சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-34
🌸
ரிஜ்லிமேனரில்
............
சுவாமிஜி
1899 ஆகஸ்ட் 28-ஆம் நாள் நியூயார்க்கை அடைந்தார். குறித்த நேரத்திற்குச் சில மணிநேரத்திற்கு
முன்பே கப்பல் துறைமுகத்தை அடைந்துவிட்டதால்
அவரை வரவேற்க ஓரிருவர் மட்டுமே இருந்தனர். அபேதானந்தர் ஊரில் இல்லாததால் அவரும் வரவில்லை.
இந்தியாவிலிருந்து மெக்லவுடிற்காக ஒரு குப்பியில் சட்னியை கொண்டு வந்திருந்தார் சுவாமிஜி.
அதனைக் கையில் பிடித்தவாறே கப்பலிலிருந்து இறங்கினார் அவர்.
நியூயார்க்கிலிருந்து
சுமார் 90 மைல் தொலைவில் அமைந்திருந்த அழகிய வீடான ரிஜ்லிமேனரில் சுவாமிஜியும் துரியானந்தரும்
தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது ஒரு பெரிய வீடு. சுவாமிஜிக்கு ஏற்கனவே
அறிமுகமான லெக்கட்டின் வீடு அது. வீட்டின்
முக்கியப் பகுதியிலிருந்து சற்று தொலைவில்
உள்ள ஒரு வீடு சுவாமிகள் இருவருக்கும் ஒதுக்கப் பட்டிருந்தது. சுவாமிஜி தங்கியதன் காரணமாக
அது, சுவாமிஜியின் வீடு” என்று அழைக்கப் படலாயிற்று. ஐந்து
அறைகளும் மாடியும் கொண்ட வீடு அது.
துரியானந்தரின்
பக்தி-
துரியானந்தர்
சுவாமிஜியின் சகோதரச் சீடராக இருந்தாலும் அவர் சுவாமிஜியிடம் கொண்டிருந்த பக்தி அலாதியானது.
அவர் சுவாமிஜியின் முன்பு நடந்து கொள்வதைப் பார்த்தால் சுவாமிஜியின் சீடர் என்றே தோன்றும்.
ரிஜ்லி மேனரில் அனைவரும் அவரவருக்குரிய அறைகளில் தங்க வைக்கப் பட்ட பிறகு, ஏற்பாடுகள்
சரியாக உள்ளதா என்பதைப் பார்ப்பதற்காக மிசஸ் லெக்கட் ஒவ்வோர் அறையாகச் சென்றார். துரியானந்தரின்
அறையில் சென்று பார்த்தால் அவர் தமது படுக்கையைத் தரையில் விரித்திருந்தார். ”ஏன் சுவாமி,
கட்டில் சரியில்லையா? என்று அவரிடம் கேட்டார். அதற்குத் துரியானந்தர், கட்டில் சரியாகத்
தான் இருக்கிறது. ஆனால் சுவாமிஜி படுக்கின்ற சம உயரத்தில் நானும் படுக்க முடியுமா?
அதனால் தான் படுக்கையைக்கீழே விரித்திருக்கிறேன்” என்று கூறிவிட்டார். மிகுந்த
ஆச்சரியத்திற்கு உள்ளானார் மிசஸ் லெக்கட். அவர் துரியானந்தரை சுவாமிஜியின் சீடர் என்றே
நினைத்தார். சாராவிற்கு அவர் எழுதிய கடிதத்தில், ”சுவாமிஜிக்கு இந்த ஓய்வு நல்ல அமைதியைத்
தருவதாக உள்ளது. அவர் தமது சீடருடன் ( துரியானந்தர்) தனியாக இருப்பதையே விரும்புகிறார்.
அந்தச் சீடரும் சுவாமிஜியின் ஒவ்வோர் அசைவையும் தேவைகளையும் கவனித்து, புரிந்து கொண்டு காட்டுகின்ற பக்தி வியப்பூட்டுவதாக
உள்ளது” என்று எழுதுகிறார்.
அன்பும் நம்பிக்கையும் ஒரு பக்கம் இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும்,
தங்கள் ஆற்றல் முழுவதையும் வெளியே கொண்டு வந்து
செயலில் ஈடுபட வேண்டும் என்பது சுவாமிஜியின் ஆர்வமாக இருந்தது. யாரும் தம்மைச் சார்ந்திருப்பதை
அவர் விரும்பவில்லை. துரியானந்தரையும் அவ்வாறே காண விரும்பினார் அவர். அதற்காகத் துரியானந்தருக்கு ஓர் அதிர்ச்சி
வைத்தியம் அளித்தார் அவர். துரியானந்தர் கூறுகிறார்.
அமெரிக்காவிற்குப் போயிருந்த வேளை, ரிஜ்லிமேனரில்
தங்கியிருந்தோம். திடீரென்று ஒரு நாள் சுவாமிஜி என்னை அழைத்து, என்னிடம் காசு பணம்
அதிகம் கிடையாது. சான் பிரான்ஸிஸ்கோ சென்று
நண்பர்களுடன் தங்கப் போகிறேன். இனி, உன் பாதையைப் பார்த்துக்கொள்” என்றார். நான் சொந்தக் காலில் நிற்கப் பழகுவதற்காக அவர் ஒரு
வாய்ப்புத் தருகிறார்” என்பதைப் புரிந்து கொள்ளாமல்
நான் அவரிடம் கோபம் கொண்டேன். ஆனால் எதையும் வெளிக் காட்டாமல் ”நல்ல காரியம்” என்று மட்டும் கூறினேன். எங்கே போவாய்? என்று கேட்டார் சுவாமிஜி.
அது பற்றி நான் யோசித்திருக்கவில்லை. மான்ட் கிளேயரைச்சேர்ந்த மிசஸ் ஹுலர் என்னை அழைத்திருந்தது.
திடீரென்று நினைவுக்கு வந்தது. உடனே, மிசஸ் ஹுலரிடம் போவேன்” என்றேன். நல்லது, அங்கே ஒரு மடம்-கிடம் ஏதாவது ஆரம்பி” என்றார் சுவாமிஜி. என்னுள்ளே கோபம் பொங்கிக் கொண்டிருந்தது.
அவர் மடம் ஆரம்பிக்குமாறு கூறியதும் சட்டென்று, மடம்- கிடம் எதுவும் என்னால் ஆரம்பிக்க
முடியாது. போய் வெறுமனே தங்குவேன்” என்று ஆத்திரத்துடன் கூறினேன்.
சுவாமிஜி புன்னகையுடன், அதைத்தான் மடம் ஆரம்பித்தல் என்பார்கள். நீங்கள் எங்கே தங்குவீர்களோ
அங்கே மடம் தானாக உருவாகிவிடும்” என்றார். சகோதரத் துறவியரிடம்
அவருக்கு அவ்வளவு நம்பிக்கையும் அன்பும் இருந்தது.
ரிஜ்லிமேனர் நாட்கள்
சுவாமிஜி ரிஜ்லிமேனரில் சுமார் இரண்டரை மாதங்கள்
தங்கினார். அந்த நாட்கள் சுவாமிஜிக்கு நல்ல ஓய்வை அளித்தன. நண்பர்களும் தெரிந்தவர்களுமாகப்
பலர் வந்து சுவாமிஜியைச் சந்தித்தனர். அவரும் அவர்களுடன் நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தார். அபேதானந்தர் வந்து
சுவாமிஜியுடன் சுமார் பத்து நாட்கள் தங்கினார். நியூயார்க்கில் மடத்திற்கென்று சொந்தமாக ஒரு கட்டிடமும் இடமும்
அமைந்தது பற்றி அவர் சுவாமிஜியிடம் தெரிவித்தார். சுவாமிஜி மிகவும் மகிழ்ந்தார். இங்கிலாந்தில்
தங்கிவிட்ட நிவேதிதை தமது தங்கையின் திருமணத்திற்குப் பிறகு வந்து சுவாமிஜியுடன் சேர்ந்து
கொண்டார். தமது இந்தியப் பபணிகளுக்காக இங்கிலாந்தில்
நன்கொடை திரட்ட அவர் திட்ட மிட்டிருந்தார். ஆனால் அவரது திட்டத்திற்கு இங்கிலாந்தில்
பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஹேல் சகோதரிகள்,
சாராஎன்று பலரும் சுவாமிஜியைச் சந்தித்தனர்.
லெக்கட் தம்பதியர் சுவாமிஜியிடம் மிகுந்த அன்பு காட்டினர். மெக்லவுட் சுவாமிஜியிடம்
கொண்டிருந்த இடுபாடு அலாதியானது.
சுவாமிஜியின் ரிஜ்லிமேனர் நாட்கள் மிகவும் சிறப்பாக
அமைந்தன. சிறந்த டாக்டர் ஒருவர் வந்து அவருக்குச் சிகிச்சை அளித்தார். இதனால் உடல்நிலையும்
வெகுவாகத் தேறலாயிற்று. லெக்கட் தம்பதியினரின் குடும்ப டாக்டர் வந்து என்னைக் கவனித்து
க் கொள்கிறார். எனக்கு இதய நோய் எதுவும் இல்லை. சிறிது நரம்புத் தளர்ச்சியே உள்ளது,
அதுவும் முறையான உணவினால் சரியாகி விடும் என்று அவர் கருதுகிறார். என்று எழுதுகிறார்
சுவாமிஜி.
ரிஜ்லிமேனரில் எப்போதும் ஒரு புனிதம் கலந்த அமைதி
நிலவியது. அத்துடன் படிப்பு, பேச்சு. நகைச்சுவை என்று நாட்கள் கழிந்தன. தினமும் அதிகாலையில்
சுவாமிஜி வீட்டைச்சுற்றியுள்ள பெரிய தோட்டத்தில்
நடப்பார். அங்கே ஓர் ஓரத்தில் நின்றிருந்த ஓக் மரத்தின் கீழ் அமர்ந்துதியானம் செய்வார்.
எழுந்து மீண்டும் நடப்பார். வழியில் இரண்டு முதல்
ஆறு வயதான மூன்று குழந்தைகளுடன் சிறிது
நேரம் விளையாடுவார். அவர் களுக்குக் காசு கொடுப்பார். சிலவேளைகளில் டென்னிஸ் போன்ற
விளையாட்டுகளை விளையாடுவார். சில மாலைகளில் அருகிலுள்ள மலைக்குச் செல்வார் அல்லது புல்வெளிகள்
மீது நடந்து மகிழ்வார். சாப்பாட்டு நேரம், சில வேளைகளில் நகைச்சுவையும் கொண்டாட்டமுமாக இருக்கும். சிலவேளைகளிலோ சுவாமிஜி மிக உயர்ந்த விஷயங்களைக் கூறி மற்றவர்களைப் பரவசப்படுத்துவார்.
