Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-6

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-6

🌸

ஸ்ரீராமகிருஷ்ணரின் நம்பிக்கை

 

நரேந்திரனை யாரும் எடை போடாதீர்கள். அவனை முற்றிலுமாக அறிந்து கொள்ள யாராலும் இயலாது ” என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.நரேந்திரரிடம் அவர் வைத்திருந்த நம்பிக்கை அளவிட முடியாதது. நரேந்திரரின் தன்னம்பிக்கை, ஆண்மை, ஒரு முகப்பட்ட செயல்பாடு, அறுதி உண்மையை அடைவதற்கான தாகம் போன்ற பண்புகள் அவரை  அத்தகைய நம்பிக்கை கொள்ளச்செய்தன. பிறரது கண்களுக்குத் தவறாகப்பட்ட அவரது பல குணங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரின் கண்களுக்கு அப்படிப் படவில்லை. அந்தப் புறத்தோற்றத்திற்குப் பின்னால் இருந்த உண்மையை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. பலரும் நரேந்திரரைப் பிடிவாதம் மிக்கவராக, முரடராக , பக்குவப்படாத அறிவு கொண்டவராகக் கண்டனர். ஆனால்  ஸ்ரீராமகிருஷ்ணரோ அவரது பிடிவாதத்திற்குப் பின்னால் தன்னம்பிக்கையைக் கண்டார்.முரட்டுத்தனத்திற்குப் பின்னால் ஆண்மையைக் கண்டார். பக்குவப்படாத அறிவிற்குப் பின்னால் நேரடி அனுபவத்தைத்தவிர எதனாலும் அமைதியுறாத ஆன்ம தாகத்தைக்கண்டார். தம்மைப்புகழ்வதையோ இகழ்வதையோ நரேந்திரர் பொருட்படுத்துவதில்லை. அதற்குக் காரணம் அவரது இதயத் தூய்மை. அவரது சுதந்திரமான செய்லபாடுகளும் சிந்தனைகளும் சுயக்கட்டுப்பாட்டிலிருந்து பிறந்தவை. வெளியில் தெரிகின்ற இந்தச்சில குறைகள் கூட காலப்போக்கில் மறைந்து உண்மைப்பண்புகள் வெளித்தோன்றும் என்பதையும்  ஸ்ரீராமகிருஷ்ணர் அறிந்திருந்தார். எனவே நரேந்திரர் மீது ஸ்ரீராமகிருஷ்ணரின்  நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்தது.

 

ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணரைக் காண அவரது இல்லறச் சீடரான நாக மகாசயர்  வந்திருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் அறையில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது குளித்து விட்டு தோளில் ஈரத்துண்டுடன் ”சிவோஹம் சிவோஹம் (நானே சிவன், நானே சிவன்) என்று கூறியபடியே நரேந்திரர் உள்ளே வந்தார். நாக மகாசயர் அதிர்ந்துபோனார். மிக உயர்ந்த மகானாக இருந்தும் தம்மை மிகமிகச் சாதாரண பக்தனாக வைத்துக்கொண்டவர் அவர். பணிவின் வடிவம் அவர். பதினேழு, பதினெட்டு வயதான ஒரு வாலிபன், அதுவும் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருமுன்பு ”நானே சிவன் என்று பொருள்படுகின்ற மிக உயர்ந்த மந்திரத்தைக்கூறிய போது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் நாக மகாசயரைச்சுட்டிக் காட்டி நரேந்திரரிடம் இவர் நான் என்ற அகந்தை சிறிதும் இல்லாதவர். ஆனால் அதை வெளிக் காட்டுவதில்லை என்று கூறினார். நரேந்திரர் நீங்கள் சொன்னால் அது சரியாகவே இருக்கும். என்று பதில் சொன்னார். இரண்டு சீடர்களும் பேச ஆரம்பித்தனர்.

 

நாக மகாசயர்-எல்லாம் தேவியின் ஆணைப்படி நடக்கிறது. அவள் செய்கின்ற செயலை அகந்தையினால் மக்கள் தாங்கள் செய்வதாக நினைத்துக்கொள்கின்றனர்.

நரேந்திரர்-இல்லை, என்னால் தான் யாவும் நடக்கிறது,உலகம் என்னிடத்திலிருந்து தான் தோன்றியது, என்னிடம் தான் இருக்கிறது, என்னிலேயே மறைகிறது.

நாக மகாசயர்-அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

நரேந்திரர்- என்னுடைய விருப்பமின்றி சந்திர சூரியர்கள் கூட அசைய முடியாது.என் விருப்பத்தால் தான் மட்டுமே இந்த உலகம் ஓர் எந்திரத்தைப்போல் இயங்குகிறது.

  அவர்களுடைய உரையாடலைக்கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ணர் புன்முறுவலுடன், நரேன் உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப்போன்றவன். அவன் சொல்வதில் தவறில்லை என்று நாக மகாசயரிடம் கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் வார்த்தைனைக்கேட்ட நாக மகாசயர் நரேந்திரருக்கு  வணக்கம் செலுத்திவிட்டு

மௌனமாக இருந்தார்.

 

தேடிச்சென்று அருள் புரிதல்-

 

நரேந்திரர் சில வாரங்கள் தொடர்ந்து தட்சிணேசுவரத்திற்குச் செல்லாவிட்டால் தவித்துப்போவார் ஸ்ரீராமகிருஷ்ணர். சிலவேளைகளில் தாமே அவரைத்தேடிப்போய்விடுவார். அந்த நாட்களில் நரேந்திரர் தமது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்தார்.படிப்பிற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகவும் அங்கேயாரும்  காணாமல் இரவு வேளைகளில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடமுடியும் என்பதற்காகவும் அந்த வீட்டை அவர் தேர்ந்தெடுத்திருந்தார். அவரது படிப்பறை மாடியில் இருந்தது. ஒரு நாள் காலையில் அவர் படிப்பதற்கு அமர்ந்தார். அப்போது நண்பர்களான ஹரிபாதர், தாசரதி ஆகியோர் வந்தனர். எல்லோருமாகச்சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு அந்த நண்பர்கள் நரேந்திரரிடம் பாடுமாறு கேட்டுக்கொண்டனர். நரேந்திரர் பாட ஆரம்பித்திருப்பார், அப்போது கீழிருந்து ஒரு குரல் தவிப்புடன் , நரேன், நரேன் என்று அழைப்பத கேட்டது. அது ஸ்ரீராமகிருஷ்ணரின் குரல் என்பதைப் புரிந்து கொண்டார் நரேந்திரர். உடனே அவசர அவசரமாகக் கீழே சென்று அவரை மேலே அழைத்து வந்தார். நரேந்திரருக்காக ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு துணியில் இனிப்பைக் கட்டி எடுத்து வந்திருந்தார். மேலே வந்ததும், மற்றவர்கள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் நரேந்திரருக்கு அதனை ஊட்டத்தொடங்கினார். பின்னர் பாடுமாறு கேட்டுக்கொண்டார்.

 

அன்னையே விழித்தெழு என்ற பாடலையும் அம்மா காளி நீ மீண்டும் ஒரு முறை ஆனந்தத் தாண்டவம் ஆடிடுவாய், என்ற பாடலையும் பாடினார் நரேந்திரர். பாடலைக்கேட்டபடியே ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதியில் ஆழ்ந்தார். நண்பர்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.ஸ்ரீராமகிருஷ்ணர் வந்ததும், இனிப்பை ஊட்டியதும் தம்மை மறந்த நிலையில் நிற்பதும் எல்லாம் அவர்களுக்குப் புதிராக இருந்தது. சமாதிநிலையைக்கண்ட அவர்கள் குழம்பிப்போனார்கள். ஒரு வேளை மயக்கமாகி விட்டாரோ என்று எண்ணி அவரது முகத்தில் தண்ணீர்  தெளிக்க முற்பட்டனர். நரேந்திரர் அவர்களைத் தடுத்து, விட்டு விடுங்கள், சிறிது நேரத்தில் அவரே சரியாகி விடுவார்.......... என்று கூறினார். தொடர்ந்து காளி தேவியின் மீது சில பாடல்களையும் பாடினார். சிறிது நேரத்தில் புறவுணர்வைப்பெற்ற ஸ்ரீராமகிருஷ்ணர், நீநீண்ட நாட்களாக தட்சிணேசுவரத்திற்கு வர வில்லை. இப்போதே என்னுடன் வா என்று நரேந்திரரை அழைத்தார். மறுபேச்சின்றி அவருடன் சென்றார் நரேந்திரர்.

 

மற்றொரு முறையும் இப்படித்தான்

 

ஓரிரு வாரங்கள் தொடர்ந்து நரேந்திரரால் தட்சிணேசுவரம் செல்ல இயலவில்லை. நாள்தோறும்ஸ்ரீராமகிருஷ்ணர் அவரது வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இறுதியாகத் தாமே கல்கத்தா செல்ல எண்ணினார். ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை யாரையாவது பார்க்க அவன் வெளியே போயிருக்கலாம். எனவே கல்கத்தா சென்றாலும் அவனைப் பார்க்க முடியாமல் போகலாம். ஆனால் சாதாரண பிரம்மசமாஜத்தின்  கூட்டுப் பிராத்தனையில் அவன் ஞாயிற்றுக்கிழமைகளில் பாடுவான். எனவே அங்கே சென்றால் கட்டாயம் அவனைப்பார்க்கமுடியும். அங்கே திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நான் போய் நின்றால்  பிரம்மசமாஜத்தினர் அதை ஒரு தொந்தரவாகக் கருத மாட்டார்களா? ஏன் கருத வேண்டும்? இப்படி  எத்தனையோ கேசவரின் கூட்டத்திற்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் மகிழ்ச்சியே அடைந்தார்கள். விஜயர், சிவநாத் போன்ற சாதாரண பிரம்மசமாஜத்தலைவர்கள் கூட அப்படி எத்தனையோ முறை தட்சிணேசுவரத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று எவ்வாறெல்லாமோ குழம்பி, இறுதியில் போவது என்று முடிவு செய்தார்.

ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணரின் குழந்தை உள்ளம் ஒன்றை மறந்துவிட்டது. தம்மிடம் தொடர்பு ஏற்பட்ட பின் விஜயர், கேசவர் ஆகியோரின் கருத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைக்கண்ட சிவநாத் முதலான சாதாரண பிரம்ம சமாஜ உறுப்பினர்களில்பலர் தட்சிணேசுவரத்திற்கு வருவதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார்கள் என்பது அவரது கவனத்திற்கு வரவில்லை.

 

அப்போது மாலைவேளை, நூற்றுக்கணக்கான பிரம்ம சமாஜத்தினர் கூடி, “ஸ்த்யம் ஞானம் அனந்தம் ப்ரஹம முதலான மந்திரங்களைக்கூறி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். பிரார்த்னையும் தியானமும் நிறைவுற்றன. அதன் பின் ஆசாரியர் மேடை மீது அமர்ந்து இறையன்பும் ஆன்மீக ஈடுபாடும் எவ்வாறு வளரும் என்பதைப்பற்றி பேசினார். அந்தச் சமயத்தில் பரவசம் கலையாத நிலையில் அங்கே வந்த ஸ்ரீராமகிருஷ்ணர் நேராக ஆசாரியர் அமர்ந்திருந்த மேடையை நோக்கிச்சென்றார். அங்கிருந்தோரில் பலர் அவரை முன்பே பார்த்திருக்கிறார்கள் . எனவே ஸ்ரீராமகிருஷ்ணர் வந்திருக்கிறார் என்ற செய்தி கூட்டத்தில் பரவியது. அவரைப் பார்த்திராத சிலர் எழுந்து நின்று கொண்டும், சிலர் பெஞ்சின் மீது ஏறிக்கொண்டும் பார்க்க முயன்றனர். அதனால் அங்குக் குழப்பம் ஏற்பட்டது.ஆசாரியர் பேச்சை நிறுத்தினார்..

