சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-7
🌸
பிரேம பக்தியும்
ராதையின் காட்சியும்.
பக்தியின்
உச்சநிலையாகிய பிரேம பக்தியும் நரேந்திரரிடம் அந்த இளம் வயதிலேயே நிறைந்திருந்தது.
ஒரு நாள் அவரது வீட்டிற்கு அவரது சகோதரச் சீடர்களான சரத்தும் சசியும் வந்திருந்தனர். மூவருமாகப்பேசியபடியே நடந்து சென்று
பக்கத்திலிருந்த கார்ன்வாலிஸ் சதுக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இரவு
11 மணி ஆயிற்று. அன்று முழுவதும் நரேந்திரர் பக்தி பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.
கடைசியில், பிரேமைப் பொக்கிஷத்தை அள்ளி வீசியபடி சைதன்யர் வந்து கொண்டிருக்கின்றார்...
வாருங்கள் தோழர்களே என்று நித்யானந்தர் அழைக்கின்றார்” என்ற பாடலை உணர்ச்சிப்பெருக்குடன் பாடினார். பாடல் முடிந்ததும்
தமக்குத்தாமே பேசிக்கொள்வது போல் , பிரேமை மட்டுமா? ஆற்றலையும் ஞானத்தையும் முக்தியையும்
எல்லோர் முன்பும் உண்மையிலேயே வாரி இறைக்கிறாரே! என்று மெல்லிய குரலில் கூறினார்.சிறிது
நேரம் மௌனமாக இருந்தார். பிறகு தொடர்ந்தார். அன்று இரவு கதவுகளை மூடிவிட்டு நான் படுத்திருந்தேன். அவர் என்னை இழுத்தார்- சரியாக ச் சொல்வதானால் என்னுள்
இருந்த வரை இழுத்தார். என்னைத் தட்சிணேசுவரத்திற்கு
அழைத்துச்சென்றார். என்னிடம் ஏராளம் பேசினார். எவ்வளவோ உபதேசித்தார் . அதன் பிறகே நான்
திரும்பி வர அனுமதித்தார். உண்மை தான் தட்சிணேசுவரத்தில் உள்ள சைதன்யரால் எல்லாம் முடியும்.
அவர் எல்லாம் வல்லவர்.
என்ன தான்
பக்தி என்றாலும் நரேந்திரரால் ராதா கிருஷ்ணர் காதலையும் பிரேமையையும் ஏற்றுக்கொள்ள
இயலவில்லை. அவர்கள் இருவரும் உண்மையிலேயே வாழ்ந்தார்களா என்பது அவரது முதல் சந்தேகம்.
அவர்கள் இருவரும் கொண்ட காதவைத் தவறாக, வரம்பு மீறியதாக க்கருதினார் அவர். ஸ்ரீராமகிருஷ்ணர்
எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவரால் நரேந்திரரிடம் ராதா- கிருஷ்ணர் தத்துவத்தை உணர்த்த
இயலவில்லை. எனவே ஒரு நாள் கூறினார், ராதை என்ற
ஒருத்தி இருந்ததில்லை என்றே வைத்துக் கொள்வோம். ஏதோ ஒரு சாதகர் தன் கற்பனையில் ராதையை
உருவாக்கினார் என்றே இருக்கட்டும். ஆனால் கற்பனையாகவே இருந்தாலும், அவர் தன்னை ராதையாக
எண்ணும் போதும் அவளது குணநலன்களைச் சிந்திக்கும்
போதும் அவளுடைய அகவுணர்வுகளை ஏற்றுக்கொள்வதால் தன்னினைவு அழந்து அச்சமயத்திற்கு
அவளாகவே ஆகிவிடுகிறார் என்பதை நீ ஏற்கத்தானே வேண்டும்! அப்படியானால் அந்தப் பிருந்தாவன
லீலை நடைபெற்றது என்பது உண்மைதானே!
ஆனால் அனபவத்திற்குக்
குறைந்த எதையும் நரேந்திரர் ஏற்றுக் கொள்வதில்லையே! எனவே அவருக்கு அனுபவத்தை வழங்கினார்
ஸ்ரீராமகிருஷ்ணர். . ஒரு நாள் நரேந்திரருக்குக் கனவு ஒன்று வந்தது. அதில் ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றிவா,
உனக்குக் கோபிகையான ராதையைக் காட்டுகிறேன்” என்று கூறி நரேந்திரரைச்சிறிது
தூரம் அழைத்துச்சென்றார். பிறகு திரும்பி, ராதையை எங்கே தேடுவாய்? என்று கேட்டுவிட்டு,
தாமே ராதையாக மாறி நின்றார். ராதையின் பேரழகு
விளக்கங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்ததை நரேந்திரர் கண்டார். இந்தக் கனவு நரேந்திரரின்
வாழ்க்கையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது.
பிரம்ம சமாஜத்தில்
பொதுவாகப் பாடப்படுகின்ற பாடல்களை மட்டுமே பாடிவந்த நரேந்திரர் இந்த அனுபவத்திற்குப்
பிறகு ராதை-கிருஷ்ணர் பற்றிய பக்திப்பாடல்களை அதிகம் பாடத் தொடங்கினார்.
தந்திரம்
அல்லது தாந்திரிகம் என்பது தேவியை வழிபடுகின்ற நெறியாகும். இதில் தட்சிணாசாரம் (வலது
முறை, வாமாசாரம் (இடது முறை) என்று இரண்டு பிரிவுகள் உண்டு. தட்சிணாசாரம் என்பது மற்ற நெறிகளைப்போல சாதாரண வழிபாட்டு முறை.
ஸ்ரீவித்யா உபாசனை போன்று தென்னிந்தியாவிலும் மற்ற பகுதிகளிலும் பரவலாக தேவியை வழிபடுகின்ற முறைகள் தட்சிணாசாரத்தைச்சேர்ந்தவை.
வங்காளத்தில்
வாமாசாரம் அதிகமாக அந்த நாட்களில் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக காமம், கோபம், ஆசை
ஆகியவை மனிதனின் எதிரிகளாகக் கருதப்படுகின்றன. அவற்றை வென்று , கடந்து செல்லுமாறு எல்லா
நெறிகளும் போதிக்கின்றன. ஆனால். வாமாசாரம், காமம், முதலியவற்றை நண்பர்களாகக் கொள்ளுமாறு
போதிக்கிறது. அவற்றின் வழியே சென்று, அவற்றின் ஆற்றலையும் சொந்தமாக்கிக்கொண்டு ஆன்மீகத்தில் முன்னேறுவதற்கு வாமாசாரம் வழிகாட்டுகிறது. காமத்தையும் ஆசைகளையும் விலக்குவதற்குப்
பதிலாக ஏற்றுக்கொண்டு செய்கின்ற சாதனைகளை இது போதிக்கிறது. பேசுவதற்கும் கேட்பதற்கும்
இதமாக இருக்கின்ற இந்தப் பாதை , உரிய கவனமின்றி
பின்பற்றப்படும்போது நல்லொழுக்கச் சீர்குலைவுகளுக்கு
இட்டுச் செல்வனவாக அமையக்கூடியவை. அத்தகைய ஒரு நிலைமையே அன்றைய வங்காளத்தில் காணப்பட்டது.
தந்திர சாதனை என்ற பெயரில் ஒழுக்கக்கேடுகள் கட்டவிழ்ந்து சமுதாயத்தைச் சீர்குலைத்து
வந்தது.
ஒரு நாள்
நரேந்திரர் வாமாசாரம் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கேட்டார். ஸ்ரீராமகிருஷ்ணர் அந்தப்
பேச்சையே வளர்க்க விரும்பவில்லை. இவற்றைப் பற்றி எல்லாம் நீ அறிய வேண்டாம். என்னைப்
பொறுத்தவரை, எல்லா பெண்களையும் நான் தாயாகக் காண்கிறேன். இது தூய வழி. இதில் கவலையோ
அபாயமோ இல்லை. பெண்ணைச் சகோதரியாகக் காண்பதும் பரவாயில்லை. பெண்ணை வேறு எந்தக் கண்ணோட்டத்தில்
காண்பதும் தவறானது, அபாயகரமானது. இந்தப் பாதைகளில் செல்லும்போது மனத்தூய்மையைக் காப்பது கடினம். கடவுளை அடைய பல
வழிகள் உள்ளன. வாமாசாரப் பாதையும் வழிதான். ஆனால் அழுக்கான பாதை, துப்புரவாளர் வருவதற்காகப் புழக்கடை வாசல் இருக்குமே, அது போன்ற
பாதை அது. முன் வாசல் வழியாக வருவது தானே சிறப்பு! என்று கூறினார் அவர்.
நரேந்திரரின்
சாதனைகள் பற்றி பின்னாளில் சாரதானந்தர் கூறினார், ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரருக்குப்
பல்வேறு உபதேசங்கள் கொடுத்து, பக்தி நெறி மற்றம் பல நெறிகளில் பல்வேறு சாதனைகளைச்செய்யுமாறு
செய்தார். நரேந்திரரும் அசாதாரண ஆற்றல் படைத்தவராக , கிரகிக்கும் திறமை பெற்றவராக இருந்தார்.
அதனால் குறைந்த காலத்திலேயே ஒவ்வொன்றின் வாயிலாகவும் முன்னேறி அந்தந்த சாதனையின் பலன்களைப்
பெற்றார். அந்த நாட்களில் ஒரு நாள் நரேந்திரர் தமது வீட்டில் ஆனந்தமாக அமர்ந்திருந்தார்.
அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது அவரது ஆனந்தத்திற்கான காரணம் புரிய வந்தது.
குருதேவரின் திருவருளால் அவர் ஸ்ரீராதையின் தரிசனம் பெற்றிருந்தார். பல்வேறு தேவதேவியரின்
தரிசனமும் அவருக்கு வாய்த்திருந்தது. ஆனால்
அவர் எதையும் வெளியில் கூறுவதில்லை.
ராதையின்
பக்தியில் தோய்ந்தவராக பின்னாளில் ஒரு முறை
ராதையைப் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறினார்.
அப்போது கறந்த பாலில் தோன்றும் நுரை பட்டால்
உன் விரல் வெட்டுப் படுமா? ஒரு வேளை அது கூட சாத்தியமாகலாம். ராதையின் இதயமோ
அதைவிட மென்மையானது.
ஆன்மீக வாழ்க்கையில்
ஈடுபட ஈடுபட சில அமானுஷ்ய அனுபவங்களைத் தவிர்க்க இயலாது. கனவில் வரும் அனுபவங்கள்,
விழிப்பு நிலையிலேயே நடைபெறும் சம்பவங்கள் என்று இவை பலதரப்பட்டவை. இவற்றைப் புரிந்து
கொள்ளவும் , சரியாக ஏற்றுக் கொள்ளவும் ஒரு தகுந்த குருவின் வழிகாட்டுதல் மிகவும் தேவை.
