சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-18
🌸
அனைவரும்
அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். அங்கே ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. திடீரென்று பியானோ
இசைக்கத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஹாலில் அமர்ந்திருந்த சுமார் 4,000 பேரும் எழுந்து
”கடவுளைத்துதியுங்கள்”........ என்ற கிறிஸ்தவத் துதிப்பாடலைப் பாடினர்.
பின்னர் ”பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே”.......... என்ற பிரார்த்தனையை அனைவரும் கூறினர்.
அதன்பிறகு நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. முதல் நாளில் வரவேற்புரைகளும் அதற்குப் பிரதிநிதிகள்
அளித்த பதில்களும் இடம் பெற்றன. எல்லோரும் சொற்பொழிவுகளைத் தயார் செய்து வந்திருந்தனர். பொதுவாக அனைவரின் உரையும்
நல்ல வரவேற்பு பெற்றது. சில உரைகள் மிகுந்த
ஆரவாரத்துடன் வரவேற்கப் பட்டன.
பிரதிநிதிகளில்
முதலில் பேசியவர் கிரேக்க சர்ச்சின் ஆர்ச் பிஷப்பான ஜாந்தே. தமது உரையின் முடிவில்
கைகளைத் தூக்கி, உயரத் தூக்கிய கைகளும் இதயத்தில்
பொங்கும் அன்புமாக இந்த மாபெரும் நாட்டை ஆசீர்வதிக்கிறேன், மகிழ்ச்சியான, பேறு பெற்ற
இந்த அமெரிக்க மக்களை வாழ்த்துகிறேன், என்று அவர் கூறியபோது பார்வையாளர்கள் நீண்ட நேரம்
கைதட்டி ஆரவாரித்தனர்.....
மஜும்தாரின்
சொற்பொழிவும் நல்ல வரவேற்பு பெற்றது. பத்து வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் வாழ்ந்து
வருகின்ற அவர் பலருக்கும் அறிமுகமானவராக இருந்தார்.
கன்ஃபூசிய
பிரதிநிதியான புங்க்வாங் யூ பேச எழுந்தார். இவருக்கு க் கிடைத்த வரவேற்புபோல் மேடையில்
வேறு யாரும் பெறவில்லை” என்று டாக்டர் பரோஸ் கூறும் அளவிற்கு இவர் வரவேற்பு பெற்றார்.
ஆண்களும் பெண்களும் எழுந்து தங்கள் தொப்பி, கைக்குட்டை முதலியவற்றைக்கையில் எடுத்து
அசைத்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ஆனால் இந்த வரவேற்பு அவரது மதத்திற்காக
அல்ல, நீண்ட காலம் சீனர்களை அமெரிக்கர்கள் நடத்திய விதத்திற்கு மன்னிப்புக்கோருவதற்காகவும்,
புண்பட்ட சீன மனங்களுக்கு இதம் அளிக்கவும் அந்த வரவேற்பு” என்று போனி தமது உரையில் கூறினார்.
இலங்கை புத்த மதத்தைச்சேர்ந்த தர்மபாலர் தமது உரையால்
பார்வையாளர்களைப் பிரமிக்கச்செய்தார். அவரது கணீ
ரென்ற குரலும், யாரையும் கவரும் தோற்றமும், அகன்ற நெற்றியும் அவரைப்புத்தரின்
தூதராகக் காட்டின.
இவர்கள்
நால்வரும் பேசியதுடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. பிற்பகல் நிகழ்ச்சிகள் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக பேச ஆரம்பித்தனர்.
சுவாமிஜி?
ஆழ்ந்த மௌனத்தில்
தம்முள் மூழ்கியவராக அமர்ந்திருந்தார் அவர். அவருள் என்னென்ன அலைகள் எழுந்து அடங்கின,
என்னென்ன உணர்ச்சிப் பிரவாகங்கள் பொங்கி கரைந்து முகத்தில் தெய்வீக அமைதியாகப் பொலிந்தது
என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? அல்லும் பகலும் அனவரதமும் தம்மைக் காத்துவரும் குருதேவரை நினைத்தாரா? தம்மை அடிமைகொண்ட காளிதேவியை
நினைத்தாரா? ஆசிகள் தந்து வழியனுப்பிய அன்னை ஸ்ரீசாரதா தேவியை நினைத்தாரா? யார் பதில்
சொல்வது?
நிகழ்ச்சிகளை
நடத்துபவர் பலமுறை அழைத்தும் சுவாமிஜி எழுந்து போகவில்லை. இப்போது இல்லை, பிறகு, என்று தள்ளிப்போட்டுக்கொண்டே
இருந்தார். நண்பகல் கடந்து மாலையையும் நெருங்கியது. ஒரு வேளை இவர் பேசவே மாட்டாரோ என்று
மற்றவர்களுக்குச் சந்தேகமே வந்துவிட்டது. இனி தாமதிக்க முடியாது என்ற நிலைமை வந்தபோது சுவாமிஜி எழுந்தார். ஒரு கணம் கலைமகளை
மனத்தில் நினைத்தார். அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே ” என்று அழைத்தார்! அவ்வளவு தான்
அவரால் அடுத்த வார்த்தையைப்பேச முடியவில்லை. அங்கிருந்த அனைவரையும் ஏதோவோர் ஆர்வப்பேரலை
ஆட்கொண்டது போல் தோன்றியது. தூற்றுக்கணக்கானோர்
தங்கள் உற்சாகத்தை அடக்க முடியாமல் எழுந்து விட்டனர். காதுகளையே பிளப்பது போல்
அங்கே கரவொலி எழுந்தது. என்று எழுதுகிறார் அங்கிருந்த ஒருவர். தொடர்ந்து இரண்டு நிமிடங்கள்
சுவாமிஜி பேச முயற்சி செய்தார். ஆனால் அந்தக் கைதட்டல் ஒலியில் அவரால் பேச முடியவில்லை. இப்படியோர் வரவேற்பா
என்று அவர் சற்று ஆடித்தான் போனார்! எழுதுகிறார் அவர்,
இசை , விழா,
உரைகள் என்று விமரிசையாகப் பேரவை தொடங்கியது. பிறகு பிரதிநிதிகள் ஒவ்வொருவராக அறிமுகம்
செய்யப் பட்டனர். அவர்கள் வந்து பேசினர். என் இதயம் படபடத்தது, நாக்கு அனேகமாக வறண்டே
போயிற்று, நடுக்கத்தின் காரணமாக , காலையில் பேச எனக்குத் தைரியம் வரவில்லை. மஜும்தார்
அழகாகப்பேசினார்சக்கரவர்த்தியின் பேச்சு அதைவிட நன்றாக இருந்தது. அவர்களை எல்லோரும்
நன்றாகக் கைதட்டிப் பாராட்டினர். முன்பே தயாரிக்கப்பட்ட உரைகளுடன்அவர்கள் ஆயத்தமாக
வந்திருந்தனர். நான் ஒரு முட்டாள், அப்படி எதுவும் செய்யவில்லை. ஆனால் கலைமகளை வணங்கி
விட்டு மேடையில் வந்தேன். டாக்டர் பரோஸ் என்னை
அறிமுகம் செய்து வைத்தார். நான் சுருக்கமாகப்பேசினேன். ஆரம்பத்தில், அமெரிக்க சகோதரிகளே,
சகோதரர்களே! என்று அழைத்தேன். அவ்வளவு தான், இரண்டு நிமிட நேரம் காது செவிடுபடும்படியான
கரகோஷம், அதன் பிறகு தான் உரையைத்தொடர முடிந்தது.
சுவாமிஜி என்ன பேசினார்?
வரலாற்று
ஏட்டின் பக்கங்களாக ஆகிவிட்ட அந்தச் சொற்பொழிவின்
சில பகுதிகள் இதோ.......
இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்குப் பதிலளிக்க
இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட
வார்த்தைகள் இல்லை, உலகத்தின் மிகப் பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு
நன்றி கூறுகிறேன், பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும்
சார்ந்த கோடிக்கணக்கான இந்துப்பெரு மக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்” என்று தமது உரையை ஆரம்பித்தார் சுவாமிஜி.
பிற மதக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை
எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச்
சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன்,
என்று இந்து மதத்தின் பெருமையை எடுத்துக் கூறினார்.
-
உலகிலுள்ள
அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப்படுத்தப் பட்டவர்களுக்கும், நாட்டை
விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச்சேர்ந்தவன் நான்
என்பதில் பெருமைப்படுகிறேன், ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து
சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற
இஸ்ரேல் மரபினர்களுள் உஞ்சி நின்றவர்களை மனமாரத்தழுவிக் கொண்டவர்கள் நாங்கள் என்று
கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். பெருமைமிக்க ஜொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு
அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக்காத்து வருகின்ற மதத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை
கொள்கிறேன்” என்று இந்தியாவின் பெருமையை எடுத்துக்கூறினார்.
பிரிவினை வாதம், மதவெறி போன்றவற்றைக் கண்டித்து அவை
இல்லாத ஒரு சமுதாயம் உருவாக வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன், அவற்றிற்கு அழிவுக்காலம்
வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி,
மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை
அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்க மற்ற உணர்ச்சிகளுக்கும்
சாவு மணியாகும், என்று நான் திடமாக நம்புகிறேன், என்று தமது உரையை நிறைவு செய்தார்.
பிறகு...........
உரை நிறைவுற்றது, உணர்ச்சிப் பெருக்கினால், அப்படியே
அமர்ந்து விட்டேன். என் பேச்சுதான் அனைத்திலும் வெற்றிகரமானது என்று எல்லா பத்திரிகைகளும்
எழுதின. நான் அமெரிக்கா முழுவதும் பிரபலமாகி விட்டேன். உரையாசிரியரான ஸ்ரீதரர், ”மூகம்
கரோதி வாசாலம்- ஊமையையும் பெரும் பேச்சாளன் ஆக்குவான்” என்று உண்மையாகத் தான்
சொன்னார். அந்த இறைவனின் திருநாமம் வாழ்க! என்று கடிதத்தில் குறிப்பிடுகிறார்
சுவாமிஜி.
