Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-13

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-13

🌸

கொள்கை வெறி

 ஒரு கதை

 

சுவாமிஜி அடியோடு கண்டித்த ஒன்று கொள்கை வெறி, யாராவது அவரிடம் ஒரு தலைப்பட்சமான கருத்துக்களைக்கூறும்போது அவர் கொதித்தெழுவார். எந்தவித அடிப்படையும் இன்றி ஒரு கருத்தைப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டிருக்கின்ற மூடர்களைப் பற்றி அவர் ஒரு கதை சொல்வார்.

மன்னன் ஒருவன் தன் அண்டை நாட்டு மன்னன் படையெடுத்து வருவதைக்கேள்விப்பட்டு ஆலோசனை சபையைக் கூட்டினான். விரைந்து வரும் எதிரிப் படைகளை எப்படி எதிர்கொள்வது, எப்படிச் சமாளிப்பது என்று சபையினரிடம் ஆலோசனைக்கேட்டான். பொறியியல் வல்லுனர்கள் எழுந்தார்கள். தலைநகரைச்சுற்றி பெரிய மண்சுவர் எழுப்பி அதைச்சுற்றி அகழி ஒன்று அமைக்க வேண்டும் என்றார்கள்.தச்சர்களோ, மண் சுவர் பயனற்றது, மழை வந்தால் கரைந்து விடும், எனவே மரச்சுவர் அமைக்க வேண்டும் என்றார்கள். இதைக்கேட்ட சக்கிலியர், இரண்டும் பயனற்றவை.தோல் சுவரைப் போன்ற பாதுகாப்பானது வேறொன்றும் இல்லை என்றனர். கொல்லர்களோ, எல்லோரும் முட்டாள்தனமாக உளறுகின்றனர். இரும்புச் சுவரைப்போன்ற ஒரு பாதுகாப்பை வேறு எதனாலும் தர இயலாது என்று கூக்குரலிட்டனர். வக்கீல்கள் விடுவார்களா! எதையும் சட்டபூர்வமாக அணுகுவதே சிறப்பு. அடுத்தவன் சொத்தை அபகரிக்க நினைப்பது சட்டப்படி குற்றம் என்பதை எதிரிகளுக்கு எடுத்துக் கூறுவோம். சுவர்களைக் கட்டி ஏன் பணத்தை வீணாக்க வேண்டும்? என்று அவர்கள் வாதிட்டார்கள். கடைசியாக வந்தார்கள் புரோகிதர்கள். இதுவரை ஆலோசனை கூறிய அனைவரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். பிறகு நீங்களெல்லாம்  பேசுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?  எல்லோருமே பைத்தியம் போல் பிதற்றுகிறீர்கள். முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அதன் பிறகு இந்த எதிரிகள் நம்மை அசைக்க முடியுமா? என்றார்கள். இப்படி ஆலோசனை , வாதம், எதிர்வாதம், தர்க்கம், சண்டை, கூச்சல், குழப்பம், என்று இவர்கள் அடித்துக்கொண்டிருக்க எதிரிப்படையினர் புயல்போல் நுழைந்து நகரையே தரைமட்டமாக்கிச்சென்றனர். கொள்ளை வெறி அழிவிற்குக் காரணமாக அமையுமே தவிர ஒரு போதும் ஆக்கபூர்வமான எதையும் செய்யாது.

 

ஹரிபாதருக்குத் தீட்சை

 

ஒரு நாள் சுவாமிஜி ஹரிபாதரிடம் சிகாகோ சர்வமத மகாசபை பற்றி கூறி, தாம் அதில் கலந்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். இதைக்கேட்டு ஆர்வம் கொண்ட ஹரிபாதர் உடனடியாக நன்கொடை வசூலித்து சுவாமிஜி போவதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதாகக் கூறினார்.  வேண்டாம் அப்பா, உடனடியாக எதுவும் செய்ய வேண்டாம். ராமேஸ்வரம் செல்வதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன், எனவே அங்கே போக வேண்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி ஹரிபாதரின் ஆர்வத்தைத் தடுத்தார் சுவாமிஜி.

சுவாமிஜி பெல்காமிற்கு வருவதற்குச் சில காலம் முன்னதாக ஹரிபாதரின் மனைவியான இந்து மதி தாம் குருவிடம் மந்திர தீட்சை பெற வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டிருந்தார். அதற்கு ஹரிபாதர், நீ தேர்ந்தெடுக்கின்ற குரு நானும் மதிக்கின்ற ஒருவராக இருக்க வேண்டும். அப்படி ஒருவரைச் சந்திக்கும்போது நாம் இருவரும் தீட்சை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இப்போது இருவரும் சுவாமிஜியிடம் தீட்சை பெற்றுக்கொள்ளும் விருப்பத்தை வெளியிட்டனர். முதலில் சற்று தயங்கினாலும் பிறகு அவர்களின் விருப்பத்தை வெளியிட்டனர். முதலில் சற்று தயங்கினாலும் பிறகு அவர்களின் விருப்பத்திற்கு இசைந்தார் சுவாமிஜி. சுவாமிஜி இந்தத் தம்பதியரிடம்  மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவர் மேலை நாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன்பு இந்து மதிக்கு எழுதிய கடிதம் அவர்களிடம் அவர் கொண்டிருந்த அன்பைக் காட்டுவதாகவும், இல்லறப்பெண் ஒருத்தியின் கடமையைப் படம் பிடித்துக் காட்டுவதாகவும் அமைகிறது.

எப்போதும் ஸ்ரீகிருஷ்ணரிடம் முழுமையாக உன்னை அர்ப்பணித்துவாழ், இறைவனின் கையில் வெறும் பொம்மைகளே நாம் என்பதை  எப்போதும் மனத்தில்  கொள். எப்போதும் தூய்மையில் நிலைத்துநில். வாக்கிலும் செயலிலும் மட்டுமின்றி எண்ணத்தில் கூட மாசு படியாதிருக்குமாறு பார்த்துக்கொள். அதனுடன் முடிந்த அளவு பிறருக்கு உதவ முயற்சி செய், அனைத்திற்கும் மேலாக சொல்லாலும் செயலாலும் சிந்தனையாலும் கணவருக்குச்சேவை செய்வது ஒரு பெண்ணின் முக்கிய தர்மம் என்பதைக் கருத்தில் பொள். தினந்தோறும் இயன்ற அளவு கீதை படி, சகோதரி, வேறு என்ன எழுதுவது, நான் எப்போதும் உங்கள் நலத்திற்காகப் பிரார்த்தனை செய்து வருகிறேன். என்பதை மட்டும் தெரிந்து கொள். உனக்கு விலைவிலேயே புத்திரப்பேறு வாய்க்கட்டும் என்று எம்பெருமானிடம் பிரார்த்திக்கிறேன்.

கோவா கிறிஸ்தவ மடத்தில்

1892 அக்டோபர் இறுதியில் சுவாமிஜி கோவா சென்றார். கோவா போர்ச்சுக் கீசியர்களின் காலனியாக இருந்தது. இங்கிருந்து சுவாமிஜி எழுதிய கடிதங்கள் ”சச்சிதானந்த என்று கையொப்பம்  இட்டிருப்பதைக் காண்கிறோம்.குஜராத் மற்றும் ராஜஸ்தானில் பயன்படுத்திய ”விவேகானந்த என்ற பெயரை அவர் இங்கே பயன்படுத்த வில்லை.

பெர்காமின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான ஷிர்காங்கர், மர்கா –கோவாவில் உள்ள தமது நண்பரான சுப்ராய் நாயக் என்பவருக்கு சுவாமிஜியை அறிமுகம்  செய்து கடிதம் எழுதியிருந்தார். சுவாமிஜி ரயில் நிலையத்தில் இறங்கியபோது தம்மை வரவேற்பதற்கு அங்கேபெரிய ஏற்பாடுகள் நடைபெற்றிருந்ததைக் கண்டார். நூற்றுக்கணக்கானோர் கூடி அவரை வரவேற்றனர். பிறகு குதிரை வண்டியில் அமரச்செய்து ஊர்வலமாக சுப்ராய் நாயக்கின் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். சுப்ராய் சம்ஸ்கிருதத்திலும் சாஸ்திரங்களிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். ஓர் ஆயுர்வேத வைத்தியரும் கூட, சுவாமிஜியின் அறிவையும் அதன் பல்வேறு பரிமாணங்களையும் கண்டு மகிழ்ந்தார் நாயக்.

 சுவாமிஜி கோவா  செல்வதற்கு ஒரு சிறப்பான காரணம் இருந்தது. கிறிஸ்தவ மதம் பற்றியும் குறிப்பாக அதன் துறவு நெறிபற்றியும் அறிய அவர் மிகுந்த ஆவல் கொண்டிருந்தார். புராதன தேவாலயங்களும் மடங்களும் கோவாவில் பல இருந்தன. அங்கே சிறப்பு வாய்ந்த பல நூல்கள் இருந்தன. சுவாமிஜியின் ஆர்வத்தைப்பற்றி அறிந்த நாயக் அவரைத் தமது கிறிஸ்தவ நண்பரான ஆல்வாரிஸ் என்பவருக்கு அறிமுகம் செய்தார். அவரும் ஒரு பேரறிஞர். ஆல்வாரிஸ் சுவாமிஜியுடன் பேசியபோது அவரது ஆழ்ந்த அறிவைக்கண்டு கொண்டார். எனவே ராஞ்சோல் மடாலயத்தில்  அவர் தங்குவதற்கான ஏற்பாடு களைச்  செய்தார். இந்த மடாலயம் மர்காவிலிருந்து நான்கு மைல்  இருந்தது. கோவாவில் மிகப்புராதனமான இந்த மடாலயத்தில்  வேறெங்கும் கிடைக்காத அரிய பல நூல்களும் கையெழுத்துப் பிரதிகளும் பாதுகாக்கப் பட்டு வந்தன.

