Sunday, 14 June 2020

இந்துமதம்-வகுப்பு-12

இந்துமதம்-வகுப்பு-12🕉️
நாள்--1-6-2020
..
இந்துக்களின் சாஸ்திரம்
..
வேதம் என்றால் அறிவு என்று பார்த்தோம். எந்தெந்த வழிகளில் எல்லாம் அறிவு கிடைக்கிறது?
..
1. பிரத்தியட்சம் - நேரடியாக கண்கள் மூலம் காணும் காட்சி.
.
2. அநுமானம் -நேரடியாகக் அனுபவிக்காவிட்டாலும் அனுமானத்தால் அறிந்துகொள்ளலாம். உதாரணமாக தீ இருந்தால் அங்கே வெப்பம் இருக்கும் என்று அனுமானிப்பது.
.
3. ஆப்தவாக்கியம் - நம்பிக்கைக்குரிய முன்னோர்கள் சொன்ன வார்த்தைகளை நம்புதல்
..
4. உபமானம் - ஒப்பிட்டு தெரிந்துகொள்வது.பொதுவாக இப்படித்தான் நடக்கும் என்ற பொதுப்புத்தி
..
5. அருத்தாபத்தி - நேரில் பார்க்காமல்,யாரும் கூறாமல் நாமாக ஒரு முடிவுக்கு வருவது. (உ) - பகலில் உண்ணாத ஒருவன் பருத்து இருக்கிறான் எனில் அவன் இரவில் உண்கிறான் என நேரில் காணாமேலேயே, யாரும் உரைக்காமல் பொருள் கொள்ளுதல்
..
6. அனுபலப்தி - எதிர்மறை நிரூபணம் மூலம் ஒரு உண்மையை அறிதல். ஒரு பொருள் .அதாவது, ஒரு பானையை இங்கே காண முடியவில்லை என்றால் இங்கே பானை இல்லை என்று பொருள். இப்படி அறியும் முறைக்கு அனுலப்தி என்று பெயர்
..
இந்த ஆறு வழிகளில் மனிதனுக்கு அறிவு ஏற்படுகிறது.
..
வேதங்களில் அறுதி உண்மையைப்பற்றி என்ன சொல்லியிருக்கின்றன என்பதை
பல்வேறு விதமாக ஆராய்ந்து தெளிந்து ஆறு தத்துவ ஞான பிரிவாக கூறப்படுபவையே ஆறு தரிசனங்கள்.
இவை பல்வேறு காலகட்டங்களில் உருவானவை.
1.சாங்கியம்
===========
சாங்கிய தரிசனத்தை முதலில் முறைப்படுத்தியவர் 'கபில முனிவர்'.
சாங்கியம் கூறும் மூல காரணம்
=============================
இப்பிரபஞ்சம் தோற்றத்திற்க்கு மூல காரணம் அறிவா? அல்லது பொருளா? என்ற கேள்விக்கு இரண்டுமே என சமநோக்கு பார்வை கொண்ட தரிசனம் சாங்கியம் ஆகும்.
சாங்கிய கோட்பாட்டின் படி அறிவு எனப்படுவது ஆக்கம், அழிவு, மாற்றம் இதற்கு அப்பாற்பட்டது, அதை முறையே 'புருஷன்' எனவும், அறிவற்ற ஆனால் இயங்ககூடியதான பொருட்கள் அனைத்தும் முறையே 'பிரகிருதி' எனவும் கொள்கிறது.
சாங்கியத்தின் 24 தத்துவங்கள்
1.பிரகிருதி
2.மஹத்
3.அகங்காரம்
4.மனஸ்
5-9.பஞ்சஞானேந்திரயங்கள்-5
10-14.பஞ்ச கர்மேந்திரியங்கள்-5
15-19.பஞ்ச தன்மாத்திரைகள்-5
20-24-பஞ்ச மகாபூதங்கள்-5
..
சாங்கியம் ஏற்கும் பிரமாணங்கள்
===============================
சாங்கியம் மூன்று பிரமாணங்களை அடிப்படையாக கொண்டது அவை பிரத்தியட்சம், அநுமானம் மற்றும் ஆப்த வாக்கியம் ஆகும். சாங்கியம் கடவுள் இருப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் ஆப்தவாக்கியத்தை ஒரு பிரமாணமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
.
