Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-20

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-20

🌸

டெட்ராய்ட்டில்

-

 ஹேல் கும்பத்தினருடன் அவ்வப்போது தங்கிய சுவாமிஜி., 1894 பிப்ரவரி 12-ஆம் நாள் வாக்கில் டெட்ராய்ட் சென்றார். சிகாகோவிலிருந்து சுமார் 270 மைல் தொலைவில் உள்ளது டெட்ராய்ட். சுவாமிஜியின் அமெரிக்கப் பணிகளுக்கு டெட்ராய்ட் ஓர் அடித்தளமாக அமைந்தது எனலாம். விதை விதைக்கும் முன்பு நிலம் தயாராக வேண்டும். இந்திய ஆன்மீகம் என்ற விதையை அமெரிக்க மண் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால், அதற்கு அமெரிக்கர்களின் மனம் இந்தியாவின் உண்மை நிலைமையை உணர்ந்ததாக இருக்கவேண்டும். ஆனால் அப்படி இல்லை என்பதை சுவாமிஜி இதற்குள் தெளிவாக அறிந்திருந்தார்.

 கிறிஸ்தவ மிஷனரிகள், ரமாபாய் வட்டஙகள் போன்றோர் அளித்ததும், உண்மைக்கு மாறுபட்டதுமான சித்திரங்களையே அவர்கள் அறிந்திருந்தனர்.ஏழ்மை, பசி, பட்டினி, பஞ்சம், கொள்ளை நோய்கள், குழந்தைகளை முதலையின் வாயில் வீசும் தாய்மார்கள், தேர்ச் சக்கரத்தில் தங்களை மாய்த்துக்கொள்கின்ற பக்தர்கள்- இத்தகையதொரு கொடிய பூமியாகவே இந்தியாவை அமெரிக்கர்கள் கருதியிருந்தனர். அதனை உடைத்து, உண்மை நிலைமையைத்தெளிவுபடுத்த  வேண்டியது சுவாமிஜியின்  முதற் பணியாக இருந்தது. டெய்ராய்ட் சொற்பொழிவுகளில் சுவாமிஜி அதையே செய்தார். இந்திய ஆன்மீகத்தின் வெவ்வேறு பரிமாணங்கள் அவரது சொற்பொழிவின் முக்கியத் தலைப்பாக  இருந்தாலும், ஒவ்வொன்றிலும், இந்தியாவின் உண்மைச்  சித்திரத்தைப் புரிய வைப்பதற்கான முயற்சியும் இருந்தது.. இப்படி ஒரு போலி சித்திரத்தை அமெரிக்கர்களுக்கு அறிமுகப்படுத்திய பாதிரிகளையும் மிஷனரிகளையும் எதிர்க்க வேண்டியது அதன் தவிர்க்க முடியாத ஒரு பகுதி ஆயிற்று.

 

பனிப்புயலின் சமிக்ஞை

-

 சுவாமிஜியின் டெட்ராய்ட் நாட்கள் எப்படி இருக்கப்போகின்றன என்பதை அறிவுறுத்துவதுபோல் இயற்கைச் சம்பவம் ஒன்றும் நடைபெற்றது. அவர் டெட்ராய்ட்டிற்குச் சென்ற அன்று மிகக்கடுமையான பனிப்புயல் வீசியது. நகரமே அழிக்கப் பட்டுவிடுமோ என்ற  அளவிற்குப்புயலின் கடுமை இருந்தது. சுவாமிஜியும் தமது மேலை நாட்டுப் பணியில் மிகக்கடுமையான எதிர்பை டெட்ராய்ட்டில் தான் சந்தித்தார். டெட்ராய்ட்டில் சுவாமிஜி மிசஸ் பாக்லே என்பவரின் வீட்டில் விருந்தினராகத் தங்கியிருந்தார். மிக்சிகன் கவர்னராக  இருந்த ஜான் ஹட்சனின் விதவை மனைவி அவர். அவர் பல சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றவராக  இருந்தார்.  சிகாகோ உலகக் கண்காட்சியின் அமைப்பாளர்களுள் ஒருவராகவும் இருந்தார். சுவாமிஜி டெட்ராய்ட்டிற்கு வந்தபோது பெரிய வரவேற்பு அளித்தார். டெட்ராய்ட்டின் பெரிய மனிதர்கள் 300பேர், பாதிரிகள், பிஷப்பகள், யூத மத குருமார்கள்,பேராசிரியர்கள், மேயர் என்று பலரும் அதில் கலந்து கொண்டனர்.

 

 பனிப்புயலின் சமிக்ஞை அந்த வரவேற்பு நிகழ்ச்சியிலேயே உண்மை ஆயிற்று. திடீரென்று ஒரு பெண் எழுந்து சுவாமிஜியை நோக்கிச் சென்றாள். அவர் முன்பு நின்று அவரை எதிர்த்து, வாய்க்கு வந்தபடி எல்லாம் ஏசினாள். உரத்த குரலில் கத்தினாள். மற்றவர்கள் சுதாரித்து அவளை அப்புறப்படுத்தினர். ஆனால் சுவாமிஜியின் அமைதியிலோ கம்பீரத்திலோ எந்த மாற்றமும் இல்லை. அவரது அமைதியை அனைவரும் வியப்புடன் பார்த்தனர். அவர் மீது அவர்களின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.

 

டெட்ராய்ட்டில் ஒரு  வாரம் தங்கி மூன்று சொற்பொழிவுகள் நிகழ்த்துவதாக ஏற்பாடு. ஆனால் மக்களிடமிருந்து பெருத்த ஆதரவும், மேலும் சொற்பொழிவுகள் வேண்டும் என்ற ஆர்வமும் அவர் புறப்படும் நாளைத் தள்ளிப்போட்டன. நல்ல ஆதரவாளர்கள் இருந்தது போலவே இங்கே சுவாமிஜியை மிகவும்  விமர்சித்தவர்களும் இருந்தனர். குறிப்பாக அவர் கிறிஸ்தவ மிஷனரிகளைப் பற்றி கூறிய கருத்துக்கள் மிகுந்த கண்டனத்திற்கு உள்ளாயின. இதற்குள் சிகாகோ சென்று விட்டிருந்த சுவாமிஜி, இந்தக் கண்டனங்களுக்குப் பதில் அளிப்பதற்காக மீண்டும் வர வேண்டியதாயிற்று.

 

மொத்தத்தில், பிப்ரவரி 12 முதல் 23 வரை முதல் முறையும், பின்னர் மார்ச் 9முதல் 30 வரையும்  சுவாமிஜி டெட்ராய்ட்டில் இருந்தார். இந்த நாட்களில் 8 பொதுச்சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இவை தவிர பக்கத்து ஊர்களிலும்  சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். வகுப்புச் சொற்பொழிவுகள், பேட்டிகள் போன்றவையும் நடைபெற்றன.

 

கண்டனங்களோ, அவமதிப்புகளோ, வதந்திகளோ எதுவானாலும் மிசஸ் பாக்லே சுவாமிஜியின் ஒருபாதுகாவலாளி போல் செயல்பட்டார். மத வெறி தாண்டவமாடிய அந்த நாட்களில் மற்ற மதத்தைச் சார்ந்த ஒருவரை வீட்டில் தங்க வைப்பது என்பது பிற கிறிஸ்தவர்களின் ககடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் சம்பாதிப்பதற்கான ஒரு விஷயம். ஆனால் பாக்லே தமது  தமது அளவற்ற பக்தியாலும்  மன உறுதியாலும் இதனை எதிர்கொண்டார். பாக்லேயின் ஒன்பது வயது பேத்தி ஒருத்தி இருந்தாள். கிறிஸ்தவர் அல்லாத ஒருவரை வீட்டில் தங்க வைத்ததற்காக அவளது பள்ளியிலுள்ள  மாணவிகள் கூட அவளை அழகு காட்டி கேலி செய்தார்களாம்! குழந்தைகளிடம் கூட மத வெறியும்  இன வெறியும் ஊட்டப் பட்டிருந்தது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

 

எங்கு சென்றாலும் சுவாமிஜியிடம் தவறாமல் கேட்கப்பட்ட கேள்விகள் மூன்று, இந்தியாவைப் பற்றி பாதிரிகள். மிஷனரிகள், ரமாபாய் வட்டத்தினர் போன்றோர் எத்தகைய சித்தரத்தை அளித்திருந்தனர் என்பதை இந்தக் கேள்விகளிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம் . அந்தக்  கேள்விகள் இதோ.

 

1-  இந்தியாவில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் முதலையின் வாயில் எறிகிறார்களா?

2-  மக்கள் தங்களை ஜகன்னாதரின் தேர்ச் சக்கரத்தில் இட்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்களா?

3-  கணவன்  இறந்தால் மனைவியையும் அவனுடனேயே கொளுத்தி விடுவார்களா?

