சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-16
🌸
ஒரு நாள்
சுவாமிஜி துரியானந்தரிடம் , ஹரி நான் அமெரிக்காவிற்குச் செல்கிறேன் . அங்கே நடைபெறுகின்ற
சர்வமத மகாசபை எதற்காகத்தெரியுமா? எல்லாம் (தமது மார்பைத்தட்டிக் காண்பித்து) இதற்காகத்தான்.
இதற்காகத்தான்(தமக்காகத்தான்) எல்லாவற்றையும் செய்கிறார்கள் என்றார்.
சிலநாட்கள்
பம்பாயில் தங்கிவிட்டு சுவாமிஜியும் ஜக்மோகனும் கேத்ரிக்குப் புறப்பட்டனர். பிரம்மானந்தரும்
துரியானந்தரும் அபு ரோடுவரை அவருடன் சென்றனர் சுவாமிஜியும் ஜக்மோகனும் ஏப்ரல் 21 இரவு
9 மணி வேளையில் கேத்ரியை அடைந்தனர். அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்தது. தொடர்ந்து
மூன்று நான்கு நாட்கள் விழா நடைபெற்றது. ஆடல், பாடல், என்று நகரமே குதூகலித்தது. சுவாமிஜியைக்கண்ட
மன்னரின் மகிழ்ச்சி அளவு கடந்ததாக இருந்தது. குழந்தையைக்கொண்டு வந்து சுவாமிஜியிடம் ஆசிபெற்றார் மன்னர். அங்கே மூன்று வாரம் தங்கித்திரும்பினார்
சுவாமிஜி.
கேத்ரியிலிருந்து
ஜக்மோகனுடன் புறப்பட்ட சுவாமிஜி அபு ரோட்டில் மீண்டும் பிரம்மானந்தரையும் துரியானந்தரையும்
சந்தித்தார். அவர்கள் சுவாமிஜியைச் சந்திப்பதற்காக மாட்டு வண்டியில் வந்திருந்தார்கள்.
சுவாமிஜி அவர்களிடம், ஓ! நீங்கள் மாட்டு வண்டியிலா வந்தீர்கள்? உங்களுக்கு வசதியாக
வைக்கோல் படுக்கை அமைத்துத்தந்தார்களா? என்று கேட்டார். அதற்கு அவர்கள், இல்லை. அதனால்
தானோ என்னவோ உடம்பு மிகவும் வலிக்கிறது. என்றார்கள். உடனே சுவாமிஜி, வண்டியோட்டுபவனிடம் நாலணா கொடுத்திருந்தால் அவன் வைக்கோலால் நல்ல படுக்கை
செய்து தந்திருப்பான். அந்த அளவிற்குக்கூட யோசிக்க முடியாமலா போய்விட்டது.என்று கடிந்துகொண்டார்.
பிரிகின்றவேளையில் சுவாமிஜி மிகவும் உயர்ந்த மனநிலையில் இருந்தார். அவர் துரியானந்தரிடம்
பிரம்மானந்தரை இங்கே விட்டுவிட்டு, நீ மடத்திற்குப்போ. அங்கே குருதேவரின் பணிகளைச்செய்தபடி
மடத்தை விரிவுபடுத்த முயற்சி செய்” என்றார்.
சுவாமிஜியின்
அன்றைய தோற்றம் துரியானந்தரின் மனத்தில் என்றென்றும்
மறக்க முடியாதபடி தங்கிவிட்டது. அன்று சுவாமிஜி கூறியவை அனைத்தும் என் மனத்தில் உள்ளன.
அவர் நின்றதோற்றம், வார்த்தைகள், வார்த்தைகள் வந்தவேகம், அந்த வார்த்தைகளில் இழையோடிய
ஒரு சோகம் அனைத்தும் என் கண்களில் நிழலாடுகின்றன. அந்த வார்த்தைகள் இன்றும் என் காதுகளில்
ரீங்காரம் செய்கின்றன. அவர் என்னிடம், ஹரி, நீங்களெல்லாம் மதம், மதம் என்று எதையோசொல்கிறீர்களே! அது என்னவென்று எனக்குச் சிறிதும்
புரியவில்லை. என்றார்.
இதைச்சொல்லி
முடித்த போது அவரது முகத்தில் ஆழ்ந்த சோகத்தின் கீற்றுகள் பரந்தன. உள்ளத்தில் உணர்ச்சிப்
பிரவாகங்கள் பல எழுந்து அடங்கின போலும், அதனால் தானோ என்னவோ அவரது உடம்பு ஒரு முறை
அதிர்ந்தது. அந்த உணர்ச்சிக்கொந்தளிப்பின்
ஊடே அவர் தமது கையை நெஞ்சில் வைத்து,
சகோதரா, என் இதயம் விரிந்துள்ளது. பரந்து விரிந்துள்ளது. நான் உணரக் கற்றுக்கொண்டுள்ளேன்.
உண்மைதான் சகோதரா, நான் மிகவும் ஆழமாக உணரக்கற்றுக் கொண்டிருக்கிறேன். என்றார். அவரது
குரல் தழுதழுத்தது. அவரால் வேறெதுவும் பேச இயலவில்லை. சில நிமிடங்களுக்கு அந்த இடத்தில்
ஓர் அசாதாரண அமைதி நிலவியது. சுவாமிஜியின்
கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.
இதைச்சொல்லும்போது
துரியானந்தரின் நிலையும் ஏறக்குறைய அப்படியே இருந்தது. உணர்ச்சிப்பெருக்கினால் தத்தளித்தது
போல் இருந்தார் அவர். மூடிய இமையிடுக்குகளின் வழியே கண்ணீர் வழிந்தோடியது. அவர் விட்ட
ஆழ்ந்த பெருமூச்சு அங்கு நிலவிய அமைதியைக் கலைத்தது. சுவாமிஜி இவ்வாறு கூறியபோது என்
மனத்தில் என்ன ஓடியது தெரியுமா? புத்தரின் நினைவுகள்! சுவாமிஜி யின் வார்த்தைகளும் உணர்ச்சியும் புத்தருடையது போலவே
அல்லவா உள்ளன! என்ற எண்ணம் தான் என் மனத்தில் எழுந்தது. மனிதகுலம் அனைத்தின் துயரங்களும்
சுவாமிஜியின் இதயத்தில் எதிரொலிப்பதை என்னால் முடிந்தது. மனிதகுலம் அனைத்தின் துயரங்களையும்
மாற்றுகின்ற மருந்தைத் தயாரிக்கும் ஒரு பெரிய அண்டாவாக அவரது இதயம் எனக்குத் தோன்றியது.
அனைவருக்காகவும்
அழுதார்.
இந்த நிகழ்ச்சியை கூறும்போது பின்னாளில் நடந்த மற்றொரு
சம்பவத்தையும் துரியானந்தர் நினைவுகூர்ந்தார். அப்போது சுவாமிஜி பலராமின் வீட்டில்
தங்கியிருந்தார். நான் அவரைக் காணச் சென்றபோது அவர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவராக
வராந்தாவில் தனியாக நடந்து கொண்டிருந்தார். நான்
சென்றதை அவர் கவனிக்கவில்லை. அவரது சிந்தனையைக் கலைக்க வேண்டாம் என்று தயக்கத்துடன் அமைதியாக நின்றிருந்தேன். சிறிதுநேரம் கழிந்தது.
அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. மீராவின் ஒரு பாடலை அவர் மெல்லிய குரலில் பாடினார்.
பிறகு வராந்தா
கைப்பிடிச்சுவரில் சாய்ந்து கொண்டார். முகத்தைத்
தமது கைகளில் புதைத்தபடி நெஞ்சு வெடிக்கும் துயரக்குரலில், ஓ! எனது துயரை யார் அறிவார்!
எனது துயரை யார் அறிவார்.! என்ற அந்தப் பாடல் வரிகளைப்பாடினார். சுவாமிஜியின் சோகமும்
துயரமும் அங்கிருந்த அத்தனை பொருட்களையுமே சோகமயமாக்கியதுபோல் தோன்றியது.துன்பங்கள் தரும் வேதனையைத் துன்பப்படுபவனைத்தவிர யார் அறிவார்.!
என்ற வரிகள் அந்தச் சூழ்நிலையையே சோகத்தில் ஆழ்த்தியது. அவரது குரல் ஓர்அம்பு போல்
என் இதயத்தைத் தைத்தது. என் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. ஆனால் சுவாமிஜியின் துயருக்கான
காரணம் எனக்குத்தெரியவில்லை. அது என் உள்ளத்தை
வாட்டியது.திடீரென்று எனக்கு எல்லாம் தெளிவாகியது. சுவாமிஜியின் துயரம் தனி மனிதத்துயரம் அல்ல. அது பிரபஞ்சத்தின்
துயரம். பிரபஞ்சத்தின் துயரத்தை ஏற்றவராக அவர் அழுதார். ஏழை எளியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள்
என்று அனைவருக்காகவும் அவர் அழுதார்.
அபு ரோட்டிலிருந்து
சுவாமிஜியின் பயணம் ரயிலில் தொடர்ந்தது. சுவாமிஜியும் நண்பர் ஒருவரும் பயணம் செய்தனர்.
