Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-12

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-12

🌸

மேற்கு இந்தியாவில்

 

 பண்டைய நாட்களில் கர்ணாவதி என்ற பெயரில் அறியப்பட்ட அகமதாபாத், குஜராத் சுல்தான்களின் தலைநகரமாகத் திகழ்ந்தது. மிக அழகிய நகரங்களில் ஒன்றாக விளங்கியது அது. சமணக்கோயில் களும் மசூதிகளும்  இன்றும் அதன் கலாச்சாரப் பெருமையை எடுத்துக் காட்டிய வண்ணம் உள்ளன. சுவாமிஜி பல நாட்கள் இவற்றைக்கண்டு களித்தார். பிச்சை உணவேற்று வாழ்ந்தார். சமண மதத்தின் இருப்பிடமாகத் திகழ்ந்த அந்த நகரில் அவர்  பல சமண அறிஞர்களைச் சந்திக்க முடிந்தது. அவர்களின் உதவியுடன் அவர் தமது சமண மத அறிவை வளர்த்துக் கொண்டார். சில நாட்கள் அங்கே தங்கிய பிறகு வாத்வான் வழியாக லிம்ப்டியை அடைந்தார். பிச்சையேற்றும் பாதை யோரங்களில் தங்கியும் பயணம் செய்தார்.

லிம்ப்டியில் பல்வேறு  இடங்களில் அலைந்த சுவாமிஜி கடைசியில் துறவிகள் தங்குவதற்கான ஓர் இடம் இருப்பதை அறிந்தார். மக்கள் நடமாட்டம் இல்லாத ஓர் ஒதுக்குப் புறத்தில் அந்த வீடு இருந்தது. சுவாமிஜி அங்கு சென்றார். அங்கிருந்த துறவியர் அவரை அன்பாக வரவேற்று, அவர் விரும்பும் வரை அங்கே தங்கலாம். என்று தெரிவித்தனர்.

 

துறவின் பெயரில்

 

 பசியாலும்  களைப்பாலும் சோர்ந்து போயிருந்த சுவாமிஜி அவர்களின் உபசரிப்பை ஏற்று அங்கே தங்கினார். ஆனால் அது எத்தகைய இடம் என்பதை அவர் அப்போது உணரவில்லை. ஓரிரு நாட்கள் கழிந்திருக்கும். ஒரு நாள் பக்கத்து அறையிலிருந்து ஆண்களும், பெண்களும் ஆடுவதும் பாடுவதும் கும்மாளம் அடிப்பதுமான சத்தங்கள் கேட்டன. பார்த்தால் அந்தத் துறவியர் ஆன்மீக சாதனைகளின் பெயரில் காமத்தை நாடுபவர்கள் என்பது சுவாமிஜிக்குத் தெரியவந்தது. அதற்கு மேல் அங்கே தங்குவது ஆபத்து என்பதை உணர்ந்து, உடனடியாக அந்த இடத்தை விட்டுப் புறப்பட எண்ணினார். அறைக் கதவைத் திறக்க  முயற்சித்தார். ஆனால் அது வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்தது. அவர் தப்பி விடாதிருக்க ஒருவன் காவலாகவும் இருந்தான். ஆனாலும் சுவாமிஜி கலங்கவில்லை.

பின்னர் அந்தப் பிரிவினரின் தலைவன் சுவாமிஜியை அழைத்து, நீங்கள் ஓர் அபூர்வமானதுறவி. அசாதாரணமானதொரு காந்த சக்தி உங்களிடம் உள்ளது. நீங்கள் வருடக்கணக்கில் பிரம்மச்சரியம் கடைப்பிடித்தவராக இருக்க வேண்டும். உங்கள் நீண்ட காலத் தவத்தின் பலனை நாங்கள் பெறப்போகிறோம். அதற்காக நடைபெறப்போகின்ற  ஒரு சடங்கில் உங்கள் பிரம்மச்சரிய வாழ்வைக் குலைக்கப் போகிறோம். அந்தச் சடங்கின் மூலம்  எங்களுக்கு அசாதாரணமான ஆற்றல்கள் கிடைக்கும் என்றான். சுவாமிஜி  சற்று அதிரத்தான் செய்தார். ஆனால் எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் கூறியதைப் பொருட்படுத்தாதவர்போல்  நடந்து கொண்டார்.

அங்கே அடிக்கடி சுவாமிஜியைச் சந்தித்தவர்களுள் ஓர் இளைஞனும் இருந்தான். அவன் மூலமாக சுவாமிஜி அந்த நாட்டு இளவரசரான தாகூர் சாகிப் என்பவருக்கு விவரத்தைத் தெரிவித்து உதவி நாடினார். இளவரசர் உடனடியாகச்செயல்பட்டார். வீரர்களை அனுப்பி சுவாமிஜியை அங்கிருந்து வெளியே கொண்டு வந்தார். அதன்பிறகு  இளவரசரின் அழைப்பை ஏற்று அரண்மனையில் தங்கினார் சுவாமிஜி. அங்கே பல பண்டிதர்களுடன் சம்ஸ்கிருத மொழியில் வாதங்களிலும் ஈடுபட்டார்.

 

 ஜீனாகட்டில்

 

 லிம்ப்டியில் சில நாட்கள் தங்கி விட்டு, இளவரசரிடமிருந்து அறிமுகக் கடிதங்களும் பெற்றுக் கொண்டு ஜீனா கட்டிற்குச் சென்றார் சுவாமிஜி. லிம்ப்டி அனுபவத்திற்குப் பிறகு தாம் பழகும் நபர்களிடமும் தங்கும் இடங்களிலும் அவர் மிகுந்த கவனத்துடன் நடந்து கொண்டார். ஜீனாகட்டில் அந்த மாநிலத்தின் திவானான ஹரிதாஸ் விஹாரிதாஸ் தேசாய் என்பவரின் விருந்தினராகத் தங்கினார் சுவாமிஜி.

ஹரிதாஸ் சுவாமிஜியிடம் கரவப்பட்டார். அவரது எளிமை, அடக்கம், பல்வேறு கலைகளிலும் விஞ்ஞானத்திலும் அவருக்கு இருந்த திறமை, பரந்த கருத்துக்கள், மத ஈடுபாடு, யாரையும் கவர வல்ல பேச்சுத் திறமை, அனைவரையும் ஈர்க்கின்ற  காந்த சக்தி, அசாதாரணமான ஆளுமை எல்லாம் எங்களை வெகுவாகக் கவர்ந்தன. இசையிலும்  அவருக்கு மிகுந்த தேர்ச்சி இருந்தது. இந்தியக் கலைகளின் எல்லா அம்சங்களையும் அவர் அறிந்தவராக இருந்தார். அது மட்டுமல்ல, அவர் நன்றாகச் சமைக்கவும் வல்லவர். சுவையான, தரமான ரசகுல்லா  செய்து தந்தார். நாங்கள் மிகவும் அவரிடம் பக்தி கொண்டோம் என்று பின்னாளில் எழுதினார் அவர்.

ஜீனாகட் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற   இடம். அங்கிருந்த பழைய கட்டிடங்களும் பாழடைந்த நினைவுச் சின்னங்களும் சுவாமிஜியின் வரலாற்று ஆர்வத்தைத் தூண்டின. உபர்கோட்டிலுள்ள பழைய கோட்டை, ராஜபுதன மன்னர்களின் பழைய அரண்மனை, புராதனக் கிணறுகள், பௌத்தர் காலத்தைச்சேர்ந்த கப்ராகோடியா குகைகள், என்று ஒவ்வோர் இடத்தையும் ஆர்வத்துடன் பார்த்தார் அவர். நகரத்திற்கு வெளியில் அமைந்திருந்த அசோகர் கல்வெட்டு அவரது கருத்தை மிகவும் கவர்ந்தது. அது பெரிய பாறையில் அமைந்திருந்தது. மாமன்னர் அசோகர் மற்றும் வேறு இரண்டு மன்னர்களின் கல்வெட்டுகள் அதில் இருந்தன.

 

ஜீனாகட்டில் சுவாமிஜி ஏசுநாதர், ஐரோப்பிய நாகரீகம்போன்ற விஷயங்களை அதிகமாகப் பேசினார். மேலை நாட்டு மக்களின் பண்புநலனை உருவாக்குவதில் ஏசுநாதரின் தாக்கத்தை ச் சிறப்பாக எடுத்துக்காட்டினார். ராஃபேலின் ஓவியங்கள், செயின்ட் பிரான்சிஸின் பக்தி, பிரம்மாண்டமான சர்ச்சுகள், சிலுவைப்போர்கள், மேலைநாட்டின் அரசியல்  அமைப்புகள், மத வாழ்க்கை, துறவு அமைப்புகள் என்று அனைத்தும்  எப்படி ஒரு துறவியான ஏசுநாதரின் போதனையுடன்  பின்னிப் பிணைந்துள்ளது என்பதை விளக்கமாகக் கூறினார். ஆனால்  எங்கே ஆரம்பித்தாலும்  சனாதன  தர்மமாகிய  இந்து மதத்தையும் இந்தியாவையும் தொடாமல் அவரது பேச்சு பொதுவாக நிறைவுறாது. மேலை மதக் கருத்துக்களிலும் சமுதாய வாழ்க்கையிலும் எந்த அளவிற்கு இந்து மதத்தின் தாக்கம் உள்ளது என்பதை அவர்களிடம் எடுத்துக் கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை எப்படி காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதாக உள்ளது என்பதை விளக்கினார்.

ஜீனாகட்டில் 2 மைல் தொலைவில் அமைந்திருந்தது கிர்ணா. இது இந்து, பௌத்த, சமண மதத்தினரின்  தீர்த்த த்தலமாக  திகழ்ந்தது. பத்து மலைகளின் தொகுதி இது. இவற்றுள் மிக உயரமான சிகரம் கோரக் நாத். இதன் உயரம் 3600 அடி. இதன் உச்சிக்குச் செல்வதற்காக  மலையில் 10, 000-ற்கும் அதிகமான படிகள்  பாறைகள் வெட்டப்பட்டிருந்தன. இந்த மலைகளில் ஒரு குகையில் தங்கி சாதனைகளில். ஈடுபட்டார் சுவாமிஜி. ஜீனாகட் திவான், அன்பர் ஒருவரை அனுப்பி சுவாமிஜியின் தேவைகளைக் கவனித்து க்கொண்டார். சிலநாட்களுக்குப் பிறகு மீண்டும் ஜீனாகட்திரும்பினார் சுவாமிஜி. அங்கு தங்கியபடியே அருகிலுள்ள புனிதத் தலங்களைத் தரிசனம் செய்தார்.

