Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-15

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-15

🌸

ஒருநாள் மெத்தப்படித்தவர்கள் சிலர் அவரைக்காண வந்தனர். சுவாமிஜி தம்மை அத்வைதி என்று கருதுபவர். அத்வைதம் அறுதி உண்மைபற்றி பேசுகிறது. உயிர் உலகம், அறுதி உண்மை என்று பிரிவுகள் கிடையாது. இருப்பது ஒன்றே அதுவே நான் என்பது அதன் கருத்து. வந்தவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஒரு சவால் விடுவது போலவே சுவாமிஜியிடம், நீங்களும் கடவுளும் ஒன்றே என்று கூறுகிறீர்கள். இதன்மூலம் உங்கள் பொறுப்பைத்தட்டிக்கழித்து விட்டீர்கள். நீங்கள் தவறு செய்தால் தடுப்பது யார்? சரியான பாதையிலிருந்து விலகினால் திருத்துவது யார்? என்று கேட்டனர். அதே அழுத்தத்துடன் சுவாமிஜி,  கூறினார். நான் கடவுளுடன் ஒன்றுபட்டிருப்பதாக உண்மையிலே உணர்ந்திருந்தால் தீய வழியில் செல்ல மாட்டேன். என்னைத் திருத்தவோ, தடுக்கவோ யாரும் தேவையிருக்காது.

சுவாமிஜி ராமநாத புரம் அரண்மனையில் இருந்த போதும் இத்தகைய விவாதம் ஒன்று எழுந்தது. அறிய முடியாததாகிய அறுதி உண்மையைக் காண இயலாது என்று ஒருவர் ஏளனமே செய்யத் தொடங்கினார். சிறிது நேரம் பொறுமையாக இருந்த சுவாமிஜி தீர்க்கமான குரலில், அறிய முடியாததை நான் கண்டிருக்கிறேன், என்று கூறினார்.

 

சுவாமிஜியின் தோற்றமும் அவரது ஆழ்ந்த அறிவும், புதிய கோணங்களில் அவர் கருத்துக்களை விளக்குகின்ற பாங்கும் சென்னை இளைஞர்களை குறிப்பாக அளசிங்கரை , வெகுவாகக் கவர்ந்தன. சுவாமிஜியும் சென்னை இளைஞர்களால் மிகவும் கவரப்பட்டார். இந்து மதத்தைப்பற்றிய அவரது புதிய விளக்கங்கள் சென்னையில் தான் உண்மையில் வரவேற்கப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்டன. அங்குதான் ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தி உடனடியாக ஏற்றுக் கொள்ளப் பட்டது, என்று அவரது ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்.

அளசிங்கர் அதற்குமேல் தாமதிக்கவில்லை. ஒரு நாள் அவரிடம், சுவாமிஜி நீங்கள் ஏன் கிகாகோவில் நடைபெறும் சர்வமத மகாசபையில் கலந்து கொள்ளக் கூடாது? என்று கேட்டார். சுவாமிஜி உடனடியாக, எனக்கு எந்த எதிர்ப்பும்  இல்லை. யாராவது என்னை அனுப்பினால் நான் போகிறேன் என்றார். கூட்டத்திலிருந்த ஒருவர் உடனடியாக சுவாமியிடம் கொஞ்சம் பணம் (ரூ.2) கொடுத்தார்.சுவாமிஜி அதனைக்கையில் பெற்றுக்கொண்டார். முதன் முறையாக அவர் கையில் பணம்  வாங்கியதை அப்போது தான் பார்த்தேன் என்று அளசிங்கர் பின்னாளில் கூறினார். கையிலிருந்த பணத்தைப்பார்த்துச் சிரித்தபடியே , நான் சந்திக்கும் முதல் பிச்சைக்காரனிடம் இந்தப் பணத்தைக் கொடுப்பேன் என்று கூறினார். அப்படியே செய்யவும் செய்தார்.

அமெரிக்கா  செல்வது பற்றிய எநத மடிவிற்கும் சுவாமிஜி வரவில்லை என்றாலும் நான் ஏன் கலந்து கொள்ளக்கூடாது? என்ற எண்ணம் அவரில் மீண்டும் மீண்டும் எழுந்தது. அளசிங்கரும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அதனை சுவாமிஜியிடம் வலியுறுத்திவந்தார்.

 சென்னையில் அந்த நாட்களில் 15-க்கும் மேலான இந்மு மத இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் இந்த இயக்கங்களின் தலைவர்களோ இந்து மதத் தலைவர்களோ பொதுவாக சுவாமிஜியைச்சந்திக்கவில்லை. மாணவர்கள். ஆசிரியர்கள், அரசாங்க அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என்றே பலரும் அவரிடம் வந்தனர். ஆனால் கூட்டம்கூட்டமாக மக்கள் வந்தனர். பொதுவாக அவர்கள் மாலை 4 முதல் இரவு 10 வரை அவரிடம் வந்து பேசினார்.

சென்னை சங்கங்களில் ஒன்றான,திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கம் . சவாமிஜியைப் பலமுறை அழைத்து சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தது. இதன்மூலம்  சுவாமிஜியின் பெயர் சென்னையில் அதிகமாகப் பரவியது. சுவாமிஜி அங்கே பேசியது பற்றி சிலவேளைகளில்  நாளிதழ்களிலும் வெளியாயிற்று. 1893 ஜனவரி 28 மதுரை மெயில் நாளிதழில் கீழ் வருமாறு வெளியாகியிருந்தது.

 

இந்து மதம் மற்றும் சமூக இயல்  பற்றி வங்காளத்துறவி

 

 சுமார் 32 வயது மதிக்கத்தக்க வங்காளித்துறவி ஒருவர்  சென்னைக்கு வந்துள்ளார். இவர் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். படித்த இந்துக்கள் சுமார் 100பேர் அவருடன் திருவல்லிக்கேணிஇலக்கியச் சங்கத்தில் சென்றவாரம் உரையாடினர். அவர்களில் திவான் பகதூர் ரகுநாத ராவும் ஒருவர். அந்தத்துறவி பேசியவை ஏற்கனவே ”இன்டியன் சோஷியல் ரிஃபார்மர் பத்திரிக்கையில் வெளி வந்திருந்தன.

மேற்கண்ட குறிப்புடன், வேதமதம், வாழ்க்கை பற்றி இந்து மதம் கூறும் லட்சியம், சிராத்தச் சடங்கு, பெண்கல்வி, இந்துக்களின் முன்னேற்றம் ஆகியவைப்பற்றி சுவாமிஜி பேசிய கருத்துக்களைச் சுருக்கமாக இந்தப் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது.

 

அடையார் தியாபிகல் சொசைட்டியிலும் சுவாமிஜி ஓரிரு முறை பேசினார். அவர்களின் ”தி தியாசபிஸ்ட் என்ற பத்திரிகையின் 1893 மார்ச் இதழில் அது பற்றிய குறிப்பு வெளியாகியிருந்தது.

சொற்பொழிவுகள், உரையாடல்கள், அனைத்திற்கும் மேலாக சுவாமிஜியின் தெய்வீகப்பொலிவும் ஆளுமையும் நூற்றுக்கணக்கானோரைக் கவர்ந்தது. சிலரது வாழ்க்கை பேரளவில் சுவாமிஜியின் அருளாசிகளால் மாற்றம் கண்டது.

-

 ஓரிருவரைக்  காண்போம். அளசிங்கரைப்பற்றி ஏற்கனவே கண்டோம். அவர் சுவாமிஜியால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்பட்டவர். தமது இறுதி மூச்சு வரை அவர் சுவாமிஜிக்காகவே, சுவாமிஜியிலேயே வாழ்ந்தார். நமது  அளசிங்கரைப்போல் இந்த உலகில் யாரும் கிடையாது. இவ்வளவு இம்மியும் சுயநலமற்ற,, இவ்வளவு தூரம் கடினமாக உழைக்கின்ற, குருவிடம் இவ்வளவு பக்தி பூண்ட இத்தனை பணிவு மிக்க ஒரு சீடனை உலகில் காண்பது மிகவும் அரிது என்று குருவான சுவாமிஜியாலேயே புகழ்ப்படும் பேறு பெற்றவர் அவர்.  சுவாமிஜியின் திருச் சரிதம் இந்த உலகில் நிலைநிற்கும் வரை  அளசிங்கரின் புகழும் மங்காமல் நிற்கும்.

 

அடுத்தவர் ”கிடி . இது அவருக்கு சுவாமிஜி அளித்த செல்லப்பெயர். அவரது உண்மைப்பெயர் சிங்காரவேலு முதலியார். அவர் கிறிஸ்தவ க் கல்லூரியில் துணை விஞ்ஞானப்பேராசிரியராக இருந்தார். கிறிஸ்தவ மதக் கருத்துக்களைின் தாக்கத்தால் இந்து  மதத்தை அவர் இழிவாக எண்ணினார். சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு அவருடன் வாதம் செய்வதற்காக ஒரு நாள் வந்தார்  அதைப்பற்றி பின்னாளில் சுவாமிஜி வேடிக்கையாக, வந்தேன், கண்டார், வெல்லப்பட்டார் என்று கூறினார். சுவாமிஜியைச்  சந்தித்த பிறகு தமது வாழ்க்கையை முற்றிலுமாக சுவாமிஜியின் பணிக்காக அர்ப்பணித்தார்.