சாங்கிய தரிசனத்தின் தத்துவ மையம்
===================================
மாற்றம் அடையக்கூடிய பிரகிருதியும், மாற்றம் அடையாத புருஷனும் சேர்ந்த இணைப்பே இவ்வுலகம் தோன்றுவதற்க்கு, ஒடுங்குவதற்க்கும் மூலம் ஆகும். இம்மூலப்பிரகிருதியில் இருந்து இவ்வுலகம், இயற்கை எவ்வாறு தோன்ற முடியும் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் சாங்கிய கொள்கையே "சத்காரியவாதம்" ஆகும். மேலும், பிரகிருதியினால் உருவான இப்பொருட்கள் அனைத்து முக்குணங்களால் ஆனவை. அவை சத்வ, ரஜோ, தமோ ஆகும் இங்கு குணம் என்பது பகுதி என குறிப்பிடப்படுகின்றது. புருஷன் அறிவே சொரூபமான பேரறிவு ஆகும். இப்புருஷன் ஒன்று அல்ல பல வாகும். சாங்கிய தத்தவங்களின் படி புருஷன் செயலை புரிவதல்ல, அனுபவிப்பது மட்டுமே, இதனால் புருஷன் ஒரு போக்தா மட்டுமே. போக்தா என கருதப்படும் புருஷன் பிரகிருதியுடன் கொண்ட இணைப்பின் காரணமாக ஏற்பட்ட அறியாமையினால் இப்பிரகிருதியினால் உருவான உடலை தன் உடலாக நினைத்துக்கொள்கிறது இதனால் துயரங்களையும் அடைகிறது.
.
சாங்கியம் தரிசனத்தின் முடிவு
=============================
அறியாமையினால் போக்தாவாக பிரகிருதியினால் ஏற்பட்ட உடலை கொண்டு உயிராக இருக்கும் புருஷன் இதிலிருந்து விடுபட உயிராக இருக்கும் தனக்கும், உடலாக இருக்கும் பிரகிருதிக்கும் உள்ள வேறுபாட்டை பிரித்தறியே வேண்டும். இந்த விடுதலையே சாங்கியம் கூறும் முக்தியாகும்.
..
2.யோகம்
=========
யோக தரிசனம் முன்பே இருந்திருந்தாலும் இதை முதலில் வரையறுத்தவர் 'பதஞ்சலி முனிவர்'.
யோகம் கூறும் மூல காரணம்
============================
யோக தரிசனம் சாங்கிய தரிசனத்தின் நீட்சியாகவே கருதப்படுகிறது. இதை ஒருங்கே இணைத்து பார்ப்பதற்க்கான காரணம் அதன் அடிப்படை தத்துவங்களின் ஒற்றுமையே ஆகும். சாங்கிய தரிசனத்தின் அடிப்படை தத்துவமான "புருஷன்" மற்றும் "பிரகிருதி" இரண்டையும் ஏற்றுக்கொள்வதோடு முன்றாவதாக "ஈஸ்வரன்" எனும் "விசேஷ புருஷன்" ஒன்று உள்ளான் என்பதை ஏற்றுக்கொள்கிறது.
யோக தரிசனத்தின் தத்துவ மையம்
==================================
இங்கே யோகம் என்பது "பிரிதல்" எனும் பொருள் கொண்டது. அதாவது "புருஷன்" தன் நிலை மறந்து பிரகிருதியின் உடலில் இணைந்து இருப்பதால், பிரகிருதியை விட்டு பிரிந்து தன் நிலையை உணர்வதயே வலியுறுத்துகிறது. அதோடு ஈஸ்வரன் - விசேஷ புருஷன் என்ற தத்துவத்தையும் முன்னிருத்துகிறது. யோக தரிசனத்தை பொறுத்தவரை இறைவன் படைப்பவன் அல்ல, எல்லாம் அறிந்தவன் அதேபோல் பிரகிருதியின் படைப்புக்கு துணை புரிபவன் மட்டுமே. "புருஷன்" பிரகிருதியின் இணைப்பில் அறியாமையால் இருப்பவன், "விசேஷ புருஷன்" அந்த இணைப்பில் ஒருபோதும் சேராமல் இருப்பவன்.
..