அடுத்ததாக பிரபாசம் என்று புராணங்கள் அழைக்கின்ற புண்ணியத்தலமாகிய சோம்நாத்திற்குச்சென்றார் சுவாமிஜி. கண்ணனின்  காலத்திலேயே யாதவ குலத்தினர்  ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு மாண்டதும், யோக நிலையில் அமர்ந்திருந்த கண்ணன் வேடனின் அம்பால் தமது இக வாழ்வை முடித்துக் கொண்டதும் இங்குதான். இங்கே  உள்ள சிவன்கோயில் பன்னிரு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். மூன்று முறை அன்னியரால் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. சுவாமிஜியின் காலத்தில் இருந்த  கோயில் இந்தூர் ராணியான அகல்யாபாயால்  கட்டப்பட்டது. இந்தகோயிலில் வழிபட்டார்  சுவாமிஜி. மூன்று நதிகளின் சங்கமத்தில் குளித்தார். இங்கே கட்சி மன்னரைச் சந்தித்து, பல விவாதங்கள் நடத்தினார். மன்னர் சுவாமிஜியின் பலதுறை  அறிவைக் கண்டு பிரமித்துப்போனார். சுவாமிஜி, பல நூல்களை வாசித்தால் தலைசுற்றும் அல்லவா! அது போல் உங்கள் சொற்பொழிவு களைக் கேட்டாலும் என் தலை கிறுகிறுக்கிறது. இவ்வளவு அறிவையும் இத்தனை திறமைகளையும் எப்படி பயன்படுத்தப் போகிறீர்கள்? சுவாமிஜி. ஒன்று சொல்கிறேன் அரிய சில காரியங்களைச் சாதிக்காமல் நீங்கள் ஓய மாட்டீர்கள் என்று திகைப்புடன் கூறினார் மன்னர். சுவாமிஜி மௌனமாகச் சிரித்தார்.

மீண்டும் ஜீனாகட் திரும்பிய சுவாமிஜி, அதனை மையமாக வைத்துக்கொண்டு கத்தியவார், கட்ச் போன்ற இடங்களுக்குப் பலமுறை சென்று வந்தார். கடைசியாக அங்கிருந்து போர்பந்தருக்குப் புறப்பட்டார்.

 

போர்பந்தரில்

 

 பக்திக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்ற குசேலர்(சுதாமர்) வாழ்ந்த ஊர் போர்பந்தர். சுதாமா புரி என்று பாகவத புராணம் இந்த ஊரைக்குறிப்பிடுகிறது. குசேலருக்கென்று புராதனமான கோயில் ஒன்று இங்கே உள்ளது. அங்கே சென்று வழிபட்டார் சுவாமிஜி. அந்த நாட்டு திவானான சங்கர் பாண்டுரங்கர் சுவாமிஜியிடம் மிகுந்த ஈடுபாடு காட்டினார். வேதங்களில் பெரிய பண்டிதராக இருந்த அவர்  அப்போது வேதங்களை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். சுவாமிஜிக்கு சாஸ்திரங்களில் இருந்த ஆழ்ந்த அறிவைக் கண்ட திவான பல நேரங்களில் தமது மொழிபெயர்ப்புக்கு சுவாமிஜியின் உதவியை நாடினார். சுவாமிஜியும் மகிழ்ச்சியுடன் அங்கே சில நாட்கள் தங்கி திவானின் பணியில் உதவினார். அத்துடன், இங்கே பாணினி சூத்திரங்களையும் பதஞ்சலியின் மகாபாஷ்யத்தையும் படித்து முடித்தார்.

பாண்டு ரங்கர் சம்ஸ்கிருத பண்டிதர் என்பதுடன் மிகுந்த அரசியல் செல்வாக்கும் அந்தஸ்தும் உடையவர். வயதிற்கு வராத  சிறுவர் ஒருவர் மன்னராக முடிசூட்டப்பட்டிருந்ததால் ஆட்சி மிகவும் சீர்கேடுற்ற நிலையில் இருந்தது. எனவே ஆங்கிலேய அரசாங்கம் பாண்டுரங்கரிடம் நிர்வாகப்பொறுப்பை ஒப்படைத்திருந்தது. அவர் நாட்டைத் திறமையாகப் பரிபாலித்ததுடன் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றுவந்தார். இந்தப் பயணங்களின் காரணமாக பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற பல ஐரோப்பிய மொழிகளையும் அறிந்திருந்தார். தமது தாய்மொழியான மராட்டியைத் தவிர ஏழு மொழிகள் அவருக்குத் தெரிந்திருந்தது. அவரது நூல் நிலையம் மிகவும் பெரியது. நீண்ட நேரத்தை அவர் அதில் செலவிட்டார். அந்த நூல் நிலையத்தால் மிகவும் கவரப்பட்டார் சுவாமிஜி. அதற்காகவே மீண்டும் இங்கே வந்தார். வேண்டிய நாட்கள் தங்குவதற்கும் நூல்நிலையத்தைப் பயன்படுத்துவதற்கும் சுவாமிஜிக்கு மனமுவந்து அனுமதி வழங்கினார் பாண்டுரங்கர்.

 

குழந்தைகளுடன்

 

பாண்டுரங்கருக்கு இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தார்கள். ஒரு நாள் அவர்களுடன் பண்டிதரும் சுவாமிஜியும் கடற்கரைக்குச்சென்றார்கள். கடற்கரையில் மூன்று பெண்களும் மணலால் வீடு கட்டி, கைகொட்டி பாடியபடியே அதைச்சுற்றி வந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். சுவாமிஜியும் அவர்களுடன் சென்று அவர்களுடனே கைகொட்டிய படி சுற்றி வந்து மகிழ்ந்தார். பிறகு இரண்டு சிறுவர்களையும் தோளில் தூக்கிக்கொண்டு படகில் சிறிது தூரம் நீரினுள் சென்று, அங்கே அவர்களுக்கு நீந்தக் கற்றுக் கொடுத்தார். பண்டிதருடன் நீண்டநேரம் குதிரை சவாரி செய்தார். அவரது மனைவிக்குப் புது புது சமையல் கலைகளைக் கற்றுக் கொடுத்தார்.

 

மீண்டும் ஒரு நினைவுறுத்தல்

 

மொழிபெயர்ப்புப் பணியின் காரணமாக சுவாமிஜியுடன் கலந்து பேசப்பேச சுவாமிஜியின்  ஆழ்ந்த அறிவையும் புதுமையான கருத்துக்களையும் கண்டு திவான் மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானார். ஒரு நாள் சுவாமிஜியிடம், சுவாமிஜி நமது நாட்டில் நீங்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியும் என்று தோன்றவில்லை. உங்கள் கருத்துக்ளை ஏதோ ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளக் கூடும். நீங்கள் மேலை நாடுகளுக்குப்போக வேண்டும். அங்கேமக்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். உங்கள் மதிப்பை உணர்வார்கள். அழிவற்றதாகிய நமது சனாதன தர்மத்தை அங்கே போதிப்பதன் மூலம் மேலைக் கலாச்சாரத்திற்கே நீங்கள் ஒரு புத்தொளி ஊட்ட முடியும். நான் மேலை நாட்டிற்குச் சென்றிருக்கிறேன். அறிவு ஜீவிகள் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் இந்து சாஸ்திரங்களையும் இந்து தத்துவங்களையும் அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறார்கள். நீங்கள் மேலை நாடுகளுக்குச்சென்று நமது வேத பாரம்பரியத்தைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக்கூறினால் அது ஒரு மாபெரும் பணியாக இருக்கும் என்றார். அதற்கு சுவாமிஜி நானோ, வீடு வாசலற்ற துறவி,. எனக்கு இந்த நாடு என்ன! அந்த நாடு என்ன! தேவை வருமானால் நான் போவேன். அது எப்படி சாத்தியம் என்பதும் எனக்குத் தெரியாது என்று பட்டும் படாமலும் பதிலளித்தார். பிறகு திவான் சுவாமிஜியிடம் சுவாமிஜி, நீங்கள் பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு அது பயன்படும் என்றார். சுவாமிஜியும் அங்கே பிரெஞ்சு மொழியைக் கற்கத்தொடங்கினார். இங்கிருந்து ஆலம்பஜார் மடத்தில் தமது சகோதரத் துறவிகளுக்கு பிரெஞ்சு மொழியில் ஒரு கடிதம்  எழுதினார்

 

சுவாமிஜியின் தவிப்பு

 

பாண்டு ரங்கரின் வார்த்தைகள் சுவாமிஜியின் இதய ஆழங்களில் எங்கோ ஓர் இழையைச்சுண்டி இழுப்பது போல் இருந்தன. இனம்புரியாத  ஒரு தவிப்பில் அவர் ஆழ்ந்திருந்த வேளை அது. தாய் நாடான பாரதத் திருநாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும். ஏதாவது என்றால் ஆன்மீக மறுமலர்ச்சி என்பது தான்.  அதனை எப்படிச்செய்வது? சென்ற  இடங்களில் எல்லாம் இரண்டு எல்லைகளைக் கண்டார் அவர். ஒரு பக்கம் சில சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வட்டார வழக்கங்களையும் இறுகப் பற்றிக்கொண்டு, இதுவே மதம், அதுவே ஆன்மிகம் என்ற அறியாமை இருளில் ஆழ்ந்து கிடந்த பழமைவாதிகள். மறுபக்கம், மதத்தைச் சீர்படுத்தப்   போகிறோம் என்று கூறிக்கொண்டு தேவையற்ற மேலை நாட்டுக் கலாச்சாரத்தைப்புகுத்தி, இந்தியாவின் பாரம்பரியப் பண்பாட்டையே நிலைகுலைக்க நினைத்த சீர்திருத்த வாதிகள். இந்த இரு  பிரிவினராலும் ஆக்கபூர்வமான எதையும் சாதிக்க முடியவில்லை என்பதை சுவாமிஜி கண்டார். எனவே ஆக்கபூர்வமான ஆன்மீக மறுமலர்ச்சியைக்கொண்டு வர தாம்  ஒரு புதிய பாதையைக் கண்டாக வேண்டும்.

 

அந்த மறுமலர்ச்சி எது?

