Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-30

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-30

🌸

அல்மோராவில்

 

 மீண்டும் வட இந்தியாவில்-

 

 பிளேக் நோயின் தீவிரம்  சற்று தணிந்ததும் சுவாமிஜி மீண்டும் வட  இந்தியாவிற்கும் காஷ்மீருக்கும் சென்றார். அல்மோராவில் தங்கியிருந்த சேவியர் தம்பதிகள் சுவாமிஜியைப் பலமுறை அழைத்திருந்தனர். 1896 மே 6-ஆம் நாள் சுவாமிஜி புறப் பட்டார். இந்த முறை அவருடன் சகோதரத் துறவிகள், சீடர்கள், மேலைநாட்டுச் சீடர்கள்  என்று ஒரு பெரிய கூட்டமே சென்றது. கல்கத்தாவிலிருந்து முதலில் நைனிடால் செல்வதென்று முடிவாயிற்று. இந்த யாத்திரையில் சுவாமிஜியின் மற்றொரு பரிமாணம் சிறப்பாக வெளிப் பட்டது. அது இந்தியாவில் வரலாற்றில் அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவு,ஈடுபாடு மற்றும் தேசபக்தி. ஒரு முறை மெக்லவுட் சுவாமிஜியிடம் சுவாமிஜி உங்களுக்கு மிகச் சிறந்த முறையில் சேவை செய்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். இந்தியாவை நேசி என்று பதிலளித்தார் சுவாமிஜி. சுவாமிஜி இந்தியாவை எவ்வளவு ஆழ்ந்து நேசித்தார் என்பதை இந்த நாட்களில் காண முடிந்தது.

 

 ரயில் முதலில் நின்ற இடம் பாட்னா, வரலாற்றில் பாடலிபுத்திரம் என்று பெயர் பெற்ற இந்த நகரம் இந்திய வரலாற்றில் பல முக்கிய நிகழ்ச்சிகளைக் கண்டது. சுவாமிஜியின் வாயிலிருந்து அதன் வரலாறு  வெளிப்பட்ட போது, அதைக்கேட்டவர்கள் அந்தக் காலங்களுக்கே செல்வது போல் உணர்ந்தனர். முக்தி நகரமாகிய காசி, நவாப்களின் செல்வச் செழிப்பிற்கு சாட்சியாக நின்ற  லக்னோ மற்றும் புத்தரின் இளமை நாட்களையும்  துறவையும் கண்ட இடங்கள் வழியாக  ரயில் சென்றபோது ஒவ்வொன்றைப் பற்றியும் எடுத்துக் கூறினார் சுவாமிஜி. அவருக்குத் தெரியாத ஒரு நகரமோ வரலாறோ இல்லாதது போல் தோன்றிற்று. வழியில் அழகிய மயில்கள் அவ்வப்போது பறந்து கண்கொள்ளாக் காட்சியை அளித்தன. யானைகளைக் காணும் போது பண்டைய போர்களைப் பற்றி விவரிப்பார். ஒட்டகவரிசைகள் செல்லும்போது  பண்டைய வணிகர் கூட்டங்களின் கதைகளைக் கூறுவார். வெறும் வரலாற்றுடன் அவரது பேச்சு நின்றுவிட வில்லை. நமது கலாச்சாரம், மதம் என்றும் அவரது  எண்ணங்கள் சுழன்றன. கங்கையில் பிராத்தனை  செய்யும் இந்து விதவை, காசி நகரின் மயானப் படித்துறைகள், வர்ணாசிரம தர்மம் என்று பல்வேறு கருத்துக்களைப் பற்றியும் அவர் பேசினார்.

 

 முகம்மதானந்தர்

 

 மே 13- ஆம் நாள் அவர்கள் நைனிடாலை அடைந்தனர். அங்கே தங்கியிருந்த கேத்ரி மன்னரை சுவாமிஜி சந்தித்தார். தமது சீடர்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சுவாமிஜியின் மேலை நாட்டுச் சீடர்களைக் கண்ட மன்னர் மிகவும் மகிழ்ந்தார். நைனிடாலைச்சேர்ந்த சர்பரஸ் ஹுசைன். பிறப்பால் முஸ்லிமாக இருந்தும் இவர் அத்வைத  வேதாந்தத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர்  சுவாமிஜியால் மிகவும் கவரப் பட்டார். ஒரு நாள் அவர் சுவாமிஜியிடம், சுவாமிஜி! நீங்கள் ஓர் அவதார புருஷர் என்று வரும் நாட்களில் மக்கள்  கொண்டாடும் போது, ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்- அப்படிக் கொண்டாடிய முதல் மனிதன் முஸ்லிமாகிய நான் என்றார். சுவாமிஜியைச் சந்தித்த நாளிலிருந்து அவர் தம்மை சுவாமிஜியின் சீடராகவே கருதினார். தமது பெயரையும்  முகம்மதானந்தர் என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு எழுதிய கடிதத்தில் சுவாமிஜி வேதாந்தம் மற்றும்  இஸ்லாமின் சங்கமத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். வேதாந்தக் கொள்கைகள் எவ்வளவு நேர்த்தியாக, சிறப்பாக இருந்தாலும் செயல்முறை முகமதிய மதத்தின் உதவியில்லாமல் மனித இனத்திற்குச் சிறிதும் பயனற்றவையே, இந்து மதம், இஸ்லாம் ஆகிய இருபெரும் மதங்களின் சேர்க்கையே, அதாவது வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் நமது தாய் நாட்டிற்கு ஒரே நம்பிக்கை.

 ஒரு நாள் நிவேதிதையும் மற்ற மேலைநாட்டுப் பெண்களும் அருகிலுள்ள தேவி கோயில் ஒன்றிற்குச் சென்றனர். வழியில் இரண்டு பெண்கள் அவர்களிடம் சுவாமிஜியைப் பற்றி விசாரித்தனர். அவர்களும் சுவாமிஜி தங்கியிருக்கின்ற இடத்தைப் பற்றி எல்லாம் தங்களுக்குத் தெரிந்த இந்தியில் அவர்களுக்குக் கூறினர். அந்தப் பெண்கள் விலைமகளிர். அவர்கள் சுவாமிஜியைக் காண வந்த போது அங்கே பெரும்  கூட்டம் கூடியிருந்தது. அந்தக் கூட்டத்தினர் இவர்களைக் கண்டதும் முகம்  சுளித்தனர். அவர்களை உள்ளே விடக் கூடாது என்று மறுத்தனர். ஆனால் சுவாமிஜி அவர்களின்  எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை.அவர்களை அருகில் அழைத்து ஆசீர்வதித்தார். கருணை பொங்கும் குரலில் அவர்களிடம், நீண்ட நேரம் பேசினார். அந்தப் பெண்கள் மட்டுமல்ல, கேட்டோர் அனைவரின் உள்ளங்களும் நெகிழ்ந்தன.

 

 மே- 17ஆம் நாள் அவர்கள் அல்மோராவை அடைந்தனர். சுவாமிஜியும் மற்ற துறவியரும் சேவியர் தம்பதிகள் வாழ்ந்த தாம்சன் ஹவுஸில் விருந்தினராகத் தங்கினர். மேலைநாட்டுச் சீடர்கள் அருகிலுள்ள ஒக்லி ஹவுஸில் தங்கிர். அல்மோராவில் சுமார் ஒரு மாதம் அனைவரும் தங்கினர். சுவாமிஜியுடன் வாழ்வது என்பது ஒரு பக்கம் ஆன்மீகத்தின் ஆழங்களில் திளைப்பது, மறுபக்கம் அறிவின்  ஆழங்களில் மகிழ்வது, அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்  பல. ரோமப்பேரரசு, இன்றைய  இங்கிலாந்து, அமெரிக்கா, முகலாய சாம்ராஜ்யம், சீனா, புத்தர், சிவாஜி, புராணங்கள் , இமயமலை என்றுஅவர் பேசாத விஷயங்களே இல்லை எனலாம்.

 

 பரிவிராஜக நாட்களின் போது லெ்மோராவில் தமது உயிரைக் காத்த முஸ்லிம் பக்கீரை சுவாமிஜி மீண்டும் இங்கே சந்தித்தார். வரவேற்புகளின் போது அந்தப் பக்கீர் ஓர் ஓரமாக நின்றிருந்தார். அவர் சுவாமிஜியை இன்னார் என்று அடையாளம் காணவில்லை. ஆனால் சுவாமிஜி அவரைப் புரிந்து கொண்டு, கூட்டத்தையோ பரபரப்பையோ பொருட்படுத்தாமல் நேராக அவரிடம் சென்று அவரைக் கட்டியணைத்துக் கொண்டார். அருகில் நின்றவர்களிடம் அவரைப் பற்றி நன்றியுணர்வுடன் கூறி அவர்களுக்கு அறிமுகப் படுத்தினார் .  அவருக்குப் பணமும் அளித்தார்.

 அல்மோராவிலும் பொதுமக்களும் பிரமுகர்களும் பலர் சுவாமிஜியை வந்து  சந்தித்தனர். அன்னி பெசன்ட் அம்மையார் அல்மோராவில்  இரண்டு முறை சுவாமிஜியைச் சந்தித்தார். மேலை நாட்டினர் இருப்பதாலோ என்னவோ சுவாமிஜியின் நடவடிக்கைகளில் போலிசிற்குச் சந்தேகம் ஏற்பட்டது. நிவேதிதை அவருடன் இருந்ததும் ஒரு முக்கியக் காரணம் எனலாம். ஏனெனில் அவர் இங்கிலாந்தில் வளர்ந்தவர் ஆனாலும் அயர்லாந்தைத் தாயகமாகக் கொண்டவர், அயர்லாந்துப் புரட்சிகளில் தொடர்பு வைத்திருந்தவர். நிவேதிதை  எழுதுகிறார், சுவாமிஜியைப்போலிஸ் கண்காணிப்பதாக இன்று செய்தி கிடைத்தது. சுவாமிஜியோ அனைத்தையும் கேட்டு விட்டு  சிரிக்கிறார். எனக்கு என்னவோ போலிசின் செயலில் ஓர் உள்நோக்கம் இருப்பதாகவே படுகிறது.ஆனால் ஒன்று, இந்த அரசாங்கம் பைத்தியமாக இருக்க வேண்டும் அல்லது பைத்திய நிலையை நெருங்கிக் கொண்டிருக்க வேண்டும். அவரைத் தொட்டால், நாடெங்கும் (புரட்சி) தீ பரவ அதுவே முதல் பொறியாக அமையும். அந்தப் பொறியை நாடெங்கும் முதலில் பரப்புபவளாக  நானே- ஆங்கிலேயப்பெண்ணான நானே- இருப்பேன்.

