சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-8
🌸
அன்னை பராசக்தியிடம்
பிரார்த்தனை செய்ததும் என் கஷ்டங்களுக்கு விடிவுகாலம் வந்துவிடும் என்று திடநம்பிக்கை
உண்டாயிற்று. பேராவலுடன் இரவுக்காக காத்திருந்தேன். ஒரு வழியாக இரவு வந்தது. ஒன்பது
மணி அளவில் ஸ்ரீராமகிருஷ்ணர் என்னைக்கோயிலுக்குப்போகச் சொன்னார்.போகும் போதே ஒரு வித
தெய்வீக போதை என்னை ஆட்கொண்டது. கால்கள் தடுமாறின. உண்மையிலேயே அன்னை பராசக்தியைப்
பார்க்கப் போகிறோம், அவள் பேச்சை க்கேட்கப் போகிறோம் என்ற திடநம்பிக்கைமனத்தில் எழுந்தது.
நான் மற்ற எல்லாவற்றையும் மறந்தேன். அந்த எண்ணத்தில் கரைந்தேனயிலுக்குச் சென்றேன்.
அங்கே சென்றபோது காளிதேவி நின்றாள்! அன்பின் வற்றாத ஊற்றாக, எல்லையற்ற அழகின் இருப்பிடமாக
உயிரோடும் உணர்வோடும் அவள் நின்றாள்!
அன்பாலும்
பக்தியாலும் என் இதயம் பூரித்தது. என்னை மறந்து மீண்டும் மீண்டும் அவளை வணங்கி, அம்மா,
எனக்கு விவேகத்தைக்கொடு, உன்னை இடையறாமல் தரிசிக்கும்
பேற்றினைக்கொடு, என்று பிரார்த்தித்தேன். மனம் அமைதியில் ஆழ்ந்தது. உலகம் அடியோடு மறந்தது.
காளி மட்டுமே என் இதயத்தில் நிறைந்திருந்தாள்!
நான் திரும்பி
வந்ததும் ஸ்ரீராமகிருஷ்ணர், என்னப்பா, வறுமை விலக அன்னையிடம் வேண்டிக்கொண்டாய் அல்லவா,?
என்று கேட்டார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
இல்லை, மறந்துவிட்டேன்,
இப்போது என்ன செய்யட்டும்? என்று கேட்டேன். அதற்கு அவர் , போ, போ, மீண்டும் போ. போய்
உன் குறைகளை முறையிட்டுவா” என்று கூறினார்.
நான் மறுபடியும்
கோயிலுக்குச்சென்றேன்.ஆனால் அன்னையின் திருமுன்னர் சென்றதும் அனைத்தும் மறந்து போயிற்று.
மீண்டும், மீண்டும் அவளை வணங்கி ஞானம், பக்தி முதலியவற்றை அருளுமாறு வேண்டிக்கொண்டு
திரும்பினேன். என்ன, இந்தத் தடவையாவது கேட்டாயா?
என்று ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்துக் கொண்டே கேட்டார்.
எனக்குப்
பேரதிர்ச்சியாகி விட்டது.
இல்லை, அன்னையைக்
கண்டதும் ஏதோவொரு தெய்வீக சக்தியின் காரணமாக அனைத்தையும் மறந்துவிட்டு ஞானம், பக்தி
ஆகியவற்றை நல்கும்படி மட்டும் தான் வேண்டிக்கொண்டேன். இப்போது என்ன செய்வது? என்றுகேட்டேன்.
அதற்கு அவர், என்ன அசட்டுத்தனம்! சிறிதுநேரம் உன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு உனக்கு
வேண்டியதைக்கேட்க முடியவில்லையா! முடிந்தால் இன்னொரு முறை போ, என்று கூறினார். மூன்றாவது
முறையாகப்புறப்பட்டேன்.
ஆனால் சன்னிதியை
அடைந்த மாத்திரத்தில் சொல்லொணாத வெட்கம் என்னைப் பற்றிக்கொண்டது. எத்தகையதோர் அற்பப்பொருளை
வேண்டி அம்பிகையிடம் வந்திருக்கிறேன்,ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி கூறுவாரே, மாமன்னரின்
கருணையைப்பெற்று விட்டு அவரிடம் பூசணிக்காயைக்கேட்பது போல், என்று அதைப்போன்ற முட்டாள்
தனம் தான் இது!எவ்வளவு கீழான எண்ணம்! வெட்கத்துடனும் வேதனையுடனும் மீண்டும் மீண்டும் அன்னையை வணங்கி, அம்மா, எனக்கு
வேறெதுவும்வேண்டாம். ஞானத்தையும் பக்தியையும் மட்டும் தந்தருள்வாய்” என்று வேண்டினேன்.
கோயிலுக்குவெளியே
வந்தபோது, இவையெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணரின்
விளையாட்டு என்பது புரிந்தது. இல்லாவிட்டால்
ஒரு முறையல்ல, இரண்டு முறையல்ல , மூன்று மறையும், கொருள் வேண்டும் ” என்று பிரார்த்திக்காமல்
இருந்திருப்பேனா! எனவே அவரிடம் சென்று,நீங்கள் தான் இப்படி என்னை மறக்கச் செய்து விட்டீர்கள்!
என் தாயும் சகோதரர்களும் வறுமையின் பிடியிலிருந்து விடுபட நீங்கள் தான் அருள வேண்டும்.
என்று அவரை வற்புறுத்தினேன். அப்போது அவர், யாருக்காகவும் இப்படிப்பட்ட பிரார்த்தனை
செய்ய என்னால் இயலாது, என் வாயிலிருந்து அத்தகைய வார்த்தைகள் வராது. அதனால் தான் அன்னை
பராசக்தியிடம் நீ உனக்கு வேண்டியதைக்கேள், கிடைக்கும் என்று கூறினேன். உன்னால் அது
முடியவில்லை. உன் தலையில் உலகின் இன்பங்கள் எழுதப்படவில்லை. நான் என்ன செய்யட்டும்?
என்று கேட்டார். நான் அவரை லேசில் விடுவதாக இல்லை.. அப்படிச் சொல்லாதீர்கள், எனக்காக
பிரார்த்தனை செய்தேயாக வேண்டும். நீங்கள் கூறினாலே அவர்களின் துயரம் அகன்றுவிடும்,
என்ற திடநம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றேன். என் பிடிவாதத்தைக் கண்டு
அவர் , நல்லது! எளிய உணவிற்கும் துணி மணிகளுக்கும் அவர்களுக்குக் குறைவிருக்காது” என்றார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின்
மகிழ்ச்சி
காளியை ஏற்றுக்கொண்டு, அவளிடம் பிரார்த்தனை செய்தது
நரேந்திரரின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்ச்சி. அதில் ஸ்ரீராமகிருஷ்ணர் அளவற்ற
மகிழ்ச்சி அடைந்தார். மறுநாள் தட்சிணேசுவரம் சென்றிருந்த வைகுந்தர் இதைப்பற்றிக் கூறுவதைக்கேட்டால்
–ராமகிருஷ்ணரின் ஆனந்த மேலீட்டைப்புரிந்து கொள்ளலாம்.
பகலில் நான்
தட்சிணேசுவரம் சென்றேன். ஸ்ரீராமகிருஷ்ணர் கட்டிலில் அமர்ந்திருந்தார். நரேந்திரர்
வெளியே உறங்கிக்கொண்டிருந்தார். வேறு யாரும் இல்லை. ஸ்ரீராமகிருஷ்ணரின் முகத்தில் மகிழ்ச்சி
பொங்கியது. அவரை அணுகி வணங்கியவுடன் அவர் நரேந்திரரைச்சுட்டிக்காட்டிக்கூறினார். இதோ!
இவரைப்பார், மிகவும் நல்லவன். பெயர் நரேந்திரன்.
இதுவரை இவன் அன்னை பராசக்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நேற்று ஏற்றுக்கொண்டான். வறுமையில்
வாடுகிறான். எனவே அன்னையிடம் அனுப்பி பொன்னும் பொருளும் வேண்டிப் பிரார்த்திக்கச்சொன்னேன்.அவனால்
அதைக்கேட்க முடியவில்லை. அவமானமாக இருக்கிறதாம். கோயிலிலிருந்து திரும்பி வந்தவன்,
அவள் மீது ஒரு பாட்டு சொல்லிக்கொடுங்கள்” என்று கேட்டான். தாரா தேவி நீயே
அம்மா” என்ற பாடலைச்சொல்லிக்கொடுத்தேன். இரவு முழுவதும் அதையே பாடிக்
கொண்டிருந்தான். இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறான்(சிரித்துக்கொண்டு) நரேந்திரன் காளியை
ஏற்றுக்கொண்டு விட்டான்! நல்லது. அப்படித்தானே! என்று கேட்டார். குழந்தையைப்போல் அவர்
மகிழ்வதைக்கண்ட நான், ஆம், ஐயா! நல்லது தான்” என்று கூறினேன். சிறிது நேரம்
கழித்து, சிரித்துக் கொண்டே, நரேந்திரன் காளியை ஏற்றுக்கொண்டது பெரிய விஷயம் தானே!
என்று மீண்டும் கேட்டார். இவ்வாறு திரும்பத்திரும்பச்சொல்லி மகிழ்ந்தார்.
மாலை நான்கு
மணி அளவில் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருகில் நரேந்திரர் வந்து அமர்ந்தார். விடைபெற்று கல்கத்தாவிற்குத்
திரும்புவார் என்று தோன்றியது. அவரைக் கண்டவுடன் ஸ்ரீராமகிருஷ்ணர் பரவச நிலை அடைந்தார்.
அந்த நிலையிலேயே அவர் நரேந்திரரின் உடம்பைத் தடவினார். பின்னர் அவரது மடியில் சென்று
அமர்ந்து கொண்டு பேசினார். ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரை எவ்வளவு தூரம் நெருங்கியவராகக் கருதுகிறார் என்பது எனக்குப் புரிந்தது.
காளி வாழ்க்கையின்
மறுபக்கம்
காளி தேவியை நரேந்திரர் ஏற்றுக் கொண்டதை ஸ்ரீராமகிருஷ்ணர்
மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகக் கருதினார். ஏன்? காளி-மயானம் , சுற்றிலும் எரிகின்ற
பிணங்கள், பேய்களின் கோரத் தாண்டவம், நரிகளின் ஊளைச்சத்தம், விரித்த கூந்தல், ரத்தம் சொட்டத் தொங்கும் நாக்கு, மனிதத்
தலைகள் கோர்த்த மாலை, கையில் ரத்தம் சொட்டும் வாள், வெட்டப்பட்ட தலை, சிவபெருமானின்
மார்புமீது நிற்கின்றகோலம்,-இது அவளது தோற்றம்! வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டுகின்ற
ஒரு சின்னமாக விளங்குகிறாள்,அவள். இன்பமும் இதமும் இனிமையும் அழகும் ஆனந்தமும் மட்டும்
கலந்தது அல்ல வாழ்வு. வாழ்விற்கு மறுபக்கம் ஒன்று உள்ளது. துன்பமும் துயரமும் தீமையும்
கோரமும் அழுகையும் நிறைந்தது அது. அது எங்கிருந்து வந்தது? சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளிலேயே
அதனைக்கேட்போம்.
தீமை ஏன் உள்ளது? இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஒரே
வழி நன்மை., தீமை இரண்மையும் கடவுள் படைத்தார் என்று கொள்வதே.... இறைவன் எப்போதும்
நல்லவரேயானால். இந்தத் தீமையனைத்திற்கும் பொறுப்பாளி யார்? சாத்தான் என்று ஒரு பேர்வழி
இருப்பதாகக் கிறிஸ்தவரும் முகமதியரும் கூறுகின்றனர். இரண்டு பேர்வழிகள் செயல்படுவதாக எப்படிச்சொல்ல முடியும்? ஒருவர் மட்டுமே இருக்க
இயலும்... குழந்தையைச் சுடுகின்ற தீயே சமையல் செய்யவும் பயன்படுகிறது.