அதிசய ஆற்றல்
சிறிய உரைதான், ஆனால் அது சமய வரலாற்றில் மட்டுமல்ல,
உலக வரலாற்றின் ஏடுகளில் ஒரு பொன்னிதழாக மாறியது. அவரது வார்த்தைகளில் தீப்பொறிகள்
பறந்தன, என்று எழுதுகிறார் ரோமா ரோலா. ஆனால்
அந்தத் தீப்பொறிகள் சுடுகின்ற கதிர்கள்
அல்ல, உலகியல் வெப்பத்தால் வாடிக் கிடக்கின்ற இதயத் தாமரைகளை மலரச்செய்கின்ற
குளிர்க் கிரணங்கள்! அதனால் தான் அந்த அரங்கில் அமர்ந்திருந்த அத்தனை இதயங்களும் ஒருசேர
ஆர்வத்துடன் ஆர்ப்பரித்தன. ஆயிரம் உள்ளங்களைக்கொள்ளை கொள்கின்ற அந்தத் தெய்வீக ஆற்றல்
எங்கிருந்து வந்தது? அது என்ன ஆற்றல்?
சுவாமிஜி
அனைவரையும் சகோதர சகோதரிகளாக பாவித்துபேசிய
அந்த சகோதரத்துவமே மக்களிடம் ஓர் உணர்ச்சி எழுச்சியை உண்டாக்கியது என்று கருத வாய்ப்பு
உண்டு. ஆனால் சுவாமிஜிக்கு முன்பே அங்கே இருவர், ”சகோதர சகோதரிகள்” என்ற சொற்களைப் பயன்படுத்தி பேசிவிட்டனர். சுவாமிஜி 23- வது
பேச்சாளர். 5-ஆம் பேச்சாளரான மிஸ் அகஸ்டா என்பவரும், 20-ஆம் பேச்சாளரான பேராசிரியர்
பினாஸ் செராஸ் என்பவரும் இந்தச் சொற்றொடர்களைப் பயன்படுத்தியே பேசினர். இவர்களைத்தவிர
வேறு பலரும் சகோதரத்துவக் கருத்தை வலியுறுத்திப்பேசினர். எனவே சுவாமிஜியின் வெற்றிக்கு
அந்த வார்த்தை களோ, சகோதரத்துவக் கருத்தோ மட்டும் காரணம் அல்ல.
மேரி லூயி பர்க் எழுதுகிறார்.
சுவாமிஜியின் வார்த்தைகளைக்கேட்டு கைதட்டுவதற்கு
முன்னால் கூட்டம் மௌனமாக அமைதியாக இருந்தது. சுவாமிஜி பேசியதும் தான் கைதட்டியது என்பது
கிடையாது. எல்லாருக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அந்த வரவேற்புகளுக்குப் பல
காரணங்கள் இருந்தன. குறிப்பிட்ட அரசியல் மரபைச் சார்ந்தவர்கள் , குறிப்பிட்ட மதப்பிரிவைச்சேர்ந்தவர்கள்,
ஏற்கனவே மிகவும் அறிமுகமானவர்கள், முன்பு அமெரிக்கர்களால் துன்புறுத்தப்பட்ட இனத்தைச்
சார்ந்தவர்கள் என்றெல்லாம் பல காரணங்களுக்காக அவர்கள் வரவேற்கப் பட்டார்கள். காலை முதல்
மாலை வரை சகோதரத்துவத்தைப் பற்றியும் பலர் பேசினார்கள். எனவே சுவாமிஜி இந்தக் காரணங்களுக்காக
வரவேற்கப் படவில்லை. அவரது வரவேற்புக்கு ஒரே காரணம் ஆன்மீக ஆற்றல்.
சவாமிஜியின்
வார்த்தைகளில் கேட்போம்.
-
சிகாகோவில்
எனது முதல் சொற்பொழிவில் நான் எல்லோரையும் ”அமெரிக்க சகோதரிகளே” சகோதரர்களே” என்று அழைத்ததும், எல்லோரும்
எழுந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததும் உங்களுக்குத்
தெரியும். ஆனால் அப்படி அவர்கள் பரவசப்பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா? ஏதோ அதிசய ஆற்றல்
என்னிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். உண்மை
தான். என்னிடம் அத்தகைய ஆற்றல் உள்ளது, அது இதுதான்- ஒரு முறை கூட காம எண்ணம் என்னுள்
புக நான் அனுமதித்ததில்லை, என் மனம் , எனது சிந்தனை, பொதுவாக மனிதன் அந்த வழியில் செலவழிக்கின்ற
என் ஆற்றல்கள் அனைத்தையும் ஓர் உயர்ந்த போக்கில் போகுமாறு பயிற்சி அளித்தேன். அது யாராலும்
தடுக்க முடியாத ஒரு மாபெரும் ஆற்றலாக உருவெடுத்தது.
தூய வாழ்க்கையின் ஆற்றல் அத்தகையது. தூய்மை மற்றும் மௌனத்திலிருந்து
ஆற்றல் மிக்க சொற்கள் பிறக்கின்றன. என்பார் சுவாமிஜி. அந்த ஆற்றல் மிக்க சொற்கள் அன்று
ஆயிரக்கணக்கான இதயங்களையும், பிறகு அமெரிக்கா முழுவதையும் , இன்று உலகம் முழுவதையும்
ஆக்கிரமித்து ள்ளது.
சிகாகோ சொற்பொழிவின்
பல்வேறு பரிமாணங்களைப் பற்றி சகோதரி நிவேதிதை தருகின்ற சித்திரத்தைக் காண்போம்.
சர்வமத மகாசபையில் விவேகானந்தர் பேசிய சொற்பொழிவைப்பற்றி என்ன சொல்வது,
இந்துக்களின் மதக்கோட்பாடுகளைப் பற்றி பேச
ஆரம்பித்தார் அவர். அவர் முடித்தபோது இந்து மதம் உருவாக்கப் பட்டிருந்தது என்று கூறலாம்.
-
என்ன பேசினார்?
-
அலையடித்துப் பரவுகின்ற ஆற்றலும் துணிச்சலும் நிறைந்து,
அதே வேளையில் ஆராய்ச்சி உணர்வும் கவனமும் நிறைந்த மனங்கள் கொண்ட, இளமைத் துடிப்புமிக்க மக்கள் அங்கே விவேகானந்தரின்
முன்னால் அமர்ந்திருந்தார்கள். அவருக்குப் பின்னாலோ, இதற்கு மாறாக, காலங்காலமாக அடையப்பட்ட
அமைதியான ஆன்மீகக் கடல். அவருக்குப் பின்னால்
இருந்த உலகம் வேதங்களின் காலத்தோடு தோன்றியது. உபநிஷதங்களால் தன்னை வளர்த்துக்கொண்டது.
அதனுடன் ஒப்பிடும் போது புத்த மதம் நேற்று பிறந்தது போல் தோன்றுவது. அந்த உலகம் மத
நம்பிக்கைகளும் பல்வேறு மதப் பிரிவுகளும் நிறைந்தது. வெப்ப மண்டலக் கதிரவனின் ஒளியில்
மூழ்கியுள்ள அமைதிப்பேருலகம் அது. காலங்காலமாகத் தன் புழுதி மீது மகான்களின் பொன்னடிகள்
பதிந்த உலகம் அது. சுருங்கச் சொன்னால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்து வருகின்ற
இந்தியாவே அவருக்குப் பின்னால் நின்றது.
ஆம், பல சிந்தனைகள் ஆழங்களை அளந்து கண்டு விட்ட,
பல சிந்தனைகளை மெய்ப்பித்தும் விட்ட இந்தியாவே அவருக்குப் பின்னால் நின்றது. விரிந்த
பல்வேறு கால நிலைகளும் சூழலும் உடைய மிகப் பரந்த நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு
மூலைவரை உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவானதும் அடிப்படையானதும் முக்கியமானதுமான உண்மைகளிடையே
அமைந்த ஓர் ஒற்றுமையை, தனது அந்த முழுமையான
ஒற்றுமையைத் தவிர மற்றதையெல்லாம் உணர்ந்துவிட்ட இந்தியாவே அவருக்குப் பின்னால்
நின்றது.
சர்வமத மகாசபை
மேடையில் அமர்ந்திருந்த காவி உடை தரித்த இந்தத் துறவி கீழ்திசை மற்றும் நவீன மேல் திசை
ஆகிய இரண்டு சிந்தனை வெள்ளங்களும் கருத்தாறுகளும் கலந்து சங்கமிக்கின்ற இடமாக அப்போதைக்கு
இருந்தார். எந்தக் கட்டுக்களாலும் எல்லைப் படுத்தப் படாத அந்த மாபெரும் துறவியிடம்
இந்த இரண்டு பேராறுகளும் சங்கமிக்கும் போது எழும் அதிர்ச்சியின் தடுக்க முடியாத விளைவாகத்தோன்றின
இந்து மதத்தின் பொதுவான அடிப்படைகள். அங்குவிவேகானந்தரின் திருவாயிலிருந்து வெளிப்பட்டது
அவரது வாழ்க்கை அனுபவங்கள் அல்ல. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் தமது குருதேவரைப்
பற்றிக்கூட இந்த இரண்டும் அல்ல, அவர் மூலம் பேசியது இந்தியாவின் மத உணர்வு, இந்திய மக்கள் காலங்காலமாக
வகுத்து வைத்த செய்தி. இது தான் அவரிடமிருந்து வெளிப்பட்டது.
எதிர்ப்பு
என்னும் பட்டொளியின் நடுப்பகலில் ததும்பும் வாலிபத்தின் சன்னதியில் அவர் பேசினார்.
