Sunday, 14 June 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-60

வகுப்பு-60  நாள்-18-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

மூன்றுவிதமான தவங்கள்

-

2.வாக்கால் செய்யும் தவம்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

17.15 துன்புறுத்தாத உண்மையும், இனிமையும்,

நலனுடன்கூடிய வார்த்தை மற்றும் வேதம் ஓதுதல்,

இது வாக்குமயமான தபம் என்று சொல்லப்படுகிறது

-

வார்த்தையிலிருந்து சக்தி வெளிப்படுகிறது.

சிலரிடம் எந்த சக்தியும் இருக்காது.அவர்கள் கூறும் அழகான வார்த்தைகளைக்கூட யாரும் கேட்க விரும்ப மாட்டார்கள்.

ஆனால் சிலர்பேசும் மிக சாதாரண வார்த்தைகூட பலரால் விரும்பி கேட்கப்படுகிறது.

இதற்கு காரணம் சக்தி.

ஒவ்வொருவரும் சக்தியை சேமித்து வைத்திருக்கிறோம்.

இது வார்த்தை மூலம் நம்மிடமிருந்து இன்னொருவருக்கு செல்கிறது.

எனவே என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

-

புகழ்பெற்ற மனிதர் ஒருவர் தவறான வார்த்தையை பேசினால் அதை பலர் கண்டிப்பார்கள்.

அதே வார்த்தையை சாதாரண மனிதர் பேசினால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

தீயவனை கண்டிக்கும்போதுகூட கவனமான வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும்.

ஒரு துறவி, சில குடிகாரர்களை கடுமையாக திட்டினார்.இதனால் கோபமுற்ற குடிகாரர்கள் துறவியை கடுமையாக தாக்கி கொன்றுவிட்டார்கள்.

குடிகாரர்களை எல்லோரும் திட்டுகிறார்கள்,ஆனால் அதை குடிகாரர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் ஆற்றல்மிக்க நபர்கள் பேசும் சில வார்த்தைகள் அவர்களை பெரிதும் தாக்குகிறது.

 

எனவே உண்மைபேச வேண்டும்.அதையும் இனிமையாக பேச வேண்டும். சமுதாயத்தை திருத்துவதாக நினைத்து கடினமான வார்த்தைகளைப் பேசக்கூடாது.அப்படி பேசினால் அது தனக்கே துன்பமாக அமையும்.

-

வேதம் ஓதுதல்

-

வார்த்தைகளை சரியான ஒலியில் ஓதுவதன் மூலம் குண்டலினி சக்தியை கீழிலிருந்து மேல்நோக்கி கொண்டு செல்லும் வித்தையை கற்றுத்தருகிறது

தமிழ் மொழிக்கும், சமஸ்கிருதத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு இது.

சமஸ்கிருத எழுத்து ஒலிகள் குண்டலினி சக்தியின் பல்வேறு மையங்களிலிருந்து எழுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

முறையாக அதை ஓதும்போது மேல் உலகத்தில் வாழும் தெய்வங்கள்கூட அந்த ஓசைக்கு மயங்கிவிடும்.

 

தமிழ் மொழியிலும் அதேபோல உருவாக்க முடியும்.

இங்கே மொழி முக்கியம் அல்ல. ஓசைதான் முக்கியம்

அருணகிரிநாதர் பாடும்போது தேவி அதில் மயங்கியதாக படிக்கிறோம்.

மகான்கள் பாடும்போது தெய்வங்கள் அதை கேட்க ஆவல்கொள்வதை தமிழ் இலக்கியங்களில் படிக்கிறோம்

முறையான லயத்துடன் எழும் ஓசைக்கு எல்லா உயிர்களும் மயங்குகின்றன.

 

ஓசை என்பது அதிர்வு

அதிர்வை முறைப்படுத்தி. படிப்படியாக அதிர்வற்ற நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இதுதான் ரகசியம்

அப்படி செய்ய முடிந்தால் உலகமே ஸ்தம்பித்து நின்றுவிடும்.

மகான்கள் பாடும்போது வீசும் காற்றும்,மரங்களும்,செடிகளும்,ஆறுகளும்,விலங்குகளும் அசையாமல் அப்படியே நின்றது என்று படிக்கிறோமே.அது இப்படித்தான்.

எனவே வேதம் ஓதுவது என்பது ஒலியை சரியாக உச்சரிப்பது.

வாத்தியங்களை இசைப்பதன் மூலமாகவும் இதை செய்யலாம்.

குரலை ஏற்றி இறக்கி பாடுவதன் மூலமும் இதைச் செய்யலாம்.


No comments:

Post a Comment