Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-33

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-33

🌸

மிஸ் முல்லர் தந்தவேதனை-

................

  உடல்வேதனைகள் ஒரு புறம் இருக்க சுவாமிஜி மன வேதனைகளையும் ஏற்க நேர்ந்தது. அவரிடம் மிகுந்த ஈடுபாட்டுடனும் பக்தியுடனும்  இருந்த மிஸ்முல்லர் திடீரென்று சுவாமிஜியிடமிருந்து விலகுவதாக அறிவித்தார். சற்று பிடிவாத குணமும் முன் யோசனையின்றிச் செயல்படுவதும் அவரது இயல்புகளாக இருந்தன. சுவாமிஜியிடம்  வரும் முன்பு இப்படித்தான் திடீரென்று ஒரு நாள் தியாசபிகல் சொசைட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.1895 ஜுலை 16-ஆம் நாள் ”மெட்ராஸ் மெயில் பத்திரிகையில் அவரது அறிவிப்பு வெளியாயிற்று. அவரது திடீர் முடிவை ”மெட்ராஸ் மெயில் மகாபோதி ஜர்னல் போன்றவை மிகவும்  விமர்சித்து எழுதின. இந்தியா தன்னால் வீராங்கனைகளைத் தோற்று விக்க இயலாமல் போகலாம். அதற்காக இத்தகைய மூளை குழம்பிய, அடிக்கடி  நிறம் மாறுகின்ற பெண்களை ஏற்றுக் கொள்வதால் பெரிய நன்மை எதுவும் விளையப்போவதில்லை. மிஸ் முல்லரின் செயல் மிகவும் ஏமாற்றத்தை அளிப்பதாகும் என்று மெட்ராஸ் மெயிலில் செப்டம்பர் 30-ஆம் நாள் செய்தி வெளி வந்தது.  இன்னும் ஆயிரம் பிறவிகளாவது எடுத்த பிறகு தான் மிஸ் முல்லர் ஓர் உண்மையான இந்துப் பெண்ணின் குணங்களுடன் பிறக்க முடியும் என்று மகாபோதி ஜர்னல் எழுதியது.

 

 இதன் பிறகு தான் முல்லர் சுவாமிஜியிடம் வந்தார். பல நற்பணிகளில் சுவாமிஜிக்குத் துணை நின்றார், ஏன் பேலூர் மடத்து நிலமே அவரது நன்கொடையால்  வாங்கப் பட்டது தான். ஆனால் அவருடைய இயல்பான சுபாவம் திடீரென்று தலை தூக்கியது. அவர் சுவாமிஜியிட மிருந்து விலகுவதாக அறிவித்தார். நிவேதிதை எழுதுகிறார். ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமிஜி, தியானம், சமயசமரசம் என்று அனைத்தையும் தூக்கி எறியப்போவதாக மிஸ் முல்லர் என்னிடம்,  கூறுகிறார். ”இந்து மதம் கேவலமானது ”நாம ஜபம் பயனற்றது தியானம் கேவலமானது என்றெல்லாம்  கூறுகிறார். தாம் ஓர் உத்வேகமான கிறிஸ்தவப்பெண்ணாக, பொற்காலத்தை நோக்கிச் செல்வதாகவும் அவர்  சொன்னார். நான் சுவாமிஜியைப் பற்றி கூறிறேன் அதற்கு அவர், ஓ! நீயும் அதிக நாள் அவரை நேசிக்க மாட்டாய் என்று கூறிவிட்டார்.

 மிஸ் முல்லர் ஏன் விலகினார் என்பதற்கான காரணங்களை சாரதானந்தர் மெக்லவுடிற்குக் கீழ் வருமாறு எழுதுகிறார். பாவம்! மிஸ் முல்லர் புதனன்று( 1899 ஜனவரி 18) இங்கிலாந்திற்குத் திரும்பினார். அங்கே போய் வேறு வழியில் முயற்சிக்கப் போகிறாரோ என்னவோ! அவர் புறப்படும் முன்பு  அவருக்கு நிவேதிதை எழுதிய ஒரு கடிதம், ரோஜா, பழங்கள், மலர்கள் போன்றவற்றை காளி கிருஷ்ணனிடம் கொடுத்தனுப்பினோம். முல்லர் விலகியதற்கான சில காரணங்கள்  இவை-

 

1-  சுவாமிஜி சில சித்து வேலைகள் செய்யவும். அது சம்பந்தமான சங்கம் ஒன்று  தொடங்கவும்  முயற்சி செய்தார்.ஆனால் தோல்வியுற்றார். அவரது தோல்விபற்றி இந்தியாவின் சித்து  வேலைகளில் வல்ல பல குருமார்களும் கூறியிருந்தனர். அதனால் முல்லருக்கு சுவாமிஜியிடம் இருந்த அன்பு வாடி ஒரு பூ போல் உதிர்ந்து விட்டது.

2-  இந்தியா மந்திரவாதிகளின் நாடு. உணவு போன்ற வற்றைக்கூட நாம் மாய வேலைகளின் மூலம் தான் பெறுகிறோம்.  நமது அன்பிற்குரிய  பாட்டி( மிசஸ் சாராபுல்) நீங்கள் மற்றும் பலரை நாங்கள் வசியம் செய்து வைத்திருக்கிறோம். அதனால் தான் நீங்கள் எங்களிடம் பக்தி காட்டுகிறீர்கள்.

3-  தமக்குக் கிடைத்த இந்த அற்புத அனுபவங்களை இங்கிலாந்து முழுவதிலும் சொல்ல வேண்டுவது முல்லரின் புனிதக் கடமை. எனவே அவர் இங்கிலாந்திற்குச் சென்றாக வேண்டும்.

4-  நாங்கள் கிறிஸ்தவர்கள் ஆகாதவரை சுவாமிஜிக்கோ எங்களுக்கோ கதி கிடையாது. ஆனால் முல்லருக்கே ஞானஸ்நானம் ஆகவில்லை என்பது வேறுவிஷயம்.

 என்கிறார்  சுவாமிஜி.

 

 காரணங்கள் என்னவானாலும் மிஸ் முல்லர் விலகியது கிறிஸ்தவர்களுக்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தது. இன்டியன் சோசியல் ரிஃபார்மர் ” டிசம்பர் 25-ஆம் நாள் இப்படி எழுதியது. கிறிஸ்தவ சகோதரர்களுக்கு இதோ ஒரு கிறிஸ்மஸ் பரிசு! இது ஒரு செய்தி. இந்து மதத்தைப் பரப்புவதற்காக சுவாமி விவேகானந்தர் ஆரம்பித்திருந்த இயக்கத்துடன் வைத்திருந்த நமது தொடர்பை மிஸ் முல்லர் விலக்கிக் கொண்டார். நம்பகமான செய்தி இப்போது தான் கிடைத்தது.

 சுவாமிஜி அனைத்தையும் மௌனமாக ஏற்றுக் கொண்டார்.ஆன்மீகவாதிகள் யாரும் நோயுறக் கூடாது என்பது மிசஸ் ஜான்சனின் கருத்து. நான் புகைபிடிப்பது பாவம்  என்று அவருக்கு இப்போது படுகிறது. மிஸ் முல்லர் என்னைவிட்டுப் பிரிவதற்கும் எனது நோய் தான் காரணமாக இருந்தது. அவர்கள் கூறுவது சரியாகவே இருக்கலாம். நீங்கள் கூறுவதும் சரியாகவே இருக்கலாம். ஆனால் நான் உள்ளது உள்ளபடி  தான் இருக்க முடியும் என்று அவர் ஸ்டார்டிக்கு எழுதினார்.

 லியான் லான்ட்ஸ்பர்க் ( கிருபானந்தர்) தம்மை விட்டு விலகியபோதும் மாறாத அன்புடன் அவரை நேசித்தாரே அவ்வாறே முல்லரையும் நேசித்தார் சுவாமிஜி. இருப்பினும்  நேசித்தஒருவர் விலகுவது மனத்தை வருத்தத் தானே செய்யும்!தமது துயரை கிறிஸ்டைனுக்கு எழுதினார்  சுவாமிஜி. அவர் என்னைவிட்டுப் பிரிந்தது எனக்கு ஒரு பேரிடி. ஏனெனில் அவரை நான் அவ்வளவு நேசித்தேன். அவரும் எனது பணியில் மிகவும் துணையாக இருந்தார். அவரிடம் உலகின் செல்வம் ஏராளம் இருந்தது. அறிவுக் கூர்மையும் இருந்தது. ஆனால் என்னைப்போலவே அடிக்கடி உணர்ச்சிசவப் பட்டு, பயங்கரமானஆத்திரம் கொள்வார் அவர். அவருக்கு வயதாகி விட்டது. அதனால் அப்படி நடந்து கொள்கிறார் என்று அவரை மன்னிக்கலாம்.

 

 அது சுவாமிஜியின் வழி. யாருடைய குற்றங்களையும் அவர் பெரிதாகக்கொண்டதில்லை. யாருடைய குணங்களையும் அவர்  சிறிதாகக் கொள்வதும் இல்லை. பிறரது அணு போன்ற நன்மையை மலையாகக் கண்டார். மலை போன்ற தவறுகளை அணுவாகக் கண்டார். இத்தகைய உறவு காரணமாக அவர் பேசிய, சிந்தித்த, முயற்சித்த, சாதித்த ஒவ்வொன்றும் புரிந்து  கொள்ளப் பட்டன. புரியாவிட்டாலும் அவரது  வேகமும் ஆற்றலும்  ஒவ்வொருவரையும் தூண்டிக் கொண்டே இருந்தன. சகோதரத் துறவிகள் ஆனாலும் சரி, சீடர்கள் ஆனாலும் சரி. அவர்கள் சாதித்ததைக் கொண்டு சுவாமிஜி அவர்களை எடைபோடுவதில்லை. எத்தகைய உணர்வுடன் அவர்கள் அந்த வேலையைச் செய்தார்கள் என்பதை மட்டுமே அவர் பார்த்தார். தங்களால் இயன்ற அளவு செய்திருந்தால் போதும், பலன் என்னவானாலும் அது அவருக்குத் திருப்தி தான்.

 மனித ஆன்மாவில், அதன் எல்லையற்ற ஆற்றலில் அவர் எல்லையற்ற நம்பிக்கை வைத்திருந்தார். அந்த ஆற்றலையே அவர் பிறரிடம் தூண்டினார். அது தான் சுவாமிஜியின் வழியாக இருந்தது.

 

அத்வைத ஆசிரமம்-

..................

 1899 ஜனவரியில் சுவாமிஜியின் இரண்டு விருப்பங்கள் பூர்த்தியாயின. தட்சிணேசுவரக்கோயிலுக்கு அவர் செல்லக் கூடாது என்று தடை   விதித்தபிறகு  ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒரு நிரந்தரமான இடத்தில் கொண்டாட வேண்டும் என்பது அவரது பெரும் ஆவலாக இருந்தது. சென்றவருடம் அது நிறைவேறவில்லை.பேலூரில் நிலம் வாங்கப்பட்டிருந்தாலும் பணி முற்றுப்பெறாத நிலையில் இருந்தது. இந்த முறை பேலூர் மடத்தில் முதன் முதலாக ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப் பட்டது. அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சுவாமிஜி கலந்து கொண்டார். நிவேதிதை சொற்பொழிவாற்றினார்.

 

 இரண்டாவது விருப்பம் இமயமலையில் ஓர் ஆசிரமம் அமைப்பது. இது வரை தகுந்த ஓர் இடத்தை தேடிக்கண்டு பிடிக்க இயலாமல் இருந்தது. இப்போது அதற்கான ஓர் இடமும் கிடைத்தது. அல்மோரா மாவட்டத்தில் மலை உச்சியில் 6800 அடி உயரத்தில் அமைந்திருந்த மாயாவதி என்ற அழகிய இடத்தை அதற்காகத் தேர்ந்தெடுத்தனர். அடர்ந்த காடு, சுற்றிலும் அழகிய மலைகள், திரிசூல், நந்தா தேவி போன்ற பனி மலைச் சிகரங்களில் காட்சி என்று அந்த இடம்  ஆன்மீக வாழ்க்கைக்கு ஓர் அற்புதக் சூழ்நிலையைத் தருவதாக அமைந்திருந்தது.

 

 அந்த இடத்தில் அத்வைத ஆசிரமம் அமைக்க வேண்டும் என்பது சுவாமிஜியின் விருப்பம். அத்வைதம்  என்பது வேதாச்தத்தில் ஒரு பிரிவு. ஆதி சங்கரர் இதனைப் பரபலப்படுத்தினார். இந்த  நெறியில் உருவங்களோ கோயில்களோ வழிபாடுகளோ ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. மிக உயர்ந்த நிலைசாதகர்களுக்கே இந்த நெறி சாத்தியமாகும். ராமகிருஷ்ணத் துறவிகளில் சிலரேனும் அந்த உயர்ந்த நிலை சாதனைச்செய்ய வேண்டும் என்பது சுவாமிஜியின் விருப்பமாக இருந்தது. அதற்காக மாயாவதியில் அத்வைத ஆசிரமம் நிறுவ விரும்பினார் அவர். மார்ச் 1899- இல் அந்த ஆசிரமத்திற்காக எழுதிய அறிக்கையில் அதன் நோக்கத்தைக் கீழ் வருமாறு குறிப்பிட்டார் அவர்.

 யாரிடம் பிரபஞ்சம் இருக்கிறதோ, யார்  பிரபஞ்சத்தில் இருக்கிறாரோ, யார் பிரபஞ்சமாக  இருக்கிறாரோ............. அவரை அறிந்து,  அதன் மூலம் பிரபஞ்சத்தை அறிந்து , அவரையும் பிரபஞ்சத்தையும் நமது ஆன்மாவாக அறிவது மட்டுமே எல்லா பயத்தையும் அழித்து, துன்பத்தை ஒழித்து, எல்லையிலா சுதந்திரத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறது. தனி மனிதர்களின் வாழ்க்கையை உயர்த்தவும், மக்கள் சமுதாயத்தின் பண்பை உயர்த்தவும், இந்த ஒப்பற்ற உண்மை எந்த விதமான  கட்டுப்பாடும் இல்லாமல் வெளிப் படுவதற்கான வாய்ப்பை அளிப்பதற்காகவும் இந்த உண்மை முதன் முதலில்தோன்றிய இடமாகிய இமயமலையின் உச்சியில்  இந்த அத்வைத ஆசிரமத்தைத் தொடங்குகிறோம்.

 ஆங்கில மாத இதழாகிய பிரபுத்த பாரதத்தின் அலுவலகமும் அச்சுக் கூடமும் மாயாவதிக்கு மாற்றப் பட்டது. சுவாமிஜியின் சீடரான சுவரூபானந்தர் அதன் ஆசிரியர் ஆனார். அத்வைத ஆசிரமம் உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்த சேவியர் அதன் பதிப்பாளர் ஆனார்.

 

யோகானந்தர் மறைகிறார்.

..........

 1899 மார்ச் . கிரீஷின் வீட்டில் அருகிலுள்ள ஒரு வாடகை வீட்டில் அன்னை ஸ்ரீசாரதா தேவி தங்கியிருந்தார். அவரது சேவைக்காக  யோகானந்தரும் உடன்  இருந்தார். ஆனால் அவருக்கே உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்க நேர்ந்தது. அங்கே  யோகானந்தர் மகாசமாதி அடைந்தார். அவரது கடைசிநேரம் என்பது தெரிந்து தானோ என்னவோ சுவாமிஜி அன்று அங்கே சென்றார். உயிர் பிரியும் வரை அவரது அருகிலேயே இருந்தார். நாம ஜபம் போன்ற எதுவும் செய்யவில்லை. தமது அன்புச் சகோதரரை அமைதியாகப் பிரிந்து செல்லுமாறு விட்டு விட்டார். மாலை 3 மணி  அளவில் சுவாமிஜி யோகானந்தரின் திருமேனிக்கு ஆரதி செய்தார்.-நைவேத்தியம் செய்தார். சுடுகாட்டிற்கு அவர் போகவில்லை. மௌனமாக அமர்ந்திருந்தார். ஒருசெங்கல்விழுந்து விட்டது. இனி  ஒவ்வொன்றாக ஓடும் கூரைகளும் எல்லாம் விழுந்து விடும், என்று அமைதியாகக் கூறினார் அவர்.

 

 1899 மார்ச்சில் கல்கத்தாவில் பிளேக் நோய் மீண்டும் தலை தூக்கியது. தினசரி பல உயிர்களைப் பலி வாங்கிய அந்த நோய்  மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. 1897- இல் இந்தநோய்  வந்த போது, நோய் பரவுவதைத் தடுக்கவும் நோயாளிகளைக் காக்கவும் அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு காரணங்களால் இந்த முறை அரசாங்கம் கண்டும் காணாதது போல் இருந்து விட்டது. மக்கள் அறியாமையில் இருந்தால் அரசாங்கம் என்ன செய்ய முடியும். இந்த ”சுதேசிகளைக் சுத்தம்  செய்ய இயலாது என்று கூறி அரசாங்கம் கைவிரித்து விட்டது.

 சுவாமிஜியால் அவ்வாறு இருக்க இயலவில்லை. பிளேக் நோய் மீண்டும் தாக்கும் என்பதை அவர் எதிர்பார்த்தே இருந்தார். எனவே உடனடியாக நிவாரணப் பணியில்  இறங்கினார். மார்ச் 31-ஆம் நாள் நிவாரணப் பணி தொடங்கியது. நிவேதிதை அதற்குத் தலைவராகவும்  செயலாளராகவும் இருந்தார். சதானந்தர் அலுவலக நிர்வாகியாகவும் , சிவானந்தர், நித்யானந்தர், ஆத்மானந்தர் ஆகியோர் துணை நிர்வாகிகளாகவும் செயல் பட்டனர்.

 

 சுவாமிஜியின் உடல்நிலை அப்போது மிகவும் சீர்குலைந்திருந்தது. அது மட்டுமின்றி, அவரது சகோதரத் துறவியான யோகானந்தர் மகாசமாதி அடைந்து ஒரு வாரம்  தான் ஆகியிருந்தது. அந்தத் துயரிலிருந்தும் அவர் மீளவில்லை. ஆனால் சுவாமிஜி தமது உடல், மனத் துயரங்கள் எதையும் பொருட்படுத்தாமல் , பிளேக் கடுமையாகப் பரவி வந்த குடிசைப் பகுதிகளில்  சென்று தங்கினார்.இது அந்த மக்களுக்குத் தைரியத்தை ஊட்டும் என்று கருதினார் அவர்.

நோயைக்  கட்டுப்படுத்துவதற்கு அந்தக் குடிசைப் பகுதிகளைச் சுத்தமாக  வைத்திருப்பது மிகவும்  அவசியம் என்பது பற்றி நிவேதிதை எவ்வளவு எடுத்துக் கூறியும் மக்கள்  அதனைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. எனவே நிவேதிதை தாமே செயலில் இறங்கினார். ஒரு நாள் காலையில் கையில் துடைப்பத்தை  எடுத்துக் கொண்டு தெருத்தெருவாகச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். இதுமக்களிடையே மிகுந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவருடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினர். சதானந்தர் பலரிடமும் நன்கொடை வசூலித்து, ஆட்களை நியமித்து, தாமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு  தெருக்களைச் சுத்தம் செய்தார். நோயாளிகளுக்கு உதவினார். அவரது தன்னலமற்ற  தொண்டைக் கண்ட பல இளைஞர்கள்  அவருடன் சேர்ந்து  பணியாற்றினர். அவரது வாழ்க்கையினால் மிகவும்  கவரப்பட்ட அவர்கள் தங்களை ”சதானந்தரின் நாய்கள் என்று தாங்களே கூறிக்கொள்ளும் அளவுக்கு அவரிடம் ஈடுபட்டனர். இவ்வாறு அனைவருமாக இந்தக் கொடிய நோயைக் கட்டுப்படுத்துவதில் முனைந்து ஈடுபட்டனர்.

 

 காளியின் முன்னால்

..............

 சுதந்திரமாக இருக்க என்னைப்போல் இவ்வளவு தூரம் முயன்றதும்  யாருமில்லை. சுற்றிலும் இவ்வளவு கர்ம பந்தங்களும்  என்னைப்போல் யாருக்கும் இல்லை. அதிகமாக எது என்னை வழி நடத்தியிருக்கிறது என்று நினைக்கிறாய்- அறிவா, இதயமா- நமது வழிகாட்டி தேவியே, நிகழ்ந்த எதுவும் , நிகழ இருக்கின்றஎதுவும் அவளது ஆணைப் படியே! என்றுஎழுது கிறார் சுவாமிஜி.

 

1899 மே மாதத்தில் ஒரு நாள். சுவாமிஜிக்குத் திடீரென்று காளிகாட்டில் உள்ள காளி கோயிலுக்குச்செல்ல வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஓரிரு துறவிகளை உடன் அழைத்துக்கொண்டு அவர் கோயிலுக்குச்சென்றார். கோயில் அதிகாரிகள் அவரை அன்புடன் வரவேற்றனர். நேராகச் சென்று தேவியின்  திருமுன்பு அமர்ந்தார் சுவாமிஜி. அவரது பெரிய விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது. செம்பருத்திப் பூக்களைக் கையில் எடுத்து அவற்றைச் சந்தனத்தில் தோய்த்து பக்தியுடன் தேவிக்கு  அர்ப்பணித்தார். பின்னர் மற்றவர்களையும் அவ்வாறு செய்யுமாறு கூறினார். பல ஸ்தோத்திரங்களை ஓதி தேவியைத் துதித்தார்.

 

 அடுத்த மாதத்தில் மீண்டும் மேலை நாட்டுப் பயணம் செல்ல இருக்கின்ற நிலையில், தேவியின் அருளாசிகளை நாடி அவர் ஒரு வேளை காளி கோயிலுக்குச்சென்று அவளை வழிபட்டிருப்பாரோ!

 

உலக குரு

................

மேலை நாடுகள்- இரண்டாம் பயணம்

...................

சுவாமிஜி இரண்டாம் முறையாக 1899 ஜுன் 20- ஆம் நாள் மேலை நாடுகளுக்குப் புறப் பட்டார். துரியானந்தரும் நிவேதிதையும் அவருடன் சென்றனர். அவரது பயணத்திற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, மிகவும் சீர்குலைந்த அவரது உடல் நிலை முன்னேறும் என்ற நம்பிக்கை. இரண்டு முடிவற்று நீள்கின்ற இந்தியப் பணிகளுக்காகப் பணம் திரட்டுவதற்கான முயற்சி.

 

 துரியானந்தரை மேலை நாடுகளுக்கு வருமாறு சம்மதிக்க செய்வது அவ்வளவு  சுலபமாக இருக்கவில்லை. வைதீகமும் ஆசாரமும் தவமும் அவரது சிறப்பு அம்சங்களாகத் திகழ்பவை. ஆன்மீக உன்னதங்களை அடைந்திருந்த அவர் ” சொல் வன்மையும் கம்பீரக் குரலும் உடையவர் என்று சுவாமிஜியாலேயே புகழப்பட்டவர்.

மேலைநாடுகளுக்குச் செல்வதற்கு அவர் மறுத்தபோது சுவாமிஜி, இதோ பார், ஹரி, நீ அங்கே வந்து  ஒன்றும்  செய்ய வேண்டாம். அவர்களிடையே வாழ்ந்தால் போதும் என்று கூறினார். ஆனாலும் பொது வாழ்க்கையை அறவே விரும்பாத துரியானந்தர் மறுத்துவிட்டார். உடனே சுவாமிஜி துரியானந்தரின் அருகில் சென்றார். அவரது தோளில் தமது கைகளை வைத்து ஆதரவாகப் பற்றினார். தமது  தலையை அவரது நெஞ்சில் சாய்த்தார். சுவாமிஜியின் கண்களில் கண்ணீர் திரண்டது. விம்முகின்றகுரலில் துரியானந்தரிடம், குருதேவரின் திருப்பணியை நிறைவேற்றுவதற்காக அங்குலம்  அங்குலமாக என் வாழ்க்கையையே  பணயம் வைத்து, இன்று மரணத்தின் விளிம்பில் நிற்கிறேனே! கைகளைக் கட்டியபடி நீ பார்த்துக்கொண்டு தான் நிற்பாயா?வந்து இந்தப் பாரத்தைச் சுமப்பதில் எனக்குத்தோள் கொடுக்க மாட்டாயா? என்று கேட்டார். சுவாமிஜியின் குரல் கம்மியது. அதற்கு மேலும் துரியானந்தரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை, புறப்பட்டு விட்டார்.

 

 அமெரிக்காவிற்குத் தம்முடன் சில வேதாந்த நூல்களை எடுத்துச்செல்ல விரும்பினார் துரியானந்தர். அதற்கு சுவாமிஜி, புத்தகங்களும் படிப்பும் எல்லாம் அவர்கள்  வேண்டிய அளவு பார்த்தாகிவிட்டது. ஷத்திரிய ஆற்றலை அவர்கள் கண்டு விட்டார்கள். பிராமண ஆற்றலை அவர்களுக்குக் காட்ட விரும்புகிறேன்.” என்றார் சுவாமிஜி. இந்தியாவைப் பற்றியும் இந்திய ஆன்மீகத்தைப் பற்றியும் துணிவாக எடுத்துக் கூறி, எதிர்த்து வந்த தடைகளையெல்லாம் தகர்ந்தெறிந்து, புயல் வேகத்தில் அமெரிக்கா எங்கும் சுற்றி சொற்பொழிவுகள் செய்த தம்மை அமெரிக்கர்கள் கண்டு விட்டார்கள். இனி, இந்தியப் பாரம்பரியத்தின் பண்பாட்டில் வளர்ந்த, தியான வாழ்வை முக்கியமாகக்கொண்ட துரியானந்தரை அவர்கள் காண வேண்டும் என்பது சுவாமிஜியின் விருப்பமாக இருந்தது.

 நிவேதிதை தமது தங்கையின் திருமண விஷயமாகவும், பெண்கள் பள்ளிக்கான நிதி திரட்டுவதற்காகவும் சுவாமிஜியுடன் செல்வதென முடிவு செய்தார். புறப்படுவதற்கு ஓரிரு வாரங்கள் முன்பே நிவேதிதை அன்னை ஸ்ரீசாரதாதேவி யின் வீட்டில் சென்று தங்கத் தொடங்கினார். அன்னை அவருக்கு ஒரு நாள் விருந்தளித்தார்.

 

சுவாமிஜி புறப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு பல பிரமுகர்கள் வந்து அவரைச் சந்தித்தனர். சுவாமிஜியும் சென்று சில நண்பர்களைச் சந்தித்தார். ஜீன் 19-ஆம் நாள் இரவு சுவாமிஜிக்கும் துரியானந்தருக்கும் பிரிவுபசார விருந்து  அளிக்கப் பட்டது. பலர் பேசினர். சுவாமிஜியும் ”துறவு அதன் லட்சியமும் செயல் முறையும் என்பது பற்றி பேசினார். புறப்படுகின்ற அன்று அன்னை தமது வீட்டில் சுவாமிஜிக்கும் துரியானந்தருக்கும் மற்ற துறவியருக்கும் விருந்தளித்தார்.

 

 சுவாமிஜியை வழியனுப்ப பலர் துறைமுகத்திற்கு வந்திருந்தனர். அன்று சாரதானந்தரின் தம்பியும் அவர்களுடன் அமெரிக்கா செல்வதாக இருந்தது. எஸ். எஸ், கோல்கொண்டா என்ற கப்பலில் நால்வரும் ஏறினர். கப்பல் புறப்பட்டது.

 இந்தப் பயணம் சுமார் 40 நாட்கள் நீடித்தது. வங்கப் பத்திரிகையான உத்போதனின்  ஆசிரியரான திரிகுணாதீதர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சுவாமிஜி இந்தப் பயணம் பற்றிய தமது நினைவுக் குறிப்புகளைத்தொடர்ந்து எழுதி வந்தார். அது ஒரு தொடராக வெளியாயிற்று. சுவாமிஜியின் வரலாற்று அறிவிற்கும் நகைச்சுவை உணர்விற்கும் சான்றாக நிற்பது இந்தக் கட்டுரை. அதுமட்டுமின்றி, இலக்கிய நடையில் கட்டுரைகள் எழுதப் பட்டு வந்த அந்தக் காலத்தில் பேச்சு மொழியில் இதனை எழுதினார் சுவாமிஜி. இதனை மிகவும் புகழ்ந்தார் ரவீந்திரநாத் தாகூர். பின்னாளில் சுவாமிஜியின் இந்தப் பாணி ஒரு முன்னோடியாக ஏற்றுக் கொள்ளப் பட்டு பலரும் அவ்வாறு எழுதத் தொடங்கினர். சுவாமிஜி எழுதிய ”கீழை நாடும் மேலை நாடும் என்ற கட்டுரையைப் பற்றி தாகூர், சாதாரண பேச்சு மொழியை  எப்படி உயிருணர்வு மிக்கதாகவும் ஆற்றல் வாய்ந்ததாகவும்  எழுத முடியும் என்பதை இந்தக் கட்டுரையைப் படிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

 

  சென்னை துறைமுகத்தில்

.........