அங்கே பசிபிக் மாக்கடலின் மறுகரையில் , பூமியின்
இருள் உறைந்து கிடந்த மறுபகுதியின் நிழலில்
உறங்கிக்கொண்டிருந்த ஒரு நாடு, தன் சொந்த மகிமை மற்றும் ஆற்றலின் ரகசியத்தை
வெளிப்படுத்துவதற்காகத் தன்னை நோக்கி வந்து சேர்ந்த அந்த விடியலின் வார்த்தைகளுக்காக
ஏங்கி நின்றது.
விவேகானந்தரைத் தவிர அந்த மேடையில் அமர்ந்திருந்தவர்கள்
தாங்கள் சார்ந்திருந்த தனிப்பட்ட மத அமைப்புகளின்
கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பரப்புகின்ற நோக்கத்துடன் பேசினார்கள். ஆனால்
விவேகானந்தர் பேசியதோ, இந்த அனைத்தையும் தன்னுள் கொண்ட ஒரு மதத்தைப் பற்றி. இது தான்
அவரது பெருமை. அவரது வார்த்தையிலேயே சொல்ல வேண்டுமானால் அவை ஒவ்வொன்றும், பல்வேறு ஆண்களும்
பெண்களும் வெவ்வேறு சூழ்நிலையில், வெவ்வேறு நியதிகளின் படிச்செய்கின்ற ஒரு பயணம், ஒரு
முயற்சி மட்டுமே. இது தான் உண்மை. அது தவறு, இந்த நிலையில் இது உண்மை, அந்த நிலையில்
அது தவறு, இந்தக் காரணத்தால் இது உண்மை, அந்தக் காரணத்தால் அது தவறு என்றெல்லாம் சொல்லாமல்
” இவையாவும் ஒரே நூலில் கோர்க்கப்பட்டுள்ள முத்துக்களைப்போல என்னில் ஒன்று சேர்ந்துள்ளன.
எங்கெல்லாம் அசாதாரணமான புனிததும், அசாதாரணமான ஆற்றலும் எழுந்து மனித குலத்தை முன்னேற்றி,
தூய்மைப்படுத்துவதைக் காண்கிறாயோ அங்கே நான் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்” என்று முழங்கிய ஒருவரைப்பற்றிக் கூறவே தாம் அங்கே சென்றதாக
அவர் கூறினார்.
அவர் ஓர் அதிகாரத்துடன் போதித்தார். அது பண்டிதர்கள்
காட்டும் வெறும் சொல்ஜாலம் அல்ல. அவர் தாம்
போதித்தவற்றை அனுபூதியில் உணர்வதற்காக ஆன்மீக ஆழங்களில் ஆழ்ந்தார். பின்னர் ஸ்ரீராமானுஜரைப்போல்
ஆன்மீகப் பேரொளியைத்தாம் கண்டு, திரும்பி வந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சமூகத்தால்
ஒதுக்கப் பட்டவர்களுக்கும் அன்னிய சமுதாயத்தினருக்கும் அந்த ரகசியங்களை முரசறைந்து
தெரிவித்தார்.
உரை முடிந்தது. அமர்ந்திருந்த ஆண்களும் பெண்களும்
முண்டியடித்துக்கொண்டு பெஞ்சுகளில் ஏறி அவரை நெருங்க முயற்சி செய்தனர். அவரது ஆடையைத்தொட
பலர் எத்தனித்தனர். அன்று அங்கே இருந்த மிசஸ்
ப்ளாஜட் கூறுகிறார். அந்த இளைஞர் எழுந்து, அமெரிக்க சகோதரிகளே சகோதரர்களே! என்று கூறியது
தான் தாமதம்! அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். தாங்கள் ஏன் அப்படிச்செய்கிறோம்
என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உரை நிறைவுற்றது. வரிசை வரிசையாகப்பெண்கள் எழுந்து பெஞ்சுகளின் மீது நடந்து அவரை நெருங்கினர்.
ஒரு முறை அருகில் சென்று அவரைக் கண்டால் போதும் என்று அவர்கள் எண்ணியது போல் இருந்தது.
என் இளைஞனே! இந்தப் பெண்களின் படையெடுப்பிற்குத் தாக்குப்பிடித்துவிட்டாயானால் நீ உண்மையிலேயே கடவுள் தான்” என்று எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன்.
சுவாமிஜியின் வெற்றி வரலாறு காணாதது ஆகியது. ஹரி,
சர்வமத மகாசபை இதற்காகவே கூட்டப் படுகிறது. என் மனம் அப்படித்தான் சொல்கிறது. இது நிரூபிக்கப்
படுவதை நீ எதிர்காலத்தில் காண்பாய்” என்று அவர் அமெரிக்காவிற்குப்
புறப்படுமுன் கூறியது அன்று நிரூபிக்கப்பட்டது.
ஆனால் சுவாமிஜி,
இந்தப் புகழும் ஆரவாரமும் அவரைத் தொட்டதா?
இல்லை, அன்று
அறைக்குத்திரும்பிய அவர் இரவில் படுக்கையில் படுத்திருந்தார். அவர் கண்களில் எழுந்த
தெல்லாம் இந்தியா தான்! அவரது இதயம் துடித்ததெல்லாம் இந்தியாவின் ஏழைகளுக்காக, வறுமையிலும்
துயரங்களிலும் வாடுகின்ற சகோதர இந்தியர்களுக்காகத்தான்! அவர்கள் படுகின்ற துன்பம் ஒரு
பக்கம், இங்கே அமெரிக்காவின் செல்வச்செழிப்பு மறுபக்கம். இரண்டையும் ஒப்பிட்ட சுவாமிஜியின்
கண்கள் கண்ணீரால் நனைந்தன. கண்கள் மட்டுமல்ல, தலையணையும் நனைந்தது. அம்மா! ஆதி பராசக்தி!
இந்தப்பெயரும் புகழும் எனக்கு எதற்கு? என் தாய் நாடு வறுமையில் வாடும்போது அந்த ஆரவாரங்களை
வைத்து நான் என்ன செய்வது? இந்தியாவின் பாமர மக்களைக் கைதூக்கி விடுவது யார்? நான்
எப்படி அவர்களுக்கு உதவ முடியும்? அம்மா, வழிகாட்டு! என்று அவரது மனத்திலிருந்து பிரார்த்தனை
எழுந்தது.
மறுநாள்
என்ன நடக்கப்போகிறது என்பதை சுவாமிஜி உணர்ந்திருந்தார். புகழும் பெயரும் எங்கும் பரவி
தாம் ஒரு பொது மனிதராகத் திகழப்போவதும், தமது தனிமை வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி
விழப்போவதும் அவருக்கு நன்றாகத்தெரிந்திருந்தது. ஒரு நாளில் வெல்வது, ஒரு கணத்தில்
வெல்வது,ஒரு பார்வையில் வெல்வது, என்றெல்லாம்
சொல்வார்களே, அது தான் சுவாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்தது. சிகாகோவின் தெருக்களில்
அவரது ஆளுயர படங்கள் இடம் பெற்றன. ”இந்துத் துறவி விவேகானந்தர்” என்ற வாசகம் அவற்றில் காணப்பட்டது. கடந்து செல்பவர்கள் ஒரு
கணம் நின்று பார்த்து, தலைகுனிந்து, கைகூப்பி அவரை வணங்கிச் சென்றார்கள்.
மறுநாள்
பத்திரிகையில் முக்கியச்செய்தி சர்வமத மகாசபையாகவும் அதில் முக்கியமான நபர் சுவாமிஜியுமாகவே
இருந்தது.
சில விஷயங்களில்
மிகவும் பிரபலமாகத் திகழ்ந்தவர் பிராமணத் துறவியான சுவாமிவிவேகானந்தர். அவரது ஆரஞ்சு
வண்ண உடை.காவித் தலைப்பாகை, நன்றாக மழிக்கப்பட்ட முகம், கட்டான உடல், அழகிய முகம்,
கறுத்த நுண்மையான, யாரையும் ஊடுருவிப் பார்க்கின்ற கண்கள், மிகவும் பிரியமான தோற்றம்,
எந்தக் கூட்டத்தில் இருந்தாலும் அனைவரையும்
கவர்கின்ற ஆளுமை என்று அனைவராலும் விரும்பப்பட்டார் அவர். இனி, அவரது ஆங்கில அறிவோ
அபாரமாக உள்ளது, தாய்மொழிபோல் அதில் சரளமாகப்பேசுகிறார் அவர்.
-சிகாகோ
அட்வகேட்.
இந்தப் பாணியில் பல பத்திரிகைகள் எழுதின. அன்று மகாசபையில்
கலந்து கொண்டவரான மிஸ் மன்றோ எழுதுகிறார்.
எல்லா விதத்திலும் சர்வமத மகாசபை ஒரு வெற்றியாக அமைந்தது.
அதற்காக வேலை செய்த அனைவருக்கும், குறிப்பாக டாக்டர் பரோஸுக்கு இது ஒரு மாபெரும் வெற்றி.
அவர் இதற்காக இரண்டு வருடங்கள் அயர்வின்றி பாடுபட்டார். இதில் அனைவரையும் அடியோடு கவர்ந்தார் சுவாமி விவேகானந்தர். சிகாகோ
நகரையே அவர் அடிமை கொண்டு விட்டார்.
-
மறுபக்கம்
-
ஆனால் இதற்கு மறுபக்கமும் இருக்கவே செய்தது. சிகாகோவின்
முக்கிய தினசரி பத்திரிக்கைகளான சிகாகோ டெய்லி ட்ரிபியூன், சிகாகோ டெய்லி நியூஸ் போன்றவை
சுவாமிஜியின் சொற்பொழிவு அசாதாரணமாக இருந்தது என்றோ, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது
என்றோ எழுதவில்லை. செப்டம்பர் 12 சிகாகோ டெய்லி நியூஸ் பல சொற்பொழிவுகளை வெளியிட்டிருந்தது.
