Sunday, 14 June 2020

இந்துமதம்-வகுப்பு-18

இந்துமதம்-வகுப்பு-18🕉️
நாள்-9-6-2020
..
நான்கு ஆஸ்ரமம்
.
ஆஸ்ரமம் என்றால் தங்குமிடம்
ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும் ஒரே இடத்தில் தங்கக்கூடாது.
நான்கு இடங்களில் அவன் மாறிச்செல்ல வேண்டியிருக்கிறது.
பிறந்தபிறகு பெற்றோரின் இல்லத்திலும்,வளர்ந்த பிறகு குருவின் இல்லத்திலும்,திருமணம் புரிந்தபிறகு மீண்டும் பெற்றோருடனும்,பேரக்குழந்தை பிறந்த பிறகு வனத்தில் குடிசையிலும், மனைவி இறந்தபிறகு முழுவதும் தவத்திலும் ஈடுபட வேண்டும்.
..
1. பிரமச்சர்யம்
2. கிருஹஸ்தம்
3. வனபிரஸ்தம்
4. சன்யாசம்
..
1.பிரம்மச்சர்யம்
.
குழந்தை பிறந்து ஏழு முதல் பத்து வயது ஆன பிறகு, அவனை குரு வசிக்கும் இடத்திற்கு பாடம் பயில்வதற்காக அனுப்பி வைக்கிறார்கள்.அங்கே பன்னிரண்டு ஆண்டுகள் தங்கி பாடம் பயில வேண்டும்.
..
சொல்லிக்கொடுப்பவர் குரு
கற்றுக்கொள்பவர் சீடர்
சீடர்களுக்கு குரு பூணூல் அணிவிக்கிறார்.
கல்வி முடியும் பன்னிரண்டு ஆண்டுகளும் சீடன் பிரம்மச்சர்ய விரதம் கடைபிடிக்கிறான்
அனைத்து நற்குணங்களையும் வளர்த்துக்கொள்கிறான்
மாணவர்கள் வேதம்,இலக்கணம்,செய்யுள்,தர்ம சாஸ்திரங்கள்,கணிதம்,வானசாஸ்திரம்,ஆயுத பயிற்சிகள் போன்ற பல கலைகளை கற்றுக்கொள்கிறார்கள்.
குரு ஒவ்வொருவனது தனித்திறமையையும் கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு கல்வி போதிக்கிறார்.
..
குரு வசிக்கும் இடம் உலக தொடர்பிலிருந்து விடுபட்ட கானகத்தில் அமைந்திருக்கும்.
பொதுவாக குரு இல்லறவாசியாக இருப்பார்.மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பார்.
தங்களிடம் கல்வி கற்க வரும் மாணவர்களை தங்களது சொந்த குழந்தைகளாகவே பாவித்து அனைவரிடமும் அன்பை பொழிவார்.
மாணவர்கள் ஆசிரியரையும் அவரது மனைவியையும் தாய்,தந்தையர்போல கருதுவார்கள்
வீட்டிற்கு தேவையான அனைத்து வேலைகளையும் மாணவர்களே செய்துகொடுப்பார்கள்.
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள உறவு பணத்தின் அடிப்படையில் அமைந்தது அல்ல.
ஆசிரியர் தனக்குத் தெரிந்த அனைத்து வித்தைகளையும் இலவசமாகவே போதிப்பார்.
மாணவர்களிடமிருந்து எந்தவித வெகுமானத்தையும் எதிர்பார்க்க மாட்டார்.
..
ஆஸ்ரமத்தில் அதிக எண்ணிக்கையில் பசு வளர்ப்பார்கள்
படிக்கும் நேரம் தவிர பிற நேரங்களில் மாடு மேய்ப்பது,கானத்திலிருந்து உணவு சேகரிப்பது,குருவுக்கு சேவைசெய்வது போன்ற அனைத்து பணிகளையும் மாணவர்களே செய்துவருவார்கள்
அனைவருக்கும் தேவையான உணவுகளை மாணவர்களே தயார்செய்வார்கள்
..
கல்வியை முடித்த மாணவன் ஸ்நாதகன் என்று அழைக்கப்பட்டான். அறிவு என்னும் நீரில் வெற்றிகரமாக நீராடி முடித்தான் என்று பொருள்படும்
பன்னிரண்டு ஆண்டுகள் படிப்பு நிறைவடைந்தபிறகு பிரிவு உபசாரவிழா நடக்கும்.
அதில் மாணவனின் பெற்றோர்கள் கலந்துகொள்வார்கள்.ஆசிரியருக்கு பரிசுபொருட்கள் வழங்குவார்கள்.
..
பொதுவாக ஆண் குழந்தைகள் மட்டுமே குருவிடம் தங்கி பாடம் பயின்று வந்தார்கள்.
