Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-10

🌸

பாஸ்கரானந்தருடன்

 

பாஸ்கரானந்தர் தமது கல்விக்காகவும் தவ வாழ்க்கைக்காகவும் மிகவும் மதிக்கப் பட்டவர். பொதுவாக ஆடை இன்றியே வாழ்ந்தார் அவர். அவரையும் சுவாமிஜி சந்தித்தார். சுவாமிஜியின் தெய்வீகப் பொலிவைக் கண்ட பாஸ்கரானந்தர் அவரை அன்புடன் வரவேற்றார். இருவரும் பல விஷயங்களைப்பேசினர். அப்போது பாஸ்கரானந்தர் , ”காமத்தையும் பணத்தாசையையும் முற்றிலுமாக யாரும் துறக்க முடியாது. என்று கூறினார். அதற்கு சுவாமிஜி, சுவாமி அது எப்படி? அவற்றை முற்றிலும் துறந்த எத்தனையோ பேர் உள்ளனர். ஒரு துறவியின் வாழ்க்கையும் லட்சியமும் அதுவே அல்லவா? காமத்தையும் பணத்தாசையையும் வேருடன் களைந்த ஒருவரை நானே பார்த்திருக்கிறேன் என்றார். அதற்கு பாஸ்கரானந்தர் மென்மையாகச் சிரித்துவிட்டு, நீ சிறுவன், உனக்கு என்ன தெரியும்? என்றார். இதைக்கேட்டபிறகு  சுவாமிஜியால் சும்மா இருக்க முடியவில்லை. காமத்தையும் பணத்தாசையையும் வென்று வாழ்ந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் பெருவாழ்க்கை சுவாமிஜியின் மனத்தில் நிழலாடியது. அதனை எடுத்துக்கூறி, உணர்ச்சி பொங்கத் தமது கருத்துக்களை வெளியிட்டார். அவரது உணர்ச்சிப் பெருக்கைக் கண்ட பாஸ்கரானந்தர் அருகில்  இருந்தவர்களிடம், ஓ! இவனது நாவில் கலைமகள் நடமிடுகிறாள், இவனது மனம் ஒரு பேரொளி போல் விளங்குகிறது என்று கூறினார்.

சுமார் ஒரு வாரகாலம் காசியில் தங்கிவிட்டு, திடீரென்று வராக நகர் மடத்திற்குத் திரும்பினார் சுவாமிஜி. சில நாட்கள் சகோதரத் துறவியருடன் கழித்துவிட்டு மீண்டும் தனிமை வாழ்க்கையை நோக்கிப் புறப்பட்டார்.

மீண்டும் காசிக்குச்சென்றார் சுவாமிஜி. தமது சகோதர துறவியான சுவாமி அகண்டானந்தரின் மூலம் அங்கே பிரமததாஸ் மித்ரர் என்ற சம்ஸ்கிருத அறிஞருடன் நெருங்கிப் பழகும்  வாய்ப்பு சுவாமிஜிக்குக் கிடைத்தது. அவர்கள் இருவரிடையே தோன்றிய நட்பு நீண்ட காலம் நீடித்தது. சாஸ்திரங்களில் தமக்கிருந்த சந்தேகங்கள் பலவற்றை நேரிலும், பின்னாளில் கடிதங்கள் மூலமும் பலமுறை சுவாமிஜி அவரிடம் தெரிவித்து

தெளிவுபெற்றார்.

 

வட இந்தியாவில்

 

காசியிலிருந்து, அயோத்தி , லக்னோ வழியாக ஆக்ரா சென்றார் சுவாமிஜி. முகலாயரின்  கட்டிடங்களும் நினைவுச்சின்னங்களும் சுவாமிஜியின் கலையுணர்வை வெகுவாகத் தூண்டின. குறிப்பாகத் தாஜ்மஹாலின் பேரழகு அவரை மிகவும் ஆக்கிரமித்தது. பலமுறை சென்று பல கோணங்களில் அதனைக் கண்டு ரசித்தார் அவர். அற்புதமான இந்தக் கலைப்படைப்பின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் பார்த்துப் புரிந்து கொள்ள ஒரு நாள் வேண்டும். முழுமையாக இதனை அறிய குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும், என்று கூறுவார் சுவாமிஜி.

 

என்னிடமும் ஜாதி உணர்வா?

 

ஆக்ராவிலிருந்து பிருந்தாவனத்திற்குப் புறப்பட்டார் சுவாமிஜி. கடைசி 30 மைல்கள் அவர் நடந்தே செல்ல வேண்டியிருந்தது. பிருந்தாவனத்தை அடைய இன்னும் இரண்டு மைல்களே பாக்கியிருந்தன. பசியும் களைப்பும் மேலிட நடந்து சென்று கொண்டிருந்தார் சுவாமிஜி. வழியில் ஒருவன் சாலை ஓரமாக அமர்ந்து ஹீக்காவில் புகைபிடித்துக் கொண்டிருந்தான். சற்று புகை இழுத்தால் ஓர் உற்சாகம் பிறக்குமே என்று எண்ணிய சுவாமிஜி அவனிடம்  சென்று தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அதற்கு அவன், அதெப்படி சுவாமிகளே முடியும்? நான் ஒரு துப்புரவாளன், என் ஹீக்காவில் நீங்கள் புகைபிடிப்பதா! என்று கேட்டான்.உண்மைதானே! இவனது ஹீக்காவில் நான் புகைபிடிப்பதா? என்று அங்கிருந்து நடக்கத் தொடங்கினார் சுவாமிஜி. சிறிது நேரம் சென்றிருப்பார், சட்டென்று அவரது மனத்தில் ஒரு கேள்வி எழுந்தது. என்ன! நான் ஒரு துறவி. ஜாதியுணர்வு, குலப்பெருமை அனைத்தையும் விட்டு விடுவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டவன் நான். ஒரு கணத்தில் இப்படி என்னை மறந்து விட்டேனே! இந்த எண்ணம் எழுந்ததும் வெட்கத்தில் குமைந்தார் சுவாமிஜி. விரைந்து அவனை அணுகினார். சகோதரா, நான் புகைபிடிக்க ஏற்பாடு செய், என்று கேட்டார். அந்த மனிதன் மீண்டும், சுவாமி, நீங்கள் ஒரு துறவி, நானோ தீண்டத் தகாதவன் என்று கூறினான். சுவாமிஜி இப்போது  தெளிவாக இருந்தார். அவனது மறுப்புகளைப் பொருட்படுத்தாமல் அவனது ஹீக்காவில் புகை பிடித்த பிறகே அங்கிருந்து புறப்பட்டார். தவறுவதோ பிறழ்வதோ குற்றமல்ல. தவறென்று உணர்ந்தால் அதனைத் திருத்திக்கொள்வது தான்  முன்னேறும் வழி. வாழ்க்கை நம் முன் கொண்டு வருகின்ற அனைத்து சூழ்நிலைகளையும் நாம் சரியாக எதிர்கொள்வது சாத்தியமல்ல. ஆனால் அனைத்திலிருந்தும் படிப்பினை பெற்றுக்கொள்வது சாத்தியம், படிப்பினை பெறவும் வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் முன்னேறிச்சென்று இலக்கை அடைய முடியும்.

 

பிருந்தாவனத்தில்

 

1888 ஆகஸ்ட்டில் பிருந்தாவனத்தை அடைந்தார் சுவாமிஜி. பலராம் போஸ் பிருந்தாவனத்தில் கட்டியிருந்த காலா பாபுவின் குஞ்சம் என்று அழைக்கப்படுகின்ற கிருஷ்ணர் கோயிலில் தங்கினார். கண்ணன் தனது தெய்வீக லீலைகளைப் புரிந்ததும் கண்ணனின் பேருணர்வுகளில் திளைத்த கோபியர் வாழ்ந்து களித்ததும், சைதன்யர் மற்றும் அவரது சீடர்கள் பக்தியை வளர்த்ததும் இந்த மண்ணில் தான். நரேன் பார்வைக்கு ஒரு ஞானியைப்போல் தோன்றினாலும் அவன் உள்ளத்தில் ஒரு பக்தன். மென்மையான உள்ளம்  படைத்தவன் அவன் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். பக்தியின் விளைநிலமான  பிருந்தாவனத்தில் சுவாமிஜியின் பக்தியுணர்வுகள் கிளர்ந்தெழுந்தன. ஒரு சாதாரண பக்தனைப்போல் அங்குள்ள புண்ணிய தீர்த்தங்களில் குளிப்பதும், மலைகளை வலம் வருவதும், ஜப தவங்களில் ஈடுபடுவதுமாக நாட்களை அங்கே செலவிட்டார் அவர்.

 

ராதையின் கருணை

 

 பிருந்தாவனம் கண்ணனுக்கு உரியது என்றாலும் அங்கே அரசாட்சி செய்பவள் ராதை. கண்ணனுக்காகத் தன் உடல் பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து அவன் மயமாகவே ஆகி, பக்திக்கு இலக்கணம் வகுத்தவள் அவள்.பிருந்தாவனத்திலுள்ள பக்தர்கள் கூட கண்ணனின் பெயரைச்சொல்லாமல் ”ராதே ராதே என்று தான் கூறுகிறார்கள். ஒரு நாள் சுவாமிஜி கோவர்த்தன மலையை வலம் வந்து கொண்டிருந்தார். யாரிடமும் உணவை யாசிக்க க் கூடாது, தானாக வருவதை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டிருந்தார் அவர். முதல் நாள் மதிய வேளையிலேயே அவருக்கு நல்ல பசி எடுத்தது. திடீரென்று பெருமழைப்பெய்யத் தொடங்கிறது. பசியும், மழையின் தீவிரமும் சேர்ந்து அவர் மயங்கி விழும் நிலைமைக்குச் சென்றுவிட்டார். எனினும் யாரிடமும் உணவு கேட்கவில்லை. மழையையும் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டிருந்தார். திடீரென்று பின்னாலிருந்து யாரோ அவரை அழைப்பது கேட்டது. ஆனால் அதைக்கேட்டது போல் காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து நடந்தார் சுவாமிஜி. அழைத்த குரல் அவரை நெருங்கியது, வந்தவன் ஒரு பக்தன். சுவாமிஜி, உங்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன், சாப்பிடுங்கள், என்று கூறியபடியே அவன் அவரைப் பின் தொடர்ந்தான். இது உண்மையிலேயே ராதையின் கருணை தானா என்பதை அறிய விரும்பிய சவாமிஜி தம்மால் முடிந்த அளவு வேகமாக நடக்கலானார். பக்தனும்விட வில்லை. ஒரு மைல் தூரம் நடந்த பிறகு தான்  அந்த பக்தனால் சுவாமிஜியை நெருங்க முடிந்தது. அவர் முன்பு வந்து வணங்கிய அவன் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். சுவாமிஜியும் ராதையின் கருணைப்பெருக்கை நினைத்து கண்ணீர் பொங்க , ஜெய் ராதே ஜெய்  கிருஷ்ணா என்று கூறியவாறே அந்த உணவை ஏற்றுக்கொண்டார்.

 

 ராதை வைத்த சோதனை

 

ஒரு நாள் சுவாமிஜி ராதா குண்டத்தில் (குண்டம் என்றால்  சிறு குளம்.ராதையின் வாழ்க்கையுடன் தொடர்புகொண்ட இந்தக் குளம் புண்ணிய தீரத்தமாகக் கருதப்படுகிறது) குளிக்கச்சென்றார். அந்த நாட்களில் அவர் ஒரு கௌபீனம் (கோவணம்) மட்டுமே அணிந்திருந்தார். அவரிடம் மாற்றுத்துணி கிடையாது. அந்தக் கௌபீனத்தைத் துவைத்து உலர வைத்து விட்டு, குளிப்பதற்காக நீரினுள் இறங்கினார். குளித்து விட்டு கரையேறிப் பார்த்தார். கௌபீனத்தைக்காணவில்லை. சற்றும் முற்றும் தேடினால், மரத்தில் ஒரு குரங்கு அதைக் கையில் வைத்து கொண்டு, அமர்ந்திருந்தார். குரங்கிடமிருந்து துணியைச் சுலபமாகப்பெற முடியுமா? அவரிடம் வேறு துணியும் இல்லை. எப்படி ஊருக்குள்  செல்வது? சுவாமிஜியின் கோபம் ராதையிடம் திரும்பியது? தாயே! நான் ஊருக்குள் போக முடியாது. எனவே காட்டினுள் போகிறேன். அங்கேயே கிடந்து பசியிலும் பட்டினியிலும் வாடி சாகப்போகிறேன், என்று எண்ணியபடி விரைந்து காட்டினுள் நடக்கலானார். இங்கேயும் விரைந்து வந்தான் ஒரு பக்தன். அவனது கையில் புத்தம்புதிய காவித்துணி ஒன்று  இருந்தது. அதனை சுவாமிஜிக்கு அளித்தான் அவன். கண்ணீர் மல்க அதனை பெற்றுக்கொண்டார் சுவாமிஜி. திரும்பி குளக் கரைக்கு வந்தால், ஆச்சரியம்! சுவாமிஜியின் கௌபீனம்  அவர் போட்ட இடத்திலேயே கிடந்தது.