சாக்லெட் ஐஸ்கிரீம் அவருக்கு மிகவும் பிடிக்கும். மாலைவேளைகளில் அனைவரும் சுவாமிஜியின்
முன்பு கூடுவார்கள். குளிருக்கு இதமாக அடுப்பு எரிந்து கொண்டிருக்கும். வாயு விளக்குகளிலிருந்து
மெல்லொளி பரவிக் கொண்டிருக்கும். சுவாமிஜி பேசுவார். அந்தச் சூழ்நிலையே மாறிவிடும்.அனைத்தும்
புனிதத்தில், அமைதியில் மிதப்பது போல் இருக்கும்.
இந்த நாட்களில்
தான் சுவாமிஜி நிவேதிதைக்காக ”அமைதி” என்ற கவிதையை எழுதினார். இங்கிலாந்தில் தமது இந்தியப் பணிகளுக்கு அவ்வளவு ஆதரவு கிடைக்காத நிலையில்
அமெரிக்காவில் சிறிது பணம் திரட்ட முயன்றார்
நிவேதிதை. அதற்கு முன்பாக சில நாட்கள் தனிமையில் தியான வாழ்வில் ஈடுபட விரும்பினார்
அவர். ஒரு சன்னியாசிக்குரிய ஆடையை அணிய விரும்புவதாகவும் தெரிவித்தார். அதற்கு மகிழ்ச்சியுடன்
அனுமதி அளித்த சுவாமிஜி அன்று மாலையில் இந்தக் கவிதையை நிவேதிதைக்கு அளித்தார்.
சில்லிட்ட குளிர் மாலை வேளைகளில் நெருப்பின் அருகில்
குளிர் காய்ந்தபடி சுவாமிஜியின் பேச்சை க்கேட்பது
ஓர் இனிய அனுபவம்.பல விஷயங்களை அவர் கூறுவார். இடையில் யாராவது, சுவாமிஜி, நீங்கள்
கூறும் இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள
இயலாது என்பார்கள். அப்படியானால் அது உங்களுக்கு உரியது அல்ல” என்பார் சுவாமிஜி. பிரமாதம்! இந்தக் கருத்து தான் உங்கள் உண்மைக் கருத்தாக எனக்குத்தோன்றுகிறது என்பார்.
ஆ! அப்படியானால் அந்தக் கருத்து உங்களுக்கு
உரியது. என்பார் சுவாமிஜி. எதையும் யாரிடமும்
அவர் திணிப்பதில்லை.
ஒரு நாள் மாலை வேளையில் பத்துப் பன்னிரண்டு பேர்
சவாமிஜி பேசுவதைக்கேட்டுக் கொண்டிருந்தார்கள். தடையின்றி கம்பீரமாகப்பேசிக் கொண்டிருந்தவரின்
குரல் திடீரென்று மென்மையாகியது. படிப்படியாக
மெலிதாகி எங்கோ தொலைதூரத்தில் ஒலிப்பது போல் கேட்டது. அங்கிருந்த அனைவரும் வேறு ஏதோ
ஓர் உலகிற்கு எடுத்துச்செல்லப் பட்டது போல் உணர்ந்தார்கள். சுவாமிஜி பேச்சை நிறுத்தினார்.
யாரும் அந்த உலகிலிருந்து மீண்டு வர விரும்பாதது போல் இருந்தது. சிறிது நேரத்திற்குப்
பிறகு எல்லோரும் எழுந்தனர். ஆனாலும் அந்த அமைதியுலகின் தாக்கத்திலிருந்து விடுபடாத நிலையில் இருந்த அவர்கள் ஒருவருக்கொருவர்
வணக்கம் கூட சொல்லாமல் பிரிந்தார்கள். சிறிது
நேரத்திற்குப் பிறகு மிசஸ் லெக்கட் அன்றைய பேச்சில் கலந்துகொண்ட ஒருவரின் அறைக்குச்செல்ல
நேர்ந்தது. அந்த நபர் அவ்வளவாகக் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் மிசஸ் ரெக்கட்
சென்றபோது அவர் கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். காரணம் கேட்டதற்கு அவர் கூறினார். அவர் அழிவற்ற வாழ்க்கையை எனக்குத் தந்து
விட்டார். அவர்பேசுவதை மீண்டும் கேட்பதற்கு
நான் விரும்பவில்லை.
சுவாமிஜி சிகாகோ சர்வமத மகாசபையில் பேசிய போது கேட்ட
ஒருவரின் அனுபவமும் இவ்வாறே இருந்தது. அவர் ஹேரியட் மன்றோ, ஒரு கவிஞர். சுவாமிஜியின்
சொற்பொழிவைக்கேட்ட பிறகு அவர் எழுதினார்.
முற்றிலும் நிறைவான, முற்றிலும் பூரணமான சில கணங்கள்
வாழ்வின் சிலநேரங்களில் வாய்க்கின்றன. ஒரு முறை மட்டுமே வந்து செல்லும் அவற்றை மீண்டும் அனுபவிக்க இயலாது. அதற்கு
முயற்சி செய்வதும் வீண். அதனால் தான் விவேகானந்தர்
பேசுவதை ஒரு முறை கேட்ட பிறகு, அவர் நகரம் முழுவதும் பல இடங்களில்பேசி பலரைக் கவர்ந்து கொண்டிருந்தாலும், நான் அவர் பேசுவதைக்கேட்கச்
செல்லவில்லை.
ரிஜ்லிமேனரில் இருந்தவர்களில் ஒருவர் மிஸ் ஸ்டம்.
அவர் ஓர் ஓவியர். ஒருநாள் சுவாமிஜி அவரிடம், வெறுமனே அமர்ந்து ஏதேதோ நினைத்துக்கொண்டிருப்பதை
விட ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட விரும்புகிறேன். நீங்கள் ஏன் எனக்கு ஓவியம் வரைவதற்குக் கற்றுத் தரக் கூடாது? என்று கேட்டார்.
ஸ்டம் அதற்கு இசைந்தார். தேவையான பொருட்கள் வாங்கப் பட்டன. பயிற்சிகளைத் தொடங்குவதற்கான
நாளில் குறித்த நேரத்தில் சுவாமிஜி சென்றார். கையில் ஒரு நல்ல சிவந்த ஆப்பிளையும் எடுத்துச்
சென்றார். பணிவுடன் தலை வணங்கியபடி அதனை ஸ்டம்மிடம் குரு தட்சிணையாகக்கொடுத்தார் சுவாமிஜி.
ஸ்டம்மிற்கு எதுவும் புரியவில்லை. காரணம் கேட்டபோது சுவாமிஜி, நான் உங்கள் மாணவன்,
பாடங்கள் பலனளிப்பதற்காக இதனை தட்சிணையாக உங்களுக்குத் தருகிறேன்” என்றார். மிக விரைவாக, சிறப்பாக ஓவியங்கள் தீட்டத் தொடங்கினார்
அவர். ஸ்டம் எழுதுகிறார்.
எத்தகைய மாணவர் அவர்! எதையும் ஒரு முறை சொன்னால்போதும்,
அப்படியே பிடித்துக்கொள்வார். அவரது மன ஒருமைப்பாடும் நினைவாற்றலும் அபாரமானவை. அவர்
வரைகின்ற ஓவியங்கள், ஆரம்பநிலையிலுள்ள மாணவர் ஒருவர் வரைந்தது என்று சொல்ல முடியாத
அளவிற்குச் சிறப்பாக இருந்தன. நான்காம் பாடம்
படிக்கத் தொடங்கியபோதே, ஒருவரைப் பார்த்து ஓவியம் வரையும் அளவிற்கு சுவாமிஜி தேர்ச்சி
பெற்றார். துரியானந்தர் ஒரு சிலைபோல் அமர்ந்திருக்க அவரைப்பார்த்து வரைந்தார் அவர்.
நிவேதிதையும் வரைந்தார். தம்மால் ஓவியம் வரையமுடியும் என்பதில் மிகவும் பெருமையும் கொண்டார் சுவாமிஜி.
தெய்வ மனிதர்
-
அக்டோபர் ஆரம்பத்தில் மெக்லவுடின் சகோதரர் லாஸ்ஏஞ்ஜல்சில் நோயுற்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவரைக் காணக்
கிளம்பினார் மெக்லவுட். அவர் வண்டியில் ஏறும்போது சுவாமிஜி சென்று சில சம்ஸ்கிருத மந்திரங்களைக்கூறி
அவரை ஆசீர்வதித்தார். பிறகு, ஏதாவது வகுப்புகளுக்கு ஏற்பாடு செய், அப்போது நான் வருகிறேன்” என்றார். மெக்லவுட் சென்று தம் சகோதரரைக்கண்டார். அவரது நிலைமை
மிகவும் கவலைக் கிடமாக இருந்தது. அவர் மிசஸ் பிளாஜட் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார்.
மெக்லவுட் தன் சகோதரரின் அருகில் அமர்ந்து அவருக்கு இதமாகப்பேசிக் கொண்டிருந்தபோது தற்செயலாகச்
சுவரைப் பார்த்தார். அங்கே சுவாமிஜியின் பெரிய படம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.
மெக்லவுட்டிற்கு இது ஓர் இன்ப அதிர்ச்சியாக
இருந்தது. பிளாஜட்டிடம் கேட்டபோது அவர், சுவாமிஜியின் முதல் சிகாகோ சொற்பொழிவைக்கேட்டு
மெய்மறந்தவர்களுள் நானும் ஒருத்தி. ஓ, எத்தகைய மனிதர் அவர்! கடவுளே பூமியில் வந்து
அவராக உலவினார் என்றுதான் சொல்ல வேண்டும். தெய்வ மனிதர் அவர். என்றார் அவர். உடனே மெக்லவுட் அவரைத் தமக்குத் தெரியும் என்றும், தற்போது
அவர் தமது வீட்டிலேயே இருக்கிறார் என்று கூறியபோது பிளாஜட் மிகவும் மகிழ்ந்தார். விரைவில்
சுவாமிஜி அங்கே வருவார். ஒருவேளை பிளாஜட்டின் வீட்டிலேயே அவர் தங்கவும் வாய்ப்பு உண்டு என்று மெக்லவுட் தெரிவித்தபோது
அவரது மகிழ்ச்சி பன்மடங்காகியது.