 

ஒரு முறை யூனிடேரியன் சர்ச்சில் சுவாமிஜி பேசிமுடித்தார். அதன் பிறகு, இனி விரும்புபவர்கள் கேள்விகள் கேட்கலாம் என்று அறிவிக்கப் பட்டது. கேள்விகளைத் தாளில் எழுதி ஒரு பெட்டியில் இட வேண்டும். சுவாமிஜி அதிலிருந்து கேள்விகள் எடுத்து பதில் கூறுவார். அதிலும் த்தகைய கேள்விகளே அதிகமாக  இருந்தன. அவற்றிற்கெல்லாம் சுவாமிஜி கேலியாகவும் நகைச்சுவையாகவும் பதிலளித்தார். பிறகு கம்பீரமாகக் கூறினார். ஆனால் அன்பர்களே, ஒன்று நான் உறுதியாகச் சொல்லமுடியும். நாங்கள் ஒருபோதும் சூனியக்காரிகளைக்கொளுத்தியதில்லை என்றார். சுவாமிஜி இதைக்கூறியதும் கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

 

 மற்றொரு முறை சுவாமிஜி கூறினார், நாங்கள் மத வெறியர்கள் ஆனால் எங்களையே துன்புறுத்திக் கொள்வோம், எங்களைப்பெரிய தேர்ச்சக்கரங்களில்  இட்டுக்கொள்வோம். எங்கள் கழுத்தையே வெட்டுவோம். முட்படுக்கையில் படுப்போம். ஆனால் நீங்கள்  மத வெறியர்கள் ஆனால் அடுத்தவன் கழுத்தை வெட்டுவீர்கள். அடுத்தவனைப் பிடித்து நெருப்பில் இடுவீர்கள். அடுத்த  வரை முட்படுக்கையில் படுக்க செய்வீர்கள். ஆனால் உங்களை நன்றாகப் பாதுகாத்துக்கொள்வீர்கள்!

 

மத மாற்றமா?

-

கிறிஸ்தவர் இந்துவாகவோ பௌத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பௌத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது ல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக்கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொண்டு, தன்  வளர்ச்சி நியதியின் படி வளர வேண்டும் என்று தமது சிகாகோ சொற்பொழிவுகளிலேயே தெளிவாகக்கூறிய சுவாமிஜியே மத மாற்றப் பிரச்சனைக்கு ஆளானதும் உண்டு. சுவாமிஜியின் புகழ், பரவபரவ அவரைப் பற்றிய கட்டுக்கதைகளும் வதந்திகளும் அதே வேகத்தில் பரவின. அதில் ஒன்று, அவர் எல்லோரையும் இந்து மதத்திற்க மதமாற்றம்  செய்கிறார் என்பதாகும். ஏற்கனவேஅவர் பலரை மதம் மாற்றி விட்டார். அதற்காகவே டெட்ராய்ட்டிற்கும் வந்திருக்கிறார் என்ற வதந்தி பரவத்தொடங்கியது.

மிசஸ் பாக்லேயின் வீட்டில் ஒரு பெண் சுவாமிஜியை ஏசியதற்கும் து தான் காரணம், மத விஷயங்களைப்போதிக்க கிறிஸ்தவர் அல்லாத ஒருவரை டெட்ராய்ட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று என்ன தேவை வந்து விட்டது. அமெரிக்காவிற்கு  வந்ததிலிருந்து  அவர் பலரை மதம் மாற்றி விட்டாராம் என்று ஒரு பத்திரிகை எழுதியது.

 

ஒரு நாள் சொற்பொழிவுக்குப் பிறகு ஒரு பத்திரிகை நிருபர் சுவாமிஜியிடமே தனை நேரடியாகக்கேட்டார். ஒரு கணமும் தாமதிக்காமல் சுவாமிஜி தமது பாக்கெட்டிலிருந்து  ஒரு புத்தகத்தை எடுத்தார். கி.மு. 200-க்கும் முன்னால் மாமன்னர் அசோகர் எழுதிய சாசனம் இது. தைப் படிப்பதே உங்களுக்குப்போதிய விடையாக அமையும் என்று கூறிவிட்டு அந்தச் சாசனத்தைப் படித்தார்.

 

மதப் பிரிவுகளுக்கு டையே வேறுபாடுகள் இருப்பது சகஜம். ஆனால் அவற்றிற்கு இடையே ஒரு பொதுவான அடிப்படை இருக்கும். எனவே தங்கள் மதத்தைப் பெரிது படுத்தவோ பிற மதங்களை இழிவுபடுத்தவோ  கூடாது. ஒவ்வொரு மதத்தையும் நேசத்தோடு அனுக வேண்டும். அவற்றிற்கு உரிய மரியாதை யை அளிக்க வேண்டும்.  இந்த அணுகுமுறையுடன் பிறருக்குச் சேவை செய்யும்போது ஒருவன் தன் மதத்தின் புகழை வளர்க்கிறான். அப்படிச்செய்யாதவன் தன்  மதத்தின்  அழிவிற்கே காரணமாகிறான்.

 

 இதைப் படித்துவிட்டு சுவாமிஜி தொடர்ந்து மாமன்னர் அசோகரைப் பற்றி கூறினார். மேதையான இந்த மன்னர் போரை வேண்டாம் என்றார். அதன் விளைவாகத்தான், மற்ற நாடுகள் அசுர வேகத்தில் முன்னேறிய போது இந்தியா பின்தங்கிவிட்டது. அதன் பொருளாதாரம்  நிலைகுலைந்தது. அசுர பலமும் ரத்த வெள்ளமும் மற்ற நாடுகளைச் செல்வ வளத்திற்கு அழைத்துச்சென்றபோது இந்தியா அதனைத் தவிர்த்தது. அதன் விளைவாக அதன் செல்வ வளம் சீர்குலைந்தது.

 

பிறகு அந்தநிருபர், இந்த 19-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஈடுகொடுப்பதற்காகப் போட்டியிடுகின்ற மேலைநாடுகளிலும் அஹிம்சை போன்ற கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியுமா? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, ஏன்? சிங்கத்தின் ஆற்றலுடன் ஆட்டின் மென்மையை இணைக்க முடியாதா? என்று கேட்டார்.

 

 ஒரு முறை ” பண்டைய இந்து தத்துவ ஞானிகள் என்ன போதித்தனர்? என்ற தலைப்பில் சுவாமிஜி பேசினார். இந்த உரை மிசஸ் பாக்லேயின் வீட்டில் நடைபெற்றது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள், மிஷனரிகள், ராணுவத்தினர், தொழிலதிபர்கள் என்று சமுதாயத்தின் பல தரப்பினரும் வந்திருந்தனர். பாக்லேயின் வீட்டு அறைகளும் கூடங்களும் நிறைந்து வழிந்தன. சுவாமிஜி இரண்டு மணிநேரம் பேசினார்.இதனைக் ”கடைசி வெடி என்று பத்திரிகைகள் எழுதின. ஆனால் பத்திரிகைகள் எழுதிய குறிப்புகள் ஒரு தலை ப்பட்சமாகவே உள்ளன. அவர் தலைப்பைப் பற்றி பேசியவற்றை விட்டுவிட்டு, கிறிஸ்தவ மிஷனரிகளைப் பற்றி கூறியவற்றை மட்டுமே  பொதுவாக அவை வெளியிட்டன. சில பகுதிகளைக் காண்போம்.

 

 ஏசு தமது ரத்தத்தால் நமக்குச்சொர்க்க ராஜ்யத்தை அளிப்பதாக உங்கள் தத்துவம் கூறுகிறது. ஆனால் இத்தகைய கருத்து இந்து மதத்தில் இல்லை. ஒருவரின் ரத்தத்தால் சொர்க்கத்திற்குச்செல்ல இந்து விரும்ப மாட்டான்.

 ஒரு விஷயம் நான் சொல்லியே ஆக வேணடும். உங்களைக் கடுமையாக விமர்சிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் மிஷனரிகளுக்குப் பயிற்சி, கல்வி, துணிமணிகள், சம்பளம் எல்லாம் கொடுக்கிறீர்கள். எதற்கு? எங்கள் நாட்டிற்கு வந்து எங்கள் முன்னோர்கள், மதம், என்று எங்கள் நாட்டின் அனைத்தையும் பழிப்பதற்காக, அவர்கள் எங்கள் கோயிலுக்கு அருகிலேயே வந்து நின்று, விக்கிரகத்தை வழிபடுகின்ற அஞ்ஞானிகளே! நீங்கள் நரகத்திற்குத் தான் போவீர்கள் என்று கூச்சலிடுகிறார்கள். இப்படி இஸ்லாமியர்களிடம் செய்யத் துணிவார்களா? மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் வாள் உறையிலிருந்து வெளியே வந்து விடும் என்பது மிஷனரிகளுக்குத்தெரியும்.

 

ஆனால் இந்து அமைதியானவன். மிஷனரிகளின் பிதற்றலைக்கேட்டு, முட்டாள் கள் பேசட்டும் என்று அமைதியாகச் சிரித்து விட்டுப்போகிறான். அவனது போக்கு அது.