சுவாமிஜி அங்கே மூன்று நாட்கள் தங்கினார்.  அங்கிருந்த நூல்களை ஆராய்ந்தார். அவரது அபரிமிதமான நினைவாற்றலும், ஆழ்ந்த அறிவும் , கிறிஸ்தவ மதத்தைப்பற்றிய அவரது கருத்துக்களும் அங்குள்ள பாதிரிகளை மிகவும் கவர்ந்தன.

பிறகு மர்காவிற்கு திரும்பி வந்த சுவாமிஜி நாயக்கின் வீட்டில் தங்கினார். ஒரு நாள் அவர் பாடும்போது காருப்ஜி என்பவர் தபேலா வாசித்தார். பெரிய வித்வானான அவர் வாசிக்கும் போது  முகத்தை ப் பலவிதமாக சுளிப்பது வழக்கம். அதைக் கவனித்த சுவாமிஜி பாடல் முடிந்தபிறகு அவரிடம் அந்தப் பழக்கத்தைத் தவிர்க்குமாறு கூறினார். ஆனால் அப்படி முகத்தைச் சுளிக்காமல் தபேலா வாசிக்க வே முடியாது என்று சாதித்தார் காருப்ஜி. ஆனால் அவரும் அங்கிருந்த அனைவரும் வியக்கும் வண்ணம் தாமே வாசித்து தாம் சொன்னதை நிரூபித்தார் சுவாமிஜி.

 

தென்னிந்தியாவில்

 

மர்காவிலிருந்து தார்வார் வழியாக மைசூர் மாகாணத்தில் உள்ள பெங்களூர் சென்றார் சுவாமிஜி. அங்கு மருத்துவ அதிகாரியாக இருந்த டாக்டர் பல்ப்பு கேரளத்தின் ஈழவ சமுதாயத்தைச்சேர்ந்தவர்.உயர் ஜாதியினரின் அடக்குமுறைக்கும்  கொடுமைகளுக்கும் மிகவும் ஆளானோர் ஈழவர்கள். எனவே உயர் தகுதி இருந்தும் அவருக்குத் திருவாங்கூரில் அரசாங்க வேலை கிடைக்கவில்லை. அதனால் அவர் மைசூர் மாகாணத்திற்கு  வரவேண்டியதாயிற்று. தமது சம்பளத்தின் கணிசமான பகுதியையும் ஓய்வு நேரத்தையும் ஈழவ சமுதாயத்தினரின் உயர்வுக்காகச் செலவிட்டார் பல்ப்பு.

உயர் ஜாதியினரின் அடக்குமுறை பற்றி பல்ப்பு ஒரு நாள்  சுவாமிஜியிம் கூறியபோது சுவாமிஜி, ஏன் நீங்கள்  பிராமணர்களின் பின்னால் போக வேண்டும். உங்கள்  ஜாதியிலேயே ஒரு நல்ல மனிதரைக்கண்டு பிடித்து அவரை உங்கள் தலைவராக ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது. என்று கேட்டார். சுவாமிஜியின் இந்த அறிவுரையை ஏற்று டாக்டர் பல்ப்பு ஸ்ரீநாராயணகுருவிடம் சென்று சேர்ந்தார். ஸ்ரீநாராயண குருஈழவ சமுதாயத்தை உயர்நிலைக்குக்கொண்டு வந்தது கேரளத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான பகுதியாகும்.

 

மைசூர் மாகாண திவானான சேஷாத்ரி ஐயரின் விருந்தினராக மூன்றுநான்கு வாரங்கள் தங்கினார் சுவாமிஜி. மைசூர் அரசவையின் முக்கியப் பிரமுகர்கள் பலரை அங்கே அவரால்  சந்திக்க முடிந்தது.

மதம் என்ற எல்லையைக் கடந்து அனைவரும் சுவாமிஜியை நேசித்தனர். மைசூரில் மாநில கவுன்சிலர் களுள் ஒருவர்  அப்துல் ரகுமான். சுவாமிஜிக்குக் குரானிலும் நல்ல தேர்ச்சி இருந்த

து கண்டு அவர் வியந்தார். அவருக்கு குரான் உபதேசங்களில் இருந்த சில சந்தேகங்களையும் சுவாமிஜி தீர்த்து வைத்தார்.

 

பொய் சொல்வதா?

 

சுவாமிஜியின் ஆழ்ந்த அறிவையும் உன்னதமான லட்சியங்களையும் கண்ட திவான் அவரை மைசூர் மன்னரான சாமராஜேந்திர உடையாருக்கு அறிமுகம் செய்துவைத்தார். அதன் பிறகு சவாமிஜி மைசூர் மன்னரின் விருந்தினராக அரண்மனையில் தங்கினார் . சுவாமிஜியுடன் இயன்ற அளவு நேரத்தைச்செலவிட்டார் மன்னர்.

ஒரு நாள் அரசவைப் பிரமுகர்கள் பலரது முன்னிலையில் மன்னரும் சுவாமிஜியும் பேசிக்கொண்டிருந்தனர்.

 

மன்னர்- சுவாமிஜி! எனது அரசவையினரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

சுவாமிஜி- மன்னா! நீங்கள் பரந்த இதயம் படைத்தவர் ஆனால் துரதிர்ஷ்டவசமாக உங்களைச் சூழ்ந்துள்ளவர்கள் மற்ற அரசவையினரைப்போன்றவர்கள் தான். அதாவது அவர்களைப் பற்றி பெரிதாகச்சொல்வதற்கு ஒன்றுமில்லை.

 

 மன்னர்- அப்படியில்லை சுவாமிஜி, எனது திவானையாவது நீங்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். அவர் அறிவுக்கூர்மை படைத்தவர், நம்பிக்கையானவர்.

சுவாமிஜி- ஆனால் மகாராஜா, திவான் என்றாலே மன்னரை வஞ்சித்து ஆங்கிலேயருக்குப்பொருள் சேர்ப்பவர் தானே!

 இதன் பிறகும் இந்த உரையாடல் நீட்டிக்கொண்டு போக விரும்பாத மன்னர் வேறு விஷயம் பற்றி பேசத் தொடங்கினார். பின்னர் சுவாமிஜியிடம் தனிமையில் இது பற்றி கூறினார்.

 

மன்னர்- என் அன்பிற்குரிய சுவாமிஜி! வெளிப்படையாகப்பேசுவது  சிலவேளைகளில் பிரச்சனையாகி விடும். அரசவைப் பிரமுகர்களின் முன்னிலையிலேயே அவர் களைப் பற்றி இப்படிப்பேசினால் அவர்களில் யாராவது உங்களை விஷம் வைத்துக்கொல்லக்கூட துணிந்து விடுவார்கள்.

 

சுவாமிஜி- செய்யட்டும்! உயிர் போய்விடும் என்று பயந்து ஓர்  உண்மையான சன்னியாசி சத்தியத்தைக் கைவிடுவானா? மகாராஜா? ஒருவேளை உங்கள் மகனே நாளை என்னிடம் வந்து, என் அப்பாவைப் பற்றி என்ன  நினைக்கிறீர்கள் ? என்று கேட்பதாக வைத்துக்கொள்வோம். உங்களிடம் இல்லாத குணங்களையெல்லாம் இருப்பதாகக்கூறி, உங்களை இந்திரன், சந்திரன் என்று புகழ்வேனா என்ன! நான் பொய் சொல்வதா! அது ஒருபோதும் நடக்காது.

உண்மை  என்பதில் தீவிர உறுதிபாடு கொண்டவராக இருந்தார் சுவாமிஜி. அதற்காக உண்மை, என்ற பெயரில் பிறரது மனத்தைப் புண்படுத்துவதை அறவே வெறுத்தார் அவர். ஒருவரின் பலவீனத்தை அவர் முன்னிலையில் கூறுவதும், அவரது நற்பண்புகளை அவர் இல்லாதபோது புகழ்வதும் பெரியோர் இயல்பாகும். சுவாமிஜியிடம் அந்தப் பண்பு ஊறியிருந்தது. பின்னாளில் தமது சீடர்களிடம் கூட சுவாமிஜி இப்படியே நடந்து கொண்டார். பலவீனங்களை எடுத்துக் கூறுவதால் அவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். நற்பண்புகளை நேராகப் புகழ்ந்தால் ஆணவம் தலைதூக்க நேரும். எனவே அதனைத் தவிர்த்தார் சுவாமிஜி.

மைசூர் மன்னரின் அரண்மனையில் தங்கியிருந்தபோது ஆஸ்திரியப் பாடகர் ஒருவருடன் பழகும் வாய்ப்பு சுவாமிஜிக்குக் கிடைத்தது. மேலை நாட்டு இசை பற்றி அவருடன் சுவாமிஜி பேசியது கண்டு அனைவரும் வியந்தனர். அது போலவே  ஒருநாள் மின் தொழிலாளி ஒருவரிடம் அவர் மின்சாரம் பற்றி பேசியதும் அனைவரும் வியப்பூட்டுவதாக இருந்தது.