 அமெரிக்க செல்லும்  வழியில் ஜுன் 24-ஆம் நாள் கப்பல் சென்னையை அடையும் என்ற  செய்தி எட்டியதிலிருந்தே சென்னையிலும் சுவாமிஜியைக் காண்பதற்காகப் பெருத்த உற்சாகம் நிலவியது.ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கல்கத்தாவில் பிளேக் நோய் பரவியிருந்த காரணத்தால் யாரும் சென்னையில் இறங்க முடியாமல் போயிற்று. எவ்வளவோ முயன்றும் கப்பலில் உள்ளவர்கள்  இறங்குவதற்கோ, சென்னையில் உள்ளவர்கள் கப்பலில் செல்வதற்கோ அரசு அனுமதி கிடைக்கவில்லை.  இதில் வினோதம் என்னவென்றால் வெள்ளையர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு கிடையாது. அவர்கள் போவதற்கும் வருவதற்கும் அனுமதி உண்டு. ”சுதேசி களுக்கு மட்டுமே அந்த அனுமதி மறுக்கப் பட்டது. வெள்ளையன் சுத்தமாக இருப்பவன். சுதேசி யாராக இருந்தாலும் அவன் அழுக்கானவன். பிளேக் நோயைப் பரப்பி விடுவான்! எனவே அவனுக்கு அனுமதி இல்லை.

 

 தாய் நாட்டிலேயே அடிமைகளாக வாழ்வதன் இந்தக் கொடுமை சுவாமிஜியை  நிலைகுலையச்செய்தது. கூண்டில் அடைபட்ட சிங்கம்போல் அவர் அங்குமிங்கும் உலாவினார், அவர்கள் ஏன் என்னைக் கைது செய்யக் கூடாது? ஏன் உன் உயிரை எடுக்கக் கூடாது? என்று மீண்டும் மீண்டும் கூறினார். உடன் இருந்த துரியானந்தர், ஏன்? உங்களைக்கைது செய்வதாலோ கொல்வதாலோ என்ன நடந்து விடும்? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, இந்த நாடு முழுவதுமே என்னை  எதிர்நோக்கி நிற்பதை நீ பார்க்கவில்லையா? எனக்கு எதிராக ஆங்கிலேயர்கள் ஏதாவது செய்தால் நாடு முழுவதுமே ஒரு சீறிக் கிளம்பிவிடும் என்றார்.

 

 எப்படியானாலும் அனுமதி கிடைக்கவில்லை. எனவே  நூற்றுக்கணக்கான பக்தர்களும் துறவியரும் சிறு சிறு படகுகளில் சென்றுகப்பல் தளத்திற்கு வந்த சுவாமிஜியைக் கண்டு மகிழ்ந்தனர். ராமகிருஷ்ணானந்தரும் நிர்பயானந்தரும் பழங்கள், மவர்கள் என்று பல்வேறு காணிக்கைகளைக்கொண்டுசென்றிருந்தனர். சென்னை அன்பர்கள் பலரும் சுவாமிஜியை தரிசிக்கச் சென்றிருந்தனர். சுவாமிஜியும் கப்பல் தளத்தின்  இரும்புத் தடுப்பில் சாய்ந்தவாறே அவர்களுடன் பேசினார். ராமகிருஷ்ணானந்தர் கேட்டிருந்ததன் படி சுவாமிஜிமண் ஜாடியில் கங்கை நீர் கொண்டு வந்திருந்தார். அதை ஒரு கயிற்றில் கட்டி கீழே கொடுத்தார். பின்னர் அந்தக்  கயிற்றை வெட்டுவதற்காக கத்தி ஒன்றையும் மேலிருந்து கீழே போட்டார் சுவாமிஜி.

 

அளசிங்கரிடம் சுவாமிஜியின் அன்பு

............

 சுவாமிஜியிடம் பேசுகின்ற வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதற்காக  அளசிங்கர் கொழும்பிற்குச்  செல்வதற்கான டிக்கட் வாங்கிக்கொண்டு ஒரு பயணியாக உள்ளே சென்றுவிட்டார். ஜாதிக் கட்டுப் பாடுகள் அவரைக் கடற்பயணம் செய்ய அனுமதிக்காத போதிலும் சுவாமிஜியிடம் கொண்டஈடுபாட்டின் காரணமாக அவர் இலங்கைக்குச் சென்றார். பிரம்மவாதின் பத்திரிகைபற்றி சுவாமிஜியிடம் ஆலோசனை கேட்பதும் அவரது நோக்கமாக இருந்தது.

 

 மழித்த தலை, குடுமி, வேட்டி, நெற்றியில் தென்கலை நாமம் என்று அளசிங்கர் சுத்த வைதீக பிராமணராக, எதைப் பற்றியும், கவலைப் படாதவராக  கப்பல் தளத்தில் உலவியதும், கப்பலிலுள்ள எதையும் சாப்பிடக் கூடாது என்பதற்காக தாம்  கொண்டு வந்திருந்த பொரி, கடலை போன்றவற்றை அவ்வப்போது கொறித்துக் கொண்டதும் பார்ப்பவர்களுக்கு வினோதமாக இருந்தது.

 

சுவாமிஜியிடம் அளசிங்கர் அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்தார் என்றால் சுவாமிஜி அளசிங்கரிடம் கொண்ட அன்பு எல்லையற்றதாக இருந்தது. ஒரு நிகழ்ச்சியைக் காண்போம். மெக்லவுட் பம்பாயில் அளசிங்கரைச் சந்தித்திருந்தார். அவர் ஒரு வைதீக இந்தியரைச் சந்திப்பது அது வே முதல் தடவை. பஞ்சகச்சம், குடுமி, நெற்றியில் நாமம் போன்றவை மெக்லவுட்டிற்குப் புதியவை. புதுமையானவை. அளசிங்கரை விமர்சிக்கவோ கேலி செய்யவோ கூடாது என்று சுவாமிஜி எச்சரித்திருந்தும் மெக்லவுடால் தம்மைக் கட்டுப் படுத்திக் கொள்ளஇயலவில்லை. காஷ்மீரில் இருந்தபோது ஒருநாள் அவர் பேச்சுவாக்கில், என்ன அறிவீனம்! இந்த அளசிங்கர் இப்படி நெற்றியில் படம் வரைந்திருக்கிறாரே! என்று கூறிவிட்டார். அவ்வளவு தான், சுவாமிஜி  ஆத்திரத்துடன் திரும்பி, வாயை மூடு, இனி அவனைப் பற்றி ஏதாவது சொன்னால் அப்போது தெரியும் சேதி! அப்படி நீ என்ன பெரிதாகச் செய்து சாதித்து விட்டாய்? என்று சாடினார். மெக்லவுட்டின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அளசிங்கர் வீடு வீடாகச்சென்று தாம் அமெரிக்கா செல்வதற்காகப் பணம் சேர்த்ததும், தமது வெற்றிகளுக்குப் பின்னால் அவரது தன்னலமற்ற பணியின் பங்கு இருப்பதும் சுவாமிஜி அறிந்தவை. மெக்லவுட் அறியாதவை. அதனால் தான் அவரைப் புறச் சின்னங்களுக்காக விமர்சிக்கக் கூடாது என்று சுவாமிஜி கூறினார். அதை மீறி மெக்லவுட் செயல்பட்ட போது அவருக்கு ஆத்திரம் வந்தது

-.

