Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-28

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-28

🌸

ராமகிருஷ்ண மிஷன்

 

 அதன் பிறகு சுவாமிஜி தயங்கவில்லை. 1897 மே- 1ஆம் நாள் பலராம் போஸின் வீட்டில் இயக்கத்திற்கான கூட்டம் ஒன்றைக் கூட்டினார். இதில் ஸ்ரீராமகிருஷ்ணரின்  துறவி சீடர்கள் பலரும் இல்லறச் சீடர்கள் பலரும் கலந்து கொண்டனர். பாமர மக்களின் உயர்விற்காகப் பாடுபடுகின்ற இயக்கம் ஒன்றை அன்று ஆரம்பித்தார் சுவாமிஜி. கூட்டத்தில் சுவாமிஜி கூறினார்,

 

 யாருடைய பெயரால் நாங்கள் துறவியர் ஆனோமோ, யாரை லட்சியமாகக் கொண்டு நீங்கள் இல்லறத்தார்களாகக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளீர்களோ, யாருடைய திருநாமமும் வாழ்க்கையும் செய்தியும், அவர் மறைந்த பன்னிரு  வருடங்களுள் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்குக் கீழை நாடுகளிலும் மேலை நாடுகளிலும் பரவியுள்ளதோ அவரது பெயரால்  இந்த இயக்கம் அழைக்கப்படும். எனவே இந்த இயக்கம் ”ராமகிருஷ்ண மிஷன் என்று பெயர் பெறும். நாங்கள் ராமகிருஷ்ண தொண்டர்கள் மட்டுமே. நீங்களும் இந்தப் பணியில் உதவி செய்யுங்கள். இதனை அங்கிருந்த இல்லச் சீடர்கள் இதயபூர்வமாக வரவேற்றனர். பின்னர் சுவாமிஜி ராமகிருஷ்ண மிஷனின் நோக்கம்,செயல்பாடு, ஆகியவற்றை விரிவாகக் கூறினார். இந்த இடத்தில் சுவாமிஜி கூறிய ஒரு கருத்து மிகவும் ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. அவர் கூறினார், ஜனநாயக  அடிப்படையில்  செயல்படுகின்ற ஓர் இயக்கத்தை இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் நடத்த முடியாது. எனவே இதற்கு நாம் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவரது ஆணைகளை உறுப்பினர் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

 

 இதன்படி சுவாமிஜி பிரம்மானந்தரும் யோகானந்தரும்  கல்கத்தா கிளையின் தலைவராகவும்  உபதலைவராகவும் பொறுப்பேற்றனர். நரேந்திரநாத் மித்ரர்( இளைய நரேன்) செயலாளரானார். மற்ற பொறுப்பிற்கும் உறுப்பினர்கள்  தேர்ந்தெடுக்கப் பட்டனர். சுவாமிஜி பொதுத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

 இல்லறச் சீடர்களில் பலரும் சென்றபிறகு சுவாமிஜி யோகானந்தரிடம், இப்படி பணி ஆரம்பிக்கப் பட்டு விட்டது. ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுளத்தால் இது எப்படி வெற்றியடைகிறது என்று பார்ப்போம்  என்றார்.

 

யோகானந்தர்-

 இவற்றையெல்லாம் நீ மேலை நாட்டு முறைகளில் செய்கிறாய். இத்தகைய விஷயங்களை ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னாரா?

 

சுவாமிஜி-

 இது ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்திற்கு ஏற்புடையதல்ல என்று உனக்கு எப்படி தெரியும்? அவர் எண்ணற்ற கருத்துக்களின் இருப்பிடமாக இருந்தார். உனது எல்லைகளுக்குள் அவரை அடைக்கப் பார்க்கிறாயா? அந்த எல்லைகளை உடைத்து, அவரது கருத்துக்களை நான் உலகெங்கும் பரப்புவேன். தமக்குக் கோயில் கட்டவும், தம்மை வழிபடவும் அவர் என்னிடம் ஒரு போதும் கூறியதில்லை. அவர் போதித்த ஆன்மீக சாதனைகள், உயர்ந்த லட்சியங்களை நாம் பின்பற்ற வேண்டும். பிறருக்கு காட்ட வேண்டும். கருத்துக்கள் எண்ணற்றவை, லட்சியத்தை அடைவதற்கான பாதைகளும்  எண்ணற்றவை. ஏற்கனவே மதப் பிரிவுகளால் நிறைந்துள்ள இந்த உலகத்தில் இன்னும் ஒரு பிரிவை உண்டாக்க நான் பிறக்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகளில் தஞ்சம் அடைந்த நாம் பேறு பெற்றவர்கள். அவரது செய்தியை உலகெங்கும் பரப்புவது நமது கடமை.

 

யோகானந்தர் ஒரு வார்த்தையும் பதில் பேசிவில்லை. சுவாமிஜி தொடர்ந்தார்.

 

 எனது வாழ்க்கையில் அவரது அருளை எத்தனையோ முறை நான்  உணர்ந்துள்ளேன். அவரே என் பின்னால் நின்று இந்தப் பணிகள் அனைத்தையும் செய்கிறார். பசியால் வாடி, களைத்து, மரத்தடியில், சாய்ந்த போதும், கௌபீனத்திற்குக் கூட துணியில்லாமல் துவண்டபோதும், கையில் தம்பிடிக் காசு   இல்லாமல் உலகையே சுற்றி வரத் துணிந்தபோதும் அவரது அருளே என்னை ஒவ்வொரு கணமும் காத்தது. இந்த விவேகானந்தனைக் காண சிகாகோவின் தெருக்களில் ஜனங்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தபோதும், எந்தப் புகழின் நறில் ஒரு பகுதியைப்பெற்றால் கூட ஒருவன் தலைக்கால் புரியாமல் குதிக்கத் தொடங்கிவிடுவானோ, அந்தப் புகழை அடைந்தபோதும் எந்தச் சலனமும் இல்லாமல் அதனை எதிர்கொள்ள  அவரது அருளால் தான் முடிந்தது. அவரது அருளால் வெற்றியே எனக்கு  எங்கும்  கிடைத்துள்ளது. இப்போது நான் இந்த நாட்டிற்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன். உங்கள் சந்தேகங்களையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு எனது பணியில் உதவுங்கள். அவரது பேரருளால் நாம் அரிய காரியங்களைச் சாதிப்பதை நீங்கள் காண்பீர்கள்.

 

  யோகானந்தர்- நீ நினைப்பது நடக்கும். ஸ்ரீராமகிருஷ்ணர் உன் மூலம் செயல்படுவதை நான் தெளிவாக காண்கிறேன். ஆனாலும் சில நேரங்களில் சந்தேகம்   தலை தூக்குகிறது.