மூன்று வாரங்களில் மெக்லவுடின் சகோதரர் இறந்தார்.
ரிஜ்லிமேனரிலிருந்து மெக்லவுட் சென்றபிறகு, மற்ற
ஓரிருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனால் சுவாமிஜி எப்போதும் போலவே நகைச்சுவையும்
களிப்புமாக நாட்களைக் கழித்தார். ஆனால் அவருக்கு
மறுபக்கம் ஒன்று இருந்தது. அதிர்ச்சிகளை அவர்
சந்திக்க வேண்டியிருந்தது. துயரங்கள் அவருக்கும் இருந்தன. ஆன்மீகப்பேருணர்வு அனுபவங்கள்
ஒருவரது மனத்தையும் உடம்பையும் மாற்றி அமைக்கின்றன. அவரது உடம்பும் மனமும் மிக மிக
மென்மையானவை ஆகின்றன. மனித ஆனந்தங்களைவிட மேலான
தெய்வ ஆனந்தங்களை அனுபவிப்பதற்கு ஏற்ற வகையில் மாறி அமைகின்றன. ஆனால் உயர் இன்பங்களை
அனுபவிக்கின்ற அதே மனம் தான் துன்பங்களையும் அனுபவிக்கிறது.அவர்கள் அனுபவிக்கின்ற இன்பங்களின்
பரிமாணத்தை நாம் அறிய முடியாதது போலவே அவர்கள் அனுபவித்த துன்பத்தையும் நாம் உணர இயலாது.
சுவாமிஜியும் துன்பங்களில் துடிப்பதுண்டு.
ஆனால் அவை பிறர் அறியாவண்ணம் மறைத்து விடுவார். இருப்பினும் மிக நெருக்கமானவர்களிடம் அவர் தமது மனத்துயரைக்
கூறியதுண்டு. நிவேதிதை எழுதுகிறார்.
இந்தியப் பணிகள் ஏற்படுத்திய பிரச்சனைகள், ஸ்டர்டியால்
எழுந்த கவலை, லண்டன் பணிகளின் பின்னடைவு என்று பல விஷயங்கள் அவர் முன்பு எழுந்தன. எதுவும்
அவரைப் பாதிக்கவில்லை. அவர் ஒரு துறவியாக, முற்றிலும் அவற்றைக் கடந்த நிலையிலேயே இருந்தார்.
ஆனால் தனி நபர்கள் அவரிடம் கொண்ட உறவுகளில்
பிணக்கம் ஏற்பட்டபோது அவர் துடித்தார். நெருங்கிய வர்கள் பிரிந்தபோது துவண்டார். அவர்கள் ஏமாற்றியபோது தவித்தார். எனது பணிகளைப் பொறுத்தவரை கடவுள் என்னுடன் இருக்கிறார்,
வழி காட்டுகிறார். என்னைப் பாதுகாக்கிறார். ஆனால் என் சொந்த வாழ்விலோ எல்லாம் தகர்ந்து
தவிடு பொடியாகி விட்டன” என்று கூறினார் அவர். வியாழன்
மாலையில் நானும் சாராவும் பேசிக்கொண்டிருந்த
போது அவர் எங்களுடன் வந்து அமர்ந்து தமது துயரங்களை எல்லாம் தெரிவித்தார். அதன் பிறகு என் அறைக்கு வந்தபோது
சாராவின் கண்கள் குளமாகியிருந்தன. ஒரு மணிநேரம்
நானும் சாராவும் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு , ”அவரது மனத்தில் அமைதி நிலவ நாமும் பிரார்த்திப்போம்” என்றுகூறினார்.
மறுநாள்
சுவாமிஜியிடம் துயரத்தின் சாயலே இல்லை. அவர் தெம்புடன் காணப்பட்டார். அதற்கு அடுத்த நாள் மீண்டும் தமது துயரங்களை என்னிடம் தெரிவித்தார்.
சிறிது நேரத்திற்கு என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. நான் எனது அறைக்கு ஓடிச்சென்று
அமர்ந்து அழத்தொடங்கினேன். என்னைத் தொடர்ந்து வந்த சுவாமிஜி அறைவாசலில் நின்றபடி மீண்டும் கூறினார். உலகை வெறுத்து ஏன்
ஓடினார்கள் என்பதை இப்போது புரிந்து கொள்கிறேன்”. பணம், புகழ் இவற்றை வெறுக்க வேண்டும் என்ற பொருள்
கொண்ட சுலோகங்களை வாழ்நாள் முழுவதும் ஓதி வந்திருக்கிறேன். ஆனால் அதன் பொருள் என்ன
என்பதை இப்போது தான் புரிந்து கொள்கிறேன். இனியும் என்னால் தாங்க இயலாது.ஓ! நான் இப்போது எங்கு வந்து சேர்ந்து விட்டேன்? பிறகு திடீரென்று
என்னை நோக்கித் திரும்பினார். அவரது முகத்தில் சோகமும் வேதனையும் நம்பிக்கையும் மண்டிக்கிடந்தன.
பிறகு, எனவே ஸ்ரீராமகிருஷ்ணா! உம்மையே நான் சரணடைகிறேன்” ஏனெனில் எளியவர்களுக்கு ஒரே புகலிடம் உமது திருவடிகளே அல்லவா!
என்றார்.
சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மீண்டும் தொடர்ந்தார்,
இந்த உடம்பு வீழ்ந்துக் கொண்டிருக்கிறது. கடின தவ வாழ்க்கையில் அது போகட்டும். இனி
நான் தினமும் 10,000 பிரணவ மந்திரம் ஜபிப்பேன். உபவாசங்கள் இருப்பேன். ஹர, ஹர வ்யோம்
வ்யோம்” என்று கூறிய படி இமயமலைகளில் கங்கை க் கரையில் தன்னந்தனியாக
வாழ்வேன். எனது பெயரை மீண்டும் மாற்றிக் கொள்வேன். இந்த முறை என்னை யாரும் கண்டு பிடிக்க
முடியாது. நான் மீண்டும் சன்னியாச தீட்சை பெற்றுக்கொள்வேன். ஆனால் இதன்நோக்கம் வேறு. மீண்டும் கட்டாயமாக மீண்டும் உங்கள் முன்
வரக் கூடாது என்பதற்காகவே சன்னியாசம் பெற்றுக் கொள்வேன்.
நிவேதிதையின்
குறிப்புகளிலிருந்து நாம் பெறுகின்ற இந்தப் பக்கங்கள் சுவாமிஜியின் மறு பக்கத்தைப்
பிரதிபலிக்கின்றன. அவரது துயரங்களையும் வேதனைகளையும்் நமக்குத் தெரிவிக்கின்றன. வேதனையின் விளிம்பிலிருந்து அவர் கதறுவது போல் உள்ளது.ஆனால்
நம்பிக்கையிழந்தவனின் விரக்திக் கதறல் அல்ல
இது. தனிமை வாழ்க்கை மீதுள்ள தீவிர ஆர்வத்தாலும்,
அது தம்மிடமிருந்து பறிபோயிற்றே என்ற வேதனையாலும் எழுந்த கூக்குரல் இது. கங்கைக் கரையின்
ஏகாந்தத்தில் வாழ்கின்ற தவ வாழ்க்கையையே அவர் இப்போதம் விரும்பினார். தமது ஆற்றலையும்
அன்பையும் எந்த அளவிற்கு உலக நன்மைக்காக உலகின் மீது செலுத்தினாரோ, எந்த அளவிற்கு மனிதரோடு
மனிதராக வாழ்ந்து வேலை செய்தாரோ அந்த அளவிற்கு அவர் துன் புற்றார்.
அப்படியானால் மரணமிலாப் பெருநிலையைஅடைந்து விட்ட
அவர், சம்சாரப்பெருங்கடலின் மறுகரையைத் தொட்டு விட்ட அவர், இறைவனின் திருப் பாதங்களைக்
கண்டுவிட்ட அவர் துன்புற்றாரா?
ஆம்,அதே வேளையில் ” இல்லை”.
அவர் துன் புற்றது உண்மை. நம்பிக்கையின்மையின் சாயல்” அவரிடம் தெரிந்ததும் உண்மை. ஆனால் நாம் கருதுகின்ற பொருளில்
அவர் துன்புறவில்லை. ஏனெனில் அவர் எப்போதுமே ஓர் ஆனந்தப் பெருங்கடலின் திரண்ட வடிவமாகவே
காணப் பட்டார். ஒரு கணம் அவர் துன்புற்றது போல் தோன்றினாலும் மறுகணம் அவர் தெய்வீக ஆனந்தத்தில் மிதந்தார். அவர்
எதைப்பேசினாலும், எந்த மனநிலையில் இருந்தாலும் அவரது தெய்வீகம் ஒவ்வொரு கணமும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அவர் பேசிக் கொண்டிருக்கும்போது அவரைக் கூர்ந்து பார்த்தால் திறந்து கிடக்கின்றவாசல்களின் வழியாக எல்லையற்ற பரம்பொருளை அவர் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது புரியும். இது எப்படி சாத்தியம்? ”நான்” என்ற உணர்வையே இழந்து விட்டதாலா? என்று எழுதுகிறார் நிவேதிதை.
எல்லையற்ற பரம்பொருளின் வாசல் அவருக்கு எப்போதுமே திறந்திருந்தது. ஏனெனில் வாழ்க்கையின்
இன்பத் துன்பங்கள் எதுவும் அந்த வாசலை மறைக்கவோ
மூடவோ இயலவில்லை” என்று எழுதுகிறார் மேரி லூயி
பர்க்.
வாழ்க்கையில்
மாறி மாறி வருகின்ற இந்தச் சுகத்தையும் துக்கத்தையும் பற்றி சுவாமிஜியின்
அற்புதமானதொரு விளக்கத்தை இங்கே காண்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். மிசஸ் ஹேலுக்கு
இந்த நாட்களில் எழுதிய கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிடுகிறார்.
நாய் குரைத்தால் அதன் எஜமானன், திருடன் வருவதாக எச்சரிக்கை
அடைகிறான் அல்லது நண்பன் வருவதாக வரவேற்கத் தயாராகிறான். இதன் பொருள் நாயும் அதன் எஜமானனும்
ஒரே இயல்பு உடையவர்கள் என்பதோ அல்லது அவர்களுக்கிடையே ஏதாவது தொடர்பு இருக்கும் என்பதோ
அல்ல. சுகம், துக்கம் போன்ற உணர்ச்சிகளும்
அது போல் மனத்தைச் செயல்படத் தூண்டுகின்றன. ஆனால் மனத்திற்கும் அந்த உணர்ச்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆன்மா
வேதனைக்கும் சுகத்திற்கும் அப்பாற்பட்டது. அது சொந்த இயல்பிலேயே திருப்தியுடன் இருப்பது. எந்த நரகமும் அதைத் தண்டிக்க முடியாது. எந்தச் சொர்க்கமும் அதை மகிழ்விக்க முடியாது.
மரணத்தை
நேசி!
-
ஆனால் நடைமுறை வாழ்வில் யாராவது, எந்தக் காரணத்தாலாவது சோகமாகவோ வேதனையுடனோ இருந்தால் சுவாமிஜியின் முதல்
வேலை அதனைத் தீர்ப்பதாகத் தான் இருக்கும் ஒரு
வார்த்தை, ஒரு கதை, மனம் நிறைந்த ஆசிகள் என்று ஏதாவது ஒரு வழியில் அதனைத் தற்காலிகமாகவாவது தீர்த்து விடுவார் அவர்.
ரிஜ்லிமேனரில்
இருந்தவர்களுள் இளம் பெண் ஓலியா ஒருத்தி. இவள் சாராவின் மகள். உடல் நோயால் துன்புற்ற அவள் மனத்தளவிலும்
பெரிதும் பாதிக்கப் பட்டவள். அவளது திருமணம்
விவாகரத்தில் முடிந்திருந்தது. ஒரே குழந்தையும் இறந்துவிட்டது. இரவில் ஏதேதோ பயங்கரக் கனவுகள் காண்பதும் பயத்தில் அலறியபடி எழுவதுமாக அமைதியின்றித் தவித்தாள்
அவள். சுவாமிஜி அவளிடம் மிகுந்த பரிவு காட்டினார். அடிக்கடி அவளிடம் சென்று அன்பாகப்பேசி
அவளது மனத்தை அமைதிப்படுத்தினார். ஞாயிறு மதிய உணவு வேளையில் சுவாமிஜி மூன்றரை மணி
நேரம் ஓலியாவுடன் தனிமையில் செலவிட்டார்.
சுவாமிஜியின் இந்த ஆசிகள் அவளை முற்றிலும் மாறுபட்ட ஒரு பெண்ணாக மாற்றியிருக்கிறது” என்று எழுதுகிறார் நிவேதிதை.
மற்றொரு நாள் சுவாமிஜி பயங்கரக் கனவு பற்றி ஓலியாவிடம் கூறினார். இந்த பயங்கரக் கனவுகள் எல்லாம் நல்ல,
இனிமையான கனவுகளாகத்தான் ஆரம்பிக்கும். போகப்போக பயங்கரமாக மாறும். நாம் பயத்தின் உச்சத்தில்
உறையும்போது கனவு கலைந்து விடும். அது போல்தான் வாழ்க்கைக் கனவும். மரணம் வந்து அந்தக்
கனவை க் கலைக்கிறது. எனவே மரணத்தை நேசி.
மிசஸ் லெக்கட்டின் 22 வயது மகள் ஆல்பெர்ட்டா. ஓலியாவின்
திருமண வாழ்க்கையும் அதன் சோக முடிவும் அவளது மனத்தை ஆக்கிரமித்திருந்தன. ஒரு நாள்
அவள் சுவாமிஜியிடம்,திருமண வாழ்க்கையில் இன்பமே கிடையாதா? என்று கேட்டாள்.உண்டு, மகளே,
உண்டு. அதற்குத் திருமணத்தை ஒரு பெரும் தவமாகக் காணவேண்டும். அந்தப் பின்னணியில் வாழ்க்கையை
அமைத்துக் கொள்ள வேண்டும்ஃ ஒரு தவம் செய்கிறோம் என்ற கருத்தைத் தவிர மற்ற அனைத்தையும்
விட்டிருக்க வேண்டும்” என்றார் சுவாமிஜி.
ஆல் பெர்ட்டாவின் தம்பியான ஹாலிஸ்டர் ஒருநாள். எனக்கு
இந்தத் துறவு வாழ்க்கை வேண்டாமப்பா! நான் திருமணம் செய்து பிள்ளைக் குட்டிகளைப் பெற்றுக்
கொள்ள வே விரும்புகிறேன்” என்றான். அதற்கு சுவாமிஜி, அப்படியே
செய், மகனே! ஆனால் ஒன்று, நீ கடினமான பாதையைத்தேர்ந்தெடுக்கிறாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே,
என்றார்.
குழந்தையான பிரான்சஸும் அவரது கருணையைப்பெறவே செய்தாள்.
ஒரு நாள் அவள் தோட்டத்திலிருந்து சில பூக்களைப் பறித்து சுவாமிஜியிடம் கொடுத்தாள். சுவாமிஜி மிகவும் நெகிழ்ந்தார். அந்தப் பூக்களைப் பெற்றுக்கொண்டு
அமைதியாக, இந்தியாவில் நாங்கள் குருமார்களுக்கே பூக்களை அளிப்போம்” என்று கூறிவிட்டு சில சம்ஸ்கிருத மந்திரங்களைக்கூறி அவளை
ஆசீர்வதித்தார்.
-
சக்தியை
அளித்தல்
-
ஏற்கனவே
ப்ளாஜட்டும் மெக்லவுடும் சுவாமிஜியை வாஸ் ஏஞ்சல்ஸுக்கு அழைத்திருந்தனர். அதனை ஏற்று
ரிஜ்லிமேனரிலிருந்து கிளம்ப ஆயத்தமானார் சுவாமிஜி. அதற்கு முன்பு ஓர் அசாதாரணமான சம்பவம்
நடைபெற்றது. எப்படி ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சக்தியை சுவாமிஜிக்கு அளித்தாரோ அப்படி சுவாமிஜி தமது சக்தியை இருவருக்கு அளித்தார். தமது பணிகளில்
நிவேதிதை வகிப்பது போன்றதொரு முக்கியமான இடத்தை மிசஸ் சாராவிற்கும் அளித்திருந்தார்
சுவாமிஜி. அது பற்றி ஏற்கனவே சாராவிற்கு எழுதவும்
செய்திருந்தார் அவர். சமீப கால நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது என்னைக் கவனித்துக்
கொள்வதற்காக தேவியால் நீங்கள் நியமிக்கப் பட்டுள்ளீர்கள் என்று நிரூபணமாகிறது. எனவே
அன்புடன் நம்பிக்கையும் சேர்ந்து விட்டது. என்னையும் என் பணியையும் பொறுத்தவரை இனிமேல்
நான் உங்களை இறைவனின் அனுமதி பெற்றவன் என்றே கொள்வேன்.அதனுடன் எல்லாப் பொறுப்புகளையும்
என் தலை யிலிருந்து சந்தோஷமாக உதறியெறிந்து விட்டு, தேவிஉங்கள் மூலம் கட்டளையிடுவதன்
படி நடப்பேன்.
அன்று நவம்பர் 5 ஞாயிறு பிற்பகல். சுவாமிஜி நிவேதிதையை
அழைத்துக்கொண்டு சாராவின் அறைக்குச்சென்றார். அறைக் கதவைச் சாத்திவிட்டு, தாம் கொண்டு
வந்திருந்த காவித்துணியை இருவரிடமும் கொடுத்தார்.பிறகு இருவர் தலை மீதும் தமது இரு
கைகளையும் வைத்து கூறினார்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் எனக்கு எதை அளித்திருந்தாரோ
அவை அனைத்தையும் நான் உங்களுக்குத் தருகிறேன். ஒரு பெண்ணிடமிருந்து( காளிதேவி) எங்களுக்கு வந்ததை நான் இரு பெண்களிடம் தருகிறேன்.
அதைக்கொண்டு உங்களால் இயன்றதைச்செய்யுங்கள். என்னால் என்னை நம்ப இயலவில்லை. நாளைக்கு
என்ன செய்வேனோ, அது வேலையை எப்படிப் பாதிக்குமோ தெரியாது. காளிதேவியாகிய பெண்ணிடமிருந்து
வந்ததைப் பெண்களே கட்டிக் காப்பது தான் மிகச் சிறந்தவழி. அவள் யார், அவள் என்ன பொருள்
என்பது எனக்குத் தெரியாது. நான் அவளை ஒரு போதும் கண்டதில்லை. ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர்
அவளைக் கண்டார்.( நிவேதிதையின் அங்கியைத்தொட்டு) இப்படி அவளைத் தொட்டார். எனக்குத் தெரிந்தவரை அவள் ஓர் உருவமற்ற பொருள். எப்படியோ, சுமையை நான் உங்களிடம் தருகிறேன். அமைதியில்
மூழ்கி வாழ்வதற்காக நான் போகிறேன். காலையில் என் மனமே சரியில்லை. மதிய உணவிற்கு முன்பு
நான் என் அறைக்குச்சென்றபோது இது பற்றி தீவிரமாக
யோசித்தேன். பிறகு தான் இந்த முடிவிற்கு வந்தேன்.
இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.விடுதலைப்பெற்றது
போல் உள்ளது. இது வரை நான் சுமந்து கொண்டிருந்தேன், இப்போது விட்டு விட்டேன்.
இந்த நிகழ்ச்சியின் பொருள் என்ன, விளைவு என்ன, அவர்கள்இருவரின்
வாழ்க்கையிலும் இந்தச் சம்பவத்தால் என்ன நிகழ்ந்தது-இதற்கு யார் விடை சொல்வது? நிவேதிதை
பின்னாளில் இந்தியாவின் பெண் கல்வியிலும்,
விடுதலைப்போராட்டத்திலும் முக்கியப் பங்கு வகித்து இந்தியவரலாற்றில் ஓர் அழியாத இடத்தைப்பெற்றார்.
சாராவைப் பொறுத்த வரையில் அத்தகைய பணிகள் எதிலும்
அவர் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு நியூயார்க் புறப்பட்டார் சுவாமிஜி.
