Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-1

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-1

.

பிறப்பும் இளமையும்


புவனேசுவரியின்  பிரார்த்தனை

.

நான் பிறக்க வேண்டும் என்பதற்காக என் தாயும் தந்தையும் வருடக்கணக்காக நோன்பிருந்து பிரார்த்தனை செய்தார்கள். குழந்தைக்காக பெற்றோர் பிரார்த்திக்கவேண்டும். 


சட்டங்களை வகுத்த  சான்றோரான மனு, பிரார்த்தனையால் பிறந்தவன் ஆரியன்” என்று ஆரியனுக்கு விளக்கம் கூறுகிறார். பிராத்தனையின்றிப் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் மனுவின் கருத்துப்படி முறைகேடாகத் தோன்றியதே என்கிறார் சுவாமி விவேகானந்தர்.


தேவைகள் ஏற்படும் போது தான் பிரார்த்தனை பிறக்கிறது. குழந்தை வேண்டும் என்ற பெற்றோரின் இதய தாகம் பிரார்த்தனையாக எழுந்து கனிந்து, அதன் பலனாக இந்த உலகிற்கு வருபவன் மேலானவனாகத் திகழ்வான். 

புவனேசுவரியும் ஆழ்ந்து பிரார்த்தனை செய்தார். சிவபெருமானிடம் மாறாத பக்தி கொண்ட அவரைத் தஞ்சம்  அடைந்தார். முதல் குழந்தை ஆணாகப் பிறந்தாலும் அது வாழக்கொடுத்து வைக்கவில்லை. தொடர்ந்து பிறந்த நான்கும் பெண்கள். 

.

எனவே ஆண்பிள்ளை வேண்டும் என்ற ஏக்கத்தைச் சிவபெருமானிடம் முறையிட்டார். ஒரு வருடம் சோமவார விரதம்  கடைபிடித்தார்.(திங்கட் கிழமை தோறும் உபவாசம் இருந்து சிவபெருமானிடம் பிரார்த்தனையும் அவருக்கு விசேஷ பூஜைகளும் செய்தல்) காசியில் வசித்த தமது அத்தை ஒருவரிடம் காசியிலுள்ள வீரேசுவர சிவனுக்குத்  திங்கட்கிழமைகளில் விசேஷ பூஜைகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். 

.

இவ்வாறு ஒருவருடம் தொடர்ந்து ஜபம், பூஜை, ஜபாராயணம் என்று தவ வாழ்க்கை வாழ்ந்தார்.(வீரேசுவர சிவன்-இது பிரபலமான விசுவநாதர் கோயில் அல்ல. கங்கை கரையிலுள்ள மற்றொரு கோயில்)

ஒரு நாள் பகல் முழுவதும் பிரார்த்தனையிலும்  பூஜையிலும் செலவிட்ட புவனேசுவரிக்கு  இரவில் கனவு ஒன்று வந்தது. 

🌸

அதில் சிவபெருமான் தியான நிலையில் ஆழ்ந்திருந்தார். திடீரென்று அவரிடமிருந்து ஒளி வெள்ளம் பெருகியது. அது திரண்டு வந்து புவனேசுவரியை முழுக் காட்டியது. 

புவனேசுவரியின் மனம்  சொல்லொணா ஆனந்தத்தில் திளைத்தது. அப்போது சிவபெருமான் எழுந்தார். எழுந்தவர் ஓர் ஆண்குழந்தையாக ஆனார்.

எம்பெருமான் எனக்கு மகனாகப் பிறக்கப்போகிறாரா? எனது பிரார்த்தனையை  இவ்வாறு நிறைவேற்றப் போகிறாரா? பக்தர்களின் இதயபூர்வமான பிரார்த்தனையை பகவான் இப்படித்தான் பூர்த்தி செய்வாரா? பிரபோ, சிவபெருமானே! என்று ஓலமிட்டது புவனேசுவரியின் உள்ளம்.

அந்த வேளையில் தூக்கம் கலைந்தது.தூக்கம் கலைந்த பின்னும் அந்த ஒளி வெள்ளம் தம்மைச் சூழ்ந்திருப்பதைக்கண்டார் புவனேசுவரி.

 இவ்வாறு இதயம் கனிந்த பிரார்த்தனைகளின் பலனாக தெய்வீக சய்கல்பத்தின் விளைவாக க் கருத்தரித்தார்.


யுக நாயகர் தோன்றுகிறார்


புவனேசுவரி,1863 ஜனவரி12-ஆம் நாள் திங்கட்கிழமை காலை (கிருஷ்ண சப்தமி திதி, தனுர் லக்னம், கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம்) 6 மணி 33 நிமிடம் 33 வினாடியில் ஓர்  அழகிய ஆண்மகவை ஈன்றெடுத்தார் அவர். அது சூரியஉதயத்திற்கு ஆறு நிமிடங்கள் முன்னதாக இருந்தது. அன்று மகர சங்கராந்தி நாள். 

🌸

சூரியன் வடக்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடங்குவதற்கான உத்தராயணப் புண்ணிய நாள். தமிழகத்தில் சூரியனை வழிபடுகின்ற பொங்கல்  நன்னாள் அது. 


காசி வீரேசுவர சிவ பெருமானின் அருளால் பிறந்த குழந்தையாதலால் புவனேசுவரி அவனுக்கு வீரேசுவரன் என்று பெயரிட்டார்கள். அதையே சுருக்கி”பிலே” என்று செல்லமாக அழைக்கலாயினர். பின்னாளில் நரேந்திர நாத் என்ற பெயர் வழங்கலாயிற்று.சுருக்கமாக நரேன் என்று அழைத்தனர்.


செல்லப்பிள்ளை


 குழந்தைப்பருவம் இனிமையாக அமையப்பெறுவது ஒரு சிறந்த வாழ்க்கைக்கு நல்ல அடித்தளம் ஆகிறது. எந்தக்குழந்தையும் பெற்றோருக்குச் செல்லப்பிள்ளைதான். 

ஆனால் நீண்ட நாட்கள்தவம் செய்து பிரார்த்தனை செய்து ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் இடம் தனி.அப்படிப்பிறந்தவன் நரேன். எனவேஅவன் செல்லப்பிள்ளையாக இருந்ததில்  வியப்பொன்றும் இல்லை. தனது அழகாலும், துறுதுறுப்பாலும் , துடுக்குத்தனங்களாலும் காண்போர் அனைவரையும் கொள்ளை கொண்டான் அவன். 

அத்ததைமார், சித்திகள், உறவினர், பக்கத்துவீட்டுக் காரர்கள், என்று யார் வந்தாலும் அவர்களுடன்  ஒட்டிக்கொள்வான். அவனுடன் விளையாடவும் அவனைச் சீராட்டவும் வீட்டில் உறவுக்குழந்தைகள், நண்பர்களின் குழந்தைகள் என்று பலர் இருந்தனர். அவனுக்காக விளையாட்டுச் சாமான்களும் ஏராளம் இருந்தன.

மிருகங்களிடமும் பறவைகளிடமும் மிகுந்த பரிவு காட்டினான் நரேன். குரங்கு, ஆடு மயில், புறா, வெள்ளெலிகள் என்று பல்வேறு பிராணிகளை வாங்கி அளித்திருந்தார் விசுவநாதர். 

🌸

அங்கே ஒரு மிருகக்காட்சி சாலையே இருந்ததென்று தான் சொல்லவேண்டும். அவன் தன் கையாலேயே அவற்றைக் குளிப்பாட்டுவான். அவற்றிற்கு உணவு ஊட்டுவான், கொஞ்சி மகிழ்வான். பசுக்கள் என்றால் அவனுக்குக் கொள்ளைப் பிரியம். விசேஷ நாட்களில் பெரியவர்கள் பசுவை வழிபடும்போது அவனும் பசுவிற்குப் பொட்டிட்டு வணங்குவான்.சற்று வளர்ந்த பிறகு, அவன் சவாரி  செய்ய ஒரு குதிரைக்குட்டியையும் வாங்கி அளித்தார் விசுவநாதர்.

🌸


தன் வீட்டில் உள்ள வண்டியோட்டியை மிகவும் நேசித்தார்  நரேன். நேசித்தான் என்று மட்டுமல்ல, பின்னாளில் வண்டியோட்டியாக ஆக வேண்டும் என்பது அவனது பிள்ளைக்கால லட்சியமாகவும் இருந்தது. வண்டியோட்டியின் தலைப்பாகையும், சீருடையும், சாட்டையும், அவனது  சொடுக்கில் பாய்தோடும் குதிரைகளும் நரேனின் கண்களுக்கு அரியபெரிய விஷயங்களாகத் திகழ்ந்தன.குதிரைகளை  அவன் மிகவும் நேசித்தான். மிகச்சிறந்த குதிரைகளை வாங்குவேன், ஊரிலுள்ள மிகச்சிறந்த வண்டிகளை வாங்குவேன், மிகவும் துணிச்சல் வாய்ந்த வண்டியோட்டியை வைத்துக் கொள்வேன்” என்றெல்லாம் சொல்வான் அவன்.

🌸

மழலைக்குறும்புகள்

🌸

துடுக்கு, குறும்பு, சுட்டித்தனம் அனைத்தும் கலந்த ஒரு துறுதுறு குழந்தை நரேன். எப்போதும் பரபரப்பும் படபடம்புமாக இருப்பான் அவன். தொடர்ந்து சில நிமிடங்கள் அவனால் அமைதியாக இருக்கஇயலாது. 

அமர்வதும் எழுவதுமாக இருப்பான். வேறு எதுவும் செய்ய இயலாவிட்டால் விஷமம் செய்வான். அவனைக் கட்டுப்படுத்துவது சாதாரணமான காரியம் அல்ல. எந்தக் கண்டிப்பும் அவனை அடக்க முடியாது. 


புவனேசுவரி சலித்துப்போய், சிவபெருமானே பிள்ளையாக ப் பிறக்கவேண்டும் என்று வரம் கேட்டேன். அவரோ தன் பூதங்களில் ஒன்றை அனுப்பி வைத்துவிட்டார் ” என்று கூறுவார். அவன் அடங்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி ”சிவ சிவ ” என்று கூறியபடி, தலையில் குளிர்ந்த நீரைக் கொட்டுவது- அப்படியே பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவான்.

🌸

 அவனது குறும்புகளால் அலுத்துப்போகின்ற புவனேசுவரி சிலவேளைகளில் , இதோ பார் பிலே? இப்படி போக்கிரிப்பிள்ளையாக வளர்ந்தாயானால் சிவபெருமான் உன்னைக் கயிலாயத்தில் அனுமதிக்க மாட்டார்” என்று கூறுவாராம்.அப்போது அடங்கி விடுவான். 

🌸

சிவபெருமானிடம், அப்பா, சிவபெருமானே! இனி மேல் இப்படிச்செய்ய மாட்டேன், இந்த முறை மட்டும் மன்னித்துவிடு, என்று வேண்டியும் கொள்வானாம். ஆனால் வேண்டுதலுடன் சரி, குறும்பு? அது தொடரவே செய்தது.

சகோதரிகள் இருவரையும் ஒரே வழியாக்கி விடுவான் நரேன். அவர்களுக்கு அத்தனை தொல்லைகளையும் கொடுத்துவிட்டு, ஒரே ஓட்டமாக ஓடி தொருவோர சாக்கடையில் இறங்கி நின்று கொள்வான். அவர்கள் கட்டாயம் சாக்கடையில் வந்து தன்னைப் பிடிக்க மாட்டார்கள் என்பது அவனுக்குத்தெரியும். சாக்கடையில் நிற்பது மட்டுமல்ல அங்கிருந்து சேற்றை வாரி அவர்கள் மீது இறைத்து,  இப்போது பிடியுங்கள் பார்க்கலாம் என்று அவர்களைச் சீண்டி அழகு காட்டவும் செய்வானாம். அவனைப்பராமரிக்க மட்டும் இரண்டு பணிப்பெண்களை வைத்திருந்தேன் என்று பின்னாளில் புவனேசுவரி கூறினார்.

🌸

தட்டில் இனிப்பை வைத்து குழந்தைகள் அனைவருக்குமாகக்கொண்டு வருவார்கள் நரேனின் பங்கிற்கு ஒன்று கிடைக்கும்  அதை எடுத்து சுவைத்துப்பார்ப்பான். நன்றாக இருந்ததென்றால்  தான் சுவைத்ததில் மீதியை அந்தத்தட்டில் இருக்கின்ற இனிப்பு முழுவதிலும் தூவிவிடுவான்.பிறகு எல்லாம் எச்சிலாகிவிட்டது இனி இதை யார்  சாப்பிடுவார்கள் என்று கேட்டுவிட்டு , குறும்புக் கண்ணால் அனைவரையும் பார்ப்பான் அவன் நினைத்தது தான் நடக்கும். யாரும் அதைத்தொட மாட்டார்கள். வேண்டுமட்டும் தின்பான் அவன்.


ஆரம்பகல்வியும் ஆன்மீகத்தின் விதையும்


தாயின் மடியில் தான் குழந்தையின் கல்வி ஆரம்பமாகிறது. தாய் கொண்டுள்ள நற்பண்புகளும் நல்ல லட்சியங்களும்  தாய்ப்பாலுடன் குழந்தைக்குக் கல்வியாக அமைகின்றன. தாய் ஒரு குழந்தையை  வளர்க்கும் விதம் அவனது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் மிக முக்கிய ப் பங்கு வகிக்கிறது. நரேனின் தாய் அவனுக்குக் கொடுத்த கல்வி ஈடிணையற்றது.வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்திற்கும் நான் என் தாய்க்குக் கடமைப்பட்டுள்ளேன் என்று பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கூறுவதுண்டு.


தேவதேவியர், முனிவர்கள், அவர்களது தியாக வரலாறுகள், காவிய நாயகர்கள் என்று இந்திய க் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களைக் கதைகள். வாயிலாகவும், பாடல்கள் வாயிலாகவும் புவனேசுவரியிடமிருந்து பெற்றான் நரேன். குறிப்பாக, அவர் சொல்லிவைத்த ராமாயண, மகாபாரதக்கதைகள் அவனது மனத்தில் நீங்கா இடம் பெற்றனஃ தனது பாட்டி மற்றும் அவரது தாயாரிடமிருந்தும் பல்வேறு பாகவதக் கதைகளையும் கேட்டான் அவன்.


அந்த நாட்களில் தெருப்பாடகர்கள், உணவைப் பிச்சை யேற்றுப்பெறுகின்ற அதே நேரத்தில் வரலாற்று உண்மைகளையும் தத்துவங்களையும் வீரக் கதைகளையும் எளிய நாடோடிப் பாடல்களாகப் பாடிச்செல்வார்கள். எழுதப்படிக்கத் தெரியாத கிராமவாசிகளுக்கும் சிறுவர் சிறுமியருக்கும் இந்தப் பாடல்கள் ஆரம்பக் கல்வியின் ஒரு முக்கிய அம்சமாகத் திகழ்ந்தன. சிலவேளைகளில் தனியாகவும் சிலவேளைகளில் கூட்டமாகவும், கண்ணனின் அலங்காரத்துடனும், தேவியின் படத்தைக்கைகளில் ஏந்தியும் வருகின்ற அவர்களை நரேனுக்காகவே  அழைத்து, தங்கள் வீட்டின் முன்னால் பாடச்சொல்வார் புவனேசுவரி, பாடி ஆடுகின்ற அவர்களின் முன்பு ஆடாமல் அசையாமல் அமர்ந்து கண்டும் கேட்டும் மகிழ்வான் நரேன். வீட்டில் தினமும் பிற்பகல் வேளையில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் வாசிப்பார்கள். அந்த வேளைகளிலும் குறும்புகள் அனைத்தையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்து கேட்பான்.


கதை கதையாம்


இப்படிக்கேட்ட கதைகளைத் தம்பி தங்கையருக்குக்கூறி அவர்களை மகிழ்விப்பான். எல்லோரும் ஒரே இடத்தில் தான் படுப்பார்கள். முதலில் நரேன் பிறகு மகேந்திரன் , சகோதரியர், பாட்டி, தாய் என்று படுத்திருப்பார்கள். ( அந்த நாட்களில் பூபேந்திரர் பிறக்கவில்லை. அவர் சுவாமி விவேகானந்தருக்குச் சுமார் பதினாறு வயது நடந்தபோது தான் பிறந்தார்)நரேன் சிலவேளைகளில் தலையணையில் முகத்தைப்புதைத்தபடி குப்புறப்படுத்திருப்பான். மகேந்திரன், ”அண்ணா ஒரு கதை சொல்”  என்று கேட்டால் போதும், உடனே நிமிர்ந்து படுத்துக் கொண்டு ஆரம்பிப்பான்.


கைகளின் நிழல் சுவரில் விழும் படிச்செய்து, அதில் பல்வேறு உருவங்களைக் காட்டுவதிலும் நரேன் கைதேர்ந்தவனாக இருந்தான். அவனது தம்பி தங்கையர் எப்போதும் அவனிடம் இதனைச்செய்து காட்டுமாறு கேட்பது வழக்கம். உடனே ஒரு விளக்கை எடுத்துக்கொள்வான். அதன் ஒளி சுவரில் படுமாறுவைத்துக்கொள்வான். பிறகு கைகளை விளக்கிற்கும் சுவருக்கும் இடையில் வைத்து வளைத்தும் பிணைத்தும் துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி, கணபதி, பறக்கும் வௌவால், குதிரையில் செல்லும் வீரன் என்று பல வடிவங்களைக்காட்டுவான். இதில் நரேன் திறமை சிறப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் பார்ப்பவர்கள் தங்கள் கற்பனைத் திறனையும் கொஞ்சம் பயன்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.


முதல் அகவுணர்வுநிலை


தாயிடமிருந்தும் தெருப்பாடகர்களிடமிருந்தும் பிறரிடமிருந்தும் கேட்ட ராமாயணக்கதையும்  ராமர் –சீதை லட்சியங்களும் நரேனின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தன. பூஜையறையில் தேவ தேவியர் முன்பு பெரியவர்கள் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட போது, நரேனுக்குத்தானும் அது போல் தியானம் செய்ய வேண்டும் என்று ஆவல் எழுந்தது. 


எனவே நண்பன் ஹரியுடன் சென்று ஒரு சீதாராமர் பொம்மையை வாங்கினான். வீட்டில் பொதுவாக ஆள் நடமாட்டமில்லாத மாடியறை ஒன்றைத்தேர்ந்தெடுத்துக் கொண்டான். உள்ளே சென்று அறையைத் தாழிட்டுக்கொண்டு அந்தப் பொம்மையை வைத்து, அதன் முன்பு கண்களை மூடிக்கொண்டு இருவரும் அமர்ந்தனர். நீண்ட நேரம் அவர்களைக் காணாததால் இருவர் வீட்டிலும் தேடத் தொடங்கினர். பல இடங்களிலும் தேடிய பிறகு அந்த அறைக்கு வந்து சேர்ந்தனர்.


கதவைத் தட்டிப்பார்த்தனர். எந்தப் பதிலும் இல்லை. எனவே உடைத்துத் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.வெளியில் கசமுச வென்ற சத்தங்களும், கதவைத்திறப்பதற்கான முயற்சிகளும் எழுந்ததை ஹரிகேட்டான். அவர்கள் தாழ்ப்பாளை உடைத்து கதவைத் திறந்ததும் அவன் எழுந்து ஓடிவிட்டான்.நரேன் மட்டும் தன்னை மறந்த நிலையில் கண்களை மூடி அமர்ந்திருந்தான். எவ்வளவோ அழைத்தும் அவன் எழவில்லை. உலுக்கித்தான் அவனைச் சுய நினைவுக்குக் கொண்டு வரவேண்டியிருந்தது. கண்களைத்திறந்த அவன், ஏன் என்னைத்தொந்தரவு  செய்கிறீர்கள்? என்னைத் தனியாக விட்டுவிடுங்கள்” என்றான். 


வழக்கத்திற்கு மாறான  வற்புறுத்தலும் அழுத்தமும் அவனது குரலில் தொனித்தது. ஒரு வகையான திகைப்புடன் அவனை விட்டு விட்டுச் சென்றனர். நரேனின் தியானம் வயதுக்கு மீறிய ஒரு செயலாக அவர்களுக்குப்பட்டது. இந்த நிகழ்ச்சி நரேன் அகவுணர்வில் ஆழ்ந்திருக்கின்ற  திறம் பெற்றிருப்பதைக் காட்டுகின்ற முதல் நிகழ்ச்சியாகும். அப்போது அவனுக்கு ஏழு வயது.


ஒருவனுக்கு ஒருத்தி என்று ராமர் கொண்டிருந்த லட்சியமும், ஒரு லட்சிய மனைவியாக வாழ்ந்த சீதையின் சித்திரமும் நரேனின் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. இத்தகைய லட்சிய வாழ்க்கையில் ஈடுபடுவதே மிகவுயர்ந்த லட்சியம் என்று அவன் நம்பினான்.ஆனால் ஒரு நாள் வண்டியோட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அந்த வண்டியோட்டி திருமண வாழ்க்கையிலுள்ள சிரமங்களையும் கஷ்டங்களையும் கதை கதையாகக்கூறினான். கடைசியில் திருமண வாழ்க்கையே பயனற்றது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டான். 


அப்படியானால் நரேனின் சிந்தனை சுழன்றது. ராமரும் திருமணம் செய்தவரல்லவா! பயனற்றதான திருமணத்தை ஏற்றுக்கொண்ட அவரை நான் எப்படி வழிபடுவது?என்று அவனுக்குத்தோன்றியது. அதன் பிறகு அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. ஓவென்று அழுதவாறே ஓடிச்சென்று தாயின் மடியில் படுத்துக்கொண்டு தன் பிரச்சனையைக்கூறினான். அதனால் என்னப்பா! நீ ராமனை வணங்கவேண்டாம், சிவபெருமானை வணங்கலாமே! அவர் தியாக மூர்த்தி அல்லவா! என்று சமயோசிதமாகப் பதில் கூறினார். இந்தப் பதில் நரேனுக்கு மிகவும் இதமாக இருந்தது. ஓடோடிச்சென்றான், மாடியறையில் வைத்திருந்த சீதாராமர் சிலையைத்தூக்கிப் போட்டு விட்டான்.


மறுநாளே சிவபெருமான் சிலை ஒன்றை வாங்கி சீதாராமர் சிலை இருந்த இடத்தில் வைத்து மலர்கள் சமர்பித்து அதன் முன்னால் கண்களை மூடியபடி அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான். ஒன்றை எடுத்துக்கொண்டால், அதில் முற்றிலுமாக ஆழ்ந்து ஈடுபடுவது என்பது அந்தச் சின்ன வயதிலேயே அவனிடம் இயல்பாக இருந்தது.


சீதாராமர் சிலையைத்தூக்கி எறிந்தாலும் நரேனுக்கு ராமாயணத்திலும், ராமர் சீதை லட்சியங்களிலும் , ஆஞ்சநேயரிடமும் இருந்த ஈடுபாடு மறையவில்லை. பக்கத்தில்எங்கே ராமாயணம் வாசித்தாலும் தவறாமல் அங்கே போவான் . ஒரு நாள் ராமாயண வாசிப்பின் போது பண்டிதர் ஒருவர், ஆஞ்சநேயர் வாழைத்தோட்டங்களில் வாழ்வதாக கூறினார். இது நரேனின் பிஞ்சு மனத்தில் ஆழப் பதிந்தது. அவன் நேராக அந்தப் பண்டிதரிடம் சென்று , ஐயா! நீங்கள் சொல்வது உண்மைதானா? வாழைத் தோட்டத்திற்குப்போனால் ஆஞ்சநேயரைக் காண முடியுமா? என்று கேட்டான். சிறுவனுக்கு ஏதாவது பதில் சொல்லி வைக்க வேண்டுமே என்று அந்தப் பண்டிதர், கட்டாயமாக! நீ போனால் அவரைக்காணலாம்.  போய்த்தான் பாரேன் என்றார்.