அப்போது டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர்
ஒரு வெள்ளையர். நண்பர் அந்தப் பெட்டியில் பயணம் செய்யமுடியாது என்று முரட்டுத்தனமாகக்கூறி
அவரை அந்தப் பெட்டியிலிருந்து வெளியேறுமாறு வற்புறுத்தினார் அவர். தனக்குச் சாதகமாக
ஏதோ ஒரு ரயில்வே சட்டத்தையும்கூறினார். நண்பரும் ஒரு ரயில்வே ஊழியர் தான். அத்தகைய
சட்டம் ஒன்று இல்லை என்று கூறி வெளியேற மறுத்தார் நண்பர். தன்னை ஓர் இந்தியன் எதிர்ப்பதைக்கண்ட
அந்த வெள்ளையனுக்குக்கோபம் தலைக்கேறியது. கடைசியில் சுவாமிஜி தலையிட்டார். அதுவும்
வெள்ளையனின் கோபத்தைத் தணிக்கவில்லை. அவன் ஆத்திரத்துடன் சுவாமிஜியிடம் இந்தியில் பேசலானான்.
பரிசோதகர்-
நீ ஏன் இதில் தலையிடுகிறாய்.?
சுவாமிஜி-
முதல் வகுப்புப் பயணியான ஒருவரை நீ என்று மரியாதை இன்றி அழைக்கிறீர்களே! முதலில் பிறரிடம்
மரியாதையாகப் பழகுவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள்.
பரிசோதகர்-
தவறு தான், பொறுக்கவும். எனக்கு இந்தி சரியாகத் தெரியாது, இவன்( this man)
சுவாமிஜி-(குறுக்கிட்டு),
- இந்தி சரியாகத்தெரியாது என்கிறீர்கள். ஆனால்
இப்போது உங்களுக்கு உங்கள் தாய் மொழியான ஆங்கிலமும்
தெரியாது என்று தெரிகிறது. ”இவன்” என்று அல்ல. இவர்” ( this gentleman)
என்று கூற வேண்டும்.
தனது தவறை
உணர்ந்த பரிசோதகர் பெட்டியை விட்டு வெளியேறினார்.
இந்த நிகழ்ச்சியைக்குறிப்பிட்டு
சுவாமிஜி ஜக்மோகனிடம் கூறினார். வெள்ளைக்காரர்களுடன் பழகும்போது நமது சுயமரியாதையை
விட்டு க் கொடுக்கக்கூடாது. உரியவருக்கு உரிய மரியாதை கொடுத்துப் பழகாததால் தான் வெள்ளையர்கள் நம்மை அவமதிக்கிறார்கள். சுயமரியாதை
வேண்டும், பிறருக்கு மரியாதை கொடுக்கவேண்டும்.
மீண்டும்
சென்னைக்குவந்து திரும்புவதற்குப்போதிய கால அவகாசம் இல்லை என்று கருதியதாலோ என்னவோ
பம்பாயிலிருந்தே அமெரிக்காவிற்குப் புறப்படுவதாக ஏப்ரல் 27-இல் சென்னை அன்பர்களுக்குத்
தெரிவித்தார் சவாமிஜி. அவர் சென்னைக்கு வரப்போவதில்லை என்று தெரிந்ததும் பம்பாய்க்குப்
புறப்பட்டார் அளசிங்கர். சுவாமிஜியும் ஐக்மோகனும் கேத்ரியிலிருந்து பம்பாய்க்கு வந்து
சேர்ந்த போது ரயில் நிலையத்தில் அவர்களை வரவேற்றார் அளசிங்கர்.
சுவாமிஜியும்
பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கவனிக்குமாறு ஜக்மோகனிடம் கூறியிருந்தார்கேத்ரி
மன்னர்.ஜக்மோகனும் சுவாமிஜியைச் சிறந்த கடைகளுக்கு அழைத்துச்சென்று தேவையானவற்றையெல்லாம்
வாங்கலானார்.சவாமிஜியின் மறுப்பையும் பொருட்படுத்தாமல் விலை உயர்ந்த ஆடைகளை வாங்கினார்.
செலவிற்குப் பணம் கொடுத்தார்.மே-31 இல் சுவாமிஜி பம்பாயிலிருந்து புறப்படுவதாக ஏற்பாடு.ஜப்பான்
வரை செல்கின்ற பெனின்சுலார் கப்பலில் சுவாமிஜிக்காக ஏற்கனவே வாங்கப்பட்டிருந்த இரண்டாம்
வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்து, முதல் வகுப்பில் டிக்கெட் பதிவு செய்யப்பட்டது. தாமஸ்-குக்-
சன் என்ற கம்பெனி மூலம் இந்த ஏற்பாடுகள் செய்யப்
பட்டன.
சுவாமிஜியின்
பெயர் விவேகானந்தர்” என்று எப்போதிலிருந்து ஆனது என்பது
பற்றி பல கருத்துக்கள் உள்ளன. கேத்ரியில் தான்
அந்தப் பெயரை சுவாமிஜி நிலையாக ஏற்றுக்கொண்டார் என்ற கருத்து பொதுவாக அனைவராலும் ஏற்றுக்
கொள்ளப் படுகிறது. அந்த நிகழ்ச்சிபற்றி அளசிங்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
பம்பாயில்
நாங்கள் இருந்தபோது ஒரு நாள் சுவாமிஜியிடம், சுவாமிஜி நீங்கள் அமெரிக்காவிற்குப்போகிறீர்கள்.
அங்கே காலம் பொன்போன்றது. எனவே உங்களுக்கு ஒரு கைக்கடிகாரம் தேவை. என்று கூறினோம்.உடனே
வாங்குங்கள்” என்றார் சுவாமிஜி. உங்கள் பெயர் அச்சிட்ட சில கார்டுகளும்
தேவை என்றோம்.நல்லது. நூறு கார்டுகள் அச்சிடுங்கள் என்றார். கார்டில் என்ன பெயர் அச்சடிப்பது?
என்று கேட்டோம். அப்போது சுவாமிஜி ”சச்சிதானந்தர்” என்ற பெயரில் அறியப் பட்டிருந்தார். சுவாமி விவேகானந்தர்
என்ற பெயரை அச்சிடுங்கள்” என்றார் சுவாமிஜி.
எஞ்சிய நாட்களை
முற்றிலும் தியானத்தில் செலவிட்டார் சுவாமிஜி. உலகையே மறந்து தியானத்தில் ஆழ்ந்தாலும்
சகோதரத் துறவிகளையும் மடத்தையும் மனத்திலிருந்து விலக்க அவரால் இயலவில்லை. அப்போது
மடம் ஆலம்பஜாரில் இயங்கி வந்தது. மடத்தில் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், மடம் எப்படி
நடைபெறுகிறது, என்றெல்லாம் பல எண்ணங்கள் அவரது மனத்தில் எழுந்து பரந்தன. எல்லாம் நன்றாகவே
நடைபெறும், குருதேவர் அவர்களைக் காத்து வருவார் என்ற முடிவிற்கு வந்தார் சுவாமிஜி.
1893-மே,
31. சுவாமிஜி மேலை நாடுகளுக்குப்புறப்படுவதற்காகக்குறித்து வைக்கப் பட்ட நாள். மேலை
நாடு, கப்பல்பயணம், பிரிவுபசாரங்கள், வாழ்த்துக்கள், மூட்டை முடிச்சுக்கள், எல்லாமே
அவருக்குப் புதியவை.கறிப்பாக உடமைகளும், அவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவரது
துறவுணர்வுக்கு முற்றிலும் பொருந்தாதவை,! ஆனாலும் என்ன செய்வது! குருதேவரின் திருப்பணிக்காக
தாய்த் திருநாட்டின் மகோன்னதத்திற்காக அல்லவா
அவர் செல்கிறார். எனவே அதற்கு வேண்டியவற்றையெல்லாம் செய்து தான் ஆகவேண்டும்.
தெரியாத
நாட்டில், அந்த நாட்டின் பழக்க வழக்கங்களை எப்படிமேற்கொள்ளப்போகிறோம், தனியாக என்ன
செய்யப்போகிறோம் என்ற கலக்கம் சுவாமிஜிக்கு உள்ளூர இருந்து கொண்டு தான் இருந்தது. பதினாயிரம் மைல் கடந்தல்லவா
செல்கிறேன்? அங்கே போய் தன்னந்தனியாக என்ன செய்யப்போகிறேன்? என்று மீண்டும் மீண்டும்
அவரது உள்ளம் சிந்தித்தது.
ஓராயிரம்
உணர்ச்சிகளுடன் கப்பல் படிக்கட்டுகளை அடைந்தார் சுவாமிஜி. ஜக்மோகன்லாலும் அளசிங்கரும்
அதுவரை அவரைப் பின்தொடர்ந்தனர். அவரது பாதங்களில் விழுந்து வணங்கி விடைபெற்றனர்.
கப்பலின்
பெரிய மணிகள் கணகணவென்று ஒலித்தன. இதோ, அந்தப்பெரும் கலம் கடல் அலைகளைக் கலக்கிக்கொண்டு
நீந்தத் தொடங்கிவிட்டது.
இந்திய நாடெங்கும்
சுற்றிய சுவாமிஜி அந்த நாட்டின் மக்களுக்காக கண்காணாத தேசம் செல்கிறார்! அம்பிகையின்
அருளையும், ஆசானின் ஆசியையும் ஆதரவாளர்களின் நம்பிக்கையுமே மூலதனமாகக்கொண்டு சர்வமத
மகாசபையில் கலந்து கொள்ளச்செல்கிறார்.