 

தொடுவதால் ஞானம் வழங்குவான்

 

 இந்தியப் பணியில் நிவேதிதையின் பங்களிப்பு மிகவும் முக்கயமானதாக இருக்கப்போகிறது என்பதை சுவாமிஜி நன்றாக உணர்ந்திருந்தார். எனவே அவருக்குப் பயிற்சி அளிப்பதில் விசேஷ கவனம் செலுத்தினார். நிவேதிதை அவ்வளவு எளிதாகக் கருத்துக்களை ஏற்றுக்கொள்பவராகவும் இல்லை. நிவேதிதையின் கேள்விகளும் போக்கும் சுவாமிஜிக்குத் தமது தட்சிணேசுவர நாட்களை நினைவுபடுத்தின. ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களைத் தாம் அப்படியே ஏற்றுக் கொள்ளாதது  சுவாமிஜியின் மனத்தில் எழுந்தது. தமது எந்தக் கருத்துக்களையும் யாரிடமும் திணிக்க அவர் விரும்பவில்லை. எனவே நிவேதிதை எதிப்புகளை எழுப்பும் போதெல்லாம் அவற்றிற்கு உரிய விளக்கங்களை அளித்து விட்டு அவரை அவர் போக்கில் விட்டு விட்டார். ஆனால் அவருக்கு அளித்து வந்த ஆன்மீகப் பயிற்சிகளை நிறுத்த வில்லை. அதாவது, எதிர்க்கருத்துக்களைக் கூறுகிறார் என்பதற்காக அவரை ஒதுக்கி வைக்கவில்லை. பள்ளி செல்வது போன்ற நாட்கள் அவை என்று பின்னாளில் எழுதினார் நிவேதிதை.

 

 சில வேளைகளில் சுவாமிஜிக்கும் நிவேதிதைக்கும் இடையே  பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் எழுவது உண்டு. இதன் காரணமாக இருவரும்  அமைதியின்றித் தவித்த நாட்களும் இருந்தன. ஒரு முறை இத்தகைய நிலைமை ஏற்பட்டபோது சுவாமிஜி அடர்ந்த காடுகளுக்குச் சென்று விட்டார். காலையில் சென்றவர் மாலையில் தான்  திரும்பினார். மீண்டும் ஏகாந்தவாழ்விற்குச்செல்ல அவரது  உள்ளம் விழைந்தது. எனவே நிவேதிதையிடம், நான் தனிமையில் செல்கிறேன் வரும்போது அமைதியைக் கொண்டு வருவேன் என்று கூறினார்.

 

 அது அமைதியான மாலை வேளை, இருள் கவியத் தொடங்கியிருந்தது. பிறையை வானில் கண்ட சுவாமிஜி, அதோ பார்! முஸ்லிம்கள் பிறையைப்போற்றுகிறார்கள். நம் வாழ்விலும் இந்தப் பிறை ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கட்டும் என்றார். சுவாமிஜியின் வார்த்தைகளும் தோற்றமும் நிவேதிதையின் மனத்தில் அமைதியை நிறைத்தன. சுவாமிஜியின் திருமுன்பு அவர் மண்டியிட்டார். தமது அருமை மகளின் தலையைத் தொட்டு, கைகளை உயர்த்தி அவரை ஆசீர்வதித்தார் சுவாமிஜி.

 

 ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு முறை, காலப்போக்கில் நரேன் தொடுவதன் மூலமே ஞானம் வழங்க வல்லவன் ஆவான் என்று கூறியிருந்தார். அன்று அதன் உண்மையை நிவேதிதை உணர்ந்தார். அமைதியான அந்த மாலை வேளையில் சுவாமிஜி அளித்த ஆசிகள் தம் நெஞ்சில் நிறைந்து, அகத்தில் ஏதேதோ மாற்றங்களை ஏற்படுத்துவதை நிவேதிதை உணர்ந்தார். அன்றுஅவர் தியானத்திற்காக அமர்ந்தபோது, என்றுமில்லாத அளவிற்கு அவரால் ஆழ்ந்து தியானம் செய்ய முடிந்தது. தியானத்தின் ஆழங்களில் அன்று அவர் அறுதிப் பரம் பொருளில் அற்புதக் காட்சி பெற்றார்.

 நிவேதிதையை ஆசீர்வதித்து விட்டு, தாம் கூறியது போலவே எதிர் மலையில் அமைந்துள்ள சியா தேவி கோயிலுக்குச் சென்றார் சுவாமிஜி. அடர்ந்த காடுகளுக்குள் அந்தக்கோயில் அமைந்திருந்தது. அந்தக்கோயிலின்  அருகில் தங்கிவிட்டு, ஒவ்வொருநாளும் பத்து மணி நேரம் அங்கிருந்து இன்னும் அடர்ந்தக் காடுகளுக்குச்சென்று தனிமைத் தவத்தில் மூழ்கினார். ஆனால் மக்கள் கூட்டம் அவரை அங்கும் விடுவதாக இல்லை. அவர் திரும்பி வரும்போது, அங்கே ஒரு கூட்டம் அவரை வணங்கவும் ஆசிகள் பெறவும் தயாராக இருக்கும். அல்மோராவில் தங்குவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதைக் கண்ட சுவாமிஜி மூன்றாம் நாளில் திரும்பிவிட்டார்.

 ஆனால் தாம் கூறியது போலவே, திரும்பி வரும்போது சுவாமிஜியின் முகம் தெய்வீகப் பொலிவில் திளைத்தது. அதிலிருந்து ஓர் ஒளி எழுந்து பரவுவது போல் தோன்றியது.உண்மையிலேயே அவர் அறுதி அமைதியை மீண்டும் ஒரு முறை தொட்டிருந்தார். அதனையே கொண்டும் வந்தார்.

 

 தனிமை வாழ்விலிருந்து திரும்பி வந்த சுவாமிஜி தொடர்ந்துமூன்று இழப்புகளைத் தாங்க வேண்டியிருந்தது. முதலாவது  பவஹாரி பாபாவின் மகாசமாதி. ஸ்ரீராகிருஷ்ணருக்கு அடுத்த இடத்தில் நான் போற்றுபவர் என்று சுவாமிஜி இவரைப் பற்றி குறிப்பிட்ட துண்டு.ஹோமங்கள்  செய்வது பாபாவின் சாதனை முறைகளில் ஒன்றாக இருந்தது. அத்தகைய ஹோமத் தீக்குக் கடைசி ஆஹு தியாகத் தமது உடம்பையே அளத்திருந்தார் அந்த மகாயோகி.

 அப்படித் தம்மையே எரித்துக்  கொள்வது தவறல்லவா சுவாமிஜி? என்று ஒருவர் கேட்டார்.

 நான் எப்படிச்சொல்ல முடியும்? அவரது செயல்களை ஆராயும் தகுதி எனக்குக் கிடையாது. அவர் அவ்வளவு உயர்ந்தவர். தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்றாக உணர்ந்தவர் அவர்.” என்றார் சுவாமிஜி. பின்னாளில் பவஹாரி பாபாவின் வரலாற்றை அவர் எழுதவும் செய்தார்.

 

 மரணத்திற்குப் பிறகு கூட அவர் யாருக்கும் தொந்தரவு தர விரும்பவில்லை. எனவே ஆரியர் என்ற முறையில் செய்ய வேண்டிய இறுதித் தியாகத்தை அவர் தம் உடலுடனும்  சொந்த நினைவுடனும் இருந்தபோதே செய்து கொண்டார். அவரை நான் நன்றாக அறிந்திருப்பதால் தான்  இவ்வாறு துணிந்து கூறுகிறேன். மறைந்த அந்த மகானுக்கு நன்றி செலுத்தும் கடமை இந்தஎழுத்தாளருக்கு(எனக்கு) உள்ளது. இதை எழுதத் தகுதியற்றவனாக இருந்தாலும், நான் நேசித்துத்   தொண்டுகள் செய்த மாபெரும் ஆச்சாரியர்களுள் ஒருவரான பவஹாரி பாபாவின் நினைவிற்காக இதை அர்பணிக்கிறேன் என்று எழுதினார் சுவாமிஜி.

 

 அடுத்தது யாருமே எதிர் பாராத ஓர் இழப்பு- அது குட்வினின் மரணம். சுவாமிஜியின் விருப்பப்படியும்  அளசிங்கரின் உதவியுடனும் ஆங்கிலத்தில் ஒரு தினசரி பத்திரிகை தொடங்குவதற்காக வும், அளசிங்கரின் பிரம்ம வாதின் பத்திரிகைப் பணியில் உதவுவதற்காகவும் 1897 ஜுலையில் சுவாமிஜி அவரைச்சென்னைக்கு அனுப்பியிருந்தார். அவரும் தமது பணிகளை ஆரம்பித்திருந்தார். ஆனால் விதி வேறு விதமாக கணக்குப் போட்டது. ஊட்டி சென்றிருந்த அவர் திடீரென்று டைபாய்ட் காய்ச்சலால் தாக்கப் பட்டார். இறுதி நேரத்திலும் சுவாமிஜியைப்பற்றியே பேசினார். அவர் தம் அருகில் இருக்க வேணடும் என்று மிகவும் விரும்பினார். அவரது  நினைவுகளில் ஆழ்ந்தபடியே உயிரை விட்டார் குட்வின். அப்போது அவருக்கு வயது 30 மட்டுமே. சுவாமிஜிக்காகத் தன்னை அர்ப்பணித்து, அவருக்காகவே வாழ்ந்த வாழ்க்கை அது! அவர் மிஸ் மெக்லவுடிற்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியைக் காண்போம்.