 

நரேந்திரர் பாடுவோரின் கூட்டத்தில் இருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் எதிர்பாராமல் வந்ததன் காரணத்தைப்புரிந்து கொண்ட அவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருகில்  வந்தார். பிரம்ம சமாஜத்தின் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாட்டிற்குக் காரணகர்த்தா ஸ்ரீராமகிருஷ்ணர் என்று ஆசாரியரும் வேற சில முக்கிய உறுப்பினர்களும் முடிவு செய்திருந்த தால் அவர்கள் குருதேவரை வரவேற்கவில்லை. ஏன் சாதாரண விருந்தாளிக்குக் காட்டும் மரியாதையைக்கூட காட்டவில்லை.

ஸ்ரீராமகிருஷ்ணர் எதையும் பார்க்காமல் நேராக மேடைக்கு அருகில் வந்து நின்று சமாதியில் ஆழ்ந்தார். அவரது இந்த நிலையைக் காண்பதற்கான ஆர்வம் கூட்டத்தினருக்கு ஏற்பட்டதால் கூச்சலும் குழப்பமும் மிகுந்தது. பிரச்சனை கட்டுக்கடங்காமல் போன போது கூட்டத்தைக் கலைக்கும் நோக்கத்துடன் யாரோ ஒருவர் விளக்குகளை அணைத்தார். விளைவு  விபரீதமானது.இருள் சூழ்ந்ததால் பயந்துபோய், முண்டியடித்துக்கொண்டு வெளியே போக எல்லோரும் கதவை நோக்கி ஓடியதால்  ஒரே அமளியாகியது.

 

ஸ்ரீராமகிருஷ்ணரை வரவேற்க யாரும் முன்வராததைக்கண்டபோதே நரேந்திரர் சுதாரித்துவிட்டார். குழப்பம் மிகுந்தபோது, அவரை எப்படி வெளியே கூட்டிவருவது என்பது தான் அவரது கவலையாக இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரின் பரவச நிலை கலைந்ததும் மிகுந்த சிரமத்துடன் பின்பக்க வழியாக அவரை வெளியே கூட்டிவந்தார். பின்னர் அவரை ஒரு வண்டியில் தட்சிணேசுவரத்திற்கு அழைத்துச்சென்றார். அதைப்பற்றி பின்னாளில் நரேந்திரர் கூறினார்,அன்று எனக்காக அவர் அடைந்த அவமானத்தை எண்ணி நான் பட்ட வேதனையைச்சொல்லி முடியாது. அவரது செயலுக்காக அன்று நான் அவரை எவ்வளவு கடிந்துகொண்டேன் தெரியுமா? ஆனால் அவர் வேதனை கொள்ளவும் இல்லை, என் வார்த்தைகளுக்குச் செவி சாய்க்கவும் இல்லை.

என்னிடம் கொண்ட அன்பின் காரணமாக அவர் தம்மைப்பற்றி கவலைப்படாததைக் கண்ட நான் மிகவும் கடுமையாகப்பேசினேன்.” பரத மன்னன் மானை எண்ணியெண்ணியே மாண்டான் மானாக பிறந்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. அது உண்மையானால் என்னையே நினைத்து க் கொண்டிருக்கும் உங்கள் கதியை நினைத்துப் பாருங்கள். ஜாக்கிரதையாக இருங்கள், என்றெல்லாம் கூறினேன். குழந்தை உள்ளம் படைத்த ஸ்ரீராமகிருஷ்ணர் என் பேச்சைக்கேட்டு மிகுந்த கவலை கொண்டார். சரியாகத் தான் சொல்கிறாய், உண்மைதானே! அப்படி நடந்தால் என்னாவது? ஆனால் என்னால் உன்னைப் பார்க்காமல் இருக்க முடியாது? என்று கூறிவிட்டு அச்சத்துடனும் வேதனையுடனும் இந்த விஷயத்தைப் பற்றி காளியிடமே சென்று முறையிட்டார். சிறிது நேரம் கழித்து மகிழ்ச்சியுடன் திரும்பிவந்து சிரித்த படி  என்னிடம் கூறினார், போக்கிரிப் பயலே! நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன், நீ அவனை நாராயணனாகக் காண்பதால் தான் அவனிடம் அன்பு செலுத்துகிறாய், என்றைக்கு உன்னால் அவனிடம்  நாராயணனைக் காண இயலவில்லையோ, அன்று முதல் நீ அவன் பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டாய், என்று அன்னை சொன்னாள், இவ்வாறு எனது மறுப்புக்களையும் வாதங்களையும் ஒரேயடியாக ஒதுக்கிவிட்டார்.

 

நரேந்திரரின் வாழ்வில் ஸ்ரீராமகிருஷ்ணர்.

 

இனி நரேந்திரரின் வாழ்வில் ஸ்ரீராமகிருஷ்ணரின் இடமோ விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது. பின்னாளில் ஒரு முறை நரேந்திரர், விவேகானந்தனிலிருந்து  ஸ்ரீராமகிருஷ்ணரைக் கழித்தால் எஞ்சுவது வெறும் உணர்ச்சிப்பிண்டம் மட்டுமே என்று கூறியதுண்டு. இளமையிலிருந்தே நரேந்திரர் செய்த சாதனைகள் பெற்ற அனுபவங்கள் , பிரம்மச்சரியம், தவம் போன்ற அனைத்திற்கும் சரியான பாதையை வகுத்துக்கொடுத்தவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரிடம் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தார். நரேந்திரரோ ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இனம் தெரியாத மரியாதை வைத்திருந்தார். நரேந்திரர் பக்குவம் பெறப்பெற ஸ்ரீராமகிருஷ்ணரின் தெய்வீக அன்பிற்கு முற்றிலுமாக வசப்படத்தொடங்கினார்.

 

நரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரை நேசித்தார் என்றாலும் ஆரம்பத்தில் அவரைக்குருவாக ஏற்றுக்கொள்ளவோ முற்றிலுமாக அவரிடம் தம்மை ஒப்படைக்கவோ இல்லை. ஸ்ரீராமகிருஷ்ணரின் மற்ற சீடர்களான ராக்கால், பாபுராம், சரத் போன்றோரிடமிருந்து நரேந்திரர் இதில் பெரிதும் வேறுபட்டிருந்தார். அவருக்கென்று தனியான நம்பிக்கைகள் இருந்தன, கொள்கைகள் இருந்தன. அவை தவறு என்று யாராவது நிரூபிக்கும் வரை அவற்றை விடாப்பிடியாக அவர் பற்றிக் கொண்டிருந்தார்.

 

ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை மிகவும் எளிமையானது. அவர் முற்றிலுமாகத் தம்மைக் காளி தேவியின் திருவடிகளில் ஒப்படைத்து அவளது அருளாணைப்படியே வாழ்க்கையை நடத்துபவர். பழக்க வழக்கங்களில் மிகவும் ஆசாரமானவர். நரேந்திரர் பிரம்மசமாஜத்து உறுப்பினர்.உணவிலோ, மற்ற பழக்க வழக்கங்களிலோ பெரிதாக ஆசாரங்களைப் பின்பற்றாதவர். பலதரப்பட்ட நண்பர்கள் உடையவர். அவரது கண்ணோட்டத்தில் சிலவேளைகளில் ஸ்ரீராமகிருஷ்ணரின் செயல்களே தவறென்று பட்டது. அவற்றைக் கண்டிக்கவும் அவர் தயங்க வில்லை. பின்னாளில் நரேந்திரர், என்னைப் பற்றி என்ன சொல்வேன்,? நான் அவரது பூதகணங்களுள் ஒருவன் என்றெண்ணுகிறேன். அவரிடமே அவரைப் பற்றி தவறாக எதையாவது உளறுவேன், அதைக்கேட்டு அவர் சிரிப்பார் என்று கூறியதுண்டு.

ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு கருத்தைப்பற்றி கூறிக்கொண்டிருந்தார். நரேந்திரர் அதனை எதிர்த்துக்கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் எவ்வளவோ முயன்றும் அவரது கருத்தை நரேந்திரர் ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய இயலவில்லை. நரேந்திரருக்கோ தமது கருத்தை ஸ்ரீராமகிருஷ்ணர் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஆதங்கம்! எனவே ஸ்ரீராமகிருஷ்ணர் எதைச்சொன்னாலும் பொருட்படுத்தாமல் மௌனமாக இருந்தார். கடைசியில் ஸ்ரீராமகிருஷ்ணர் சற்று ஆத்திரத்துடன், இதோ பார்! நான் சொல்வதைக்கேட்க முடியாது என்றால் நீ ஏன் இங்கு வருகிறாய்? என்று கேட்டார். அதற்கு நரேந்திரர் அமைதியாக, நீங்கள் சொல்வதைக் கேட்பதற்காக நான் இங்கு வரவில்லை. நான் உங்களை நேசிக்கிறேன். அதற்காக இங்கு வருகிறேன் என்றார். ஸ்ரீராமகிருஷ்ணர் உணர்ச்சிப்பெருக்குடன்  எழுந்து நரேந்திரரை அப்படியே கட்டிக்கொண்டார்.

 

 மகனாக

 

நரேந்திரரைத் தம் மகனாகக் கண்டிருந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். அந்த நாட்களில் நரேந்திரர் காளியை ஏற்றுக்கொள்வதில்லை. அது மட்டுமல்ல, அவளை நிந்திக்கவும் செய்வார் . ஒரு நாள் வாய்க்கு வந்தபடியெல்லாம் ஏசத்தொடங்கினார். அதைக்கேட்டு ஆத்திரமுற்ற ஸ்ரீராமகிருஷ்ணர், போக்கிரி , இப்படியெல்லாம் ஏசுவதானால் இனி என்னிடம் வராதே என்று கடிந்து கூறினார். நரேந்திரர் அமைதியாக வெளியில் சென்றார். ஆனால் நேராகச்சென்று புகைக்குழாய் தயார் செய்து ஸ்ரீராமகிருஷ்ணருக்குக் கொண்டு வந்து புன்னகையு்ன் கொடுத்தார். ஸ்ரீராமகிருஷ்ணரும் சிரித்தபடியே அதனைப்பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி பின்னர் ம-விடம் கூறிய ஸ்ரீராமகிருஷ்ணர் , அவன் என் மகன். நான் ஏசுவதால் கோபம் கொள்வானா? என்று கேட்டார்.

நானே அவன்

 

மகன் என்ற நிலையைக் கடந்து நரேந்திரரையும் தம்மையும் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒன்றாகவே கண்ட நிகழ்ச்சிகளும் உண்டு. ஒரு நாள் மாலை வேளையில் நரேந்திரர் தட்சிணேசுவரத்திற்கு வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்று அவரை வணங்கி அமர்ந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் அன்று வினோதமாக நரேந்திரரை நெருங்கிச்சென்று, ஏறக்குறைய அவரது மடிமீதே அமர்ந்துவிட்டார். பிறக தம்மையும் நரேந்திரரையும் மாறிமாறி சுட்டிக்காட்டியபடி. இருவருக்கும் இடையில் எந்த வேற்றுமையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் நானாகவும் இருக்கிறேன். அவனாகவும் இருக்கிறேன். நீரில் ஒரு கம்பை மிதக்க விட்டால், அந்த நேரத்திற்குத் தண்ணீர் பிரிந்திருப்பது போல் தோன்றும், ஆனால் உண்மையில் தண்ணீர் ஒன்றே தான், நான் சொல்வது உனக்குப் புரிகிறதா? கடைசியில் பார்த்தால் இருப்பவை அனைத்தும் தேவியே அல்லவா? என்றார்.

