சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-38
🌸
அமெரிக்காவில்
தொடரும் நாட்கள்
...................
மாறிவரும்
மன அலைகள்
...................
சுவாமிஜியின் சான் பிரான்சிஸ்கோ வாழ்க்கை அவருக்கு
நல்ல மனஅமைதியைத் தந்தது. அவரது மனமும் பல்வேறு மாற்றங்களுக்கும், பல்வேறு உயர்வு தாழ்வுகளுக்கும்
உட்பட்டே செயல்பட்டிருக்கிறது என்பது அவரது
கடிதங்களிலிருந்து புரிகிறத. லாஸ் ஏஞ்ஜல்ஸிலிருந்து அவர் எழுதிய கடிதங்களில் ஒருவிதமான மனத் தளர்வையும்
ஏமாற்றத்தையும் காண்கிறோம். சான் பிரான்சிஸ்கோவிலிருந்து எழுதிய கடிதங்கள் மன அமைதியைப்
பிரதிபலிக்கின்றன.அங்கிருந்து அலமேடாவிற்குச் சென்று, அங்கிருந்து எழுதிய கடிதங்கள்
அவர் ஒருவிதமான ஆனந்தப் பரவசத்தில் திளைப்பதைக் காட்டுகின்றன.
...
லாஸ் எஞ்ஜல்ஸ் கடிதங்களிலிருந்து-.
...
என்னுடைய துன்பங்களை மட்டுமே நினைக்கிறேன். பிறருடைய
கஷ்டங்களைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறேன். எனக்காகப் பிரார்த்தனை செய். துன்பத்தைச் சகிப்பதற்கான வலிமை எனக்கு உண்டாக வேண்டும்
என்று வலிமையான எண்ண அலைகளை அனுப்பு. நான் மிருகத்தனமானவன். உண்மை தான். மென்மை பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறீர்களே, அது
எனது குற்றம். மென்மை என்னிடம் இன்னும் குறைவாக, மிக க் குறைவாக இருக்கக் கூடாதா, என்று
விரும்புகிறேன். அது இருப்பது என் பலவீனம். ஐயோ, அதிலிருந்து தான் என் கஷ்டங்கள் அனைத்தும்
வந்துள்ளன.
..
சான் பிரான்சிஸ்கோ கடிதங்களிலிருந்து-
...
கடந்த இரண்டு ஆண்டுகளாக அனுபவித்த சித்தரவதைகள் பல
வழிகளில் பெரிய படிப்பினைகளாக இருந்துள்ளன என்பதைச் சில வேளைகளில் உணர்கிறேன்.நோயும்
துரதிர்ஷ்டமும் வருகின்றபோது நாம் என்றென்றைக்குமாக மூழ்கி விட்டோம் என்று தான் உணர்கிறோம்.
ஆனால் காவப்போக்கில் நமக்கு நன்மை செய்யவே அவை வருகின்றன. எல்லையற்ற நீலவானம் நான்,
என் மீது மேகங்கள் குவியலாம். ஆனால் நான் அதே எல்லையற்ற நீல வானம் தான். என் இயல்பும்,
ஒவ்வொருவருடைய இயல்புமாக உள்ளதாக நான் அறிந்துள்ள அந்த அமைதியைச் சுவைக்க நான் முயற்சி
செய்து கொண்டிருக்கிறேன். உடல்களாகிய இந்தத்
தகர டப்பாக்களும், இன்பம் துன்பம் என்ற மூடக் கனவுகளும் – இவை என்ன? என் கனவுகள் கலைந்து
கொண்டிருக்கின்றன- ஓம் தத் ஸத்.!
அறிவுகடந்த இமைதியை நான் அடைந்து கொண்டிருக்கிறேன்.
அது இன்பமும் அல்ல, துன்பமும் அல்ல, அந்த இரண்டிற்கும் மேலானஒன்று- சென்ற இரண்டு ஆண்டுகளாக
நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மரணத்தின் வாசல் வழியாக வந்தது இந்த நிலையை அடைய
எனக்கு உதவியுள்ளது. இப்போது நான் அந்த அமைதியை. அந்த மோன நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். இப்போது ஒவ்வொன்றையும்
உள்ளது உள்ளபடி, அந்த அமைதி நிலையில், அதனதன் போக்கில், பூரணமாகக் காண்கிறேன். எண்ணற்ற
பிறவிகள், சொர்க்கங்கள், நரகங்கள், - இவை மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பெரிய
பாடம் இது தான். –வேண்டும் என்று கேட்பதற்கோ,
ஆசைப்படுவதற்கோ சொந்த ஆன்மா வைத் தவிர எதுவும் இல்லை- இப்போது தினமும் அதை உணர்ந்து
கொண்டிருக்கிறேன். ஆம், நான் உணர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். நான் முக்தன், தனியானவன்,
தனியானவன், இரண்டற்ற ஒன்றேயானவன் நான்.