 

ஒரு நாள் மாலை வேளை. வழக்கம் போல் பல அன்பர்கள் அன்றும் சுவாமிஜியைக் காண்பதற்காகக் கூடியிருந்தனர். அன்று சுவாமிஜியின் மனம் முற்றிலுமாக இறையுணர்வில் ஆழ்ந்திருந்தது. அவரிடம் தெய்வீக ஆற்றல் பொங்குவதுபோல்  இருந்தது. திடீரென்று சுவாமிஜி ஒரு வித மான பரவச நிலைக்கு உள்ளானார். அந்த நிலையிலேயே இப்போது யாராவது என்னைத்தொட்டால் அவர்கள் மகானாகி விடுவார்கள் என்று கூறினார். அந்தக்கூட்டத்தில் இருந்தார் கி.டி. விளைவு எதையும் அவர் சிந்திக்கவில்லை. சட்டென்று சுவாமிஜியைத் தொட்டுவிட்டார். மின்சாரம் பாய்வது போன்ற ஓர் உணர்ச்சி அவருள் பரவியது. சுவாமிஜி கூறியதுபோலவே அவரது வாழ்க்கை அதன்பிறகு முற்றிலுமாக  மாறியமைந்தது. வீடு, செல்வதையே விட்டுவிட்ட அவர் பின்னாளில் துறவியாகவே வாழ்ந்து, தவ வாழ்க்கையில் ஈடுபட்டார்.

 

அவருக்கு கிடி என்ற பெயரை சுவாமிஜி அளித்தமு் சுவாரசியமானது. சுவாமிஜியைச் சந்திக்கும் போதே அவரது வாழ்க்கை மிகவும் கட்டுப்படான ஒன்றாக இருந்தது. பாலும் பழங்களும் மட்டுமே அவர் சாப்பிட்டு வந்தார். இதனால்  அவரைத் தமிழ் வார்த்தையில் ”கிளி என்று அழைக்க விரும்பினார் சுவாமிஜி. சுவாமிஜியின் உச்சரிப்பில் ”ளி டி யாகி அவர் கிடி ஆனார்.

பின்னாளில் சுவாமிஜியின் கருத்துக்கு இணங்க ”பிரபுத்த பாரதம் என்ற ஆங்கில மாத இதழ்  சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் பொறுப்பாளராக கிடி பணியாற்றினார்.

 

ஒரு நாள் இளைஞர்கள் சிலர் சற்று வேடிக்கையாக நேரம் போக்குவதற்காக ஆங்கிலம் பேசும் சன்னியாசியைக் காண வந்தனர். அவர்கள் வந்தபோது சுவாமிஜி ஹீக்கா பிடித்துக்கொண்டிருந்தார். பாதி விழித்தும் பாதி கனவிலும் மிதப்பது போல் இருந்தார் அவர். இளைஞர்கள் சிறிதுநேரம் காத்திருந்தனர். அவர்களுள் ஒருவர் சுவாமிஜியிடம், சுவாமிஜி, கடவுள் என்றால் என்ன? என்று கேட்டார். சுவாமிஜி அந்தக் கேள்வியைக் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.. கேள்வியையே பொருட்படுத்தாதவர்போல் அமர்ந்திருந்த அவர் திடீரென்று தவையைத்தூக்கி , நல்லது நண்பனே! ஆற்றல் என்றால் என்ன? சற்று விளக்கேன் பார்க்கலாம் என்றார். இளைஞர்கள் இதனைச் சற்றும் எதிர்பார்க்க வில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தபடியே திகைத்து நின்றனர். உடனே சுவாமிஜி, என்னப்பா இது! ஆற்றலின்றி தினசரி வாழ்க்கை இல்லை, அத்தகைய ஒன்றையே உங்களால் விளக்க முடியவில்லை. நான் கடவுளைப் பற்றி விளக்கவேண்டும் என்று கேட்கிறீர்களே? என்றார். அந்த இளைஞர்கள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் அது போன்ற எதிர்க்கேள்விகளையே பதில்களாக அளித்தார். சிறிதுநேரத்தில் அவர்கள் விடைபெற்றுச் சென்றனர். ஒருவர் மட்டும் அவர்களுடன் செல்லாமல் சுவாமிஜிக்காகக் காத்திருந்தார். அவர் பெயர் சுப்பிரமணிய ஐயர். சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்ட அவர் தினமும் அவரிடம் வர ஆரம்பித்தார்.

 

சுவாமிஜியும் சீடர்களும் தினமும் மெரினா கடற்கரையில் நடப்பது வழக்கம். ஒரு நாள் சுவாமிஜி ஐயரிடம், நல்லது, தம்பி, உனக்கு மல்யுத்தம் தெரியுமா? என்று கேட்டார்.. தெரியும் என்று ஐயர் கூறியதும், அப்படியானால் வா, மோதிப் பார்ப்போம் என்றார் சுவாமிஜி. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுவாமிஜியை ஐயர் பைல்வான் சுவாமி என்றே அழைப்பார்.

பாலாஜி ராவைக்காண திருவல்லிக்கேணி சிங்காரச்சாரி தெருவிலுள்ள அவரது வீட்டிற்கு சுவாமிஜி அவ்வப்போது செல்வது வழக்கம்.சிலநேரங்களில் பாலாஜி ஏதாவது வேலையாக இருந்தால் சுவாமிஜி காத்திருக்க நேரும்.

 

அந்தவேளைகளில் கண்களை மூடியபடியே ”ஓம் என்ற பிரணவ மந்திரத்தைச் சத்தமாக ஓதுவார் சுவாமிஜி. ஓங்கார த்வானியின் நாதமும் ஆற்றலும் வீட்டையே அசைப்பது போல்  இருக்குமாம்!போகும்போதெல்லாம் பாலாஜியின் மனைவியிடம் ரசம் கேட்டு வாங்கி உண்பார். அதுபோலவே வடாம், அப்பளம், போன்றவற்றையும் சுவைத்துச் சாப்பிட்டார்.

 

ஒரு நாள் சுவாமிஜி தனியாக இருந்து போது மன்மதர் அவரிடம் வந்து, சுவாமிஜி மிகவுயர்ந்த வேதாந்தத்  தத்துவம் இருந்தும் இந்துக்கள் உருவங்களை வழிபடுகிறார்களே! என்றுகேட்டார். அதற்கு சுவாமிஜி நமக்கு இமய மலைஇருக்கிறதே, அதனால் தான் என்றார். மகோன்னதமான அந்த மலைகளைக்காணும் போது, அதைப் படைத்தவனைப் பணியாமல் இருக்க முடியாது என்பதையே சுவாமிஜி அவ்வாறு குறிப்பிட்டார்.

பொதுவாக சுவாமிஜி யாரையும் குறைகூறுவதோ கண்டிப்பதோ இல்லை. ஆனால் ஒரு நாள் பிராமணர் ஒருவர் வந்து அவரிடம் சுவாமிஜி, சந்தியாவந்தனம் செய்ய  சிலவேளைகளில் நேரம் கிடைப்பதில்லை. அப்படி செய்யாதது குற்றமா? என்று கேட்டார். நெருப்பென பதில் கூறினார் சுவாமிஜி. பண்டைய ரிஷிகளுக்கு, நம்மைப்போல் மந்த நடைபோடாமல், காலை எட்டிப்போட்டு நடந்த மாமேதைகளுக்கு, யாருக்கு முன்னால் நீ வெறும் புழுவிற்குச் சமமோ, அந்த மாபெரும் ரிஷிகளுக்கு நேரம் கிடைத்தது. உனக்கு நேரம் கிடைக்கவில்லை, அப்படித்தானே.

இது போல் தான் மற்றொரு நாள் ஒருவர் வந்த வேத ரிஷிகளின் உபதேசங்கள் பொருளற்ற பிதற்றல்கள் போல் இருப்பதாகக் கூறினர். அப்போதும் இப்படித்தான் கொதித்தெழுந்தார்  சுவாமிஜி. வழிபாட்டிற்குரிய உனது முன்னோரைப்பற்றி இப்படிப்பேச உனக்கு என்ன துணிச்சல், அரைகுறைப் படிப்பு உன் மூளையைக் குழப்பியுள்ளது. அவர்கள் கூறிய உண்மைகளை என்றாவது நீ பரிசோதித்து ப் பார்த்ததுண்டா? பரிசோதிப்பது கிடக்கட்டும், வேதங்களை ஒரு முறை படித்தாவது பார்த்திருக்கிறாயா? படித்துப் பார். அவர்கள் அறைகூவல் விடுப்பது அப்போது தெரியும். துணிச்சல் இருந்தால் அதை எதிர்கொள்.