 

 நான் இந்தியாவிற்கு வந்த போது சுவாமிஜியைப் பற்றி நான்  என்ன நினைத்தேன் என்பது  பற்றி உங்களுக்கு நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இங்கே பதினாறு மாதங்கள் தங்கியபிறகு முற்றிலுமாக உங்கள் கருத்திற்கு வந்து விட்டேன். நான் சுவாமிஜிக்காக  எதையும் செய்வேன். வேறு எதைப் பற்றியும் நான் கவலைப் பட வில்லை. அவரது பணியை நான் செய்வது கூட அவரது  திருவுளத்தால் தான். இப்போது எனக்கு அவ்வளவாக வேலையில்லை. இதன் காரணமாக நான் அவருக்கு ஒரு பாரமாகி விடக் கூடாது என்பதற்காக ”மெயில் பத்திரிகையில்  சேர்ந்து வேலை செய்கிறேன். சுவாமிஜியின் பணிக்காக இந்தியாவிற்கு வந்த அவர், சுவாமிஜிக்குச் சுமையாகி விடக்கூடாது என்பதற்காகவேறு வேலையும்தேடினார். இத்தகைய ஒரு நல்ல உள்ளத்தின்  இழப்பு சுவாமிஜியையும் கலங்கச் செய்வது இயல்புதானே! எனது வலது கால் ஒடிந்தது, எனது இழப்பு ஈடு செய்ய இயலாதது என்று கலங்கினார் அவர். எந்த இடத்தில் அவருக்கு குட்வினின் மரணச் செய்தி தெரிவிக்கப் பட்டதோ அந்த இடத்தில் தங்கவும் அவர் மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் குட்வினின் நினைவுகளை அந்த இடம் எழுப்புவதாகக் கூறினார் . பிரிவின் வேதனையால் அவர் துடித்ததை அனைவரும் காண முடிந்தது. ஆன்ம ஞானியாக இருந்தும், ஒரு சாதாரண மனிதனைப்போல், குட்வினின் உயிரைப் பறித்த அந்தக் கடவுளை ஓர் உதை விட்டு, அவரைக் கொன்றால் தான் என்ன!  என்று பிதற்றும் அளவிற்கு அவரது வேதனை இருந்தது. தமது உணர்ச்சிகளைக் கவிதையாக்கி, அதனை, மகனின் பிரிவால் வாடும் விதவை த் தாய்க்கு அனுப்பினார் சுவாமிஜி.

 

 இந்த வாழ்விலிருந்து குட்வின் விடைபெற்ற துயரச் செய்தி கேட்டு என் மனத்தில் எழுகின்ற துயரம் விவரிக்க முடியாதது. எங்கிருந்தோ வந்தது போல் அது திடீரென நடந்துவிட்டது. எனவே மரண வேளையில் என்னால் அவரது அருகில் இருக்க முடியாமல் போயிற்று. அவருக்கு நான் நன்றிக் கடன் ஒரு போதும் தீர்க்க முடியாதது. எனது கருத்துக்களால்  பயன்பெற்றதாக யாராவது நினைப்பார்களானால், அதற்குக் காரணம் குட்வினின் சலிக்காத, சுயநலம் சிறிதும் இல்லாத உழைப்பே, ஏறக்குறைய ஒவ்வொரு வார்த்தையும் அவரது உழைப்பினால் தான் வெளிவந்தது. அவரை இழந்ததில், எஃகு புான்ற உறுதியுடைய நண்பரையும், மாறாத பக்தியுடைய சீடரையும், சலிப்பு என்பதே என்னவென்று அறியாத செயல் வீரரையும் நான் இழந்து விட்டேன். அவரை இழந்ததில், பிறர்க்காகவே வாழ்வதற்காகப் பிறப்பவர்களுள் ஒருவரை உலகம் இழந்து நிற்கிறது.

 

மூன்றாம் இழப்பின் செய்தி சென்னையிலிருந்து வந்தது- பிரபுத்த பாரதம் பத்திரைிகையை நடத்திவந்த ராஜம் ஐயர் தமது இருபத்தாறாம் வயதில் மறைந்தார்.

 வேதாந்தத்தில் நல்ல ஆர்வமும் சுவாமிஜியிடம்  மிகுந்த ஈடுபாடும் கொண்டவர் அவர். அவரது மரணத்துடன்  அந்தப் பத்திரிகை நின்று போயிற்று. தமது சீடரான சுவரூபானந்தர் மற்றும் சேவியரின்  உதவியுடன் அந்தப் பத்திரிகையை மீண்டும் வெளியிட எண்ணினார் சுவாமிஜி. அவ்வாறே அது  அல்மோராவிலிருந்து பின்னாளில் வெளிவரத் தொடங்கியது.

 

ஜுன் 11-ஆம் நாள் நிவேதிதை மற்றும் சிலருடன் அல்மோராவிலிருந்து  காஷ்மீருக்குப் புறப்பட்டார் சுவாமிஜி. வழியெங்கும் அழகிய காட்சிகள்! அவற்றுடன் சுவாமிஜியின் துணையும் சேர்ந்து, உடன் சென்றவர்களுக்கு அந்தப்பயணம் மறக்க முடியாததாகியது. வழியில் ஒரு குன்று கண்களில் பட்ட போது சுவாமிஜி, கூறினார், இந்தக் குன்றில் கந்தர்வர்கள்  வாழ்கிறார்கள். நானே ஒருவரைப் பார்த்திருக்கிறேன். பொது மக்களிடையிலும் அவர்களைப் பற்றிய பேச்சு உள்ளது. ஆனால் அது பின்னால் தான் எனக்குத் தெரிய வந்தது.

 வேதகால ரிஷிகள் வாழ்ந்த இடம் இமயமலை. அந்த இடத்தில் வேத மந்திரங்கள் உள்ளத்தில்எழுவது இயல்பு. சுவாமிஜியும் பல மந்திரங்களை ஓதினார். அவற்றின் பொருளை விளக்கினார். குறிப்பாக அப்யாரோஹே மந்திரம், சாந்தி மந்திரங்கள் பலவற்றை அவர்களுக்காக மொழி பெயர்க்கவும் செய்தார்.

 குதிரை வண்டியில் செல்ல வேண்டிய இடங்களில் அவரது மேலைநாட்டுச் சீடர்கள் ஒவ்வொருவராக மாறிமாறி அவருடன் பயணம் செய்தனர்.  சுவாமிஜி தமது வாழ்க்கையில் நடைபெற்ற பல சம்பவங்களைக் கூறினார். தீமையை வெல்வதற்கான ஒரே ஆயுதம் அன்பு  என்று கூறி ஒரு நிகழ்ச்சியின் மூலம் அதனை விளக்கவும் செய்தார்.

 

அன்பையே வழங்குகிறேன்

 

 சுவாமிஜியின் பள்ளித்தோழர் ஒருவர் பின்னாளில் பெரிய பணக்காரராக ஆனார். அவருக்கு த் திடீரென்று ஒரு நோய் வந்தது. அது என்ன, அதற்கு என்ன சிகிச்சை என்பது போன்ற எதையும் டாக்டர்களால்  முடிவு செய்ய இயலவில்லை. எல்லா நம்பிக்கைகளும் இழந்த நிலையில் அவருக்கு வாழ்க்கையிலேயே வெறுப்பு தோன்றியது. அவர் மதத்தை நாடினார். தம்முடன் படித்த நரேந்திரர் துறவியாகி விட்டதாகவும், நரேந்திரர் யோகத்தில் வல்லவர் என்றும் கேள்விப்பட்ட அவர் சுவாமிஜிக்குச் செய்தி அனுப்பி எப்படியாவது தம்மைவந்து காணுமாறு கேட்டுக்கொண்டார். சுவாமிஜியும் அவரைக் காணச் சென்றார்.

 

 நோயாளியின் படுக்கையின் அருகில் அமர்ந்தபோது உபநிஷத மந்திரம் ஒன்று சுவாமிஜியின் மனத்தில் எழுந்தது. தன்னை ஆன்மாவிலிருந்து வேறாகக் காண்பவனைப் பிராமணன் வெல்கிறான். தன்னை ஆன்மாவிலிருந்து வேறாகக்காண்பவனை ஷத்திரியன் வெல்கிறான். தன்னைப் பிரபஞ்சத்திலிருந்து வேறாகக் காண்பவனை பிரபஞ்சம்  வெல்கிறது.

 

 இந்த மந்திரத்தை சுவாமிஜி ஓதினார். விளைவு பிரமிப் பூட்டுவதாக இருந்தது. சுவாமிஜி இதை ஓதியதும் நண்பரால் மந்திரத்தின் உட்பொருளைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் தனது உடம்பில் புதியதோர் ஆற்றலை உணர்ந்தார். டாக்டர்களால் குணப்படுத்த முடியாத வியாதியிலிருந்து  விரைவில் மீண்டார். இதனைக் கூறிவிட்டு சுவாமிஜி தொடர்ந்தார். நான் சில வேளைகளில் உங்களுக்குப் புரியாத ஒன்றைச் சொல்வேன். சிலவேளைகளில் கோபமாக ஏதாவது கூறுவேன். ஆனால் என் மனத்தில் அன்பு என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் இல்லை. வேறு எதையும் நான் போதிக்கவில்லை என்பதை மனத்தில் வைத்திருங்கள். நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம் என்பதை ப் புரிந்து கொண்டால் மட்டும் போதும் எல்லாம் சரியாகி விடும்.