கப்பலின்
மேல்தளத்தில் சுவாமிஜி வந்து நின்றார். கடலின் நீலத்தையும், வானின் நீலத்தையும் அழுத்தமாகப்
பிரித்துக்காட்டும் தீவண்ணத்திரு உடையில் நின்று கொண்டிருந்தார். தம்மை வழியனுப்ப வந்தவர்களுக்கெல்லாம்
இருகைகளையும் தூக்கி ஆசீர்வாதம் அளித்தபடி நின்று கொண்டிருந்தார் முப்பது வயதிலேயே
மூத்த அந்த முனிவர்.
அவருக்கும்
கரைக்கும் உள்ள தொலைவு சிறிது சிறிதாகப்பெருகிக்கொண்டே வந்தது. அவருடைய கண்கள் உருகின,
பெருகின.
பவதாரணியை நினைத்தார். பரமஹம்சரை நினைத்தார். புனித
அன்னையை நினைத்தார். சகோதரத்துறவிகளை நினைத்தார். தமக்கு உதவி புரிந்த மன்னர்களையும்
, அறிஞர் களையும், சாதாரண மக்களையும் நினைத்தார். கூடவே அவரைப்பெற்ற தாயின் முகமும்
நிழலாடாமலா இருந்திருக்கும். கடைசியாக தாம் உதவி செய்ய வேண்டிய பாரதத்தின் பாமர மக்கள்
அனைவரையும் எண்ணி நெகிழ்ந்தார்.
மறுபடியும்
திரும்பிப் பார்த்தார் சுவாமிஜி.
தியாக பூமியிலிருந்து
போக பூமிக்குச்செல்கிறேன். முனிவர்களும் ரிஷிகளும் யோகிகளும் சித்தர்களும் பக்தர்களும்
முக்தர்களும் வாழ்ந்த திருநாட்டிலிருந்து தொழில் பிரமுகர்களும் விஞ்ஞான நிபுணர்களும்
அரசியல் வல்லுனர்களும் பொருளாதார அறிஞர்களும் வாழும் நாட்டிற்குச் செல்கிறேன். யுகயகங்களாக
வாழ்ந்து வருகின்ற தெய்வத்திரு நாட்டிலிருந்து பச்சைக் குழந்தையாக ஐரோப்பிய நாகரீகம்
பரவிய புது நாட்டிற்குச்செல்கிறேன். பாரதத்தின் பண்பை அதற்குத் தருவேன். பாரதத்திற்கு
அதன் பொருள் உதவியைப்பெற்று வருவேன். இது எளிதில் நடக்கும் காரியமல்ல. இனிமேல் என்
வாழ்நாள் முழுவதிலும் உழைப்பு, கடினமான உழைப்பு, அரை நொடியும் அயராத அசுர உழைப்புத்தான்.
இந்த உடம்பு மடிந்து வீழும் வரையில், எலும்புகள் சிதறும் வரையில், நரம்புகள் வெடிக்கும்
வரையில் உழைப்பேன். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும், இந்தியாவின் ஆன்மீகத்தை எடுத்துரைப்பேன்.
இந்தியாவின் ஏழைகளுக்காக அங்கெல்லாம் பொருள் திரட்டித் தாய் நாடு மீள்வேன். பிறகு ஏழைகளை
வாழ்விக்கும் இயக்கங்களை நிறுவி அவற்றில் தளராது உழைப்பேன்.
இவ்வளவு உழைப்பையும் நான் செய்ய இயலுமா? எனக்கு அவ்வளவு
ஆற்றல் இருப்பதாக நான் எண்ணினால் அந்த ஆணவமே என்னை விழுங்கி விடாதா? தேவியின் குழந்தையாக.
குருதேவரின் சீடனாக இருந்தே என் பணியைப்புரிவேன்.
சுவாமிஜியின்
உள்ளம் குழைந்தது. சர்வேசுவரி, ஸ்ரீகுருதேவா, என்று வாய்விட்டே அரற்றினார்.
நீலத்திரைகடலில் சென்று கொண்டிருக்கும் அவர் உண்மையில்
தனியாகவா போனார்? இல்லை! ஒருவேளை அவருடன் சென்ற துணைகள் இதுவரை யாருடனும் சென்றிருக்கமாட்டார்கள்.
அப்படி அவருக்கு
யார் துணை போனார்கள்.?
கங்கையும்,
யமுனையும், சிந்துவும்,, நர்மதையும், காவிரியும், கோதாவரியும்,பாரதத்தின் இனிய ஆன்மாவும்
அவருக்குத் துணை சென்றன.
கௌரீ சிருங்கமும்
காஞ்சன சிருங்கமும் தவளகிரியும் விந்திய பர்வதமும், மேற்கிலும் கிழக்கிலும் அணிவகுத்து
நிற்கும் மலைத்தொடர்களும் அழகு செய்யும் பாரதத்தின் கம்பீர ஆத்மா அவருக்குத் துணை சென்றது.
பாரதத்தின்
ஆன்மீக, சத்தியம் அவருடன் துணை சென்றது.
அதன் புராண கவித்துவம் அவருக்குத்துணையாகச்சென்றது.
எல்லோராவிலும்,
அஜந்தாவிலும், தில்வாராவிலும் தஞ்சையிலும் எழும்பி நிற்கும் கலை அவருடன் சென்றது.
துளசி தாசரும்,
மீராபாயும், சண்டிதாஸீம், துகாராமும், ஆண்டாளும், மணிவாசகரும், தியாகராஜரும் இழைத்த
சங்கீதம் அவருடன் துணை சென்றது.
சங்கரரும்,
ராமானுஜரும், மத்வரும், குருநானக்கும், மகாவீரரும், சைதன்யரும் போதித்த தத்துவம் அவருடன்
சென்றது.
அந்தத் தத்துவங்களின் உருவமாக வாழ்ந்த ஸ்ரீராமகிருஷ்ணர்
அவருடன் சென்றார்.
அந்த தெய்வங்களுக்கெல்லாம்
தெய்வமாகிய தேவி பராசக்தி அவருக்குத்துணை சென்றாள்.
இவை எல்லாவற்றுக்கும்
மேலாக, குபு குபு என்று மண்புகை போலக் கிளம்பி, அந்தப் புகைத்துகள் நகரத்தில் புகுந்து
கொள்ள, அதனை வெளியேற்றக்கூட அவகாசம்இன்றி பூமியைக் கிளறிக் கொண்டே செல்லும் ஏர்க்காவைப்பின்
தொடரும் பாரதத்தின் கோடானுகோடி ஏழைகளின் இதயங்கள்.
கடும் வெயிலில்
நெற்றி நிறைய வேர்வை வழிய, அதைத்துடைத்துக் கொள்ளக் கூட முடியாதபடி தலையிலுள்ள புல்லுக்கட்டை
ஒரு கையாலும், இடையிலுள்ள குழந்தையை ஒரு கையாலும் அணைத்துக்கொண்டு மேல்மூச்சு கீழ்
மூச்சு வாங்க நடந்து கொண்டிருக்கும் கோடானு கோடி ஏழைப்பெண்களின் இதயங்கள்.
சுவாமி விவேகானந்தருடன்
துணை சென்றன.!.
............
உலக அரங்கில்
-
- கடல் பயணம்.
.........................................
அழகின் ஆராதகர்
கப்பல் வாழ்க்கை
ஆரம்பத்தில் சுவாமிஜிக்கு அவ்வளவாக சுவாரசியமாக இருந்திருக்காது. படுப்பதற்கு நிரந்தரமான
இடமின்றி, கட்டிய துணியும் க் காற்றுபோல் திரிந்தவர் அவர். கடந்த சுமார் ஐந்து வருடங்களாக
அவரது வாழ்க்கை கட்டற்றுப் பாயும் காட்டாறுபோல் சுதந்திரமானதாக இருந்தது. இப்போது உடைமைகள், பொறுப்பு, கண்காணாத
தேசத்திற்குப்போகிறோம் என்ற தயக்கம் எல்லாம் அவரது மனத்தைச் சற்று அழுத்தியிருக்கும்
என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆன்ம ஞானியும் அழகின் ஆராதகரும் ஆன சுவாமிஜி ஓரிரு நாட்களிலேயே
மனத்தைச் சமன் செய்து கொண்டார். அறையில் இருக்கும் நேரங்களில் இறைவனில் ஆழ்ந்து அக
அழகில் திளைத்தார். வெளியில் வரும்போது இறைவன் படைத்த உலகின் மகிமையில் ஆழ்ந்து புற
ஆழகில் திளைத்தார்.
கடல் பயணம் சுவாமிஜிக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
எல்லையற்றுப் பரந்து விரிந்த கடல், புரண்டோடும்
அலைகள், புத்துணர்ச்சி அள்ளித்தந்தபடி வீசிய காற்று, பரந்த ஆகாயம் எல்லாம்அவருக்குப்
புதுமையாக இருந்தன. புதிய மனிதர்கள்,புதிய
சூழ்நிலை, புதிய உணவு, அனைத்தையும் மெல்லமெல்லப் பழகிக்கொண்டார் அவர். வெள்ளையர்களின்
பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொண்டார். சக பயணிகளும் அவரில் ஒரு வித்தியாசமான மனிதரைக் கண்டனர். பண்பான அவரது நடத்தை, கனிவான
பார்வை, களங்கமற்ற முகம், முகத்தில் பொலிந்த தெய்வீகம், காவி உடை, எல்லாம் பிறரை அவர்
மீது மரியாதை கொள்ளச் செய்தன. குறிப்பாக, கப்பல் கேப்டன் சுவாமிஜியால் பெரிதும் கவரப்பட்டார்.