 

சுவாமிஜி- விஷயம் இதுதான், சீடர்கள் புரிந்து கொண்டதை விட ஸ்ரீராமகிருஷ்ணர் எவ்வளவோ மகோன்னதமானவர். எண்ணற்ற வழிகளில் விரியக்கூடிய எண்ணற்ற ஆன்மீகக் கருத்துக்களின் திரண்ட வடிவம் அவர். பிரம்ம ஞானத்தை அளவிட்டு விடலாம். ஆனால் நமது குருதேவரின் மன ஆழங்களை அளக்க இயலாது. அவரது கண்களின் ஓர் அருட்பார்வை லட்சக்கணக்கான விவேகானந்தர்களை  இந்தக் கணமே உருவாக்கிவிடும். ஆனால் அவர் இந்த முறை அவர் என்னைக் கருவியாகக் கொண்டு, என் மூலம் செயல் பட விரும்பியுள்ளார் என்றால் அவரது திருவுளத்திற்குப் பணிவதைத் தவிர வேறு என்ன செய்வது!

 

 அன்று அதன் பிறகு அந்த விவாதத்தை யாரும் தொடர வில்லை. சுவாமிஜி அங்கிருந்து சென்றபிறகு யோகானந்தர்  சுவாமிஜியின் சீடரான சரத்சந்திரரிடம் கூறினார், நரேன் குருதேவரிடம் வைத்துள்ள பக்தியில் நூறில் ஒரு பங்கு இருந்தாலும் நான் பேறு  பெற்றவன். அவனிடம் ஒரு ரிஷியின் வேத ஞானமும், சங்கரரின் துறவும், புத்தரின் இதயமும், சுகதேவரும் பிரம்ம ஞானமும் ஒருங்கிணைந்துள்ளன.

 

சேவை செய்பவரின் சேகவன் நான்-

 

 சேவை- தர்மம் பற்றிய விஷயத்தில் அத்புதானந்தருக்கு சந்தேகம் இருக்கவே செய்தது. அத்புதானந்தர் படிப்பறிவு இல்லாதவர், அதே வேளையில் ஆன்மீகத்தில் உயர் நிலைகளைக் கண்டவர். குருதேவரின் அருளால் விளைந்த அற்புதம் இவர், என்பதற்காக சுவாமிஜி அவருக்கு ” அத்புதானந்தர்  என்ற பெயர் அளித்திருந்தார். ஒரு நாள் யோகானந்தர் அத்புதானந்தர் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்கள்  சிலருடன் சுவாமிஜி பலராம் போஸின் வீட்டடில் அமர்ந்திருந்தார். அப்போது சேவை- தர்மம் பற்றிய பேச்சு வந்தது. அத்புதானந்தர் சுவாமிஜியிடம் கூறினார்.

 

 ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தியை வற்புறுத்தினார். ஆன்மீக சாதனைகள் செய்து இறையனுபூதி பெற வேண்டும் என்று அனைவரையும் தூண்டினார். ஆனால் நீயோ  எல்லோரிடமும், வெளியில் சென்று போதிக்குமாறும், ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் சேவை செய்யுமாறும் கூறுகிறாய். இது மனத்தைப் புறநோக்குக்கொண்டதாக அல்லவா செய்யும்? மனம் வெளியில் செல்வது சாதனைவாழ்வில் ஒரு தடை  அல்லவா? அது மட்டுமின்றி மடங்கள், ஆசிரமங்கள், சேவாசிரமங்கள், தேச பக்தி போன்றவை  எல்லாம் மேலை நாட்டு வழிமுறைகள், புதியதொரு துறவியர் பரம்பரையை உருவாக்குவதாக நீ கூறியதும் அது போன்றதே, இவை எதையும் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறிய தாக எனக்குத் தெரியவில்லை.

 

 ஆரம்பத்தில் சுவாமிஜி இதனைப்பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உனக்கு என்ன தெரியும், நீ படிப்பறிவற்றவன். ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ஏற்ற சீடன் நீ. குரு எப்படியோ சிஷ்யன் அப்படி! பிரகலாதனின் படிப்பு நின்றது போல் க என்ற எழுத்துடன் உனது படிப்பும் நின்றுவிட்டது. ”க என்று கேட்டவுடனேயே பிரகலாதனுக்குக் கிருஷ்ணனின் நினைப்பு வந்துவிட்டது. படிப்பு அதற்கு மேல் போகவில்லை என்று மென்மையாகத் தான் பதில் கூற ஆரம்பித்தார். ஆனால் நேரம் போகப்போக அவரது நிலை மாறியது. அவரது குரல் கம்பீரமாகியது. ஆழ்ந்த உணர்ச்சிவசப்பட்டவராக அவர் பேசத் தொடங்கினார்.

 

 நீங்கள் பக்தர்கள், அதாவது உணர்ச்சிவசப்படுகின்ற முட்டாள்கள்! மதத்தைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? வெறும் குழந்தைகள் நீங்கள். கைகளைக் கூப்பிக்கொண்டு, ஆஹா, பிரபோ! உன் மூக்கு எவ்வளவு அழகாக  இருக்கிறது. உன் கண்கள் எவ்வளவு இனிமையைப் பொழிகின்றன. என்றெல்லாம் பொருளற்ற பிதற்றல்களைப் பிதற்றவே  உங்களுக்குத் தெரியும். இப்படியெல்லாம் உளறிவிட்டால்  உங்கள் முக்தி நிச்சயம். இறுதி நேரத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் வருவார், உங்கள் கையைப் பிடித்துச் சொர்க்கத்தின் உச்சிக்குக்கொண்டு போய் விடுவார் என்று நினைத்துக் கொள்கிறீர்கள். படிப்பு  , போதனை, மனித நலப்  பணிகள் போன்றவையெல்லாம் உங்களைப் பொறுத்தவரை மாயை. ஏனெனில் ஸ்ரீராமகிருஷ்ணர் இதையெல்லாம் செய்யவில்லை அல்லது  அவர் யாரோ ஒருவரிடம், முதலில் கடவுளைத்தேடு, பிறகு வேண்டுமானால் மனிதநலப் பணிகள் எல்லாம் செய்து கொள், என்று கூறிவிட்டார். இறையனுபூதி என்பது அவ்வளவு  எளிதா என்ன! முட்டாள்களின் கையில் தம்மை ஒரு விளையாட்டுப் பொருளாக வைத்துக்கொள்ளும் அளவிற்கு கடவுள் அறிவற்றவர் அல்ல.

 

 இடிபோல் முழங்கினார்  சுவாமிஜி. பின்னாளில் அத்புதானந்தர் கூறினார், அப்பப்பா! நரேன் முழங்கியதைக்கேட்டு நான் அதிர்ந்து விட்டேன். எங்கள் சகோதரத்துறவி ஒருவர் இதே கருத்தைத் தொடர முற்பட்டார். நரேன் மேலும் மேலும் தீவிரமானான்.