 

 ஜுன் 20-ஆம் நாள் அவர்கள் பாரமுல்லாவை அடைந்தனர். பாரமுல்லாவில் சுவாமிஜியும், உடன் சென்றவர்களும் சுமார் 4 மாத காலம் ”டுங்கா எனப்படும் படகு வீடுகளில் தங்கினர் இவை சுமார் 70 அடிநீளமும் 2 கட்டில்கள் போதத்தக்க அகலமும் உடையவை. சுற்றிலும் அழகிய பாய்கள் கட்டப் பட்டு ஓர் இனிய அறையின் சூழலை ஏற்படுத்தின. எந்த இடத்தில் தேவையானாலும் பாய்களைச் சருட்டி, வெளிச்சமோ காற்றோ வரச் செய்துகொள்ள இயலும்  சவாமிஜியும் மற்றொரு துறவியும் ஒரு படகு வீட்டில் தங்கினர். மிசஸ் சாராவும் மிஸ் மெக்லவுடும் ஒன்றில், நிவேதிதையும் மிசஸ் பேட்டர்சனும் மற்றொன்றில் தங்கினர். சாப்பாட்டுக் கூடமாக ஒரு படகு அமர்த்தப் பட்டது. இவ்வாறு 4 படகுவீடுகளில் அவர்கள் தங்கினர்.

 

படகோட்டிகள் தங்கள் குடும்பத்துடன் அந்தப் படகிலேயே ஓர் ஓரமாக வாழ்க்கை நடத்தினர். சில வேளைகளில் அவர்கள் படகைத் துடுப்புகளால் துழாவி ஓட்டினர். சில வேளைகளில் படகைக் கயிற்றில் கட்டி, கரையோரமாக நடந்தவாறே இழுத்துச்சென்றனர். படகு சஞ்சரித்துக்  கொண்டிருப்பதை அறிய முடியாத அளவிற்கு அது மிதந்து செல்லும் வண்ணம் திறமையாக அவர்கள் படகோட்டினர். ஜீலம் நதியிலோ, ஏரிகளிலோ,  உள்ளே செல்ல நினைத்தால் அவர்களிடம் ஒரு நாள் முன்பே கூறிவிட வேண்டும். அதற்கு எத்தனை  நாள் ஆகும்  என்பதைக் கணக்கிட்டு, அதற்குத்தேவையான  உணவுப்பொருட்கள், காய்கறிகள், முட்டை, கோழி, வாத்து, வெண்ணெய், பழங்கள், பால் போன்றவற்றைச்சேமித்துக்கொள்வார்கள். இவை படகின் கீழறைகளில் சேமிக்கப் படும்.

 

 சுவாமிஜியைச்  சந்திக்கவும் அவருடன் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யும் பல நேரங்களில் காஷ்மீர் பண்டிதர்கள் வருவதுண்டு. சுவாமிஜியின் பரந்த கருத்துக்களையோ, ”மிலேச்சர்கள் என்று  கருதப்பட்ட மேலை நாட்டினருடன் அவர் வாழ்வதையோ அவர்களால்  ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சுவாமிஜி இந்தப் பெண்களை ஏன் உங்களுடன் தங்க அனுமதித்துள்ளீர்கள்? அதிலும் இவர்கள் மிலேச்சர்கள், தீண்டத்தகாதவர்கள் என்பார்கள்.அந்தவேளையில் கீழறையிலிருந்து கோழிக் குஞ்சுகளும் வாத்துகளும் எழுப்புகின்ற கலகல சத்தங்கள் கேட்கும். பண்டிதர்கள் சுற்று முற்றும் பார்ப்பார்கள். சுவாமிஜி தமது சீடர்களைப் பார்த்துக் கண் சிமிட்டுவார்கள். அந்தப் பண்டிதர்களுக்கு ஒன்றும் புரியாது. இவர்கள் அசைவ உணவு  சாப்பிடுபவர்கள் என்பது தெரிந்தால் அந்தப் பண்டிதர்கள் உயிரையே விட்டிருப்பார்கள்.

 

 சுவாமிஜியைப் பழமைவாதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது போலவே அவரது மேலைநாட்டுச் சீடர்களையும் மற்ற மேலை நாட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னதான் சுவாமிஜி உங்களை ஏற்றுக் கொண்டாலும் அவர் உங்களை மரியாதையுடன் நடத்தவில்லை. தலைப்பாகை அணியாமல் உங்களிடம் வந்து பேசிக் கொண்டிருப்பதிலிருந்தே இது உங்களுக்குப் புரியவில்லையா? என்று அவர்கள் கேட்டனர். இரண்டு  நாட்டினரிடையேயும்  இருந்த முட்டாள் தனங்களைக் கண்டு எங்களுக்குள் சிரித்துக் கொண்டோம் என்று எழுதுகிறார் மிஸ் மெக்லவுட்.

 

பாரமுல்லாவிலிருந்து ஜீலம் நதி வழியாகப் படகு வீடுகளில் அவர்கள் ஸ்ரீநகருக்கு ப் புறப் பட்டனர். கண்கொள்ளாக் காட்சிகள் நிறைந்த ஒரு பயணமாக இருந்தது அது. இரண்டாம் நாள் பயணத்தில்  ஒருகிராமத்தை அவர்கள் கடந்து செல்ல நேர்ந்தது. சுவாமிஜி அவர்களை அந்தக் கிராமத்தினுள் அழைத்துச் சென்றார். அங்கே முஸ்லிம்  பெண் ஒருத்தியை அவர்களுக்கு அறிமுகம் செய்தார். அந்தப் பெண் கம்பளி நெய்து கொண்டிருந்தாள். மருமகள் களும் பேரக்குழந்தைகளும் அவளுக்கு உதவினர். சென்றவருடம்  சுவாமிஜி காஷ்மீர் வந்த போது அவளைச் சந்தித் திருந்தார். அப்போது நடந்த நிகழ்ச்சியை அவர் நினைவு கூர்ந்தார். அன்று அவளிடம் தாகத்திற்குத் தண்ணீர் கேட்டார் அவர். இவளும் கொடுத்து உபசரித்தாள். தாகம் தீர்ந்த சுவாமிஜி அவளிடம், அம்மா, நீ எந்த மதத்தைச் சார்ந்தவள்? என்று கேட்டார். அவளிடம் ஒரு பெருமிதம் தென் பட்டது. கம்பீரமான குரலில், அல்லாவின் கருணையால் நான் ஒரு முஸ்லிம் என்று பதில் அளித்தாள் அவள். ஒரு முஸ்லிமாக இருப்பதில் அவளுக்கு இருந்த பெருமை சுவாமிஜியை மிகவும் கவர்ந்தது. ஒவ்வோர் இந்தியனிடமும் இந்தப் பெருமை, தனது மதத்தில் பெருமை, தனது பாரம்பரியத்தில் பெருமை, தனது கலாச்சாரத்தில் பெருமை, தனது முன்னோர்களில் வேறுவிதமாக இருந்திருக்கும் என்று ஒரு வேளை அவரது உள்ளம் நினைத்திருக்கும்.

 

  தொடர்ந்த சுமார் 22 நாட்கள் சுவாமிஜியும் மற்றவர்களும் படகு வீடுகளில் வாழ்ந்தனர். ஸ்ரீநகரைக் சுற்றியே அவர்களது பயணம் அமைந்திருந்தது. அவர்களுக்கு முன்பு காஷ்மீர் வரலாற்றின் பல கோணங்களைத் திறந்து வைத்தார் சுவாமிஜி. அவர்கள் சாப்பாட்டைக்கூட மறந்து சுவாமிஜியின் சொல் மழையில் திளைத்திருந்த நாட்களும் உண்டு. காஷ்மீரைக் கடந்து சென்ற பல்வேறு காலக் கட்டங்கள், குறிப்பாக கனிஷ்கரின் காலம், பௌத்தம் காட்டிய  நல்லொழுக்கம், அசோகரின் மதக் கொள்கை, சிவ வழிபாட்டின் வரலாறு என்று அவர் விரித்த காட்சிகள்  எண்ணற்றவை.

 

 செங்கிஸ்கானைப் பற்றி அவர் கூறிய கருத்து சிந்தனைக்கு உரியது. அவர் கூறினார், பொதுவாகக் கருதப்படுவது போல் செங்கிஸ்கான் ஒரு கொள்ளைக் காரனோ கொலைகாரனோ அல்ல, நெப்போலியனையும் அலெக்சாண்டரையும் போல் அவனும் ஒரு மாபெரும் வீரன். அவனும் ஒருங்கிணைப்புக் கருத்தினால் மிகவும் ஆட்கொள்ளப் பட்டிருந்தான். உலகை அவன் ஒருங்கிணைக்க விரும்பினான். எப்படி ஒரே கடவுள் கிருஷ்ணராக, புத்தராக, ஏசுவாக, வெளிப்படுகிறாரோ அது போலவே ஒரே உயிர் தான் செங்கிஸ்கான், அலெக்சாண்டர், நெப்போலியன் மூவர் வாயிலாகவும் வெளிப்பட்டது, மூன்று விதமான வெற்றிகளை அடைந்தது என்று தோன்றுகிறது.

 சிவ பூமியாகிய இமயமலையில் சுவாமிஜியிடம் சிவ சிந்தனை ஓங்கி நின்றது. சிவன் பாதி, உமை பாதியாகக்  காட்சியளிக்கின்ற அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தை ஒரு நாள் அவர் விளக்கினார்.ஆண்- பெண் தத்துவங்களின் சங்கமம் மட்டுமல்ல,  இரண்டு மாபெரும் சிந்தளைகளின் சங்கமமாகவும் அந்தக்கோலம் இருப்பதைச் சுட்டிக் காட்டினார் சுவாமிஜி. சிவபெருமான் துறவுக் கடவுள், உமையோ தாய் வடிவினள். இருவரும் இணைந்த கோலம் துறவு மற்றும் தாய்மை வழிபாட்டின் சங்கமத்தை உணர்த்துகிறது. சிவபெருமான் ஞான வடிவினர், தேவியோ அன்பு வடிவினள். உண்மை நிலையில் ஞானமும் பக்தியும் ஒன்றாவதை இந்த உருவம் காட்டுவதாகவும் கொள்ளலாம் என்று விளக்கினார்.