சில அமானுஷ்ய
அனுபவங்கள்
நரேந்திரரின் சில அனுபவங்களைக் காண்போம். இந்த நாட்களில்
தம்மைப்போல் உருவம் கொண்ட, தமது இரட்டை” ஒருவரை நரேந்திரர் காண ஆம்பித்தார்.
அவர் நரேந்திரரைப்போலவே இருப்பார். கண்ணாடியில் தெரிகின்ற பிம்பம் செய்வது போல், நரேந்திரர்
செய்கின்ற அனைத்தையும் அந்த இரட்டையும் செய்வார். சில நேரங்களில் ஒரு மணிநேரம் கூட
நரேந்திரருடன் அந்த இரட்டை இருப்பதுண்டு. நரேந்திரர் இதனை ஸ்ரீராமகிருஷ்ணரிடம் தெரிவித்தார்.
அவர் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தியானத்தின் உயர்நிலைகளில் இத்தகைய அனுபவங்கள்
சாதாரணமாக நிகழக்கூடியவை என்று கூறிவிட்டார்.
மற்றொரு
சம்பவம். நண்பரான சரத்தின் வீட்டிற்கு ஒரு
நாள் இரவில் சென்றார் நரேந்திரர். வீட்டில்
நுழைந்ததும் திகைத்துச் சிலைபோல் நின்றார். காரணம் கேட்ட போது அவர், இந்த வீட்டை இதற்கு முன்பு நான் எப்போதோ பார்த்திருக்கிறேன்,
எந்த வழியாக எங்கே போக வேண்டும், எந்த அறை எங்கே உள்ளது, என்று எல்லாமே எனக்குத் தெரிந்துள்ளன.
ஆச்சரியம்! என்றார். ஆனால் அவர் அன்றுதான் சரத்தின் வீட்டிற்கு முதன் முறையாகச்சென்றார்.
இது பற்றி அவர் பின்னாளில் குறிப்பிட்டார்.
சிறு வயதிலிருந்தே
சில இடங்களையும் பொருட்களையும், மனிதர்களையும்
பார்க்கும்போது, அவர்களை முன்பே பார்த்திருக்கிறேன், பழகியுள்ளேன் என்ற உணர்வு சில
வேளைகளில் எனக்கு ஏற்படுவதுண்டு. நினைவு படுத்த முயற்சிப்பேன். எவ்வளவு முயன்றாலும் ஞாபகம் வராது. அதே வேளையில் அவர்களை அதற்கு முன்னால்
பார்த்த தில்லை என்றும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவ்வப்போது நிகழும்.
நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பேன். திடீரென யாரோ ஒருவனது ஏதோ ஒரு வார்த்தை என் நினைவைத்
தூண்டி விடும். இதே விஷயத்தைப்பற்றி இவர்களுடன் இதே வீட்டில் முன்னரும் பேசியிருக்கிறேன்.
இந்த நண்பனே அப்பொழுதும் இதே கருத்தைச்சொன்னான்” என்று தோன்றும். ஆனால் எவ்வளவு
தான் முயற்சி செய்தாலும் எங்கே, எப்போது என்பது மட்டும் நினைவிற்கு வராது. முற்பிறவிக்கொள்ளையைப்
பற்றி அறிந்த போது, இந்த இடங்களையும் இந்த மனிதர்களையும் முற்பிறவிகளில் சந்தித்திருக்கலாம்,
அந்த நினைவுகளே அவ்வப்போது சிறிது வருகிறது என்று கருதினேன். ஆனால் இந்த முடிவு அறிவுக்குப்
பொருந்தியதாக இருக்கவில்லை. ஆனால் இப்பொது எனக்கு உண்மை தெரிகிறது. நான் இந்தப் பிறவியில்
யார் யாருடன் எங்கே, எப்போது எப்படிச் சந்திக்கப்போகிறேன், பழகப்போகிறேன், என்பதை நான் பிறக்குமுன்னரே ஓவியக் காட்சிபோல் கண்டிருக்க வேண்டும்,
அந்த நினைவு தான் அவ்வப்போது மனத்தில் எழுகிறது.
தொலைதூரத்தில்
நடப்பவற்றைக் காண்கின்ற , கேட்கின்ற ஆற்றலும் நரேந்திரருக்கு உண்டாயிற்று. ஒரு நாள்
அவர் தியானத்திற்கென அமர்ந்து, சற்றே தியானம் கைகூடியதும் அவரது மனம் ஓர் உயர்ந்த நிலையை அடைந்தது. குறிப்பிட்ட
மனிதன். குறிப்பிட்ட வீட்டில் அமர்ந்து, குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை
அவரால் காண முடிந்தது. இவ்வாறு கண்டதும் அந்தக் காட்சி உண்மையா, பொய்யா என்று அறிய
ஆவல் எழுந்தது. உடனே எழுந்து, தாம் கண்ட அந்த
இடத்திற்குச்சென்றார். அவர் தியானத்தில் கண்ட அனைத்தும் உண்மையாக இருந்தன. துளி
கூட மாற்றம் இல்லை. சில நாட்களுக்குப் பின் அவர் இதனை குருதேவரிடம் தெரிவித்தார். அதற்கு
குருதேவர் இவை இறையனுபூதிக்கான வழியில் உள்ள
தடைகள். சில நாட்கள் தியானம் செய்யாதே, என்று
கூறினார்.
மற்றோர்
அமானுஷ்ய ஆற்றலும் நரேந்திரரிடம் வளரத்தொடங்கியது. யாராவது ஒருவர் எழுதிய காகிதத்துணுக்குகளைத்
தம் கையில் வைத்திருந்தால் அந்த எழுத்திற்குரிய
நபரைப்பற்றிய அனைத்தும் அவருக்குத் தெரிந்துவிடும். அந்த நபரின் தோற்றம்., அவர் என்ன உடை அணிந்துள்ளார், அவரது மனத்தில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது
போன்ற அனைத்தும் அவருக்குத் தெரிந்து விடும். இதனைத் தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு
பல நேரங்களில் அவர் களித்ததுண்டு. ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் அதனைக் கண்டித்தார். இது
ஒரு பெரிய வரப்பிரசாதம். ஆனால் மனித குலத்தின் நன்மை என்ற ஒன்றைத் தவிர வேறு எதற்கும்
இந்த ஆற்றலைப் பயன்படுத்தாதே. யாரையோ பற்றிய தகவல்களை உனக்குக்கொண்டு வருகின்ற இந்தக்
கைகள் மனிதர்களின் வேதனையைத்துடைக்கவும் வல்லவை. உன் ஆற்றலைப் பிறரது வேதனையைத் துடைப்பதற்காகப்
பயன்படுத்து” என்றார் அவர்.
ஸ்ரீராமகிருஷ்ணரின்
இந்த உபதேசம் நரேந்திரருக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு மாறுபட்ட பரிமாணத்தைக் காட்டின
என்பதில் ஐயமில்லை. நமக்கு இறைவன் தருகின்ற ஆற்றல்களையும்மேன்மைகளையும் மற்றவர்களின்
நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவரது மனத்தில் ஆழப்பதிந்தது.ஆயினும்
மற்றொரு நிகழ்ச்சியின் மூலமாக அது பரிபூரணமாக அவரது மனத்தில் பதிந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து
பெற்ற செய்தி
ஒரு நாள்
ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்களுடன் தம் அறையில் அமர்ந்திருந்தார். நரேந்திரரும் அங்கிருந்தார்.
பேச்சும் வேடிக்கை வினோதங்களுமாக நேரம் போய்க்கொண்டிருந்தது. அப்போது வைணவ நெறிபற்றி பேச்சு எழுந்தது. அதன் கொள்கையை
ஸ்ரீராமகிருஷ்ணர் சுருக்கமாகக் கூறினார். இறைநாமத்தில் ஈடுபாடு, உயிர்களிடம் தயை, பக்தர்களை
மதித்தல் ஆகிய மூன்றையும் கடைப்பிடிக்குமாறு இந்த நெறி போதிக்கிறது. இறைவனும் அவரது
திருப்பெயரும் ஒன்றே. அதில் எந்த வேறுபாடும் இல்லை என்பதை உணர்ந்து எப்போதும் ஆழ்ந்த
அன்புடன் இறைநாமத்தை ஓத வேண்டும், பக்தனும் பகவானும் ஒன்றே, கிருஷ்ணனும் பக்தனும் ஒன்றே
என்பதை உணர்ந்து சாதுக்களையும் பக்தர்களையும்
போற்றி வணங்க வேண்டும். பிரபஞ்சம் முழுமையும் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு உரியது என்ற திடநம்பிக்கையுடன்
எல்லா உயிர்களிடமும் தயை.
எல்லா உயிர்களிடமும்
தயை” என்று கூறிக் கொண்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் பேச்சு தடைபட்டது.
அப்படியே பரவச நிலையை அடைந்தார் அவர் .ஓரளவிற்குப்புறவுணர்வு ஏற்பட்டதும், உயிர்களிடத்தில்
தயையா? உயிர்களிடம் தயை.......? அற்ப மானிடனே, கேவலம் புழுவுக்குச்சமம் நீ. நீ உயிர்களிடம்
தயை காட்டப்போகிறாயா? தயை காட்ட நீயார்? இல்லை, ஒரு போதும் இல்லை. மனிதனைச் சிவ வடிவில்
கண்டு சேவை தான் செய்யவேண்டும். அது தான் நீ செய்ய வேண்டியது, என்றார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்
கூறியதை அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவற்றின் உட்பொருளை எல்லோராலும் புரிந்து
கொள்ள இயலவில்லை. நரேந்திரர் மட்டுமே ஸ்ரீராமகிருஷ்ணரின் எண்ண ஓட்டத்தைச்சரியாக அறிந்து
கொண்டார். வெளியே வந்ததும் அவர், இன்று குருதேவரின் வார்த்தைகளிலிருந்து ஓர் அற்புத
ஒளியைப்பெற்றேன், சாரமற்றதாக , வறண்டதாக க் கூறப்படுகின்ற வேதாந்த ஞானத்தை பக்திநெறியுடன்,
இணைத்து என்னவோர் எளிய, இனிய, சாரமிக்க வழியைக் காட்டிவிட்டார். அவர்!