 

 சுவாமிஜியின் இடி முழக்கம் தொடர்ந்தது-

-

 என்னைவிட  ஸ்ரீராமகிருஷ்ணரை நன்றாக அறிந்திருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்,. இதயத்தின் மென்மைஉணர்ச்சிகளை எல்லாம் கொன்று, ஒரு வறட்டுப் பாதை வழியாகச் சென்று அடைகின்ற ஒன்றுதான் ஞானம் என்று தான் நீங்கள் கருதுகிறீர்கள். நீங்கள் பக்தி என்று கூறுவது வெறும் உணர்ச்சிப்பெருக்கு. அது ஒரு மனிதனை ஆண்மையற்றவன் ஆக்குகிறது. கடுகளவு நீங்கள் புரிந்துகொண்ட ராமகிருஷ்ணரை உலகிற்குப்போதிக்க விரும்புகிறீர்கள். விலகி நில்லுங்கள்! உங்கள் ராமகிருஷ்ணரைப் பற்றி யார் கவலைப் பட்டார்கள்? உங்கள் பக்தியும் முக்தியும் யாருக்கு வேண்டும்? உங்கள் சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றி யாருக்குக் கவலை? சோம்பல் தூக்கத்தில் ஆழ்ந்துள்ள என் நாட்டு மக்களை விழித்தெழச்செய்து, அவர்களைச்சொந்தக் காலில் நிற்கச் செய்து, அவர்களை மனிதர்களாக்கி, கர்ம யோகத் தீயை அவர்களுள்  என்னால் மூட்ட முடியுமானால், அதற்காக ஆயிரம் முறை மகிழ்ச்சியுடன் நரகத்திற்குச் செல்லவும் நான் தயாராக இருக்கிறேன்.

 

 ஸ்ரீராமகிருஷ்ணரையோ வேறு யாரையோ பின்பற்றுபவன் அல்ல நான்,எனது திட்டங்களை யார் செயல்படுத்துகிறானோ அவனைப் பின்பற்றுபவன் நான். ராமகிருஷ்ணருடையவோ அல்லது வேறு யாருடையவோ சேவகன் அல்ல நான், சொந்த முக்தியைப் பற்றி கவலைப் படாமல் பிறருக்கு யார்உதவுகிறானோ யார் சேவை செய்கிறானோ அவனது சேவகன் நான்.

 

 சவாமிஜியின் குரல் தழுதழுத்தது. அவரது உடம்பு ஆழ்ந்த உணர்ச்சிப் பெருக்கால் ஆடியது. அவரால் தமது உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த இயலவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. திடீரென்று எழுந்து ஒரே ஓட்டமாகத் தமது அறைக்குள் சென்றுவிட்டார் அவர். சகோதரச் சீடர்கள் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர். சுவாமிஜியிடம் இப்படிப்பேசியிருக்கக் கூடாதோ என்று அவர்கள் கலங்கினார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு ஓரிருவர்அவரது அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கே சுவாமிஜி ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரது உடம்பு  ஒரு கட்டை போல் விறைத்திருந்தது. பாதி மூடிய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவரது உடம்பிலுள்ள முடிகள் குத்திட்டு நின்றன. சகோதரச் சீடர்கள் அமைதியாக வெளியேறினர்.

 சுமார் ஒரு மணி நேரம் சுவாமிஜி அந்தத் தியான நிலையில் அமர்ந்திருந்தார். பிறகு எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியில் வந்தார். அங்கே ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. அந்த மௌனத்தைத் தமது மென்மையான குரலால் கலைத்து சுவாமிஜி பேசினார்.

 

 ஒருவன் பக்தியைப் பெறும்போத அவனது இதயமும்  நரம்புகளும் மிகவும் மிருதுவாகி விடுகின்றன. ஒரு மலரின் ஸ்பரிசத்தைக்கூட தாங்க இயலாத அளவிற்கு அவை மென்மையாகி விடுகின்றன. இப்போதெல்லாம் என்னால் ஒரு நாவல் கூட படிக்கு முடிவதில்லை. ஸ்ரீாமகிருஷ்ணரை நீண்ட நேரம் நினைக்கவோ அவரைப் பற்றி பேசவோ முடிவதில்லை சிறிது நேரத்திற்குள் தன் வசமிழந்து உணர்ச்சிப்பெருக்கில் ஆழ்ந்து விடுகிறேன். அதனால் என்னுள் பக்தியுணர்வு எழுவதை எப்போதும் நான் அடக்கிவைக்கவே முயன்று கொண்டிருக்கிறேன். எனது தாய் நாட்டிற்கு நான் செய்ய வேண்டிய பணி இன்னும் முடியவில்லை. உலகிற்கு நான் அளிக்க வேண்டிய செய்தி இன்னும்  முற்றுப்பெறவில்லை. அதனால் என்னை நான்  ஞானம் என்னும் இரும்புச் சங்கிலியால் கட்டிவைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். பக்தி உணர்வுகள் என்னுள் எழுவது போல் தோன்றினால் உடனே கடினமான ஞானத்தை என்னுள் எழுப்பி, என்னைத் திடமாக்கிக்கொண்டு, அந்தபக்தி உணர்வுகளை ஓங்கி அடித்து ஒதுக்கிறேன்.ஒ! நான் செய்ய வேண்டிய பணி இன்னும் உள்ளது! ஸ்ரீராமகிருஷ்ணரின் அடிமை நான். நான் பூர்த்தி செய்வதற்காக அவர் தமது பணியை விட்டுச் சென்றுள்ளார். அதை நிறைவேற்றும் வரை அவர் எனக்கு ஓய்வு தர மாட்டார். ஓ! அவரைபற்றி நான்  எப்படி பேசுவேன்! ஒ! அவர் என் மீது கொண்டிருந்த அவர்!

மீண்டும் சுவாமிஜி பக்தியுணர்வுகளில் ஆழ்வது போல் தோன்றியது. உடனே யோகானந்தரும் மற்றவர்களும் அவரிடம், சுவாமிஜி, இந்த அறை ஒரே சூடாக இருக்கிறது  அல்லவா! சற்று வெளியே நடந்து வருவோமா? என்று கேட்டு அவரது மனத்தை வேறு திசைகளில் திருப்பினார். சுவாமிஜியும் அவர்களுடன் வெளியில் சென்றார். அவர் சாதாரண நிலைக்குத் திரும்ப  இரவு நீண்ட நேரம் ஆயிற்று.

 

மற்றொரு முறையும் சுவாமிஜி ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி ஆழ்ந்த உணர்ச்சியுடன் பின்வருமாறு கூறினார். எண்ணங்களாலோ வார்த்தைகளாலோ செயல்களாலோ என்னால் இந்த உலகத்தில்  உள்ள ஒருவரையாவது காப்பாற்றக்கூடிய ஒரு வார்த்தை என் வாயிலிருந்து பிறந்த என்றால், அதில் எனக்கு எந்தவிதமான உரிமையும்  இல்லை. எல்லாம் அவருடையவை. ஆனால்என்  நாவிலிருந்து சாபங்கள் வந்திருக்குமானால்---------- அவையெல்லாம் என் னுடையவை, அவருடையவை அல்ல, பலவீனமான அனைத்தும் என்னுடையவை, உயிர்த்துடிப்பைத் தருபவை, வலிமையைத் தருபவை. தூயவை, புனிதமானவை அனைத்தும் அவர் தந்த உத்வேகத்தால் வந்தவை. அவரது வார்த்தைகள்.