திருமணத்திற்கு பிறகு கணவன்தான் பெண்ணிற்கு குருவாக இருந்து அனைத்தையும் அவளுக்கு சொல்லிக்கொடுப்பான்.
.
அதே நேரம் குருவின் பெண் குழந்தைக்கு அனைத்து கல்வியையும் குரு வழங்குவார்.
சிறுவயதிலேயே அனைத்து ஞானத்தையும் பெற்று ஆண்களுக்கு நிகரான சில பெண்களும் இருந்திருக்கிறார்கள்.
..
2. கிருஹஸ்தம்
..
பண்டைய ஆரியர்களின் வாழ்க்கை நிலையின் இரண்டாவது கட்டம் கிருகஸ்தம். இந்த நிலை திருமணம் புரிந்துக் கொண்ட பின் துவங்குகிறது. மாணவன் வீடு திரும்பிய பிறகு ஆசிரியரின் அனுமதியுடன் தன்னுடைய ஜாதிப்பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்து கொள்வான்.
.
இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும்.
மேலும் தவம், யாகம், யக்ஞம், தானம், அகிம்சை, பொருமை ஆகிய நற்பண்புகளை இல்லற தர்மத்தில் கடைபிடிக்க வேண்டும்.
இல்லறத்தார்கள் பஞ்ச மகாயக்ஞங்கள் எனும் கர்மங்கள் செய்யவேண்டும்
..
1. தேவ யக்ஞம்:- தெய்வங்ளை வழிபடுவது.
.
2. ரிஷி யக்ஞம்:- ரிஷிகளை வணங்குதல்.அவர்கள் அருளிய சாஸ்திரங்களை படித்தல் மற்றும் பிறருக்கு போதித்தல்
..
3. பித்ரு யக்ஞம்:- நீத்தார் வழிபாட்டின் மூலம் தமது மூதாதைர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பதின் மூலம் இறந்த முன்னோர்களை மகிழ்விப்பது.
..
4. மனுஸ்ய யக்ஞம்:- வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு உணவு படைப்பது.
..
5. பூத யக்ஞம்:- பசு, காகம் முதலிய விலங்குகளுக்கு உணவு படைத்தல்.
.
பண்டைய காலத்து நீதி நூல் வல்லுனரான மனுவின் கூற்றின்படி பெண்களைப் பாதுகாப்பது , கௌரவமாக நடத்துவது போன்றவை கிருஹஸ்தனின் கடமை. அவர்களுக்கு அவ்வப்போது விடுமுறை நாட்களிலும் பண்டிகையின்போதும் வெகுமதிகள் அளிக்க வேண்டும்.அவரது கூற்றின் படி எங்கு உறவினரான பெண்கள் வருத்தத்துடன் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் முழுவதுமாக அழிந்து விடும்.ஆனால் அதே சமயம் எங்கு பெண்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களோ அந்தக் குடும்பம் செல்வச் செழிப்போடு விளங்கும். கணவனும் மனைவியும் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக இருத்தல் அவசியம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வீட்டில் மகிழ்ச்சியானச் சூழல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவர்களது கடமையாகும்.
-
எந்தக் குடும்பத்தில் மனைவியால் கணவன் மகிழ்ச்சியடையச் செய்யப்படுகிறானோ, அதே போன்று கணவனால் மனைவி மகிழ்ச்சியாக வைக்கப்படுகிறாளோ அந்தக் குடும்பத்தில் என்றும் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது என்று மனு கூறுகிறார். குழந்தைகள் நல்லமுறையில் வளரக்கூடிய சூழ்நிலையை அது உருவாக்கும். குழந்தைகளைச் சீரிய முறையில் வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மனைவியானவள் “அர்த்தாங்கினி” என்று அழைக்கப்பட்டாள். இலட்சிய மணவாழ்க்கையின்படி கணவனும் மனைவியும் ஓர் உடலின் இரு பிரிவுகளாக விளங்க வேண்டும். எனவே தான் அரை உடலை உடையவள் “ என்ற பொருளைத்தருகின்ற அர்த்தாங்கினி என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள்.மனைவியை ஆன்மீக வாழ்க்கையின் பங்காளி என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் சகதர்மிணி என்றும் அழைத்தனர். கணவன் மனைவி ஆகிய இருவருமே ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மனிதன் கடவுளை உணரவேண்டும் என்பதே ஆரியர்களின் வாழ்க்கை நியதியாக இருந்தது.அதை பெறுவதற்கு சமுதாயத்தை தயார்படுத்துவதே முன்னோர்களின் பணியாக இருந்தது.ஆரியர்களது சமூகத்தில் ஓர் உறுப்பினர் வாழ்க்கையின் எந்த நிலையில் இருந்தாலும் குறிக்கோள் கடவுளை உணர்தல் என்பது வலியுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment