாஸ் ஏஞ்ஜல்ஸ்.
என்னையும் எறிவதற்காக என் தாயார் எடுத்துச் சென்றார்,
நான் குண்டாக இருந்ததால் முதலைகள் என்னை விழுங்க மறுத்துவிட்டன,- தி ட்ரிப்யூன்.
ஆமாம், என்னையும்
எறிந்தார்கள். நான் குண்டாக இருந்ததால் முதலைகளால் விழுங்க முடியவில்லை. இப்போது, நான்
குண்டாக இருக்கிறேனே என்ற எண்ணம் எழும்போதெல்லாம்
அந்த முதலை நிகழ்ச்சியை எண்ணி ஆறுதல் பெறுகிறேன்- டெட்ராய்ட்.
உண்மை தான். என்னையும் எறிந்தார்கள். ஆனால் உங்கள்
ஜோனாவை ப்போல் நான் வெளியில் வந்து விட்டேன்- மின்னாபொலிஸ்.
சில வேளைகளில் பொதுவாக க் குழந்தைகள் என்று சொல்லாமல்
குறிப்பாக ப்பெண் குழந்தைகளை எறிவதுபற்றி கேட்டார்கள். அதற்கும் சுவாமிஜியின் பதில்கள்
கேட்டவர்களைச் சிரிக்க வைக்கும் விதமாகவே இருந்தது.
ஆமாம், ஒரு வேளை பெண் குழந்தைகள் மென்மையாக இருப்பார்கள்.
முதலைகள் கடித்துச் சாப்பிடச் சுலபமாக இருக்கும் என்பதற்காகப்பெண் குழந்தைகளை எறிவார்கள்-
டெட்ராய்ட்.
எல்லாப் பெண் குழ்ந்தைகளையும் எறிந்ததில் இப்போது
இந்தியாவில் பெண்களே இல்லை.பிள்ளை பெற்றுக் கொள்வது கூட ஆண்கள் தாம்.
கேள்வி கேட்பவர் உட்பட அனைவரும் வயிறு வலிக்கச் சிரித்தார்கள்
என்பதைச்சொல்ல வேண்டியது இல்லை அல்லவா?
சில வேளைகளில் முட்டாள் தனமாகக்கேள்விகள் கேட்கும்
போது சுவாமிஜி அந்த முட்டாள்தனத்தைச்சுட்டிக் காட்டி அவர்களைச்செய்யும் கேலியில் அவர்கள்
வெட்கித் தலைகுனிவார்களாம். ஒரு முறை ஒரு பெண் அப்படி வெட்கப்பட்டு நாற்காலிக்குப்
பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள். உடனே சுவாமிஜி, அது உங்கள் தவறல்ல,மெடம், இப்படி
ஒரு கேள்வியை நான் கேட்டிருந்தால் நானும், அப்படித்தான் ஒளிந்திருப்பேன்” என்றார்.
.....
வேலை நிறுத்தம் செய்கிறேன்!
........................
ஆனால் வடக்கு கலிபோர்னியாவிலும் சொற்பொழிவுகள் மூலம்
பணம் பெரிதாகக் கிடைக்கவில்லை.தேவையான அளவு
விளம்பரம் இல்லாததே அதற்குக் காரணமாக இருந்தது. இரண்டு வாரங்கள் பல சொற்பொழிவுகள் செய்த
பிறகும் வேண்டிய அளவு பணம் கிடைக்கவில்லை. பணத்தைப் பொறுத்தவரையில் வடக்கு கலிபோர்னியாவில்
முற்றிலும் தோற்றுப்போய்விட்டேன். லாஸ் ஏஞ்ஜல்சைவிட
இங்கு நிலைமை மோசமாக உள்ளது. இலவசச்சொற்பொழிவு என்றால் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்,
பணம் கொடுக்க வேண்டுமென்றால் ஒரு சிலரே வருகிறார்கள்---- மேடைச்சொற்பொழிவுப் பணி என்னளவில்
அனேகமாகத் தீர்ந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் வலுக்கட்டாயமாகச் சொற்பொழிவுகளை
நிறுத்துவது என்பது முடிவை விரைந்து வரவேற்பதே ஆகும். பயணச்செலவிற்கு வேண்டிய பணம்
கிடைத்ததும் இங்கிருந்து புறப்படுவேன். லாஸ் ஏஞ்ஜல்சில் கிடைத்த 300 டாலர் என்னிடம்
உள்ளது. அடுத்த வாரம் இங்கு சொற்பொழிவு செய்வேன். அதன்பிறகு நிறுத்திக்கொள்வேன். அந்தச்
சுமையிலிருந்து எவ்வளவு விரைவில் விடுபடுவேனோ அவ்வளவு நல்லது என்று எழுதுகிறார் சுவாமிஜி.