யோகம் கூறும் "அஷ்டாங்க யோக பயிற்சி"
========================================
சாங்கியம் புருஷன், பிரகிருதி என பகுத்தறிந்து அறியும் ஞானம் முக்திக்கு வழிவகுக்கும் என கூறுகிறது. யோகம் ஞானத்தோடு அந்த முக்திக்கான பயிற்சியையும் அளிக்கிறது. இதற்க்கு எட்டு விதிகள் வகுத்தது அதுவே
"அஷ்டாங்க" யோகம் ஆகும். ,
1.யமம்,
2.நியமம்,
3.ஆசனம்,
4.பிராணாயாமம்,
5.பிரத்தியாகாரம்,
6.தாரணம்,
7.தியானம்,
8.சமாதி என்பதாகும்.
.
யோக தரிசனத்தின் குறிக்கோள்
==============================
சித்தி, சுத்தி ஏற்பட்டு நான் எனும் நினைவை ஒழித்தலே யோகம் கூறும் தியானம் ஆகும். அதற்கான பயிற்சியாக அஷ்டாங்க யோகத்தினை கடைபிடிப்பதால், புருஷன் தன் நிலை உணர்ந்து பிரகிருதியின் தளையிலிருந்து விடுபட்டு சமாதி நிலையின் "உறக்கம் அற்ற உறக்கம்" எனும் உணர்வை அடைகிறது. அந்த உணர்வை அடைய "விசேஷ புருஷன்" எனும் "ஈஸ்வரன்" துணைபுரியும். இதுவே யோகம் கூறும் "ஜிவன் முக்தி" யாகும்
..
3. வைசேஷிகம்
==============
அணு தத்துவம் பேசும் வைசேஷிகம் தரிசனத்தை முறைபடுத்தி இயற்றியவர் கணாத முனிவர் ஆவர். இன்று, அணு தத்துவத்தை முதலில் பேசுபவர்களாக கருதப்படும் 2ம் நூற்றாண்டு கிரேக்க ஞானிகளை விட காலத்தால் முந்தியவர் கணாத முனிவர். அணுக்களின் இரட்டைத்தன்மை, கோள வடிவம், காலம்-இடம் தொடர்பை பேசும் ரிலேட்டிவிட்டி தியரி போன்ற கருத்துக்களையும் வைசேஷிகம் எடுத்துரைப்பது விசேஷம்.
.
வைசேஷிகம் கூறும் மூலக்காரணம்
==================================
மெய்மைவாதம் ஏற்கும் வைசேஷிகம் பல்வேறு இயல்புகளை உடைய இப்பிரபஞ்சம், உலகம் தோற்றத்திற்க்கு மூலப்பொருள் ஒன்று அல்ல பல என கூறுவது இயல்பானது. இந்த மூலப்பொருள் என்ன என்ற கேள்விக்கு விடையாக வைசேஷிக தரிசனம் கூறுவது "அணு" மற்றும் "பரமாணு" ஆகும். அணு அழியாதவை. அணுக்களே பொருள், உலகம் முதலிய அனைத்தையும் ஆக்கியும் அழிப்பனவையும் ஆகும். இவை பற்றி அறிந்துகொள்ள வைசேஷிகள் ஏற்கும் பிரமாணங்கள் இரண்டு அவை பிரத்தியட்சம் மற்றும் அநுமானம் ஆகும்.
.
வைசேஷிக தரிசனத்தின் தத்துவ மையம்
=======================================
ஒவ்வொரு பொருளுக்கும் பிரிபடாத நிலை என்ற ஒன்று உண்டு அதுவே அணுவாகும். இவ்வணுக்கள் பலவாகும். இவ்வணுக்களின் கூட்டுத்தொகையே அனைத்து பொருட்களுக்கும் ஆதாரமாகும். இத்தொகைக்கு ஏற்ப பொருட்களின் அளவும் வேறுபடும் என கூறுகிறது. இங்ஙகனம் அணுக்கள் பலவும் ஒன்று சேர்வதும், பிரிவதும், உற்பத்தி ஆவதும், அழிவதும் என அது இயங்குவது எவ்வாறு எனும் கேள்விக்கு வைசேஷிகள் கூறிய விடை "அதிர்ஷ்டம்" எனப்படும் அணுக்களின் தனிப்பட்ட விசேஷமான இயக்கம் என்பதாகும். பிற்காலத்தில் அறிவற்ற அதிர்ஷ்டம் எவ்வாறு அறிவார்ந்த இயக்கத்திற்க்கு காரணம் என்ற கேள்விகள் எழும்பியபோது அந்த விசேஷ இயக்கத்தின் காரணம் "ஈஸ்வரன்" என்ற பதிலை முன்வைத்தது.
