சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-5
🌸
ஸ்ரீராமகிருஷ்ணரின்
வினோத நடத்தை
அதன் பிறகு
ஸ்ரீராமகிருஷ்ணர் நடந்து கொண்ட விதம் வினோதமாக இருந்தது. திடீரென்று அவர் நரேந்திரரிடம்
ஆமாம்” நீ உறங்குவதற்கு முன்பு ஓர் ஒளியைக் காண்கிறாயா? என்று கேட்டார்.
நரேந்திரர் அதற்கு, ஆம்! ஏன் மற்றவர்கள் காண்பதில்லையா? என்று கேட்டார். ஆஹா! எல்லாம்
சரியாக உள்ளது.நரேன் பிறப்பிலிருந்தே தியான சித்தன் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
பிறகு திடீரென்று
ஸ்ரீராமகிருஷ்ணர் தமது இருக்கையிலிருந்து எழுந்து நரேந்திரரின் கையைப் பிடித்து அவரைத்
தனியாக வடக்கு வராந்தாவிற்கு அழைத்துச்சென்றார்.
அறையிலிருந்து
வராந்தாவிற்குச் செல்லும் கதவைச் சாத்தித் தாளிட்டார். அங்கே இருவரும் தனியாக இருந்தனர்.
தமக்கு அவர் ஏதோ உபதேசம் செய்யப்போ
கிறார் என்று நினைத்தார் நரேந்திரர்.
ஆனால் நடந்தது என்னவோ வேறு! பின்னாளில் நரேந்திரர் கூறினார்.
என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு அவர் ஆனந்தக் கண்ணீர்
வடிக்கத்தொடங்கினார். நெடுநாட்கள் பழகியவர் போல் மிகவும் அன்புடன் என்னை அழைத்து ஓ!
இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறாயே நீ! லௌகீக மனிதர்களின் உலகியல் பேச்சுக்களால் என்
காதுகள் புண்ணாகி விட்டன. என் ஆழ்ந்த அனுபவங்களை, தகுந்த ஒருவரிடம் கூறுவதற்கு
எவ்வளவு பிரிதவிக்கிறேன்! என்று அழுது கொண்டே கூறினர். மறுகணம் கைகூப்பி என்னை வணங்கினார்.
கைகூப்பியபடியே
நின்றுகொண்டு என்னிடம், ஐயனே! தாங்கள் பண்டைய ரிஷியான நரன், நாராயணரின் அவதாரம், உலக
மக்களின் துயர் துடைக்க இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்திருக்கிறீர்கள்” என்றெல்லாம் கூறினார்.
ஆனால் நானோ
எனக்குள், இது என்ன விபரீதம்! நான் விசுவநாத தத்தரின் மகன்.ஆனால் இவர் என்னை ரிஷி என்கிறார்.
நாராயணன் என்கிறார்! சந்தேகம் இல்லை. இந்த மனிதர் ஒரு பைத்தியக் காரராகத்தான் இருக்கவேண்டும்.
என்று நினைத்துக்கொண்டேன். இருப்பினும் நான் எதுவும் பேசவில்லை.
பின்னர்
ஸ்ரீராமகிருஷ்ணர் தமது அறைக்குள் சென்றார். இனிப்பு எடுத்து வந்து தமது கைகளாலேயே நரேந்திரருக்கு
ஊட்டினார். நரேந்திரர் அதைத் தடுத்து, என் கையில் கொடுங்கள்.நான் உள்ளே சென்று என்
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்றார். ஸ்ரீராமகிருஷ்ணர் அதைக்கேட்காமல்,
அவர்களுக்குப் பிறகு கிடைக்கும், என்று கூறி நரேந்திரரை உண்ணச்செய்தார். பிறகு அவரது
கைகளைப் பிடித்துக்கொண்டு, அப்பா, விரைவில் ஒரு நாள் தனியாக வருவேன் என்று எனக்கு உறுதி கூறு” என்று கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை மறுக்க முடியாமல்
நரேந்திரர் ஏற்றுக்கொண்டார்.
மழைத்துளி
விழுந்தது!
பிறகு நரேந்திரரை
அறைக்குள் அழைத்துவந்து மற்றவர்களுடன் பேச்சு வார்த்தை த் தொடர்ந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.நரேந்திரரும்
தமது நண்பர்களின் அருகில் சென்று அமர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணரின் நடவடிக்கைகளைக் கவனிக்கத் தொடங்கினார்.சற்று முன்பு
வராந்தாவில் தம்முடன் பேசியவரும் இவரும் வெவ்வேறானவர்கள் போல் அவருக்குத்தோன்றியது.
அந்த அளவிற்கு அவர் மற்றவர்களிடம் சாதாரணமாக நடந்துகொண்டார்.
நரேந்திரருக்கு
வியப்பு தாளவில்லை.
ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணரின்
பேச்சும் அனுபவங்களும் அவர் ஓர் உண்மையான துறவி என்று நரேந்திரருக்குக் காட்டின. அவரது
வாழ்க்கையும் சொற்களும் இசைந்திருந்தன. அவர் எளிய மொழியில் பேசினார்.
அப்போது
நரேந்திரருள், இந்த மனிதர் ஒரு குருவாக இருக்க முடியுமா? என் சந்தேகத்தை இவரிடம் கேட்கலாமா?
என்ற கேள்வி எழுந்தது. உடனே அவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருகில் சென்றார். நெடுநாட்களாக
மனத்தை உறுத்திக்கொண்டிருந்த , பலரிடமும் கேட்கும் பதில் கிடைக்காத அந்தக்கேள்வியைக்கேட்டார்.
ஐயா, நீங்கள்
கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?
எங்கெங்கோ
முட்டிமோதி தோல்வி கண்டு திரும்பிய கேள்வி இப்போது உரிய இடத்தை அடைந்தது. உ்டேனே பதிலும்
வந்தது.
ஆம், கண்டிருக்கிறேன்,
ஆனால் தெளிவாக, உன்னைப் பார்ப்பதைவிடத் தெளிவாக, இன்னும் தெளிவாக” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
கடலிலேயே
வாழ்ந்தாலும் மழைத்துளிக்காக ஏங்கி, அதற்காகவே தன்னைத்திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தது
முத்துச்சிப்பி! இன்று மழைத்துளி விழுந்தது.!
ஸ்ரீராமகிருஷ்ணர்
தொடர்ந்தார்.
உன்னைப்
பார்ப்பது போல், உன்னுடன் பேசுவது போல் கடவுளைப் பார்க்கலாம், பேசலாம். ஆனால் யார்
அதை விரும்புகிறார்கள்! மனைவி மக்களின் சோகத்தில்
மக்கள் குடங்குடமாகக் கண்ணீர் விடுகிறார்கள். பணத்திற்காகவும்,சுகபோகங்களுக்காகவும்
அழுது புரள்கிறார்கள்்.கடவுளை அடையவில்லையே என்று யார் அழுகிறார்கள்?
அவரைக்காணவேண்டும்
என்று ஏங்கிய மனத்துடன் கூவி, அழைத்தால் அவர் கண்டிப்பாகக் காட்சி தருவார்.
பின்னாளில்
நரேந்திரர் கூறினார்.