 

 அன்று சுவாமிஜியின் ஆழ்ந்த பக்தி உணர்ச்சிகளை அனைவரும் கண்டு கொண்டனர். இது போன்ற உணர்ச்சிகளில் அவரை இனி ஆழ விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்துக்கொண்டனர். ஏனெனில் இத்தகைய உயர்நிலைகளின்  காரணமாக அவர் தமது உண்மை நிலைக்கு அருகில் செல்லக் கூடும். தாம் யார் என்று முற்றிலுமாக உணரக் கூடும். நரேன் தன்னை யார் என்று எப்போது உணர்ந்து கொள்கிறானோ, அப்போது உடம்பை விட்டு விடுவான்.” என்று குருதேவர் கூறியிருந்தார். அவர்களின் மனத்தில் எழுந்தது. அவர்களில் மூத்தத் துறவி ஒருவர் கூறினார்.

 

நம்மை ஸ்ரீராமகிருஷ்ணர் எதற்காக இந்த உலகத்திற்குக் கொண்டு வந்தார் தெரியுமா? சுவாமிஜியின் மனத்தைச் சாதாரண விஷயங்களில் செலுத்தி அவரை நீண்ட காலம் வாழச் செய்ய வேண்டும். அதன் மூலம் குருதேவரின் பணி நடைபெற வேண்டும். அதற்காகத் தான் இல்லாவிட்டால் அவர் எப்போது வேண்டுமானாலும் நிர்விகல்ப சமாதி என்ற தளத்திற்குப் பறந்து விடுவார்.

 இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பொதுவாக சுவாமிஜியின் திட்டங்களைப் பற்றியோ செயல்பாடுகளைக் குறித்தோ யாரும் எந்த ஆட்சேபமும் எழுப்பவில்லை. பல்வேறு விஷயங்களில் நிலவிய சந்தேகங்களும் குழப்பங்களும் விலகியது போல் தோன்றியது. உண்மையிலேயே சுவாமிஜிக்குப் பின்னால் குருதேவர் தான் நின்று இயக்குகிறார் என்று அனைவருக்கும் புரிந்தது.

 

 இங்கு ஒரு விஷயத்தை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஓர் இயக்க அமைப்பைப் பற்றியோ, அதன் மூலம் தமது செய்தி மனித குலத்தை அடையும் என்பது பற்றியோ ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றவர்களிடம் சொல்லாமல் போயிருக்கலாம். ஆனால் பல முறை, குறிப்பாக காசிப்பூர் நாட்களில், மற்ற அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, சுவாமிஜியிடம் தனியாக பல விஷயங்களை அவர் பேசியது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டோம். அவர்கள் பேசிக்கொண்டது என்ன  என்பதை இருவருமே வெளியிடவில்லை. அந்தநேரங்களில் இது பற்றி யெல்லாம் பேசியிருக்கலாம்.

 

 அது மட்டுமின்றி  ஸ்ரீராமகிருஷ்ணரின் மகாசமாதிக்கு பிறகு அவரது  சீடர்களில் ஒவ்வொருவரும் அவரது தரிசனம் பெற்றுள்ளனர். வழிகாட்டப்பட்டுள்ளனர். சுவாமிஜி ஏதோ ஓரிரண்டை மட்டுமே வெளியிட்டுள்ளார். வெளியிடாதவை எத்தனையோ? மேற்கூறிய செய்தி அவற்றில் ஒன்றாக இருக்கலாம்.

 

 விஷயம் அத்துடன் நிற்கவில்லை. இயக்க ரீதியாகச்செயல்பட வேண்டும் என்பதை அனைவரும் ஓரளவிற்கு ஏற்றுக் கொண்டனர்.ஆனால்  செயல்பாட்டு முறைகளிலும் சுவாமிஜியின் அணுகு முறைக்கும் மற்றவர்களின் அணுகு முறைக்கும் வேறுபாடு இருந்தது. சுவாமிஜி மேலை நாடுகளிலிருந்து கடிதங்கள் எழுதி, சேவை-லட்சியம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியபோது, அதனை உடனடியாக ஏற்றுக்கொண்டு மூர்ஷிதாபாத்தில் பஞ்ச நிவாரணப் பணிகளில் அகண்டானந்தர் முழு மூச்சாக ஈடுபட்டது பற்றி ஏற்கனவே கண்டோம். அந்தப் பணிக்கான அறிக்கைகள், வரவு செலவுக் கணக்குகள் ஆகியவை முறைப்படி எழுதப் படவேண்டும்., பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட வேண்டும் என்று விரும்பினார் சுவாமிஜி. கணக்கு வழக்குகளை எழுதுவது ஒரு புறம் இருக்க, அவற்றைப் பத்திரிகைகளில் வெளியிடுவதன் மூலம் தாம் விளம்பரப்படுத்தப்படுவதை அகண்டானந்தரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சுவாமிஜியைப் பின்பற்றி பிரம்மானந்தரும் கணக்கு வழக்குகளில் மிகவும் தீவிரமாக இருந்தார். அகண்டானந்தருக்கு வேறு வழியில்லை. கணக்கெழுத அமர்ந்தார். அவரது மனப்போராட்டம் ஒரு காட்சிபோல் அவரது மனக்கண்ணில் எழுந்தது- ஸ்ரீராமகிருஷ்ணர் வந்து, உனக்கு நான் வேண்டுமா அல்லது பொதுவாழ்க்கை வேண்டுமா? என்று கேட்பது போல் அவருக்குத் தோன்றியது. கண்களிலிருந்து கண்ணீர் வழிய அவர் அறிக்கையை எழுதி முடித்தார்..

 

கருத்துக்களும் எதிர் க் கருத்துக்களும்  இவ்வாறு ஒரு புறம் சென்று கொண்டிருக்க, வரலாற்றிலேயே ஒரு மாபெரும் இயக்கம் இவ்வாறு வித்திடப் பட்டது. ராம கிருஷ்ண மிஷனின் முதல் கூட்டம் 1897 மே 9 ஞாயிறு அன்று பலராம் பாபுவின் வீட்டில் பிரம்மானந்தரின்  தலைமையில் நடைபெற்றது. அந்த மாபெரும் பணி ராமகிருஷ்ண மடம், ராமகிருஷ்ண மிஷன் என்ற இரட்டை இயக்கங்களாகத் தற்போது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

சங்க ஜனனி

--

 இந்த இயக்கங்களைத்தோற்றுவித்தவராக அன்னை ஸ்ரீசாரதாதேவி போற்றப் படுகிறார். ராமகிருஷ்ண மிஷனை நிறுவுவதற்காகப் பலராம் போஸின் வீட்டில் முதல் நாள் நடைபெற்ற கூட்டத்திலேயே சுவாமிஜி இதனை எடுத்துக் கூறினார். தமது முயற்சிகளால் நடைபெற்றாலும், இந்த இயக்கங்கள்  அன்னையின் அருளால் எழுந்தவை என்றே கண்டார் சுவாமிஜி.