சுவாமிஜிக்குப் பணத் தட்டுபாடு மிகவும் அதிகமாக ஏற்பட்ட
காலம் இது- பேலூர் மடத்திற்குப் பணம்
தேவையிருந்தது.
அது எப்போதும் இருக்கவே செய்தது! தமது தாயாருக்கு வீடு வாங்குவதற்காக சுவாமிஜி பேலூர்
மடத்திலிருந்து 5, 000 ரூபாய் கடனாக வாங்கியிருந்தார். அதனைத் திருப்பிக்கொடுக்க வேண்டும்.
வீட்டு விஷயமாக ஏமாற்றிய அத்தைக்கு எதிராக வழக்கு நடத்தப்பணம் வேண்டும்.1,000 டாலர்
நியூயார்க்கில் அவர் லெக்கட்டிடம் சேமிப்பாக வைத்திருந்தார். இது அவரது ராஜயோக நூலை
விற்ற பணத்துடன் கேத்ரி மன்னர் அவருக்கு அவ்வப்போது அளித்த பணமும் ஆகும். இதனைத் தம்
தாய், பாட்டி, சகோதர்கள் ஆகியோருக்காக ஒதுக்கி
வைத்திருந்தார் அவர்.
ஏற்கனவே
பல இடங்களில் கூறியது போல், தம் தாய்க்கு ஏதாவது
செய்ய வேண்டும் என்ற உணர்ச்சி சுவாமிஜியின் மனத்தில் இடையறாது இருந்து வந்துள்ளது. வாழ்வெல்லாம் நான்
என் ஏழைத் தாய்க்கு ஒரு தொல்லையாக இருந்து வந்துள்ளேன். அவளது வாழ்க்கை ஒரு தொடர் துயரமாகவே இருந்துள்ளது. முடிந்தால் அவளுக்கு
ஒரு சிறிது மகிழ்ச்சியைத் தருவதே கடைசி முயற்சி.
நான் அதையெல்லாம் திட்டமிட்டு வைத்துவிட்டேன். வாழ்நாள் முழுவதும் நான் உலகின் அன்னைக்குச்
சேவை செய்துள்ளேன். அது முடிந்து போயிற்று. இனியும் அவளுக்காக என்னால் உழைக்க முடியாது.
வேறு பணியாளர்களை அவள் தேடிக்கொள்ளட்டும், நான் வேலை நிறுத்தம் செய்கிறேன் என்று எழுதுகிறார்
சுவாமிஜி.
ஆனால் சுவாமிஜியின் வேலை நிறுத்தம்” நடைபெறாமலே போய்
விட்டது. கடைசி வரை ஒரு நாள் கூட அவரால் இந்த வேலையிலிருந்து விடுபட இயலவில்லை!
.....
காலத்தைக்
கடந்து
...................
சில காலம் ஆலன் என்பவர் சுவாமிஜியின் சொற்பொழிவுகளுக்கு
அவருடன் உதவியாகச்சென்று வந்தார். ஒரு நாள்
சொற்பொழிவுக்குச்செல்லும்போது சுவாமிஜி அவரிடம்,
இன்று நான் இந்தியா பற்றி பேசப்போகிறேன். இது
எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு என்பது உங்களுக்குத் தெரியும். இந்தத் தலைப்பில்
நான் பேசத் தொடங்கினால் எங்கே எப்போதும் நிறுத்துவது என்பது எனக்குத் தெரியாது. எனவே
நான் நீண்ட நேரம் பேசினால் ஏதாவது சைகை மூலம் தெரிவியுங்கள்” என்று கூறினார்.சரியாக 8 மணிக்குச் சொற்பொழிவு ஆரம்பமாகியது.
10 மணியைத் தாண்டியபோது சுவாமிஜிக்குச்சைகை செய்ய நினைத்தார் ஆலன். எனவே அரங்கின் கடைசி
வரிசையில் சென்று நின்றுகொண்டு, தமது கைக்கடிகாரத்தைக் கழற்றி , சுவாமிஜி பார்க்கும்
படி கையைத்தூக்கி கடிகாரத்தை ஆட்டினார். சுவாமிஜி அதனை பதிலாக, அதோ கடிகாரத்தை அசைத்து நான் நிறுத்த வேண்டும் என்று நினைவுபடுத்துகிறார்கள்.
நானோ இப்போது தான் ஆரம்பிக்கவே செய்திருக்கிறேன்” என்று கூறி விட்டுத் தமது சொற் பொழிவைத் தொடர்ந்தார். நீண்ட
நேரம் பேசிய பிறகு நிறுத்தினார்.