 

ஒரு நாள் மன்மதரின் சமையல்காரர் சுவாமிஜிக்கு மைசூர் மன்னர் அளித்திருந்த  ஹீக்காவை ஆசலுடன் பார்த்துக்கொண்டிருந்தார். அதைக் கவனித்த சுவாமிஜி, உனக்கு அது வேண்டுமா? என்று கேட்டார்.ஆம், என்று  சொல்வதற்குத் தயங்கி நின்றார். அந்தச் சமையற்காரர். அவரது மனநிலைரயப் புரிந்து கொண்ட சுவாமிஜி அந்த ஹீக்காவை எடுத்து அவருக்குக் கொடுத்து விட்டார்.நீ பார்த்துஆச்சரியப்படும் பொருள் உனக்கே உரியது என்பார். சுவாமிஜி , தம்மிடமிருக்கின்ற எந்தப் பொருளையும் யார் பார்த்து வியந்தாலும் அதை அவருக்கே கொடுத்து விடுவது சுவாமிஜியின் பண்பாக இருந்தது.

 

 சென்னையில் சுவாமிஜிக்கு வினோதமான அனுபவம் ஒன்று ஏற்பட்டது. சில ஆவிகள் அவரைத் தொந்தரவு செய்தன. அவரது மனம், கலங்கும்விதமாக இது நடக்க ப்போகிறது. அது நடக்கப்போகிறது என்றெல்லாம் அவரிடம் கூறின. அவை பொய் என்பது பின்னால் தெரிய வரும். ஆரம்பத்தில் சுவாமிஜி அதனைப்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இவ்வாறு சில நாட்கள் தொடர்ந்து நடந்தபோது சுவாமிஜியின் பொறுமை எல்லை மீறியது. அவரது கோபத்தைக் கண்ட அந்த ஆவிகள் அவரிடம் வந்து, தங்கள் பரிதாபகரமான நிலைமையை எடுத்துக்கூறி, தங்களுக்கு நற்கதி அளிக்குமாறு  வேண்டின. அவற்றின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட சுவாமிஜி ஒரு நாள் மெரினா கடற்கரைக்குச் சென்றார். கையில் ஒருபிடி மணலை எடுத்துக் கொண்டு அதையே தர்பணப்  பொருட்களாகப் பாவித்து, அந்த ஆவிகளுக்கு நற்கதிகிடைக்க வேண்டும்  என்று இதய பூர்வமாகப் பிரார்த்தித்தார். அதன் பிறகு அந்த ஆவிகள் வரவில்லை.

சிலநேரங்களில் சுவாமிஜி மெரினா கடற்கரையில் அமைதியாக உலவுவது உண்டு. ஒரு நாள் அவர் நடந்து கொண்டிருக்கும்போது மீனவக் குழந்தைகள் சிலரைக்காண நேர்ந்தது. பஞ்சடைந்த தலை, குழி விழுந்த கண்கள், ஒட்டிய வயிறு, என்று அவர்களைக் கண்டபோது சுவாமிஜியின் மென்மையான உள்ளம் பதைத்தது. ஆண்டவா! இவர்களை ஏன் படைத்தாய்?   என் உள்ளம் தாங்கவில்லை! எத்தனைக் காலம், பிரபோ இன்னும் எத்தனைக் காலம்! என்று இதயம் உருகி, கண்ணீர் மல்கப் பிரார்த்தித்தார் அவர்.

-

 மேலை நாடுகளுக்குப்போகவேண்டும்

..................

 ஏழைகளைக் காணும் போதெல்லாம்  அவரது இதயம் துடிக்கும். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டு மானால் பணம் வேண்டும். அதற்காக மேலை நாடுகளுக்குப்போக வேண்டும். அங்கே நமது ஆன்மீகச் செல்வத்தை வாரி வழங்கவேண்டும். அவர்களிடம் பொருளுதவிப்பெற்று வந்த  இந்தப் பாமரர்கள் முன்னேறுவதன் மூலம் பாரதத் திருநாடு இழந்த மகிமையை மீட்க வேண்டும். என்ற எண்ணம் அவரிடம் எழும். ஒரு நாள் சுவாமிஜி சென்னை அன்பர்களிடம் அதனைத்தெரிவித்தார் சுவாமிஜி. -

 

நமது ஆன்மீகச் செல்வத்தை வாரி வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தவ முனிவர்கள் நமக்கு அளித்த இந்து மதத்தைச் செயல்முறைப் படுத்துவதற்கான காலம் கனிந்து விட்டது. ஆன்மீகச்செல்வம் குவிந்து கிடக்கின்ற நமது புராதனக்கொட்டையை மாற்றான் வந்து தாக்கும் வரை காத்திருப்பதா? எங்கள்கோட்டையை எந்த எதிரியும் நுழைய முடியாது என்று மார்தட்டிக்கொண்டு வீணே கிடப்பதா? செயலற்று முடங்கிக் கிடப்பதா  அல்லது முற்காலத்தில் நிகழ்ந்தது போல் நமது தர்மத்தின் மகிமையை உலகெங்கும் பரப்புவதா? சமதாயக் கழுக்களையும் வட்டார வழக்கங்களையும் பற்றிக்கொண்டு குறுகிய வட்டத்திற்குள் உழல்வதா அல்லது உலகம் முழுவதையும் நமது சிந்தனைச் செல்வத்தால் நிறைத்து, அதன் மூலம் பாரதத் திருநாட்டின் நன்மையை நாடுவதா? எதைச் செய்வது? நாம் எழ வேண்டுமானால் நமது நாடு ஆற்றல்  மிக்கதாக இருக்கவேண்டும்.  ஒற்றுமையுடன் திகழ வேண்டும். அனைத்து ஆற்றல்களையும் ஒரே திசையில் செலுத்த வேண்டும்.

 

சுவாமிஜியின் கருத்தைச் சென்னை அன்பர்கள் புரிந்து கொண்டனர். ஆம், சுவாமிஜி, நாம் விழித்தேயாக வேண்டும். அதைச் சாதிப்பதற்காகவே நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். நிங்கள் பேரதிசயங்களை நிகழ்த்துவீர்கள் என்று அவரிடம் கூறினர்.  கூறியது மட்டுமின்றி அவர் மேலை நாடுகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளுக்காக நன்கொடையும் வசூலிக்கத்தொடங்கினர். ஒரு நல்ல தொகை வசூலாகியது. பணத்தைக் கண்டபோது சுவாமிஜியின் மனம் துணுக்குற்றது. நான் எனது ஆசைகளைப் பின்பற்றி  காரியங்களைச் செய்கிறேனா?  வெறும் ஆர்வத்தூண்டுதல் என்னை இழுத்துச் செல்கிறதா? அல்லது, எனது திட்டங்களுக்குப் பின்னால் உண்மையிலேயே ஓர் ஆழ்ந்த நோக்கம் இருக்கிறதா? என்று அவரது உள்ளம் குமைந்தது. அம்மா அகிலாண்டேசுவரி! உனது திருவுளம் என்ன என்பதை எனக்குக் காட்டு. அனைத்தையும் செய்விப்பவள் நீயே! நான் உனது கைகளில் வெறும் கருவியே அல்லவா? என்று உள்ளம் நெகிழ்ந்து பிரார்த்தனை செய்தார்.

 

அவரோ துறவி, உலகின் வழிகள் அவருக்குப் புதியவை. கண் காணாத., யாரையும் அறிந்திராத ஓர் உலகத்திற்கு அவர்போக வேண்டும்.புதியதொரு சமுதாயத்தைப் பார்க்கவேண்டும். புதியதொரு செய்தியை அவர்களுக்கு அளிக்கவேண்டும்.- மனம் தயங்குவது இயற்கைதானே! ஆர்வத்துடன் தமக்காகப் பணம் வசூலித்த இளைஞர்களை அழைத்து, நண்பர்களே! மேலை நாடு செல்வது விஷயமாக நான் இப்போது எதுவும்  சொல்வதற்கில்லை. தேவியின் திருவுளம் என்னவென்று தெரியவேண்டும். நான்போக வேண்டுவது தனது அருளாணை என்பதை அவள் எனக்கு உணர்த்தவேண்டும். அவளது அருட்கரங்கள் என்னை அழைத்துச்செல்லாமல் நான் எப்படி இருளில் அடியெடுத்து வைப்பேன்? நான் போக வேண்டுவது அவளது திருவுள்ளமானால் பணம் மீண்டும் வரும். எனவே இப்போதைக்கு இந்தப் பணத்தை ஏழைகளுக்காகச் செலவிட்டு விடுங்கள். என்று கூறிவிட்டார். அவரையே  அனைத்துமாகக் கொண்டிருந்த இளைஞர்களும் மறுபேச்சின்றி அவர் கூறியதை அப்படியே நிறைவேற்றினர். சவாமிஜியும் மனச்சுமை நீங்கியவராக அமைதியுற்றார்.

 

சுவாமிஜியின் முடிவிற்கு ராமநாத புரம் மன்னரின் மனமாற்றம் ஒரு காரணமாக இருக்கலாம். சுவாமிஜி ராம நாதபுரத்தில் இருந்தபோது சுவாமிஜியின் மேலைநாட்டுப் பயணத்தை  வெகுவாக ஆதரித்தார் மன்னர். 10, 000 ரூபாய் தாம் நிதியுதவி அளிப்பதாகவும் வாக்களித்திருந்தார். ஆனால் சென்னை அன்பர்கள் பணத்திற்காக அவருடன் தொடர்பு கொண்டபோது மறுத்துவிட்டார்.

அது மட்டுமல்ல, கேட்பார் பேச்சைக்கேட்டு சுவாமிஜியைச் சந்தேகிக்கவும் செய்தார்.

 

சுவாமிஜி ஒரு வங்காளி. படித்தவரும் கூட. ஒருவேளை அவருக்கு அரசியல் தொடர்பு இருக்கலாம். ஏன், எனது ஆட்சியையே கவிழ்க்க முயற்சிப்பவராகவும் இருக்கலாம். என்றெல்லாம் எண்ணினார் மன்னர்.

 இதைப்பற்றி கேள்விப்பட்ட போது சுவாமிஜின் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்!அதனால் தான் ஒருவேளை அனைத்தையும்தேவியில் கைகளில் அர்ப்பணித்து விட்டு, அவளது உத்தரவுக்காகக் காத்திருந்தார் அவர். உரையாடல்களும் நண்பர்களுமாகச் சென்னையில் அவரது நாட்கள் கழிந்தாலும், தேவியின் வழிகாட்டுதலை நாடி அகத்தில் உள்ளம் உருகி பிரார்த்தனையில் ஈடுபட்டார் சுவாமிஜி.

 

 இத்தகைய ஓரிரு நிகழ்ச்சிகள் சுவாமிஜியின் மனத்தைமிகவும் வருத்தின என்பதில் ஐயமில்லை. என் திட்டங்களெல்லாம் தவிடுபொடியாகி விட்டன. ஆழ்ந்த பெரு மூச்சுடன் நான் அவற்றையெல்லாம் விட்டுவிடுகிறேன், இறைவனின் திருவுளப்படி நடக்கட்டும். இது என் தலை விதிவே தவிர, வேறு யாரையும் நான் குற்றம் சொல்வதற்கில்லை. மைசூர் மன்னர் ”ஒருவேளை என்னை அனுப்பி வைப்பாரா என்று பார்க்கிறேன். ஒருவேளை தான், ஏனெனில் தென்னாட்டு மன்னர்கள் யாருடைய வாக்குறுதியையும் அப்படியே நம்புவதற்கில்லை.. அவர்கள் ராஜபுத்திரர்கள் அல்லவே! ராஜபுத்திரன் உயிரை விடுவானே தவிர வாக்கு தவற மாட்டான். போகட்டும், வாழ வாழத்தான் மனிதன் கற்றுக் கொள்கிறான். இந்த உலகில் அனுபவமே மிகச்சிறந்த ஆசிரியர் என்று மன வேதனையுடன் அளசிங்களுக்குப் பின்னர்  எழுதினார் சுவாமிஜி.

 

ஐதராபாத்தில்

-

 இந்த நாட்களில் ஐதராபாத் அன்பர்கள் சுவாமிஜி தங்கள் ஊருக்கு வரவேண்டும் என்று மிகுந்த ஆவல் கொண்டனர். அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டார் சுவாமிஜி. இந்த அழைப்பில் ஏதேனும் தெய்வீக சங்கல்பம் இருக்கலாம் என்று எண்ணினார் அவர்.ஐதராபாத் நிஜாமிடம் தலைமைப்பொறியாளராக இருந்த பாபு மதுசூதன்  சட்டர்ஜி, என்பவருக்குத்தந்தி  கொடுக்கப் பட்டது. பிப்ரவரி 9-ஆம் நாள் சுவாமிஜிக்குப் பொது வரவேற்பு அளிக்கவும் 10-ஆம் நாள் மதுசூதனரின் வீட்டில் விருந்திற்கும் ஏற்பாடாயிற்று. சுவாமிஜி ஐதராபாத்தை அடைந்தபோது அவரை வரவேற்க ரயில் நிலையத்தில் இந்துக்களும் முஸ்லீம்களுமாக சுமார் 500பேர்  காத்திருந்தனர். ஐதராபாத்தில் மிகவுயர்ந்த  பதவி வகிப்பவர்களும் பெரிய மனிதர்களும் வந்திருந்தனர். காவியுடையும் கையில் கமண்டலமுமாக முதல் வகுப்புப்பெட்டியிலிருந்து இறங்கிய சுவாமிஜியை அங்கிருந்தோர் மலர் மாலைகள் அணிவித்து வரவேற்றனர். சுவாமிஜியைக் கல்கத்தாவிலேயே அறிந்திருந்தவரான காளி சரண் என்பவர் அவரை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

மறுநாள் செகந்தராபாத்திலிருந்து 100பேர் கொண்ட ஒரு குழு பால், பழம், இனிப்பு என்று ஏராளமான காணிக்கைப் பொருட்களுடன் சுவாமிஜியைக் காண வந்தது. தங்கள் ஊரிலுள்ள மெஹபூப் கல்லூரியில் சொற்பொழிவு செய்யுமாறு அவர்கள் சுவாமிஜியை அழைத்தனர். சுவாமிஜி இதுவரை பொது மேடைகளைத் தவிர்த்து வந்தார். இப்போது என்னவோ ஒத்துக்கொண்டார்.

 

அன்று கோல் கொண்டா கோட்டையைச்சுற்றிப் பார்த்தார் சுவாமிஜி. திரும்பியபோது, ஐதராபாத்தில் மிகப் பிரபலமான ஒருவரும், நிஜாமின் மைத்துனருமான நவாப்பஹதூர் சர் குர்ஷித் ஜா என்பவரின் அந்தரங்கச் செயலர் அவருக்காகக் காத்திருந்தார். மறு நாள் காலை நவாபைச் சந்திக்க வருமாறு அவர் சுவாமிஜியை அழைத்தார்.

 

நவாபுடன்

 

 மறுநாள் காளி கரணுடன் அரண்மனைக்குச்சென்றார் சுவாமிஜி. குர்ஷித் ஜா மிகவும் பரந்த மனப்பான்மை உடையவர். முஸ்லிமாக இருந்தாலும் இமயம் முதல் குமரிவரையுள்ள இந்து தீர்த்தத் தலங்கள் அனைத்தையும் தரிசித்தவர் அவர். அவரைக் கண்டதில் சுவாமிஜியும் அனம் மகிழ்ந்தார். இருவரும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப்பேசிக்கொண்டிருந்தனர். இந்து மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம்  என்று பல விஷயங்களை அவர்கள் பேசினர். குர்ஷித் ஜா  உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் கடவுள் வழிபாட்டின் பரிணாமத்தை விளக்கினார் சுவாமிஜி. வேதாந்தத்தின் உன்னத தத்துவங்களை எடுத்துக்கூறினார். கண்களில் ஒளியும் கருத்தில் தெளிவுமாக சுவாமிஜி கூறிய அனைத்தையும் ஆவல் பொங்கக்கேட்டுக் கொண்டிருந்தார்  நவாப். இறுதியாக, தாம் மேலை நாடு செல்ல இருப்பதை சுவாமிஜி கூறியபோது அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட நவாப், தாம் 1000 ரூபாய் அளிப்பதாகவும் கூறினார். சென்னையில் போலவே இங்கும் பணத்தை மறுத்தார் சுவாமிஜி. மகாராஜா, காலம் இன்னும் கனியவில்லை. ஆண்டவன் எனக்கு ஆணையிடும் போது கட்டாயம் உங்களுக்குத் தெரிவிப்பேன் என்று கூறி நவாபிடமிருந்து விடைபெற்றார்.

 

மெக்கா மசூதி, சார்மினார், பலக்நாமா, நிஜாமின் அரண்மனைகள் , பஷீர்பாக் என்று ஐதராபாத்தில் முக்கிய மான இடங்களையெல்லாம் பார்த்தார்.

13-ஆம் நாள் காலையில் ஐதராபாத் பிரதம மந்திரி உட்பட பல பிரமுகர்களைச் சந்தித்தார் சுவாமிஜி. அவர்களும் அவரது மேலைநாட்டுப் பயணத்திற்கு உதவ முன்வந்தனர். ஏற்கனவே திட்டமிட்டது போல் அன்று மாலையில் மெஹபூப் கல்லூரியில் நான் ஏன் மேலைநாடு செல்கிறேன்? என்ற தலைப்பில் பேசினார். ஐரோப்பியர் உட்பட சுமார் 1000 பேர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுவாமிஜியின் ஆங்கில மொழித் திறமை அங்கிருந்தோரைப் பிரமிக்கவைத்தது. இந்து மதத்தின்  பெருமை, பண்டைய இந்து சமுதாயமும் கலாச்சாரமும், வேத வேதாந்தக் கருத்துக்கள், புராணங்கள் போதிக்கின்ற நீதிகள் என்று அவரிடமிருந்து எழுந்த சிந்தனை அலைகள் அங்கிருந்தோரைப் புதியதோர் உலகிற்கு அழைத்துச்சென்றன. பாரதத் திருநாட்டின் பெருமையை இவ்வாறு எடுத்துக்கூறி சுவாமிஜி, இறதியாக தாம் மேலைநாடு செல்வதற்கான காரணத்தைக்கூறினார். நமது தாய் நாட்டிற்கு ஒரு புத்துயிரும்  உத்வேகமும் ஊட்டவேண்டும். அதற்காகவே இந்த மேலைநாட்டுப் பயணம் என்று  தெரிவித்து சொற்பொழிவை நிறைவு செய்தார்.