அவரது பதில்
என் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. நான் கடவுளைக் கண்டிருக்கிறேன்.மதம் என்பது உணர வேண்டிய
உண்மை. இந்த உலகத்தை நாம் உணர்வதை விடப் பல மடங்கு ஆழமாக உணரப்படக்கூடிய ஒன்று, என்றெல்லாம்
கூறும் ஒருவரை நான் முதன்முதலாகச் சந்தித்தேன். அவர் கூறியதைக்கேட்டபோது, மற்ற மத போதகர்
களைப்போல் இவர் கற்பனையில் தோன்றியதைப் பேசவில்லை.இறைவனுக்காக
உண்மையிலேயே அனைத்தையும் துறந்து, அவரை முழுமனத்துடன் அழைத்து, இறையனுபூதி பெற்று,
அந்த அனுபவத்திலேயே பேசுகிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
ஆனால் அவரது
இபபொதைய பேச்சும், சற்றுமுன்பு என்னிடம் நடந்துகொண்ட விதமும் ஒன்றுக்கொன்று முரண்படுவது
போல் தோன்றியது.அப்படியானால் சில நேரங்களில் தெளிவாகவும் சிலநேரங்களில் பைத்தியமாகவும்
இருப்பாரா இவர்? ஒரு வேளை அரைப்பைத்தியமாகவும் இருக்குமோ? என்று தோன்றியது. இருக்கலாம்,
பைத்தியமாக இருக்கலாம், ஆனால் கடவுளுக்காக இப்படி அனைத்தையும் துறப்பவர்களைக் காண்பது
அரிது. பைத்தியமாக இருந்தாலும் இவர் புனிதர், மேலான துறவி, அதனாலேயே மனித குலத்தால்
போற்றி வழிபடத் தக்கவர்” என்று நினைததென். இப்படி முரணான
பல கருத்துக்களுடன் அன்று விடைபெற்று கல்கத்தா திரும்பினேன்.
மற்றொரு
பிரமிப்பும் நரேந்திரரிடம் எழாமல் இல்லை. தூங்கும்போது தாம் பெறுகின்ற ஒளி அனுபவத்தைப்
பற்றி அவர் ஆரம்பத்தில் ஓரிரு நண்பர்களிடம் கூறியதுடன் சரி, பிறகு யாரிடமும் அதைத்
தெரிவிக்கவே இல்லை. அதனை இவர் எப்படி அறிந்தார்! அது மட்டுமல்ல, நரேந்திரரை ஸ்ரீராமகிருஷ்ணர்
”தியான சித்தன்” என்று கூறினார். எனக்கு தியானத்தில் ஆர்வம் இருப்பதும், நான்
தியானம் செய்வதும் இவருக்கு எப்படித் தெரிந்தது? இப்படி பல்வேறு கேள்விகளும் எழுந்து
அவருள் அலைமோதின.
ஸ்ரீராமகிருஷ்ணரிடமும்
அலைமோதத் தான் செய்தது. அது அதன் பின் அலை! நரேந்திரரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் அலை! அந்த ஏக்கம் அவரது மனத்தைக் கசக்கிப் பிழிந்தது.
இரண்டாம்
சந்திப்பு
ஸ்ரீராமகிருஷ்ணரைச்சென்று
பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நரேந்திரரின் மனத்தில் அவ்வப்போது எழுந்தாலும் பல நாட்கள்
அவரால் தட்சிணேசுவரத்திற்குச்செல்ல இயலவில்லை.படிப்பும் பிரம்மசமாஜக் கூட்டங்களும்
நண்பர்களும் என்று நாட்கள் கரைந்தன. அது மட்டுமல்ல, முதல்முறை தட்சிணேசுவரத்திற்குச்
சென்றபோது ஏற்பட்ட அனுபவம் கடவுள் கருத்தில் ஒரு தெளிவை அவரிடம் ஏற்படுத்தினாலும் ஸ்ரீராமகிருஷ்ணரைப்பற்றி
அவரால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அவர் போகாததற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் அங்கே
வருவதாக அவர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வாக்கு கொடுத்திருந்தார்.
கொடுத்த வாக்கினைக் காப்பதற்காகவேனும் சென்றேயாக வேண்டும் என்று தீர்மானித்த நரேந்திரர்
சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் தனியாக ஒரு நாள் சென்றார்.
அன்று நடந்தது
ஓர் அற்புத நாடகம்! அதைப் பற்றி நரேந்திரர் பின்னாளில் கூறினார். அன்று நான் தட்சிணேசுவரக்
காளிகோயிலுக்கு நடந்து சென்றேன். கல்கத்தாவிலிருந்து அது எவ்வளவு தொலைவில் உள்ளது என்று
எனக்குத்தெரியாது.முன்பு வண்டியில் சென்றிருந்தேன்,தாசரதி சன்யால், சாத்கடி லாஹிரி
முதலிய நண்பர்களைச் சந்திக்க ப் பலமுறை வராக நகருக்குப் போயிருக்கிறேன்.அவர்களின் வீட்டிற்கு
அருகில் தான் ராணி ராசமணியின் தோட்டம் இருக்கும்
என்று எண்ணினேன். ஆனால் நடக்க நடக்கப் பாதை
நீண்டு கொண்டே போனது. பலரிடமும் விசாரித்துக்கொண்டு கடைசியில் தட்சிணேசுவரத்தை
அடைந்தேன்.
நெராக ஸ்ரீராமகிருஷ்ணரின்
அறைக்குச் சென்றேன். அவர் சிறிய கட்டிலில் தமக்குள் தாமாக அமர்ந்திருந்தார். அங்கே
வேறு யாரும் இல்லை. என்னைப் பார்த்ததும் மிகுந்த
மகிழ்ச்சியுடன் அமரும்படிக்4றினார். நான் அமர்ந்தேன். அவர் ஏதோ விந்தையான மனநிலையில்
ஆழ்ந்தார். தெளிவின்றி ஏதோ முணுமுணுத்துக்கொண்டு என்னைக்கூர்ந்து பார்த்தபடியே என்னை
நோக்கி மெல்ல நகர்ந்து வந்தார். பைத்தியம் தொடங்கி விட்டது, அன்று போல் இன்றும் வினோதமாக ஏதாவது செய்யப்போகிறது” என்று நினைத்தென் நான். இதற்குள் அவர் என்னை நெருங்கி வந்து
தம் வலது பாதத்தை என்மீது வைத்தார். அந்தக் கணமே எனக்கு ஓர் அற்புத அனுபவம் உண்டாயிற்று.
என் கண்கள் திறந்தே இருந்தன. நான் கண்டது என்ன தெரியுமா?