அத்வைத ஞானத்தைப்பெற
வேண்டுமானால் உலகத்தையும் மக்களையும் முற்றிலுமாகத்துறந்து காட்டிற்குச் செல்லவேண்டும்,
அன்பு, பக்தி போன்ற மென்மையான உணர்வுகளை இதயத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்துவிட
வேண்டும் என்றெல்லாம் தான் கூறப் பட்டு வந்தது. விளைவு? அந்தப் பாதையில் செல்கின்றவன் உரகத்தையும் அதிலுள்ள ஒவ்வொரு மனிதனையும்
தனது பாதையில் உள்ள தடையாகக்கருதி, அவனை வெறுத்து தனக்குத்தானே அழிவைத்தேடிக்கொள்கிறான்.ஆனால்
ஸ்ரீராமகிருஷ்ணர் இன்று பரவச நிலையில் கூறியதிலிருந்து, காட்டில் இருக்கும் வேதாந்த
ஞானத்தை வீட்டிற்குக் கொண்டுவரலாம். அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் அதைக் கடைப்பிடிக்கலாம்
என்பது தெளிவாகிறது. செய்வதை ஒருவன் தொடர்ந்து
செய்யட்டும். அதில் தீங்கில்லை. ஆனால் இறைவனே உயிர்களாகவும் உலகமாகவும்
உள்ளான் என்ற எண்ணத்தை மட்டும் உறுதியாகக்கொண்டிருந்தால் போதும், வாழ்வில் ஒவ்வொரு
கணமும் நாம் யாருடன் தொடர்பு கொள்கிறோமோ, அன்பு செய்கிறோமோ, மதிப்பும் மரியாதையும்
அளிக்கிறோமோ, தயை காட்டுகிறோமோ அவர்கள் அனைவரும் இறைவனின் அம்சமே. இவ்வாறு அனைவரையும்
சிவ வடிவாகக் கருதும் பொழுது எவ்வாறு அவனால் மற்றவர்களைவிடத் தன்னை உயர்வாகக் கருத
முடியும்? மற்றவர்களிடம் கோபமும் வெறுப்பும் எப்படி கொள்ள முடியும்? எவ்வாறு தயை காட்ட
இயலும்? இவ்வாறு மனிதனை இறைவனாகக் கண்டு அவனுக்குச்சேவை
செய்யச் செய்ய அவனது இதயம் தூய்மையடைகிறது. விரைவில் அவன் தன்னைப்பேருணர்வு வடிவான
இறைவனின் அம்சம், புனிதன், விழிப்புற்றவன், முக்தன் என்று உணர்கிறான்.
ஸ்ரீராமகிருஷ்ணரின்
இந்த வார்த்தைகள் பக்திநெறியிலும் புதிய ஒளியைத் தருகிறது. அனைத்து உயிர்களிலும் இறைவனைக்காணும் வரை ஒருவன் உண்மையான பக்தி (பரா பக்தி) என்றால்
என்ன என்பதை உணர முடியாது. சிவபெருமான் அல்லது நாராயணனின் வடிவில் மக்களைக் கண்டு அவர்களுக்குச் சேவை செய்யும்போது
விரைவில் அவன் உண்மையான பக்தியைப்பெற்று லட்சியத்தை அடைகிறான். கர்மயோகம் மற்றும் ராஜயோகத்தைப்
பின்பற்றும் சாதகர்களுக்கும் ஸ்ரீராமகிருஷ்ணரின் வார்த்தைகள் புதிய ஒளியைத் தருபவை.
மனிதனால் ஒரு கணம் கூட செயலற்று இருக்க முடியாது. அப்படியானால் சிவ வடிவில் மக்களைக்
கண்டு அவர்களுக்குச் சேவை செய்யும்போது மனிதன் குறிக்கோளை அடைகிறான் என்பது சொல்லாமலே
விளங்கும். இறைவன் எனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால், இன்று கேட்ட இந்தப் பேருண்மையை நான் உலகெங்கும் முழங்குவேன். பண்டிதர், பாமரர், செல்வந்தர், ஏழை, பிராமணர், சண்டாளர், என்று அனைவருக்கும்
எடுத்துக்கூறுவேன்.
இவ்வாறு
ஸ்ரீராமகிருஷ்ணர் ஞானம், பக்தி , யோகம், மற்றும் கர்ம நெறிகளில் இது வரை காணாத ஒளியைக்கொணர்ந்து
வாழ்க்கை நெறியை வளம் பெறச்செய்தார். சாதாரண மனிதர்களால் அவரது வார்த்தைகளைப்புரிந்து
கொள்ள முடியவில்லை. அந்தத் தெய்வீக வார்த்தைகளை அறிவுத் தெளிவுமிக்க நரேந்திரர் மட்டுமே
புரிந்து கொண்டார். அவ்வப்போது விளக்கி பிறரையும் வியக்கச்செய்தார். நரேந்திரர் பின்னாளில்
விவேகானந்தராகி உலகிற்குப்போதித்த அனைத்து
உண்மைகளின் சாரம் அவரது இந்தப் பேச்சில் உள்ளது.
இப்படி ஆன்மீக
சாதனை, ஸ்ரீராமகிருஷ்ணரின் தொடர்பு, படிப்பு என்று சென்று கொண்டிருந்த நரேந்திரரின்
வாழ்வில் திடீரென வீசியது ஒரு சூறாவளி!
துயர நாட்கள்
துன்பம்
ஏன்?
நாடு, மொழி,
இனம், மதம் என்று அனைத்து எல்லைகளையும் கடந்து எல்லா தத்துவ அறிஞர்களையும் ஒருசேர ஆக்கிரமித்த
கேள்வி ஒன்று உண்டென்றால் அது, இந்த உலகில் துன்பம் ஏன் உள்ளது? இதற்குப் பதில் கூற
அவர்களில் பலரும் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் கேள்வி என்னவோ இது வரை பொதுவான ஒரு விடையின்றியே நிற்கிறது. வாழ்க்கை
இன்பமும் துன்பமும் கலந்தது. முற்றிலும் இன்பமாக யாராலும் வாழ முடியாது. அது போலவே
வாழ்நாள் முழுவதும் துன்பத்திலும் யாரும் உழல்வதில்லை. பிரமிப்பூட்டும் ஓர் உண்மை என்னவென்றால்
அரிய, பெரிய காரியங்களைச் சாதித்த அனைவருக்கும்
இன்பத்தை விட துன்பமே சிறந்த வழிகாட்டியாக விளங்கியுள்ளது. துன்பங்களிலிருந்தே
அவர்கள் அதிக பாடம் கற்றுக்கொண்டார்கள். துன்பங்களே அவர்களுள் தூங்கிக் கிடந்த பல ஆற்றல்களையும்
திறமைகளையும் வெளியே கொண்டு வந்திருக்கிறது. துன்பங்களே அவர்களை மனித குலத்தை நேசிக்கத்தூண்டிருக்கிறது.
துன்பங்களே அவர்களை மனிதர்களுக்காகப் பாடுபடச் செய்திருக்கிறது. தமது இருபத்து நான்காம் வயதில் அத்தகைய துன்ப நாட்களை நரேந்திரர் எதிர்
கொள்ள நேர்ந்தது.
தந்தையின்
மறைவு
1884-ஆரம்பம். நரேந்திரரின் பி.ஏ.தேர்வு. அப்போது
தான் முடிந்திருந்தது. தேர்வு முடிவுகள் ஜனவரி 30-ஆம் நாள் வெளியாகின. அவர் இரண்டாம்
வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார். விசுவநாதர் அவரை நிமாய்சரண் போஸ் என்ற புகழ்பெற்ற வழக்கறிஞரிடம்
உதவியாளராகச் சேர்த்தார். மெட்ரோபாலிடன் கல்லூரியில் மூன்று வருடசட்டப் படிப்பிற்காக
இங்கிலாந்து செல்ல விரும்பினார். விசுவநாதரும் அதற்கு இசைந்தார். ஆனால் விதி வேறுவிதமாக
கணக்குப் போட்டிருந்ததை யாரும் அறியவில்லை.
பிப்ரவரி
25. அன்று நரேந்திரர் வராக நகர் நண்பர்கள் அழைத்ததற்காக அங்கே சென்றிருந்தார். இரவு
பதினொரு மணிவரை ஆடல், பாடல், கும்மாளம் என்று அந்த இடம் அமர்க்களப்பட்டது. பின்னர் நண்பர்களுடன் சாப்பிட்டு
விட்டு, படுத்தவாறே அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். அதிகாலை இரண்டு மணி இருக்கும். திடீரென நண்பர் ஒருவர் வந்து
நரேந்திரரை அழைத்தார். இந்த நேரத்தில் இவர் ஏன் இங்கே வந்தார்? என்ற சிந்தனையுடன்,
வந்தவரைப்பார்த்தார் நரேந்திரர். வந்தவர் தயங்கிய வாறே தாம் கொண்டு வந்த செய்தியைக்கூறினார்.
உன் தந்தை
மாரடைப்பால் காலமானார்.
காலின் கீழ்
பூமி பெயர்ந்து பாதாளத்தில் தலைகீழாக விழுவது போலிருந்தது நரேந்திரருக்கு.!
சிறிது நேரத்தில்
தம்மைச் சுதாரித்துக்கொண்டு , நெஞ்சு வெடிக்கும் துயரைத் தாங்கிக்கொண்டு புறப்பட்டு
கல்கத்தா வந்து சேர்ந்தார் நரேந்திரர். அளவுக்கு மீறிய வேலையின் காரணமாக விசுவநாதர்
சில காலமாகவே மிகவும் களைத்துப் போயிருந்தார். இரவு சுமார் பத்து மணிக்குத் திடீரென்று மாரடைப்பால் இறந்தார். விசுவநாதரின் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்குத் தயாராக வைக்கப்
பட்டிருந்தது. நரேந்திரரின் தாயும் சகோதர சகோதரிகளும் அழுது கொண்டிருந்தனர். முதலில் நரேந்திரர் தமது
துயரத்தை வெளியே காட்டாமல் தான் இருந்தார். ஆனால் எவ்வளவு நேரத்திற்கு! கொஞ்ச நேரத்தில்
ஓவென்று அவரும் கதறிவிட்டார். நரேந்திரர் மூத்த மகன். தந்தைக்குச்செய்ய வேண்டிய ஈமக்கடன்களைச்
செய்து முடித்தார்.
வறுமையின்
பிடியில்
விசுவநாதர் மறைந்த பிறகு தான் அவரைப் பற்றிய ஓர்
உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. எனக்காக என்ன
செய்திருக்கிறீர்கள்? என்று ஒரு முறை நரேந்திரர் அவரிடம் கேட்டபோது கண்ணாடியில் நரேந்திரரின்
உருவத்தையே காட்டினார் அல்லவா? உண்மையிலேயே அவர் அப்படித்தான் செய்திருந்தார். அவர்
வேறு எதையும் விட்டுச்செல்லவில்லை. ஜமீன்தார் போல் வாழ்ந்த குடும்பம் ஒரே நாளில் திக்கற்ற
நிலைக்கு த் தள்ளப்பட்டது.
வழக்கறிஞராகப்
பணியாறிறிய விசுவநாதர் ஏராளம் சம்பாதித்தார். ஆனால் வரவை மீறிச் செலவழித்தார். அத்துடன்
அவருடையது பெரிய குடும்பம். எனவே அவரால் எதையும் சேர்த்துவைக்க இயலவில்லை. அவரது சித்தப்பாவான
காளி பிரசாத் தனது பங்கிற்குக் கூட்டுக்குடும்பத்தின் சொத்திலிருந்து செலவு செய்ததுடன் விசுவநாதரிடமிருந்து
ம் தனியாகப் பணம் பெற்றுக்கொள்வார். வேலை காரணமாக வெளியூர் செல்லும் விசுவநாதர் மாதக்கணக்கில்
ஆங்காங்கே தங்கி விடுவார். அதைப் பயன்படுத்தி, அவரது உறவினர்கள் அவரது பெயரில் பல இடங்களில்
கடன் வாங்கி, தங்கள் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். கடன் விசுவநாதர் பெயரில்
வாங்கப்பட்டது. செலவு உறவினர்களுக்காக நடைபெற்றது. மொத்தத்தில் விசுவநாதரின் கடன் தலைக்கு
மேல் இருந்தது. எனவே அவரது குடும்பம் வெளிப்பார்வைக்கு நன்றாக வாழ்வது போல் தோன்றினாலும்
உண்மையில் கடனாளியாகவே இருந்தது. இது நரேந்திரருக்கோ புவனேசுவரிக்கோ தெரியாது.
