இந்துமதம்-வகுப்பு-20
நாள்-11-6-2020
..
சந்நியாச ஆஸ்ரமம்
..
முற்காலத்தில் இந்தியாவில் நிலவிய பிரம்மச்சர்யம்,கிருஹஸ்தம்,வனப்பிரஸ்தம்,சந்நியாசம் என்ற நான்கு படிகள் இருந்ததை பார்த்தோம்.
படிப்படியாக ஒவ்வொரு நிலையையும் கடந்து சந்நியாச நிலையில் வீடு பேற்றை அடையாமல் சிலர் இறந்துவிடுவதுண்டு.
அப்படி இறப்பவர்கள் மீண்டும் பிறக்கும்போது சிறுவயதிலேயே பூரணஞானத்துடன் பிறக்கிறார்கள்.
எனவே அடுத்த பிறவியலும் அவர்கள் படிப்படியாக பிரம்மச்சர்யம்,கிருஹஸ்தம் என்று முன்னேறத்தேவையில்லை.
முற்பிறவியில் எங்கே நிறுத்தினார்களோ அங்கிருந்து தொடங்கலாம்.
சிறுவயதிலிலேயே சிலரிடம் சந்நியாசத்திற்கான எண்ணங்கள் எழும்புகின்றன.
முக்தி அடைவதற்காக வீட்டை துறந்து காடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள்.
இவ்வாறு காட்டை அடையும் இளம்துறவிகள் ஏற்கனவே அங்கு வசிக்கும் பிற துறவிகளுடன் சேர்ந்து ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
இப்படி இளம் வயதில் துறவு வாழ்க்கைக்கு வருபவர்கள் ஒன்று சேர்ந்திருக்கும் இடம் மடம் என்று அழைக்கப்பட்டது.
ஆதிகாலத்திலேயே இப்படிப்பட்ட இளம் துறவிகள் பலர் இருந்திருக்கிறார்கள்
இதற்கு உதாரணமாக சுகர் என்பவரைக்கூறலாம்.
..
சிலர் பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்தில் பாடம் பயின்று முடித்த பிறகு இல்லறவாழ்க்கைக்கு திரும்ப விரும்புவதில்லை. நேரடியாக சந்நியாச வாழ்க்கை வாழ விரும்பி காடுகளுக்கு சென்று ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
ஆதிகாலத்தில் இப்படிப்பட்டவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்.
..
சிலர் இல்லற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும்போதே திடீரென்று துறவு எண்ணங்களுக்கு ஆட்படுகிறார்கள்.மனைவியின் சம்மதத்தோடு இல்லறவாழ்க்கையை துறந்து நேராக சந்நியாச வாழ்க்கைக்கு சென்றுவிடுகிறார்கள்.
...
1. பிரம்மச்சர்யம்,கிருஹஸ்தம்,வானப்பிரஸ்தம் வழியாக சந்நியாச ஆஸ்ரமத்தை அடைபவர்கள்
2.இல்லறத்தில் நிறைவு ஏற்பட்டு மனைவியின் அனுமதியோடு சந்நியாச ஆஸ்ரமத்தை அடைபவர்கள்.
(மனைவியின் அனுமதி இல்லாமல் சந்நியாச வாழ்க்கைக்கு செல்ல சாஸ்திரம் அனுமதிப்பதில்லை)
3.பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலிருந்து நேராக சந்நியாச ஆஸ்ரமத்தை அடைபவர்கள்
4.பிறவியிலேயே சந்நியாச ஆஸ்ரமத்தில் இருப்பவர்கள்.
..
இவைகள் எல்லாம் இந்து சமூகத்தில் அந்த நாளில் நிலவிய சந்நியாச நிலைகள்.
..
இவைதவிர இன்னும் சிலர் சந்நியாச ஆஸ்ரமத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இவைகள் பிற்காலத்தில் ஏற்பட்ட வழக்கங்கள்.
.
1.கணவனை இழந்த பெண்கள்.