ஆனால் சுவாமிஜியின் சொற்பொழிவை வெளியிடவில்லை. ” வெறுமனே விவேகானந்தா பேசினார்” என்று மட்டுமே் குறிப்பிட்டிருந்தது. இயல்பாக இத்தனைபேர்
நீண்ட நேரம் கைதட்டியது பற்றியும் குறிப்பிட வில்லை.
சில பத்திரிகைகளில்
, மற்ற சொற்பொழிவாளர்களுடன் சுவாமிஜியை ஒப்பிட்டு, அவரைப் புகழ்வது போல் மட்டம் தட்டுவதற்கான
முயற்சிகளும் நடைபெற்றன. உதாரணமாக சிகாகோ அட்வகேட், இன்டீரியர் போன்ற பத்திரிகைகள்.
இன்டீரியர்( 1893 செப். 28) எழுதியது. அவரது ஆங்கில அறிவு அபாரமாக இருந்தது. தாய் மொழி
போலவே அவர் அதில் பேசுகிறார். ஆனால் மஜும்தாரின் ஆங்கிலமும் சளைத்ததல்ல, அது மட்டுமின்றி,
மஜும்தார் ஆன்மீகத்திலும் மதத்தின் மீதுள்ள ஈடுபாட்டிலும் விவேகானந்தரை விட உயர்ந்தவராக
உள்ளார்.
ஆனால் இப்படி எழுதிய பத்திரிகைகள் நடுநிலை அல்ல என்பது
உண்மை. இன்டீரியர் பத்திரிகை கூட மஜும்தாரின் கிறிஸ்தவ மதச் சார்பு காரணமாகவே அவரைப்
புகழ்ந்தது. தொடரும் அதன் குறிப்பே இதனை நமக்குப் புரிய வைக்கிறது.
மஜும்தார் பிரம்மசமாஜத்தைச்சேர்ந்தவர். பிரம்ம சமாஜம்
என்பது இந்து மதத்தின் பரிணாமம் ஆகும். இன்று அது
மிகவும் பரவி வருகிறது.அதன் வளர்ச்சியின் இறுதி கட்டமாக ஏசுநாதரை ”தேவ குமாரன்” என்றும் ” உலகின் ரட்சகர்” என்றும் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆதரவும் எதிர்ப்பும் எப்படியோ? சுவாமிஜி அனைத்தையும் மீறி
புகழ் பெற்றார். பெரும்பாலான பத்திரிகைகள் அவரைப் பாராட்டி எழுதின. சர்வமத மகாசபையின்
அமைப்பாளர்களும், அதில் கலந்து கொண்டவர்களும் ஒரு சேர அவரைப் புகழ்ந்தார்கள்.
-
சிகாகோ சொற்பொழிவுகள் ஒரு கண்ணோட்டம்
............................
சர்வமத மகாசபையில் சுவாமிஜி பேசிய ”சிகாகோ சொற்பொழிவுகள்” இன்று மனித குல வரலாற்றின் ஒரு பொன்னேடாகத் திகழ்கின்றன.
உலகின் மதச்சிந்தனைப்போக்கிற்கு ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகிறது. சுவாமிஜியின்
சொற்பொழிவுகளில் நமக்குக் கிடைத்தவை ஆறு. அவை- 1. வரவேற்புக்குப் பதிலுரை, 2. நாம்
ஒத்துப்போவதில்லை?, 3. இந்து மதம், 4. மதம் இந்தியாவின் அவசரத்தேவையல்ல. 5. புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு.6- நிறைவு
நாள் உரை. இவற்றிலும் , 1-ம், 3-ம் மட்டுமே முழுமையாகக் கிடைத்தன.
இந்தச் சொற்பொழிவுகளில் சுவாமிஜியின் மேலை நாட்டுச்செய்தியின்
ஒரு சுருக்கத்தை நாம் காணலாம்.
1- வரவேற்புக்குப் பதிலுரை
இந்தச் சொற்பொழிவு
சுவாமிஜியை உலக அரங்கில் இனம் காட்டியது. இந்தியா மற்றும் இந்து மதத்தின் பெருமையை
ரத்தினச் சுருக்கமாக இதில் கூறினார் சுவாமிஜி. இந்தியா எப்படியெல்லாம் பிற நாட்டினருக்கு
அடைக்கலம் கொடுத்தது, இந்து மதம் எப்படி ஓர் உலகளாவப் பரந்த மதமாகத் திகழ்கிறது என்பதை
இதில் அவர் தெரிவித்தார். எதையும் வெறுக்காமல்
மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று நாங்கள் ஒப்புக்கொள்ளவும் செய்கிறோம்” என்று அவர் கூறியபோது பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்
என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் இந்தக் கருத்து அந்த நாட்களில் எங்கும் கேள்விப்படாத
ஒன்று, ஏன், மேலை நாட்டின் கனவில் கூட இந்தக் கருத்து க் கிடையாது. எல்லா மதங்களும்
உண்மை, எல்லா மதங்களும் ஒரே இறைவனைப்பற்றியே
பேசுகின்றன. அதனால் எல்லா மதங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியதும், பகவத்
கீதையை(4.11) மேற்கோள் காட்டியதும், அமெரிக்கர்களுக்கு ஒரு புதிய உலகத்தையே படைத்தன
என்று கூறினால் அது மிகையாகாது.
2- நாம் ஏன் ஒத்துப்போவதில்லை?
பரந்த மனம்
வேண்டும் என்று இந்தச்சொற்பொழிவில் சுவாமிஜி கூறினார். கிணற்றுத் தவளை” கதையைக்கூறி நாம் நமது குறுகிய வட்டங்களிலிருந்து வெளிவர
வேண்டும் என்பதைச்சுட்டிக்காட்டினார்.
3- இந்து மதம்
இந்து மதக்
கோட்பாடுகளைப் பற்றி சுவாமி விவேகானந்தர் பேச
ஆரம்பித்தார். அவர் முடித்தபோது இந்து மதம் உருவாக்கப்பட்டிருந்தது” என்று எந்த மதத்தை நிவேதிதைகுறிப்பிட்டாரோ அதனை இந்த உரையில்
சுவாமிஜி அற்புதமாக எடுத்துக்காட்டினார்.
மிஷனரிகளின் பிரச்சாரம் காரணமாக அங்கிருந்த பார்வையாளர்களில்
பாதிப்பேராவது சீனா, ஜப்பான், இந்தியா போன்ற கீழை நாடுகளை ”நாகரீகம் இல்லாத காட்டுமிராண்டிகள்
வாழ்கின்ற நாடு” என்று கருதியிருந்தார்கள். கல்லையும் மண்ணையும் கும்பிடுவார்கள்.
ஏராளம் தெய்வங்களை உடையவர்கள் , தேர்ச் சக்கரத்தில் தங்களை மாய்த்துக் கொள்பவர்கள்” என்றெல்லாம் தான் எண்ணியிருந்தார்கள்.
ஆனால் சுவாமிஜி
”அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே! ஆ! ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும்
பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனியபெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத
பேரின்பத்தின் வாரிசுகளே! ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம்
ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமானவர்கள், பூரணர்கள்,
வையத்துள்வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச்சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம்! என்று
முழங்கினாரே, அது அவர்களின் கண்ணோட்டத்தை அடியோடு மாற்றியது. அவர்கள் திகைத்துப்போனார்கள்.
இத்தனை அற்புதமான ஆன்மீகப்பொக்கிஷம் நிறைந்தவையா கீழை நாடுகள் என்று பிரமித்து நின்றார்கள்!
இந்தச் சொற்பொழிவு உலகின் சிந்தனைக்கு சுவாமிஜியின்
ஒரு மாபெரும் கொடை என்று கூறினால் அது மிகையாகாது. இதன்மூலம் அவர் இந்து மதத்தின் உண்மை
யான சாரத்தை வெளியே கொண்டு வந்தது மட்டுமின்றி,
உலகிற்கே சில அற்புதக் கருத்துக்களை வெளியிட்டார். அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
-
1- மனிதனைப்பற்றிய புத்துணர்வுக்கண்ணோட்டம்.
வையத்துள்
வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா?- இந்த ஐந்து வார்த்தை-மந்திரம் ஓர் அணுகுண்டைப்போல்
விழுந்தது. மனிதன் பாவி, அஞ்ஞானி, கதியற்றவன், என்றெல்லாம் போதிக்கப்பட்டுவந்த நாடு
அது. அதிலும் போஸ்டன் பாதிரியான ஜோசப் குக் பாவம் பற்றி ஒரு கவிதையே எழுதிப் படித்தார்.
தன்னைப்பாவி என்றும் இழிந்தவன் என்றும், கிறிஸ்தவ மதத்தைத்தவிர வேறு வழியே கிடையாது
என்றும் அவர் அதில் எழுதியிருந்தது கிறிஸ்தவர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.
அது பற்றி ”தி ஓபன் கோர்ட்” என்ற பத்திரிகை பின்வருமாறு எழுதியது.”சர்வமத
மகாசபையில் எல்லாம் அமைதியாகச் சென்றது. முஸ்லிமோ, யூதரோ அல்ல, அது ஒரு கிறிஸ்தவரே
என்பது வேதனைக்குரிய விஷயம்.
அந்த நிலையில் நீங்கள் பாவிகள் அல்ல, நீங்கள் பூமியில்
வாழும் தெய்வங்கள்” என்று கூறியது அந்த மக்களுக்கு
ஓர் இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கும். அழுதத்துளிகளையும் நிறைத்திருக்கும் என்பதில்
சந்தேகமில்லை. இந்த ஐந்து வார்த்தை- மந்திரத்தின் முதல் மூன்று வார்த்தைகள் ஆனந்தம்,
நம்பிக்கை, கௌரவம், வீரம், ஆற்றல், சுதந்திரம், என்று நன்மைகள் அனைத்தின் செய்தியைத்
தாங்கியுள்ளன. கடைசி இரண்டு வார்த்தைகளோ எதிர்மறையான, துன்ப நோக்குடன் கூடிய அனைத்து
பண்புகளுக்கும் சம்மட்டி அடியாக வீழ்ந்தன. ”மனிதன் தெய்வீகமானவன்” அவன் தனது தெய்வீகத்தை வெளிப்படுத்தினால் போதும், என்ற ஒரு
புதிய செய்தியை இந்தச் சொற்பொழிவின் மூலம் சுவாமிஜி அளித்தார்.