 

தேவலோகத்திலிருந்துபூமிக்கு வந்த கங்கை முதலில் சிவ பெருமானின் ஜடாமுடியில் வீழ்ந்து, அதன் பிறகு பூமியில் நதியாக ஓடினாள் என்று  ஒரு புராணக் கதை உண்டு,  அதற்கு சுவாமிஜி ஒருபுதுமையான விளக்கத்தை அளித்தார். கங்கை வீழ்வதற்கு ஏன் சிவ பெருமானின் தலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏனெனில் கங்கை என்றல்ல , அனைத்து நதிகளும் அருவிகளும் சிவ பக்தைகள். சிவ பெருமானை வழிபடுபவர்கள். புண்டோடும் நதிகளும், உச்சியிலிருந்து வீழும் அருவிகளும் என்ன பாடுகின்றன, என்ன பேசுகின்றன என்பதை உற்றுக்கேட்டால் , அது வ்யோம், வ்யோம், ஹர ஹர என்பதாக இருக்கும். சிவ பக்தையாக இருப்பதால் தான் கங்கை சிவபெருமானின் தலையை முதல் இருப்பிடமாகத்தேர்ந்தெடுத்தாள்.

 

 இந்தப் பயணத்தைப் பற்றி தாம் எழுதியுள்ள குறிப்பு களின்  தொகுப்பு நூலில் சுவாமிஜியைப் பற்றிய ஒரு வினோதமான சித்திரத்தைத் தருகிறார் சகோதரி நிவேதிதை. அது அலரது சிந்தனை நீரோட்டத்தைப் பற்றியது. அவர் ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தால், அதுவே முற்றிலும் உண்மை என்று கேட்போர் உறுதிக்கொள்ளும் அளவிற்குப்பேசுவார். நேரம்,காலம், எதையும் கருத்தில் கொள்ளாமல் பேசிக்கொண்டே இருப்பார். ஒரு நாள் இப்படித்தான் காலைவேளையில் பக்தி பற்றிபேச ஆரம்பித்தார். சிவன் –பார்வதி, கிருஷ்ணன்- ராதை  இவர்களுக்கிடையே நிலவிய பக்தியைப்பற்றி பேசத்தொடங்கிய அவர் காலை உணவு வேளை கடந்து செல்வதையும் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தார். பசியுணர்வே அவருக்கு இல்லாதது போல் இருந்தது. கடைசியில் ஒரு வழியாக உணவிற்காக அமர்ந்தபோது அவர், அவர்களிடையே நிலவியது போன்ற பக்தி ஒருவனுக்கு இருக்குமானால் அவனுக்கு உணவு எதற்கு? என்று கேட்டார்.

 

 சில வேளைகளில் அவரது கருத்து என்ன என்பதைப் புரிந்து கொள்வதே மிகவும் கடினமாக இருக்கும். இப்போது ஒன்றைக் கூறுவார். அதுவே அறுதி உண்மை என்பதுபோல்  பேசுவார். மறுகணமே அதற்கு நேர்  எதிரான கருத்தைக் கூறுவார். ஒரு நாள் சில துறவிகள் காலில் செருப்பின்றி  நடந்து செல்வதைக்கண்டு, இது காட்டுமிராண்டித்தனம் என்று கூறி உடலளவிலான இத்தகைய தவத்தைப் பழித்தார். சிறிது நேரம் சென்று, ஆனால் இத்தகைய ”காட்டு மிராண்டித்தனம் இல்லையென்றால் சுகபோக வாழ்க்கையில் மனிதன் ஆழ்ந்து ஆண்மையையே இழந்திருப்பான் என்றார்.

 

 இத்தகைய சம்பவங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலவற்றை சுவாமிஜியின் வாழ்க்கையில் காண முடியும். அவருக்கென்று ஒரு கருத்து இல்லாததால் இப்படிபேசினாரா? அல்லது தமது பேச்சுத் திறமையைக் காட்டுவதற்காக இப்படி பேசினாரா? இத்தகைய கேள்விகளுக்குப் பதில் இல்லை, என்பது தான். சுவாமிஜி மட்டுமல்ல, அவரது குருவான  ஸ்ரீராமகிருஷ்ணர் என்றல்ல, நமது பண்டைய ரிஷிகளும் முனிவர்களும் இத்தகையரீதியில் தான் பேசினார். சாஸ்திரங்களும்  கூட இந்த  வழியையே பின்பற்றின.

 

 அது எந்த வழி?

 

 எந்த நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்கின்ற வழி. முற்றிலும் நன்மை அல்லது முற்றிலும் தீமை என்று இந்த உலகில் எதுவும் கிடையாது. நீ  இருந்தால் அங்கே புகை இருக்கும், நன்மை இருந்தால்  தீமையும் இருந்தே தீரும். அதனால் குருதார்களும் சாஸ்திரங்களும் இரண்டு பக்கங்களையும் காட்டி, தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நம்மிடம் விட்டு விடுகின்றனர். நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி விட்டேன். நீங்கள் தலையையும் வாலையும் நீக்கிவிட்டு எடுத்துக்கொள்ளுங்கள். என்று ஸ்ரீராமகிருஷ்ணர் தமக்கே உரிய கிராமிய மொழியில் கூறுவார். கீதையிலும், ரகசியங்களுள் மேலான ரகசியத்தை இவ்வாறு நான் உனக்குச்சொன்னேன். இதை  நன்றாக ஆராய்ந்து எப்படி  விரும்புகிறாயோ, அப்படிச்செய், என்று கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுவதைக் காண்கிறோம்.

 சுவாமி விவேகானந்தரின் இலக்கியங்களைப் படிக்கும் போது இந்தக் கருத்தை மனத்தில் கொள்வது இன்றியமையாதது.

 

ஒரு நாள் சுவாமிஜி திடீரென்று தனிமையில் செல்ல வேண்டும் என்று புறப்பட்டார்.குழுவினரும் உடன் சென்றனர். அனைவருமாக ஷீர்பவானி தேவி கோயிலுக்குச் சென்றனர். இந்து அல்லாத யாரும் அந்தப் பகுதியில் சென்றதில்லை என்று கூறப்படுகிறது. சுவாமிஜியுடன் சென்ற கிறிஸ்தவர்களாகிய  மேலை நாட்டினர் தான் முதன் முறையாகச் சென்றனர். அழைத்துச்சென்ற படகோட்டி முஸ்லிமாக  இருந்தாலும், செருப்பு அணிந்து கொண்டு யாரும் அந்தப் பகுதிக்குள் செல்லக்கூடாது என்று தடுத்து விட்டான். அவனும் செருப்பின்றியே கோயிலுக்குச்சென்றான். சுவாமிஜி கூறினார், காஷ்மீரிலுள்ள இஸ்லாம் மதம் முற்றிலுமாக இந்துமயமாக்கப் பட்டது. அவர்களும் நாற்பது ரிஷிகளைக் கொண்டாடுகிறார்கள், விரதங்கள் இருந்து இந்துக் கோயில்களுக்குச் செல்கிறார்கள்.

 

 தனிமை வாழ்வில் ஆர்வம் தோன்றும்போதெல்லாம் சுவாமிஜி அவர்களிலிருந்து பிரிந்து சென்று விடுவார். அவர் திரும்பும்போது அவரிடம் ஒரு புத்துணர்வு தெரியும். அறுதிப் பரம்பொருளாகிய ஆண்டவனின் திருவடிகளைத் தொட்டதால்  எழுகின்ற புத்துணர்வு அது என்பதைப் பிறர் புரிந்து கொள்ள இயலும். அப்படி வரும்போது அவர் சில உத்வேகமிக்க கருத்துக்களைக் கூறுவார். உடம்பைப் பற்றி நினைப்பது கூட பாவம் அதிசய ஆற்றல்களை வெளிப்படுத்துவது தவறு பொருட்கள் வளர்வதில்லை. அவை எப்படி இருந்தனவோ அப்படியே இருக்கின்றன. அவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம் நாம் வளர்கிறோம் என்றெல்லாம் கூறுவார்.

 ஒரு முறை இப்படித்தான் யாருக்கும் சொல்லாமல் தனிமையில் போக வேண்டும் என்று நினைத்த சுவாமிஜி, அமர்நாத் செல்லும் எண்ணத்துடன் கிளம்பிச்சென்றுவிட்டார்.ஆனால் அவர் நினைத்திருந்த பாதை வழியாகச்செல்ல இயலவில்லை. வெயில் காரணமாகப் பனிப்பாளங்கள் உருகி பாதையைச் சீர்குலைத்திருந்தன. ஐந்து  நாட்களுக்குப் பிறகு திரும்பினார் அவர்.

 

 அமெரிக்காவின் சுதந்திரநாளாகிய ஜுலை 4 நெருங்கி வந்தது. அந்தக் கூட்டத்தில் இருவர் அமெரிக்கர்கள். ஆ, அமெரிக்கக்கொடி மட்டும் இருந்திருந்தால் அவர்களின் சுதந்திரதினத்தைக் கொண்டாடியிருக்கலாமே! என்றார் நிவேதிதை. சுவாமிஜி ஒரு தையல் காரனை அழைத்து வந்து அமெரிக்க கொடியைத் தைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதில் எத்தனை நட்சத்திரங்கள், எத்தனைகோடுகள் போன்ற விவரங்களை எல்லாம் அவனுக்கு எடுத்துக் கூறினார். அவனும் தன்னால் இயன்ற அளவு தைத்துக்கொண்டு வந்தான். பார்வைக்கு அது மிகச் சுமாராகத்தான்  இருந்தது என்றாலும் ஜுலை 4-ஆம் நாள் காலையில் அதைக்கண்ட அமெரிக்கர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். சாப்பாட்டிற்கென ஒதுக்கப் பட்ட படகில் அந்தக் கொடி ஏற்றப் பட்டது. பின்னர் அனைவரும் காலை உணவு அருந்தினார்கள். அந்த நாள் அங்கிருந்த அமெரிக்கர்களுக்கு ஒரு பொன்னாளாகவே  இருந்தது. ஏனெனில் அந்த நாளைப்  பற்றிசுவாமிஜி ஒரு கவிதையும் எழுதி அவர்களுக்கு அளித்தார்.

