இந்துமதம்-வகுப்பு-9
நாள்--28-5-2020
..
இந்துக்களின் சாஸ்திரம்
..
வேதம்
..
பிற மதங்களுக்கு புனித நூல்கள் இருக்கின்றன.
இந்துக்கள் புனித நூல்கள் என்று அழைக்காமல் சாஸ்திரங்கள் என்று அழைக்கிறார்கள்.
நூல்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியது. சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு காணாமல் போய்விடும்.
ஆனால் சாஸ்திரம் என்பது சாஸ்வதமானது,எப்போதும் இருப்பது.காலத்தால் அழியாதது.
..
இந்துக்களின் சாஸ்திரங்களுக்கு வேதம் என்று பெயர்
வேதம் என்றால் அறிவு என்று பொருள்.
-
அறிவு இரண்டு வழிகளில் கிடைக்கிறது. ஒன்று புறஉலகை ஆராய்வது.
இரண்டாவது அக உலகை ஆராய்வது. புற உலகை ஆராய்வதால் கிடைக்கும் அறிவு பற்றி நாம் அறிவோம்.
அது தான் தற்கால விஞ்ஞானஅறிவு.
.
அகஉலக அறிவு என்றால் என்ன?
-
ரிஷிகள் தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது இந்த உடல் உணர்வை கடந்து செல்கிறார்கள். அப்போது நாம் காணும் சூரியன்,சந்திரன், உட்பட சூரியமண்டலம்,அதை தாண்டியவை எல்லாம் காட்சிகளாக கிடைக்கிறது.
சூரிய மண்டலம் பிற கிரகங்களையும்,நட்சத்திர மண்டலங்களையும்,அதைத்தாண்டிய உலகங்களையும் அவர்கள் அகக்காட்சியில் காண்கிறார்கள்.
இதிலிருந்து வானஇயல்ட சாஸ்திரம், ஜோதிடம் போன்றவை உருவானது.
பூமி சூரியனை சுற்ற இந்தனை நாட்கள் ஆகின்றன.பிற கிரகங்கள் சூரியனை சுற்ற இத்தனை நாட்கள் ஆகின்றன. என்பதை நுண்ணோக்கிகள் இல்லாமல் அவர்களால் எப்படி நுல்லியமாகக் கணக்கிட முடிந்தது? சாதாரண கண்களால் வானத்தை நோக்கினால் நட்சத்திரங்களையும்,கிரகங்களையும் நம்மால் பிரித்தறிய முடியாது.
அவர்கள் அகக்காட்சியில் அனைத்தையும் காண்கிறார்கள்.
இதிலிருந்து உருவாவது தான் அகவிஞ்ஞானம்.
-
இந்த புறவிஞ்ஞானம் என்பது எவ்வளவு பெரியதோ, அதே போல் மிகவும் பெரியது அகவிஞ்ஞானம். தூரத்தில் நடப்பதை கேட்க வேண்டுமா? முடியும். தூரத்தில் நடப்பதை பார்க்க வேண்டுமா? அதுவும் முடியும். ஆகாயத்தில் பறக்க வேண்டுமா? முடியும். வெட்டுபட்ட உடலின் பாகங்களை மீண்டும் இணைக்க முடியுமா?முடியும். இன்று புறவிஞ்ஞானத்தில் எவையெல்லாம் சாத்தியமோ, அவை அனைத்தும் அகவிஞ்ஞானத்தாலும் சாத்தியம்.
-
இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளாக அகவிஞ்ஞானம் சிறப்பான முறையில் வளர்ச்சியடைந்தது. ஆனால் புறவிஞ்ஞானத்தில் நாம் அதிகம் வளரவில்லை. ஐரோப்பியர்கள் அகவிஞ்ஞானத்தில் வளரவில்லை. ஆனால் புறவிஞ்ஞானத்தில் அதிகம் வளர்ச்சியடைந்துள்ளார்கள்.
-
இந்தியாவில் வேதம் என்பது பொதுவாக அகவிஞ்ஞானத்தை பற்றியதாகவே உள்ளது.
ஆனால் வேதம் என்பதை அதன் உண்மையான பொருளில் பார்த்தால் எவையெல்லாம் நிலையான அறிவோ,
எந்த அறிவு ஒருபோதும் மாறுவதில்லையோ அது வேதம்.
இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் புறவிஞ்ஞானம், அகவிஞ்ஞானம் இரண்டுமே வேதம் தான்.