மறுமலர்ச்சி என்பது, உண்மையான மதத்தை மூடிக்கிடந்த அழுக்குகளான தேவையற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றைப் பற்றிக்கொண்டு, வளர்ச்சியையும் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும்  பழமைவாதமும் அல்ல. மாற்றம், வளர்ச்சி என்ற பெயில் உண்மையான சனாதன தர்மத்தையே வேருடன் சாய்ப்பதும் அல்ல. செய்யவேண்டியதெல்லாம்  உண்மையான மதத்தை மூடிக் கிடந்த அழுக்கைச் சுத்தம் செய்து அதனை பண்டிதர்-பாமரர், ஆண்-பெண், இளைஞர்-முதியவர், ஏழை-பணக்காரர் என்ற எந்தப்பாகுபாடுமின்றி  அனைவருக்கும் அளிப்பது தான். இது தான் உண்மையான சீர்திருத்தம் , உண்மையான மறுமலர்ச்சி என்று கண்டார் சுவாமிஜி.

 

தாம் ஒன்றைச்சொன்னால்  அதனைச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளதா என்பதில் சுவாமிஜிக்குச்  சந்தேகம் இருந்தது. தமது கருத்தைப் பல மன்னர்கள், திவான்கள், பண்டிதர்கள், பிரமுகர்கள் என்று பலரிடமும் தெரிவித்தார். அவர்களில் பலரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அன்றைய சமுதாயம் இருந்த நிலைவேறு. எதையும் மேலை நாட்டான் சொல்ல வேண்டும், அவன் சொல்வது தான் சரி. அவன் செய்வது தான் சரி. அது தான் சிறந்தது என்று மக்கள் நம்பியிருந்தகாலம் அது. எனவே தமது கருத்தும்  அங்கிருந்து வந்தால் அதற்கு  வரவேற்பும் ஆதரவும் அதிகமாக இருக்கும். அந்தக் கருத்துக்கள் வேகமாகப் பரவுவதற்கு அது துணைச்செய்யும் என்று அவருக்குத்தோன்றியது. எனவே தாம் மேலை நாடுகளுக்குப்போவது அவசியம் என்ற எண்ணம் அவரிடம் வளரலாயிற்று. ஆனால்  அவர் இறைவனை முற்றிலுமாகச் சார்ந்து வாழ்கின்ற ஒரு துறவி. எனவே காலம் கனிந்து உரிய பாதையை இறைவனே காட்டும் வரை காத்திருக்க த் தீர்மானித்தார்.

ஒரு நாள் அதிகாலை , சுவாமிஜி கடற்கரைக்குச் சென்றார். கண்ணுக்கெட்டிய தொலைவு  வரை பரந்து கிடந்த அந்த நீல நீர்ப் பரப்பில் அங்கங்கே வெண்ணிற அலைகள் எழுந்து தவழ்ந்து  கொண்டிருந்தன. அமைதியாக அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார் சுவாமிஜி. அப்போது திடீரென்று அவரது மனத்தில், நானும் இந்த அலைகடலைக் கடந்து எங்கோ ஓர் தொலைதூர தேசத்திற்குப்போக வேண்டும், என்ற ஓர் எண்ணம் எழுந்தது. சுவாமிஜி ஒரு கணம் சிந்தித்தார். பிறகு அனைத்தையும் ஆண்டவனிடம் சமர்ப்பித்து விட்டு எழுந்து நடந்தார்.

 

உலகை உலுக்கும் ஆற்றல் என்னிடம் உள்ளது.

 

போர்பந்தரில் திரிகுணாதீதரை எதேச்சையாக சுவாமிஜி சந்திக்க நேர்ந்தது. பலுசிஸ்தானப் பாலைவனத்தைக்(தற்போது பாகிஸ்தானில் உள்ளது) கடந்து துறவியர் கூட்டம் ஒன்றுடன் ஒரு தீர்த்தத் தலத்திற்குச் சென்று கொண்டிருந்தார் திரிகுணாதீதர். ஆனால் போகப்போக பயணம் சிரமமானதாக இருக்கவே ஒட்டகச் சவாரி செய்யலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால் பணம் இல்லை. அப்போது , போர்பந்தர் அரசாங்க நிர்வாகியான பாண்டு ரங்கரைப் பற்றி கேள்விப்பட்டார்கள். ஆங்கிலம் பேசும் துறவி ஒருவர் அவருடன் தங்கி யிருப்பதாகவும் , பாண்டு ரங்கர் அவரிடம் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் அறிந்த அவர்கள் அந்தத் துறவியின் மூலம் பாண்டுரங்கரிடன் பண உதவி கேட்க முடிவு செய்தனர். அந்தக் குழுவில் ஆங்கிலம் தெரிந்த ஒரே துறவி திரிகுணாதீதர். எனவே அவரிடம் அந்த ஆங்கிலம் பேசும் துறவியை அணுகுமாறு கூறினர்.

ஆங்கிலம் பேசும் துறவி என்றதுமே  திரிகுணாதீதருக்கு , அது சுவாமிஜியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. எல்லோருமாக ஆங்கிலம் பேசும் துறவியைக் காணச்சென்றனர். சுவாமிஜி அப்போது பாண்டுரங்கரின்  மாளிகை மாடியில் உலாவிக்கொண்டிருந்தார். தூரத்தில் திரிகுணாதீதரைக் கண்டபோது சுவாமிஜி மிகவும் மகிழ்ந்தார். ஆனால் அவர் அருகில் வந்ததும் கோபத்தைக் காட்டினார். என்னைத் தொடர்ந்து வரக்கூடாது என்று எவ்வளவோ கூறியும் நீ கேட்கவில்லையே! என்று ஆத்திரத்துடன் கூறினார். திரிகுணாதீதருக்கோ சுவாமிஜியைக்கண்டதில் சொல்ல முடியாத ஆனந்தம். சுவாமிஜியின் கோபத்தைப்பொருட்படுத்தாமல் நிலைமையைஎடுத்துக்கூறினார் அவர். என்னால் யாரிடமும் பணம் கேட்க முடியாது ஒரு துறவி பணம் கேட்பது சரியல்ல. விதி விட்ட வழியே செல்வது தான் அவனது பாதை என்று கூறி பணம் கேட்க மறுத்துவிட்டார் சுவாமிஜி. வருத்தத்துடன்  தலைகவிழ்ந்த படி திரும்பினார் திரிகுணாதீதர்.

ஒரு கணம் தான். சுவாமிஜியால் தம்மைக் கட்டுபடுத்திக்கொள்ள இயலவில்லை. திரிகுணாதீதரை மீண்டும் அழைத்தார். இருவரும் தனியாக நீண்டநேரம் பேசி மகிழ்ந்தனர். தட்சிணேசுவரச்  சிநதனைகளில் ஆழ்ந்தனர. அப்போது சுவாமிஜி கூறினார். சாரதா, குருதேவர் என்னைப் பற்றி பல விஷயங்கள் கூறுவாரே, அவற்றை இப்போது தான் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். உலகையே உலுக்க வல்ல எல்லையற்ற ஆற்றல் என்னிடம் இருப்பதை இப்போது நான் உண்மையில் உணர்கிறேன்.

 

விடாமல் தொடரும் அகண்டானந்தர்

 

  பின்னர் திரிகுணாதீதருக்கும் மற்ற துறவியருக்கும் வேண்டிய பொருளுதவிகை்கும் ஏற்பாடு செய்தார் சுவாமிஜி.

 போர்பந்தரிலிருந்து துவாரகைச்சென்றார் சுவாமிஜி. மதுராபுரியில் வாழ்ந்த மக்களை ஜராசந்தனின் படையெடுப்பிலிருந்து  காப்பதற்காக கண்ணன் கடல் நடுவில் நிர்மாணித்த நகரம் அது. ஆனால் அன்றைய துவாரகை அழிந்து விட்டது. அது இருந்த இடத்தில் இன்று கடல் அலைகள் எழுந்து ஆர்ப்பரிக்கின்றன. ஆதிசங்கரர்தோற்றுவித்த  சாரதா மடத்தில் தங்கினார் சுவாமிஜி. ஒரு சில நாட்களில் கட்ச் மன்னரின் அழைப்பை ஏற்று அங்கிருந்து புறப்பட்டார்.

 

 நீங்கள் பாதாளத்திற்கு சென்றாலும் உங்களைத்தொடர்வேன் என்று ஜெய்பூரில் கூறிவிட்டு சுவாமிஜியைப் பிரிந்த அகண்டானந்தர் அவரைத்தொடர்ந்தே சென்றார். அவர் துவாரகையில் வந்தபோது சுவாமிஜி, மன்னரின்அழைப்பை ஏற்று, கட்ச் பகுதியிலுள்ள மாண்ட்வி  என்ற அடத்திற்குப் போயிருக்கிறார் என்று கேள்விப்பட்டார். மாண்ட்வி சென்றபோது சுவாமிஜி நாராயண் சரோவருக்குப் புறப்பட்டு  விட்டதாக அறிந்தார். உடனே அங்கே தமது பணயத்தைத்தொடங்கினார். அந்தப் பாதை கொள்ளையர்கள் நிறைந்தது. இருப்பினும் சுவாமிஜியைச் சந்திக்கும் ஆர்வத்தால் துணிந்து  சென்றார் அவர். வழியில் கொள்ளையர்கள் அவரை அடித்து பொருட்களையும் பிடுங்கிக்கொண்டனர். இத்தனை அவதிக்கும் உள்ளாகி, இன்னும் பல இடங்களில் சுவாமிஜியைத் தொடர்ந்து கடைசியாக மாண்ட்வியில் பாட்டியா என்பவரின் வீட்டில் சுவாமிஜி தங்கியிருப்பதை அறிந்து அங்கே சென்றார். அகண்டானந்தரைக் கண்டதும் சுவாமிஜி மகிழ்ந்தார். ஜெய்பூரிலிருந்தே தம்மை அவர் தொடர்ந்து வருவதையும் கொள்ளைக்காரர்கள் அவரை அடித்ததையும் கேள்விப் பட்ட போது நெகிழ்ந்தார். எனினும் தனியாகச் செல்லவே விரும்பினார். இதோ பார் கங்கா. எனக்கென்று பணி ஒன்று உள்ளது. நீ என்னுடன் இருந்தால் என்னால் அதனை நிறைவேற்ற இயலாது. என்று கூறி தாம் தனியாகச் செல்ல விரும்புவதைத் தெரிவித்தார். ஆனால் சுவாமிஜியுடன் செல்வதில் அகண்டானந்தர் பிடிவாதமாக இருந்தார். அவரை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சுவாமிஜி, இதோ பார், உண்மையில் நான் கெட்டுப்போய் விட்டேன், அதனால் தான் நீ என்னுடன் வர வேண்டாம் என்று தடுக்கிறேன் என்றார்! ஆனால் அதையெல்லாம் நம்புபவர் அல்லவே அகண்டானந்தர்! அதனால் என்ன! நீங்கள் கெட்டுப்போயிருந்தால் அது எந்த விதத்தில் என்னைப் பாதிக்கப்போகிறது.? நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும் அதில் எந்த மாற்றமும் இல்லை. போகட்டும், நான்  உங்கள் பணியில் குறுக்கே நிற்க விரும்பவில்லை, உங்களைக் காண வேண்டும் என்ற தீராத தாகம் என்னுள்  இருந்தது. அது இப்போது தீர்ந்தது. இனி நீங்கள் தனியாகப் போகலாம் என்றார். அகண்டானந்தரின் நம்பிக்கையும் அன்பும் சுவாமிஜியைக் கண்ணீரில் நனைத்தன.