மறுநாள் காலையில் பேகம் பஜாரிலுள்ள வங்கி உரிமையாளர்கள் சிலர்  சேட் மோதிலால் என்பவரின் தலைமையில் சுவாமிஜியிடம் வந்து பேசினர். அவர்களும் அவரது பயணத்திற்கு உதவுவதாகக்கூறினர். இந்தவேளையில் பூனாவிலிருந்தும் சுவாமிஜிக்கு அழைப்புவந்தது. ஆனால் சுவாமிஜியால் அதனை ஏற்க முடியவில்லை. இடிந்து கிடந்த பல இந்துக் கோயில்கள், பாபா சராபுத்தீன் நினைவுச் சின்னம், சர் ஸலர்ஜங் அரண்மனை போன்ற இடங்களை மறுநாள் கண்டார்.

 

அற்புதங்கள் நிகழ்த்தும்யோகியுடன்.

-

அசாதாரண ஆற்றல்களில் வல்லவரான யோகி ஒரு வரை சுவாமிஜி ஐதராபாத்தில் சந்தித்தார். எந்தப் பொருளை வேண்டுமானாலும் வரவழைக்கும் வல்லமை பெற்றவர் அவர். அன்பர்கள்  சிலருடன் சுவாமிஜி அவரைக் காணச் சென்றார். அப்போது அந்த யோகிக்குக் காய்ச்சல் கண்டிருந்தது. சுவாமிஜி அவரிடம்  சென்று அவரது ஆற்றல்களைக் காட்டுமாறு கூறியதும் அந்தயோகி, கட்டாயமாகக் காட்டுகிறேன் ஆனால் அதற்கு முன்பு நீங்கள் என் தலையில் கைவைத்து ஆசீர்வதியுங்கள். எனது காய்ச்சல் குணமாகட்டும் என்றார். சுவாமிஜியும் அதுபோல் கை வைத்தார். பிறகு அந்தயோகி அவர்களிடம், நீங்கள்  உங்களுக்குத்தேவையானவற்றை ஒரு காகிதத்தில் எழுதி என்னிடம் கொடுங்கள் என்றார். அந்தப் பகுதியில் ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களின் பெயர்களையெல்லாம் எழுதி அவரிடம் கொடுத்தார்கள். ஒரு  கௌபீனம் மட்டுமே உடுத்திருந்த அவருக்கு சுவாமிஜி ஒரு சால்வையைக் கொடுத்தார். அதை அவர் போர்த்திக்கொண்டார். அதனுள்ளிருந்து குலைகுலையாகத் திராட்சை, ஆரஞ்சு ப்பழங்கள், என்று அவர்கள்கேட்ட அனைத்தையும் கொடுத்தார். ஆவி பறக்கும் சூடான அரிசி சாதம் கூட வரவழைத்தாராம். அவற்றை உண்ணுமாறு சுவாமிஜியிடம் கூறினார். அது ஏதோ மனவசிய வேலையாக இருக்கும் என்று கருதிய அன்பர்கள் சுவாமிஜியைத் தடுத்தனர். ஆனால் அந்தயோகியே அதை உண்ண ஆரம்பித்ததும் எல்லோரும் சாப்பிட்டார்கள். எல்லாம் நன்றாகவே இருந்தன. கடைசியாக, அற்புதமான ரோஜா மலர்களை வரவழைத்தார். இதழ்கள் சற்றும் வாடாமல் வதங்காமல் பனித்துளிகளுடன் புத்தகம் புதியவையாக அவை இருந்தன. ஒன்றிரண்டல்ல, ஏராளம் மலர்கள்!அது எப்படி?  என்று சுவாமிஜி கேட்டபோது எல்லாம் கைவித்தை என்றார் அந்தயோகி.

அங்கிருந்து திரும்பிய பிறகும் சுவாமிஜி நீண்டநேரம் அந்தயோகியைப் பற்றியே  நினைத்துக்கொண்டிருந்தார். அந்த மனிதரால் இது எப்படி சாத்தியமாயிற்று என்பதை ஆழ்ந்து சிந்தித்த சுவாமிஜிக்குக் கிடைத்த விடை ”மனம் என்பதே. மனத்தை வசப்படுத்துவதால் ஆற்றல் பிறக்கிறது. பிற மனங்களையும் தான் விரும்புவதுபோல் செய்விக்கின்ற வல்லமை கிடைக்கிறது. ஏனெனில் அடிப்படையில் எல்லா மனங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. தனி மனம் என்று ஒன்றுகிடையாது.ஆற்றல் பெற்ற மனமுடைய ஒருவர் மற்றவரிடம் ஒரு வெற்றிடத்தைக் காட்டி  அங்கே யானை உள்ளது என்று கூறினால் மற்றவர் அதைக் காண்பார். அது மனத்தின் ஆற்றல் விளைவிக்கின்ற அற்புதம்.

மனத்தின் ஆற்றலுக்கு ஒரு நிரூபணத்தைக்கண்ட சுவாமிஜிக்கு ஐதராபாத்தில் நிகழ்த்திய பொதுச்சொற்பொழிவையும்  ஒரு தெம்பையும் அளித்திருந்தது என்று தான் சொல்லவேண்டும். பிப்ரவரி 17-ஆம் நாள் சென்னை திரும்பிய அவர்மேலை நாடு செல்வது பற்றி மேலும் உறுதியுடன் காணப்பட்டார். அவரது உரையாடல்களும் சொற்பொழிவுகளும் பொதுவாக அதைப்பற்றியே இருந்தன.

-

தாயின் நினைவால் ஒரு கலக்கம்

-

 பெற்ற  தாயையும் பிறந்த வீட்டையும் உற்றசகோதர  சகோதரிகளையும்  சுவாமிஜி பிரிந்து  வந்து நிண்ட காலம் ஆயிற்று. ஆனால் அவர்களைப் பற்றிய நினைவு, அவர்களது நன்மைக்கான பிரார்த்தனைகள் அனைத்தும் அவரது வாழ்நாள்  முழுவதும் கூடவே இருந்தது. தாயின் நினைவு அவரிடமிருந்து நீங்கவே இல்லை. தாம் வாழ்நாளில் பெற்ற அனைத்து பெருமைகளும் தமது தாய்க்கே உரியவை என்று அவர் பலமுறை குறிப்பிட்டதும் உண்டு. எத்தனையோ காலம் பிரிந்திருந்தும், இறுதிவேளையில் ஓடோடி வந்து தாயின் ஈமக்கடன்களைத் தனியொருவராகவே செய்த ஆதி சங்கரரும், உன்னத நிலைத்துறவியாக இருந்தும் தாய் கேட்டுக் கொண்டாள் என்றஒரே காரணத்திற்காக அவளது காலம் வரை ஊர் எல்லையைத் தாண்டாமல் வாழ்ந்த பட்டினத்தாரும் வந்த துறவியர் பரம்பரையில் தோன்றியவர் அல்லவா சுவாமிஜி!

 

வெறும் நினைவுகள் மட்டும் அல்ல, தமக்கு வாய்ப்புக் கிடைத்தபோது சுவாமிஜி தமது தாய்க்காகவும், சகோதரசகோதரியருக்காகவும் இயன்ற அளவு உதவிகள் செய்யவே செய்தார். கதியற்ற நிலையில் குடும்பத்தைத் தாம் விட்டு செல்வது பற்றி அறியாதவர் அல்ல அவர். கேத்ரி மன்னரிடம் சுவாமிஜியின் குடும்ப நிலைமை பற்றி அறிந்தபோது அவரது தாய்க்கு மாதாமாதம் ரூ.100 அனுப்பத் தொடங்கினார் சுவாமிஜி.

திடீரென்று ஒரு நாள் அவர் கண்ட கனவு அவரை நிலை குலையச் செய்தது. தம் தாய் இறந்துவிட்டதாகக் கண்டார்

சுவாமிஜி. அவரது மனம் விவரிக்க இயலாத வேதனையில் ஆழ்ந்தது. அது ஒரு பக்கம்! அவரை மேலை நாடு செல்லுமாறு அன்பர்கள்  வற்புறுத்துவது மறு பக்கம். இரண்டிற்கும் இடையில் ஊசலாடியது சுவாமிஜியின் உள்ளம். தமது உள்ளத்தை மன்மதரிடம் வெளியிட்டார் சுவாமிஜி. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள வலங்கைமான் என்றஊரில் வாழ்ந்த குறிசொல்பவர் ஒருவரைக் காணலாம் என்ற ஆலோசனை கூறினார் மன்மதர். அவரது பெயர் கோவிந்த செட்டி, நடந்தவற்றைப் பற்றி கூறுவதிலும் எதிர்காலத்தைப் பற்றி தெரிவிப்பதிலும் அவர் வல்லவர். மைசூர் மன்னர் சென்னை மாகாண கவர்னர் போன்ற பிரபலமானவர்களும்  அவரிடம் வந்து  செல்வதுண்டு. அவர் சொல்லும்போது ஊர் மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். அவரைச் சந்திக்கலாம் என்று சுவாமிஜியும் ஒத்துக்கொண்டார். சுவாமிஜி, மன்மதர், அளசிங்கர், மற்றொருவர் என்று நால்வர் அந்தக் குறிசொல்பவரிடம்  சென்றனர்.