...
இந்தக் கடிதத்தின் பின் குறிப்பாக சுவாமிஜி எழுதியுள்ளது
அவரது மிகவுயர்ந்தநிலையை அற்புதமாகக் காட்டுகிறது.
இப்போது நான் உண்மையிலேயே விவேகானந்தனாக இருக்கப்போகிறேன்.
நீ எப்போதாவது தீமையை ஆனந்தமாக அனுபவித்திருக்கிறாயா?ஆ! ஆ! முட்டாள் பெண்ணே. எல்லாம்
நல்லது என்றா சொல்கிறாய்.? பொருளற்ற பேச்சு அது. நல்லவை சில, தீயவை சில. நல்லவற்றை
நான் ஆனந்தமாக அனுபவிக்கிறேன்.அதே போல் தீயவற்றையும் ஆனந்தமாக அனுபவிக்கிறேன். ஏசுவாக
இருந்தேன் நான், யூதாஸாகவும் நானே இருந்தேன். இரண்டும் என் விளையாட்டு , என் வினோதம். தீமையே வா, உனக்கு மங்கலம் உண்டாகட்டும். நன்மையே நீயும் வா, உனக்கும்
மங்கலம் வரட்டும். என் காதுகளுக்கருகில் பிரபஞ்சமே தலை கீழாக வீழ்ந்தாலும் அதனால் எனக்கென்ன?
அறிவு கடந்த அமைதியே நான். அறிவு நமக்கு நன்மையையோ தீமையையோ மட்டும் தான் கொடுக்கிறது. நான் அதற்கும் அப்பால் உள்ளேன். நானே
அமைதி.
..
சான் பிரான்சிஸ்கோவில் சுவாமிஜி ஆற்றிய சொற்பொழிவுகள்
இத்தகைய மிக உயர்ந்த ஆன்மீக நிலையிலிருந்து செய்யப் பட்டவை என்பைதை அந்தச் சொற்பொழிவுகளைப்
படிக்கும்போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் மாறிவரும்
மனநிலைகளைக் கடந்து, அவர் எப்போது வேண்டுமானாலும்
சமாதிநிலையில் ஆழ்ந்து விடக் கூடிய உயர்ந்த நிலையிலேயே எப்போதம் இருந்தார் என்பதை,
அவருடன் வாழ்ந்த பலரது நினைவுக் குறிப்புகள் கூறுகின்றன. அவர் எவ்வளவு நேரம் தூங்குவார்
என்பது பொதவாக யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் மிகக் குறைந்த அளவே தூங்கினார். நள்ளிரவிலும்
அதிகாலைவேளையிலும் நீண்ட நேரம் தியானம் செய்தார். அவர் கண்ட காட்சிகள் என்ன. பெற்ற
அனபவங்கள் என்ன என்பது பற்றி யெல்லாம் அவர் ஒரு போதும் வெளியில் கூறியதில்லை.
.....
சுவாமிஜியின் காட்சி
.....................
இப்படி அகத்தில் எப்போதும் ஆழ்பவராக இருந்தாலும்
அவர் யாரையும் ஒதுக்கவில்லை. எல்லா வித மனிதர்களையும் சந்தித்தார். எல்லோரிடமும் நட்புடன்
பழகினார். எடித் எழுதுகிறார், அவர் எல்லோரையும் நேசித்தார். கருணையின் வடிவம் அவர்.
மனிதர்களுக்கு இடையில் எந்த வேறுபாட்டையும் அவர் காணவில்லை. ஏன், மனிதனுக்கும் மற்ற
உயிரினங்களுக்கும், இடையில் கூட அவர் எந்த வேறுபாட்டையும் காணவில்லை. அவரைப் பொறுத்தவரை
மனிதனும் வாத்தும் ஒன்றே. அவர் அனைத்திலும் கடவுளையே கண்டார். அவரது வாழ்க்கையும் செயல்பாடுகளும்
அவரது அந்தக் காட்சியைப் பிரதிபலிப்பனவாகவே இருந்தன. இதன் மூலம் அவர் ஒரு மாபெரும்
போதனையை வழங்கினார். அது- யாரையும் வெறுக்காதிருத்தல்.