 

 ஆவேசத்துடன் சுவாமிஜி கூறினார், ஒரு  கையில் பைபிளும் மறுகையில் படை வீரனின் வாளும் ஏந்தி நீங்கள் வருகிறீர்கள். உங்களிடம் உள்ளதோ நேற்று முளைத்த மதம். நீங்கள் போதிக்க வருவதோ உங்கள் ஏசுவைப்போலவே புனிதமானவர்களான  எங்கள் ரிஷிகளால் ஆயிரக்கணக்கான வருடங்களாக போதிக்கப் பட்டு வரும் மக்களிடம்! நீங்கள் எங்களை மிதிக்கிறீர்கள். உங்கள் காலடியில் கிடக்கின்ற தூசிக்குச் சமமாக எங்களை நடத்துகிறீர்கள்.

 

விலைமதிப்பற்ற  செல்வமான வனவிலங்குகளை அழிக்கிறீர்கள். உங்கள் குடிப் பழக்கத்தாலும் கேளிக்கைகளாலும் எங்கள் மக்களை அவமதிக்கிறீர்கள். எங்கள் பெண்களை அவமானப்படுத்துகிறீர்கள். உங்கள் மதத்ரத விட எந்த விதத்திலும் தாழ்ந்தத அல்லாத, ஏன், மனிதநேயம் மிக்கதாக ருப்பதால் உங்கள் மதத்தைவிட உயர்ந்த தேயான எங்கள் மதத்தை இகழ்கிறீர்கள். இப்படி பல விதங்களிலும் உங்களைவிட உயர்ந்ததான ஒரு நாட்டிற்கு உங்கள் மதத்தைப் பரப்பச்சென்றுவிட்டு, விரைவாகப் பரப்ப முடியவில்லை, கிறிஸ்தவ மதம் இந்தியாவில் மிக மெதுவாகவேபரவுகிறது என்றெல்லாம் ஆச்சரியப்படவும் செய்கிறீர்கள்.

 

அது ஏன் விரைவாகப் பரவவில்லை தெரியுமா? ஏனெனில் நீங்கள் ஏசுவைப்போன்றவர்கள் அல்ல. எங்களால் ஏசுநாதரைப்போற்றவும் மிதிக்கவும் இயலும். நீங்களும் அவரைப்போல் எளியவராக, சாதாரணமானவர்களாக அன்பின் செய்தியைத் தாங்கி, பிறருக்காக வாழவும் வேலை செய்யவும் துன்புறவும் செய்பவர்களாக எங்கள் வாசலுக்கு வந்தால்  உங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று நினைக்கிறீர்களா? கட்டாயம் இல்லை. அத்தகைய ஒருவர் வந்தால் அவரை நாங்கள் எங்கள் ரிஷி ஒருவருக்கு கொடுக்கின்ற மரியாதையு்ன் வரவேற்போம், அவர் கூறுவதைக்கேட்போம்.

எங்களை ஏசுவதற்கும் விமர்சிப்பதற்கும் பயிற்சி அளித்து எங்கள் நாட்டிற்கு ஆட்களை அனுப்புகிறீர்கள். அவர்கள் எங்களைப் பழிப்பதில் ஆயிரத்தில் ஒன்று நான் இங்கே கூறினால் நீங்கள் அலறுகிறீர்கள். ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்,

ஓ! எங்களைத்தொடக்கூடாது. நாங்கள் அமெரிக்கர்கள் . உலகிலுள்ள அனைவரையும் நாங்கள் ஏசலாம், பழிக்கலாம், விமர்சிக்கலாம், எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் எங்களை நீங்கள் எதுவும் சொல்லி விடக்கூடாது. நாங்கள் தொட்டால் சுருங்கிகள். ஒன்று நினைவில் கொள்ளுங்கள். இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து இந்தியப்பெருங்கடலிலுள்ள சேறு  அனைத்தையும் அள்ளி மேலை நாடுகளில் மீது வீசினாலும் நீங்கள் எங்களுக்குச்செய்கின்ற கொடுமைகளுக்குக் கோடியில் ஒரு பங்கு கூட பதிலாகாது.

 

எனவே சகோதரர்களே! நீங்கள் வாழ வேண்டுமானால், உங்கள் நாடு வாழ வேண்டுமானால் ஏசுவிடம் திரும்பிப்போங்கள். நீங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல! இறைமகனுக்குத் தலைசாய்க்க இடம் இல்லை என்று கூறினாரே அவரிடம் திரும்பிப்போங்கள். பறவைகளுக்குக் கூடுகள் உள்ளன. மிருகங்களுக்குக் குகைகள் உள்ளன. ஆனால் இறைமகனுக்குத் தலைசாய்க்க இடம் இல்லை.” ஆனால் உங்கள் மதமோ ஆடம்பரத்தின் பெயரால் போதிக்கப் படுகிறது. காலத்தின் கோலத்தைப் பாருங்கள்!

 

பாதிரிகளின் எதிர்ப்பு

-

 பிப்ரவரி 23-ஆம் நாள் டெட்ராய்ட்டிலிருந்து ஓஹியோ என்ற நகரத்திற்கு ச்சென்றார் சுவாமிஜி. ஆனால் டெட்ராய்ட்டில் அவர் எழுப்பிய அலை, மோதிச் சிதறத்தொடங்கியது. அவரை எதிர்த்துப் பத்திரிகைகளில் பாதிரிகள் எழுதினர். கடைசியில், மார்ச் 5-ஆம் நாள் பொதுக்கூட்டம் ஒன்றிற்று ஏற்பாடு செய்தனர். இந்து மதத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பழித்து , கடைசியில், இந்து மதத்தின் ரட்சகர் என்று யாரும் கிடையாது. ஏசு மட்டுமே இந்தியாவை ரட்சிக்க முடியும் என்று ஒரு மனதாக முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஓரிரு நாட்களில் பிரெஸ்பிடீரியன் சர்ச் ஒன்று தனது வருடாந்திரக் கூட்டத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடக்கி வைத்திருப்பது நியாயமே என்று தீர்மானம்  நிறைவேற்றியது. விதவைகள் எரிப்பது, பெண் குழந்தைகளை முதலையின்  வாயில் எறிவது, மனித ரத்தத்திற்கான தாகத்துடன் அலையும் தெய்வங்களை வழிபடுவது போன்ற பழக்கங்களில் ஈடுபடுகின்ற இந்தியர்களைத் திருத்தியே ஆகவேண்டும் என்று அவர்கள் முடிவு  செய்தனர்.

 

 அது மட்டுமல்ல, பிப்ரவரி 28 முதல் மார்ச் 4-க்குள் இந்தியாவில் மிஷனரிகளாக  வருவதற்குப் பயிற்சி பெறுகின்ற இளைஞர்களுக்கான இரண்டாவது அகில உலக மாநாடும் அங்கே கூட்டப் பட்டது. இதில் 300 கல்வி நிலையங்களைச்சேர்ந்த 1200 இளைஞர்களும் இளம் பெண்களும் கலந்து கொண்டனர்.

 

 மார்ச் 9-ஆம் நாள் மீண்டும் டெட்ராய்ட் வந்தார் சுவாமிஜி. இந்த முறை பாமர் என்பவரின் வீட்டில் தங்கினார்.. இவர் டெட்ராய்ட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவர்.  செல்வாக்கு மிக்கவர். சிகாகோ உலகக் கண்காட்சியின் முக்கிய அமைப்பாளர் , மாநில, மத்திய அரசில் பல பதவிகளை வகித்தவர்.  அறுபது வயதைக் கடந்தவரான இவருக்கு அவரது வயதை ஒத்த நண்பர்கள் பலர் இருந்தனர். தங்கள் கூட்டத்தை முதியோர் கிளப் என்று அவர் அழைப்பார்.

 

சுவாமிஜிக்கு மேலை நாட்டில் மிகவும் உதவியவர்களுள் இவர் ஒருவர். பல முறை தமது வீட்டில் விருந்திற்கு ஏற்பாடு செய்து, பலபிரமுகர்களை அழைத்து சுவாமிஜிக்கு அறிமுகம் செய்தார். மிஸ்டர் பாமர் மிகவும் அன்பானவர், வேடிக்கை நிறைந்தவர், நல்லவர், பணக்காரர். என்னிடம் மிகவும் அன்பாக இருக்கிறார் என்று எழுதுகிறார் சுவாமிஜி.

பாமரின் வேடிக்கையையும் சுவாமிஜி தமது கடிதத்தில் குறிப்பிடுகிறார். இங்கே பத்திரிகை ஒன்றில் என்னைப் பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. இங்கே சூறாவளித் துறவி ஒருவர் வந்துள்ளார். மிஸ்டர் பாமருடன்  அவர் தங்கி உள்ளார்.