நேரம் கிடைத்தபோதெல்லாம் அவர் சுவாமிஜியிடம்
வந்து பேசினார். சுவாமிஜி ஓய்வாக நடக்கும் நேரங்களில் கலந்து கொண்டார். சுவாமிஜிக்கு
கப்பலைச்சுற்றிக் காண்பித்து அதன் எந்திரங்கள் பற்றி விளக்கிக் கூறினார்.
சுவாமிஜியுடன்
ஏற்கனவே பம்பாயில் அறிமுகமான சாபில்தாஸ் என்பவரும் கப்பலில் பயணம் செய்தார். அவர் சுவாமிஜியுடன்
நெருங்கிப் பழகியதாகவோ வேறு உதவிகள் செய்ததாகவோ தெரியவில்லை.
கொழும்பு
பம்பாயிலிருந்து
கொழும்பு போய்ச்சேர்ந்தோம். கிட்டத்தட்ட அன்று முழுவதுமே கப்பல் துறைமுகத்தில் நின்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு நகரத்தைச்சுற்றிப்
பார்த்தோம். தெருக்கள் வழியாகச்சென்றோம். எனக்கு நினைவிலுள்ளது புத்தர் கோயில் ஒன்று-
புத்த பகவானின் மிகப்பெரிய திருவுருவம், அவர் சாய்ந்தவாறு அமர்ந்து நிர்வாண நிலையை
எய்துகின்ற நிலை அது. கோயிலிலுள்ள மதகுருமார்களுடன் பேச முயன்றேன், ஆனால் அவர்களுக்குச்
சிங்களம் தவிர வேறெந்த மொழியும் தெரியவில்லை.
எனவே எனது முயற்சியைக்கைவிட வேண்டியதாயிற்று. அங்கிருந்து சுமார் 80 மைல் தொலைவில் மத்திய இலங்கையில் உள்ளது கண்டி நகரம். இலங்கை பௌத்த
மதத்தின் மையம் இது. அங்கே போவதற்கு நேரம் கிடைக்கவில்லை. இங்குள்ள பௌத்த இல்லறத்தினர்-
ஆண்பெண் அனைவரும்- அசைவ உணவு உண்கின்றனர். மதகுருமார்கள் மட்டுமே சைவஉணவினர். சிங்களர்களின் உடையும் முகமும்
உங்கள் தமிழர்களுடையது போல் தான் இருக்கிறது.
அவர்களது மொழி பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால் உச்சரிப்பைக்கேட்டால் அது உங்கள் தமிழ் போலவே உள்ளது.
பினாங்கு
-
கப்பல் அடுத்ததாக
நின்ற இடம் பினாங்கு, மலேயா தீபகற்பத்தில் கடலோர நிலத்துண்டு இது. மலேயா மக்கள் முகமதியர்கள்
. பண்டைய நாளில் இவர்கள் பிரபலமான கடற்கொள்ளைக்காரர்களாக இருந்தார்கள். வியாபாரிகளுக்குக்
குலைநடுக்கத்தைக்கொடுத்தவர்கள்..ஆனால் இன்று சுழல் மேடைகளுடன் கூடிய கப்பல்களிலுள்ள
பெரும் துப்பாக்கிகள் மலேயா்களைக் கொடுமையற்ற வேறு பிழைப்பு வழிகளை நாடுமாறு கட்டாயப்படுத்தி
விட்டன.
பினாங்கிலிருந்து
சிங்கப்பூர் செல்லும் வழியில் உயர்ந்த மலைகளுடன் கூடிய சுமத்ரா தீவைத் தொலைவில் கண்டோம்.
பண்டை நாட்களில் கடற்கொள்ளையர்கள் விரும்பி உலவுகின்ற பல இடங்களைக்கேப்டன் எனக்குக்
காட்டினார்.
-
சிங்கப்பூர்
-
ஸ்ட்ரெயிட்ஸ்
செட்டில்மென்ட்டின் தலைநகரம் சிங்கப்பூர்.
அங்கு தாவர ஆராய்ச்சிக்கான அழகிய தோட்டம் ஒன்று உள்ளது. அதில் மிகச்சிறந்த பனை வகைகள் உள்ளன. அழகிய விசிறிபோன்று
ஓலை கொண்டதான ” பயணியின் பனை” இங்கு ஏராளமாக வளர்கிறது. எங்கும்
கறிப்பலா மரங்கள் வளர்ந்துள்ளன. தமிழ்நாட்டில் மாமரம் ஏராளமாகக் காணப்படுவதைப்போல்,
பிரசித்தி பெற்ற மங்குஸ்தான் மரங்கள் இங்கு ஏராளம் உள்ளன. ஆனால் மாம்பழம் இணையற்றது.
இங்குள்ளவர்கள் கிட்டத்தட்ட தமிழர் களைப் போன்றே உள்ளனர்.ஆனாலும் தமிழர்களின்
கரு நிறத்தில் பாதி கூட இவர்களிடம் இல்லை. சிங்கப்பூரில் அழகிய கண்காட்சிச்
சாலையும் உள்ளது. வெற்றிலைப் பழக்கமும் இன்ப நாட்டமும் இங்கே அதிகமாகக் காணப்படுகிறது.
இங்கு குடியேறியுள்ள ஐரோப்பியர்கள் ஏதோ முதற்கடமை போலவே இவற்றில் ஈடுபடுகிறார்கள்.
அடுத்து ஹாங்காங், ஏதோ சீன எல்லைக்குள் வந்து விட்டது
போல் உள்ளது. சீன அம்சங்கள் இங்கே அவ்வளவு அதிகம் உள்ளன. தொழில்கள் அனைத்தும் வர்த்தகம்
முழுவதும் சீனர்களின் கையில் தான்.ஹாங்காங்
உண்மையில் சீனப்பகுதியே. கப்பல் நங்கூரம் பாய்ச்சி நின்றதுமே பிரயாணிகளைக் கரைக்கு ஏற்றிச் செல்வதற்காக நூற்றுக்கணக்கான
சீனப்படகுகள் வந்து மொய்த்துக் கொள்கின்றன. இரண்டு சுக்கான்களை உடைய இந்தப் படகுகள்
விசித்திரமானவை. படகோட்டி தன் குடும்பத்துடன் படகிலேயே வசிக்கிறான். பெரும் பாலும் மனைவியே சுக்கான்களை இயக்குகிறாள். ஒரு சுக்கானைக் கைகளாலும், மற்றதை ஒரு காலாலும் அவள்
இயக்குகிறாள். அவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேரின் முதுகில் ஒரு குழந்தை கட்டப்பட்டிருப்பதைக்
காணலாம். அதன் கைகளும் கால்களும் சுதந்திரமாக விடப்பட்டிருக்கும். அந்தத் தாயோ, இப்போது
தனது ஆற்றலையெல்லாம் கொண்டு செயலாற்றுவாள். மறுகணம் பெரும் சுமைகளைத்தள்ளுவாள். வியப்பூட்டும்
வேகத்துடன் படகுக்குப் படகு தாவுவாள். அப்போதெல்லாம் இளம் சீனன் தன் தாயின் முதுகில் அமைதியாகத் தொங்கிக்கொண்டிருக்கின்ற காட்சி வினோதமாக
இருக்கும். அந்த இடத்தில் வந்து போகின்ற படகுகளும் நீராவிப்படகுகளும் ஏராளம். அந்தக்
குழந்தை ஒவ்வொரு கணமும் ஆபத்தான நிலையில் உள்ளான். அவனது தலை மற்ற உறுப்புகள் யாவும் தூள் தூளாக்கப் பட்டு விடும் போல் தோன்றுகிறது. அவன் அதையெல்லாம்
ஒரு சிறிதும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இந்த விரைவான வாழ்க்கையில் அவனுக்குச்சுவை
எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை. வேகத்துடன் வேலையில் ஈடுபட்டுள்ள அவனது தாய் இடையிடையே
தருகின்ற அரிசிப்பணியாரத் துண்டு ஒன்றைப் பிட்டுப் பார்த்து, அதன் அமைப்புக்கூற்றை
ஆராய்ந்து அறிவதிலேயே அவன் பூரணத் திருப்தி அடைந்து விடுகிறான். சீனக்குழந்தை ஒரு விதத்தில் தத்துவ ஞானி. நமது இந்தியக்குழந்தைகள்
தவழ்வதற்குக்கூட இயலாதிருக்கும் அந்தப் பருவத்திலேயே அவன் உழைக்கத் தொடங்கிவிடுகிறான்.
தேவையின் தத்துவத்தை அவன் நன்றாக அறிந்துள்ளான். சீன, இந்திய நாகரீகங்கள் வளராமல் இருந்து
வந்திருப்பதற்கு ஒரு காரணம் அவர்களின் பயங்கர வறுமை தான். சாதாரண இந்து அல்லது சாதாரண
சீனன் பயங்கர வறுமை நிலையிலேயே நாள்தோறும்
உழல்வதால் வேறு எதையும் நினைப்பதற்கும் கூட அவனுக்கு அவகாசம் இல்லை.
ஹாங்காங்
மிகவும் அழகான நகரம். குன்றுகளின் சரிவுகளிலும் உச்சியிலும் கூட நகரம் அமைக்கப்பட்டுள்ளது.
அவை மற்ற பகுதிகளை விடக்குளிர்ச்சியானவை. மலையின் உச்சிக்கு மிராம் பாதை செல்கிறது.
இது கிட்டத்தட்ட செங்குத்தாகவே உள்ளது. நீராவிச்சக்தியால் கம்பியின் மூலம் அது இழுக்கப்
படுகிறது.