சுவாமிஜி அடிக்கடி கூறுவார், நாம் தவறிலிருந்து உண்மைக்குச்
செல்லவில்லை. மாறாக உண்மையிலிருந்தே உண்மைக்குச்செல்கிறோம்.
நமது காட்சி இப்படி இருக்க வேண்டும். என்ன
செய்கிறார்கள் என்பதற்காக யாரையும் குறை சொல்லக் கூடாது. ஏனெனில் அந்த வேளையில்அவர்கள்
தங்களால் மிகவும் இயன்ற நல்லதையே செய்கிறார்கள். கூரான கத்தி குழந்தையின் கையில் கிடைத்து
விட்டால் அதை அவனிடமிருந்து பிடுங்க முயற்சிக் காதீர்கள். அவனது கையில் ஓர் ஆப்பிளையோ
ஒரு பெரிய பொம்மையையோ கொடுங்கள். கத்தியை அவனே கீழே போட்டு விடுவான். தீயில் கையை வைத்தால்
அது சுடவே செய்யும். நாம் அனுபவத்திலிருந்தே கற்றுக் கொள்கிறோம்.
...
பிடிக்காதவர்கள்
.....................
எடித்தின் நினைவுக் குறிப்பு தொடர்கிறது. சுவாமிஜிக்குப்
பிடிக்காதவர்கள் என்று யாராவது உண்டா? உண்டு, அவர் மனிதர்களை வேறுபடுத்திப் பார்த்தார்.
ஒருவன் நேர்மையானவன், நல்லவன், ஆனால் சில எல்லைக்குள் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்டு
முன்னேற எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பவன். மற்றொருவன் பாவி, தவறுகள் செய்பவன்,
ஆனால் தனது பாவங்களின் மூலமும் தவறுகளின் மூலமும் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொண்டு
முன்னேறுபவன். இந்த இருவரில் சுவாமிஜி இரண்டாமவனை
விரும்பினார். சுவாமிஜிக்குப் பிடிக்காதவர்கள் என்று யாராவது உண்டானால் அது வளவள கொள
கொள மனிதர்கள்! அவர்களால் எந்தப் பயனும் இல்லை என்று அவர் கருதினார். ஏதாவது செய்யுங்கள்” அது தீயதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஏதாவது செய்யுங்கள்!
நல்லவனாய் இரு. நல்லவனாய் இரு. என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் நான் ஏன் நல்லவனாக
இருக்க வேண்டும்? என்று கேட்டார் சுவாமிஜி.
......
அகம் தான் முக்கியம்-
.....................
புறத்தோற்றம், புற அழகு, புறச் செயல்பாடுகள், என்று
புற விஷயங்களுக்கே மேலை நாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.ஆனால் சுவாமிஜி
புற விஷயங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இது பல நேரங்களில் அவர்களைத் திகைக்க வைக்கும், சுவாமிஜியை மகிழச்செய்யும்
அதே வேளையில் அனைவருக்கும் ஒருபடிப்பினையை விட்டுச்செல்லும். ஒரு நாள் சுவாமிஜியும் எடித்தும் ஊறுகாய் வாங்குவதற்காக ஒரு கடைக்குச்சென்றனர்.
அங்கே உப்பு நீர்த்தொட்டியினுள் ஊறுகாய் வைக்கப் பட்டிருந்தது. அதிலிருந்து உறுகாயை
அகப்பையில் எடுத்து,காகிதம் போன்ற மெல்லிய
தட்டுகளில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பார்கள். சுவாமிஜி அதைக் கையில் வைத்திருந்தார்.திரும்பி
வரும்போது உப்பு நீர் அவரது கைவழியாக வழிந்தது.
சிறிதும் தயங்காமல் ஆனந்தமாக அதை நக்கிச் சுவைத்தார் சுவாமிஜி. ஓவென்று அலறினார் எடித்.
பொது இடத்தில் சுவாமிஜி இப்படி நாகரீகமின்றி நடந்து கொண்டது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால் சுவாமிஜி சிறிதும் சலனப்படவில்லை. அமைதியாக,
மேடம், உங்கள் பிரச்சனையே இது தான். வெளியில் எல்லாம் நேர்த்தியாகக் காட்சியளிக்க வேண்டும்
என்று தான் நீங்கள் கவலைப்படுகிறீர்கள். ஆனால் புறம் எப்படி இருக்கிறது என்பது முக்கிய
மல்ல, அகம் தான் முக்கியம்” என்றார்.