 

 மிஸ்டர் பாமர் இந்துவாகிவிட்டார். அவர் இந்தியாவிற்குப் போகிறார். அவர் இரண்டு சீர்திருத்தங்களை மட்டும் வலியுறுத்தினார். முதலில் அவரது பண்ணையில்  வளர்கின்ற பிரெஞ்சுக் குதிரைகளால் தான்  புரி ஜகன்னாதரின் ரதம் இழுக்கப் பட வேண்டுமாம். வேடிக்கையாக இருக்கிறது அல்லவா.? பிரெஞ்சுக் குதிரைகள், ஜெர்ஸிப் பசுக்கள் என்றால் அவருக்கு உயிர், அவரிடம் அவை ஏராளம் உள்ளன.

 

பாமரின் வீட்டில் தங்கியபடியே தமது சொற்பொழிவுகளைத்தொடர்ந்தார் சுவாமிஜி. ஏற்கனவே பத்திரிகைகள் அவரைப் பற்றி பல கருத்துக்களை எழுதியிருந்ததால்  இப்போது அவரது சொற்பொழிவிற்கு  முன்பைவிட கூட்டம் அலைமோதியது.

 

மார்ச்-11 ஆம் நாள் ”இந்தியாவில்  கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்பாடுகள் என்ற தலைப்பில் பேசினார் சுவாமிஜி. அவர் அது வரை பேசிய சொற்பொழிவுகளில், இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. அன்று அவர் சுமார் இரண்டரை  மணிநேரம் பேசினார். தம்மைக்குறை கூறியவர்கள் அனைவரின் வாயை அடைக்கும்படியாக இருந்தது அந்தச்சொற்பொழிவு. அத்துடன் வழக்கப்போலவே அற்புதமான ஆன்மீகக்கருத்துக்கள் நிறைந்ததாகவும் இருந்தது.

 சுவாமிஜியின் இந்தச் சொற்பொழிவிற்குப் பிறகு சில காலம் பாதிரிகளும் சரி பத்திரிகைகளும் சரி, சற்று ஓய்ந்தது போல் காணப்பட்டனர். ஆனால் அவர்கள் மற்றொரு கோணத்திலிருந்து தாக்குதலைத்தொடங்கினர்.

சுவாமிஜியின் நடத்தையைப்பற்றி அவதூறு பேச ஆரம்பித்தனர். முதலில் வதந்திகளைப் பரப்பினர். பிறகு வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர்.

 

இந்த வதந்திகள் பிரச்சனைகளை உண்டாக்கவே செய்தன. சுவாமிஜியைச் சிலவீடுகளில் அழைத்திருப்பார்கள். எதிராளிகள் அந்த வீடுகளில் வதந்திகளைத்தெரிவித்து விடுவார்கள். விளைவு? சுவாமிஜி வரும்போது வீடு பூட்டியிருக்கும். அவர் திரும்ப நேரும். ஆனால் பல நேரங்களில், பின்னர் உண்மையை அறிந்து அந்த வீட்டினர் சுவாமிஜியிடம் மன்னிப்புக் கேட்பதுடன் அவரை மீண்டும் அழைக்கவும் செய்வார்கள்.

 சுவாமிஜி கலங்கவில்லை. நிலை குலையவில்லை. எப்போதும் இறைவனை சார்ந்து வாழ்வது போலவே அவர் வாழ்ந்தார்.

 

சித்து வேலைகள் வேண்டும்.

-

 இந்தியாவைப் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் அன்றைய அமெரிக்காவில் நிலவின. ஒன்று, ஏற்கனவே நாம் கண்டது. அதாவது, மூட நம்பிக்கைகள் நிறைந்த, பசியும் பிணியும் மலிந்த நாடு போன்ற கருத்துக்கள்.  மற்றொன்று , சித்து வேலை. இந்தியாவில் மகான்கள் ஏராளம் உள்ளனர். அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய வல்லவர்கள். சுருக்கமாகச்சொல்வதானால் , ஒரு மகான் என்றால் அவருக்குச்சித்து வேலைகள் தெரிந்திருக்க வேண்டும். முதல் கருத்தை வைத்து சுவாமிஜியை எதுவும் செய்ய இயலவில்லை. இந்தியாவைப்பற்றி அவர்கள் கூறிய கட்டுகை்கதைகளை எல்லாம் தகர்ந்தெறிந்து விட்டார் சுவாமிஜி. எனவே அவரது எதிர்பாளர்கள் இரண்டாவது கருத்தைப் பிடித்துக் கொண்டனர். விவேகானந்தர் ஒரு மகான் என்றால் அவர் சித்து வேலைகள் செய்ய வேண்டும் என்று கூக்குரலிடத்தொடங்கினர். ”ஈவினிங் நியூஸ் என்ற பத்திரிகை பின்வருமாறு எழுதியது.

 

 சித்து வேலைகள் வேண்டும்

 

தம்மை நிரூபித்துக்கொள்ள விவேகானந்தருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. தம்மால் சித்து வேலைகள் செய்ய இயலும் என்பதை அவர் நிரூபித்துக்காட்டட்டும். அல்லது வாயை மூடிக் கொள்ளட்டும். யூனிட்டேரியன் சர்ச்சில் பேசப்போகும் விவேகானந்தர் சித்து வேலை  செய்து தம்மை நிரூபிப்பாரா அல்லது வெறும் வாய்ச்சொல் வீரத்துடன்  நின்று விடுவாரா?

 

 இதற்கு சுவாமிஜி பதில் எதுவும் கூறுமுன் அவரது சிறந்த ஆதரவாளர்களில் ஒருவரான ஓ.பி டெல்டாக் என்பவர் ”ரகசியங்களும் சித்து வேலைகளும் என்ற தலைப்பில் ஒரு சிறந்த பதிலை எழுதி அனுப்பினார். அதன் சில பகுதிகள் வருமாறு.

 

ஏசு நாதரின் இறுதி வேளைகளில் மூடர்கள் இப்படித்தான் கத்தினார்கள். சிலுவையில் அறைவதற்கான ஆணை பிறப்பித்தாகி விட்டது. அவரது மரணத்தை விரும்பிய கொலைக் கும்பல், ஏதாவது சித்து வேலை செய்து உன்னைக் காப்பாற்றிக்கொள் என்று கூக்குரலிட்டது. ஏசுநாதர் உடனடியாக வரிந்து க் கட்டிக்கொண்டு சித்து வேலை செய்தாரா? இல்லை. அமைதியாக அவர்களிடம், மோசஸையும் மற்ற தீர்க்கதரிசிகளையும் நீங்கள் நம்பினீர்களா? செத்தவன் உயிர் பிழைத்து எழுந்தபோது கூட நீங்கள் நம்பவில்லையே!  என்று தானே கூறினார். மூடர்கள் தான் சித்து வேலையை நாடுவார்கள்.

 

 அமெரிக்கா பிறக்குமுன்பே கலாச்சாரங்களில் உன்னதங்களைக் கண்டது இந்தியா. அங்குள்ள மேதைகள் தாங்கள் சித்து வேலைகள்  காட்டுவதாக ஒருபோதும் கொண்டாடியதில்லை.  நீண்ட கால உண்ணாநோன்புகள், படிப்பு,புலனாசைகளை வென்று வாழ்தல், தியானம் ஆகியவற்றால் அவர்கள் மேலான ஆன்மீக ஆற்றலைப்பெறுகிறார்கள். திகைப்பும் பிரமிப்பும் உண்டாகுமாறு மற்றவர்கள் வியந்து நிற்கும் அளவிற்கு அவர்களால் அற்புதங்களைச்செய்ய முடியும்.

 

 அமைதியின் செய்தியை, தூய்மையின் செய்தியை, தியாகத்தின் செய்தியை, சகோதரத்துவத்தின் செய்தியை விளக்குவதில் விவேகானந்தர்  வெற்றி பெற்றிருந்தால், மதவெறியின் குருட்டுக் கண்களைத் திறப்பதில் அவர் வெற்றி கண்டிருந்தால்- பொறுமையின்மையின்  செவிட்டுக் காதுகளைத் திறப்பதில் அவர் வெற்றி பெற்றிருந்தால்- கிறிஸ்தவர்களிடம் இல்லாத சில  நன்மைகள் கிறிஸ்தவர் அல்லாதவரிடம் இருக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டியிருந்தால்- அனைத்திற்கும் மேலாக, மனித குலத்தின் கடின இதயத்தை இளக்க அவரால் முடியுமானால்- அவரால் முடிந்திருக்கிறது என்பது உண்மை-அவரது பணி வீண் போகவில்லை என்றே பொருள்.

அதன் பிறகு சுவாமிஜி தமது கருத்தை அதே பத்திரிகை நிரூபரிடம் தெளிவுபடுத்தினார். அது அந்தப் பத்திரிகையில் பிப்ரவரி 17-ஆம் நாள் வெளியாயிற்று.

 

 உண்மையான இந்து மதத்தில் சித்து வேலைகளுக்கு இடம் இல்லை.