 

அதன் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் புகை பிடிக்க விரும்பினார். வைகுண்டர் அவருக்காகப் புகைக் குழாயைத் தயார் செய்து கொண்டு வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் தாம் ஒரு முறை புகையை இழுத்துவிட்டு நரேந்திரரை இழுக்குமாறு கூறினார். அவரது கையில் இருக்கின்ற குழாயைப் புகைத்தால் அவரது கை எச்சிலாகுமே என்று தயங்கினார் நரேந்திரர். ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர், நீ ஒரு முட்டாள். நான் உன்னிலிருந்து வேறானவனா? நானும் நான் தான்? நீயும் நான் தான்? என்று கூறி அவரைப் புகைபிடிக்கச்செய்தார். நரேந்திரர் ஓரிரு முறை இழுத்த பிறகு மீண்டும் தாம் புகை பிடிப்பதற்காகக் குழாயைில் வாயை வைக்க எத்தனித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். தாம் பிடித்த எச்சில் குழாயை அவர் வாயில் வைப்பதா என்று அவரை விரைந்து தடுத்தார் நரேந்திரர். ஆனால் அவரது மறுப்பைப் பொருட்படுத்தாமல் புகை பிடித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். நான் நரேந்திரனை என் ஆன்மாவாகக் காண்கிறேன். அவனுக்கு நான் அடிபணிகிறேன், என்றும் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதுண்டு.

நரேந்திரரைத் தம்மில் ஒரு பாதியாகவே ஸ்ரீராமகிருஷ்ணர் கண்டார். அவரை யாராவது குறை சொன்னால், அப்படி சொல்லாதீர்கள். அது சிவ நிந்தை என்பார் அவர்.

 

நரேந்திரருக்குத் தனி இடம்

 

ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்தித்த பிறகும் நரேந்திரர் பிரம்ம சமாஜக் கூட்டங்களுக்குப்போய் வந்தார். கேசவரின் சமாஜத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடவசதி உண்டு. நரேந்திரர் சாதாரண பிரம்மசமாஜத்தைச் சேர்ந்தவர். அங்கே அப்படித் தனி இடவசதி கிடையாது. எனவே அந்தக் கூட்டங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றசீடர்களைத் தடுத்திருந்தார். ஆனால் நரேந்திரரை அவர் தடுக்கவில்லை. ஏனெனில் அவர் இத்தகைய சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத அளவிற்குத் திடமனம் படைத்தவர் என்பதை அவர் அறிந்திருந்தார். இந்த  ஒன்றில் மட்டுமல்ல, எல்லாவிஷயங்களிலும் நரேந்திரருக்குத் தனி இடம் அளித்திருந்தார் அவர். சில நிகழ்ச்சிகளைக் காண்போம்.

 

உணவு

 

ஸ்ரீராமகிருஷ்ணர் பொதுவாக எல்லோரிடமிருந்தும் உணவை ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு டம்ளர் தண்ணீராக இருந்தாலும், அதைக்கொண்டு வருபவரின் மனநிலையைப் பொறுத்தே அதனை அவர் ஏற்பார்.தகந்தவராக இல்லாவிட்டால் அதனை விலக்கிவிடுவார் கொண்டு வருபவரின் மனத்தை உடனடியாக அவரால் புரிந்து கொள்ள முடிந்திருந்தது. நல்லொழுக்கம் இல்லாத யாரிடமிருந்தும் எதையும் அவர் ஏற்றுக் கொள்வதில்லை. அது போலவே சிரார்த்தச் சடங்குகளில் படைக்கப்படும் உணவையும் அவர் உண்பதில்லை. இந்த விஷயங்களில் தமது சீடர்களுக்கும் அவர் இதே விதியை வகுத்திருந்தார். ஆனால் நரேந்திரர் எந்த உணவையும் யாரிடமிருந்து வாங்கி உண்பதையும் அவர் தடுக்கவில்லை. அவனிடம் எரிந்து கொண்டிருக்கும் ஞான அக்கினி எந்தக் குறையையும் எரித்துவிடும் என்பார் அவர். ஒரு முறை அவர் நரேந்திரரிடமே, நீ எந்த உணவை உண்டாலும் பரவாயில்லை. அது உன்னை ஒன்றும் செய்யாது. மாட்டிறைச்சியோ, பன்றி இறைச்சியோ எது சாப்பிட்டாலும் சரி, அதன் பிறகு மனத்தை நிலையாக இறைவனிடம் வைக்க முடியுமானால் அந்த உணவு  ஹவிஷ்யான்னத்திற்குச் சமமானது.ஹவிஷ்யான்னம் சாப்பிட்டும் ஒருவனது மனம் காமத்திலும் பணத்தாசையிலும் உழலுமானால் அவன் கேவலமானவன் என்றார்.

 

குருசேவை

 

குருசேவை ஆன்மீக வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. குருவிற்குச்சேவை செய்வதற்கான எந்த வாய்ப்பையும் ஒரு சீடன் இழக்க விரும்புவதில்லை. குரு சேவையை ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய நிபந்தனையாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் தமக்கு எந்த ச்சேவை செய்யவும் நரேந்திரரை அனுமதிக்கமாட்டார். அவருக்கு வீசுவது, கால்பிடித்து விடுவது, தண்ணீர் கொண்டு செல்வது என்று பல பணிகளை மற்ற இளைஞர்கள் செய்யும்போது  நரேந்திரரும் செய்ய விரும்பினார். ஆனால் அவர் எதையாவது செய்ய முற்படும்போது ஸ்ரீராமகிருஷ்ணர் உடனடியாக அதனைத்தடுத்து, உன் பாதை வேறானது என்று கூறிவிடுவார்.

சேவை செய்வது மனம் தூய்மை பெறுவதற்காக, ஆனால் நரேந்திரன் ஏற்கனவே தூய மனத்தைப்பெற்றுள்ளான். எனவே அவன் சேவை செய்யத்தேவையில்லை என்பது ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்தாக இருந்தது. மற்றொரு காரணமும் இருக்கலாம்.  உன்னை நான் நாராயணனாகவே காண்கிறேன், என்று ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரிடம் கூறுவதுண்டு. அந்த நாராயணன் தமக்குச்சேவை செய்வதா என்ற எண்ணமும் அவரைத் தடுத்திருக்கலாம். என்னை இவ்வளவு தூரம் நேசித்த, அதே வேளையில் மரியாதையும் அளித்த மற்றொருவர் கிடையாது, என்று பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கூறினார்.

 

அதே வேளையில் நரேந்திரர் எதைச் செய்தாலும் அதை ஸ்ரீராமகிருஷ்ணர் ஏற்றுக்கொண்டார் என்பதும் கிடையாது. என்னிடம் தான் அவருக்கு எவ்வளவு அன்பு!அதே நேரம் என்னிடம் ஏதேனும் தீய சிந்தனை தோன்றினால் அவருக்கு உடனே தெரிந்துவிடும். வேலை தேடி அலைந்த நாட்களில் தீயவர்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டேன். வேலை தேடுவது ஸ்ரீராமகிருஷ்ணரைப்பொறுத்தவரை உலகியல், எனவே அந்த நாட்களில் நான் கொடுக்கும் உணவு எதையும் அவர் உட்கொள்ள மாட்டார். உண்பதற்காகக் கையைத்தூக்குவார். ஆனால் கை உயராது. பிறகு என்னிடம், இன்னமும் நீ தயாராகவில்லை, என்றார் என்று பின்னாளில் நரேந்திரர் கூறினார்.

 

நரேந்திரர் வைத்த சோதனை

 

சோதித்தறியாமல் நரேந்திரர் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று கண்டோம். தீயவர்களின் கையிலிருந்து எதையும் ஸ்ரீராமகிருஷ்ணரால் ஏற்கஇயலாது என்பதை நரேந்திரர் நம்பவில்லை. உங்கள் குருவைப் பகலில் பரிசோதனை செய்யுங்கள். மீன்காரி, நாணயத்தைச்சோதித்து வாங்குவது போல் பரிசோதனை செய்யுங்கள் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.நரேந்திரரும் அதற்கு துணிந்தார். ஒர நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் பண்டித சசதரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது வீட்டிலுள்ள ஒருவர் அவருக்குக் குடிக்க தண்ணீர் கொண்டு வந்தார்.

 

டம்ளரைக்கையில் வாங்கிய  ஸ்ரீராமகிருஷ்ணர் குடிக்காமல், யாரும் கவனிக்காத  வண்ணம் தண்ணீரைக் கீழே கொட்டி விட்டார். நரேந்திரர் இதனை கவனித்தார். பின்னர் தண்ணீர் கொண்டு வந்தவனைப்பற்றி அவர் விசாரித்த போது ஸ்ரீராமகிருஷ்ணரின் நடத்தைக்கான பொருளை அறிந்து கொண்டார்- அவன் ஒழுக்கமற்றவனாக இருந்தான்.

ஸ்ரீராமகிருஷ்ணர்  காமத்தையும் பணத்தாசையையும் அடியோடு விட்டவர். அவரால் பண்த்தை மட்டுமல்ல, உலோக ப்பொருட்களையே தொடமுடியாது.தொட்டால் அவரது கை ஏதோ தேள் கொட்டியது போல் இழுத்துக்கொள்ளும். இதையும் நரேந்திரர் நம்பத் தயாராக இல்லை. அதைச்சோதிக்க எண்ணிய அவர் ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் அறையில் இல்லாதபோது அவரது படுக்கையின் கீழ் ஒரு நாணயத்தை வைத்துவிட்டார். அறைக்கு வந்த ஸ்ரீராமகிருஷ்ணர் அந்தப் படுக்கையின் மீது அமர்ந்தார்.மறுகணமே துடித்துப்போய் எழுந்தார். என்ன காரணம் என்று அனைவரும் படுக்கையைச்சோதித்துப்பார்த்தனர். படுக்கையை உதறியபோது அதிலிருந்து நாணயம் ஒன்று கீழே விழுந்து உருண்டோடியது .ஸ்ரீராமகிருஷ்ணர் பொருள் பொதிந்த பார்வை ஒன்றைத்தமது அன்புச் சீடர் மீது செலுத்தினார்.நரேந்திரர் நாணத்தால் தலை குனிந்தார்.

 

தீயவர்களிடமும் கருணை

 

ஒரு முறை குருதேவர் ஒரு நபரைப்பற்றி இளைஞர்களிடம் கூறினார். அவரது நடத்தை சரியில்லை என்றும் அவரது வீட்டில் யாரும் சாப்பிடக்கூடாது என்றும் கூறியிருந்தார். நரேந்திரர் இதை எப்படியோ கேள்விப்பட்டார். உடனே, குருதேவரின் கட்டளைக்கு எதிராக நடக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டவர் போல் செயல்பட்டார். இளம் பக்தர்களில் ஓரிருவரை அழைத்துக்கொண்டு அந்த நபரின் வீட்டிற்குப்போய் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தட்சிணேசுவரத்திற்கு வந்தார். வந்தவர் நேராக குருதேவரிடம் சென்று அனைத்தையும் கூறினார். குருதேவர் மிகுந்த கோபம் அடைந்தார். அவரது கோபத்தைக் கண்ட நரேந்திரர் அழஆரம்பித்தார். எப்படியோ நிலைமை சமாதானமாகியது.

 

நரேந்திரர் அத்துடன் நிற்கவில்லை. இயல்பாகவே இளகிய அவரது இதயம் அந்த நபருக்காக உருகியது. ஒருநாள் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு நேராக குருதேவரிடம் வந்தார். இவனுக்கு நற்கதி கிடைக்க அருள் புரியுங்கள், இந்தப் பிறவியிலேயே இவன் இறையனுபூதி பெற ஆசீர்வதியுங்கள், என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார். அதற்கு குருதேவர், இல்லை. இந்தப் பிறவியில் நடக்காது, என்று கூறினார். ஆனால் நரேந்திரர் விடவில்லை. நீங்கள்  மறுத்தால் அவன் எங்கே போவான்? என்று பிடிவாதமாகக்கேட்டார். இவனை என்ன  செய்வது! நடக்காது என்று ஏற்கனவே கூறிவிட்டேனே! என்று குருதேவர் சலிப்புடன் கூறினார். ஆனால் நரேந்திரர் கடைசிவரை விடவில்லை. இறுதியில் குருதேவர், போ, போ! மரணவேளையில் முக்தி கிடைக்கும் என்று கூறினார். தீயவர்கள் என்று மற்றவர்கள் ஒதுக்குபவர்களிடமும் அத்தகைய கருணை கொண்டவராக இருந்தார் நரேந்திரர்.

ஸ்ரீராமகிருஷ்ணரும் பல்வேறு வழிகளில் நரேந்திரரைச்சோதித்தார். அவரது புலனடக்கம் , சத்திய நிதிஷ்டை என்று ஒவ்வொன்றையும் சோதித்தறிந்தார். முக்கியமான இரண்டு நிகழ்ச்சிகளைக்காண்போம்.

 

ஸ்ரீராமகிருஷ்ணர் வைத்த சோதனை

 

 நரேந்திரர் தட்சிணேசுவரத்திற்கு  வந்தால் ஸ்ரீராமகிருஷ்ணரின் பேச்சும் செயல்களும் எல்லாம் பொதுவாக அவரைச்சுற்றியே இருக்கம். தொலைவில் நரேந்திரர் வருவதைக் கண்டால் போதம், ஸ்ரீராமகிருஷ்ணரின் உள்ளம் முழுமையாக அப்படியே வெளியே வந்து  அவரை அன்பினால் ஆரத்தழுவிக்கொள்வதைப் போலிருக்கும்  அதோ ந.........ந.... என்று சொல்லிக்கொண்டே அவர் பரவச நிலையில் ஆழ்ந்துவிடுவார்.ஆனால் ஒரு முறை இந்த நிலைமை தலைகீழாகியது. நரேந்திரர் வந்தபோதெல்லாம் அவரைக் கவனிக்காமல் பாராமுகமாக இருந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். அவர் வந்ததைக் கவனித்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை. நரேந்திரர் எப்போதும் போல் வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரை வணங்கிவிட்டு அவர் முன் அமர்ந்தார். சிறிது நேரம் காத்திருந்தார்.ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நலம் விசாரிப்பது பற்றிய பேச்சே இல்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் பரவச நிலையில் இருக்கலாம் என்று கருதினார் நரேந்திரர். எனவே சிறிதுநேரம் காத்திருந்து விட்டு வெளியே வந்து ஹாஸ்ராவுடன்  பேசியபடியே புகைபிடிக்கலானார்.ஆனால் நரேந்திரர் வெளியே வந்ததும் ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றவர்களுடன் பேசத்தொடங்கினார். அவர் பேசும் சத்தம் கேட்டதும் உள்ளே சென்று அமர்ந்தார் நரேந்திரர். ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் அவருடன் பேசவில்லை. முகத்தைத் திருப்பிய வாறு படுத்துக்கொண்டார். அன்று முழுவதம் இவ்வாறே கழிந்தது. மாலை வந்த பின்பும் ஸ்ரீராமகிருஷ்ணரின் மனநிலையில் எவ்வித மாற்றமும் இல்லாததைக்கண்ட நரேந்திரர் அவரை வணங்கிவிட்டு கல்கத்தா திரும்பினார்.

 

ஒரு வாரத்தில் மீண்டும் நரேந்திரர் தட்சிணேசுவரம் வந்தார். அப்போதும்  அதே கதை தான். அன்றும் பகல் முழுவதும் அங்கிருந்த ஹாஸ்ராவுடனும் பிறருடனும் பேசிக் கொண்டிருந்து விட்ட மாலையில் வீடு திரும்பினார். மூன்றாம் முறை வந்தார். நான்காம் முறை வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நரேந்திரர் இதற்காகச் சிறிதும் வருத்தமோ வேதனையோ படவில்லை. சற்றும் மாறாத மனத்துடன் அவர் எப்போதும் போல் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வந்து போய்க் கொண்டிருந்தார். நரேந்திரர் வீட்டில் இருக்கும் போது அவரது நலம் விசாரிப்பதற்காக ஸ்ரீராமகிருஷ்ணர் அவ்வப்போது யாரையாவது கல்கத்தா அனுப்பவே செய்தார். ஆனால் அவர்நேரில் வந்தால் அதே பாராமுகம்! இவ்வாறாக ஒரு மாதத்திற்கு மேல் ஓடியது. நரேந்திரர் சிறிதும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து தட்சிணேசுவரம் வருவதைக்கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர் இறுதியில் ஒரு நாள்  அவரைக் கூப்பிட்டு, என்னப்பா, நான் உன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே! இருப்பினும் நீ ஏன் வந்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு நரேந்திரர் நீங்கள் பேசுவதைக் கேட்கவா நான் இங்கு வருகிறேன்.? நான் உங்களை நேசிக்கிறேன். உங்களைப்பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதனால் வருகிறேன். ” என்று கூறினார். இதைக்கேட்டு ஸ்ரீராமகிருஷ்ணர் மிகவும் மகிழ்ந்து, என் அன்பும் உபசரணையும் கிடைக்காவிட்டால், நீ இங்கு வருவதை நிறுத்தி விடுவாயா என்று உன்னைச் சோதித்துப் பார்த்தேன். உன்னைப்போன்ற உறுதிவாய்ந்தவர்கள் தான் இவ்வளவு அவமானத்தையும் பாராமுகத்தையும் தாங்கிக்கொள்ளமுடியும். வேறொருவர் என்றால் எப்போதோ ஓடியிருப்பார், இந்தப் பக்கம் தலைவைத்துக்கூட படுத்திருக்க மாட்டார் என்றார்.

 

சித்திகளை மறுத்தல்

 

 ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரைத் தனியாகப் பஞ்சவடிக்கு அழைத்துச்சென்று அவரிடம், இதோ பார், வருடக்கணக்காக நான் செய்த தவத்தின் விளைவாக என்னிடம் அணிமா முதலான சித்திகள் உள்ளன.ஆனால் உடையைக்கூட நழுவாமல் பார்த்துக்கொள்ள முடியாத என்னைப்போன்ற ஒருவனுக்கு இவற்றை எல்லாம் பயன்படுத்த நேரம் எங்கே? அன்னை பராசக்தியின் பல்வேறு பணிகளை நீ செய்யப்போவதாக அவள் என்னிடம் கூறியிருக்கிறாள். எனவே அவளிடம் சொல்லி இவற்றை எல்லாம் உனக்குத் தர எண்ணுகிறேன். இப்போது நீ பெற்றுக் கொண்டால் தேவை ஏற்படும் பொழுது பயன்படுத்திக்கொள்ளலாம். என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்.

 

நரேந்திரர் சிறிதுநேரம் சிந்தித்தார், பிறகு, ஐயா! இறையனுபூதி விஷயத்தில் இவை எனக்கு உதவுமா? என்று கேட்டார் நரேந்திரர். அதற்கு  ஸ்ரீராமகிருஷ்ணர், உதவாது. இறையனுபூதி உதவாவிட்டாலும் அவரை அடைந்தபின் அவரது திருப்பணிகளைச்செய்யும் போது இவை மிகவும் உதவும் என்று கூறினார். இதைக்கேட்டதும்  நரேந்திரர், அப்படியானால் இந்த சித்திகளால் எனக்குப் பயனில்லை. முதலில் இறையனுபூதி கிடைக்கட்டும். பின்னர் அவற்றை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்கிறேன். அற்புத சக்திகளை இப்போதே பெற்று அதனால் லட்சியத்தை மறந்து தன்னலத்தால் தூண்டப்பட்டு அவற்றைத் தவறாகப் பயன்படுத்தநேரலாம். அப்போது எல்லாம் வீணாகிவிடுமே! என்று கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் உண்மையிலேயே அந்த ஆற்றல்களை நரேந்திரருக்குக் கொடுக்க விரும்பினாரா அல்லது நரேந்திரரின் மனநிலையைச்சோதித்துப் பார்த்தாரோ? ஆனால் நரேந்திரர் அவற்றை ஏற்க மறுத்தது, அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக்கொடுத்தது.

 

சிறு வயதிலேயே சீதாராமர், சிவபெருமான் என்றெல்லாம் உருவங்களை வழிபட்டவர் நரேந்திரர். அவர்  வாலிபராகிய போது இந்தக் கருத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. கடவுளுக்கு உருவம் கிடையாது. உருவ வழிபாடு தவறு என்று கருதத்தொடங்கினார். பிரம்ம சமாஜக்கொள்கைகளும் இந்த  ரீதியிலேயே இருந்ததால் அவரது நம்பிக்கை உறுதிப்பட்டது. உருவவழிபாடு செய்ய மாட்டோம் என்று சமாஜ உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும். நரேந்திரரும் அவ்வாறு எடுத்துக் கொண்டிருந்தார். அதனால் அவர் தட்சிணேசுவரத்திற்கு வந்தாலும் காளி கோயிலுக்கோ மற்ற கோயில் களுக்கோ செல்வதில்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் உருவவழிபாடு செய்வதையே அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. காளியின் திருவுருவை அவன் வெறும்  பொம்மை என்கிறான். இன்னும் கூட இவர் கோயிலுக்குச்சென்று உருவங்களை வழிபடுகிறார் என்று என்னைப் பற்றியே கூறுகிறான் என்று கூறிச் சிரிப்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

 

தாம் உண்மை என்று நம்புவதை யாரிடமும் தயங்காமல் கூறுவது நரேந்திரரின் பண்பு. ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணரின் முன்னிலையிலேயே   கிரீஷ் போன்றோருடன் அவர் இது பற்றி விவாதித்தார். அமுத மொழிகளில் இந்த விவாதம் முழுமையாகத் தரப்பட்டுள்ளது. அதனைக் காண்போம்.

 

நரேந்திரர்- கடவுள் மனிதனாக அவதரிக்கிறார் என்பதை(நிரூபணம்) இல்லாமல் எவ்வாறு நம்புவது?

கிரீஷ்- நம்பிக்கையே (போதுமான நிரூபணம்). இந்தப்பொருள் இங்கே இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம், நம்பிக்கை தான் ஆதாரம்.

ஒரு பக்தர்-(புறவுலகம்) ஒன்று வெளியில் இருக்கிறது என்று தத்துவ அறிஞர்கள் யாராவது செய்ய(நிரூபிக்க) முடிந்திருக்கிறதா? ஆனால் அதில் தங்களுக்கு (அசைக்க முடியாத நம்பிக்கை)

இருப்பதாகச்சொல்கிறார்கள்.

கிரீஷ்(நரேந்திரரிடம்)-கடவுள்உன் எதிரில் வந்தால் கூட நீ நம்பமாட்டாய்! அப்பா நான் தான் கடவுள். மனித வடிவில் வந்திருக்கிறேன் என்று அவரே உன்னிடம் கூறினாலும் நீஅவரைப் பித்தலாட்டக்காரன் என்று தான் சொல்வாய்.

பின்னர் தேவர்கள் மரணமற்றவர்களா என்பது பற்றி பேச்சு திரும்பியது.

நரேந்திரர்- அதற்கு என்ன நிரூபணம் இருக்கிறது?

 

கிரீஷ்- அவர்கள் உன் எதிரில் வந்தாலும் நீ நம்ப மாட்டாய்!

நரேந்திரர்- மரணமற்றவர்கள் (கடந்த காலங்களிலும்) இருந்தார்கள் என்பதற்கு proof வேண்டும்.

ம-பால்டுவிடம் ஏதோ கூறினார்.

பால்டு (சிரித்தபடியே நரேந்திரரிடம்)- மரணமற்றவர் களுக்குப் பிறப்பு இல்லை என்பதன் அவசியம் என்ன? அவர்களுக்கு இறப்பு இல்லாமல் இருந்தால் போதுமே!

 

ஸ்ரீராமகிருஷ்ணர்(சிரித்தபடியே)—நரேந்திரன் வக்கீலின் மகன். பால்டு டெபுட்டியின் மகன்.(துணைநீதிபதி என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் இவ்வாறு குறிப்பிடுகிறார்)

சற்று நேரம்அங்கு  அமைதி நிலவியது.

 

யோகின்(கிரீஷ் முதலிய பக்தர்களிடம்)-இவர் (குருதேவர்) நரேந்திரனின் வார்த்தைகளை ஒப்புக்கொள்வதில்லை.

ஸ்ரீராமகிருஷ்ணர்(சிரித்தபடியே)- ”சாதகப் பறவை ஆகாயத்திலிருந்து விழும் மழை நீரைத் தவிரவேறு எதையும் பருகாது என்று ஒரு நாள் சொன்னேன். அதற்கு நரேந்திரன், இல்லை சாதகப்பறவை எந்தத் தண்ணீரையும் குடிக்கும் என்றான். உடனே நான் தேவியிடம், தாயே அப்படியானால் நான் சொன்னதெல்லாம் பொய்யாகி விட்டதோ! என்று முறையிட்டேன், மிகுந்த வேதனையாகிவிட்டது.பிறகு ஒருநாள் நரேந்திரன் வந்திருந்தான். அறையின் அருகில் பறந்து கொண்டிருந்த சில பறவைகளைப் பார்த்து, இதோ, இதோ! என்றான். என்ன? என்று கேட்டேன். நான் , அதேதான், சாதகப்பறவை, சாதகப்பறவை என்றான்.போய்ப் பார்த்தேன், வௌவால்கள் ! அதன் பிறகு நான் அவனது வார்த்தைகளை எடுத்துக்கொள்வதில்லை.(எல்லோரும் சிரித்தனர்)

வாதம் தொடர்ந்தது.நரேந்திரரர் வாதத்தைத் தொடர்ந்தார். அவருக்கு வயது இருபத்திரண்டு வருடம் நான்கு மாதம்.

 

நரேந்திரர் (கிரீஷ், ம-முதலியவர்களிடம்)-

 

சாஸ்திரங்களையே நான் எப்படி நம்புவது? மகா நிர்வாண தந்திரம் ஓரிடத்தில், பிரம்ம ஞானம் கிடைக்காவிட்டால் நரகம் தான் என்கிறது. மற்றோரிடத்தில் , பார்வதி உபாசனையைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறுகிறது. மனுசம்ஷிதையில் மனு தம்மைப் பற்றி கூறியுள்ளார். மோசஸ் பென்டாட்யூக்கை எழுதியுள்ளார். தமது மரணத்தைப் பற்றி அவரே அதில் எழுதியுள்ளார்.

(பென்டாட்யூக்கை-பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து பகுதிகள்)

இறைவன் இல்லை(ஈச்வராஸித்த)என்கிறது சாங்கியம். ஏனெனில் இறைவன் இருக்கிறான் என்பதை நிரூபிக்க வழியில்லை. அதே வேளையில் வேதங்களை ஒப்புக்கொள்ள வேண்டும், வேதம் நித்தியமானது என்றும் கூறுகிறது.

இப்படியெல்லாம் இருந்தாலும் , இவை இல்லை என்று நான் கூறவரவில்லை. என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிய வையுங்கள். சாஸ்திரங்களை யார் எப்படி புரிந்து கொண்டார்களோ அப்படி அவர்கள் எழுதி வைத்தார்கள். எதை ஏற்பது? White light( வெள்ளை ஒளி)

Red light (சிவப்புக் கண்ணாடி) வழியாக வரும்போது சிவப்பாகத் தெரிகிறது.green medium( பச்சைக் கண்ணாடி) வழியாக வரும்போது பச்சையாகத்தெரிகிறது.

ஒரு பக்தர்- கீதை பகவானே சொன்னது.

ஸ்ரீராமகிருஷ்ணர்- கீதை அனைத்து சாஸ்திரங்களின் சாரம். ஒரு துறவியிடம் வேறு எது இல்லாவிட்டாலும் கீதை இருக்கும்.

ஒரு பக்தர்- கீதை ஸ்ரீகிருஷ்ணர் சொன்னவை.

நரேந்திரர்- கிருஷ்ணர் சொன்னாரோ, வேறு யாராவது சொன்னார்களோ!

குருதேவர் இதைக்கேட்டு திகைத்துவிட்டார்.

 

தெய்வ வடிவங்கள் மனமயக்கங்களா?

 

 ஒரு  நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரிடம் தமது தெய்வீகக் காட்சிகளைப் பற்றி கூறினார். நரேந்திரர் அவற்றை நம்பவில்லை. எல்லாவற்றையும் கேட்ட அவர் கடைசியில், இந்தக் காட்சிகள் உண்மையல்ல, அவை உங்கள் மனமயக்கத்தால் விளைந்தவை, என்று கூறிவிட்டார்.

 

ஸ்ரீராமகிருஷ்ணருக்குத் தூக்கி வாரிப் போட்டது.ஏய், என்ன சொல்கிறாய் நீ? அந்தத் தெய்வங்கள் என்னோடு பேசுகிறார்கள் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். அப்படித்தான் தோன்றும் என்று ஒரே போடாகப்போட்டார் நரேந்திரர்.ஸ்ரீராமகிருஷ்ணர் அதிர்ந்து போனார்.

 

நரேந்திரர் சத்தியத்தில் தீவிரமான ஈடுபாடு உடையவர். எனவே அவர் சொல்வதில் தவறு இருக்காது என்பதில் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. தாம் கண்ட தெய்வ வடிவங்கள் எல்லாம்  மன மயக்கங்கள் என்று அவர் கூறியபோது ஸ்ரீராமகிருஷ்ணருக்கே குழப்பமாகி விட்டது. அவர் உயர் உணர்வு நிலைகளில் இருக்கம் போது இவற்றையெல்லாம் கேட்டால் சிரித்தவாறே விட்டுவிடுவார். மற்ற வேளைகளில் இத்தகைய கருத்துக்கள் அவரைக் குழப்பிவிடும். ஆனால் அது, சொல்பவர் நரேந்திரர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே.

இப்போதும் குழம்பிய ஸ்ரீராமகிருஷ்ணர் நேராகக்காளிகோயிலுக்குச் சென்று தமது பிரச்சனையை அவளது திருமுன்னர் வைத்தார். கனிவே வடிவான அவள் அவரிடம், நீ ஏன் அவன் பேசுவதைப்பெரிதாக எடுத்துக் கொள்கிறாய்? அவன் சிறுவன். இப்போது இப்படித்தான் சொல்வான், காலப்போக்கில் நீ சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையையும் உண்மை என்று நம்பப்போகிறான் என்று கூறினார். தேவி கூறியதை நரேந்திரரிடம்  வந்து தெரிவித்து விட்டு, போக்கிரிப்பயலே,! என்னிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தி விட்டாயே! இனி இங்கு வராதே என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.நரேந்திரர் மௌனமாக இருந்தார்.

 

ஸ்ரீராமகிருஷ்ணர் அவதாரமா?

 

ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்த நாட்களிலேயே அவரைச் சிலர் அவதாரமாக வழிபடத் தொடங்கியிருந்தனர். இல்லற பக்தர்களில் ராம்சந்திரர் போன்றோர் இதில் மிகவும் தீவிரமாக இருந்தனர்.ஸ்ரீராமகிருஷ்ணரும் பலரிடம், என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்? என்று கேட்பதுண்டு. சிறந்த பக்தன், ஈடிணையற்ற ஞானி, பெரிய மகான், ராதையின் அவதாரம், சைதன்யரின் அவதாரம், இறைவனே மானிடனாக வந்த அவதாரம் என்று வெவ்வெறு பக்தர்களிடமிருந்து வெவ்வேறு பதில் வரும் . பதிலிலிருந்து ஒருவனுடைய மனநிலையைப் புரிந்து கொள்வார் ஸ்ரீராமகிருஷ்ணர். அவர்  தமது சீடர்களின் மனநிலையைப் பரிசோதிக்கின்ற பல்வேறு வழிகளில் இதுவும் ஒன்று. இதே கேள்வியை அவர் நரேந்திரரிடமும் கேட்டார். ஆயிரம் பேர் உங்களை அவதாரம் என்று சொல்லலாம், ஆனால் எனக்கு அதில் உறுதியான நம்பிக்கை வரும்வரை என்னால் அதனை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறிவிட்டார் நரேந்திரர். ஸ்ரீராமகிருஷ்ணர் வழக்கம்போல் சிரித்துவிட்டு மௌனமானார்.

 

இது விஷயமாக ஒருமுறை பக்தர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றம் நடந்தபோது நரேந்திரர், கடவுளைப் போன்ற ஒருவராக அவரை நான் கருதுகிறேன், தாவரத்திற்கும்  மிருகத்திற்கும் இடைப்பட்ட படைப்பு ஒன்று உண்டு. அந்த உயிரினம் தாவரமா, மிருகமா என்று உறுதியாகக்கூற முடியாது. அது போல் மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையில் ஒரு நிலை உள்ளது. அந்த நிலையில் இருப்பவர் கடவுளா, மனிதனா என்று கூறுவது கடினம். அத்தகைய ஒரு நிலையில் உள்ளார் ஸ்ரீராமகிருஷ்ணர் என்று கூறினார். டாக்டர் மகேந்திரலால் சர்க்கார் அதனை, கடவுள் பற்றிய விஷயங்களை உவமை கூறி விளக்க முடியாது என்று கூறினார். அதற்கு நரேந்திரர் அவரை நான் கடவுள் என்று அழைக்கவில்லை. மனிதர் என்றே கருதுகிறேன். என்றார். ஸ்ரீராமகிருஷ்ணருடன் நெருங்கிப் பழகப்பழக நரேந்திரரின் கடவுள்- கருத்து படிப்படியாக மாறத்தொடங்கியது.

 

அத்வைதம்

 

கடவுள் எல்லையற்ற மங்கலப் பண்புகளை உடையவர், ஆனால் அவருக்கென்று உருவம், எதுவும் கிடையாத- பிரம்ம சமாஜத்தினரின் இந்தக் கருத்து நரேந்திரருக்கு மிகவும் ஏற்புடையதாக இருந்தது. இந்த நிலையில் ஸ்ரீராமகிருஷ்ணர் அவருக்கு அத்வைதத்தைக் கற்பிக்க விரும்பினார். அதனை முற்றிலுமாக மறுத்தார் நரேந்திரர். அத்வைதம் என்ன சொல்கிறது? அதை ஏற்றுக் கொள்ள  நரேந்திரர் ஏன் மறுத்தார்? எல்லா உருவங்களும்,எல்லா உயிர்களும் நான், நீ என்று அனைத்தும் கடவுளே என்கிறது அத்வைதம். கடவுளுக்கு உருவமே இல்லை என்கிறார் நரேந்திரர். ஆனால் அத்வைதமோ எல்லாம் அவரது உருவங்கள் என்று கூறுகிறது. அதை அவரால் எப்படி ஏற்க இயலும்? ஆனால் அதற்காக விட்டுவிடுவாரா ஸ்ரீராமகிருஷ்ணர்ஃ தகுதி வாய்ந்த ஒரு பாத்திரமாக நரேந்திரர் இருப்பதைக் கண்ட அவர் அவருக்கு அத்வைத அறிவைக் கொடுத்தே தீர்வது என்று முடிவு செய்தார்.

 

எனவே நரேந்திரர் தட்சிணேசுவரம் வந்தால் உடனே அஷ்டாவக்ர சம்ஹிதை போன்ற  அத்வைத நூல்களைக்கொடுத்துப் படிக்கச்சொல்வார். நரேந்திரரின் கண்களில் இத்தகைய நூல்கள் நாத்திக நூல்களாகவே தோன்றின. ஸ்ரீராமகிருஷ்ணரின் வேண்டுகோளுக்கு இணங்கிப் படிக்க ஆரம்பிப்பார். ஆனால் சிறிது நேரத்திலேயே பொறுமை இழந்து, இதற்கும் நாத்திகத்திற்கும் என்ன வேறுபாடு? ஒரு சாதாரண மனிதன் தன்னைக் கடவுளாக எண்ணுவதா? இதை விடப்பெரிய பாவம் வேறென்ன இருக்க முடியும்?

எல்லாம் கடவுளாம்! நான் கடவுள், நீ கடவுள், காணும் அனைத்தும் கடவுள்- இதைவிடப் பகுத்தறிவிற்குப் பொருந்தாத வேறு ஏதாவது இருக்க முடியுமா? இந்த நூல்களை எழுதிய ரிஷி, முனிவர்களுக்குக் கட்டாயம் மூளை குழம்பிப் போயிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் இப்படி எழுதியிருப்பார்களா? என்று வெடிப்பார். நரேந்திரர் இப்படி வெளிப்படையாகப்பேசுவதை குருதேவர் மகிழ்ச்சியுடன் வரவேற்பார். அவரது போக்கைத் திடீரென்று தாக்காமல் , நான் உன்னை எதற்காகப் படிக்கச் சொல்கிறேன், நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லையே! இதை நீ இப்போது ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அதற்காக ரிஷிகளையும் முனிவர்களையும் ஏன் குறை கூறுகிறாய்? ஏன் இறைவனின் இயல்பிற்கு எல்லை வகுக்கிறாய்? சத்தியப் பொருளான இறைவனிடம் பிரார்த்தனை செய்து  கொண்டே இரு. அவர் தம் எந்த வடிவத்தை உனக்குக் காட்டியருள்கிறாரோ அதில் நம்பிக்கை வை, என்பார். ஆனால் நரேந்திரர் அதைப் பொருட்படுத்தவில்லை. பகுத்தறிவினால் நிலைநாட்டப்படாத எதுவும் அவருக்குப்பொய்யாகத் தோன்றியது. பொய் எதுவானாலும் அதை எதிர்த்து நிற்பது தான் அவருடைய இயல்பு. அதனால்  அத்வைதக்கொள்கையை எதிர்த்தார், வாதம்  செய்தார், கேலி பேசினார்.

 

அத்வைத அனுபவம்

 

நரேந்திரர் பேசியதிலோ, நடந்து கொண்ட விதத்திலோ ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அத்வைதம் விவாதத்திற்கு உரிய ஒன்று அல்ல. பேச்சு நிலையில் அத்வைதம்  கிடையாது. எல்லாம் கடவுள். பானையும் கடவுள், குவளையும் கடவுள். அதனால் பானையும் குவளையும் ஒன்று என்றால் அது அத்வைதம் ஆகாது. மாறாக நகைப்பிற்குரிய ஒன்றே ஆகும். ஏனெனில் பானையும் குவளையும்  ஒன்றல்ல. உண்மை என்னவென்றால் பானையும் குவளையும் அடிப்படையில் ஒன்று. அதாவது இரண்டும் களிமண்ணால்  செய்யப்பட்டவை. களிமண் நிலையில் இரண்டும் ஒன்று. அதுபோல் உயிரும் இறைவனும் ஒன்றல்ல. அடிப்படை ஆன்மநிலையில் எல்லாம்  ஒன்று. எனவே அத்வைதம் அனுபவத்திற்குரிய ஒன்று. விவாதத்திற்குரிய ஒன்று அல்ல. அதனால் எத்தனை நூல்களைப் படிக்கச்சொன்னாலும் நரேந்திரர் அத்வைதக்கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றுகண்ட ஸ்ரீாமகிருஷ்ணர் அந்த அனுபவத்தை அவருக்கு அளிக்க எண்ணினார்.

 

ஒரு நாள்  அத்வைதக்கொள்கையை ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரருக்கு விளக்கினார். நரேந்திரர் கவனமாகக்கேட்டுக் கொண்டார். அவர் பேசி முடித்ததும் ஹாஸ்ராவிடம் சென்றார். புகைபிடித்துக்கொண்டே அவரிடம், இப்படிக்கூட இருக்க முடியுமா, என்ன?

பானையும் கடவுள், குவளையும் கடவுள், இதென்ன கூத்து! என்று கூறிவிட்டு, இருவருமாக விழுந்து விழுந்து  சிரித்தனர். அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் பரசவ நிலையில் இருந்தார். நரேந்திரரின் சிரிப்பைக்கேட்ட அவர் ஒரு சிறுவனைப்போல் உடுத்திருந்த துணிகளை உருவி அக்குளில் இடுக்கிக்கொண்டு, சிரித்தவாறே வெளியில் வந்தார். நேராக அவர்களிடம் வந்து, என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? என்று அன்புடன் கேட்டவாறே நரேந்திரரைத் தொட்டு விட்டு சமாதியில் ஆழ்ந்தார்.

 

இதைக்குறித்து நரேந்திரர் பிறகு கூறினார், அன்று குருதேவர் என்னைத்தொட்ட கணத்தில் மனத்தில் ஒரு புரட்சியே ஏற்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தில் கடவுளைத் தவிர வேறு எதுவுமில்லை என்பதைக் கண்டேன் நான்! எவ்வளவு நேரம் இந்த நிலை நீடிக்கும் என்று அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று முழுவதும் அந்த உணர்வு என்னைவிட்டு நீங்கவில்லை. வீடு திரும்பினேன், அங்கும் அதே உணர்வு! பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற இறைவனே நிறைந்திருந்தார். சாப்பிட அமர்ந்தேன்- உணவு, தட்டு, பரிமாறியவர், உணவை உட்கொள்ளும் நான் அனைத்தும் அவரேயன்றி வேறில்லை! ஓரிரு வாய் உண்டு விட்டு, ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருந்தேன். ஏன் இப்படி இருக்கிறாய்? சாப்பிடு, என்று என் தாய் கூறியபின்னரே மீண்டும் உண்ணத் தொடங்கினேன். இவ்வாறாக, ஊண், ஓய்வு, கல்லூரிக்குச் செல்லும்போது என்று எப்போதும் அதே காட்சி! ஏதோ ஒருவிதமான விவரிக்க இயலாத பரவசம் எப்போதும் என்னை ஆட்கொண்டிருந்தது. சாலையில் போய்க்கொண்டிருந்தேன். வண்டிகள் வந்தன. ஆனால் மற்ற நேரங்களைப்போல், ஒதுங்க வேண்டும் என்று தோன்றவில்லை. அந்த வண்டி எதுவோ அதுவே நானும் என்று தோன்றியது. என் கைகால்கள் உணர்வற்றது போலிருந்தன. உணவில் சற்றும் திருப்தி இல்லாமல் போய்விட்டது. வேறு யாரோ சாப்பிடுவது போல் தோன்றும். சிலவேளைகளில் சாப்பிடும் போதே தரையில் சாய்ந்துவிடுவேன். எழுந்து அமர்ந்து மறுபடியும் சாப்பிடுவேன், சிலவேளைகளில் அளவுக்குஅதிகமாக ச் சாப்பிட்டு விடுவேன்! அது எனக்கு எந்தவிதமான கெடுதலையும் உண்டாக்கவில்லை என்றாலும் என் தாய் பயந்துவிட்டாள். உனக்கு ஏதோ பயங்கர நோய் வந்துள்ளது போல் தோன்றுகிறது, என்பாள். சிலசமயம் , ”இனி இவன் பிழைக்க மாட்டான் என்றும் கூறுவாள்.

 

அந்த உணர்வு சிறிது குறைந்தபோது உலகம் ஒரு கனவு போல் தோன்றியது. ஹேதுவா குளத்தின் கரையில் நடந்து கொண்டிருந்தேன். அதன் நான்கு பக்கமும் அமைந்திருந்த இரும்புவேலி உண்மையா அல்லது கனவா என்றறிய அவற்றில் தலையை மோதிப் பார்த்தேன். கை கால்களில் உணர்ச்சியே இல்லை. பக்கவாதம் வந்து விட்டதோ  என்று தோன்றியது, இப்படி சில நாட்களுக்கு அந்த உணர்வின் தீவிரமான ஆதிக்கத்திலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. இயல்பான நிலை ஏற்பட்ட போது இது தான் அத்வைத அனுபவம் என்று எண்ணினேன். அப்படியானால்  சாஸ்திரங்களில் எழுதப்பட்டிருப்பது  பொய்யல்ல என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதன் பின் அத்வைத தத்துவத்தின் முடிவுகளை என்னால் சந்தேகிக்க முடியவில்லை.

இப்படி பரஸ்பர அன்பு, பரிவு, பரிசோதனை, உயர் அனுபவம்  என்று அந்த அற்புத குருவும் அருமைச்சீடரும் வாழ்க்கையை நடத்தினர்.