 இறைவனையே பற்றுக்கோடாகக்கொண்டு , வேறு எந்த ஆதரவும் இன்றி வாழ்கின்ற ஒருவனுக்கு இத்தகைய நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.அவை அவனது நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. காட்டிலும் மேட்டிலும் கடலிலும் மலையிலும் குன்றிலும் குகையிலும் எங்கு  வாழ்ந்தாலும் எங்கு சென்றாலும் இறையருள்  தன்மீது  உள்ளது. அந்த அருள் தன்னை எந்த நிலையிலும் காக்கும் என்பதை இந்த நிகழ்ச்சிகள் அவனுக்கு நிதர்சனமாக்குகின்றன. முன்னிலும் தீவிரமாக அவன் ஜப தவங்களில் ஈடுபடுகிறான்.

 

முதல் சீடர்

 

பிருந்தாவனத்திலிருந்து ஹரித்வாரை நோக்கிப் புறப்பட்டார் சுவாமிஜி. பசியும் களைப்பும் மேலிட அவர் ஹத்ராஸ் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அங்கே ரயில் நிலையத்துணை அதிகாரியாக இருந்தவர் சரத்  சந்திர குப்தர். பழகுவதற்கு இனியவர், நல்லவர். உடல் உறுதி படைத்தவர். அவர் சுவாமிஜியைக் கண்டதும் அவரிடம் ஈர்க்கப்பட்டார். இனம்புரியாத சக்தி ஒன்று  தம்மை சுவாமிஜியிடம் ஈர்ப்பதாக அவர் உணர்ந்தார். எனவே நேராக அவரிடம் சென்று, சுவாமிஜி, பசியாக இருக்கிறீர்களா? என்று கேட்டார். சுவாமிஜி ”ஆம் என்று கூறியதும் அவர், என் வீட்டிற்கு வாருங்கள், என்று அழைத்தார். நான் வந்தால் நீ என்ன தருவாய்? என்று ஒரு சிறுவனின் குதூகலத்துடன்  கேட்டார் சுவாமிஜி, ஓ! என் அன்பரே! என் இதயத்தையே பிழிந்து இன்சுவைப் பண்டம் செய்து தருவேன் என்ற பாரசீகப்பாடல்  ஒன்றைப் பதிலாகக் கூறினார் சரத். இந்தப் பதிலால் மிகவும் மகிழ்ந்த சுவாமிஜி சரத்தின் வீட்டிற்குச்சென்றார். சுவாமிஜிக்கு நல்ல விருந்து  படைத்தார் சரத்.

அன்றைய வேலை முடிந்த பிறகு சரத் சுவாமிஜியின் அருகில் வந்து, சுவாமிஜி, எனக்கு ”வித்யா வேண்டும் என்றார். அதற்கு சுவாமிஜி, உனக்கு வித்யா வேண்டுமானால்  உன் அழகிய முகத்தில் சாம்பல் பூசிக்கொள், இல்லாவிட்டால் என்னை விட்டுவிடு என்று கூறினார். சரத் ஒரு கணமும் தயங்கவில்லை. நேராகச்  சமையலறைக்குச் சென்று, அடுப்பிலிருந்து சாம்பலை எடுத்து முகம் முழுவதும் பூசிக்கொண்டு சுவாமிஜியிடம் வந்தார். சரத்தின் முகத்தைக் கண்ட சுவாமிஜி விழுந்து விழுந்து சிரித்தார். நடந்தது இது, சரத் கேட்டது ஆன்மீக ஞானம். இதற்குரிய ஒரு சம்ஸ்கிருத வார்த்தை ”வித்யா(வித்யை). சுவாமிஜி கூறியது பரத் ரே குணாகர் எழுதிய வித்யா-சுந்தரன் என்ற நாடகத்தில், கதாநாயகியாகிய வித்யா கதாநாயகனாகிய சுந்தரனைப் பார்த்து கூறுகின்ற வசனம். இதனைப் புரிந்து கொள்ளாமல் , சுவாமிஜி கூறியதை அப்படியே பின்பற்றினார் சரத். சரத்தின் பணிவும் பக்தியும் சுவாமிஜியை வியக்கச்செய்யாமல் இல்லை.

சில நாட்கள் அங்கே தங்கிய பிறகு அங்கிருந்து புறப்படத் தயாரானார். அப்போது சரத், அவரிடம் , சுவாமிஜி, என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினார். அதற்கு சுவாமிஜி,எனக்குச் சீடனாக ஆவதால் ஆன்மீக வாழ்க்கையில் அனைத்தையும் அடைந்து விடலாம் என்று நினைக்கிறாயா? இது இறைவனின் உலகம் என்ற நினைவில் நீ எது செய்தாலும் முன்னேறலாம். நானும் அவ்வப்போது இங்கு வந்து தங்குகிறேன். ஆனால் இப்போது நான் இமய மலைக்குச் சென்றாக வேண்டும் என்றார்.

சரத் விடவில்லை, நீங்களே் எங்கே போனாலும் நான் உங்களைத்தொடர்ந்து வருவேன் என்று கூறினார். அவரது மன உறுதியைக் கண்ட சுவாமிஜி, அப்படியா! உண்மையிலேயே  உன்னால் என்னைப் பின்தொடர முடியுமா? அந்த மனஉறுதி உன்னிடம் உள்ளதா? அப்படியானால்  கையில் பிச்சைப் பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொள். நீ வேலை செய்கின்ற அதே ரயில் நிலையத்திற்குப்போய் அங்குள்ள சுமை தூக்கும் தொழிலாளிகளிடம் பிச்சை யெடுத்து வா என்று கூறினார். சரத்  அதிர்ச்சியடையவோ தயங்கவோ இல்லை, உடனடியாகப் புறப்பட்டார். சுவாமிஜி கூறியதுபோல் பிச்சையும் ஏற்றுவந்தார். அதன் பிறகும் அவரை  மறுக்க சுவாமிஜிக்கு  எந்தக் காரணமும் இருக்கவில்லை. அன்று அவர்களிடையே தொடங்கிய உறவு, குரு-சீடர் உறவுக்குப்புதிய இலக்கணங்களை வகுத்தபடி தொடர்ந்தது.

 

எனக்கென்று பணி ஒன்று உள்ளது.

 

ஒரு நாள்சுவாமிஜி சற்றே கவலையுடன் அமர்ந்திருந்தார். சரத் அவரிடம் அதற்கான காரணத்தைக்கேட்டார். சற்று நேரம் தன்னுள் ஆழ்ந்து  அமைதியாக இருந்த சுவாமிஜி மென்மையாகக்கூறினார். என் மகனே! நான் ஆற்ற வேண்டிய பெரும் பணி ஒன்று உள்ளது. ஆனால் அதற்குரிய திறமையோ தகுதியோ என்னிடம் இல்லை, என்பதை நினைக்கும் போது என் மனம் தளர்கிறது. பணி என்றால் சாதாரணப்பணி அல்ல, நமது தாய் நாட்டையே புனரமைக்க வேண்டிய பணி அது. ஆன் மீகம் இங்கே அடிமட்டத்திற்குப் போய் விட்டது.பசியும் பட்டினியும், நாடெங்கும் நடைபோடுகின்றன.பாரதம் மீண்டும் விழித்தெழ வேண்டும். தனது ஆன்மீகத்தால் உலகையே வெல்ல வேண்டும். ஏதோ ஒரு மாபெரும் சக்திக்கு ஆட்பட்டவர் போல் சுவாமிஜி பேசியதைக்கேட்டு பிரமிப்புடன் அமர்ந்திருந்தார்சரத். சுவாமிஜியின் பேச்சு தடைபட்டதும் சரத் அவரிடம், சுவாமிஜி இதோ நான் உங்கள் சீடன் இருக்கிறேன். உங்கள் பணிக்காக நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள். என்று தமது இதய ஆழத்திலிருந்து கூறினார். உடனே சுவாமிஜி, ஒரு திருவோடும் கமண்டலமும் எடுத்துக்கொண்டு வீடு வீடாகப் பிச்சையெடுக்க முடியுமா? என்று கேட்டார்.  ஆம் என்று உறுதியுடன் பதிலளித்தார சரத். மிகவும் மகிழ்ந்தார் சுவாமிஜி.

சரத் தமது வேலையை விட்டுவிட்டு சுவாமிஜியுடன் புறப்பட்டார். முதலில் அவர்கள் சென்ற இடம் ரிஷிகேசம். சொகுசான வாழ்க்கை நடத்தி வந்த சரத்தால் துறவு வாழ்க்கையின் சிரமங்களைச்சுலபமாக எதிர்கொள்ள இயலவில்லை. நீண்ட தூரம் நடப்பதும், பசி தாகங்களைச் சகிப்பதும் அவருக்குப் புதிய விஷயங்கள். அவர் மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் சுவாமிஜி அன்பின் வடிவமாக இருந்தார். சீடரின் சுமைகளைத்தாமே ஏற்றுக் கொண்டார். சுமைகள் மட்டுமல்ல, சீடனையே அவர் சுமந்தார். சரத் பின்னாளில் கூறினார்.

இமய மலையில் ஒரு முறை நாங்கள் இருவரும் சென்று கொண்டிருந்தபோது பசியாலும் தாகத்தாலும் நான் மயக்க மடைந்து விட்டேன். அப்போது என்னுடைய சுமைகளை மட்டுமல்ல, என்னையே சுமந்து சென்றார் சுவாமிஜி. மற்றொரு முறை நாங்கள் ஓர் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. ஆறோ மிகுந்த வேகத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. வழுக்கலான பகுதிகள் மிகுந்ததாக இருந்தது. நான் தயங்கினேன். சவாமிஜி சிரித்துவிட்டு என்னை ஒரு குதிரை மீது அமரச்  செய்தார். தாம் குதிரையின் கடிவாளத்தைப்  பற்றிக்கொண்டு அருகில் நடந்து வந்தார். குதிரையை நடத்தியபடி ஆற்றைக்கடந்தார். அவர் எனக்காகப் பல முறை தமது உயிரையே பணயம் வைத்துள்ளார். நண்பர்களே! அவரைப் பற்றி நான் என்ன சொல்வேன்! அன்பு! அன்பு, அன்பு-இந்த ஒரு வார்த்தையைத்தவிர அவரைப் பற்றி எதுவும் கூற இயலாது. நான் மிகவும் நோயுறும்போது எனதுபை, எனது துணி மணிகள், ஏன் எனது செருப்பைக்கூட அவர் சுமந்துள்ளார்.

பின்னாளில் ஒரு முறை மனம் சற்று தளர்ந்த நேரத்தில் சரத் சுவாமிஜியிடம், சுவாமிஜி, என்னை நீங்கள் கைவிட்டு விடுவீர்களா? என்று கேட்டார். முட்டாளே! உன் செருப்பைக்கூட நான் சுமந்துள்ளேன் என்பதை மறந்து விட்டாயா? என்று அவரை மென்மையாகக் கடிந்து கொண்டார் சுவாமிஜி.