2- புதுப்பொலிவுடன் கூடிய மதம்.
இந்துமதம் என்றால் கல்லையும் மண்ணையும் வழிபடுவது, மூட நம்பிக்கைகளின்
தொகுப்பு என்று மிஷனரிகள் பிரச்சாரம் செய்து பிறரையும் ஓரளவுக்கேனும் நம்பச் செய்திருந்த
அந்தக் காலத்தில் இந்து மதத்தைப் பற்றிய உண்மைக்கருத்தை ஒரு புதுமைக் கருத்தை இந்தச்
சொற்பொழிவின் மூலம் சுவாமிஜி அளித்தார். அதன் மூலம் உலகம் தழுவிய மதம்” என்ற அற்புதக் கருத்தை
அவர் இங்கே அளித்தார்.
இந்து மதக் கருத்துக்களின் சுருக்கம் இது தான். இந்து
தன் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற தவறியிருக்கலாம், ஆனால் என்றாவது உலகம் தழுவிய மதம்
என்ற ஒன்று உருவாக வேண்டுமானால், அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப் படுத்தப்டாததாக
இருக்க வேண்டும். அந்த மதம் யாரைப் பற்றி பிரச்சாரம் செய்கிறதோ, அந்தக் கடவுளைப்போன்று
எல்லையற்றதாக இருக்கவேண்டும். சூரியன், தன் ஒளிக் கிரணங்களை எல்லோர் மீதும் சமமாக வீசுவது
போல் அது கிருஷ்ணபக்தர்கள்,கிறிஸ்தவ பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாகப்
பார்க்கவேண்டும். அது பிராமண மதமாகவோ கிறிஸ்தவ மதமாகவோ பௌத்த மதமாகவோ முகமதிய மதமாகவோ
இருக்காமல், இவற்றில் ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற
இடம் உள்ளதாக இருக்கவேண்டும். விலங்கினங்களைப்போல் உள்ள காட்டுமிராண்டி மக்களிலிருந்து,
இவரும் மனிதரா என்று சமுதாயம் பய பக்தியுடன் வணங்கிநிற்கும், அளவுக்கு அறிவாலும், இதயப்
பண்பாலும் உயர்ந்து மனித இயல்புக்குமேலோங்கி விளங்கும் சான்றோர் வரை, எல்லோருக்கும்
இடமளித்து, தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக்கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்கவேண்டும். அந்த
மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும் சகிப்புத்தன்மையற்று நடந்து கொள்ளுதலும்
இருக்காது. அது ஆண், பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளும். மனித
இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும்
அதற்கே பயன்படும். அத்தகைய மதத்தை அளியுங்கள்.
3- சமய சமரசம்
இந்துவிற்கு
எல்லா மதங்களும், பலவித நிலைகளிலும், சந்தர்ப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும்
ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம் தான்--------- ஒரே ஒளி தான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின்
மூலம் பல நிறங்களில் வருகிறது. நம்மை மாற்றி அமைத்துக்கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள்.
மற்றவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்று சம்ஸ்கிருதத் தத்துவ இலக்கியத்தில் எங்காவது
கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடிக்கும் படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்
தமது வாழ்க்கையையே ஒரு மாபெரும் சோதனைக்களமாக்கி ”எத்தனை மதங்களோ அத்தனை வழிகள்” என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கூறினர். அதனை இங்கே வெளிப்படுத்தினார்
சுவாமிஜி.
இந்தக் கருத்தும்
அமெரிக்கவில் ஒரு பெரிய புரட்சியாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.”கிறிஸ்தவ மதத்தைத்
தவிர வேறு எந்த மதமும் உண்மையில்லை. ஏசுவைத் தவிர வேறு ரட்சகர் இல்லை, என்பது தான்
கிறிஸ்தவ மதத்தின் ஆணித்தரமான கோட்பாடு. ஆனால் காலப்போக்கில் அவர்கள் இந்தக் கருத்தைச்
சிறிது சிறிதாக மாற்றினர். 19- ஆம் நூற்றாண்டில் நிலவிய கருத்து பற்றி பெரிஹியாஸிந்த்
என்பவர் எழுதுகிறார். எல்லா மதங்களும் ஒரே போல் சரியானவை என்பது உண்மையல்ல. அதே வேளையில்,
ஒரு மதத்தை த் தவிர மற்ற அனைத்துமே தவறானவை என்று கூறுவதும் உண்மையல்ல, பண்டைய கிறிஸ்தவ
மதத்தைப்போல் அல்லாமல், இன்றைய கிறிஸ்தவ மதம், எல்லா மதங்களும் அவற்றிற்குரிய இடத்தை
அளிக்கவேண்டும்.
கிறிஸ்தவ
மதத்தைத்தவிர எதுவுமே வழி அல்ல, என்ற நிலையிலிருந்து, ஒரு சிலர் இவ்வாறு ஒரு படி இறங்கி
வந்தாலும் செயல்முறையில் இதனைக் கிறிஸ்தவ மதத்தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த
நிலையில் சுவாமிஜி எடுத்துக் காட்டிய சமயசமரசக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
4- விஞ்ஞான-மத சமரசம்
விஞ்ஞானமும்
மதமும் ஒன்றுக்கொன்று முரணானவை என்றுதான் மேலை நாட்டில் ஆரம்பத்திலிருந்தே கருதப்பட்டு
வந்திருக்கிறது. இரண்டிற்கும் முரண்பாடு கிடையாது. அவை இரண்டும் ஒன்றுக்கொன்று துணை
செய்பவை என்பதை இந்தச் சொற்பொழிவின் மூலம் எடுத்துக்காட்டினார் சுவாமி
ஒருமைநிலையைக்
கண்டு பிடிப்பது தான் விஞ்ஞானம். முழுமையான ஒருமைநிலை கிட்டியதும் விஞ்ஞானம் மேலே செல்லாமல்
நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை
எட்டிவிட்டது. அது போலவே, எந்த மூலப்பொருளிலிருந்து எல்லா பொருட்களும் படைக்கப்படுகின்றனவோ,
அதைக் கண்டுபிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா
சக்திகளும் வெளிப்படுகின்றனவோ, அதைக் கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம்
நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக்கண்டு பிடித்ததும், மாறிக்கொண்டேயிருக்கும்
உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனைக் கண்டு
பிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால்
தோன்றுகிறதோ, அந்த ஆன்மாவைக் கண்டு பிடித்ததும் , மத விஞ்ஞானம் பூரண மாகி விடும்.
மதம் என்பது
செயல்முறை விஞ்ஞானம்-
இந்து, வார்த்தைகளிலும்
கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன்வசப்பட்ட சாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்குநேர் காண விரும்புகிறான்...........
இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ , கொள்ளையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கிவிடாது.
வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே, உணர்ந்து
அதுவாக ஆதலே இந்து மதம். இடைவிடாத முயற்சியின் மூலம் நிறைநிலை பெறுவதும் தெய்வத்தன்மை
அடைவதும் தெய்வத்தை அணுகுவதும் அவரைக் காண்பதுமே அவர்களது நெறியின் ஒரே நோக்கம். தெய்வத்தை அணுகி, அவரைக்
கண்டு, வானில் உறையும் தந்தையைப்போல் நிறைநிலை அடைவது தான் இந்துக்களின் மதம்” என்று சுவாமிஜி முழங்கியதைக்கேட்டவர்கள் அடிவரை அசைக்கப்பட்டார்கள்.
”சில கொள்கைகளை நம்பவேண்டும்” நம்பாவிட்டால் நரகம்” என்றுதான் அவர்கள் இதுவரை போதிக்கப் பட்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால் ”உண்மையை நேருக்குநேர் சந்திக்கலாம்” என்று முழங்கினார் சுவாமிஜி.
மதம் இந்தியாவின்
அவசரத்தேவையல்ல
.............
இந்தியாவின்
மகிமை, அதன் ஆன்மீக உயர்வு அனைத்தையும் முதல் மூன்று சொற்பொழிவுகளில் தெளிவுபடுத்தி
அமெரிக்கர்களுக்கு உண்மையை உணர்த்தினார் சுவாமிஜி. இந்த நான்காம் சொற்பொழிவில், இத்தகைய
ஒரு நாட்டிற்கு மதத்தைப் போதிப்பதற்காக மிஷனரிகளை
அனுப்புவது தேவைதானா என்ற கேள்வியை எழுப்பினார். மதத்தையோ ஆன்மீகத்தையோ யாரும் இந்தியர்களுக்குப்
புதிதாகப் போதிக்க வேண்டியதில்லை. உணவே அவர்களின் உடனடி த்தேவை என்பதை எடுத்துக் கூறினார்.
அஞ்ஞானி களின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு , மதப் பிரச்சாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற
ஏன் முயல்வதில்லை? என்று அவர்களைச் சாடினார். பசியால் வாடும் மக்களிடம் மதப் பிரச்சாரம்
செய்வது அவர்களை அவமதிப்பதாகும்” என்று மனித நேயத்துடன் அவர்களுக்கு
எடுத்துக் கூறினார்.
புத்த மதம்
இந்து மதத்தின் நிறைவு
..............