 

 திருப்பாதங்களைத் தொட்டுள்ளேன்-

-

 ஒரு நாள் சவாமிஜி தனிமையில் ஓர்ஆப்பிள்தோட்டத்தில்  அமர்ந்திருந்தார். அது ஓர் அபூர்வமான நாள். ஏனெனில்  தம்மைப்பற்றி மிகவும் அரிதாகவே பேசுகின்ற அவர்  அன்று பேசினார். அமர்ந்திருந்த சுவாமிஜி கையில் இரண்டு கூழாங்கற்களை எடுத்தார். அவற்றை உருட்டிய படியே கூறினார், மரணம் என்னை  நெருங்கும்போது என் பலவீனங்கள் மறைகின்றன. பயமோ சந்தேகமோ எதுவும் என்னிடம் இருப்பதில்லை. புறஉலகமே, எனது சிந்தனையிலிருந்து மறைந்து விடுகிறது. மரணத்தை எதிர் கொள்ள என்னைத்தயார் செய்வதில்  நான் மும்முரமாகி விடுகிறேன். சுவாமிஜி தமது கையிலிருந்த கூழாங்கற்களை ஒன்றோடு ஒன்று தட்டினார். இந்தக் கற்களைப்போல் கடினமானவன் நான். ஏனெனில் நான் இறைவனின் திருப் பாதங்களைத் தொட்டுள்ளேன்.

 இதனை த் தொடர்ந்து சுவாமிஜி தமது பரிவிராஜக வாழ்க்கையில் நடந்த சில சம்பவற்களைக் கூறினார். அப்போது திடீரென்று அந்தக் கிராமத்தினர் சிலர் கையில்ஆழமான  வெட்டுண்ட ஒரு குழந்தையை சுவாமிஜியிடம் கொண்டு வந்து எப்படியாவது அதனைக் குணப் படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். சுவாமிஜியும் பொறுமையாக காயத்தைக்கழுவி, துணியை எரித்த சாம்பலை அதில் வைத்துக் கட்டி, ரத்தப்போக்கை நிறுத்தி அனுப்பினார்.

.....

அமர்நாத் தரிசனம்

-

சுமார் 12,000 அடி உயரக் குகையில் பனி லிங்கமாக எழுந்தருள்கின்ற அமரநாதரின் தரிசனம் சிவ  பக்தர்களுக்கு என்றுமே ஒரு தனி ஈடுபாடு உடையது. இமயத்தொடரிவ், பனி  மலைகளுக்கு நடுவில் பொதுவாகப் பனியில் உறைந்து கிடக்கின்ற குகைக்கோயில் அது. ஆடி மாத பௌர்ணமியிலிருந்து (குருபௌர்ணமி) ஆவணி பௌர்ணமி வரை பக்தர்கள் அங்கே சென்று வழிபட இயலும். அந்த நாட்களில் இயற்கை யாகவே பனியால் அங்கே ஒரு சிவ லிங்கம் உருவாகும். அந்த நாட்களில் மட்டுமே அங்கு சென்று அமரநாதரை வழிபட இயலும்.

 

 சுவாமிஜி தாம் அங்கே செல்ல விரும்புவதாக மீண்டும்  தெரிவித்தார். வழியிலுள்ள பஹல்காம் என்ற இடம் வரை  மிஸ் மெக்லவுடும் மிசஸ் சாராவும் செல்வது,நிவேதிதை மட்டும் சுவாமிஜியுடன் அமர்நாத்வரை செல்வது என்று முடிவாயிற்று. அமர்நாத் செல்கின்ற சுமார் 3000 யாத்திரிகர் களுடன் கலந்து கொள்வதாக இருந்தார் சுவாமிஜி. 1898  ஜுலை 26-ஆம் நாள் சுவாமிஜி புறப்பட்டார்.

 

 அமர்நாத் பாதையில் பஹல்காம் ஆரம்ப இடம், இங்கிருந்து எல்லோரும் கூடாரங்களில் தங்க வேண்டும். வேறு வசதிகள் கிடையாது. திடீரென கூடாரங்கள் எழுவதும் பல்வேறு இடங்களில் சமையலுக்கான அடுப்புகள் மூட்டப் படுவதுமாக ஆயிரக் கணக்கானோர்  வாழ்கின்ற ஒரு புதியநகரம் திடீரென்று உருவெடுப்பது ஓர் இனிய அனுபவம். யாத்திரிகர்களில்  நூற்றுக்கணக்கான துறவிகளும் இருந்தனர். பல்வேறு சம்பிரதாயங்கள், பல்வேறு பழக்கவழக்கங்கள், பல்வேறு வழிபாட்டு முறைகள், பல்வேறு சாதனைகள் என்று அந்தத் துறவியருடன் பழகுவது சுவாமிஜிக்கு ஓர் இனிய அனுபவமாக இருந்தது.

 

 இந்த யாத்திரையில் சுவாமிஜி ஓர் எளிய பக்தராகவே வாழ்ந்தார். ஏகாதசி விரதம், தினமும் ஒருவேளை உணவு. அதுவும் வைதீக முறைப்படி சமைத்தது, ஜபமாலையை வைத்து ஜபம் செய்வது என்று ஒரு சாதாரணத் துறவியாக வாழ்ந்தார் அவர்.

 

இந்தக் கூட்டத்தில் வெளிநாட்டுப்பெண்கள் இருப்பதைப் பலதுறவிகளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர்கள் வெளி நாட்டினர் தங்குகின்ற கூடாரம் தங்கள் கூடாரங்களுக்கு அருகில் இருக்கக் கூடாதென்று கூறினர். அவர்களின் மனப்பான்மை சுவாமிஜிக்கு ஆத்திரத்தை மூட்டியது. அவரது மனநிலையைப் புரிந்து கொண்ட நாகா துறவி ஒருவர் சுவாமிஜியை அணுகி ”சுவாமிஜி , நீங்கள் அபார சக்தி வாய்ந்தவர். ஆனால் தயவு செய்து சக்தியைப் பயன் படுத்தாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார் . சுவாமிஜி நிலைமையைப் புரிந்து கொண்டார். தங்கள்  கூடாரங்களை சற்றுத்தொலைவில் மாற்றி அமைத்துக்கொண்டார். அன்று மாலையில் சுவாமிஜி நிவேதிதையைத் துறவிகளின் கூடாரங்களுக்கு அழைத்துச் சென்று, அவர்களின் ஆசிகளைப்பெற செய்தார். அந்தத் துறவிகளுக்குக் காணிக்கை செலுத்துவதும் சுவாமிஜியின்  நோக்கமாக இருந்தது.

 

 போகப்போக சுவாமிஜியின் பெருமையை அனைவரும் புரிந்து கொண்டனர். அவரது கூடாரத்தில் எப்போதும் துறவியர் கூடுவதும், அவரது இனிய அறிவுரைகளைக்கேட்பதும் வழக்கமாயிற்று. நிவேதிதையும் தமது இனிய, எளிய சுபாவத்தால் யாத்திரிகர்களிடையே நன்மதிப்பைப் பெற்றார். பலரும் நிவேதிதைக்கு வேண்டிய உதவிகளைச்செய்து அன்புடன் பழகினர்.

 

 ஏற்கனவே திட்டமிட்டிருந்தது போல் பஹல்காமில் சாராவும் மெக்லவுடும் நின்று விட்டனர். சுவாமிஜியுடன்  நிவேதிதை மட்டும் சென்றார். அங்கிருந்து அமர்நாத் சுமார் 30மைல் தூரம்.  தொடர்ந்த பாதை, பனி மலைகளும் அழகிய காட்சிகளும் நிறைந்தது. அதே வேளையில், கடப்பதற்கு மிகவும் சிரமமானது. ஒன்பது மைல் தூரத்திலுள்ள சந்தன்வாரியில் பனிப்பாளம் ஒன்றைக் கடக்க வேண்டியிருந்தது. மிகவும் சறுக்கலான இந்தப் பயணம் அபாயகரமானதும் கூட, சிவேதிதைக்கு இது முதல் அனுபவம். இங்கிருந்து  மலை ஏற்றம் ஆரம்பிக்கிறது. இமயமலையில் மலை ஏற்றம் என்பது  ஓர் ஏமாற்றம் அனுபவம் ஆகும். ஒரு மலை தெரிவது போலிருக்கும், அதில் ஏறினால்  எல்லாம் ஆயிற்று என்பது போல் தோன்றும். ஆனால் மலையின்  உச்சியை நெருங்கும்போது அடுத்த மலை தென்படும். அதைக் கடந்தால் மற்றொன்று, இவ்வாறே மலைத்தொடர் நீண்டு கொண்டே போகும். இப்படி எத்தனை மலைகளைக் கடந்தோம் என்பதே தெரியாமல் போய்க் கொண்டிருக்கும். சுவாமிஜியும் நிவேதிதையும் இப்படி தொடர்ந்து பல மலைகளைக் கடந்த போது கடைசியாக வந்தது ஒரு செங்குத்தான ஏற்றம். அதைக் கடந்து அவர்கள் 14, 000 அடி உயரத்தில் தங்கினார்கள்.  அந்த இடத்தின் பேரமைதியைக் கவிதையாக வடிக்கிறார் நிவேதிதை.

