Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-41

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-41

🌸

சான்பிரான்சிஸ் கோவில்

.................................

 கேம்ப் இர்விங்கில் இரண்டு வாரங்கள் தங்கிவிட்டு அங்கிருந்து மீண்டும் சான் பிரான்சிஸ் கோவிற்கு வந்தார் சுவாமிஜி. இங்கே ஹேன்ஸ்ப்ரோ விடை பெற்றுக் கொண்டார். சுவாமிஜிடாக்டர் லோகன் என்பவரின்  வீட்டில் தங்கினார். மிக நல்லவரும் சுவாமிஜியிடம் அளவற்ற பக்தி கொண்டவருமான லோகன் அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார். ஆனால் அவரது மனைவி, சகோதரி மற்றும் குடும்பத்தினர் யாரும் சுவாமிஜியிடம் ஈடுபாடு காட்டவோ அவரது சொற்பொழிவுகளைக்கேட்கவோ செய்யவில்லை. அவர் அங்கே தங்குவதையே  அவர்கள் விரும்பவில்லை எனலாம். அத்தகைய சூழ்நிலையிலும் சுவாமிஜி அங்கே தங்கியது லோகனின் பக்தி ஒன்றிற்காகவே. சுவாமிஜி எங்கள் வீட்டிலிருந்து சென்ற பிறகு வீடு வீடாகவே இல்லை.ஏ தோ எல்லா தெய்வங்களும் எங்களைக் கைவிட்டுவிட்டன போல் இருந்தது. எனக்கு அவர் ஏசுநாதரே என்று பின்னாளில் எழுதினார் லோகன்.

 சுவாமிஜி அங்கிருந்த போது சான் பிரான்சிஸ்கோ வேதாந்த சங்கத்தின் கூட்டம் ஒன்று  நடைபெற்றது. அதில் அவர் கீதை பற்றி பேசினார். இன்னும் ஓரிரு சொற்பொழிவுகளும் நடைபெற்றன. அவையும் கீதை மற்றும் கிருஷ்ணர் பற்றியவையாக இருந்தன. மே 30-ஆம் நாள் சுவாமிஜி அங்கிருந்து விடைபெற்றார். அத்துடன் சுவாமிஜியின் கலிபோர்னியா பயணம் நிறைவு க்குவந்தது.

 

ஜுன் இரண்டாம் நாள் சிகாகோ வந்த சுவாமிஜி நாலைந்து நாட்கள் அங்கே தங்கினார். தம் வாழ்வில் நீங்கா இடம் பெற்ற ஹேல் குடும்பத்தினரைச் சென்று கண்டார். காலை சிகாகோவிலிருந்து புறப்படும் நாள் காலை சுவாமிஜியின் அறைக்கு வந்தார் மேரி ஹேல்.சுவாமிஜி கவலையே வடிவானவராக அமர்ந்திருந்தார். அவரது படுக்கை கலையாமல் இருந்தது. காரணம் கேட்டபோது இரவு முழுவதும் தூங்கவில்லை என்றார். பிறகு மெல்லிய குரலில், ஓ, மனித உறவுகளைப் பிரிவது எவ்வளவு சிரமமாக உள்ளது என்றார்.ஹேல் குடும்பத்தினரைப் பிரிய அவர் அவ்வளவு சிரமப் பட்டார். உனக்கும் சகோதரிகளுக்கும் அம்மாவிற்கும் ஆசிகள். அபஸ்வரங்கள் நிறைந்த, ஓசை மிகுந்த என் வாழ்வில் நீங்களே இன்னிசை நாதங்களாக இருந்து வந்துள்ளீர்கள் என்று ஒரு முறை மேரிக்கு அவர் எழுதினார்.

....

 நியூயார்க்கில்

...................

 சிகாகோவிலிருந்து ஜுன் 7- ஆம் நாள் நியூயார்க்கை அடைந்தார். வேதாந்த சங்கத்தில் தங்கினார். அங்கே ஏற்கனவே இருந்த துரியானந்தரும் அபேதானந்தரும் சுவாமிஜியைக் கண்டு மிகவும் மகிழ்ந்தனர். நிவேதிதையும் அங்கே இருந்தார். வேலைகளைப் பொறுத்தவரை அவ்வளவு திருப்திகரமாக இல்லை நான் இங்கு வந்த போது  சங்கம் ஏறக்குறைய சிதறிச் சின்னாபின்னமாகி விட்டிருந்தது- எல்லோரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் ஒட்ட வைக்க வேண்டியிருந்தது என்று எழுதுகிறார் சுவாமிஜி. அவரது நண்பர்களில் பலர் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தனர்.சிலர் முற்றிலுமாகத் தொடர்பை விட்டிருந்தனர். பழைய நண்பர்களைக் காண்பதில் சுவாமிஜி மகிழ்ந்தார். சுவாமிஜி வந்திருப்பது பத்திரிகைகளில் பிரசுரிக் கப் பட்டன. சுவாமிஜி பல சொற்பொழிவுகள் செய்தார்.