தீ நல்லது
என்றோ, தீயது என்றோ எப்படிச்சொல்வீர்கள்? அதைப் படைத்தவர் வேறுபட்ட இருவரென்று எப்படிச்சொல்ல
முடியும்? தீயதென்று சொல்லப் படுவதையும் படைத்தவர் யார்? கடவுளே! வேறு வழியில்லை! மரணத்தையும்,
வாந்திபேதி முதலிய தொற்று நோய்கள் அனைத்தையும் அவரே அனுப்புகிறார். ஆண்டவர் அத்தகையவரானால்
அவர் நல்லவரே. அவரே தீயவர். அழகுள்ளவரும் அவரே, பயங்கரமானவரும் அவரே, வாழ்க்கையும்
அவரே.மரணமும் அவரே. அத்தகைய கடவுளை வழிபடுவது எப்படி?
பயங்கரமானதை
உண்மையாகவே வழிபட ஆன்மா எப்படிக்கற்றுக்கொள்ளும் என்பதை நாம் அ அறிந்து கொள்வோம். அப்போதே
அந்த ஆன்மா அமைதி பெறும். உங்களுக்கு அமைதி இருக்கிறதா? நீங்கள் கவலைகளை விட்டு விட்டீர்களா? திரும்ர்ங்கள். முதலில் பயங்கரத்தை எதிர்கொள்ளுங்கள்.
முக மூடியைக் கிழித்தெறியுங்கள்.அதே கடவுள் அங்கிருப்பதைப் பாருங்கள். நன்மையாகத்தோன்றுபவரும்
தீமையாகத்தோன்றுபவரும் உருவக்கடவுளாகிய அவரே, வேறு ஒருவரும் இல்லை.
இந்த உண்மையை
அன்று நரேந்திரர் கண்டு கொண்டார். இது வாழ்க்கையைப்பற்றிய அவரது கண்ணோட்டத்தை, கடவுளைப்
பற்றிய அவரது கண்ணோட்டத்தை முழுமையாக்கியது. பின்னாளில் உலக குருவாகத் திகழஇருந்த அவரது
பார்வை பூரணத்துவம் பெற்றது. அதனால் தான் ஸ்ரீராமகிருஷ்ணர் அவ்வளவு மகிழ்ந்தார்.தமது
பணி பூர்த்தியாகி விட்டது என்ற எண்ணம் ஒருவேளை அவரது மனத்தில் இழையோடியிருக்கலாம்.
ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் என்னைக் காளியின் கைகளில் ஒப்படைத்தார். இதில் ஆச்சரியம் என்ன
தெரியுமா? இதன் பிறகு அவர் இரண்டு வருடங்கள் தான் உயிர் வாழ்ந்தார். அந்த நாட்களிலும்
அவர் உடம்பில் நோய்களால் பெரும் அவதிக்கு உள்ளாக்கியபடிதான் வாழ்க்கையைக் கழித்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு 6 மாதங்கள் கூட அவர் பூரண ஆரோக்கியத்துடன் வாழவில்லை என்று
பின்னாளில் விவேகானந்தர் கூறினார்.
இவ்வாறு
துயரம் என்ற ஓர் அலை எழுந்து நரேந்திரரைப் பூரண மனிதர் ஆக்கியது. வாழ்க்கையை முழுமையாக
ஏற்றுக்கொள்ள செய்தது.
சங்கம் மலர்கிறது
ஓங்கி வளர்ந்த
பெரிய மரம் பலருக்கும் நிழலளித்துக் காக்கிறது. ஆனால் அந்த நிழலின் கீழ் புதிய மரங்கள்
செழித்து வளர முடிவதில்லை. அந்த நிழலின் ஆதிக்கத்திலிருந்து
விடுபடும் போதே மற்ற மரங்கள் வளர முடியும். ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற தெய்வ மரமும் பல
இளம் கன்றுகளைத் தன் நிழலில் வளரச் செய்தது. ஆயினும் அவை செழித்தோங்கி வளர வேண்டுமானால் பெரிய மரம் தன் நிழலை
விலக்கிக்கொள்ள வேண்டும். அதற்காகத் திருவுளம் கொண்டார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
1884-இறுதியிலிருந்தே
ஸ்ரீராமகிருஷ்ணரின் உடல்நிலை சீர்கெடத் தொடங்கியிருந்தது. அவரது பெயர் கல்கத்தாவில்
பரவிவிட்டதால் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரை
நாடி வரத் தொடங்கினர். வந்த அனைவரிடமும் அவர் பேசினார்., ஆடினார்,பாடினார், பரவச நிலைகளில்
ஆழ்ந்தார். இவை அவரது உடல்நிலைக்குப் பாதகமானவை என்று டாக்டர்கள் எச்சரித்தும் அவர்
பொருட்படுத்தவில்லை. உலகின் துயரங்களில் துவண்டு வருகின்ற மக்களுக்கு ஒரு சிறிதாவது
தம்மால் ஆறுதல் கிடைக்கும் என்றால் அதற்காக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார்.
1885- கோடைக்காலம்
மிகவும் தீவிரமாக இருந்தது. எனவே ஸ்ரீராமகிருஷ்ணர் ஐஸ், சர்பத் போன்றவற்றை அதிகமாகக்குடித்தார். அதன் விளைவாக அவருக்குத்தொண்டையில்
வலி ஏற்பட்டது. ஒரு மாதத்தில் அந்த வலி அதிகமாகியது. டாக்டரை அழைத்து வந்தனர். அதிகம்
பேசுவதாலும், பாடுவதாலும், பரவச நிலைகளின் காரணமாகவும் தொண்டையில் ரத்தம் பாய்வத அதிகமாகியதால் அந்த வலி
ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அவற்றைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுரை கூறினார்.
நாட்கள்
செல்லச்செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது.ஸ்ரீராமகிருஷ்ணரின் பேச்சு, பாட்டு எல்லாமே
அதிகரித்தன. ஜீன் மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் திடீரென்று அவரது தொண்டையிலிருந்து
ரத்தம் கசியத் தொடங்கியது.
சாதாரண தொண்டைப்புண்ணாகத்
தான் இருக்கும் என்று கருதப்பட்ட அவரது நொய், அவ்வளவு சாதாரணமானதல்ல, என்று தோன்றியது.
பக்தர்கள் கவலைக்கு உள்ளாயினர். யாரை மையமாகக்கொண்டு நாம் ஆனந்தத்தில் மிதக்கிறோமோ
அவர் நம்மைவிட்டுச் சென்றுவிடுவார்் என்று தோன்றுகிறது.நான் சில நூல்களைப் படித்தேன்.
சில மருத்துவ நண்பர்களைக் கலந்தாலோசித்தேன். அவற்றின் உதவியுடன் பார்க்கும்போது, இந்தத்
தொண்டைப்ர்ண் பின்னாளில் புற்று நோயாக ஆவதற்கான சாத்தியக்கூறு உள்ளது” என்று கூறினார் நரேந்திரர்.
ஸ்ரீராமகிருஷ்ணருக்கு
த் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் முடிவு செய்தனர். தட்சிணேசுவரத்தில்
அதற்கான வசதிகள் இல்லை. எனவே கல்கத்தாவில் ஒரு வீடு வாடகைக்கு அமர்த்தப்பட்டது. அந்த
வீடு மிகவும் சிறியதாக இருந்தது. தட்சிணேசுவரத்தின் திறந்த வெளியில் வாழ்ந்து பழகிய ஸ்ரீராமகிருஷ்ணரால் அந்த வீட்டில் தம்மை அடைத்துக்கொண்டு
வாழ இயலவில்லை. எனவே சியாம் புகூர் என்ற இடத்தில் ஒரு வீட்டை ஏற்பாடு செய்தனர். பக்தர்கள்,
ஸ்ரீராமகிருஷ்ணரின் சிறந்த சிகிச்சைக்குத் தேவையான வசதிகளைச்செய்தனர். அன்னை ஸ்ரீசாரதாதேவி
பத்திய உணவைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இளம் சீடர்கள் ஸ்ரீராமகிருஷ்ணருடனேயே
தங்கி, அவருக்குப் பணிவிடை புரிந்து காத்து நின்றனர்.
காசிப்பூர்
ஸ்ரீராமகிருஷ்ணர்
சியாம்புகூருக்கு வந்து மூன்று மாதங்கள் ஆயின. மருத்துவர்களின் சிகிச்சையையும் அன்னையின் கவனிப்பையும் மீறி அவரது நோய் நாளுக்கு
நாள் தீவிரமாகியது. முன்பு ஏதோ பலனளித்துவந்த மருந்து களும் இப்போது பலனளிக்காமல் போயின. கல்கத்தாவின்
புழுதிமிக்க காற்றின் காரணமாகத்தான் இவ்வாறு நோய் தீவிரமாகிறது என்று முடிவு செய்த
டாக்டர்கள் , நகரப்பகுதியை விட்டு வெளியே காற்றோட்டமான இடத்திற்கு அவரை அழைத்துச்செல்வது
நல்லது என்று கூறினர். அதற்கேற்ப பக்தர்கள் காசிப்பூர் என்ற இடத்தில் தோட்ட வீடு ஒன்றை
வாடகைக்கு அமர்த்தினர்.
1885 டிசம்பர்
11-ஆம் நாள் அங்கே குடிபெயர்ந்தார் –ஸ்ரீராமகிருஷ்ணர்.
ராமகிருஷ்ண
சங்கத்தின் வரலாற்றில் அழியா இடம் பெற்றது காசிப்பூர். இங்கே ஸ்ரீராமகிருஷ்ணர் சுமார்
8 மாத காலம் தங்கியிருந்தார். அவரது ஈடிணையற்ற
வாழ்க்கையின் உச்சக்கட்ட நிகழ்ச்சிகள் இங்குதான் நடைபெற்றன. இங்கு தான் அவர் நரேந்திரரின்
வாழ்க்கைக்கு ஓர் உருக்கொடுத்து, இளைஞர்களை அவரிடம் ஒப்படைத்து, ராமகிருஷ்ண சங்கத்தின்
அஸ்திவாரத்தை அமைத்தார். இந்த எட்டு மாதங்களில் அவரது நோய் படிப்படியாக முற்றிக்கொண்டே
வந்து அவருடைய உடலை வெறும் எலும்பும் தோலுமாக ஆக்கியது. ஆயினும் கட்டுப்பாடுமிக்க அவரது
மனம் நோயையும் அதன் விளைவாக ஏற்பட்ட வலிமையும் ஒதுக்கிவிட்டது. அவர் இங்கே சீடர்களுக்கும்
பக்தர்களுக்கும் தேவைக்கேற்ப தனித்தனியாகவும் , சிலவேளைகளில் கூட்டமாகவும் பயிற்சி
அளித்தார். குறிப்பாக நரேந்திரரைத் தனிமையில் அழைத்து உபதேசித்தார்.சிலவேளைகளில் கதவு,ஜன்னல்களை
எல்லாம் அடைத்துவிட்டு அவருக்குப்போதனைகள் செய்தார். அவர் என்ன சொன்னார் என்பதை நரேந்திரர்
வெளியில் கூறவில்லை. ஆனால் அவரிடம் இளைஞர்களின் பொறுப்பை ஒப்படைப்பது பற்றியும் அவர்களை
எப்படிப் பயிற்றுவிப்பது போன்ற விஷயங்களைத்தான் அவர் கூறியிருக்க வேண்டும் என்று மற்ற
சீடர்கள் கருதினர்.
ஆசைகளை எரிப்போம்.
பக்தர்கள்
கூட்டம் அதிகரிப்பதும் ஸ்ரீராமகிருஷ்ணரின் செயல்பாடுகளும் ஓர் உண்மையை உணர்த்தின. அவர் அதிக நாள் வாழப்போவதில்லை
என்ற உண்மை தான் அது. 1886 ஆரம்பத்தில் ஒரு நாள் இரவு நரேந்திரர் இது பற்றி மற்ற இளைஞர்களுடன் பேசிவிட்டு படுக்கச்சென்றார். அவருக்குத் தூக்கம் வரவில்லை. தம்மைப்போலவே மூத்தகோபால், சரத், காளி, என்று ஓரிருவரும் விழித்திருப்பதைக்கண்ட
அவர் அவர்களையும் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் நடக்கத் தொடங்கினார். நடந்த படியே பேசினார்.
குரு தேவரின் நோய் தீவிரமாகிக்கொண்டே போகிறது. உடலை விட்டு விடுவெதென்று அவர் முடிவு
செய்துவிட்டதாகத் தோன்றுகிறது. அவருக்குச்சேவை செய்வதன் மூலமும், பிரார்த்தனை, தியானம்
ஆகியவை செய்தும் ஆன்மீக முன்னேற்றத்திற்காக இயன்ற அளவு இப்போதே பாடுபடுங்கள். அவர்
போன பிறகு வருந்திப் பயனில்லை. கடமைகளை யெல்லாம் முடித்துவிட்டுக் கடவுளை நாடலாம்,என்று
நினைப்பது முட்டாள்தனம். ஆசைகளை நாம் வேருடன் களைய வேண்டும்.
நரேந்திரர்
உணர்ச்சிப்பெருக்கில் நனைந்தவர்போல் தோன்றினார். சிறிது நேரம் பேசியபிறகு ஒரு மரத்தின்
அடியில் அமைதியாக அமர்ந்தார். அருகில் சில சுள்ளிகளைக்கண்ட அவர், நாம் நமது ஆசைகளை
எரிப்பதற்காக அக்கினி மூட்டுவோம், என்றார். எல்லோருமாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
நெருப்பு எரியத் தொடங்கியது. அந்த இரவின் இருளில் அக்கினியைச்சுற்றி அனைவரும் அமர்ந்தனர்.
தங்கள் ஆசைகளை எரிப்பதாகக் கருதி ஒவ்வொரு வரும் ஒவ்வொரு சுள்ளியாக அந்த நெருப்பில்
இட்டனர். அமைதியாக தியானத்தில் ஆழ்ந்தனர். அன்றைய இரவு அவர்களுக்கு ஒரு மாபெரும் இரவாக
அமைந்தது.
நரேந்திரரின்
மருத்துவ அறிவு
ஸ்ரீராமகிருஷ்ணரின்
இறுதி நாட்கள் இவை, என்று நரேந்திரர் கூறியது வெறுமனே அல்ல, அவருக்கு மருத்துவத்திலும் ஆழ்ந்த அறிவு இருந்தது. அந்த அறிவின் அடிப்படையிலேயே
அவ்வாறு கூறினார். குருதேவரின் நோய் விஷயமாகக் கலந்தாலோசிப்பதற்கு அவர் ஒரு நாள் டாக்டர்
மகேந்திர லால் சர்க்காரைக் காண ச்சென்றார். இவர் ஸ்ரீராமகிருஷ்ணருக்குச் சிகிச்சை செய்து
வந்தவர். மிகவும் பிரபலமானவர்.டாக்டர், குருதேவரின் நோய்பற்றி ஒரு கருத்தைக்கூறிவிட்டு,
தாம் கூறுவதற்கான ஆதாரங்களை ஒரு மருத்துவ நூலை மேற்கோள் காட்டி தெரிவித்தார். அனைத்தையும்
கேட்ட நரேந்திரர், டாக்டர், நீங்கள் கூறிய நூலை முழுவதும் படித்திருக்கிறீர்களா? அல்லது
அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்தீர்களா? என்று கேட்டார். இந்தக்கேள்வியால் டாக்டர்
அதிர்ந்துபோனார். உண்மை தான் , தாம் முற்றிலுமாகப் படிக்கவில்லை என்பதை அவர் ஒத்துக்கொண்டார்.
நரேந்திரர் அந்த நூலின் பகுதிகளை அப்படியே ஒப்பித்து, டாக்டர் கூறிய கருத்துகளை விளக்கினார்.
டாக்டர் இதனைச்சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் நரேந்திரரைப்
பாராட்டி ஆசீர்வதித்தார்.
நோய் ஒரு
நிமித்தம்.
ஸ்ரீராமகிருஷ்ணருக்குத்
தீவரமான நோய் வந்துள்ளது. அவர் தமது இறுதி நாட்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்
என்பது அனைவருக்கும் புரிந்தது. அனைவரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சேவையில் மனப்பூர்வமாக
ஈடுபட்டனர். இளைஞர்களில் பலரும் காசிப்பூரிலேயே
தங்கினர். நரேந்திரர் அவர்களையெல்லாம்
ஒன்று திரட்டி, அனைவருமாகப் படிப்பு,
கலந்துரையாடல், தியானம் என்று ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டனர். ஒரு பக்கம் ஸ்ரீராமகிருஷ்ணரின்
தன்னலமற்ற அன்பும், மறுபக்கம் நரேந்திரரின் சகோதர பாசமும் அனைவரையும் அங்கே கட்டி வைத்திருந்தன.
இளைஞர்கள் பன்னிருவர் இருந்தனர். அவர்கள் நரேந்திரர், ராக்கால், பாபுராம், நிரஞ்சன்,
யோகின், லாட்டு, தாரக், மூத்தகோபால் , காளி, சசி, சரத், இளைய கோபால்.
இளைஞர்கள்
முறை வைத்துக்கொண்டு ஸ்ரீராமகிருஷ்ணருக்குச்சேவை செய்தனர். ஆனால் சிலரது மனத்தில் ஒரு
தயக்கம் அலைமோதியது.ஸ்ரீராமகிருஷ்ணரின் நோய் தொற்று நோயா? ஒரு வேளை அப்படியிருந்தால் தங்களுக்கும் பரவக்கூடுமே என்று சிலர் பயந்தனர்.
இதனைப்புரிந்து கொண்ட நரேந்திரர் ஒரு நாள் அனைவரின் முன்னால் , ஸ்ரீராமகிருஷ்ணர் குடித்துவிட்டு
வைத்திருந்த ரவை ப் பாயாசத்தை எடுத்துக்குடித்தார். இதைக் கண்ட பிறகு இளைஞர்களின் சந்தேகம்
தீர்ந்தது.
நரேந்திரரும்
மற்ற இளைஞர்களும் ஸ்ரீராமகிருஷ்ணரைின் நோயை நோயபகவே கண்டனர். ஆனால் இல்லற பக்தர்களான
கிரீஷ், ராம்சந்திர தத்தர் போன்ற சிலர் இந்த நோய்க்கு ஓர் அமானுஷ்ய வண்ணம் கொடுத்தனர்.ஸ்ரீராமகிருஷ்ணர்
ஓர் அவதார புருஷர் , அவர் தமது சங்கல்பத்தாலேயே இந்த நோயை ஏற்றுக் கொண்டுள்ளார். ஒரு
நாள் திடீரென்று தமது தெய்வீக சக்தியை வெளிப்படுத்தி நோளைக் குணப்படுத்துவார் என்று
அவர்கள் நம்பினர்.
ஆனால் இந்த
நோயை ஒரு நிமித்தமாகக் காட்டினார் ஸ்ரீராமகிருஷ்ணர். எனது நோய் ஒரு நிமித்தம் மட்டுமே.
இந்த நோய் உங்கள் அனைவரையும் ஒருங்கிணைத்திருக்கிறது என்று கூறினார் அவர். அந்த நோயின்
காரணமாகவே பக்தர்கள் அனைவரும் ஒன்று கூட முடிந்தது. அவர்களுக்கு இடையில் ஒரு பாசப்
பிணைப்பு வளர்ந்தது. அது எதிர்கால இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
நரேந்திரர்
வழிகாட்டுகிறார்.
இந்த நாட்களிலேயே
நரேந்திரரின் பணி தொடங்கிவிட்டது எனலாம். ஒரு புதிய யுகத்தைப்படைக்க வந்தவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.
இதில் புதிய சிந்தனைகளும், புதிய பாதைகளும் வகுக்கப் படும் என்பதை நரேந்திரர் அறிந்திருந்தார்.
ஆனால் மற்ற பலரும் அதைப்புரிந்து கொள்ளவோ,
ஏன் அப்படி எண்ணிப்பார்க்கவோ கூட இல்லை. இதனால் பக்தர்களில் பலரும் பழைய பாதைகளிலேயே
செல்லத் தலைப்பட்டனர். அவர்களை வழிக்குக்கொண்டு வருவது நரேந்திரரின் முக்கிய வேலையாக
இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு நாள் திடீரென்று அமானுஷ்ய சக்தியால் தமது நோயைக்குணப்படுத்துவார்
என்று கூறியவர்களிடம் அவர் உண்மையைத் தெளிவுபடுத்தி, ஸ்ரீராமகிருஷ்ணரின் உடம்பும் இயற்கையிலிருந்து உருவாகியது, இயற்கை நியதிகளுக்கு உட்பட்டது, ஒரு
நாள் அது அழிந்தேயாக வேண்டும். எனவே திடீரென்று
அமானுஷ்ய சக்தியால் அவரது நோய் குணமாகும் என்று எதிர்பார்க்கக் கூடாது‘‘ என்பதை எடுத்துக்கூறினார்.
இன்னொரு
பக்கம், ஒரு சிலர் ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் அவதாரம் முந்தைய அவதாரத்தில் அவர் யாராக இருந்தார்,
இப்போதுள்ள பக்தர்களில் யார்யார் முந்தைய அவதாரங்களில் யார்யாராக இருந்தனர் என்றெல்லாம்
கற்பனைகளில் மிதக்கத்தொடங்கினர். பரவச நிலை என்று கூறிக்கொண்டு ஆடவும் பாடவும் சிலர்
முற்பட்டனர்.
இவற்றைத்தடுக்கவும்
நரேந்திரர் தம்மால் இயன்ற அளவு முயற்சி செய்தார்.கண்ணீர் விடுவதும், மயிர்க்கூச்செறிவதும்
எல்லாம் உண்மையான ஆன்மீகத்திற்குப் புறம்பானவை. இவற்றைத் தடுக்க இயலாவிட்டால் உடம்பும்
உள்ளமும் நோயுற்றுள்ளது என்று பொருள். இது நரம்புத் தளர்ச்சி காரணமாகவும் ஏற்படலாம்.
எனவே நல்ல உணவை உண்ண வேண்டும், நல்ல டாக்டர்களைப்பார்க்க வேண்டும் என்று அவர்களிடம்
கூறினார்.
நரேந்திரரின்
அறிவுரைகளைச்சிலர் ஏற்றுக் கொண்டனர். தங்களைக் கட்டுப்படுத்தி உண்மையான ஆன்மீக வாழ்வில்
ஈடுபட்டனர்
பலர் ஏற்றுக்கொள்ளவில்லை.
நரேந்திரர்
அவர்களை எளிதாக விட்டுவிடவில்லை. பலர் முன்னால் அவர்களைக்கேலி செய்தார். அவர்களின்
பரவசநிலைகளை நடித்துக்காட்டி அவர்களை வெட்கப்படச் செய்தார்.அதே வேளையில், ஸ்ரீராமகிருஷ்ணரின்
பெரு வாழ்விலிருந்து பல்வேறு உதாரணங்களை எடுத்துக்காட்டி அவர்களுக்கு உண்மை ஆன்மீகத்தைப்
புரிய வைத்தார்.