இவர்கள் சந்நியாச ஆஸ்ரமத்தை அடைவதற்கான காடுகளுக்கு செல்ல வேண்டியதில்லை.வீட்டிலேயே வாழலாம்.ஆனால் சந்நியாசிகளுக்குரிய நியமங்களை கடைபிடிக்க வேண்டும்.
(முற்காலத்தில் சிறுவயதில் பெண்கள் கணவனை இழந்தால் மறுமணம் செய்ய அனுமதி இருந்திருக்கிறது.மகாபாரதத்தில் இதற்கான பல ஆதாரங்கள் இருக்கின்றன.)
.
2.தீரத நோய் உள்ளவர்கள்.
முற்பிறவியில் இவர்கள் செய்தபாவம். அல்லது இவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் செய்த பாவம் காரணமாக சிலருக்கு இளம் வயதிலேயே தீராத நோய் ஏற்படுகிறது. சிலருக்கு மனநலம் பாதிக்கப்படுகிறது.அவர்கள் குடும்பத்தில் வாழ்ந்து பிறருக்கு தொல்லைகள் கொடுக்காமல் இருப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுகிறார்கள்.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிச்சை ஏற்று வாழும் பிச்சைக்கார வாழ்க்கை வாழ்கிறார்கள்.
.
3.திருமணம் செய்ய தகுதியற்றவர்கள்
சிலருக்கு திருமணம் செய்வதற்கான தகுதிகள் இருக்காது. அப்படிப்பட்டவர்களையும் சமூகம் அங்கிகரிப்பதில்லை. வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுகிறார்கள்.அவர்கள் பிச்சைஏற்று வாழ்கிறார்கள்..
.
4.கடும் ஏழை
ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப்படுபவர்கள்,உண்பதற்கு உணவில்லாத,தங்குவதற்கு இடம் இல்லாத ஏழைகள் பிச்சைஏற்று வாழும் வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறான்.
..
5.இல்லறவாழ்க்கையில் அமைதியின்மை.மனைவியடன் தீராத பகை. நிம்மதியற்ற வாழ்க்கை. இவை காரணமாக மனைவியை பிரிந்து வீட்டைவிட்டு துறவு வாழ்க்கைக்கு சென்றுவிடுகிறார்கள்.
..
முக்தி அடைவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.
.
ஒரு மனிதன் படிப்படியாக வளர்ச்சியடைந்து பூரணத்துவத்தை அடைவது ஒருவகை.
மனிதன் படிப்படியாக பின்னோக்கி சென்று ஆரம்பித்த இடைத்தை அடைவது இன்னொருவகை
..
நமது சாஸ்திரங்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்து பூரணத்துவத்தை அடையும் துறவுநிலையைத்தான் ஆதரிக்கின்றன.
படிப்படியாக பின்னோக்கி சென்று ஆரம்பநிலையை அடையும் துறவு வாழ்க்கையை ஆதரிக்கவில்லை.
புத்தமதமும் சமண மதமும் வளர்ந்த காலத்தில் பிச்சைஏற்று வாழும் துறவிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
..
ஒரு மனிதன் எந்த வேலையும் செய்யாமல் பிச்சைஏற்று வாழ்ந்துகொண்டே இருந்தால் படிப்படியாக அவனது புண்ணியபலன் குறைந்து கடைசியில் மனிதவாழ்க்கைக்கு தேவையான புண்ணியத்தையே இழந்துவிடுகிறான்.
அப்படிப்பட்டவர்களை யாரும் மதிப்பதில்லை.
உலகத்தை துறந்து பிச்சையேற்று வாழும் துறவிகளை மக்கள் மதிக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.
.
இன்னொருவகை துறவிகள் இருக்கிறார்கள்.
இவர்கள் தங்களுக்கு தெரிந்த ஆன்மீக அறிவை மக்களுக்கு போதிக்கிறார்கள்.
பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
இதனால் புண்ணியத்தை பெருக்கிக்கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட துறவிகளை நாடியே மக்கள் செல்கிறார்கள்.
No comments:
Post a Comment