.....

 சொற்பொழிவுகள்

................

நான் வெறுமனே, பேசுகிறேன் என்று நினைக்கிறீர்களா?கேட்பவர்களுக்காக. அவர்கள்  உணரத்தக்க ஒன்றை நான் கொடுக்கிறேன். அப்படி ஒன்றை நான் கொடுக்கிறேன் என்பதை அவர்களும் உணர்கிறார்கள் என்று தமது சொற்பொழிவைப் பற்றி சுவாமிஜி ஒரு முறை கூறினார். தியான வேளையில் எப்படி ஆன்மீக சக்தி விழித்தெழுமோ அப்படி அவரது சொற்பொழிவுகளைக்கேட்டு கொண்டிருக்கும் போதும், ஆன்மீக சக்தி விழித்தெழுவதை நான்  உணர்ந்திருக்கிறேன் என்று ஒரு முறை அபேதானந்தர் கூறினார்.

 ஒரு முறை சுவாமிஜியின் சொற்பொழிவிற்குப் பிறகு அபேதானந்தர் கேள்வி- பதில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த விரும்பினார். இதற்குப் பிறகு ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியா? என் சொற்பொழிவு ஏற்படுத்திய தாக்கத்தைக்கெடுக்க விரும்புகிறாயா? என்று கேட்டார் சுவாமிஜி. இதனை கூறிவிட்டு அபேதானந்தர், ஓ, உலகிற்காக சுவாமிஜியிடம் ஸ்ரீராமகிருஷ்ணர் எத்தகைய மாபெரும் ஆற்றலை விட்டுச் சென்றிருக்கிறார்! உலகின் சிந்தனைப் போக்கையே அவர் மாற்றிவிட்டார் என்றார்.

 சுவாமிஜியின் கேள்வி- பதில் நிகழ்ச்சிகளில் சிலர் சிறந்த கேள்விகள் கேட்பார்கள். சிலரது கேள்வியே வளவளவென்று நீண்ட சொற்பொழிவு போல் இருக்கும். சுவாமிஜியிடமிருந்து கேட்பதைவிட, தாங்கள் சொல்வதிலேயே அவர்கள் கவனமாக இருப்பார்கள். ஆனால் சுவாமிஜி  அதன் பிறகு  ஓரிரு வார்த்தைகளிலேயே அவர்களை அடக்கி அமரச் செய்து விடுவார்.

 இந்த நாட்களில் கலிபோர்னியாவில் சுமார் 160 ஏக்கர் கொண்ட தமது சொந்த இடத்தை மிஸ் மின்னி புக் என்பவர் வேதாந்த இயக்கத்திற்காக அளித்தார்.

 

 அந்த இடத்தில் ஓர் ஆசிரமத்தை நிறுவி அதன் பொறுப்பை துரியானந்தர் வகிக்க வேண்டும் என்று சுவாமிஜி விரும்பினார். நீ அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தேவியின் திருவுளம் என்றார் சுவாமிஜி. துரியானந்தர் மெள்ள சிரித்து விட்டு, தேவியின் திருவுள்ளம்? ஏன் , உங்கள் திருவுளம்  என்று சொன்னாலே போதுமே! இந்த விஷயத்தில் தேவி தனது திருவுளத்தை உங்களிடம் சொன்னாளா? நீங்கள் கேட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, ஆம், அவள் சொன்னாள், நான் கேட்டேன். உனது நரம்புகளும் மிக மிக நுண்மை பெறுமானால்  நீயும் தேவியின் வார்த்தைகளை நேரடியாகவே கேட்கலாம் என்றார். ஏறக்குறைய ஓர் ஆண்டிற்கு முன்பு துரியானந்தர் மேலை நாட்டிற்கு வர மறுத்தபோது, தமது அன்பு ஒன்றினால் அவரை வசப் படுத்தியது போலவே இம்முறையும் அவரைச் சம்மதிக்கச்செய்தார் சுவாமிஜி.