 

 அமைதி என்றால் என்ன என்பதை அன்றுதான் முதன் முதலில் அனுபவித்தேன்- அப்படி ஓர் அமைதி! பைன் மரங்களின் முணு முணுப்பை மீறி, தெள்ளிய நீரோடைகளின் சலசலப்பு ஏற்படுத்துகின்ற இனிய இசைகூட அங்கே இல்லை. ஆறு ஒன்பது ஓடத்தான் செய்தது, ஆனால் அதுவும் ஏனோ பனியில் உறைந்தது போல் மௌனமாக ஓடியது. மரங்கள் வளர்கின்ற உயரத்தைக் கடந்த இடம் இது. எந்த மரங்களும் இல்லை. வானில் நிலவு எழுந்தது.-ஏறக்குறைய முழுநிலவு! அதன் ஒளியில் அந்தப் புனிதப் பனி மலைகள் எல்லாம் வெண்ணிறத்தில்  காட்சி  அளித்தன. நள்ளிரவு வானம் இவ்வளவு நீலமாக இருப்பதை வேறெங்கும் காண முடியாது. இரவு வந்து மலைச் சிகரங்களுடன் ஏதோ பேச, அந்தப் பேச்சு நட்சத்திரங்களில் சென்று, ஆழ்ந்த அமைதியாகி, அது பனிப் பாளங்களுடன் பேசுவது போல் இருந்தது.

சுவாமிஜி அவ்வப்போது எங்கே போகிறார் என்பதே தெரியாமல் மறைந்து விடுவார். நிவேதிதை அந்த நேரங்களை மற்ற யாத்திரிகர்களுடன் செலவிட்டார்.

 

 பஞ்ச தரணி என்று அழைக்கப் படுகின்ற ஐந்து நதிப் பகுதி வந்தது. அங்கே ஒன்றன்பின்  ஒன்றாக ஐந்து நதிகளிலும் ஈர உடையுடனே நடந்து சென்று குளிக்க வேண்டும் என்பது வழக்கு. சுவாமிஜி அப்படியே குளித்தார். பறு்ச தரணியிலிருந்து  அமர்நாத் குகைக்கு ஆகஸ்ட் 2-ஆம் நாள் புறப் பட்டனர். அன்று அமரநாதரைத் தரிசிக்கலாம் என்ற எண்ணமே அவர்களை மிகுந்த பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது. பயணம் தொடங்கியது. பல்லக்கில் செல்பவர்களும் சிறிது தூரத்திற்குப் பிறகு பல்லக்குகளை விட்டுவிட்டு நடந்தே சென்றாக வேண்டும்.கடும் குளிர், செங்குத்தான ஏற்றம், ஆண்களும் பெண்களும் , ஆண் துறவியரும் பெண் துறவியரும்  என்று கூட்டம் கூட்டமாக பயணம் தொடங்கியது.

 

 கடைசி ஓரிரு மணி நேரங்கள் மிகவும் அபாயகரமாக இருந்தது. ஒரு தவறான அடி எடுத்து வைத்தால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் மிகவும் சிறிய பாதை வழியாகச்செல்ல வேண்டும். அதனுடன் செங்குத்தான  ஏற்றஇறக்கங்கள்.! சுவாமிஜி மிகவும் களைத்துப் பின் தங்கி விட்டார். சுவாமிஜி தனிமையை சிரும்பியதன் காரணமாக அவரைவிட்டு விலகி, முன்பாகச் சென்று கொண்டிருந்த நிவேதிதை சுவாமிஜி வராததைக் கண்டு தாமதித்தார். கடைசியாக சுவாமிஜி மிகவும் களைத்த நிலையில் வந்து சேர்ந்தார். அப்போதும் நிவேதிதையிடம் எதுவும் பேசாமல் அவரைத் தொடர்ந்து முன் செல்லுமாறு கூறிவிட்டு, தாம் அங்கே அந்தக் கடுங்குளிரில் குளிக்கப்போவதாக க்கூறினார்.

 

 அமர்நாத் தரிசனம்-

-

 கடைசியாக  அமர்நாத் குகை வந்தது. சுவாமிஜி குளித்து விட்டு, கௌபீனம் மட்டும் உடுத்தி, உடம்பெங்கும் திருநீறு பூசி, தம்மை மறந்த நிலையில் குகைக்குள் நுழைந்தார். அவரது முகத்தில் ஒரு மெல்லிய புன் முறுவல் இழையோடிக் கொண்டிருந்தது. பாரெலாம் படைத்து, காத்து, பக்தியுடன் பணிபவர்க்கு மரணமிலாப்பெருவாழ்வாம் அமரத்துவம் அளிக்க  சிவபெருமான் அமரநாதனாக, பனி லிங்கமாக எழுந்தருளியுள்ள அற்புதத் திருக்கோலத்தைக் கண்டார். தொடர்ந்து வந்த பக்தர்கள் எழுப்பிய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய மந்திரம்  விண்ணைப் பிளந்தது. சுவாமிஜி அமரநாதனை வீழ்ந்து வணங்கினார். அவர் வணங்கியபோது அங்குள்ள புனிதப் புறாக்கள் மேலே தொடர்ந்து ஒளி எழுப்பியபடி பறந்தன. அவரது உடம்பு பக்திப் பரவசத்தில் நடுங்கியது. அவரது மனத்தில் என்னென்ன எண்ணங்கள் அடித்துப் புரண்டனவோ,  அதை யார் சொல்வது! பிள்ளைப் பருவத்திலிருந்தே தம் மனத்தில் அழியாத அமரனாக வீற்றிருக்கின்ற அந்த அமரநாதனை நேரில் காணும்போது அவரது  உணர்ச்சிகள் எப்படி அலை பொங்கி ஆர்த்தனவோ அதை யார் சொல்வது! அவர் எதவும் சொல்லவில்லை. அன்று அங்கே அவர் அமரநாதனைத் தரிசித்தார்! மரணத்தைக் கடந்தவரான  சிவபெருமானை, உண்மையிலேயே மரணத்தைக் கடந்து சுவாமிஜி தரிசிக்க வேண்டும்!

 

ஏனெனில் ”அவர் மரணத்தையே கடந்து  வந்திருக்கிறார். அவரது இதயத் துடிப்பு நின்றிருக்க வேண்டும். ஆனால் அவரது இதயம் நிரந்தரமாக வீங்கிப் புடைத்துள்ளதுஎன்று பிறகு அவரைப் பரிசோதித்த டாக்டர் கூறினார்.

 அமைதியாகக் குகையிலிருந்து வெளியே வந்தார் சுவாமிஜி. சிறிது நேர ஓய்விற்குப் பிறகு சாப்பிட்டு விட்டு  அனைவரும் கூடாரங்களில் ஓய்வு கொண்டனர். சுமார்  அரை மணிநேரத்திற்குப் பிறகு சுவாமிஜி கூறினார். அந்தப் பனி லிங்கம் சாட்சாத் சிவபெருமானே! அங்கு எல்லாம் வழிபாடே! இவ்வளவு அழகான, இவ்வளவு ஆன்ம உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்ற ஓர் இடத்திற்கு நான் சென்றதில்லை.

 

 அமர்நாத்தில் சுவாமிஜி ஓர் உன்னதமான ஆன்மீக அனுபவத்தைப்பெற்றார் என்பது உறுதி.ஆனால் அது என்ன என்பதை முழுமையாக அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால்  அதன் சில அம்சங்களை அவர் அவ்வப்போது கூறினார். சுவாமிஜியின் சீடரான சரத்சந்திர சக்கவர்த்தி எழுதிய உரையாடல் பகுதியில் கீழ்வருமாறு காணப்படுகிறது.

 

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்புதான் சுவாமிஜி காஷ்மீரிலிருந்து திரும்பி வந்திருந்தார். அவரது உடல் நிலை நன்றாக இல்லை. சீடர்( சரத் சந்திரர்) மடத்திற்கு வந்ததும் பிரம்மானந்தர் சீடரைப்பார்த்து, சுவாமிஜி காஷ்மீர் சென்று திரும்பியதிலிருந்து யாருடனும் பேசவில்லை. சிந்தனையில் மூழ்கியபடி ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறார். நீ அவரிடம் சென்று பேசி, அவருடைய மனத்தைச் சற்று சாதாரண நிலைக்கு இறங்கி வரும்படிச்செய் என்றார்.

 மாடியிலிருந்த சுவாமிஜியின் அறைக்குச் சென்றார் சீடர். அங்கு சுவாமிஜி ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியவர் போல் அமர்ந்திருந்தார். முகத்தில் சிரிப்பில்லை, ஒளி மிகுந்த புற நோக்கு இல்லை, தமக்குள் இருக்கும்  ஏதோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் அவர் தோற்றம் இருந்தது. சீடரைக் கண்டதும், மகனே,  வந்திருக்கிறாயா? உட்கார், என்று சொல்லிவிட்டு , மீண்டும் அமைதியில் மூழ்கினார். சுவாமிஜியின் இடது கண் மிகவும்  சிவப்பாக இருப்பதைக் கண்ட சீடர், என்ன சுவாமிஜி, உங்கள்  இடது கண் இவ்வளவு சிவப்பாக இருக்கிறது? என்று கேட்டார்.  ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு சுவாமிஜி மறுபடியும் அமைதிமயமானார்.

 

 நெடுநேரம் கழிந்தது, சுவாமிஜி ஒன்றும்பேசவில்லை. இதைக் கண்டு சீடரின் மனம் வேதனையில் வாடியது. உடனே அவர் சுவாமிஜியின் திருமுன்னர் வீழ்ந்து வணங்கி அவரது இரண்டு திருப்பாதங்களையும் கைகளால் பற்றிக்கொண்டு, அமர்நாத்தில்  நீங்கள் கண்டதையெல்லாம்  எனக்குச் சொல்ல மாட்டீர்களா? என்று கேட்டார்.

 சீடரின் இந்த வேண்டுதலால் சுவாமிஜியின் அழுத்த மான மனநிலை சிறிது தளர்ந்து அவரது புற நோக்கு அதிகமாகியது. அவர் சொன்னார். அமர்நாத்தைத் தரிசித்ததிலிருந்து சிவபெருமான் இருபத்து நான்கு மணிநேரமும் என் தலை மீது உட்கார்ந்திருப்பது போல் உள்ளது. எத்தனை முயன்றும் அவர் கீழே இறங்க மறுக்கிறார்.