-

 எனது மதத்தை நிரூபிப்பதற்காகச் சித்து வேலைகள் எதுவும் என்னால் செய்ய இயலாது. முதலாவதாக, சித்து வேலைகளும் அற்புதங்களும் நிகழ்த்திக்கொண்டு திரிபவன் அல்ல நான். இரண்டாவது, எந்த இந்து மதத்தின் பிரதிநிதியாக நான் வந்துள்ளேனோ, அந்த உண்மையான இந்து மதம்  சித்து வேலைகளையும் அற்புத நிகழ்ச்சிகளையும் சார்ந்து இருக்க வில்லை. அற்புத நிகழ்ச்சிகள் என்று எவற்றையும் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஐம்புலன்களுக்கு எட்டாத சில நிகழ்ச்சிகள் நடைபெறுவது உண்மை தான். ஆனால் அவையும் சில நியதிகளுக்கு ஏற்பவே நடைபெறுகின்றன. அவற்றிற்கும் எங்கள் மதத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்தியாவில்  நடைபெறுவதாக இங்கே உள்ள பத்திரிகைகளில் வெளியாகின்ற அற்புத நிகழ்ச்சிகள் மாயாஜாலங்களும், மனவசியக் காட்சிகளுமே. சான்றோர்கள் அவற்றைச்செய்வதில்லை. பணத்திற்காக த் தெருக்களில் வித்தை காட்டுபவர்களே இவற்றைச் செய்கிறார்கள். சத்தியத்தை அறிய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பவர்களால் மட்டுமே உண்மையைப் புரிந்து கொள்ள இயலும். ஏதோ சிறுபிள்ளைத்தனமான வேத்துடன் அறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு எதுவும் புரியாது.

 

சித்து வேலைகளின் பெயரில் சுவாமிஜியை மட்டம் தட்டலாம் என்று நினைத்த மிஷனரிகளுக்கும்  மற்றவர்களுக்கும் சுவாமிஜியின் பதில் போதுமானதாக இருந்தது. அதன் பிறகு சித்து வேலைகள் பற்றிய பிரச்சனை எழவில்லை.

 

பாதிரிகளின் எதிர்ப்பைப் புரிந்து கொள்ளலாம், மிஷனரிகளின் பகைமையைப் புரிந்து கொள்ளலாம். மத வெறியர்களின் உணர்ச்சி எழுச்சிகளையும்  புரிந்து கொள்ளலாம். ஆனால் சொந்த நாட்டைச் சேர்ந்தவரும் , ஸ்ரீராமகிருஷ்ணரைத் தரிசித்தவருமான பிரதாப் சந்திர மஜும்தார் அந்தப் பாதிரிகளின் கூட்டத்தில் சேர்ந்து கொண்டதைத் தான் புரிந்து கொள்ள  இயலவில்லை. பொறாமை எதைத்தான் செய்யாது! தாம் புகழ் வாய்ந்த பிரம்மசமாஜத் தலைவராக  ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்றபோது வெறும் கல்லூரி மாணவனாக, தமது சொற்பொழிவைக்கேட்பவனாக  இருந்த ஓர் இளைஞர் இன்று தம்மையே மிஞ்சி அமெரிக்காவையே வென்று கொண்டிருக்கும்போது அந்தச் சாதாரண மனிதர் நிலைகுலைந்ததில் வியப்பு எதுவும் இல்லை. பம்பாயைச் சேர்ந்தவரும், சர்வமத மகாசபையில் கலந்து கொண்டவருமான நகர்கரும் மஜும்தாருடன் சேர்ந்து கொண்டார்.

 மஜும்தாரின் தலைமையில் இயங்கி வருகின்ற பத்திரிகையில் சுவாமிஜியை அவர் தாக்கி எழுதியதை 1894 மே 16-ஆம் நாள் Boston Daily Advertiser  என்ற பத்திரிகை மேற்கோள் காட்டி எழுதியது

 

 பாபு நரேந்திரநாத் தத்தர்- விவேகானந்தர் பிரம்ம சமாஜத்தில் எங்களிடம் வந்து நவ- பிருந்தாவன் தியேட்டரில் நடிக்கவும் பாடவும் வந்த நாட்களிலிருந்து அவரை எங்களுக்குத்தெரியும். எந்த பத்திரிகையில் எவ்வளவு புகழ்ந்து எழுதினாலும் அவரைப் பற்றியும் அவரது நடத்தையைப் பற்றியும் நாங்கள் அறியாத எதையும் புதிதாக எங்களுக்குக் கூறிவிட முடியாது. எங்கள் நல்ல நண்பரான அவர் சமீப காலத்தில் அமெரிக்காவில் பெரிய சொற் பொழிவுகள் செய்து அமெரிக்கர்களிடையே பெரும் புகழ் பெற்று வருகிறார். ஆனால் அவர் போதிப்பது வைதீக இந்து மதம் அல்ல. அது ஒரு புதிய வகை இந்து மதம். ஒரு வைதீக  இந்து கடலைக் கடக்க மாட்டான். இடைவிடாமல்  புகை பிடிக்க மாட்டான். ஆனால் இவை போன்ற அனைத்தையும் இந்த நண்பர்  செய்து வருகிறார். ஒரு வைதீக இந்து விற்கு அளிக்கக் கூடிய மரியாதையை அவருக்கு எங்களால் அளிக்க முடியாது. அவரது புகழைப் பரப்ப எல்லோரும் முயலலாம். ஆனால் அவர் செய்கின்ற வடிகட்டின முட்டாள்தனங்களையெல்லாம் எங்களால் சகிக்க முடியாது.

 

 ரமாபாய் வட்டங்களும் சோரப்ஜியும்

 

  இதற்கிடையே ரமாபாய் வட்டங்களும் தங்கள் பங்கிற்குப் பல அவதூறுகளையும் கட்டுக்கதைகளையும் பரப்பினர்.ரமாபாய் கூட்டத்தினர் என்னைப் பற்றி கிளப்பியிருக்கின்ற வதந்திகளைக்கேட்டுத் திகைப்பாக உள்ளது. ஒருவன் எப்படி நடந்து கொண்டாலும் சரி, அவனைப்பற்றி பச்சைப்பொய்களைக் கட்டி விடுகின்ற மக்கள் இருக்கவே வெய்வார்கள். சிகாகொவில்  இது எனக்குத் தினசரி அனுபவமாக இருந்தது. இந்தப்பெண்கள் கிறிஸ்தவர்களுள் மகா கிறிஸ்தவர்கள் தான்! என்று எழுதுகிறார் சுவாமிஜி.

 

 சுவாமிஜியைப் பற்றிய பொய்களையும் வதந்திகளையும் பரப்புவதில் மஜும்தார், நகர்கர மற்றும் ரமாபாய் வட்டத்தினருடன் கைகோர்த்துக் கொண்டார் மற்றோர் இந்தியர்       குமாரி கார்னீலியா சோராப்ஜி. இவர் சிகாகோ சர்வமத மகாசபையில்  இந்தியாவிலிருந்து கலந்து கொண்டவர்களில் ஒருவர். பார்சி மதத்தினரான இவர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர். இவரை டாக்டர் ”பரோஸ் ”பாவத்திலிருந்து ரட்சிக்கப்பட்ட பார்சி பெண்களுக்கு ஓர்  உன்னத உதாரணம்என்று குறிப்பிட்டார். இவரது பெற்றோரை சுவாமிஜி தமது பரிவிராஜக நாட்களில் பூனாவில் சந்தித்திருந்தார்.

 

சுவாமிஜியின் பாதையில் தடைகளை ஏற்படுத்த முயற்சித்த பிரிவினர் தியாசபிஸ்ட்கள். அமெரிக்காவிற்குக் கிளம்புமுன் சுவாமிஜி சென்னையில் அவர்களை அணுகி, ஓர் அறிமுகக் கடிதம் கேட்டதும்  அவர்கள் மறுத்ததும் ஏற்கனவே நாம் கண்டதே. அமெரிக்காவிற்கு வந்த ஆரம்ப நாட்களில் போதிய பணமின்றி, போதிய துணியின்றி வாடியபோது, அது பற்றி கேள்விப்பட்ட தியாசபிகல் சொசைட்டியின் தலைவர், அப்பாடா! இந்தச் சாத்தான் குளிரில் சாகப்போகிறது! நிம்மதி! என்று கூறினாராம். ஆனால் அவர்கள் எண்ணியது போல் நடக்கவில்லை.

சிகாகோ சர்வமத மகாசபையில் சுவாமிஜி வெற்றி கண்டபோது அவர்கள் தங்கள் தவறை உணர்ந்தனர். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள சுவாமிஜியின் ஆதரவாளர்களிடையே சுவாமிஜி தங்கள் நண்பர்  என்பது போன்றஒரு சூழ்நிலையை உருவாக்க முயன்றார். ஏன், அவரது  வெற்றிக்கு வழிவகுத்தவர்களே தாங்கள் தான் என்பது போல் பிரச்சாரமும் செய்தனர். இத்தகைய முயற்சியில் அளசிங்கரிடமே அவர்கள் வெற்றி கண்டு விட்டனர். ஆனால் சுவாமிஜி உடனடியாக நிலைமையைப்புரிந்து கொண்டு அளசிங்கருக்கு எழுதினார்.