வீட்டிற்குத் திரும்பும்போது அருகில் வாழைத்தோட்டம் இருப்பது நரேனுக்கு நினைவுக்கு வந்தது. எனவே நேராக வாழைத்தோட்டத்திற்குச்சென்றான், அங்கே ஆஞ்சநேயருக்காகக் காத்திருந்தான். நீண்ட நேரம் இருந்தான். ஆஞ்சநேயர் வரவில்லை. தளர்ந்த மனத்துடனும் வாடிய முகத்துடனும் வீடு திரும்பினான். அவனது நம்பிக்கை குலைந்து விடக்கூடாதேஎன்று புவனேசுவரி, ஆஞ்சநேயர் ஏதாவது அவசரவேலையாக வெளியே போயிருக்கலாம். அதனால் தான் அவரை நீ பார்க்க முடியவில்லை, என்று அவனைத்தேற்றினார். தாயின் பதில் நரேனுக்கு ஆறுதலாக இருந்தது.


மற்றொரு நாள் யாரோ ஒருவர், நம் ஒவ்வொருவரின் செயல்களையும் கடவுள் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்று கூறியதைக்கேட்டான் நரேன்.உடனே படுக்கையறைக்கு ஓடிச்சென்று படுத்துக்கொண்டு கூரையையே பார்த்தான். கூரை இப்போது திறக்கும், அதில் கடவுளின் முகம் தெரியும்” என்று எண்ணினான் அவன்.


துறவியரிடம் நாட்டம்


காவி அணிந்த துறவியர் நரேனைமிகவும் கவர்ந்தனர். கையில் எது கிடைத்தாலும் அவர்களுக்குக்கொடுத்து விடுவான். வேறு எதுவும் கிடைக்காவிட்டால் உடுத்திருக்கின்ற துணியையே கொடுத்துவிடுவான். கேட்டால். அவர்களுக்குத்தேவை, என்னிடம் இருந்தது, கொடுத்தேன். என்பானாம். 

விசுவநாதரின் தாராளமான மனம் காரணமாக வீட்டில் துறவியர் பலர் வந்து போவதுண்டு. துறவியர் வந்தால் நரேனை ஓர் அறையில் அடைத்துவிடுவார்கள். இல்லாவிட்டால் வீட்டில் எதுவும் மிஞ்சாது. ஆனால் அறையில் அடைத்தாலும் ஜன்னல் வழியாகப்பொருட்களைத்துறவியருக்காக எறிந்து விட்டு ஆனந்தத்தில் குதிப்பான். 


பள்ளியில் படிக்கும்போது புதிதாகச்சேர்கின்ற மாணவனிடம் சென்று அவனது முன்னோரைப்பற்றி கேட்பான். குறிப்பாக அவனது தாத்தா, யாராவது துறவியாகியிருக்கிறாரா என்று விசாரிப்பான். அப்படி யாராவது ஆகியிருப்பது தெரிந்தால் அந்த மாணவனிடம் நெருங்கிப் பழகுவான் அன்பு காட்டுவான்.

 சிலவேளைகளில் நரேனும் நண்பர்களும் ஒருவருக்கொருவர் கைரேகை பார்த்துக்கொள்வார்கள். எல்லாம்  விளையாட்டு தான்! நரேன்  தான் கைரேகை நிபுணர்! தன் கையிலுள்ள ஏதாவது ரேகை ஒன்றைக்காட்டி , இதோ பாருங்கள், இந்த ரேகை இருப்பதால் நான்  துறவியாவேன் என்பான். இப்படித் தம்மிடம் தாத்தா ஒருவர் கூறியிருப்பதாகவும் தெரிவிப்பான். நரேன் , நீ துறவியானால் நாங்களும் துறவிகளாகி விடுவோம். என்று நண்பர்கள் கூறுவார்கள். அந்த அளவிற்கு நண்பர்களின் மனத்தில் இடம் பிடித்திருந்தான் அவன்.


நரேன் தனது பாட்டனாரான துர்க்கா  பிரசாதின் சாயலை  ஒத்திருந்தான். பாருங்கள், நானும் ஒரு நாள்  என் தாத்தாவைப்போல்  சன்னியாசி ஆகிவிடுவேன் என்று தன் நண்பர்களிடம் கூறுவான்.


எல்லா தெய்வங்களிலும் நரேனுக்கு மிகவும்  பிடித்திருந்தது சிவபெருமானைத்தான் . அனைத்தையும் துறந்து, தியாகத்தின் வடிவமாக அவர் வீற்றிருப்பது அவனது  மனத்தை மிகவும் கவர்ந்தது. சில வேளைகளில் அவனும் துணிகளை எல்லா ம் கழற்றி எறிந்துவிட்டு, கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு திரிவான். புவனேசுவரியின் மனத்தை  இது நெருடும். எங்கே இவனும் இவனது தாத்தாவைப்போல் துறவியாகி போய்விடுவானோ! என்று கவலை கொண்டார் அவர். நரேன் என்ன இது? இது என்ன கோலமடா? என்று கேட்டார். நான் சிவனாகிவிட்டேன். பார், நான் சிவனாகிவிட்டேன். நானே சிவன், என்றான் நரேன். அவன் தெரிந்து சொன்னானோ, தெரியாமல் சொன்னானோ! ஆனால் மிகவும் உயர்நிலை மந்திரமான நானே சிவன்( சிவோஹம்) என்பதை அந்தக் குழந்தைப் பருவத்திலேயே சொன்னான் அவன்.


நான் துறவியாக இருந்தேன்!