  சீடர் இதைக்கேட்டதும் திகைத்துப்போனார்.

 

 சுவாமிஜி- நான் அமர்நாத் கோயிலிலும், ஷீர்பவானி கோயிலிலும் ஆழ்ந்த தவம் செய்தேன். போகட்டும் , புகைக்குழாய் தயார் செய்து கொண்டு வா.

சீடர் மகிழ்ச்சியோடு சுவாமிஜியின் கட்டளையை ஏற்றுப் புகைக்குழாயைக்கொண்டு வந்தார். சுவாமிஜி நிதானமாகப் புகைத்துக்கொண்டே சொல்ல ஆரம்பித்தார்.

 

 அமர்நாத்திற்குச் செல்லும் வழியில் மிகவும் செங்குத்தான மலை மீது நான் ஏறினேன். பொதுவாக அந்த வழியில் மலைவாழ் மக்களைத் தவிர யாரும் போவதில்லை. ஆனால் அந்த வழியாகத்தான் போக வேண்டும் என்று எனக்குத்  தோன்றிவிட்டது. போவேன் என்றால் போவேன் தான்! ஓ! அதில் ஏறிய சிரமம் உடலைச்சற்று பாதித்து விட்டது. இதில், பயங்கரமான குளிர் வேறு  ஊசியால் உடம்பைக் குத்துவது போல் இருந்தது.

 சீடர்- அமர்நாத் சிவபெருமானை நாம் நிர்வாணமாகவே தரிசிக்க வேண்டும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அது உண்மையா?

 

சுவாமிஜி-

 ஆமாம், நானும் கோவணத்தை மட்டும் கட்டிக்கொண்டு தான் சென்றேன். உடம்பு முழுவதும் விபூதி பூசியிருந்தேன். குகையினுள்  இருந்தபோது குளிரோ வெப்பமோ சிறிதும் தெரியவில்லை. அங்கிருந்து வெளியே வந்ததும் உடம்பு குளிரால் மரத்துப்போனது போலாகி விட்டது.

 சீடர்- அங்கேபுனிதப் புறாக்களைப் பார்த்தீர்களா? அவ்வளவு குளிரான அந்த இடத்தில் எந்த உயிரும் வாழாது என்றும் ஆனால் எங்கிருந்தோ  வெண்புறாக் கூட்டம் ஒன்று அவ்வப்போது அங்கு வருவதாகவும்  கேள்விப்பட்டிருக்கிறேன்.

 சுவாமிஜி- ஆமாம், மூன்று நான்கு வெண்  புறாக்களை அங்கே கண்டேன். அவை வசிப்பது குகையிலா அல்லது பக்கத்தில் உள்ள மலைகளிலா என்பது தெரியவில்லை.

 

 மற்றொரு முறை இது பற்றி சுவாமிஜி குறிப்பிடும் போது , சாட்சாத் சிவபெருமானே தம்முன் தோன்றியதாகவும், அவர் தமக்கு ” இச்சாம்ருத்யு வரம் அளித்ததாகவும் கூறினார். இச்சா- ம்ருத்யு என்றால் விரும்பும்போது மரணம். அதாவது, சுவாமிஜி தமது மரணவேளையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம், விரும்பும்போது உயிரை விடலாம் என்பது பொருள்.

 ஒரு நாள் துரியானந்தரிடம் சுவாமிஜி தமது அமர்நாத் அனுபவத்தை இவ்வாறு கூறினார். உருவக் கடவுள் இருக்கிறாரா இல்லையா  என்பதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது . ஆனால் குணங்களையெல்லாம் கடந்த பரம்பொருள்ஒருவர் இருக்கிறார். தேவதேவியர் உள்ளனர் என்பதை அங்கு நான் சந்தேகத்திற்கு இடமின்றித் தெரிந்து கொண்டேன்.

 

 மற்றொரு பக்தரிடம் ஒருநாள் சுவாமிஜி கூறினார், அமர்நாத்திலிருந்து திரும்பி வந்ததிலிருந்து என் மனம் அமைதிக்காக  ஏங்குகிறது. வேலை எதுவும் பிடிக்கவில்லை.ஒரேயடியாக மௌனமாகி விட மாட்டோமா, ஏதாவதுகுகையில் சென்று தங்க மாட்டோமா என்று தோன்றுகிறது. அமரநாதனாகிய சிவ பெருமான் என் தலை மீது எட்டு பகல்களும் எட்டு இரவுகளும் அமர்ந்திருந்தார். தலை மீது அமர்ந்து விழுந்து விழுந்து சிரித்தார், பிரபோ,  என் உடம்பு நோயில் வாடுகிறது. நீயோ, சிரிக்கிறாய்.! என்று நான் அவரிடம் கூறினேன்.குருதேவரின் எந்த வடிவம் எனக்குக் காட்சி தந்து என்னை அமெரிக்கா செல்லுமாறு ஆணையிட்டதோ, அந்த வடிவமே மீண்டும் தோன்றி நான் அமர்நாத் செல்ல வேண்டும் என்றும் ஆணையிட்டது.  அதனால் தான் சென்றேன்.

 இவற்றைத் தவிர தமது அனுபவம் பற்றிய வேறு விளக்கங்கள் எதையும் சுவாமிஜி கூறவில்லை.

 சுவாமிஜி பயணத்தைத் தொடர்வோம்.

 

 சுவாமிஜிக்கு அனுபவம் வாய்த்தது, அவர் சிவ தரிசனம் பெற்றார். ஆனால் நிவேதிதை? பனி லிங்கத்தைத் தரிசித்தார், அது ஓர் அற்புதமான அனுபவமாக இருந்தது. சுவாமிஜி குகையைவிட்டு வெளியில் வரும்போது  அவரிலிருந்து புறப்பட்ட ஓர் அனுபூதிப்பேர ரொளியையும் அவர் கண்டார். இவை தவிர அவர் அக  அனுபவங்கள் எதையும் பெறவில்லை. இது அவரது மனத்தை மிகவும் உறுத்தியது. சுவாமிஜியிடமே தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சுவாமிஜி அவரைச் சமாதனப்படுத்தி, இப்போது எதுவும் உனக்குப்புரியாது. ஆனால் நீ இந்தப் புண்ணியத் தலத்திற்கு வந்திருக்கிறாய். இந்த அனுபவம் உன்னுள் வேலை செய்யும், உரிய காலத்தில் அதற்கான விளைவைக்கொண்டு வந்தே தீரும். காலப்போக்கில் நீ அதனைப் புரிந்து கொள்வாய். இந்தத் தீர்த்த யாத்திரையின் பலனை ஒருநாள் நீ அனுபவிப்பாய் என்றார்.

 

 அமர்நாத்திலிருந்து  வந்த சவாமிஜி செப்டம்பர் இறுதி வரை ஸ்ரீநகரில் தங்கினார். காஷ்மீர் மன்னரின் ஏற்பாட்டின் படி அவர் மிகச் சிறப்பாக உபசரிக்கப் பட்டார். முன்பு ஒரு முறை காஷ்மீர் மன்னர் அவரிடம் கல்விப் பணிக்காக தாம் நிலம் அளிப்பதாகவும், வேண்டிய நிலத்தை சுவாமிஜி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். அதன்படி சுவாமிஜி ஓர் அழகிய நதிக்கரையில் நிலத்தைத்தேர்ந்தெடுத்தார். அங்கே ஒரு பெண்கள் மடம், சம்ஸ்கிருதக் கல்லூரி ஆகியவை நிறுவ வேண்டும் என்றும் நினைத்திருந்தார்.

 

 அமர்நாத்திலிருந்து திரும்பி வந்த சுவாமிஜி எப்போதும்  தியான நிலையிலேயே இருந்தார். இந்த நிலை அவருடன் இருந்த பெண்களையும் பற்றிக்கொண்டது. அவர்களும் ஆழ்ந்த தியான வாழ்வில் ஈடுபட விழைந்தனர். இதனைக்கேட்ட சுவாமிஜி மகிழ்ந்தார்.  மடத்திற்காகத்தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் நீங்கள் கூடாரங்கள்  அமைத்து, அங்கே தனிமை வாழ்வில் ஈடுபடுங்கள். ஒரு புதிய நிலத்தில் முதன்முதலாகப்பெண்களின் காலடி படுவது  ஐஸ்வரியத்தை வளர்க்கும்  என்பார்கள். எனவே நீங்கள் அங்கே சென்று பெண்கள் மடத்திற்கான ஓர் ஆரம்ப அடியை எடுத்து வையுங்கள் என்றார்.

 

 ஆனால் இறைவனின் திருவுள்ளம் என்னவோ அதுவாக இருக்கவில்லை. காஷ்மீரின் ஆங்கிலேயப் பிரதிநிதியான ரெஸிடன்ட் அதற்கு  ஒப்புதல் அளிக்கவில்லை. இரண்டு முறை முயற்சி செய்தும் அவர் மறுத்து விட்டார். சுவாமிஜிக்கு இது சற்று ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் அதனை இறைவனின் திருவுளமாக ஏற்றுக்கொண்டு,, கல்விப் பணிக்கு உகந்த இடம் கல்கத்தாவாகத் தான்  இருக்கும் என்று தெளிந்தார் அவர்.

 

 அது போலவே இமயமலைப் பகுதியில் தியான வாழ்விற்கென்றே ஒரு மடம் அமைய வேண்டும் என்ற சுவாமிஜியின் விருப்பமும் அதுவரை நிறைவேறாமலேயே இருந்தது. ஆனால் குமாவூன் பகுதிகளில்  அதற்கான இடத்தைத்தேடிக் கண்டு பிடிப்பதாக சேவியர் தம்பதிகள் தெரிவித்தனர். அது சற்று ஆறுதலை அளிப்பதாக இருந்தது.

 


No comments:

Post a Comment