Sunday, 14 June 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-59

வகுப்பு-59  நாள்-17-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

மூன்றுவிதமான தவங்கள்

-

உடலால் செய்யும் தவம்

வாக்கால் செய்யும் தவம்

மனத்தால் செய்யும் தவம்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

 

17.14 தேவர்,பிராமணர்,குருமார்,ஞானிகள் ஆகியவர்களைப் போற்றுவதும்,

தூய்மையும், நேர்மையும், பிரம்மச்சர்யமும், அஹிம்சையும்

தேகத்தால் செய்யும் தவம் என சொல்லப்படுகிறது

-

1.உடலால் செய்யும் தவம்

--

தேவர்களை பூஜிப்பது,

பிராமணர்களை பூஜிப்பது,

குருவை பூஜிப்பது,

ஞானிகளை பூஜிப்பது

உடலை தூய்மையாக வைத்துக்கொள்வது.

நேர்மையாக வாழ்வது,

பிரம்மச்சர்யம் காப்பது,

அஹிம்சையுடன் நடந்துகொள்வது

இவைகள் உடலால் செய்யும் தவம்.

-

ஒருவர் இவைகள் அனைத்தையும் பின்பற்றாவிட்டால்கூட,

ஏதாவது ஒன்றை முழுமையாக பின்பற்றினால்கூட அது உடலால் செய்யும் தவம்தான்.

-

புண்ணிய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் தெய்வங்கள் அனைவரும் தேவர்கள்.

ஸ்ரீகிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில் கோவில்கள் எதுவும் இல்லை.யாகங்கள் மூலம் தேவர்களை வணங்கினார்கள்.

அதன்பின்  முருகன்,கணபதி,சிவன்,கிருஷ்ணர்,ராமர்,தேவி போன்ற தெய்வங்களை மையப்படுத்தி கோவில்கள் கட்டப்பட்டன.இவர்களை பக்திசெய்வது .தெய்வத் திருத்தொண்டில் உடலை பயன்படுத்திக்கொள்வது போன்றவை உடலால் செய்யும் தவம்.

 

நேர்மையாக வாழ்வது எளிது என்று நினைக்கத் தோன்றும்.ஆனால் அது மிகவும் கடினம்.

ஒருவர் நேர்மையாக வாழத்தொடங்கினால் , நேர்மையற்றவர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவனை அழிக்கவும்,

கெட்ட பெயரை உருவாக்கவும், தனிமைப்படுத்தவும்,முடிந்தால் ஆளையே அழித்துவிடவும் முயற்சிசெய்வார்கள்.

அனைத்து இகழ்ச்சிகளையும் பொறுத்துக்கொண்டு நேர்மை தவறாமல் வாழவேண்டும்.

 

பிராமணர்களை பூஜிப்பது என்றால் என்ன?

-

முற்காலத்தில் சூத்திரர்களைத்தவிர பிறர் அனைவரும் வேதம் கற்பதற்காக குருவை அணுகுவார்கள்.

குரு அவர்களை சீடர்களாக ஏற்றுக்கொண்டு,அவர்களுக்கு பூணூல் அணிவிப்பார்.

பூணூல் அணிந்த அனைவரும் இருபிறப்பாளர்கள்.அதாவது பிராமணகுலத்தில் பிறந்த சிறுவன்,ஷத்திரிய குலத்தில் பிறந்த சிறுவன்,வைசிய குலத்தில் பிறந்த சிறுவன் அனைவரும் பூணூல் அணிந்த பிறகு இன்னொரு பிறப்பு எடுத்தவர்களாகிறார்கள்.

 

பூணூல் அணிந்தவுடன் ஒருவர் பிராமணர் ஆகிவிடுவதில்லை.

பூணூலில் மூன்று நூல்கள் இணைத்து முறுக்கப்பட்டிருக்கும்.

மூன்று குணங்கள் இன்னமும் இருப்பதை இது காட்டுகிறது. அதேபோல தலையில் சிறியதாக முடி நீண்டுகொண்டிருக்கும்(குடுமி). இது அகங்காரம் இன்னமும் உள்ளது. என்பதை காட்டுகிறது.

 

பூணூல் அணிந்திருப்பவர்கள் சீடர்கள்.

இன்னும் நிறைநிலையை அடையாதவர்கள் என்பதை குறிக்கிறது.

 

பிராமணருக்குரிய லட்சியம் பிரம்மத்தை அடைவது.

பிரம்மத்தின் காட்சியைப் பெற்றபிறகு பூணூல்,குடுமி இவைகளை அகற்றிவிடுவார்கள்.

இப்போதுதான் அவர்கள் பிராமணர்கள்.

பிராமண லட்சியத்தை அடைந்தபிறகு ஜீவன்முக்தர்களாக, இல்லறத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

இவர்களை வணங்க வேண்டும்.

 

பூணூல் அணிந்துள்ளவர்கள் அனைவரும் நிறைநிலையை அடையாதவர்கள்.

அது மட்டுமல்ல சூத்திரர்களைத்தவிர எல்லோரும் பூணூல் அணிந்திருப்பார்கள்.

இவர்களை பூஜிப்பதைப்பற்றி ஸ்ரீகிருஷ்ணர் இங்கே கூறவில்லை.

ஜீவன்முக்தர்களை வழிபடுவதுபற்றி கூறுகிறார்.

ஒருவர் பிறப்பில் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் ஜீவன்முக்த நிலையை அடைந்துவிட்டால் அவர் பிராமணர்.

ஒருவேளை சூத்திர ஜாதியில் பிறந்த ஒருவர் அந்த நிலையை அடைந்துவிட்டால். அவரும் பிராமணர்தான். உதாரணமாக வால்மீகியை கூறலாம்.