அகண்டானந்தரின் பிடிவாதத்திற்குப் பாசமும் நேசமும்  மட்டும் தான் காரணம் என்று கூறிவிட முடியாது. இருவரும் கிளம்பும்போது அன்னை  அவரிடம் சுவாமிஜியைக் கவனித்துக்கொள்ளுமாறு கூறியிருந்ததும்  அவர் சுவாமிஜியைத் தொடர்ந்த தன்   பின்னணியில் இருக்கவே செய்தது.

மறநாள் சுவாமிஜி புஜ்ஜிற்குக் கிளம்பினார்..அடுத்த  நாள் அகண்டானந்தர் கிளம்பி  அவரைப் புஜ்ஜில் சந்தித்தார். அப்போது சுவாமிஜி அவரிடம், நாம் நீண்ட நாள் இங்கே தங்கக் கூடாது. மன்னர் நம்மைச் சிறப்பாக கவனித்துக் கொள்கிறார், ஆனால் இதைப் பார்க்கின்ற மற்றவர்கள் நாம் அவருடன் ஒட்டிக்கொண்டு சுகபோகங்களை அனுபவிப்பதாக எண்ணிக்கொள்வார்கள். நாளையே நாம் இங்கிருந்து புறப்பட்டு விட வேண்டும். என்றார். அதன்படியே மறுநாள் இருவரும் கிளம்பினர். இருவரும் தனித்தனியே பயணம் செய்தாலும் வழியில் ஓரிரு இடங்களில் அகண்டானந்தர் சுவாமிஜியைச் சந்திக்க நேர்ந்தது.

புஜ்ஜிலிருந்து கிளம்பிய சுவாமிஜி மாண்ட்வி வழியாக போர்பந்தருக்கு வந்து பாண்டு ரங்கரின் வீட்டில் தங்கினார் . இந்த முறை சுவாமிஜி சம்ஸ்கிருதத்தில் பேசுவதற்குப் பயிற்சிஎடுத்துக்கொண்டார். பின்னர்  அங்கிருந்து ஜீனாகட் வழியாக குஜராத்திலுள்ள பாலிதானாவை அடைந்தார்.

பாலிதானாவிலுள்ள சத்ருஞ்ஜய மலை சமணர்களுக்கு மிகவும் புனிதமானது. இந்த மலையில் பல கோயில்கள் உள்ளன. இங்குள்ள அனுமான் கோயிலும் ஹெங்கர்  என்ற முஸ்லிம் மகானின் சமாதியும் மிகவும் பிரபலமானவை. சுவாமிஜி மலைஉச்சியில் ஏறி கோயில்களைத் தரிசித்தார். இயற்கையழகை ரசித்தார்.பல இடங்களில் பாடவும் இசைக்கருவிகளை வாசிக்கவும் செய்தார்.

 

பாலிதானாவிலிருந்து நதியாத் சென்ற சுவாமிஜி அங்கே திவானின் வீட்டில் தங்கினார். அங்குள்ள நூல் நிலையத்திற்குச்சென்று ரவிவர்மாவின் ஓவியங்களைக் கண்டு களித்தார்.

அங்கிருந்து பரோடா சென்றார். ஏற்கனவே அறிமுகமான லிட்ப்டி மன்னர் ஜஸ்வந்த் சிங் தென் மகாராஷ்டிரத்தில் உள்ள மலைவாசத் தலமான மகாலேசுவரத்தில் வந்திருப்பதை அறிந்து அங்கே சென்றார். அங்கே மன்னருடன் இரண்டரை மாதங்கள் தங்கினார். அவருடன் பல சாஸ்திரங்களை விவாதித்தார். அங்கிருந்து புறப்படத் தயாரானபோது மன்னர் சுவாமிஜியிடம், சுவாமிஜி தாங்கள் என்னுடன் வந்து லிம்ப்டியிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். சுவாமிஜி மென்மையாகச் சிரித்து விட்டு, இப்போது அது முடியாது, மகாராஜா! நான் செய்ய வேண்டிய பணி உள்ளது. ஓய்வு நாட்கள்என்ற ஒன்று என் வாழ்க்கையில் இருக்குமானால் அப்போது உங்களுடன் தங்குவேன், என்றார்.

 

1892- ஜீனில் காண்ட்வாவை அடைந்தார் சுவாமிஜி. அங்கே ஹரிதாஸ் பாபு என்ற வக்கீலின் வீட்டில் தங்கினார். அங்கிருந்து இந்தூர் சென்று வந்தார். இந்தூர் ராணியான அகல்யா பாயின் நினைவுச் சின்னங்களைக் கண்டார்.

 ஹரிதாஸ் காண்ட்வாவில் சுவாமிஜியின் பொதுச் சொற்பொழிவு ஒன்று ஏற்பாடு செய்ய எண்ணினார். சுவாமிஜி அதனை விரும்பவில்லை. மேடைப்பேச்சுகளால் பலனில்லை. நமது பாரம்பரிய குரு-சிஷ்ய முறையில் அமைந்த போதனையே சிறந்தது. இதில் மாணவன் ஆசிரியரை நேரடியாகச் சந்திக்க முடியும். அவரத அன்பைப்பெற முடியும். அவர்களுக்கிடையே தந்தை- மகன் உறவு நிலவ முடியும். அத்தகைய போதனையால் மட்டுமே பலனுண்டு. என்று அவர்  கருதினார். இருப்பினும் ஹரிதாஸ் வற்புறுத்தியபோது சுவாமிஜி கூறினார், நீங்கள் இவ்வளவு கூறுவதால் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதுவரை நான் மேடைச்சொற் பொழிவு செய்ததில்லை. மேடையில் எப்படி குரலை ஏற்ற இறக்கங்களுடன்  பேசுவது என்பது  எனக்குத்தெரியாது. இருந்தாலும் நான் பேசுவதைக் கேட்பதற்குப் பலர் ஆவலாக இருக்கிறார்கள் என்றால்  நான் பேசுகிறேன். ஆர்வமுள்ள பலர் இருந்தால் சொற்பொழிவாளரின் ஆற்றல்களும் சிறப்பாக வெளிப்பட இயலும். ஆனால் ஏதோ காரணத்தால் இந்த மேடைச்சொற்பொழிவு நிகழவில்லை.

 

சிகாகோ பற்றி

-

காண்ட்வாவில் இருந்தபோது அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் நடைபெறவுள்ள சர்வமத மகாசபை பற்றிய கருத்துக்கள் சுவாமிஜிக்கு மேலும் தெளிவாயின. அதுபற்றி கத்தியவாரில் அவர் கேள்விப்பட்டார். இப்போது அது பற்றி மேலும் தகவல்கள் கிடைக்கவே அவர் ஹரிதாஸிடம், எனது பயணச் செலவை யாராவது ஏற்றுக்கொண்டு, மற்ற விஷயங்களும் எல்லாம் சரியாக நடக்குமானால் நான் அங்கே போவேன் என்றார்.

காண்ட்வாவில் இன்னும் பல நாட்கள் தங்கவேண்டும். என்று கேட்டுக்கொண்டார் ஹரிதாஸ். அதற்கு சுவாமிஜி, நண்பரே! தங்க  வேண்டும் என்று தான் நானும் நினைக்கிறேன் நான் கடந்து வந்தபாதையில் ஒவ்வொருவரும் என் மீது மிகுந்த அன்பைக் காட்டியுள்ளார்கள். ஆனால்  ராமேஸ்வரம் போக வேண்டும் என்பது என் சங்கல்பம்.  இப்படி ஒவ்வோர் இடத்திலும் நீண்ட நாள் தங்கினால் நான் ராமேஸ்வரத்திற்குப்போய் சேர முடியாது.என்று பதில் கூறினார். அங்கிருந்து பம்பாயின் பிரபலவக்கீலான சேட் ராம்தாஸ் சாபில் தாஸ் என்பவருக்கான அறிமுகக் கடிதத்துடன் புறப்பட்டார். புறப்படும் போது ஹரிதாஸ், சுவாமிஜி, இந்த வக்கீல் உங்களுக்கு உதவக்கூடும். என்று நம்புகிறேன். உண்மையிலேயே உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் ஒன்று உள்ளது என்றார். இருக்கலாம், எனக்கு அது பற்றி தெரியாது. ஆனால் என் வாழ்வில் பல அரிய காரியங்கள் நடைபெறும் என்று  என் குருதேவர் கூறியிருக்கிறார் என்று அழுத்தமாகக் கூறிவிட்டு ரயிலில் பம்பாய்க்குக் கிளம்பினார்.

 

முற்பிறவியில் பௌத்தர்

 

1892 ஜீலை கடைசியில் பம்பாயை அடைந்தார் சுவாமிஜி. ராம்தாஸ் சாபில்தாஸின் வீட்டில் தங்கினார் அவர். வேதங்களைப் படிப்பதை அங்கே தொடர்ந்தார். அங்கிருந்து 20 மைல் தொலைவிலுள்ள அழகிய சால்செட் தீவிற்குச்சென்று கனேரி குகைகளைக் கண்டு மகிழ்ந்தார். பௌத்தர் காலத்தின் ஆரம்பத்தில் புத்த பிட்சுக்கள் தங்கியிருந்த குகைகள் அவை. அங்கே மொத்தம் 109 குகைகள் உள்ளன. புத்த கோஷர் தமது சீடர்களுடன் அங்கே தங்கியிருந்து, பின்னர் இலங்கைக்கும் பர்மாவிற்கும்  சென்றதாகக் கூறப்படுகிறது. சுவாமிஜியின் காலத்தில் இந்தக் குகைகள் அவ்வளவாக அறியப்படாதவை . சுவாமிஜி அங்கே  சென்றதில் அவரது முற்பிறவி நினைவு ஒன்று செயல்பட்டதாகக் கூறினார் சதானந்தர். சுவாமிஜி அமெரிக்காவிற்குச் செல்லுமுன் மேற்கு இந்தியாவில் பயணம்  செய்தார்.  அங்கே கனேரி குகைகளுக்குச்சென்றார். அந்த இடம் அவரை மிகுந்த பரவசத்தில் ஆழ்த்தியது. தமது முற்பிறவியில் தாம் அங்கே வாழ்ந்ததாக சுவாமிஜி  உணர்ந்தார். அந்தக் குகைகள்  இருப்பது யாருக்கும் அந்தக் காலத்தில் தெரியாது. ஆயினும் சுவாமிஜி அவற்றைப்பற்றி அறிந்து  அங்கே  சென்றார். எதிர்காலத்தில் அந்தக் குகைகள் வாங்கி, அவற்றை த்தமது எதிர்காலப் பணியில் ஒரு மையமாக்க வேண்டும் என்று விரும்பினார் அவர்.

கனேரி குகைகளைப் போன்ற குகைகளை நிர்மாணிப்பதற்கும் திட்டமிட்டிருந்தார் சுவாமிஜி. சுவாமிஜியின் மேலைநாட்டு சிஷ்யையாகிய சிஸ்டர் கிறிஸ்டைன் எழுதுகிறார். மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட தீவு ஒன்றை இந்தியாவில் தேர்ந்தெடுக்க வேண்டும்.. இருவர் தங்கும் வசதியுடன் கூடிய சிறுசிறு குகைகள் அங்கே நிர்மாணிக்க  வேண்டும். குகைகளுக்கு நடுவில் குளிப்பதற்கான நீர் நிரம்பிய அழகிய குளங்கள் இருக்கும். குடி தண்ணீர் தனிக் குழாய்கள் வழியாக எல்லா குகைகளுக்கும் செல்லும். அனைவரும் கூடி பிரார்த்தனைகளில் ஈடுபடபெரிய அரங்கம் ஒன்று இருக்கும். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் அதில் காணப்படும்.வழிபாட்டிற்கென்று பெரிய கூடமொன்று தனியாக இருக்கும். இத்தகைய ஓர் இடம் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கனவு கண்டார் சுவாமிஜி. இத்தகைய திட்டத்தைத் தெரிவிக்கும் போது அவரது மனத்தில் இருந்தது கனேரி குகைகளே என்று எழுதுகிறார் கிறிஸ்டைன்.

 

திலகருடன்

 

பம்பாயில் இரண்டு மாதங்கள் தங்கிவிட்டு, சுவாமிஜி மீண்டும் பூனா சென்றார். பம்பாய் ரயில் நிலையத்தில் அவர் லோகமான்ய பால கங்காதர திலகரைச் சந்தித்தார்.திலகர் பேரறிஞர், தேசபக்தர், திலகரும் அவருடன் பூனா சென்றார். அவருடன் சுவாமிஜி பத்து நாட்கள் தங்கினார். திலகருடன் அவர் அத்வைதம் பற்றியும் வேதாந்தம் பற்றியும் நிறைய பேசினார். ஆனால் மற்றவர் களைச் சந்திப்பதை அடியோடு தவிர்த்துவிட்டார். டெக்கான் கிளப் என்ற சங்கத்தில் திலகர் அங்கத்தினராக இருந்தார். வாரந்தோறும்  அங்கத்தினர்கள் சந்தித்துப்பேசுவது வழக்கம். அத்தகைய ஒரு கூட்டத்தில் திலகர் சுவாமிஜியை அழைத்துச்சென்றார்.அன்று காசிநாத்  போவிந்தர் என்பவர் தத்துவம் பற்றி சொற்பொழிவாற்றினார். எல்லோரும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டனர். ஆனால் சுவாமிஜி எழுந்து அவர் பேசிய கருத்து தத்துவத்தின் ஒரு பக்கம் மட்டுமே என்பதை எடுத்துக் காட்டி, அதன் மறுபக்கத்தைச் சரளமான ஆங்கிலத்தில் கூறினார். சுவாமிஜியின் ஆழ்ந்த அறிவாற்றல் அனைவரையும் கவர்ந்தது.

அதன்பிறகு சுவாமிஜியைக் காண பலர் வரலாயினர். அவர்களுடன் கீதை மற்றும் உபநிஷதங்கள் பற்றி அவர்  பேசினார். ஆனால் அவருக்குக் கூட்டம் பிடிக்கவில்லை. எனவே ஒரு நாள் திலகரிடம், நான் நாளை போய் விடு வேன், என்று  கூறினார். மறுநாள் அது போலவே பிறர் விழிக்குமுன்பே சென்றுவிட்டார். திலகரிடம் அவர் தம்மை இன்னார் என்று தெரிவிக்கவும் இல்லை. திலகர் சுவாமிஜியைப் பற்றி பின்னாளில் இவ்வாறு எழுதினார்.

சுவாமிஜி என்னுடன் எட்டோ பத்தோ நாட்கள் தங்கியிருந்தார். அப்போது அவர்  உலகப்புகழ் பெறவில்லை. அது 1892. அவரிடம் பெயர் கேட்டபோது வெறுமனே, சன்னியாசி என்றார். அவர் சொற்பொழிவுகள்  எதுவும் செய்ய வில்லை. பொதுவாக அத்வைதம் பற்றியும் வேதாந்தம் பற்றியும் பேசினார். பிறருடன் கலந்து பழகுவதை அவர் விரும்பவில்லை. அவரிடம் ஒரு தம்பிடிக் காசு கூட கிடையாது. ஒரு மான்தோல்,  ஓரிரு உடைகள், ஒரு கமண்டலம் இவையே அவரது உடைமை.

 

துறவிகள் பயனற்றவர்களா?

 

பூனாவிலிருந்து மஹாபலேசுவர் சென்றார் சுவாமிஜி. ரயில் பயணங்களின் போது பொதுவாக அவர் முதல் வகுப்பில் பயணம் செய்ய விரும்புவார். அவருக்குச் சிறுநீரக நோய் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உபாதை இருந்தது. அதற்கு முதல் வகுப்பில்  வசதி இருந்தது. எனவே யாராவது பணம் தர முன் வரும்போது முதல் வகுப்பு மிக்கட் கேட்டு பெற்றுக்கொள்வார். இப்படி மஹாபலேசுவருக்கு ப் புறப்பட்ட சுவாமிஜி ஓர் இருக்கையில் நன்றாக கால்நீட்டி படுத்துக்கொண்டார். அந்தப் பெட்டியில் பெரிய மனிதர்கள் சிலரும் பயணம் செய்தனர். அவர்களில் ஓரிருவருக்கு  சுவாமிஜி இப்படி படித்திருப்பது பிடிக்கவில்லை. எனவே ஆங்கிலத்தில், இப்படிப்பட்ட சாமியார்கள் தான் பாரத நாட்டையே குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள். சுவாமிஜி அவர்கள் பேசியவற்றை எல்லாம் கேட்டபடியே படுத்திருந்தார். ஆனால் அவர்கள் இதையே பேசி நீட்டிக்கொண்டு போன போது அவரால் தாங்க இயலவில்லை.

சட்டென்று எழுந்து உட்கார்ந்து, என்ன, என்னசொல்கிறீர்கள்? துறவிகள் பாரதத்தைச் சீரழித்துவிட்டார்கள் என்றா சொல்கிறீர்கள்? உண்மையில் அவர்கள் பாரதத்தைக்காத்து வாழ வைத்திருக்கிறார்கள்? புத்தரும் சங்கரரும் சைதன்யரும் யார்? இவர்கள் பாரத நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் என்று கூறினார்.பிறகு துறவியர் இந்த நாட்டிற்கு என்ன செய்துள்ளனர் என்பதை வரலாற்று ஆதாரத்துடன்  எடுத்துக்கூறத் தொடங்கினர். அவரது ஆங்கில வன்மையும், ஆணித்தரமான கருத்துக்களும் அந்த மனிதர்களைப் பிரமிக்கச் செய்தன. அதன்பிறகு அவர்கள் வாயே திறக்கவில்லை.

 

அழுந்தொறும் அணைக்கும் அன்னை

 

அழும் குழந்தைக்கு சுவாமிஜி அன்புத் தாயாக விளங்கிய நிகழ்ச்சி ஒன்று மஹாபலேசுவரில் நடைபெற்றது. அங்கே சுவாமிஜி டாக்டர் மோரோபந்த் விஸ்வநாத் ஜோஷி என்பவரின் வீட்டில் சுமார் ஒரு மாத காலம் தங்கியிருந்தார். அப்போது அவருக்குக் கமலா என்ற இரண்டாம் மகள் பிறந்து ஆறேழு மாதங்கள் ஆகியிருந்தன. ஏதோ காரணத்தால் கமலா இரவில் தூக்கமின்றி தொடர்ந்து அழுத வண்ணம் இருந்தாள். இரவு முழுவதும் அவளும் சரி, தாயாரும் சரி தூக்கமின்றி அவதியுற்றனர். இரண்டு நாட்கள் இதனைக் கவனித்த சுவாமிஜி தாயாரிடம், நீங்கள் பகல் முழுவதும் வேலை செய்கிறீர்கள். இரவிலும் குழந்தையின் காரணமாக ஓய்வு இல்லை. எனவே இரவில் குழந்தையை என்னிடம் விட்டு விடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். சுவாமிஜி வீட்டிற்கு வந்த விருந்தினர், ஒரு துறவியும் கூட, அவரிடம் எப்படி குழந்தையை விடுவது என்று தயங்கினார் அந்தத் தாய். ஆனால் சுவாமிஜி வற்புறுத்தி சம்மதம் பெற்றுவிட்டார்.

பின்னர் நடந்தது பற்றி கமலாவின் சகோதரியான லட்சுமிபாய் ராஜ்வாடே பின்னாளில் கூறினார். கமலாவை மடியில் இட்டுக்கொண்டு சுவாமிஜி தியானத்தில் ஆழ்ந்தார். சிறிதும் சலனமின்றி அவள் தூங்கினாள். அவரும் இரவு முழுவதும் தியானத்தில் கழித்தார். ஒன்றல்ல இரண்டல்ல பல நாட்கள் இப்படியே கழிந்தன.