இந்து மதத்தில் பேரளவிற்குக் காணப்படும் கோளில் வழிபாடு
போன்றவை புத்த மதத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அவை மட்டுமல்ல, இந்து மதத்தின் வேறு பல அம்சங்களும் இவ்வாறு புத்த மதத்திலிருந்து
எடுக்கப் பட்டவை தான். புத்த மதமின்றி இந்து மதம் வாழ முடியாது. அவ்வாறே இந்து மதமின்றி
புத்த மதமும் வாழ முடியாது. புத்த மதத்தை இந்து மதத்தின் நிறைவாகக்கருதினார் சுவாமிஜி.
அதனை இந்தச் சொற்பொழிவில் தெளிவுபடுத்தினார்.
நிறைவு நாள் உரை
..................
உதவி செய்,
சண்டைபோடாதே. ஒன்றுபடுத்து” அழிக்காதே, சமரசமும் சாந்தமும் வேண்டும்” வேறுபாடு வேண்டாம்- இத்தகைய செய்தியுடன் சுவாமிஜியின் மாபெரும் சிகாகோ சொற்பொழிவுகள் நிறைவுற்றன.
சிகாகோ சொற்பொழிவுகளில் மதவெறி பற்றி சுவாமிஜி குறிப்பிடுவதற்கு
முக்கியக் காரணம் ஒன்று இருந்தது- அப்போது பம்பாயிலும் மற்ற இடங்களிலும் நடைபெற்ற முஸ்லிம்-
இந்துக் கலவரங்களும், அதன் காரணமாக வன்முறையும் படுகொலைகளும் நிகழ்ந்தன. ஆகஸ்ட்
11-ஆம் நாள் முஸ்லிம்களும் இந்துக்களும் நடத்திய மத ஊர்வலத்திலிருந்து ஆரம்பித்தது
பிரச்சனை. பிறகு கொலைகளும் படுகொலைகளும் தொடர்ந்தன. இது பற்றிய செய்திகள் அமெரிக்காவின்
முக்கியப் பத்திரிகைகள் அனைத்திலும் வெளிவந்தன. சுவாமிஜி கட்டாயம் அவற்றைப் படித்திருப்பார்.
இந்தக் கலவரத்தைச்சுட்டிக்காட்டி ”நியூயார்க் டைம்ஸ்” பின்வருமாறு எழுதியது.
இந்தியாவில் முஸ்லிம்- இந்துக் கலவரங்கள் மிகவும்
குறைந்துள்ளன. இதற்காக ஆங்கிலேயே ஆட்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஆங்கிலேயே அரசு
இந்தியாவிலிருந்து விலகினால் என்ன நடக்கும் என்பதையே இப்போது மீண்டும் எழுந்துள்ள கலவரம்
உணர்த்துகிறது.
இவ்வாறு
முஸ்லிம்- இந்துப் பிரச்சனையைக் காரணம் காட்டி, ஆங்கிலேயஆட்சியை நியாயப் படுத்தியிருந்ததும்
சுவாமிஜியைக் கட்டாயம் பாதித்திருக்கும்.-
இந்த நாட்களில்
”பரமஹம்ச ராமகிருஷ்ணர்” என்ற சிறிய நூலையும் சுவாமிஜி
வினியோகித்தார்.இது ”தி தீஸ்டிக் க்வார்ட்டர்லி ரெவ்யூ” (1879 அக்டோபர்) என்ற பத்திரிகையில் பிரதாப் சந்திர மஜும்தார்
எழுதிய கட்டுரையின் மறுபதிப்பு என்று கருதப்படுகிறது. ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரும் சுவாமிஜின்
நண்பருமான ஹரமோகன் மித்ரர் இதனை அச்சிட்டு, சிகாகோவில் வினியோகிப்பதற்காக தர்மபாலரிடம் கொடுத்தனுப்பியிருந்தார்.
அவர் அவற்றை சுவாமிஜியிடம் கொடுத்ததுடன் தாமும் சிலவற்றை வினியோகித்தார்.
பதினேழு நாட்கள் சர்வமத மகாசபை நடைபெற்றது. சுவாமிஜி
பலமுறை அதில் பேசினார். கண்காட்சியின் விஞ்ஞான ப் பிரிவிலும் சுவாமிஜி பலமுறை பேசினார்.
பல விருந்துகள் நடைபெற்றன. அவற்றில் பேசினார். மிசஸ் பாட்டர் பாமர் அளித்த விருந்தில் அவர் பெண்களின் நிலைமைபை் பற்றி பேசினார்.
இவை தவிர இறையன்பு, வைதீக இந்து மதமும் வேதாந்ததும், இந்தியாவில் நவீன மதங்கள், இந்து மத சாரம் என்று பல உரைகள் நிகழ்த்தினார்.
ஆனால் இவை எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.
ஆனால் அவரது பேச்சுக்கள் எல்லாமே மிகவும் வரவேற்கப் பட்டன. கூட்டத்தைச் சமாளிப்பதற்காக,
முன் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப் பட்டது. கூட்டம் கலைந்து போகாமல் தடுப்பதற்காக,
சுவாமிஜியின் சொற்பொழிவு, மற்ற நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் கடைசியில் வைக்கப்பட்டது.
அவரது ஆங்கில நடையும், ஆங்கில மொழியைக் கையாளும்
திறனும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
குறிப்பாக கேள்வி-பதில் பகுதிகள் பெரிய அளவில் வரவேற்பு
பெற்றன.
மேடையில்
யாராவது வளவளவென்று பேசிக்கொண்டே போகும்போது, நூற்றுக்கணக்கில் மக்கள் எழுந்து வெளியே
செல்லத் தொடங்குவார்கள்இ உடனே அமைப்பாளர் எழுந்து, நன்றியுரைக்கு முன்னால் சுவாமி விவேகானந்தர் பேசுவார் என்று அறிவிப்பார்.
அவ்வளவு தான். கலைந்து சென்ற கூட்டம் திரும்பி வந்து ”கப்சிப்” என்று அமர்ந்து விடும். கைகளில் சிறிய விசிறிகளை வைத்துக்கொண்டு
வீசியபடி, முகத்தில் ஆர்வம் பொங்க, சுவாமிஜியின்
அரைமணிநேர பேச்சிற்காக, பல மணிறேர வளவள பேச்சுக்களைச் சகித்துக்கொண்டு அவர்கள் அமர்ந்திருப்பார்கள்
ஆனால் சுவாமிஜி
எப்போதும் அவர்களுக்கு இனிமையாக, இதமாகப்பேசிக்கொண்டிருந்தார் என்பது கிடையாது. செப்டம்பர்
22-ஆம் நாள் சர்வமத மகாசபையில் மிக முக்கியமான தலைப்பு ஒன்று விவாதிக்கப் பட்டது.
”கிறிஸ்தவ மதம்” மத மாற்றங்களின் வாயிலாக மற்ற மதங்கள் இல்லாதவாறு செய்ய வேண்டுமா?
என்பது அந்தத் தலைப்பு. சுவாமிஜி அதில் கலந்து
கொள்ளவில்லை. ஏனெனில் ஏற்கனவே அவர் விஞ்ஞானப் பிரிவில் அன்று பேசுவதாக இருந்தார். இந்த விவாதத்தின் விளைவு என்னவாக
இருந்தாலும் இந்தக் கருத்தே சுவாமிஜிக்குப் பிடிக்கவில்லை என்பதில் ஐயமில்லை. அது போலவே
செப்டம்பர் 25-ஆம் நாள் ரெவரண்ட ஜார்ஜ் டி.
பென்டெகோஸ்த் இந்து மதத்தை மிகவும் இழிவாக விமர்சித்தார். புரோகித த்தொழில் செய்கின்ற
நூற்றுக்கணக்கான விலைமகளிரைத் தமக்குத்தெரியும் என்றும், அவர்கள் புரோகிதத் தொழில் செய்வதால் விலைமகளிராக உள்ளனர். விலைமகளிராக இருப்பதால் புரோகிதத்தொழில் செய்கின்றனர்
என்றெல்லாமும் அவர் அந்தச் சொற்பொழிவில் பேசினார்.
இவையெல்லாம் சுவாமிஜியின் மனத்தில் அடக்க முடியாத ஆத்திரத்தை
உண்டாக்கின. எனினும் அவர் எந்தக்கருத்தையும் தெரிவிக்கவோ, அதன் காரணமாகப் பத்திரிகைகளின்
சர்ச்சையில் மாட்டிக்கொள்ளவோ விரும்பவில்லை. ஒரு நாள் அவர் பேசிக் கொண்டிருந்தார்.
திடீரென்று அதனை நிறுத்திவிட்டு, நீங்கள் இந்துக்களின் சாஸ்திரங்கள் எதையாவது படித்திருக்கிறீர்களா?
அவை என்ன சொல்கின்றன என்பது பற்றி உங்களுக்கு நேரடியான அறிவு ஏதாவது உண்டா? என்று பார்வையாளர்களிடம்
கேட்டார். அப்படி படித்தவர்கள் யாராவது இருந்தால் கை தூக்குங்கள்” என்று ஒவ்வொருவரிடமும் கூறினார். அங்கே கிறிஸ்தவ தத்துவ அறிஞர்கள்
பலர் இருந்தனர். இருந்தும் மூன்றோ நான்கோ கைகள் மட்டும் உயர்ந்தன. முகத்தில் பரவும்
ஓர் இரக்க உணர்ச்சியுடன் சுவாமிஜி பார்வையாளர்களைப் பார்த்தார். பிறகு நன்றாக நிமிர்ந்து
நின்று, இருந்தும் எங்களைத் துச்சமாக விமர்சிக்கத் துணிந்திருக்கிறீர்கள்! என்று கம்பீரக்
குரலில் கூறினார். இவ்வாறு கிறிஸ்தவ நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு இடையே இந்து மதத்தின்
காவலராக நின்றார் சுவாமிஜி.