 

அனைவருமாக ரயிலில் கும்பகோணம் சென்று பிறகு சிறிதுதூரம் நடந்து அந்த இடத்தை அடைந்தனர். ஒரு சுடுகாட்டிற்கு அருகில் அந்த குறிசொல்பவர் அமர்ந்திருந்தார். சோர்வடைந்த கண்களும் பயமுறுத்தும்தோற்றமுமாக கன்னங்கரேலென்று அவரைப் பார்க்க சற்று பயமாகத்தான் இருந்தது. முதலில் அவர் இவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை. கொஞ்சநேரம் காத்திருந்து விட்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமாகியபோது அவர் அவர்களை அமருமாறு கூறினார். அவரது கிராமத் தமிழை அளசிங்கர் சுவாமிஜிக்கு மொழிபெயர்த்தார். பிறகு அவர் பென்சிலால் சில படங்களை வரைந்தார் . சிறிது நேரத்தில் அவரது மனம் ஆடாமல் அசையாமல் ஒரு முகப்பட்டு நின்றதை சுவாமிஜி கவனித்தார். அப்படியே சிறிது நேரம் கழிந்த பிறகு அவர் சுவாமிஜியின் பெயர், பரம்பரையிலுள்ள முன்னோர்களின் பெயர்கள் போன்ற விவரங்களை தங்குதடையின்றி கூறினார். அத்தனையும் சரியாக இருந்தது. இறுதியாக ஸ்ரீராமகிருஷ்ணர் சுவாமிஜியைக் காத்து  வருவதைத் தெரிவித்தார். நீங்கள் நாடெங்கும் சுற்றித் திரிந்தபோது, ஒவ்வொரு கட்டத்திலும்அவர் உங்களுடனேயே இருந்தார். உங்கள் தாயைப் பற்றிய செய்தி தவறானது. நீங்கள் கலங்க வேண்டாம். அது மட்டுமல்ல, ஆன்மீகத்தைப்போதிப்பதற்காக நீங்கள் விரைவில் தொலைதூர நாடுகளுக்குச்செல்ல வேண்டியிருக்கும்  என்று கூறினார் அவர்.

 

சுவாமிஜியின் மனச்சுமை அகன்றது. அனைவரும் அங்கிருந்து சென்னைக்குத் திரும்பினர். அந்தக் குறி சொல்பவர் கூறியதை மெய்பிப்பதுபோல், அந்த வேளையில் கல்கத்தாவிலிருந்து தந்தியும் வந்தது.. சுவாமிஜியின் தாயார் நலமாகவே இருந்தார்.

-

அருளை நாடி

-

 அடையாறில் உள்ள தியாசபிகல் சொசைட்டியில் சுவாமிஜி சொற்பொழிவு ஆற்றியது பற்றி கண்டோம். அமெரிக்காவில் பல கிளைகள்  உடையது தியாசபிகல் சொசைட்டி......... ஒரு வேளை தாம் அமெரிக்கா செல்வதால் அவர்களது அவர்களது அறிமுகக் கடிதம்  உதவக்கூடும் என்றெண்ணிய சுவாமிஜி, சொசைட்டியின் தலைவரான கர்னல் ஆல்காட்டைச் சந்தித்தார். அறிமுகக் கடிதம் தரலாம், ஆனால் நீங்கள் எங்கள் சொசைட்டியில் சேரவேண்டும் என்றார் ஆல்காட். அதற்கு சுவாமிஜி, அதெப்படி முடியும்? உங்கள் கொள்கைகள் பவற்றை நான் நம்பவில்லை, எனவே  உங்கள் சொசைட்டியில் நான் எப்படி சேர்வது? என்று கேட்டார். அப்படியானால் நான் உங்களுக்கு உதவ இயலாது என்று கூறிவிட்டார் ஆல்காட். மனிதர்களை நாடினால் துன்பம் தான், எனவே இறைவனையே நாடவேணடம். யார் மறுத்தாலும் மறுக்காத, அருளை வாரி வழங்க எப்போதும் காத்திருக்கின்ற ஒரு கருணைக் கார்முகில் தம்மை எப்போதும் காத்துவருவது சுவாமிஜிக்குத்தெரியும்.யார் தான் எனக்கு மனமிரங்குவார்கள்? யாரும் இல்லை- ஒரே ஒருவரைத் தவிர என்று பின்னாளில் சுவாமிஜி கூறினாரே, அந்த ஒரே ஒருவரை நாட எண்ணினார் சுவாமிஜி. அவரே அன்னை ஸ்ரீசாரதாதேவி. தமது நோக்கத்தைத் தெளிவுபடுத்தி அன்னையின் அனுமதியையும் ஆசிகளையும் பெற நினைத்தார் அவர்.

-

குருதேவர் அழைக்கிறார்

-

அன்பர்களும் நண்பர்களும் சுவாமிஜியின் மேலைநாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை விரைவுப்படுத்திக் கொண்டிருந்தனர். சுவாமிஜியோ தமக்குள்  ஆழ மூழ்கிக் கொண்டிருந்தார். குருதெவரின் அருளாணையை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அதுவும் வந்தது. ஒரு நாள் இரவு சுவாமிஜி அரைத் தூக்கத்தில்் படுத்திருந்தார். அவரது கண்முன்னால்  அலைபொங்கும் கடல் தெரிந்தது. கரையில் குருதேவர் நின்றிருந்தார். திடீரென்று நீர் மீது நடந்து  உள்ளே செல்ல ஆரம்பித்தார். சற்று தூரம் திரும்பிப் பார்த்து சுவாமிஜியை அழைத்து, தம்மை தொடருமாறு கூறினார். இந்தக் காட்சி ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, பல நாள் தொடர்ந்தது.

சுவாமிஜியின் அறைக்கு அடுத்த அறையில் நரசிம்மாச்சாரியார் படுத்திருப்பார், தொடர்ந்து இரவுகளில் சுவாமிஜி யாருடனோ பேசுவதை அவர் கேட்டார். அந்தஉரையாடல் நீண்டநேரம்   தொடரவும் செய்யும். நரசிம்மருக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு நாள் அவர்நேரடியாக சுவாமிஜியிடமே கேட்டார். சுவாமிஜி நீங்கள் இரவில் யாருடன்பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? சுவாமிஜி ஏதோதோ சொல்லி மழுப்ப முயற்சித்தார். ஆனால் நரசிம்மர் விடவில்லை. கடைசியாக சுவாமிஜி கூறினார்.

 

சிகாகோ சர்வமத மகாசபை பற்றிய எண்ணத்தை நான் ஏறக்குறைய விட்டிருந்தேன். ஆனால் கடந்த பல இரவுகளாக ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றுகிறார். தொடர்ந்து என்னிடம், நீ எனக்காக வேலை செய்யவேண்டும். நீ போயே தீரவேண்டும் ஒன்று மட்டும் நிச்சயமாக அறிந்து கொள்-அந்தச் சபை உனக்காகவே கூட்டப்படுகிறது. தயங்காதே, உன்பேச்சைக்கேட்டு மக்கள் பிரமித்து நிற்பார்கள் என்று கூறுகிறார். நான் தயங்கத்தயங்க அவர் என்னை மேன்மேலும் வற்புறுத்துகிறார். கடைசியாக அவரது கட்டளையை ஏற்றுக் கொண்டேன். இதோ தயாராகி க் கொண்டிருக்கிறேன்.

 

அன்னையின் காட்சி

-

அதன் பிறகு எல்லா தயக்கங்களும் சுவாமிஜியை விட்டு அகன்றது போல் இருந்தது. இரப்பினும் அன்னையின் அனுமதியையும் ஆசிகைளையும் பெற நினைத்த சுவாமிஜி தமது நோக்கத்தைத் தெளிவு படுத்தி சாரதானந்தருக்கு  ஒரு கடிதம் எழுதினார். நான் மேலை நாடுகளுக்குப்போகவேண்டும் என்று குருதேவர் என்னிடம் கூறுவதாக எனக்குக் காட்சி கிடைத்தது. என் மனமோ சஞ்சலமாக உள்ளது, அன்னையிடம் என் நிலைமையைத் தெளிவுப்படுத்தி அவரது கருத்தை எனக்கு எழுது.