 இதில் விந்தை என்னவென்றால் இந்தக் கமலாதான் பின்னாளில் சாங்க்லி அரசின் ராணியாக ஆனார். இவரது பெயர் சரஸ்வதி பாய் சாகிபா என்று ஆயிற்று. ஒரு ராணியாக அவர் பல்வெறு சவால்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது. எத்தனையோ பாதகமான சூழ்நிலைகளிலும் எனது சகோதரி மனத்தில் சமநிலையை இழக்காமல் செயல்பட்டாள். சுவாமிஜியின் ஆசிகளே இதற்குக்காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. என்று பின்னாளில் லட்சுமிபாய் கூறினார்.

 பொன்னும் பொருளும்

மஹாபலேசுவரிலிருந்து அக்டோபர் 10 வாக்கில் கோலாப்பூரை அடைந்தார் சவாமிஜி. கோலாப்பூர் மகாராணிக்கான அறிமுகக் கடிதம்  அவரிடம் இருந்தது. சுவாமிஜி சென்ற வேளையில் மகாராணி அங்கே இல்லை. அப்போது பொறுப்பில் இருந்த ராவ்சாகிப் லட்சுமணராவ் கோல்வல்கர் சுவாமிஜியை வரவேற்று, சந்தடியற்ற தொலைவில் ஒரு வீட்டில் தங்கச்செய்தார். மகாராணி வந்த பிறகு சுவாமிஜி அரண்மனைக்கு வரவழைக்கப் பட்டார். சிறந்த பக்தையாக இருந்த மகாராணி சுவாமிஜிக்குப் பாத பூஜை செய்தார். வெள்ளித் தட்டு ஒன்றில் பொன், வைர ஆபரணங்களும் பணமும் வைத்து சுவாமிஜிக்குச் சமர்பித்தார். அவற்றைக்கண்ட சுவாமிஜி, நான் ஒரு துறவி. இந்த வைர வைடூரியங்கள் எனக்குத்தேவையற்றவை என்று கூறி பணிவுடன் அவற்றை மறுத்துவிட்டார்.பிறகு மகாராணி வற்புறுத்திக்கேட்டுக் கொண்டதற்கு இணங்க இரண்டு காவி வேட்டிகளைப்பெற்றுக்கொண்டார். அதன் பிறகு, துறவியிடம் பொருட்கள் குறைவாக இருக்கும் அளவிற்கு நல்லது என்று கூறியபடி தம்மிடம் ஏற்கனவே இருந்த துணிகளை அங்கே விட்டுவிட்டார்.

கோலாப்பூர் மாமன்னர் சிவாஜியின் வம்சத்தினருடைய தலைநகராகத் திகழ்ந்த இடம். மாமன்னர் சிவாஜியிடம் சுவாமிஜி கொண்டிருந்த மரியாதையும் ஈடுபாடும் அளவிட முடியாதது. ஆங்கிலேயர்கள் சிவாஜியைப் பற்றி விட்டுச்சென்றுள்ள குறிப்புகள் முழுமையானவை அல்ல என்பது மட்டுமின்றி, அவை பல இடங்களில் தவறாகவும் உள்ளன என்பது சுவாமிஜியின் கருத்து.சிவாஜியைப் பற்றி பேசும்போது அவர் பரவசங்களுக்கே போய்விடுவார். சிவபெருமானின் அம்சமாகப் பிறந்தவர் சிவாஜி என்பார் சுவாமிஜி.

கோலாப்பூரிலும் பல சொற்பொழிவுகள்  செய்தார் சுவாமிஜி. அவற்றைக்கேட்ட ஒருவர் அவர் பேசிய ஓரிரு கருத்துக்களை நினைவுகூர்கிறார். சுவாமிஜி பேசிய இரண்டு வாக்கியங்கள் எனக்கு  நன்றாக நினைவில் உள்ளது.எனது மதம் எது தெரியுமா? அதன் ஒரு புரட்சிக் குழந்தையே புத்த மதம். கிறிஸ்தவ மதம், அதனைக் காப்பியடிப்பதற்கான ஒரு சுற்றி வளைத்த முயற்சி மட்டுமே. இந்து மதத்தை ஐரோப்பியர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்? அவர்கள் ஆடம்பர வாழ்வின் பின்னால் ஓடுகிறார்கள் இந்த இடத்தில் பார்வையாளர்களில் ஒருவர், இறைச்சியை உண்பவர் கள் எப்படி மதத்தைப் புரிந்து கொள்ள முடியும்? என்று இடைமறித்தார். அப்படிச்சொல்லாதீர்கள். உங்கள் பண்டைய ரிஜிகள் இறைச்சி உணவை உண்டவர்களே. உத்தர ராம சரிதத்தில் நீங்கள்  படித்ததில்லையா?  என்று கேட்ட சுவாமிஜி, அந்த நூலிலிருந்து பல சுலோகங்களை மேற்கோள் காட்டினார். அசைவ உணவை அவர் ஆதரித்துப் பேசியதைக்கேட்ட பலருக்கும் அவரது ஜாதியைப் பற்றி சந்தேகம் எழுந்தது. ஆனால் அவரிடம் கேட்கும் துணிச்சல் படைத்தவர் யார்?

 

புதுமைத் துறவி பெல்காமில்

 

கோலாப்பூரிலிருந்து 1892 அக்டோபர் நடுவில் சுவாமிஜி பெல்காம் சென்றார். அங்கே மராட்டிய அன்பர் ஒருவரின் வீட்டில் தங்கினார். அவரது மகனான பேராசிரியர் ஜி.எஸ். பாட்டே எழுதியுள்ள நினைவுக்குறிப்புகள் சுவாரசியமானவை. தாம் ஒரு புதுமைத்துறவி என்பதுடன் ஒரு புதியயுகத்தின் விடிவெள்ளியாகத் தோன்றியவர் என்பதை சுவாமிஜி இங்கே வெளிப்படுத்தக் காண்கிறோம்.

ஒரு நாள் காலை 6 மணி இருக்கும். ஓர் அறிமுகக்  கடிதத்துடன் சுவாமிஜி எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். பார்ப்பவர்களை உடனடியாக வசீகரிக்கும் தோற்றம் அவருடையது. அவரைப் பற்றி  எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவர் எங்கள் வீட்டில் தங்கிய சில நாட்களில் பல விஷயங்கள் எங்களுக்குத்தெரியவந்தன. ஒரு புதுமைத் துறவியாக இருந்தார் அவர், நடை, உடை, பாவனை , உணவு என்று  ஒவ்வொன்றிலும் அவர் பரம்பரைத் துறவிகளிலிருந்து மாறுபட்டவராக இருந்தார்.

காவியுடைதான் உடுத்தியிருந்தார். ஆனால் பனியனும் அணிந்திருந்தார். பரம்பரைத்துறவியர் பனியன் அணிவதில்லை. பரம்பரைத் துறவிகள் வைத்திருக்கின்ற யோகத்  தண்டத்திற்குப் பதிலாக நீண்ட கைத்தடி வைத்திருந்தார். துறவியர் ஆங்கிலம் பேசுவதை நாங்கள் கேட்டதே இல்லை. இவரோ சரளமாக ஆங்கிலம் பேசினார். மதம், தத்துவம், போன்றவற்றைத் தவிரவும் அவருக்குப் பலதுறை அறிவு இருந்தது.  இவையெல்லாம் அவரைப் பாரம்பரியத் துறவிகளிலிருந்து மாறுபடுத்திக் காட்டின. இவை  எங்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தன என்றால் அவரது உணவுப் பழக்க வழக்கங்கள் எங்களைத் திகைக்க  செய்தன. முதல் நாள் சாப்பிட்டு முடித்ததும் தாம்பூலம் கேட்டார். எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அடுத்தது அவர் கேட்டதோ புகையிலை! ஒரு துறவியிடம் இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட அவர், உங்கள் சந்தேகம் சரிதான், நான் ஒரு பிராமணன் அல்ல, ஆனால் நான்  ஒரு துறவி. இத்தகைய விஷயங்களிலிருந்து விடுபட்டவனாக நான் இருக்கவேணடும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது சரிதான். ஆனால் என்ன செய்வது? என்னால் இவற்றை விட முடியவில்லை. என்றார். அவர்  உண்மையை உள்ளபடி கூறியது எங்கள் மனத்தில் அவரைப்பற்றி உயர்ந்த எண்ணத்தை உருவாக்கிறது.

சுவாமிஜி தொடர்ந்து பேசினார். அது எங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இதோ பாருங்கள்! நான் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவன். செல்வச் செழிப்பில்  வாழ்ந்த ஒரு வாலிபன்.ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்திப்பதற்கு முன்னால் என் வாழ்க்கை ஒரு சாதாரண வாலிபனின் வாழ்க்கையிலிருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதாக இருக்கவில்லை. அவரைக் கண்ட பிறகு வாழ்க்கை பற்றிய எனது  கண்ணோட்டம்  மாறியது. ஆனால் சில பழக்க வழக்கங்களை என்னால் விட முடியவில்லை.

இந்தநேரத்தில் ஒருவர், நீங்கள் அசைவ உணவும் உண்பீர்களா? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, நான் சாதாரண துறவியர் பரம்பரையைச் சேர்ந்தவன். நாங்கள் எந்த உணவையும் சாப்பிடலாம். உணவு தானாக வந்து சேராவிட்டால் உணவின்றியே வாழவேண்டும். ஒரு பரமஹம்ச சன்னியாசி ஜாதி, மதம் போன்ற எந்தப் பாகுபாடும் இன்றி யாரிடமிருந்தும் உணவை ஏற்றுக்கொள்ளலாம் என்றார்.

அப்படியானால் நீங்கள் இந்துக்கள் அல்லாதவர் களிடமிருந்தும்  சாப்பிட்டிருக்கிறீர்களா? என்று ஒருவர்கேட்டார். அதற்கு சுவாமிஜி, ஏன் பலநேரங்களில் எனக்கு உணவளித்தவர்கள் முஸ்லிம்கள் என்றார்.

 

எங்களுக்கு அவரைப் பற்றிய குழப்பமும் திகைப்பும் நீடித்தன. ஒரு முடிவுக்கு வர இயலாமல் தவித்தபோது எங்கள் உள்ளத்தைப் புரிந்து கொண்டவராக அவர் பேசினார். உண்மை மதம் என்பது இத்தகைய பழக்க வழக்கங்களக்கும் நியதிகளுக்கும் அப்பாற்பட்டது. புறத்தோற்றங்களைவிட அக வாழ்க்கையே முக்கியமானது என்பதை அற்புதமாக விளக்கி, எங்களுக்கு மதம் பற்றியும் துறவு பற்றியும் ஒரு புதிய கண்ணோட்டத்தை அளித்தார்..