 

 அன்னை 1890- இல் தீர்த்த யாத்திரை சென்றார். புத்த கயையில் அன்னை பிரபலமான ஒரு மடத்தைக் காண நேர்ந்தது. அது சிறந்த வசதிகளுடன் கட்டப் பட்டிருந்தது. உணவுக்கும் பிற தேவைகளுக்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. இதைக் கண்ட அன்னையின் மனத்தில் வேதனை மிகுந்த காட்சி ஒன்று எழுந்தது. குருதேவரை நம்பி, அவரே தெய்வமென்று தங்கள் படிப்பையும் சொத்து சுகங்களையும் உற்றார் உறவினரையும் துறந்து வந்த அவரது சீடர்களாகிய தம் பிள்ளைகள் நாடு முழுவதும் அலைந்து கொண்டிருந்தனர். இந்தக் காட்சி அன்னையின் கண்களில் நீரை நிறைத்தது. தம் பிள்ளைகளுக்கும் இது போல்  மடங்கள் ஏற்படவேண்டும். என்று தாய்மை உணர்வு பீறிட்டுப்பொங்க, கண்களில் நீ ர் பெருகப் பிரார்த்தனை செய்தார். அன்னையின் அந்தப் பிரார்த்தனை தான் ராமகிருஷ்ண மடங்கள் அனைத்திற்கும் வித்தாக அமைந்தது.

 

 இதைப் பற்றி பின்னாளில் அன்னை கூறினார். ஓ! இதற்காக நான் குருதேவரிடம் எவ்வளவு கண்ணீர் விட்டுப் பிரார்த்தனை செய்தேன் தெரியுமா? அதன் பிறகு தான் அவரது அருளால் இந்த மடம் தோன்றியுள்ளது.குருதேவர் மறைந்த பின்னர் அவரது துறவிச் சீடர்கள் தங்கள் வீடு வாசல் அனைத்தையும் துறந்து ஒரு வாடகை வீட்டில் தங்கினார்கள். பின்னர் தவ வாழ்க்கையில் ஈடுபட்டவாறே, தனித்தனியாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்தார்கள். இது என்னை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.நான் குருதேவரிடம், ஓ பகவானே! நீர் வந்தீர், இவர்கள் சிலருடன் விளையாடல் புரிந்தீர். பிறகு மறைந்தும் விட்டீர். அதனுடன் எல்லாம் முடிந்து விட வேண்டியது தானா? அது தான் முடிவு என்றால் நீர் பூமிக்கு வந்து ஏன் இத்தனை வேதனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்! தெருக்களில் பிச்சையெடுத்துச் சாப்பிட்டு விட்டு, மரத்தடியில் படுத்துக் கிடக்கும் துறவியர் எத்தனையோ பேரை பிருந்தாவனத்திலும் காசியிலும் பார்த்திருக்கிறேன்! அத்தகைய சாதுக்களுக்கு இந்த நாட்டில் குறைவே கிடையாதே! உமது பெயரில் அனைத்தையும் துறந்த என் பிள்ளைகள் உணவுக்காகப் பிச்சையெருப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உம்மிடம் எனது பிரார்த்தனை இது தான். உமது பெயரைச்சொல்லிக்கொண்டு உலகைத் துறப்பவர்களுக்குச் சாதாரண உணவும் உடையும் கிடைக்க வேண்டும். அவர்கள் உமது உபதேசங்களையும் லட்சியங்களையும் மையமாகக்கொண்டு ஓரிடத்தில் ஒன்று கூடி வசிக்க வேண்டும். உலக வாழ்க்கையில் துன்புற்ற மக்கள், அவர்களிடம் வந்து உமது அழுத மொழிகளைக்கேட்டு ஆறுதல் பெற வேண்டும். அதற்காகவே அல்லவா நீர் வந்தீர்! அவர்கள் அலைந்து திரிவதை என்னால் காண சகிக்க முடியவில்லை. ” என்று பிரார்த்தித்தேன். அதன் பின்னரே நரேன் படிப்படியாக இதையெல்லாம் உருவாக்கினான்.

 

 எத்தனை பொருள் பொதிந்த பிரார்த்தனை! தாய்மையின் இயல்பான உணர்ச்சிப்பெருக்குடன் எழுந்த பிராத்தனைதான்!  ஆனால் ராமகிருஷ்ண இயக்கத்தின் உன்னத லட்சியங்களின் விதையும்  பாங்காக இந்தப் பிரார்த்தனையில் பொதிந்துள்ளது! குருதேவர் தமது இளஞ்சீடர்களைத் துறவிகளாக்கி, பிச்சையேற்று வரப்  பணிந்த போது முதல் பிச்சையளித்துஈ சங்கத்திற்கான பிள்ளையார் சுழி போட்டது அன்னை, இப்போது தமது பிரார்த்தனை மூலம் சங்கத்திற்கு உருக்கொடுப்பதும் அன்னை தான். இவை மட்டுமல்ல, இயக்க வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் அன்னையே வழிகாட்டிச் சென்றார். இக்காரணம் பற்றியே அன்னையை ”சங்க ஜனனி ( ராமகிருஷ்ண இயக்கத்தைத்தோற்றுவித்தவள்) என்று போற்றினார் சுவாமிஜி.

 

அல்மோரா

 

 சுவாமிஜியின் அடுத்த விருப்பம் இமய மலையில் ஒரு மடம். இதற்காக 1897- மே 6 ஆம் நாள் அல்மோராவிற்குப் புறப்பட்டார்.  அல்மோரா சென்ற சுவாமிஜி, அலங்கரிக்கப் பட்டிருந்த ஒரு குதிரைமீது ஊர்வலமாக அழைத்துச்செல்லப் பட்டார். வழி யெங்கும் பெண்கள் மலர் தூவி வரவேற்றல், வீடுகளில் மாடி மற்றும் ஜன்னல்கள் வழியாகப்பெண்கள் மலர்களைப் பொழிதல் என்றெல்லாம் சுவாமிஜிக்கு விமரிசையான வரவேற்பு அளிக்கப் பட்டது. வீடுகளின் முன்பு தீபங்கள் ஏற்றி வைக்கப் பட்டன. நகரமே கோலாகலமாகக் காட்சி அளித்தது. சகரத்தின் நடுவில் அலங்கரிக்கப் பட்ட பந்தலில் சுவாமிஜிக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது. சுவாமிஜி சிறிய உரை ஒன்று நிகழ்த்தினார். லாலா பத்ரிஷா என்பவரின் வீட்டில்  தங்கினார் சுவாமிஜி. அல்மோராவிற்குச் சிறிது வடக்கே உள்ள ஒரு வியாபாரியின் தோட்டத்தில் நான் இப்போது வசித்து வருகிறேன்.   என் முன்னால்  உள்ள இமயத்தின் பனிமலைச் சிகரங்கள் சூரியனின் கிரணப் பிரதி பலிப்பால் வெள்ளிப் பாளங்களைப்போல் பிரகாசிக்கின்றன. இதயத்தை அள்ளிச்செல்கின்ற காட்சி இது. சுதந்திரக் காற்று, முறையான சரிவிகித உணவு, அதிக உடற்பயிற்சி இவை காரணமாக என் உடல் திடமாக, ஆரோக்கியமாக  உள்ளது. என்று எழுதுகிறார் சுவாமிஜி.

 

 சகோதரத்துறவியர், சீடர்கள், மேலை நாட்டுச் சீடர்கள்  என்று பலர் சுவாமிஜியுடன்  சென்றனர். பணிகளை விரிவு படுத்துவதற்காக சுவாமிஜி இலங்கைக்கு அனுப்பியிருந்த சிவானந்தர் திரும்பி வந்து, ஏற்கனவே  அங்கே தவ வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். அவர் சுவாமிஜியைச்  சந்தித்தார். கலந்துரையாடல்கள் , விவாதங்கள் என்று நாட்கள் கழிந்தன.