  கொழும்பில்

.............

 கப்பல் கொழும்பை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த  ஜீன் 27 மாலையை இப்படி வர்ணிக்கிறார் நிவேதிதை. இது அமைதியின் வேளை.  ஒவ்வொரு நாளும் கதிரவனின் ஒளி கரைகின்ற இந்த வேளையில் கடல் கன்னி ஒரு புது ராகம் இசைக்கிறாள்- அது ஒரு சோக ராகம்! அலைகளின்  ஓசையுடன் கலந்து கரைகின்ற ஒரு மெல்லிய இழையாக அது ஒலிக்கின்றது. ஒவ்வோர் இரவிலும், இரவு முழுவதிலும் அவளது சோகத்தின் முணு முணுப்பாக இது ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இன்று மட்டும் அவள் ஏதோ ஒரு பெயரை உச்சரிப்பது போல் உள்ளது. அது- சீதா என்ற பெயர்! அலைகள் உயர்ந்து எழுந்து கப்பலில் மோதும்போதோ  அது ஜெய சீதா ராம்! சீதாராம்! என்று ஒலிப்பது  போல் உள்ளது. மீண்டும் மீண்டும் கேட்டபடி அது உங்கோ தொலைதூரத்தில் மௌனத்தில் கரைகிறது.

ஜுன் 28-ஆம்  நாள் கப்பலில் கொழும்பை அடைந்தது. சென்னைரயப் போலன்றி அங்கே சுவாமிஜி இறங்க அனுமதி கிடைத்தது. நாதஸ்வர மேளங்களுடன் சிறப்பாக வரவேற்கப் பட்டார் அவர். கட்டுக் கடங்காத கூட்டம்  கூடியிருந்தது. ஜெய சிவா! ஜெயசிவா! என்ற கோஷம்  விண்ணைப் பிளந்தது. சுவாமிஜியைச் சிவ பெருமானின் அவதாரமாகவே அவர்கள் கொண்டாடினர்.  பின்னர் சுவாமிஜிக்கு பழமும் பாலும் அளித்தனர். அன்று முழுவதும் சுவாமிஜி இலங்கையில் இருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிளகுத் தண்ணி யும் (ரசம்), இளநிரும் சாப்பிட்டேன் என்று எழுதுகிறார் அவர்.

 

 பயணம்-

..........

 

 இலங்கையிலிருந்து ஏடன், நேப்பிள்ஸ் வழியாகப் பயணம் தொடர்ந்தது. படிக்கவோ, உத்போதன் பத்திரிகைக்காக எழுதவோ, நிவேதிதை மற்றும் துரியானந்தருடன் பேசவோ செய்தபடி இருந்தார் சுவாமிஜி. அவருடைய உடல்நிலை தேறியது. அவருக்கென்று உடற்பயிற்சிகள்  இருந்தன. தாம் தவறினால் நினைவூட்டுமாறு துரியானந்தரிடம் கூறவும் செய்திருந்தார் அவர். ஆரம்பத்தில் சில நாட்கள்  தவறாமல் உடற் பயிற்சி செய்தார், பின்னர், பேசிக்கொண்டே இருப்பதில் உடற்பயிற்சியை மறந்துவிடுவார். துரியானந்தர் நினைவூட்டினால், இன்று முடியாது. இப்போது என் உடல்நிலை நன்றாகத் தான் இருக்கிறது. அது மட்டுமின்றி, நான் இப்போது நிவேதிதையுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவள் ஓர் அயல்நாட்டுப் பெண். என்னிடமிருந்து இவற்றையெல்லாம் கற்றுக் கொள்வதற்காகச் சொந்த நாட்டையே விட்டு வந்திருக்கிறாள். அவள் நல்ல அறிவாளி. அவளுடன் பேசுவதில் நானும் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஏதே தோ காரணம்  கூறி உடற்பயிற்சியைத் தட்டிக் கழித்துவிடுவார். ஆனால்  எப்படியோ அவரது உடல்நிலை மிகவும் முன்னேறியது.

 

 அலைகள் ஓய்ந்திருக்கின்ற சில வேளைகளில் சுவாமிஜி கப்பல் தளத்தில் உலவுவார். அரசிளங்குமாரனைப்போன்ற கம்பீரமான நடை, வசீகரமான  உடை, நிலவின் கிரணங்களைப்போன்ற மேனி வண்ணம், தன்னம்பிக்கையும் துணிச்சலும் திரண்டு நிற்பது போன்ற தோற்றம், கீழை நாடுகளின் பெருமைக்கும் உறுதிக்கும், சான்றாகத் திகழ்கின்ற வடிவம் என்று அவரது தோற்றத்தை வர்ணிக்கிறார் நிவேதிதை.

 

   இந்த நாட்களை ஒரு தீர்த்த யாத்திரையாகவேக் கருதினார் நிவேதிதை. சுவாமிஜியுடன் இந்த ஆறுவாரப் பயணம் எனது வாழ்க்கையின் மிக மிக உன்னதமான நாட்கள் ஆகும். உலகைச் சுற்றி வருகின்ற சுற்றுலா கூட குருவுடன் செல்வதானால் தீர்த்த யாத்திரையாகிவிடும் என்று எழுதுகிறார் அவர். சுவாமிஜி பேசுவதைக்கேட்பதும், அவரது திருவடிகளின் கீழ் வாழ்வதும் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவை என்று நினைவு கூர்கிறார் அவர். சிவராத்திரி, விக்கிரமாதித்தனின் சிம்மாசனம், பிருதிவிராஜ், புத்தர்என்று கதைகள் ஒரு புறம். ஜாதி, மனித குலம், வரலாறு என்றெல்லாம் சிந்தனைகள் ஒரு புறம்! இவ்வாறு தொடர்ந்தன சுவாமிஜியின் சிந்தனை அலைகள்! சிலவேளைகளில் அவரது சிந்தனை ஓட்டத்தை தொடர முடியாமல் திணறு வாராம் நிவேதிதை. அப்போதும் சுவாமிஜி, இதற்கு மேலும் என்னால் முடியாது என்றுகூறிவிடுவார். சுவாமிஜியும் நிறுத்திவிடுவார். சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்வார்! சுவாமிஜி தன்னிடம் கூறுபவை அனைத்தும் தனக்காக அல்ல, பிறருக்காக, அவர் கூறுவதை ஏற்று வாங்கி பிறருக்கு அளிக்க வேண்டியது தன்னுடைய கடமை என்று உணர்ந்தார் நிவேதிதை. சுவாமிஜி கூறியவற்றைக் குறிப்பெடுத்து, தமது The Master as I  Saw Him என்ற நூலில் சேர்த்தார் அவர்.

 

கப்பலில் பயணம் செய்தவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் போகேஷ். திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியிருந்தன. தன் மனைவியுடனும்  6 குழந்தைகளுடனும்  வந்திருந்தார் அவர். குழந்தைகளைக் கப்பல் தளத்தில் விட்டு விட்டு அவர்கள் மணிக்கணக்காக  எங்காவது மூலையில் அமர்ந்து பேசுவதும், சிரிப்பதும் களிப்பதுமாகப்பொழுது போக்கினார்கள். போகேஷ் தம்பதிகளின் போக்கு சுவாமிஜிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. தமது எரிச்சலைத் தமது பயணக் கட்டுரையில் வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.