அனைத்திற்கும்
மேலாக அற்புதமான ஒரு கருத்தைக்கூறி அவர்கள் உண்மையை உணர்ந்து கொள்ளுமாறு செய்தார் நரேந்திரர்.
”கிறிஸ்துவின் பாதையில்”(imitation of christ) என்ற நூலிலிருந்து மேற்கோள்
காட்டி. அவர் கூறினார். உண்மையாக ஏசுவை நேசிப்பவர்களின் வாழ்க்கை முற்றிலுமாக அவரது
வாழ்க்கை போலவே ஆகிவிடும். இது நமக்கு ஒரு
உரைகல்.
நமது வாழ்க்கை
ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையைப்போல் ஆகுமானால்
நாம் அவரை நேசிக்கிறோம் என்பது பொருள்.வேறு எதுவும் உண்மை ஆகாது, ஏதோ சில நேரங்களில் ஆடுவதும் பாடுவதும்
கண்ணீர் வடிப்பதுமாக இருந்து கொண்டு மற்ற நேரங்களில் விருப்பம் போல் வாழ்வது ஸ்ரீராமகிருஷ்ணர்
காட்டிய வாழ்க்கை அல்ல என்பதை இதன் மூலம் நரேந்திரர் தெளிவு படுத்தினார்.
தீவிர மன
ஏக்கம்
ஸ்ரீராமகிருஷ்ணரின்
இறுதி நாட்கள் நெருங்க நெருங்க நரேந்திரர் மேலும் மேலும் தமக்குள் ஏதோ சூன்யத்தை உணரத்
தொடங்கினார். ஆன்மீக வாழ்க்கையில் தாம் இன்னும் எதுவுமே அடையவில்லையோ என்ற எண்ணம் அவரது
உள்ளத்தை வாட்டியது. வீட்டு நிலைமையோ மற்றொரு பக்கம் பெரும் சுமையாக அவரை அழுத்தியது.
வீட்டுநிலைமையைச் சமாளிப்பதற்காக அவர் சட்டப்படிப்பைத் தொடர வேண்டியிருந்தது. தேர்வு
நெருங்கி வந்ததால் காசிப்பூருக்கும் தமது புத்தகங்களைக்கொண்டுவந்து, அவற்றில் கவனம்
செலுத்தினார். சில வேளைகளில் அந்தப் படிப்பில்
மூழ்கியிருந்ததில் , காசிப்பூரிலேயே வாழ்ந்தாலும் மாடியில் சென்று ஸ்ரீராமகிருஷ்ணரைச்
சந்திக்கக் கூட போகாமல் இருந்து விடுவார்.
இதனைக் கவனித்த
ஸ்ரீராமகிருஷ்ணர் , ஒரு நாள், இதோ பார், நீ ஒரு வக்கீல் ஆனால் உன் கையிலிருந்து தண்ணீர் கூட என்னால் குடிக்க முடியாது” என்றார். குருதேவரின் வார்த்தைகளைக்கேட்ட பிறகு, இனி சட்டப்படிப்பு
தேவையில்லை, ஆன்மீக சாதனைகளில் ஆழ்ந்து மூழ்குவது என்று அவர் முடிவு செய்தார்.
1886 ஆரம்பத்தில்
ஒரு நாள் நரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அறைக்குச் சென்று , எல்லோருக்கும் எவ்வளவோ
ஆன்மீக அனுபவங்கள் வாய்க்கின்றன. ஏன் எனக்கு மட்டும் எதுவும் கிடைக்கவில்லை.? எனக்கும் ஏதாவது கிடைக்க வேண்டும்” என்று கேட்டார். சரி,
உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார் ஸ்ரீராமகிருஷ்ணர். அதற்கு நரேந்திரர், மூன்று
நான்கு நாட்கள் தொடர்ந்து சமாதியில் மூழ்கியிருக்க வேண்டும்.ஏதோ உணவிற்கு மட்டும்,
அவ்வப்போது மனம் கீழே வர வேண்டும்” என்றார் . அதைக்கேட்ட ஸ்ரீராமகிருஷ்ணர்,
நீ ஒரு முட்டாள். இதுவா பெரிய நிலை? இதை விடப்பெரிய நிலை உள்ளது. இருப்பவை எல்லாம்
நீயே. என்று நீயே பாடுவதுண்டு அல்லவா? இந்த
நிலையை நீ அனுபவிக்கலாம். ஆனால் அதற்கு முன்பு உன் குடும்பத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச்செய்து
விட்டு வா” என்றார்.
மறுநாள்
வீடு சென்றார் நரேந்திரர். படிப்பிலோ உணவிலோ கவனம் செலுத்தாமல் இப்படி இருப்பதற்காக
அவரது தாயார் அவரைக் கடிந்து கொண்டார். வீட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த நினைத்தார்
நரேந்திரர். எனவே தமது பாட்டி வீட்டிற்குச் சென்று படிக்கத் தொடங்கினார். அங்கு போய்
புத்தகங்களைக்கையில் எடுத்தது தான் தாமதம். எங்கிருந்தோ பய உணர்ச்சி ஒன்று அவரைப் பற்றிக்கொண்டது. தாம் ஏதோ தவறு செய்வது போல்
அவருக்குத் தோன்றியது. திடீரென்று என்ன நினைத்தாரோ,
புத்தகங்களை அப்படியே தூக்கி வீசியெறிந்து விட்டு ஓட ஆரம்பித்தார். ஏதோ ஒரு சக்தி அப்படி
ஓடச் செய்தது போன்றஆவேசத்தில் அவர் ஓடினார். ஓடிய வேகத்தில் செருப்பு, மற்ற பொருட்கள்
என்று ஒவ்வொன்றுமாக அங்கங்கே தெறித்து வீழ்ந்தன.
வழியிலிருந்த ஒரு வைக்கோற்போரில் மோதியதில்
உடம்பெல்லாம் வைக்கோல்! நல்ல மழை வேறு! வெறிபிடித்தவர்போல் அவர் ஓடினார்! கடைசியில் சென்று நின்றஇடம் காசிப்பூர். நனைந்து தொப்பலாகி,
சேறும் சகதியும் கலந்த உடையுடன் அவரது கோலம் அலங்கோலமாக இருந்தது.
அங்கே இருந்த
ம-விடம் , நான் அழுதேன், இப்படி என் வாழ்நாளில் ஒரு முறைகூட அழுததில்லை. அப்படி அழுதேன்,
என்று பின்னாளில் நரேந்திரர் கூறினார்.
பிறகு நரேந்திரர்
நேராக மேலே குருதேவரிடம் சென்றார். அவர் தூங்கிக் கொண்டிருந்தார். தொண்டை வலி மிக வும்
அதிகமாக இருந்தது. இரவு சுமார் 9 மணி க்கு அவர் எழுந்தார். எழுந்தவர் நரேந்திரரைப்
பற்றியே பேசினார். நரேந்திரனின் நிலைமை எவ்வளவு அற்புதமாக இருக்கிறது! ஒரு காலத்தில்
அவன் உருவக் கடவுளையே நம்பாதவனாக இருந்தான். இப்போது பார், இறையனுபூதிக்காக எவ்வளவு
துடிக்கிறான்.
சில அனுபவங்கள்
நரேந்திரரின்
மன ஏக்கம் தீவிரமாகியது. 1886 ஜனவரி ஆரம்பத்தில் ஒரு நாள் அவர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம்
சென்று, தாம் தட்சிணேசுவரத்திற்குப்போய் , அங்கே வில்வ மரத்தின் அடியில் துனி அக்கினி
வளர்த்து அதன் அருகில் அமர்ந்து தியானம் செய்யப்போவதாகக்கூறினார். வேண்டாம், அருகிலுள்ள
வெடிமருந்து தொழிற்சாலையில் உள்ளவர்கள் மறுப்பு தெரிவிப்பார்கள். பஞ்சவடி அழகான இடம். பல சாதுக்கள் ஜப தியானம் செய்த இடம். ஆனால்
அங்கே குளிர் அதிகமாக இருக்கும். இருட்டாகவும் இருக்கும் ” என்று கூறினார். பிறகு,
ஆமாம், நீ உன் படிப்பைத் தொடரவிரும்புகிறாயா? என்று கேட்டார். அதற்கு நரேந்திரர், இது
வரை படித்தவற்றை மறப்பதற்கு ஒரு மருந்து கிடைக்குமா
என்று நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். இதில் படிப்பைத் தொடர்வதா? என்றார். இப்போதிலிருந்து நரேந்திரின் மனம் ஆன்மீக சாதனைகளில் தீவிரமாக ஈடுபட்டது.
அடிக்கடி அவர் தட்சிணேசுவரம் சென்று தியானத்தில் ஈடுபட்டார்.
ஒரு முறை
நரேந்திரர் கிரீஷீடன் சென்றார். இருவருமாகப் பஞ்சவடியில் தியானத்தில் அமர்ந்தனர். கொசுக்கடிகாரணமாக கிரீஷால் தியானம் செய்ய முடியவில்லை. திரும்பி நரேந்திரரைப்
பார்த்தால், அவரது உடல் முழுவதும் ஒரு போர்வையால் மூடியது போல் கொசுக்கள் அமர்ந்திருந்தன.அவர்
புறவுணர்வை முற்றிலுமாக இழந்து தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரை அழைத்துப் பார்த்தார்
கிரீஷ், பதில் இல்லை. தொட்டுப் பார்த்தார், உணர்வில்லை. பிடித்து உலுக்கினார்-அவ்வளவு
தான், ஒரு மரக்கட்டை போல் சாய்ந்தார் நரேந்திரர். அவருக்கு உணர்வு வரவே இல்லை. நீண்ட
நேரத்திற்குப் பிறகு புறவுணர்வு வந்த போது, நடந்த எதையும் அவர் உணர்ந்திருக்கவில்லை.
மற்றொரு
நாள் நரேந்திரர் தியானித்துக் கொண்டிருந்த போது முக்கோண வடிவப்பேரொளி ஒன்று தோன்றி
பிரகாசிப்பதைக் கண்டார். அது உயிருணர்வுள்ளதாக அவருக்குத் தோன்றிற்று. குருதேவரிடம் இதைப்பற்றி கூறினார்.
அதற்கு அவர், நல்லது, நல்லது, நீ பிரம்ம யோனியைப் பார்த்திருக்கிறாய். வில்வ மரத்தடியில்
சாதனைகள் செய்த போது நானும் அதனைப் பார்த்தேன்.
ஒவ்வொரு வினாடியும் அதிலிருந்து கணக்கற்ற பிரம்மாண்டங்கள் தோன்றிக் கொண்டிருந்ததையும்
கண்டேன்” என்று சொன்னார்.
ஒரு நாள்
தியான வேளையில் இடை, பிங்கலை போன்ற நாடிகளின் செயல்பாட்டையும் குண்டலினி சக்தி யின்
விழிப்பையும் உணர்ந்தார் அவர்.
ஒரு நாள்
ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரருக்குத் தமது இஷ்ட மந்திரமாகிய ராமநாமத்தில் தீட்சை தந்தார்.
மிகச்சிறு வயதிலேயே ராமரிடம் கொண்டிருந்த பக்தி குருதேவர் அளித்த மந்திர ஆற்றலால் நரேந்திரரிடம் கிளர்ந்தெழுந்தது. அவர் ஆனந்த பரவசத்தில்
தம்மை மறந்து, ராமா, ராமா, என்று கூவிய படி வீட்டைச்சுற்றிச் சுற்றி வந்தார். நேரம்
செல்லச் செல்ல அவரது குரல் மேன்மேலும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. அவரது நிலையைக் கண்டவர்கள்
அவரது அருகில் செல்வதற்கே அஞ்சினார்கள்.ராமா, ராமா என்று கூறியவாறே மணிக்கணக்காக அவர்
சுற்றுவதைக் கண்டு ஸ்ரீராமகிருஷ்ணரிடம் விவரத்தைக்கூறினார்கள். அதற்கு அவர், அவனை அப்படியே
விட்டுவிடுங்கள், விரைவில் சரியாகிவிடுவான்” என்றார்.