அறையில்
இருந்த எல்லாப் பொருட்களும் சுவர்களும் சுழன்று
எங்கோ கரைந்தன. பிரஞ்சமும், அதனுடன் எனது நான்-உணர்வும் எல்லாமே மகாசூன்யத்தில் கரையப்போவதைப்போன்றதோர்
உணர்வு என்னுள்ஏற்பட்டது.சொல்ல முடியாத பேரச்சம் என்னைக்கௌவிக்கொண்டது. நான் உணர்வின்
அழிவு தான் மரணம். அந்த மரணம் இதோ நிற்கிறது. என் கண்முன் நிற்கிறது” என்று தோன்றியது. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.ஆ! நீங்கள்
என்னை என்ன செய்கிறீர்கள்! எனக்குப்பெற்றோர் இருக்கிறார்கள்” என்று அலறினேன். அதைக்கேட்டு அந்த அற்புதப் பைத்தியக்காரர்
கலகலவென்று சிரித்தபடியே என் மார்பைத் தம் கையால் தொட்டு, அப்படியானால் போதும்.ஒரேயடியாக
வேண்டாம்.உரிய காலத்தில் எல்லாம் நடக்கும்” என்று கூறினார். அவர் அவ்வாறு
கூறித்தொட்டது தான் தாமதம். அந்தக் கணமே என் அற்புத அனுபவம் மறைந்து விட்டது! நான்
இயல்பான நிலையை அடைந்தேன். அறையின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பொருட்கள் முன்போலவே
இருந்ததைக்கண்டேன்.
இந்த நிகழ்ச்சியை
விவரிக்க இவ்வளவு நேரம் ஆயிற்று. ஆனால் இவையனைத்தும் ஓரிரு கணங்களில் நடந்து முடிந்துவிட்டன.
இந்த நிகழ்ச்சி என் மனத்தில் பெரிய புரட்சியை உண்டாக்கியது. என்ன நடந்தது என்று பிரமிப்புடன்
யோசித்தேன். அந்த விந்தை மனிதரின் ஆற்றலினால் நொடிப்பொழுதில் இந்த அனுபவம் ஏற்பட்டு.
அதே வேகத்தில் மறைந்தும் விட்டிருந்தது.
மெஸ்மரிசம்
, ஹிப்னாடிசம் பற்றி படித்திருக்கிறேன்.இது
அதைப்போல் ஏதாவது இருக்கலாமோ என்று யோசித்தேன். ஆனால் அதை ஏற்க என் மனம் மறுத்தது.
ஏனெனில் உறுதியற்ற மனங்களின் மீது மட்டுமே மன ஆற்றல் மிக்கவர்கள் ஆதிக்கம் செய்து இத்தகைய
நிலைகளை உண்டாக்க முடியும். நான் அப்படிப்பட்டவன் அல்ல. சொல்லப்போனால், என் மன வலிமையிலும்,
அறிவுக்கூர்மையிலும் அசாத்தியப்பெருமை கொண்டிருப்பவன் நான்இ மற்றொன்றும் தோன்றியது.
அவரது ஆளுமையின் தாக்கம் பெற்றிருப்பேனா? இருக்காது.
சாதாரண மனிதர்கள் தான் உயர்ந்தோரின் குணநலன்களால் கவரப்பட்டு, அவர்களின் கைப்பொம்மைகளாக
ஆவார்கள். என் விஷயத்தில் அப்படியிருக்க முடியாது.ஏனெனில் ஆரம்பத்திலிருந்தே நான் அவரை
அரைப்பைத்தியம் என்று தான் முடிவு செய்திருந்தேன். எனக்கு எப்படி இந்த நிலை ஏற்பட்டது?
ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தேன். எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.
என் மனம்
குழப்பத்தில் ஆழ்ந்தது. உனதுதத்துவம் காணும் கனவைவிட அதிகமான எத்தனையோ பல விஷயங்கள் விண்ணிலும் மண்ணிலும் உள்ளன
என்று கவிஞர் கூறிய சொற்கள் என் நினைவிற்கு வந்தன. இதுவும் அதில் ஒன்று என்று நினைத்துக்கொண்டேன்.
இவ்வாறெல்லாம் மண்டையைக் குழப்பி , இறுதியில் இதைப்புரிந்து கொள்ள முடியாது என்ற முடிவிற்கு
வந்தேன். இனி இந்த அற்புதப் பைத்தியக்காரர் தன் சக்தியால் என் மனத்தைக் கட்டுப்படுத்தி
இத்தகையதொரு நிலையை உருவாக் உருவாக்குவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் திடப்படுத்திக்கொண்டேன்.
உறுதியான
மனமும் திட சங்கல்பமும் உடைய என் போன்றவர்களின் மனங்களையும் உடைத்து, தூள் தூளாகச்செய்து,
களிமண்ணைப்பொன்று பிசைந்து, தான் வேண்டிய உருவம் கொடுக்கவல்ல இவரை எப்படிப்பைத்தியம்
என்று கூறுவது என்ற எண்ணமும் எழுந்தது. ஆனால் நான் முதன்முறையாக சென்றபோது என்னைத் தனியாகக் கூட்டிச்சென்று
அவர் பேசியவற்றை நினைத்தால் பைத்தியம் என்று அல்லாமல் வேறு என்ன சொல்வது? மேலே கூறிய
என் அனுபவத்தின் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாததைப்போன்று, குழந்தையைப்போல் புனிதமும்
எளிமையும் பெற்ற அந்த மனிதரைப்பற்றி திடமான எந்த முடிவிற்கும் என்னால் வர முடியவில்லை.
ஒரு பொருளைப்பற்றியோ
மனிதரைப்பற்றியோ கண்டு, கேட்டு, அறிவுபூர்வமாக ஆராய்ந்து பார்த்த பிறகும் என் புத்திக்க
ஒன்று எட்டவில்லையானால் அதை நான் ஏற்றுக்கொள்வதோ நிராகரிப்பதோ இல்லை. பொருட்படுத்தாமல்
விட்டுவிடுவேன். ஆனால் அன்று எனது அந்த இயல்பிற்குப் பலமான அடி விழுந்தது. மனம் சொல்லொணா
வேதனையில் ஆழ்ந்தது. அதன் காரணமாக அந்த விந்தை
மனிதரின் இயல்பையும் ஆற்றலையும் எப்படியாவது ஆராய்ந்து உண்மையைக் கண்டுபிடித்து
விடுவது என்ற உறுதியான முடிவிற்கு வந்தேன்.
இவ்வாறு
பலவித எண்ணங்களும் தீர்மானங்களுமாக என் பொழுது கழிந்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணர் முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார். மிகுந்த அன்புடன் எனக்கு
உணவு ஊட்டினார். நீண்ட நாள் பழகிய வரைப்போல் நடந்துக்கொண்டார்.நீண்டபிரிவிற்குப் பின்னர்
நெருங்கிய நண்பர்களையோ, உறவினர்களையோ சந்தித்தால் எவ்வாறு நடந்து கொள்வோமோ, அது போன்றே
அவரது செயல்கள் இருந்தன. எனக்கு உணவு அளித்து, என்னிடம் பேசி, வேடிக்கை வினோதங்கள்
செய்து என் மீது தமக்கிருந்த அன்பை எப்படியெல்லாமோ வெளிப்படுத்தினார். அப்படியும் அவருக்குத்
திருப்தி ஏற்படவில்லை. இதையெல்லாம் கண்டு எனக்கேற்பட்ட பிரமிப்பு கொஞ்சநஞ்சமல்ல.மெல்ல
மெல்ல அந்திவேளை நெருங்கியதை க் கண்ட நான் அவரிடமிருந்து விடைபெற்றேன். அவர் மிகவும்
வேதனையுற்றதுபோல் தோன்றியது.மீண்டும் விரைவில் வருவாயா? சொல், என்று மீண்டும் பிடித்துக்கொண்டார்.
வருவதாக அன்றும் வாக்களிக்க வேண்டியதாயிற்று. அதன் பின் வீடு திரும்பினேன்.
மூன்றாம்
சந்திப்பு- சந்தேகம் தெளிதல்
சில நாட்கள்
கழித்து மூன்றாம் முறையாக நரேந்திரர் தட்சிணேசுவரம் சென்றார். ஸ்ரீராமகிருஷ்ணரின் மகத்தான
சக்தியைப்பற்றி தெரிந்தபின், அவரை முழுமையாக அறியவேண்டும், புரிந்து கொள்ளவேண்டும்
என்ற ஆர்வம் நரேந்திரரிடம், தீவிரமாக எழுந்தது. ஏதேனும் ஒன்றை அறியும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டால்
உணவு, உடை, ஓய்வு எதிலும் அவரது கவனம் செல்லாது. அதை அறியும் வரை அவரத மனம் அமைதி கொள்ளாது.
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி அறியவேண்டும் என்று தோன்றியபோதும் அவரது மனம் அவ்வாறே அமைதி
இழந்தது.
இந்த முறை
சற்று முன்னேற்பாடுடன் சென்றார் நரேந்திரர். இரண்டாம் முறை ஏற்பட்டது போன்று இம்முறை
ஏற்படக்கூடாது என்பதில் உறுதியுடனும் எச்சரிக்கையுடனும் அவர் சென்றார்.ஆனால் நடந்ததென்னவோ
சிறிதும் எதிர்பாராதது.
அன்று தட்சிணேசுவரத்தில்
கூட்டம் அதிகமாக இருந்ததாலோ வேறு காரணத்தாலோ ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரை அருகிலுள்ள
யதுமல்லிக்கின் தோட்டத்திற்கு அழைத்துச்சென்றார். யது மல்லிக்கும் அவரது தாயும் ஸ்ரீராமகிருஷ்ணரிடம்
அன்பும் மரியாதையும் கொண்டவர்கள்.தாங்கள் அங்க இல்லாதபோதும் ஸ்ரீராமகிருஷ்ணர் வந்தால்
அவர் அமர்வதற்காக ஓர் அறையைத் திறந்து விட வேண்டுமென்று பணியாளர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்
யதுமல்லிக்.
அந்த தோட்டத்தில்
சிறிது நேரம் நரேந்திரருடன் நடந்த படியே பல விஷயங்களைப்பேசினார்ஸ்ரீராமகிருஷ்ணர். பின்னர்
அந்த அறையில் சென்று அமர்ந்தார்.சிறிது நேரத்தில் பரவச நிலையில் ஆழ்ந்தார். சற்றுதள்ளியிருந்தபடியே
அதனைக் கவனித்துக் கொண்டிருந்தார் நரேந்திரர்.அப்போது, அந்தப் பரவச நிலையிலேயே வந்து
திடீரென்று நரேந்திரரைத்தொட்டார். நரேந்திரர் எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தும் அந்த
சக்தி வாய்ந்த ஸ்பரிசத்தால் தன்வசம் இழந்தார்.
முந்தைய அனுபவங்களைப்போலன்றி இம்முறை அவர் புறவுலக உணர்வை அடியோடு இழந்தார். சிறிது
நேரத்திற்குப்பின் அவருக்கு நினைவு வந்தபோது ஸ்ரீராமகிருஷ்ணர் புன்முறுவலுடன் அவரது
மார்பின் மீது கையால் தடவிக்கொண்டிருந்ததைக்
கண்டார்.
நரேந்திரரின்
மனநிலை
என்ன நடந்தது
என்பதை நரேந்திரர் உணரவில்லை. ஒரு வேளை அவர்
உணர வேண்டிய அவசியம் இல்லை என்று ஸ்ரீராமகிருஷ்ணர் நினைத்திருக்கலாம். ஸ்ரீராமகிருஷ்ணரின்
ஸ்பரிசத்தால் நரேந்திரரின் மனநிலையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது.ஸ்ரீராமகிருஷ்ணரை
இப்போது முதல் அவர் பைத்தியக் காரராகக் கருதவில்லை. மாறாக, காமமும் பணத்தாசையும் பிடித்த தன்னலமிக்க பைத்தியங்களுக்கு நடுவில் வாழ்கின்ற
தெளிந்த அறிவு படைத்தவராக அவரைக்கருதினார். ஆனாலும் நடந்த நிகழ்ச்சிகள் அவருக்குப்
புதிராகவே இருந்தன.
மொத்தத்தில்
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி நரேந்திரரால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. அவரைப் பற்றிய
ஒரு தெளிவான அறிவு இல்லாத நிலையில் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள நரேந்திரரின் பகுத்தறிவு
மனம் இடம் தரவில்லை.எனவே அவரிடம் ஈர்க்கப்பட்டாலும் சற்று விலகியே இருக்க முயன்றார்
நரேந்திரர். அவரது வாழ்க்கை புற மாற்றங்கள்
பெரிதாக எதுவுமின்றி சென்றது.கல்லூரிக்குச் சென்றார். வீட்டில் பாடங்களைப் படித்தார்.
வழக்கம் போல் ஞாயிற்றுக் கிழமைகளில் பிரம்ம சமாஜக் கூட்டங்களுக்குச்சென்றார். நண்பர்களுடன்
பழகினார். வேடிக்கை வினோதங்களில் ஈடுபட்டார்.
அதே வேளையில்
அவரது அகவாழ்வு மேலும் தீவிரம் அடைந்தது. இரவின் ஆழ்ந்த அமைதியில் அவர் நீண்ட நேரம்
தியானம் செய்தார். யோகப் பயிற்சிகளில் ஈடுபட்டார். கண்களில் கண்ணீர் பெருகி கன்னங்களில்
வழிந்தோட இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.
ஏழு முனிவர்களும்
இறை உலகமும்
நரேந்திரர்
சென்ற போதெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணர் ஏதோ செய்ய முயற்சிப்பதும் நரேந்திரர் அதை விரும்பாமலோ
அல்லது அதற்குத் தயாராக இல்லாமலோ தடுப்பதுமாக
ஏதோ நிகழ்ந்தது போல் உள்ளது. புதிராகத்தோன்றுகின்ற அது என்ன? ஸ்ரீராமகிருஷ்ணர் அப்படி
என்னதான் செய்தார்.? அதைப்புரிந்து கொள்ள வேண்டுமானால் ஸ்ரீராமகிருஷ்ணர் பெற்ற இரண்டு
காட்சிகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
ஸ்ரீராமகிருஷ்ணர்
ஓர் அவதார புருஷர், ஒரு செய்தியுடன் உலகில் அவதரித்தவர் என்று ஏற்கனவே கண்டோம். அவருக்குத்
துணை செய்ய நித்திய முக்தர்களாகிய சிலர் உலகில் பிறக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும்
வரும் போது ஸ்ரீராமகிருஷ்ணர் உடனடியாக இனம் கண்டு கொள்வார். அவரது செய்தியை உலகம் முழுவதற்கும்
அறிவித்து, சத்திய யுகத்தை நிறுவுவதில் முக்கியப் பங்கு வகிக்கப்போகின்றவர் நரேந்திரர்.
அவரைப் பற்றியும் அவர் பல காட்சிகள் பெற்றிருந்தார். அவற்றுள் இரண்டை இங்கு காண்போம்.
ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார்.
ஒரு நாள்
சமாதியில் என் மனம் ஓர் ஒளிப்பாதை வழியாக மேலே சென்றத. சந்திரன், சூரியன், நட்சத்திரங்களுடன் கூடிய தூல உலகை விரைவாகக் கடந்து ,எண்ணங்களால் ஆகிய
நுண்ணுலகில் அது நுழைந்தது. மனம் அந்த உலகில் ஆழ்ந்து மேலே செல்லச்செல்ல பாதையின் இரு
புறங்களிலும் பல்வேறு தேவதேவியர் உணர்வுதிரண்ட உருவத்துடன் நின்றிருந்தனர். மனம் படிப்படியாக
அந்தப் பகுதியின் இறுதியை அடைந்தது. அங்கே பகுக்கவொண்ணாப்பகுதியிலிருந்து பகுபடும் பகுதியை ஓர் ஒளிவேலி பிரித்தது. அந்த வேலியைத் தாண்டி
மனம் சிறிது சிறிதாக பகுக்கவொண்ணாத பகுதியில் நுழைந்தது. அங்கே உருவங்களோ வேறு எதுவுமோ
இல்லை. ஒளியுடல்களுடன் கூடிய தேவதேவியரும் கூட அந்தப் பகுதியில் நுழைய அஞ்சியது போல்
மிகவும் கீழ்பகுதிகளிலேயே தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். அங்கே அந்த உன்னத உலகில்
தெய்வீக ஒளியினாலான உடம்புடன் கூடிய ஏழு ரிஷிகள் சமாதி நிலையில் ஆழ்ந்திருந்தனர். ஞானம்,
புனிதம், தியானம், அன்பு என்று அனைத்திலும் அவர்கள் தேவதேவியரை விஞ்சியவர்களாக இருந்தனர்.
அவர்களை மனிதர்களுடன் ஒப்பிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
அந்த ரிஷிகளைப் பற்றியும் அவர்களின் மகிமைகளைப் பற்றியும் நான் சிந்தித்துக்கொண்டிருக்கும்
போது, அந்தப் பகுக்கவொண்ணாப் பொருளின் ஒரு பகுதி சற்றே விலகி, அந்த ஒளித்திரள் ஒரு
குழந்தையாக உருவெடுத்தது.அந்த தெய்வக்குழந்தை அங்கு அமர்ந்திருந்த ரிஷிகளில் ஒருவரிடம்
வந்து தன் மென்மையான கைகளால் அவரது கழுத்தைக் கட்டிக்கொண்டது. பின்னர் வீணையை மிஞ்சும்
அழுதக்குரலால் அவரை அழைத்து சமாதியிலிருந்து அவரை எழுப்ப முயன்றது. இந்த மென்மையான
அன்பின் அணைப்பினால் சமாதி கலைந்த ரிஷி அந்த அதிசயக்குழந்தையைத் தன் பாதி மூடிய கண்களால்
கனிவுடன் பார்த்தார். அவரது முகமலர்ச்சியைக் கண்டபோது , அந்தக் குழந்தை அவரது இதயப்பொக்கிஷம்,
காலம் காலமாக அவருடன் தொடர்புடையது என்று தோன்றியது.
அந்த தெய்வக்குழந்தை பேரானந்ததுடன் அந்த ரிஷியிடம், நான் போகிறேன். நீ என்னுடன் வரவேண்டும்” என்று கூறியது. இந்த வேண்டுகோளுக்கு ரிஷி பதில் ஒன்றும் சொல்லவில்லை
என்றாலும் கருணைமயமான அவரது கண்கள் இதயபூர்வமான இசைவினை வெளிப்படுத்தின. அந்தக் குழந்தையை
அன்புடன் நோக்கியவாறே அந்த ரிஷி மீண்டும் சமாதியில் ஆழ்ந்தார். அப்போது ரிஷியின் உடல்
மற்றும் மனத்தின் ஒரு பகுதி ஒளியுருப்பெற்று கீழே பூமியை நோக்கி விரைந்தது. நரேந்திரரைக்
கண்டதும் அவனே அந்த ரிஷி என்பதை அறிந்து கொண்டேன்.(பின்னாளில் பக்தர்கள் கேட்டபோது
தாமே அந்த குழந்தைஎன்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார்)
இனி இரண்டாவது
காட்சி. இது நரேந்திரர் பிறந்த வேளையில் ஸ்ரீராமகிருஷ்ணர் கண்டது. அந்த வேளையில் காசியிலிருந்து
ஓர் ஒளி புறப்பட்டு கல்கத்தாவில் பிறந்ததாக அவர் கண்டார். என்னுடைய பிரார்த்தனை பலனளித்து
விட்டது. எனக்குச் சொந்தமான அவன் ஒரு நாள் இங்கு வருவான், என்று கூறி அவர் ஆனந்த க்
கூத்தாடினார்.
என்ன செய்தார்
ஸ்ரீராமகிருஷ்ணர்?
இனி ஸ்ரீராமகிருஷ்ணர்
–நரேந்திரர் சந்திப்பின்போது நடந்த நிகழ்ச்சிகளுக்கு வருவோம். சுரேந்திரரின் வீட்டில்
சந்தித்தபோதே அவரை இனம்கண்டு கொண்டார் ஸ்ரீராமகிருஷ்ணர். அப்போது அவரது உடலமைப்பு போன்றவற்றைக்கூர்ந்து
கவனித்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சீடர்களைப் பரிசோதிக்கின்ற முறைகளில் இது ஒன்று. நரேந்திரரின் அங்க அமைப்பகளைப்
பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் பலமுறை கூறியதுண்டு.இதோ பார்” உனது அங்க அடையாளங்கள் சிறப்பாக உள்ளன.ஆனால் ஒன்று. நீ தூங்கும்
போது புஸ், புஸ் என்று கடினமாக மூச்சுவிடுகிறாய். இத்தகையோருக்கு ஆயுள் குறைவு என்று
யோகிகள் கூறுகிறார்கள். மேலும், நீ ஒரு வறட்டு ஞானி அல்ல என்று உன் கண்கள் காட்டுகின்றன. உன்னிடம் எளிய பக்தியும்
ஆழ்ந்த ஞானமும் இணைந்துள்ளன” என்றும் அவர் ஒரு முறை கூறினார்.
அவரது முதல் நாள் பரிசோதனை திருப்திகரமாக அமைந்ததால் நரேந்திரரைத் தட்சிணேசுவரத்திற்கு
அழைத்தார்.
நரேந்திரர்
தட்சிணேசுவரத்திற்குச்சென்றார். அவரைத் தனியாக அழைத்துச்சென்று ”நீ அந்த ரிஷி” என்று கூறிப்பார்த்தார். நரேந்திரர் அதைப்புரிந்து கொள்ளவில்லை.
எனவே இரண்டாம்
முறை சென்றபோது அவருக்கு ஆன்மீக ஆற்றலை வழங்கி, அவரை உயர்நிலைகளுக்கு அழைத்துச்சென்று
அவரிடமிருந்து உண்மையைப்புரிந்து கொள்ள எண்ணி அவரைத்தொட்டார். ஆனால் நரேந்திரர் தயாராக
இல்லை. ஐயோ, எனக்கு அப்பா- அம்மா இருக்கிறார்கள்” என்று கதறினார். ஸ்ரீராமகிருஷ்ணரும்
விட்டுவிட்டார்.
மூன்றாம்
முறையாக அவர் தட்சிணேசுவரத்திற்குச் சென்ற போது தான் ஸ்ரீராமகிருஷ்ணரால் முழுமையாக
வெற்றி பெற முடிந்தது. அன்று அவர் தொட்டபோது நரேந்திரர் முற்றிலுமாகப்புறவுணர்வை இழந்தார்.
அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் அவரை உயர் உணர்வு நிலையில் ஆழ்த்தி, அவரது மனத்தின் அடியாழங்களிலிருந்து
பல விஷயங்களை அறிந்து கொண்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்
கூறினார், நரேந்திரன் புறவுணர்வை இழந்த அந்த வேளையில் நான் அவனிடம், அவன் யார், எங்கிருந்து
வந்திருக்கிறான், எதற்காகப் பிறந்துள்ளான். இங்கே (பூமியில்) எவ்வளவு காலம் இருப்பான்
என்றெல்லாம் பல கேள்விகளைக்கேட்டேன். அவனும் தன்னுள் மூழ்கி, பொருத்தமான பதில்களைச்சொன்னான்.அந்தப்
பதில்கள் நான் அவனைப்பற்றி கண்டவற்றையும் எண்ணியவற்றையும்
ஊர்ஜிதப்படுத்தின. அவை எல்லாவற்றையும் வெளியில் சொல்லக்கூடாது. ஆனால் அவனது பதில்களிலிருந்து
ஒன்று தெரிந்துகொண்டேன். தான் யார் என்பதை அவன் அறிந்து கொண்டால் அதன் பின் அவன் இவ்வுலகில் இருக்கமாட்டான். அன்றே
திட சங்கல்பத்துடன் யோகத் தில் தன் உடலை உகுத்துவிடுவான். நரேந்திரன் தியான சித்தன்,
மாமனிதன்.
ஸ்ரீராமகிருஷ்ணரின்
பரிசோதனை நிறைவுற்றது. ஆனால் நரேந்திரர்? அவரது உள்ளம் ஒரு முடிவுக்கு வர வில்லை. அவரது
பரிசோதனை ஆரம்பித்தது.
அற்புத குரு
அற்புதச்சீடன்
குருவையும்
சீடனையும் ஒருவருக்குள் ஒருவராகக் காண்கிறது இந்து மதம்.குரு, சீடன் ஆகிய நம் இருவரையும்
இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும்
அனுபவிக்குமாறு செய்வாராக!நாம் இருவரும் சேர்ந்து ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக!
கற்றது நமக்குப் பயன் தருவதாக விளங்கட்டும்! நாம் இருவரும் எதற்காகவும் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக! என்று இருவரையும் இணைத்தே
பேசுகின்றன வேதங்கள். சீடனுக்கு மனத்தெளிவு குருவால் உண்டாகிறது என்றால், குருவின்
நிறைவு சீடனின்மூலம் வெளிப்படுகிறது. குருவின் வாழ்க்கையை வெளிப்படுத்துபவனாக அவரது
செய்தியின் வெளிபாடாக இருப்பவனே உண்மையான சீடன்.
குரு சொன்னதைப்புரிந்து
கொண்டு அதனை அப்படியே செய்பவன் உயர்ந்த மாணவன். ஆனால் அவர் சொல்ல இருப்பதையும் புரிந்துகொண்டு
அதனையும் செயல்படுத்துபவனே சீடன். உண்மையில் அத்தகைய சீடனுக்காகவே குரு காத்திருக்கிறார்.
காத்திருப்பது மட்டுமல்ல, பிரார்த்திக்கவும் செய்கிறார்.
குருதேவர்
அதிசய குரு
அப்படி பிரார்த்தனை
செய்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.தாம் பெற்ற ஆன்மீகச் செல்வத்தைத் தரணியெங்கும் எடுத்துச்செல்வதற்கான
சீடர்கள் வரவேண்டும் என்று அழுதார். இறைவனைக்காண வேண்டும். இறையனுபூதி பெறவேண்டும்
என்று எத்தனையோ மகான்கள் அழுதுள்ளார்கள். ஆனால்
இறைவனைக் கண்டதுடன் அவர்களது அழுகை ஓய்ந்துவிட்டது. இங்கோ ஸ்ரீராமகிருஷ்ணர்,
ஒரு பாதையில் அல்ல, இரண்டு பாதைகளில் அல்ல, பல பாதைகள் வழியாகச்சென்று இறையின்பத்தை
அனுபவித்தார். இறையானந்தத்தில் திளைத்தார்.
அவரது அழுகையும் நின்றிருக்க வேண்டும். ஆனால் அது நிற்கவில்லை. இறைவனுக்காக அழுவது
நின்றது. மனிதனுக்காக அழுவது தொடங்கியது.
மனிதர்களுக்காக
அழுதார் ஸ்ரீராமகிருஷ்ணர் ! தாம் பெற்ற அனுபவங்களை, தாம் பெற்ற இன்பத்தைப் பிறருடன்
பகிர்ந்து கொள்வதற்காக, அவர்களும் அந்த இன்ப
வாழ்வைப்பெறவேண்டும் என்பதற்காக அழுதார். அவர், சிவபேரானந்தப்பெருவெள்ளம் பொங்கி ததும்பி
பூரணமாய் கிடக்குதே! மரணம் வந்து சேருமுன் அந்தப் பேரானந்தத்தை அனுபவிக்க வாருங்கள்
உலகினரே! என்று ஒரு முனிவர் உலகத்தையே அழைத்தாரே, அது போல் அழைத்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
உடனடியாக யாரும் வராத போது அவரது ஆர்வம் ஏக்கமாகி அழுகைக்குரலாக மாறியது. கோயில்கள்
மாலை ஆரதிக்கான மணி அடிக்கும். ஆ. இன்னொரு நாளும் போய்விட்டதே! என் குழந்தைகள் யாரும்
வரவில்லையே! என்று மனம் துடிதுடிக்கும். ஈரத்துணியைக் கசக்கிப் பிழிவது போல் வேதனைப்படும்.
விருந்தினர் மாளிகை மாடியில் ஏறி நின்றுகொண்டு, என் குழந்தைகளே, எங்கிருக்கிறீர்கள்?
விரைந்து வாருங்கள்.என்று கதறுவேன். என்று பின்னாளில் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவதுண்டு.
இத்தகைய அற்புத குருவை உலகம் கண்டதில்லை.
அவரது அழுகுரல்
இயற்கையெங்கும் மௌனமாக ஒலித்தது. அந்த மௌனக்குரலை இயற்கையின் தலைவியான காளிதேவியும்
கேட்டாள். காலத்தின் தேவையை உணர்ந்திருந்த அவள்
சீடர்களை ஒவ்வொருவராக அனுப்பிவைத்தாள். ஆனால் யாரும் அந்த ஒருவருக்கு ஈடாகுமா?தாமே
சென்று மோனத் தவத்தை கலைத்து அழைத்து வந்த
ரிஷியாகுமா? அவர் வரவில்லையே என்று தவித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். அந்த ரிஷியாகிய
நரேந்திரர் வந்தார். இனி அவரிடம் தமது செய்தியாகிய விதையைத்தூவ வேண்டும். அதற்கு முதலில்
நிலத்தைத் தயார் செய்யவேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்
நரேந்திரர் உறவு
நரேந்திரரைப்பார்த்த
அளவிலேயே இவன் என் மகன் நண்பன், என் கட்டளையை நிறைவேற்றப் பிறந்தவன்., என்றென்றும்
பிரிக்க முடியாத அன்புக் கயிற்றினால் என்னுடன் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பவன், என்று
ஸ்ரீராமகிருஷ்ணர் கண்டார். காலம்காலமாகச் சனாதன தர்மத்தில் படிந்துவிட்ட கறையை நீக்கி,
அதைக்காலத்திற்கு ஏற்ற ஒரு வாழ்க்கை முறையாக்கி, சத்திய யுகத்தை நிறுவும் பணியில் தேவி
தம்மை ஈடுபடுத்தியிருக்கிறாள், அதில் உதவவே நரேந்திரர் பிறந்திருக்கிறார் என்பது அவருக்குத்
தெய்வீகக் காட்சிகளின் வாயிலாகத் தெரிந்திருந்தது. அதனை அவர் தமது பரிசோதனைகளின் மூலம்
தெளிவுபடுத்தியும் கொண்டார். அதன் பின் எல்லையற்ற
அன்பினாலும் நம்பிக்கையினாலும் நரேந்திரரைத் தம்முடன் நிரந்தரமாகப் பிணைத்துக்கொண்டார்.
பின்னர்
நரேந்திரரைப் பல வழிகளில் பயிற்றுவித்து அந்த உயரிய லட்சியத்திற்குத் தகுந்த கருவியாக
மாற்றி அமைத்தார். பயிற்சி முடிவடைந்து, தயாராக இருந்த நரேந்திரருக்கு சத்திய யுகத்தை
நிறுவும் பணியில் எவ்வாறு ஈடுபடுவது என்று போதித்தார். பின்னர் இந்தப் பணியையும் பொறுப்பையும்
நரேந்திரரிடம் ஒப்படைத்தார்.
இந்தப் பயிற்சியில்
அன்புடன் கூடிய நம்பிக்கை, சோதனை, போதனை ஆகிய மூன்றும் கலந்திருந்தன.
ஸ்ரீராமகிருஷ்ணரின்
அன்பு
நரேந்திரரைச்
சந்தித்த பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் சுமார் ஐந்து வருடங்கள் உயிர்வாழ்ந்தார். அரம்ப காலத்தில் வாரந்தோறும் ஓரிரு
முறை தவறாமல் தட்சிணேசுவரம் சென்று வந்தார் நரேந்திரர். சில வேளைகளில் அங்கே இரவிலும் தங்குவார். தொடர்ந்து சில நாட்கள் அவர் போகாவிட்டால்
ஸ்ரீராமகிருஷ்ணர் தவித்துப்போவார். வருவோர் போவோரிடமெல்லாம் நரேந்திரரைப்பற்றி விசாரிப்பார்.
அவரைத் தட்சிணேசுவரத்திற்கு வரச் சொல்லுமாறு கேட்டுக்கொள்வார். அழுதவாறே தேவியிடம்
பிரார்த்தனை செய்வார். இரவு வேளைகளில் கூட தூங்காமல் அவரைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் என் மீது கொண்டிருந்த அன்பே என்னை அவருடன் பிணைத்தது” என்று பின்னாளில் நரேந்திரர்
கூறுவதுண்டு.
ஒரு நாள்
ராம்தயாள், பாபுராம் என்ற இரு இளைஞர்கள் தட்சிணேசுவரத்தில் தங்கியிருந்தனர். இரவு சுமார்
பதினொரு மணி இருக்கும். ஸ்ரீராமகிருஷ்ணர் தமது அறையிலிருந்து வெளியே வந்து ராம்தயாளிடம்,
என்னப்பா, தூங்கிவிட்டாயா? என்று கேட்டார். இல்லை என்று கூறியதும் அவர், இதோ பார்,
நரேனை ஒரு முறை தட்சிணேசுவரத்திற்கு வந்து போகுமாறு சொல். அவனைக்காணாமல் என் இதயம்
எப்படித்துடிக்கிறது தெரியுமா? ஈரத்துணியை முறுக்கிப் பிழிவது போல் என் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிகின்ற
வேதனை உண்டாகிறது” என்று கூறிவிட்டு, கையிலிருந்த
துணியை முறுக்கிப் பிழிந்து காட்டினார்.ஸ்ரீராமகிருஷ்ணரின் குழந்தை மனத்தை அறிந்திருந்த
ராம்தயாள் அவரைப்பலவிதங்களில் தேற்றினார்.
வைகுண்ட
நாத் என்ற பக்தர் தமது அனுபவத்தைக் கூறினார்.
அன்று முழுவதும்
ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரின் பெருமைகளையே பேசிக்கொண்டிருந்தார். பேசப்பேச, அவரைக்காண
வேண்டும் என்ற வேகம் அவரிடம் எழுந்தது. திடீரென்று அறையிலிருந்து வெளியே சென்று, வராந்தாவில்
நின்றபடி தேவியிடம், அம்மா, அவனைப் பார்க்காமல் என்னால் வாழ முடியாது. என்று கூறி அழுதார்.
பிறகு அறைக்கு வந்து கவலை தோய்ந்த குரலில், நான் இவ்வளவு அழுதுவிட்டேன். ஆனால் அவன்
வரவில்லை. என் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல் உள்ளது. ஆனால் அவன் இதையெல்லாம்
பொருட்படுத்துவதே இல்லை” என்று கூறினார். பிறகு எழுந்து
வெளியில் சென்றார். மீண்டும் உள்ளே வந்தார். அவர் நிலைகொள்ளாமல் தவிப்பது நன்றாகப்புரிந்தது.
மீண்டும் கூறினார், ஒரு சிறுவனுக்காக முதியவன் நான் இப்படி அழுது அரற்றிக் கொண்டிருக்கிறேன்!
மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நீங்கள் என்னுடையவர்கள். என் மனத்தில் இருப்பதை
உங்களிடம் கூற நான் வெட்கப்படவில்லை. ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்னால் என்னைக் கட்டுப்படுத்த
முடியவில்லையே! என்று கூறினார்.
இப்படி நரேந்திரரைக்
காணாமல் தவிப்பது போலவே, நரேந்திரர் வந்தால் ஸ்ரீராமகிருஷ்ணரின் மகிழ்ச்சியும் நிலை
கொள்ளாததாக இருக்கும். பல நேரங்களில் நரேந்திரரைப் பார்த்ததுமே சமாதியில் ஆழ்ந்து விடுவார்.
எனவே சில வேளைகளில் அவர், நரேன் இங்கே வராமல் இருப்பதும் நல்லது தான், அவனைப் பார்த்தாலே
என் உணர்ச்சிகள் கட்டற்றுப்போய் விடுகின்றன. அவன் வருவதே ஒரு மாபெரும்
நிகழ்ச்சி ஆகிவிடுகிறது” என்று கூறுவதுண்டு.
ஈசுவரகோடி
ஸ்ரீராமகிருஷ்ணர்
தமது சீடர்களை ஈசுவரகோடிகள், ஜீவகோடிகள் என்று இரண்டு பிரிவாகப் பிரித்திருந்தார்.