அகவிஞ்ஞானம் மட்டுமே வேதம்,மற்றது வேதம் இல்லை என்று ஒதுக்க முடியாது.
ஏனென்றால் புறவிஞ்ஞானத்தின் மூலமும் நிலையான அறிவு கிடைக்கிறது
-
இனி இன்னொரு விசயத்தை ஆராய்வோம்.
-
தகவல் என்ற ஒன்று உண்டு, அறிவு என்ற ஒன்று உண்டு.
உங்களுக்கு சூரியமண்டலத்தை பற்றி தெரியுமா? என்று ஒருவர் கேட்டால். தெரியும் நான் அவைகளை பற்றி ஆராய்ந்து அறிந்துள்ளேன் என்று உங்கள் அனுபவத்தை சொன்னால் அது அறிவு.
எனக்கு சூரியமண்டலத்தை பற்றி தெரியும்,பிறர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன் ஆனால் இதுவரை பார்த்ததில்லை என்று சொன்னால் அது தகவல் .நீங்கள் சூரியமண்டலத்தை பற்றி படித்திருக்கிறீர்கள். ஆனால் இதுவரை டெலஸ்கோப் மூலமாக நேரடியாக ஆராயவில்லை பார்த்ததில்லை.
--
ஆகவே தகவல் என்பது, பிறர் சொல்வதை நம்புவது, அல்லது படித்தறிவது.
அறிவு என்பது ஆராய்ந்து அறிந்த அனுபவத்தை ஆதாரமாக கொண்டது.
-
இன்று நமது பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பல தகவல்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் அறிவு ஏற்பட்டுள்ளது என்று சொல்ல முடியாது. இந்த தகவலை அவர்கள் அனுபவத்தில் கொண்டுவரும் போது அறிவு கிடைக்கிறது.
இந்த தகவல்களை உரியமுறையில் பின்பற்றினால் அறிவை அடையலாம் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
-
இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு வேதம். இந்த வேதத்திற்கு அளவே இல்லை. இது எல்லையற்றது. வேதம் தொடக்கமும் முடிவும் இல்லாதது. வேதங்கள் என்பது இவ்வளவு தான், இதற்கு மேல் எதுவும் இல்லை என்று அறுதியிட்டு கூறமுடியாது. இவைகள் அனைத்தையும் புத்தகத்தில் கொண்டுவர முடியாது.
ஆகவே வேதங்கள் என்பவை புத்தகங்கள் அல்ல. அவைகள் இயற்கையின் மாறாத நியதிகள்.
இந்த நியதிகள் எப்போதும் இருக்கின்றன. மனிதன் அவைகளை கண்டுபிடிக்கிறான்.
-
மேகங்களின் மீது சில ரசாயண பொடிகளை தூவி, மழையை உருவாக்கினால் மழை வருகிறது. இது புறவிஞ்ஞானம்.இதையே ஒரு ரிஷி சில பிரார்த்தனைகள் செய்தால் மழைவருகிறது.இது அகவிஞ்ஞானம்.
-
ரிக்,யஜுர்,சாம,அத்ரவண வேதம் என்பவை அகவிஞ்ஞானத்தை பற்றி சொல்கின்றன.
-
அகவிஞ்ஞானத்தை பற்றி சிறிது ஆராய்வோம்.
-
ஒரு ரிஷி கடுமையான தவ வாழ்க்கை வாழ்ந்து, முடிவில், இயற்கையின் கட்டுகளிலிருந்து விடுதலை அடைகிறார். சுதந்திரர் ஆகிறார்.
அதன் பிறகு இயற்கை அவருக்கு அடிமையாகிறது. அவர் இயற்கைக்கு அடிமையில்லை. சாதாரண மனிதர்கள் இயற்கைக்கு அடிமைகளாக வாழ்கிறார்கள். இயற்கையால் பந்தாடப்படுகிறார்கள். ஆனால் இந்த ரிஷியை இயற்கை கட்டுப்படுத்த முடியாது.
-
இந்த ரிஷி, பல மாதங்கள் மழையே இல்லாமல் வாழும் பகுதிக்கு வருவதாக வைத்துக்கொள்வோம். மக்கள் இவரிடம் தங்கள் குறைகளை சொல்கிறார்கள். இவரும் மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு மழை பெய்ய வேண்டி, இயற்கையிடம் பிரார்த்திக்கிறார். உடனே மழை பொழிகிறது. ரிஷியின் வாயிலிருந்து வெளிப்பட்டதே அந்த பிரார்த்தனை, வேண்டுதல் இது ஒரு வேதம்.