பல மணி நேரங்களுக்குப்
பிறகும் அவர் சுயநிலைக்குத் திரும்பாததைக் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர் அவரைத் தம்மிடம் அழைத்து
வருமாறு கூறினார். ஆனால் யாராலும் நரேந்திரரை
நிறுத்த இயலவில்லை. கடைசியில் ஓரிருவர் பலவந்தமாக அவரைப் பிடித்து குருதேவரிடம் கொண்டு
சென்றார்கள். படிப்படியாக அவரைச் சுயவுணர்வு நிலைக்குக் கொண்டு வந்தார் குருதேவர்.
பிறகு அவரிடம், என் மகனே, நரேந்திரா! இப்படி ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறாய்? இது எந்தப்
பயனையும் விளைவிக்காது. இந்த ஓர் இரவை நீ கழித்தது போல் எனது வாழ்க்கையின் பன்னிரண்டு
வருடங்கள் கழிந்தன. ஒரு கடும் சூறாவளி போல் அனைத்தும் கடந்து சென்றுவிட்டன. ஓர் இரவில்
நீ என்ன சாதிக்க முடியும், என் மகனே! என்று கேட்டு அவரைச் சமாதானப் படுத்தினார்.
சக்தியை
அளிப்பதற்கான ஆற்றல்
இந்த நாட்களில்
நரேந்திரர் தம்முள் ஓர் அசாதாரண ஆற்றல் வளர்வதை உணர்ந்தார். அந்த ஆற்றலைப் பிறருக்கு
அளிப்பதன் மூலம் அவர்களின் மனத்தை மாற்றியமைக்கும் வல்லமை தமக்கு இருப்பது அவருக்குத் தெரிந்தது. மார்ச்
மாதம். சிவராத்திரி நாள். நரேந்திரர் சிவபெருமான் மீது”தாதையா தாதையா” என்ற பஜனை பாடலை எழுதினார். பஜனை, பூஜை, தியானம் என்று
இளைஞர்கள் அனைவரும் சாதனைகளில் ஆழ்ந்தனர். முதல் யாம பூஜை நிறைவுற்றது. நரேந்திரர்
இளைஞர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
ஒவ்வொருவராகப் பலரும் வெளியே சென்றனர். தமக்குப் புகைக்குழாய் தயாரிக்குமாறு ஒருவரிடம் கூறினார் நரேந்திரர். அறையில்
காளியும் நரேந்திரரும் மட்டும் இருந்தனர். அப்போது தமது ஆற்றலைப் பரிசோதிப்பதற்கான
ஆர்வம் நரேந்திரரிடம் எழுந்தத. அவர் காளியிடம்
, காளி, நான் தியானம் செய்கிறேன், சிறிது நேரத்திற்குப்
பிறகு என்னைத் தொடு” என்று கூறிவிட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.
வெளியே சென்றவர்
புகைக்குழாயுடன் திரும்பி வந்தபோது பிரமிப்பூட்டும் காட்சி ஒன்றைக்கண்டார். நரேந்திரரும்
காளியும் தியானத்தில் மூழ்கி இருந்தனர். காளியின் வலது கை நரேந்திரின் வலது முட்டியில் இருந்தது. அது நடுங்கிக்கொண்டிருந்தது.
சிறிது நேரம்
கழித்து கண் விழித்தார் நரேந்திரர்.
நரேந்திரர்-காளி!
கையை எடு, நீ என்ன உணர்ந்தாய்?
காளி-மின்
சக்தி என் உடம்பில் பாய்வது போல் இருந்தது. என் கைகள் நடுங்கின.
இளைஞர்-
நீ நரேனைத் தொட்டதால் தான் உன் கைகள் நடுங்கினவா?
காளி- ஆம்.
நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என் கைகள் நடுங்குவதைத் தடுக்க இயலவில்லை.
சிவராத்திரி
பூஜைகள் தொடர்ந்தன. காளி தியானத்தில் மூழ்கினார்.
இப்படி அவர் ஆழ்ந்து தியானம் செய்ததை யாரும்
கண்டதில்லை. நரேந்திரரைத் தொட்டதால் தான் இது சாத்தியமாயிற்று என்று அனைவரும் உணர்ந்தனர்.
அதிகாலை
4 மணிக்கு நான்காம் யாம பூஜைகள் நிறைவுற்றன.
அப்போது பூஜையறையினுள் வந்த சசி நரேந்திரரிடம், குருதேவர் உன்னைக்கூப்பிடுகிறார்” என்றார்.
நரேந்திரர்
சசியுடன் மேலே சென்றார். அவரைக் கண்டது தான் தாமதம், குருதேவர் கண்டிக்கும் குரலில்,
என்ன இது! சேமிப்பதற்கு முன் செலவு செய்வதா! முதலில் தேவையான அளவு சேமித்துக்கொள்,
எங்கே எப்படி அதைச் செலவு செய்வது என்பது பிறகு தான் உனக்குத் தெரியவரும். தேவியே அதை
உனக்கு உணர்த்துவாள், உனது உணர்வைக் காளியிடம் செலுத்தியதன் மூலம் அவனுக்கு எவ்வளவு
தீங்கு செய்திருக்கிறாய் தெரியுமா? அவன் ஒரு குறிப்பிட்ட பாதையில் முன்னேறிக்கொண்டிருந்தான்.
ஆறு மாதத்தில் கலைந்த கருபோல் அது பயனற்றுப்போய்விட்டது. போகட்டும், நடந்தது நடந்தது
தான். இனி இப்படிச் சிந்திக்காமல் செயல்படாதே. இன்னும் மோசமான விளைவுகள் ஏற்படாமல்
போனதில் காளி பாக்கியசாலிதான்” என்றார்.
மௌனமாக வெளியே
வந்தார் நரேந்திரர். திகைத்துப் போய்விட்டேன் நான். பூஜை வேளையில் நடைபெற்ற அனைத்தும்
அவருக்குத்தெரிந்திருந்தன. அவர் என்னைக் கண்டிக்கும்போது மௌனமாக நிற்பதை த் தவிர வேறு
என்ன செய்ய இயலும்! என்றார் நரேந்திரர்.
ஆல மரமாய்
இரு!
இப்படி பக்தியின் உயர் அனுபவங்கள், தியான அனுபவங்கள்
என்று நரேந்திரரின் காசிப்பூர் நாட்கள் கழிந்தன. எப்போதும் உயர் நிலைகளில் திளைத்திருக்க
வேண்டும். சமாதி நிலையில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற ஆர்வம் நரேந்திரரிடம் நாளுக்கு
நாள் வளர்ந்தது. எனவே தடுக்க இயலாத ஆர்வத்துடன் ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணரின் அறைக்குச்
சென்று, எனக்கு நிர்விகல்ப சமாதி நிலையை அருளவேண்டும்” என்று கேட்டார்.
இந்தக்கேள்வி
ஸ்ரீராமகிருஷ்ணருக்குச் சற்று திகைப்பை அளித்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-முதலில்
என் உடம்பு சரியாகட்டும்.நீ கேட்கும் எதையும் அதன்பிறகு தருகிறேன்.
நரேந்திரர்-ஆனால்
நீங்கள் மறைந்துவிட்டால் நான் என்ன செய்வேன்.?
ஸ்ரீராமகிருஷ்ணர்-ஒரு
கணம் நரேந்திரரைக் கனிவுடன் உற்றுப் பார்த்தார். இவன் என்ன நினைக்கிறான்? என் உடல்
மறைந்தாலும் எனக்கு அழிவில்லை என்பது இவனுக்கு இன்னும் புரியவில்லையா? அதன் பிறகும்
இவனுக்கு வேண்டியதை நான் கொடுக்க மாட்டேனா? என்று அவர் தமக்குள் நினைப்பது போல் இருந்தது.
அந்தப் பார்வை. இருப்பினும் தமது அருமைச் சீடனிடம் அன்புடன் கேட்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
என் மகனே, உனக்கு என்ன வேண்டும்?
நரேந்திரர்-முன்பே
கூறியது தான் . நான் தொடர்ந்து பல நாட்கள் சமாதியில் ஆழ்ந்திருக்க வேண்டும். உடம்பைப்
பாதுகாப்பதற்காக மட்டும் அவ்வப்போது கீழே வரவேண்டும்.
ஸ்ரீராமகிருஷ்ணரின்
முகம் சற்று கம்பீரமாகியது. அவர் கூறினார்.
தூ தூ! நீ
பரந்த மனம் படைத்தவன் என்று நினைத்தேன். ஆனால் இப்படிக்கேட்கிறாயே! இது உனக்குத்தகுமா?
நீ ஓர் ஆலமரம் போல் பரந்து, வாழ்க்கையில் அடிபட்டு அல்லலுற்று வரும் ஆயிரக்கணக்கான
மக்களுக்கு நிழல் அளிப்பாய் என்று நான் நினைத்தேன். ஆனால் நீயோ உன் சொந்த முக்தியை
நாடுகிறாய். ஒரு தலைப்பட்சமான இத்தகைய லட்சியத்தை உன்னால் எப்படி நினைத்துப் பார்க்க
முடிந்தது? எல்லா பக்கமும் ஒரு சேர வளர்கின்ற வளர்ச்சியே நான் விரும்புவது. மீன் கறியை
நான் சாப்பிடுவதாக வைத்துக்கொள். குழம்பு, பொரியல், சட்னி என்று அதனை நான் பலவிதமாகச்
சாப்பிட விரும்புவேன். சமாதியில் ஆழ்ந்து இறையுணர்வில் திளைக்கின்ற இன்பத்துடன் மட்டும்
நான் திருப்தி அடைந்து விடுவதில்லை. மனித உறவுகளைப்போல் இறைவனுடன் பல்வேறு வழிகளில்
தொடர்பு கொண்டு இறையின்பத்தைப் பல்வேறு வழிகளில் அனுபவிப்பதையே நான் விரும்புகிறேன்.
நீயும் அப்படியிருக்க வேண்டும் என்பது தான்
என் ஆவல்.
நிர்விகல்ப
சமாதியில்
சீடரிடம்
இப்படி கூறிவிட்டாலும் அவருக்கு அந்த அனுபவத்தின் சுவையை அளிப்பது என்று ஸ்ரீராமகிருஷ்ணர்
முடிவு செய்திருக்க வேண்டும். ஒரு நாள் மாலையில் நரேந்திரர் தியானம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவருக்கு அந்த அறுதி அனுபவமாகிய நிர்விகல்ப சமாதி நிலை வாய்த்தது.
முதலில் அவரது தலைக்குப் பின்புறம் ஓர் ஒளி தோன்றியது. பின்னர் அவர் சிறிது சிறிதாக
உலக நினைவையும் தம் நினைவையும் இழந்து சமாதியில்
கரைந்தார். புலன்களையும் மனத்தையும் உலகங்களையும் எல்லா வற்றையும் கடந்து உணர்வுமயமான
நிர்விகல்ப சமாதியில் மூழ்கினார். நெடுநேரம் கழிந்தது. சமாதி நிலையிலிருந்து திரும்பிய
பிறகும் அவருக்கு உடலுணர்வு முற்றிலுமாகத்
திரும்பவில்லை. தலை இருப்பதை மட்டும் அவரால் உணர முடிந்தது. உடல் இருப்பது தெரியவே இல்லை. எனவே , என் உடம்பு எங்கே? உடம்பு
எங்கே? என்று அலறினார். அவருடைய கதறலைக்கேட்டு , விரைந்து சென்ற மூத்தகோபால் அவரது
உடம்பைத் தொட்டுக்காட்டி, இதோ இருக்கிறது, நரேன், இதோ இருக்கிறது” என்றார். கோபாலின் வார்த்தைகள் நரேந்திரரின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.