.
வைசேஷிக தரிசனத்தின் ஒன்பது திரவியங்கள்
============================================
மூலப்பொருள் அணு என்றும் அவை பல என்றும் கூறும் வைசேஷிக தரிசனம். இவ்வுலகம் தோற்றத்திற்க்கு தேவைப்படும் கருப்பொருள்களை "திரவியம்" எனவும் அவை ஐம்பூதங்கள், காலம், இடம், மனம், ஆத்மா என்பதாகும்.
.
வைசேஷிக தரிசனத்தின் குறிக்கோள்
===================================
ஆத்மா தன் மனதின் செயல்பாட்டால் உடலோடு தொடர்பு கொண்டுள்ளது. தன் அறியாமையினால் செய்யப்படும் செயல்களின் பலனாக நல்வினை மற்றும் தீவினை என இரண்டையும் அனுபவிக்கிறது. இதிலிருந்து விடுபட தன் செயல்களை நிறுத்துவதினாலும், ஏற்கனவே செய்த செயல்களின் பலனாக விளைந்த நல்வினை, தீவினை முடிப்பதினாலும், ஆன்மாவுக்கு "விடுதலை" கிடைக்கும் என்பதே வைசேஷிகள் கூறும் முடிவாகும்
..
4.நியாயம்
==========
எந்த ஒரு உண்மையையும் விளக்க அதை முதலில் தர்க்க ரீதியாக சரியாக தர்கிக்க வேண்டும். அலசி ஆராயந்து அணுகவேண்டும். இதற்கான கோட்பாட்டை முன்னெடுத்தவர் கெளதம மகரிஷி ஆவார்.
.
நியாயம் கூறும் அம்சங்கள்
========================
தர்க்க ரீதியாக அணுக வேண்டிய அறிவு நிகழ்வதற்க்கு கீழ்காணும் அம்சங்கள் இன்றியமையாதவை. அவை,
.
1. அறிய வேண்டிய "அறிபவன்" - பிரமாதா
.
2. அறிபவன் அறிய வேண்டிய பொருள் - "அறிபொருள்" - பிரமேயம்
.
3. அறிபடும் பொருளை அறிந்துகொள்ள அறிபவனுக்கு வேண்டிய அறிவை தரும் வழிகள் - பிரமாணம்
.
4. ஆராயும் அறிவு - பிரமிதி
.
இதில் நியாய தரிசனம் பிரமாணத்தை முன்னிலை படுத்துகிறது. காரணம் அறிவை தரும் வழிகள் சரியானதாக இருந்தால்தான் அதனை ஆராயும் பிரமிதி சரியான முடிவை தரும் என்பதே, இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பிரமாணம் மொத்தம் ஆறு ஆகும். அதில் நான்கு பிரமாணங்களை மிக முக்கியமாக நியாய தரிசனம் ஏற்றுக்கொள்கிறது. [ பிரமாணங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.]
.
நியாய தரிசனத்தின் தத்துவமையம்
================================
வைசேஷிக தரிசனத்தின் அணுக்கொள்கையை ஏற்பதுடன் இறைவன் இருப்பை தர்க்க ரீதியாகவும் வலியுறுத்துகிறது நியாய தரிசனம். எப்படி உலக தோற்றத்திற்க்கு அணு காரணமாக இருக்கிறதோ அதே போல் அந்த அணுக்களின் இயக்க காரணமாக 'ஈஸ்வரன்' இருப்பதை தெளிவுபடுத்துகிறது நியாய தரிசனம். அணுக்கள் போலவே 'ஈஸ்வரன்' நிரந்தரமானது. வைசேஷிகம் கூறும் திரவியங்களை தோற்றுவிக்கவில்லை ஆனால் இயக்ககூடிய பேரறிவாக 'ஈஸ்வரன்' இருப்பதை ஒன்பது சான்றுகளாக கூறி தர்க்கரீதியாக வாதிடுகிறது.
.
ஈஸ்வர இருப்புக்கான 9 சான்றுகள்
=================================
நியாயம் கூறும் ஈஸ்வர இருப்புக்கான சான்றுகள் 9 ஆகும் அவை கார்யாத் (விளைவு), அயோஜனாத் (அணு சேர்க்கை), த்ரிதே (பிரபஞ்சம் இருப்பை தாங்குவது), பதாத் (வாக்கு), பிரத்யதஹ் (நம்பிக்கை), ஸ்ருதே (வேதம்), வாக்யாத் (வேத கூற்று), சங்க்யாவிசேஷாத் (விசேஷ எண்கள்), அதிருஷ்டாத் (கர்ம பலன்) என்பனவாகும். இக்காரணங்களை வைத்தே ஈஸ்வர இருப்பை நிலைநிறுத்துகிறது நியாய தரிசனம்.