 

  டாக்டர் பரோஸின் எதிர்ப்பு

 

அதே வேளையில் பிரச்சனைகளும் தொடர்ந்தன. சுவாமிஜியைக் கிகாகோவில் சந்தித்து, அவரது நண்பரானவர்  டாக்டர் பரோஸ், சிகாகோ சர்வமத மகா சபை பொதுக்குழு தலைவராக இருந்தவர்  அவர். பின்னர் அவர் இந்தியாவிற்கு வந்து கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போதும் சுவாமிஜி அவரை வரவேற்கவே செய்தார். சில இடங்களுக்கு அவரை அறிமுகம் செய்யவும் செய்தார். ஆனால் பரோஸ், ” கிறிஸ்தவ மதமே உலகம் தழுவிய மதம் வெறும் 300 வருடங்களில் கிறிஸ்தவ மதம் ரோமானிய கிரேக்க ஆதிக்கங்களைத் தகர்த்தெறிந்து விட்டது என் றெல்லாம் உண்மைக்கு புறம்பான, வரலாற்றுக்கு மாறான கருத்துக்களை அவிழ்த்து விட்டபோது சுவாமிஜியால்  பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதனை எதிர்த்தார். உடனே டாக்டர் பரோஸ் தமது மறுமுகத்தைக் காட்டத் துணிந்தார். பத்திரிகைகளிலும் சொற்பொழிவுகளிலும் சுவாமிஜியைத் திட்டுவதும், அவரைப் பற்றிய கட்டுக் கதைகளைப் பரப்புவதுமாக ச்  செயல் பட்டார். பிப்ரவரி மாதத்தில்  தொடங்கிய இந்தப் பிரச்சனை தொடர்ந்தது, சுவாமிஜி வழக்கம்போலவே இவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 நாட்கள் கழிந்தன. ஆனால் அல்மோராவில் ஒரு மடத்திற்கான இடத்தைக் கண்டு பிடிக்க இயலவில்லை. இரண்டரை மாதங்கள் அங்கே தங்கிய பிறகு  புறப்பட எண்ணினார் சுவாமிஜி. அங்கிருந்து கிளம்புமுன் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் சில சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

 

 சுவாமிஜி அல்மோராவில் தங்கியிருந்தபோது அஸ்வினி குமார் ஒரு நாள் சுவாமிஜியைக் காணவந்தார். இவர் 19-ஆம் நூற்றாண்டின் சிறந்த கல்வியாளர்களுள் ஒருவர். முன்பு 1883- இல் ஒரு முறை ஸ்ரீராமகிருஷ்ணர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அஸ்வினிகுமார் சுவாமிஜியைக் காணச்சென்றார். அப்போது சுவாமிஜி தலைவலி காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருந்ததால் நீண்ட நேரம் அவர்கள் பேச இயலவில்லை. எனவே அஸ்வினி குமார் மற்றொருநாள் அவரைச் சந்திப்பதாகக் கூறிப் பிரிந்தார். அந்த ” மற்றொரு நாள் இப்போது, சுமார் பதினான்கு வருடங்களுக்குப் பிறகு வந்தது.

 

 ஆங்கிலம் பேசுகின்ற, குதிரைச் சவாரி செய்கின்ற சாது ஒருவர் அல்மோராவில் தங்கியுள்ளார் என்பதைக்கேள்விப் பட்ட அஸ்வினி குமார் அவர் சுவாமிஜியாகத் தான் இருக்கும் என்பதை ஊகித்துக்கொண்டார். ஒரு நாள் சுவாமிஜி தங்கியிருந்த வீட்டிற்கு வந்து, வாசலில் நின்றிருந்த இளம் துறவியிடம், நரேன் தத்தர் இருக்கிறாரா? என்று கேட்டார்.  அதற்கு அந்தத் துறவி, இல்லை. அவர் நீண்ட நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டார். சுவாமி விவேகானந்தர் மட்டுமே உள்ளார் என்று பதிலளித்தார். திகைத்து நின்றார் அஸ்வினி குமார்.

 

 பிறகு அந்தத் துறவி உள்ளே சென்று சுவாமிஜியிடம் ” பரமஹம்ச தேவரின் நரேந்திரரைப் பற்றி ஒருவர் விசாரித்தார். அவர் இறந்து விட்டார் என்றும் விவேகானந்தரைக் காணலாம் என்றும் அவரிடம் கூறினேன் என்றார்.ஓ! என்ன செய்தாய் நீ! அவரை உடனே வரச் சொல் என்று பரபரப்புடன் கூறினார் சுவாமிஜி.சுவாமிஜியும் அஸ்வினி குமாரும் சந்தித்தனர். பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினர். தம்மை ”சுவாமிஜி என்று அழைக்க அஸ்வினி குமார் முற்பட்டபோது அதனைத் தடுத்து, என்னை நீங்கள் ” நரேந்திரா என்றே அழைக்கலாம் என்று பணிவுடன் கூறினார் சுவாமிஜி. அவர்களது உரையாடல் நினைவு கூரத்தக்கது.

 

 அஸ்வினி- நீங்கள் உலகம் முழுவதும் சுற்றி  வந்திருக்கிறீர்கள். லட்சக்கணக்கானோரின் இதயங்களில் ஆன்மீகத்தை சுடர்விடச் செய்திருக்கிறீர்கள். இந்தியாவின் விடிவிற்கு வழி என்ன என்று கூற முடியுமா?

சுவாமிஜி- குருதேவர் கூறியதைத் தவிர நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. நீங்களும் அவரிடமிருந்து கேட்டது தானே அது! மதம்  தான் நமது நாட்டின் அடிப்படை சாரம். எந்த ச் சீர்திருத்தமானாலும், அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அது மதத்தின் மூலமாக வரவேண்டும். இதற்கு மாறாகச் செய்வது சாத்தியமல்ல.ஏனெனில் அது, கங்கையை அதன் உற்பத்தி ஸ்தானமாகிய இமய மலைக்குக் கொண்டு சென்று, வேறு வழியில் பாயச் செய்வதற்குச் சமமான முயற்சி ஆகும்.

 

 அஸ்வினி- (இந்திய தேசிய) காங்கிரஸின் செயல்பாடு களில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

 

சுவாமிஜி-

 இல்லை, எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருப்பதைவிட ஏதாவது செய்வது நல்லது தானே! உறங்கும்  நமது நாட்டை விழிப்புணர்த்த எல்லா பக்கங்களிலிருந்தும் உந்தித் தள்ளுவது நல்லது தான். இந்தக் காங்கிரஸ் மக்களுக்காக இதுவரை என்ன செய்துள்ளது என்பதை எனக்குக் கூறுங்கள் பார்க்கலாம்! சில தீர்மானங்களை நிறைவேற்றி விட்டால் சுதந்திரம் தானாக வந்து விடும் என்று நினைக்கிறீர்களா? அதில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலில் மக்கள் விழிப்புற வேண்டும். அவர்களுக்கு வயிறாற உணவுகிடைக்கட்டும் அதன் பிறகு அவர்கள் தங்கள் சுதந்திரத்தைத் தாங்களே தேடிக்கொள்வார்கள். மக்களுக்காகக் காங்கிரஸ் ஏதாவது செய்திருக்குமானால் அதை நான் வரவேற்கிறேன். மற்றொன்று ஆங்கிலேயர்களின் நல்ல பண்புகளை நாம் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.