 

சாதனை வாழ்க்கை

 

இயற்கைக்கென்று நியதிகள் உள்ளன. இது இருந்தால் அது இருக்கும்,  இதன் பின்னால் அது வரும் என்றெல்லாம் பல்வேறு நியதிகளை வைத்துள்ளது இயற்கை. செடிகளில் பூ முதலில் வரும்.  தொடர்ந்து பிஞ்சு வரும்- இது அத்தகைய நியதிகளில் ஒன்று. ஆனால் இந்த நியதிகள் சில இடங்களில் சில நேரங்களில் மாறுபடுவதும் உண்டு. பூசணிச் செடிகளில் முதலில் பிஞ்சு வரும். பிறகு தான் பூ வரும். இதனை ஈசுவரகோடிகளான தமது சீடர்களுக்கு உதாரணம் காட்டுவார் ஸ்ரீராமகிருஷ்ணர். பொதுவாக ஆன்மீக சாதனைகள் தவம் என்றெல்லாம் செய்து இறையனுபூதி  பெறுவார்கள்.இது நியதி. ஆனால் ஈசுவரகோடிகளின்  விஷயத்தில் இந்த நியதி  மாறுபடுகிறது. அவர்கள் முதலிலேயே ஆன்மீக அனுபவங்களைப்பெற்றுவிடுகிறார்கள். பிறகு தவம் முதலான வற்றைச்செய்து ஆன்மீக அனுபவங்களைப் பெற்று, ஏற்கனவே பெற்ற அனுபவங்களுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஈசுவரகோடிகளிலும் தலைமையிடத்தைப்பெற்றவர் நரேந்திரர். அவர் ஏற்கனவே மிக உயர்ந்த பல

. அனுபவங்களைப்பெற்றுள்ளதைக் கண்டோம். ஆனால் அவரும் ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டார். குருதேவர் அவருக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்தார்.

 

தீட்சையும் வழிகாட்டுதலும்

 

ஆன்மீகப் பயிற்சிகளுக்கான முதல் படியாக அமைவது மந்திர தீட்சை. பொதுவாக குரு ஒருவர் சீடனின் தகுதிக்கேற்ப ஒரு மந்திரத்தை உபதேசிப்பதன்மூலம்  தீட்சை அளிக்கிறார். அதாவது ஆன்மீக வாழ்விற்கு வழிகாட்டுகிறார். இந்த மந்திரம் ஸித்த மந்திரமாக இருக்கவேண்டும். ஸித்த மந்திரம் என்றால் விழிப்புற்ற மந்திரம் என்று பொருள். அதாவத ஒரு குரு அந்த மந்திரத்தை ஜபித்து, அதன் மூலம் அந்த மந்திரத்திற்குரிய தெய்வத்தின் அருள் பெற்றவராக இருக்க வேண்டும். அத்தகைய குரு அளிக்கின்ற தீட்சை மட்டுமே பலன் அளிக்கக்கூடியது. ஏனெனில் மந்திரத்துடன் அந்த மந்திரத்தை ஜபிப்பதற்கான ஆற்றலையும் அவர் அளிக்கிறார். அதனால் தான் நூல்களில் படித்து, அந்த மந்திரங்களை ஜபிக்க க்கூடாது. குரு மூலம் பெற்ற மந்திரத்தையே ஜபிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த மந்திர தீட்சைக்கென்று குறிப்பிட்ட நியதிகளும் நிபந்தனைகளும் உள்ளன.

ஆனால் நிறைநிலை பெற்ற குரு நியதிகளையெல்லாம் மீறி, தாம் விரும்பும் விதத்தில் தீட்சை அளிப்பதுண்டு. ஆன்மீக ஆற்றலைச் சீடனிடம் பாய்ச்சுவதே தீட்சையின் நோக்கம். அதனை அவர்கள் தாங்கள் விரும்பும் விதத்தில் சாதிப்பார்கள். இத்தகைய தீட்சையைத் தந்திர சாஸ்திரங்கள் சாம்பவி தீட்சை என்கின்றன. ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரருக்கு  இத்தகைய தீட்சையை அளித்தார்.

 

ஒரு முறை ஸ்ரீராமகிருஷ்ணர் அதர்லால் சேன் என்ற பக்தரின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.  அங்கே பக்தர்களுடன்  பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது பார்வை நரேந்திரரின் மீதுவிழுந்தது. உடனே எழுந்து நின்று சமாதியில் ஆழ்ந்தார். அந்த நிலையிலேயே தமது கால்களை நீட்டி நரேந்திரரின்  முழங்காலின் மீது வைத்தார். அப்படியே நீண்ட நேரம் நின்றார். அவருக்குப் புறவுணர்வு சிறிதும் இல்லை. கண்கள் நிலைகுத்தி நின்றன. சிலநேரங்களில் நரேந்திரரின் நெஞ்சைத்தொடுவார். இவ்வாறு பலவிதமாக நரேந்திரருக்கு ஆன்மீக ஆற்றலை வழங்கினார்

 

ஸ்ரீராமகிருஷ்ணரின் பயிற்சிமுறை

 

 ஸ்ரீராமகிருஷ்ணர் ஆன்மீக சாதனைகளில் எப்படிப் பயிற்சி அளித்தார்  என்பது பற்றி நரேந்திரர் பின்னாளில் கூறினார். விளையாட்டு வேடிக்கை என்று சாதாரணமான அன்றாட நிகழ்ச்சிகள் வாயிலாக அவர் எவ்வாறு மிக உயர்ந்த ஆன்மீகப் பயிற்சியை அளித்து, நாங்கள் அறியாமலே எங்கள் ஆன்மீக வாழ்க்கையைப் ப ண்படுத்தினார் என்பதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. சிறந்த மற்போர் வீரன் ஒருவன் ஒரு சிறுமிக்கு கற்பிக்கும் போது  அதற்குத்தேவையான ஆற்றலை மட்டுமே வெளிக் காட்டுவான். மிகுந்த சிரமத்தின் பேரில்  சிறுவனுடன் மோதுவது போலவும், சில சமயம் தான் தோற்பது போலவும் காட்டிக்கொள்வான். இதன் மூலம் மாணவனின் மனத்தில் தன்னம்பிக்கை வளர்க்கிறான். ஸ்ரீராமகிருஷ்ணரும் எங்களை அப்படித்தான் பயிற்றுவித்தார். துளி நீரில் அவர் கடலையே கண்டார். எங்கள் உள்ளேயிருந்த ஆன்மீக விதை முளைவிட்டு காலப்போக்கில் எவ்வாறு வளர்ந்து, பூத்து, காய்த்து, கனிகளை நல்கப்போகிறது.என்பதை அவர் கண்டிருந்தார். எனவே எங்களைப் புகழ்வார், ஊக்குவிப்பார். நாங்கள் உலகியலில் சிக்கிவிடாமல் இருப்பதற்காக எங்கள் செயல்கள் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து, அறிவுரை கூறி எச்சரித்துக் காப்பார். ஆனால் இதையெல்லாம் நாங்கள் சிறிதும் அறியவில்லை. கற்பதிலும் வாழ்க்கையைப் பண்படுத்துவதிலும் அவரது வழி அது.

 

ஸ்ரீராமகிருஷ்ணர் சாதனை செய்த இடமாகிய ஏகாந்தமான பஞ்சவடிதான் எங்கள் சாதனைகளுக்கு ம் உகந்த இடமாக இருந்தது. சாதனையை மட்டும் ஏன் கூற வேண்டும்? நாங்கள் நீண்டநேரம்  விளையாடி க் களித்து மகிழ்ந்ததும் அங்கே தான். அப்போதெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணரும் எங்களுடன் சேர்ந்து கொண்டு எங்கள் மகிழ்ச்சியைப் பன்மடங்காக்குவார். அங்கு நாங்கள் ஓடுவோம், மரத்தில் ஏறுவோம், கொடிகளை இணைத்துக் கட்டி ஊஞ்சல் ஆடுவோம். சில சமயம் நாங்களே உணவு சமைத்து உண்போம். ஒரு நாள் நான் சமைத்த உணவை அவர் உண்டார். பிராமணர்கள், அதிலும் நல்லொழுக்கமுள்ளவர்கள், சமைத்த சாதத்தை மட்டும் தான் அவர் உண்பார் என்பது எனக்குத் தெரியும். ஆதலால் சோறு மட்டும் கோயில் பிரசாதத்திலிருந்து ஏற்பாடு செய்தேன். ஆனால் அவர் என்னைத் தடுத்து, உன்னைப்போன்ற தூய சத்வ குணம் படைத்தவர்கள் சமைத்த சாதத்தை உண்டால் எந்த க்குற்றமும் இல்லை என்று கூறினார். எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் நான் சமைத்த உணவையே உண்டார்.

 

தியானப் பயிற்சியில் வழிகாட்டல்

 

 நரேந்திரரின் தியானப் பயிற்சியில் ஸ்ரீராமகிருஷ்ணர் எவ்வாறு வழிகாட்டினார் என்று பார்ப்போம். நரேந்திரர் அதிகாலை வேளையில் தியானத்திற்காக அமர்வார். அது சரியாக அருகிலுள்ள சணல் ஆலையில் சங்கு ஒலிக்கும் நேரம். அலறுவது போல் ஒலிக்கின்ற இந்தச் சத்தம் தியான வேளையில் நரேந்திரருக்கு இடைஞ்சலாக இருந்தது. ஒரு நாள் அதனை ஸ்ரீராமகிருஷ்ணரிடம் தெரிவித்து வழிகேட்டார். அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் சங்கு முழக்கத்தை ஏன் ஒரு தடையாக நினைக்கிறாய்? அந்தச் சத்தத்திலேயே மனத்தை ஒருமைப்படுத்திப் பார், எல்லாம் சரியாகி விடும் என்றார். அப்படியே செய்த நரேந்திரரால் ஆழ்ந்து தியானத்தில் ஈடுபட முடிந்தது.

மற்றொரு முறை தியான வேளையில் தம்மால் முற்றிலும் உடம்பை மறந்து தியானப் பொருளுடன் ஒன்ற இயலவில்லை என்று ஸ்ரீராமகிருஷ்ணரிடம் முறையிட்டார் நரேந்திரர். உடனே ஸ்ரீராமகிருஷ்ணர் தமது நகத்தால் நரேந்திரரின் புருவ மத்தியில் அழுத்தி, இந்த வேதனையில் உன் மனத்தை  ஒருமைப்படுத்து   என்று கூறினார். இவ்வாறு மனத்தை ஒருமைப்படுத்திய நரேந்திரரால் உடம்பை மறந்து தியானத்தில் ஈடுபடமுடிந்தது. அந்த வலி இருந்தது வரை, நான் விரும்பிய மட்டும் மனத்தை ஒரே சீராக வைத்துக்கொள்ள முடிந்தது. அப்போது மற்ற உறுப்புகள் இருக்கின்றன என்ற நினைவு அறவே மறந்துவிட்டது,எனவே உடலை நினைப்பது பற்றிய கேள்வியே இல்லாமல் போய்விட்டது என்று பின்னாளில் கூறினார் நரேந்திரர்.

இவை தவிர நரேந்திரர் தட்சிணேசுவரத்தில் தங்கும் போது ஸ்ரீராமகிருஷ்ணர் குறிப்பிட்ட வகை சாதனைகளை அவருக்குக்கூறி பஞ்சவடியில் சென்று தியானிக்குமாறு அனுப்புவதுணடு.