ஒரு முறை சுவாமிஜியும் சரத்தும் ஓர் அடர்ந்த காடு வழியாகச்சென்று கொண்டிருந்தனர். வழியில் ஓரிடத்தில் மனித எலும்புகளும் அருகே சில காவியுடைத் துண்டுகளும் கிடந்தன. அதோ பார் சரத், புலியோ ஏதோ காட்டு மிருகமோ இங்கே துறவி ஒருவரைக்கொன்று தின்றிருக்கிறது என்று அந்த எலும்புக் குவியலை சரத்திடம்  காட்டினார் சுவாமிஜி. என்னப்பா, பயமாக இருக்கிறதா? என்று கேட்டார். இல்லை, நீங்கள் அருகில் இருக்கும்போது எனக்கென்ன பயம்? என்றார் சரத்.

 

நீ ஒரு சங்கிலி

 

 சுவாமிஜியும் சரத்தும் சாதாரணத் துறவிகளாக , சத்திரங்களில் வாழ்ந்து, சமைத்து சாப்பிட்டபடி பயணம் செய்து கொண்டிருந்தனர். வழி நெடுகப் பல கதைகள் கூறி சீடனை மகிழ்வித்தார் சுவாமிஜி. புன்யன் எழுதிய ”யாத்திரிகனின் பயணம் என்ற நூலிலிருந்து பல கதைகள் கூறினார். இமயத்தின் சூழல் சுவாமிஜியின் மனத்தை வெகுவாக ஆக்கிரமித்தது. உயர்ந்த மலைகளும், பனிமலைச் சிகரங்களும், கங்கை நதியும் அவரது மனத்தில் தனிமை வாழ்வை யும்  ஏகாந்த தியானத்தையும் நினைவூட்டின. சரத் உடன் இருப்பது அவருக்கு ஒரு சுமையாகத்தோன்றியது.

ஒரு நாள் சரத், கிச்சடி சமைத்துக்கொண்டிருந்தார். சுவாமிஜி அவரிடம், சரத், நீ ஒரு சங்கிலிப்போல் என் காலைப் பிணைத்துள்ளாய். நான்  தன்னந்தனியனாகப்போய்க் கொண்டிருந்தேன். நீ என் வாழ்வில் வந்தாய், எனக்கு ஒரு சுமையாகிவிட்டாய். இனியும் நீ என்னுடன்  வருவது சரியல்ல.. இதோ நான் என் வழியே போகிறேன், என்று கூறிவிட்டு, கைத்தடியையும் கமண்டலத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார். சரத் கவலையுடன் அமர்ந்துவிட்டார்.

மூன்று நான்கு மணிநேரம் கழிந்திருக்கும், திடீரென்று சுவாமிஜியின் குரல் கேட்டது. சரத், ஓ! சரத்! பசி வயிற்றைக்  கிள்ளுகிறது. சாப்பிட ஏதாவது வைத்திருக்கிறாயா? உடனே தருகிறேன் என்று கூறிவிட்டு, மகிழ்ச்சியால் துள்ளியபடி அவருக்குக் கிச்சடி பரிமாறினார் சரத். நீ சாப்பிட்டாயா அப்பா? என்று கனிவுடன் கேட்டார் சுவாமிஜி. நீங்கள் இல்லாமல் நான் எப்படிச் சாப்பிடுவேன்? என்று பதிலளித்தார் சரத். நெகிழ்ந்து போனார் சுவாமிஜி. நீ  உண்மையிலேயே என் காலில் ஒரு சங்கிலியாகத்தான் ஆகிவிட்டாய். நான் நீண்ட தூரம் போவேன். அப்போது என் மனத்தில், ஐயோ, அவன் ஒரு முட்டாள்! எதுவும் செய்யவும் அவனுக்குத்தெரியாதே! அவனைத் தனிமையில் விட்டுவிட்டு வந்தேனே! என்ற எண்ணம் எழுந்தது. பிறகு என்ன செய்வது!திரும்பி விட்டேன் பார். உனக்காக நான் திரும்ப வேண்டியதாயிற்று என்றார் சுவாமிஜி. அதன் பிறகு  இருவருமாகக் கிச்சடியைச் சாப்பிட்டனர்.

 

வராக நகரிலும் அடுத்துள்ள இடங்களிலும்

 

தொடர்ந்து இமயத்தின் உயர்பகுதிகளான கேதார்நாத் பத்ரிநாத் போன்ற கோயில்களுக்குச் செல்ல மிகுந்த ஆவல் கொண்டார் சுவாமிஜி. ஆனால் சரத் நோயுற்றார். எனவே தொடர்ந்து பயணத்தை மேற் கொள்ள முடியாமல் போயிற்று. மீண்டும் ஹத்ராஸிற்கே இருவரும் திரும்பி வந்தனர். அங்கே சுவாமிஜிக்கு  மலேரியா கண்டது. இவ்வாறு இருவரும் நோயுற்று மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர். அந்த வேளையில் அங்கே தீர்த்த யாத்திரையாகச்சென்று கொண்டிருந்த சிவானந்தர் அவர்களைக்கண்டு சுவாமிஜியை வராக நகர் மடத்திற்குத் திரும்பி அழைத்து வந்தார். அது 1888 இறுதி.

சுவாமிஜி மடத்திற்கு வந்தபோது அவரது சகோதரத் துறவியர் பலரும் தீர்த்த யாத்திரை சென்றிருந்தனர். சுவாமிஜி ஒரு வருட காலம் அங்கேயே தங்கினார். இந்த நாட்களைப்பற்றி ஓர் அழகிய சித்திரத்தைச் சரத் தருகிறார்.

அவை மிகுந்த பரபரப்பு நிறைந்த நாட்களாக இருந்தன. ஒரு கணம் கூட ஓய்வு கிடையாது. பலர் வந்தனர். போயினர், பண்டிதர்கள் விவாதங்கள் செய்தனர். சுவாமிஜி ஒரு கணம் கூட சோம்பி இருந்ததில்லை. சிலவேளைகளில்  அவர் தனிமையில் இருக்கும்போது , ஹரி போல், ஹரி போல் (ஹரி நாமத்தைச்சொல்லுங்கள்) அவரைக்கூவி அழையுங்கள். அம்மா, அம்மா என் றெல்லாம்  கூறியபடி முன்னும் பின்னுமாக நடப்பார்.. நான் தொலைவில் நின்று கவனித்துக்கொண்டிருப்பேன். அந்த வேளைகளில் அவரிடம் சென்று, சுவாமிஜி ஏதாவது! சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டால் ஏதாவது விளையாட்டாக பதில் சொல்வார். ஒரு பைத்தியக்காரரைப்போல் பரபரப்பாக இருப்பார் அவர். விடியாமல் இன்னும் இருட்டாக இருக்கின்ற அதிகாலை வேளையில் எழுந்து, தெய்வீகப் பேரமுதத்தைப் பருகுபவர்களே , எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்! என்று பாடியபடி மற்றவர்களை எழுப்புவார். பிறகு அனைவரும் தியானம் செய்வார்கள்.

1889 ஜனவரி இறுதியில் அன்னை ஸ்ரீசாரதாதேவி மற்றும் சகோதரத் துறவியர் ஓரிருவருடன் ஸ்ரீராமகிருஷ்ணர் பிறந்த இடமான காமார்புகூருக்குப் புறப்பட்டார் சுவாமிஜி. வழியில் ஆன்ட்பூரில் அனைவரும் ஒருவாரம் தங்கினர். காமார்புகூர் செல்லும் வழியில் சுவாமிஜிக்குக் காய்ச்சலும் வாந்தியும் ஏற்பட்டன. எனவே அவர் காமார்புகூர்  செல்லாமல் திரும்ப நேர்ந்தது.

 

மடத்தில் சுவாமிஜியின் நாட்கள் வேதாந்தப்படிப்பு, தெய்வ சிந்தனை, ஜபம், தியானம் என்று ஆன்மீக சாதனைகளிலேயே கழிந்தது, வேதாந்த நூல்களை வாங்கக்கூட அந்த நாட்களில் வசதி இருக்கவில்லை. காசியிலுள்ள பிரதம தாஸ் மித்ரரிடமிருந்து  சில நூல்களை வாங்கிப் படித்தார். தமக்கு எழுந்த சந்தேகங்களை அவருக்கு எழுதித்தெளிவு பெற்றார். பாணினியின் அஷ்டாத் யாயி போன்ற சம்ஸ்கிருத இலக்கண  நூல்களைப் படிக்க விரும்பினார். அதனைப் பிரதம தாஸ் மித்ரருக்குத் தெரிவித்து, எங்களுக்குப் பாணினியின் அஷ்டாத்யாயி சிறந்தது என்று நீங்கள் எண்ணினால் ( உங்களால் இயலுமானால் , நீங்கள் விரும்பினால்) அதனை  எங்களுக்கு அனுப்பி உதவவும். நாங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம். இந்த மடத்தில் புத்திக் கூர்மையும், மதிநுட்பமும், விடாமுயற்சியும்  உடையவர்கள் இல்லாமல் இல்லை. குருவருளால் அவர்கள் விரைவில் பாணினியின்  அஷ்டாத்யாயியைக் கற்று, வங்கத்தில் வேத சாஸ்திரத்தை மீண்டும்  தழைக்கச் செய்வார்கள் என்பது  என் நம்பிக்கை  என்று அவரிடம் சுவாமிஜி கேட்டுக்கொண்டார்.

ஆயினும் சுவாமிஜியின்  உள்ளம் எப் போதும் தனிமை வாழ்க்கையையே நாடியது. இரண்டு முறை சென்று வந்த யாத்திரைகள் அவரது மனத்தில் ஆழ்ந்த சிந்தனைகளை எழுப்பியிருந்தன. இத்தகைய வாழ்க்கையை நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆர்வம் அவரில் வளர்ந்திருந்தது.

ஆனால் குருதேவர் அளித்திருந்த பொறுப்பு சுவாமிஜியின் ஆர்வத்திற்குத் தடை போட்டது. வரலாற்றிலேயே புதிதொரு துறவியர் பரம்பரையை உருவாக்கி, அதன் பொறுப்பை சுவாமிஜியிடம்  ஒப்படைத்திருந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். மற்ற இளம் துறவியரின் பொறுப்பு அவர் மீது இருந்தது என்பது சொல்லாமலேயே விளங்கும். அவர் களுடைய உடல், உள்ள ஆன்ம வளர்ச்சிக்கு சுவாமிஜி பொறுப்பாக இருந்தார். இந்த நிலையில் அவர்களுடன் தங்குவது கட்டாயமாயிற்று . ஆர்வம், பொறுப்பு, என்ற இரண்டிற்கும் இடையில் சுவாமிஜியின் மனம் ஊசலாடியது.

அதே வேளையில் , ஸ்ரீராமகிருஷ்ணர் தமக்கு அளித்த பணியின் மற்றொரு பகுதியும் அவரது நினைவில் நிழலாடியது. நிழலாடியது என்பதைவிட அது தான் அவரது மனத்தைப்பேரளவிற்கு ஆக்கிரமித்திருந்தது என்று கூறலாம்- ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தியை உலகெலாம் பரப்புவதே அது. மீன் ஒன்றுதான், ஆனால் அதனைப் பிள்ளைகளின் ஜீரண சக்திக்கு ஏற்ப குழம்பு, சட்னி, வறுவல் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக அளிக்கிறாள் தாய். இது ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுகின்ற உவமை. அது போல் , ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தியை உலகிற்கு அளிக்க வேண்டும். ஆனால் எல்லோருக்கும் ஒரேவிதமாக அளிப்பது இயலாது. மக்களை நேரடியாகச் சந்திக்காமல் அதை யாருக்கு, எப்படி அளிப்பது என்பதை நிர்ணயிக்க இயலாது. எனவே அவர்களைச் சந்தித்தேயாக வேண்டும் என்று முடிவு செய்தார் சுவாமிஜி.