.
நியாய தரிசனத்தின் குறிக்கோள்
==============================
தர்க்க ரீதியாக அணுகும் நியாயம் தரிசனம் அறிவே ஆன்மா என்கிறது. அந்த அறிவை மழுங்க செய்யும் உலகப்பொருட்களிலிருந்து விடுபட்டு எல்லாவற்றையும் அறிந்த பேரறிவாக கூறப்படும் ஈஸ்வர நிலையை சார்வதே நியாயம் கூறும் முக்தியாகும்.
..
5. பூர்வ மீமாம்சம்
=================
மீமாம்சை தரிசனங்கள் இரண்டு ஆகும். அவை பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை ஆகும். அதில், வேத பிரமாணத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதே பூர்வ மீமாம்சை. வேதம் ஆராய்வுக்கு அப்பாற்ப்பட்டது என்றும் அதற்க்கு கொடுக்கம் விளக்கம் ஆராய்வதற்க்குரியது என விளக்கங்களை அலசுவதே சரியான வழியாகும் என எடுத்துரைப்பதே "பூர்வ மீமாசை" நூலான "மீமாம்ச சுத்திரம்" இதனை இயற்றியவர் ஜைமினி முனிவர் ஆவர்.
.
கர்ம மார்க்கம்
=============
வேதம் தெய்வீகமானது என முன்னிறுத்தும் பூர்வமீமாசை தரிசனம். வேதம் மூலமாக அறியும் ஞானத்தை விட, அதில் சொல்லப்பட்டுள்ள தர்மத்தையே முக்கியமானதாக கருதுகின்றது. உயிர்கள் நல்ல பலன்களை அடையவேண்டி கிரியை கள், சுவர்க்கம் பூக வேண்டி செய்ய வேண்டிய கிரியைகள், யாகங்கள் அதன் பலன்கள் என கர்மத்தை முன்னிறுத்துவதால் இத்தரிசனத்தை "கர்ம காண்டம்" என்றும் கூறுவர்.
.
பூர்வ மீமாம்ச தரிசனத்தின் தத்துவ மையம்
=========================================
உலகம் உருவான விதம் பொறுத்தமட்டில் பூர்வ மீமாம்சம் தரிசனம் வைஷிக தரிசனத்தின் கோட்பாட்டை கொண்டதாகும். அதிலும் வேத வாக்கின்படி கண்ணுக்கு புலனாகும் மூவினை கோட்பாடு வரையே ஒப்புக்கொள்ளும். முந்தைய தரிசனங்கள் போல ஆன்மா நித்தியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறது. பூர்வ மீமாம்ச தரிசனம் வேதம் நித்தியமானது என சொன்னாலும், இறைவன் கொள்கையில் உண்டா? இல்லையா? என்பதை பற்றி ஏதும் விவரிக்கவில்லை. ஆனால், கன்மத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது என்பதனை துன்பத்திற்க்கு காரணம் ஆன்மாக்களின் செய்த கன்மங்களே என கூறுவதில் தெரிந்துக்கொள்ளலாம்.
.
பூர்வ மீமாம்சை குறிக்கோள்
===========================
வேதம் "அபெளருஷ்யத்துவம்" அதாவது யாராலும் இயற்றப்படமுடியாதது என கூறுகிறது. அதனால் வேதத்தில் சொல்லப்படும் தர்மத்தையும், சடங்குகளையும் பின்பற்றுவதே ஆன்மாவின் கடமையாக கூறுகிறது. அக்கடமையை தவறாமல் செய்வதால் நரகத்தை அடையாமல் சொர்க்கத்தை அடைவதே குறிக்கோள் என வலியுறுத்துகிறது. உலக பந்ததிற்க்கு கன்மமே காரணம் எனில் கன்மம் செய்து முக்தி அடைவது எப்படி என்ற கேள்விக்கு பூர்வ மீமாம்சை 3 வித கன்மங்களை கூறுகிறது அவை, காமிய கன்மம், பிரதிசித்த கன்மம் மற்றும் நித்திய கன்மம் ஆகும். இதில் முக்தி அடைய முதல் இரண்டு கன்மங்களாஅன காமிய மற்று பிரதிசித்த கன்மத்தை விடவேண்டும், அதோடு நித்திய கன்மத்தை விடாமல் செய்தால் முக்தி கைக்கூடும் என்று பதில் அளிக்கிறது.