கான்டன்
-
நாங்கள்
ஹாங்காங்கில் மூன்று நாட்கள் இருந்தோம். அங்கிருந்து
கான்டன் நகரைக்காணச்சென்றோம். அது ஒரு நதியிலிருந்து எண்பது மைல்கள் தள்ளியிருக்கிறது.
மிகப்பெரிய நீராவிக்கப்பல்கள் செல்லும் அளவுக்கு அந்த நதி பெரியது. கான்டனுக்கும்,
ஹாங்காங்கிற்கும் இடையில் பல சீன நீராவிக் கப்பல்கள் போய் வருகின்றன. ஒரு நாள் மாலை
அந்தக் கப்பல்களுள் ஒன்றில் ஏறி மறுநாள் அதிகாலையில் கான்டனை அடைந்தோம். அங்கு தான்
என்ன காட்சி! ஒரே பரபரப்பும் படுவேகச்செயலும் தான்! எத்தனை எத்தனை படகுகள்! அவை கிட்டத்தட்ட நதியின் பரப்பையே
மறைத்துவிடுகின்றன. வியாபாரப்படகுகள்
மட்டுமல்ல,வசிப்பதற்கான
வீடு போன்ற நூற்றுக்கணக்கான படகுகளும் உள்ளன.அவற்றுள் பல மிக நன்றாக, பெரியதாக
உள்ளன.ஏன், இரண்டு மூன்று மாடிகள் அளவுக்கு உயர்ந்துள்ள பெரிய வீடுகள் போலவே அவை உள்ளன.
அவற்றைச் சுற்றி தாழ்வாரமும் அமைக்கப் பெற்றுள்ளது. வீட்டு வரிசைகளுக்கிடையே வீதிகளும்
உள்ளன. இவை அனைத்தும் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன.
அன்னியர்கள்
தங்குவதற்காகச் சீனஅரசு ஒதுக்கியுள்ளன. ஒரு நிலப் பகுதியில் நாங்கள் இறங்கினோம். எங்களைச்
சுற்றிலும் நதியின் இரு புறங்களிலும் மைல்கணக்காகப் பரவியுள்ளது இந்தப் பெரிய நகரம்.
தள்ளிக்கொண்டும் முட்டிக்கொண்டும் மோதிக்கொண்டும் பேரிரைச்சல் செய்து கொண்டும் உள்ள
மனித உயிர்கள் மண்டிக் கிடக்கின்ற ஒரு காடுதான்
இது. இவ்வளவு மக்கள் கூட்டமும் அவர்களுடைய சலியாத செயல்பாடும் ஒருபுறமிருக்க, இந்த
நகரத்தைப்போன்ற அழுக்கான வேறொரு நகரத்தை நான் கண்டதில்லை. அழுக்கானது என்று இந்தியாவில்
சொல்கிறோமே, அது போன்றதல்ல இது. அதைவிடப் பன்மடங்கு! ஏனெனில் ஒரு துளி அழுக்கையும்
வீணாகப்போகுமாறு சீனர்கள் விடுவதில்லை. ஒரு போதும் குளிப்பதில்லை. என்ற விரதத்தைக்
கை கொண்டவன்போல் அல்லவா! உள்ளான் சீனன்!
ஒவ்வொரு
வீடும் ஒரு கடை தான். மாடிப்பகுதியில் மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். தெருக்கள் மிகவும்
குறுகலாக உள்ளன. போகும் போது இரு புறங்களிலுள்ள
கடைகளின் மீது உராய்வது போல் தான் போயாக வேண்டும். பத்தடிக்கு, ஒரு சகாப்புக் கடை உள்ளது.
பூனை, மற்றும் நாய் மாமிசக்கடைகளும் உள்ளன. சீனர்களுள் மிகவும் ஏழைகளே இதை உண்கின்றனர்.
சீனப்பெண்களின்
முகத்தை ஒருபோதும் காணமுடியாது. வட இந்திய
இந்துக்களிடையே இருப்பது போல் சீனப்பெண்களிடையேயும் முகத்திரை வழக்கம் உள்ளது. கூலிப்
பெண்களையே பார்க்க முடியும். அவர்களுள் சிலரது பாதங்கள் சிறு குழந்தைகளின் பாதங்களைவிடச்
சிறியதாக உள்ளன. அவள் நடக்கிறாள் என்பதைவிட தாவுகிறாள் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.
சீனக்கோயில்கள்
பலவற்றை நான் பார்க்கச்சென்றேன். கான்டன் நகரிலுள்ள மிகப்பெரிய கோயில், முதல் பௌத்தச்
சக்கரவர்த்தி மற்றும் புத்த மதத்தைச் சார்ந்த முதல் ஐநூறு பேரின் நினைவாகக் கட்டப்பட்டது.
அங்குள்ள மூர்த்தி புத்த பகவானுடையது. அவருக்கு அடுத்த படியாகக் கீழே வீற்றிருப்பவர்
சக்கரவர்த்தி. இருபுறங்களிலும் சீடர்களின் சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன. எல்லாம் அழகாக
மரத்தில் செதுக்கப்பட்டவை.
அடிக்க வந்தோர்
பணிந்தனர்
அங்கே ஒரு
சீன மடாலயத்தைக் காண முிகவும் விரும்பினார் சுவாமிஜி. ஆனால் எந்த மடத்திலும் அன்னியருக்கு
அனுமதி இல்லை. உள்ளே செல்வதற்கு ஏதாவது வழி உண்டா என்று உடன் சென்ற மொழிப்பெயர்ப்பாளரைக்
கேட்டார் சுவாமிஜி. அவரோ சாத்தியமே இல்லை என்று கூறிவிட்டார். இந்த எதிர்ப்புகளும்
மறுப்புகளும் சுவாமிஜியின் ஆர்வத்தைத் தணிப்பதற்குப் பதிலாகத் தூண்டி விட்டன. ஒரு வேளை
வெளிநாட்டினர் ஒருவர் அந்த மடத்திற்குள் சென்றால் என்ன நடக்கும்? என்று கேட்டார் சுவாமிஜி.
அடி உதை தான்” என்றார் மொழிபெயர்ப்பாளர். சுவாமிஜி விடுவதாக இல்லை. கொன்று
விடுவார்களா என்ன? வாருங்கள், போய்த்தான் பார்ப்போமே! என்று கூறி, அவரையும் இழுத்துக்கொண்டு
முன்னேறினார். சில ஜெர்மானியப் பயணிகளும் உடன் சென்றனர். ஓரிரு அடிகள் நடப்பதற்கு முன்னரே
மடத்திலிருந்து சிலர் கையில் தடியுமாக விரைந்து வந்தனர். அவ்வளவு தான், மொழி பெயர்ப்பாளர்
திரும்பி ஓடுவதற்குத் தயாரானார். சுவாமிஜி அவரைப் பிடித்து நிறுத்தி, நீங்கள் ஓடுங்கள்,
நான் தடுக்கவில்லை.ஆனால் ”இந்திய யோகி” என்பதற்குச் சீன மொழியில் என்ன
சொல்லவேண்டும் என்பதை மட்டும் கூறிவிட்டு ஓடுங்கள்” என்றார். மொழிபெயர்ப்பாளர் கூறினார். அந்த வார்த்தையை சுவாமிஜி
சத்தமாகச்சொன்னார்.
யோகி” என்ற வார்த்தை ஒரு மாயாஜாலம் போல் வேலை செய்தது. அடிப்பதற்கு
ஓடி வந்த அவர்கள் அவரது பாதங்களில் வீழ்ந்தனர். எழுந்து மிகுந்த பணிவுடன் அவரை வணங்கினர்.
பிறகு கைகளைக் கூப்பியபடியே அவரிடம் எதையோ எதிர்பார்ப்பது போல் ஏதேதோ கூறினர். அவர்கள்
கூறியதில் ”கபச்” என்ற வார்த்தை மட்டுமே சுவாமிஜிக்குப்
புரிந்தது. அவர்கள் ஏதோ மந்திரத் தாயத்து கேட்கின்றனர் என்பது சுவாமிஜிக்குப் புரிந்தது.
அதனைத் தெளிவுபடுத்திக்கொள்ள விருப்பினார். மொழிபெயர்ப்பாளர் அருகில் இருந்தால் தானே!
பயந்து ஓடிய அவர் சற்று பாதுகாப்பான தொலைவிலேயே நின்றிருந்தார். அடிப்பதற்காகக் கம்பும்
கையுமாக வந்தவர்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்கிய
அதிசயத்தை அவரால் நம்ப முடியவில்லை. இப்படியோர் அனுபவத்தை அவர் தமது வாழ்நாளில் பெற்றதே
இல்லை. எனினும் சுவாமிஜி கேட்டதும், ஆம்” அவர்கள் தாயத்து தான் கேட்கிறார்கள்.பேய்
பிசாசுகளை ஓட்டவும், தீய சக்திகளை ஒழிக்கவும் அவர்களுக்கு உங்கள் ஆற்றலும் பாதுகாப்பும்
வேண்டுமாம்” என்றார் அந்த மொழிபெயர்ப்பாளர்.
சுவாமிஜி
தமது பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தார். அதைச்சிறுசிறு துண்டுகளாக்கினார்.
அவற்றில் ”ஓம்” என்று சம்ஸ்கிருதத்தில் எழுதி அவர்களிடம் கொடுத்தார். ஏதோ
கிடைத்தற்கரிய பொக்கிஷம் கிடைத்தது போல் மகிழ்ந்த அவர்கள் பணிவுடன் அதைக்கொண்டு தங்கள்
தலையைத்தொட்டனர். பிறகு மிகுந்த மரியாதையுடன் சுவாமிஜியை மடத்திற்குள் அழைத்துச்சென்றனர்.