இது போதாதென்று கூட்டுக்குடும்பச்சொத்து விஷயத்திலும்
வீட்டில் சண்டை ஏற்பட்டது. எனவே அவர் பொதுச்சொத்தான வீட்டை விட்டு, மனைவி மக்களுடன்
வேறொரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் குடிபெயர்ந்தார். புதிய வீடு நரேந்திரரின் பாட்டி
வீட்டில் அருகில் இருந்தது. வாடகை வீட்டிற்குச் சென்ற சில மாதங்களுக்குப் பிறகு தான் விசுவநாதர்
காலமானார். சில மாதங்களுக்குப்பிறகு நரேந்திரரும் குடும்பத்தினரும் அந்தப் பாட்டி
வீட்டிற்கே சென்று வாழத் தொடங்கினர்.
விசுவநாதரின்
உதவியால் தங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொண்ட உறவினர்கள் இந்தப் பரிதாபமான நிலையில்
எதிரிகள்போல் நடந்துகொண்டார்கள். நரேந்திரரின் குடும்பத்தை வீட்டை விட்டு நிரந்தரமாக
வெளியேற்றவும் முடிவு செய்தார்கள். அதற்காக
நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்கள். கடன் கொடுத்தவர்கள் கதவைத்தட்டினார்கள், கடன்
வாங்கியவர்கள் காணாமல் போனார்கள். சில நாட்களிலேயே வீட்டில் சாப்பாட்டிற்கும் வழியில்லை
என்ற நிலைமை நரேந்திரருக்குத் தெரியவந்தது. குடும்பத்திற்கு எந்த வருவாயும் இல்லை,
ஆனால் ஐந்தாறுநபர்களைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற நிலைமை. எனவே நிமாய் சரணிடம் தாம்
பெற்றுவந்த சட்டப் பயிற்சியைப்பாதியில் விட்டுவிட்டு, தீட்டு நாட்கள் முடியுமுன்னரே
வேலை தேடி அலையத்தொடங்கினார். போதாத காலம் வரும்போது நூற்றுக்கணக்கான முயற்சிகளும் பயனற்றுப்போய்விடுமே!
எந்த வேலையும் கிடைத்தபாடில்லை.நரேந்திரருக்கு எல்லாத் திசைகளும் சூன்யமாகத் தெரிந்தன.
ஸ்ரீராமகிருஷ்ணர்
அளித்த நம்பிக்கை
எல்லையில்லாத்
துயரத்தில் ஆழ்ந்திருந்தபோதிலும் ஸ்ரீராமகிருஷ்ணரின் நினைவுகள் நரேந்திரருக்கு நம்பிக்கை
ஒளியாகத் திகழ்ந்தன. ஒரு வாரத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரைச்சென்று கண்டார் அவர். தீட்டு
நாட்கள் இன்னும் கழியவில்லை. அவர் இன்னும்
தீட்டுச் சடங்குகளுக்கான உடையுடனேயே இருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் இரண்டு மாதங்களுக்கு
முன்பு கீழே விழுந்து அவரது கை எலும்பு பிசகியிருந்தது. கையிலும் கட்டுப்போடப்பட்டிருந்தது.
வலி இன்னும் இருந்தது. நரேந்திரர் சென்று மற்ற பக்தர்களுடன் அமர்ந்து கொண்டார். பிரம்மசமாஜ
பக்தரான திரைலோக்கியர் பாடிக்கொண்டிருந்தார். நரேந்திரரின் துயர் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணரின்
வேதனை வார்த்தைகளுக்கு அப்பாற்படடதாக இருந்தது. இருப்பினும் அவர் நேரடியாக எதுவும்
நரேந்திரரிடம் சொல்லவில்லை. பாடல் முடிந்ததும் உலகம் மற்றும் இறைவனைப் பற்றிய பல கருத்துக்களைக்
கூறிவிட்டு, உடம்பு இரண்டு நாட்களுக்கு மட்டுமே, கடவுள் ஒருவரே உண்மை. உடம்பு இதோ இருக்கிறது,
மறுகணம் இல்லை, உடம்பிற்கு இன்ப துன்பங்கள் இருக்கவே இருக்கின்றன. நரேந்திரனை எடுத்துக்கொள்ளுங்கள்.
தந்தை இறந்து விட்டார், வீட்டில் தாங்க முடியாத கஷ்டம், எந்த வழியும் பிறக்கவில்லை.
இறைவன் சில சமயம் நம்மை இன்பத்தில் வைக்கிறார், சில சமயம் துன்பத்தில் வைக்கிறார்,
என்று கூறினார். நரேந்திரனுக்கு இன்னும் கருணை காட்டில்லையே என்று இறைவன் மீது ஸ்ரீராமகிருஷ்ணர்
கோபத்துடன் பேசுவது போல் இருந்தது. இடையிடையே அவர் நரேந்திரரை அன்புடன் பார்த்தார்
என்று எழுதுகிறார் இந்த நிகழ்ச்சியைக்குறித்து
வைத்துள்ள ம-
மற்றொரு
நாள் நரேந்திரர் தமது நண்பரான அன்னதாகுகர் என்பவருடன் தட்சிணேசுவரத்திற்குச் சென்றிருந்தார். அருமைச்
சீடனின் துயரத்தில் துயருற்ற ஸ்ரீராமகிருஷ்ணர் அன்னதாவிடம் நரேந்திரரின் கஷ்டங்களை
எடுத்துக்கூறி, ஒரு நண்பன் என்ற முறையில் அவருக்கு உதவுவது அன்னதாவின் கடமை என்றெல்லாம் கூறினார். சிறிது நேரத்தில் அன்னதா புறப்பட்டு விட்டார். அவர் சென்ற
பிறகு நரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சற்றுக்கோபத்துடன், ஏன் என் நிலைமையை இப்படி ஊருக்கெல்லாம் தெரியும் படி க்கூறுகிறீர்கள்?
என்று கடிந்து கொண்டார். ஸ்ரீராமகிருஷ்ணரின் கண்களில் கண்ணீர் வழிந்தது அவர் பரிவுடன்
நரேந்திரரைப் பார்த்து , என் மகனே! உனக்காக வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்கவும்
நான் தயங்கமாட்டேன், என்று கூறினார். நெகிழ்ந்து போனார் நரேந்திரர்.
இவ்வாறு
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்ப்பதிலும் அவரது கருணையிலும் நரேந்திரரின் நம்பிக்கை சற்று
வலுப்பட்டது. பி.ஏ. படித்திருந்த நரேந்திரர் தமக்கு விரைவில் ஏதாவது வேலை கிடைக்கும்
என்று நம்பினார். தினமும் இறைநாமத்தைச்சொல்லிக்கொண்டே பல்வேறு அலுவலகங்களிலும் ஏறிஇறங்கினார்.ஆனால்
மாதம் 15 ரூபாய் சம்பளம் கிடைக்கின்ற வேலை கூட அவருக்கு க் கிடைக்கவில்லை. மௌனமாக வறுமையை
ஏற்றுக்கொண்டார் நரேந்திரர். குடும்பமும் அவருடனேயே அதனை ஏற்றுக் கொண்டது. அவர்கள்
யாரும் யாரிடமும் குடும்ப நிலைமையைக் கூறவில்லை.
தீட்டுக்காலம் முடிந்ததும் நரேந்திரர் சாதாரண உடைகளை
அணியத் தொடங்கினார். அவரது பணக்கார நண்பர்களும் வழக்கம்போல் வரத்தொடங்கினர். ஆனால்
அவர்களில் யாரும் அவரது வீட்டு நிலைமையைப் புரிந்து கொள்ளவில்லை. அவரும் சிலவேளைகளில்
அவர்களுடன் வெளியில் சென்றார். அவர் மெலியத்தொடங்கியிருந்தார். அவரது முகமும் சற்றே
வெளிறியிருந்தது. இதையும் அவரது நண்பர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை யாரேனும்
கவனித்திருந்தாலும் , அது வறுமை காரணமாக என்று அவர்களால் ஊகிக்க முடியவில்லை. தந்தை
இறந்த தால் ஏற்பட்ட சோகம் காரணமாகவே அவர் மெலிந்துள்ளார்
என்றே அவர்கள் நினைத்தார்கள். இப்படி வறுமையும், அதனை நிர்க்கதியான நிலையில் எதிர்கொள்வதுமாக
நரேந்திரரின் சோக நாட்கள் கழிந்தன.
ஏமாற்றங்கள்
நரேந்திரர்
தம் தாயிடமும் சகோதர சகோதரிகளிடமும் சிரித்த முகத்துடன் நம்பிக்கை தொனிக்கப்பேசுவார்.
விரைவில் வேலைகிடைத்துவிடும், துன்பங்களுக்கு ஒரு முடிவு வந்துவிடும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிப்பார். மற்றவர்கள்
சற்று அதிகமாகவேச் சாப்பிடுவதற்காக தமது சாப்பாட்டைக் குறைத்துக்கொள்வார். காலையில்
வேலை தேடிப் புறப்படுவார். மாலையில் களைத்துப்போய் திரும்புவார். சற்று முன்பு தான்
சாப்பிட்டதாகக்கூறி மற்றவர்களைச் சாப்பிடச்செய்வார். தாம் பட்டினியாகப் படுத்துக்கொள்வார்.
அந்த நிலையிலும் அவர் சட்டப் படிப்பை விடவில்லை. பல நாட்கள் சாப்பிடாமல், கிழிந்து
போன உடைகளை அணிந்து கல்லூரிக்குச்சென்றிருந்தார். பசி காரணமாகப் பலமுறை மயங்கிக்கூட
விழுந்திருக்கிறார்.
நரேந்திரரின்
நண்பர்கள் வழக்கம்போல் அவரைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து ச்செல்வார்கள் . நீண்ட நேரம்
அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார். அவர்கள் சாப்பிட அழைக்கும்போது மட்டும் மறுத்துவிடுவார்.
ஏனெனில் வீட்டில் தாயும் சகோதர சகோதரிகளும் பட்டினியில் வாடும் கோலம் அவரது கண் முன்னால்
தோன்றும். உடனே ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி தட்டிக் கழித்து விட்டு சாப்பிடாமலேயே
வீட்டிற்குத் திரும்புவார். வீட்டிலோ தாம் நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டதாகக் கூறுவார்.தமது
பங்கையும் தம்பி தங்கையருக்கு அளித்துவிட்டு படுத்துக்கொள்வார்.