 

 நீ தியாசபிக் சொசைட்டியினருடன் சேர்ந்து கொள்ளப் போகிறாயா? தியாசபிக் சொசைட்டியினருடன்  நான் தொடர்பு கொண்டவன் என்ற எத்தகைய சந்தேகமும் அமெரிக்கா, இங்கிலாந்து இரண்டு இடங்களிலும் எனதுவேலையைக்கெடுத்துவிடும். கெடுக்காமல் என்ன செய்யும்? நல்லவர்கள் எல்லோரும் அந்த சொசைட்டியினரின் பாதையைத் தவறென்றே எண்ணுகின்றனர். அவர்கள் நினைப்பது சரிதான். அது உனக்குநன்றாகத் தெரியும்.

 

அளசிங்கரும் பிறரும் சுதாரித்துக் கொண்டனர். தியாசபிஸ்ட்களின் நோக்கம் நிறைவேறவில்லை. தங்கள் முயற்சியில் தோல்வி கண்டபோது அவர்களும் சுவாமிஜிக்குத்தொந்தரவு தர முயற்சித்தனர். அதற்காக அவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் கைகோர்த்துக்கொண்டனர்.

 

சுவாமிஜியை எதிர்த்து எதுவும் செய்ய இயலாது என்று கண்ட மிஷனரிகள் வேறொருமுறையைக் கையாண்டனர்.

அவரைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தனர். தங்களுடன் சேருமாறும், தங்களின் கருத்துப்படி கிறிஸ்தவ மதத்தைப்போதிக்குமாறும் கூறினர். மறுத்தால் அவருக்கு ஆபத்து என்றும் பயமுறுத்தினர். இங்கும் சுவாமpஜி அமைதியாக அவர்களை எதிர்கொண்டார். அவர்களின் பூச்சாண்டியும் சுவாமிஜியிடம் பலிக்கவில்லை.

இவர்கள் அனைவரும் சுவாமிஜியைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பினார்கள். ஆனால் சுவாமிஜி கலங்கவில்லை. எல்லோரும் கங்கணம் கட்டிக்கொண்டு அழிக்க முற்பட்ட போதும் சுவாமிஜி அவர்களுக்கு எந்தத் தீமையையும் செய்ய முற்படவில்லை.

 

இறையருளால் எல்லாம் வரும்... பழமைமைவாதப் பாதிரிகள் எனக்கு எதிராகவே உள்ளனர். என்னைச்சமாளிப்பது எளிதல்ல என்பதைக் கண்டதால் எல்லா வழிகளிலும் எனக்குத் தடை போட முயல்கின்றனர்- ஏசிப் பார்க்கின்றனர்.அவதூறுகளைப் பரப்புகின்றனர். மஜும்தார் அவர்களுக்கு உதவுகிறார். பொறாமையால் அவருக்குப் பைத்தியம் தான் பிடித்திருக்கவேண்டும்.. நான் பெரிய மோசக்காரன். போக்கிரி என்றெல்லாம் அவர்களிடம் சொல்கிறார். அமெரிக்காவில் நான் பாவ வாழ்க்கை வாழ்கிறேன், அதாவது ஒழுக்கக்கேடாக வாழ்கிறேன், என்று கல்கத்தாவில் எல்லோரிடமும் சொல்லிவருகிறார். இறைவன் அவருக்கு அருளட்டும். என் சகோதரா! தடையின்றி நற்காரியம் எதையும் சாதித்துவிட முடியாது. இறுதிவரை விடாமுயற்சியுடன் இருப்பவனே வெற்றி பெறுவான் என்று எழுதுகிறார் சுவாமிஜி.

 

கொள்கை வெறியும் பொறாமையும்  மனிதனை என்ன தான்  செய்ய வைக்காது? ஆனால் உலகிற்கு ஒரு செய்தியை அளிக்கவேண்டும் என்ற அருளாணையுடன் பிறந்த ஒருவரை, எப்போதும் ஸ்ரீராமகிருஷ்ணர் உடனிருந்து வழிகாட்டுகின்ற  ஒருவரை எந்த எதிர்ப்பும் என்ன செய்யும்?

 

 அடுத்த கட்டமாக பாதிரிகள் சுவாமிஜியிடம் பெண்களை அனுப்பினர். அவரை வீழ்த்துவதில்  அந்தப் பெண்கள் வெற்றி பெற்றால் பெரிய தொகை அளிப்பதாக அவர்களுக்கு ஆசையும் காட்டினர். ஆனால் கல்லூரி மாணவராக இருந்த போதே தம்மை நாடிய ஒருத்தியிடம், மரணம்நம் வாசலைத்தட்டிக் கொண்டிருக்கிறது. அதனை எதிர்கொள்ள ஏதாவது செய்திருக்கிறாயா? வெறும் சதைப் பிண்டத்தில் ஆசை வைத்து அலைகிறாயே! என்று கூறிய ஒருவரை எந்தப் பெண் என்ன செய்ய முடியும்? வந்தவர்கள் தோற்றுத்திரும்பினர்.

 

 இதற்குமேல் பாதிரிகளுக்குச் செய்ய எதுவும் இல்லை. இனி அவரை அழித்தால் மட்டுமே தாங்கள் வாழ முடியும் என்று எண்ணிய அவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். டெட்ராய்ட்டில்  சுவாமிஜியை ஒரு விருந்திற்கு அழைத்தனர். சிற்றுண்டி அளித்தனர். அங்கு அளிக்கப்பட்ட காப்பியைக் குடிப்பதற்காக சுவாமிஜி வாயருகே கொண்டு சென்றார். எப்போதும் உடன் நின்று காக்கும் ஸ்ரீராமகிருஷ்ணர் அப்போது அங்கே தோன்றினார். அந்தக் காப்பியைக் குடிக்காதே. அதில் விஷம் கலந்துள்ளது என்றார். சுவாமிஜி சுதாரித்துக்கொண்டார். பாதிரிகளின் கடைசி முயற்சியும் தோல்வி கண்டது.

 

 ஆரம்பத்தில் சுவாமிஜி இந்த எதிர்ப்புகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் விஷம் கொடுப்பதற்கும், அதை விடக் கொடிய அவதூறுகளைத் தம்மீது அள்ளி வீசவும் மேலைநாட்டுப் பாதிரிகளும் சொந்த நாட்டினர் சிலரும் முற்பட்டபோது தாமும் ஏதாவது செய்தேயாகவேண்டும் என்று முடிவு செய்தார். தம் நாட்டு மக்கள் இதற்கு மறுமொழி கூறவேண்டும் என்று விரும்பினார் அவர். ஏனவே சென்னையில் அளசிங்கருக்கு 1894 ஏப்ரல் 9அன்று அது பற்றி கடிதம் எழுதினார்.

 

 உன்னால் முடிந்தால் ஒன்று செய், சென்னையில் ஒரு பெரிய கூட்டம் கூட்டி, ராமநாத புர மன்னரையோ வேறு பெரிய மனிதரையோ தலைமை தாங்கச் செய். அதில் நான்  இங்கு இந்து மதத்தின் பிரதிநிதியாக ச் செயலாற்றியது உங்களுக்கு முழுத்திருப்தியே என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி அறிவி. அதனை சிகாகோ ஹெரால்ட், இன்டர்-ஓஷன், நியூயார்க் ஸன், - டெட்ராய்ட் கமர்ஷியல் அட்வர்டைசர் போன்ற பத்திரிகைகளுக்கு  அனுப்ப வேண்டும். சிகாகோவின் மதப்பேரவைத் தலைவரான டாக்டர் பரோசுக்கும் அனுப்ப வேண்டும்.

 

முடிந்த அளவு பெரியதாக அந்தக் கூட்டத்தைக் கூட்டுங்கள். தங்கள் மதத்திற்காகவும் நாட்டிற்காகவும் சேரவிரும்புகின்ற பெரிய மனிதர்களை ஒன்று திரட்ட வேண்டும். கூட்டத்தையும்  அதன் நோக்கத்தையும் பாராட்டுவதாக மைசூர் மன்னர், அவரது திவான் மற்றும் கேத்ரி மன்னர் அவர்களிடமிருந்து கடிதங்களைப்பெற முயலவேண்டும். முடிந்தவரை பிரம்மாண்டமான கூட்டமாக இருக்கட்டும். என்னை இங்கு அனுப்பிவைத்த சென்னை இந்து சமுதாயம் எனது பணியைப்பற்றி த் தன் பூரணத் திருப்தியைத் தெரிவிப்பதாக அந்தக் கூட்டத்தின் தீர்மானம் இருக்கவேண்டும்.