அது ஒரு
மிகப்பெழைய கட்டிடம். சில இடங்கள் சிதலமாகக் காணப்பட்டன. ஆனால் அதிசயம்! அங்கே சில
புராதனமான சம்ஸ்கிருத ஏடுகள்- அதுவும் பழங்கால வங்க எழுத்துக்களில் இருந்தன- சட்டென்று
சுவாமிஜிக்குத் தாம் ஏற்கனவே கண்ட கோயில் ஒன்றிள் நினைவு எழுந்தது. முதல் பௌத்தச் சக்கரவர்த்திக்காக
எழுப்பப்பட்ட கோயில் அது புத்தர் தமது ஐநூறு சீடர்களுடன் அமர்ந்து இருக்கின்ற சித்திரம்
ஒன்றும் அங்கே இருந்தது. சீடர்களில் சிலரது
முகம் வங்காளிகளைப்போல் இருந்தது. சுவாமிஜி ஒரு சிறந்த வரலாற்று மாணவர் ஆயிற்றே! இந்த
ஆதாரங்கள் அவருக்கு வரலாற்று உண்மைகள் பலவற்றைத்தெளிவு படுத்தின.- ஒரு காலத்தில் சீனாவுக்கும்
வங்காளத்திற்கும் இடையில் நெருங்கிய போக்குவரத்தும் தொடர்பும் இருந்தன, வங்காளத்தின்
புத்தத் துறவிகள் பலர் சீனாவுக்குச் சென்று புத்த மதத்தைப்பரப்பினர். மொத்தத்தில் சீனப்
பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் இந்தியச் சிந்தனைகளின் தாக்கம் பேரளவிற்கு இருந்தது.
கான்டனிலிருந்து
ஐப்பான் சென்றார் சுவாமிஜி. அங்கிருந்து மற்றோர் இந்தியரும் சுவாமிஜியுடன் பயணம் செய்தார்.
அவர் இந்தியாவின் பெரும் செல்வந்தர்களுள் ஒருவரும் எஃகுத் தொழிலதிபருமான சர் ஜாம்ஷெட்ஜிடாட்டா.
சுவாமிஜி எழுதியதைத் தொடர்வோம்.
முதலில்
நாகசாகி என்ற துறைமுகத்தை அடைந்தோம். நாங்கள் கப்பலை விட்டு நிலத்தில் இறங்கி, சில
மணிநேரம் அந்த நகரைச்சுற்றினோம். ஆகா, என்னவொரு
மாறுபாடு, உலகில் மிகவும் தூய்மை வாய்ந்தவர்களுள் ஐப்பானியரும் அடங்குவர். எல்லாம்
சுத்தமாக, ஒழுங்காக உள்ளன. பெரும்பாலான தெருக்களும் அகலமாக, நேராக, வரிசையாக அமைந்துள்ளன.
அவர்களின் சிறு வீடுகள் கூண்டுகள் போல் உள்ளன. தேவதாரு மரங்கள் அடர்ந்த, எப்போதும்
பசுமையாக இருக்கின்ற சிறு குன்றுகள் அனேகமாக ஒவ்வொரு நகரத்திற்கும் கிராமத்திற்கும்
பின்னணியாகக் காட்சி தருகின்றன. குட்டையான உருவமும் மாநிறமும் விசித்திரமான உடையும்
கொண்ட ஜப்பானியர்களின் பாவனைகள், சைகைகள் என்று ஒவ்வொன்றிலும் அழகு மிளிர்கிறது. ஜப்பான்
அழகு பூமி. அனேகமாக ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் தோட்டம் ஒன்று உள்ளது. சிறு செடிகள், புல் பாத்திகள், சிறு சிறு செயற்கை நீரோடைகள், சிறு கற்பாலங்கள் என்று அவை ஜப்பானியப் பாணியில் அமைக்கப் பட்டுள்ளன.
நாகசாகியிலிருந்து
கோபே சென்றோம். ஜப்பானின் உட்பகுதியைப் பார்ப்பதற்காக நான் கப்பலை விட்டுத் தரை வழியாக யோகோஹாமா சென்றேன்.
உட்பகுதியில் மூன்று பெரிய நகரங்களைப் பார்த்தேன். அவை பெரிய தொழில் நகரமான ஒஸாகா,
பழைய தலைநகரான கியோட்டோ, இப்போதைய தலைநகரான டோக்கியோ, கல்கத்தாவைப் போல் கிட்டத்தட்ட
இரு மடங்கு பெரியது அதிகம். டோக்கியோ, மக்கள் தொகையும் ஏறத்தாழ இரு மடங்கு உள்ளது.
பாஸ்போர்ட் இல்லாமல் ஜப்பானின் உட்பகுதியில் பிற நாட்டினர் பயணம் செய்ய அனுமதிக்கப்
படுவதில்லை.
இப்போதைய
தேவைகளைப் பற்றி ஜப்பானியர்கள் பூரணமாக விழிப்புப் பெற்றுள்ளார்கள் என்று தோன்றுகிறது.
அவர்களிடம் இப்போது பூரணக் கட்டுப் பாட்டுத் திட்டத்துடன் கூடிய படை உள்ளது. அந்ப்படை,
அவர்களின் அதிகாரிகளுள் ஒருவர் கண்டு பிடித்த துப்பாக்கி வசதியுடன் கூடியது. அந்தத்
துப்பாக்கி வேறு எந்த வகைத் துப்பாக்கிக்கும் ஈடுகொடுக்க க்கூடியது. கப்பற்படையையும்
அவர்கள் பெருக்கி வருகிறார்கள். ஜப்பானிய எஞ்ஜினியர் ஒருவரால் நிர்மாணிக்கப் பட்ட சுமார்
ஒரு மைல் நீளமுள்ள ஒரு சுரங்கத்தையும் நான் கண்டேன்.
தீக்குச்சித்தொழிற்சாலையின்
காட்சியே காட்சி! தேவையான அனைத்தையும் தங்கள் நாட்டிலேயே செய்து கொள்வதில் அவர்கள்
தீவிரமாக உள்ளனர். சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே ஜப்பானிய நீராவிக்கப்பல் போக்குவரத்து
உள்ளது.விரைவில் பம்பாய்க்கும் யோகோஹாமாவுக்கும் இடையிலும் கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த
அவர்கள் எண்ணியுள்ளனர்.
பலகோயில்களுக்குச்சென்றேன்.
எல்லாவற்றிலும் புராதன வங்க எழுத்துக்களில் எழுதப் பெற்ற சம்ஸ்கிருத மந்திரங்கள் காணப்படுகின்றன.
புரோகிதர்களில் ஒரு சிலருக்கு சம்ஸ்கிருதம்
தெரிந்திருக்கிறது. அவர்கள் புத்திசாலிகள். முன்னேற்றம், முன்னேற்றம் என்ற இக்கால வெறி
யொன்று உள்ளதே, அது அந்தப் புரோகித வர்க்கத்திலும் புகுந்துள்ளது.
டாட்டாவுக்கு
ஓர் ஆலோசனை
டாட்டா,
சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்டார். அவர் பின்னாளில் சுவாமிஜியைப் பற்றி கூறும்போது,
சுவாமிஜி ஜப்பானில் இருந்தபோது அவரைப் பார்த்த ஜப்பானியர்கள் பிரமித்து நின்றார்கள்.
புத்தருக்கும் சுவாமிஜிக்கும் அவ்வளவு உருவ ஒற்றுமை இருப்பதாக அவர்கள் கண்டார்கள்” என்றார். சுவாமிஜியும் டாட்டாவிடம் மிகவும் ஈர்க்கப்பட்டார்.
அவர் ஒரு தொழிலதிபர். அவர் நினைத்தால் தொழில்
தறையில் மாற்றங்கள் கொண்டு வர முடியும் என்பதை
உணர்ந்திருந்தார் சுவாமிஜி. அத்துடன் ஜப்பானில் தீப்பெட்டித் தொழிற்சாலையைப்
பார்த்ததும் சுவாமிஜியின் மனத்தில் பசுமையாக இருந்தது. ஒரு நாள் அவர் டாட்டாவிடம்,
நீங்கள் ஏன் தீக்குச்சியை ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்கிறீர்கள்?
அதனால் உங்களுக்குச் சிறிது லாபம் கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இந்தியாவின் செல்வவளம் ஜப்பானுக்கு
அல்லவா போகிறது! நீங்கள் இந்தியாவிலேயே ஒரு
தீப்பெட்டித் தொழிற்சாலை ஆரம்பிக்கலாமே! உங்களுக்கு லாபத்திற்கு லாபமும் கிடைக்கும்.
வேலையில்லாமல் தவிக்கின்ற இந்தியர்கள் பலருக்கு வேலையும் கிடைக்கும். இந்தியாவின் செல்வவளமும்
வேறெங்கும் போகாமல் பாதுகாக்கப்படும்” என்று கூறினார்.
சுவாமிஜியின்
தேசப்பற்றும், கூடவே இருந்த செயல்முறை அறிவும்,
இந்திய முன்னேற்றத்திற்கு அவர் காட்டிய வழியும் டாட்டாவின் மனத்தில் ஆழப்பதிந்தன. அவர்
சுவாமிஜியின் கருத்தைப் பின்னாளில் தமது நிறுவனத்தில் செயல்படுத்தவும் செய்தார். அதனைப்
பின்னாளில் (1898 நவம்பர் 23) சுவாமிஜிக்கு எழுதினார்.