இந்தக் காலகட்டத்தைப்
பற்றி நரேந்திரர் பின்னாளில் கூறினார்.
தந்தையின்
மரணத்தீட்டு முடியும் முன்பாகவே நான் வேலை தேடி அலையலானேன். உணவின்றி, வெறுங்காலுடன்,
கையில் விண்ணப்பத் தாளுடன், கொளுத்தும் வெயிலில்
ஒவ்வோர் அலுவலகமாக ஏறி இறங்கினேன்.என் துன்பத்தைக்
கண்டு இரக்கப்பட்ட என் நெருங்கிய நண்பர்களுள் சிலர் சில நாட்கள் என்னுடன் வருவார்கள்்.
சிலநாட்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால் எனக்கு எல்லா இடங்களிலும் ஏமாற்றமே காத்திருந்தது.
உலகத்துடன் ஏற்பட்ட இந்த முதல் அனுபவத்தின் மூலம் ஒன்று தெளிவாக விளங்கியது. தன்னலமற்ற
இரக்கத்தைக் காண்பது அரிது. ஏழைகளுக்கும் பலவீனர்களுக்கும் இங்கே இடமில்லை.! இரண்டு
நாட்களுக்கு முன்புவரை எனக்கு ஏதோ சிறு உதவி செய்யும் வாய்ப்புக்கிடைத்தால் அதைப் பெரும்
பேறாக எண்ணியவர்கள், இன்று என் நிலைமை மாறிவிட்டதை அறிந்து, முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.
அவர்களால் உதவ முடிந்ததும் என்னைப் பார்த்து
விலகினார்கள். இதையெல்லாம் பார்த்த எனக்கு இந்த உலகம் அசுரனால் படைக்கப்பட்டதாகத்
தோன்றிற்று.
ஒரு நாள்
வெயிலில் சுற்றியதில் பாதங்களில் கொப்புளங்கள் தோன்றிவிட்டன. முற்றிலுமாகச்சோர்ந்து
போய் மைதானத்தில் நின்ற நினைவு த் தூணின் நிழலில் சாய்ந்தேன். அன்று நண்பர்களும் ஓரிருவர் இருந்தார்கள். ஒரு வேளை என்னை அங்கே அந்த நிலையில்
கண்ட பின்னர் கூடினார்களோ என்னவோ, சரியாக நினைவில்லை. அவர்களுள் ஒருவன் எனக்கு ஆறுதலாக இருக்கட்டும் என்று , இதோ, இறைவனின்
மூச்சாம் அருட்காற்று வீசுகிறது” என்ற பாடலைப் பாடினான். அந்தப்
பாடலைக் கேட்டபோது யாரோ என் தலையில் ஓங்கி அடிப்பது போலிருந்தது. என் தாய் மற்றும்
சகோதர சகோதரிகளின் பரிதாப நிலைமை நினைவிற்கு வந்தது. தாங்கொணா வேதனையுடனும் ஏமாற்றத்துடனும்
மனக்கசப்புடனும், போதும், நிறுத்து உன் பாட்டை! யாருடைய உறவினர்கள் பசியின் கொடுமையால்
வாடி வதங்கவில்லையோ, மானத்தை மறைப்பதற்கு ஒரு முழத்துணிக்காக யார் அலைய வேண்டாமோ, அப்படி
பஞ்சணையில் சாய்ந்து சுகபோகம் அனுபவிப்பவர்களுக்குத் தான் இந்தக் கற்பனை எல்லாம் இனிமையாக
இருக்கும். எனக்கும் அப்படி ஒரு நாள் இருந்தது. ஆனால் இன்று வாழ்க்கையில் கொடூரமான
உண்மையின் முன் அவையெல்லாம் கேலிக்கூத்தாகத் தெரிகின்றன என்று கத்தினேன். என் நண்பன்
இந்த வார்த்தைகளால் மிகவும் வேதனைப்பட்டான். வறுமையின் எத்தகைய கோரப்பற்களில் அரைபட்டுக்
கொண்டிருந்தால், என் வாயிலிருந்து இப்படிப்பட்ட சொற்கள் வந்திருக்க முடியும் என்பதை
அவன் எப்படி அறிவான்.
காலையில்
எழுந்து ரகசியமாக விசாரித்துவிட்டு நிலைமையை அறிவேன். சில நாட்களில் வீட்டில் கொஞ்சம்
தான் சாப்பாடு இருக்கும். என் கையிலோ தம்பிடிக்
காசு கிடையாது. உடனே என் தாயாரிடம், நண்பன் ஒருவன் சாப்பிடக் கூப்பிட்டிருக்கிறான்” என்று கூறிச்செல்வேன். சில நாட்கள் ஏதாவது உண்பேன், சில நாட்கள்
பட்டினி தான். என் நிலைமையை யாரிடமும் பேச மனம் இடம் கொடுக்கவில்லை. முன்போலவே பணக்கார
நண்பர்கள் என்னைத் தங்கள் வீட்டிற்கோ தோட்டத்திற்கோ அழைத்துச்சென்று, என்னைப் பாடச்சொல்லிக்கேட்பார்கள்.
தவிர்க்க முடியாமல் சிலவேளைகளில் அவர்களுடன்
சென்று அவர்களை மகிழ்விப்பேன். ஆனால் உள்ளத்தின் குமுறல்? அதை நான் யாருடனும்
பகிர்ந்து கொள்வதில்லை. அவர்களும் விசாரித்த தில்லை. அத்திபூத்தாற்போல் யாரோ ஒருவர்,
நீ ஏன் இப்போதெல்லாம் வருத்தமாகவும் சோர்வாகவும்
இருக்கிறாய்? என்று கேட்பார்கள்ஃ அவர்களில் ஒருவன் மட்டும் என் வீட்டுச் சூழ்நிலையை
விசாரித்துத் தெரிந்து கொண்டு, அவ்வப்போது தன் பெயர் தெரிவிக்காமல் என் தாய்க்குப்
பணம் அனுப்பி வந்தான். அதன் மூலம் என்னை என்றென்றைக்குமாக அவனுக்கு நன்றிக்கடன் படுமாறு
செய்துவிட்டான்.
ஒரு வழியாக
1884 பிற்பகுதியில் தாம் படித்த மெட்ரோபாலிடன் பள்ளியிலேயே நரேந்திரருக்கு ஆசிரியர்
வேலை கிடைத்தது. ஜீன் 1886-இல் ம-வின் சிபாரிசால்
அந்தப் பள்ளியின் புதிய கிளையில் தலைமையாசிரியர் பதவி கிடைத்தது. இந்த வருமானம்
காரணமாக, பட்டினி நிலைமையிலிருந்து ஒரு படி
முன்னேறமுடிந்தது. ஆனால் குடும்பச் சொத்தின் மீது நடந்த வழக்கினாலும், வரவிருந்த சட்டத்
தேர்வினாலும் நரேந்திரர் அந்த வேலையைத்துறக்க வேண்டியதாயிற்று.ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அப்போது தொண்டையில்
புண் ஏற்பட்டிருந்தது. தாம் அருகில் இருந்து
அவருக்குச்சேவை செய்ய வேண்டும் என்று நரேந்திரர் நினைத்ததும் அதற்கு ஒரு காரணம்.
இந்த நாட்களில்
கீத கோவிந்தம்” என்ற பாடலை வங்க மொழியில் மொழிபெயர்த்தார் நரேந்திரர். அவரது
நண்பரான மோதிலால் போஸ் அதனை வெளியிட்டார். இதிலிருந்தும் கொஞ்சம் பணம் கிடைத்தது.
தீய வழிகாட்டிகளும்
நரேந்திரரின் மனநிலையும்
இந்தப் பிரச்சனைகள்
காரணமாக நரேந்திரர் சுமார் ஏழு மாதங்களாக ஸ்ரீராமகிருஷ்ணரைச்சென்று காணவில்லை. இடையில்
ஈசான் என்ற பக்தரின் வீட்டிற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் சென்றிருந்தபோது ஒரு முறை கண்டதுடன் சரி, இந்த நாட்களில் அவருக்கு
ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்களுடனோ அங்கே சந்தித்த
இளம் நண்பர்களுடனோ பொதுவாக எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ம-மட்டும் சில நாட்கள் அவரது
வீட்டிற்குச்செல்வார். இருவருமாக கீதகோவிந்தம் பாடல்களைப்பாடுவதும் உண்டு.
படிப்படியாக
நரேந்திரரின் நிலைமை நண்பர்கள் பலருக்கும் தெரிய வந்தது. யாரும் பெரிதாக எந்த உதவியும்
செய்யவில்லை. ஆனால் அவருக்குத் தவறான வழிகாட்டுவதற்குப் பலர் தயாராக இருந்தனர். அவரது
நண்பர்களில் சிலர் நல்வழிச் செல்பவர்கள் அல்ல என்று ஏற்கனவே கண்டோம். அவர்களில் ஒருவர்
அன்னதா குகர். அவரது வீட்டில் சந்தித்த அத்தகைய ஓரிரு இளைஞர்கள் அவருக்குக் குறுக்கு வழியில் பண்ம் சம்பாதிப்பதற்கான
வழிகளைக்கூறினர். அவர் ஒத்துழைத்தால் அவருக்கு உதவத் தயாராக இருப்பதாகப் பணக்கார விதவைகள்
சிலரும் தகவல் அனுப்பினர். அவர்கள் காட்டிய வழிகள் அனைத்தையும் துச்சமாக ஒதுக்கிவிட்டு,
தம் வழியிலேயே தனித்துச்சென்றார் நரேந்திரர்.!
ஆனால் ”நண்பர்கள்” விடுவதாக இல்லை. நரேந்திரரை எப்படியாவது தவறான வழியில் இழுத்து
விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டது போல் செயல்பட்டனர். ஒரு நாள் நரேந்திரர் நண்பன்
ஒருவனின் விட்டிற்குச் சென்றிருந்தார். அங்கே நண்பர்கள் அனைவருமாகப் பாடியாடிக் களிப்பாக இருந்தனர். அதன் பிறகு அவர் ஓர் அறையில்
ஓய்வெடுக்கச்சென்றார். அப்போது அந்த நண்பர்களின் ஏற்பாட்டின் படி இளம் பெண் ஒருத்தி
அவரது அறைக்குள் சென்றாள். தன்னை நல்லவள்போல்
காட்டிக்கொண்ட அவள், தான் மிகவும் ஏழ்மையில் வாடுவதாகவும் எல்லையற்ற துன்ப துயரங்களை
அனுபவிப்பதாகவும் கூறினாள். அவளது பேச்சை நம்பிய நரேந்திரர் அவளுக்கு ஆதரவாகச் சில
வார்த்தைகள் கூறினார். சிறிது நேரத்தில் அவள்
அவரைத் தவறான எண்ணத்துடன் அணுகத்தொடங்கினாள். நரேந்திரர் மிகவும் கண்டிப்பாக அவளை அறையைவிட்டு
வெளியே அனுப்பினார். அவள் நேராக அந்த நண்பர்களிடம் சென்று, நல்ல சாதுவிடம் என்னை அனுப்பிவிட்டீர்களே! என்று கடிந்து கொண்டாள்.