 

சாரதானந்தர் சென்று அன்னையிடம் விஷயத்தைத் தெரிவித்து, அம்மா உங்கள்  அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ள நரேன் விரும்புகிறான் என்று கூறினார். அதற்கு அன்னை ”ஓரிரு நாட்களில் சொல்கிறேன், காத்திரு என்று கூறினார். சுவாமிஜியின் நோக்கத்தை அறிந்தபோது அன்னையின்                                       மனநிலை விவரிக்க இயலாத தாக இருந்தது. ஏனெனில் சுவாமிஜி உலகிற்கெல்லாம் குருவாக விளங்கப்போவது பற்றி அன்னை தெளிவாக உணர்ந்திருந்தார். அதுபற்றி ஓர் அற்புதமான காட்சியும் பெற்றிருந்தார்.

 

அப்போது அன்னை கங்கை க் கரையிலுள்ள முகர்ஜியின் வீட்டில் தங்கியிருந்தார். அன்று  பௌர்ணமி இரவு. முழுநிலாவின் குளிர் க் கிரணங்கள் சுற்றுப்புறமெங்கும் படிந்து உலகை ஒரு கனவுலகம்போல் ஆக்கியதுடன், கங்கையின் சிற்றலைகளிலும் பட்டுப் பிரதிபலித்ததால், கங்கை அந்தக் கனவுலகில் ஒரு வெள்ளையாறு போல் பாய்ந்து கொண்டிருந்தது. அந்தச் சூழலில் தம்மை முற்றிலுமாக படியில் அமர்ந்து அந்த அழகைப்பருகினார். அப்போது திடீரென்று குருதேவர் அங்கே தோன்றி, பின்னாலிருந்து வந்த, அன்னையை இடித்துத் தள்ளிவிடுவது போல் சென்று சரேலென கங்கையில் இறங்கினார். இறங்கியவர் அப்படியே அதில் கரைந்தார். அன்னை பிரமிப்புடன் அந்த இடத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார். மறுகணம் திடீரென்று சுவாமிஜி அங்கே தோன்றினார். அவர் அந்தத் தண்ணீரைக் கைகளில் அள்ளி, ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா! என்று கூறியபடி மக்கள் மீது தெளித்தார். இந்தக் காட்சி அன்னையின் மனத்தில் ஆழ்ந்த பதிவை ஏற்படுத்தியது.

 

குருதேவர் கங்கை நீரோடு கரைந்து அதை சுவாமிஜி மக்கள் மீது தெளிக்கும் இந்தக் காட்சி குருதேவரின் உபதேசங்களையும் லட்சியங்களையும் சுவாமிஜி பரப்ப ப்போகிற காரியத்தின் துவக்கமாக அமையப்போவதை அன்னை உணர்ந்தார். இதைத்தவிர அன்னைக்கு கனவு ஒன்று தோன்றியது. அதில் குருதேவர் தோன்றினார். தம்மைத்தொடர்ந்து வருமாறு சுவாமிஜியை அழைத்தபடி கடல் அலைகளின் மீது அவர் நடந்து சென்றார். அன்னைக்கு எல்லாம் தெளிவாயிற்று. எனவே தமது அருளாசிகளைத் தெரிவித்து சுவாமிஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

 

அன்னையின் கடிதம் கைகளில் கிடைத்தபோது சுவாமிஜியால்  தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் போயிற்று. கண்களில் கண்ணீர் பெருகியது. தமது உணர்ச்சிகளைப்பிறர் அறியாமல் இருப்பதற்காகச் சட்டென்று தமது அறைக்குள் சென்றுவிட்டார் அவர். சிறிது நேரத்திற்குப் பிறகு கடற்கரையில் சென்று உலாவினார். ஆம், இப்போது எல்லாம் தெளிவாகி விட்டது. பாதை தெளிவாகத்தெரிகிறது. தேவியின் திருவுளம் புரிந்து விட்டது என்று தமக்குள் கூறிக்கொண்டார்.

கடற்கரையிலிருந்து மன்மதரின்  வீட்டிற்குத் திரும்பிய போது சுவாமிஜியின் முகம் பிரகாசமாக இருந்தது. அங்கே அவரது சொற்பொழிவைக்கேட்பதற்காக  அன்பர்கள் பலர் கூடியிருந்தனர். உள்ளே சென்றதும் அவர்களிடம் தெளிவான குரலில் சுவாமிஜி கூறினார், ஆம், மேலை நாட்டிற்குப் போயாகவேண்டும். இப்போது நான் தயாராகி விட்டேன். இதயபூர்வமாக வேலை செய்வோம். பலனை அவள் தருவாள். தேவி என்னிடம் பேசினாள். சுவாமிஜியின் பிரகாசமான முகமும் தெளிவான வார்த்தைகளும் அனைவரையும் களிப்படையச்செய்தன.

 

ஏழைகளின் பணமே வேண்டும்.

-

அடுத்த பிரச்சனை பணம்! நான் அமெரிக்கா செல்வது தேவியின திருவுளமானால் பணத்தையும் அவளே தருவாள் என்று கூறினார் சுவாமிஜி. சாதாரண மனிதர்களிடமிருந்து ம் ஏழைகளிடமிருந்தும்  பணம் வசூலிக்கவேண்டும் என்பது சுவாமிஜியின் ஆவலாக இருந்தது. பெரிய மனிதர்கள். பணக்காரர்கள், ஆகியோரிடமிருந்து பணம் பெறவேண்டாம் என்று சுவாமிஜி கூறிவிட்டார். ராமநாதபுர மன்னர் மற்றும் ஓரிரு பணக்காரர்களிடம் பெற்ற அனுபவமே இதற்கு க் காரணமாக இருந்தது. சுவாமிஜி அமெரிக்கா செல்வதானால் முழுப்பொறுப்பையும் தாமே ஏற்றுக் கொள்வதாக ஒரு  பணக்காரரும் வாக்களித்திருந்தார். பின்னர் தொடர்பு கொண்டபோது மிகவும் குறைவான தொகை மட்டுமே அளித்தார். இதை அளசிங்கர் சுவாமிஜியிடம் தெரிவித்தபோது சுவாமிஜி சற்று மனம் வருந்தவே செய்தார். இதனால் தான் இனி பணக்காரர்களிடம் போக வேண்டாம் என்று கூறிவிட்டார்.

மார்ச்- ஏப்ரலில் சென்னை அன்பர்கள் சுவாமிஜியின் மேலை நாட்டுப் பயணத்திற்காகப் பணம் வசூலிக்க ஆரம்பித்தனர்.  அளசிங்க பெருமாளின் தலைமையில் சிலர் ஒன்று சேர்ந்து , ஒரு குழுவாக அமைத்து செயல்பட்டனர். சுவாமிஜியின் சீடர்கள், அன்பர்கள், நண்பர்கள் என்று பலரையும் சந்தித்துப் பணம் கேட்க முடிவு செய்தனர். சுவாமிஜியின் மேலைப் பயணத்திற்கு இளைஞர்களே அதிகம் பணம் திரட்டினர். அதுவம் நடுத்தர மக்களிடையே தான் அதிகமாக அவர்கள்  சென்றனர். தேவியின் திருவுளம் அதுவானால் நான் மேலைநாட்டிற்குச்செல்வேன். அதற்கான பணம் சாதாரண மக்களிடமிருந்து வரவேண்டும் ஏனெனில் நான் மேலை நாடுகளுக்குப்போவது சாதாரண மக்களுக்காக, ஏழைகளுக்காக என்றல்லவா அவர் இளைஞர்களிடம்  கூறியிருந்தார்.

 

அளசிங்கரும் மற்றவர்களும், இரவுபகலாகப் பாடு பட்டனர். வீடு வீடாகச்சென்றனர். சிலர் பணம் கொடுக்க மறுத்தனர். ஆனால் பல அவமதிப்புகளுக்கும் ஏச்சுகளுக்கும்  பிறகு கொடுத்தனர். அளசிங்கரும் நண்பர்களும் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாபெரும் பணி ஒன்றில் தாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை மட்டும் மனத்தில் கொண்டு அவர்கள் பணி செய்தனர். சென்னையில் பணம் வசூலிக்கின்ற பொறுப்பை நண்பர்களிடம் விட்டுவிட்டு அளசிங்கர் பெங்களூர், ராமநாத புரம், ஐதராபாத் போன்ற  இடங்களுக்குச்சென்று பணம் வசூலித்து வந்தார்.

 

சுவாமிஜியும் சிலரைச் சந்தித்து இது விஷயமாக முயற்சி செய்தார். நீதிபதி சர். சுப்பிரமணிய ஐயரை அவர் சென்று சந்தித்தது பற்றி ராமானுஜாச்சாரி  எழுதிகிறார். ஒரு நாள் காலையில் சுவாமிஜி கையில் கைத்தடியுடன் கம்பீரமாக மயிலாப்பூர் லஸ் சர்ச்ரோடு வழியாக நிமிர்ந்த பார்வையுடன் சென்று கொண்டிருந்தார்.

அவருக்குப் பின்னால் சுமார் பதினைந்து இருபது இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். ஓர் ஊர்வலம்போல் அவர்கள் சென்றது நீதிபதியைச் சந்தித்து உதவி கோருவதற்காக சுவாமிஜியின் தோற்றமும் ஆளுமையும் ரோட்டில் நின்றிருந்த அனைவரையும் கவர்ந்தன. பலரும் அவருக்குப் பின்னால் நடக்கத்தொடங்கினர். நானும் தான். நீதிபதியின் வீட்டை அடையும்போது ஒரு பெரும் கூட்டமே சுவாமிஜியின் பின்னால் திரண்டிருந்தது. நான் சுவாமிஜியை முதலும் கடைசியுமாகக் கண்டது அந்த ஒரு முறை மட்டுமே.