.....
சொற்பொழிவுகள்
...................
குறிப்பிட்ட எந்த இடத்திலும் ஒரு குறிப்பிட்ட கால
கட்டத்தில் சுவாமிஜி எந்தெந்த இடங்களில் தங்கினார். எத்தனை சொற்பொழிவுகள் செய்தார் என்பதெல்லாம்
நிர்ணயிக்கப் படாத விஷயங்கள், காலம் செல்லச்செல்ல புதிய கண்டு பிடிப்புகள் பலசெய்திகளைத்
தந்து கொண்டிருக்கின்றன. சான் பிரான்சிஸ்கோவில் இந்த நாட்களில் குறைந்தது 61 சொற்பொழிவுகள்
செய்துள்ளதாகவேக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆனால் மிஸ்ஈடா ஆன்செல் குறிப்பெடுத்திருந்த
16 சொற்பொழிவு களைத் தவிர வேறு எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.
மார்ச் 18 ஆம்-நாள் சுவாமிஜி ஆற்றிய உலகிற்கு புத்தரின்
செய்தி” என்ற சொற்பொழிவைக் கேட்ட எர்னஸ்ட் சி.ப்ரௌன் என்பவரின் அனுபவத்தைக்கேட்போம்.
அவர் மத விஷயங்களில் ஈடுபாடுள்ள இளைஞர். ஒரு நாள் அவர் மிலிட்ஸ் என்ற மத போதகரின் சொற்பொழிவிற்குச்சென்றார்.
அன்றைய சொற்பொழிவில் அந்த போதகர், உண்மைக்காக அனைத்தையும் துறப்பது பற்றிநான் உங்களிடம்
பல முறை கூறியிருக்கிறேன்” அத்தகைய ஒருவர் இருந்தால் எங்களுக்குக்
காட்டுங்கள்” என்று நீங்கள் என்னிடம் கேட்டுள்ளீர்கள்.இதோ
அத்தகையோர் உண்மைத் துறவியை உங்களுக்குக் காட்டுகிறேன். அவர் சமீபத்தில் இந்தியா விலிருந்து வந்துள்ளார். அவரது பெயர் சுவாமி விவேகானந்தர்
. நீங்கள் அனைவரும் சென்று அவரதுசொற்பொழிவைக்கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இந்தியாவின் மாபெரும் ஆச்சாரியர்கள் மற்றும் மாபெரும் முனிவர்களில் ஒருவர் இவர்” என்று அறிவித்தார். இதற்கும்ப் பிறகு தான் ப்ரௌன் சுவாமிஜியின் அன்றைய சொற்பொழிவிற்கு வந்திருந்தார். அவரது நினைவுக் குறிப்பைக் காண்போம்.
நாங்கள் சென்றபோது சுவாமிஜி வந்திருக்கவில்லை. சிறிது
நேரத்திற்குப் பிறகு காவியுடை அணிந்த ஒருவர் அருகிலுள்ள சிறிய அறையிலிருந்து மேடையை
நோக்கிச் சென்றார். இவர் யார்? சக்கரவர்த்தியாக
இருப்பாரோ? என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ஒரு வேளை தெய்வம் நேரில் வந்து
நடந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவரது நடை- ஆளப் பிறந்த ஒருவரின் நடை அது!
அவர் சென்று மேடையில் அமர்ந்ததும் பார்வையாளர்களிடையே பலத்த கைதட்டல் ஒலி எழுந்தது.
அவர் இந்த ஒலியால் எந்தச் சலனமும் இல்லாதவராக
அமர்ந்திருந்தார். அவரது அகத்தில் நிறைந்திருந்த
பூரண அமைதி முகத்தில் பொலிந்தது. சிறிது நேரத்தில் அவர் எழுந்து பார்வையாளர்களை நோக்கித்
தமது கைகளை உயர்த்தினார். கூட்டத்தினரிடையே
அந்தக் கணமே பூரண அமைதி நிலவியது. இவ்வளவு பெரிய கூட்டத்தைத் தமது கையசைவு ஒன்றினாலேயே
கட்டுப் படுத்தவல்ல. இவர் யார்? பலருக்குத்
தலைவராக இருப்பவர் இவர் என்று தோன்றுகிறது” என்று மீண்டும்எனக்குள் தோன்றியது.
பிறகு அவர் பேச ஆரம்பித்தார். நிறைவுற்றதும் அனைவரும் வரிசையில் நின்று அவருடன் கைகுலுக்கினர்.
பலரிடம் அவர் ஓரிரு வார்த்தைகள் பேசினார். என்னிடமும் ஏதோ கூறினார்.