இந்து மதம்
நுண்மையானதும் சிறந்ததுமான மதம் என்பது உண்மையானால் இந்தியர்கள் ஏன் ஏழைகளாக உள்ளனர்? ஏன் இந்தியா பல முறை அன்னியர்களால் அடிமைப்படுத்தப் பட்டது?- இந்தக்கேள்வி
பல முறை சுவாமிஜியிடம் கேட்கப்பட்டது. ”நிறிஸ்தவ மதம் தான் உண்மையிலேயே மிகச்சிறந்த
மதம். ஏனெனில் கிறிஸ்தவ நாடுகள் ஆற்றல் வாய்ந்தவையாகவும் பணக்கார நாடுகளாகவும் உள்ளன” என்ற தொனியில் பலரும் பேசினார்கள். இதற்கான பதில் போல் சுவாமிஜி
சர்வமத மகாசபையில் செப்டம்பர் 19-ஆம் நாள் பேசினார்.
கீழை நாடுகளிலிருந்து
வந்துள்ள நாங்கள் இங்கே தினமும் ஒரு கருத்தைக்கேட்கிறோம். நாங்கள் ஏற்றுக் கொண்டேயாக
வேண்டும் என்ற பாணியில் அது இங்கே கூறப்படுகிறது. அது என்ன கருத்து? நாங்கள் கிறிஸ்தவ
மதத்தை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என்பது தான்.ஏன்? ஏனெனில் கிறிஸ்தவ நாடுகள் பணக்கார
நாடுகளாக உள்ளன. நாங்களும் எங்கள் கண்களையும் கருத்தையும் சுழலவிடுகிறோம். உண்மைதான்.
உலகிலேயே இங்கிலாந்து தான் மிகப்பணக்கார கிறிஸ்தவ நாடாகத் திகழ்கிறது. ஆனால் அதன் கால்கள் எங்கே உள்ளன? 25 கோடி ஆசிரியர்களின்
கழுத்தில். வரலாற்றைத்திரும்பிப் பார்க்கிறோம், கிறிஸ்தவ ஐரோப்பாவின் செல்வம் ஸ்பெயினிலிருந்து வந்தது. ஸ்பெயினுக்குச்
செல்வம் மெக்சிகோவின் மீது படையெடுத்ததால் கிடைத்தது. அதாவது சக மனிதர்களின் கழுத்தை
வெட்டுவதால் தான் கிறிஸ்தவ மதம் செல்வம் குவித்துள்ளது. அத்தகைய செல்வத்தை இந்து விரும்ப
மாட்டான்.
பின்னாளில்
ஒரு கடிதத்திலும் இது பற்றி அவர் குறிப்பிட்டார்
இந்தியா
ஆன்மீக குரு
தத்துவங்களைப் பொறுத்தவரையில் உலகிலுள்ள எந்த நாட்டினரும்
இந்துக்களுக்கு ஒளி காட்ட முடியாது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் கிறிஸ்தவ நாட்டிலிருந்து
இங்கு வந்து சேர்கின்ற எல்லா ஆசாமிகளும் பழைய முட்டாள்தனமான ஒரு வாத்ததையே கையாள்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் வலிமையாக, செல்வம் மிகுந்தவர்களாக இருக்கின்றனர், இந்துக்கள் அவ்வாறு
இல்லை, எனவே இந்து மதத்தை விட கிறிஸ்தவ மதமே சிறந்தது, இந்துக்கள் மிகப் பொருத்தமாக
இதற்குப் பதில் கூறுகின்றனர்.- இந்தக் காரணத்தால் தான் இந்து மதம் ஒரு மதம் ஆகிறது.
கிறிஸ்தவம் ஒரு மதம் ஆகாது. ஏனெனில் மிருகத்தனமான இந்த உலகில் அயோக்கியத் தனம் ஒன்றே
நன்றாக வளர்கிறது. நற்பண்பு எப்போதும் துயரையே அடைகிறது. விஞ்ஞானத்தில் மேலைநாட்டினர்
எவ்வளவுதான் முன்னேறியிருந்தாலும், தத்துவம், ஆன்மீகம் ஆகியவற்றில் அவர்கள் குழந்தைகள்
என்றே தோன்றுகிறது. பௌதீக விஞ்ஞானம் லௌகீக வளத்தை மட்டுமே தரமுடியும். ஆன்மீக விஞ்ஞானமோ
முடிவிலாப்பெரு வாழ்விற்கு உரியது. முடிவிலாப்பெருவாழ்வு என்பதே இல்லாமல் போனாலும்,
ஆன்மீகச் சிந்தனைகளை லட்சியங்கள் என்ற வகையில் ரசித்து மகிழ்வதே ஒரு சுகமான அனுபவமாகும்.
அது மனிதனை இன்பம் மிகுந்தவனாகச் செய்கிறது. ஆனால் உலகாயதம் என்றும் முட்டாள்தனம் உள்ளதே,
அது போட்டிக்கும், அளவுக்கு மீறிய பேராசைக்கும், இறுதியில் மரணத்திற்கும், அதாவது தனி
மனிதனின் மரணத்திற்கும் தேசிய மரணத்திற்கும் தான் அழைத்துச்செல்கிறது.
மற்றொரு
முறை சுவாமிஜி குறிப்பிட்டார்.
இங்கிலாந்து
எங்களுக்கு ஒரு நாட்டை ஆள்வது பற்றி கற்றுத்தரட்டும். ஏனேனில் அந்தக் கலையில் அனைத்து
நாடுகளுக்கும் தலைமை இடத்தில் இங்கிலாந்தே
திகழ்கிறது. விவசாயம், விஞ்ஞானம், மற்றும் எதையும் நேர்த்தியாகச் செய்கின்ற
திறம் ஆகியவற்றை அமெரிக்கா எங்களுக்குக் கற்றுத் தரட்டும் . நாங்கள் உங்கள் காலடியில்
அமர்ந்து கற்றுக்கொள்கிறோம், ஆனால்- இது வரை சுவாமிஜியின் குரல் இனிமையாக, மிதமாக இருந்தது. இந்த இடத்தில் அவரது குரல் கரகரப்புடன்
வெளி வந்தது. அவர் தொடர்ந்தார், ஆனால் இந்தியாவிற்கு ஆன்மீகத்தைக் கற்றுத்தரலாம் என்று
எந்த நாடும் நினைக்க வேண்டாம். ஆன்மீகத்தை இந்தியாவே உலகிற்குப்போதிக்கும்.
சுவாமிஜியின்
பங்களிப்பு
சர்வமத மகாசபை மக்களிடையே ஒரு பெரிய எழுச்சியை உண்டாக்கிற்று
என்பதில் சந்தேகமில்லை. பொதுவாக க் கீழை நாடுகளின் மதம், அந்த நாடுகளைச்சேர்ந்த துறவியர்
என்றாலே மாயமந்திரம், நோய் தீர்த்தல் இது போன்ற சில சில்லறை சித்துவேலைகளுடன் இணைத்தே
அந்த நாட்களில் கருதப்பட்டது. ஆனால் கீழை நாடுகளிலிருந்து சர்வமத மகாசபையில் கலந்துகொண்ட
மத அறிஞர்கள் அதனைப் பொய்யாக்கினார்கள்.கன்பூஃபூசிய மதத்தின் புங்க்வாங் யு, ஜப்பானிய
புத்த மதத்தின் ஹோரின் டோக்கி,ஸ்ரீலங்கா பௌத்த மதத்தின் தர்மபாலர், இந்தியாவின் பிரம்மசமாஜிகளான மஜும்தார் மற்றும் நகர்க்கர் போன்றோர்
சபையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். தத்துவங்களிலும் சிந்தனைகளிலும் கீழை நாட்டின்
மதங்கள் மகோன்னதமானவை என்பது மேலைநாடுகளுக்கு,
குறிப்பாகக் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு தெளிவாயிற்று. கிறிஸ்தவ மதத்தின் மேன்மையை உலகறியச்
செய்வதற்காகக் கூட்டப்பட்ட மகாசபை அவர்களுக்கு எதிராகத்திரும்ப நேர்ந்தது.
அப்படியானால்
சுவாமிஜியின் பங்களிப்பு?
அது தனித்துவம்
வாய்ந்தது. புறத்தில் எழுப்பிய ஆர்வப்பேரலைகளும் உணர்ச்சிப் பிரவாரங்களும் மட்டுமல்ல,
அவரது பங்களிப்பு நாடி நரம்புகளில் புகுந்து புத்துணர்வை ஊட்டியது. அவரது தாக்கம் நிலையானதாக
இருந்தது. அவரது பங்களிப்பால் அமெரிக்காவில் என்ன நடந்தது என்பது ஒரு வரியில் பேசுவதற்கோ
எழுதுவதற்கோ உரியதல்ல, என்று எழுதுகிறார் மேரி லூயி பர்க், தொடரும் பகுதிகளில் அது
பற்றி விரிவாகக் காண்போம்.
சர்வமத மகாசபையில்
பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். பௌத்தம், சமணம், கன்ஃபூசியம்,
என்று பல மதங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களது
அமைப்பின் அறிமுகக்கடிதம் வைத்திருந்தார்கள், உரிய முறைப்படி கலந்து கொண்டார்கள்.
சுவாமிஜி
எந்த மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.?
எந்த மதத்தின்
பிரதிநிதியாகவோ அல்ல, எந்த மதமோ அமைப்போ, பிரிவோ அளித்த அறிமுகக் கடிதமும் அவரிம் இல்லை. சுவாமிஜி ஓர் இந்து.
ஆனால் அவரை எந்த இந்து அமைப்புகளும் அனுப்பவில்லை. கடல் கடந்து சென்றால் ஜாதி போய்விடுமே!
எனவே இந்தியாவிலிருந்து பலர் சென்றிருந்தாலும்
இந்து மதத்தின் பிரதிநிதியாக யாரும் செல்லவில்லை. அப்படி ஒரு பிரதிநிதியை அனுப்ப
மனிதன் தவறியபோது கடவுள் சுவாமிஜியை அனுப்பினார். எத்தனையோ நெருக்கடியான காலங்களில்
இந்துமதம் கடவுளால், அவதார புருஷர்களால் காக்கப்
பட்டது. இப்போதும் அந்தக் கடவுளே சுவாமிஜியைத்தேர்ந்தெடுத்து அனுப்பி இந்து மதத்தைக்
காப்பாற்றினார்.