மாடியறையிலுள்ள சிவபெருமானின் முன்னால் சென்று அமரும் போதெல்லாம் நரேனுக்குத் தன் தாயார் அடிக்கடி கூறுகின்ற வார்த்தைகள் நினைவுக்கு வரும். தமது பூதங்களில் ஒன்றை சிவபெருமான் வெளியில் துரத்திவிட்டதாகவும்   அந்தப்பூதம் தான் தான் என்றும் அவர்  குறிப்பிட்டது அவனை மிகவும் சிந்திக்கச்செய்தது. அப்படியானால் நான் ஏதோ குறும்பு செய்ததற்காக ஏதோ தவறு செய்ததற்காக  சிவபெருமான் என்னை அனுப்பிவிட்டாரா?  என்று அவன் மனத்தில்  சந்தேகமும் தவிப்பும் எழும், உடனே தாயிடம் ஓடிச்சென்று, அம்மா ஏனோ தெரியவில்லை. 

நான் எப்போதோ துறவியாக இருந்திருப்பேன்  என்று தோன்றுகிறது. தவறுகள் செய்யாமல், குறும்புகள்  செய்யாமல் இருந்தால் சிவபெருமான் மீண்டும்  என்னை ஏற்றுக்கொள்வாரா? என்று கேட்டான். அதற்கு  புவனேசுவரியும் ஆம்” என்று பதில் அளித்தார். ஆனால் நரேனின் கேள்வி புவனேசுவரியின் மனத்தை உறுத்தியது. இவனும் சிவபெருமானை நாடி, துறவியாகி விடுவானா? என்ற சிந்தனை அவருள் எழுந்தது. அப்படி நடப்பதற்கில்லை. அது பற்றியெல்லாம் சிந்திக்கின்ற வயது இவனுக்கில்லை என்று தெளிந்தார் அவர்.


விவரிக்க இயலாத ஆனந்தம் பெற்றேன்.


துறவில் நாட்டமும் சிவபெருமானிடம் ஈடுபாடும் அதிகரிக்க அதிகரிக்க நரேன் மாடியறையில் சிவபெருமானின் முன்பு தியானத்தில் அமர்வதும் அதிகரித்தது. வீட்டுப்பெரியவர் ஒருவர் ஒரு நாள் அவனிடம் நெடுங்காலம் தியானம் செய்தால் தலைமுடி வளர்ந்து, சடை விழுந்து , நீண்டு, ஆலம் விழுதுகளைப்போல் அப்படியே பூமிக்குள் செல்லும், என்று கூறினார். உடனே நரேன் சென்று தியானத்தில் அமர்ந்தான். அவ்வப்போது  பின்னால் திரும்பி தலைமுடி பூமிக்குள் செல்கிறதா என்று பார்த்துக்கொண்டான். அப்படி எதுவும் நடக்கவில்லை. உடனே தாயிடம் ஓடிச்சென்று ஏன் அப்படி நடக்கவில்லை என்று கேட்டான். அதற்கு புவனேசுவரி ஒரு நாளில் அப்படி நிகழ்வதில்லை. அதற்குப் பல மாதங்களும் பல வருடங்களும்  ஆகும் என்று பதில் கூறினார். 


நரேனின் தியானப் பயிற்சி தொடர்ந்தது, சில நேரங்களில் அவன் தன்னையும் மறந்து தியானத்தில் ஆழ்வது உண்டு. ஒரு நாள் நண்பர்களுடன் தியானம் செய்து கொண்டிருந்தான். அப்போது திடீரென்று அங்கே கருநாகப்பாம்பு ஒன்று வந்துவிட்டது.பாம்பைக் கண்டதும் நண்பர்கள் பஞ்சாகப் பறந்து விட்டனர். ஓரிருவர் தள்ளி நின்று அவனை அழைத்தனர். நரேன் அசையவில்லை. ஓடிச்சென்று வீட்டினரிடம் விவரம் தெரிவித்தனர். அவர்கள் மேலே சென்று பார்த்தால் நரேன் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்னால் பாம்பு படமெடுத்தபடி  நின்று கொண்டிருந்தது. என்ன செய்வதென்று அறியாமல் அவர்கள் திகைத்து நின்றபோது, தெய்வாதீனமாக, பாம்ப தானாகவே போய்விட்டது. அப்பொதும் அசைவின்றியே அமர்ந்திருந்த நரேனின் அருகில் ஓடிச்சென்று அவனை உலுக்கி எழுப்பினர். பாம்ப வந்தும் ஏன் ஓடவில்லை? என்று அவனிடம் கேட்டனர். அதற்கு அவன், நான் பாம்பைப் பார்க்க வில்லை. அது வந்தது எனக்குத் தெரியவும் செய்யாது. விவரிக்க இயலாத ஆனந்தத்தை நான் என் மனத்தில் அனுபவித்துக்கொண்டிருந்தேன் என்று கூறினார்.


ஆரம்பக்கல்வி


ஆறாம் வயதில் நரேனை முதன்முதலாகப் பள்ளிக்கு அனுப்பினார்கள். அது திண்ணைப்பள்ளி. முதல் நாளன்று புதிய வேட்டி அணிந்து கொண்டான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தாங்கள் அமர்வதற்கான ஆசனத்தைத் தாங்களே கொண்டு செல்லவேண்டும் நரேனும் சிறிய பாய் ஒன்றை கையில் வைத்துக்கொண்டான். மெல்லிய மூங்கிலால் ஆன பேனா ஒன்றும் கொண்டு சென்றான். அது தொலைந்து விடாதிருக்க, இடுப்பில் நீண்ட ஒரு கயிற்றை கட்டி வைத்திருப்பார்கள். இவ்வாறு முதல் நாள் பள்ளி செல்லும் மாணவர்களுக்கே உரிய கம்பீரத்துடன் பள்ளிக்குச்சென்றான் நரேன்.


ஆனால் அங்கே ஓரிரு நாட்கள்தான், பாடங்களைப் படிக்குமுன்னரே சக மாணவர்களிடமிருந்து கெட்ட வார்த்தைகள் ஏராளம் கற்றுக்கொண்டான். உடனே அந்தப்பள்ளிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் பெற்றோர். பிறகு அவனுக்கும்  வீட்டிலுள்ள மற்ற சிறுவர்களுக்குமாக ஓர் ஆசிரியரை வீட்டிலேயே நியமித்தார் தந்தை.அங்கே சக மாணவர்கள் எழுத்துக்களைக் கற்று முடிக்கும் முன்னரே நன்றாக எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டான அவன்.


அவனது நினைவாற்றல் அபாரமானது. ஒரு மறை கேட்டவற்றை அப்படியே அவனால் திருப்பி ஒப்பிக்க முடியும். அவன் பாடம் கேட்கிற விதமும் அலாதியானது. ஆசிரியர் பாடம் நடத்தும்போது கண்களை மூடியபடி அசையாமல் அமர்ந்திருப்பான். அல்லது படுத்துக்கொள்வான். அவன் என்ன செய்கிறான் என்பது முதலில் ஆசிரியருக்குப்புரியவில்லை. அவன் தூங்குகிறான் என்று முடிவுகட்டிய அவர் அவனை உலுக்கி எழுப்பி, பாட வேளைகளில் தூங்குவதற்காகக் கடிந்து கொண்டார். ஆசிரியரின் ஏச்சு முழுவதையும் மௌனமாகக்கேட்டுக்கொண்டான் நரேன். பிறகு அன்றைய பாடம் முழுவதையும் ஒரு வார்த்தை பிசகாமல் அப்படியே திருப்பிக்கூறினான். அவனது நினைவாற்றல் அவ்வளவு அபாரமாக இருந்தது. அதிர்ந்துவிட்டார் ஆசிரியர்.


இவ்வளவு சிறு வயதிலேயே இத்தனை புத்திக்கூர்மையையும் நினைவாற்றலையும் நரேனிடம் கண்ட உறவினர் ஒருவர் அவனுக்கு ”முக்த போதம்” என்னும் சம்ஸ்கிருத இலக்கணம், பரம்பரை வரலாறு,துதிப்பாடல்கள், ராமாயணம். மற்றும் மகாபாரதத்திலிருந்து நீண்ட பகுதிகள் போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தார். அவன் இரவில் தூங்குவதற்காகப் படுத்திருப்பான்.அப்போது அவர்  அவனது அருகில் அமர்ந்து ” அமரகோசம்” என்ற சம்ஸ்கிருத அகராதியின்  பல பகுதிகளை அவன் மனப்பாடம் செய்ய வைப்பார். சம்ஸ்கிருதத்தில் அவனுக்குத்தணியாத ஆர்வம் ஏற்படுவதற்கு இது ஒரு காரணமாக இருந்தது.


ஒரு வருடத்தில் நரேன் சம்ஸ்கிருதத்தில் நல்லதேர்ச்சி பெற்றதுடன் ராமாயண, மகாபாரதங்களின் பல பகுதிகளையும் மனப்பாடம் செய்துவிட்டான். ஒருமுறை தெருப்பாடகர் கூட்டம் ஒன்று அவனது வீட்டிற்கு முன்னால் வந்து ராமாயணப் பாடல்களைப்பாடியபோது அதிலிருந்த தவறுகளைச்சுட்டிக்காட்டி அவற்றைத்திருத்தும் அளவிற்குச் சிறுவனான அவனிடம் தேர்ச்சி இருந்தது.


நரேனுக்கு ஆறு வயதாக இருக்கும்போது அவனுடைய தாத்தாவான காளிபிரசாத்  இறக்கும் தறுவாயில் இருந்தார். அந்த வேளையில் குடும்பத்தினர் அனைவரையும் அருகில் அழைத்து மகாபாரதத்தைக்கேட்க விரும்பினார். ஆனால் படிப்பதற்கு யாரும் தயாராகஇல்லை. நரேன் மட்டும் ஓடிச்சென்று அந்தப் பெரிய நூலை எடுத்துவந்தான். தன் மடியில் அதனை வைத்தபடி மெல்லமெல்ல தனது மழலை மொழியிலேயே படித்தான். அக்கா ஹரமணி அவனுடன் சேர்ந்துகொண்டாள். அதில் கருடன் தன் தாயான வினதையைத்தோள் மீது ஏற்றிக்கொண்டு பறக்கின்ற கட்டம் வந்தது. அந்த முதியவரின் ஆவியும் உடம்பை விட்டுப் பறக்கத்தொடங்கியது. அவரது மூச்சு மிகவும் மெதுவாக வரத் தொடங்கியது. இருப்பினும் தன் ஆற்றலையெல்லாம் ஒன்று திரட்டி அவர் மனநிறைவுடன் ”குழந்தாய்” உனக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது” என்று வாழ்த்தினார். சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.


1871-இல் நரேனுக்கு எட்டு வயதாக இருக்கும் போது ஈசுவர சந்திர வித்யாசகரின்  மெட்ரோபாலிடன் பள்ளியில் சேர்த்தார்கள். அன்றைய பள்ளிகளில் அது மிகவும் பிரபலமானது. நரேனின் குடும்பத்தினர் பலரும் அதிலேயே படித்தனர்.


வரலாறு, சம்ஸ்கிருதம் ஆகியவை அவனுக்குப்பிடித்த பாடங்கள், முற்றிலும் பிடிக்காத ஒன்று கணிதம். பெட்டிக்கடைக்காரனுக்கு உரியது கணிதம்.என்று அவனது தந்தை கூறுவாராம். அது அவனையும் பற்றிக்கொண்டது போலும், ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் முற்றிலுமாக மறுத்துவிட்டான் அவன். தாய்மொழி என்ற ஒன்று இருக்கும்போது, அதனை நன்றாக படிப்பதை விட்டுவிட்டு ஏன் அன்னிய மொழியைப்படிக்கவேண்டும் என்பது அவனது வாதம். தாயும் தந்தையும் எவ்வளவோ முயன்றும் அவனைச்சம்மதிக்கச் செய்ய முடியவில்லை.