 

குடும்பத்தின் பரிதாப நிலைமை

 

போவது என்று முடிவாயிற்று. இயன்ற அளவு விரைவில் அங்கிருந்து செல்ல விரும்பினார் சுவாமிஜி. குடும்பத்தின் பரிதாப நிலைமையும் அதற்கு ஒரு காரணமாயிற்று. பிரமத தாஸிற்கு அவர் எழுதினார். கல்கத்தாவின் அருகில் வாழும் வரை  எந்த வழியும் இருப்பதாகத்தோன்றவில்லை. என் தாயும் சகோதரர் இருவரும் கல்கத்தாவிலேயே வசித்து வருகின்றனர். நான் தான் மூத்தவன். அடுத்தவன் எப்.ஏ. தேர்விற்குப் படித்து வருகிறான், இளையவன் சிறுவன். இவர்கள் நல்ல நிலையில் இருந்தவர்கள். ஆனால் என் தந்தை இறந்த பின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. சிலவேளைகளில் பட்டினி கூட கிடக்க நேர்கிறது.போதாக குறைக்கு பங்காளிகள் சிலர் அவர்களைத் தந்தைவழி வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டனர். உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்ததில் வீட்டின் ஒரு பகுதி கிடைத்தது. ஆனால்  எல்லாம் போய்விட்டன. வழக்கு என்றாலே எல்லாம் இழந்து போவது தானே முடிவு.

கல்கத்தாவிற்கு அருகில் வசித்தால் இவர்களின் கஷ்ட நிலைமையை நான் காண வேண்டியுள்ளது. அப்போது ரஜோ குண மேலீட்டினால் எனது அகங்காரம் என்னைச்செயலில் ஈடுபடுத்துகிறது. அந்த வேளைகளில் மனத்தில் பயங்கரப்போர்  ஒன்று நிகழ்கிறது. அதனால் தான் என் மனத்தில் நிலைமை பயங்கரமாக உள்ளது என்று நான் எழுதினேன். இப்போது இவர்களின் வழக்கு முடிவடைந்து விட்டது. இன்னும் சில நாட்கள் இங்கு கல்கத்தாவில் தங்கி யிருந்து இவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து விட்டு, ஒரே யடியாக விடைபெற்றுப் புறப்பட என்னை ஆசீர்வதியுங்கள்.

தமது நீண்ட நாள் பயணத்தைப் பற்றி சுவாமிஜி சகோதரத் துறவிகளிடம் கூறினார். அவர்கள் முதலில் சம்மதிக்கவில்லை. யாராவது ஒரு சகோதரத் துறவியை உடன் அழைத்துச்செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினர். ஆனால் அத்தகைய வாழ்க்கை தனிமை வாழ்க்கை ஆகாது என்று கூறினார் சுவாமிஜி. கடைசியில் அவர்களைத்தமது கருத்திற்கு இசைய வைத்தார். சில நாட்கள் மடத்தில் தங்கிவிட்டு 1889 டிசம்பரில் மடத்திலிருந்து புறப்பட்டார்.

துறவியர் வேந்தன்.

 

சுவாமிஜியிடம் இருந்ததெல்லாம் ஒரு கைத்தடி, ஒரு கமண்டலம், கீதைப் பிரதி ஒன்று.The Imitation of Chirst ( கிறிஸ்துவின் சாயலில்) பிரதி ஒன்று, இவ்வளவு தான். தனக்கென்று அவர் நிலையான பெயர் எதையும் வைத்துக் கொள்ளவில்லை. யாரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காகப் பல்வேறு பெயர்களில் அவர் தம்மை அழைத்துக்கொண்டார். தமக்கு  ஆங்கிலம் தெரியும் என்றோ, தமது பல துறை அறிவை வெளிப்படுத்துவதையோ இயன்றவரை தவிர்த்துவிட்டார். பல நேரங்களில் தாம் உணவை நாடிச்செல்வதை விட்டுவிட்டு தம்மை நாடி வருகின்ற உணவை மட்டும் ஏற்றுக் கொண்டார். இதனால் சிலவேளைகளில் ஐந்து நாட்கள் கூடத் தொடர்ச்சியாக உணவின்றி இருக்க நேர்ந்ததாக சுவாமிஜி குறிப்பிட்ட துண்டு. காடு, மலை, சத்திரம், சாவடி, என்று  எங்கு இடம் கிடைத்ததோ அங்கே தங்கினார். பணத்தையே தொடுவதில்லை என்ற சங்கல்பத்தையும் வைத்துக்கொண்டார். எனவே பெரும்பாலான இடங்களை நடந்தே அவர் கடக்க வேண்டியிருந்தது.யாராவது மிகவும் வற்புறுத்தினால் ரயில் டிக்கடி மட்டும்  பெற்றுக்கொண்டார். ஒரு துறவி எப்படி வாழ வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவோ அப்படி தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார் அந்தத் துறவியர் வேந்தன்.

காசிக்கு வருமாறு பிரமத தாஸ் அடிக்கடி சுவாமிஜிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அவரிடம் சென்று தங்கலாம் சாஸ்திரங்களில் தமது பல சந்தேகங்களுக்கு அவரிடமிருந்து  நேரடியாகத் தெளிவு பெறலாம் என்று எண்ணிய சுவாமிஜி காசிக்குச் செல்லும் எண்ணத்துடன் புறப்பட்டார். வைத்தியநாதத்தை அடைந்தபோது , யோகானந்தர் அலகாபாத்தில் அம்மை நோயுற்றிருப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. உடனே அலகாபாத்திற்கு விரைந்தார். ஆனால் அங்கு ஏற்கனவே ஓரிரு சகோதரத் துறவிகள் அவருக்குச்சேவை  செய்தனர். சுவாமிஜியும் அவர்களுடன் கலந்து கொண்டார். யோகானந்தரின் நோய் தணிந்தது. இதற்குள் சுவாமிஜியைப் பற்றி பலர் அறிந்து கொண்டனர். தினமும் மாலையில் அவரிடம் வந்து கூடினர். சுவாமிஜியின் உரையும் பாடல்களும் தினமும் நடைபெற்றன. இந்த நாட்களில் தான் அவர் பவஹாரி பாபா என்ற ஒரு மகானைப் பற்றி கேள்விப் பட்டார். அவரைக்காண முடிவு செய்து  காஜிபூர் சென்றார்.

 

பவஹாரி பாபா

 

காஜிபூரில் ஒரு குகையில் தனிமையில் வாழ்ந்த யோகி பவஹாரி பாபா, நாட்கணக்கில், மதக்கணக்கில்,தியானத்தில் ஆழ்ந்திருக்க வல்லவர் அவர். இளம் வயதிலிருந்தே உணவைக் குறைக்கத்தொடங்கிய அவர், கடைசியில் ஒரு நாள் ஒரு கைப்பிடி வேப்பிலை அல்லது சில மிளகுகள் மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தார். குகைக்குள்ளேயே நாட்கணக்கிலும்  மாதக்கணக்கிலும் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அந்த வேளையில் அவர் எதை உண்டு வாழ்ந்தார் என்பது யாருக்கும் தெரியாது. எனவே அவரைப் பவஹாரி பாபா (காற்றை உணவாகக் கொள்கின்ற முனிவர்) என்று மக்கள் அழைத்தனர்.தியானத்தில் ஆழ்ந்திருக்காத நாட்களில் குகைக்கு மேலே இருந்த அறையில் இருப்பார். தம்மைக்காண வருபவர்களை உபசரிப்பார். ஸ்ரீராமரின் சிலையை வைத்து பூஜைகள் செய்வார்,ஹோமங்கள் செய்வார். ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு அவரது புகைப்படத்தை வைத்து, அவருக்கும் பூஜைகள் செய்து வந்தார்.

சற்று பருத்து உயர்ந்தது பாபாவின் தோற்றம். அவருக்கு ஒரு கண்தான் பார்வையுடையதாக இருந்தது. தாம் கேட்டவற்றுள்  மிகமிக இனிமையானது அவரது குரலே என்று சுவாமிஜி எழுதியுள்ளார்.தமது வாழ்வில் கடைசி பத்து வருடங்கள் யார் பார்வையிலும் படாமல் வாழ்ந்தார் அவர். யோக விஞ்ஞானத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாகவும் தூய்மை, பணிவு, அன்பு என்பவற்றை ஒரு வாழும் உதாரணமாகவும் அமைதியாக அவரது வாழ்க்கை சென்றது. தாம் நேசித்த சேவைகள் செய்த மிக உயர்ந்த மகான்களுள் பவஹாரி பாபா என்று சுவாமிஜி கூறியுள்ளார்.

சுவாமிஜி பாபாவால் மிகவும் கவரப்பட்டார். பாபாவும் சுவாமிஜியை மிகவும் நேசித்தார். அவரை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விடவேண்டும் என்று தான் எண்ணியிருந்தார் சுவாமிஜி.ஆனால் பாபாவின் அன்பும் பணிவான வேண்டுகோளும் அவரது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு செய்தன.

 

கர்ம யோகக் கருத்துக்கள்

 

தினமும் பாபாவிடம் சென்று பகல் வேளையைச் செலவிட்டார் சுவாமிஜி. வாழ்நாள் முழுவதும் நான் கற்கிறேன் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவதுண்டு. அந்த விஷயத்திலும் சுவாமிஜி அவரது உண்மைச் சீடராக இருந்தார். சூழ்நிலை, மனிதர்கள், நிகழ்ச்சிகள் என்று  அனைத்திலிருந்தும் அவர் கற்றுக்கொண்டே இருந்தார். பவஹாரி பாபாவின் மிக உயர்ந்த  நிலையைக் கண்ட அவர் அவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள விழைந்தார். ஆனால் உபதேசம் என்றாலே ஒதுங்கினார்பாபா. உபதேசங்களைக் கேட்பதால் யாரும் முன்னேற இயலாது. தாமே முயன்று பாடுபட்டால் மட்டுமே முன்னேற இயலும் என்று கருதினார் அவர். ஆனால் சுவாமிஜி விட வில்லை. ஏதாவது கேள்விகள் கேட்டு அவரது அனுபவம் செறிந்த பதிலைத் தெரிந்து கொள்வார். பாபா கூறிய இரண்டு கருத்துக்கள் சுவாமிஜி பின்னாளில் போதித்த கர்ம யோகக் கருத்துக்களுக்கு அடிப்படையாக அமைவதை க் காணலாம்.

சுவாமிஜி- ஹோமம், பூஜை போன்றவை ஆரம்பநிலை சாதகர்களுக்கு உரியவை. நீங்கள் ஏன் அவற்றைச் செய்யவேண்டும்?

பாபா- ஏன், கர்மங்கள் என்றாலே ஒருவன் அவற்றைத் தனக்காகத்தான் செய்கிறான் என்று நீ ஏன் நினைக்க வேண்டும்? பிறருக்காகவும் கர்மங்கள் செய்யலாமே!

வேலைகளிலிருந்து ஒருவன் ஒதுங்க வேண்டாம், எல்லா வேலைகளையும் செய்யலாம். ஆனால் தனக்காக அல்ல, பிறருக்காக. அப்படிச்செய்யும்போது அது ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது.இந்தக் கருத்து பின்னாளில் சுவாமிஜி போதித்த கர்ம யோகத்தின் ஒரு முக்கிய அடிப்படையாகத்  திகழ்ந்தது.

மற்றொரு முறை சுவாமிஜி கேட்டார்.

 

சுவாமிஜி-எப்படி வேலை செய்வது?

 

பாபா- முடிவையும் வழியையும் ஒன்றாக்கு. இதனை விளக்கும் போது தமது கர்மயோகச் சொற் பொழிவுகளில் சுவாமிஜி இவ்வாறு குறிப்பிட்டார்.

பவஹாரி பாபா ஒரு முறை கர்மத்தின் ரகசியத்தை என்னிடம் இவ்வாறு கூறினார். முடிவையும் வழியையும் ஒன்றாக்கு, நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அந்த வேலைக்கு அப்பாலுள்ள எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். அந்த வேலையை ஒரு வழிபாடாக,மிக வுயர்ந்த வழிபாடாக, அந்த நேரத்திற்கு  உங்கள் வாழ்க்கை முழுவதையும் அதில் செலுத்திச்செய்யுங்கள்.