அவரை பூணூல் அணிந்துள்ள சீடர்கள் வழிபடவேண்டும்.

-

உடலை தூய்மையாக வைத்துக்கொள்வது என்பது என்ன?

அவ்வப்போது குளித்து,நல்ல ஆடைகளை அணிந்து,சமயசின்னங்களை மட்டும் அணிந்துகொள்வதா?

இல்லை.

உடல் தொடர்பினால்தான் உடல் அதிகமாக கெடுகிறது.

இந்த உடல் இன்னொரு உடலை தொடாமல் இருப்பது.அவசியம்.

 

உடலை துய்மையாக வைத்துக்கொள்ள நினைக்கும் ஒவ்வொருவரும் இன்னொரு உடலை தொடாமல் இருக்க வேண்டும்.

கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தொடாமல் இருக்க வேண்டும்.

நீண்டநாட்கள் இதை பயிற்சிசெய்தால் உடல் தூய்மையடைகிறது.

இது மிகவும் கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் இதை தவம் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

-

பிரம்மச்சர்யம் என்றால் என்ன?

ஒவ்வொருவரின் உடலிலும் வித்து உள்ளது.

அதற்குள் விந்துவும்,நாதமும் ஒடுங்கியிருக்கின்றன.

 

ஆணுக்கு விந்து என்றும் பெண்ணுக்கு நாதம் என்றும் அந்த வித்து வெளிப்படுகிறது.

விந்துவும்,நாதமும் இணைந்து,அவை வளர்ந்து குழந்தையாகிறது.

 

பிரம்மத்தில் இரண்டு விசயங்கள் இருக்கின்றன.

ஒன்று எங்கும் பரந்த தன்மை, இன்னொன்று வித்து.

குழந்தை நிலையிலிருந்து விரிவடைந்துள்ள மனிதன்,மீண்டும் படிப்படியாக ஒடுங்கி, நமக்குள்ளே இருக்கும் வித்துவுக்குள் ஒடுங்கவேண்டும்.

 

வித்துவுக்குள் ஒடுங்கவேண்டும் என்றால், விந்துவை வெளியில் விடாமல் இருக்கவேண்டும்.

இது பல ஆண்டு பயிற்சிக்கு பிறகு மட்டுமே சாத்தியப்படும்.

இல்லறத்தில் வசிப்பவர்கள் இந்த நிலையை அடைய வேண்டுமானால் கணவன் மனைவி இருவரும் ஆன்மீக வாழ்க்கை வாழ வேண்டும். ஒருவர் மட்டும் ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தால் வெற்றியடைய முடியாது.

 

எனவே விந்துவை வெளியில் விடாமல் இருப்பதற்குரிய பயிற்சிகளை மேற்கொள்வதும் மிகப்பெரிய தவம்.

உணவை குறைத்துக்கொண்டே சென்றால் விந்து உற்பத்தியை தடுத்துவிடலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.

இது குகையில் வாழும் துறவிகள் பின்பற்றும் வழியாகும். இல்லறத்தில் இருப்பவர்கள் இந்த வழியை பின்பற்ற முடியாது.

இறைவனிடம் கொண்டுள்ள பக்தியின் மூலமும், ஞானத்தின் மூலமும் மட்டுமே பிரம்மச்சர்யம் காக்க முடியும்.

-

அஹிம்சை என்பது என்ன?

ஹிம்சை என்றால் துன்புறுத்துவது. அஹிம்சை என்றால் துன்புறுத்தாமல் இருப்பது.

கொசுவைக் கொல்லலாமா? அது ஹிம்சை அல்லவா?

 

அஹிம்சை என்பது உடனே கைக்கூடாது.

அஹிம்சாவாதி தெருவில் நடந்துசென்று கொண்டிருக்கிறான், அங்கே ஒரு தீயவன், நல்லவனை தாக்கிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம் அப்போது அஹிம்சாவாதி

அந்த நிகழ்வுகளை கண்டும் காணாமலும் சென்றால், அதனால் பாவம் வரும். அது அஹிம்சை இல்லை.

 

தீயவனிடம் சென்று, ஐயா! அவனை அடிக்காதீர்கள் என்று கூறினால், அந்த தீவயவன் கோபத்தில் இவனையும் சேர்த்து அடிப்பான். இதுவும் அஹிம்சை இல்லை.

 

அஹிம்சாவாதி இப்படி ஒரு சம்பவம் நடக்கும் இடத்திற்கு சென்றவுடன் தீயவன் மனம்மாறி நல்லவனின் காலில் விழுந்து,ஐயா என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், தவறு செய்துவிட்டேன் என்றுகூறி மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி ஒரு சம்பவம் தானாகவே அங்கே நிகழ்ந்தால் அவன் அஹிம்சாவாதி.

 

அப்படி நடக்காவிட்டால் என்ன செய்வது?

தீயவனை தண்டித்து, நல்லவனைக் காக்க வேண்டும்.இதுதான் அஹிம்சையை அடைவதற்கான முதல்படி

இதனால் என்ன நேர்ந்தாலும் சரி அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

அஹிம்சாவாதி மிகப்பெரிய வலிமை உள்ளவனாக இருப்பான்.

உடல் வலிமை அல்ல. ஆன்ம வலிமை

உண்மையான அஹிம்சாவாதியின் முன்னால் தீயவர்கள் பயந்து நடுங்குவார்கள்.

இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் அவனை வணங்கும்.

அஹிம்சாவாதியாக வாழ்வதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொள்வதும் ஒரு தவம்.


No comments:

Post a Comment