ஜப்பானிலிருந்து
சிகாகோ வரை நான் உங்களுடன் பயணம் செய்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
அன்று நீங்கள் கூறிய கருத்துக்கள் பலவும் என் மனத்தில் பசுமையாக உள்ளன. இந்தியர்கள்
ஏதோ தவ வாழ்வில் ஈடுபடுவதுபோன்ற போக்கு அதிகரித்து வருவதைப்பற்றி நீங்கள் கூறினீர்கள்.
அத்தகைய மனப்போக்கை அழிப்பது அல்ல, சிரியான திசைகளில் திருப்பி விடுவதே நமது கடமை என்றும்
தெரிவித்தீர்கள். எனது இந்திய விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அதன் திட்டத்தில் உங்கள் கருத்துக்களை இணைக்கவுள்ளேன் என்பதைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
-
மனிதர்கள்
ஆகுங்கள்
-
சீனா ஆனாலும் ஜப்பான் ஆனாலும் சுவாமிஜி எதைக் கண்டாலும்
எதைக்கேட்டாலும் அவர் மனத்தில் இந்தியாவின் மேன்மை ஒன்றே ஓங்கியிருந்தது. இந்தியாவிற்கு
எவ்வளவோ பிறகு தோன்றிய நாடுகள் அம்புபோல் பாய்ந்து
முன்னேறிக்கொண்டிருக்க இந்தியாவிற்கு மட்டும் ஏன் இந்தப் பின்னடைவு? பயணத்தில் கண்ட
காட்சிகள் தந்த மகிழ்ச்சி மனத்தைக் கிளர்ந்தெழச்செய்த அதே நேரத்தில் அவர் இந்தியாவை
எண்ணி மனம் வாடினார். ஜப்பானை மெச்சுகின்ற அதே வீச்சில் இந்தியாவைச் சாடுகின்ற அவரது
கடிதம் தொடர்கிறது.
ஜப்பானியரைப்பற்றி
என் மனத்திலுள்ள அனைத்தையும் இந்தச் சிறு கடிதத்தில் எழுதி முடிக்க இயலாது. ஒரு விருப்பம்
மட்டும் எனக்கு உண்டு. நம் இளைஞர்கள் ஆண்டுதோறும் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் போக வேண்டும்.
இந்தியா சிறப்பும் நன்மையும் நிறைந்ததொரு கனவுலகம் என்றே ஜப்பானியர் இன்னும் கருதியிருக்கின்றனர்.
ஆனால் நீங்களோ, நீங்கள் என்ன மக்கள்! வாழ்நாள் முழுவதும் வெட்டிப்பேச்சு, வீண்பிதற்றல்,
நீங்கள் என்ன மக்கள் வாருங்கள், இந்த மக்களை வந்து பாருங்கள். திரும்பிப்போய் வெட்கத்தில்
உங்கள் முகத்தை மறைத்துக்கொள்ளுங்கள். வெறும் கிழட்டு இனம்! வெளியே வந்தால் உங்கள்
ஜாதி போய்விடுமே! பல நூற்றாண்டுகளாக, உருண்டு திரண்டு பெருகிக்கொண்டே போகின்ற மூட நம்பிக்கைச் சுமை உங்கள்
தலையை அழுத்திக் கொண்டிருக்கிறது.இந்த உணவா, அந்த உணவா? இது தீண்டத்தக்கதா, தீண்டத்
தகாததா என்றெல்லாம் வாதம் செய்வதிலேயே உங்கள் ஆற்றல் முழுவதும் விரயமாகிறது, இப்பொழுதும்
தான் நீங்கள் என்னசெய்து கொண்டிருக்கிறீர்கள்? கைகளில் புத்தகங்களை ஏந்திக் கடற்கரையில்
உலவியபடி, ஐரோப்பியரின் மூளை கண்டு பிடித்த துணுக்குகளை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறீர்கள்,
முப்பது ரூபாய் சம்பளத்திற்கான குமாஸ்தா வேலைக்காக, மிஞ்சிப்போனால், இளைய இந்தியாவின்
ஆசையில் உயர்வரம்பான ஒரு வழக்கறிஞன் ஆவதற்காக முனைந்து நிற்கிறீர்கள். இதில் நமது மாணவர்கள்
ஒவ்வொருவரின் நெளிகின்ற பட்டினிக் குழந்தைகளின் கும்பல்வேறு. இது அல்லவா உங்கள் லட்சணம்!
உங்களையும் உங்கள் புத்தகங்களையும் கோட்டுகளையும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களையும் மூழ்கடிக்கக்
கடலில் போதிய அளவு தண்ணீரா இல்லாமல் போய் விட்டது?
வாருங்கள்,
மனிதர்கள் ஆகுங்கள்! முன்னேற்றத்திற்கு எப்போதும் முட்டுக்கட்டையாக நிற்கின்ற புரோகிதக்
கூட்டத்தை உடைத்துத் தள்ளுங்கள். அவர்கள் திருந்தவே மாட்டார்கள். அவர்கள து இதயம் ஒருபோதும்
விரிந்து பெரிதாகாது. பல நூற்றாண்டுகளில் மூட நம்பிக்கை மற்றும் கொடுங்கோன்மையின் வாரிசுகள்
அவர்கள். முதலில் புரோகிதத்துவத்தை வேருடன்
பிடுங்கி எறியுங்கள். வாருங்கள், மனிதர்களாக ஆகுங்கள். உங்கள்குறுகிய வளைகளிலிருந்து
வெளியேறி, பார்வையை விரியுங்கள். நாடுகள் முன்னேறுவதைப்பாருங்கள்.
மனிதனை நீங்கள் நேசிக்கிறீர்களா? உங்கள் நாட்டை நேசிக்கிறீர்களா? அப்படியானால் வாருங்கள்,
உயர்ந்த சிறந்த விஷயங்களுக்காக நாம் பாடுபடுவோம். பின்னால் திரும்பிப் பார்க்காதீர்கள்.
அது மட்டும் வேண்டாம். மிக அன்பிற்குரியவர்கள், மிக நெருங்கியவர்கள் புலம்புவதைக் கண்டாலும்
திரும்ப வேண்டாம். பின்னால் பார்க்காதீர்கள், முன்னோக்கிச் செல்லுங்கள்.
-
அமெரிக்காவை
நோக்கி
-
ஜப்பானிலுள்ள கோபே என்ற இடத்தில் பெனின்சுலார் கப்பலிலிருந்து
இறங்கி இந்திய ராணி என்ற கப்பலில் வான்கூவரை நோக்கிப் புறப்பட்டார் சுவாமிஜி. அந்தக்
கப்பல் ஜுலை 14-ஆம் நாள் யோகோஹாமா துறைமுகத்திலிருந்து கிளம்பியது. இந்தப் பயணம் அவ்வளவு
வசதி யானதாக இருக்கவில்லை. கடுமையான குளிர் அவரை வாட்டியது. குளிருக்குப்போதிய துணிகள்
அவரிடம் இல்லை. வடக்கு பசிபிக் பகுதிகளில் ஜுலை மாதத்தில் கடுங்குளிர் நிலவும் என்பதை
அவரோ அவரது சென்னைச் சீடர்களோ எண்ணிப் பார்க்கவில்லை. கேப்டன் தமது துணிகளை சுவாமிஜிக்குக்
கொடுத்தார். அவை தான் அவரை ஓரளவுக்கேனும் காப்பாற்றின.
அவரது துன்பத்தையோ துயரத்தையோ பொருட்படுத்தாமல் வான்கூவரை நோக்கி சென்று கொண்டிருந்தது
‘‘இந்திய ராணி.”
சுவாமிஜியின்
நீண்ட கப்பல் பயணம் நிறைவுற்று, அவர் தமது திருப்பாதங்களைப் பதிக்க இருந்த அமெரிக்காவைச்
சற்றுப் பார்ப்போம். இந்தியாவைப்போல் இரண்டு மடங்கு பரந்தது அமெரிக்கா. மக்களில் சுமார் பதினொன்று சதவிகிதம் கறுப்பர் இனத்தைச்சேர்ந்தவர்கள்.
அவர்களைத்தவிர வெள்ளையர், செவ்விந்தியர், ஜப்பானியர்,
சீனர் என்று பலரும் வாழ்ந்தனர். பொருளாதாரத்திலோ அரசியலிலோ பெண்களுக்குச் சுதந்திரம்
இல்லை என்றாலும் சமுதாயத்தில் அவர்கள் உயர்வாக மதிக்கப் பட்டார்கள்.
ஐரோப்பாவை
ப் போலவோ, இந்தியாவைப்போலவோ, அல்லாமல் அமெரிக்காவில் அரசியல் ஒருமைப்பாடு காணப்பட்டது.
பரப்பில் பெரியதாக இருந்தாலும் பழக்க வழக்கங்களில் வேறுபாடோ, மொழிப்பிரச்சனையோ, வளர்ச்சிக்குப்
பாதகமான வேறு இடையூறுகளோ அங்கே அவ்வளவாக இல்லை. நாட்டின் ஒற்றுமையையோ , பாதுகாப்பையோ
குலைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்ற அண்டை நாடுகள் இல்லை.