.......
ஆன்மீகமா, வயிற்றுவலியா?
..................................
சுவாமிஜியுடன் வாழும் ஒவ்வொரு கணமும் கற்பதற்கு ஏதாவது இருந்து கொண்டே
இருக்கும். நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது. முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு யாராவது
சோகமாக இருந்தால் அவனிடம் ஆன்மீகம் இருக்கவே இருக்காது. ஒரு வேளை வயிற்றுவலி இருக்கலாம்” என்பார் அவர். ஒருநாள் எடித்திடம், மேடம், பரந்த மனம் வேண்டும்.
எப்போதும் இரண்டு வழிகளை வைத்துக் கொள்ளுங்கள். ஆன்மீகத்தின் உயர்நிலைகளில் இருக்கும்போது நான், சிவோஹம், சிவோஹம், நானே அவன், நானே அவன்” என்கிறேன். வயிற்று வலியால் அவதிப்படும் போது, அம்மா, என்னிடம்
இரக்கம் காட்டு” என்கிறேன் என்றார்.
சுவாமிஜி சற்று பருமனான உடல் கொண்டவர். ஒரு நாள்
பருமனான சில துறவிகளின் ஓவியம் ஒன்றைப் பார்த்துவிட்டு,
பாருங்கள், ஆன்மீக வாதிகள் எப்போதும் குண்டாகவே இருக்கிறார்கள், நானும் அப்படித்தானே.
என்று கூறி சிரித்தார்.
.......
கண்டிப்புகள்
..................................
தம்முடன் வாழ்பவர்களின் வாழ்க்கை, அவர்களது பிரச்சனைகள்
அனைத்தையும் உன்னிப்பாகக் கவனிப்பதுடன் பல விஷயங்களை அவர்களிடம் கேட்டும் தெரிந்து
கொள்வார் சுவாமிஜி. பிறகு இந்தியாவில் குடும்ப வாழ்க்கைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைப்பார். உரையாடல்கள், பேட்டிகள் முதலிய
வற்றின்போது மிக மென்மையாகவே பேசுவார். பொதுவாக அவர் மிக மெல்லிய குரலிலேயே பேசினார்-
ஒரே யொரு வேளையைத் தவிர- யாரையாவது கண்டிக்கும் வேளையைத் தவிர.
கண்டிப்பு என்றால் பெரிதாக எதுவும் இருக்காது. என்னுடன் வேலை செய்ய தேவி முட்டாள்களையே
தேர்ந்தெடுத்திருக்கிறாள். முட்டாள்களுடன் அல்லவா நான் வாழ வேண்டியிருக்கிறது- இவை
தான் அவர் பொதுவாகப் பயன்படுத்துகின்ற கடுஞ்சொற்கள்! செய்ய வேண்டியவற்றை யாராவது செய்யத் தவறும் போது, நீ நல்லது செய்யத்தான் நினைக்கிறாய்,
ஆனால் செய்யும் போது தான் முட்டாளாகி விடுகிறாய்” என்பார். சுவாமிஜி யிடம் ஏச்சு
வாங்கியதில் முன்னணியில் இருப்பவர்கள் மீட்சகோதரிகள், அவர்களிலும் மிசஸ் ஹேன்ஸ்ப்ரோ
! ஒரு நாள் அவருக்கு விருந்தே கிடைத்தது. நீ ஒரு வடிகட்டின முட்டாள், உன்னைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் அது
இது தான்- மூளை என்ற ஒரு பொருளே இல்லாத முட்டாள்” என்று தொடர்ந்தது. அந்த வேளையில் மிசஸ் ஆஸ்பினால் உள்ளே வந்தார்.
அவரைக் கண்டதும், சுவாமிஜி திட்டுவதை நிறுத்தினார்.
உடனே ஹேன்ஸ்ப்ரோ, சுவாமிஜி, அவர் வந்ததை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். உங்கள் ஆத்திரம்
தீரவில்லை என்றால் திட்டி முடித்துவிடுங்கள்” என்றார்.
...
சுவாமிஜியின்
கோபத்தைப் பற்றி ஹேன்ஸ்ப்ரோ என்ன நினைத்தார்?
ஒரு போதும் என்னை அவரது கோபம் காயப் படுத்தியதில்லை. சில வேளைகளில் எனக்கும் கோபம் வரும்.
நான் அறையை விட்டு வெளியே போய் விடுவேன்” அவர் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருப்பார்” என்றார் ஹேன்ஸ்ப்ரோ.