 

இது முடியுமா என்றுபார். அது பெரியதல்ல, முடிந்த இடங்களிலிருந்து இது போன்ற கடிதங்களைப்பெற்று, அவற்றை அச்சிட்டு, பிரதிகளை அமெரிக்கப் பத்திரிகைகளுக்கு அனுப்ப முயலவேண்டும். விரைவாக இதைச்செய். என் சகோதரர்களே, இது பேருதவியாகும். பிரம்ம சமாஜத்தைச்சேர்ந்தவர்களும் இங்கு  பொருளற்ற முட்டாள்தனங்களையெல்லாம் பரவச் செய்கிறார்கள் முடிந்த அளவு விரைவில் அவர்களின் வாயை அடைக்க வேண்டும்.

 

இந்துக்களின் மெத்தனம்.

-

 ஆனால் சுவாமிஜி எதிர்பார்த்ததுபோல் அவ்வளவு எளிதாக இந்தியாவில் எதுவும் நடைபெறவில்லை. மூன்று மாதங்கள் பொறுத்துப்பார்த்த சுவாமிஜி வேதனையின் விளிம்பில் நின்று கொண்டு, 1894 ஜுன் 28-ஆம் நாள் சென்னைக்கு எழுதினார். இந்தியாவில் என்னை எப்படியெல்லாம் புகழ்கிறார்கள் என்று உங்கள் கடிதங்களில் மீண்டும் மீண்டும் எழுதுகிறீர்கள். ஆனால் இது நமக்குள் மட்டுமே. அளசிங்கர் அனுப்பிய மூன்று சதுர அங்குலக் காகிதத்தைத் தவிர ஓர் இந்தியப் பத்திரிகை கூட என்னைப்பற்றி ஏதேனும் எழுதியிருப்பதை நான் இதுவரை காணவில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் கூறுவதையெல்லாம் பாதிரிகள் கவனமாகச்சேர்த்துவைத்து, காலம் தவறாமல் பிரசுரிக்கின்றனர். என் நண்பர்களின் வீடுகள்தோறும் சென்று என்னைக்கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறார்கள். இந்தியாவிலிருந்து எனக்காக ஒரு வார்த்தை கூட வராதது அவர்களுடைய வெற்றிக்கு நன்றாக வழிவகுக்கிறது. இந்தியாவின் இந்துப் பத்திரிகைகள் என்னை வானளாவப் புகழலாம். ஆனால் அதில் ஒரு வார்த்தை கூட இங்கு வந்து சேரவில்லை.  எனவே அமெரிக்கர்கள் பலர் என்னைப்போலி என்று கருதுகின்றனர். பாதிரிகள் ஒரு புறம், அவர்களுக்குப் பக்கத்துணையாக இங்குள்ள  இந்துக்களின் பொறாமை- இதில் நான் ஒரு வார்த்தை கூடபேச இடமில்லை.

 

அத்தாட்சிப் பத்திரங்கள் எதுவும் இல்லாமல் நான் இங்கு வந்தேன். எனவே பாதிரிகள் மற்றும் பிரம்ம சமாஜத்தினரின் பிரச்சாரங்களுக்கு இடையில் நான்போலி அல்ல என்று காட்டுவது எப்படி? சில வார்த்தைகளைச் செலவாக்குவது இந்தியர்களுக்கு மிக எளிதென்றே நினைத்தேன்.   சென்னையிலும் கல்கத்தாவிலும் சில பெரியவர்களைத் திரட்டிச் சபை கூட்டுவது மிக எளிதென்றே நினைத்தேன். எனக்கும்  என்னிடம் அன்பு காட்டிய அமெரிக்கர்களுக்கும் நன்றிகூறி அவற்றில்   ஒரு தீர்மானம் நிறைவேற்றி, செயலாளர் மூலமாக அதனை அமெரிக்காவிற்கு அனுப்பியிருக்கலாம். டாக்டர் பரோசுக்கு ஒரு பிரதி அனுப்பி அதை பாஸ்டன், நியூயார்க் மற்றும் சிகாகோவிலுள்ள பத்திரிகைகளில் வெளியிடச் செய்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் இந்தியாவால் தாங்கமுடியாத பிரம்மாண்டமான காரியமென்று இப்போது தான் தெரிந்து கொண்டேன். இந்த ஓராண்டில் ஒருவர் கூட எனக்காகக் குரல் எழுப்பவில்லை. எல்லோரும் எனக்கெதிராகவே நிற்கின்றனர். நீங்கள் உங்கள் வீடுகளுக்கு உள்ளே என்னைப் பற்றி என்ன சொன்னாலும் அது இங்கே யாருக்குத்தெரியும்? இதைப் பற்றி நான் அளசிங்கனுக்கு எழுதி இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது. அவன் அதற்குப் பதில் கூட எழுதவில்லை. அவனுக்கு உற்சாகம் குறைந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. எனவே முதலில் இதைப்பற்றிச் சிந்தித்து, பிறகு இந்தக் கடிதத்தைச் சென்னை நண்பர்களுக்குக் காட்டலாம். ஒரு பக்கம் என் சகோதரத்துறவிகள் கேசவ சேனைப் பற்றி முட்டாள் தனமாகப் பிதற்றுகின்றனர்.

சென்னைவாசிகளோ, தியாசபிக் சொசைட்டியைப்பற்றி நான் எதை எழுதினாலும் அவர்களிடம் அதைச் சொல்லி, பகைமையை வளர்க்கின்றனர்.... ஆ! உண்மையான செயல்திறனும் அறிவும் உள்ள ஒருவராவது  இந்தியாவில் எனக்குச் சார்பாக இருந்தால்,  ஆனால் இறைவனின் திருவுளம் தான் நிறைவேறும். நான் ஒரு போலி என்ற நிலையிலேயே இந்த நாட்டில் இருக்கிறேன்.

 

 ஒவ்வொரு கணமும் சித்திரவதையை அனுபவித்து வருகிறேன். ஒரு செய்தித்தாள் கூட இந்தியாவிலிருந்து வரவில்லை. என் நண்பர்கள் காத்திருந்தார்கள், மாதக்கணக்காக காத்திருந்தார்கள். எதுவும் வரவில்லை. ஒரு வார்த்தை கூட வரவில்லை. எனவே பலரும் உற்சாகம் இழந்துபோய், இறுதியில் என்னைக் கைவிட்டுவிட்டனர்.

 

இந்தியாவில் எழுச்சி

 

 ஆனால் இந்தக் கடிதம் கிடைக்கும் முன்பே சென்னை அன்பர்கள் செயலில் இறங்கி விட்டார்கள். இருப்பினும் இந்துக்களுக்கே உரிய மெத்தனத்தாலும், தாங்கள் என்ன செய்கிறோம், என்பதை சுவாமிஜிக்கு அறிவிக்க வேண்டும் என்ற அளவிற்கு யோசிக்கத் தவறியதாலும் சுவாமிஜி தவிக்க நேர்ந்தது. சுவாமிஜி செய்கின்ற பணியைப் பாராட்டி இந்தியாவில் முதலில் சென்னையில் ஏப்ரல் 28-இல் பச்சையப்பா ஹாலில் கூட்டம் நடைபெற்றது. ஏராளம் பேர் கலந்து கொண்டனர். ராஜா சர், ராமசுவாமி முதலியார், திவான் பகதூர் எஸ், சுப்பிரமணிய ஐயர், சி.ஐ. இ  போன்ற பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு சுவாமிஜிக்குப் புகழாரம் சூட்டினர். ராமநாதபுரம் மன்னர், ராய் பகதூர் எஸ், சேஷையா பி.ஏ, போன்றோர் தந்தி மற்றும் கடிதங்கள் மூலம் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

 

 இதனை த் தொடர்ந்து கல்கத்தாவிலும் இது போன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கான உத்வேகத்தைக் கல்கத்தா மக்கள் மகாபோதி சொசைட்டியின் செயலாளரான தர்ம பாலரிடமிருந்து பெற்றனர். அவர் சுவாமிஜியுடன் சர்வமகாசபையில் கலந்துகொண்டவர்.

மஜும்தாரைப்போல் அல்லாமல் அவர் சுவாமிஜியைப்பற்றி, அவரது வெற்றியைப் பற்றி புகழ்ந்து Indian Mirror ஏப்ரல் 12 இதழில் எழுதினார். ”சர்வமத மகாசபை வெற்றி பெற்றதற்கே சுவாமி விவேகானந்தர்  தான் முக்கிய க்காரணம், எனவே இந்து வீடுகள் ஒவ்வொன்றிலிருந்தும் அவருக்கு நல்வாழ்த்துக்கள் அனுப்பவேண்டும் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமின்றி, ஏப்ரல் மாதத்தில்  ஆலம்பஜார் மடத்திற்குச்சென்று சுவாமிஜியின் சகோதரத்துறவிகளைச் சந்தித்து சர்வமத மகாசபை விவரங்களைத்தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கல்கத்தாவில் கூட்டம் நடைபெற்றது.