 

 எங்கள் கப்பலில் இரண்டு புரோடஸ்டன்ட் மிஷனரிகள் பயணம்  செய்கின்றனர். ஒருவர் அமெரிக்கர். குடும்பத்துடன் பயணம் செய்கிறார், பெயர் போகேஷ். அவருக்குத் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. பிள்ளைகள் ஆறு. இது கடவுளின் விசேஷக் கருணை என்று கப்பல் பணியாளர்கள் கூறுகின்றனர்.ஆனால் பிள்ளைகள் அவ்வாறு நினைக்க வழியில்லை என்றுதான் தோன்றுகிறது. மிகஸ் போகேஷ் தளத்தில் ஓர் அழுக்கு துணியை விரித்து அதில்  பிள்ளைகளைப் படுக்க வைத்துவிட்டுப்போய் விடுவார். அவர்கள் உருண்டு, புருண்டு , உடம்பையெல்லாம் அழுக்காக்கிக்கொண்டு , அழுது கூச்சலிட்டுத் தொந்தரவு செய்கின்றனர். தளத்தில் நடக்கவே பயணிகள் பயப்படுகின்றனர். எங்கே அந்தக் குழந்தைகள் மீது விழுந்து, அவற்றின் உயிரைப் பறிக்க நேருமோ என்ற பயம் தான் காரணம்! இளைய குழந்தையை ஒரு தொட்டிலில் படுக்கவைத்து விட்டு, போகேஷும் மனைவியும் கட்டிப் பிடித்துக்கொண்டு ஒரு மூலையில் மணிக்கணக்கில் ஒடுங்கிக் கிடக்கின்றனர். இது தான் ஐரோப்பிய நாகரீகம்! பொது இடத்தில் வாயைக் கொப்பளிப்பதும், பல் துலக்குவதும் கூட எவ்வளவு அநாகரீகமான  செயல்! இவற்றைக் கூடத் தனியிடத்தில் அல்லவா செய்ய வேண்டும்! இதில்  கட்டிப் பிடிப்பதையும் கூடிக் குலவுவதையும்  பொது இடங்களில் தவிர்ப்பது  எவ்வளவு நாகரீகமாக இருக்கும்! இந்த நாகரீகத்தின் பின்னால் தான் நீங்கள் ஓடுகிறீர்கள். புரோடஸ்டன்ட் மதம் வட ஐரோப்பாவிற்கு எந்த  அளவுக்கு நன்மை செய்திருக்கிறது. என்பதை அறிய வேண்டுமானால் இந்த புரோடஸ்டன்ட் மிஷனரி களைத் தான் பார்க்க வேண்டும். பத்துக்கோடி ஆங்கிலேயர்களும் இறந்து, இந்த மிஷனரிகள் மட்டும் உயிரோடிருந்தால்  போதும், இருபது ஆண்டுகளில் மற்றுமொரு பத்துக்கோடி மக்கள் உருவாகி விடுவார்கள்.

 

 ஆனால் அந்தக் குழந்தைகளின் நிலைமையைக் கண்ட நிவேதிதையால் அவர்களை  அப்படியே விட முடியவில்லை. எனவே ஒரு தாய்போல் அவர்களைப் பராமரிக்கத் தொடங்கினார் அவர். ”டூட்டில் என்ற சிறுமி தனது தந்தையுடன் பயணம் செய்கிறாள் தாய் இல்லை. டூட்டிலுக்கும் போகேஷின் குழந்தைகளுக்கும்  நமது நிவேதிதை தாயாகி விட்டாள் என்று எழுதுகிறார் சுவாமிஜி.

 

 லண்டனில்

...........

 42-நாள் பயணம் ஜுலை 31-ஆம் நாள் லண்டனில் நிறைவுற்றது. காலை 6 மணி வேளையில் கப்பல் லண்டனை அடைந்தது. இரண்டரை வருடங்களுக்கு முன்பு நூற்றுக் கணக்கானோர் வந்து கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த அந்த இடத்தில் இப்போது சுவாமிஜியை வரவேற்க நிவேதிதையின் தாய், சகோதரி, மிஸ் பேஸ்டன் என்று மிகச்சிலரே இருந்தனர். அமெரிக்காவிலிருந்து அவரது சீடர்களான கிறிஸ்டைனும், மேரி ஃபங்கேயும் வந்திருந்தனர். சுவாமிஜியின் லண்டன்பணிகளுக்கு  நிர்வாகியாக இருந்த ஸ்டர்டிகூட வரவில்லை. தாம் எங்கோ வெளியூர்  செல்வதாக கூறிவிட்டு அவர் சென்று விட்டிருந்தார். இங்கிலாந்து அன்பர்கள் யாரும், குறிப்பாக ஸ்டர்டி, அங்கே வராதது, லண்டன் பணிகள் அவ்வளவு  சிறப்பாக இல்லை என்பதை சுவாமிஜிக்கு உணர்த்தியது.

-

ஸ்டர்டியின் தவறான போக்கு-

............

 சுவாமிஜி 1896-இல் லண்டனில் இருந்தபோது பணிகள் மிகச் சிறப்பாக நடை பெற்றன. பொறுப்பை ஸ்டர்டியிடம் ஒப்படைத்துவிட்டு அமெரிக்காவிற்குச் சென்றார் சுவாமிஜி. ஆனால் ஸ்டர்டியால் பணிகளைச் சிறப்பாக நடத்த இயலவில்லை. ஒரு தலைவராக ஏற்க  மற்றவர்கள் தயாராக இல்லை. வருமானம் குறைந்தது. இதற்குள் சுவாமிஜி இந்தியாவிற்கு வந்து விட்டிருந்தார். பணிகள் முற்றிலுமாக நின்று போவதற்கு முன்னால் ஒரு முறை சுவாமிஜி, அங்கே வந்தால் நன்றாக இருக்கும் என்றுவிரும்பினார் ஸ்டர்டி. அதற்காக 1897மார்ச்- ஏப்ரலில் சுவாமிஜியை அழைக்கவும் செய்தார். நிலைமையை நன்றாகப் புரிந்து கொண்டிருந்த சுவாமிஜி அதற்கு முயன்றார். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் டாக்டர்கள் அவரது பயணத்தைத் தடுத்தனர்.

 

 சுவாமிஜி வேண்டுமென்றே இங்கிலாந்துப் பயணத்தைத் தவிர்த்து விட்டதாக எண்ணினார் ஸ்டர்டி.லண்டன் பணிகள் நாளுக்கு நாள் மோசமாகி, ஏறத்தாழ முற்றிலுமாக அழிந்து போகின்ற நிலைக்கு வந்தபோது ஸ்டர்டி சுவாமிஜியின் மீது ஆத்திரம் கொண்டார். அவர் வராதது தான் இத்தகைய நிலைமைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார். சுவாமிஜியின் மீது அவரது மனக் கசப்பு வளர்ந்தது. பின்னர் சுவாமிஜியிடம் குறை காண ஆரம்பித்தார் அவர், சுவாமிஜியின் கருத்து, செய்தி, செயல்முறை எல்லாமே தவறு. அவரது வாழ்க்கை முறையும் தவறு என்றெல்லாம் எழுதத் தொடங்கினார். ஆனால் இவை எதுவும் சுவாமிஜி அவர் மீது கொண்ட அன்பை மாற்றவில்லை. பரிவுடன் அனைத்துக் கடிதங்களுக்கும் பதிலளித்தார். எதனாலும் ஸ்டர்டியின் மனத்தை மாற்ற இயலாது என்று கண்டபோது கடிதப் போக்குவரத்தை ஒரு முடிவுக்குக்கொண்டு வந்தார் சுவாமிஜி.