 

ஹடயோகத்தில் ஆர்வம்

 

 பாபா ஒரு ஹடயோகி, உடம்பை நல்ல ஆரோக்கிய நிலையில் வைப்பதற்கான பயிற்சிகளைக் கற்று தருகிறது ஹடயோகம். பாபாவிடமிருந்து ஹடயோகம் கற்றுக்கொள்ள விழைந்தார் சுவாமிஜி. அதற்காக ஒரு நாளையும் நிச்சயித்துக்கொண்டார்.அதைப்பற்றி நினைத்தவாறே கட்டிலில் படித்திருந்தார். அப்போது திடீரென்று ஸ்ரீராமகிருஷ்ணர் அவர் முன் தோன்றினார். ஏதோ கவலையில் ஆழ்ந்தவர் போல் சவாமிஜிக்கு வலப்புறமாக நின்றபடி அவரையே கூர்ந்து பார்த்தார். இரண்டு மூன்று மணிநேரம் கழிந்தது. தம்மை முழுமையாக ஸ்ரீராமகிருஷ்ணரிடம் அர்ப்பித்திருந்த தாம் இப்போது வேறொரு குருவை ஏற்றுக் கொள்ள  எண்ணியது. தவறோ என்று சுவாமிஜிக்குத் தோன்றியது. ஒரு விதமான குற்ற உணர்வுடன் அவரும்  ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்த்த படியே படுத்திருந்தார். திடீரென்று ஸ்ரீராமகிருஷ்ணர் மறைந்து விட்டார். ஹடயோகம் கற்றுக்கொள்ளும் எண்ணத்தை சுவாமிஜி தற்காலிகமாகத் தள்ளி வைத்தார்.

இருப்பினும் ஹடயோகத்தின் மீது சுவாமிஜி கொண்ட ஆர்வம் தணியவில்லை. ஓரிரு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஆர்வம் எழுந்தது. உடனே ஸ்ரீராமகிருஷ்ணரின் காட்சியும் தோன்றியது. இவ்வாறு அவர் எண்ணிய போதெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணரின் காட்சி பல முறை தொடர்ந்தது. தாம் ஹடயோகம் கற்றுக் கொள்வதை ஸ்ரீராமகிருஷ்ணர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை சுவாமிஜி புரிந்து கொண்டார். ஆழ்ந்து சிந்தித்த சுவாமிஜிக்கு எல்லாம் புரிந்தது- -ராமகிருஷ்ணர் யுக புருஷர். இந்த யகத்தில் ஆன்மீக வாழ்க்கைக்கு என்ன தேவையோ அவற்றின் ஒரு  நிறைவாக வந்தவர். தமக்கு என்ன தேவை என்பது அவருக்குத் தெரியும். அதனை அவர் தரவும் செய்துவிட்டார். எனவே இனி ஒரு வரை நாடி புதிய எதையும் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை-இந்த உறுதி வந்ததும் சுவாமிஜியின் மனச் சஞ்சலம் அகன்றது.

 

இந்தியாவிற்குத்தேவையான சீர்திருத்தம்.

 

சுவாமிஜியின் ஆளுமையால் கவரப்பட்ட பலரும் தினமும் அவரிடம் அவரது பாடல்களையும் பேச்சையும் கேட்பதும் காஜிபூரில் வழக்கமாகியது. ஆனால் வருபவர்களின் மேலை நாட்டு மோகத்தை சுவாமிஜி கவனிக்கத் தவறவில்லை. அவர்களின் நடை, உடை, பாவனை எல்லாமே  மேலைக்  கலாச்சாரத்தின் பிரதிபலிப்புகளாக இருந்தன. மேலைநாட்டைக் காப்பியடிப்பது தான் முன்னேற்றம்  என்று அவர்கள் கருதியதுபோல்  தோன்றியது. அங்கிருந்து காசியில் பிரதம தாஸிற்கு எழுதிய கடிதத்தில், எத்தகைய உள்ளீடற்ற ஒரு நாகரீகத்தை வெள்ளையன்  நம்மிடம் புகுத்தியிருக்கிறான், என்னவோர் உலகியல் மோகத்தை அவன் உண்டாக்கியிருக்கிறான்! பலவீன இதயம் படைத்த இந்த நம் மக்களை விசுவநாதர்  காப்பாராக! என்று எழுதுகிறார் சுவாமிஜி. இந்த மக்களை மேலை மோகத்திலிருந்து விடுவிப்பது எப்படி என்று ஒரு நாள் அவர் தமது பேச்சில் தெளிவாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் சீர்திருத்தம் எந்தப் பாதையில் இருக்க வேண்டும் என்பதை அவரது பேச்சு மிகத் தெளிவாக  சுட்டிக் காட்டியது.

 

இருக்கின்ற அனைத்தையும் பலவந்தமாகத் தூக்கியெறிவதன் மூலமோ, நமது கலாச்சாரத்தின் எல்லா அம்சங்களையும் பாரபட்சமின்றிக்குற்றம் சொல்வதன் மூலமோ அல்ல நாம் சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டியது. மாறாக, எல்லையற்ற அன்பை விதைக்க வேண்டும், எல்லையற்ற பொறுமையைக்கைகொள்ள வேண்டும்.

கல்வியைப் பரப்ப வேண்டும். இது வளர்ச்சியை இயல்பாக விரைவுபடுத்தும். இந்த வளர்ச்சி வெளியிலிருந்து தூண்டப்பட்டதாக அல்லாமல் உள்ளிருந்தே உண்டாகின்ற வளர்ச்சியாக இருக்கும். நாம் அளிக்கின்ற கல்வியும் இந்துக் கண்ணோட்டத்தில் உள்ள கல்வியாக இருக்கவேண்டும். இந்து  மதத்தின் பெருமைகளை எடுத்துக்கூற வேண்டும். மிகைப்படுத்துதல்  கூடாது. இந்து மத லட்சியங்களை உணர்வுபூர்வமாக மக்கள் புரிந்து கொள்ளச்செய்ய வேண்டும்.

 

ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள்- இந்து மதம் ஒரு தவறு அல்ல! அதனுள் ஆழ்ந்து மூழ்குங்கள். அதன் பெருமையை நீங்கள்  அளவிட முடியும். கண்களை மூடிக்கொண்டு மேலைநாட்டுக் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களின் பகட்டிற்கு அடிமையாகாதீர்கள். உங்கள் தாய்நாட்டைப்பற்றி  படியுங்கள். உங்கள் இனம் மற்றும் அதன் ஜீவ ஆதாரத்தின் அடிப்படை நோக்கம் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள்.

இந்தியாவின் லட்சியங்களும் காட்சிகளும் பெருமைக்குரியவை அல்ல என்று இன்று நாம் நினைக்கிறோம். நாம் சிந்திப்பது கண நேரமாக இருக்கலாம். இருப்பினும் நாம் அப்படிச் சிந்திக்கிறோம், அத்தகைய மன வசியத்திற்கு உள்ளாகிவிட்டோம். இத்தகைய சீர்கேட்டைவிடக் கவலையூட்டுகின்ற நிலைமை நமது பாரத நாட்டின் வரலாற்றில் வந்திருக்க முடியாது. நமது நாட்டில் தலைவிரித்தாடுகின்ற உண்மையான வறுமை எது தெரியுமா? நமது நாகரீகத்தின் ஆன்மீக அளவு கோல்களை நாம் கண்டு கொள்ளத் தவறியது தான். நம்மை நாம் உணரும்போது, கண்டு கொள்ளும் போது நமது பிரச்சனைகள் விலகிவிடும்.

 

மேலை நாடுகளுக்கு முதல் அழைப்பு.

 

சுவாமிஜியைக் காண வந்த கூட்டம் படிப்படியாக அதிகரித்தது. ரோஸ், பென்னிங்டன், என்று ஓரிரு ஆங்கிலேயர்களும் சுவாமிஜிக்கு அறிமுகமானவர்கள். படைத்தளபதியான ரிவட்-கார்னக் என்பவரையும் சுவாமிஜி சந்தித்தார். அவருக்கு வேதாந்தத்தில் மிகுந்த  நாட்டம் இருந்தது. ஆனால் தமது நாட்டையும் கலாச்சாரத்தையும் பற்றி அந்த மேலைநாட்டினர் அறிந்ததெல்லாம் கிறிஸ்தவ மிஷினரிகளின் மூலமாகத்தான். அவர்கள் உண்மையைத் திரித்தும்  உண்மைக்குப் புறப்பானதையுமே கூறிவந்தார்கள். மேலை நாட்டினர் இந்தக் கட்டுக்கதைகளைத்தான் இந்தியா என்று நம்பியிருந்தனர். இதனைப்புரிந்து கொண்டார் சுவாமிஜி. அதே வேளையில் அவர்களில் சிலருக்கு உண்மையாகவே  இந்தியாவின் ஆன்மீக ச்செல்வத்தைப் பெறுவதில்  ஆர்வம் இருந்ததையும் அவர் கண்டார். இந்த நாட்களில் தான் பென்னிங்டன் தம்பதிகள் அவரிடம், சுவாமிஜி நீங்கள் இங்கிலாந்திற்குச் செல்ல வேண்டும். அங்கே உங்கள் கருத்துக்களைப்போதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். மேலை நாடுகளுக்கு சுவாமிஜி பெற்ற முதல் அழைப்பு இது. ஆனால் சுவாமிஜி இதையெல்லாம் சிந்திக்கும் நிலையில் அப்போது இல்லை. கடினமான தவ வாழ்வும் சாதனைகளுமே அவரது கண்களின் முன் நின்றன.

மேலும் ஒரு மாதம் காஜிபூரிலேயே தங்கியிருந்தார் சுவாமிஜி. அந்த வேளையில் ரிஷி கேசத்தில் அபேதானந்தர் நோயுற்றிருப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. அபேதானந்தரைக் காசிக்குக் கூட்டிவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு தாமும் காசிக்கு விரைந்தார். காசியில் அவருக்கு வேண்டிய உதவிகளைச்செய்து அவர் குணமாகும் வரை கூடவே இருந்தார்.

 

இதயமற்ற துறவி அல்ல நான்

 

1890 ஏப்ரலில் பலராம்போஸ் காலமான செய்தி சுவாமிஜிக்குக் கிடைத்தது. ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்கள் சீடர்கள் அனைவருக்கும் மிக நெருங்கியவராகத் திகழ்ந்தவர் பலராம்.பக்தர்களிடையே அவருக்கு ஒரு தனி இடத்தை அளித்திருந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். அத்தகைய ஒருவர் காலமான செய்தி சுவாமிஜியை மிகவும் கலங்கச் செய்தது. இவ்வாறு சகோதர துறவியரிடம் சுவாமிஜி கொண்டிருந்த பாசம், பக்தர்களின் மறைவு குறித்து அவர் கொண்ட கலக்கம் அறிஞரான பிரதம தாஸை ஆச்சரியமுறச்செய்தது. ஒரு துறவிக்கு இந்தப் பாசமும் பந்தமும் தகுமா? என்று வியந்தார் அவர்? நாங்கள் வறட்டுத் துறவிகள் அல்ல. ஒருவன் துறவியாகிவிட்டான் என்பதற்காக அவனுக்கு இதயமே இல்லாமல் போய்விட வேண்டுமா? என்று அவருக்குப் பதிலளித்தார் சுவாமிஜி.

 

மீண்டும் மடத்தில்

 

 பலராமை இழந்து தவிக்கின்ற அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகக் கல்கத்தா புறப்பட்டார் சுவாமிஜி. இந்த முறை அவர் மடத்தில் மூன்று மாதங்கள் தங்கினார். இந்த நாட்கள் மடத்திலிருந்த துறவியருக்கு வரப்பிரசாதமாகத் திகழ்ந்தன. சுவாமிஜியின் பலதுறை அறிவு எத்தனையோ வழிகளில் அங்கே வெளிப்பட்டது. அவருடன் கழித்த ஒவ்வொரு கணமும் மடத்தினருக்கு ஒரு படிப்பினையாக அமைந்தது. மடத்தை மிகவும் ஆதரித்து வந்த பலராம், அவரைத்தொடர்ந்து மே மாதத்தில் சுரேந்திரநாத்  மித்ரர்- இருவரும் காலமாகி விட்டதால் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்பட்ட நாட்கள் அவை. சாப்பிட எதுவுமில்லாமலேயே  பல நாட்களை அவர்கள் கழிக்க நேர்ந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரின்  பக்தர்களான கிரீஷ், ம- போன்றோரை சுவாமிஜி அணுகினார். அவர்களும் உடனடியாக உதவிக்கரம் நீட்டவே செய்தனர். ஆனால் அவர்கள்  அவ்வளவு வசதி படைத்தவர்கள் அல்ல. அவர்கள் கொடுத்ததை வைத்து  செலவுகளை ஓரளவு சமாளித்தனர் அந்த இளம் துறவியர்.