 முதிய உறவினரான நரசிம்ம தத்தர் அவனை அழைத்துச்சென்று எவ்வளவோ எடுத்துக்கூறிப் பார்த்தார். அவன் மசியவில்லை. பல மாதங்களுக்குப் பிறகு எப்படியோ அவன் அவரது அறிவுரையை ஏற்றுக்கொண்டான். ஆங்கில எழுத்துக்களையும் ஆரம்பப் பாடங்களையும் புவனேசுவரியே அவனுக்குக் கற்றுக்கொடுத்தார். ஆனாலும் அவனுக்கு அதில் பெரிய ஈடுபாடு உண்டாகவில்லை. அந்த நாட்களில் ஆங்கில ஆரம்ப நூல்களில் சிறுவர்களின் மனத்தைக் கவர்வதற்கான எதுவும் இல்லாததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்தியர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போன, அவர்கள் இயல்பாகச்செய்கின்ற ஒன்றை ஏதோ பிரமாதப்படுத்தி அவர்கள் எழுதி யிருப்பார்கள். அது அவனுக்கு என்னவோ போலிருந்தது. அது பற்றி பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கூறினார்.


நான் முதன்முதலில் ஆங்கிலம் கற்றுக்கொண்ட போது கடமையுணர்வு கொண்ட ஒரு சிறுவனைப்பற்றிய ஆங்கிலக் கதையொன்று படித்தேன். தான் வேலை செய்து பெற்றுவந்த கூலியில் சிறு தொகையைத் தன் தாய்க்குக் கொடுத்தான் அவன். இதைப்புகழ்ந்து நான்கைந்து பக்கங்கள் எழுதியிருந்தார்கள். அது என்ன பிரமாதமோ! இந்துச் சிறுவன்  ஒருவனுக்கு இந்தக் கதையின் நீதி புரியவே புரியாது. ” தனக்காக ஒவ்வொருவனும்” என்ற மேலை நாட்டுக்கருத்தை அறிந்த பின்னரே இப்போது அந்தக்கதை எனக்குப் புரிகிறது.  

                                                                                                                                                                                                                                                                                                                                              சிலரோ அனைத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டு, தாய், தந்தை, மனைவி, மக்களைக்கூடத் தவிக்கும் படி விட்டுவிடுகிறார்கள்.இல்லறத்தானின் லட்சியம் ஒரு போதும் ஓரிடத்திலும் இதுவாக இருக்கக்கூடாது.

ஆனால் யார் செய்த பண்ணியமோ ஏன் உலகமே செய்த புண்ணியம் தான் அவன் அந்த  மொழியை ஆர்வத்துடன் கற்க ஆரம்பித்தான். பின்னாளில் அந்த  மொழிக்கே ஓர் உயிருணர்வை ஊட்டுகின்ற விதத்தில் அதில் வல்லவன் ஆனான்.


நரேன் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்து அவனுக்கு அஜீரணக்கோளாறு ஆரம்பித்தது. இது நீண்ட காலம் அவனைத்தொந்தரவு செய்தது. எல்லாவற்றையும் முன்புபோல் அவனால் சாப்பிட முடியவில்லை. அஜீரணக்கோளாறுக்குப் பாதகமான சில உணவு வகைகளையே சாப்பிட வேண்டும். அவனுக்குத்தோன்றியது .உடல் மெலிந்து தோன்றினான். இருப்பினும் அவனது துறுதுறுப்பிலோ வேடிக்கை வினோதங்களிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை.


நரேன் நுண்ணறிவு படைத்தவன் . அவனுக்கு எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருக்கவேண்டும். சும்மா இருப்பது அவனால் இயலாத காரியம். ஏதாவது ஒன்றைச்செய்து கொண்டிருப்பான் அல்லது செய்வது பற்றி யோசித்துக் கொண்டிருப்பான். ஏதோ உள்ளே ஆற்றலின் ஊற்று ஒன்று பொங்கிக்கொண்டே இருப்பது போல் தோன்றும், அந்த அளவிற்கு அவன்  செயல்பட்டுக் கொண்டே இருப்பான். இன்று நாடகக்குழு ஒன்றைத்தொடங்குவான். நாளை நண்பர்களுடன் நாடகம் ஒன்றை நடித்துக் காட்டுவான். உடற்பயிற்சிகளில் ஈடுபடுவான். நண்பர்களுக்குப் பட்டப்பெயர்  சூட்டுவதிலும் வல்லவனாக இருந்தான். பொதுவாக நண்பர்களைப் பட்டப்பெயரிலேயே அழைக்கவும் செய்தான்.


விளையாட்டிலும் தீவிரமாக ஆர்வம் காட்டினான் நரேன். ஓடி ஒளிந்து விளையாடுவான். கோலி விளையாடுவதிலும் வல்லவன் அவன். போட்டியில் நண்பர்கள் அனைவருடைய கோலிகளும் ஒவ்வொரு நாளும்  நரேனுக்கு உரியவை ஆகிவிடும். உயரம் தாண்டுதல், ஓட்டம். கபடி, கண்ணாமூச்சி, குத்துச்சண்டை எல்லாம் அவனுக்கு அத்துபடியாக இருந்தது. ஆனால் தவறாமல் தினமும் ஒரு கால் சட்டை கிழிந்துவிடும்! ஒவ்வொரு நாளும் புதிய கால் சட்டை தைத்துக்கொடுப்பது விசுவநாதருக்கு வாடிக்கையாக இருந்தது.


நரேன் சிறு வயதிலேயே விளையாட்டுச் சாமான்களை வைத்து விளையாடுவதை மிகவும் விரும்பினான், வளர, வளர அவனது இந்த விருப்பம் விஞ்ஞானபூர்வமான கருவிகள் செய்வதில் ஆர்வமாக  வளர்ந்தது. எரிவாயுவால் இயங்கும் கருவிகள், பொம்மை ரயில் வண்டிகள், அன்று கல்கத்தாவில் மிகவும் பிரபலமாக இருந்த சோடா(குளிர் பானம்) தயாரித்தல் என்றெல்லாம் ஈடுபட்டான்.


No comments:

Post a Comment