அவரது சொற்பொழிவைக்கேட்ட டாம் என்பவர் பரவசத்துடன் கூறினார். நான் ஒருவரைச்
சந்தித்தேன். அவர் மனிதர் அல்ல, தெய்வம். அவர் சத்திய வார்த்தைகளையே பேசுகிறார்.
இந்தியா
பற்றி ஒரு பேட்டி
...............................................
இந்தச் சொற்பொழிவு நிறைவுற்றதும் க்ரோனிகிள் பத்திரிகையின்
நிருபர் சுவாமிஜியைப்பேட்டி கண்டார். சுவாமிஜியின் சொற்பொழிவைக் குறிப்பெடுத்துவிட்டு,
அதனைப் பத்திரிகையில் வெளியிடுவதற்கு அவரது புகைப்படம் ஒன்றையும்கேட்டார். பல பத்திரிகைகளில் வெளி வந்த ஒரு படத்தை ஒருவர் அவரிடம் கொடுத்தார்.
அது பல இடங்களில் பத்திரிகைகளில் வெளி வந்திருந்தாலும் சுவாமிஜிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை-
நிருபர்-
சுவாமிஜி, அது உங்களைப்போல் இல்லை.
சுவாமிஜி(சிரிப்பு)-
உண்மை தான், ஓதெல்லோ நாடகத்தில் வரும் மூரைப்போல்
நான் யாரையோ கொல்லப்போவது போல் உள்ளது.
அப்படி ஒரு தோற்றத்தை அந்தப் படத்தில் காண இயலவில்லை.
எனவே அனைவரும் சிரித்தனர். நிருபர் அந்தப் படத்தைப் பயன்படுத்தவில்லை. பேட்டி தொடங்கியது.
நிருபர்-
சிகாகோ சர்வமத மகாசபைக்குப் பிறகு நீங்கள் உங்கள்
தாய் நாட்டிற்குச் சென்றபோது மன்னர்களும் உங்கள் காலடியில் மண்டியிட்டு வணங்கினார்கள்.
பல மன்னர்கள் தெரு வழியாக நீங்கள் அமர்ந்திருந்த வண்டியை இழுத்துச் சென்றார்கள் என்றெல்லாம்
பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி உண்மையா? நாங்கள் எங்கள்மதத் தலைவர்களை இப்படியெல்லாம்
கொண்டாடுவது கிடையாது.
சுவாமிஜி-
அது பற்றியெல்லாம் பேசுவது அவ்வளவு சரியல்ல. ஒன்று
மட்டும் சொல்லலாம். இந்தியாவில் மதம் தான் ஆள்கிறது. பணம் அல்ல.
நிருபர்-
ஜாதி விஷயம்?
சுவாமிஜி-(சிரித்தபடி)-
உங்கள் நானூறு விஷயம் என்ன? இந்தியாவிலுள்ள ஜாதிப்பிரிவுகளைப்
பற்றி மேலை நாட்டினரால் அறிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோவும் இயலாது. அது எந்தக் குறைபாடும்
அற்ற ஒரு முறை என்று நாங்கள் சொல்லவில்லை. உங்களிடையே உள்ள பாகுபாட்டு முறைகளையும்
நாங்கள் பார்க்கிறோம். அது எந்த விதத்திலும் எங்கள் பிரிவுகளைவிட மேம்பட்டதாகத் தோன்றவில்லை.
ஒரு நிரந்தரமான ஜாதி அமைப்பைச் செயல்படுத்துவதில் வெற்றி கண்டுள்ள ஒரே நாடு இந்தியா
தான். இந்தநிலையில் உங்கள் மூட நம்பிக்கைகளையும்
பிரிவுகளையும் நாங்கள் ஏன் பின்பற்ற வேண்டும்?
நிருபர்-
நீங்கள் எல்லா விதத்திலும் சுதந்திரத்தைப் பற்றி
போதிக்கிறீர்கள். உங்கள் நாட்டிலோ ” இதை உண்ணக் கூடாது” அதை உண்ணக் கூடாது” இவனை இவள் திருமணம் செய்யக் கூடாது” என்பன போன்ற கட்டுப் பாடுகள் நிறைந்துள்ளன. நீங்கள் போதிக்கும்
சுதந்திரம் அங்கே செயல்முறையில் சாத்தியமா?
சுவாமிஜி-
சாத்தியம்
இல்லை. ஆனால் ஜாதி விதிகளின் தேவையை இந்தியா கடந்து செல்லாதவரை அங்கே ஜாதிகள்
இருக்கவே செய்யும்.