மற்றொரு
முறை நடந்த நிகழ்ச்சியைப் பற்றி நரேந்திரரே கூறினார். என் நண்பர்களுள் சிலர் தீய வழியில்
சென்று பொருள் சம்பாதித்தார்கள். என் வறுமை நிலைமையைக்கேள்விப்பட்ட அவர்கள் இந்தச்
சமயத்தைப் பயன்படுத்தி, என்னைத் தங்கள் பக்கம் இழுக்க முயன்றார்கள். அவர்களில் சிலர்
என்னைப்போல் திடீரென்று சூழ்நிலை மாறியதால் வயிற்றுப்பிழைப்புக்காகத் தகாத வழிகளில்
சென்றவர்கள். அவர்கள் உண்மையிலேயே என்னிடம் அனுதாபப்பட்டார்கள்.மகாமாயையும் என்னை நிம்மதியாக இருக்கவிடவில்லை. பணக்காரப்பெண் ஒ ருத்திக்கு நீண்ட
நாட்களாக என்மேல் ஒரு கண் இருந்தது. இது உகந்த தருணம் என்று அவள் தன் செல்வத்தையும்
அதனுடன் தன்னையும் ஏற்றுக்கொண்டு வறுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் படிச்செய்தி அனுப்பினாள்! வெறுப்புடன் அதனை கடுமையாக நிராகரித்தேன்.
மற்றொரு பெண்ணும் என்னைக் கவர முயன்றாள். நான் அவளிடம், பெண்ணே, ஒரு பிடிச் சாம்பலாகப்போகின்ற
இந்த உடலின்பத்திற்காக இதுவரை என்னவெல்லாமோ
செய்துவிட்டாய்! இதோ மரணம் உன் முன்
உள்ளது. அதனை எதிர்கொள்ள நீ ஏதாவது செய்திருக்கிறாயா? கீழான எண்ணத்தை விட்டுவிடு. இறைவனைக்கூவி
அழை, என்று கூறினேன்.
ஆனால் தமக்குத்
தீய வழி காட்டியவர்களிடமும் நரேந்திரர் கோபம் கொள்ளவில்லை. விதி இப்படி இருக்கும் போதுயாரை
எதற்காக நொந்து கொள்வது? அவர்களிடமும் தமது உள்ளத்தில் இருப்பதைக்கூறுவார். துறவு வாழ்வின்
பெருமையைப் பற்றி பேசுவார். ஆனால் அவர்கள் மீண்டும் அவரை உலக விஷயங்களில் இழுக்கவே
முயற்சி செய்வார்கள், வாழ்க்கையில் எந்த முடிவும் எடுக்காமல் ஏன் இப்படி இருக்கிறாய்?
பொருளைத்தேடுவதற்கான முயற்சியில் முழு மூச்சுடன்
இறங்கு .அப்போது தானே ஒரு வளமான வாழ்க்கை வாழ இயலும்! என்று அறிவுரை கூறுவார்கள்.
அதற்கு நரேந்திரர், என்னிடமும் அந்த எண்ணங்கள் எழாமல் இல்லை, புகழும் பெருமையும் பதவியும்
செல்வமும் அந்தஸ்தும் மிக்க ஒரு வாழ்க்கை வாழ
வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் அடிக்கடி தோன்றுவதுண்டு. ஆனால் ஆழ்ந்து சிந்திக்கும்போது
, இந்த நோக்கம் பொருளற்றது என்று தோன்றுகிறது. மரணம் என்ற ஒன்று இந்த உலகில் உள்ளதே!
அதிலிருந்து யாராவது தப்ப முடியுமா? துறவிகள் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முயல்கின்றனர்.
என்றென்றைக்கும் உண்மையான, மாறாத பொருளைத்
தேடுகின்றனர். எனவே துறவு வாழ்க்கைதான் உயர்ந்ததாக எனக்குத்தோன்றுகிறது என்றார்.
நண்பர்கள் விடவில்லை. அவர்களில் ஒருவர், தட்சிணேசுவரக்கிழவர் தான் நரேந்திரரைக் கெடுக்கிறார்.
அவனது எதிர்காலத்தைப் பாழாக்குகிறார், என்றார். பிறகு நரேந்திரரைப் பார்த்து, நரேன்
! உனக்கு ஏதாவது சுய புத்தி இருக்குமானால், அவரிடம் போவதை விட்டுவிடு. இல்லாவிட்டால்,
உன்னுடைய படிப்பும் எதிர்கால வாழ்வும் நாசமாகிவிடும். உன்னிடம் பல திறமைகள் உள்ளன.
வாழ்க்கையில் மனத்தைத் திருப்பினால் நீ எதையும் சாதிக்கலாம். எனவே தட்சிணேசுவரம் செல்வதை
விட்டுவிடு” என்று அறிவுரை கூறினர். இதோ பாருங்கள்” அவரைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. எனக்கும் பெரிதாக
எதுவும் புரியவில்லை. ஆனால், நான் அந்த முதியவரை.ஸ்ரீராமகிருஷ்ணரை மிகவும் நேசிக்கிறேன்” என்று நாத்தழுதழுக்கக் கூறினார் நரேந்திரர்.
திருமண முயற்சிகள்
நண்பர்களின்
முயற்சிகள் இவ்வாறு இருந்தன என்றால் வீட்டில் வேறுவிதமான ஒரு சூழ்நிலையை அவர் எதிர்கொள்ள
நேர்ந்தது. தந்தை வாழ்ந்தபோதே தொடங்கிய திருமண முயற்சிகள் இப்போது தொடர்ந்தன. அவரை
இக்கட்டான நிலைமையில் தள்ளின. தந்தை இருந்தபோது அவர் திருமணத்தை மறுத்தது பெரிய விஷயமாக
இருக்கவில்லை. ஆனால் இப்போது அது விசுவரூபம் எடுத்தது. வேண்டிய வரதட்சணைதந்து, பெண்ணையும்
தரத் தயாராக இருந்தபோது, இந்த ஏழ்மை நிலையில் அவர் மறுப்பதை வீட்டினரால் ஏற்றுக்கொள்ள
இயலவில்லை. வறுமையின் பிடியிலிருந்து விடுபடுவதற்குத் தென்படுகின்ற ஒரே வழியையும் அவர்
அடைப்பதாக அவர்கள் கருதினார்கள். கடைசியில் புவனேசுவரி ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயமும்
செய்துவிட்டார். நரேந்திரரால் அதன் பிறகு தட்டிக்கழிக்க இயலவில்லை. வருவது வரட்டும்,
தம்மை நம்பி இருப்பவர்களுக்காகத் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தார்.
நரேந்திரரின்
தீர்மானத்தைப் பற்றி கேள்விப்பட்டார் ஸ்ரீராமகிருஷ்ணர். உடனடியாக ஒரு வண்டியை வாடகைக்கு
அமர்த்திக்கொண்டு நேராக நரேந்திரரின் வீட்டிற்குச் சென்றார். நரேந்திரர் வெளியில் வந்து
அவரைச் சந்தித்தார். அவரைக் கண்டதும் ஸ்ரீராமகிருஷ்ணர் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு,
தாம் கேள்விப்பட்டது உண்மைதானா, என்று கேட்டார்.
நரேந்திரர் தலைகுனிந்த படியே, ஆம்,. நான் திருமணத்திற்கு இசைந்துவிட்டேன்” என்றார். ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரின் கைகளை அழுத்திப்
பிடித்தவாறே, இந்தத் திருமணம் நடக்காது. இவை என் வார்த்தைகள் என்று கூறிவிட்டு வண்டியில்
ஏறிச்சென்றுவிட்டார். பேச்சற்று நின்றார் நரேந்திரர்!
கடவுள் என்ன
செய்தார்!
கடவுள் மீது
ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கையின் தீவிரமும்
உறுதியும் சோதனைகள் வரும்போது தெரிந்து விடும். நான் இவ்வளவு துன்பப்படுகிறேனே! இந்தக்
கடவுளுக்குக் கண் இல்லையா? என்று கேட்காத சாதாரண மனித இதயங்கள் இருக்க முடியாது. கிருஷ்ணா!
நீ கொடியவன், உனக்கு ஒன்று சொல்கிறேன், நீ என்னைக் கட்டியணைத்து உன் திருப்பாதங்களில் அடைக்கலம் தந்தாலும் சரி, இல்லை, என் காட்சிக்கு
எட்டாமல் நின்று என்னை வேதனைப் படுத்தினாலும் சரி, என்னை நீ
என்ன செய்தாலும் நீ தான் எனக்கு எல்லாம் . எனக்கு உன்னைத் தவிர யாரும் இல்லை.என்று
ஸ்ரீசைதன்யர் கூறியது போல், கடவுளைத் திட்டினாலும் அவரையே சார்ந்து வாழ்வது சாதாரண
விஷயம் அல்ல. நரேந்திரர் என்ன செய்தார்? அவரது வாய்மொழியிலேயே கேட்போம்.
இத்தனை துன்பங்களும்
சோதனைகளும் வந்த போதும் எனது ஆத்தக எண்ணம் மறையவில்லை. அதாவது கடவுள் நன்மையே செய்பவர், என்பதில் சிறிதும் சந்தேகம் எழவில்லை.
காலையில் கண் விழித்ததும் இறைவனை நினைத்து அவரது திருநாமத்தைக் கூறியபடி தான் படுக்கையிலிருந்து எழுவேன். அதன்
பின் நம்பிக்கைளை நெஞ்சில் சுமந்தபடி வேலை
தேடத்தொடங்குவேன். வழக்கம்போல் ஒரு நாள் இறைநாமத்தை உச்சரித்துக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்திருந்தேன்.
பக்கத்து அறையிலிருந்து அதைக்கேட்ட என் தாய் வெறுப்புடன்,நிறுத்தடா அதை! சிறுவயதிலிருந்தே
பகவான், பகவான் என்று நீயும் பல்லவி பாடி வருகிறாய், அந்த பகவான் தான் இவ்வளவு செய்துவிட்டாரே!