முன்போலவே கூச்சலிட்டார். பயந்து போன கோபால் மாடிக்கு ஓடி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் விவரத்தைக்கூறினார்.
கோபால் சொல்வதை அமைதியாகக்கேட்ட ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்தபடியே, அவன் இன்னும் கொஞ்சநேரம் அதே நிலையில் இருக்கட்டும். இந்த நிலை
வேண்டும் என்று அவன் பலமுறை என்னைத் தொந்தரவு செய்தான்” என்றார்.
நெடுநேரத்திற்குப்
பிறகு நரேந்திரருக்கு உலக நினைவு திரும்பியது. கண் விழித்த அவர் தம்மைச்சுற்றிலும்
சகோதரச் சீடர்கள் கவலையுடன் அமர்ந்திருப்பதைக்கண்டார்.
இத்தனை நாட்கள்
அவர் மனத்தில் வீசிக்கொண்டிருந்த புயல் ஓய்ந்து ஆழ்ந்த அமைதி நிலவியது. பிறகு அவர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம்
சென்றார். ஸ்ரீராமகிருஷ்ணர் மகிழ்ச்சியோடு அவரைப்பார்த்து, அன்னை காளி இப்போது உனக்கு
எல்லாவற்றையும் காட்டிவிட்டாள், ஆனால் இந்த அனுபவம் தற்காலிகமாகப் பூட்டி வைக்கப்படும்.
அதன் சாவி என்னிடம் இருக்கும். நீ அவளது பணிகளைச்செய்து
முடிந்ததும் இந்தப் புதையல் உனக்கு மறுபடியும்
கிடைக்கும், நீ மீண்டும் எல்லாவற்றையும் உணர்வாய், என்றார்.
நரேந்திரருக்கோ
இன்னும் அந்த நிலையிலேயே ஆழ்ந்திரக்க வேண்டும் என்ற ஆவல் அடங்கவில்லை. எனவே அவர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் , ஆ! நான் அந்த நிலையில்
மிகவும் ஆனந்தமாக இருந்தேன். என்னை அந்த நிலையிலேயே
இருக்க விடுங்கள், என்று கேட்டார். ஸ்ரீராமகிருஷ்ணர் மீண்டும் அவரைக் கண்டித்தார்.
என்ன இது! தேவியின் அருளால் இந்த அனுபூதி உனக்கு
இயல்பாக வாய்க்கும். எல்லாஉயிர்களிலும் ஒரே இறைவன் உறைவதை நீ சாதாரண நிலையிலேயே அனுபவிப்பாய்.
உலகில் நீ அரும்பெரும் காரியங்கள் பலவற்றைச் சாதிப்பாய். எண்ணற்ற மனிதர்களுக்கும் நீ
ஆன்மீக உணர்வைக்கொண்டு செல்வாய். ஏழை எளியவர்களின் துயர் துடைப்பாய், என்று கூறினார்.
நரேந்திரர்
சென்றபிறகு மற்ற சீடர்களிடம் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார்.
தன் சுய
சங்கல்பத்தாலேயே நரேன் உலகிலிருந்து மறைவான்.தான் யார் என்பதை அவன் உணர்ந்து விட்டால்
அதன் பிறகு ஒருகணம் கூடஉடம்பில் தங்க மாட்டான். தனது அறிவாற்றலாலும் ஆன்மீக சக்திகளாலும்
அவன் உலகின் அஸ்திவாரங்களையே அசைக்கின்ற ஒரு
காலம் வரும். அவன் அறுதி உண்மை நிலையின்அனுபூதி பெறாமல் இருக்கட்டும் என்று நான் தேவியிடம் பிரார்த்தனை செய்தேன். ஏனென்றால் அதை அவன் பெற்றால்
அதன் பிறகு உலகில் வாழமாட்டான். அவன் செய்ய வேண்டிய வேலை ஏராளம் உள்ளது. அறுதி நிலையை
அவன் அடைவதற்கு ஒரு திரை மட்டுமே இடையில் உள்ளது.
அந்தத் திரை மிக மெல்லியதாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அது விழுந்துவிடலாம்.
வீட்டுப்
பிரச்சனைகள்
தியானம்,
சமாதிநிலைகள் என்று ஒரு பக்கம் தொடர்ந்த அதே வேளையில் வீட்டுப் பிரச்சனைகள் நரேந்திரரின்
மனத்தை அலைக் கழித்தன. உன் வீட்டிற்கு ஏதாவது வழி செய்துவிட்டு வா” என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியது நரேந்திரரின் மனத்தில் பதிந்திருந்தது.
எனவே மறுநாள் நண்பன் ஒருவனிடமிருந்து ரூ-100 கடன் வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார்.
அந்தப் பணத்தால் வீட்டுப் பிரச்சனைகள் மூன்று மாதங்களுக்குச் சமாளித்துக்கொள்வது அவரது
எண்ணமாக இருந்தது.
ஆனால் மூன்று
மாதத்தில் முடிகின்ற விஷயமா வீட்டுப் பிரச்சனை?
யாரோ துன்புற்றாலே
கருணையால் இளகுகின்ற மனம் படைத்த நரேந்திரர் தன் தாயும் சகோதர சகோதரிகளும் பசியால்
வாடுவதைப்பார்த்துக் கொண்டிருப்பாரா? எனவே அவரது பிரச்சனைகள் தொடரவே செய்தன. கயையில்
ஒரு ஜமீன்தாரிடம் மேலாளர் வேலையில் சேர எண்ணினார். அங்கே செல்வதைவிட வித்யாசாகரின்
பள்ளியில் ஒரு வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் ம-விடம் கூறவும் செய்தார்.
ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை.
இந்த நாட்களில்
நரேந்திரர் புத்தரின் வாழ்க்கையில் ஆழ்ந்தார். உயர் வாழ்க்கைக்கும் உறவுக்கும் இடையில்
அலைக் கழிக்கப் பட்ட புத்தரின் பெருவாழ்க்கை நரேந்திரரை ஆட்கொண்டதில் வியப்பு இல்லை.
நிர்வாண நிலை தமக்கு முன்பாக இருந்தும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து, உயிர்க்குலத்தின்
துயர் துடைப்பதற்காக அவர்களின் சேவைக்கென்று தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் கருணைப்பெருவள்ளல் அல்லவா
அவர்! ஏறத்தாழ அத்தகைய நிலையில் இருந்த நரேந்திரர் அவரது வாழ்க்கையால் கவரப்பட்டதில்
ஆச்சரியம் இல்லை. உலக மக்கள் மீது கொண்ட கருணையால் புத்தர் நிர்வாய நிலையைத்துறந்தார்.
நரேந்திரரும் உலக மக்கள் சேவைக்காக அறுதி நிலையைத்துறக்க வேண்டியதாயிற்று. புத்தரின்
கருணைப்பெருவாழ்வு நரேந்திரரைப் பரிபூரணமாக ஆட்கொண்டது. அவரும் தாரக்கும் காளியும் புத்தரின் வாழ்க்கையை ஆழ்ந்து படித்தனர்.
சிந்தித்தனர், உண்மையை அடைய வேண்டும் என்ற உறுதியுடன் புத்தர் போதி மரத்தடியில் அமர்ந்தபோது
எடுத்துக்கொண்ட சங்கல்gத்தைத் தியான சுவரில் எழுதி வைத்தனர்.
இந்த இருக்கையிலேயே
என் உடம்பு வற்றி உலர்ந்தது
போகட்டும்!
என் தோல் , எலும்பு சதை எல்லாம் கரைந்து
போகட்டும், காலம் காலமாக முயன்றும் கிடைப்பதற்கு
அரிதான அனுபூதி
நிலையை அடையாமல் நான் இந்த
இருக்கையிலிருந்து
எழ மாட்டேன்.
புத்தரின்
உணர்வுகளில் மூழ்க மூழ்க நரேந்திரருக்கு புத்த கயைக்குச் செல்லும் ஆர்வம் தோன்றியது.
புத்தர் அனுபூதிபெற்ற போதி மரத்தடியில் சிறிது நேரமாவது அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்
என்ற தாகம் அலருள் எழுந்தது. எனவே ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு நாள் பிற்பகலில் நரேந்திரரும்
தாரக்கும் காளியும் யாரும் அறியாமல் வீட்டின் பின் வாசல் வழியாக புத்த கயைக்குப் புறப்பட்டனர்.
மூவரும்
காவியுடை அணிந்து கொண்டனர். துறவிகள் வைத்திருப்பது போல் கையில் இடுக்கியை வைத்துக்கொண்டனர்.
புத்த கயைக்குச் செல்ல மறுநாள் காலைவரை ரயில் இல்லாததால் அன்றிரவை ஒரு கடையில் கழித்தனர்.
நரேந்திரர் காலையில் மூன்று மணிக்கெல்லாம் எழுந்து கிச்சடி சமைத்தார். அதனை உண்டுவிட்டு
மூவருமாகப் புறப்பட்டனர். வழி நெடுக புத்தரின்
வாழ்க்கையைப் பற்றியே பேசினர். மூன்றாம் நாள் காலையில் கயையை அடைந்தனர். அங்கே
பல்கு நதியில் குளித்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர். அங்கிருந்து எட்டு மைல்
நடந்து, மாலை வேளையில் புத்த கயையை அடைந்தனர்.
மாலையில்
சந்தடியெல்லாம் ஓய்ந்த பிறகு மூவரும் போதி
மரத்தடிக்குச் சென்று தியானத்தில் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் நரேந்திரரின் முன்பாக அசாதாரணமானதொரு பேரொளி தோன்றியது.
அவரது மனத்தில் அமைதியும் ஆனந்தமும் நிறைந்தது.நரேந்திரர் அந்த ஆனந்தத்தில் மூழ்கியவராக
அமர்ந்திருந்தார். புத்தரின் அற்புதமான பண்பு நலன், அவரது இணையற்ற கருணை, மனிதநேயம்
மிக்க அவரது உபதேசங்கள், புத்த மதத்தின் தாக்கத்தால் இந்திய வரலாற்றில் நிகழ்ந்த மாற்றங்கள்
எல்லாம் அவரது மனக் கண்களில் எழுந்தன. அவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது.
காட்சி மறைந்ததும் அவர் தாரக்கைக் கட்டிக்கொண்டு ஒரு குழந்தை போல் அழுதார். தாரக்கும்
காளியும் கூட பேரானந்தத்தை அனுபவித்தனர். மறுநாள் காலையில் நரேந்திரரிடம் அவர் அழுததற்கான
காரணத்தைக்கேட்ட போது, புத்தருடன் தொடர்புடைய பொருட்களையோ புத்தரோ அங்கு இல்லையே என்ற
எண்ணம் எழுந்தபோது என் இதயம் வேதனையில் துடித்தது. அதனால் தான் அழுதேன்” என்றார்.
அங்கே காசிப்பூரில்
மூவர் திடீரென்று காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைவரும்மிகுந்த கவலைக்கு
உள்ளாயினர். அவர்கள் புத்த கயைக்குப் போயிருக்கிறார்கள் என்ற விஷயம் எப்படியோ தெரியவந்தது.விஷயத்தை ஸ்ரீராமகிருஷ்ணரிடம்
தெரிவித்தனர். அதற்கு அவர், அவன் எங்கே போய்விடுவான்? எவ்வளவு நாட்கள் தான் இருந்துவிடுவான்?