நிருபர்-
வெளி நாட்டினரோ, நாத்திகரோ சமையல் செய்த உணவை நீங்கள் உண்ணக் கூடாது என்பது உண்மையா?
சுவாமிஜி-
இந்தியாவில் சமையல்காரன் வேலைக் காரனாக கருதப்படுவதில்லை.
அவன் அதே ஜாதி அல்லது உயர்ந்த ஜாதியினனாக இருக்க வேண்டும். ஒருவன் தொடுகின்ற உணவு அவனது
ஆளுமையின் பதிவைப்பெறுகிறது. மனிதன் தன்னை
வெளிப்படுத்த உடம்பு முக்கியம். அந்த
உடம்பு உணவால் உருவாக்கப் படுகிறது. எனவே உண்ணும் உணவு விஷயத்தில் கவனம் தேவை என்பது
அறிவுறுத்தப் படுகிறது. சில உணவு ஆன்மீக வளர்ச்சிக்குச் சாதகமாகவும் சில பாதகமாகவும்
அமைகின்றன. உணவிற்காக நாங்கள் உயிரினங்களைக்
கொல்வதில்லை. அத்தகைய உணவு தூல உடம்பை வளர்க்கும். ஆன்மீக உடம்பை வளர்க்காது. உயிர்
இந்த தூல உடம்பை விட்டுப் போகும்போது ஆன்மீக உடம்பின் வளர்ச்சி முக்கியம். அது மட்டுமின்றி
, உணவிற்காக உயிர்களைக்கொல்லும் போது, கொல்பவனுக்குப் பாவமும் வந்து சேர்கிறது.
அப்பாடா! என்று
தன்னையறியாமலே கூவினார் நிருபர். உணவில் இவ்வளவு பிரச்சனையெல்லாம் இருக்கிறது
என்பது அவருக்குப் புதுமையாக இருந்திருக்க வேண்டும். உயிர்கள் எல்லாம் மனிதனுக்காகப்
படைக்கப் பட்டுள்ளன என்ற கருத்தையே அறிந்திருந்த அவர் சுவாமிஜியின் கருத்தைக்கேட்டதும்
திடுக்கிட்டார். அவற்றிற்கும் உயிர் உண்டு என்று சுவாமிஜி கூறியபோது, ஆட்டுக் குட்டிகளும்,
கோழிக் குஞ்சுகளும், மாடுகளும் ஆவியாக அலைவது போன்ற கற்பனை என்னுள் எழுந்தது” என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார் அந்த நிருபர். சுவாமிஜி
தொடர்ந்தார்.
இந்தப்பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே. மிகச் சாதாரணமான
உயிரினம் முதல் மிக உயர்ந்த யோகி வரை அனைவரும் ஒன்றே. எல்லாம் ஒன்றே. நாம் அனைவரும் ஒன்றே. நீங்களும் நானும் எல்லோரும் ஒன்றே.
இதைக் கூறிவிட்டு இந்தப் பொருளைத் தருகின்ற சம்ஸ்கிருத
சுலோகம் ஒன்றை மிக இனிமையாக ஓதினார் சுவாமிஜி.
அது ஓர் அழகிய காலை வேளை. சில்லென்ற குளிர்
இதமாகப் படர்ந்திருந்தது. அவர் அந்த அறையில் அங்குமிங்குமாக நடந்தபடியே பதிலளித்து
க் கொண்டிருந்தார். சில வேளைகளில் நின்று புகை பிடித்தார்.
நீங்களே இன்னும் எல்லா ஆசைகளையும் கட்டுப் படுத்த
வில்லையே! என்று துணிச்சலாகக்கேட்டார் நிருபர். சுவாமிஜியின் பரந்த முகத்தில் ஒருகுழந்தையின்
புன்னகை படர்ந்தது. கேட்டவரைவிடத் துணிச்சலாக இல்லை, மேடம். என்னைப் பார்த்தால் ஆசைகளை வென்றவன் போலவா தெரிகிறது! என்று பதில் சொன்னார்
அவர். அவரது முகத்தில் தவழ்ந்த புன்னகை மறைய வில்லை.
நிருபர்-
இந்து மதத் தலைவர்கள் திருமணம் செய்து கொள்வார்களா?
சுவாமிஜி-
அது அவரவர் விருப்பத்தைப்பொறுத்தது. ஒரு பெண்ணிற்குஅடிமையாக
இருக்க வேண்டும் என்று நினைப்பவன் திருமணம் செய்து கொள்வான். பெண்ணிற்கு அடிமையாக இருக்க
விரும்பாதவன் திருமணம் செய்து கொள்ள மாட்டான்.
நிருபர்-
அப்படி எல்லோரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால்
ஜனத்தொகை என்ன ஆவது?