 மைசூர் திவான் சுவாமிஜிக்குப் பரிசுகள் தர விரும்பினார். ஒரு நாள் அவர் தமது உதவியாளரை அனுப்பி அவர் என்ன விரும்பினாலும் வாங்கித் தருமாறு கூறினார்.கடைக்குச் சென்ற சுவாமிஜி ஒரு சிறுவனின் குதூகலத்துடன்  ஒவ்வொரு பொருளையும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தார். பிறகு உதவியாளரிடம், உங்கள் திவான் கட்டாயமாக எனக்கு ஏதாவது தர விரும்பினால் இந்த ஊரில் உள்ள மிகச் சிறந்த   சுருட்டு  ஒன்றை வாங்கிக்கொடுங்கள். அது போதும் என்று கூறிவிட்டார். அவ்வாறே கொடுத்தபோது அதை ஆர்வத்துடன் புகைத்தார் . அதன் விலை ஒரு  ரூபாய்.

ஒரு நாள் சுவாமிஜியும் பிரதம மந்திரியும் மன்னரைக் காணச் சென்றனர். அப்போது மன்னர் சுவாமிஜியிடம், சுவாமிஜி, உங்களுக்காக நான் என்ன செய்யட்டும்? என்று கேட்டார். சுவாமிஜி அதற்கு நேரடியாக பதில் எதையும் சொல்லவில்லை. ஆனால் அவர் கூறியதில் அவரது எதிர்காலத் திட்டத்தின் ஒரு சுருக்கமே இருந்தது. முதலில் இந்தியாவின் பெருமை, அதன் ஆன்மீக மகிமை போன்ற வற்றை சுமார் ஒரு மணி நேரம் கூறினார். பிறகு மேலை விஞ்ஞானக் கருத்துக்களும் ,  இயக்கரீதியாகப் பணி செய்வதுமே இந்தியாவின் அப்போதைய தேவை என்பதை எடுத்துக்கூறினார். இந்தியாவின் ஆன்மீகப் பொக்கிஷம் மேலை நாடுகளுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பதைத் தெளிவு படுத்தினார். தாம்  மேலை நாடு சென்று பிரச்சாரம் செய்ய இருப்பதை இவ்வாறு மறைமுகமாகத் தெரிவித்தார் அவர். இறுதியாக மன்னா, எனக்கு என்ன வேண்டும் என்று தானே கேட்டீர்கள்! எனது தேவை இது தான். மேலை நாடு நமக்கு உதவ வேண்டும். எப்படித்தெரியுமா? நமது பொருளாதார  நிலைமையை உயர்த்துவதன்மூலம் நமக்கு உதவி செய்ய வேண்டும். நமது மக்களுக்கு நவீன விவசாயம் , நவீன தொழில் நுட்பங்கள், நவீன விஞ்ஞானம் போன்றவற்றைக் கற்பிக்க வேணடம் என்று கூறினார். சுவாமிஜியின் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களைக்கேட்டுக் கொண்டிருந்த மன்னர், சுவாமிஜி மேலை நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் அதற்கான செலவைத் தாமே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். ஏனோ அந்த உதவியை சுவாமிஜி உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை.

 

ஒலிப்பதிவு,

 

இந்தியாவின் மறுமலர்ச்சிக்காகத்தேன்றிய மகான் என்றே சுவாமிஜியை மன்னரும் திவானும் கருதினர். தாம் மைசூரிலிருந்து புறப்படப்போவதாக அவர் கூறியதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவரைப் பிரிய அவர்கள் விரும்பவில்லை. ஆனால் போவதில் தீவிரமாக இருப்பதைக்கண்ட அவரிடம், சுவாமிஜி , நீங்கள் போனாலும்  உங்கள் நினைவிற்காக ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ள விரும்புகிறோம். எனவே குரலைப் பதிவு செய்ய அனுமதியுங்கள்.என்று கேட்டனர். சுவாமிஜியும் சம்மதிக்கவே அவரது குரல் ஒலிப்பதிவுக் கருவியில்  பதிவு செய்யப் பட்டது. சுவாமிஜியின் திருப்பாதங்களை ப் பூஜிக்கவும் விரும்பினார் மன்னர். அதற்கு மறுத்துவிட்டார் சுவாமிஜி.

 

 சில நாட்களுக்குப் பிறகு அங்கிருந்து கொச்சிக்குப் புறப்படத் தயாரானார் சுவாமிஜி. அவருக்கு ஏராளம் பரிசுப்பொருட்கள் காணிக்கையாக அளிக்க விரும்பினார் மன்னர். ஆனால் சுவாமிஜி எதையும் ஏற்கவில்லை. மன்னரன் வற்புறுத்தலின் காரணமாகக் கடைசியில் , மன்னா! நீங்கள் ஏதாவது கட்டாயம்  தந்தேயாக வேண்டும் என்று நினைத்தால் உலோகம் அல்லாத எதிலாவது செய்யப்பட்ட ஹீக்கா ஒன்று கொடுங்கள்அது எனக்குப் பயன்படலாம். என்றார். மன்னரும்  உயர்தர கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட ஹீக்கா ஒன்றை அளித்தார். சுவாமிஜி புறப்படும் போது அவரது பாதங்களில் பணிந்தார் மன்னர். பிரதம மந்திரி பணக்கட்டு ஒன்றை சுவாமிஜியிடம் அளிக்க முயற்சி செய்தார். ஆனால் சுவாமிஜி  முற்றிலுமாக அதனை மறுத்து, நீங்கள் எனக்கு ஏதாவது  செய்தேயாக வேண்டும் என்றால் ரயில்  பயணச்சீட்டு ஒன்று வாங்கிக்கொடுங்கள். என்று கூறிவிட்டார். அவ்வாறே இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கட் ஒன்றும்  கொச்சி திவானான சங்கரய்யாவிற்கு ஓர் அறிமுகக் கடிதமும் கொடுத்தார் பிரதம மந்திரி. மைசூரிலிருந்து புறப்பட்டார் சுவாமிஜி. அன்று கொச்சிக்கோ திருவாங்கூர் சமஸ்தானத்திற்கோ ரயில் வசதி கிடையாது. எனவே திருச்சூருக்குப்போக வேண்டுமானால் இருபத்தொரு மைல் தூரத்திலுள்ள ஷோரனூர் வரை ரயிலில் சென்று பிறகு வேறு ஏதாவது வழியில் தான் போக முடியும். சுவாமிஜி அந்த இருபத்தொரு மைல் தூரத்தை மாட்டு வண்டியில் கடந்தார். அவர் செல்லும் வழியில் சுப்பிரமணிய ஐயரின் வீடு இருந்தது. அவர் கொச்சி சமஸ்தானத்தின் கல்வி அதிகாரி. வீட்டிற்கு வெளியில் நின்றிருந்த அவரைக் கண்ட சுவாமிஜி அவரிடம், இங்கே குளிப்பதற்கான இடங்கள் உள்ளனவா? என்று கேட்டார்.

சுவாமிஜியின் தோற்றத்திலும் வசீகரத்திலும் கட்டுண்ட ஐயர் அவர் குளிப்பதற்கான வசதிகளை ச் செய்து கொடுத்ததுடன், தமது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் அவர் தங்கவும் ஏற்பாடு செய்தார். அப்போது  சுவாமிஜி தொண்டை வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார் ஐயர்.

கொடுங்ஙல்லூரில்

 திருச்சூரில் சில நாட்கள் தங்கிய சுவாமிஜி கொடுங்ஙல்லூருக்குச் சென்றார். அந்த இடம் கல்விகேள்விகளில் சிறந்து விளங்கியது. அங்குள்ள பகவதி கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. சுவாமிஜி அந்தக்கோயிலுக்குச்சென்றபோது அவரை உள்ளே விட மறுத்துவிட்டனர். கேரளத்திற்கு வெளியிலிருந்து வருகின்ற அவரது ஜாதி தெரியாத காரணத்தால் அவர்  உள்ளே போக்கூடாது என்று கோயில் அதிகாரிகள் கூறிவிட்டனர். சுவாமிஜி கோயிலின் அருகில் ஓர் ஆலமரத்தடியில் அமைதியாக அமர்ந்து தேவியை மனமார எண்ணி வழிபட்டார்.

 

அங்கிருந்த இளைஞன் ஒருவன் சுவாமிஜியைக்கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவரை அணுகினான்.  ஓரிரு வார்த்தைகள் பேசியதிலிருந்தே அவர் சாதாரணமனிதர் அல்ல என்பதை அவன் புரிந்து கொண்டான். எனவே சென்ற வேகத்திலேயே திரும்பினான்.

சற்று நேரத்தில் கொடுங்ஙல்லூர் இளவரசர்களான கொச்சுண்ணித் தம்பிரானும், பட்டன் தம்பிரானும் கோயிலுக்கு வந்தனர். அவர்களை சுவாமிஜியிடம் அழைத்துச்சென்றான் அந்த இளைஞன். இளவரசர்கள் இருவரும் சம்ஸ்கிருதம் மற்றும் சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களிடம் பல விஷயங்களை சம்ஸ்கிருதத்தில்   பேசினார் சுவாமிஜி. தாம் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கப் படாததன் காரணத்தையும் அவர்களிடமிருந்தே அறிந்தார் சுவாமிஜி. அவருடன் சிறிது நேரம் பேசியதிலிருந்தே அவரது ஆன்மீக உயர்வையும் சாஸ்திர அறிவையும் உணர்ந்து கொண்ட இளவரசர்கள் அவரைக் கோயிலுக்குள் அழைத்துச் செல்ல விரும்பினர்.ஆனால் தாம்  வட்டார வழக்கங்களை மீற விரும்பவில்லை என்று கூறி சுவாமிஜி வெளியிலிருந்தே தேவியை வழிபட்டார்.

 

பகவதி கோயிலுக்கு அருகிலேயே தங்கினார் சுவாமிஜி. சுவாமிஜியின் புலமையைக்கண்ட இளவரசர்கள் தினமும் வந்து ஆலமரத்தடியில் அமர்ந்து அவருடன் பேசினர். வாதங்களும் செய்தனர். ஒவ்வொரு முறையும் அவர்களே தோற்க நேர்ந்தது. மூன்றாம் நாள் சென்றபோது சுவாமிஜி ஆழ்ந்த தியானத்தில் இருந்ததை அவர்கள் கண்டனர். அவரது தியானம் கலையும் வரை காத்திருந்து, பிறகு அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி திரும்பினர்.

 

பிறகு அரச குடும்பப்பெண்கள் சிலர் வந்து சுவாமிஜியைச் சந்தித்தனர். அவரிடம் தூய சம்ஸ்கிருதத்தில் பேசினர். பெண்கள் இவ்வளவு சரளமாக சம்ஸ்கிருதத்தில் பேசுவதைக் கேட்ட சுவாமிஜி மிகவும் ஆச்சரியப்பட்டார். இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் அவர் இதனைக்கேள்விப்பட வில்லை. மிகவும் மகிழ்ந்தார் அவர்.

சுவாமிஜியைத் தரிசிக்க இளவரசர்கள் நான்காம் நாள் சென்றபோது ஆலமரத்தடி காலியாக இருந்தது. சுவாமிஜி கொச்சிக்குப் புறப்பட்டு விட்டதாகத் தகவல் கிடைத்தது.

 

கொச்சி மாநிலத்திலுள்ள எர்ணாகுளத்திற்குப் படகில் சென்றார் சுவாமிஜி. அது டிசம்பர் 1892. சந்து லால், ராமையர் என்ற இருவர் அவரை முதன்முதலாகச் சந்தித்தனர். சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்ட அவர்கள் அவரைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஆங்கிலம் தெரியுமா? என்று  கேட்டதற்கு, இந்தியில் ஏதோ சுமாராகத்தெரியும், என்று பதிலளித்தார் சுவாமிஜி. அவர் ஆங்கிலத்தில் ஒரு மேதை என்பது பின்னரே அவர்களுக்குத் தெரியவந்தது.

சரளமாக ஆங்கிலம் பேசுகின்ற ஒரு துறவி வந்திருக்கிறார் என்ற செய்தி பரவியது. எர்ணாகுளத்திலுள்ள பலரும் அவரைக் காண வந்தனர். அந்த வேளையில் சட்டம்பி சுவாமிகளும் எர்ணாகுளத்தில் இருந்தார். சம்ஸ்கிருதத்தில் நல்ல புலமையும் சாஸ்திர அறிவும் உடையவர் அவர். சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைக்காண வந்த சட்டம்பி சுவாமிகள் அங்கிருந்த கூட்டத்தைக்கண்டு சற்று தள்ளி நின்றே அவரைத் தரிசித்து விட்டுச்சென்றார். கேள்விப்பட்ட சுவாமிஜி,  அவ்வளவு பெரிய மகானான அவர் என்னைத்தேடி வருவதா! நானே  செல்கிறேன், என்று கூறி அவரைக்காணச்சென்றார்.

 

சட்டம்பி சுவாமிகளுக்கு இந்தி தெரியாததால் இருவரும் சம்ஸ்கிருதத்தில் பேசினர். தனிமையில் பேசவேண்டும் என்பதற்காக சுவாமிஜியை ஒரு மரத்தடிக்கு அழைத்துச்சென்று அங்கே அவருடன் பேசினார். சட்டம்பி சுவாமிகள், அந்த மரத்தில் ஒரு குரங்கு இருந்தது. சுவாமிகள் இருவரும் பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில் அது மரத்தின் கிளைகளை ஆட்டத்தொடங்கியது. அண்ணாந்து அதனைபார்த்த சுவாமிகள் , என் மனம்போலவே இந்தக் குரங்கும் அமைதியற்று உள்ளது என்றார். உடனே சட்டம்பி சுவாமிகள், இவ்வாறு ஒப்பிடுவதெல்லாம் தங்களைப்போன்ற பெரியவர்களாலேயே முடியும். என்றார்.

 

பிறகு பேச்சு சின்முத்திரையைப் பற்றி திரும்பியது. சின்முத்திரையின் பொருள் என்ன? (கையில் ஆள்காட்டி விரல் மடங்கி பெருவிரலைத்தொட்டபடி இருக்க, மற்ற மூன்று விரல்களும் நிமிர்ந்து நிற்கின்ற முத்திரை இது. தட்சிணா மூர்த்தி ஐயப்பன் போன்ற சில தெய்வங்கள் சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பதைக்காண முடியும்ஆள்காட்டி விரல் மனிதன். பெருவிரல் இறைவன், நிமிர்ந்து நிற்கின்ற மூன்று விரல்கள் மனிதனை உலகுடன் பிணைக்கின்ற மாயை எனப்படும் மூன்று அறியாமைகள்.மனிதன் அந்த அறியாமைகளிலிருந்து விடுபட்டு, பணிவுடன் தலைவணங்கி , இறைவனை நாட வேண்டும் என்பது இந்த முத்திரையின் பொருள்).சட்டம்பி சுவாமிகள் தமிழ் நூல்களை நன்கு கற்றவர். எனவே சின்முத்திரைக்கு அற்புதமான விளக்கம் அளித்தார். சுவாமிஜி மிகவும் மகிழ்ந்து, அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு , மிகவும் நல்லது என்று இந்தியில் கூறினார்.

 

சுவாமிஜியின் குரலால் மிகவும் கவரப்பட்டார் சட்டம்பி சுவாமிகள். தங்கக் குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம்  போன்றது அவரது குரல்! ஓ, என்ன இனிமை, என் பார் அவர். சுவாமிஜியின் கண்களையும் வெகுவாகப்புகழ்ந்தார் அவர். சட்டம்பி சுவாமிகளும் அவரது மாணவரான நாராயணகுருவும் சுவாமிஜியை மிகவும் போற்றிப்பாராட்டினர். சுவாமிஜி பறவைகளின் அரசனாகிய கருடன் என்றால்  நான் வெறும் ஒரு கொசு என்றார் சட்டம்பி சுவாமிகள். ஆனால் சுவாமிஜி அசைவஉணவு சாப்பிடுவதை மட்டும் அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அந்த ஒரு குறை மட்டும் இல்லையென்றால் அவர் ஒரு தெய்வீக மனிதர் தான் என்பாராம் சட்டம்பி சுவாமிகள். சுவாமிஜியும் சட்டம்பி சுவாமிகளால் மிகவும் கவரப்பட்டார். நான் ஓர் உண்மையான மனிதரைக்கேரளத்தில் சந்தித்தேன் என்று தமது குறிப்பில் எழுதினார் அவர்.

 

கொச்சியிலிருந்து இன்னும் தெற்கே திருவாங்மூரை நோக்கிப்புறப்பட்டார் சுவாமிஜி. எழில் கொஞ்சம் இயற்கை வனப்பினூடே அவர் சுமார் 140 மைல் பயணம்  செய்ய வேண்டியிருந்தது. கொச்சி திவானின் செயலாளரான ராமையர் சுவாமிஜியுடன்  திருவனந்தபுரம்  வரை செல்வதற்கு அலுவலக சிப்பந்தி ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார். அவர் ஒரு முகமதியர் அவருடன் 1892 டிசம்பர் 13-ஆம் நாள் திருவனந்தபுரத்தை அடைந்தார் சுவாமிஜி.

திருவனந்தபுரத்தில் பேராசிரியர் சுந்தரராம ஐயரைச் சந்திக்கச்சென்றார் சுவாமிஜி. திருவாங்கூர் மன்னரின் மருமகனான இளவரசர் மார்த்தாண்ட வர்மரின் ஆசிரியர் அவர்.எம். ஏ படித்துக்கொண்டிருந்தார் இளவரசர். வீட்டை அடைந்த போது ஐயரின் இரண்டாவது மகன் வாசலில் நின்றிருந்தான். 12 வயது சிறுவன் அவன். சுவாமிஜியின் தலைப்பாகையையும் உடையையும் கண்ட அந்தச் சிறுவன் அவரை ஒரு முஸ்லிம் என்றே எண்ணினான். உள்ளே சென்று தந்தையிடம் இரண்டு முகமதியர்கள் அவரைக் காண வந்திருப்பதாகத் தெரிவித்தான். திருவனந்தபுரத்தில் சுந்தர ராம ஐயரின் வீட்டில் தங்கினார் சுவாமிஜி.

 வீட்டினுள் சென்றதும் தம்முடன் துணையாக வந்த முஸ்லிம் நண்பரின் ஆகாரத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார் சுவாமிஜி. கடந்த இரண்டு நாட்களில் அவரும் வெறும் பாலைத்தவிர எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. இருப்பினும் உதவிக்கு வந்தவரின் பசியை முதலில் தீர்த்து  அவரை அனுப்பி வைத்தார்.

 

சிறிது நேரம் பேசியதிலேயே சுவாமிஜி ஓர் அசாதாரணமான மனிதர் என்பதைப் புரிந்து கொண்டார் ஐயர். கொச்சியிலிருந்து புறப்பட்டபிறகு அவர் ஏறக்குறைய பட்டினியாகவே இருந்துள்ளார் என்பதை அறிந்த அவர், சுவாமிஜி, உங்களுக்கு என்ன உணவு வேண்டும்? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, நீங்கள் தரும் எதுவும் எனக்குச் சம்மதம் தான். துறவிகள் சுவையறிந்து உண்பதில்லை என்று பதிலளித்தார்.

 

சவாமிஜியின் தோற்றுமும் குரலும் கண்களில் மின்னிய ஒளியும் ஐயரை மிகவும் கவர்ந்தன. அவரிடம் பேசிக்கொண்டிருக்க வேணடும். அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக அன்று இளவரசருக்குப் பாடம் சொல்வதைக்கூட தவித்தார் ஐயர். மாலையில் இருவரும் திருவனந்தபுரம் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக இருந்த ரங்காசாரியரைக்காண சென்றனர். அவர் சிறந்த அறிஞர் என்றும் விஞ்ஞான மேதை என்றும் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர். வீட்டில் அவர் இல்லாததால்  இருவரும் திருவனந்தபுரம் மன்றத்திற்குச் சென்றனர். திருவாங்கூரில் பிரபலமாக இருந்த பலரையும் அங்கே சுவாமிஜி சந்திக்க முடிந்தது.

மன்றத்தில் நாராயண மேனனும் பிராமணரான திவான் பேஷ்கரும் இருந்தனர். நாராயண மேனன் கிளம்பும் போது திவானைக்கைகூப்பி வணங்கினார். பிறருக்குச் சம மரியாதை அளிக்க அன்றைய பிராமண சமூகம் தயாராக இருக்கவில்லை. திவான், மேனனைக்கைகூப்பி வணங்காமல், இடது கையை மட்டும் சற்று உயர்த்தி அவரது வணக்கத்தை அமோதித்தார். சுவாமிஜியின் கூர்மையான கண்கள் இதனைக் கவனிக்கத் தவறவில்லை. சிறிது நேரம் கழிந்தது. திவான் புறப்பட்டார். அவர் சவாமிஜியிடம், வந்து தலைகுளிந்து கைகூப்பி வணங்கினார். அவருக்குப் பதில் வணக்கம் தெரிவிக்காமல், துறவிகளுக்கு உரிய முறையில் ” நாராயண என்று மட்டும் கூறினார் சுவாமிஜி. தம்மை சுவாமிஜி வணங்காததை அவமரியாதையாகக் கருதிய திவான் ஆத்திரம் கொண்டார். சுவாமிஜியோ, அமைதியாக . நாராயண  மேனன் வணங்கிய போது நீங்கள் பதிலுக்கு வணங்காமல் உங்கள் ஜாதி வழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம் என்றால் நான் ஏன் துறவிக்குரிய மரபை மீற வேண்டும்? ஒரு துறவி எப்படி மற்றவர்களை வணங்க வேண்டுமோ அப்படித்தான் நான் வணங்கினேன். என்று கூறிவிட்டார். திவானால் சுவாமிஜி, 4றியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் பிறகு தமது சகோதரரை அனுப்பி சுவாமிஜியிடம் மன்னிப்பு கோரினார் அவர். நிகழ்ச்சி சிறியதானாலும், அத்தனை பேர் இருந்த அந்த இடத்தில் அது சுவாமிஜியைத் தனியாகக் காட்டியது.

 

பின்னர் இளவரசர் மார்த்தாண்ட வர்மரைச் சந்தித்தார் சுவாமிஜி. பல்வேறு விஷயங்களைப் பற்றி இருவரும் பேசினர். சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்ட இளவரசர் அவரைப்புகைப்படம் எடுத்ததுடன் அதனைத் திறமையாக ஒரு சித்திரமாக அமைத்து, சென்னையில் நடைபெற்ற கண்காட்சிக்கு அனுப்பவும் செய்தார்.

 

ஆற்றலை இறைவன் அளிப்பார்.

 

சுவாமிஜியைப்பற்றி கேள்விப்பட்டு அறிஞர்களும் மேதைகளும் சாதாரண மனிதர்களும் அவரைச்சந்திக்க வந்தனர். அவர் பேசிய ஒவ்வொன்றிலும் ஒரு தனி ஒளி இருந்ததைக்கண்டார் ஐயர். எனவே அவரிடம் ஒரு சொற்பொழிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு சுவாமிஜி தாம் இதுவரை மேடையில் பேசியதில்லை என்றும், அதற்கு முற்பட்டால் பிறரது கேலியும் தோல்வியுமே பலனாக இருக்கும் என்று கூறி மறுத்தார். ஐயர் விடவில்லை. அமெரிக்காவில் நடைபெறப்போகின்ற சர்வமத மகாசபையில் இந்து மதத்தின் பிரதிநிதியாக சுவாமிஜி கலந்து கொள்ள வேண்டும் என்று மைசூர் மன்னர் கேட்டுக் கொண்ட விஷயம் ஐயருக்குத் தெரிந்திருந்தது. எனவே அதனை கூறி, இந்த மேடைக்குத் தயங்குகின்ற நீங்கள் அவ்வளவு பெரிய கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நேரடியாகப் பதில் கூறாத சுவாமிஜி, என்னைத் தமது கருவியாக்கிக்கொள்ள வேண்டும், என்று இறைவன் திருவுளம் கொண்டதால் அதற்கான ஆற்றலையும் அவரே தந்தருள்வார் என்றார்.

 

அப்படி ஒருவனுக்குத் திடீரென்று அவர் ஆற்றலைக்கொடுப்பாரா,  கொடுக்க முடியுமா? என்று சந்தேகத்தை எழுப்பினார் ஐயர். அவ்வளவு தான், பொங்கி எழுந்தார் சுவாமிஜி. நிங்கள் பெயரளவிற்குத்தான் வைதீகர். உங்கள் தினசரி பூஜை, பாராயணம் அனைத்தும் உள்ளீடற்றவை. இதயத்தில் நம்பிக்கையே இன்றி இதையெல்லாம் நீங்கள் செய்கிறீர்கள். இல்லாவிட்டால் வாழ்க்கையில் தேவையானவற்றை இறைவனால் கொடுக்க முடியும் என்பதைச் சந்தேகிப்பீர்களா? என்று இடி போல் முழங்கினார்.சம்மட்டி போல் இறங்கின அவரது சொற்கள் , என்று எழுதுகிறார் ஐயர்.

ஐயரின் வீட்டில் உள்ளவர்களும் சரி, வெளியிலிருந்து வருபவர்களும் சரி, சுவாமிஜியைச் சந்திப்பதை ஒரு பேறாகவே கருதினர்.

ஒவ்வொருவரிடமும் அவர்களின் நிலைக்கு இறங்கி வந்து பேசுவது சுவாமிஜிக்குக் கைவந்த கலையாக இருந்தது. இதனால் அவரிடம் பழகுகின்ற ஒவ்வொருவரும் நிறைவு பெற்றனர். ஸ்பென்சர், ஷேக்ஸ்பியர், காளிதாசர், டார்வினின் பரிணாம வாதம், யூதர் வரலாறு, ஆரிய நாகரீகம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்று அவர் பேசிய துறைகள் ஏராளம். இங்கு தங்கிய சில நாட்களில் சுவாமிஜி சில  தமிழ் வார்த்தைகளையும் கற்றுக் கொண்டார்.

 

ஜாதிக்கொடுமைகள்

 

ஜாதிக் கொடுமைகள் பற்றி பெங்களூர் டாக்டர் பல்ப்பு தம்மிடம் கூறியதில் சிறிதும் பிழையில்லை என்பதை சுவாமிஜி இங்கே அறிந்து கொண்டார்.ஜாதியின் பெயரில் என்னென்ன  கொடுமைகள் நடைபெற முடியுமோ அத்தனையும் அங்கே நடைபெற்றன. தாழ்ந்த ஜாதியினரின் கோயிலுக்குப் போக்கூடாது, உயர்ந்த ஜாதியினரின் தெருவில் போகக்கூடாது. அவர்களைப் பார்க்கக்கூடாது. சாஸ்திரங்கள் படிக்கக்கூடாது. அனைத்திற்கும் உச்சக் கட்டமாக ஒரு குறிப்பிட்ட ஜாதிப்பெண்கள் திருமணத்திற்கே அனுமதிக்கப் படவில்லை. இந்தக் கொடுமைகளைக் கிறிஸ்தவப் பாதிரிகள் சாதகமாக்கிக்கொண்டு நூற்றுக்கணக்கில் மக்களை மதம் மாற்றினார். சுவாமிஜி எழுதுகிறார்,

 

என்ன படுமோசமான நிலைக்குக்கொண்டு வரப் பட்டுவிட்டோம்! தோட்டி ஒருவன் தோட்டியாக நம் முன் வந்தால் பிளேக் நோயை விரட்டுவது போல் விரட்டப்படுகிறான். ஆனால் அவன் ஒரு பாதிரியிடம் சென்று, சில பிரார்த்தனைகளை முணுமுணுத்துக்கொண்டு . தலைமீது ஒரு கோப்பை நூலால் செய்யப் பட்டதானாலும் சரி- போட்டுக்  கொண்டு வைதீக இந்து ஒருவனது அறையில் வருகிறான்.அப்போது, அவனுக்கு உடனே நாற்காலி தந்து அவனுடன் ஆர்வத்துடன் கைகுலுக்க மறுப்பதற்குத் தெரியமுள்ள இந்துயாரும் உண்டென்று எனக்குத்தோன்றவில்லை. விதி செய்த வேடிக்கையின் உச்சநிலையல்லவா இது! இங்கு வந்து பாருங்கள். இந்மப் பாதிரிகள் இங்கு தென்னாட்டில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள்? தாழ்ந்த வகுப்பினரை லட்சக்கணக்கில் மதமாற்றம்  செய்து வருகிறார்கள், திருவாங்கூரில் பாரத நாட்டிலேயே புரோகிதர்களின் அட்டகாசம் உச்சநிலையிலுள்ள  திருவாங்கூரில், நிலத்தின் ஒவ்வொரு சிறு பகுதியும் பிராமணர்களுக்கே சொந்தமாக உள்ள அந்தத் திருவாங்கூரில் பெண்கள் –அரச குடும்பத்தைச்சேர்ந்த பெண்களும் கூட பிராமணர்களின் வைப்பாட்டிகளாக வாழ்வதைப்பெருமையாகக் கருதுகின்ற அந்தத் திருவாங்கூரில் ஏறத்தாழ காற்பங்கு மக்கள் கிறிஸ்தவர்கள் ஆகி விட்டனர்.

 

 பின்னாளில் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கே ஓர் அச்சுறுத்தலாகத் திகழ இருந்த ஆரியர்- திராவிடர் பிரச்சனையின் முளையையும்  சுவாமிஜி அன்றைய திருவாங்கூரில் காண நேர்ந்தது. வடக்கிலிருந்து வந்தவர்களாகிய பிராமணர்களின் (ஆரியர்) கருத்துக்களும் ஆதிக்கமும் தென்னிந்தியர்களாகிய திராவிடர்களைக் கீழ்ப்படுத்துவதை எதிர்த்து அங்கங்கே குரல்கள் எழத்தொடங்கியிருந்தன. நன்றாகப் படித்த பேராசிரியர்  சுந்தரம் பிள்ளை போன்றவர்களே தங்களைத்திராவிடர்கள் என்றும், பொதுவான வழக்கில் கருதப்படுகின்ற இந்துக்கள் அல்ல என்றும் கூறியது சுவாமிஜிக்கு திகைப்பைத் தந்தது. அதே வேளையில் ஐயர் போன்றோரின் முற்றிலும் மாறுபட்ட கருத்தும் சுவாமிஜிக்கு ஏற்புடையதாக இல்லை. இப்படி ஆரியர், திராவிடர் என்ற பிரிவையே சுவாமிஜி ஏற்றுக் கொள்ளவில்லை. கறுப்பாக இருக்கின்ற பிராமணர்கள்  கட்டாயமாக திராவிட முன்னோர்களிலிருந்து  வந்தவர்களே! எனவே இத்தகைய ஒரு பிரிவு தேவையற்றது என்பது கருத்தாக இருந்தது. அவர்களால் சுவாமிஜி யின் கருத்தை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

 

அது போலவே உணவு விஷயத்திலும் சுவாமிஜியின் கருத்துக்கள் அவர்களைப்பெரிதும் திகைப்பில் ஆழ்த்தின. பண்டைய காலத்தில் பிராமணர்கள் யாகத்தில் பசு போன்ற மிருகங்களைப் பலியிட்டார்கள். அவற்றின் இறைச்சியை உண்டார்கள். தேன் கலந்த மது பர்க்கம் என்ற பானகத்தை விருந்தினர்களுக்குக்கொடுத்து உபசரித்தார்கள். இது பற்றிய குறிப்புகள் வேதங்களில் உள்ளன. பின்னர் புத்த மதம் பரவியபோது இந்தப் பழக்கம் மறைந்தது. பிரிட்டிஷ் அரசு ஆகட்டம், அல்லது அதற்கு வெளியிலுள்ள நாடுகள் ஆகட்டும், ஆற்றலும் அதிகாரமும் மிக்க உலக நாடுகளுடன் இந்தியா போட்டியிட்டு முன்னேற வேண்டுமானால் மாமிச உணவு இந்துக்களுக்கு அவசியம் என்றார் சுவாமிஜி. இதனையும் அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

ஐயரின் மகனான ராமசுவாமி சாஸ்திரியிடம் சுவாமிஜி கூறிய கருத்துகள் அவர் பின்னாளில் எத்தகைய பணியைச்செய்ய விரும்பினார் என்பதை எடுத்துக்காட்டின. தேச பக்தி, தேசபக்தி என்கிறார்கள். உண்மையில் அது என்ன? கண்மூடித்தனமான ஒரு நம்பிக்கையா? இல்லை. உணர்ச்சியின் எழுச்சியா? இல்லை. நாட்டு மக்களுக்குத்தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம் தான் உண்மையில் தேச பக்தி.இந்தியா முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும் துன்பமும் ஒழுக்கச் சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன். அவர்களின் தீவினை அது, அதனால் கஷ்டப்படுகிறார்கள் என்று கர்மம். பற்றி பேசுகிறார்கள்.தயவு செய்து அப்படிப்பேசாதீர்கள். கஷ்டப்படுவது அவர்களின் கர்மம் என்றால். அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது கர்மம்.கடவுளைக்காண வேண்டுமானால் மனிதனுக்குத் தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற லட்சோபலட்சம் ஏழை நாராயணர்களுக்குச்சேவை செய்யுங்கள். அதுதான் உண்மையான தேசபக்தி.

 

இத்தகைய கருத்துக்களை சுவாமிஜி அங்கே பலரிடம் பேசினார். இந்தியா முழுவதையும்  மாற்றியமைக்கும் வகையில் எத்தகைய சீர்திருத்தத்தைக்கொண்டு வரவேணடம் என்பதையெல்லாம் எடுத்துக் கூறினார். சுவாமிஜியின் விஜயமும் அவர் சட்டம்பி சுவாமிகள் போன்றோரைச் சந்தித்துப்பேசியதும் கேரளம் பின்னாளில் கண்ட சமுதாயப் புரட்சிகளுக்கு ஒரு விதையாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

சுவாமிஜி திருவனந்தபுரத்தில் இருந்துபோது கல்கத்தாவைச்சேர்ந்த மன்மத நாத் என்பவரும் அலுவலக வேலை காரணமாக திருவனந்தபுரத்திற்கு வந்திருந்தார். அவர் சென்னையில் உதவித் தலைமைக் கணக்கராக இருந்தார். அவர் சுவாமிஜிக்கு அறிமுகமானார். அங்கிருந்து புறப்பட சுவாமிஜி தயாராகிக்கொண்டிருந்த போத வஞ்சீசுவர சாஸ்திரி என்ற பண்டிதர் சுவாமிஜியைக் காண்பதற்கு வந்தார். சில  நிமிடங்களே அவர்கள்பேச முடிந்தது. இருப்பினும் பேசிவிட்டு வெளியே வந்த சாஸ்திரி சுவாமிஜிக்கு சம்ஸ்கிருத இலக்கணத்தில் இருந்த தேர்ச்சியைப்பற்றி கூறிப்புகழ்ந்தார்.

ஒன்பது நாட்கள் திருவனந்த புரத்தில் கழித்துவிட்டு, 1892 டிசம்பர் இறுதியில் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்குப் புறப்பட்டார் சுவாமிஜி.

 

சில நிகழ்ச்சிகள்.

-

சுவாமிஜியின் வாழ்க்கையிலும் மகத்தான பணியிலும் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது. மேலை நாடுகளுக்கு ச் செல்வதற்கான ஒரு உத்வேகம் அவருக்கு இங்கிருந்தே, குறிப்பாக கன்னியாகுமரி தேவியைப் பணிந்து, அங்கு அவர் மேற்கொண்ட தியானத்திற்குப் பிறகே ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சிக்குப்போகு முன்னர் அவரது பரிவிராஜக வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைக்காண வேண்டியுள்ளது. அவை நிகழ்ந்த இடமும் காலமும் சரியாகத் தெரியாததால் அவற்றை தொகுத்து இங்கே தந்துள்ளோம்.

சுவாமிஜியுடன் சக பயணியாக ஒரு சமயம் வந்து கொண்டிருந்தார் ஒருவர். அவர் நன்கு படித்திருந்தார். உலக விஷயங்கள் தெரிந்தவராகவும், புத்திகூர்மை உடையவராகவும் காணப்பட்டார். ஆனால் அற்புதங்களைப்பெரிதும் நம்புவராக இருந்தார். சுவாமிஜி தாம் இமயமலையில் வாழ்ந்திருப்பது பற்றி கூறியதும் அவர், சுவாமிஜி, அங்கே சித்தர் கணங்களைச் சந்தித்தீர்களா? என்று கேட்டார். அந்த மனிதர் எதுவரை போகிறார் என்பதைப் பார்க்க விரும்பிய சுவாமிஜி  நிகழாத பல அற்புதங்களைத் தாராளமாக அவிழ்த்துவிட்டார். மகாத்மாக்களான  சித்தர்கள் தம்மிடம் வந்ததாகவும் உலகின் முடிவைப் பற்றி தம்மிடம் தெரிவித்ததாகவும்  கூறினார். இந்த யுகம்  எப்போது முடியப்போகிறது, எப்போது பிரளயம் நிகழும்,  அடுத்த யுகம் பிறக்கும்போது எந்தெந்த சித்தர்கள் யார்யாராகப் பிறந்து  எப்படியெப்படி மனிதகுலத்தை வழிநடத்தப்போகிறார்கள் என்றெல்லாம் சுவாமிஜி அளந்தார். அந்த சக பயணி பூரண நம்பிக்கையுடன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார். பிறகு, இவ்வளவு தூரம் தனக்கு உண்மைகளை உணர்த்திய சுவாமிஜியை நன்றியுடன் உணவருந்த அழைத்தார்.

அப்போதெல்லாம் சுவாமிஜி கையில் பணம் வைத்துக்கொள்வதில்லை. யாரேனும் டிக்கட் வாங்கிக்கொடுத்தால் அதை மட்டும் ஏற்றுக்கொண்டு பயணம் செய்வார். மற்றபடி உணவு, உடை, இருக்கை இவை ஆண்டவன் விட்டவழி யாகட்டும் என்று இருந்துவந்தார். அன்று அந்த மனிதர் அளித்த உணவை ஏற்றுக்கொண்டார். பிறகு ஒரு கணம் அவரை அமைதியாகப் பார்த்தார். அந்த மனிதர் அறிவுக்கூர்மை, இதயம் இரண்டையும் பெற்றிருந்தார். ஆனால் ஆனால் இரண்டையும் கெடுத்தது அவருடைய மூடநம்பிக்கை. அவருக்கு உண்மையை விளக்க விரும்பிய சுவாமிஜி அன்புடன் அவரிடம் கூறினார்.

 

இவ்வளவு படிப்பும், அறிவும் உள்ள நீர் நான் கூறிய இந்தக் கற்பனைக்கதைகளை எல்லாம் நம்புகிறீரே? நண்பரே, நீர் நல்ல புத்திசாலி. உம்மைப்போன்றவர்கள் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டாமா? ஆன்மீகம் என்பது அற்புமும், சித்து விளையாட்டுக்களும் அல்ல. நண்பரே! இவற்றில் நாட்டம் இருக்கும்வரை ஒருவன் ஆசைகளுக்கு அடிமையாகவும் சுயநலவாதியாகவும் தான் இருப்பான். நற்பண்பு, நன்னடத்தை ஆகியவற்றில் தான் உண்மையான சக்தி இருக்கிறது.  அந்தச் சக்தியைப்பெறுவதே ஆன்மீகம். வேகங்களையும் ஆசைகளையும் வெல்வது தான் ஆன்மீகம். வாழ்க்கைப் பிரச்சனைகளைத்தீர்க்க உதவாத சித்துவிளையாட்டுக்களைத் துரத்திச் செல்வது நமது ஆற்றலை விரயம் செய்வதே தவிர வேறல்ல. அது மனத்தைக்கெடுக்கும். இந்த அபத்தம் தான் இன்று நாட்டின் நெறியைக் குலைத்து வருகிறது. நம்மை மனிதனாகச் செய்வதற்கான வலுவாய்ந்த பகுத்தறிவையும் பொதுநலஉணர்ச்சியையும் தருகின்ற தத்துவமும் சமயமுமே இன்றையதேவை.

 

ஸ்ரீராமர் உணவு அனுப்புகிறார்

 

கோடைக் காலத்தில் ஒரு முறை சுவாமிஜி உத்திரப்பிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் பயணம் செய்தான் வியாபாரி ஒருவன். சுவாமிஜியிடம் பணமோ வேறு எந்த வசதியுமோ இல்லை என்பதைக்கண்ட அவன் அவரை ஏளனத்துடன் பார்ப்பதும் கேலி செய்வதுமாக இருந்தான். ஒவ்வொரு நிலையத்தில்  ரயில் நிற்கும்  போதும் நன்றாக் சாப்பிட்டான். தவறாமல் சுவாமிஜியைக்கேலி செய்தான்.கடைசியாக தாரிகாட் என்ற இடம் வந்தது. அது மதியவேளை. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நல்ல பசியும் தாகமும் சுவாமிஜியை வாட்டின. சுவாமிஜியிடம் ஒரு கமண்டலம் கூட இல்லை. ரயில் நிலையத்திலுள்ள கூரையின் கீழ் அமரச் சென்றார். சுமை தூக்கும்  தொழிலாளி ஒருவன் அங்கே அவருக்கு இடம் தர மறுத்து விட்டான். எனவே அவர் தரையில் அமர்ந்தார்.

 

அங்கும் அந்த வியாபாரி வந்து அவர் காணும் படி நல்ல இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான். உணவு வர வழைத்து அவருக்கு முன்னாலேயே சாப்பிட்டான். அத்துடன் நில்லாமல் சுவாமிஜியிடம், ஏய் சன்னியாசி! பணத்தைத் துறந்ததால் வந்த கஷ்டத்தைப் பார்த்தாயா? சாப்பிடவோ தாகத்தைத் தீர்த்துக்கொள்ளவோ உனக்கு வழியில்லை. என்னைப்போல் நீயும் ஏன் சம்பாதிக்கக்கூடாது. நன்றாகச் சம்பாதித்தால்  வேண்டுமட்டும் அனுபவிக்கலாமே! என்று வம்பு பேசினான். சுவாமிஜி எதுவும் பேசவில்லை. பிறகு அவன் பூரியும் லட்டும் வரவழைத்துச் சாப்பிட்டான். சாப்பிட்டபடியே சுவாமிஜியைப்பார்த்து ”சம்பாதிக்கின்ற  எனக்கு லட்டும் பூரியும் கிடைக்கின்றன.சம்பாதிக்காத உனக்குப் பசியும் தாகமும் வெயிலும் கிடைத்துள்ளன. தகுதிக்கு ஏற்பவே ஒவ்வொருவனும் பெறுகிறான், என்று தத்துவமெல்லாம் பேசினான். சுவாமிஜி அமைதியாக அனைத்தையும்  கேட்டுக்கொண்டிருந்தார். அவரது முக பாவத்தில் எந்த மாற்றமும் இல்லை.

திடீரென்று காட்சி மாறியது! அங்கே வந்தான் ஒருவன். அவனது கையில் ஒரு பொட்டலம், தண்ணீர், டம்ளர், இருக்கை போன்றவை இருந்தன. இருக்கையை ஒரு நிழலில் விரித்துவிட்டு நேராக அவன் சுவாமிஜியிடம் வந்தான். சுவாமிஜி, நான் உங்களுக்காக உணவு கொண்டு வந்திருக்கிறேன், வாருங்கள்  என்று அழைத்தான். சுவாமிஜி இதனைச் சற்றும்  எதிர்பார்க்கவில்லை. அவரால்  நம்பமுடியவில்லை. ஊரும் பேரும் தெரியாத இந்த இடத்தில் என்னை அழைப்பது யார், இவன் என்னை ஏன் அழைக்க வேணடும், இதன்பொருள் என்ன? என்றெல்லாம் சந்தித்தார். இதைக் கண்ட வியாபாரிக்கு எங்கோ பொறிதட்டியது போல் இருந்தது. தான் நினைத்தது போல் அவர் சாதாரணமானவர் அல்ல என்பது அவனுக்குப் புரிய ஆரம்பித்தது நடப்பதை அவன் திகைப்புடன் கவனித்தான்.

வந்தவன் மீண்டும் சுவாமிஜியிடம் சுவாமிஜி, வாருங்கள் . சீக்கிரம் வந்து சாப்பிடுங்கள் என்றான்.

 

சுவாமிஜி- இதோ பாரப்பா, என்னை நீ வேறு யார் என்றோ தவறுதலாக நினைத்து அழைக்கிறாய். நான் உன்னைப் பார்த்தது கூட இல்லை.

 வந்தவன்- இல்லை சுவாமிஜி, நான் கண்ட துறவி நீங்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லையே!

சுவாமிஜி (வியப்புடன்)- நீ என்னைக் கண்டாயா? எங்கு கண்டாய்.

வந்தவன்- நான் இனிப்புக் கடை வைத்திருக்கிறேன். மதிய உணவிற்குப் பிறகு வழக்கம்போல் சற்று கண்ணயர்ந்தேன். அப்போது ஸ்ரீராமர் என் கனவில் தோன்றினார். உங்களைக் காண்பித்து, இதோ என் மகன் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருக்கிறான். உடனே எழுந்து பூரி,  இனிப்பு எல்லாம் எடுத்துக் கொண்டு ரயில் நிலையத்திற்குப்போ என்றார். நான் விருட்டென்று எழுந்தேன். அப்போது தான் அது கனவு என்பது  புரிந்தது. எனவே அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டு மீண்டும் படுத்துத் தூங்கினேன். எல்லையற்ற கருணை வள்ளலான ஸ்ரீராமர் மீண்டும் வந்து என்னை உலுக்கி எழுப்பினார். அதன் பிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அவர் கூறியது போல் அனைத்தையும் தயாரித்து எடுத்துக்கொண்டு வந்தேன். நான் கனவில் கண்ட அதே நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். தொலைவிலிருந்தே உங்களை நான் கண்டு கொண்டேன். வாருங்கள், மிகவும் பசியாக இருப்பீர்கள். எல்லாம் ஆறிப்போகுமுன் சாப்பிடுங்கள்.

சவாமிஜியின் உணர்ச்சி விவரிக்க இயலாததாக இருந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிய அவர் அந்த அன்பருக்கு நன்றி கூறினார். அவன் அதைத் தடுத்து எனக்கு நன்றி கூறாதீர்கள் சுவாமிஜி. எல்லாம் ஸ்ரீராமரின் திருவுளம் என்றான்.

இவை அனைத்தையும் கண்டு கொண்டிருந்தான் வியாபாரி. சாட்சாத் ஸ்ரீராமரே வந்து உணவு அனுப்பியிருக்கிறார் என்றால் அவர் எத்தகைய உயர்ந்த மகானாக இருப்பார் என்பதை எண்ணிப்பார்த்த அவனால் அதன்பிறகு தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. உடனே எழுந்து ஓடோடி வந்து சுவாமிஜியின் திருப்பாதங்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். சுவாமிஜி மௌனமாக அவனை ஆசீர்வதித்துவிட்டு சாப்பிடச் சென்றார்.

 

அந்த வியாபாரி கூறியது போல் ஒரு முறை சுவாமிஜிக்கே தோன்றியது. உண்மைதானே!  என் உடம்பும் கை கால்களும் நன்றாகத் தானே இருக்கின்றன! நான் வீடு வீடாகச்சென்று பிச்சை வாங்கி உண்பது சரிதானா? என்று அவர் சிந்திக்கலானார். சரியல்ல என்ற விடையையே அவரது உள்ளம் கூறியது. இந்த நாட்களில் சகோதரத்துறவி ஒருவருக்கு அவர், நான் வெட்கம் மானமில்லாமல் துளிக்கூட மன உறுத்தல் இல்லாமல், காக்கை போல் மற்றவர்களின் வீடுகளில் பிச்சை எடுத்து உண்டபடி திரிந்து கொண்டிருக்கிறேன். என்று எழுதியிருக்கிறார். இந்த எண்ணம் எழுந்ததும் அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

எனக்கு உணவு தரும் ஏழைகளுக்கு என்னால் என்ன பயன்? அவர்கள் ஒரு பிடி அரிசி மீதம் பிடிக்கமுடியுமானால் சொந்தக் குழந்தைகளுக்கே அது ஒரு நாள் உணவாகுமே! அதெல்லாம் தான் போகட்டும், இந்த உடலைக் காப்பாற்றி என்ன ஆகவேண்டும்? இனி நான் பிச்சையெடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்து கொண்டார் சுவாமிஜி. அந்த எண்ணம் தீவிரமாயிற்று. ஏதாவது காட்டிற்குச்சென்று தவம் புரிந்து உடல் வற்றி உலர்ந்து, காய்ந்த சருகுபோல் தானாக விழும் வரை உண்ணா நோன்பிருப்பது என்று உறுதி செய்துகொண்டார்.

இந்த எண்ணத்துடன் ஒரு காட்டிற்குள் நுழைந்து அன்ன ஆகாரம் இல்லாமல் ஒரு நாள் முழுவதும் நடந்தார். மாலை வேளை வந்தபோது மயக்க  நிலையில் மரம் ஒன்றின் கீழே சாய்ந்து பகவானைத் தியானிக்கலானார்.

சிறிது தியானம் கலைந்தபோது

 ஆகா! அதோ தெரியும்  இரண்டு கனல் துண்டுகள்............

அவை ......... சந்தேகமேயில்லை! பலியின் கண்கள் தாம்!

அதோ, அந்தக்கண்கள் நெருங்கி நெருங்கி வந்தன. இதோ வந்து விட்டன!

சுவாமிஜியின் உடலும் சரி, உள்ளமும் சரி, இம்மிகூட அசையவில்லை. அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்த அந்தப் புலியும் ஏனோ அவருக்குச்சற்று தூரத்தில் படுத்துக்கொண்டது.

புலியை அன்புடன் நோக்கினார் சுவாமிஜி

 

ஒரு வறட்டுச்சிரிப்பு அவரது முகத்தில் படர்ந்தது. சரிதான், என்னைப்போல் இந்தப்புலியும் பட்டினி கிடந்ததாகத் தெரிகிறது. இருவரும் பட்டினி. இந்த என் உடலால் உலகுக்கு எந்த நன்மையும் வியையுமென்று தோன்றவில்லை. இந்தப் புலிக்காவது பயன்படும் என்றால் அது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று எண்ணிக்கொண்டார். அமைதியாக அசைவின்றி தம்மை மரத்தில் நன்றாகச் சாய்த்துக்கொண்டார். கண்களை மூடி, இதோ இப்போது புலி  என் மீது பாயப்போகிறது என்று நினைத்தபடி அமர்ந்திருந்தார்.ஒரு கணம், இரண்டு கணம், ஒரு நிமிடம் என்று நேரம் கடந்தது. புலி பாயக் காணோம். சற்றே சந்தேகம் எழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தார். அங்கே புலி இல்லை. அது சென்று விட்டிருந்தது. ஆகா! பரம்பொருள் தம்மை எப்படியெல்லாம் காத்து வருகிறார் என்பதை அகம் உருகி நினைத்துப் பார்த்தார். அன்றைய இரவை அங்கேயே ஆத்ம சிந்தனையில் கழித்தார். பொழுது விடிந்தது. முந்தின நாளின் களைப்பு, சிரமம் எதுவும் உடம்பில் இல்லை. உடம்பும் மனமும் ஒரு புது ஆற்றலைப் பெற்றது போல் இருந்தது. தமது யாத்திரையைத்தொடர்ந்தார்.

 

எனக்குப் பலவீனமா?

 

 இன்னொரு சமயம்  -தகிக்கும் வெயிலில் வேர்த்து விருவிருத்துக் களைப்பாலும் பசியாலும் சோர்ந்தார் சுவாமிஜி. ஓர் அடி கூட நடக்க முடியாத நிலைமையில்  எப்படியோ சமாளித்துக்கொண்டு  ஒரு மரத்தடிக்குச்சென்று அமர்ந்தார். இனி ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது என்று அவருக்குத்தோன்றியது. அப்போது மின்னல் போல் ஓர் எண்ணம் அவருள் தோன்றியது. ஆன்மா சர்வ சக்தி வாய்ந்தது என்பது பொய் அல்லவே? அப்படியிருக்க ப் பசியும் களைப்பும் சோர்வும் எங்கிருந்து வந்தன? உடலுக்கும் மனத்திற்கும் வந்த சோர்வையும் களைப்பையும் நான் ஏன் எனதாக எண்ண வேண்டும்? நான் எப்படிப் பலவீனனாக இருக்க முடியும்? என்று சிந்தித்துப் பார்த்தார் அவர். அந்தக் கணமே அவரது உடல் முழுவதும் ஒரு சக்தி வெள்ளம் பாய்வதாகத் தோன்றியது. அவரது உள்ளம் தெள்ளியதோர் ஒளி பெற்றது. களைப்பும் பலவீனமும் இருந்த இடம் தெரியாமல் பறந்தன. தாம் ஒருபோதும் பலவீனத்திற்குப் பணி முடியாது என்ற உறுதியுடன் எழுந்து நடக்கத்தொடங்கினார். இப்படித் தமது உடல் பலவீனத்தை ஆன்ம பலத்தால் அவர் வென்ற நேரங்கள் பல. இதைப் பின்னாளில் அவர் தமது உரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

 

நான் எத்தனையோ முறை  முழுப்பட்டினியால் சாகும் நிலையில் கிடந்திருக்கிறேன். கால் தளர . களைப்பு மேலிட நாட்கணக்கில் உணவே இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறேன். இனிமேல் நடக்கவே முடியாது என்ற நிலையில் மரத்தடியில் சாய்ந்து விடுவேன். சிறிது சிறிதாக உயிர் பிரிந்து கொண்டிருப்பது போல் தோன்றும். என்னால் பேசவோ சிந்திக்கவோ இயலாது. கடைசியில் மனத்தில், எனக்குப் பயமோ சாவோ இல்லை. எனக்குப் பசியோ, தாகமோ இல்லை. நானே அது. நானே அது. இயற்கை முழுவதும் திரண்டு வந்தாலும் என்னை நசுக்க முடியாது. இயற்கை என் அடிமை. தேவதேவனான மகாதேவனான நீ உன் பலத்தை வலியுறுத்து. இழந்த பேரரசை மீட்டுக்கொள்! எழுந்து நட! எங்கும் நிற்காதே! என்ற எண்ணம் எழும். உ்னே புத்துணர்ச்சி பெற்றவனாக எழுந்துவிடுவேன். இதோ, இன்றும் உயிருடன் இருக்கிறேன்.

 

இருள் உன்னைச் சூழ்கின்றபோதெல்லாம் உன் உண்மை இயல்பை வலியுறுத்து. பாதகமானவை எல்லாம் மறைந்தே தீர வேண்டும். ஏனெனில் இவை எல்லாம் வெறும் கனவுகள். துன்பங்கள் மலையளவாகத் தோன்றலாம், எல்லாமே பயங்கரமானவையாக, இருள் சூழ்ந்தவையாகத்தோன்றலாம் ஆனால் எல்லாம் வெறும் மாயை.பயப்படாதே, மாயை மறைந்துவிடும். நசுக்கு, அது ஓடி விடும். காலால் மிதி. இறந்துவிடும். பயத்திற்கு இடம் கொடுக்காதே.

பரிவிராஜக நாட்களைப் பற்றி பின்னாளில் சீடர் ஒருவரிடம் சுவாமிஜி கூறினார். ஆகா, நான் பாடுபட்ட அந்த நாட்கள்! ஒரு சமயம் மூன்று நாட்கள் அன்ன ஆகாரமில்லாமல் மயக்கமடைந்து சாலை நடுவிலேயே விழுந்து விட்டேன். எவ்வளவு காலம் அப்படிக் கிடந்தேன் என்பதே தெரியவில்லை. நினைவு வந்தபோது என் ஆடையெல்லாம் நனைந்திருப்பதை உணர்ந்தேன். நல்ல மழை பெய்திருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். அந்த ஈரம்  எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டியது. எழுந்திருந்து சிரமத்துடன் நடக்க லானேன். சிறிது தொலைவிலிருந்த மடத்தை அடைந்தேன். அங்கு எனக்குக் கிடைத்த உணவு என் உயிரைக் காப்பாற்றியது.


No comments:

Post a Comment