 

 1899 நவம்பரில் அவர் ஸ்டர்டிக்கு எழுதிய கடிதத்தில், எனது நடத்தை சரியானதென்று நிரூபிப்பதற்காக எழுதப் படுவதல்ல இந்தக் கடிதம் என்று ஆரம்பித்து,, ஸ்டர்டி, என் இதயம் வேதனைப்படுகிறது. எல்லாம் எனக்குப் புரிகிறது. உங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்களின் பிடியில் நீங்கள் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்............ பண்டைய இந்தியாவைப் பற்றி நீங்கள் ஏராளம் சொன்னீர்கள், ஸ்டர்டி, அந்த இந்தியா இன்றும் வாழ்ந்து வருகிறது. அழிந்து போகவில்லை. நான் அந்த இந்தியாவின் பிள்ளைகளுள் மிகச் சிறியவன், நான் உங்களை நேசிக்கிறேன். இந்திய அன்பால் நேசிக்கிறேன். இந்த மயக்கத்திலிருந்து நீங்கள் வெளிவர உதவுவதற்காக ஓர் ஆயிரம் உடல்களையும் நான் விட்டுத் தருவேன் என்று எழுதினார் சுவாமிஜி.

 

 இப்போது ஸ்டர்டி ஒரு தடவை வந்து சுவாமிஜியைப் பார்க்கவே செய்தார்.இருப்பினும் அவரால் மனம் திறந்து எதையும் பேச இயலவில்லை. லண்டன் பணிகள் இவ்வாறு வளர்ச்சி குன்றிய நிலையிலும், அமெரிக்காவிலிருந்து இருவர் தம்மைக் காண வந்தது சுவாமிஜியின் புண்பட்ட இதயத்திற்கு இதமாக இருந்தது.

 சுவாமிஜியும் துரியானந்தரும் விம்பிள்டனில் நிவேதிதையின் வீட்டில் தங்கினர். ஆனால் அவர்களின் வீடு சிறியதாக இருந்ததால், ஓரிரு நாட்களில் அருகிலுள்ள மற்றொரு வீட்டில் தங்கினர். சாரதானந்தரின் சகோதரர் ஒரு சில நாட்கள் அங்கே தங்கிவிட்டுபோஸ்டனுக்குப் புறப்பட்டார்.

 

 இங்கிலாந்துப் பணிகள் தடைப்பட்டது. சுவாமிஜியின் மனத்தைக் கட்டாயம் பாதித்திருக்க வேண்டும். அது அவரது உடல்நிலையிலும் பிரதிபலித்தது. கப்பல் பயண வேளையில் நன்றாக இருந்த அவரது உடல்நிலை இப்போது தளர்ந்தது. ஐந்து நிமிடங்கள்  நடக்கவே அவருக்கு மூச்சு வாங்கியது.  நிவேதிதையின் தாயும் சகோதரியும் சகோதரனும் சுவாமிகள் இருவரையும் தங்கள் வீட்டில் ஒருவராகவே கவனித்துக் கொண்டனர். தினமும் போவதற்கு சுவாமிஜியின் உடல்நிலை அனுமதிக்க வில்லை என்றாலும் சுவாமிஜி அவ்வப்போது நிவேதிதையின் வீட்டிற்குச்சென்று வந்தார்.

 

நிவேதிதையின் சகோதரரான ரிச்மண்ட் இள வயதினராக இருந்தார். சுவாமிஜியை ஏசு கிறிஸ்துவின் பிரதிபிம்பமாகக் கண்டார் அவர். ”கடவுள்உலக வாழ்க்கை என்று எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு சுவாமிஜியிடம் கிடைக்கும் என்று அவர் நம்பினார்.  எனவே மனம் திறந்து அவரிடம் பேசினார்.

 சுவாமிஜியின் தெய்வீகத்தால் மிகவும் கவரப் பட்டார் ரிச்மண்ட். அவரது அழைப்பிற்கு என் சகோதரி அடிபணிந்தாள் என்றால் அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.ஏனெனில் நான் அவரைக் கண்டிருக்கிறேன். அவரது ஆற்றலை  உணர்ந்திருக்கிறேன். அவரைக் கண்டால்போதும், அவர் பேசுவதைக்கேட்டால் போதும், யாரும் இதைப் புரிந்து கொள்ள முடியும். அவர் உண்மையைப்பேசுகிறார், அதையும், ஒரு பண்டிதராகவோ, மதபோதகராகவோ அல்லாமல், சொந்த உறுதிப் பாட்டின் ஆதாரத்தில் பேசுகிறார். அவர் தம்முடன் உறுதிப் பாட்டைக்கொண்டு வருகிறார். நம்பிக்கையையும் அபயத்தையும் வழங்குகிறார் என்று பின்னாளில் எழுதினார் ரிச்மண்ட்.

 சுமார் 15 நாட்கள் லண்டனில் தங்கிய சுவாமிஜி ஆகஸ்ட் 16-ஆம் நாள்  அமெரிக்காவிற்குப் புறப்பட்டார். துரியானந்தரும் இரண்டு அமெரிக்கப்பெண்களும் அவருடன் சென்றனர். தங்கையின் திருமணத்திற்காக நிவேதிதை விம்பிள்டனில் தங்கிவிட்டார்.

 

 மீண்டும்  பத்து நாள் கப்பல் பயணம்.இந்த முறை சுவாமிஜியின் அருகில் இருக்கும் பேறு கிறிஸ்டைனுக்கும் மேரி ஃபங்கேக்கும் கிடைத்தது. அவர்களுக்கும்  அந்த நாட்கள் மறக்க முடியாதவையாக அமைந்தன. தினமும் காலையில் கீதை, பாராயணம், விளக்கம், வேத மந்திரங்கள் ஓதுதல் என்று நாட்கள் கழிந்தன. கடல், அலைகள் இன்றி அமைதியாகஇருந்தது. வெண்ணிலாவின்    தண்ணொளி இரவுகளை மிகவும் இனிமையானதாக ஆக்கியது. அந்த இரவின் தனிமையில் சுவாமிஜி தம்முள்  மூழ்கியவராக கப்பல்  தளத்தில் கம்பீரமாக நடப்பார். ஒரு நாள் இப்படி சிறிது நேரம் நடந்தவர் திடீரென்று திரும்பி அமெரிக்க பக்தைகளைப் பார்த்து, இந்த மாயை இவ்வளவு அழகாக இருக்கிறது. என்றால் இந்த மாயைக்கு பின்னாலுள்ள உண்மை எவ்வளவு அற்புதமான அழகு வாய்ந்ததாக இருக்கும்! என்றார்.

 

 ஒரு பௌர்ணமி நாள்.  முழு நிலவு வெள்ளித் தட்டாக மென்மையான ஒளிக் கிரணங்களைச் சிந்திக் கொண்டிருந்தது. அந்த இரவையும் அதன் அழகையும் நீண்ட நேரம் மௌனமாகப் பருகினார் சுவாமிஜி. பிறகு திரும்பி நிலவையும் கடலையும் சுட்டிக்காட்டி, ”கவிதைகள் எதற்கு? கவிதையின் சாரம் நம் முன் விரிந்து கிடக்கும்போது கவிதைகள் ஏன்? என்று கேட்டார்.


No comments:

Post a Comment