 

இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாகக் கும்பகோணம், பெங்களூர் போன்ற பல இடங்களில் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த விவரங்கள், அந்தக் கூட்டங்களில்  எடுக்கப்பட்ட முடிவுகள் போன்றவை சுவாமிஜிக்கு அனுப்பப் பட்டன. எதிர்பார்த்துக் காத்திருந்த நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கியபோது சுவாமிஜி தேவியின் அருளை எண்ணி நெகிழ்ந்தார்.

 

ஜய ஜகதம்பா! எதிர்பார்த்ததைவிட அதிகமாகப் பெற்றுவிட்டேன். தேவைக்கு அதிகமாகவே பாராட்டு கிடைத்துவிட்டது. இறைவனின் அருளை எண்ணி நான் ஒரு குழந்தைபோல் அழுகிறேன். சகோதரிகளே, இறைவன் தன் அடியவனை ஒருநாளும் கைவிடுவதில்லை. எனது கடிதம், எல்லாவற்றையும் நன்றாக விளக்குகின்ற துண்டுப் பிரசுரங்கள்  எல்லாம் அமெரிக்க மக்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன... சகோதரிகளே, நான் எவ்வளவு கெட்டவன் பார்த்தீர்களா? இவ்வளவு கருணைக்கு இடையிலும் சில வேளைகளில் என் நம்பிக்கை ஆட்டம் காண்கிறதே! நான் இறைவனின் கைப்பிள்ளை என்பதை ஒவ்வொருகணமும் கண்டு கொண்டிருந்தும் மனம் தளர்ச்சி அடைகிறதே!

 

சகோதரிகளே, கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரே தந்தை, அவரே தாய். தம் குழந்தைகளை அவர் ஒருபோதும் பிரிவதில்லை. ஒருபோதும்  பிரிவதில்லை. இல்லை, இல்லை விசித்திரக்கொள்கையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கித்தள்ளி விட்டு, குழந்தைகளாகி அவரைப் புகலிடமாகக் கொள்ளுங்கள். இதற்கு மேல் என்னால் எழுத முடியாது. ஒரு பெண்ணைப்போல் நான் அழுது கொண்டிருக்கிறேன், எபகைவனுக்கும்ன் ஆன்ம நாயகனே! என் இறைவா! நீவாழ்க! வாழ்க! என்று தமது உள்ளத்து உணர்ச்சிகளை எல்லாம் கொட்டி ஹேல் சகோதரிகளுக்கு எழுதினார் அவர்.

 

பகைவனுக்கும் இரங்கும் மனம்.

 

 சொந்த நாட்டினராக இருந்தும், தொல்லைகள் கொடுத்த மஜும்தாரைக்கூட சுவாமிஜி ஒருபோதும் வெறுக்கவில்லை. விருப்பு வெறுப்பற்ற மகானாகவே என்றும் திகழ்ந்தார் அவர். அமெரிக்க மக்களைப் புரிய வைப்பதற்காகச் சில கூட்டங்களும் புகழ்மொழிகளும்  தேவைப்பட்டபோது அதனைச் செய்யுமாறு  இந்தியர்களைத் தூண்டினர். எதிர்பார்த்ததை விட அதிகமாக இந்தியாவில் நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது  அன்னையின் அருளை எண்ணி நெகிழ்ந்தனர். அப்போது தான் ஜுலை மாதம் மஜும்தாரின் ஒரு நூல் வெளிவந்தது. அதைப்பற்றி மேரி ஹேலுக்கு எழுதினார். எனது நண்பர் மஜும்தாரின் நூலை பத்திரிகை புகழ்ந்து எழுதியிருந்ததைக்கண்டேன். அவர் பெரியவர், நல்லவர், சொந்த நாட்டு மக்களுக்காக எவ்வளவோ செய்தவர், தம்மை இகழ்ந்து, தமது நடத்தையைப்பற்றி அவதூறு பரப்பிய ஒருவரைப் பாராட்ட எவ்வளவு பரந்த மனம்வேண்டும்.

 

 ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து அத்தகைய பாடத்தைத்தானே பெற்றிருந்தார் சுவாமிஜி! ஒரு முறை ஸ்ரீராமகிருஷ்ணர் இளம் நரேனிடம் , கடவுளில் வாழ்பவர்களைச் சிலநேரங்களில் உலகியல் மக்கள் குறைகூறுவார்கள். கேலி பேசுவார்கள். யானை கம்பீரமாக நடந்து செல்லும். பின்னால் தெரு நாய்கள் குரைத்த படியே ஓடும். யானை அவற்றை சிறிதாவது பொருட்படுத்துமா?  என் மகனே, ஒருவேளை  உன்னைப் பலர் பின்னாலிருந்து அவதூறு பேசுவதாக வைத்துக்கொள். அவர்களை நீ என்ன செய்வாய்? என்று கேட்டார். அதற்கு நரேன் குரலில் வெறுப்பு தொனிக்க. அதே தான், தெரு நாய்கள் என் பின்னால் குரைக்கின்றன என்று நான் ஒதுங்குவேன் என்றார்.ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்துவிட்டு, வேண்டாமப்பா. அந்த அளவிற்குப்போகாதே! எல்லோரிலும் கடவுள் அல்லவா இருக்கிறார்! அசையும் பொருள், அசையா ப்பொருள் அனைத்திலும் அவரே விளங்குகிறார். எனவே அனைத்திற்கும் உரிய மரியாதை கொடுக்கவேண்டும் என்றார் சுவாமிஜி அதையே செய்தார்.

 

 என்னைப் புரிந்து கொள்ளாததற்காக பாதிரிகளையோ மற்றவர்களையோ நான் குறை சொல்ல மாட்டேன். ஏனெனில் பெண்ணையோ, பணத்தையோ சிறிதும் பொருட்படுத்தாத ஒரு மனிதனை அவர்கள் கண்டதே இல்லையல்லவா? அது சாத்தியம் என்றே முதலில் அவர்கள் நம்பவில்லை. எப்படி நம்புவார்கள்? பிரம்மச்சரியம், தூய்மை இவற்றைப்பற்றி மேலை நாட்டினரின் கருத்துக்கள் இந்தியர் களின் கருத்தைப்போன்றதே என்று எண்ணிவிடக் கூடாது. என்று எழுதுகிறார் அவர்.

 

 இறைவனைப் போலவே தர்மத்தையும் நம்பியவர் அவர். தர்மத்தின் வழி நடப்பவனை தர்மம் காக்கிறது. என்பதையும் அறிந்தவர் அவர். எனவே அவர் எதற்கும் அஞ்சவோ தயங்கவோ இல்லை. தர்மம் அவரைக் கைவிட வில்லை. பாதிரிகள் , மற்ற அனைவரின் எதிர்ப்புகளையும் மீறி மக்கள் சுவாமிஜியை நாடவே செய்தார்கள். அதே கடிதத்தில் சுவாமிஜி தொடர்கிறார்.

 

மக்கள் இப்போது என்னைச்சுற்றி அதிகமாகக் கூடுகிறார்கள். உடல் ஆசைகளை உண்மையிலேயே அடக்கியாளக்கூடிய மனிதர்கள் உள்ளார்கள் என்பதை இப்போது நூற்றுக்கணக்கானோர் பூரணமாக நம்புகின்றனர். இந்தக் கருத்துக்களில் மக்களின் பக்தியும் சிரத்தையும் அதிகரித்து வருகின்றன. காத்திருப்பவனுக்கு  எல்லாம் வந்து சேர்கின்றன.

 

தம்மை எதிர்த்த மிஷனரிகளையும் பாதிரிகளையும் சுவாமிஜி இவ்வாறு ஓர்  உயர்ந்த கண்ணோட்டத்தில் பார்த்தார். அது மட்டுமல்ல. அவர்கள் தரும் தொல்லைகளும் தாம் கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக  மாற்றிக்கொள்கின்ற பக்குவம் படைத்தவராக இருந்தார் அவர். ஒரு சமயம் அவர் ஒரு மிஷனரியின்  அறையிலே தங்கநேர்ந்தது. அந்த அன்பர் முதலில் சுவாமிஜியின் நண்பராக இருந்து, பிறகு மிஷனரியாக மாறியவர். அவர் ஒரு மிஷனரி என்பதால் சுவாமிஜியின் கருத்துக்கள் அவரை மிகவும் வெறுப்படையச்செய்தன. அந்த வெறுப்பை அவர் சுவாமிஜியிடம் வெளிப்படையாகவே காட்டினார்.

 

 அதைப்பற்றி நண்பர் ஒருவர் சுவாமிஜியிடம், சுவாமிஜி, உங்களுக்குத்தொந்தரவு கொடுக்கின்ற, உங்களை வெறுக்கின்ற ஒருவருடன் நீங்கள் ஏன் தங்கியிருக்க வேண்டும்? என்று கேட்டார்.

 

 அதற்கு சுவாமிஜி சிரித்துக்கொண்டே, ஓ! என்னை நான் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக அவர் எனக்கு வாய்ப்பு அல்லவா தருகிறார்! கடவுள் அவருக்கு அருள் புரியட்டும்! என்றார்.-

 


No comments:

Post a Comment