 

 புறப்படுமுன் துரியானந்தர் சுவாமிஜியிடம், எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள் என்று கேட்டார். சுவாமிஜி கூறினார். போ, கலிபோர்னியாவில் சென்று ஓர் ஆசிரமத்தை ஏற்படுத்து, ஆன்மீகக்கொடியை அங்கே பறக்கவிடு. இந்தக் கணத்திலிருந்து இந்தியா பற்றிய நினைவுகளைக் கூட உன் சிந்தனையிலிருந்து அழித்துவிடு! அனைத்திற்கும் மேலாக! வாழ்க்கையை வாழ், மற்றதை தேவி கவனித்துக் கொள்வாள், இது தான்  ”சாந்தி ஆசிரமம் என்று பின்னாளில் உருவாகியது.

 ஜுலை 3-ஆம் நாள் நியூயார்க்கிலிருந்து டெட்ராய்ட் சென்றார் சுவாமிஜி. கிறிஸ்டைனையும் அவரது தாயாரையும்  சந்திப்பது அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. அங்கே கிறிஸ்டைனின் வீட்டில் தங்கினார். ஏழைகளாக இருந்தாலும் அவர்கள் தங்களால் இயன்ற அளவு சுவாமிஜிக்கு வேண்டியவற்றைச்செய்தனர். அங்கே பொதுவாக ஓய்விலேயே தமது நாட்களைக் கழித்தார் சுவாமிஜி.

.....

 உடற் சிறையில்

..................................

நெருங்கிய அன்பர்களுக்காக ஓரிரு கூட்டங்களில் கலந்து கொண்டார். சுவாமிஜி அங்கே அறிந்திருந்த மற்றொருவர் மேரி ஃப்ங்கே. சுவாமிஜி மிகவும் மெலிந்திருந்ததாகவும், உலகம் சாராத ஒரு மென்மை அவரிடம் மிளிரத் தொடங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அந்த மாபெரும் ஆன்மா இனிமேலும் உடற்சிறையில் நீண்ட நாட்கள் தங்காது என்று தோன்றியது. அது தான் உண்மை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் ஏதோ அசட்டு நம்பிக்கைகளில் எங்களைப் புதைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டோம் என்று எழுதுகிறார் அவர். இங்கு  சுவாமிஜி மூன்று நான்கு நாட்கள் தங்கினார். இங்கும் கிறிஸ்டைன் முதலானவர்களிடம் தமது அன்பு மழையைப்பொழிந்தார். அவர்களுக்குச் சமைத்தார். சாப்பிடச்செய்தார். பின்னர் மீண்டும் நியூயார்க் திரும்பினார்.

ராமகிருஷ்ண மிஷனின் சின்னம்

 

... நியூயார்க்கில் சுவாமிஜி  வேதாந்த சங்கத்தின் கட்டிடத்திலேயே தங்கினார். சங்கத்திற்காக ஓர் அறிக்கை தயார் செய்த சுவாமிஜி அதில் சின்னம் ஒன்று வேண்டும் என்றுவிரும்பினார். அப்போது தான்  வந்திருந்த கடிதத்தின் உறை ஒன்றைக் கிழித்து அதன் உட்பகுதியில் அவர் ஒரு சின்னத்தை வரைந்தார். பிறகு அதை அங்கிருந்த ஹென்றி வான் ஹாகன் என்பரிடம் கொடுத்து, அதனைத் தகுந்த அளவுகளில் வரையுமாறு கேட்டுக்கொண்டார். ஹாகன் வரைபடங்கள் வரைவதிலும், அச்சுக்கலையிலும்  தேர்ச்சி பெற்றவர். சுவாமிஜியின் பிரம்மச்சாரி சீடர்களில் ஒருவர் அவர். அவர் தான் அந்தச் சின்னத்தை வரைந்து பூர்த்தி செய்தவர். அது தான் இன்று ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் சின்னமாக விளங்குகிறது.

 அலைவீசும்  தண்ணீர் கர்மத்தையும், தாமரைபக்தியையும், உதய சூரியன் ஞானத்தையும் சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பு யோகத்தையும் எழுப்பப்பட்ட குண்டலினி ஆற்றலையும் அன்னம் இறைவனையும் குறிக்கிறது. எனவே இந்தப் படத்தின் திரண்ட கருத்து, ஞானம்,கர்மம், பக்தி, யோகம் ஆகிய நான்கின் இணைப்பால் இறைக் காட்சியைப் பெறுவதாகும் என்று அந்தச் சின்னத்தை விளக்குகிறார் சுவாமிஜி.