விரைவில் வந்து சேர்வான்.கவலை வேண்டாம்” என்றார். சிறிது நேரம் கழித்து
நீங்கள் உலகின் நான்கு மூலைகளுக்கும் பயணம்
செய்து பாருங்கள். உங்களால் எதையும் காண முடியாது. அங்கே இருக்கின்ற அனைத்தும்
(தம் உடம்பைக் காட்டி) இங்கே இருக்கிறது” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
புவனேசுவரியின்
கலக்கம்
நரேந்திரர் துறவிக்கோலத்தில் யாரிடமும் சொல்லிக்
கொள்ளாமல் திடீரென்று புறப்பட்டுச் சென்றுள்ளது பற்றி கேள்விப்பட்டார் புவனேசுவரி.
அவரது தாயுள்ளம் கலங்கியது. அடிமேல் அடியாக எத்தனையோ சோதனைகளைத் தாங்கி வருபவர் அவர்.
ஒரு ஜமீன்தாரிணிபோல் வாழ்ந்த அவர் வறுமையின் பிடியில் வாடுகின்ற நிலையிலும் அவருக்கு ஒரே நம்பிக்கையாக இருப்பவர் நரேந்திரர்.
அவரும் குடும்ப வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வாழ்வது சொல்லொணா வேதனையைத் தந்திருக்கும்
என்பதில் ஐயமில்லை.ஆனாலும் காசிப்பூரில் தானே வாழ்கிறார் என்று தம்மைத் தாமே தேற்றிக்கொண்டு
வாழ்ந்தார் அந்தத் தாய். காசிப்பூரிலிருந்து
நரேந்திரர் அவ்வப்போது வீட்டிற்குச் சென்றுவரவும் செய்தார். அவரது சகோதரச் சீடர்களும்
சிலர் சென்று வருவதுண்டு. இப்போது காசிப்புரிலிருந்தும் அவர் சென்றுவிட்டார் என்று
கேள்விப்பட்டதும் நேராகக் காசிப்பூருக்குச்சென்று ஸ்ரீராமகிருஷ்ணரைக்கண்டார் நரேந்திரர்
ஸ்ரீராமகிருஷ்ணரைத் தரிசிப்பதற்குக் கருவியாக இருந்தஒருவரான ராம்சந்திர தத்தரின் தந்தையான
நரசிம்ம பிரசாத் தத்தரும் புவனேசுவரியுடன் சென்றார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்
புவனேசுவரியை வரவேற்று, நான் அவனைத் தடுக்க
எவ்வளவோ முயற்சி செய்தேன், ஆனாலும் அவன் சென்றுவிட்டான்.நான்
என்ன செய்யட்டும். அவன் திரும்பி வந்துவிடுவான்” என்று கூறி அவரைத்தேற்றினார்.
அவ்வளவு எளிதாக புவனேசுவரியின் கலக்கம் தீருமா? நம்பிக்கையைச்சுமந்தபடி வீடு திரும்பினார்
அவர்.
வட்டத்தைத்
தாண்டி
இரண்டு நாட்கள் கழித்தும் நரேந்திரரும் மற்றவர்களும்
திரும்பி வராததைக் கண்ட மற்ற சீடர்கள் மீண்டும் ஸ்ரீராமகிருஷ்ணரைக் கவலையுடன் அணுகினர்.
ஸ்ரீராமகிருஷ்ணர் அமைதியாக எழுந்து தமது கையால் தரையில் வட்டம் ஒன்றை வரைந்து, இந்த
வட்டத்தைத் தாண்டி நரேந்திரனால் போகமுடியாது, என்றார். அனைவரும் காத்திருந்தனர்.
புத்த கயையில்
மூன்று நான்கு நாட்கள் மூவரும் கழித்தனர். திடீரென்று நரேந்திரர் வயிற்றுப்போக்கால்
அவதிக்கு உள்ளானார். அவரது உடம்பு மிகவும்
பலவீனம் அடைந்தது. அதன் பிறகும் அங்கே தங்க அவர்கள் விரும்பவில்லை. உடனே காசிப்பூருக்குத் திரும்ப முடிவு
செய்தனர். ஆனால் கையில் சல்லிக்காசு கிடையாது. தாங்கள் தங்கியிருந்த கோயில் தலைவராகிய
துறவியிடம் பணம் கேட்கலாம் என்று எண்ணி அவரிடம்
சென்றனர்.
அங்கே நரேந்திரர்
ஓரிரு பாடல்களைப் பாடினார். இது அந்தத் துறவிக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர் பயணச்செலவின்
ஒரு பகுதியைக்கொடுத்தார்.
கயைக்கு
மூவரும் வந்து சேர்ந்தபோது தந்தையின் நண்பர் ஒருவரைத் தற்செயலாக அங்கே சந்தித்தார் நரேந்திரர். தம் வீட்டில்
இசைவிழா ஒன்று நடப்பதாகவும் அந்த விழாவில்
நரேந்திரர் வந்து பாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்டு
அங்கே சென்று பாடினார் நரேந்திரர். மீதி பயணச்
செலவை அளித்தார் அந்த நண்பர். அனைவரும் காசிப்பூரை அடைந்தனர். ஸ்ரீராமகிருஷ்ணர் மகிழ்ச்சியுடன்
அவர்களிடம் புத்தரைப் பற்றியும் , புத்த மதத்தைப்
பற்றியும் பேசிக் களித்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின்
திருவுளம்
ஏப்ரல்,
மே, ஜீன், ஜீலை மாதங்கள் கழிந்தன. ஸ்ரீராமகிருஷ்ணரின் உடல்நிலை மிகவும் மோசமாகியது.
அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம் என்று பல சிகிச்சைகள் அளிக்கப் பட்டன.
ஆனால் அனைத்தையும்
மீறி அவரது உடல் நிலை நாளுக்கு நாள் சீர்குலைந்தது. இந்த நோயிலிருந்து தாம் மீளப்போவதில்லை
என்பது தெரிந்திருந்தாலும், இது தெரிந்தால் மற்றவர்கள் கவலைப்படுவார்களே என்ற காரணத்திற்காக
யாரிடமும் அது பற்றி அவர் கூறவில்லை.ஒரு முறை ம-விடம் என் மறைவிற்குப் பிறகு நீங்கள்
மனம் கலங்கி அழுதபடி தெருக்களில் திரிவீர்கள் என்பதை நினைக்கும்போது வருத்தம் ஏற்படுகிறது.
இந்த உடலை உகுப்பதற்கும் மனம் வரவில்லை” என்று கூறியிருந்தார். ஆனால்
ஆரம்பம் என்ற ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் இருக்கத்தானே வேண்டும். அவர் மறைவதற்குத்
திருவுளம் கொண்டு விட்டார் என்பதை அனைவரும் உணரத் தொடங்கினர்.
ஏனெனில்
தாம் மறையப்போகும் காலத்தில் எத்தகைய சம்பவங்கள் நிகழும் என்று அவர் கூறியிருந்தாரோ அவை ஒவ்வொன்றாக நிகழத்தொடங்கின.
கனவு களும் காட்சிகளுமாக அன்னை ஸ்ரீசாரதாதேவியும் பல நிமித்தங்களைக்கண்டார்.
தமது நோய்
குணப்படுத்த முடியாதது என்று ஸ்ரீராமகிருஷ்ணர் முடிவு செய்து அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள
திருவுளம் கொண்டுவிட்டார் என்பதைக் கீழ்வரும் நிகழ்ச்சியாலும் அறியலாம்.
ஒரு நாள்
பண்டித சசதர் காசிப்பூருக்கு வந்தார். அவர் குருதேவரிடம், மகான்களின் ஆற்றலைப்பற்றி
சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவர்களுக்கு நோய் வந்தால் அவர்கள் தங்கள் மன ஆற்றலை நோயுற்ற பகுதியில் செலுத்துவதன்
மூலம் அதிலிருந்து விடுபடலாம். நீங்களும்
ஏன் அப்படி செய்யக்கூடாது.? என்று கேட்டார். குருதேவருக்கு இது சிறிதும் பிடிக்கவில்லை.
சற்றே கண்டிப்பான குரலில், ஒரு பெரிய பண்டிதராக இருக்கின்ற உங்களிடம் இத்தகைய எண்ணங்களா?
இந்த மனம் முற்றிலுமாகக் கடவுளிடம் கொடுக்கப்
பட்டு விட்டது. அதை அவரிடமிருந்து திருப்பி, பயனற்ற இந்த உடம்பிற்குக்கொண்டு வருவதா?
என்று கேட்டார். பண்டிதர் மௌனமானார்.
ஆனால் சீடர்கள்
பிடித்துக்கொண்டனர். எப்படியாவது நீங்கள் இந்த நோயைக் குணப்படுத்தியே ஆக வேண்டும்.
எங்களுக்காகவாவது நீங்கள் இதனைச் செய்யுங்கள்” என்று அனைவரும் கேட்டுக்கொண்டனர்.
எல்லாம் தேவியின் திருவுளத்தைப் பொறுத்து உள்ளது” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். அப்படியானால் அவளிடமே பிரார்த்தனை
செய்யுங்கள், எங்களுக்காக நீங்கள் இதைத் தேவியிடம் கேட்டேயாக வேண்டும், என்றார் நரேந்திரர்.
தயக்கத்துடன் சம்மதித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
சில மணிநேரங்கள்
கழிந்தன. நரேந்திரர் குருதேவரிடம் சென்று, தேவியிடம் கேட்டீர்களா ? என்று கேட்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் அமைதியாக க்கூறினார். ஆம். கேட்டேன். அம்மா, தொண்டை வலி காரணமாக என்னால்
எதுவும் சாப்பிட இயலவில்லை. ஏதோ கொஞ்சம் நான் சாப்பிடுவதற்கு அருள் புரிவாய், என்று
அவளிடம் கூறினேன். அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா? ஏன், இந்த வாய் வழியாகத்தான்
நீ சாப்பிட வேண்டுமா? எத்தனையோ வாய்கள் வழியாகச் சாப்பிடுகிறாயே! அது போதாதா? என்று
கேட்டாள். எனக்கு வெட்கமாகப்போய்விட்டது. என்னால் ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லை.
மற்றொரு
நாள் ராக்கால் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இந்த நோயைக்குணப்படுத்துவது
பற்றி பேசினார்.
ராக்கால்-உங்கள்
உடம்பு இன்னும் சில காலம் நிலைக்க வேண்டும் என்று தேவியிடம் கேளுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-எல்லாம்
தேவியின் திருவுளத்தைப்பொறுத்து அமையும்.
நரேந்திரர்-உங்கள்
திருவுளமும் தேவியின் திருவுளமும் வெவ்வேறா? இரண்டும் ஒன்றாகி விட்டனவே!
ஸ்ரீராமகிருஷ்ணர்
சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.பிறகு கூறினார்,
நான் தேவியிடம் பேசியும் பயனில்லை. நானும் அவளும் ஒன்றாகி விட்டதாக இப்போது காண்கிறேன்.
கடவுள் இருக்கிறாரா?
சிகிச்சை,
பிரார்த்தனை என்று பல வழிகளில் முயன்றும் ஸ்ரீராமகிருஷ்ணரின் நோயைக் குணப்படுத்த முடியாத
நிலையில் நரேந்திரரின் மனம் மிகவும் சஞ்சலப் பட்டது. பழைய சந்தேகங்கள் மீண்டும் தலைதூக்கியது
போல் இருந்தது. கடவுள் ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா? அப்படி ஒருவர் இருந்தால் இத்தகைய நல்ல மனிதருக்கு ஏன்
இந்தநோய் வர வேண்டும் என்பன போன்ற கேள்விகள்
அவரது உள்ளத்தைக்குடைந்தன.