நியூயார்க்கில்
அமெரிக்காவில் சுவாமிஜி விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்ந்தவர்கள்
குறிப்பாக நால்வர். அவர்கள் சாரதானந்தர், அபேதானந்தர், அபயானந்தர், மிஸ் வால்டோ ஆகியோர்
. சாரதானந்தர் கிரீனேக்கர், நியூயார்க், போஸ்டன் முதலான இடங்களில் தொடர்ந்து வேதாந்த
வகுப்புகள் நடத்தினார். அவரது சொற்பொழிவுகளுக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. பணியும் பாதிப்பின்றி தொடந்தது. சாரதானந்தர் செல்ல முடியாத
வேளைகளில் வால்டோ வேதாந்த வகுப்புக்களை நடத்தினார். 1898 ஜனவரியில் சுவாமிஜியின்அழைப்பை
ஏற்று இந்தியாவிற்குத் திரும்பினார் சாரதானந்தர்.
தொடர்ந்து அபேதானந்தர் பணிகளைத் தொடர்ந்ததுடன் விரிவுபடுத்தவும் செய்தார். நியூயார்க்கில்
மடத்திற்காகச் சொந்த இடமும் வாங்கினார். அபயானந்தரும் இதில்பெருமளவிற்கு உதவினார்.
இவ்வாறு சுமார் 6 வருடங்களுக்கு முன்பு சுவாமிஜி விதைத்துச்சென்றவிதை இன்று வளர்ந்து,
படர்ந்து அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பரவியிருந்தது.
1899 நவம்பர் 7- ஆம் நாள் நியூயார்க் சென்ற சுவாமிஜி
முதலில் சென்று வேதாந்த மையத்தைப் பார்வையிட்டார். நவம்பர் 10- ஆம் நாள் சுவாமிஜிக்கு
மடத்தில் வரவேற்பு அளிக்கப் பட்டது. அங்கே அவர் சில நாட்கள் தங்கினார். அந்த நாட்களில்
பொதுச்சொற்பொழிவு எதுவும் அவர் செய்யவில்லை. ஓரிருவகுப்புச் சொற்பொழிவுகள் மற்றும் கேள்வி- பதில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்தவேளையில், தற்போது மாண்ட்க்ளேர் சென்ற துரியானந்தர்
தாம் பணிகளை ஆரம்பித்துவிட்டதாகச்செய்தி அனுப்பியிருந்தார். இதுவும் சுவாமிஜிக்கு மனநிறைவைத்
தந்தது. பொதுவாக அமெரிக்கப் பணிகளின் இந்த வளர்ச்சியில் மிகவும் பெருமிதம் கொண்டார்
சுவாமிஜி.
சுவாமிஜியின் வகுப்புகள் எப்படி நடைபெற்றன? அவர்
வெறும் சொற்களால் மட்டும் பேசவில்லை. வெறும் கருத்துக்களை மட்டும் அளிக்கவில்லை. அவற்றுடன்,
அந்தக்கருத்துக்களை உணர்ந்து கொள்வதற்கான ஆற்றலை அளித்தார்.எண்ணற்ற சொற்பொழிவுகள், எத்தனையோ வகுப்புகள், தனிநபர் உரையாடல்கள்,
இவை அத்தனையிலும் அள்ளி வழங்குவதற்கு அவரிடம் ஆன்மீக ஆற்றல் நிறைந்திருந்தது. அவர்
ஓர் ஆற்றலின் சுரங்கமாக விளங்கினார்.
இந்த நாட்களில் ஒரு முறை அவர் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார்.
பேசுவதைத்திடீரென்று பாதியில் நிறுத்தினார், அறையைவிட்டு வெளியே சென்றுவிட்டார். வந்தவர்கள்மிகுந்த
ஏமாற்றத்துடன் திரும்பினர். சுவாமிஜி தமது அறைக்குச்சென்று கொண்டிருந்தபோது நண்பர்
ஒருவர், சுவாமிஜி, பேச்சு அப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்திருந்தது. சொல்ல வேண்டிய
கருத்துக்களை மறந்து விட்டீர்களா? அல்லது தளர்ந்து விட்டீர்களா? என்று கேட்டார். இல்லையப்பா,
இவை எதுவும் காரணமல்ல, என்று சொல்லிவிட்டு
சுவாமிஜி தொடர்ந்தார். அளவிட முடியாத ஆற்றல் என்னிடம் நிறைந்திருப்பதை அந்தப்பேச்சின்போது
நான் உணர்ந்தேன்.கேட்பவர்கள், அந்த ஆற்றலின் காரணமாக, நான் கூறியகருத்துக்களில் ஆழ்ந்து
மூழ்கிக் கரைவதைக் கண்டேன். சிலர் தங்கள் தனித்துவத்தையே
இழக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். இதோ, இவர்களெல்லாம் குழைத்த களிமண்போல் மென்மையாகி
விட்டார்கள். நான் விரும்பியவாறுஇவர்களின் வாழ்க்கையை உருவாக்க முடியும்” என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அது எனது நோக்கமல்ல. ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தங்கள் தனித்துவத்தை இழக்காமல், அதன் போக்கிலேயே வளர வேண்டும். அது தான் என் விருப்பம்.
அவர்களின் வளர்ச்சியில் குறுக்கிட விரும்பாததால் தான் நான் பாதியில் நிறுத்த நேர்ந்தது.
ஒரு வேளை
சொல்ல வேண்டியதை மறந்ததால் தான், பாதியில் நிறுத்தினீர்கள் என்று கேட்பவர்கள்
நினைத்திருக்கக் கூடும்” என்றார் அந்த நண்பர். அவர்கள்
என்ன நினைத்தால் எனக்கென்ன? என்று தமக்கே உரிய பாணியில் பதிலளித்தார் சுவாமிஜி.
கிறிஸ்தவ மதத்தில் பாவம்” என்பது ஒரு முக்கியக் கருத்து. மனிதன் பாவத்தில் பிறந்தவன்.
அவன் பாவிஎன்ற கருத்தை அது வலியுறுத்துகிறது. சுவாமிஜியோ, மனிதன் தெய்வீகமானவன், என்று
இந்திய ஆன்மீகத்தை எதிரொலித்தார். இதை அந்தக் கிறிஸ்தவ நாட்டில் பலரால் புரிந்து கொள்ள
இயலவில்லை. ஒரு நாள் கேள்வி நேரத்தின்போது
சர்ச்சில் பணியாற்றுகின்ற பெண் ஒருவர், சுவாமிஜி, நீங்கள் ஏன் பாவத்தைப் பற்றியே
பேசுவதில்லை? என்று கேட்டார். சுவாமிஜியின் முகத்தில் ஓர் ஆச்சரிய உணர்ச்சி படர்ந்தது.
அவர் கூறினார்.
சகோதரி, நான் என் பாவங்களை வாழ்த்துகிறேன். பாவத்தின்
மூலமே நான் புண்ணியத்தை உணர்ந்தேன். இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு என் புண்ணியங்களைப்போல்
பாவங்களும் காரணம். இன்று நான் புண்ணியத்தைப்போதிக்கிறேன்.
நான் ஏன் மனிதனின் பலவீனத்தைப்போதிக்க வேண்டும்? சிலவேளைகளில் மகான்களிடம் இல்லாத சில
நற்பண்புகள் கொடியவர்களில் இருப்பதை நீங்கள்
கண்டதில்லையா? இருப்பது ஒரே ஆற்றல்தான். அதுவே நன்மையாகவும் தீமையாகவும் வெளிப்படுகிறது. கடவுளும் சாத்தானும் ஒரே ஆறுதான்.
கண்ணீர் மட்டும் எதிரெதிர் திசைகளில் பாய்கின்றன,
அவ்வளவு தான்.
கிறிஸ்தவ மதத்தில் ஊறிய அந்தப் பெண் அதிர்ந்து போனாள்.
அதன்பிறகு சுவாமிஜி மனிதனின் தெய்வீகத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.ஆன்மா பூரணமானது.
நிலையானது, அழிவற்றது. அந்த ஆன்மா ஒவ்வொரு வரிலும் உள்ளது.. என்று அவரது பேச்சு தொடர்ந்தது.
அந்தப்பேச்சைக்கேட்ட குருதாஸ் பின்னாளில் எழுதினார்,
தனது சொந்த தெய்வீகத்தை உணர்வதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் தெய்வம் ஆகலாம். இது நமக்கு
நம்பிக்கை தருகிறது.வலிமையை ஊட்டுகிறது. எங்கெல்லாம் தேடி அலைந்து உழன்றும் கிடைக்காதவர்களுக்கு,
எத்தனையோ கதவுகளைத் தட்டியும் திறக்கப் படாதவர்களுக்கு சுவாமிஜியின் போதனை எவ்வளவு
பெரிய ஆறுதலாக உள்ளது. அவர்களுக்கெல்லாம் சுவாமிஜி ரட்சகராக வந்தார். அவர்களின் இதய வாசலுக்கே வந்து தட்டினார்.
அவர் தட்டியதைக்கேட்டு கதவைத் திறந்தவர்கள் பேறு பெற்றவர்கள். ஏனெனில் அவரது வரவுடன்
ஆசிகளும் சேர்ந்தல்லவா வந்தன!
நியூயார்க்கில் சுவாமிஜி ஒரு வேதனையை அனுபவிக்க வேண்டியிருந்தது.
அது அவரது அமெரிக்கச் சீடரான லான்ட்ஸ்பர்க்கை மீண்டும் சந்தித்தது. 1895- 96- இல் சுவாமிஜியிடமிருந்து
விலக ஆரம்பித்த அவர், 1898 ஆகஸ்டில் அவர் THE New YorkHerald என்ற அமெரிக்கப் பத்திரிகையில் சுவாமிஜியையும்,
அவர் போதித்த யோக முறைகளையும், அவரது அமெரிக்கச் சீடர்களையும் கடுமையாக விமர்சித்து
க் கட்டுரை ஒன்று எழுதினார். அதன் பிறகு சுவாமிஜியுடன் அவர் பெரிதாகத்தொடர்பு எதுவும்
வைக்க வில்லை.
இப்போது திடீரென்று எங்கிருந்தோ முளைத்தார் லான்ட்ஸ்பர்க். சுவாமிஜி ஒருநாள் தமது
உடல்நிலைப் பரிசோதனைக்காக டாக்டர் கர்ன்சி
என்பவரைக் காணச் சென்றிருந்தார். இந்த டாக்டர், சுவாமிஜியின் நண்பரும் கூட, அவர் லான்ட்ஸ்பர்க்கைப்
பற்றி கேள்விப்பட்டு முன்பே அவரை அந்த வீட்டிற்கு வரக் கூடாது என்று தடை செய்திருந்தார்.
ஆனால் திடீரென்று அன்று அங்கேவந்தார் லான்ட்ஸ்பர்க்.