--
6. உத்தர மீமாம்சை (எ) வேதாந்தம்
=================================
பூர்வ மீமாம்சை மற்றும் உத்தர மீமாம்சை இவை இரண்டும் வேதத்தின் இரு பெரும் பிரிவுகளை வைத்துதான். அதில் முந்தைய பிரிவான பிரமாணங்களை ஆதாரமாக கொண்டு எழுந்தது பூர்வ மீமாம்சை. பிந்தைய பிரிவான உபநிடதங்களை ஆதாரமாக கொண்டு எழுந்தது உத்தர மீமாம்சை. வேத உபநிடத கருத்துக்கள் அனைத்தும் கொண்டு வர எண்ணி சுருக்கமாகவும் எழுதப்பட்டதே "பிரம்ம சூத்திரம்" ஆகும்.
.
ஞான மார்க்கம்
===============
பாதராயணர் வேதாந்த சுத்திரத்தில் மூலப்பொருள் ஒன்றே என நிலைநாட்டுகிறார். வீடுபேற்றை பெற முக்கிய்மானது கன்மமா? ஞானமா? என்பதில் பூர்வ மீமாம்சை கன்மம் முக்கியம் என்கிறது. இதற்க்கு மாறாக உத்தர மீமாம்சை ஞானமே முக்கியம் என்கிறது.
.
வேதாந்தத்தின் தத்துவ மையம்
==============================
பிரம்மத்திற்க்கு இருநிலை இருப்பதாக கூறுகிறது. அதாவது, குணத்தை கடந்த நிலை "நிர்க்குண பிரம்மம்" என்றும், குணத்தோடு சேர்ந்து இருக்கும் நிலை "சகுண பிரம்மம்" என்றும் வழங்கப்படுகிறது. இந்த இருநிலைகளின் வேறுபாட்க்கு காரணம் "மாயை". மாயையினால் பிரம்மத்திற்க்கு எந்த பாதிப்பும் இல்லை. பிரம்மத்தை ஜீவர்களாக தோன்ற காரணம் "அவித்தை". வித்தை என்றால் அறிவு, அவித்தை என்றால் அறியாமை. அவித்தையால் பாதிக்கப்பட்ட நிலையே ஜீவர் கள் எனவும், ஜீவாத்மா எனவும் வழங்கப்படுகிறது.
.
வேதாந்ததின் தத்துவ பிரிவுகள்
==============================
விரிந்து கிடந்த வேத, உபநிடத கருத்துக்களை சுருக்கி விளக்கப்பட்டதே "பிரம்ம சூத்திரம்" என பார்த்தோம். பிரம்ம சூத்திரம் சுருக்கி எழுதப்பட்ட காரணத்தினால் அதை புரிந்துகொள்ள பெரும் விளக்கங்கள் கொடுக்க வேண்டியதாயிற்று. அப்படி எழுதியதின் விளைவுதான் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் போன்ற தத்துவ விளக்கங்கள் உருவான காரணமாகும். இவ்வுருவாகிய விளக்கங்கள் இன்று பல பிரிவாக இருக்கின்றன. உதாரணமாக - வடகலை, தென்கலை.
.
உத்தர மீமாம்சை குறிக்கோள்
============================
அவித்தையால பாதிக்கப்பட்டதும், மூன்று குணங்களை கொண்டதுமான ஜீவர்கள் என்கிற ஜீவாத்மாக்கள் இதிலிருந்து விடுபட்டு தெளியும் நிலையே மோட்சமாகும். ஏகேமாயான அந்நிலையை அடைய ஞானமே முக்கிய வழியாகவும் கூறுகிறது. ஞானத்தை அடைய அஞ்ஞானத்தினால் அல்லல்படும் ஜீவாத்மாக்கள் அதை விடுபட்டு ஞானத்தை அடைய தர்மம், நல்லொழுக்கம், இறைவழிபாடு துணையாக உறுதுனை செய்யும் என விளக்கம் கொடுக்கிறது உத்தர மீமாம்சை எனப்படும் வேதாந்த தரிசனம்.

No comments:

Post a Comment