மடத்தின் நிலைமை இவ்வாறு சீர்படுத்த வேண்டிய நிலையில் இருக்க, சுவாமிஜியின் மனத்தை மற்றோர் எண்ணம் வெகுவாக அலைகழித்தது. ஸ்ரீராமகிருஷ்ணரின் அஸ்தியை கங்கைக் கரையில் எங்காவது ஓர் இடத்தில் வைத்து கோயில் எழுப்ப வேண்டும் என்று அவர் மிகவும் விரும்பினார். ஆனால் மடத்தின் வளர்ச்சிக்கும் சரி, ஸ்ரீராமகிருஷ்ணரின் கோளிலுக்கும் சரி பணம் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. சுரேந்திரநாத் மித்ரர் 1000 ரூபாய் தருவதாக வாக்களித்தார். பிரதம தாஸ் உதவி செய்வார் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார் சவாமிஜி. ஆனால் அவரிடமிருந்து பணம் கிடைக்கவில்லை. சுவாமிஜியை இது மிகவும் வருந்தச் செய்தது.

 

இமயத்தடங்களில்

....-......-.........-.......-.......-.....

அன்னையின் ஆசிகள்

 

மடம் வளரவேண்டும், கோயில் எழ வேண்டும்-இவையெல்லாம் சுவாமிஜியை அலைக்கழித்த எண்ணங்கள் தான். ஆனால் இவை அனைத்தையும் மீறி அவரது மனம்  தனிமை வாழ்க்கைக்காக ஏங்கியது. இமயப் பகுதிகளில் சில காலம் செலவழித்திருந்த அகண்டானந்தர் அப்போது தான் திரும்பியிருந்தார். அவர் கூறிய வர்ணனைகளும் யாத்திரைக் கதைகளும் சுவாமிஜியின் ஆர்வத்திற்குத் தூபமிட்டன. கங்கைக் கரையில் ஓரிடத்தில் நெடுங்காலம் தியானத்தில் ஈடுபட விரும்புகிறேன். இமயத்திற்கு ஒரே ஓட்டமாக ஓடிவிட ஏங்குகிறேன். என்று எழுதுகிறார் அவர். இந்த நோக்கத்துடன் தான் அவர் ஓரிரு முறை புறப்படவும் செய்தார். ஆனால் ஏதோ தடைகள் வருவது போல் இருக்கும். ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்களுக்காக அவர் திரும்பிவர வேண்டியதாயிற்று. எனவே இந்த முறை அன்னை சாரதா தேவியின் ஆசிகளைப்பெற்றுச்செல்வது என்று தீர்மானித்தார் அவர். அன்னையின் அருள் இருந்தால் எதுவும் சாத்தியம் என்று முற்றிலுமாக நம்பினார் சுவாமிஜி.

அகண்டானந்தரை உடன் அழைத்துச்செல்ல முடிவு செய்து, அவருடன்  சென்று அன்னையைத் தரிசித்தார். அம்மா, மிக மேலான அனுபூதியை அடையாமல் நான் திரும்ப மாட்டேன் என்று அன்னையிடம் கூறினார் சுவாமிஜி. ஸ்ரீராமகிருஷ்ணரின் திருப்பெயரால் அன்னை அவரை ஆசீர்வதித்தார். பிறகு அகண்டானந்தரிடம், மகனே, என் செல்வத்தையே(சுவாமிஜி) உன்னிடம் ஒப்படைக்கிறேன், உனக்கு இமயமலைப்பகுதியைப்பற்றி நன்றாகத்தெரியும். நரேன் உணவிற்குத் திண்டாடாமல்  பார்த்துக்கொள், என்று கூறினார். இவ்வாறு அன்னையின் ஆசிகள் பெற்று 1890 ஜீலை இறுதியில் புறப்பட்டார் சுவாமிஜி. நான் ஒரு முறை தொட்டால் ஒருவனது வாழ்க்கை மாற்றம் காணவேண்டும். அத்தகைய ஆற்றலைப் பெறாமல்  திரும்ப மாட்டேன். என்று தமது சகோதரத்துறவிகளிடம் தெரிவித்துவிட்டு, நீண்ட பயணத்திற்காகப்புறப்பட்டார் சுவாமிஜி.

 

பாகல்பூரில்

 

கங்கைக் கரை வழியாக நடந்தே செல்லஎண்ணினார்சுவாமிஜி. ஆகஸ்ட் மாதம் சுவாமிஜியும் அகண்டானந்தரும் பாகல்பூரை அடைந்தனர். அங்கே கங்கைக் கரையில் ஓர் இடத்தில் தங்கினார். பயணக் களைப்பாலும் பசியாலும் அவர்களுடைய முகம் வாடியிருந்தாலும் அந்த முகங்களில் பொலிந்த ஆன்மீகக் களை அவர்களை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டியது. சுவாமிஜியிடம் பலர் கவரப்பட்டனர். அவர்களுள் ஒருவர் அந்த ஊரில் பிரபலமான குமார் நித்தியானந்த  சிங். அவரது நண்பரான மனிமத நாத் சௌதுரி என்பவரின் வீட்டில் சுவாமிஜியும் அகண்டானந்தரும் தங்க ஏற்பாடாகியது.

இந்த இரண்டு துறவிகளையும் பற்றி ஆரம்பத்தில் மன்மத நாத் பெரிதாக எண்ணவில்லை. எத்தனையோ துறவிகள் வந்து போகின்றனர். அவர்களைப்போல் இருவர் என்று தான் நினைத்தார் அவர். ஒரு நாள் மதிய உணவிற்குப்பிறகு அனைவரும் ஓய்வாக அமர்ந்திருந்தனர். மன்மத நாத் அவர்களிடம் பேசவே விரும்பாதது போல் சற்று தள்ளி அமர்ந்து புத்த மத ம் பற்றிய ஆங்கில நூல் ஒன்றை வாசிக்கலானார். சிறிது நேரம் கழிந்தது. சுவாமிஜி அவரிடம், அது என்ன புத்தகம்? என்று கேட்டார். அதற்கு மன்மத நாத் புத்தகத்தின் பெயரைக்கூறிவிட்டு, உங்களுக்கு ஆங்கிலம்  தெரியுமா ,? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, ஏதோ கொஞ்சம் தெரியும் என்றார். உரையாடல் தொடர்ந்தது. ஆங்கில இலக்கியங்கள் பலவற்றிலிருந்து மேற்கோள் காட்டி தடையின்றிப்பேசலானார் சுவாமிஜி. பிரமித்துப்போனார் மன்மத நாத். ஒரு துறவி ஆங்கிலத்தில், அதுவும் இவ்வளவு சரளமாகப்பேசுவது என்பது அந்த நாளில் அபூர்வம்! சிறிது நேரத்திற்குள் சுவாமிஜியின் புலமையையும் அறிவின் ஆழத்தையும் புரிந்து கொண்டார் மன்மத நாத். யோகம், உபநிஷதம் போன்ற பல விஷயங்களில் சுவாமிஜியின் ஆழ்ந்த அறிவும் தொடர்ந்த நாட்களில் அவருக்குப்புலப்பட்டது.

 அங்கே சுவாமிஜி தங்கிய நாட்களில் பலர் அவரிடம் வந்து இலக்கியம், தத்துவம், மதம் என்று பல்வேறு விஷயங்களைப்பற்றி பேசினர். சுவாமிஜியின் ஆழ்ந்த அறிவும் புதிய விளக்கங்களும் அனைவரையும் கவர்ந்தன.

ஒரு நாள் சுவாமிஜியை அந்த ஊர் செல்வந்தர்களிடம் அழைத்துச்சென்று அறிமுகப் படுத்துவதாக மன்மத நாத் தெரிவித்தார். எனது வண்டியிலேயே போய்விடலாம். உங்களுக்குச்சிரமம் இருக்காது என்றும் தெரிவித்தார். ஆனால் சுவாமிஜி அதனை மறுத்து, அது சன்னியாச தர்மம் அல்ல.  செல்வந்தர்களை நாடுவதுதுறவு நெறிக்குப் புறம்பானது என்று கூறிவிட்டார். சுவாமிஜியின் துறவு மன்மதநாத்தின் மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

காலம் கடந்த சங்கீதம்

 

ஒரு நாள் சுவாமிஜி மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருந்தார். அதைக்கேட்ட மன்மத நாத், சுவாமிஜி, உங்களுக்குப் பாட த் தெரியுமா? என்று கேட்டார். ஏதோ சுமாராகத் தெரியும் என்றார் . சுவாமிஜி கூறுகின்ற ஏதோ தெரியும் சுமாராகத்தெரியும் போன்ற வார்த்தைகளின் பொருளை ஏற்கனவே அறிந்திருந்த மன்மத நாத் அவரைப் பாடுமாறு வற்புறுத்தினார்.மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு சுவாமிஜி பாடினார்.அவன் பாடும் போது என்னுள் இருப்பவர் மகுடி கேட்ட நாகம் போல் அசைவற்று நிற்கிறார், என்று ஸ்ரீராமகிருஷ்ணராலேயே புகழப்பட்ட சுவாமிஜி பாடினால் எப்படி இருக்கும்! மன்மதநாத் அதில் மயங்கிவிட்டார். மறுநாள் சுவாமிஜியின் அனுமதியுடன் சங்கீத மேதைகள் பலரை வீட்டிற்கு அழைத்தார். இரவில் சுவாமிஜிபாடுவதாக ஏற்பாடு. இரவு ஒன்பது பத்து மணிக்கு எல்லாம் நிறைவுற்றுவிடும் என்று கருதிய மன்மதநாத் , வருபவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யவில்லை. பாடல் தொடங்கியது,9, 10, 11 மணி என்று நேரம் கடந்து கொண்டே இருந்தது. சுவாமிஜியின் சங்கீதம் நிற்கவில்லை. யாரும் அசையவும் இல்லை. பசி, தாகம் என்று யாருக்கும் எந்த உணர்வும் இல்லை.மறுநாள் காலை மூன்று மணி வரை சவாமிஜி பாடினார். யாரும் இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை. தபேலா வாசித்தவர் கைகள் விறைத்துப்போய் நிறுத்திய பிறகே  நிகழ்ச்சி ஒரு முடிவுக்கு வந்தது.

 

சமணத்துறவியருடன்

 

 அருகிலுள்ள ஓரிரு இடங்களுக்கு இரண்டு முறை சென்றதைத் தவிர சுவாமிஜி பாகல்பூரிலெயே பொழுதைக் கழித்தார். அருகிலுள்ள நாத நகர் ஒரு  சமணத்திருத்தலம். சமணத்துறவியர் பலர் அங்கே வாழ்ந்தனர். சமண மதத்தை சனாதன தர்மத்தின் ஒரு பகுதியாகவே சுவாமிஜி கருதினார். அங்கே ஒரு நாள் சென்று அந்தத் துறவியருடன் சமண மதம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அது அவருக்குத் திருப்தி அளிக்கின்ற ஓர் அனுபவமாக அமைந்தது.

சாமிஜி பாகல்பூரிலிருந்து புறப்பட பல முறை முயற்சித்த போதும் மன்மதநாத் அவரை விடவில்லை. எனவே ஒரு நாள் சுவாமிஜியும் அகண்டானந்தரும் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து விடைபெற்றுக்கொண்டு இமயத்தை நோக்கிப் புறப்பட்டனர். மன்மத நாத்  வீட்டிற்கு திரும்பி வந்து விபரம் அறிந்து மிகுந்த வேதனையில் ஆழ்ந்தார். பக்ரிநாத் திற்குப்போக வேண்டும் என்று சுவாமிஜி ஒரு முறை சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்த அவர் அல்மோராவரை சென்று சுவாமிஜியைத் தேடினார். ஆனால் அதற்குள் சுவாமிஜி அங்கிருந்து சென்றுவிட்டிருந்தார்.

 

ஆங்கிலம் கூடாது.

 

அடுத்து இருவரும் வைத்தியநாதத்தில் தங்கினர். அங்கே பாபுராஜ் நாராயண் என்பவரைச் சந்தித்தனர். அவர் பிரம்ம சமாஜத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். இளமை நாட்களில் ஆங்கிலேயே மோகத்தால் இந்தியாவையும் இந்தியா சம்பந்தப்பட்ட அனைத்தையும் வெறுத்த அவர் பெற்றோரின் மறைவிற்குப் பின்னர், மேலை நாட்டு மோகத்தை விட்டு இந்தியாவையும் அதன் பெருமைகளையும் போற்றத்தொடங்கினார். மேலை நாட்டு மோகத்தில் இருந்த அதே தீவிரத்தை இப்போது மேலை நாடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் எதிர்ப்பதில் காட்டினார். ஆங்கிலேய நடை, உடை, கலாச்சாரம் மட்டுமல்ல, தேவையில்லாமல் யாராவது உறுப்பினர்கள் ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தினால் கூட ஒரு வார்த்தைக்கு ஒரு காசு என்றுஅபராதம் விதிப்பாராம்.

வயது முதிர்ந்தவரான ராஜ் நாராயண் போஸின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதற்காக சுவாமிஜியும் தமக்கு ஆங்கில வாசனையே இல்லாதது போல் காட்டிக்கொண்டார். அகண்டானந்தரிடமும் அவ்வாறே பழகுமாறு கூறினார். தூய வங்க மொழியிலேயே உரையாடல் நடைபெறும். சுவாமிஜிக்கு ஆங்கிலம் சிறிதும் தெரியாதுஎன்றே ராஜ் நாராயண் நம்பியிருந்தார். ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தபோது அவசரத்தில் ராஜ் நாராயண் ”ப்ளஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விட்டார். அது சுவாமிஜிக்குப் புரிந்திருக்குமோ இல்லையோ என்ற சந்தேகத்தில் விரல் களைக் கூட்டல் குறிபோல் வைத்துக் காட்டினாராம். பின்னாளில் சுவாமிஜியின் பெயர் நாடெல்லாம் பரவிய போது அவர் அடைந்த பிரமிப்புக்கு எல்லையே இல்லை! சுவாமிஜி ஒரு விசித்திரமான  மனிதர் என்றாராம்.

 

சமுதாயத்தின் மீது வெடிப்பேன்.

 

 வைத்தியநாதத்திலிருந்து  காஜிபூர் வழியாக இருவரும் காசியை அடைந்தனர். காசியில் பிரதம தாஸின் வீட்டில் தங்கினார். காசியில் வாழ்ந்தாலும் இமயத்தின் பனிமலைச் சிகரங்களைக் காண்பதற்கான ஆர்வமே சுவாமிஜியின்  சிந்தனை முழுவதும் நிறைந்திருந்தது. ஒரு நாள் சவாமிஜியைப் பார்க்க பலர் வந்திருந்தனர். அப்போது சுவாமிஜி ஏதோ ஆவேசம் வந்தவர்போல்  பிரதம தாஸிடம்,  இப்போது நான் காசியிலிருந்து புறப்படுகிறேன், சமுதாயத்தின் மீது ஒரு நாள் வெடி குண்டு போல் வெடிப்பேன், இந்த ச் சமுதாயம் ஒரு நாயைப்போல் என்னைப் பின்தொடரும். அது வரை இந்த நகரத்திற்கு வர மாட்டேன் என்று கூறினார். பின்னர் அங்கிருந்து சுவாமிகள் இருவரும் கிளம்பினர்.

 

மனிதனும் பிரபஞ்சமும் ஒரே அமைப்புதான்.

 

பத்ரி நாத் செல்வது அவர்களின் திட்டம். காசியிலிருந்து  புறப்பட்ட அவர்கள் அயோத்தி, நைனிடால், வழியாக அல்மேரா சென்றனர். வழியில் காக்ரி காட் என்ற இடத்தை அடைந்தனர். கோசி, சூயல் என்ற இரண்டு சிற்றாறுகள்  சங்கமிக்கின்ற அழகிய மலைப்பகுதி அது. சங்கமத் தலத்திற்கு அருகில் பெரியதோர் அரச மரம். சுற்றிலும் நெடிதுயர்ந்த மலைச் சிகரங்கள்  இந்த இடம் மிகவும் அற்புதமாகஉள்ளது. தியானத்திற்கு ஏற்ற இடம் இது என்றார் சுவாமிஜி. சொன்னது மட்டுமல்ல, ஆற்றில் குளித்துவிட்டு கரையில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில்  மூழ்கவும் செய்தார்.

சுவாமிஜியின் வாழ்க்கையில் அது முக்கியமானதொரு நாளாக இருந்தது. அவரது பின்னாள் வாழ்க்கையிலும் சொற்பொழிவுகளிலும் திட்டங்களிலும்  காணப்படுகின்ற ஓர் அற்புதமான கருத்தை அன்றைய தியானத்தில் ஓர் அனுபூதியாகப் பெற்றவர் அவர். தியானம் கலைந்து எழுந்ததும் அவர் அகண்டானந்தரிடம், என் வாழ்க்கையில்   மகோன்னதமான கணங்களுள் ஒன்றை இப்போது நான் கடந்து வந்தேன். வாழ்க்கைப் புதிர்களுள் மிகவும் முக்கியமான ஒன்றிற்குரிய தீர்வு இந்த அரச மரத்தின் அடியில் எனக்குக் கிடைத்தது. மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையில் ஓர் ஆழ்ந்த ஒற்றுமை நிலவுவதை நான் கண்டேன். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இந்த மனித உடம்பிலும் உள்ளது.  பிரபஞ்சம் முழுவதையும் நான் ஓர் அணுவில் கண்டேன் என்று கூறினார். அன்று முழுவதும் சுவாமிஜி மிக உயர்ந்த மன நிலையில் இருந்தார். தாம் அனுபூதியில் பெற்றதை அகண்டானந்தரிடம் பேசினார். ஒரு நோட்டில் கீழ்வருமாறு குறித்தும் வைத்தார்.

ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது. பிண்டமும் அண்டமும் ஒரே அமைப்பில் உள்ளன. தனி மனித ஆன்மா ஓர் உயிருள்ள  உடம்பில் உறைவது போல், பிரபஞ்ச ஆன்மா உயிருள்ள  பிரகிருதியில்( இயற்கையில்), அதாவது நாம் காண்கின்ற பிரபஞ்சத்தில் உறைகிறது. காளி சிவபெருமானைத் தழுவிக்கொண்டிருக்கிறாள். இது கற்பனை அல்ல. ஒன்று (இயற்கை) மற்றொன்றை( ஆன்மா) மூடியிருப்பதை, கருத்திற்கும் அதை வெளிப்படுத்துகின்ற வார்த்தைக்கும் ஒப்பிடலாம். அவை ஒன்றே. மனம் தான் அவற்றைப் பிரிக்கிறது. வார்த்தைகள் இல்லாமல் எண்ணம் இல்லை. எனவே ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது என்று சொல்லப்படுகிறது. பிரபஞ்ச ஆன்மாவின் இந்த இருமை  நிலை நிரந்தரமானது. நிரந்தரமாக உருவம் உடையது. நிரந்தரமாக உருவமற்றது என்ற இரண்டின் சேர்க்கையையே நாம் காண்கிறோம்.

 

காக்ரி காட்டிலிருந்து சுவாமிகள் இருவரும் அல்மோராவை நோக்கி நடந்தனர். அல்மோராவிலிருந்து இரண்டு மைல் முன்னதாக முஸ்லிம்களின் இடுகாடு ஒன்று இருந்தது.

 

பக்கீர் கொடுத்த வெள்ளரிக்காய்

 

 அந்த இடத்தை அடைந்தபோது பசி தாகத்தின் காரணமாக சுவாமிஜி மயங்கிவிழும் நிலைமைக்கு வந்து விட்டார். அவரை அங்கே அமரச் செய்து விட்டு பக்கத்தில் எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்ப்பதற்காக அகண்டானந்தர் சென்றார். அந்த இடுகாட்டைக் கண்காணித்துவரும் ஜீல்பிகர் அலி என்ற முஸ்லிம் பக்கீர்., இடுகாட்டிற்கு அருகில் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தார். உணவு என்று அவரிடம் இருந்தது ஒரு வெள்ளரிக்காய் மட்டுமே. சுவாமிஜியின் நிலைமையைக்கண்ட அவர் ஓடிச்சென்று அந்த  வெள்ளரிக்காயை அவருக்குக்கொடுத்தார். மிகவும் பலவீனமாக இருந்த சுவாமிஜி அதனை வாயில் தருமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அந்தப் பக்கீர், சுவாமிகளே,நான் ஒரு முஸ்லிம் என்றார். அதனால் என்ன! அது ஒரு பெரிய விஷயமல்லவா. நாம் அனைவரும் சகோதரர்களே அல்லவா? என்று புன்முறுவலுடன் கேட்டார் சுவாமிஜி. பக்கீர் வெள்ளரிக்காயை சுவாமிஜிக்கு ஊட்டினார். சுவாமிஜி களைப்பு நீங்கினார். அந்த மனிதர் உண்மையிலேயே  என் உயிரைக் காப்பாற்றினார். அது போல் என் வாழ்நாளில் எப்போதும்  நான் களைப்புற்றதில்லை. என்று பின்னாளில் சுவாமிஜி கூறினார்.

1890 ஆகஸ்ட் இறுதியில் சுவாமிகள் இருவரும் அல்மோராவை அடைந்தனர். அங்கே அம்பா தத் என்பவரின் தோட்ட வீட்டில் இருவரும் தங்கினர். சாரதானந்தரும் கிருபானந்தரும் ஏற்கனவே அல்மோராவில் இருந்தனர். அவர்கள் லாலா பத்ரி ஷா என்ற பிரமுகரின் வீட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் வந்து சுவாமிஜியைச்  சந்தித்தனர். பின்னர் எல்லோரும் லாலா பத்ரி ஷாவின் வீட்டில் தங்கினர்.

இங்கே அரசாங்க அலுவலரான ஸ்ரீகிருஷ்ண ஜோஷி என்பவருடன் சுவாமிஜி நீண்ட கலந்துரையாடல்கள் நிகழ்த்தினார். மதங்களின் லட்சியம் துறவு என்பது சுவாமிஜியின் கருத்தாக இருந்தது. இது பற்றி விவாதங்களும் நடந்தன. இங்குள்ள மக்களின் வேண்டு கோளுக்கு இணங்க சுவாமிஜி பேய் பிடித்திருந்த ஒருவனைக் குணப்படுத்தவும் செய்தார்.

 

காஸார் தேவி குகையில்

 

 சில  நாட்கள் அங்கே தங்கிய சுவாமிஜி தனிமை  வாழ்வை நாடி ஏங்கலானார். எனவே ஒரு நாள் அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு சில மைல்தூரத்தில் இருந்த குகை ஒன்றைத்தேர்ந்தெடுத்து அங்கே தங்கி தீவிரமான சாதனைகளில் ஈடுபடலானார். அந்தக் குகை காஸார் தேவி(கேஸரி என்ற வார்த்தையின் உருமாற்றம்) –காஸார். சிங்கத்தை வாகனமாகக்கொண்ட தேவி துர்க்கை.-) கோயிலுக்கு அருகில் இருந்தது. அடர்ந்த காட்டுப்பகுதி அது. சில காலம் அங்கே தங்கிய சுவாமிஜி ஏதோ ஒரு சக்தியால் உந்தப் பட்டவர்போல் மீண்டும் திரும்பி லாலாவின் வீட்டிற்கே வந்தார். தீவிர தவ வாழ்வின் விளைவாக சுவாமிஜியின் முகம் தெய்வீக ஒளி வீசிற்று. ஏகாந்த வாழ்விலும் தீவிர சாதனைகளிலும் நாட்டம்  கொண்டு இவ்வாறு சுவாமிஜி தனிமையில் வாழத் தொடங்கும்போதெல்லாம் ஏதோ ஒரு சக்தி அவரை வற்பறுத்தி வெளியில் கொண்டு வருவது போல் தோன்றியது. அவருக்கென்று பணி ஒன்று காத்திருந்தது. அந்தப் பணியை அவர்  செய்து முடிக்கும்  வரை அவர் தனிமை வாழ்வை நாடாமல் அந்தச் சக்தி தடுப்பது போல் இருந்தது. என்று குறிப்பிடுகிறார் அகண்டானந்தர்.