 

 அஸ்வினி- நீங்கள் மதம் ” எதைச் சொல்கிறீர்கள்? ஏதாவது தனிப்பிரிவையா?

சுவாமிஜி- குருதேவர் ஏதாவது பிரிவுகளைப்போதித்தாரா? ஆனால் வேதாந்தம் அனைத்தையும் தழுவிய ஒரு மதம் என்று அவர் கூறியுள்ளார். அதனால் நானும் அதனைப்போதிக்கிறேன். ஆனால் நான் போதிக்கின்ற மதத்தின் சாரம் ”வலிமை இதயத்தில் வலிமையை ஊட்டாத ஒரு மதம் என்னைப் பொறுத்தவரை மதமே அல்ல- அது உபநிஷதங்கள் ஆகட்டும். கீதை ஆகட்டும், பாகவதம் ஆகட்டும்! வலிமையே மதம், வலிமை விட மேலானது எதுவும் இல்லை.

 

அஸ்வினி- நான் என்ன செய்ய வேண்டும்?

 

சுவாமிஜி- நீங்கள் கலவிப் பணிகளில் ஈடுபட்டுள்ள தாகக் கேள்விப்பட்டேன். அது உண்மையான பணி. உங்களிடம் ஒரு பெரிய சக்தி வேலை செய்கிறது. உங்களுக்குத் தரப்பட்டுள்ள அறிவு ஓர் உயர்ந்த பரிசு! ஆனால் மனிதர்களை உருவாக்குகின்ற கல்வி மக்களிடம் பரவுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்தது, அவர்களிடம் பண்பு நலன் உருவாக வேண்டும். உங்கள் மாணவர்களிடம் இடிபோல் உறுதி வாய்ந்த பண்பு நலனை உருவாக்குங்கள். இளைஞர்களின் உறுதி இந்தியாவின் அடிமைத்தளையை உடைத்து நொறுக்கட்டும். தகுதி வாய்ந்த சில இளைஞர்களை உங்களால் எனக்குத் தர இயலுமா? அப்படியானால் இந்த உலகையே நான் அசைத்துக் காட்டுவேன்

 தீண்டத்தகாதவர் சக்கிலியர், தோட்டி என்று இழிந்தவர்களாக நாம் ஒதுக்கி வைத்துள்ளவர்களிடம் செல்லுங்கள் சென்று அவர்களிடம், நீங்களே நாட்டின் உயிர். உங்களிடம் எல்லையற்ற ஆற்றல் உள்ளது. அந்த ஆற்றலால் உலகையே அசைத்துவிடலாம். எழுந்து நில்லுங்கள். உங்கள் விலங்குகளை உடைத்தெறியுங்கள். உலகமே  உங்களைப் பார்த்து வியந்து நிற்கும் என்று கூறுங்கள்.அவர்களுக்காகப் பள்ளிகயை உருவாக்குங்கள். அவர்களுக்கெல்லாம் பூணூல் அணிவியுங்கள்.

 

 அது சுவாமிஜியின் காலை உணவு நேரம். எனவே அஸ்வினி குமார் விடைபெறத் தயாரானார். புறப்படுமுன்  அவர் சுவாமிஜியிடம், சென்னை ச் சம்பவம் ஒன்று பற்றி உங்களிடம் கேட்க விரும்புகிறேன் அங்கே ஒரு பிராமணர்  உங்களை ”பறையர் என்று கூறியதாகவும், அதற்கு நீங்கள், ” என்னை அப்படிக் கூறியவர்  பறையரிலும் பறையர் என்று பதிலளித்தாகவும்  கேள்விப்பட்டேன். இது உண்மை யா? என்று கேட்டார்.

 

சுவாமிஜி- ஆம்.

 அஸ்வினி- ஆச்சாரியரும், புலனடக்கம் வாய்ந்தவரும், ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடருமான உங்களுக்கு இது தகுமா?

  சுவாமிஜி-

தகும் என்று நான் சொல்ல வில்லையே! நான் கூறியது சரி  என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. அப்படி அவர்களைத் திட்ட வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால் கோபம் காரணமாக அப்படிக் கூறிவிட்டேன். நான் கூறியதை நியாயப்படுத்தவும் முயலவில்லை. நான் செய்தது தவறு தான்.

 

 சுவாமிஜியின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அஸ்வினி குமார் சுவாமிஜியை ஆரத் தழுவிக்கொண்டார். பிறகு அவரிடம், உலகையே உங்களால்  வெல்ல முடிந்தது ஏன் என்பதை இப்போது புரிந்து கொண்டேன்  ஸ்ரீராமகிருஷ்ணர் உங்களை ஏன் அவ்வளவு நேசித்தார் என்பதும் எனக்குத் தெரிகிறது.” என்றார் அஸ்வினி குமார். சுவாமிஜி உண்மையை ஒத்துக் கொண்டது அஸ்வினி குமாருக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. சொந்தத் தவறுகளையும் பலவீனங்களையும் நியாயப் படுத்தாமல் ஏற்றுக் கொள்வது சாதாரண விஷயமா என்ன!

 

காஷ்மீரில்

 

ஆகஸ்ட் 2- ஆம் நாள் அல்மோராவிலிருந்து புறப் பட்டார் சுவாமிஜி. வழியில் பல இடங்களைப் பார்த்துவிட்டு, செப்டம்பர் ஆரம்பத்தில் காஷ்மீரை அடைந்தார். அங்கே சுமார் ஒரு மாதம் தங்கினார் அவர். காஷ்மீர் மன்னரான ராஜா ராம்சிங்கைச் சந்தித்தார். சுவாமிஜியின் பணிகளால் மிகவும் கவரப்பட்ட மன்னர் அவரது பணிகளுக்கு ஆவன செய்வதாகக் கூறினார். சுவாமிஜி காஷ்மீருக்கு வந்தது காஷ்மீர்  மக்களுக்கு மிகவும் உற்சாகத்ாத் தந்தது. தினமும் கூட்டம் கூட்டமாக அவர்கள் வந்து அவரைச் சந்தித்தனர். பல நாட்கள் படகு வீடுகளில் பயணம் செய்தார் சுவாமிஜி.

 காஷ்மீரை மிகவும் ரசித்தார் சுவாமிஜி. இந்த காஷ்மீர் உண்மையில் பூலோக சொர்க்கமே. இத்தகைய பகுதி  பூமியில் வேறெங்குமே இல்லை. மலை, ஆறு, மரம், செடி, ஆண், பெண், மிருகம், பறவை என்று அனைத்தும் ஒன்றையொன்று மிசு்சும் அழகுடன் மிளிர்கின்றன. இவ்வளவு நாள் இதைப் பார்க்காமல் இருந்து விட்டேனே என்று வருந்துகிறேன்...... காஷ்மீரை உனக்கு வர்ணிக்க  நான் முயற்சி செய்யபபொவதில்லை. இதைக் கூறுவதே போதும்- இந்தப் பூலோக சொர்க்கத்தைத் தவிர வேறு எந்தநாட்டையும் விட்டுப்போகவும் நான் கவலைப் பட்டதில்லை என்றெல்லாம் எழுதுகிறார்அவர்.