இன்னும் ஏன் புலம்பிக் கொண்டிருக்கிறாய்! என்று கூறினார். அவரது வார்த்தைகள் என் நெஞ்சில்
ஆழமாகத் தைத்தன. கடவுள், என்றொருவர் உண்மையிலேயே இருக்கிறாரா? ஒரு வேளை இருந்தாலும்,
மனிதனின் மனம் நொந்த பிரார்த்தனைகளுக்கு ச் செவி சாய்க்கிறாரா? அப்படியானால், இவ்வளவு
கதறுகிறேனே,ஏன் அதற்கு எந்தப் பதிலும் இல்லை? நன்மை வடிவான் இறைவனின் படைப்பில் இவ்வளவு
தீமை எங்கிருந்து வந்தது? மங்கலமயமான இறைவனின்
ஆட்சியில் இவ்வளவு அமங்கலம் ஏன்? என்றெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினேன். பிறர்
துன்பம் கண்டு துடித்த வித்யாசாகர் ஒரு முறை, கடவுள் நன்மையே வடிவெடுத்தவர் , மங்கல மயமானவர் என்றால் ஏன் லட்சக்கணக்கான மக்கள்
பஞ்சத்தின் கோரப்பிடியில் அகப்பட்டு ஒரு வாய்ச்சோற்றிற்காக ஏன் உயிர் உயிர் துறக்கிறார்கள்?
என்று கேட்டாரே, அந்தச்சொற்கள் , எள்ளி நகையாடுவது போல் என் காதுகளில் எதிரொலித்தன.
கடவுள் மீது வெறுப்பென்றால் அப்படியொரு வெறுப்பு அன்று எனக்குத்தோன்றியது. இந்தத் தருணத்திற்காகவே
காத்திருந்தது போல், உண்மையிலெயே கடவுள் இருக்கிறாரா? என்ற சந்தேகமும் என்னுள் தலைதூக்கியது.
எதையாவது
ரகசியமாகச்செய்வது என்பது என் இயல்பிற்கு மாறானது. சிறு வயதிலிருந்தே அப்படித்தான். அச்சம் காரணமாகவோ வேறு
எந்த நோக்கத்திற்காகவோ என் எண்ணங்களை என்னால் மறைக்க முடிவதில்லை. செயல்களை மறைப்பது
என்ற பேச்சிற்கே இடமில்லை. எனவே கடவுள் இல்லை! அப்படியே இருந்தாலும் அவரை நினைத்துப்
பயனில்லை” என்று மற்றவர்களிடம் துணிந்து கூறி, அதை நிரூபிக்க நான் முயன்றதில்
என்ன வியப்பு இருக்க முடியும்! விளைவு? நான் நாத்திகனாகி விட்டேன், இழிகுணம் உடையவர்களுடன்
சேர்ந்து மது அருந்துகிறேன், விலைமகளிரின் வீட்டிற்குப்போகிறேன் என்றெல்லாம் தயங்காமல்
பேசத் தொடங்கினார்கள்! யாரிடமும் அடங்கிப்போகும் மனம் சிறுவயதிலிருந்தே எனக்குக் கிடையாது.
அது இப்போது இத்தகைய தவறான வதந்தியால் இறுகிக் கடினமாகிவிட்டது. இந்தத் துக்கமயமான
சம்சாரத்தில் ஏதோ சிறிது நேரமாவது அந்தத் துன்பங்களை மறந்திருக்க மது அருந்துவதோ, விலைமகளிடம்
செல்வதோ துளி கூட தவறில்லை. இந்த வகையில் இன்பம் கிடைக்கும் என்று எனக்கு நிச்சயமாகத்
தெரியுமானால் யாருக்கும் அஞ்சாமல் நானும் அந்த வழியைப் பின்பற்றுவேன்” என்றெல்லாம் எல்லோரிடமும் அவர்கள் கேட்காமலேயே கூறத் தொடங்கினேன்.
செய்தி காற்றோடு
காற்றாகப் பரவியது. நான் சொன்னது காது, மூக்கு எல்லாம் சேர்க்கப்பட்டு ஸ்ரீராமகிருஷ்ணருக்கும்
அவரது பக்தர்களுக்கும் எட்ட அதிக காலம் ஆகவில்லை. உண்மையை அறிய சிலர் வந்தனர். தாங்கள்
கேளிவிப் பட்ட அனைத்தையும் நம்பாவிட்டாலும் சிலவற்றையாவது நம்பத்தான் வேண்டியிருக்கிறது
என்று அவர்கள் சூசகமாக க் கூறினர். அவர்கள் என்னை இவ்வளவு இழிவாக எண்ணுவது கண்டு என் மனம் வேதனையில் துடித்தது, பொறுத்துக்கொண்டேன்,.
மனத்தைக் கல்லாக்கிக்கொண்டேன்.
தண்டனை கிடைக்கும்
என்பதற்காகப் பயந்து கடவுளை நம்புவது கோழைத்தனம்” என்றெல்லாம் ஆவேசத்துடன் கூறி,ஹ்யூம்.
பெயின், மில், காம்டே என்று பல மேலை நாட்டு அறிஞர்களை மேற்கோள் காட்டி, கடவுள் இருக்கிறார்
என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை, என்று காரசாரமாக விவாதித்தேன். திருத்த முடியாத அளவிற்கு
நான் கெட்டுவிட்டேன் என்று முடிவுகட்டி அவர்கள் விடைபெற்றார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக
இருந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணரின்
எண்ணம் வந்தபோது மனம் துணக்குற்றது. இவற்றையெல்லாம் கேள்விப்பட்டு அவரும் ஒரு வேளை
நம்பக்கூடுமோ என்று தோன்றியது. ஒரு கணம் தான், மனிதர்களின் இத்தகைய மதிப்பற்ற ஆதாரங்களை
வைத்து என்னை அவர் முடிவு செய்வாரானால் செய்து விட்டுப்போகட்டும். எனக்குக் கவலையில்லை.”
என்று மறு கணமே தெளிந்து விட்டேன். ஆனால் அவர் இதை எப்படி எடுத்துக்கொண்டார் என்பதைக்கேள்விப்பட்ட
போது அதிர்ந்து போனேன். முதலில் அவர் பதில் எதுவும் கூறவில்லையாம். பின்பு பவநாத் அழுதுகொண்டே,
ஐயா! நரேந்திரன் இப்படி கெட்டுப்போவான் என்று கனவில் கூட நினைக்கவில்லை,என்று சொன்னபோது
ஆத்திரத்துடன் அவனிடம் , மடையா, உளறாதே! வாயை மூடு, நரேன் அப்படி இருக்க முடியாது என்று அன்னை பராசக்தி எனக்குக்
கூறியிருக்கிறாள். இதுபோல் நீ இன்னொரு முறை பேசினால் நான் உன் முகத்தில் விழிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டாராம்.
ஆனால் திமிர்
பிடித்துப்போய் வரிந்து கட்டிக்கொண்டு இப்படி
நாத்திகத்தில் இறங்குவதால் என்ன பயன்? சிறு வயது முதலே, அதிலும் குறிப்பாக ஸ்ரீராமகிருஷ்ணரைத்
தரிசித்த பின் எனக்குக் கிடைத்த அற்புதமான தெய்வீகக் காட்சிகள் என் உள்ளத்தில் சுடர்விட்டுப்
பிரகாசித்துக் கொண்டிருந்தனவே! எனவே, நிச்சயமாகக் கடவுள் இருக்கிறார். அவரை அடையும்
வழியும் இருக்கவே செய்கிறது. இல்லையென்றால்
உயிர்வாழவே தேவையில்லை. எல்லா இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் இடையில் அந்த
வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும்” என்று எண்ணிக்கொண்டேன். இவ்வாறு
நாட்கள் நகர்ந்தன. மனம் சந்தேகத்திற்கும் தெளிவிற்கும் இடையில் ஊசலாடியது, சிறிது சிறிதாக
அமைதி விலகிப்போய்க்கொண்டிருந்தது, வறுமையும் எந்த விதத்திலும் குறைவதாகத் தெரியவில்லை.
மனத்துயர்
மாற்றிய அனுபவம்
கோடைக்காலம்
மு டிந்து, மழைக்காலம் தொடங்கியது. அப்போதும் முன்போல் தொடர்ந்து வேலை தேடினேன். ஒரு
நாள் நன்றாக மழையில் நனைந்து விட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். உடல் மிகவும்
களைத்துவிட்டது. உள்ளம் அதைவிடச்சோர்ந்து போயிருந்தது. இனி ஓர் அடியும் எடுத்து வைக்க
முடியாத நிலையில், அருகில் இருந்த ஒருவீட்டுத் திண்ணையில் அப்படியே துவண்டு வீழ்ந்தேன்.
நினைவு இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் ஏதேதோ நிழலோவியங்களும் எண்ணங்களும் ஒன்றன்பின் ஒன்றாக எமுந்ததும் மறைந்ததும்
நினைவில் உள்ளன. அவற்றை விலக்கவோ, ஏதேனும் ஓர் எண்ணத்தில் உள்ளத்தை ஆழ்ந்து செலுத்தவோ
இயலவில்லை. அந்த வேளையில் ஏதோ ஒரு தெய்வீக சக்தியால் என் அகத்திரைகள் பல ஒன்றன்பின்
ஒன்றாக விலகுவது போலிருந்தது. இத்தனை நாட்களாக
என் மனத்தைக் குழப்பிக்கொண்டிருந்த, நன்மை வடிவான இறைவனின் படைப்பில் ஏன் தீமை
உள்ளது? கடவுளின் கடின நீதியும் அளவில்லா கருணையும் எப்படி இயைந்திருக்க முடியும்?
போன்ற பல பிரச்சனைக்களுக்கான அறுதித் தீர்வுகளை என் உள்ளத்தின் ஆழ்பகுதியில் கண்டேன்.
ஆனந்தம் கரைபுரள எழுந்தேன். உடலில் சோர்வு என்பது துளிகூட இல்லாமல் போய்விட்டிருந்தது.
மனம் ஓர் அற்புத வலிமையுடனும் அமைதியுடனும் விளங்கியது. அப்போது இரவு நீங்கச் சிறிதே
நேரமிருந்தது.
துறவியாக முடிவு
மக்களின்
வந்தனை, நிந்தனை இரண்டையும் ஒதுக்கித் தள்ளினேன். சாதாரண மக்களைப்போன்று பணம் சேர்க்கவும்,
குடும்பத்தைப் பராமரிக்கவும் , இன்பங்களை அனுபவிக்கவும் நான் பிறக்கவில்லை என்ற எண்ணம்
என் மனத்தில் உறுதிப்பட்டது. என் தாத்தாவைப்போல் உலகத்தைத்துறக்க நான் ரகசியமாகத் தயாரானேன்.
அதற்கான நாளையும் முடிவு செய்தேன்.ஆனால் ஆச்சரியம்! அன்று ஸ்ரீராமகிருஷ்ணர் கல்கத்தாவில்
ஒரு பக்தரின் வீட்டிற்கு வரப்போகிறார் என்று அறிந்தேன். நல்லது தான். குரு தரிசனம்
பெற்று நிரந்தரமாக வீட்டைத்துறக்கலாம் என்று
எண்ணினேன். ஆனால் நான் அவரைக் கண்டது
தான் தாமதம் , இன்று நீ தட்சிணேசுவரத்திற்கு என்னுடன் வந்தே தீரவேண்டும் என்று ஒரே
பிடியாய்ப் பிடித்துக்கொண்டார். எவ்வளவோ சாக்குப் போக்கு சொல்லிப் பார்த்தேன், ஆனால்
அவர் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. வேறு வழியின்றி அவருடன் சென்றேன், வண்டியில்
போகும் போது அவர் அதிகமாகப்பேசவில்லை. தட்சிணேசுவரத்தை அடைந்த பின்னர் மற்றவர்களுடன்
சிறிது நேரம் அவரது அறையில் உட்கார்ந்திருந்தேன். ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பரவச நிலை
உண்டாயிற்று. அப்படியே என்னை நோக்கி வந்தார். என்னை அன்புடன் பிடித்துக்கொண்டு கண்களிலிருந்து
நீர் வழிய,
பகிர்ந்திட
நானும் பயப்படுகின்றேன்
பகரா திருக்கவும் பயப்படுகிறேன்
எங்கே மணியை
இழந்திடுவேனோ
என்று அஞ்சுகின்றேன்..............