 

யானையும் குட்டையும்

 

நரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரின் பேரருளால் சாதனை வாழ்வில் தீவிரமாக முன்னேறிக்கொண்டிருந்தாலும் அவரைப் பொறுத்தவரை அது ஒரு பெரிய விஷயமாகத்தெரியவில்லை. பக்தர்களில் சிலர் பரவசநிலைகளில் ஆழ்வதும், கண்ணீர் வடிப்பதுமாகப் பேரானந்த நிலைகளை அனுபவிப்பதை அவர் கண்டபோது, ஒருவேளை தாம் முன்னேறவில்லையோ என்ற சந்தேகம் அவருக்கு வந்துவிட்டது. எனவே ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணரை அணுகி, தமக்கும் அத்தகைய நிலைகளை அருளுமாறு கேட்டார். அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர், மகனே, இதற்குப்போய் வருந்துகிறாயே! ஒரு யானை சாதாரண குட்டையில் இறங்குவதாக வைத்துக்கொள், குட்டையிலுள்ள தண்ணீரில் அலையெழும், கரையில் மோதிச்சிதறி அமர்க்களப்படும். ஆனால் அதே யானை கங்கையில் இறங்கட்டும், கங்கை நீரில் ஏதாவது மாற்றம் உண்டாகுமா? அது போல் தான் இதுவும், இந்தப் பக்தர்கள் வெறும் குட்டை போன்றவர்கள், பக்தியின் சிறு அனுபவங்கள் வாய்த்ததுமே இப்படி உணர்ச்சிப்பெருக்கில்  தள்ளாடுகிறார்கள். நீயோ மாநதி கங்கையைப்போன்றவன். இது போன்ற உணர்ச்சிப் பெருக்கு உனக்கு வராது, என்று உண்மையைத்தெளிவுபடுத்தினார்.

 

பிரம்மச்சரிய வாழ்விற்கான உபதேசம்

 

நரேந்திரரின் பாட்டி வீட்டில் உள்ள அவரது படிப்பறைக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் அவ்வப்போது செல்வதுண்டு. அப்போதெல்லாம் ஆன்மீக சாதனையைப் பற்றிய பல விஷயங்களை அவருக்கு உபதேசிப்பார். பெற்றோரின் வற்புறுத்தலுக்காகத் திருமணம் என்ற தளையில் சிக்கிவிடாமல் இருக்குமாறு அவரை எச்சரிப்பார். பிரம்மச்சரியத்தின் பெருமைகளைக் கூறுவார். தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் பிரம்மசரியம் காத்தால் மேதா நாடி திறக்கிறது. அதனால் நுட்பமான மற்றும் மிக நுட்பமானவற்றை எல்லாம் ஊடுருவி அறிந்து கொள்ள ஒருவனால் முடிகிறது. இந்த அறிவாற்றலின் உதவியால் தான் இறையனுபூதி பெற முடியும். இப்படிப்பட்ட தூய புத்திக்குத்தான் இறைவன் தென்படுகிறார் என்றெல்லாம் எடுத்துரைப்பார்.

ஸ்ரீராமகிருஷ்ணரின்  தொடர்பால் தான் நரேந்திரர் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று அவரது வீட்டினர் நினைத்தனர். அதைப்பற்றி நரேந்திரர் கூறினார். ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணர்  வழக்கம்போல் என் படிப்பறைக்கு வந்து பிரம்மச்சரியத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். மறைவிலிருந்து அதை என் பாட்டி கேட்டு, என் பெற்றோரிடம் கூறிவிட்டாள். துறவி ஒருவருடன்  பழகுகின்ற நானும் துறவியாகிவிடுவேன் என்று பயந்து அன்றிலிருந்து  திருமணஏற்பாடுகள் முடுக்கிவிடப் பட்டன. ஆனால் என்ன பயன்?  ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுளத்திற்கு முன் அவர்களின் முயற்சிகள் எல்லாம் தோல்வியுற்றன. சில  இடங்களில் எல்லாம் முடிந்து இதோ திருமணம் என்ற நிலை வரை வந்துவிடும். ஆனால் ஏதோ அற்ப விஷயத்திற்காக இரண்டு வீட்டாருக்கும்  இடையே கருத்து வேறுபாடு தோன்றி திருமணம் தடைபட்டு விடும்.

நரேந்திரர் அடிக்கடி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் போவதை வீட்டில் யாரும் விரும்பாவிடினும் அவரிடம்  அதைச்சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. இளமை முதற்கொண்டே அவர் எப்போதும் யாருடைய எதிர்ப்புகளையும் பொருட்படுத்தியதில்லை. வாலிபனான பின்பு உணவு, உடை என்று எல்லாவற்றிலும் தன் விருப்பம் போல் தான் செய்து வந்தார். அவரிடம் இதைச்செய், அதைச்செய்யாதே, என்றெல்லாம் கட்டுப்பாடுகளை  விதித்தால் விளைவு விபரீதமாகிவிடும் என்பதை வீட்டிலுள்ளோர் அறிந்திருந்தார்கள். எனவே நரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் தடையின்றி சென்றுவர முடிந்தது.

 

வேடிக்கை, வினோதம்

 

பொதுவாக, மகான்களிடம் வேடிக்கை வினோதங்களுக்குக் குறைவிருக்காது. ஸ்ரீராமகிருஷ்ணரும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. அமுத மொழிகளில் பல இடங்களில் அவரது பேச்சைக்கேட்டு அனைவரும் சிரிப்பது பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். நரேந்திரர் சம்பந்தப் பட்ட ஓரிரு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

ஒரு நாள் நரேந்திரர் பாட இருந்தார். ஆனால் தம்புராவில் சுருதி கூட்டுவதிலேயே நீண்ட  நேரம் போய்க்கொண்டிருந்தது. பாட்டு தொடங்கக் காணோம். குருதேவரும்  மற்றவர்களும் பொறுமை இழந்தனர். அங்கிருந்த வினோத்  என்பவர், நரேந்திரன் இன்று தம்புராவைச் சரி செய்வான், இன்னொரு நாள் பாடுவான், என்றார். எல்லோரும் சிரித்தனர்.

 

ஸ்ரீராமகிருஷ்ணரும் சிரித்தபடி, அந்தத் தம்புராவையே உடைத்துவிட்டால்  என்ன என்று தோன்றுகிறது. எவ்வளவு நேரமாக இந்த ”டொய்ங் டொய்ங்ஙூம் தானானன நேரெநும் மும் நடக்கும், என்று கேட்டார்.

பவநாத்-யாத்ராவிலும் ஆரம்பத்தில் இப்படித்தான்! சுருதி சேர்க்கிறோம் என்று இவர்கள் செய்யும் கூத்தில், எல்லாம் வெறுப்பாகி விடுகிறது.

நரேந்திரர்-(கம்பியை இழுத்து சுருதி சேர்த்தவாறு)-

புரியா விட்டால் தான் வெறுப்பாகும்.

ஸ்ரீராமகிருஷ்ணர்(சிரித்தபடி)- இதோ, நம்மை யெல்லாம் ஊதித்தள்ளி விட்டான்.

மற்றொரு நாள்.

ஸ்ரீராமகிருஷ்ணர்(நரேந்திரரிடம்)- ஒரு பாட்டுப் பாடேன்.

நரேந்திரர்-வீடு திரும்ப வேண்டும், பல வேலைகள் இருக்கின்றன.

ஸ்ரீராமகிருஷ்ணர்-அப்படிச்சொல்லப்பா! நாங்கள் சொல்வதை நீ எதற்காகக்கேட்க வேண்டும்.? காதில் கடுக்கன் போட்டவன் சொன்னால், ஆமாம், போடுவாய்.கட்ட கோவணம் இல்லாதவனின் பேச்சை யார் கேட்பார்கள்?( எல்லோரும் சிரித்தனர்).குகன் குடும்பத்தினரின் தோட்ட வீட்டிற்குப்போக உன்னால் முடியும். அதை நான் அடிக்கடி கேள்விப்படவும் செய்கிறேன், இன்று எங்கே நரேந்திரன் என்று கேட்டால் குகனின் தோட்ட வீட்டில் என்று பதில் வருகிறது. இதையெல்லாம்  சொல்லியிருக்க மாட்டேன், நீ தான் என் வாயைக் கிளறிவிட்டாய்.

நரேந்திரர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு, பக்கவாத்தியம் எதுவும் இல்லையே! வெறுமனே பாடட்டுமா? என்று கேட்டார்.

 

ஸ்ரீராமகிருஷ்ணர்- அப்பனே, எங்கள் நிலைமை இது, இங்கு இவ்வளவு தான் கிடைக்கும். உன்னால் முடியுமானால் பாடு, பலராமின் ஏற்பாடு இவ்வளவு தான். அவர் என்னிடமே, நீங்கள் படகில் வாருங்கள், முடியாவிட்டால் மட்டும் வண்டி வைத்துக்கொள்ளுங்கள் என்பார்.( எல்லோரும் சிரித்தனர்). இன்று விருந்து தந்தார் அல்லவா. அதனால் மாலையில் எல்லோரையும் ஆடவைத்து அதை மீட்டுவிடுவார்..(சிரிப்பு). ஒரு நாள் இங்கிருந்து தடசிணேசுவரம் செல்ல ஒரு வண்டியை ஏற்பாடு செய்தார். வண்டி வாடகை பன்னிரண்டு அணா! பன்னிரண்டணாவிற்கு தட்சிணேசுவரம் வரை வருவானா? என்று கேட்டேன் . அதற்கு அவர் ”அதுவே போதும் என்று கூறிவிட்டார். ஒரு வழியாக வண்டி புறப்பட்டது. ஆனால் பாதி வழியிலேயே ஒரு சக்கரம் உடைந்தது. (எல்லோரும் உரத்த குரலில் சிரித்தனர்). அது மட்டுமல்ல.குதிரை நடுநடுவே நின்றுவிடும். என்ன செய்தாலும் நகராது. வண்டிக்காரன் அடிஅடியென்று அடிப்பான். உடனே கொஞ்ச தூரம் ஓடும்.(உரத்த சிரிப்பு). இன்றைய ஏற்பாடும் அது போல் தான். மிருதங்கம் வாசிக்கப்போவது ராம், நாம் ஆட வேண்டும். இதில் விஷயம் என்னவென்றால் ராமுக்குத் தாள ஞானமே கிடையாது. (எல்லோரும் சிரித்தனர்). நீங்களே பாடிக் கொள்ளுங்கள். நீங்களே ஆடிக்கொள்ளுங்கள், நீங்களே ஆனந்தம் அடையுங்கள் என்பது தான் பலராமின் விஷயம். (எல்லோரும் சிரித்தனர்)

 

மாயையும் அஞ்சும் ஞானம்

 

நரேந்திரர் சிவபெருமானின் அம்சத்துடன் பிறந்தவர். சிறு வயதிலேயே அவரிடம் தியானத்தில் மூழ்குவதற்கான ஆற்றல் இருந்தது. அதே போல் ஆன்மீக ஞானமும் அவரிடம் இயல்பாகவே இருந்தது. உலகையே  மயக்குகின்ற மகா மாயையான சக்திகூட நரேந்திரனிடமிருந்து பத்தடி தள்ளியே நிற்க முடியும். என்று அவரது ஞானத்தைப்பற்றி கூறினார்  ஸ்ரீராமகிருஷ்ணர். உலகின் ஆசைகள் அனைத்தையும் ஒரேயடியாக வெட்டி வீழ்த்தி, இறையுணர்வில் இரண்டறக் கலப்பதற்குத் தயாராக இருந்தார் நரேந்திரர். மற்ற சீடர்களுக்காக தேவியிடம் அம்மா, உலகை மயக்குகின்ற உன் மாயா சக்தியாகிய திரையை இவர்களிடமிருந்து அகற்று, என்று பிரார்த்தனை செய்கின்ற ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரருக்காக, அம்மா உன் மாயா சக்தியைச் சிறிதளவு நரேந்திரனிடம்  வைத்திரு, என்று பிரார்த்தனை செய்தார்.!


No comments:

Post a Comment