தாம் திட்டுவதைப் பற்றி சுவாமிஜி என்ன நினைத்தார்?
நான் யாரை அதிகம் நேசிக்கிறேனோ அவர்களை அதிகம் திட்டுகிறேன். அதனால் தான் திட்டிய பிறகு
நான் மன்னிப்புக் கேட்பதில்லை” என்பார் அவர். மன்னிப்பு கேட்காவிட்டாலும்
மறுகணமே தாம் அவர்களிடம் கொண்டுள்ள அன்பை உணர்த்தும் விதமாக நடந்து கொள்வார்.
அதே வேளையில் அவர்கள், ஒவ்வொருவரும்
செய்கின்ற பணிகளை மிகவும் புகழ்வார். சிறிய காரியங்களைக் கூட பெரிதாகப் போற்றுவார்.
இதில் ஒரு போதும் அவர் தவறியதே இல்லை”. மூன்று சகோதரிகளுள் இரண்டாமவரான ஹேன்ஸ்ப்ரோ இங்கே
இருக்கிறார். எனக்கு உதவி செய்ய அவர் உழைக்கிறார். உழைக்கிறார். அப்படி உழைக்கிறார்.
அவர்களின் உள்ளங்களில் இறைவனின் அருளாசிகள்
நிறையட்டும். அந்த மூன்று சகோதரிகளும் மூன்று தேவதைகள் அல்லவா!ஏதோ இங்குமங்குமாக அத்தகையோரைக் காண்பது இந்த வாழ்க்கையின்
மூடத்தனங்களுக்கெல்லாம் ஒரு பரிகாரமாகிறது” என்று மீட் சகோதரிகளைப் பற்றி
எழுதுகிறார் சுவாமிஜி.
...
ஹேன்ஸ்ப்ரோ
தமது மகளான டோரதியிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தார்.
சுவாமிஜி சில நேரங்களில் இதைப் பற்றி ஹேன்ஸ்ப்ரோவை எச்சரிப்பதும் உண்டு. சுவாமிஜியுடன்
சான்பிரான்சிஸ்கோ வில் தங்கி அவருக்கான உதவிகளைச்செய் து வந்த நாட்களில் பல முறை
ஹேன்ஸ்ப்ரோ பாசடேனாவில் தமது வீட்டிற்குச் சென்று மகளைக் காண வேண்டும் என்று
நினைத்தார். ஒரு நாள் சூட்கேஸ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். திடீரென்று
ஒரு குரல், நீ போக வேண்டாம். அதற்கு முயற்சி
செய்யாதே” என்று கேட்டது. உடனே எங்கிருந்தோ
ஹேன்ஸ்ப் ரோவிற்கு அப்படியொரு களைப்பு வந்தது. ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாமல் பெட்டிகளை அங்கேயே வைத்துவிட்டு அமர்ந்து
விட்டார்! இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரைத் தடுத்தது சுவாமிஜியின் குரல் அல்ல,
அவர் எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றார். அந்தக் குரல் யாருடையதென்று எனக்குத் தெரியவில்லை.
என்று பின்னாளில் ஹேன்ஸ்ப்ரோ கூறினார்.
......
டிராம் யாத்திரை
.....................
காலை வகுப்புகள் இல்லாத நாட்களில் சுவாமிஜி ஹேன்ஸ்ப்ரோவுடன்
வெளியே செல்வார். கடைகள், சந்தை,பொது இடங்கள் என்று எல்லா இடங்களுக்கும் செல்வதில்
அவர் ஆர்வம் காட்டினார். டிராம்களில் செல்லும்போது நேராக அமர்வார்.கைத்தடியை முன்னால்
நட்டு வைத்து, அதன் மீது இரு உள்ளங்கைகளையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்துக்கொள்வார்.
பயணங்களின் போது சில வேளைகளில் மிக மெல்லிய குரலில் பாடுவார். பூங்கா, கண்காட்சி, பறவைகள்
சரணாலயம் என்று எல்லா இடங்களையும் பார்த்தார். ரசித்தார். ஆனால் சில காட்சிகளைவிட மனிதனும்
அவனது கைவண்ணங்களுமே அவரை மிகவும் கவர்ந்தன. பல இடங்களை அவர் சென்று பார்த்தாலும்,
இந்தஇடத்தைப் பார்த்தேயாக வேண்டும் என்ற ஆசையுடன் அவர் எந்த இடத்திற்கும்் சென்றதில்லை.