 

சகோதரியின் மரணம்

 

சில நாட்கள் லாலாவின் வீட்டில் தங்கிய சுவாமிஜியை அதிர்ச்சியில் உறைய வைத்த செய்தி ஒன்று வந்தது. அவரது சகோதரிகளுள் ஒருவர் தற்கொலை  செய்து கொண்டார். அதிர்ச்சியில் மட்டுமல்ல, சுவாமிஜியைத் தீவிர சிந்தனையிலும் ஆழ்த்தியது. இந்தச் சோக சம்பவம் சுவாமிஜியுடன் ஓடியாடிக் களித்தவர் அவர். சிம்லாவில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருந்த அவரது திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. சிறுவயதிலேயே அவரது திருமணம் நடைபெற்றது. ஆசாரமிக்க புகுந்த வீட்டினருடன் அவரால் அனுசரித்துப் போக  இயலவில்லை. திருமண நாள் முதலே கவலையையும் கண்ணீரையுமே அவர் கண்டிருந்தார். எல்லைமீறிய சோகம் ஆட்கொண்ட போது தமது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இமயமலைக்குச் சென்றேன். இனி திரும்பி வரக்கூடாது என்ற முடிவுடன் தான் சென்றேன், ஆனால் என் சகோதரி தற்கொலை செய்து கொண்டு  இறந்தாள். அந்தச்செய்தி அங்கே என்னை வந்தடைந்தது. என் பலவீன இதயம், நான் அமைதியை எதிர்நோக்கிய நிலையிலிருந்து என்னைத் தூர விட்டெறிந்து விட்டது. என்று எழுதினார் சுவாமிஜி. பெண்களுக்குக் கல்வி அளிக்க வேண்டும், அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்குமாறு செய்யவேண்டும் என்று சுவாமிஜி பெண்கள் முன்னேற்றத்திற்காகக்  கதறியதன் அடிப்படையை இந்தச்சோக சம்பவத்தில் நாம் காண முடியும்.

அல்மோராவிலிருந்து கர்ண பிரயாகை, ருத்ர பிரயாகை வழியாக சுவாமிஜி, சாரதானந்தர், அகண்டானந்தர், கிருபானந்தர் ஆகியோர் ஸ்ரீநகரை அடைந்தனர்.  அளகானந்தா நதிக்கரையில் துரியானந்தர் ஒரு சமயம் வாழ்ந்த குடிசையில் அனைவரும் தங்கினர். இங்கே சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கி, பிச்சையுணவு ஏற்று வாழ்ந்தனர். முழுநேரமும் பிரார்த்தனை, தியானம், சாஸ்திரப் படிப்பு என்று நாட்கள்  கழிந்தன.

ஸ்ரீநகரில் தமது பள்ளி ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தார் சுவாமிஜி. இவர் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு  மாறியவர். சுவாமிஜி அவரிடம் இந்து மதத்தின் பெருமைகளை எடுத்துக்கூறினார். சுவாமிஜியின் வார்த்தைகளைக்கேட்ட ஆசிரியர், தாம் தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்து மீண்டும் தாய் மதத்திற்கு வர ஏங்கினார். பின்னாளில் துறவியரிடம் மிகுந்த மதிப்புக் கொண்டவராக வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அவர்களைத் தம் வீட்டில் அழைத்து உபசரித்தார்

 

தடியை ஓங்கினால் தானம்

 

அங்கிருந்து அனைவரும் ஸ்ரீநகர் வழியாக டெஹரியை அடைந்தனர். ஒரு கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது இரவு கவியத் தொடங்கியது. பசியால் அவர்கள் மிகவும் களைப்புற்றிருந்தனர். பாழடைந்த ஒரு சத்திரத்தில் சாமான்களை வைத்துவிட்டு பிச்சைக்காக வெளியில் சென்றனர். வீடு களில் கேட்கும் எதுவும் கிடைக்கவில்லை.யாரும் இவர்களைப் பொருட்படுத்தவே இல்லை. இமயப் பகுதி (காட்வால் பகுதி) மனிதர்களைப்போல் தானம் அளிப்பவர் இல்லை. ஆனால் அவர்கள் தானம் தரவேண்டுமானால் நாம் தடியை ஓங்கவேண்டும் என்ற பழமொழி ஒன்று உண்டு. அதனை நினைவுகூர்ந்தார் அகண்டானந்தர். எனவே எல்லோரும் கைத்தடிகளை ஓங்கி, உணவு தராவிட்டால் கிராமத்தையே சூறையாடி விடுவோம் என்று உரத்த குரலில் ஆவேசமாக கூறி அனைவரையும் பயமுறுத்தினர். அவ்வளவு தான், உணவும் தேவையான அனைத்தும் அவர்கள் இருந்த இடத்திற்குத் தானாக வந்து சேர்ந்தன. வேண்டிய வற்றைக் கொடுத்துவிட்டு பயபக்தியுடன் கைகட்டி நின்றனர் அந்தக் கிராம மக்கள்!

டெஹ்ரியில் ஒரு பாழடைந்த தோட்டத்தில் துறவிகள் தங்குவதற்காக இரண்டு அறைகள் கட்டப்பட்டிருந்தன.சுவாமிஜியும் சகோதரத் துறவிகளும் அதில் தங்கினர். கங்கைக்கரையில் அந்த அறைகள் அமைந்திருந்தன. பிச்சை ஏற்று உண்டு, நாள் முழுவதையும் இங்கே சுவாமிஜியும்  மற்றவர்களும் ஆன்மீக சாதனைகளில் கழித்தனர். டெஹ்ரி மாகாணத்தின் திவானான ரகுநாத் பட்டாசாரியருடன் அவர்களுக்குத்தொடர்பு ஏற்பட்டது. அவர் கேட்டுக்கொண்டதற்கு  இணங்க சுவாமிஜி அவருடன் சில நாட்கள் தங்கினார். சுவாமிஜிக்கு ஏதாவது சேவை  செய்யவேண்டும் என்று திவான் மிகுந்த ஆவல் கொண்டார். சுவாமிஜிக்கும் கங்கைக் கரையில் ஓர் ஏகாந்தமான இடத்தில் வாழ்ந்து தவத்திலும் தியானத்திலும் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. திவான் தமது ஆவலைத்தெரிவித்த போது சுவாமிஜி தமது ஆர்வத்தை வெளியிட்டார். கங்கை நதியும் விலங்கனா நதியும் கலக்கின்ற இடமாகிய கணேச பிரயாகையில் சுவாமிஜிக்காக ஒரு குடிசை கட்டினார் திவான்.

திவான் கட்டிய குடிசையில் தங்கத் தயாரானார் சுவாமிஜி... ஆனால் இறைவனின் திட்டம் வேறுவிதமாக இருந்தது. அகண்டானந்தர் திடீரென்று நோயுற்றார். அவரது மார்புச் சளி தீவிரமாகியது. மலைக் காற்று அவரது உடம்பிற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதே வேளையில் குளிர்காலமும் நெருங்கி வந்தது. அவரைக் கீழ்ப் பகுதிகளுக்குக் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாயிற்று. எனவே குடிசையில் வாழும் திட்டத்தைக்கைவிட்டு அனைவரும் புறப்படத் தயாராயினர். பயணத்திற்கான குதிரைகளை திவானே மனமுவந்து ஏற்பாடு செய்தார். வழிச் செலவிற்காக ப் பணமும் கொடுத்தார். சுமார் இருபது நாட்கள் டெஹ்ரியில் தங்கிய துறவியர் டேராடூனுக்குக் கிளம்பினர்.

 

என் சகோதரனுக்கு இடம் தரமுடியுமா?

 

வழியில் ராஜ்பூருக்கு அருகில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, அவர்களுக்குச் சற்று முன்பாக மற்றொரு துறவி சென்று கொண்டிருந்ததைக்கண்டனர். பார்ப்பதற்குத் துரியானந்தர் போலவே அவர் தோற்றமளித்தார். எனவே விரைந்து அவரை அணுகினார். ஆம், இது நம் ஹரியேதான் ” என்று கூறினார். அருகில் சென்றவர், திடீரென்று ஒரு சகோதரத் துறவியைக் கண்டதில் அவர்களின் மகிழ்ச்சி பன்மடங்காகியது. அனைவருமாக டேராடூன் சென்றனர். முதலில் ஒரு டாக்டரிடம் அகண்டானந்தரைக் காட்டினர்.அவர் மருந்தைக் கொடுத்துவிட்டு, மலைப் பகுதிகளுக்குச்செல்லக்கூடாது, தரைப்பகுதிகளிலேயே தங்க வேண்டும் என்று கூறிவிட்டார்.

அகண்டானந்தருக்கு டேராடூனில் ஓர் இடம் தேடியாக வேண்டும். சுவாமிஜி வீடுவீடாகச்சென்று அகண்டானந்தருக்காக இடம் கேட்டார். யாரும் அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவில்லை.கடைசியாக வியாபாரி ஒருவர், பணி இன்னும் பூர்த்தியாகாதத் தமது வீடு ஒன்றில் அவர்களைத் தங்க வைப்பதற்குச் சம்மதித்தார். பணிக்கான சாமான்களும், மரம் முதலிய   பொருட்களும் சிதறிக்கிடந்த அந்த இடத்தில்  அந்தத் துறவியர் தங்கினர். ஆனால் அகண்டானந்தருக்கு அந்த இடம் ஒத்துவரவில்லை.

மாற்று இடத்திற்காக அலைந்து கொண்டிருந்தபோது சுவாமிஜி தமது பள்ளித்தோழரான ஹிருதய் பாபுவைச் சந்திக்க நேர்ந்தது. அவர் மனமுவந்து அகண்டானந்தரைத் தமது வீட்டில் தங்கவைத்தார். ஹிருதய் சமீப காலத்தில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர். இங்கே தங்கியிருக்கும்  போது ஒரு நாள் சுவாமிஜி கிறிஸ்தவ மிஷினரிகள் சிலருடன் வாக்குவாதம் செய்ய  நேர்ந்தது. சுவாமிஜியின் கருத்துக்களை அவர்களால் ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை. எதிர்க்கருத்துக்களைக்கூறவும் இயலவில்லை.  இயலாமையும் கோபமும் மேலிட அவர்கள் அந்த இடத்தை விட்டுப்போய் விட்டனர். தங்களுக்குத் தங்க இடம் தந்த ஒருவரின் வீட்டிலேயே இப்படி நடந்தது குறித்து சுவாமிஜி மிகவும் வருத்தப்பட்டார். அதற்காக ஹிருதயிடம் மன்னிப்பு கேட்கவும் செய்தார். இங்கே மற்றொரு பிரச்சனை உருவாகியது. இந்து வாழ்க்கையில் பழக்கப்பட்ட அகண்டானந்தரால் கிறிஸ்தவப் பழக்கவழக்கங்கள் நிறைந்த  அந்த வீட்டில் தங்க இயலவில்லை. அவர் பழைய இடத்திற்கே வந்து விட்டார்.

சுவாமிஜி மீண்டும் வீடு வீடாக ஏறி இறங்கத்தொடங்கினார். என் சகோதரத்துறவி ஒருவர் நோயுற்றுள்ளார். உங்கள் வீட்டில் அவரைத் தங்கவைத்து , சிறிது உணவிற்கும்  ஏற்பாடு செய்யமுடியுமா? என்ற கேள்வியுடன் பல இடங்களில் அலைந்தார். சாதகமான பதில்  எங்கிருந்தும் கிடைக்கவில்லை. கடைசியாக பண்டிட் அனந்த நாராயண் என்பவர் ஒரு சிறு வீட்டை வாடகைக்கு எடுத்து, துறவிகள் தங்குவதற்கும் உணவிற்கும் ஏற்பாடு செய்தார்.

டேராடூனில் அனைவரும் சுமார் மூன்று வாரங்கள் தங்கினர். பின்னர் அகண்டானந்தரைக் கிருபானந்தருடன் அலகாபாத்திற்கு அனுப்பிவிட்டு சுவாமிஜியும் சாரதானந்தரும்  ரிஷிகேசத்தை நோக்கிப் புறப்பட்டனர்.


No comments:

Post a Comment