அப்போது சுவாமிஜியின் நாடித் துடிப்பைப் பரிசோதித்துக்
கொண்டிருந்தார் டாக்டர். அது சீராக இருந்தது. திடீரென்று நாடித்துடிப்பு முற்றிலுமாக
நின்றுவிட்டது. பார்த்தால் வாசலில் லான்ட்ஸ்பர்க்! அவரைக் கண்டதும் சுவாமிஜியின் நாடித்துடிப்பு
நின்றுவிட்டது. மகிழ்ச்சியுடன் சிரித்தார் டாக்டர். வந்தவருக்கு நன்றி சொல்லத் தான்
வேண்டும். ஏன், அவருக்குப் பணம் கூட கொடுக்கலாம். ஏனெனில் அவர் வந்ததால் சுவாமிஜியின் நாடித்துடிப்பு நின்றது. இது அவரது உடல்நிலையை அறிந்து
கொள்வதில் பேருதவி செய்துள்ளது” என்றார். சுவாமிஜி லான்ட்ஸ்பர்கிடம்
இனிமையான, இதமான வார்த்தைகளைச் சிறிது நேரம்
பேசினார். ஆனால் அவை எதுவும் அவரது மனத்தை மாற்றியதாகத் தெரியவில்லை. பிறகு
சுவாமிஜி அங்கிருந்து அகன்றார். லான்ட்ஸ்பர்க்கும் சென்றுவிட்டார். அவரது பிரிவு சுவாமிஜியின் மனத்தை
மிகவும் வாட்டியது.
உணர்ச்சிகளும்
உடல்நோயும்
இத்துடன், தொடர்ந்து ஸ்டர்டியிடமிருந்து வந்த கடிதம்களும் சுவாமிஜியின் மனவேதனையை அதிகரித்தன.
அவரது மனத்துயர் சகோதரச் சீடர்களிடம் கோபமாக வெளிப் பட்டது. அவர்களைவிட அவரது அன்பைப்
புரிந்து கொண்டவர்கள் யார்?அவர்களின் பணி வளர்ச்சி திருப்தியான வகையில் இல்லை என்று
அவர்களைத் திட்டி எழுதினார்.
சுயமாக சிந்தித்துச் செயல்படுங்கள். பணம், கல்வி,
அனைத்திற்கும் மூத்த சகோதரனையே நம்பியுள்ளோம்! என்றிருந்தால் சர்வ நாசத்தை த் தவிர
வேறு என்ன ஏற்படும்? பத்திரிகைக்கான பணத்தை நான் சம்பாதிக்க வேண்டும், கட்டுரைகள் நான்
எழுதித்தரவேண்டும், நீங்கள் என்னதான் செய்வீர்கள்?
நமது துரைமார்கள் என்ன செய்கிறார்கள்? என்
பங்கை நான் செய்து முடித்தாயிற்று. இனி செய்ய
வேண்டியதை நீங்கள் செய்யுங்கள். ஒரு பைசா சம்பாதிப்பதற்கு யாரும் இல்லை, பிரச்சாரம்
செய்வதற்கு யாரும் இல்லை, தன் விஷயத்தைக் கவனித்துக்கொள்வதற்கான புத்தி யாருக்கும்
இல்லை. ஒருவரி எழுதுவதற்கு யாருக்கும் திறமை இல்லை, எதுவுமில்லாமலே எல்லோரும் மகா புருஷர்கள்...
உங்கள் நிலைமை இதுவே ஆகுமானால், இளைஞர்களின் கையில் ஆறு மாத காலத்திற்குப் பத்திரிகை,
பணம், பிரச்சார வேலை அனைத்தையும் ஒப்படைத்துவிடுங்கள், அவர்களாலும் எதுவும் செய்ய முடியாவிட்டால்,
எல்லாவற்றையும் விற்று, நன்கொடை தந்தவர்களிடம் பணத்தையெல்லாம் திருப்பிக்கொடுத்து விட்டுப்
பக்கிரிகளாகப்போய்விடுங்கள்.
அதே வேளையில் கோபம் தணிந்ததும் அவர்களைத்தேற்றவும்
செய்தார். முன்பு எழுதிய கடிதங்களிலிருந்த கடுஞ்சொற்களைப் பொருட்படுத்த வேண்டாம். அவை
உங்களுக்கு நன்மையே செய்யும். சிறிது காலம் நான் மறைந்துவிட வேண்டியது அவசியம்...............
யாரும் எனக்கு
எழுதவோ, என்னைத்தேடவோ வேண்டாம். எனது உடல் நலத்திற்கு அது முற்றிலும் அவசியம்” என்று அவர்களுக்கு எழுதினார்.
மன அதிர்ச்சிகள் உடம்பையும் பாதிக்கும் என்பது உண்மைதான். ஹெல்மர், கர்ன்சி போன்ற நல்ல டாக்டர்கள்
அவரது உடல் நிலையைக் கண்காணித்து வந்ததும் ஜலதோஷமும் காய்ச்சலும் அவரை வாட்டின. ஆனால் இந்த அளவிற்கு உடனடி எதிர்விளைவுகள் மிகவும் சாத்வீகமான உடம்புகளிலேயே உண்டாகும். எத்தனையோ பேருக்கு ஆன்மீக ஆற்றலை அள்ளி
வழங்கிக்கொண்டிருந்த அவரது உடம்பு எவ்வளவு நுண்ணிய சாத்வீகமானதாக இருக்கும். அவரது
உடம்பைப் பற்றி அவரே அறிவார். மொத்தத்தில் எனது உடம்பைப்பற்றி கவலைப்பட காரணம் எதுவுமிருப்பதாக நான் நினைக்கவில்லை.
இது போன்ற நரம்புத் தளர்வுற்ற உடல் தான், சிலவேளைகளில் இனிமையான இசை பாடவும் சில வேளைகளில்
இருளில் கிடந்து புலம்பவும் ஏற்ற கருவியாகிறது. இத்தகைய உடம்பில் வினோதம் என்னவென்றால்
உடம்பின் உறுப்புகள் பாதிக்கப் படுகின்றன என்று எழுதுகிறார் அவர்.
என் ஆன்மா விரிகிறது
-
சுவாமிஜியின் பரபரப்பான வாழ்க்கையும், கூடவே உடல்
நோய்களும் ஒரு பக்கம் தொடர்ந்தன. மறுபக்கம், அவரது ஆன்மீக ஆற்றலின் வெளிப் பாடும் உச்சங்களை நோக்கி விரிந்து கொண்டிருந்தன. ஒருநாள்
அவர் அபேதானந்தரிடம், சகோதரா, என் நாட்கள் எண்ணப் பட்டு விட்டன. இனி மூன்றோ , நான்கோ
வருடங்கள் தான் நான் உயிர் வாழ்வேன்” என்றார். அதனை இடைமறித்த அபேதானந்தர்,
நீங்கள் அப்படிச்சொல்லக் கூடாது. சுவாமிஜி! உங்கள் உடல்நிலை நன்றாகத்தேறி வருகிறது. இன்னும் சில காலம் இங்கே இருந்தால் உங்கள் தெம்பும்
ஆற்றலும் பழைய நிலைக்குவந்துவிடும். அது மட்டுமின்றி, நாம் இப்போது தான் பணியை ஆரம்பித்திருக்கிறோம்்
இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ உள்ளது” என்றார் . அமைதியாக ஆனால் அழுத்தமாகப்
பதில் கூறினார் சுவாமிஜி.
உன்னால்
என்னைப் புரிந்து கொள்ள முடியாது. நான் மிகப் பெரிதாக வளர்ந்து கொண்டே போவது போல் உணர்கிறேன்.
என் ஆன்மா விரிந்து கொண்டே போகிறது. இனியும் இந்த உடம்பால் என்னைத் தாங்கிக்கொள்ள முடியாது
என்று சிலவேளைகளில் உணர்கிறேன். இப்போது வெடித்துவிடுவேன். உண்மையாகவே சொல்கிறேன், வெறும் சதையும் ரத்தமும் சேர்ந்த இந்தக் கூட்டினால்
என்னை இனியும் அதிக நாள் தாங்கிக்கொள்ள இயலாது.
நியூயார்க்கிலிருந்து நவம்பர் 22-ஆம் நாள் சிகாகோ சென்றார் சுவாமிஜி.
அங்கே ஹேல் குடும்பத்தினார், எம்மா கால்வே முதலானோரைச் சந்தித்துவிட்டு, கலிபோர்னியா
விற்குப் புறப்பட்டார்.
-
தென் கலிபோர்னியாவில்
................
சிகாகோவிலிருந்து 1899 டிசம்பர் 3-ஆம் நாள் கலிபோர்னியாவிலுள்ள
ஒரு முக்கிய நகரமான லாஸ் ஏஞ்ஜல்ஜுக்குச்சென்றார்.
சகோதரனை இழந்த மெக்லவுட் அங்கே ப்ளாஜட்டின்
வீட்டில் தங்கியிருந்தார். அவர்களுடன் சென்று தங்குவதற்கு முன்பு சுவாமிஜி சில நாட்கள்
தமது மாணவியான மிஸ் ஸ்பென்சரின் வீட்டில் தங்கினார். ஸ்பென்சர் சுமார் பத்து வருடங்களாகத்
தமது முதிய, பார்வையற்ற தாயாரைப் பராமரித்து வந்தார். சுவாமிஜி தினமம் அந்த முதியவரின்
அருகில் நீண்ட நேரம் அமர்ந்து அவருடன் பேசுவார். இந்த நாட்களில் பல புதிய நண்பர்களை
மெக்லவுட் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அங்கும் சுவாமிஜி சொற்பொழிவுகள் ஆற்றினார்.
சுவாமிஜியின் முதல் சொற்பொழிவின்போது அவரைச் சந்தித்தவர்களே மீட் சகோதரிகள். உங்கள் மூவரையும்
முன்பே எனக்குத்தெரியும்” என்று சுவாமிஜி ஒரு முறை அவர்களிடம் கூறினார். சகோதரிகளாகிய நீங்கள்
மூவரும் என்றென்றைக்குமாக என் மனத்தின் ஓர் அங்கம் ஆகிவிட்டீர்கள்” என்று அவர் கூறுமளவிற்கு அவரது வாழ்க்கையில் அவர்கள் இடம்
பிடித்தார்கள்.
மிசஸ் கேரி வைக்காஃப் , மிசஸ் ஆலிஸ் மீட் ஹேன்ஸ்ப்ரோ
மிஸ் ஹெலன் மீட் ஆகியோரே அந்த மீட் சகோதரிகள். இவர்கள் ஏற்கனவே சுவாமிஜியின் ராஜயோகம்
மற்றும் கர்மயோகம் நூல்களைப் படித்திருந்தனர். என்ன அற்புதமான கருத்துக்கள்! இவற்றை
எழுதிய மனிதர் எவ்வளவு அற்புதமானவராக இருப்பார்! என்று தங்களுக்குள் பேசியபடி ஓர் உருவத்தையும்
அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களாம். அப்படிக் கற்பனையில் கண்ட ஒருவர் நேரிலேயே வந்து
பேசப்போகிறார் என்பதைப் பத்திரிகைகள் மூலம்
அறிந்த அவர்கள் அந்த வாய்ப்பைநழுவ விடவில்லை. அவரது சொற்பொழிவுகளைக்கேட்டனர். அவருடன்
நெருங்கிப் பழகினர். அவரது சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்வதில் உதவினர்.
ப்ளாஜட்டின்
வீட்டில்
..........
ஸ்பென்சரின் வீட்டிலிருந்து சுவாமிஜி ப்ளாஜட்டின்
வீட்டிற்கு இடம் பெயர்ந்தார். இவர் சுவாமிஜியின் வரலாற்றுப் புகழ்மிக்க சிகாகோ சொற்பொழிவுகளை
நேரில் கேட்டவர் என்பதை ஏற்கனவே கண்டோம். சுவாமிஜி இப்போது தம் வீட்டிற்கு வந்தபோது
ப்ளாஜட் மிகவும் மகிழ்ந்தார். ப்ளாஜட்டின் வீட்டில் சுவாமிஜி பொதுவாக நாட்களை ஓய்விலேயே
கழித்தார்.ஆனால் அவருடன்வாழ்கின்ற ஒவ்வொரு கணமும்
மற்றவர்களும் வாழ்வில் மறக்க முடியாத கணங்களாக ஆகிவிடும்.நோய், துயரம், வேதனை,
சோகம், என்று எது இருந்தாலும் அவர் வரும்போது அவை விலகி அங்கே ஓர் உற்சாகத்தின் அலை
புரள ஆரம்பிக்கும்.
பிளாஜட்டின் வீட்டில் சமையலறையும் குளியலறையும் அருகருகே
அமைந்திருந்தன. சுவாமிஜி குளிக்கும்போது கம்பீரமான குரலில் சம்ஸ்கிருத ஸ்தோத்திரங்களை
ஓதுவார். அதன்பொருள் புரியாவிட்டாலும் அதன் சாரத்தை கிரகித்துக்கொண்டு அந்தத் தெய்வீக
எண்ணங்களில் ஆழ்ந்த படியே சமைப்பார் ப்ளாஜட். பின்னர் சாப்பாடு. அதன்பிறகு சுவாமிஜியும்
மெக்லவுடும் நடக்கச் செல்வார்கள்.
காலையில் வகுப்புச்சொற்பொழிவுகள் நடைபெறும். அதன்
பிறகு சுவாமிஜி வந்து மதிய உணவு சமைப்பார். சொற்பொழிவு முடிந்ததும், பள்ளியிலிருந்து
திரும்பும் சிறுவனைப்போன்ற குதூகலத்துடன்,இனி நாம் சமைக்கலாம்” என்று கூறியபடியே சமையறைக்குள் ஓடுவார் சுவாமிஜி என்று எழுதுகிறார்
ப்ளாஜட். ஆனால் சொற்பொழிவிற்காக அணிகின்ற கோட் போன்ற துணிகளை மாற்றாமலேயே சமையலறைக்குள்
சென்றுவிடுவார். மெக்லவுட் அதைக் கண்காணித்து அவரைச் சாதாரணத் துணிகளை அணிந்து கொள்ளுமாறு
செய்வார்.மதிய உணவிற்குப் பிறகு வேறு எந்த
அலுவலும் குறுக்கிடாவிட்டால் தோட்டத்துப் படுக்கை ஊஞ்சலில் படுத்தபடி ஏதாவது படிப்பார்.
இந்த நாட்களில் அவர் பிரெஞ்சு புவியியல் வல்லுனரும் சமுதாயத் தத்துவவாதியுமான எலிஸீரெக்ளூ
எழுதிய ”பூமியும் அதன் மக்களும் என்ற நூலை ப் படித்து வந்தார். இது அழகிய படங்களுடன் பல தொகுதிகள் கொண்ட பெரிய நூலாகும்.
தமக்கு மிகவும் பிடித்த விஷயமான ”மனிதன்” என்பதைப் பற்றிய நூல் ஆதலால்
சுவாமிஜி அதை விரும்பிப் படித்தார்.
டிசம்பர் 21-ஆம் நாள் சூரிய காலண்டரின் படி புத்தாண்டு
நாள். அன்று காலையில் அனைவரும் சூரியனை வழிபட்டார். சுவாமிஜி காயத்ரி மந்திரத்தை ஓதினார்.
ஒரு நாள் சுவாமிஜி சொற்பொழிவுக்குக் கிளம்பினார்.
தாமதமாகிவிட்டது என்று மெக்லவுட் அசவரப்படுத்திக்கொண்டிருந்தார். சுவாமிஜியோ அமைதியாக தலைப்பாகையைச்சுற்றியபடி அதை எப்படி ச் சுற்றுவது
என்பதைப் பொறுமையாக ப்ளாஜட்டிற்குக் காட்டிக் கொண்டிருந்தார். மெக்லவுடின் அவசரத்தைக்
கண்டப்ளாஜட்,சுவாமிஜி, நீங்கள் அவசரப் பட வேண்டாம். ஒரு கதை சொல்கிறேன். ஒருவனைத் தூக்கிலிடுவதற்காக
க் கொண்டு சென்றார்கள். அதைக் காண்பதற்காக
மக்கள் முண்டியடித்தபடி ஓடிக் கொண்டிருந்தார்.
அதைக் கண்ட அவன் அவர்களிடம், நீங்கள் ஓடவேண்டாம். பொறுமையாகப்போங்கள். நான் வரும்வரை
அங்கே பெரிதாக எதுவும் நடக்காது” என்றானாம். அது போல், சுவாமிஜி!
நீங்கள் போகும்வரை அங்கே பெரிதாக எதுவும் ந்க்காது.
இதைக்கேட்ட சுவாமிஜி ஒரு சிறுவனைப்போல் விழுந்து விழுந்து சிரித்தார். பின்னாளிலும்
பல நேரங்களில் அவர் இதைக் கூறிச் சிரிப்பாராம்
மற்றொரு நாள் காலை, ப்ளாஜட்டின் வீட்டில் வகுப்புச்
சொற்பொழிவிற்கு ஏற்பாடாகியிருந்தது. மக்கள்
கூட்டமாக வந்து அமர்ந்திருந்தனர். சுவாமிஜி சென்று அமைதியாக உட்கார்ந்தார். தியானத்தில்
ஆழ்ந்தார். அவரது கண்கள் கீழ்நோக்கிய பார்வையுடன் இருந்தன. நேரம் கடந்தது. அனைவரும்
ஒருவித வசீகரத்திற்கு உட்பட்டவர்கள் போல் அவரையே
பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு சுவாமிஜி கண்விழித்தார். அவரது முகம் ஒரு குழந்தையின்
களங்கமின்மையைப் பிரதிபலித்தது. ஒரு குழந்தை போல் அவர் மிசஸ் லெக்கட்டிடம்,, நான் என்ன பேசுவது? என்று கேட்டார்.
எந்தக் கூட்டத்தையும் வசீகரித்து சொற்பொழிவாற்ற
வல்ல. அறிஞர்கள் பலர் வியந்து பாராட்டுகின்ற அறிவுக்கூர்மை படைத்த அவர் எதைப் பற்றிப்பேசுவதென்று
கேட்கிறார். சில நேரங்களில் சுவாமிஜி குழந்தைபோல் ஆகிவிடுவார்.
சுவாமிஜியைப்
பற்றிய நாடகம்
-
இந்த நாட்களில் சுவாமிஜி குறைவாகவே பேசினார். இந்த
அளவிற்கு அவர் மௌனமாக இருந்ததைத் தாம் இதற்கு
முன்பு கண்டதில்லை என்று எழுதுகிறார் மெக்லவுட். ஆனால் பல பிரமுகர்கள் அவரை வந்து சந்தித்தனர்.
சுவாமிஜியும் பல நண்பர்களைச் சென்று கண்டார்.
இந்த நாட்களில் அங்கே ”இந்தியாவிலிருந்து வந்துள்ள
எனது நண்பன்” என்றநாடகம் ஒன்று
நடைபெற்றது. இது ஒரு நகைச்சுவை நாடகம். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை நாடகம்” என்று விளம்பரப் படுத்தப் பட்டிருந்தது. வினோதம் என்னவென்றால் இந்த நாடகம் குறிப்பிடுகின்ற ”நண்பன்” சுவாமிஜியே ஆவார். அவரை மையப்படுத்தி
அமைந்த நாடகம் அது. அவர் முதன்முறை வந்திருந்தபோது பெற்ற புகழின் எதிரொலி இது. இந்தப் பாத்திரம் நேரடியாக சுவாமிஜியைக்
குறிக்கவில்லை என்றாலும், அவர் அடைந்த புகழின்
தாக்கத்தால் தான் அந்தக் கதாபாத்திரம் உருவாக்கப்
பட்டுள்ளது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும். சுவாமிஜி இந்த நாடகத்தைச்சென்று
கண்டார். வயிறு வலிக்கச் சிரித்து மகிழ்ந்தார்.
..
வேதாந்தம்
விளைத்த நடனம்
-
மற்றொரு முறை லாஸ் ஏஞ்ஜல்ஸில் நாட்டிய நாடகம் ஒன்றையும்
காணச்சென்றார். இந்த நாட்டிய நாடகத்திற்கும் தூண்டுதலாக இருந்தது சுவாமிஜியின் கருத்துக்களே.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவரது சொற்பொழிவுகளைக்கேட்டாள் ஓர் இளம் பெண். எல்லோருள்ளும் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது என்று
சுவாமிஜி கூறிய கருத்து அவளை மிகவும் கவர்ந்தது. அந்த ஆற்றல் என்னுள்ளும் இருக்குமானால்
அதை என் வாழ்க்கையில் வெளிப்படுத்த வேண்டும்” என்று முடிவு செய்தாள் அவள்.
அவள் ஒரு நடன மங்கை. தன்னுள் உள்ள ஆற்றலை நடனத்தின் மூலம் வெளிக் கொணர்ந்து, கலை, மதம்
போன்றவற்றின் நுண்மையை உலகிற்குக் காட்டவேண்டும் என்று விரும்பினாள் அவள். அதற்கேற்ப
ஒரு நாட்டிய நாடகத்தை உருவாக்கினாள். அதனைக் காண வருமாறு அவளும் அவளது தாயாரும் வந்து
சுவாமிஜியை அழைத்தனர். சுவாமிஜியும் மற்றவர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் சென்று அவளது
நாடகத்தைக் கண்டு ரசித்தனர்.
ஒரு மரண
வதந்தி-
.........
சுவாமிஜி லாஸ் ஏங்ஜல்ஸுக்கு வந்ததிலிருந்து அவரது உடல்நிலை ஓரளவிற்குத்தேறி வந்தது. வேதனை மிக்கதாக
இருந்தாலும் காந்தச் சிகிச்சையும் ஏற்றுக்கொண்டார்
அவர். இந்தச் சிகிச்சையைச் செய்தவர் மிசஸ் மெல்டன் என்பவர். இவர் எழுதப் படிக்கக்கூட தெரியாதவர். ஆனால்
ஏதோ ஒருவித சக்தியால் தாம் இயங்குவதாக அவர் கூறினார். ஓரு ஆவேசம் வந்தது போல் அவர்
தமது கைகளை நோயாளியின் உடம்பு முழுவதிலும் தவழவிடுவார். நோயாளியின் உடம்பை அழுத்தி
அழுத்தித் தேய்ப்பார். அப்போது நோயாளியின்
தோல் உரிந்து, தீக் கொள்ளியை உடம்பில் வைப்பது போன்ற வேதனை உண்டாகும். சுவாமிஜி
எழுதுகிறார். என்னைக் குணப்படுத்துவது யார்
தெரியுமா? டாக்டர் அல்ல, கிறிஸ்தவ விஞ்ஞான சிகிச்சைக்காரர்கள் அல்ல. ஆனால் காந்த முறையில்
சிகிச்சை செய்யும் ஒரு பெண். ஒவ்வொரு முறை
சிசிக்சை அளிக்கும்போது என் தோலை உரித்துவிடுகிறார். ஆச்சரியங்கள் நிகழ்கின்றன. தோலைத்தேய்ப்பதாலேயே
அவர் அறுவைச் சிகிச்சைகள் செய்கிறார். உட்சரீர அறுவைச் சிகிச்சைகள் கூட செய்கிறாராம்.அவரிடம்
சிகிச்சை பெறுபவர்கள் சொல்கிறார்கள். ஆரம்பத்தில் இந்தச் சிகிச்சையால் அவர் சற்று குணமடைந்தார்.
பிறகு அதனால் பெரிய நன்மை எதுவும் உண்டாகவில்லை.
தமது உடல்நிலை பற்றி சுவாமிஜி அவ்வப்போது நண்பர்களுக்கும் பேலூர் மடத்திற்கும் எழுதி வந்தார். ஆனாலும் அவரைப்
பற்றிய பல வதந்திகள் இந்தியாவில் நிலவத்தொடங்கிள- சுவாமிஜி இறந்து விட்டதாகக் கூட!
இது பற்றி சுவாமிஜி துரியானந்தருக்கு எழுதுகிறார். நமது நாட்டில் பிளேக் நோய் தோன்றியுள்ளது.
யார் இருக்கிறார்கள், யார் இறந்து விட்டார்கள், யாருக்குத் தெரியும்? சரி, அச்சுவிடமிருந்து
இன்று ஒரு கடிதம் வந்துள்ளது. சிகாரில் ராம்கர் நகரில் அவன் எங்கோ ஒளிந்து கொண்டிருந்தானாம். விவேகானந்தர் காலமாகி விட்டார்
என்று யாரோ அவனுக்குச் சொன்னாராம்! எனவே அவன் எனக்குக் கடிதம் எழுதியுள்ளான். அவனுக்கு
ஒரு பதில் எழுதப்போகிறேன்.
சில கவலைகள்-
உடல் நிலையைத்
தவிர சுவாமிஜி கவலைப் படுவதற்கு வேறு சில காரணங்களும் இந்த நாட்களில் இருந்தன. முதலாவதாக
பேலூர் மடம். அது அமைந்துள்ள பாலி நகராட்சி, மடத்திற்கு வரிகளை விதித்தது. மடத்தை ஒரு
வழிபாட்டுத் தலமாகக் கருதி வரிவிலக்கு அளிக்காமல், தங்குமிடமாகக் கருதி வீட்டு வரி
போன்றவற்றை விதித்தது. அதை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப் பட்டது.ஆனால் ரூ.
20,000-க்கு மேல் மதிப்புள்ள பேலூர் மடச் சொத்து விஷயமாகத் தங்களால் எந்த முடிவையும்
எடுக்க இயலாது என்று பாலி நகராட்சி நீதிமன்றம் கூறிவிட்டது. சுவாமிஜி சட்டம் படித்தவர்.
சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர். மடத்தைத் தமது பெயரில் வைத்திருக்காமல் நிர்வாகிகள் குழு
ஒன்றின் கீழ் ஒரு பொதுச்சொத்தாக வைத்திருந்தால் இந்தப் பிரச்சனை எழுந்திருக்காது. அப்படிச்
செய்யாதது தம் தவறு என்று கவலை கொண்டார் சுவாமிஜி. இந்தப் பிரச்சனை சுவாமிஜியின் மனத்தை
வாட்டியது.
அடுத்தது, நியூயார்க் மடத்தைப் பற்றிய கவலை. இதன்
தலைவராக இருந்தவர் லெக்கட். அவருக்கும் அபேதானந்தருக்கும் இடையில் கருத்து வேறுபாடு
தோன்றி வளர்ந்தது. கடைசியில் லெக்கட் தமது பதிவியை ராஜினாமா செய்தார். இது நீதி மன்ற
விவகாரங்களைவிட சுவாமிஜியை மிகவும் கவலையுறச்செய்தது. இருவரும் முக்கியமானவர்கள். சுவாமிஜி
யாருக்குத் துணை போவார்.? ஆரம்பத்தில் அவர் நடுநிலைமையையே வகித்தார். சாராவும் மெக்லவுடும் லெக்கட்டின் பக்கமே நியாயம் இருப்பதாகக்
கூறினர். அபேதானந்தரிடமிருந்து வந்த ஒரு நீண்ட
கடிதம் இதோ உள்ளது. அவர் முற்றிலும் மனம் தளர்ந்து உள்ளார் என்று தோன்றுகிறது. சிறிதளவு
அன்பு காட்டுவது அவரைப் பூரணமாக வென்றுவிடும் என்று நான் நம்புகிறேன் என்று சாராவுக்கு
எழுதினார் சுவாமிஜி. பொறுமையாகக் காத்திருக்குமாறு, அபேதானந்தருக்கு எழுதினார். கடைசியில்
டாக்டர் பார்க்கர் என்பவரைத் தலைவராக்கி பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனாலும் இது அவருக்கு மன உளைச்சலைத் தரவே செய்தது.
மூன்றாவதாகவும் ஒரு கவலை இருந்தது. அமெரிக்காவில்
நிதி திரட்ட வந்த நிவேதிதைக்கும் மேரி ஹேலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றியது.
சுவாமிஜியின் இந்தியப் பக்கத்தை அறியாதவர் மேரி. வேதாந்தச் சொற்பொழிவுகளையும் , ஞானயோகக்
கருத்துக்களையும் மட்டுமே அவர் சுவாமிஜியிடமிருந்து கேட்டுள்ளார். எனவே இந்தியப்பெண்களுக்கான கல்வி,
கர்மயோகம், காளி வழிபாடு என்றெல்லாம் நிவேதிதை
பேசுவதையும் அதற்காகப் பணம் திரட்டுவதையும் மேரியால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது இருவருக்கும்
இடையில் கருத்து வேறுபாட்டை வளர்த்தது. நிவேதிதை மகள் என்றால் மேரி சகோதரி.
இருவரில் யாருக்குத் துணை போவார் சுவாமிஜி. இந்தியாவைப் பற்றியும் சுவாமிஜியின் இந்தியப்
பக்கத்தையும் நன்றாக அறிந்திருந்த மெக்லவுட் போன்றோர் நிவேதிதையின் பக்கமே நியாயம்
இருப்பதாகக் கூறினர். சுவாமிஜி மேரியின் மனத்திற்கு ஆறுதலாகக் கடிதம் எழுதினார். ஆனால்
அவர் நிவேதிதையையே சார்ந்து நின்றார் என்பது அவரது கடிதங்களிலிருந்து தெளிவாகிறது. அன்பு மகளே” நிவேதிதா” என்று தொடங்கி , உன் தந்தை, விவேகானந்த” என்று ஒரு கடிதத்தை இந்த நாளில் எழுதுகிறார் அவர். மற்றொரு
கடிதத்தில் ஆசிகள், சிறிது கூட மனம் தளராதே. ஜெய் குரு! ஜெய குரு! நீ ஷத்திரிய ரத்தத்தில்
பிறந்தவள்.நமது காவியுடைப் போர்க்களத்தின்
மரணஉடை. வெற்றியல்ல, புனிதப் பணிக்காகச் சாவதே நமது லட்சியம். ஜெய் குரு! கொடியதான
விதியின் திரைகள் கறுத்தவை. ஊடுருவ முடியாதவை. ஆனால் நான்தான் எஜமானன். என் கையைத்
தூக்கினால் அவை மறைந்தோடுகின்றன. எல்லாம் முட்டாள்தனம். பயமா? நான் பயத்தையே அஞ்சி
நடுங்கச் செய்பவன். பயங்கரத்திற்கே பயங்கரமானவன்.
பயமற்ற, இரண்டற்ற ஒரே பொருள் நான். நான் விதியையே ஆட்டி வைப்பவன். தலை யெழுத்தையே அழிப்பவன்.
ஜெய் குரு! என் மகளே, உறுதியுடன் எழுந்து நில்.
பொன்னிற்கோ வேறு எதற்குமோ விலையாகி விடாதே. வெற்றி நமதே. என்று எழுதி நிவேதிதையை உற்சாகப்
படுத்தினார்.
No comments:
Post a Comment