எல்லா இடங்களுக்கும் சென்றார். ஆனால் எந்த
இடமும் அவருக்குச் சொந்தமில்லை. யாரும் அவருக்கு அன்னியரும் இல்லை. எந்த இடமானாலும் சென்று பார்க்கும்போது, இந்த இடம்,
அந்த இடம், இந்தப் பொருள், அந்தப் பொருள் என்று தனித்தனியாகப் பார்ப்பதில் அவர் ஆர்வம்
காட்ட மாட்டார். மொத்தமாக அந்த இடங்கள் வழியாகஒரு முறை சென்று வருவார். ஒரு பறவை அருகிலுள்ள எதைப் பற்றியும் கவலைப் படாமல் பறந்து செல்வதைப்போல்
அது இருக்கும்”என்று எழுதுகிறார் ஹேன்ஸ்ப்ரோ.
.....
கிழவரைப்போல்!
................
ஹேன்ஸ்ப்ரோவின்
குறிப்புகள் தரும் மற்றொரு செய்தியையும் இங்கே காண்போம். அது சுவாமிஜியின் உயர்
நிலை! ஆன்மீக வாழ்வில் உணவின் முக்கியத்துவம் பற்றி சுவாமிஜி பல சொற்பொழிவுகளில் கூறியதுண்டு.
தூய வாழ்க்கை இல்லா தவர்கள் தொட்ட உணவை ஸ்ரீராமகிருஷ்ணர்மறுப்பது பற்றி ஏற்கனவே கண்டோம்.
சுவாமிஜியும் அத்தகைய நிலையிலேயே இருந்ததை ஹேன்ஸ்ப்ரோவின் குறிப்புகள் காட்டுகின்றன.
ஒரு முறை சுவாமிஜிக்கு சார்லஸ் பி. நீல்சன் என்பவர்
ஒரு ஹோட்டலில் விருந்து அளித்தார். மிசஸ் ஹேன்ஸ்ப்ரோ மற்றும் ஓரிருவர் உடன் சென்றனர். அனைவரும் சாப்பாட்டிற்காக
அ மர்ந்தனர். சமையல் காரன் வந்து அனைவரையும் வணங்கி விட்டு பரிமாறத் தொடங்கினான். அவனைப்
பார்த்ததுமே சுவாமிஜிக்கு அவன் தொட்ட எதையும் சாப்பிட முடியாது என்று தோன்றியது. அவரால்
எதையும் சாப்பிட முடியவில்லை. விருந்து அளித்தவருக்கு மிகவும் ஏமாற்றமாயிற்று. யாருக்கும்
எதுவும் புரியவில்லை. அந்தச் சமையல்காரன் நல்லவன் அல்ல. அதனால் தான் தம்மால் உணவை உட்கொள்ள
முடியாமல் போயிற்று என்று பின்னாளில் சுவாமிஜி கூறினார்.
மற்றொரு முறையும் இவே்வாறே நடந்தது. சுவாமிஜியும்
ஹேன்ஸ்ப்ரோவும் பிரெஞ்சு ஹோட்டல் ஒன்றிற்றுச் சென்றிருந்தனர். எறால் வறுவல் பரிமாறப்பட்டது.
அங்கும் சுவாமிஜி சாப்பிட தயங்கினார். பின்னர் நடந்ததுபற்றி உடன் சென்றிருந்த மிசஸ்
ஹேன்ஸ்ப்ரோ கூறினார். ஒருவாறாக சுவாமிஜி சாப்பிட்டு முடித்தார். ஆனால் வீட்டிற்கு வந்ததும்
வாந்தி எடுத்தார்,உடனே நான், அந்தவறுவலே அப்படித்தான் , ஜீரணிக்கக் கடினமானது” என்றேன். அதற்கு சுவாமிஜி, இல்லை, சமைத்தவன் நல்லவன் அல்ல.
நானும் வரவர அந்தக் கிழவரைப்போல் ஆகி வருகிறேன்.
இப்படியே போனால் நான் கண்ணாடிக் கூண்டிற்குள்
தான் வாழவேண்டும் போலிருக்கிறது” என்றார். அவர் ”கிழவர்” என்று குறிப்பிட்டது ஸ்ரீராமகிருஷ்ணரைத்தான். தூயவர்கள் அல்லாதவர்கள்
தொட்ட எதையும் அவரால் சாப்பிட முடியாது. அவரது
உடம்பே அதனை ஏற்றுக் கொள்ளாது, என்று விளக்குகிறார் மேரி தூயி பர்க்.
No comments:
Post a Comment