செல்வ வளம்
இயற்கை வளங்களும் அது போலவே மனித முயற்சிகளும் கைகொடுத்ததால் அமெரிக்கா செல்வ வளத்தில்
அன்றும் உலகில் முதல் நாடாகத் திகழ்ந்தது. நிலக்கரி, இரும்பு, எண்ணெய் போன்றவை அங்கு
ஏராளம் கிடைத்தன. கூடவே, தொழில்நுட்பமும், விரைந்து முன்னேற்றம் கண்டு வந்தது. இயற்கை
வளத்தைச் சரியாகப் பயன்படுத்துகின்ற அறிவுக்கூர்மையும் , புதியவற்றைக் கண்டுபிடிப்பதற்கான
திறமையும் இணைந்து அமெரிக்காவிற்கு இந்தச் செல்வ வளத்தை அளித்தன. இந்த நாட்டில் பணம்ஆறுபோல்
பாய்கிறது. அழகு அதன் சிற்றலை,கல்வி அதன் பேரலை. செல்வத்தில் இவர்கள் புரள்கிறார்கள்..........
இங்கே அற்புதமான தேஜசும் வலிமையும் விளையாடுகின்றன. ஆகா! என்ன பலம், என்ன செயல்திறன்,
என்ன ஆண்மை! என்று வியந்து நிற்கிறார் சுவாமிஜி. பல கடிதங்களில் அவர் அமெரிக்காவின்
ஆற்றலையும் திறமையும் புகழ்கிறார்.
புதிய கண்டு
பிடிப்புகள்
-
சுவாமிஜியின்
புகழ்ச்சிக்குக் காரணம் இல்லாமலும் இல்லை. அவர் சென்ற 1890-களில் தான் புதிய கண்டு
பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்றன. 1892- இல் அலெக்சாண்டர் கிரகாம் பெல் தொலைபேசி கண்டு
பிடிப்பில் முதல் அடியை எடுத்து வைத்தார். மின்சாரத்தின் துணையுடன் நியூயார்க்கிலிருந்து
சிகாகோவிற்கு அவரால் தொலைபேசி வழியாகப்பேச முடிந்தது. அதே வருடம் தான் நியூயார்க்கில்
,ஈஸ்ட்மேன் கோடாக் கம்பெனியைத் தொடங்கினார்.
1893-இல்
ஹென்றி ஃபோர்ட் முதன்முதலாக பெட்ரோலில் இயங்குகின்ற எந்திரத்தை ஓடச்செய்தார். அந்த
வருடம் தான் நிக்கோலா டெஸ்லா மின்சாரத்தின் விளைவை கொலம்பியன் உலகக் கண்காட்சியில்
காட்டினார்.
ஆனால் பணம்,
இன்ப நாட்டம் என்று ஓடியதில் மனிதர்களின் வாழ்க்கை உயர் நோக்கங்கள் எதவும் அற்றதாக
இருந்தது. அமெரிக்கர்களுக்கு இந்த வேகத்தைக்கொடுத்தது புரோட்டஸ்டன்ட் மதச் சீர்திருத்தவாதியான
காலிவினின் மதக்கொள்கைகள். கால்வின் என்ன சொன்னார்? சிலர் சொர்க்கத்திற்குப் போவார்கள்,
சிலர் நரகத்திற்குப் போவார்கள்- இதனைக் கடவுள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். சொர்க்கத்திற்குப்போவது
யார்? பணக்காரர்கள், நல்ல ஆரோக்கியம் வாய்ந்தவர்கள்,
மகிழ்ச்சி ஆகியவை இறையருளின் அடையாளங்கள். யாரிடம் இவை உள்ளதோ அவர் மீது இறையருள் இருப்பதாக அர்த்தம். எனவே அவர்கள் சொர்க்கத்திற்குப்போவார்கள்.
காலிவினின்
இந்தக் கருத்து மக்களுக்கு வாழ்க்கையின் மீது ஒரு வேகத்தைக்கொடுத்தது. யாரும் நரகத்திற்குப்
போக விரும்பவில்லை. எனவே பணம் சேர்ப்பதில் அவர்கள் மித மிஞ்சிய வேத்துடன் ஈடுபட்டார்கள்.
ஏழைகளைச் சுரண்டியோ, பலவீனமான நாடுகளை அடிமைப்படுத்தியோ, இரக்கமே இல்லாமல் போட்டியிட்டோ
எப்படியாவது பணம் சேர்க்க வேண்டும் என்ற வேகத்தை மேலை நாடுகளுக்குக் கொடுத்தது கால்வினின்
இந்தக் கோட்பாடு தான். இந்தக் கண்ணோட்டத்தை சுவாமிஜி தமது சொற்பொழிவுகளில் மிகவும்
கண்டித்தார்.
உயர்ந்த ஆன்மீகத்தைப்புரிந்து கொள்ள மேலை நாட்டினருக்கு
நீண்ட காலம் ஆகும். அவர்களுக்கு எல்லாம் ரூபாய், அணா, பைசா தான். மதம் செல்வத்தையோ,
உடல்நலத்தையோ, நீண்ட ஆயுளையோ தருமானால் அனைவரும் அதில் கூடுவார்கள், இல்லாவிட்டால்
அருகில் கூட போக மாட்டார்கள். இது ஒரு பெரிய நாடு, பெரும்பாலோனோர் மதம் பற்றியெல்லாம்
அதிகமாக அக்கறை கொள்வதில்லை. நூற்றுக்கு 99.9 சதவிகிதம் பேரும் அப்படித்தான். வெறும்
நாட்டுப்பற்று என்ற ரீதியில் மட்டுமே கிறிஸ்தவ மதம் இங்கே உள்ளது. அவ்வளவு தான் அதற்குமேல்
எதுவும் இல்லை என்று எழுதுகிறார் சுவாமிஜி.
யூத மதம்
போன்ற ஓரிரு மதங்களைத்தவிர கிறிஸ்தவ மதத்தில் சுமார் 200 பிரிவுகள் இருந்தன. இந்த 200 பிரிவுகளும் சுமார் 2 லட்சம் அமைப்புகள்
மூலம் செயல்பட்டன. ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள மக்களை மதம் மாற்றுவது இவர்களது
முக்கியப் பணியாக இருந்தது. இதற்காக அந்த நாட்களில் ஆண்டுதோறும் சுமார் 33 கோடி டாலர்
பணம் செலவழிக்கப் பட்டது. அமெரிக்காவில் புரோட்டஸ்டன்ட் பிரிவினர் அதிகமாக இருந்தனர்.
கத்தோலிக்கர்கள் அதில் பாதி எண்ணிக்கையே இருந்தனர். கிறிஸ்தவ மதத்தின் பிரிவுகள் பல
செயல்பட்டு வந்தன. அவற்றுள் பிரஸ்பிட்டீரியன் , பேப்பல், எப்பிஸ்கோப்பலியன், கான்கிரிகேஷனல்,
மெதடிஸ்ட், யூனிடேரியன், பேப்டிஸ்ட், மனச்சிகிச்சை, கிறிஸ்டியன் சயின்ஸ், ஸ்பிரிட்டிசம்,
எவல்யூஷனிசம், போன்ற பிரிவுகள் அதிக அளவில் மக்களைக் கவர்வதாக இருந்தன.
200-க்கு
மேல் மதப் பிரிவுகள் இருந்தும், 33 கோடி டாலருக்கு மேல் பணம் செலவழித்தும் அமெரிக்காவின்
46 சதவிகிதம் மக்களே ஏதேனும் மதப் பிரிவுகளைச் சார்ந்திருந்தனர். மற்றவர்கள் பணத்தைக்
குறிக்கோளாகக்கொண்ட வாழ்க்கை தான் வாழ்ந்தனர்.
விஞ்ஞானத்தின்
வளர்ச்சியும் ஜனநாயகக் கருத்துக்களின் வளர்ச்சியும் தான் பலரை மதப் பிரிவுகளின் மீது
நம்பிக்கை இழக்கச் செய்திருந்தன. இவர்கள் புதுமைக் கருத்துக்களை நாடினர். எமர்சனின் டிரான்சென்டென்டலிசம் முக்கியமான ஓர் இயக்கமாக வளர்ந்தது.
இது கன்கார்ட் இயக்கம் என்றும் அழைக்கப் பட்டது. தரோ இதில் கவரப்பட்ட புதிய சிந்தனையாளர்களுள்
ஒருவர். சிறந்த கவிஞரான வாலட் விட்மேன் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவரே. இந்த இயக்கத்தைச்சேர்ந்த
சிந்தனையாளர்கள் பலருக்கும் இந்து மதக் கருத்துக்களின் தாக்கம் இருந்தது. அமெரிக்க
எழுத்தாளர்கள் இதைப்பற்றி எழுதவில்லை என்றாலும் பிரெஞ்சு அறிஞரான ரோமா இதனைச் சிறப்பாகச்
சுட்டிக் காட்டியுள்ளார். எமர்சனின் தூண்டுதலுக்கான மூல காரணம் எது தெரியுமா? இந்த
நூல், இந்தக் கீதை தான். அவர் கார்லைலைப் பார்க்கச்சென்றார். கார்லைல் அவருக்குக் கீதையைப்
பரிசாக அளித்தார். அந்தச் சிறு நூல்தான் எமர்சனின் கன்கார்ட் இயக்கத்திற்குக் காரணமாகியது.
அமெரிக்காவின் பெரிய இயக்கங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் இந்த இயக்கத்திற்குக்
கடன் பட்டவை என்கிறார் சுவாமிஜி.
மதப் பிரிவுகளிலும் மனச் சிகிச்சை, கிறிஸ்டியன் சயின்ஸ்,
ஸ்பிரிட்டிசம், எவல்யூஷனிசம், போன்றவை இந்து மதக் கருத்துக்களின் ஆதிக்கம் உடையவை.
No comments:
Post a Comment