-
இது வேதம் என்பது எப்படி தெரியும்?
-
யாருடைய வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் ,அவர் விரும்பிய பலனை அப்படியே பலனை தருமோ அது தான் வேதம்.
ரிஷியின் சீடர்கள் இந்த பிரார்த்தனையை குறித்துக்கொள்கிறார்கள். அந்த ரிஷி காலமான பிறகு, பல வருடங்கள் கழித்து, சீடர்கள் இதே வார்த்தையை சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனால் மழை பொழியவில்லை.
ஏன்?
அந்த ரிஷி சொன்ன போது பெய்த மழை இப்போது ஏன் பெய்யவில்லை? ஏனென்றால் ரிஷி, இயற்கையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
இந்த சீடர்கள் இயற்கையின் அடிமைகள். அவர்கள் இயற்கையை கடந்து சென்று சுதந்திரர்கள் ஆகவில்லை.
-
அப்படியானால் வேதங்களை உச்சரிப்பதால் பலன் கிடைக்காதா? கிடைக்கும்
-
நாம் ஏற்கனவே கூறியது போல, இந்த வேதங்கள் நமக்கு தகவல் போன்றது, இந்த வழியை முறையாக பின்பற்றினால் அவைகள் அறிவை தருகின்றன. ரிஷிகள் தங்களுக்குள் ஆழ்ந்து மூழ்கி உடல் உணர்வை கடந்து சென்றது போல, வேதங்களை ஓதுபவர்கள், உடல் உணர்வை கடந்து செல்ல முடியுமானால்,அவர்கள் பிரார்த்தனைகள் பலன் அளிக்கின்றன.
--
வேதம் என்றால் எக்காலத்திலும் இருக்கக்கூடிய அறிவுத்தொகுதி.
தொடக்கமும் முடியும் அற்ற வேதங்களின் மூலமே உலகம் முழுவதும் படைக்கப்பட்டிருக்கிறது.
-
இந்த உலகத்தில் என்னென்ன உள்ளதோ அவை அனைத்தும் எண்ணங்களின் வெளிப்பாடே.
எண்ணமோ சொற்களின் மூலம் தான் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.
-
தோன்றா நிலையில் இருந்த எண்ணம் எந்த சொற்களின் மூலம் வெளிப்பட்டதோ,
அந்த சொற்களின் தொகுதியே வேதங்கள்.
-
இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால்,புறவுலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் வேதங்களைச் சார்ந்தே இருக்கிறது. ஏனெனில் ஒரு பொருளைப் பற்றிய எண்ணம் அதைக்குறிக்கும் சொல் இல்லாமல் இருக்க முடியாது.(சொல்லுக்குப் பின்னால் எண்ணம் உள்ளது) எண்ணம்,அதிலிருந்து சொல்,அதிலிருந்து புறப்பொருள் உருவாகிறது.
-
இந்த சொல் என்பது என்ன? வேதங்களே.
வேதத்தின் மொழி என்ன? சமஸ்கிருதம் இல்லை.
வேதத்தின் மொழி வேதமொழி.(அதற்கு எழுத்துக்கள் இல்லை)
வேதமொழியைவிட பழைய மொழி எதுவும் இல்லை.
-
வேதங்களை எழுதியது யார் ? என்று நீங்கள் கேட்கலாம்.
வேதங்கள் எழுதப்படவே இல்லை.
சொற்களே வேதங்கள்.
ஒரு சொல்லை நான் பிழையின்றி உச்சரித்தால் அதுவே வேதம்.
விரும்பிய பலனை அது உடனே அளிக்கும்.
-
வேதத்தொகுதி என்னென்றும் உள்ளது.
உலகம் எல்லாம் அந்தச் சொல்தொகுதியின் வெளிப்பாடே.
வெளிப்பட்டு காணப்படுகின்ற சக்தி ஒரு கல்பம் முடியும்போது சூட்சும நிலையை அடைந்து, சொல் வடிவையும், பின்பு எண்ண வடிவையும் அடைகிறது. அடுத்த கல்பத்தில் மீண்டும் எண்ணங்கள் சொல்லாகி, அதிலிருந்து உலகம் பிறக்கிறது.
-
வேதங்களில் அடங்காதது என்று ஒன்று இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் மனமயக்கமே.
அப்படி எதுவும் இருக்க முடியாது.இந்த உலகம் வேதத்திற்குள் அடக்கம்
-
வேதங்கள் மனிதர்களால் எழுதப்படவில்லை. மற்ற மதங்களின் நூல்கள் அனைத்தும் மனிதர்களால் எழுதப்பட்டவை,ஆனால் வேதங்கள் மனிதரால் எழுதப்படவில்லை.
-
மனிதரால் உருவாக்கப்ட்டவை எதுவாக இருந்தாலும் அவை வேதங்கள் அல்ல.
ஏனென்றால் வேதங்களுக்கு துவக்கமும் இல்லை,முடியும் இல்லை.
அவை எல்லையற்ற காலம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது.
-
மிகப்பழைய காலத்தில் இயற்கையின் ரகசியங்களை அறிய நினைத்த ரிஷிகள், பல தவங்களை இயற்றி, இயற்கையை கடந்து, சுதந்திர நிலையை அடைந்தார்கள். அவர்கள் வாயிலிருந்து வெளிப்பட்டது வேதம்.
இவ்வாறு பல காலங்களில் பல ரிஷிகளிடமிருந்து வேதம் வெளிப்பட்டது.
-
அவர்கள் கூறிய கருத்துக்களை சீடர்கள் மனப்பாடம் செய்து கொண்டார்கள். ஏனென்றால், அந்த காலத்தில் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இவ்வாறு மனப்பாடம் செய்வதன் மூலம் இவை தொடர்ந்து பாதுகாக்கப்பட்டன.
-
வேதங்களில் என்ன இருக்கும்?
-
பிரார்த்தனைகள், யாகங்கள், சடங்குகள்,அறிவுரைகள் போன்றவை.
சுருக்கமாக கர்மகாண்டம்,ஞான காண்டம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது
-
கர்மகாண்டத்தை சற்று விளக்குவோம்.
-
சடங்குகளும் பல தேவதைகளைப்பற்றிய பலவகையான துதிப்பாடல்களும் அதில் உள்ளன.
சடங்குகள் பல கிரியைகள் அடங்கியவை.
அவற்றுள் சில மிக விரிவானவை.அவற்றைச்செய்ய பல புரோகிதர்கள் தேவை.
சடங்குகளின் விரிவால் புரோகிதத் தொழிலே தனியொரு சாஸ்திரமாயிற்று.
படிப்படியாக இந்த சடங்குகளிலும் துதிகளிலும் பொதுமக்களுக்கு மதிப்பு வளர்ந்தது.
தேவதைகள்கூட மறைந்து அவர்களது இடத்தை இந்தச்சடங்குகள் பிடித்துக்கொண்டன.
-
இந்த கர்மகாண்டத்தை பின்பற்றுபவர்களில் மீமாம்சகர்கள் என்ற ஒரு பிரிவினர் .
இவர்கள் வேதத்தையே தெய்வமாக வழிபடுகிறார்கள்.
-
புரோகிதர்கள் இந்த துதிகளைப்பாடி,அக்கினியில் ஆஹுதி அளிப்பார்கள்.அவற்றின் சொற்களுக்கே பல பயன்களை அளிக்கும் சக்தியுண்டு . இயற்கைக்கு உட்பட்ட மற்றும் இயற்கையை மீறிய அனைத்து சக்திகளும் அங்கு உள்ளன.
-
வேதங்கள் ஒரு அபூர்வசக்தியுள்ள வெறும் வார்த்தைகள் மட்டுமே.
அவற்றை சரியாக உச்சரித்தால் விளைவுகளை உண்டாக்கவல்லது.
ஓர் உச்சரிப்பு தவறானாலும் பலன் தராது.
மற்ற மதங்களின் பிரார்த்தனைகள் போல் அல்லாமல் வேதங்களே இவர்களை பொறுத்தவரை தெய்வங்கள்.
வேதங்களின் சொற்களுக்கு எவ்வளவு உயர்வான இடம் அளிக்கப்பட்டது என்பதை இதிலிருந்து நீங்கள் உணரலாம்.
மழைபொழிய வேண்டுமா? இன்ன இன்ன பிரார்த்தனைகள் செய்ய வேண்டும்.
குழந்தை பிறக்க வேண்டுமா? யாகம் செய்ய வேண்டும்
யுத்தத்தில் ஜெயிக்க வேண்டுமா? யாகம் செய்ய வேண்டும்
இன்ன இன்ன பலன் கிடைக்க வேண்டுமா?இப்படி இப்படி யாகம் செய்ய வேண்டும்.
திருமணமா இந்த சடங்கை செய்ய வேண்டும்.மரணமா? இந்த சடங்கை செய்ய வேண்டும்.
சொர்க்கம் செல்ல வேண்டுமா? அறிவுள்ள குழந்தை பிறக்க வேண்டுமா? பலசாலியாக வேண்டுமா? பல ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டுமா? இன்னும் பல்வேறு ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான வழிகள் அங்கே சொல்லப்பட்டுள்ளன
-
இவ்வாறு மனப்பாடம் செய்யப்பட்டவைகளை,முறைப்படுத்தி வரிசைப்படுத்தினார்கள்.
அவைகளை ரிக்வேதம் என்று அழைத்தார்கள்.
இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு இன்னும் பல ரிஷிகளின் வாரத்தைகளை சேர்க்க வேண்டியிருந்தது. அவைகளை தொகுத்து யஜுர் வேதம் என்றார்கள்.
இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து சாமவேதம்,
மகாபாரத காலத்திற்குபிறகு வியாசர் வேதத்தை நான்காக தொகுத்தார்
அவை ரிக்வேதம்,யஜுர்வேதம்,சாமவேதம்,அதர்வணவேதம்
-
அந்த காலத்தில் நடந்த இயற்கை பேரிடரிலோ, போர்களாலோ,நோய்களாலோ, வேதத்தை மனப்பாடம் செய்து வைத்திருந்த ஒருவரோ,அல்லது ஒரு சமுதாயமோ அழிந்துவிட்டால், வேதத்தின் அந்த பகுதி முழுவதும் அழிந்துவிடும். பிறகு அது திரும்ப கிடைக்காது. இவ்வாறு வேதத்தின் பெரும்பகுதி அழிந்துவிட்டது.
முற்கால வேதத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதியே தற்போது நம்மிடம் உள்ளது என்று சொல்லப்படுகிறது
ஆகவே இதை சரிசெய்ய எழுத்துக்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானது.
-
அதன் பிறகு எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மரப்பட்டைகள்,மர இலைகள், கல்வெட்டுகள் போன்றவற்றில் வேதங்களை எழுத ஆரம்பித்தார்கள்.
இவ்வாறு மொழி படிப்படியாக வளர்ச்சியடைந்தது.
வேதத்தை மனப்பாடம் செய்வது குறைந்துபோனது.
வேதங்கள் எழுதப்பட்ட காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழி உருவாகவில்லை.
அப்போது எழுதப்பட்ட மொழி பிராமண மொழி அல்லது பிராமி மொழி என்று அழைக்கப்படுகிறது
பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து இந்த மொழி வளரச்சியடைந்து உலகின் பல பகுதிகளுக்கு சென்றது
உலகம் முழுவதும் பிராமி மொழியின் கல்வெட்டுகளைக் காணலாம்
பிராமி மொழியுடன் சேர்ந்து வேதமும் உலகம் முழுவதும் பரவியது
-
வேதத்தின் சில வார்த்தைகளை பிராமி மொழியில் உச்சரிப்பது கடினமாக இருந்தது மேலும் பிராமி மொழியில் இருந்த சில குறைபாடுகளை நீக்கி பாணினி என்ற ரிஷி சமஸ்கிருதம் என்ற மொழியை சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினார்
-
அதன்பிறகு வேதங்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன.
-
வேதங்கள் எழுதப்பட்ட பிறகு அவைகள் பலருக்கு பயனுள்ளதாக இருந்தது.
அதன் கூடவே பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன. இவைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.
வேதங்களில் பல கருத்துக்கள் இருந்தன. ஒருவர் அவைகள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆகவே தங்களுக்கு பிடித்த பகுதிகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
இவ்வாறு வேதங்களை பின்பற்றிய மக்கள் பல்வேறு மதப்பிரிவுகளை உருவாக்கினார்கள்.
-
சிலர் சொர்க்கத்திற்கு செல்வது குறித்த கருத்துக்களை ஆதரித்தார்கள்.
சிலர் முக்தி பற்றிய கருத்தை ஆதரித்தார்கள்.
சிலர் இந்த உலக இன்பங்களை அனுபவிக்கும் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் வேதங்களில் கூறப்படும் பல்வேறு கருத்துக்களை பற்றி விவாதிக்கிறார்.
இதில் வேதாந்தம் என்று சொல்லப்படும் நெறி கடைசியாக உருவானது. இது தான் தற்கால இந்துமதம்.
-
ஸ்ரீகிருஷ்ணரின் பகவத்கீதை, வேதாந்தத்தின் சிறந்த நூலாக கருதப்படுகிறது.
இது வேதத்தின் பல கருத்துக்களை விளக்கிகூறுகிறது. எதையும் குறைகூறவில்லை.
சொர்க்கம் செல்வதோ,மற்றஉலக இன்பமோ,மனிதனின் துன்பத்தை முற்றிலும் நீக்காது ,முக்தி என்பது தான் மனிதனின் லட்சியம் என்பதை போதிக்கிறது.
-
முக்தி என்ற லட்சியத்தை அடிப்படையாக வைத்து பல்வேறு மதங்கள் உருவானது.
-
வேதம்= கர்மகாண்டம்+ ஞானகாண்டம்
ஞான காண்டம்(வேதாந்தம்)=உபநிடதங்கள் +பகவத்கீதை+பிரம்மசூத்திரம்(தத்துவசாஸ்திரம்)
-
வேதாந்தம்= சைவம்,வைணவம்,சாக்தம்,கௌமாரம்,காணபத்யம்,சூர்யம் என்ற ஆறு மதங்கள்
கர்மகாண்டத்திற்கு எதிராக தோன்றிய மதம் = புத்தம், சமணம். இந்த இரண்டு மதங்களும் ஞான காண்டத்தில் உள்ள கடவுள் கருத்தை தவிர பிற பகுதிகளை ஏற்றுக்கொள்கிறது
-
இவைகள் தவிர இன்னும் பல மதங்கள் இந்தியாவில் தோன்றிக்கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நூற்றாண்டிலும் சில மதங்கள் தோன்றுகின்றன.
-
..
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மனம் இருக்கிறது.
அனைவரின் மனமும் மஹத் அல்லது பிரபஞ்ச மனத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரபஞ்ச மனத்திற்கு வேதம் என்று பெயர்.
இந்த வேதத்தை அறிந்தவர்,பிரபஞ்சத்திலுள்ள உயிர்கள் அனைத்தையும் அறிந்தவர் ஆகிறார்.
..
இறைவனிடமிருந்துதான் வேதம் வெளிப்பட்டது. வேதத்தை அவர் அறிவார்.அவரே வேதமாகவும் இருக்கிறார்
ஆனால் இறைவனை யாராலும் அறியமுடியாது?
ஏன்?
முதலில் வேதம் வெளிப்பட்டது, அதன் பிறகு உலகத்திலுள்ள சூரியன்,சந்திரன்,கிரகங்கள்.மனிதர்கள்,மிருகங்கள் உட்பட அனைத்தும் வெளிப்பட்டன.
நமது மனம் பிரபஞ்ச மனத்தின் ஒரு பகுதி. நமது மனத்தின் எல்லையை படிப்படியாக விரிவுபடுத்திக்கொண்டே சென்றால் பிரபஞ்ச மனத்தை அடையும். அப்படி பிரபஞ்ச மனத்தை அடைந்தவன் பிரபஞ்ச ரகசியத்தை அறிந்தவன் ஆகிறான்.வேதத்தை அறிந்தவன் ஆகிறான். அப்படி வேதத்தை அறிந்தால்கூட வேதத்திற்கு அப்பால் இருக்கும் இறைவனை அறியமுடியாது.
ஏனென்றால் வேதத்தை கடந்து செல்லும்போது அறியவேண்டிய மனிதனே இருக்க மாட்டான்.
அங்கே இறைவன் மட்டுமே இருக்கிறார்.
உப்பு பொம்மை கடலின் ஆழத்தை அளக்கச் சென்றது, கடலில் இறங்கியதும் அதில் கரைந்து ஒன்றாகிவிட்டது. பிறகு யார் வந்து தகவல் சொல்வது?
அதேபோல இறைவனை அறிய நினைத்து செல்லும் ஒருவன் முடிவில் இறைவனில் ஒன்றாக கலந்துவிடுகிறான்.
பிறகு யார்? இறைவனைப்பற்றி சொல்வது?
எனவேதான் இன்றுவரை இறைவனைப்பற்றி யாராலும் விளக்க முடியவில்லை.
No comments:
Post a Comment