பல பண்டிதர்களுடன் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்த்தினார் சுவாமிஜி. இந்தநேரங்களிலும் சுவாமிஜியின் ஓர் அற்புதமான பரிமாணம் வெளிப்பட்டது. எத்தகைய சூழ்நிலையிலும் அவர் கட்டுப்பாட்டை இழப்பவில்லை. சுவாமிஜியின் ஓரிரு வாதங்களிலேயே பொதுவாக எதிராளிகள் திணறிவிடுவார்கள்.மேலும் பேசுவதற்குக் கருத்துக்கள் கிடைக்காத போது  ஆவேசமும் ஆத்திரமும் கொண்டு கத்துவார்கள். ஏசுவார்கள். ஆனால் சுவாமிஜியின் கம்பீரமும்  அமைதியும் எதனாலும் கலைவதில்லை. அதே தெய்வீகப்பொலிவுடன் முகத்தில் புன்னகை தவழ மென்மையாக ஆனால் உறுதியாகத் தமது கருத்துக்களை எடுத்துக் கூறுவார்.

சில நாட்களுக்குப் பிறகு ஹரிபாத மித்ரர் என்பவரைக்காணச் சென்றார் சுவாமிஜி. ஹரிபாதர் துறவிகளிடம் அதிக மதிப்பு இல்லாதவர். துறவி என்றாலே  ஏமாற்றுப்பேர்வழி, மதம் கடவுள் போன்றவையெல்லாம் தேவையற்றவை என்று கருதுபவர். சுவாமிஜி ஏதாவது யாசிக்க வந்திருப்பார், அல்லது மராட்டியருடன் தங்கப் பிடிக்காமல் இங்கே வந்திருப்பார் என்று நினைத்தார் அவர். ஆனால் பேசபே்பேச சுவாமிஜியின் மகிமையை அறிந்து கொண்டார். அதன் பிறகு அவரிடம் வெகுவாக ஈர்க்கப் பட்டார். சுவாமிஜியைத் தம்முடன் தங்குமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு சுவாமிஜி, அந்த மராட்டிய நண்பருடன் நான்  சந்தோஷமாகவே இருக்கிறேன், ஒரு வங்காளியைக் கண்டதும் இங்கே வந்துவிட்டால் அவர் வருந்த நேரிடும். அவரும் அவரது குடும்பத்தினரும்  என்னை மிகுந்த அன்புடன் கவனித்துக் கொள்கின்றனர். என்று கூறிவிட்டார். இருப்பினும் மறுநாள் காலையில் சிற்றுண்டி அருந்த வருவதாகக்கூறினார்.

 

மறுநாள் காலையில் குறித்த நேரத்தில் சுவாமிஜி போகவில்லை. அவரைத்தேடி பாட்டேயின் வீட்டிற்குச் சென்றார் ஹரிபாதர். அங்கே  பண்டிதர்கள், வழக்கறிஞர்கள், பிரமுகர்கள் என்று பலர் சூழ உட்கார்ந்திருந்தார் சுவாமிஜி. அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கெல்லாம் ஆங்கில, இந்தி. வங்க, சம்ஸ்கிருத மொழிகளில் சரளமாகப் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஹரிபாதரும் அங்கே அமர்ந்து கொண்டார். மற்றவர்கள் புறப்பட்டுச்சென்ற பிறகு சுவாமிஜி ஹரிபாதரிடம், நான் குறிப்பிட்ட படி உங்கள் வீட்டிற்கு வராததற்கு என்னை மன்னிக்க வேண்டும். இத்தனை பேர் இங்கே காத்திருக்கும்போது அவர்களை விட்டுவிட்டு வருவதற்கு மனம் இடம் தரவில்லை, என்றார். பின்னர் சுவாமிஜியைத் தமது வீட்டில் வந்து தங்குமாறு ஹரிபாதர் அழைத்தார். அதற்கு சுவாமிஜி, பாட்டே சம்மதித்தால் வருகிறேன், என்றார். மிகவும் கெஞ்சிக்கேட்டுக்கொண்ட பிறகு பாட்டே சம்மதித்தார்.

மூன்று நாட்கள் ஹரிபாதருடன் தங்கிய பிறகு அங்கிருந்து புறப்படுவதாகக்கூறினார் சுவாமிஜி. ஒரு துறவி மூன்று நாட்களுக்கு  மேல் ஒரு நகரத்தில் தங்கக்கூடாது. ஒரு நாளுக்குமேல் ஒரு கிராமத்தில் தங்கக்கூடாது. ஒரே இடத்தில் பல நாட்கள் தங்கினால் பற்று  ஏற்படுகிறது. பற்றை வளர்க்கின்ற எதிலிருந்தும் நாங்கள் விலகியே இருக்க வேண்டும் என்றார் அவர். ஆனால் சுவாமிஜியின் தொடர்பை ஒரு பெரும் பேறாகக் கருதிய ஹரிபாதர் சுவாமிஜியை மிகவும் வற்புறுத்தினார். எனவே ஓரிரு நாட்கள் தங்குவதாக ஒத்துக்கொண்டார் சுவாமிஜி. ஒன்பது நாட்கள் அவருடன் தங்கினார்.

 

மன ஆற்றலை விரயம் செய்யக்கூடாது.

 

சுவாமிஜியுடன் ஹரிபாதரின் நாட்கள் இனிமையாகக் கழிந்தன. அவரிடம் தமது பரிவிராஜக நாட்களைப் பற்றி பல விஷயங்களைக்கூறினார் சுவாமிஜி. துறவிகளுக்கும் திருடர்களுக்கும்  இடம் கிடையாது என்று அவரைத்துரத்திய இடங்கள்         உண்டு. மிகவும் பசித்திருந்த                   வேளையில் மிகவும் காரமான பதார்த்தங்களைக்கொடுத்து   வாயும் வயிறும்  எரிய அவர் பல நாட்கள்             அவதிப்பட்டதுண்டு. அவரைத் திருடன் என்றோ, ஒற்றன் என்றோ கருதி காவலர்கள்  கண்காணித்ததும் உண்டு. ஆனால்  எல்லாம் தேவியின் திருவிளையாடல் என்று  ஏற்றுக்கொண்டு தமது பாதையில் தனித்துச் சென்றார் சுவாமிஜி.

சுவாமிஜியுடன் பேசப்பேச அவருக்கு மதமும் தத்துவமும் மட்டுமல்ல, மற்ற இலக்கியங்களும் நன்றாகத் தெரிந்திருப்பதைக்கண்டார் ஹரிபாதர். ஒரு நாள் சவாமிஜி ஆங்கில நகைச்சுவை நாவலான The Pickwick Papers என்ற  நூலிலிருந்து நீண்ட பகுதிகளை அப்படியே மேற்கோள் காட்டி பேசினார். ஹரிபாதருக்கு  இது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. சுவாமிஜி கூறியதோ அவரை மேலும், ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிறுவயதில் ஒரு முறை ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு ஒரு முறை என்று இரண்டு முறை மட்டுமே தாம் அந்த நூலை வாசித்திருப்பதாகக்கூறினார் அவர். இரண்டு முறை வாசிப்பதால் இவ்வளவு பகுதிகள் மனப்பாடம் ஆகுமா என்று கேட்டபோது சுவாமிஜி பதில் கூறினார்.

 

உடம்பில் செய்ல்படும் சக்திகளைக் கட்டுப் படுத்துவதால் மன ஆற்றல் வளர்கிறது. எனவே உடம்பில்  செயல்படுகின்ற பௌதீக சக்திகளைக் கட்டுப்படுத்தி சேமித்து அவற்றை மன ஆற்றலாக. ஆன்மீக ஆற்றலாக மாற்றவேண்டும். எதையும் சிந்திக்காமல் அர்த்தமற்ற இன்ப நாட்டங்களில் உடம்பின் சக்திகளைச்செலவிடுவது அபாயகரமானது. இது மனத்தின் கிரகிக்கும் ஆற்றல்களை இழக்கச் செய்கிறது. இன்னும் ஒன்று, நீ எதைச்செய்தாலும் முழு மனத்துடன் செய்ய வேணடும் ஒரு முறை ஒரு சாது தாமிரத்தால் ஆன சமையல் பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். துலக்கத் துலக்க அவை தங்கப் பாத்திரங்கள் போல் மின்னின. பூஜையையோ தியானத்தையோ எவ்வளவு கவனமாக, ஈடுபாட்டுடன் செய்வார்களோ அந்த அளவுக்கு அவர் முழுமனத்தையும் செலுத்தி அந்த  வேலையைச் செய்து கொண்டிருந்தார்.

இந்த  நாட்களில் சுவாமிஜியிடம் பிரெஞ்சு இசைபற்றிய நூல் ஒன்றும் இருந்தது.

 

ஹரிபாதர் பல நோய்களுக்கு ப் பல்வேறு மருந்துகளைச் சாப்பிட்டு வந்தார். அவ்வாறு கண்டதற்கெல்லாம் மருந்துகளைச் சாப்பிடுவது உடல் நலத்தைக்கெடுக்கும் என்று அவருக்கு அறிவுரை கூறினார் சுவாமிஜி. பெரும்பாலான நோய்கள் மன சம்பந்தமானவை , மக மாற்றியமைப்பதன்வாயிலாக பல நோய்களைக் குணப்படுத்தி விட முடியும். அது மட்டுமின்றி எப்போதும் நோயைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதில்  என்ன பயன்?  நல்வழியில் வாழ்க்கை நடத்து, மனத்தை உயர்த்தக்கூடிய எண்ணங்களைச் சிந்தனைச்செய். உற்சாகமாக இரு. உடம்பை வருத்தக்கூடிய, பின்னால் எண்ணி வருந்த நேர்கின்ற அளவுக்குச் சுகபோகங்களில் உழலாதே. இவ்வளவும் செய்தால் எல்லாம் நன்றாக இருக்கும். மரணம் எல்லோருக்கும் வரத்தான் செய்யும். நீயும் நானும் நம்மைப் போன்றவர்களும் சாவதால் பூமியின் அச்சு சாய்ந்து விடுமா  என்ன? நாம் இல்லாமல் இந்த உலகம் நடக்காது என்று பெரிதாக அலட்டிக்கொள்ளக்கூடாது.

 

ஹரிபாதர் ஏராளமான மருந்துகளைச் சாப்பிடும் பழக்கத்தை அன்றே கைவிட்டார்.