 .இது தான் உன் படிப்பா?

ஸ்ரீநகரின் அருகிலுள்ள ஓரிடத்தில் கோயில் ஒன்று இருந்தது. அ து பாண்டவர் காலத்துக்கோயில் என்று அங்குள்ள மக்கள் கருதினார்கள். சுவாமிஜி அந்தக்கோயிலின் கட்டிடக் கலையையும் சிற்பக் கலையையும் மிகவும் ரசித்தார். அதன் சிற்பங்களைக் கண்டுகளித்தவராக, இந்தக்கோயில் குறைந்தது 2000 வருடங்களுக்காவது  முற்பட்டதாக இருக்கும் என்றார் அவர். அருகில் நின்ற அத்புதானந்தர் சுவாமிஜியைப் பார்த்து, எதை வைத்து இவ்வளவு காலம் முற்பட்டது என்று கூறுகிறாய்? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி ”உன்னைப்போல் படிப்பறிவற்ற ஒருவனிடம் அதையெல்லாம் விளக்கிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை என்றார். சிறிதும் துணுக்குறவில்லை அத்புதானந்தர். சுவாமிஜி கூறிய அதே வேகத்தில் கேட்டார், அப்படியானால் உன் படிப்பு என்ன பெரிய படிப்பு?என்னைப்போன்ற ஒரு முட்டாளுக்கு உன் கருத்தைப் புரியவைக்க முடியவில்லை என்றால் நீ என்ன பண்டிதன்? வாயடைத்துப்போனார் சுவாமிஜி!

 

 மடத்திற்கான முயற்சி

-

 காஷ்மீரின் இயற்கையழகும் இமயமலைப் பின்னணியும் சுவாமிஜியை மிகவும் கவர்ந்தன. அங்கே ஒரு மடம் நிறுவ விரும்பினார் அவர். அதற்காக  பிரம்மசாரி ஹரிபிரசன்னரைக் காஷ்மீருக்கு வரவழைத்தார். அவர் ஓர்  எஞ்ஜினியர். அவர வந்தால் மடத்திற்கான நிலம் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்பது சுவாமிஜியின் நோக்கம்.

 

 சுவாமிஜி காஷ்மீரை மிகவும் ரசித்தார் என்றாலும் பல காரணங்களால் அவரால் நீண்ட நாட்கள் தங்க இயலவில்லை. பஞ்சாபைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு இருந்தாலும், அவர் அங்கிருந்துப் புறப்பட பணப்பிரச்சனை முக்கியக் காரணம் ஆயிற்று. அங்கே மன்னர் மூலம் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய நினைத்தார் சுவாமிஜி. அதுவும் நடைபெறவில்லை. சேவியர் அளித்திருந்த பணம் வேகமாகக் கரைந்தது. எனவே அவர் காஷ்மீரை விட்டுப் புறப்பட்டார்.

 

  அக்டோபர் 21-ஆம் நாள் ஜம்முவை அடைந்தார் சுவாமிஜி. அங்கே ஓரிரு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். கலந்துரையாடல்களில் கலந்து கொண்டார். அங்கிருந்த மின் நிலையத்திற்கும் சென்றார். நீரிலிருந்து மின்சாரம்  எடுப்பதை அங்கே கண்டார். தொழில் நுட்ப முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த அவரை அது மிகவும் கவர்ந்தது. மன்னரின் நூல் நிலையத்தையும்  சென்று கண்டார்.

 

 அடுத்து சுவாமிஜி சென்ற முக்கியமான இடம் பஞ்சாப். நவம்பர் 5-ஆம் நாள் லாகூரை அடைந்தார். வழக்கமான வரவேற்புகளுக்குப் பிறகு நாகேந்திரநாத் குப்தா என்பவரின் வீட்டில் தங்கினார்.  லாகூரில் மூன்று முக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவற்றில் ”வேதாந்தம் என்ற சொற்பொழிவு மிகவும் பிரபலமானது. இது பற்றி அந்தச் சொற்பொழிவைக்கேட்ட தீர்த்த ராம் எழுதுகிறார், ஆங்கிலேயர், கிறிஸ்தவர், முஸ்லிம், பிரம்ம சமாஜத்தினர், ஆரிய சமாஜத்தினர் என்று யார் இந்தச் சொற்பொழிவைக்கேட்டார்களோ, அவர்களின்  கண்களை அது திறந்தது என்றே சொல்ல வேண்டும். இத்தகைய ஒரு மாபெரும் வெற்றியைக் காண்பது அபூர்வம்.

 

 வட இந்தியாவில் சுவாமிஜியின் சொற்பொழிவுகளில் ஆரிய சமாஜத்தினர் பெருமளவில் கலந்து கொண்டனர். உண்மையில் சுவாமிஜி பஞ்சாபிற்குச் சென்ற தில் ஒரு முக்கிய நோக்கமும் இருந்தது. பஞ்சாபில் ஆரிய சமாஜத்தினருக்கும் இந்துக்களுக்கும் இடையே கருத்து வேற்றுமை நிலவி வந்தது. அதனை ச் சீர்படுத்த விரும்பினார் அவர். ஆனால் அவரது பரந்த கருத்துக்களை இருதரப்பினராலும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.இரு தரப்பினரும் அவருடன் கலந்து பேசினர். இது பற்றி எழுதுகிறார் தீர்த்தராம்.

 

 சுவாமிஜி பொதுச்சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். ஆனால் கலந்துரையாடல்களைப்போல் அவரது அறிவாற்றல் சொற்பொழிவுகளில்  வெளிப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆரிய சமாஜ, பிரம்ம சமாஜத் தலைவர்களுடன் அவர் பேசியதைக்கேட்டேன். அவர்களின் கேள்விகளுக்கு சுவாமிஜி பதிலளித்த விதம் இருக்கிறதே, அதற்கு இணையில்லை. அவரது தத்துவங்களையும் கருத்துக்களையும் அப்படியே அக்குவேறு ஆணிவேறாக அலசி அவர்களைத் திக்குமுக்காடச் செய்து விட்டார். அவர்கள் சொல்வதற்கென்று பதில் எதுவும் இருக்கவில்லை.ஆனால் இதில் ஒரு விஷயம், அதில் தான் அவரது விவாதத்தின் தனித்துவமும் தனியழகும் அமைந்திருந்தது. அவர்களது உணர்ச்சிகளைப் புண்படுத்தும் விதமாக அவர் ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை. அவர்களின் கருத்துக்களையே எடுத்துக் கூறி, மிகக்குறைந்த நேரத்தில், தங்கள் கருத்துக்களுக்கு ஓர் உறுதியான அடிப்படை இல்லை என்பதை அவர்களே  ஒத்துக் கொள்ளுமாறு செய் து விட்டார்.


No comments:

Post a Comment