ஒருவேளை
அது தான் இந்து மதத்தின் பெருமை போலும்! இந்து மதம் மனிதர் யாராலும் நிறுவப்படாதது.
எந்த தனிமனிதருடைய வாழ்க்கையையும் சார்ந்திராதது. அழியாத உண்மைகளை மட்டுமே அஸ்திவாரமாகக்
கொண்டது, அதனால் சனாதன தர்மம் என்றும் பெயர் பெற்றது. எனவே எந்தத் தனிநபரோ, இயக்கமோ, அமைப்போ, தேர்ந்தெடுக்காமல்,
அழியாத உண்மைகளின் ஆற்றலே தேர்ந்தெடுத்ததுபோல்
சுவாமிஜி சென்றார்.
சுவாமிஜியை மேலை நாட்டிற்கு அனுப்பியவர்கள் அவரை
இந்து மதத்தின் ஒரு பிரதிநிதியாக முடிவு செய்து அனுப்பவில்லை. அவர் அமெரிக்காவிற்குச்
செல்வதற்கு உதவி செய்துவிட்டு, அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவரது முடிவிற்கே விட்டுவிட்டார்கள்.
ஏனெனில் அவர் ஒரு செய்தியுடன் செல்கிறார் என்பது அவரைச் சந்தித்த பலரது அனுபவமாக இருந்தது.
தாம் உலகிற்கு அளிப்பதற்கான செய்தி ஒன்று உள்ளது என்பதைத்தமது இந்தியப் பயணங்கள் மற்றும்
தீவிர தவ வாழ்க்கையாலும் சுவாமிஜி உணர்ந்திருந்தார். அது போலவே, அவரைச் சந்தித்த பலரும்
உலகிற்கு அளிப்பதற்கான ஆன்மீக ஆற்றல் அவரிடம் பொங்குவதை உணர்ந்திருந்தனர். செயற்கரிய
சில செயல்களைச் செய்து முடிக்கும் வரை நீங்கள் ஓயமாட்டீர்கள்” எள்று கட்ச் மன்னர் சுவாமிஜியிடம் கூறினார். உலகையே மாற்றியமைப்பதற்கான
ஆற்றல் என்னில் இருப்பதை உணர்கிறேன்” என்று போர்பந்தரில் சுவாமிஜி
திரிகுணாதீதரிடம் கூறினார்.
அந்த ஆற்றல்
எழுந்தது, செயல்பட்டது.
இந்தச் சர்வ
மத மகாசபை சாதித்தது என்ன என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை மத வெறியர்கள் மேலும் தீவிரமான
வெறியர்கள் ஆனார்கள். தாராளமனப்பான்மை உடையவர்கள் மேலும் தாராள மனம் படைத்தவர்களாக
ஆனார்கள், என்று எழுதுகிறார் மேரி லூயி பர்க். விந்தையான கருத்து, ஆனால் முற்றிலும்
உண்மை!
சர்வமத மகாசபையின்
மூலம் கிறிஸ்தவ மதத்தின் மேன்மையை உலகிற்கு அறியச் செய்ய வேண்டும் என்று விரும்பியவர்கள்
சுவாமிஜி மற்றும் கீழை நாட்டு மதப் பிரதிநிதிகளின்
பங்களிப்பால் தங்கள் நோக்கம் நிறைவேறாதது கண்டு ஆத்திரம் அடைந்தார்கள். சுவாமிஜியை
இருகரமும் நீட்டி வரவேற்ற அமெரிக்கர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளை ஓரளவிற்கு ஒதுக்கினார்கள்
என்றே சொல்லவேண்டும். இந்தியாவின் மதம், சமுதாயம், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை மிஷனரிகள்
அளித்த சித்திரங்களின் மூலம் மட்டுமே இது வரை அறிந்திருந்த அமெரிக்க சமுதாயம் சுவாமிஜியின்
சொற்பொழிவுகளால் உண்மையை உணர்ந்தது. விதவைகளை உயிருடன் கொளுத்துவது, மக்கள் தேர்க்காலில்
வீழ்ந்து உயிர் துறப்பது, பெண் குழந்தைகளை முதலைகளுக்கு இரையாக்குவது என்று இந்தியாவைப்
பற்றி மிஷனரிகள் பரப்பியவை மிகைப்படுத்தப்
பட்டவை என்பது அமெரிக்கர்களுக்குப் புரிந்தது. இதனால் மிஷனரிகளுக்கு அமெரிக்கர்கள்
செலவிட்ட பணத்தைக் குறைக்கத் தொடங்கினார்கள், மிஷனரிகளின் வருமானமே குறையத் தொடங்கியது.
மத வெறியின்
மதுகெலும்பு ஒடியவில்லை, என்றாலும் தங்கள் மீது முதல் சம்மட்டி அடி வீழ்ந்து விட்டதை
அவர்கள் உணரவே செய்தார்கள். என்று எழுதுகிறார்
மேரி லூயி பர்க். சர்ச்சையும் மிஷனரிகளையும் எதிர்த்து எழுந்த ரிவைவலிஸ்ட் இயக்கத்தின்
வளர்ச்சி அதனை நிரூபித்தது. இந்த இயக்கத்தின் வளர்ச்சியை ச் சமாளிக்க சர்ச்சும் மிஷனரிகளும்
மிகவும் பாடுபட வேண்டியதாயிற்று. அவர்களில் சிலரது மதவெறி தீவிரமாயிற்று.
அதே வேளையில்
தாராள மனப்பான்மை கொண்டவர்கள் கீழை நாட்டு மத லட்சியங்களின் மேன்மையைக்கண்டார்கள்.
இத்தகைய லட்சியங்களை உடைய ஒரு நாட்டிற்கு மிஷனரிகளை அனுப்புவது வீண் என்று உணர்ந்தார்கள். இந்தியாவைப் பற்றியும் இந்து மதத்தைப்
பற்றியும் அறிவதில் ஆர்வம் காட்டினார்கள். சுவாமி விவேகானந்தரின் பணிகளால் இந்து மதம்
உத்வெகம் பெற்றுள்ளது. அதன் ஆற்றல்கள் புத்துணர்வு பெற்றுள்ளன.
ஆங்கிலமயமாக்கப்பட்ட,
சாரமற்ற ஒன்றையே இந்து மதம் என்று இதுவரை அமெரிக்கர்கள் பெற்று வந்தார்கள். சுவாமி
விவேகானந்தரின் வாயிலாக உண்மையான இந்து மதம் அவர்களுக்குக் கிடைத்தது. அவரை அனுப்பியதற்காக
அமெரிக்கா இந்தியாவிற்குத் தனது நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறது” என்று உலகக் கண்காட்சியின் விஞ்ஞானப் பிரிவின் தலைவரான ஸ்நெல்
எழுதினார்.
சர்வ மத
மகாசபையின் தலைவரான டாக்டர் பரோஸும் சுவாமிஜிக்கு மிக உயர்ந்த இடத்தை அளித்தார். இந்தப்பேச்சாளர்
ஓர் உயர் ஜாதி இந்து, வைதீக இந்து மதத்தின் ஒரு பிரதிநிதி. சர்வமத மகாசபையில் கூட்டம்
கூட்டமாக மக்களைக் கவர்வதில் மிக முக்கியமான ஒருவராக அவர் திகழ்ந்தார்” என்று அவர் எழுதினார்.
அமெரிக்காவிற்கு உண்மையான இந்து மதத்தை அளித்ததும்
சவாமிஜியை அடையாளம் காட்டியதும் சர்வமத மகாசபை சாதித்ததன் ஒரு பக்கம் மட்டுமே. மறுபக்கம்,
அந்த மகாசபை, இந்தியாவிற்கே சுவாமி விவேகானந்தரை அடையாளம் காட்டியது. சுவாமி விவேகானந்தரின்
அமெரிக்கப் பணியின் விளைவு எதுவாக இருந்தாலும் ஒன்று மட்டும் மறக்க முடியாத உண்மை. நாகரீகம் வளர்ச்சியுற்ற அந்த நாட்டு
மக்களின் கண்களில் உண்மையான இந்து மதம் என்ன
என்பதை அவர் எடுத்துக்காட்டிவிட்டார்.
அதன் பதிப்பை
அவர்களின் நெஞ்சங்களில் உயர்த்தி விட்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த
ஒரு பணிக்காகவே இந்து சமுதாயம் சுவாமி விவேகானந்தரிடம் நன்றிக்கடன் பட்டுள்ளது” என்று ” இன்டியன் மிரர்” (1894 பிப்ரவரி 21) எழுதியது.
சர்வமத மகாசபை நிறைவுற்ற பிறகும் அமெரிக்காவில் சில
காலம் தங்கி இந்திய ஆன்மீகத்தின் பெருமையை
உலக அரங்கில் பரப்ப எண்ணினார் சுவாமிஜி. அவரைப்பொறுத்த வரை, சிகாகோ சர்வமத மகாசபை இந்தியாவிற்கும்
இந்தியச் சிந்தனைக்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி. வேதாந்தத்தின் அலை உலகையே வலம்
வருவதற்கு இந்த வெற்றி உதவி செய்துள்ளது. அதனுடன், அமெரிக்காவில் எழுப்பும் ஓர் அலை
இந்தியாவில் ஆயிரம் அலைகளை எழுப்பும், அதன் மூலம் தமது தாய் நாட்டின் உயர்விற்கான வாய்ப்பு
அதிகரிக்கும் என்று உணர்ந்திருந்தார் அவர். எனவே அமெரிக்காவில் தங்கி தமது பணியை தொடர்ந்தார்.
No comments:
Post a Comment