 

பிச்சையிட வேண்டுமா, வேண்டாமா?

 

தாய் நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு அவ்வப்போது சுவாமிஜியிடம் மிகவும் உணர்ச்சிப் பிரவாகமாக வெளிப்பட்டது. ஒரு நாள் அவர் செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தார். கல்கத்தாவில் ஒருவர் பசியால் வாடி மரணமடைந்ததாக அதில் வெளியாகியிருந்தது. அந்த நிகழ்ச்சி அவரை மிகவும் பாதித்தது. ஆழ்ந்த கவலையுடன் முகம் வாடியவராக அவர் அமர்ந்திருந்தார். அதைக் கண்ட ஹரிபாதர் காரணம் கேட்டபோது சுவாமிஜி கூறினார், மேலை நாடுகளில் எவ்வளவோ தரும நிறுவனங்கள் உள்ளன., தரும காரியங்களுக்காக அவர்கள் எவ்வளவோ செலவு செய்கிறார்கள். இருந்தும் அங்கே சமுதாயம் ஒதுக்கி வைப்பதால் இறப்போர் பலர், ஏழைகளைச் சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை. ஒதுக்கிவிடுகிறது. நமதுநாடு ஏழையாக இருந்தபோதிலும் , தருமம் செய்ய வேண்டும், என்பது ஒரு சமுதாய நியதியாக உள்ளதால் ஏழையையோ பிச்சைக்காரனையோ சமுதாயம் ஒதுக்குவதில்லை. ஒரு பிடி அரிசியோ ஒரு  கைப்பிடி சாதமோ பெறாமல் யாரும் எந்த வீட்டிலிருந்தும் திரும்புவதில்லை. எனவே நமது நாட்டில் பஞ்சம் அல்லாத காலங்களில் பசியால் இறப்போர் மிகமிகக் குறைவு. பசியால் ஒருவன் இறந்தான் என்று இப்போது தான் நான் முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன்.

 

ஆனால் சுவாமிஜி, பிச்சைக்காரர்களுக்கு உணவு அளிப்பது வீண்செலவே அல்லவா? நாம் கொடுக்கும் உணவோ பொருளோ அவர்களுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீமையே செய்யும் என நான் நினைக்கிறேன். நாம் கொடுக்கும்  பணத்தில் கஞ்சாவோ கள்ளோ குடித்து அவர்கள் கெட்டுப்போவார்களோ தவிர உருப்படியாக எதுவும் நடக்காது என்று கூறினார் ஹரிபாதர்.

ஒரு பைசா கொடுத்துவிட்டு அதை அவன் என்ன செய்கிறான்  என்று கணக்கிட்டு நீ ஏன் உன் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும்? உன்னிடம் பணம் உள்ளது. கொடு, அவ்வளவு தான். நீ கொடுக்காமல் விரட்டினால் அவன் என்ன செய்வான்? திருடுவான். கஞ்சாவோ கள்ளோ குடித்தால் அது அவனை மட்டுமே பாதிக்கும். திருடினால் அது சமுதாயம் முழுவதையுமே அல்லவா பாதிக்கும்! என்று கேட்டார் சுவாமிஜி.

 

பிறர் நமது கண்ணாடி

 

கணிசமான சம்பளம் கிடைக்கின்ற வேலையில் இருந்தார் ஹரிபாதர். அவரது மேலதிகாரிகள் ஆங்கிலேயர்கள். அவர்கள் தம்மைக் கடிந்து கொள்வது ஹரிபாதருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. தமது அதிருப்தியை அவர் வெளிப்படையாகவே காட்டுவார். இதைப் பற்றி அறிந்த சுவாமிஜி கூறினார்.

 

இதோ பார் பணத்திற்காக நீதான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தாய் உனக்குரிய சம்பளத்தை அவர்கள் தவறாமல் கொடுத்துவிடுகிறார்கள். ஓ! இவர்கள் என்னை அடிமைபோல் நடத்துகின்றனர். என்று ஏன் புலம்புகிறாய்? சிறிய விஷயங்களையெல்லாம் ஏன் பெரிதுபடுத்துகிறாய்? யாரும் உன்னை அடிமைப்படுத்தவில்லை. நீ அடிமையாக இருப்பதற்கு நீயே காரணம். இப்போது நினைத்தாலும் நீ வேலையை ராஜினமா செய்யலாமே! அதிகாரிகளை ஏன் குறைகூற வேண்டும்? இப்போதைய உனது சூழ்நிலை சாதகமாக இல்லையென்றால்  அதற்கு வேறு யாரையும் குறைகூறாதே! உன்னையே குறை கூறு. நீ அவர்களின்கீழ் வேலை செய்வதும் செய்யாததும் அவர்களுக்கு ஒரு பொருட்டு என்றா நினைக்கிறாய்? நீ விலகினால் அந்த இடத்தில் வேலை செய்ய நூற்றுக்கணக்கானோர்  காத்திருக்கிறார்கள். உன்னைப் பற்றி கவலைப்படு. உனது கடமைகளையும் பொறுப்புகளையும் நினைத்துப்பார். அத்துடன் நிறுத்திக்கொள். முதலில் உனக்கு நீ நல்லவனாகஇரு. அப்போது உலகமே நல்லதாக உனக்குத் தெரியும். மற்றவர்களிடம் உள்ள நல்லதை மட்டுமே அப்போது நீ காண்பாய். நாம் காணும் புறவுலகம் நமது பிரதிபிம்பமே. பிறரிடம் குற்றம் காணும் பழக்கத்தை விட்டுவிடு. நீ வெறுப்பவர்கள் எல்லாம் படிப்படியாக உன்னை ஏற்றுக்கொள்வதை நீ காண்பாய்.ஆச்சரியத்திற்குரிய விஷயம் இது, ஆனால் உண்மை. நமது மனநிலைக்கு ஏற்பவே பிறர் நம்மிடம் பழகுவார்கள்.பிறர் நம்மிடம் நடந்து கொள்வதை வைத்து நமது மனநிலையை நமது மனப்பக்குவத்தை  அறிந்து கொள்ளலாம்.

சுவாமிஜியின் இந்த அறிவுரை ஹரிபாதரின் வாழ்க்கையில் ஒரு தெளிவை ஏற்படுத்தியது. சுவாமிஜியின் வழிகாட்டுதலில் பகவத் கீதையைப் படித்தார் ஹரி பாதர். இதுவரை புரியாத பல உண்மைகள் அவருக்குப் புரிந்தன. மதம், தத்துவம் போன்ற  எல்லைகளைக்கடந்துஇலக்கிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய சுவாமிஜி தாமஸ் கார்லைல் எழுதிய நூல்களையும் , ஜீல்வெர்ன் எழுதிய நாவல்களையும் படிக்குமாறு ஹரிபாதரிடம் கூறினார். சுவாமிஜி எப்படி போதித்தார் என்பது பற்றி ஹரிபாதர் எழுதுகிறார்.

சுவாமிஜி ஓர் உண்மையான ஆசிரியராகத் திகழ்ந்தார். பிரம்புடன் அமர்ந்திருக்கின்ற ஆசிரியரின்  முன்னால் சர்வமும் அடங்கி உட்கார்ந்து ஒரு மாணவன் கற்பது போன்றது அல்ல சுவாமிஜியிடம் கற்பது, மிக உயர்ந்த விஷயங்களையும் அவர் வேடிக்கை கேலி, சிரிப்பு, என்று கலந்தே போதித்தார் அவர். அவரிடம் பலவிதமான மனிதர்கள் வந்தனர். சிலர் அவரது அறிவுத்திறமையைக்கேள்விப்பட்டு , சிலர் அவரது அறிவைச் சோதிக்க, சிலர் சுய லாபங்களுக்காக, சிலர் உபதேசம் பெறுவதற்காக, சிலர் அவரால் கவரப்பட்டு, சிலர் அவரது திருமுன்பு தவழ்கின்ற ஆழ்ந்த அமைதியை அனுபவிப்பதற்காக என்று அவர்களின் நோக்கங்கள்  பலவாக இருந்தன. வருபவர் யாராக இருந்தாலும் அவரது நோக்கத்தை ஒரு பார்வையிலேயே உணர்ந்து கொள்வார் சுவாமிஜி. அவர்களின் ஆழ்மனங்களிலேயே நுழைந்து அவர்களின் மனத்தை அவர் பார்ப்பது போல் இருக்கும். படிப்பதிலிருந்து  தப்பிப்பதற்காக ஒருவன் அவரிடம் வந்து தாம் துறவியாக விரும்புவதாகத் தெரிவித்தான். மறுகணமே சுவாமிஜியின் பதில் வந்தது. தம்பி முதலில் நீ  உன் எம். ஏ படிப்பை முடித்துவிட்டு வந்து துறவியாகு. துறவு வாழ்க்கை யை ஒப்பிட்டால் எம்.ஏ பட்டம் பெறுவது எவ்வளவோ எளிது என்றார். எங்கள் இதயங்களை அவர் எப்படி கொள்ளை கொண்டார் என்பதை நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது. என் வீட்டில் முற்றத்தில் நின்ற சந்தன மரத்தின் கீழ்  அமர்ந்து அவர் எனக்குக்கூறிய உபதேசங்களை என்னால் மறக்கவே இயலாது.

 பெல்காமில் சுவாமிஜி பல இடங்களில் சொற்பொழிவுகளும் கலந்துரையாடல்களும் நிகழ்த்தினார். மதம், தத்துவம் போன்றவற்றில் மட்டுமின்றி, அறிவியல், சமூகவியல் போன்றவற்றிலும் அவருக்கிருந்த தேர்ச்சி கண்டு மக்கள் வியந்தனர். ஆனால் எந்த நோக்கங்களோ உயர் லட்சியங்களோ இல்லாமல் பாமரர்கள் வாடுவது பற்றி அவர் மிகவும் கவலை கொண்டனர். சாதாரண சுகாதாரம் பற்றி கூட அவர்கள் அறிந்திராதது அவர் மனத்தை மிகவும் வாட்டியது. குளிர்கின்ற அதே குளத்தில் பாத்திரங்கள் போன்றவற்றைத் துலக்குவது , துணி துவைப்பது, அதே நீரைத்தான் குடிக்கவும் பயன்படுத்துவது என்று வாழ்ந்த அவர்களைக் குறிப்பிட்டு இத்தகைய மக்களிடம் என்ன அறிவை எதிர் பார்க்க முடியும். என்று வேதனையுடன் கூறினார்.


No comments:

Post a Comment