சுவாமிஜியின் கண்கள் மின்னின. அவர் கூறினார்.
பிறந்ததில் உங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியா? பசியும்
நோயும் அறியாமையும் நிறைந்த இந்த உலகத்துடன் போராடுவதைத் தவிர உயர்ந்ததாக எதுவும் உங்களுக்குத்
தெரியவில்லையா? பிறக்காமல் இருப்பதால் (மரணத்தால்) உங்கள் தனித்துவத்தை நீங்கள் இழந்து போவது போல் தோன்றலாம். ஆனால் அதற்காகப் பயப்படாதீர்கள். ஏனெனில் அதில் லாபம் ஒன்று இருக்கிறது- இப்போதுள்ள இந்தத் துயரமான, பசியும்
நோயும் அறியாமையும் நிறைந்த இந்த நிலைமை அகன்றுவிடுகிறது. எனவே நாம் இல்லாமல் போவது
நல்லது தானே!
குழந்தை அழுது கொண்டே இந்த உலகிற்கு வருகிறான். வருகின்ற
அவன் அழலாம்! ஆனால் உலகை விட்டுச் செல்வதற்காக நாம் ஏன் அழ வேண்டும்? ஒருவன் இறந்துவிட்டான்
என்பதைக்கீழை நாட்டிலும் மேலை நாட்டிலும் சொல்கின்ற விதத்தை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?
அவன் உடம்பை விட்டு விட்டான்” என்று நாங்கள் சொல்கிறோம். அவன்
உயிரை விட்டு விட்டான்” என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
அது எப்படி முடியும்? இறந்த உடம்புஉயிரை வெளியில் போக அனுமதித்ததா என்ன? என்னவினோதமான
சிந்தனை!
நிருபர்-
ஆனால் சுவாமி, மொத்தத்தில் பார்த்தால், வெறுமனே வாழ்வதை
விட சாவதே மேல் என்று நீங்கள் சொல்வது போல் அல்லவா தோன்றுகிறது?
சுவாமிஜி-
ஸ்வாஹா! ஸ்வாஹா! நீங்கள் அப்படியே வைத்துக்கொள்ளலாம்.
இப்படி இன்னும் ஓரிரு கேள்விகளைக்கேட்ட பிறகு நிருபர்,
ரயிலுக்கு நேரமாகி விட்டது. நான் கிளம்ப வேண்டும்” என்றுகூறியபடி புறப்பட்டார்.
அதற்கு சுவாமிஜி, அமெரிக்கர்கள் என்றாலே இப்படி த் தான். இந்த பஸ்ஸுக்காக அல்லது அந்த
ரயிலுக்காக எப்போதும் பறந்து கொண்டே இருப்பீர்கள். இதை விட்டால் அடுத்த ரயில் கிடையாதா என்ன? என்று கேட்டார். நேரம் என்பது பற்றி இந்தியர்களும்
மேலை நாட்டினரும் கொண்டுள்ள கருத்தைப் பற்றி யெல்லாம் நான் சுவாமிஜிக்கு விளக்க முயற்சிக்க
வில்லை. இந்தியாவில் எல்லாவற்றிற்கும் ” போதுமான நேரம்” இருப்பது போல் தோன்றுகிறது.- மூச்சுவிட, சிந்திக்க, வாழ எல்லாவற்றிற்கும்
போதிய நேரம் இருக்கிறது. ஆனால் இங்கு அப்படியில்லை. நாம்( மேலை நாட்டினர்) காலத்தில்
வாழ்கிறோம். அவர்கள் (இந்தியர்கள்) காலத்தைக் கடந்து வாழ்கிறார்கள்” என்று தமது பேட்டியை நிறைவு செய்கிறார் அந்த நிருபர்.
அந்த நிருபர் எழுதியது சுவாமிஜியைப் பொறுத்தவரை முற்றிலும்
உண்மை. அவர் எதையும் அவசரப்பட்டு செய்வதில்லை. எப்போதும் ஒரு நிதானம் அவரது வேலைகளில்
இருக்கும். ரயிலையோ வண்டியையோ பிடிப்பதற்காக யாராவது ஓடுவதைக் கண்டால் அவருக்கு வேடிக்கையாக
இருக்கும். ஏன் இதற்குப் பிறகு வண்டியே கிடைக்காதா? என்று கேட்பார். அவர். சொற்பொழிவுகளையோ
வகுப்புகளையோ குறித்த நேரத்தில் ஆரம்பிப்பது பற்றியும் அவர் கவலைப் படுவதில்லை. அது
போலவே எப்போது முடிப்பார், என்பதையும் சொல்ல இயலாது. எடுத்த தலைப்பை முடிக்கும் வரை அவர் பேசிக்கொண்டே இருப்பார். குறித்த நேரத்தை விட
இரு மடங்கு அதிகமானாலும் பொருட்படுத்த மாட்டார். வகுப்புகளுக்குச்செல்வதற்குச் சில
நிமிடங்கள் முன்புவரை அறையில் சாவகாசமாக அமர்ந்திருப்பார். சாதாரண உடையில், நாற்காலியில்
பத்மாசனத்தில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருப்பார். கேள்விகளுக்குப் பதிலளிப்பார், வேடிக்கைப்
பேசுவார், புகைபிடிப்பார். கிளம்புவதற்கு ஓரிரு நிமிடங்கள் இருக்கும்போது எழுந்து தமது
அறைக்கு செல்வார். காவி உடை அணிந்துகொள்வார். கம்பீரமாக வகுப்புக்குச்செல்வார். அந்தக் கம்பீரநிதானம் ஒரு போதும் அவரிடமிருந்து விலகியதில்லை.
எந்தச் சொற்பொழிவிற்கும் சுவாமிஜி பொதுவாக த் தாமதமாகவே
போவார். ஒருநாள் பிற்பகல் 3 மணிக்கு சுவாமிஜி ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி பேசுவதாக இருந்தது.
அவர் வரவேயில்லை. சுவாமிஜியின் சொற்பொழிவுகளுக்குப் பொறுப்பாளரான ஆலன் பல முறை தெரு
முனையில் சென்று சுவாமிஜி வருகிறாரா என்று பார்த்த வண்ணம் இருந்தார். ஐந்தாம் முறை
சென்று பார்த்த போது தெருக்கோடியில் சுவாமிஜி நடந்து வருவது தெரிந்தது. அப்போது மணி
3.30 வழக்கம்போலவே நிதானமாக, கம்பீரமாக வந்துகொண்டிருந்தார்
அவர். அதற்கு மேலும் ஆலனால் பொறுக்க இயலவில்லை. நேராக சுவாமிஜியிடம் சென்று அவருடன்
திரும்பி நடக்கலானார். சுவாமிஜியின் வேகம் அதிகரிக்கவில்லை. கடைசியில் ஆலன், சுவாமிஜி,
எல்லோரும் காத்திருக்கிறார்கள். ஏற்கனவே தாமதமாகி விட்டது” என்று சொல்லியே விட்டார். அதற்கு சுவாமிஜி ”ஆலன்” நான் ஒரு போதும் தாமதமாவதில்லை. உலகின் நேரம் முழுவதும் என்னிடம் உள்ளது. காலமே
என் கையில் உள்ளது” என்றார். இதைப் பார்வையாளர்கள்
புரிந்து கொள்ள மாட்டார்களே! என்றார் ஆலன்.ஆனால் சுவாமிஜி எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே மெல்ல மெல்ல நடந்து
கொண்டிருந்தார். விஷயங்கள் அங்கும் முடியவில்லை.
வழியில் செருப்பு பாலிஷ் செய்யும் இடம் ஒன்று இருந்தது.
பாலிஷ் செய்பவன் வேலையில்லாமல் இருப்பதைக் கண்ட சுவாமிஜி நேராகக் கடைக்குள் சென்றார்.
செருப்பைப் பாலிஷ் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவசரத்தை அறிவிப்பதற்காக ஏதேதோ சைகைகள்
செய்து பார்த்தார் ஆலன். ஆனால் சுவாமிஜி எதையும்
பொருட்படுத்தவில்லை. கடைசியில் ஒரு வழியாக
மேடையை அடைந்தார் . காலம் என்கையில்” என்று சுவாமிஜி கூறியதை உணர்ந்து
கொள்கின்ற வாய்ப்பு ஆலனுக்கு அப்போதே கிடைத்தது. சுவாமிஜி மேடையில் நின்றார். ஆலன்
அருகில் சென்று நின்றபடி சுவாமிஜியை அறிமுகம் செய்ய ஆரம்பித்தார். பிறகு நடைபெற்றதை
ஆலன் கூறினார்.
சுவாமிஜியை அறிமுகம் செய்யத்தொடங்கிவிட்டு அவரைப்
பார்த்துன். கண நேரத்தில் ஓர் அற்புத அனுபவத்தைப்பெற்றேன். திடீரென்று சுவாமிஜி எல்லையற்று
வளர்ந்த ஒரு பெரிய உருவம் போலவும் நான் ஆப்பிரிக்கக் குள்ளன் போலவும் எனக்குத் தோன்றியது.
இவரை நான் அறிமுகம் செய்வதா என்று எனக்குள் தோன்றியது. அதன் பிறகு ஒரு போதும் நான்
அவரது அருகில் நின்று அறிமுகம் செய்வதில்லை. மேடையின் கீழ் நின்றுதான் அறிமுகம் செய்வேன்.
அன்று அவர் பேச வேண்டிய தலைப்பு ”ஸ்ரீகிருஷ்ணர்”. ஆனால் அவர் பேசியது” முகமது நபி” . இதை மேடையில் தான் அவர் முடிவு செய்தார். ஆனால் நபிகளைப்
பற்றி அவர் கூறிய கருத்துக்களிலோ, வரலாற்றுக் கணக் கீட்டிலோ, மற்ற தகவல்களிலோ ஒரு சிறு
தவறு கூட இல்லை” என்றுவியந்து கூறுகிறார் ஆலன். சொற்பொழிவு முடிந்து சுவாமிஜி
வந்ததும் ஆலன் அவரிடம், சுவாமிஜி உங்கள் நினைவாற்றல் அபாரமானது. என்று கூறினேன்.
அதற்கு சுவாமிஜி, இல்லை ஆலன், என்நாட்டை எடுத்துக்கொண்டால்
அங்குள்ள பலருடன் ஒப்பிடும் போது என் நினைவாற்றல் ஒன்றுமே இல்லை. மெக்காலே எழுதிய
” இங்கிலாந்தின் வரலாறு”உங்களுக்குத் தெரியுமே! அதை மனப்பாடம் செய்து, வார்த்தை
பிசகாமல் ஒப்பிக்க நான் மூன்றுமுறை அதைப் படிக்க வேண்டியிருந்தது. என் தாயோ எந்த நூலானாலும்
ஒரு முறை படித்துவிட்டே அப்படியே ஒப்பிக்கும் திறமை பெற்றிருந்தார்” என்று ஏதோ சாதாரண விஷயத்தைச்சொல்வது
போல் கூறினார். திகைப்பினாலும் வியப்பினாலும் எனக்கு நாவே எழவில்லை. அப்படியே மௌனமாக
நின்றேன். கடவுளே! சுவாமிஜி கூறிய வரலாற்று நூலைப் படித்து அப்படியே ஒப்பிக்க வேண்டுமானால்
நாங்கள் எத்தனை முறை அதைப் படிக்க வேண்டியிருக்கும்! என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது” என்று எழுதுகிறார் ஆலன்.
தாம் படித்த நூல்களை வார்த்தை பிசகாமல் ஒப்பிப்பது என்பது ஒரு புறம்
இருக்க, அவர் படித்த நூல்களும் ஒன்றிரண்டல்ல.
எந்தத் தலைப்பிலும் எந்த நேரத்திலும் பேசுவதற்குத்
தயாராக இருக்கின்ற அளவிற்கு எண்ணற்ற நூல்களை க் கற்றவர். ஒரு முறை ” எக்சாமினர்” பத்திரிகைக்கு அவர்
பேட்டி அளித்த போது பண்டைய ரஷ்ய வரலாறு, நாடோடி இனமான தார்த்தர்கள், ஸ்பெயினில் மூர்
வம்சத்தினரின் ஆட்சி போன்ற விஷயங்களைத் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். எங்கும்
எந்தத் தடங்கலோ தயக்கமோ இல்லாமல் ஆண்டு, தேதி போன்றவற்றைக் கூட சிறிதும் பிசகின்றி
அவர் கூறினார்.
ஆனால் சுவாமிஜி கூறியவற்றில் அறிவு மூலம் அவர் பெற்ற
கருவூலம் இருந்தது மட்டுமல்ல, அதைக் கடந்த
ஒன்றும் இருந்தது. அந்த ஏதோ ஒன்று” உணர்வு கடந்த ஏதோ தளங்களிலிருந்து அவருக்கு வருகிறது என்பதை
மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. அறிவு எங்கிருந்து
பிறக்கிறதோ, அறிவின் இருப்பிடம் எதுவோ அந்த இடத்தின்வாசல்கள் அவருக்காகத் திறந்திருந்தது
போல் தோன்றியது. அந்த இடம் சுவாமிஜியைப் பொறுத்த வரை தேவியின் திருவடிகள். ”நான் தேவியை
நம்புகிறேன்” எனக்கு முற்றிலும் தெரியாத ஒரு
தலைப்பில் பேச வேண்டுமானாலும் நான் அவளது தைரியத்தில் மேடை ஏறுகிறேன். ஏனெனில் எனது நாவில் அவள் சொற்களை நடமிடச்செய்வாள் என்பது எனக்குத்
தெரியும்” என்பார் அவர்.
No comments:
Post a Comment