Sunday, 14 June 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-56

வகுப்பு-56  நாள்-13-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

க்ஷரன்

அக்ஷரன்

புருஷோத்தமன்

-

க்ஷரன் என்பது கண்களால் காணக்கூடிய உடல்.

இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள்,விலங்குகள்,தாவரங்கள் எல்லாம் க்ஷரன்.

க்ஷரன் விரைவில் அழியக்கூடியது.

 

இதைவிட மேலான உடல் ஒன்று உள்ளது அது அக்ஷரன் .

சூட்சும உடல். மனிதன் இறந்தபிறகு சூட்சுமஉடல் வெளியேறுகிறது.

உலகம் முழுவதிலும் கணக்கிலடங்காத சூட்சும உடல்கள் இருக்கின்றன.

அக்ஷரன்  விரைவில் அழிவதில்லை. அதன் உருவம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தாலும்,

பல லட்சம் வருடங்கள் வாழும் ஆயுள் உடையது.

இந்த பிரபஞ்சம் முழுவதும் இந்த இரண்டு உடல்களால் நிறைந்துள்ளது.

-

இதற்கு மேலாக உள்ளது புருஷோத்தமன்.

எல்லா க்ஷரன்,அக்ஷரன் இரண்டின் ஆன்மாவாக இருப்பது புருஷோத்தமன்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

15.16 க்ஷரன் என்றும் அக்ஷரன் என்றும் இந்த இரண்டே புருஷர்கள் உலகில் உண்டு.

எல்லா உயிர்களும் க்ஷரன்.

கூடஸ்தன் (பல்வேறு மாயகாட்சியை காட்டவல்லவன்) அக்ஷரன்

என்று சொல்லப்படுகிறான்

-

15.17 மற்றும் அக்ஷரத்திற்கும் அன்னியமாக உத்தம புருஷனாக எப்பொழுதும் பரமாத்மா என்று அழைக்கப்படுபவர் யாரோ அவர் ஈஸ்வரன்(ஆள்பவர்), மாறுபடாதவர் மூவுலகத்திலும் பிரவேசித்து தாங்குகிறார்

-

15.18 நான் க்ஷரத்தை கடந்தவனாக, அக்ஷரத்திற்கும் மேலானவனாக இருப்பதால் உலகத்திலும்,வேதத்திலும்,புருஷோத்தமன் என்று புகழ்பெற்றவனாக இருக்கிறேன்

-

15.19 பாரதா, யார் இங்ஙனம் மயக்கமற்றவனாய் புருஷோத்தமன் என்று என்னை அறிகிறானோ அவன்,

 முழுவதும் அறிந்தவனாய் முழுமனதோடு என்னை வணங்குகிறான்

-

15.15 நான் எல்லோருடைய ஹிருதயத்தில் தங்கியிருக்கிறேன். மேலும் என்னிடமிருந்து நினைவும்,மறதியும்,ஞானமும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்படும் பொருள் நானே. வேதாந்தத்தை செய்தவனும்,வேதத்தை அறிந்தவனும் நானே.

-

பரமாத்மாவின் இருப்பிடம் எது?

அவர் எல்லோருடைய ஹிருதயத்திலும் தங்கியிருக்கிறார்.

உடல் எடுத்துள்ள மனிதர்கள்,விலங்குகள்,தாவரங்கள்,உட்பட எல்லா ஜீவன்களின் ஹிருதயத்திலும் தங்கியிருக்கிறார்.

மேலும் சூட்சும உடலில் வாழும் உருவங்களின் ஹிருதயத்திலும் அவர் தங்கியிருக்கிறார்

மேலும் பரமாத்மாவிடமிருந்துதான் ஞானமும் அதற்கு எதிரான மறதியும் வருகிறது.

நல்லவர்களுக்கு ஞானம் வருகிறது. தீயவர்களுக்கு மறதி வருகிறது.

-

வேதம் என்றால் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள அறிவு.

கணித அறிவு,இயற்பியல் அறிவு,வானவியல் அறிவு,வேதியல் அறிவு,உட்பட உலகத்தில் இதுவரை தோன்றியுள்ள,இனி தோன்ற இருக்கின்ற எல்லா அறிவுக்கும் வேதம் என்று பெயர்.

இந்த வேதம் பரமாத்மாவிடமிருந்து வெளிப்படுகிறது

 

இந்த அறிவின் சாரம் வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது.

 எது வேதாந்தம்?

பரமாத்மா மட்டுமே எப்போதும் நிலையாக இருப்பவர்.

க்ஷரன்,அக்ஷரன்(தூலஉடல்,சூட்சுமஉடல்) இந்த இரண்டும் அழியக்கூடியது.

இந்த உலகத்தில் உள்ள எல்லா உடல்களும் அழியக்கூடியது.

எனவே அழியக்கூடிய உடல்களை விட்டுவிட்டு அழியாத பரமாத்மாவை அடையவேண்டும் என்ற அறிவைப் புகட்டுவது வேதாந்தம்

இந்த வேதமும்,வேதாந்தமும் யாரிடமிருந்து வந்தது?

பரமாத்மாவிடமிருந்து.

-

இறைவனை எல்லோரும் வணங்குகிறார்கள்.

ஆனால் ஞானத்துடன் வணங்குவது சிறந்தது.

பரமாத்மாவின் இயல்புகள் என்ன என்பதை நன்கு அறிந்துகொண்டு வணங்குவது மேலானது.

பரமாத்மாவை எங்கே வணங்க வேண்டும்?

ஹிருதயத்தில்

பரமாத்மா இல்லாத இடமே இல்லை. அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார்.

இருந்தாலும் மகான்களின் ஹிருதயத்தில் ஒளிவிட்டு பிரகாசித்துக்கொண்டிருக்கிறார்.

மகான்களிடமிருந்து வரும் வார்த்தைகள் பரமாத்மாவிடமிருந்து வரும் வார்த்தைகளே.

யார் மகான்?

யார் இறைவனை தவிர வேறு எதையும் நினைக்காதவரோ,

இறைவனைத்தவிர வேறு எதையும் பற்றாதவரோ அவர் மகான்.


No comments:

Post a Comment