என்று பாடலைப்
பாடினார்.
உள்ளத்தில்
குமுறிக்கொண்டிருந்த உணர்ச்சிப் பிரவாகத்தை அதற்கு மேல் அடக்க முடியவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரைப்போல் என் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தோடியது. எல்லாம்
அவருக்குத் தெரிந்து விட்டது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி எனக்குப் புரிந்தது. எங்கள்
இருவருக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது வேறு யாருக்கும் புரியவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணர்
சாதாரண நிலைக்கு வந்ததும் சிலர், என்ன விஷயம்? என்று கேட்டனர். அவர் விஷமமாகச் சிரித்தவாறே,
ஓ! அதுவா. அது எங்களுக்குள் ஏதோ ஒன்று, என்று கூறிவிட்டார். இரவு பிறருக்கு விடை கொடுத்து
அனுப்பியபின், என்னை அருகில் அழைத்து, தெரியும்
அப்பா, நீ அம்பிகையின் பணிக்காகவா வந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். உன்னால்
உலகியல் வாழ்க்கையை மேற்கொள்ள முடியாது. ஆனாலும் நான் இருக்கும்வரை எனக்காக உன் வீட்டில்
இரு, என்று கூறிவிட்டு உணர்ச்சி வேகத்தினால் தொண்டை கம்மக் கண்ணீரில் கரைந்தார்.
காளி ஆட்கொள்கிறாள்
மறு நாள்
ஸ்ரீராமகிருஷ்ணரிடம் விடைபெற்று வீடு திரும்பினார் நரேந்திரர். குடும்பத்தைப்பற்றிய
கவலைகள் அவரது மனத்தை ஆக்கிரமித்தன. வேலை தேடும் படலம் தொடர்ந்தது. ஒரு வழக்கறிஞரின்
அலுவலகத்தில் வேலை பார்த்தும், சில நூல்களை
மொழிபெயர்த்தும் ஏதோ சிறிது சம்பாதித்து எப்படியோ செலவு கழியத்தான் செய்தது. ஆனால்
நிரந்தரமான வேலை எதுவும் கிடைக்கவில்லை. நரேந்திரரின் வாழ்க்கை இப்படிச்சென்று கொண்டிருந்த
நாட்களில் ஒரு நாள் ஹாஸ்ரா குருதேவரிடம் நரேந்திரரின் வறுமை நிலைமை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
அவன் அனுபவிக்கும்
துயரங்கள் போதாதென்று இப்போது நீதி மன்ற வழக்கும் சேர்ந்துள்ளது“ என்றார் ஹாஸ்ரா. அவன் காளியை ஏற்றுக் கொள்வதில்லை. உலகில்
வாழ வேண்டுமானால் அவளை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்” என்று சட்டென்று கூறினார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
நரேந்திரரின்
மனத்திலும் அந்த எண்ணம் ஒரு நாள் தோன்றியது. இடையில் ஓரிரு முறை அவர் பக்தர்களின் வீடுகளில் ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்திக்கவும் செய்தார். செப்டம்பர் 14-ஆம் நாள் தட்சிணேசுவரத்திற்குச்சென்றார்
நரேந்திரர். காலையில் பல பாடல்களைப் பாடினார். வழக்கம்போல் அவரது பாடல்களைக்கேட்டு
ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதியில் ஆழ்ந்தார். பிற்பகலில் தேவியைப் பற்றிய பாடல்களைப் பாடினார்.
பொதுவாக
பிரம்ம சமாஜப் பாடல்களையே பாடுகின்ற நரேந்திரர் தேவியை ப் பற்றி பாடியது ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ஆச்சரியத்தை அளித்தது. அது
எப்படி? என்று ஹாஸ்ராவிடம் வியப்புடன் கேட்டபடியே, மேற்கு வராந்தாவில் நின்று கொண்டிருந்த
நரேந்திரரிடம் சென்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். என்னப்பா, இன்று தேவியைப்பற்றிய பாடல்களைப்
பாடினாயே! என்று கேட்டார். ஆனால் நரேந்திரர் பதில் எதுவும் கூறவில்லை. ஏதோ ஒரு சக்தி
அவரை ஆட்கொண்டிருப்பது போல் அவர் மெதுவாக நடந்து கங்கைக் கரைக்குச் சென்றார். கங்கை , நீரேற்றம் காரணமாக வடக்கு நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது.
மாலை சூரியன் அடிவானத்தில் மறைய ஆரம்பித்ததால் வானம் சிந்தூர வண்ணமாகச் சிவந்து, அந்தச்
சிந்தூர வண்ண தேவியின் நினைவை அவரிடம் எழுப்பியது.
அவளது நினைவில் ஆழ்ந்தவராக மீண்டும் தேவியைப்பற்றிய பாடல்களைப் பாடத் தொடங்கினார்.
ஒன்றன் பின் ஒன்றாகப் பல பாடல்களைப் பாடினார். ஸ்ரீராமகிருஷ்ணர் அருகில் நின்றபடியே
கேட்டுக்கொண்டிருந்தார். தேவி நரேந்திரரை ஆட்கொள்ளத் தொடங்கி விட்டாளா? அல்லது தேவியின்
உணர்வை நரேந்திரரிடம் ஸ்ரீராமகிருஷ்ணர் எழுப்பத் தொடங்கினாரா?
துன்பத்தில்
துடிக்காத, துவளாத இதயம் இல்லை. அது போலவே,
வேறு கதியற்ற நிலையில் இறைவனை நோக்கித் திரும்பாத உள்ளமும் இருக்க முடியாது. தத்துவங்கள்
பேசலாம், கோட்பாடுகள் வகுக்கலாம். ஆனால் காலின்
கீழ் பூமியே பெயர்ந்து விடுவது போன்ற நிலைமை வரும்போது அபயக்கரம் ஒன்று எங்கிருந்தாவது
வராதா என்ற ஆதங்கம் மனித மனத்தில் எழவே செய்யும்.
பொதுவாக ஏழைகள் எழ்மையை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். அவர்களுக்கு அது சகஜமாகிவிட்டது.
காளியை ஏற்றுக்கொள்கிறார்
நரேந்திரரும்
ஏழையாகவே பிறந்திருந்தால் இந்த நிலைமை அவரைப்பெரிதாகப் பாதித்திருக்காது. ஆனால் நேற்றுவரை
அரசனாக இருந்தவன் இன்று ஆண்டியாவது இருக்கிறதே,
அது கொடுமை!நேற்றுவரை எந்தக் கவலையும் இல்லாமல் பட்டாம்பூச்சிபோல் சிறகடித்துப் பறந்த
அவர் மீது இன்று எத்தனை சுமைகள்.! ஒவ்வொரு முறை வீட்டினுள் நுழையும்போதும், இன்று என்
மகனுக்கு வேலை கிடைத்திருக்குமா? நமது வறுமை நீங்குமா? என்று கவலையுடன் தெரிகின்ற தாயின்
முகம். இன்று தம்பி ஏதாவது வழி கொண்டு வந்திருப்பானா? என்று துயரத்துடன் தெரிகின்ற
தமக்கையர் முகம் , இன்று அண்ணன் ஏதாவது வாங்கி
வந்திருப்பானா? என்று ஆர்வத்துடன் தெரிகின்ற தம்பி தங்கையர் முகம், இவர்கள் அனைவருக்கும்
இல்லை,‘ என்ற பதிலைத்தேக்கியவாறு வீட்டினுள் நுழைகின்ற வாலிபனின் உள்ளம் விவரிப்பதற்கு
அத்தனை எளிதான ஒன்று அல்ல. எங்குவழி கிடைக்கம், என்று தேடிய நரேந்திரரின் உள்ளத்தில்
எழுந்தாள் தேவி! மனித உதவிகள் எதுவும் இல்லாதபோது அவளைத் தான் நாடிப் பார்ப்போமே, என்று
துணிந்தார். அவர். பின்பு நடந்ததை அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்.
ஸ்ரீராமகிருஷ்ணரின்
பிரார்த்தனையை இறைவன் நிறைவேற்றுகிறான் என்பது என் நினைவுக்கு வந்தது. அவரிடம் எனக்காகக்கூறி,
என் தாய்க்கும் சகோதரர்களுக்கும் உணவுக்கும் உடைக்கும் வழி கிடைக்கப் பிரார்த்திக்குமாறு
சொல்ல வேண்டும். நிச்சயமாக அவர் எனக்கு இந்த உதவியைச் செய்வார் என்று எண்ணி தட்சிணேசுவரத்திற்கு
விரைந்தேன், ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்று, என் அம்மா மற்றும் சகோதரர்களின் வறுமை அகல்வதற்குத்தேவியிடம்
நீங்கள் பிரார்த்திக்க வேண்டும்” என்று வற்புறுத்தினேன். அதற்கு
அவர், அப்பா, இப்படியெல்லாம் கேட்க என்னால் முடியுமா, நீயே ஏன் போகக்கூடாது? நீ காளியை
ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் இவ்வளவு துன்பங்களும்” என்றார். உடனே நான், ”எனக்கு அவளைத்தெரியாது.நீங்களே எனக்காக
அவளிடம் சொல்லுங்கள். சொல்லியே தீரவேண்டும். அவ்வாறு செய்யாதவரை நான் உங்களை விடவே
மாட்டேன், என்று சொன்னேன். ஸ்ரீராமகிருஷ்ணர் கனிவுடன், உன் துன்பத்தை நீக்கும்படி நான்
எத்தனையோ முறை அவளிடம் பிரார்த்தனை செய்துவிட்டேன்,நீ அவளை ஏற்றுக் கொள்ளாததால் அவள்
என் பிரார்த்தனையை நிறைவேற்றவில்லை.போகட்டும், இன்று செவ்வாய் க்கிழமை. இன்றிரவு கோயிலுக்குச்சென்று
அவளை வணங்கு,நீ எதைக்கேட்டாலும் அவள் கொடுப்பாள். என் தாய் பேருணர்வு வடிவினள், பிரம்மசக்தி,
தன் திருவுள்ளத்தால் இந்தப் பிரபஞ்சத்தையே படைத்துள்ளாள். அவள் நினைத்தால் செய்ய முடியாதது
ஒன்று உண்டா? என்று கூறினார்.
No comments:
Post a Comment