......

 சிவனின்  பூதகணங்கள்

...................

 ஒரு நாள் சுவாமிஜி நடப்பதற்காக வெளியில் சென்றார். தெருவில் அழுக்கான கோலத்தில் நின்றிருந்த ஏழைச்சிறுவன் ஒருவன் சுவாமிஜியிடம் எப்படியோ ஒட்டிக்கொண்டான். சுவாமிஜியும் மிகுந்த  பாசத்துடன் அவனையும் அழைத்துக் கொண்டு வேதாந்த சங்கத்திற்கு வந்தார். வரும் வழியில் அவனைப்போன்ற மற்ற ஓரிரு சிறுவர்களும் சேர்ந்து கொள்ள, ஓர் ஏழைச் சிறுவர் பட்டாளத்துடன் சுவாமிஜி மடத்திற்குள் நுழைந்தார். அங்கு நின்றிருந்த கிறிஸ்டைன், இப்படிப்பட்டவர்களை எல்லாம் ஏன் இவர் கவர்கிறார்? என்று தமக்குள் நினைத்தார். அவர் நினைத்தது தான் தாமதம். பளிச்சென்று வந்தது சுவாமிஜியின் பதில். இதோ பார், இவர்கள் சிவபெருமானின் பூத கணங்கள்.

 மற்றொரு முறை தெரு வழியாகச்சென்று கொண்டிருந்த இரண்டு ஏழைகளைப் பார்த்து, ஆ, இவர்கள் தோற்றுவிட்டார்கள். வாழ்க்கை இவர்களை வென்றுவிட்டது. என்று நெகிழ்ந்த குரலில் கூறினார்.

......

 அமெரிக்காவிற்கு விடை

...............................

 கலிபோர்னியாவில் பண்கள் நிறைவுற்றதும் அங்கிருந்து நேராக இந்தியாவிற்குத் திரும்பவே விரும்பினார் சவாமிஜி. ஆனால் லெக்கட் தம்பதிகள், மெக்லவுட், சாரா, நிவேதிதை போன்றோர் ஏற்கனவே பாரிஸ் சென்றிருந்தனர். உடல் நலமற்றிருந்த மிசஸ் லெக்கட்டிற்கு அங்குதான் சிகிச்சை நடைபெற்றது. அவர்கள் மிகவும் வற்புறுத்திக்கேட்டுக்கொண்டதன்பேரில் பாரிஸ் செல்ல இசைந்தார் அவர்.

 இவ்வாறு சுவாமிஜியின்  அமெரிக்க நாட்கள் நிறைவிற்கு வந்தன. 1900ஜுலை 26-ஆம் நாள் நியூயார்க்கிலிருந்து அவர் புறப்பட்டார்.

.........................

உலக அரங்கிற்கு விடை

...................................................

 பாரிஸ் உலகக் கண்காட்சி

.....................................

 நவீன நாகரீகத்தின்  தலைநகரும், ஆடம்பரம், வேடிக்கை, வினோதம், சுகபோகம் ஆகியவற்றின் சொர்க்கமும், கலை மற்றும் விஞ்ஞானிகளின்  மையமும் ஆகிய  இடம்  பாரிஸ்.அங்கே அமெரிக்கா முதலான பல நாடுகளும் பங்கேற்கின்ற உலகக் கண்காட்சி ஒன்று  நடைபெற இரந்தது. 549 ஏக்கர் மைதானத்தில் அது நடைபெற்றது. விஞ்ஞானம், மதம் என்று பல துறைகளும் அதில் பங்கு பெற்றன. இந்திய விஞ்ஞானியான டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸும் அதில் ஒரு  கட்டுரை வாசிக்க இருந்தார். சிகாகோ போலவே அங்கும் சர்வமத மகாசபை ஒன்று ஏற்பாடு செய்யவே முதலில் அமைப் பாளர்கள் விரும்பினர். ஆனால் சிகாகோ போல் கீழை நாட்டு மதக் கருத்துக்கள் ஓங்கி, கிறிஸ்தவ மதத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என்று பயந்த ரோமன் கத்தோலிக்கர்கள் அதனை எதிர்த்தனர். எனவே மதங்களின் வரலாறு பற்றிய ஒரு மாநாடு நடத்த முடிவு செய்தனர்.