ஓர் அவதார புருஷருடன் அவரது பணிக்குத்துணையாக உயர் உலகங்களிலிருந்து வருபவர்கள் ஈசுவரகோடிகள்.இவர்கள்
வினைப்பயனின் காரணமாகப் பிறப்பவர்கள் அல்ல. அவர்களது பிறப்பும் தவமும் சாதனைகளும் அனைத்தும்
உலக நன்மை ஒன்றிற்காக மட்டுமே தவிர அவர்களுக்கென்று எந்த நோக்கமும் கிடையாது. தமது
சீடர்களில் ஆறு பேரை ஸ்ரீராமகிருஷ்ணர் இத்தகையவர்களாக இனம் கண்டிருந்தார். நரேந்திரர்,
ராக்கால், பாபுராம், நிரஞ்சன், யோகின், பூர்ணன் ஆகியோர் அந்த ஆறுபேர்.நரேந்திரன், ராக்கால்,
போன்றோர் நித்திய சித்தர்கள், ஈசுவரகோடிகள். இவர்கள் சாதனை செய்வது என்பது பெயரளவிற்குத்தான்.
நரேந்திரனைப்பாருங்கள்.அவன் யாரையும் பொருட்படுத்துவதில்லை. ஒரு நாள் அவன் என்னுடன்
கேப்டனின் வண்டியில் வந்து கொண்டிருந்தான்.கேப்டன் நரேந்திரனை நல்ல இடத்தில் உட்காரச்சொன்னார். ஆனால் அவன் கேப்டனைத்
திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவன் என்னைக்கூட எதிர்பார்த்திருப்பதில்லை. தனக்கு என்னவெல்லாம்
தெரியுமோ அதைக்கூட அவன் என்னிடம் சொல்வதில்லை. நரேந்திரன், ஒரு பெரிய மேதை, என்று நான்
மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு திரிவேனோ என்று அவன் நினைப்பது ஒரு வேளை அதற்குக் காரணமாக
இருக்கலாம். அவனிடம் மாயையின் மோகமே இல்லை, எந்தப் பந்தமும் இல்லை, அவன் மிகவும் நல்லதொரு
பாத்திரம். பல நற்குணங்கள் ஓரிடத்தில் அமைந்துள்ளன. பாடுகிறான், வாத்தியங்கள் வாசிக்கிறான்,
எழுதுகிறான், படிக்கிறான்! அது மட்டுமல்ல. புலன்களையும் வென்றவன். திருமணம் செய்து
கொள்ள மாட்டேன் என்கிறான் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
ஆயிரம் இதழ்
தாமரை
கேசவ சந்திர
சேன், விஜய கிருஷ்ண கோசுவாமி போன்ற பிரபலமான பிரம்ம சமாஜத் தலைவர்கள் ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணரின்
அறையில் கூடியிருந்தனர். நரேந்திரரும் அங்கு இருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் சேகவரையும்
விஜயரையும் மலர்ந்த முகத்துடன் பார்த்தார். பின்னர் நரேந்திரனைப் பார்த்தார். அவரது
மனத்திரையில் நரேந்திரரின் எதிர்காலம் ஒளிமிக்க ஓவியம்போல் சுடர்விட்டது. கூட்டம் நிறைவுற்றபின்
கூறினார், எந்தச் சக்தியால் கேசவர் உலகப்புகழ் பெற்று விளங்குகிறாரோ அதைப்போல் பதினெட்டு
சக்திகள் நரேந்திரனிடம் நிறைநிலையில் உள்ளதைக் கண்டேன். கேசவரிடமும் விஜயரிடமும் ஞான
ஒளி ஒரு தீபம் போல் தான் பிரகாசிக்கிறது. நரேந்திரனைப் பார்த்தாலோ, அவனது உள்ளத்தில்
ஞான சூரியனே உதித்து ஒளிர்கிறான். அந்த ஒளி மாயையின் சுவடு கூட அவனிடம் இல்லாமல் துடைத்துவிட்டது.
மற்றொரு
முறை கூறினார், நரேந்திரன் மிக உயர்ந்த தளத்தைச்சேர்ந்தவன். ஆண்மை மிக்கவன், எத்தனையோ
பக்தர்கள் இங்கு வருகிறார்கள். ஆனால் ஒருவர் கூட அவனைப்போல் இல்லை. இங்கு வருகின்ற
பக்தர்களைப்பற்றி அவ்வப்போது நான் எண்ணிப்பார்ப்பது உண்டு. அவர்களில் சிலர் பத்து இதழ்
தாமரை, சிலர் பதினாறு இதழ் தாமரை, சிலர் நூறு இதழ் தாமரை.ஆனால் நரேனோ, ஆயிரம் இதழ்
தாமரை, மற்ற பக்தர்கள் பானைகள், குடங்கள், நரேனோ பெரிய அண்டா, மற்றவர்கள் குளம் குட்டைகள்.நரேனோ
ஹல்தார்புகூரைப்போன்ற பெரிய ஏரி. மற்றவர்கள் சிறுசிறு மீன்கள், நரேனோ சிவப்புக் கண்கள்
கொண்ட பெரிய கயல் மீன்.
உள்ளொளி
இல்லாத பலவீனன், ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவாயிலிருந்து இத்தகைய புகழ் மொழியைக் கேட்டால்
அகங்காரத்தால் பூரித்து தலைகால் புரியாமல் குதிப்பான். நரேந்திரரிடம் இந்த வார்த்தைகள் முற்றிலும் வேறுவிதமான விளைவை ஏற்படுத்தின. அசாதாரணமான
அக நோக்குடைய அவரது மனம் உள்ளே ஆழ்ந்து, கேசவர் மற்றும் விஜயரின் எண்ணற்ற நற்பண்புகளுடன்
தமது அப்போதைய நிலையை ஒப்பிட்டுப் பார்த்தது.அத்தகைய புகழ்ச்சிக்குத் தான் தகுதியற்றவன்
என்பதைக் கண்ட நரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சொற்களை எதிர்த்தார். என்ன சொல்கிறீர்கள்?
இதைக்கேட்டால் மக்கள் உங்களைப்பைத்தியம் என்று சொல்வார்கள். உலகப் புகழ்பெற்ற கேசவர்
எங்கே? மகாத்மாவான விஜயர் எங்கே? ஒன்றுமில்லாத பள்ளிச் சிறுவனான நான் எங்கே? அவர்களுடன்
என்னை ஒப்பிட்டு, தயவு செய்து இப்படிப்பேசாதீர்கள்” என்றார் அவர். ஆனால் நரேந்திரரின்
மறுப்பை ஸ்ரீராமகிருஷ்ணர் பொருட்படுத்தவில்லை. அது அவருக்கு மகிழ்ச்சியையே அளித்தது.
அன்புடன் அவர் கூறினார். அப்பா! நான் என்ன செய்யட்டும்? இதை நான் கூறினேன் என்றா நீ
நினைக்கிறாய்? தேவி எனக்குக் காட்டினாள், நான் சொன்னேன். அவள் சத்தியத்தைத் தவிர வேறொன்றையும்
காட்டியதில்லை. அதனால் தான் அவ்வாறு பேசினேன்.
No comments:
Post a Comment