 

ஏழைகளையும் பாமரர்களையும் புறக்கணத்ததால் தான் நமது நாடு வீழ்ச்சி கண்டது என்ற உண்மையை முதன் முதலில் எடுத்துக் கூறியவர் சுவாமிஜி. நாட்டு முன்னேற்றத்திற்காகச் செய்யப்படுகின்ற எந்தப் பணியும் அவர்களை முன்னேற்றுவதில் தான் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை அவர் உறுதியாக நம்பினார். அதைக் கருத்தில் கொண்டே பணிகளையும் திட்டமிட்டார். ஏழைகளின் முன்னேற்றத்திற்குப் பணம் திரட்டுவதற்காக வெளிநாடு செல்கிறேன். அதற்குரிய பணத்தை அவர்களிடமிருந்தே பெறுவேன்.என்று அவர்களிடம் பணம் வசூலிக்க விரும்பியவர் அவர். பணம் வசூலித்து முதலில் பெற்ற ரூ.200 –ஐ சுவாமிஜியிடம் கொண்டு வந்து கொடுத்தனர். அதைப் பெற்றுக்கொண்ட அவர் உடனடியாக கடைத்தெருவிற்குச் சென்றார். குழந்தைகளுக்கு மிட்டாய்களும் விளையாட்டுப்பொருட்களும் வாங்கினார். அவற்றைக் கொண்டுபோய் அவர் வாழ்ந்த இடத்திற்கு அருகில் வாழ்ந்த குழந்தைகளுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ந்தார்.

குழந்தைகள் எப்போதுமே சுவாமிஜிக்கு மிகவும் பிரியமானவர்களாக இருந்தனர். அவர்களுக்காக அவர் கதை சொல்வார். வேடிக்கை வினோதங்கள் காட்டுவார். பாலாஜி ராவின் வீட்டில் சிறுவயது மகனுக்காகச் சில மாயாஜாலங்களையும் காட்டினாராம்! கத்தியால் தமது கையை ஓங்கி வெட்டுவார் சுவாமிஜி. ஆனால் அதிலிருந்து ரத்தம்  கசியக்கூட செய்யாதாம்! இதைப் பார்த்து குழந்தைகள் சிரித்து மகிழ்வது கண்டு அவரும் களிப்படைவார்.

கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்ந்தது. முதலில் மறுத்த ராமநாதபுரம் மன்னர், மற்ற மன்னர்களும் வேறு பலரும் நிதியுதவி செய்வதைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு தாமும் ரூ.500 கொடுத்தார். இவ்வாறு சென்னை அன்பர்கள் ரூ.4, 000 திரட்டினர்.

பெனின்சுலார் என்ற கப்பலில் மே-31, ஆம் நாள் சவாமிஜிக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட் ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. 179 பவுண்ட் (ரூ.2685) சுவாமிஜியின் கையில் பணமாகக் கொடுக்கப் பட்டது.

சுவாமிஜியும் மனத்தளவில் தாம் அமெரிக்கா செல்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபடத்தொடங்கினார்.

 

தனியாகவாசென்றார்?

-

சுவாமிஜியின் சென்னைச் சீடர்கள் ஆர்வத்துடன் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அதில் எதிர்பாராத ஒரு திருப்பம் வந்தது. சுவாமிஜி கேத்ரியில் இருந்தபோது மன்னர் அவரிடம் பிள்ளைவரம் கேட்டிருந்தார். 1893 ஜனவரி 26-ஆம் நாள்  அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. தமது மகிழ்ச்சியைக்கொண்டாட விரும்பினார் மன்னர்.

 

சுவாமிஜியின் அருளால் தான் தமக்கு வாரிசுஉண்டாயிற்று என்று நம்பிய மன்னர் அந்தக் கொண்டாட்டத்தின்போது சுவாமிஜி அங்கே இருக்கவேண்டும் என்று பெரிதும் விரும்பினார். சுவாமிஜி சென்னையில் இருப்பது பற்றி கேள்விப்பட்டு தமது தனிச்செயலரான முன்ஷி ஜக்மோகன்லாலைச் சென்னைக்கு அனுப்பினார்.

1893 ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் மன்மதரின் வீட்டில் திடீரென்று முன்ஷி வந்து சேர்ந்தார். அப்போது சுவாமிஜி வீட்டில் இல்லை. எனவே வீட்டு வேலைக் காரனிடம் ” சுவாமிஜி எங்கே? என்று கேட்டார். கடலிற்குப்போயிருக்கிறார் அவர் என்றான் அவன். கடலிற்கு என்பதைக் கடல் கடந்த நாடாகிய மேலைநாட்டிற்கு என்று எண்ணிய ஜக்மோகன், என்ன! அதற்குள் சுவாமிஜி மேலைநாட்டிற்குச் சென்றுவிட்டாரா? என்று கலங்கினார். அவரது கண்கள் அங்கே தொங்கிக்கொண்டிருந்த காவி உடைகளைக் காண நேர்ந்தது. அவற்றைக்  கண்ட பிறகு தான் சுவாமிஜி போயிருக்க மாட்டார் என்று ஆசுவாசப்பெருமூச்சு விட்டார்.

அந்தநேரத்தில் அங்கே சுவாமிஜி வந்து சேர்ந்தார். சற்று உலவி வருவதற்காக மன்மதருடன் கடற்கரைக்குச் சென்றிருந்தார் அவர். தாம் வந்ததன் நோக்கத்தைத் தெரிவித்தார் ஜக்மோகன். அது மட்டுமல்ல, தங்கள் மேலைநாட்டுப்பயணச் செலவிற்குப் பணம் போதாமல் இருக்குமானால் அதனை மன்னர் தர விரும்புகிறார், என்று மன்னரின் விருப்பத்தையும் கூறினார். அதற்கு சுவாமிஜி, அன்பார்ந்த ஜக்மோகன், நான் அமெரிக்காவிற்குப் புறப்பட இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ளன. இப்போது நான் எப்படி வரமுடியும்? என்று கேட்டார். ஜக்மோகன் விடவில்லை. நீங்கள் அங்கே வருவது காரணமாகப் பயண ஏற்பாடுகளில் எந்தத் தடங்கலும்  நேராமல் பார்த்துக்கொள்வதாக மன்னர்  கூறியுள்ளார். என்று கூறி கடைசியில் சுவாமிஜியின் சம்மதத்தைப்பெற்றுவிட்டார். ஜக்மோகனுடன் கேத்ரிக்குப் புறப்பட்டார் சுவாமிஜி.

-

சர்வமத மகாசபை எனக்காக!

-

வழியில் முதலில் பம்பாய் சென்றார் சுவாமிஜி. அங்கே எதிர்பாராத விதமாக பிரம்மானந்தரையும் துரியானந்தரையும் அவர் சந்திக்க நேர்ந்தது. அனைவரும் குருதெவரின் சீடரான காளி பாத கோஷின் வீட்டில் தங்கினர். அங்கே மாலை வேளைகளில் மக்கள் பலர்  சுவாமிஜியின் அருகில் கூடுவார்கள். சுவாமிஜியும் ஏதாவதொரு கருத்துபற்றி பேசுவார். ஒரு நாள் அவருக்கு உடல் நிலை சரியில்லை. எனவே அன்று பேசுமாறு அவர் துரியானந்தரிடம் கூறினார். துரியானந்தருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் சுவாமிஜி கூறியதற்காகக் கொஞ்ச நேரம் பேசினார்.

 

சொற்பொழிவு நிறைவுற்ற பிறகு சுவாமிஜி துரியானந்தரிடம் வந்து, ஹரி அவர்கள் இல்லறத்தார்கள். அவர்களிடம் போய் நீ துறவையும் வைராக்கியத்தையும் பற்றி ஏன் பேசினாய்? நீ துறவியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் ஆயிற்றே. அவர்களுக்குப் பயனுள்ள ஏதாவது நீ சொல்லியிருக்கவேண்டும். நீ சொன்னதையெல்லாம் கேட்டு அவர்கள் நடுங்கிப்போயிருப்பார்கள். அவர்களின் மனம் குழம்பியிருக்கும். அவர்களால் புரிந்து கொள்ளத்தக்க, அவர்களால் கிரகிக்கக்கூடிய விஷயங்களையே நீ பேச வேண்டும். மக்களிடம் பேசும்போது மக்களுக்காகப்பேசு. என்றார். அதற்கு துரியானந்தர், நான் பேசுவதை நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பீர்கள் என்று  நினைத்ததுமே நான் குழம்பி விட்டேன். நான் பேசுவது ஒரு கோர்வையாக  இல்லாமல் போய்விடக்கூடாதே என்ற பயத்தில் உளறிவிட்டேன் என்றார்.


No comments:

Post a Comment