 

 1900 ஜுலை 26- ஆம் நாள் நியூயார்க்கிலிருந்து கப்பலில் புறப்பட்ட சுவாமிஜி ஆகஸ்ட் 3-ஆம் நாள் வெள்ளியன்று பாரிசை அடைந்தார். சுவாமிஜி பிரான்ஸிற்கு வருவது இது  நான்காவது முறையாகும். 1895-இல் ஒரு முறை, 1896- இல் இரு முறை அவர் ஏற்கனவே வந்திருந்தார். ஆனால் அந்த மூன்று முறையுமாகச்சேர்த்து மொத்தம் நான்கு மாதங்களுக்கும் குறைவாகவே தங்கியிருப்பார். ஆனால் இந்த முறை தொடர்ந்து 83- நாட்கள் தங்கினார்.

 ஆரம்பத்தில் லெக்கட் தம்பதியினருடனும் வேறு இடங்களிலும் தங்கிய சுவாமிஜி செப்டம்பர் மாதத்தில் ஜுல் போயி என்ற பிரெஞ்சு க் காரருடன்  தங்க ஆரம்பித்தார். இடையில் இரண்டு முறை பிரிட்டனிக்குச்  சென்று அங்கே தங்கியிருந்த சாராவைச் சந்தித்து வந்தார். ஜுலுக்கு ஆங்கிலம் தெரியாது. சுவாமிஜி ஓரளவு பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்தார். சுமார் 8 வருடங்களுக்கு முன்பு போர் பந்தரில் அவர் சிறிது பிரெஞ்சு கற்றுக் கொண்டதும்  அதிலேயே தமது சகோதரத் துறவிகளுக்குக் கடிதம் எழுதியதும் நினைவிருக்கலாம்.பின்னர் சிகாகோவில் இருக்கும் போதும் ஒரு முறை அவர் பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்தார். 1900 செப்டம்பர் 15- ஆம் நாள் அவர்  கிறிஸ்டைனுக்கு ”விரைவின்பிப்ஆபசினால் என்னால் பிரெஞ்சு மொழியைப் புரிந்து கொள்ள முடிகிறது என்று எழுதினார். ஆகஸ்ட் 24-ஆம் நாள் அவர், இந்து மதமும் தத்துவமும் என்ற சொற்பொழிவு ஆற்றினார். ஆனால் அது ஆங்கிலத்திலா பிரெஞ்சிலா என்பது தெரியவில்லை.

 

 செப்டம்பர் 29-ஆம் நாள் மத்தியக் காலங்களில் மிகவும் பிரபலமாக இருந்த கிறிஸ்தவ மடம்  ஒன்றைச்சென்று கண்டார் சுவாமிஜி. அவருடன் சாரா, மெக்லவுட்,ஜுல் போயி ஆகியோர் சென்றனர். அருகில் குற்றவாளிகளை அடைத்து வைப்பதற்கான இருள் குகைகள் இருந்தன. அதனைப் பார்த்துவிட்டு சுவாமிஜி, ஆ, தியானத்திற்கு எவ்வளவு உகந்த இடம்! என்று கூறினாராம்.

 எந்திரத் துப்பாக்கியைக் கண்டு பிடித்தவர் ஹிராம் மாக்ஸிம். அதே வேளையில் அதற்காக வருத்தப் பட்ட வரும்கூட, நான் வேறு எதையும் கண்டு பிடிக்கவில்லையா என்ன? இந்த அழிவுச்சாதனத்தை மட்டுமே என்னுடன் தொடர்பு படுத்துகிறார்களே! என்று அவர் வருத்தப் பட்டதுண்டு. உண்மையில் அவர் வேறு பலவற்றையும் கண்டு பிடித்தார். எடிசன் மின்சார பல்பைக் கண்டு பிடித்த அதே வேளையில்இவரும் கண்டு பிடித்தார்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக எடிசன் முந்திக்கொண்டு, அதனை அரசாங்கத்தில் பதிவு செய்துவிட்டார்.பறக்கும் எந்திரம ஒன்றையும் 1894- இல் இவர் கண்டு பிடித்தார். இவர் சுவாமிஜியிடம்  மிகுந்த ஈடுபாடு உடையவர். அவரது சிகாகோ சொற்பொழிவைக்கேட்டவர். பாரிஸில் இவரைச் சந்தித்தார் சுவாமிஜி. இவர்பல்வேறு வகைத் துப்பாக்கிகளை விக்கர்ஸ் என்பவருடன் கண்காட்சியில் வைத்திருந்தார். வேறு ஓரிரு நண்பர்களையும் சுவாமிஜி சந்தித்தார். பாரிஸின் தலை சிறந்த ஓவியர்கள், சிற்பிகள் போன்றோரையும் சந்தித்தார்.