கடவுள் கருத்துக்கள்
மட்டுமல்ல, ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி கூட நரேந்திரரின் கருத்துக்கள் படிப்படியாகப்
பரிணமிப்பதை நாம் காண முடியும். முதலில் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதாரம் அல்ல” என்றார். பிறகு கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் அறியமுடியாத
ஏதோ ஒரு நிலையில் இருப்பவர்” என்றார். அவரது கருத்துக்கள்
மேலும் வளர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணரிடம் , உங்கள் திருவுளமும் தேவியின் திருவுளமும் வெவ்வேறா? என்று கேட்பதைக் காண்கிறோம்.
கடைசியாக இந்த நாட்களில் அவரது கருத்து இன்னும் மாறுபட்டது.
ஒரு நாள்
ராக்கால்ஸ்ரீராமகிருஷ்ணரிடம், உங்களை இப்போது தான் நரேந்திரன் நன்றாகப் புரிந்து கொள்ள
ஆரம்பித்திருக்கிறான்” என்றார். ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்துவிட்டு,
ஆம், உண்மைதான்” என்றார். சிறிது நேரம் கழித்து அவர், அனைத்தும்-இருக்கின்ற அனைத்தும்-இதிலிருந்தே (அதாவது தம்மிலிருந்தே) வந்திருப்பதாக
நான் காண்கிறேன். என்று கூறிவிட்டு, நரேந்திரரிடம் நீ இதிலிருந்து என்ன புரிந்து கொள்கிறாய்?
என்று கேட்டார். அதற்கு அவர் படைப்பு அனைத்தும் உங்களிலிருந்தே தோன்றியிருக்கின்றன” என்று பதிலளித்தார். இதைக் கேட்டு ஸ்ரீராமகிருஷ்ணர் மிகவும்
மகிழ்ந்தார்.
நரேந்திரரின்
கருத்துக்கள் முதிர்ச்சியுற்று வருவதைக் கண்ட ம- அவரிடம் ஒரு நாள், உன் விஷயம் மட்டுமல்ல,
தமக்கும் கூட இத்தகைய நிலைகள் ஏற்பட்டதாக குருதேவர் ஒரு நாள் என்னிடம் கூறினார்” என்று கூறினார்.
எங்கு அழைத்தாலும்
நான் வருவேன்.
ஸ்ரீராமகிருஷ்ணரின்
நோய் பல நோக்கங்களைச் சாதிப்பதற்கான ஒரு நிமித்தமாக இருந்தது என்பதை ஏற்கனவே கண்டோம்.
இதன் மூலம் பக்தர்களுக்கிடையே ஓர் அன்புப் பிணைப்பு உருவாயிற்று. பின்னாளில் துறவியராக
மலர இருந்த இளைஞர்களுக்கு இடையே ஒரு சகோதரப் பாசம் ஏற்பட்டது. அதே வேளையில் ஸ்ரீராமகிருஷ்ணரில்
முற்றிலுமாக நம்பிக்கையில்லாதவர்கள் அவரது நோயைக் கண்டு அவரிடமிருந்து விலகுவதற்கும்
இந்தநோய் ஏதுவாயிற்று. இந்த நாட்களில் ஸ்ரீராமகிருஷ்ணரின் இளம் சீடர்கள், இல்லற பக்தர்கள்
சிஷ்யைகள் என்று அனைவரும் அவரது சேவையில் ஈடுபட்டிருந்தனர். செலவை இல்லற பக்தர்கள்
ஏற்றிருந்தார்கள்.தமது நோயின் பெயரில் ஒரு பணவசூல் நடத்தப் படுவதை ஸ்ரீராமகிருஷ்ணர்
ஏற்றுக்கொள்ளவில்லை.
குருதேவருக்கு
ஆகும் செலவை பலராம்போஸ் ஏற்றுக்கொண்டார். வீட்டு வாடகையை சுரேந்திரநாத் மித்ரர் கொடுத்தார்.
இப்படிப் பலராக செலவைப் பகிர்ந்து கொண்டார்கள். இளைய கோபால் வரவு செலவு கணக்கை கவனித்துக்கொண்டார்.
செலவு அதியமாகியபோது
, இல்லற ச் சீடர்கள் இளைஞர்களைக் குற்றம் சாட்டினார்கள். அவர்கள் அதிகமாகச் செலவழிக்கிறார்கள்,
எனவே செலவைக்குறைக்க வேண்டும் என்று கூறினார்கள். அது மட்டுமல்ல, ஸ்ரீராமகிருஷ்ணருக்கு
இரண்டு பேர் மட்டும் சேவை செய்தால் போதும், மற்றவர்கள் அவரவர் வீட்டில் தங்கிக்கொண்டு, இங்கே வந்து பார்த்துக்
கொண்டால் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டார்கள்.
இது இளைஞர்களுக்குப்
பிடிக்கவில்லை. இரு சாரருக்கும் கருத்து வேறுபாடு வளர்வதைக் கண்ட நரேந்திரர் எல்லாவற்றையும்
ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கூறினார். நரேந்திரரின் வருத்தத்தைக் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர், இனி இந்த இல்லற பக்தர்களின் காசு எனக்கு வேண்டாம். ஓ
என் நரேன், உன்தோள்களில் என்னை நீ எங்கே தூக்கிச் சென்றாலும் நான் அங்கு வந்து தங்குகிறேன்,
அப்பா” என்று நெகிழ்ந்து போய் கூறினார். பின்னர் அந்த இளைஞர்களிடம்
,நீங்கள் துறவிகள், பிச்சை ஏற்று சாப்பிடுவது தான் உங்கள் தர்மம். அப்படியே நீங்கள்
வாழ இப்போதிலிருந்தே கற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.
இளைஞர்களும் அதன் படி நடக்க முடிவு செய்தனர்.
இல்லற பக்தர்களிடமிருந்து
பணம் பெறுவது நிறுத்தப் பட்டது.அவர்கள் ஸ்ரீராமகிருஷ்ணரை வந்து காண்பதும் தடுக்கப்
பட்டது. லட்சுமி நாராயண் என்ற மார்வாரி பக்தர் பணம் அளிப்பதற்கு முன்வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர்
அதனை மறுத்துவிட்டார். பின்னர் கிரீஷை அழைத்து நிலைமையைக் கூறினார். கிரீஷ் அனைத்து
செலவையும் தாம் ஏற்றுக் கொள்வதாகவும், தேவைப்பட்டால் தமது வீட்டை விற்றுக் கூட செலவு
செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால் அந்த அளவுக்குப்போகு முன்னர் ஸ்ரீராமகிருஷ்ணரே
இருசாரையும் அழைத்துப்பேசி நிலைமையைச் சீர்படுத்தினார்.
மனக் கசப்புகள் குறைந்து மீண்டும் பழையது போல் எல்லோரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சேவையில்
ஈடுபட்டனர்.
துறவிகள்
ஆக்குகிறார்!
ஒரு நாள்
மூத்தகோபால் சில காவித் துணிகளையும் ருத்திராட்ச
மாலைகளையும் மூட்டையாகக் கட்டி ஸ்ரீராமகிருஷ்ணரிடம்்் கொண்டு வந்தார். அவற்றைச் சிறந்த
சன்னியாசிகளுக்குக் கொடுக்கப் போவதாகக் கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் தம் முன் இருந்த
இளம் சீடர்களைக் காட்டி, இவர்களைவிட சிறந்த சன்னியாசிகள் கிடையாது. இவர்களுக்கே அவற்றைக்
கொடு” என்றார் மூத்த கோபால் மூட்டையைக்கொண்டு வந்து ஸ்ரீராமகிருஷ்ணர்
முன் வைத்தார். அவற்றை அந்த இளைஞர்களுக்கு அளித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். ஒரு நாள் மாலையில்
சன்னியாசத்திற்கான சடங்கொன்றைச்செய்ய சொல்லி, ஊருக்குள் சென்று பிச்சையேற்று வரச் சொன்னார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்
கூறியது போல் அனைவரும் வெளியில் பிச்சையேற்கப்புறப் பட்டனர். அவர்களில் பலர் பணக்கார
வீட்டுப்பிள்ளைகள். செல்வச் செழிப்பில் வளர்ந்தவர்கள். என்றாலும் ஸ்ரீராமகிருஷ்ணரின்
இந்தக் கட்டளையை நிறைவேற்ற மிகுந்த மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். ஸ்ரீராமகிருஷ்ணர்
அளித்த காவித்துணியையும் அணிந்து கொண்டனர். அவர்கள் முதல் பிச்சை கேட்டது அன்னை ஸ்ரீசாரதா
தேவியிடம் தான். அவர்கள் சென்று கேட்டதும்
அன்னை ஒரு ரூபாயை அவர்களின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டார். இவ்வாறு ராமகிருஷ்ண சங்கத்திற்கு
முதல் அருள் சக்தியை அளித்தார் அன்னை. அதன் பின்னர் அவர்கள் பிச்னைக்காக வெளியில் சென்றனர்.
அவர்களின்
அனுபவங்கள் பலவிதமானவை. சில இடங்களில் அரிசி, உருளைக்கிழங்கு, வாழைக்காய், கத்தரிக்காய்,
என்றெல்லாம் பிச்சை அளித்தனர். சில இடங்களிலோ பெரிய உபதேசங்களை அளித்து துரத்தினர்.
சிலர், கொழு கொழுவென்று நன்றாகத் தானே இருக்கிறீர்கள்? ஏன் வேலை செய்து சம்பாதிக்கக்
கூடாது? இப்படி காவித்துணி உடுத்தி ஏன் பிச்சையெடுக்க வேண்டும்? என்று கேட்டு துரத்தினர்.
சிலரோ, இவர்கள் கட்டாயம் ஏதாவது கொள்ளைக் கூட்டத்தைச்சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
பகலில் இப்படி சன்னியாசிபோல் வந்து தகவல் திரட்டிக் கொள்கிறார்கள்” என்றனர்.
எப்படியோ,
கிடைத்த அரிசியையும் காய்கறிகளையும் சமைத்து
ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கொண்டு வந்தனர். அவர் அதைனை அன்னையிடம் கொடுத்து சமைக்கச்சொன்னார்.
சமைத்த உணவிலிருந்து
சிறிது எடுத்துத் தம் வாயில் போட்டுக்கொண்டு, இந்த உணவு மிகவும் தூய்மையானது” என்றார். அவருக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது. மேலும் ஓரிருமுறை
அவர் இளைஞர்களை வெளியில் அனுப்பி பிச்சையேற்றுவரச்செய்தார். இவ்வாறு அவர் ஸ்ரீராமகிருஷ்ண
துறவியர் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.
நரேன் போதிப்பான்.
துறவியர்
இயக்கத்தை ஆரம்பித்தாகிவிட்டது, அடுத்தது? ஒரு முறை ஒரு காகிதத்துண்டில் , ஜெய் ராதே
ப்ரேம மயீ” நரேன் உலகிற்கு போதிப்பான். எங்கும் சென்று உண்மைகளைப் பறைசாற்றுவான்
என்று எழுதிக் காண்பித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.நரேந்திரர் அதனை மறுத்து, என்னால் அதெல்லாம்
முடியாது, என்று கூறினார். அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் ” நீ செய்தேயாக வேண்டும். காலப்போக்கில் என் ஆற்றல்கள்
உன் மூலம் வெளிப்படும் என்றார்.
நாட்கள்
நகர்ந்தன. ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் யோகினை
அழைத்து பஞ்சாங்கம் கொண்டு வரச்சொன்னார். ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியிலிருந்து வரிசையாக
நாட்களையும் நட்சத்திரங்களையும் அதன் பலன்களையும்
படித்துக் கொண்டே போகும் படி க்கூறினார். மாதத்தின் கடைசி நாள் வந்ததும் மேலும் படிக்க
வேண்டாமென்று சைகை காட்டினார்.
No comments:
Post a Comment