......

 கண்காட்சியில்

..................

 உலக க் கண்காட்சியைப் பல முறை பார்த்தார் சுவாமிஜி. மின்சாரத்தின் மாயா ஜாலங்கள், அப்போது தான் கண்டு பிடிக்கப் பட்டிருந்த எக்ஸ்-ரே போன்றவை மக்களைமிகவும் கவர்ந்தன. பௌதீக இயல்பகுதி சுவாமிஜியை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் அங்கு தான் டாக்டர் போஸ் தமது  கட்டுரைகளைப் படித்தார். ஓர் இந்தியரின் வெற்றியில் மிகவும் மகிழ்ந்தார் சுவாமிஜி. அந்த இளம் பௌதீக இயல் விஞ்ஞானி, தனி மனிதனாக மின்னல் வேகத்தில் வந்து தனது அறிவாற்றல் மூலம் மேலை நாட்டு மக்களை மகிழ்ச்சி  வெள்ளத்தில் ஆழ்த்தினார். மின்சாரம் பாய்ச்சியது போன்ற இந்தச்செயல் அரைப் பிணமாகக் கிடந்த நமது தாயகத்திற்குப் புத்துயிர் அளித்தது! பௌதீகத் துறை விஞ்ஞானிகளுள் தலை சிறந்து விளங்குபவர் ஜகதீஷ் சந்திரபோஸ். அவர் ஓர் இந்தியர். ஒரு வங்காளி! நற்செயல் புரிந்தீர். வீரரே!  டாக்டர் போஸும், அவரது லட்சிய மனைவியும் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கெல்லாம் இந்தியாவில் புகழைப் பரப்புகின்றனர். நற்பேறு பெற்ற தம்பதியர் என்று எழுதுகிறார் சுவாமிஜி.

 சுவாமிஜி கண்காட்சியின் புற அழகுகள் எதிலும் பெரிதாக ஈடுபட வில்லை. அவரை ப் பொறுத்தவரை இந்த நாட்களில் தியானம் நன்றாகக் கைகூடியதாக எழுதுகிறார். எல்லாம் தேவியின் திருவுளம். எதைச்செய்ய வேண்டும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.அவள் எதையும் பேச மாட்டாள். மௌனமாக இருந்து விடுகிறாள் ஒரு மாத காலமாக எனது ஜபமும் தியானமும் மிக நன்றாக நடந்து வருகிறது.

......

 எம்மா கால்வே

.................

 சுவாமிஜியின் இந்தப் பயணத்தில் பிரபல பாடகியான எம்மா கால்வே கலந்து கொண்டார். கால்வே சுவாமிஜியைக் கிறிஸ்தவ முறைப்படி ஃபாதர் என்றே அழைத்தார். ஒருநாள் கால்வேயின் பாடல் நிகழ்ச்சிக்கும் மிஸ்டர் லெக்கட்டுடன் சென்று வந்தார் சுவாமிஜி. அன்றைய நிகழ்ச்சி தான் கால்வேயை உலகப் புகழ்பெற்ற பாடகி ஆக்கியது. நிகழ்ச்சி முடிந்தபிறகு சுவாமிஜி அவரை ஒப்பனை அறையில் கண்டு வாழ்த்தினார். மறுநாள் கால்வே சுவாமிஜி தங்கியிருந்த லெக்கட் தம்பதியினரின் வீட்டிற்கு வந்த போது அவர்களுக்காக பிரெஞ்சு தேசிய கீதத்தைப் பாடினார்.

 உலகக் கண்காட்சியின் ஒரு பகுதியான சமய வரலாறு மாநாடு செப்டம்பர் 3 முதல் 8 வரை 6 நாட்கள் நடைபெற்றது. சுவாமிஜி செப்டம்பர் 7-ஆம் நாள் இரண்டு முறை அதில் பேசினார். முதற் சொற்பொழிவில் சிவ லிங்கம், சாளகிராமம்,  போன்றவை காமத்துடன் தொடர்புடைய சின்னங்கள் அல்ல என்பதை எடுத்துக் கூறினார். இரண்டாவது சொற்பொழிவில் இந்தியாவில் சமயக் கருத்துக்களின்  பரிணாமம் பற்றி பேசினார். அவர் பிரெஞ்சு மொழியில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் என்ன மொழியில் பேசினார் என்பது தெரியவில்லை.


No comments:

Post a Comment